Saturday, April 28, 2018

ராஜ வாழ்க்கை அருளும் நரசிம்மர் -நரசிம்ம ஜெயந்தி


முன்கூட்டியே முடிவெடுத்து அவதரித்து, தக்க சமயம் பார்த்து தீயவர்களை அழிக்க கடவுள் எடுத்த அவதாரங்கள் பல. ஆனா, பக்தனை காக்கவேண்டியும், பக்தனின் நம்பிக்கையை காக்க வேண்டியும், நொடிப்பொழுதில் இறைவன் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். பக்தனின் நம்பிக்கையை காப்பாற்றியதற்காகவே விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்ததும், கால அளவில் மிகச்சிறியதுமென நரசிம்ம அவதாரம் போற்றப்படுது. 
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருமளவுக்கு பிரகலாதன் அப்படியென்ன தவம் செய்தான்?! இத்தனைக்கும் விஷ்ணுவை பரம எதிரியாக நினைக்கும் இரண்யகசிபுவின் புதல்வன் இந்த பிரகலாதன். அவன் குரலுக்கு இறைவன் ஏன் ஓடோடி வரனும்?! அதை தெரிஞ்சுக்க, பிரகலாதனின் முன்ஜென்ம கதைக்கு போகனும். இப்பிறவியில்  சிறந்த பக்தனான பிரகலாதன், முற்பிறவியில்  கயவனாக, கள்வனாக,  மக்களுக்கு துன்பங்கள் கொடுக்கும் மகாபாவியாக இருந்தான். அப்போது அவன் பெயர் சுவேதன். அவன் தன் இறுதிக்காலத்தில்  தவறுகளை எண்ணி வருந்தி, தன்னை மன்னித்தருளுமாறு மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தான். தனக்கு எந்த வடிவிலாவது காட்சி தந்து அருளுமாறு  வேண்டினான். ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்துக் கொண்டேயிருந்தான். அப்போது ஓர் அசரீரி வாக்கு ஒலித்தது.  இந்தப் பிறவியில் நீ  என்னை தரிசிக்க இயலாது.  உன் அடுத்த பிறவியில் நீ அழைத்ததும் வருவேன் என்று ஒலித்தது. குரல் வந்த திசை நோக்கி கைகூப்பிய வண்ணம் உயிர்விட்டான் சுவேதன். அந்த சுவேதன்தான் இந்த பிறவியில், விஷ்ணுவை பரம எதிரியாக நினைக்கும் இரண்யகசிபுவுக்கு, விஷ்ணு பக்தனாக, மகனாக பிரகலாதனாக பிறந்தான்.


யார் இந்த இரணியன்?

இதையறிந்த மகாவிஷ்ணு அங்கே வந்தார். முனிவர்கள், மகாவிஷ்ணுவை வணங்கி நடந்ததைக் கூறினர். முனிவர்களின் சாபத்தை ஜயனும் விஜயனும் அனுபவித்தே ஆகவேண்டும். இருந்தாலும் அவ்விருவரும் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கவேஅவர்களுக்கு இரங்கிய பகவான், துவாரபாலகர்களே! என்னைப் போற்றி வழிபட்டு பன்னிரண்டு பிறவிகள் பூலோகத்தில் வாழ்ந்து அதன்பின் வைகுண்டம்  திரும்பிவர விருப்பமா? அல்லது பூலோகத்தில் மூன்று பிறவிகள் எடுத்து என்னை நிந்தித்து வைகுண்டம் திரும்பிவர விருப்பமா? என்று கேட்டார். பகவானே!  தங்களைப் பிரிந்து பூலோகத்தில் பன்னிரண்டு பிறவிகள் இருக்கமுடியாது. உங்களை நிந்தனை செய்தாலும் பரவாயில்லை. மூன்று பிறவிகள் போதும். தங்கள்  திருக்கரங்களால் வதமாகி வைகுண்டம் வரவிரும்புகிறோம் என்றனர். மகா விஷ்ணுவும் அருளினார்.

இந்த நிலையில் பூவுலகில் பிரஜாதிபதி என்னும் முனிவர் மாலை நேர பூஜை செய்துகொண்டிருந்தார். அச்சமயம் அவரது மனைவி திதி அவரைக் கட்டித்  தழுவினாள். அதன்விளைவால் அவர்களுக்கு இரண்டு அசுர குணம்கொண்ட மக்கள் பிறந்தார்கள். அவர்களே இரண்யாட்சன், இரண்ய கசிபு என்ற இரணியன்பிறக்கும்போதே அவர்கள் கரிய நிறமும் முரட்டு குணம் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் வளரவளர தேவர்கள் அஞ்சினர். இந்த இருவரும்  கடுந்தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றார்கள். ஒரு சமயம் இரண்யாட்சன், பூமாதேவியை கவர்ந்து பாதாள லோகத்தில் கொண்டு சென்று மறைத்து வைத்தான். விஷ்ணு வராக(பன்றி) அவதாரமெடுத்து,  பாதாள லோகம் சென்று இரண்யாட்சனை வதம் செய்து பூமாதேவியை மீட்டு கொண்டு வந்தார். பூமாதேவிக்கும், விஷ்ணுக்கும் நரகாசூரன் பிறந்தான்.


