Saturday, July 07, 2018

கல்லா?! மண்ணா?! -கிராமத்து வாழ்க்கை 3


இந்த அவசர யுகத்தில் நாம ஆயிரம்தான் அனுபவிச்சாலும், அரிதான பல விசயங்களை இழந்திருக்கோம்ன்றது மறுக்க முடியாத உண்மை.  இன்னிக்கு ஆயிரம் ஆயிரமாய் கொட்டி கொடுத்தாலும் அனுபவிச்ச அந்த மகிழ்ச்சியை திரும்ப கொண்டு வரவே முடியாது. அனுபவிச்சதை நினைச்சு பார்த்து சந்தோசப்பட்டுக்கலாமே தவிர மீண்டும் அனுபவிக்கமுடியாது. அதேமாதிரி, என்னதான் நம்ம பசங்களுக்கு நாம ஸ்பெஷலா கொடுக்குறோம்ன்னு நினைச்சுக்கிட்டிருந்தாலும் அது உண்மையில்லை. கரும்பின் சாற்றை நாம குடிச்சுட்டு அதன் சக்கையதான் நம்ம பிள்ளைகளுக்கு கொடுத்துக்கிட்டு இருக்கோம்.


எல்.கே.ஜி பாப்பாக்கூட ஏழு புக்கு, 19 நோட்டு கொண்டு போகுது. அதில்லாம, லஞ்ச் பாக்ஸ், ஸ்னாக்ஸ் பாக்ஸ், வாட்டர் பாட்டில்ன்னு லோடு சுமக்கும் பொதிமாடு மாதிரி போகுதுங்க. ஆனா, 70ல பொறந்த நமக்கு எட்டாம்வகுப்பு வரை சிலேட், அஞ்சு புக்கு, அஞ்சு சப்ஜெக்ட்டுக்கும் சேர்த்து ஒரு நோட்டு, தமிழ் எழுதி பழக ரெட்டைக்கோடு நோட்டு, இங்கிலீஷ் எழுதி பழக நாலு கோடு நோட்டு, ஒரு பென், பாதி பென்சில், மிளகு சைஸ்ல ரப்பர், அப்பா ஷேவிங்க் செய்த பாதி பிளேடு,  அரையடி ஸ்கேல்ல முக்கா பீசு இதுதான் இருக்கும். இதுக்கே சுமக்க வெசனப்பட்டுக்கிட்டு அந்த பக்கமா போகும் மாட்டு வண்டில பையை மாட்டிக்கிட்டு  மாட்டுவண்டியை பிடிச்சுக்கிட்டு தொங்கிக்கிட்டு போவோம். சின்ன வயசு ஆண்பிள்ளைகளின் டவுசரை இழுத்துவிட்டு அண்ணன்கள் விளையாடுறதையும் பார்த்துக்கிட்டே பள்ளிக்கு போவோம்.

அரைப்பரிட்சை லீவுல கலக்கா(மணிலா, வேர்க்கடலை) பறிக்க போறதுலாம் ஒரு பொழுது போக்கு.  அதிகாலைல கழனிக்கு போய் நம்மாள முடிஞ்ச கலக்கா செடியை பறிச்சு போட்டுட்டு வரனும். செடியை புடுங்க ஈசியா இருக்கும்ன்னுட்டு முதல்நாள் நைட்டு தண்ணி பாய்ச்சி வச்சிருப்பாங்க. அது ஒரு பக்கம் வழுக்கும். எட்டு மணி வரை கலக்கா செடிகளை பிடுங்கி ஒரு பக்கம் சேர்த்துட்டு அடையாளமா எதாவது வச்சிட்டு வீட்டுக்கு வந்து காலைல சாப்பிட்டு, மீண்டும் வயலுக்கு போய் செடில இருந்து கலக்காவை தனியா பிரிச்சு போடனும். நாம பறிச்ச செடில இருந்து எல்லா கலக்காயை பிரிச்ச பிறகு மாலைல கலக்கா அளந்து பைசா வேணும்ன்னா பைசா கொடுப்பாங்க. இல்லன்னா அதுக்கு கலக்கா வேணும்ன்னாலும் கலக்கா கொடுப்பாங்க. அப்படி கலக்கா பறிக்கும்போது  கலக்காயை லேசா பிரிச்சு  காதுல, மூக்குலலாம் இதுமாதிரி  கம்மல், மூக்குத்தின்னு போட்டுப்போம். 

கலக்கா பறிச்ச கழனில மறுநாள் காலைல போய், அந்த மணலை கிளறி விடுபட்டுபோன கலக்காவை சேகரிச்சாலே ஒரு ரெண்டு படி தேறும்.


எல்லா பிள்ளைகளும் ஒண்ணா உக்காந்துக்கிட்டு, கைகளை தரையில் பரப்பிக்கிட்டு, யாராவது ஒருத்தங்க கோழி பறபறன்னு சொல்லும்போது எல்லாரும் கையை அசைக்கனும், புறா பறபறன்னு சொல்லும்போது கையை அசைக்கனும். சீப்பு பறபறன்னு சொல்லும்போது யாராவது கையை அசைச்சுக்கிட்டா அவங்க அவுட். அதாவது, கோழி, காக்கா, மயில்ன்னு தானா பறக்குறதை சொல்லும்போது பறபறன்னு சொல்லி கையை அசைக்கனும். அப்படி அசைக்கலைன்னா அவங்க அவுட். தானா பறக்காத நோட்டு, பென்சில், அம்மிலாம் சொல்லும்போது கையை அசைக்காம இருக்கனும். அப்படி அசைச்சா அவங்க அவுட்.


இன்னிக்குலாம் நம்ம பசங்களுக்கு எதுமே அரிதான பொருளா இல்ல. ஒருக்காலத்துல நமக்கு டவுன்பஸ்கூட அதிசயமே!  எனக்கு நினைவு தெரிஞ்சு ரயில் தண்டவாளத்தை பார்க்கும் வாய்ப்பு இருந்தாலும் என் அம்மா அதுபக்கத்துலகூட போகவிடமாட்டாங்க. இத்தனைக்கும் அரக்கோணம் டூ திருத்தணி மார்க்கம்தான் அது. எப்பவாவது ஒரு ட்ரெயிந்தான் வரும். அதுக்கே அப்படி. அக்கா கல்யாணம் ஆகிப்போகும்போது, துணைப்பொண்ணா என்னை அனுப்பினாங்க. அக்கா வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு அக்கா, மாமாகூட போகும்போது, என்னை கூட்டிபோ மாமான்னு மாமாகிட்ட கேட்க, என்னை என் மாமா கொண்டு போய் ஆடவிட்டார். முதன்முதலா ரயில் தண்டவாளத்துல நடந்தது என்னமோ மலையையே புரட்டினமாதிரி ஒரு ஃபீல். இன்னிக்கும் அந்தப்பக்கம் போகும்போது இந்த நினைப்பு வரும்.


இன்னிக்கு மொபைல்ல, ஐபாட்ல, ஹோம்தியேட்டர்ன்னு பாட்டு கேட்டாலும்,. வெள்ளிக்கிழமையின்போது தூர்தர்சன்ல போடும் ஒளியும் ஒலியும் பார்த்த திருப்தி வராது. அவசர அவசரமா வீட்டு வேலைலாம் செஞ்சுட்டு, டிவி இருக்க வீட்டுக்கு ஓடுவோம். அவங்க வீட்டு ஜன்னல்ல எட்டி பார்ப்போம். அவங்க காட்டும் பந்தா இருக்கே! யப்பா! கடைக்கு போய் வா! அதை செய், இதை செய்ன்னு வேலை வாங்குவாங்க. எங்க வீட்டில் டிவி வாங்கி முதன்முதலா ஒளியும் ஒலியும் பார்க்கும்போது எங்க வீட்டுல அத்தனை கூட்டம். என்னமோ சாதிச்ச ஒரு ஃபீல்.


