வெள்ளி, ஏப்ரல் 13, 2018

ஜலகண்டேஸ்வரரா?! இல்லை ஜுரகண்டேஸ்வரரா?! - அறிவோம் ஆலயம்


வேலூர் கோட்டையில் குடிக்கொண்டிருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் கட்ட நேர்ந்த கதை, கட்டியவர், கோவில் அமைப்பு பத்திலாம் போன பதிவில் பார்த்தோம். ஆனா, கோவில் வெளிப்பிரகாரத்தோட நம்ம பதிவை முடிச்சுக்கிட்டோம். இன்னிக்கு கோவிலுக்குள் பார்க்கலாம். வாங்க! 

கருங்கல்லால் கட்டப்பட்டதா?! இல்ல காந்தத்தால் கட்டப்பட்டதா என வியக்குமளவுக்கு இந்த கோவில் பார்ப்போரை தன் பக்கம் இழுக்குது.  ராஜக்கோபுரத்தை கண்டு விரிந்த கண்களுக்கு சதா சர்வக்காலமும் வேலை கொடுத்துக்கிட்டே இருக்கும் இக்கோவில்.

கோவிலின் இரண்டாவது நுழைவாயிலை கடந்ததும் கொஞ்சம் பெரிய சைசில் வலம்புரி வினாயகர் நம்மை வரவேற்கிறார். அருகம்புல் மாலையோடு காட்சியளிக்கும் இவருக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு, மேற்குபக்கமா பிரகாரத்தை வலம் வர ஆரம்பிக்கனும். அடுத்து, கோவில் நிர்வாக அலுவலர் அறை இருக்கும். அங்க ஒரு அர்ச்சனை டிக்கட் வாங்கிட்டு நகர்ந்தால், நம்மை வரவேற்பவர் செல்வ வினாயகர். அவருக்கு அடுத்தபடியா
சிவனுக்கு நேர் பின்னால், நம்ம திருப்பதி வெங்கி அதே ரூபத்தில் காட்சி அளிக்கிறார்.

அவருக்கு அடுத்து சுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். கிருத்திகை நாட்களில் சிறப்பு அபிஷேமும் ஆடிக்கிருத்திகை, தை, கார்த்திகை கிருத்திகைக்குலாம் இவருக்கு விழாக்கள் எடுத்து கொண்டாடுறாங்க.
அடுத்து பக்தர்களால் ஏற்றப்படும் கோடி தீபம். அவரவர் ராசிக்கேற்ப ஐந்து, ஒன்பதுன்னு விளக்கேத்தி வழிப்படுறாங்க.  அடுத்து அன்னை அகிலேண்டேஸ்வரி தனிச்சன்னிதியில் அருள்பாளிக்கிறாள். அவளுக்கெதிரே அணையாத நவசக்தி தீபம் இருக்கு.


அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு எதிரில் அணையா நவசக்தி சத்திய தீபம் இருக்கு.  27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அங்குல சுற்றளவில் நடுவில் ஒன்றாகவும் சுற்றிலும் எட்டு விளக்காகவும் உருளை வடிவில் அமைந்துள்ளது.  1981  துன்முகி ஆண்டு மயிலை குருஜி சுந்தராம சுவாமிகளால் கார்த்திகைதீபத்தன்று ஏற்றப்பட்டது. இன்றளவும் அணையாமல் பார்த்துக்கொள்ளப்படுது.  பக்தர்களால் தானமா தரப்படும் எண்ணெய் கொண்டு  இந்த தீபம் எரிகின்றது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேளதாளத்தோடு இந்த தீபத்துக்கு சுத்தான்ன நைவேத்தியம் செய்விக்கப்படுது.
அன்னையையும், நவசக்தி சத்திய தீபத்தை ஒட்டிய மண்டபத்தில் மகாலட்சுமி சரஸ்வதி இருக்காங்க.  
அவங்களையும் வணங்கிட்டு வந்தால், இடப்புறம் சுவரின் ,மேல்புறத்தில்,   சூரியன் சந்திர கிரகணத்தை குறிக்கும் விதமா  ராகு, கேதுவை குறிக்கும் பல்லி, பாம்பு படம் தங்கம் வெள்ளி முலாம் பூசி தனியாய் காட்சிப்படுத்தி இருக்காங்க.  நாக தோஷம், பல்லி சம்பந்தமான பிரச்சனை இருக்கவுங்க இக்கோவிலில் வேண்டிக்கிட்டு தோச நிவர்த்தி செய்றாங்க. இதை பார்க்க ரெண்டு ரூபா வசூல் பண்றாங்க. 
எல்லா கோவில்களிலும் பலிபீடத்தையும் நந்திதேவரையும் வணங்கியபின்தான் சிவனை தரிசிக்க முடியும். இங்க மட்டும் இறைவனை தரிசித்த பின்னரே பலிபீடம் வரமுடியும். 

இறைவனின் பராக்கிரமத்தை உணர்த்தும்வகையில் நீண்டு நெடிதுயந்த துவாரபாலகர்கள். அவர்களிடம் அனுமதி வாங்கி, இறைவனை தரிசிக்கலாம்.
துவாரபாலகர்களைத்தாண்டி ஜலகண்டேஸ்வரர் சந்நதிக்குள் சென்று இறைவனை தரிசிக்கையில் இத்தனை பிரம்மாண்டத்துக்கும்  காரணமானவரைக் கண்ட ஒரு பிரம்மிப்பு நம்மிடையே பரவுவதை தடுக்க முடியவில்லை. எந்த வேண்டுதலையும் முன் வைக்காமல், உங்களை பார்த்தருள பாக்கியம் கிட்டியதே போதும் என்று ஒரு மனநிறைவைத் தருகிறார் இ‌ந்த க‌ர்‌ப்ப‌க்‌கிரக‌த்‌தி‌ல் ‌வீ‌ற்‌றிரு‌க்கு‌ம் ஈசன். என் தகுதிக்கு என்ன கொடுக்கனும்ன்னு அவனுக்கு தெரியும். அப்படி இருக்க, இதுதான் வேணும்ன்னு வேண்டிக்கனுமா என்ன?!

மூலவரான ஜலகண்டேஸ்வரர் ருத்ராட்ச பந்தலின்கீழ் அருள்புரிகிறார். விஷக்காய்ச்சல் உட்பட நோய் நொடிகளை போக்குவதில் வல்லவர் என்பதால் இவருக்கு ஜுரகண்டேஸ்வரர்ன்னும் பேரு. இவருக்கு ருத்ராட்சையால் அபிஷேகம் செய்வது இங்கு வழக்கம். கணவன் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வேண்டிக்கிட்டு தாலியை காணிக்கையாய் செலுத்தும் வழக்கம் இக்கோவிலில் உண்டு, அதனால அறுபது, என்பது, நூறாவது வயதை கொண்டாடும்விதமா செய்யப்படும் திருமணங்கள் இங்கு நடைப்பேறும். 
ஆதிசங்கரரும் இங்க இருக்கார். சங்கர ஜெயந்தி விழா இக்கோவிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுது.  பிரம்மன், விஷ்ணுவின் யார் பெரியவரென்ற போட்டியை முடிவுக்கு கொண்டு வர சிவன் அடிமுடி காணா ஜோதியாய் திருவண்ணாமலையில் எழுந்தருளிய நாள் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம். அதன் நினைவாக இக்கோவிலில், ஒருவருக்கு ஒருவர் சளைச்சவரில்லையென நிரூபிக்கும் விதமா  பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் ஒரே பல்லக்கில் எழுந்தருள்வாங்க. மும்மூர்த்திகளைப்போல, முப்பெருந்தேவியான சரஸ்வதி, லட்சுமி, பார்வதின்னு மூவரையும் தரிசிக்கும் பாக்கியம் இக்கோவிலில் மட்டுமே கிட்டும். 
இக்கோவிலில்  காசியின் கங்கை கிணறு வடிவில் இருக்கு. இக்கிணற்றில் கங்கையே பொங்கி வருவதாய் சொல்றாங்க.  இந்த கிணற்றில் கிடைத்த ஈஸ்வர மூர்த்தத்துக்கு  காசை போட்டு நினைச்சது நிறைவேற வேண்டிப்பாங்க.  இந்த கிணற்றில் கிடைத்த ஈசனுக்கு கங்கா பாலாறு ஈசன்னு பேரு. 
கிணற்றிலிருந்து நீர் எடுத்து தருவாங்க. அதை நம்ம கையால இங்கிருக்கும் ஈசனுக்கு நம் கையாலேயே அபிஷேகம் செய்யலாம். ஒரு சொம்பு தீர்த்தம் பத்து ரூபா. அது இரண்டு வருசத்துக்கு முந்தி. இப்ப என்ன விலைன்னு தெரில. காசியின் அமைப்புப்படி கங்கை, ஈசன், பைரவர்ன்னு ஒருசேர தரிசிக்கலாம்.  இந்த ஈசனை வணங்கினால் காசி விஸ்வநாதரை வழிப்பட்ட புண்ணியம் கிடைக்கும். 
அளவின்றி கொடுப்பவனும், அளவின்றி கெடுப்பவனுமான சனீஸ்வர பகவான், ஜேஷ்டாதேவி, மாந்தியுடன்  அருள்கிறார். சனிக்கிழமைகளை சாருக்கு தனியா அபிஷேக ஆராதனை உண்டு. சனிப்பெயர்ச்சி போதும் இங்கு இவருக்கு விழா எடுத்து கொண்டாடப்படுது. 
தவம், விரதம்லாம் இருந்து காலம் காலமாய் காத்திருக்க முடியாதுன்னு என்னைய மாதிரி பொறுமை இல்லாதவங்களுக்கு இன்ஸ்டண்டாய் கேட்ட வரம் அருளும் காலபைரவர்.  தேய்பிறை, வளர்பிறை அஷ்டமியில் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு. 

நவக்கிரகங்களின் சன்னிதி....’அவருக்கு அடுத்து சண்டிகேஸ்வரர், துர்க்கை,  தட்சிணாமூர்த்தின்னு சகலரும் இங்க இருக்காங்க.  எல்லாரையும் வணங்கிட்டு கட்டக்கடைசியா பலிப்பீடத்தை வணங்கலாம். 
இந்த பலிப்பீடத்தின் முன் ஒரு மண்ணாலான எரியாத அகல்விளக்கு இருக்கு. நம் கைகளை அதன்பக்கம் கொண்டு போனா அந்த விளக்கு சுழலும். அதனால்தானோ என்னமோ இங்க இருக்கும்  நந்தி முன் ஏற்றாத அகல்விளக்கை வச்சு வேண்டிக்குவாங்க. 
 இவருக்கு  பிரதோச காலங்களிலும்,மாட்டுப்பொங்கலன்னிக்கும் சிறப்பு பூஜை உண்டு. இங்கிருக்கும் ஈசனுக்கு ஏன் ஜலகண்டேஸ்வரர்ன்னு பேர் உண்டாச்சுன்னு பார்க்கலாம்..
வெண்பனி சூழ் கைலாயத்தில் வாசம் புரியும் ஈசன்,  வெயிலூரான வேலூரின் வெயிலுக்கு முகம் சுளிக்கக்கூடாதென நினைத்த பொம்மி நாயக்கர், கருவறையை குளிர்ச்சியாக்க, ருத்ராட்சையாலான விமானத்தையும். கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் திருமேனிக்கு கீழே சதாசர்வக்காலமும் நீர் சுரப்பது போன்ற அமைப்பினை உண்டாக்கினார். அதனாலதான் இங்கிருக்கும் சிவனுக்கு ஜலகண்டேஸ்வரர் என பேர் உண்டானதாம்.

பொம்மி நாயக்கரின் காலத்திற்கு 200 ஆண்டுகள் கழித்து, இன்றைய நாளிலிருந்து 450 ஆண்டுகளுக்கு முன், திப்புசுல்தான் வேலூர் கோட்டையின்மீது படையெடுத்து வருவதை அறிந்த, அப்போதைய அரசன், இறைவன் இருந்தால்தானே மாற்று மதத்தவன் கோவிலை இடிக்கமுடியுமென எண்ணி, ஜலகண்டேஸ்வரை பெயர்த்தெடுத்து,  வேலூரின் ஒருபகுதியான சத்துவாச்சாரியில்(இப்போதைய கலெக்டர் ஆஃபீஸ் இருக்கும் பகுதியில்) சிறு கோவிலுக்குள் வைத்தனர்.  கோவிலின்மீது படையெடுப்பு நடந்து சிற்பங்கள் சிதிலமாக்கப்பட்டது. இறைவன் இல்லாததால் வழிபாடு இன்றி கோவில் மூடப்பட்டு பாழ்பட்டது. 
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1981ம் ஆண்டு  சத்துவாச்சாரியிலிருந்து லிங்கம் கொண்டுவரப்பட்டு மீண்டும் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் ஒரு விழாவென கொண்டாடப்பட்டு, விடுப்பட்ட காலத்துக்கும் சேர்த்து கோலாகலமாய் இருக்கு இக்கோவில். அறுபத்து மூன்று நாயன்மார்களோடு சேர்த்து கிருபானந்த வாரியார்  சிலையை வச்சிருக்காங்க. அப்படி 64வது நாயன்மாரை முதன்முதலாய் சேர்த்த ஊரும் இதுதான். காரணம். வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில்தான் வாரியார் சுவாமிகள் அவதரித்தார்.
இக்கோவிலின் தலவிருட்சம் வன்னி மரம். தலதீர்த்தம் தாமரை புஷ்கரணி. எந்த காலத்திலும் இக்குளத்தின் நீர் வற்றுவதில்லை. அதேப்போல, தாமரை மலர் இல்லாமலும் இருந்ததில்லை.முன்னலாம், ஜலகண்டேஸ்வரர் ஆலயத்துக்கு எதிரில் பெரிய தெப்பக்குளம் இருந்ததாம். அதில் தெப்போற்சவமும் நடந்ததாம். நம்மாளுங்களுக்குதான் தண்ணின்னா அலர்ஜியாச்சே! ஆறு, குளம், வாய்க்கா, வரப்புலாம் கண்டா  முதல்ல தூர்த்துடுவாங்க. அந்த கதை இங்கயும் நடந்து, இப்ப, கோட்டையில் இருக்கும் காவலர் பயிற்சி பள்ளியின் விளையாட்டு மைதானமா இருக்கு. 
சுற்றிலும் கோட்டையும், அகழியும் கொண்டு ஆயிரமாயிரம் அற்புதங்களை நிகழ்த்தும் ஏழு அடியில் அருள்புரியும் ஜலகண்டேஸ்வரை தரிசிக்கும்போது நம் அகங்காரம் அடிப்பட்டு போவதை உணரலாம். தன்னை சுவீகரிப்போரின் தாகத்தையும், அழுக்கையும் போக்கும் நீரினை போன்று இங்கிருக்கும் ஈசனும் அருள்வதாலும் அவருக்கு இந்த பேர் உண்டானதான்னு தெரில! கடலளவு கருணை கொண்டவருக்கு இத்தனை பிரம்மாண்டமான கோவில் எழுப்பியதில் தவறே இல்லை. 
ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வெறும் ஆன்மீகத்தலம் மட்டுமில்லாம சிறந்த கலைப்பொக்கிஷமாவும் இருக்கு. ஆலயத்தின் ஆன்மீக முகத்தை இன்னிக்கு பார்த்தோம். கலையம்சம் கொண்ட வசந்த மண்டபம், கல்யாண மண்டபத்தினையும், அங்கிருக்கும் சிற்பங்களையும் அடுத்த வாரம் பார்க்கலாம்...
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட 
பாற்கடல் ஈந்த பிரானே, 
என் இயலாமைகள் எல்லாம் போக்கி
 வல்லமையை தா! ஓம் நமச்சிவாய!
நன்றியுடன்,
ராஜி

12 கருத்துகள்:

 1. படங்களும் விடயங்களும் அருமை தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   நீக்கு
 2. அழகான படங்கள். தகவ்ல்கள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   நீக்கு
 3. ஜலகண்டேஸ்வரர் கோயில் ஓர் அருமையான கலைப்பொக்கிஷம். பல முறை சென்றுள்ளேன். இன்று இப்பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனை தரம் சென்றாலும் சலிக்காத கோவில். கண்களுக்கும் மனசுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் கோவில்

   நீக்கு
 4. காலை உங்கள் தளமே திறக்கவில்லை எனக்கு.

  புகைப்படங்களுடன் பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. புகைப்படங்களும் அருமை..அதுவும் கடைசிப்படம் ரொம்ப அழகாக இருக்கிறது.பதிவும்....சகோதரி/ராஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னோட டேட்டாவில் பாதி போறதே படங்களை செலக்ட் செஞ்சுதான்.

   நீக்கு