Sunday, April 15, 2018

பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி.... - பாட்டு கேக்குறோமாம்

ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் ஈஸ் த குட் இம்பெரெஷன்ங்குற வார்த்தை யாருக்கு பொருந்துதோ இல்லியோ எனக்கு பத்து பொருத்தத்தோடு பக்காவா பொருந்தி போகும். அதென்னமோ முதன்முறையில் பிடிக்காம போயிட்டா எத்தனை காலம் ஆனாலும் பிடிக்காமயே போயிடும். பார்க்க பார்க்க பிடிக்கும்ங்குற கதைலாம் இங்க செல்லாது.

 எங்க ஊர்ப்பக்கம்லாம் திருவிழாலாம் ஒருநாள்தான் நடக்கும். திங்கள் இல்ல வியாழன் இரவு காப்பு கட்டுவாங்க. செவ்வாய் இல்ல வெள்ளிகளில் காலை கரகம் வரும். மதியம்  கூழ் கரைச்சு வீட்டில் படைச்சுட்டு கோவிலுக்கு கொண்டுபோய், அங்க இருக்கும் தொட்டில ஊத்துவாங்க. அப்புறம் பம்பைக்காரன் பாட்டு படிக்க  சாமி வந்து ஆடி கூழ் குடிச்சதும் அதை ஏழை பாழைகளுக்கு ஊத்தி கொடுப்பாங்க. ஊரணி பொங்கல் வைப்பாங்க, நைட் சாமி ஊர்வலம் நடக்கும். மறுநாள் சாயப்பவுடர்,, மஞ்சள், குங்குமம் கரைச்சு ஊத்துவாங்க. இது மாமன் மச்சான்ன்ற கணக்கில்லாம  யாரும் யார்மேலயும்  ஊத்துவாங்க.  இதுமாதிரி திருவிழா காலங்களில், முதல் நாளிலிருந்து சாமி ஆடி முடிக்கும் வரை சாமி பாட்டா போட்டு கொல்வாங்க. இப்ப மாதிரி எஃப்.எம், டிவி சேனல், மொபைல்ன்னு பாடல்களை கேட்கமுடியாத காலம்.

எங்க வீட்டில் டேப்ரெக்கார்டர் இருந்தாலும், எல்லா படப்பாட்டும் இருந்திராது. அப்ப வெளிவந்த படத்திலிருந்து அப்பாக்கு பிடிச்ச பாட்டா இறக்கிட்டு வந்து கேட்பார்.  அப்படி எழுதும்போது என்னையும் சிலநேரம் என்ன பாட்டு வேணும்ன்னு கேட்பார். பாட்டின் தரம் பார்த்து இறக்கிட்டு வருவார். அப்ப அப்பாக்கிட்ட கார்த்திக் பாட்டு பிடிக்கும்ன்னு சொல்ல பயம். அவங்கவங்க பலானவங்களை லவ் பண்றேன்னு தைரியமா சொல்லும் வேளையில் சினிமா ஹீரோவைக்கூட பிடிச்சிருக்குன்னு அப்பாக்கிட்ட சொல்ல அம்புட்டு பயம்

வீட்டுக்கு பக்கத்துல கல்யாணம் மண்டபம் மூணு இருக்கும். அங்க பாட்டு போடுவாங்க. அதுல பாட்டு கேட்பது. அப்படி இல்லன்னா  எதிர்வீட்டு அண்ணனுங்கக்கிட்ட கேசட் வாங்கி வந்து பாட்டு கேட்டு நம்ம இசை ஆர்வத்தை தணிச்சுட்டு இருந்த காலக்கட்டம்... அப்ப பத்தாப்பு படிக்குறேன். பத்தாப்பு வரையா?! நிஜமான்னுலாம் கேட்கப்படாது.  சாமி ஆடி முடிச்சாச்சு, பொங்கல் வைக்க அம்மாவோடு கோவிலுக்கு போய் இருக்க, சாமி பாட்டு முடிச்சதும் இந்த பாட்டை ரேடியோவில் ஒலிக்க விட்டாங்க. சம்பாதிக்க, வீட்டு வேலைன்னு எந்த கால்கட்டும் இல்லாம திருவிழாவை திருவிழா உற்சாகத்தை அனுபவிக்கும் வயசு அது,