இரண்யாட்சன் வதம் செய்யப்பட்டதை அறிந்து இரணியகசிபு மகாவிஷ்ணுமீது  கடுங்கோபம் கொண்டு, அவரை அழிக்க எண்ணி, அதற்கான பலம்பெற சிவனை நோக்கி தவம் செய்வதற்காக மந்தாரமலையின் குகையினுள் புகுந்து கொண்டான்அப்போது, அவன் மனைவி லீலாவதி கர்ப்பவதியாக இருந்தாள்.  இதுதான் தக்கசமயமென்று நராத முனிவர் இரணியகசிபுவின் அரண்மனைக்கு வந்தார். அப்போது லீலாவதி மஞ்சத்தில் படுத்து  உறங்கிக் கொண்டிருந்தாள்உடனே நாரதர் கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கு  விஷ்ணு உபதேசம் செய்தார். ஸ்ரீமன் நாராயணன் தான் ஈரேழு உலகத்திற்கும் அதிபதி என்றும்,  ஓம் நமோ நாராயணாய எனும் மகாவிஷ்ணுவின் மூல மந்திரத்தையும் உபதேசித்தார். தாயின் கர்ப்பத்திலிருந்த குழந்தை நாரதரின் உபதேசத்தை உன்னிப்பாகக்  கேட்டதுடன், அப்பொழுதே ஓம் நமோ நாராயணாய என்று முணுமுணுக்க ஆரம்பித்தது. இரணியனின் மனைவி லீலாவதி  அழகிய பிரகலநாதனை பிரசவித்தாள்.


மனிதனுமல்லாத மிருகமுமல்லாத உயிரினத்தால், உள்ளேயுமல்லாமல், வெளியேயுமல்லாத இடத்தில், ஆகாயமுமல்லாத பூமியுமில்லாத வெளியில், இரவுமில்லாத பகலுமல்லாத வேளையில், எந்தவித ஆயுதத்தாலின்றி ஒரு சொட்டு ரத்தமும் கீழே சிந்தாத வகையில் தனக்கு மரணம் நிகழவேண்டுமென சிவனிடம் வரம்பெற்று அரண்மனைக்கு திரும்பி, அனைவரும் தன்னையே கடவுளாய் வணங்கவேண்டுமென கட்டளையிட்டான். மீறியவர்களை கடுமையாய் துன்புறுத்தவும் செய்தான்.



வருடங்கள் கடந்தனபிரகலாதன் அசுரக்குலத்தில் பிறந்தாலும் ஓம் நமோ நாராயணாய என்று எட்டெழுத்து மந்திரத்தை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருந்தான். இதனைக்கண்ட  இரணியன், அந்தப் பெயரை உச்சரிக்காதே. இந்த உலகங்கள் அனைத்திற்கும் நானே அதிபதி. என் பெயரைச் சொல். இரண்யாய நமஹ என்று சொல் என்று  கட்டாயப்படுத்தினான். ஆனால் பிரகலாதனோ மகா விஷ்ணுவே தெய்வம் என்பதில் உறுதியாக இருந்தான். எத்தகைய அச்சுறுத்தலுக்கும் தண்டனைக்கும் அவன்  அஞ்சவில்லை. வெறுத்துப்போன இரணியன் தன் தங்கை ஹோலிகாவை அழைத்து, இவனை நெருப்பு வளையத்திற்குள் அழைத்துச் சென்று பஸ்பமாக்கிவிடு  என்று உத்தரவிட்டான்.

இந்த ஹோலிகா நெருப்பால் பாதிக்கப்படாத வரம் பெற்றவள். அவள் அண்ணன் சொல்படி பயங்கரமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பு வளையத்திற்குள்  பிரகலாதனை அழைத்துச் சென்றாள். அப்போதும் பிரகலாதன் கைகளைக் கூப்பிக் கொண்டு 'ஓம் நமோ நாராயணாய' என்று ஜெபித்துக் கொண்டே சென்றான். ஆனால்தீய எண்ணத்துடன் நெருப்பு வளையத்திற்குள் நுழைந்த ஹோலிகா பஸ்பமானாள். நாராயணன் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டே சென்ற பிரகலாதன் பொலிவுடன் வெளிவந்தான். இரணியனின் கோபம் எல்லை கடந்தது. அவன் பிரகலாதனிடம், உன் நாராயணன் எங்கே? அவனைக் காட்டு என பிரகலனாதனை கண்டித்தான்.  ஸ்ரீமன் நாராயணன் தூணிலும்  துரும்பிலும் உள்ளான் என பிரகலனாதன் சொன்னதும், ஆக்ரோஷமாய் அருகிலிருந்த தூணில் பலம்கொண்டு தன்கதையால் தாக்கினான்


இரண்யகசிபுவுக்கும் பிரகலனாதனுக்கும் வாக்குவாதம் நடந்தது பிரதோஷ காலம் முடியும் நேரம். இரவும் பகலும் இல்லாத வேளை.  மனிதனுமில்லாத, மிருகமுமில்லாத மனித உடலும், சிங்கமுகமாக நரசிம்மராக அந்தத் தூணிலிருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற வரத்தினை அறிந்த நரசிம்மர் அந்தப் பிரதோஷ வேளையில் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல், ஆகாயத்திலும் பூமியிலும் இல்லாமல் தம் மடியின்மீது படுக்கவைத்து, ஆயுதத்தால் கொல்லாமல் தன் கூர்மையான கைகளின் நகங்களால், அவன் மார்பினைப் பிளந்து,  ரத்தத்தினை உறிஞ்சி, குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டு இரணியனை சம்ஹாரம் செய்தார். இந்தக் காட்சியைக் கண்ட பிரகலாதன்.  