அம்மா என்னை எந்த வேலையும் வாங்க மாட்டாங்க. அம்மா ஒருமுறை ஊருக்கு போய் இருக்கும்போது,  காலை மாலை தெரு கூட்டி பெருக்கி கோலம் போடுன்னு சொல்லிட்டு போனாங்க. காலைல எந்திரிச்சு வரும்போது  எதிர்வீட்டு பாட்டி  துணைக்கு வந்தாங்க. சாணிய கரைச்சு தெளிச்சு, அது காய்ஞ்சதும் பெருக்கி கோலம் போட்டாங்க. அதேமாதிரி நானும் மாலைல சாணிய கரைச்சு ஊத்தி பெருக்கி கோலம் போட்டு வச்சேன். வீட்டுக்கு வந்த அம்மா செம மாத்து. பொம்பளை புள்ளையா அடக்கமா இல்லாம ஆம்பிள்ளை பிள்ளை மாதிரி ஊரை சுத்தினா இப்படிதான் எதுமே தெரியாது. காலைலதான் சாணி தெளிக்கனும். மாலைல வெறும் தண்ணிதான் தெளிக்கனும்ன்னு சொல்லி தந்தாங்க. அதேமாதிரி, முதல்ல வாளில சாணிய போட்டு கொஞ்சமா தண்ணி ஊத்தி, நல்லா கட்டி இல்லாம கரைச்சுட்டு அதுக்கப்புறம் தண்ணி ஊத்தி தெருமுழுக்க தெளிக்கனும்ன்னு சொல்லி கொடுத்தாங்க. ஆனா, என் கெரகம் கல்யாணம் கட்டுன நாள்முதலா இப்படி ஒரு வாய்ப்பே கிடைக்கல. எங்க போனாலும் சிமெண்ட் தெருதான்.
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீப்ப்ப்ப்ப்பீன்னு ஒரு இரும்பாலான ஒரு ஊதுகுழலை ஊதிக்கிட்டு வருவாங்க. பெரும்பாலும் தலைவாரும்போது உதிரும் முடியை அம்மா சேகரித்து வைக்க அதை இவங்கக்கிட்ட கொடுத்தா இவங்க மிட்டாய் தருவாங்க. அந்த மிட்டாய் ஒரு கொம்பின் உச்சியில் சுத்தி தூசு படாம துணி சுத்தி வைப்பாங்க. இதுக்கு பப்பரமிட்டாய்ன்னு சொல்றாங்க. ஆனா எங்க ஊருல இதுக்கு பேரு ஜவ்வு மிட்டாய். இழுக்க இழுக்க வந்துக்கிட்டே இருக்கும்.


அந்த ஜவ்வு மிட்டாய்ல கொஞ்சமா இழுத்து, வாட்ச், தேள், வளையல், மோதிரம்ன்னு  செஞ்சு நம்ம உடம்புல ஒட்டி வச்சிட்டு போவார். அது கை, உடைன்னு பிசுபிசுன்னு ஒட்டி இருந்தாலும் சாப்பிட நல்லா இருக்கும். பெரும்பாலும் ரோஸ், வெள்ளை நிறத்துலதான் இந்த மிட்டாய் இருக்கும்.  பஞ்சு மிட்டாய், தேன்மிட்டாய்கூட நம்ம பசங்களுக்கு கிடைக்குது. இந்த ஜவ்வு மிட்டாய்தான் பார்க்கவே முடில. 


ட்ட்ட்டும்..... ட்ட்ட்ட்டும்... இதனால், சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்    ஆடிமாச திருவிழா பத்தி பேச அரசமரத்தடியில சாயங்காலம் நாலு மணிக்கு  திருவிழா கூட்டம் போட்டிருக்காங்க., வீட்டுக்கு ஒருத்தர் வந்துடனும் சாமியோவ், இது பெருந்தனக்காரர் சொன்னது சாமியோவ், ட்ட்ட்ட்ட்டும்...... ட்ட்ட்ட்ட்டும். இன்னைய வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக் மாதிரி மருத்துவ முகாம், ஸ்கூல் திறப்பு, லீவு , புயல், மழை.....ன்னு  சொல்லும் அன்றைய சமூகவலைத்தளத்தின் பேரு தண்டோரா. தமுக்குன்னும் சொல்வாங்க. இந்த தண்டோரா சத்தம் கேட்டதும் ஓடிப்போய் அவர் பின்னாடியே ஊர்சுத்தி வந்ததை நினைச்சா இன்னிக்கி ஷேம்! ஷேம்! பப்பி ஷேம்...
ஒரு குழுவாய் ஆணும் பெண்ணுமாய் விளையாடும் விளையாட்டு கல்லா?! மண்ணா?! ஒரு ஆளை நிக்க வச்சிட்டு அவங்கக்கிட்ட கல்லா மண்ணான்னு கேட்பாங்க. அவங்க கல்லுன்னு சொன்னா மண்ணுல நிக்கனும். மண்ணுன்னு சொன்னா கல்லுல நிக்கனும். தெருவாசப்படி, காணிக்கல்லு,  மண்பானை ஓடு, செங்கல்ன்னு எதுல வேணும்ன்னாலும் நிக்கலாம். அப்படி நிக்கலைன்னா அவங்க அவுட்.    பூண்டு பல் அளவிலான கல்லு மீது நின்னுட்டு நான் அவுட்டில்லைன்னு சொல்லி அழுகுணியாட்டம் ஆடுனதுலாம் நம்ம திறமைங்க பாஸ். 

கிராமத்து வாழ்க்கை தொடரும்....

நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. அருமை தங்கச்சி.......கண்ணில ஜலம் தான் வருது....எங்க பசங்களுக்கு இதெல்லாம் குடுத்து வைக்கல...வெளி நாடு வேற..அப்புடித் தான் வெளி நாடுன்னாலும் கிராமப் புறமா இருக்கப்பிடாதா?அது கூட இல்ல..எங்க பாரு சிமெண்டு தர/தார் ரோடு.....ஹூம்.....பெருமூச்சு விட்டு மனச தேத்திக்க வேண்டியது தான்.......//அப்புறம் டூரிங்க் டாக்கீசு....லவுட் ஸ்பீக்கரு... நோட்டீசு....விடுபட்டுப் போச்சு.....

    ReplyDelete
    Replies
    1. ஒரே பதிவில் எல்லாம் சொல்லிடமுடியுமா?! டூரிங்க் கொட்டாயும், லவுட் ஸ்பீக்கர் படமும் இருக்கு. இனிவரும் பதிவில் இதுலாம் வரும்.

      Delete
  2. ​நல்ல நினைவலைகள். நல்ல தொகுப்பு. கடலையைக் காதில் மாட்டிய சிறுமி அழகு.​ கடலைக்காயைதான் (வேர்க்கடலை) கலக்கா என்று சொல்கிறீர்களோ? ஏனென்றால் முதலில் அதை கிளாக்காய் என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர்பக்கம்லாம் கலக்கான்னுதான் சொல்வாங்க சகோ.

      Delete
  3. நினைவுகள்..... எத்தனை எத்தனை நினைவுகள்.

    நெய்வேலி நினைவுகள் எனக்குள்ளும்.....

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்குமே இப்படி ஒரு நினைவு ஆழ்மனதில் உண்டுண்ணே.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. இளமைக்கால பள்ளி நினைவுகள் மனதிற்கு வந்துவிட்டன. அந்த நாள்களை மறக்கமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. மறக்கவே முடியாது. காயம் ஆறிடும், வலியும் போயிடும். ஆனா தழும்பு இருக்கும். தழும்பை பார்க்கும்போதுலாம் சம்பந்தப்பட்ட நினைவு வந்துபோவதை யாராலும் தடுக்க முடியாது.

      இது எல்லாத்துக்குமே பொருந்தும்ப்பா.

      Delete
  5. மறக்க முடியாத காலம், மறக்க முடியாத விளையாட்டுகள்.

    ஜவ்வு மிட்டாய் இப்போதும் இருக்கிறது. நான் பதிவு செய்து இருக்கிறேன். திருபரங்க்குன்றம், அழகர் திருவிழாவில் ஜவ்வுமிட்டாய்காரர் செயின், வாட்ச் செய்து கொடுப்பதை போட்டோ எடுத்தேன்.
    புதிய தலைமுறையில் "சாமானியர்களுடன் ஒரு நாள்" என்ற நிகழ்ச்சியில் அவர் மிட்டாய் செய்வது, கிராமத்திற்கு விற்க போவது அவரை பார்த்தவுடன் குழந்தைகள் முடியை கொடுத்து விட்டு சவ் மிட்டாய் வாங்க்குவது, மது பாட்டிலை கொடுத்து விட்டு மிட்டாய் வாங்குவதை காட்டினார்கள்.


    வட்டமாய் உட்கார்ந்து கொண்டு காக்கா பற பற் என்றால் கைகளை பறப்பது போல் செய்ய வேண்டும் வீடு பற பற என்று சொல்லி விட்டால் கையை அசைத்தால் அவர் அவுட்.

    நீங்கள் போட்டு இருக்கும் படத்தில் உள்ள கையை கவிழ்த்து வைத்து இருக்கும் விளையாட்டு வெந்திருச்சா? வேகலையா ? என்ற விளையாட்டு தோசை சுடும் விளையாட்டு.


    ReplyDelete
  6. துளசி: சிறிய ப்ராயத்தின் நல்ல நினைவலைகள்

    கீதா: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தான்....ஒன்னு விட்டு போயிடுச்சோ...வாசல்ல கொட்ட்டடிச்சு புது படம் ரிலீஸ் ஆனா அல்லது சில தியேட்டர்கள் அவங்க போட்டுருக்கற படம் விளம்பரம் வண்டி ஒன்னு கொட்டடிச்சு சொல்லிக்கிட்டே படம் பெயரு, தியேட்டர் பேரெல்லாம் ஒரு வண்டி மாதிரி தள்ளிட்டே வருவாங்களே....எங்க ஊர்ல அது மாதிரியும் வரும்...எல்லாமே அழகான பசுமையான நினைவுகள்

    ReplyDelete