Friday, July 27, 2018

பெரியபாளையம் பவானி அம்மன் - அறிவோம் ஆலயம்


ஆடி மாதத்து முதல் வெள்ளிக்கிழமை சொர்ணாம்பிகையையும், இரண்டாவது வெள்ளியன்று வழிபட வேண்டியது அங்காளம்மன் எனப்படும் அங்காள பரமேஸ்வரியை...  அங்காள பரமேஸ்வரி பத்தியும், அவள் குடிக்கொண்டிருக்கும் மேல்மலையனூர் ஆலயத்தையும் போனவருசம் ஆடி மாசத்து பதிவில்  பகிர்ந்திருக்கேன். அரைச்ச மாவையே ஏன் திரும்ப திரும்ப அரைப்பானேன்?! அதனால் இன்னிக்கு சென்னைக்கு அருகிலிருக்கும் பெரிய பாளயத்து பவானி அம்மன் கோவில் பத்தி பார்க்கலாம். அங்காள பரமேஸ்வரி பத்திய பதிவினை இங்க போய் பார்த்துட்டு வந்திடுங்க.
கண்ணனைக் கொல்வதாக நினைத்து, பெண்ணைக் கொல்லத் தூக்கி வீசினான் ஒருத்தன். அவன் கருத்தைப் பிழைப்பித்துக், கம்சன் வயிற்றில் நெருப்பென்ற நின்ற நெடுமாலே என்பது போல் பறந்தவள் பவானி! கண்ணன் போல் அவளுக்கு விளையாடக் கொடுத்து வைக்கலியேன்னு பாரதியும் கண்ணன் பாட்டின் நடுவில் இவளை எழுதினார். கிருஷ்ணர் பிறப்பு நமக்கு தெரியும்தானே?! தனது உயிருக்குயிரான தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது பிள்ளையினால் தனது உயிருக்கு ஆபத்து என்ற சாபத்தினால் பயந்த கம்சன், தனது தங்கை வாசுகியையும் அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து விடுகிறான். அங்கு அவர்களுக்கு பிறக்கும் 7 குழந்தைகளை பச்சிளம் குழந்தைன்னு பார்க்காமல் கொன்று விடுகிறான்.   8வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘வசுதேவரே! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது. ‘கம்சனே! உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இவள் விஷ்ணுவின் தங்கை என்பதால் கையில் சங்கும் சக்கரமும் இருக்கு. காளியைப்போல கபாலமும் உள்ளது. அந்தக் கபாலத்தில் முப்பெரும் தேவியர் அடக்கம் எனப்படுகிறது. காளிதேவியே இங்கு பவானி அம்மனாக இருப்பதாக கூறப்பட்டாலும், இல்லை இங்கிருப்பது ரேணுகாதேவின்னு சொல்றவங்களும் இருக்காங்க. 

இங்கு கருவறையில் வீற்றிருக்கும் அம்மனும், உற்சவ மூர்த்தி அம்மனும்,  அம்மன் தலை மட்டுமே இங்கு காட்சி அளிக்கின்றது.  ரேணுகாதேவிதான் இப்படி சிரசு மட்டுமே காட்சியளிக்கும் கோலத்தில் இருப்பாள். மேலும் கோவிலினுள் இருக்கும் பரசுராமன் சிற்பமே சாட்சி என்கின்றனர். ரேணுகாதேவி பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகாதேவிக் காயங்களுடன், இப்பகுதிவாழ் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் நம்ம பக்கம் ஒரு நம்பிக்கை உண்டு.  
ஆந்திராவிலிருந்து பலிஜா நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்து வியாபாரம் செய்து வந்தனர். தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு. வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார். அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள். தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள். அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார். (திருவண்ணாமலை மாவட்ட ஆரணி இல்ல. ஆரணின்ற ஆறு ஓடுவதால் அந்த ஊருக்கு ஆரணின்னு பேரு. எங்க ஊரில் ஓடுவது கமண்டலநாகநதி)


ஓய்வெடுத்த பின்,  அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம். அதிர்ச்சியடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது. கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது. ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார். முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார். இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகாதேவி. நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன். சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன். நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள்.

வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார். ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார். உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு  ரத்தமும் பீறிடத் தொடங்கியது. மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரகம் அகப்பட்டது. அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது. செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது. அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள். அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர். 


இத்தலத்தில் வினோதமான நேர்த்திக்கடன் ஒன்று நடக்கின்றது. அது என்னன்னா,  திருமண வரம் வேண்டி வேண்டிக்கிட்டவங்க,  திருமணத்தன்று மணமகன் மணமகளுக்கு கட்டிய தாலியை கழற்றி அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இது திருமணமான அன்றே நடக்கின்றது. பின் அன்னையின் அருள் மிகுந்து இருக்கும் மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்றுக்கொண்டு, அதனை, அருளும் நீண்ட ஆயுளும் தருகின்ற அன்னையின் அருள் பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்வதை இன்றும் காண முடிகிறது. இப்படி தாலி காணிக்கை செலுத்துவதால் காணிக்கை செலுத்தியவர்களின் குடும்பம் தழைத்து ஓங்குவதோடு அப்பெண்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் தந்து தாலிக்கு வலிமையைத் தந்தருளும் என்பது நம்பிக்கை. குறிப்பாக மீனவ சமுதாயத்தினர் தனது கணவர் கடலுக்குச்சென்று நல்ல முறையில் திரும்பி வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தனது தாலிக்கொடியை அம்மன் உண்டியலில் செலுத்தி புதியதாக தாலிக்கொடியை கட்டிச்செல்கிறார்கள். 




இக்கோயில் பல வருசங்களுக்கு முன் வரை மூலஸ்தானமும், ஒரே ஒரு மண்டபத்துடனும்தான் இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். 
வெளிப் பிரகாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கென தனித்தனி சந்நிதி உண்டு.  நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர்.
பாளையம்ன்னா படை வீடு ன்னு அர்த்தம். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும். சென்னையில் இருந்து செங்குன்றம் ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ தொலைவில் பெரியபாளையம் இருக்கு. சென்னை கோயம்பேடு, வள்ளலார் நகர், பிராட்வே, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ரயில் மூலம் வரவேண்டுமானால், சென்னை சென்ட்ரல், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பெரியபாளையம் வரலாம்.
ன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சியளிக்கிறாள். வேத சக்தியாகவும், ஞான சக்தியாகவும், கால சக்தியாகவும், போக சக்தியாகவும், கோல சக்தியாகவும், கவி சக்தியாகவும், கருணா சக்தியாகவும், பஞ்ச சக்தியாகவும், அருள் சக்தியாகவும் காட்சி தருகிறாள். 
இக்கோவிலில் ஆண், பெண், குழந்தைகள்  என்ற எவ்வித பாகுபாடின்றி, உடம்பில் எவ்வித உடையும் அணியாமல் வேப்பிலையை ஆடையாக அணிந்து திருக்கோயிலை சுற்றி வலம் வருவது வேறு எங்கும் காணாத மிக முக்கிய பிராத்தனையாகும். அம்மை நோயினால், காலரா, வைசூரி மாதிரியான நோய்களால்  பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நோய் குணமாக வேண்டி, குணமானதும் வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருவதை முக்கிய பிராத்தனையாக கொண்டுள்ளார்கள்.


உடல் நலம் குன்றியவர்கள் அம்மனை வேண்டிக்கிட்டு உடல் நலம் குணமான பின்பு அங்கப்பிரதட்சனம் மூலம் திருக்கோயிலை வலம் வருவதை பிராத்தனையாக செய்றாங்க. அங்கப்பிரதட்சணத்திற்கு பதிலாய் கோயில் பிரகாரத்தைச் சுற்றி ஈரத்துணியுடன் தேங்காயை உருட்டிக்கொண்டு வலம் வருபவர்களும் உண்டு. உருண்டு வரும் தேங்காய் எங்கு நிற்கிறதோ  அங்கு சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு மீண்டும் தேங்காயை உருட்டிச்செல்லனும். இதுபோன்று  திருக்கோயிலை ஒன்று அல்லது மூன்று முறை சுற்றிவருவாங்க. 

தீச்சட்டி ஏந்தி திருக்கோயிலை வலம் வந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இக்கோவிலில் தனது தலை முடியினை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவதுமுண்டு. 
 தனது குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லாமலும், விபத்து போன்றவற்றின் மூலமாகவோ உயிருக்கு போராடும் நிலையிலிருந்தால்  உயிர் கொடுப்பதாக அம்மனிடம் வேண்டிக்கிட்டு, உடல் நலம் பெற்றதும் ஆடு அல்லது கோழியை உயிருடன் திருக்கோயிலில் சுற்றிவிடுகிறார்கள்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் அம்மனுக்கு கரகம் எடுப்பதாக வேண்டிக்கிட்டு திருமணம் நிச்சயமானதும், கரகத்தை மலர்களால் அலங்கரித்து, பட்டுச்சேலை உடுத்தி கரகத்தை தலையில் ஏந்தி உடுக்கை சிலம்பு வாத்தியங்களுடன் திருக்கோயிலை வலம் வருகிறார்கள். திருமணத்திற்காக இந்த பிராத்தனை செய்யப்படுவதால், இதை குடை கல்யாணம்ன்னு சொல்றாங்க.

வயிறு சம்பந்தமான நோய் கண்டவர்கள்  நோய் குணமாக அம்மனை வேண்டிக்கிட்டு குணமானதும் சக்திமண்டபம் எதிரே மல்லாந்து படுத்துக்கிட்டு தனது வயிற்றின் மீது மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். 
குழந்தை இல்லாத பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி சக்தி மண்டபம் அருகே தொட்டில் பிள்ளை கட்டி வழிபடுகிறார்கள். குழந்தை வரம் வேண்டி அம்மனை வேண்டிக்கொண்ட பக்தர்கள் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் எடைக்கு எடை நாணயமாகவோ, அரிசி, சர்க்கரை, கற்கண்டு, வெல்லம் போன்ற பொருட்களையோ துலாபாரமாக இக்கோவிலுக்கு தர்றாங்க. 






















உயிர் பலி கொடுக்கும் இடம்ங்குறதால கொஞ்சம் சுத்தம் குறைவாதான் இருக்கும். ஆனா, கோவிலுக்குள் சுத்தமா இருக்கும். கம்சனுக்குக் காளியானாள்.  சரண் புகுந்தவருக்குத் தாயுமானாள். சங்குச் சக்கரம் ஏந்தி கருவறையில் காட்சிதரும் பவானி சகலருக்கும் நல்வாழ்வு அளிக்கட்டும்! 

ஆயன் சோதரியே.. ஆஸ்தான மாரிமுத்தே.. அம்மா பவானி ஆதரிக்க வேணுமம்மா.
நன்றியுடன்,
ராஜி.

6 comments:

  1. அம்மாடி... எவ்வளவு படங்கள்...

    ReplyDelete
    Replies
    1. எடுத்த படங்கள்லாம் வீணாகிடக்கூடாதுன்னு...

      Delete
  2. //ஆயன் சோதரியே.. ஆஸ்தான மாரிமுத்தே.. அம்மா பவானி ஆதரிக்க வேணுமம்மா.//

    நானும் வேண்டிக் கொள்கிறேன்.
    அருமையான புராணவரலாறு.
    படங்கள் எல்லாம் அழகு.
    பலவருடங்கள் முன் பார்த்த கோவிலை மீண்டும் தரிசனம் செய்தேன். பாவனி என்றாலே போதும் அனைத்தும் அருள்வாள் என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நானும் கோவிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சுதும்மா

      Delete
  3. எத்தனை படங்கள்......

    தகவல்கள் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் நெட்டில் சுட்டவை. சுட்ட படங்கள்லாம் வீணாகக்கூடாதே. அதான்

      Delete