இரண்யகசிபு வதம் முடிந்தும் தன் ஆக்ரோஷம் குறையாமலிருந்த நரசிம்மரை நெருங்க அனைவரும் பயந்திருந்த வேளையில், பிரகலாதன் நெருங்கி, பாடல்பாடி அவரின் ஆக்ரோஷம் தனித்தான். தன் எதிரே சிங்கமுகத்துடனும் மனித உடலுடனும் காட்சிதந்த நரசிம்மமூர்த்தியை கைகூப்பி வணங்கினான். அப்போது, அவனுக்கு தன் முற்பிறவி நினைவுக்கு வந்தது. பகவானே, கடந்த பிறவியில் நான் வேண்டிக்கொண்டதன் பயனால் இப்பிறவியில் எனக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து அருள்புரிந்தீர் என்று தாள்பணிந்தான்  பிரகலாதன்.



கருணைக்கடலான நரசிம்ம மூர்த்தி பிரகலநாதனை தன் மடியில் இருத்தி,   ''நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்று பிரகலநாதனிடம் கேட்க,  ''ஏன் இப்படி கேட்கிறீர்கள்? என்று பிரகலாதன் கேட்க, தூண்  என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனேஇவ்வளவு நேரம் கடந்திருக்காதில்லையா?! நீயும் அவஸ்தை பட்டிருக்க மாட்டயல்லவா?! என்றாராம். ஆம்!  நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும்கேட்ட வரத்தை கேட்ட மாத்திரத்திலேயே அளிக்க வல்லவன் இந்த நரசிம்மர்.


மனித உடலும் சிங்கமுகமும் கொண்ட நரசிம்மமூர்த்தி சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார்.   திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்திலுள்ள பொன்னியன்மேடு ன்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார். ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார்.  
நாமக்கல் மாவட்டம் குடைவரைக் கோவிலில் நரசிம்மர் மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார். இரணியன் வயிற்றைப் பிளந்த கைகள் என்பதற்கேற்ப சிவப்பு நீரோட்டத்துடனும் நகங்கள் ரத்தக்கறைச் சிவப்புடனும் இருப்பதை தரிசிக்கலாம்
யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோபநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என முக்கியமான 9 வகை நரசிம்ம வடிவங்களை வகைப்படுத்தி வணங்கினாங்க. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர்ன்னு தங்கள் அன்புக்கும், பக்திக்கும் ஏற்ப நரசிம்மரை பல வடிவங்களிலும் நரசிம்மரை உருவாக்க் வணங்கினர் நம் முன்னோர். 


நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை. இன்று நரசிம்ம ஜெயந்தி, சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில்  நரசிம்ம ஜெயந்தி வரும். அன்றைய தினம் விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். 
நரசிம்மருக்கு செவ்வரளி மாதிரியான சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுக்கலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம். 
இறைவனுக்கு உயிர்களை காக்க மட்டுமே தெரியும். அசுரக்குலத்தில் பிறந்து, பரம எதிரியின் மகனையே கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து காப்பாற்றும் கடவுள் நம்மை காப்பாற்ற மாட்டாரா?! அப்படி அவர் நம்மை காக்க என்ன செய்யனும்?! தவமிருக்கனுமா?! இல்ல விரதமிருக்கனுமா?! பூஜை?! அர்ச்சனை?!ம்ஹூம் எதுமே வேணாம். அபயம்ன்னு அவன் தாளில் முழுமையாய் சரணாகதி அடைந்தால் போதும். நம்மை காப்பான் இறைவன்.

நரசிம்ம மூல மந்திரம்..
‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’
எதிரி பயம் நீங்க, இனம்புரியா அச்சம், குழப்பம் விலக, ராஜ வாழ்க்கை கிட்ட, தொழிலில் தடை விலக நரசிம்மரை வழிபடுவோம்!
நன்றியுடன்,
ராஜி



10 comments:

  1. படங்கள் சிற்ப்பாக இருந்தன. தேடித்தேடி பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை டைப்ப அரைமணிநேரம் போதும், படத்துக்குதான் மெனக்கெடல் அதிகம்ண்ணே

      Delete
  2. அருமையான பதிவு. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிப்பா

      Delete
  3. நரசிம்ம அவதாரம்..........அருமை......அழகான நிழற்படங்களுடன்,கதை நன்று.......பதிவுக்கு நன்றி,தங்கச்சி.........

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. நரசிம்ம அவதாரம் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  5. மிகவும் நன்று பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete