Wednesday, October 02, 2013

வேலுத்தம்பி தளவாய் - மௌனசாட்சிகள்

சுற்றுலா போறதுன்னா எல்லோருக்கும் மகிழ்ச்சி கூடவே மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும்.  அதிலும் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் இடங்களுக்கு போகும்போது நாமே அந்த காலகட்டத்துக்குள்ளே இருக்குற  மாதிரி ஒரு அனுபவத்தை கொடுக்கும். அப்படிப்பட்ட இடங்களைதான் மௌனசாட்சிகள் பகுதில பார்த்துட்டு வரோம். 

அந்த வரிசையில இன்னிக்கு நாம பார்க்க போறது, 17 ம் நூற்றாண்டு காலத்திய இடம். அதன் வரலாற்று பின்னணிகளும், பெருமைகளும் நமக்கு மட்டும் இல்லாது வருங்கால சந்ததியினருக்கும் இதுப்போன்ற இடங்கள் பற்றி தெரியனும்.  மாயாஜால், கிஷ்கிந்தா, ஸ்பென்சர், வொண்டர்லான்னு பிள்ளைகளை கூட்டி போகும் அதே நேரத்தில் இது போன்ற இடங்களுக்கும் வருடம் ஒரு முறையேனும் கூட்டி போகனும். அப்பதான், நம்ம முன்னோர்களின் காதல், வீரம், ராஜதந்திரம், வியாபாரம், கட்டிடகலை, கலை, கலாச்சாரமும், பண்பாடும் பிள்ளைகளுக்கு தெரிய வந்து இனியாவது அவைகள் கட்டி காக்கப்படும். 

இன்னிக்கு நாம பார்க்க போறது, கன்னியாக்குமரி மாவட்டத்தில் ”திருவந்தபுரம் ” சாயலை கொண்ட ”திங்கள்சந்தை” பக்கம் உள்ள ”தலக்குளம்”ன்ற ஊருல இருக்குற ”வேலுத்தம்பி தளவாய் கோட்டை ” நாகர்கோயில்ல இருந்து நேரடியாகவும் போகலாம் ..இல்லாட்டி ”திங்கள்சந்தை” ன்ற இடத்துக்கு போய் அங்கிருந்தும் போகலாம்.  ஒருவழியா கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களை எதிர்த்து போரிட்ட வீரன் ”வேலுத்தம்பி தளவாயின் நினைவிடத்”திற்கு வந்தாச்சு. 

பதிவர்கள்லாம் வர்றாங்களே! நம்மளை ஃபோட்டோ எடுத்து பதிவுல போட்டு உலகம் முழுக்க காட்டுவாங்கன்னு அழகா, கம்பீரமா ஜம்முன்னு நின்னு ஃபோஸ் கொடுத்து நம்மை வரவேற்பது “வேலுத்தம்பி தளவாய் நினைவு இல்லம் தோரண நுழைவாயில்”.
அதை தாண்டி போனா, (அக்கோவ், அம்மாம்பெரிய நுழைவாயில தாண்டலாம் முடியாதுன்னு கிண்டலடிக்குற ஆசாமிகள்லாம் நுழைஞ்சு வாங்கப்பா!!) கேரளா பாரம்பரிய பாணியில் கட்டப்பட்ட நுழைவாயில் .  உள்ளூர் நகராட்சி அங்குள்ள தரை பகுதியை சீரமைத்து கொடுத்திருக்கு. அது, திறந்த நிலையில் காணப்படுது. அதனுள்ளே சென்றால் கம்பீரமா காட்சி தருகிறார் ”திவான் வேலுத்தம்பி தளவாய்”.
(அவருடைய சிலை மற்றும் பக்கத்தில் ஒரு சிறிய கோவில் )

அந்த வீட்டில் ஆயுதங்கள் வைத்திருந்த அறையில்,  அக்கால டச்சு ஓவியர் ஒருவரால் வரையப்பட்ட படத்தின் மாதிரிதான் இப்பவும் அவருடைய படமா அங்கு வைக்கப்பட்டிருக்கு.