பரபரன்னு ஆரம்பிக்கும் ஒரு பாட்டு போகப்போக வேகமெடுத்து ஹைபிட்ச்ல போகும். என்ன படம்?! ஏது படம்ன்னு தெரியாது. ஆனா, பாட்டு பிடிச்சு போச்சுது. ரேடியோ செட்காரருக்கு  என் மனசு புரிஞ்சுதோ என்னமோ திரும்ப திரும்ப இதே பாட்டு.. எப்படியும் நாலஞ்சு தரம் போட்டார். மறுநாள் ஸ்கூல்ல போயி அது என்ன படம்ன்னு பொண்ணுங்கக்கிட்ட கேட்டா, ஒருத்திக்கும் தெரில. என்னடா நம்ம இசை ஆர்வத்துக்கு வந்த சோதனைன்னு இருந்தப்ப, பக்கத்து மண்டபத்துல இந்த பாட்டு மீண்டும் கேட்க நேர்ந்தது. இந்த பாட்டுக்கு முன்னும் பின்னும் சில பாட்டும் போகுது. எல்லா பாட்டும் பிடிச்சு போச்சு. ஆனா என்ன படம்தான்னு தெரில. டேப்ரெக்கார்டர் காலம்போல அது பாட்டு புத்தகம்போல! ஏதோ விசயமா கடைக்கு போக அங்க தொங்கிட்டு இருந்த பாட்டு புத்தகத்தை பார்க்க, அட, கார்த்திக் நடிச்ச படமான்னு பார்த்து , புத்தகம் வாங்கி படிச்சு பார்த்தா, நான் தேடிக்கிட்டிருந்த பாட்டுகள்லாம் பெரிய வீட்டு பண்ணக்காரன் படத்து பாட்டுங்கன்னு தெரிஞ்சது.

அப்புறம்,  கெஞ்சி கேட்டு அப்பாக்கிட்ட சொல்லி இறக்கி வந்து கேசட்டே, என்னை விட்டுடும்மா முடிலன்னு கெஞ்சி, கேட்டு கதறி அழும்வரை விட்டதில்லை.எதிர் வீட்டு மாமிக்கிட்ட சொல்லி அம்மாக்கிட்ட கேட்டு இந்த படத்துக்கு போக பட்ட பாடு?! யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா! வெள்ளை சட்டை  பேண்ட் போட்டுக்கிட்டு தொப்பி போட்டுக்கிட்டு போறவன்லாம் கார்த்திக்கா தெரிஞ்ச காலக்கட்டம்.   விடியோ ப்ளேயர் வந்தபின் இந்த படக்கேசட் எங்க வீட்டில் எப்படியோ வந்திடுச்சு. அப்பா அம்மா இல்லன்னா இந்த படம்தான்.

ஒரு படத்துல கிளைமேக்சுக்கு அத்தனை யோசிச்சு சீன் அமைப்பாங்க. அந்தமாதிரி கிளைமாக்சுக்காக எடுக்கப்பட்ட பாட்டுதான் அது. படம் பார்த்தப்பிறகு,  எப்ப இந்த பாட்டை கேட்டாலும் இப்ப வரைக்கும் பாட்டோட சீன் மனசுல நினைவுக்கு வருவதோடு அந்த பரபரப்பு நம்மை தொத்திக்கும்.

 கார்த்திக் நல்லாதான் டான்ஸ் ஆடுவாப்ல. ஆனா, இந்த பாட்டுல வெறும் கத்தியை சுழட்டிக்கிட்டு சும்மா குதிச்சு ஓடுறதோட சரி. ஆனா, வில்லன் நடிகரான நம்பியார் அந்த வயசிலயும் செமயா டான்ஸ் ஆடி இருப்பார்.  திருநீறு பட்டையோடு கனகா, மகராசி கண்ணைக்கண்டு பயந்தாருன்னு வரும் பாடல்வரிகளின்போது கனகாவின் முட்டைக்கண்ணு பார்வை இந்த பாட்டுக்கு அத்தனை பொருத்தமா இருக்கும்.  முதல்ல இந்த படத்துல குஷ்புதான் நடிக்க இருந்ததாவும், சின்னத்தம்பில கனகா நடிக்க இருந்ததாகவும் சொல்வாங்க. என்ன காரணம்ன்னு தெரில ஆள் மாறிப்போச்சு. ஆனா, அப்படி மாறிலைன்னா ரெண்டு படமும் இந்தளவுக்கு ஹிட்டாயிருக்குமான்னு தெரில.

காதல், பிரிவு, அழுகை, பாசம், கோவம்ன்னு நொடிக்கு நொடி சீன் மாறும் வாழ்க்கையைப்போல  ராஜாவின் இசையமைப்பு மாறிக்கிட்டே இருக்கும். லவ்ஸ், அவ அப்பாக்கு தெரியாம பொண்ணை தூக்கிட்டு வரும் பரப்பரப்பு, சவால், முடிவில் கல்யாணம்ன்னு அந்த கிளைமாக்ஸ் பரப்பரப்பை தன்னோட இசையில் ராஜா கொண்டு வந்திருப்பார். பாட்டு கேட்கும் அந்த மூணு நிமிசத்துல அத்தனை உணர்ச்சிக்கும் நாம ஆட்படுவோம். ராஜா ராஜாதான்.

