Thursday, April 05, 2018

பூமியை காத்த வராகர் - அறிவோம் ஆன்மீகம்

எங்கெல்லாம் அதர்மம் தோன்றுகிறதோ, அதை அழிக்க அங்கெல்லாம் நான் தோன்றுவேன்னு கீதையில் கிருஷ்ணரா அவதரிச்ச விஷ்ணு சொல்லி இருக்கார்.  அப்படி தீமைகளை அழிக்கும்பொருட்டு விஷ்ணு ஏராளமான அவதாரங்களை எடுத்திருந்தாலும்,.  மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமண, பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என பத்து அவதாரங்களை முதன்மைப்படுத்து புராண நூல்கள். தசம்ன்னா பத்து. அதனால,  இந்த பத்து அவதாரங்களை தசாவதாரம்ன்னு சொல்றோம். 
இந்த அவதாரங்களை கவனிச்சு பார்த்தோம்னா ஆன்மீகம்தாண்டி, மனிதனின் பரிணாம வளர்ச்சியை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது நாம் உணர முடியும். டார்வினின் கொள்கைப்படி உயிர் தோன்றியது கடல்நீரில். அது படிப்படியா முன்னேறி இப்ப மனுஷங்க வரை வந்திருக்கு. டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை உயிரிகளிலிருந்து மனிதன் தோன்றியதோடு முடிஞ்சுப்போச்சு.  அதன் பிறகு மனிதனின் பரிணாமம் துவங்குது. தசவதாரத்தின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிர்களிலிருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை நமக்கு எடுத்து சொல்லுது. அடுத்த ஐந்து அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றது.  கல்கி அவதாரம் மட்டும் இன்னும் எடுத்தாச்சா இல்லையான்னு சரியா சொல்லப்படல. ஆனா, தீமைகளை கண்டு எதிர்த்து, தட்டிக்கேட்டு தீமைகளை அழிக்கும் ஒவ்வொருவரும் கல்கி அவதாரமாய், கடவுளாய் போற்றப்படுவான்.  விஷ்ணு பகவான் எடுத்த பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரமான வராகமூர்த்தியின் அவதார தினம் இன்று. அதாவது வராக ஜெயந்தி என கொண்டாடப்படுது. 

ஒரு சமயம், மகரிஷிகள்  நால்வர் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுண்டம் செல்லும்போது, ஏழாவது நுழைவாயிலில் காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் அந்த மகரிஷிகளைத் தடுத்தார்கள்.  எந்த நேரத்திலும் பகவானைத் தரிசிக்கும் அருளைப் பெற்ற அந்த ரிஷிகள் கோபமடைந்து, " நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்" என்று சாபமிட்டார்கள். ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி, "உங்கள் சாபப்படி நாங்கள் எப்பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும்" என்று கேட்டனர். மகாவிஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், " இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானதுதான் எனக்கூறியதோடு, என்னையே நினைத்து என்னையே தியானித்து நல்லவர்களாக பத்து அவதாரங்கள் எடுக்க வேண்டுமா?! இல்லை எனக்கு எதிரியாகி என்னை அழிக்கவேண்டி சதாசர்வக்காலமும் என்னையே சபித்து கெட்டவர்களாக மூன்று ஜென்மம் எடுத்து என்னை அடைகிறீர்களாவென ஜெயன், விஜயனை கேட்க, பத்து பிறவி உங்களை பிரிந்திருக்க எங்களால் ஆகாது, எதிரியாவது உங்களை நினைத்துக்கொண்டே மூன்று பிறவிகளில் உங்களை வந்தடைகிறோம்ன்னு வேண்டி நின்றனர். அவ்வாறே விஷ்ணுபகவான் அருள்பாலிக்க, . இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து, பின், அவன் அருளினால் வைகுண்டம் அடைந்தனர். 

நம்ம ஊர்ல உடல் சேர்க்கைன்னாலே அசிங்கம்ன்னு நினைப்போம். அதுபத்தி குடும்பத்தில் பேசவும் தயங்குவோம். ஆனா, அதுமாதிரியான உடல்சேர்க்கைக்கும் திருமணம் ஆனதும் தாத்தா பாட்டி நல்ல நாள் பார்த்து சொல்ல, அப்பா, பழம் பால் வாங்கி வர, அம்மா ஏற்பாடு செய்ய.,, அக்கா,அண்ணிகள் அலங்கரிக்கவென குடும்பமே கோலாகலமே கொண்டாடும். அது எதுக்குன்னா, நல்ல நாள், நேரம் பார்த்து உடல்சேர்க்கை நடந்தா நல்ல அறிவான குழந்தை பிறக்கும். அதுக்காகத்தான். ஆனா, ஏடாகூடமான நேரத்தில் சேர்க்கை நடந்து அதன்மூலம் கருத்தரித்தால் மோசமான கெட்ட நடத்தையுடைய பிள்ளை பிறக்கும். இதை உணர்த்தவும் இந்த வராக அவதாரம் 

காஷ்யப முனிவருக்கு அதிதி என்ற மனைவி உண்டு. ஒருநாள், தெய்வ வழிபாட்டுக்குரிய மாலை வேளையில் கணவன்மீது காமம் கொண்டு, அவரை அழைத்தாள். இது பூஜை நேரம், அதுமில்லாம கருக்கல் நேரம். இது கூடலுக்கான நேரமில்லை.  இரவு வரட்டுமென காஷ்யப முனிவர் மறுத்தார்.  ஆனாலும், அதிதி வற்புறுத்தி அவருடன் உறவு கொண்டாள். அதனால் அவள் கருக்கொண்டாள். சரியாக இதே காலக்கட்டத்தில்தான் வைகுண்டத்தில் ஜெயன், விஜயன் சாபமும் நடந்தது. அவர்கள் இருவரும் பூலோகம் வந்து அதிதியின் கருக்குள் புகுந்து, இரண்யாட்சன், மற்றும் இரண்யகசிபு என இரட்டையர்களாக பிறந்தனர்.  இருவரும் முனிவருக்கு பிறந்தாலும் ஏடாகூடமான நேரத்தில் கருவானதால் அசுரகுணத்தோடு பிறந்து, ஈசனை நோக்கி தவமிருந்து அரிய வரம் பலப்பெற்று முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட எல்லாரையும் துன்புறுத்தி, உலகையே தங்கள் வசம் வந்தனர்.
இரண்யாட்சனுக்கு ஆணவம் அதிகமாகி, வருணபகவானை வம்புக்கிழுத்தான். அசுரனே! உன்னிடம் மோதுமளவுக்கு எனக்கு பலமில்லை. பன்றி உருக்கொண்டு விஷ்ணு அவதரிப்பார். அவரிடம் மோது எனச் சொல்லி வருணபகவான் ஒதுங்கி நின்றார். விஷ்ணுபகவானை தேடி அலைந்தான் இரண்யாட்சன். விஷ்ணுவைக் கொல்லவேண்டி அவன் பேரை உச்சர்த்துக்கொண்டே காடு மலையெல்லாம் அலைந்தான். 
புலியை அதன் குகையிலேயே சந்திக்க முடிவெடுத்த இரண்யாட்சன் வைகுண்டம் சென்றான். அங்கும் விஷ்ணுவைக் காணாமல கடுங்கோபமுற்றிருந்த வேளையில், அங்கு பூமாதேவி தியானத்தில் ஆழ்ந்திருப்பதை கண்டான். அவன் கண்களுக்கு உருண்டை ரூபமுடைய அழகிய பெண்ணாக அவள் தெரிய, அவளை பாயாய் சுருட்டி எடுத்துக்கொண்டு பாதாள லோகம் சென்றான்.  பூமாதேவியின் அபயக்குரல் கேட்டு மகாவிஷ்ணு அவளை காக்க, வராக (பன்றி) உருக்கொண்டு  பாதாளம் நோக்கி பாய்ந்தார்.  வராகமூர்த்தி தமது கோரைப்பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன கதாயுதத்தால் அடித்தான். இருவருக்கும் கடும் போர் உண்டானது.

இரண்யாட்சன் அடித்த அடியால், மகாவிஷ்ணுவின் கதாயுதம் கையிலிருந்து நழுவி விழுந்தது. தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் மீண்டும் தன கதாயுதத்தால் தாக்க, மகாவிஷ்ணு தம் இடக்காலால் அதைத் தட்டிவிட்டு, தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார். இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப்பொடியானது. இரண்யாட்சன் ஆவேசத்துடன் மகாவிஷ்ணுவின் மார்பின்மீது ஓங்கிக் குத்தினான். பின், அவன் மாயமாக மறைந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும், அனேகவித பாணங்களையும் கொண்டு தாக்கினான். சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகாவிஷ்ணு. அசுரர்கள் பலர், பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர். இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத் தலையின்மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின்மீது விழுந்து மடிந்தான். தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்.
கும்பகோணத்தில் ஆதிவராகர் கோவில் இருக்கு.  கும்பக்கோணத்தில் மகாப்பிரளயம் வருவதற்கு முன்பாகவே இத்தலத்தில் எழுந்தருளியதால் இவருக்கு இப்பெயர் உண்டானது. இவரே இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அனைத்து பெருமாளுக்கும் முதலானவர். மகாமகத்தன்று, சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலரோடு ஆதிவராகரும் காவேரிக்கரைக்கு தீர்த்தமாட வருகிறார்.  இத்தலத்தில் பூமாதேவியை இடது தொடையில் அமர்த்தியநிலையிலும், வராகரை வணங்கியவாறு பூமாதேவியும்  காட்சியளிக்கிறார்கள். நிலம், வீடு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இவரை வணங்கலாம். அரிசி மாவு, சர்க்கரை, நெய் கலந்து உருண்டையாய் பிடித்து இவருக்கு நைவேத்தியம் செய்வர். 