வேலாயுதன் செண்பகராமன் தம்பி (1765 - 1809) 

தளவாய் என்பது திருவிதாங்கூர் திவானுக்குரிய பட்டம்.  அந்த காலத்துல,  பேரு.  திருவிதாங்கூரில் தலைமைத்தளபதி, அமைச்சர் இந்த ரெண்டு பதவியையும் ஒருத்தரேதான் பார்த்துக்குவாங்க. வேலுத்தம்பி தளவாயினுடைய முழுப்பெயர் ”இடபபிரபு குலோத்துங்க கதிர்குலத்து முளப்படை அரசரான இறையாண்ட தளாக்குளத்து வலிய வீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன்” ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சோடா ப்ளீஸ்.


 (வீட்டின் முன் பகுதி பக்கவாட்டு தோற்றம்)

இவர் 1765 ம் ஆண்டு வாயிலயும், மனசுலயும் நுழையாத ஒரு மலையாள மாசத்துல 16 ம் தேதில, அன்றைய திருவனந்தபுரம் நாட்டிலுள்ள (இப்ப  அந்த இடம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கு) நாகர்கோயிலுக்கு அருகே உள்ள ”தாழைகுளம்”ன்ற ஊரில் இப்ப மருவி ”தலைக்குளம்” ன்னு அழைக்கப்படுற ஊருல பிறந்தவர். இவரது பெற்றோர்கள் திரு.குஞ்சு மயிற்றி, திருமதி.வள்ளியம்மை தங்கச்சி.


(வீட்டின் முன்பக்க தோற்றம்)
சின்ன வயசிலேயே வரும், அவரது தம்பியும் பெரிய வீரர்களா புகழ்பெற்று, நாயர் படைகளுக்கு தலைமை தாங்க ஆரம்பிச்சாங்க. படைத்தலைவர்களில் ஒருத்தரா இருந்த வேலுத்தம்பி தொடர்ச்சியான ஒரு மக்கள்புரட்சி மூலம் தளவாயா ஆனவர்.

”பாலராமவர்ம குலசேகரன்”ன்ற மன்னர் 1798ல் தன் பதினாறு வயசுல மன்னரானபோது வளமிக்க நாடா இருந்த திருவிதாங்கூர் பலவகையான சீரழிவுகளை சந்திக்க நேர்ந்தது. கோழிக்கோட்டு ”சாமூதிரி மன்னரின்” ஆளான ”ஜெயந்தன் நம்பூதிரி”ன்ற வைதீகர் மன்னரை தன் பிடியில் வைத்திருந்தார். இவர் வைத்ததே சட்டம்ன்ற நிலை. இதற்கு எதிரா உள்ளூர் நிலக்கிழார்கள் கோபம் கொண்டிருந்தாங்க. அக்கோபத்தை வேலுத்தம்பி பிரதிநிதித்துவம் செஞ்சு வந்திருக்கார்.


(வீட்டின் முன்பக்க வாசல் அதில் வேலைபாடுகளுடன் கூடிய கட்டில்  )

அப்ப திருவிதாங்கூர் திவானா இருந்தவர் “ராஜா கேசவதாசன்”. நாகர்கோவில் அருகே ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த இவர் தன் தனித்திறமையால் திவானாகி கேரள வரலாற்றில் அழியாத இடம் பெற்ற மாமனிதர். திருவிதாங்கூர் மீது பெரும்படையெடுத்து வந்த திப்புசுல்தானை பாலக்காட்டுக் கோட்டையில் தோற்கடித்த வெற்றி வீரர் அவர். 


இன்றைய கேரளத்தின் பல முக்கிய நிர்வாக , தொழில் அமைப்புகளை உருவாக்கியவர் இவரே! சதுப்பு நிலத்தில் ”ஆலப்புழா”ன்ற ஊரை அமைத்து அதை துறைமுகமா வளர்த்தார். கயிறுத்தொழிலை அங்கே வளரச் செய்தார். திருவனந்தபுரம் துறைமுகம், பல முக்கிய சாலைகள் , அணைகள் போன்றவை இவரால் அமைக்கப்பட்டவைதான். கடல்நீரை அணைகட்டி நிறுத்தி அச்சதுப்பில் நெல் விவசாயம் செய்யும் குட்டநாட்டு விவசாய முறையை உருவாக்கியவரும் இவரே!
”ஜெயந்தன் நம்பூதிரி” என்பவர், திவான் ”ராஜா கேசவதாசனை ” மன்னரிடமிருந்து அன்னியப்படுத்தினார். ஜெயந்தன் நம்பூதிரி மன்னரின் பல்லக்கில் ஏறி ஊர்வலம் வந்தது, தன் உறவினரான சங்கரன் நம்பூதிரி என்பவருக்கு காயம்குளம்பகுதியை அளித்தது போன்றவற்றை கேசவதாசன் கண்டித்தார். எனவே மன்னரை கரைத்து திவானை கைது செய்வித்த ஜெயந்தன் நம்பூதிரி பின் அவரை விஷம்வைத்துக் கொன்றுவிட்டார். அதன் பிறகு ஜெயந்தன் நம்பூதிரி திவான் ஆனார். அவரது அடிப்பொடிகள் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டனர். திருவிதாங்கூர் அவர்களால் சூறையாடப்பட்டது.


(21 கைகள் ஒன்று சேரும் நுழைவாயில் உத்திரம் அமைப்பு )

அக்காலக்கட்டத்தில் திருவிதாங்கூர் வெள்ளை அரசுக்கு பெருந்தொகை கப்பமா கட்டவேண்டியிருதுச்சு. அத்தொகை மூலம் செல்வ வளம் மிகுந்த இந்நாடு நிதிப்பற்றாக்குறையால் அவதிப்பட்டது. அதைப்போக்க கடும் வரிவிதிப்பும், கட்டாய உழைப்பும் சாதாரணமா இருந்துச்சு. ஜெயந்தன் நம்பூதிரி நிதிவசூலில் தன் பங்கையும் எடுத்துக் கொண்டார். ஆகவே நிலக்கிழார்களை வரவழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு பெருந்தொகை கட்டணமாக விதித்து அதை அளிக்காதவர்களை கொடூரமாக தண்டித்திருக்கிறார்.

(வீட்டின் உள்பக்கம் முதல் நிலை )

அப்படி அழைக்கப்பட்டவர்தான் வேலுத்தம்பி. அவருக்கு கட்டணம் ரூ 3000 விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுது. அப்பணத்தை திரட்டி வருவதாக சொல்லி மீண்ட வேலுத்தம்பி பல்வேறு நிலக்கிழார்களை திரட்டி ஒரு சேனையை உருவாக்கி, அதை நடத்திக் கொண்டு திருவனந்தபுரம் வந்தார்.

(உள்பக்க மரத்தாலான சுவர் மற்றும் கதவு வேலைப்பாடுடன் கூடிய உத்திரம் )


அதேப்போல வடக்கே சிறையின் கீழில் இருந்து ”அய்யப்பன் செம்பகராமன் பிள்ளை” என்பவரது தலைமையில் ஒரு கலகப்படை திருவனந்தபுரம் வந்தது. அவர்கள் அரண்மனையை சுற்றிவளைத்தாலும் ராஜபக்தி காரணமாக எல்லைமீறி உள்ளே நுழையவில்லை. வேறுவழி இல்லாத மன்னர் சரணடைந்தார். கலகக்காரர்களிடம் ஜெயந்தன் நம்பூதிரியும் பிறரும் ஒப்படைக்கப்பட்டனர். பிராமணர்களை கொல்வது இல்லை என்பதனால் அதிகபட்சத் தண்டனையாக அவரை நாடு கடத்தினார்கள்(ஆனால் ஒரு தமிழ் பிராமணனை கூடவே அனுப்பி நம்பூதிரி திருவிதாங்கூர் எல்லையைத் தாண்டியதுமே அவரை வெட்டி வீழ்த்த வேலுத்தம்பி ஏற்பாடு செய்திருந்தார்). மற்றவர்கள் கடுமையா தண்டிக்கப்பட்டனர். தொடர்ந்து அய்யப்பன் செம்பகராமன் திவான் ஆனார். ஆனா, முதியவரான அவர் ஒரு வருடத்திலேயே மரணமடைய வேலுத்தம்பி திவானாக ஆனார்.

(பூஜை அறை )

வேலுத்தம்பியை மிக குரூரமான அதே நேரத்துல மிக மிக நேர்மையான ஒருவராக சரித்திரம் காட்டுது. குட்டிகுட்டித் தலைவர்களை அவர் குரூரமாக ஒடுக்கினார். திருவிதாங்கூரின் வரிவருமானம் குறைய முக்கியக்காரணம் ஊழலே என்று கண்டு அவர் கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஊழலை கிட்டத்தட்ட முற்றாக ஒழித்தார். அதுவே நாட்டின் வருமானத்தை பலமடங்கு அதிகரிக்கச் செய்ததாக .ஒரு கதை சொல்லப்படுது.

வேலுத்தம்பியின் அன்னைக்கு சொந்தமான தென்னந்தோப்புகள் ”கீழ்க்குளம் ”ன்ற ஊரில் இருந்தன. அவற்றுக்கு வரி நிர்ணயித்த அதிகாரி அவை தளவாயின் அன்னைக்கு உரியவை என்பதனால் மிக குறைவாக அதை நிர்ணயித்தார். அதை அறிந்த தளவாய் கோபம் கொண்டு அவ்வதிகாரியின் கட்டைவிரலை வெட்டினார். தன் தாயையும் தண்டித்தார்(ம்ம்ம்ம்ம்ம் இந்த காலத்துல இப்படி ஒருத்தர் பொறந்து வந்தா நல்லாதான் இருக்கும்).


இந்நடவடிக்கைகள் மக்களிடையே ஆதரவு பெற்றாலும், அதிகாரிகளிடையே அதிருப்தியை உருவாக்கின. ஆரம்பத்தில் வெள்ளையர் வேலுத்தம்பியை ஆதரித்தார்கள், காரணம் கப்பம் முறையாக கிடைத்தது. ஆனால் அப்போது ரெசிடண்ட் ஜெனரலாக இருந்த ”கர்னல் மெக்காலே ” என்பவர் மன்னரை உதாசீனம் செய்து தானே ஆட்சியாளர் என்ற முறையில் சில நடவடிக்கைகளை எடுத்தது வேலுத்தம்பிக்கு பிடிக்கவில்லை. 

சில கிறித்தவ பாதிரியார்கள் தளவாயை அவமானப்படுத்தியதாகவும் அதற்கு கேனலின் ஆதரவு இருந்ததாகவும் சொல்லப்படுது. மேலும் கப்பமாக போகும் பெரும் செல்வம் வேறு தளவாயை கோபம் கொள்ளச் செய்தது. மெல்ல ஆங்கில மேலாதிக்கத்துக்கு எதிராக வேலுத்தம்பி செயல்பட ஆரம்பித்தார்

கப்பம் தொடர்ந்து உயர்த்தப்பட்டத்தை வேலுத்தம்பி எதிர்க்க பூசல்கள் வெடித்தன. ஒரு கட்டத்தில் நாட்டின் வருடாந்தர வரிவசூலில் எண்பது சதவீதம் கப்பமாக வசூலிக்கப்பட்டது.



கர்னல் மெக்காலே” வரிவசூல் தொகையின் கணிசமான பகுதியை தனக்காக எடுத்துக் கொண்டது பிரச்சினையாயிற்று. தொடர்ந்து வரியை உயர்த்திய மெக்காலே வரியை உயர்த்தும்படி திவானை வறுபுறுத்தினார். அதற்கு திவான் ஒப்பவில்லை. ஒருகட்டத்தில் மன்னரின் நகைகளைக்கூட விற்று கப்பம்கட்ட நேர்ந்தது. அது மன்னருக்கும் அதிருப்தியை உருவாக்கியது. ஆரம்பத்தில் வேலுத்தம்பிக்கு உதவுவது போல் வந்த ”கர்னல் மெக்காலே” வின் நாடகம்தான் இவ்வளவும்.

கப்பம் கட்டாவிட்டால் மன்னரையும் தளவாய் வேலுத்தம்பியையும் சிறைபிடிக்கப் போவதாக அச்சுறுத்தினான். தானே மன்னராக மெக்காலே நடக்க ஆரம்பித்துவிட்டான் மெக்காலே திவானை பதவி நீக்கம் செய்யவைத்தார். அவரை சிறைப்பிடிக்க உத்தரவு வந்தது. ஊருக்கு தன் தம்பியுடன் தப்பி ஓடிய வேலுத்தம்பி இங்கு வந்து1809 ல் குண்டறை என்ற ஊரில் வைத்து ஒரு அறிக்கையை விடுத்தார். ஆங்கில சுரண்டல் அரசுக்கு எதிராக ஒன்றுபடும்படி மக்களை அறைக்கூவினார். இது குண்டறை விளம்பரம் என்று அழைக்கப்படுது.
 கப்பம் கட்டச் சொன்ன ஆங்கிலேயனை ‘‘முடியாது’’ என்று எதிர்த்தான் தளவாய் வேலுத்தம்பி. அவனை அழிக்க படையெடுத்து வந்தனர் பரங்கியர். எதிர்த்தான். போரிட்டான். எதிரிகளை ஓட ஓட விரட்டினான். அந்த வீரம் கண்டு அஞ்சினர் வெள்ளையர்...

அதை எதிர்த்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதப் புரட்சிக்குத் தயாரானார் வேலுத்தம்பி. அவரது புரட்சியைக் கண்டு அண்டை நாட்டு மன்னர்களும் ஜமீன்தார்களும்கூட அஞ்சினர்.

வெள்ளையர் படை திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்தது.அவர்கள் நோக்கம் வேலுத்தம்பியைக் கொல்வது. இதை அறிந்த தளவாய் கொச்சியில் உள்ள பிரிட்டிஷ் கட்டடத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றினார்.

அரண்மனையில் மெக்காலேயைக் கொல்ல நெருங்கினார். அங்குள்ள அரண்மனை கழிவறைக்குள் ஒளிந்து, தப்பினான் மெக்காலே. இதனால் மெக்காலேவுக்கு வேலுத்தம்பி மேல் கோபம் அதிகமானது.அவரை உடனே கொல்ல உத்தரவிட்டான்.வேலுத்தம்பியைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசும்,பதவியும் தருவதாக தண்டோரா போட்டான்.

கலகம் ஏறத்தாழ் ஒருவருடம் நடந்துச்சு. மைசூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் உபரி படைகளை வரவழைத்து பீரங்கிகளும் துப்பாக்கிகளும் இதுவரை இல்லாத அளவு உபயோகப்படுத்தப்பட்டன. கர்னல் லோகர் உதயகிரி கோட்டையைக் கைப்பற்றி போரில் வெற்றி பெற்றதாக அறிவித்தான். ஆங்கில கம்பெனி போரிட்டதனால் கலகம் சீக்கிரமே அடங்கியது.தலைமறைவாக இருந்த வேலுத்தம்பி மண்ணடி என்ற ஊரில் சுற்றிவளைக்கப்பட்டார்.எதிர்த்துப் போரிட துணிவின்றி,சதிவலை விரித்தனர்.

காட்டிக் கொடுப்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்தார்கள். மண்ணடி என்ற ஊரிலுள்ள பகவதி அம்மன் கோயிலில் பதுங்கியிருந்த வேலுத்தம்பியை எதிரிகள் நெருங்கிவிட்டனர். கருங்காலிகள் காட்டிக் கொடுத்தனர்.ஆங்கிலேயரிடம் பிடிபட அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. எதிரியின் கையில் சாவதைவிட,தன் சகோதரனின் கையில் சாவதை வீரமாக நினைத்தார்.தன் தம்பியிடம் தன் வாளைக் கொடுத்து தன் கழுத்தை வெட்டச் சொன்னார். சகோதரன் மறுத்துவிட்டான். 

வேறு வழி இல்லாமல் தன் கழுத்தைத்தானே வாளால் வெட்டி வீர மரணம் எய்தினார்.அப்போது அவருக்கு வயது 44.வீரமரணமடைந்த வேலுத்தம்பியின் உடலைத் தூக்கிப்போய் கழுவில் ஏற்றி, தங்கள் வெறியை தணித்துக்கொண்டனர் வெள்ளையர்.அதனால் ஒரு மாவீரனின் சரித்திரம்,துன்பியல் சரித்திரமாகிப்போனது. பத்மநாபன் தம்பி கைதுசெய்யப்பட்டு தூக்கிலேற்றப்பட்டார்.
வேலுத்தம்பியின் அரண்மனை இடிக்கப்பட்டு அங்கே ஆமணக்கு விதைக்கப்பட்டதா சொல்லப்படுது. அவரது குடும்பத்தினர் வேட்டையாடப்பட்டனர். பலர் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டனர். அரசசேவையிலிருந்து நாயர்கள் முற்றாக விலக்கப்பட்டார்கள். நாயர்படை இருநூறுபேருக்குமேல் போகக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசு வரையறைசெய்தது. கிராமங்களில் நடந்துவந்த ஆயுதப்பயிற்சிசாலைகள் நிறுத்தப்பட்டன
வேலைபாடுகளுடன் கூடிய உள்பக்கதில் காணப்படும் மரக்கட்டில்
ஒரு தலைமுறைக்குப் பிறகு திருவிதாங்கூர் மகாராஜா ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று வேலுத்தம்பியின் வம்சத்தில் எஞ்சிய ஒரு பெண்ணுக்கு மணம் செய்வித்து அவளுக்கு கட்டித்தந்த சிறுஅரண்மனை தான் இது. 

 மரத்தாலான கட்டுமானம். பூமுகம், பத்தாயப்புரை , அங்கணம் உள்ளடுக்கு எல்லாம் கொண்ட நாலுகட்டு வீடு அது. அதில் முப்பது வருடம் முன்புவரை தளவாயின் வாரிசுகள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் பெரும்பாலும் கேரளத்துக்கு சென்றுவிட, இப்போ தளவாயின் வாரிசுகளில் ஒருவர் கைவசம் இக்கோட்டை இருக்கு.
கட்டிலின் பல்வேறு வேலை பாடுகள்
 ஆனால் பெரிய கட்டிடம் பழுதுபார்க்கப்படாம அழிஞ்சிக்கிட்டே வருது. ஓடுகள் பல இடங்களில் உடைந்து, ஒழுகி மரம் அழிய ஆரம்பித்துவிட்டது. பழுது பார்க்க லட்சகணக்கா ரூபாய் செலவாகும் . அதற்கு இன்றைய வாரிசுகளிடம் பணவசதி இல்லை. வாரிசுகள் பலர் அரசிடம் அரண்மனையை எடுத்துக் கொள்ளச் சொல்லி பலவருடங்களா கேட்டும். தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லையாம்,என்று அங்குள்ள வயதான ஒருவர். குறைப்பட்டுக்கொண்டார் 
வேலுத்தம்பி வழிபட்ட கோவில், அவர் பயன்படுத்திய ஆயுதங்கள்,கலைப் பொருட்கள் இன்றைக்கும் அவரது வீரத்தை சொல்லிக்கிட்டு இருக்கு.ஆனா, அதை தமிழகஅரசு கண்டுகொள்ளாததால அந்தவீடு பொலிவிழந்து கொண்டே வருது.

(உள்பக்கம் இருக்கும் கோவில் )
வீரமரணமெய்திய வேலுத்தம்பியின் நாட்டுப் பற்றைப் பறைசாற்ற உள்ள ஒரே சாட்சி இந்த வீடுதான்.அதை தற்போது வேலுப்பிள்ளை தளவாய் குடும்பதினர் சிதரகலாமண்டலம் என்னும் அமைப்பிடம் கொடுத்து உள்ளனர்.  அவர்கள் அதை மியூசியமாககும் வேலையில் ஈடுபட்டிருக்குறதால இப்போ நீங்க போனாலும் பார்ப்பது கடினம். 

இரண்டு பதிவா போட்டா வேலுத்தம்பியின் கதை புரிப்படாம போக வாய்ப்பிருக்குறதால, இந்த பதிவு கொஞ்சம் நீண்டுடுச்சு! அதனால, சிரமத்துக்கு மன்னிச்சு.

அடுத்த வாரம் மௌனசாட்சியா நின்னு பல கதைகளை எடுத்து சொல்லும் வேற ஒரு இடத்துக்கு போகலாம். இப்போ பை! பை!

15 comments:

  1. நீங்கள் சொல்வது போல் குழந்தைகளை அழைத்து செல்வது நம் கடமை... பகிர்வு நீளமாக இருந்தாலும் (எனது பகிர்வுகளை என்ன சொல்வது...?) படங்களுடன் விளக்கங்கள் அருமை சகோதரி.. நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்க ரேஞ்ச் என்ன!? என் ரேஞ்ச் என்னண்ணா!? நீங்கள்லாம் பதிவுலக பிதாமகன்.

      Delete
  2. வீரம் விளைந்த பூமியினை தரிசித்தோம் உங்கள் பதிவின் மூலமாக படங்கள் தகவல்கள் அருமை ..நன்றி..

    ReplyDelete
  3. நல்ல பதிவு, இளைய தலைமுறையினர் பலருக்கு இவரை தெரியாது.

    தளவாயின் வீர மரணத்திற்கு காரணம் திருவிதாங்கூர் மகாராஜாவின் சதியும் இருந்ததாக சொல்வார்கள்....!

    ReplyDelete
  4. படங்களும் தகவலும் நன்று

    ReplyDelete
  5. பல முரண்பாடான தகவல்கள் உண்டு காரணம் அரைகுறை ஆராச்சியாளர்களால் இபொழுது உண்மையான நோக்கினோடு யாரும் ஆராய்ச்சி செய்வதில்லை முட்டாள் தனமாகவும் வகுப்பு வாததுடனும் தான் ஆராய்ச்சி செய்கின்றனர் தஞ்சை கோவிலை பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சி செய்து துல்லியமாக தகவலை கொண்டு வந்ததை போல் நடுநிலையான தகவல்கள் வரவேண்டும் ..இருந்தாலும் சிலர் உண்மையான நோக்கினோடு சில தகவல்களை சொல்வது உண்டு அவை வெளியே வரமால் போவதும் உண்டு ,,எனினும் ஒரு வலிய மனுஷனை பத்தி அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளகூடிய அற்புதமான தகவல்கள்

    ReplyDelete
  6. // மாயாஜால், கிஷ்கிந்தா, ஸ்பென்சர், வொண்டர்லான்னு பிள்ளைகளை கூட்டி போகும் அதே நேரத்தில் இது போன்ற இடங்களுக்கும் வருடம் ஒரு முறையேனும் கூட்டி போகனும்.//

    இதை நான் வரவேற்கிறேன்.. வரலாறு ரொம்ப முக்கியம்..

    ReplyDelete
  7. பெயரளவில் மட்டுமெ அறிந்திருந்த வேலுத்தம்பி தளவாய் குறித்து நிறைய விவரங்களை அறிய முடிந்தது... படங்கள் அனைத்தும் அற்ப்புதம்...

    ReplyDelete
  8. வேலைப்பாடுகள் மிகுந்த வீட்டின் படங்கள் ஆச்சர்யம்...

    ReplyDelete
  9. படங்களும் தகவல்களுமாய் சிறப்பான பகிர்வு. நமக்கு முன் வாழ்ந்த பல அற்புத மனிதர்களைப் பற்றி அறியத் தரும் முயற்சிக்கு நன்றி ராஜி.

    ReplyDelete
  10. வேலுதம்பியின் கதைகளை பல முறை கேட்டு வளர்ந்தவன் நான், எனது அப்பா அடிக்கடி கூறுவார். உண்மையில் தமிழக அரசு வரலாற்றுச் சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக குறைவு, வீரம் சொறிந்த வேலுதம்பியின் நினைவு அரண்மனை மற்றும் பகுதிகளை பேணவும், இத் தகவல்களை இளையோரிடத்து பரப்பவும் நாம் அனைவரும் பரப்புதல் அவசியம். நீண்ட பதிவாக எனக்குப் படவில்லை, ! சுவை குன்றாத வாசிப்பு அனுபவம் தந்தது.

    ReplyDelete
  11. சப்பப்பா....
    இப்பவே கண்ணக்கட்டுதே

    ReplyDelete
  12. கட்டிடங்களின் மர வேலைப்பாடுகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டன புகைப்படங்கள். பல தகவல்களைத்திரட்டி இப்பதிவை எழுதியிருப்பதற்கும் பாராட்டுக்கள். மொத்த த்தில் அருமையான பதிவு.

    ReplyDelete
  13. நிறைய தகவல்களை திரட்டி இருக்கிறீர்கள்..... உங்களது முயற்சியினால் இன்று எங்களை போன்றவர்களுக்கு இது தெரிந்தது. நன்றி.

    ReplyDelete