திருவிழாவின் உற்சாகத்தோட ஆரம்பிக்கும் பாட்டு, கிளைமாக்ஸ் நெருங்கும் பதட்டைத்தை சேர்த்துக்கிட்டு தடதடன்னு ஓடி ஊழித்தாண்டவம் போல பாட்டு முடியும் விதம்...  அந்த காலத்தில் இந்த பாட்டு ஹிட் அடிச்சது தப்பே இல்ல, ரொம்ப ரொம்ப சாதாரணமா படமாக்கப்பட்ட பாட்டு. இந்த பாட்டை எஸ்.பி.பி பாடி இருந்தாலும் ஹிட் அடிச்சிருக்காது. பரபர பாட்டுக்கு மலேசியா வாசுதேவன்தான் பொருத்தம்.  அத்தனை ஹிட் அடிக்க ராஜா, மலேசியா வாசுதேவன்,  நம்பியார், கனகான்னு இருந்தாலும் எனக்கு மட்டும் கார்த்திக்...

இப்படி கூடவா திருவிழா நடக்கும்ன்னு எதோ பொட்டியை தூக்கிட்டு வர்றாங்க. சரி சினிமாக்கு போலன்னு நினைச்சுட்டிருந்தேன்.  கிட்டத்தட்ட 20 வருசம் கழிச்சு  கமுதி பக்கம் நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது இருந்த கிராமத்தில்   இதேமாதிரி திருவிழா நடந்தது.  நிஜமான வெள்ளை, கருப்பு குதிரை வர, கருப்பு உடையணிந்த ஆட்கள் கத்தி, பொட்டி, விளக்கு தூக்கிட்டு வந்தாங்க. அப்பயும் இந்த பாட்டுதான் போட்டாங்க.  இப்பயும் நாலு வருசத்துக்கொருமுறை இத்திருவிழா நடக்குதுன்னு சொல்றாங்க.

கேட்டு பாருங்க.. உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கேன்...

படம்: பல்லாக்கு குதிரையிலே பவனி வரும்...
இசை: இளையராஜா
எழுதியவர்:
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
நடிகர்கள்: கார்த்திக், நம்பியார், கனகா
ராகம்: கெளரி மனோஹரி

நன்றியுடன்
ராஜி

16 comments:

  1. நல்ல பாடல்,கிராமியமணம் குறையாதபாடல்,,,/

    ReplyDelete
    Replies
    1. எத்தனை முறை கேட்டாலும் ,பார்த்தாலும் சலிக்காது

      Delete
  2. உங்களின் உற்சாகம் வரிகளில் தெரிகிறது சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. எத்தனை சோகமா இருந்தாலும் கார்த்திக்கை பார்த்தாலே சிரிச்சுடுவேன். பக்கத்துவீட்டு பாப்பாகூட கிண்டல் பண்ணும் , அவனை பார்த்தாலே உங்க முகம் தவுசண்ட் வாட் பல்ப் மாதிரி மின்னுதுன்னு.

      இதுவரை 150 கார்த்திக் பாடல்களுக்குமேல டவுன்லோட் பண்ணியாச்சு. இனி அத்தனையும் விடியோ பாட்டா தேடி டவுன்லோட் பண்ணனும்

      Delete
  3. இதுவரை கேட்ட நினைவில்லை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவுலாயாவது பாடலை கேட்டீங்களாண்ணா?!

      Delete
  4. சில விஷயங்களில் பயாஸ் என்பது தெரிகிறது பாட்டு இது வரை கேட்டதில்லை நம்பியாரின் ஆட்ட்ம் ரசிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. நம்பியாரின் குறும்பு, குழந்தைதனமான நடிப்பை, தூறல் நின்னு போச்சு, நாடோடி பாட்டுக்காரன் படத்துலயும் பார்க்கலாம்ப்பா.

      Delete
  5. அருமையான பாடல்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. பல்லாக்கு குதிரையிலே பவனி வரும்... இளைய ராஜாவுடன் மலேசியா வாசுதேவன். இந்தக் கூட்டனிக்கு எப்போதும் வெற்றிதான். இந்தப் பாட்டிலும் கூட. நல்ல பாடகர். இவருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காமலே போய்விட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் . கார்த்திக்கு இளையராஜா வாய்ஸ் பொருந்தாது. ஆனா, எட்டு கட்டை குரலுக்கு சொந்தக்காரனான மலேசியா வாசுதேவன் குரல் கார்த்திக்கு பக்காவா பொருந்தும்.

      Delete
  7. ம்.......... நல்ல பாட்டு....சும்மா கேக்கலாம்......என்ன உங்காளு டங்கு,டங்குனு ஆடுறரு......///கேசட் காலம்...ம்... நீங்கா நினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. அதான் நானே சொல்லிட்டேனே! இதுல நம்பியார்தான் செமயா ஆடி இருப்பார்ன்னு...

      Delete
  8. இதுவரை கேட்ட நினைவில்லை...சகோதரி

    கீதா: இப்போதுதான் கேட்கிறேன் ராஜி இந்தப் பாட்டை.

    நல்ல ராகம்..கௌரி மனோஹரி பேஸ்ட்..கொஞ்சம் டிவியேட் ஆனாலும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இப்பவாவது கேட்டீங்களே என் தலைவன் பாட்டை...

      Delete