சென்னைக்கு அருகிலிருக்கும் திருவிடந்தை தலத்தில் அகிலவல்லி சமேதரராய் ஆதிவராகர் காட்சியளிக்கிறார். அம்பாசமுத்திரத்திலிருந்து கிட்டத்தட்ட 3கிமீ தூரத்தில் இருக்கும் கல்லிடைக்குறிச்சியில் லட்சுமி வராகரா காட்சியளிக்கிறார். இங்கு பூமாதேவிக்கு பதில் மகாலட்சுமியை அமர வைத்துக்கொண்டதால் இப்பெயர். பூமாதேவிக்கு இங்கு தனிச்சன்னிதி உண்டு. தாமிரபரணிக்கரையில் இருப்பதால் இக்கோவில் வெகு குளிர்ச்சியாய் இருக்கும்.
திருப்பதி புஷ்கரணியில் வராகருக்கு தனிச்சன்னிதி உண்டு. இவரின் அனுமதி பெற்றப்பிறகே, ஸ்ரீசீனிவாசப்பெருமாள் கோவில் கொண்டுள்ளதால், இவரை வணங்கிய பின்னரே வெங்கியை வணங்கனும்ன்றது ஐதீகம்.
கர்நாடக மாண்டியாவில்,கிருஷ்ணராஜ பேட்டைக்கு அருகில் வராகருக்கு கோவில் உள்ளது. இங்கிருக்கும் வராகருக்கு பிரளய வராகர்ன்னு பேரு. சுகாசனத்தில் அமர்ந்து இடதுமடியில் பூமாதேவியை அமரவைத்து, அழகிய ஆபரணங்கள் சூடி, பின்னிரு கைகளில் சங்கு சக்கரம் தரித்து, வலக்கையில் அல்லிமலர் பிடித்து இடக்கையால் அம்பாளை அணைத்தபடி காட்சியளிக்கிறார். இத்திருமேனி சாளக்கிராம கல்லிலானது. சுமார் 21 அடி உயரம் கொண்டது. இத்தலம் மைசூரிலிருந்து 50 கிமீ தூரத்தில் இருக்கு.

இரண்யாட்சன் வதம் முடிந்தபின்னும் கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.  ஒடிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் நகரில் வைதணிநதி இரண்டாகப் பிரிந்து ஓடுகிறது. இக்கரையில் பிரம்மா அஸ்வமேத யாகம் செய்தபோது வேதங்கள் அனைத்தும் காணாமல் போனது. கலங்கி நின்ற பிரம்மா விஷ்ணுவை வேண்டி நிற்க , விஷ்ணுபகவான் வராக உருக்கொண்டு பாதாளத்தில் இருந்த வேதத்தினை கொண்டு வந்ததாக தலப்புராணம் சொல்லுது. இக்கோவிலின் கருவறையில் இரு வராகர் மூர்த்தங்கள் இருக்கும். இடப்புறம் மகாலட்சுமியும், வலப்புறம்  ஜெகன்னாதரும் இருப்பர். ஜெகன்னாதரின் மூர்த்தம் மரத்திலானது.

அனேக வைணவத்தலங்களில் இவரை சித்திரரூபமாக, சிலாரூபமாக தரிசிக்கலாம்.ஸ்ரீரங்கத்து கோவிலின் தசாவதார சன்னிதியில் தனித்து நின்று வராகர் அருட்பாளிக்கிறார். கொள்ளிடக்கரைக்கு அருகில் இருக்கும் தசாவதாரக்கோவிலில் வராகர் ஆறடியில் காட்சியளிக்கிறார்.
பூமி சம்பந்தமான தொழில் செய்பவர்கள் இவரை வணங்கினால் நல்ல பலனை அடையலாம். இவரை வணங்கி சனி தசை, சனிதோசத்திலிருந்து விடுபடலாம். திருமணத்தடை நீக்குவார். நில சம்பந்தமான வழக்குகளுக்கு கண்கண்ட தெய்வம் இவர்.  கண் திருஷ்டி நீங்கவும் வழிபடலாம். வெல்லம், கோரைக்கிழங்கை நைவேத்தியமா படைக்கனும்

லட்சுமி வராகரின் மூலமந்திரம்... 

ஓம் தநுர்த்தராய வித்மஹே  
வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி  
தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்
வராக ஜெயந்தி அன்று அவரை வணங்கி எல்லா வளமும் பெறுவோம்.

நன்றியுடன்,
ராஜி.

12 comments:

 1. Replies
  1. வருகையோடு கருத்து சொன்னதும் நன்றிண்ணே

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 3. நல்ல தகவல்கள். அழகிய படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 4. கல்கி அவதாரம் தவிர்த்து எல்லா அவதாரக் கதைகளையும்பதிவிட்டிருக்கிறேன் வராக அவதாரக் கதையை இந்த சுட்டியில் படிக்கலாம் /http://gmbat1649.blogspot.com/2011/05/3.html

  ReplyDelete
  Replies
  1. வந்து பார்க்கிறேன்ப்பா

   Delete
 5. வராகர் புராணக் கதைகளும் வராகர் தலங்களும் விளக்கம் பெற்றுள்ளன. நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 6. சிறப்பான படங்கள்.... அனைத்து அவதாரங்களும் ஒரே படத்தில் - இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே போன்று வேறு ஒரு படம் பார்க்கக் கிடைத்தது.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete