Wednesday, April 25, 2018

வீரம் விளைஞ்ச மண்ணு.. எங்க வேலூர் மண்ணு - மௌனச்சாட்சிகள்

வீட்டில் ஒரு பூ பூப்பதை, பிறந்த நாளை, பிக்னிக் போனதைன்னு எல்லாத்தையும் படமெடுத்து, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம்ன்னு பகிர்ந்துக்கிறோம். கொஞ்ச காலத்துக்கு முன்னலாம் படமெடுத்து போட்டோக்களாக்கி ஃப்ரேம் பண்ணி வீட்டில் மாட்டி அழகு பார்ப்போம்.  இதுவே, 300, 400 ஆண்டுகளுக்கு முந்திலாம் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் கோவில் கட்டுறது, கோட்டை கட்டுறது, சிற்பம் வடிக்குறது, நடுகல் நடுறதுனு தங்கள் மகிழ்ச்சியை, வீரத்தை, சோகத்தைலாம்  நினைவுச் சின்னங்களாக்கினாங்க. இந்த நினைவுச்சின்னங்கள்தான் இன்னிக்கு பண்டைய காலத்தின் வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரத்தினை நமக்கு எடுத்து சொல்லுது.  சரியான விழிப்புணர்வு இல்லாததால் பாதிக்கு மேலான நினைவுச்சின்னங்களை அழிய விட்டுட்டோம். இனி இருக்கும் மிச்ச சொச்சத்தையாவது எதிர்கால சந்ததிகளுக்கு காப்பாத்தி வைப்போம்.

வேலூர் மாநகரின் மையத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் பரந்தது வேலூர் கோட்டை. கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டுக்கொண்டுயிருந்தபோது வேலூர், திருப்பதி, சென்னைலாம் விஜயநகர பேரரசுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. விஜயநகர பேரரசுவின் பிரதிநிதியாக 1566ல் இருந்த பொம்முநாயக்கர்ன்ற குறுநில மன்னரால் வேலூர் கோட்டை கட்டப்பட்டது. கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த கோட்டை வலிமையானது. கோட்டையை சுற்றி அகழியும் வெட்டப்பட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கப்பட்டது.

நாயக்கர்களிடமிருந்து 1650ல் பிஜப்பூர் சுல்தானால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. 25 ஆண்டுகால ஆட்சிக்குப்பின் 1676ல் மராட்டியர்கள் கைப்பற்றினர். 30 ஆண்டு ஆட்சிக்கு பின் 1708ல் டெல்லியை ஆண்ட தௌலத்கான் கைப்பற்றினார். அப்போது நவாப்களின் கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டையிருந்தது.
கர்நாடகா நவாப்கள் என அழைக்கப்பட்டவர்கள் வேலூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் டெல்லி தௌலத்கான் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக வெளியேறியபோது நவாப்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சுதந்திர பகுதியாக மாறின. நவாப்கள் ஆங்கிலேயரின் நண்பர்களாக இருந்தனர். அதன்மூலம்  நவாப் வசமிருந்த வேலூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. 1760ல் முதல் ஆங்கிலேயர் வேலூரின் ஆட்சியாளர்கள் ஆனார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் வென்ற இடம் ஆற்காடு. அவர்கள் அங்கிருந்து ஆளும்போது அருகில் இருந்த வேலூர் கோட்டையை வெடிமருந்துகள் சேமிக்குமிடமாகவும்,  இராணுவ வீரர்கள் தங்கும் இடமாகவும் வைத்திருந்தனர்.
மைசூர் புலி திப்புசுல்தான் இறந்தபின்னர் அவரது குடும்பத்தை இங்குதான் முதலில் சிறை வைத்தனர் ஆங்கிலேயர்கள். அதேப்போல் இலங்கை கண்டி மாகாணத்தின் கடைசி அரசர் விக்கிரமராஜசிங்கன் மற்றும் அவரது மனைவி, மக்களையும் இந்த கோட்டையில்தான் இறக்கும் வரை சிறை வைக்கப்பட்டனர். அதேபோல் விஜயநகர பேரரசின் அரசராக இருந்த ரங்கராயன் இந்த கோட்டையில் வைத்துதான் கொல்லப்பட்டார். 
1805ம் வருடம் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்திய சிப்பாய்கள் விபூதி,குங்குமம், நாமம் மாதிரியான சமயக் குறியீடுகள் இடுவதும், காதுகளில் தோடு, கடுக்கன் அணிவதும், கிருதா வைக்கக்கூடாது. ஐரோப்பிய பாணியில் நீண்ட குழாய் மாதிரியான தொப்பியையும், தோலிலான பெல்ட்டும் அணிய வேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதுக்கு எதிராக மெட்ராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த தென்னிந்திய இந்து, முஸ்லீம்   சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒன்று திரண்டனர். கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 கசையடி கொடுக்கப்பட்டது. இச்செயல் கலகக்காரர்களை இன்னும் கோவப்படுத்தி வெகுண்டெழ வைத்தது.
சிப்பாய்களுக்கு ஆதரவாக திப்பு சுல்தானின் மகன்கள் ஆதரவு தெரிவித்தனர்.  திப்பு சுல்தானின் மகன் திருமணத்தை காரணம் காட்டி ஆங்கிலேய அதிகாரிகள் கோட்டைக்கு வரவழைக்கப்பட்டனர். 10/7/1806ம்தேதி, அதிகாலையில் ஆங்கிலேயர்கள் தங்கள் படுக்கை அறையிலேயே வைத்து  கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 ஆங்கிலேயர்களில் 100பேர் கொல்லப்பட்டனர். இந்த கலகம், ராணுவ ஒழுங்கில், திட்டமிடலின்றி, எதிர்படும் ஆங்கிலேயர்களையெல்லாம் கொன்று குவித்தனர். வெற்றி களிப்பில் கோட்டை வாயிலைக்கூட அடைக்கவில்லை. அதனால், ஆற்காட்டிலிருந்து பறந்து வந்த சிறிய பிரிட்டீஷ் குதிரைப்படை சிப்பாய் கலகத்தை சில மணிநேரங்களிலேயே அடக்கி வேலூர் கோட்டையை தன்வசப்படுத்திக்கொண்டது. 
இந்திய சிப்பாய்களில் 350பேருக்கு மேல் இப்போரில் கொல்லப்பட்டனர். பீரங்கியின் வாயில், கலகக்காரர்களை கட்டி வைத்து சுட்டு கொல்லப்பட்டனர்.   சிப்பாய் கலகம் தோல்வியை சந்தித்தாலும் இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் முக்கிய பங்காற்றியது.  இதன் நினைவாக கோட்டைக்கு எதிரில் நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது. ஜூலை 10ந்தேதி இந்திய ராணுவத்தினரால் இங்கு உயிரிழந்த சிப்பாய்களுக்காக வீரவணக்கம் செலுத்தப்படுது. 
சிப்பாய் கலகத்தின் நினைவாக இந்திய அரசாங்கம் 2006, ஜூலையில் தபால் தலை ஒன்றை வெளியிட்டு வேலூர் மண்ணின் வீரத்தை கௌரவப்படுத்தியுள்ளது. 

வேலூர் கோட்டையின் சுருக்கமான வரலாறு..

1506 - சின்ன பொம்ம நாயக்கரால்  கட்டப்பட்டது (விஜயநகர பேரரசு)
1650 - பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றினார்..
1676 -மராட்டியர்கள் கைப்பெற்றினார்கள்
1708 - தௌலத்கான் (டெல்லி) கைப்பற்றினார்
1760 -பிரிட்டிஷ்காரர்களால் கைப்பற்றப்பட்டது
1806 -முதல் சிப்பாய் கலகம் நடைப்பெற்றது.
இந்திய தொல்பொருள் கழகத்தால் வேலூர் கோட்டைக்குள் அருங்காட்சியகம் வைக்கப்பட்டுள்ளது.  வேலூர், ஆற்காடு, வாணியம்பாடி, ஆரணி, திருவண்ணாமலை பகுதிகளில் கிடைக்கும் பழங்கால சிற்பங்கள், பொருட்கள்லாம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு சிற்பத்துக்கும் கீழே, அது எந்த இடத்தில், எந்த வருடத்தில், என்ன சிற்பம்ன்னு பொறிக்கப்பட்டுள்ளது. 
வேற்று மதத்தினரால் பலமுறை கைப்பற்றப்பட்ட இக்கோட்டை சேதத்துக்குள்ளாக்கப்பட்டாலும், இன்னமும் தன்னகத்தே பலவித கலைப்பொக்கிஷங்களை உள்ளடக்கி வைத்திருப்பது ஆச்சர்யம்தான். 

லட்சுமி நரசிம்மர்...

வினாயகர்....
அக்னிதேவன், தன் மனைவியுடன்...


பிரம்மா...

சிவன், நந்தியுடன்...

மதுரை நாயக்கர் மகால் தூண் அளவுக்கு இல்லன்னாலும் பெரிய தூண்... என்னா வழுவழுப்புடா சாமி!!
கல்லால் ஆன நீர் சேகரிக்கும் தொட்டி.. இதுமாதிரி நிறைய தொட்டிங்க இந்த இருக்கு...

பூதகணங்கள்.....
வேலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கோவிலின் ஒரு பகுதி.....

பாதுஷா மகால், ஹைதர் மகால், பேகம் மகால், கண்டி மகால்ன்னு நிறைய பகுதிகள் இருக்கு. திப்பு சுல்தான் வாரிசுகளின் படங்கள், போர்க்கருவிகளின் படங்கள், பல்வேறு மன்னர் குடும்பத்தின் படங்கள், ஆங்கிலேய அதிகாரிகளின் படங்கள் இருக்கு. இன்னும் அரிய வகை படங்களும், பல்வேறு சித்திரம், சிற்பங்களும் பார்வைக்கு இருக்கு. நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. 
பொம்மிரெட்டி, நாகிரெட்டிக்கு நாகர் வழிபாட்டில் அலாதி பிரியமாம்... அதனால, கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வெளிப்புறத்தில் நாகராஜன் சன்னிதி.. 
எந்த விசயமா இருந்தாலும் இந்த கோவிலில் உக்காந்துதான் முடிவெடுப்பாங்களாம். இந்த நாகராஜன்தான் , அத்ரி முனிவர் வழிப்பட்டு புதர் மண்டிப்போன ஜலகண்டேஸ்வர லிங்கத்தை அடையாளம் காட்டியதுன்னு நம்பினாங்களாம். 
நாகராஜா சன்னிதியில் நூற்றாண்டுகளை கடந்த ஆலமரம்...

அந்த காலத்து காவல்தெய்வத்துடன்  இந்த காலத்து காவலர்...

யானையும், குதிரையும், சேணையும் கட்டி வச்ச இடத்தில் இன்று மாடுகள்.....

எந்த பொருளுமே நம்மோடு இருக்கையில் அதன் அருமை தெரியாது. அதை இழந்துட்ட பின்னாடிதான் புலம்புவோம். அந்த வரிசையில் பழந்தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வீரம்ன்னு எல்லாத்தையும் நினைவுறுத்தும் இடங்களை கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு வர்றோம். பிற்காலத்தில் வருந்தி தேடினா கிடைக்காது.. அதனால், இருக்குற மிச்ச சொச்சத்தையாவது காப்பாத்திப்போம்..  இத்தோடு வேலூர் பதிவு முடிவடைஞ்சது.... பல பதிவுகளாய் வேலூரை பத்தி படிச்சதுக்கு ரொம்பவே தேங்க்ஸ்..

அடுத்த வாரம், சுவாமி விவேகானந்தர் ஜீவ சமாதி பத்தி பார்ப்போம்...

நன்றியுடன்,
ராஜி.

18 comments:

 1. வேலூர் தகவல்கள் அனைத்தும் அரிய வைத்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 2. அருமையான உலா. புகைப்படங்களும் செய்திகளும் சிறப்பாக உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. நன்றிப்பா. வேலூர் பத்திய படங்களில் பாதிக்கு மேல ஃப்ளிக்கரில் சுட்டதுப்பா

   Delete
 3. வேலூர் கோட்டை அருங்காட்சியகம் சிறப்பான தகவல்.

  ReplyDelete
  Replies
  1. பொறுமையா பதிவுகளை படித்தமைக்கு நன்றி சகோ

   Delete
 4. அழகான படங்கள். தகவல்கள் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. படங்கள்ல பாதி ஃப்ளிக்கரில் சுட்டது. மீதி என் போன்ல சுட்டது..

   Delete
 5. படங்களுடன் வேலூர் கோட்டை பற்றிய தகவல் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 6. மிகவும் அழகிய படங்களுடன், மிக சுவாரஸ்யமான விவரங்கள். ஆமாம், சிப்பாய் கலகமா? கழகமா?!!

  ReplyDelete
  Replies
  1. சிப்பாய் கலகம்தான். எழுத்துபிழை இருக்கா?! எங்க?! எங்க?! இந்தா போய் பார்க்குறேன்

   Delete
 7. நிறைய தகவல்கள் கொஞ்சம் சரித்திரம் /மராட்டிய புலி திப்புசுல்தான்/........?

  ReplyDelete
  Replies
  1. மன்னிச்சுடுங்கப்பா. மைசூர் புலின்னு வரனும். இதோ திருத்திடுறேன்

   Delete
 8. Replies
  1. உங்க ஊரு இரணியல் கோட்டை, வட்ட கோட்டைலாம் எங்க ஊர் கோட்டை முன் தூசுண்ணே

   Delete
 9. சில இடங்களில் பொம்மி நாயக்கர் சில இடங்களில் பொம்மி ரெட்டி??? பொம்மி ரெட்டி திம்மி ரெட்டி தான் நான் கேள்விப்பட்டது

  ReplyDelete
  Replies
  1. பொம்மி ரெட்டிதான் சகோ கரெக்ட். நாயக்கர் என தவறுதலா குறிப்பிட்டுட்டேன். திருத்திடுறேன்

   Delete