புதன், ஏப்ரல் 11, 2018

வேலூர் அருங்காட்சியகம் - மௌனச்சாட்சிகள்

வேலூர் கோட்டை பத்தி அறிமுகப்பதிவா ஒரு பதிவு போட்டிருந்தேன். கோட்டையின் சிறப்பம்சங்கள், நீள, அகலம், யார் கட்டினதுன்னு.. கோட்டையின் இப்ப நிலையினையும் எழுதி இருந்தேன். அதில் கோட்டைக்குள் அருங்காட்சியகம் ஒண்ணு இருக்கும்ன்னும் எழுதி இருந்தேன்.  அதுபத்திய பதிவுதான் இன்னிக்கு பார்க்கப்போறோம். 
கோட்டைக்கு போறவங்க கோவில், அகழில படகுசவாரி செஞ்சுட்டு சும்மா சுத்தி பார்த்துட்டு வந்துடுவாங்க. ஆராய்ச்சியாளர்கள், ஸ்கூல், காலேஜ் பிள்ளைகள் டூர் இதுமாதிரியான ஆட்கள்தான் கோட்டை முழுக்க சுத்தி பார்த்து குறிப்பெடுத்துப்பாங்க. இவங்க எல்லாத்தையும்விட இன்னொரு க்ரூப் இருக்கு. அவங்கதான் கோட்டை முழுக்க இண்டு இடுக்கு, சந்து பொந்துலாம் நுழைஞ்சு சுத்தி பார்ப்பாங்க. அட, வரலாற்றில் அம்புட்டு ஆர்வமான க்ரூப் எதுன்னு பார்த்தால்.... லவ்வர்ஸ். கோட்டை முழுக்க எங்கும் நீக்கமற இவங்கதான் நிறைஞ்சு இருக்காங்க. 

கோட்டையின் கடைசியில் ஒரு ஒதுக்குப்புறத்தில் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டிருக்கு. இதுவே, அதிக மக்கள் பார்வையிட முடியாததாக இருக்கு. விவரம் தெரிஞ்சவங்களும், கைடின் துணையோடு வர்றவங்கதான் பார்க்கமுடியும். மத்தவங்களால பார்க்க முடியாது. ஏன்னா, முறையான அறிவிப்பு பலகை இருக்காது.  அருங்காட்சியகத்தின் எதிரில் டைனோசர் சிலை இருக்கு. இதை எதுக்கு வச்சிருக்காங்கன்னே தெரில. அதைவிட பொம்மி நாயக்கர், திப்பு சுல்தான் படம் வச்சிருந்தால் நல்லா இருந்திருக்கும்!!
அருங்காட்சியகத்தின் நுழைவாயிலேயே வேலூர் மாவட்டத்திலே கண்டெடுக்கப்பட்ட பீரங்கிகள் நம்மை வரவேற்கும். அது எங்க கண்டெடுக்கப்பட்டதென இடம், காலத்தோடு கூடிய அறிவிப்பு இருக்கு. 
பீரங்கி குண்டு.. சினிமாவில் பார்த்ததுப்போல பெர்ர்ர்ர்ர்ருசாலாம் இல்ல. அதிகப்பட்சம் 5கிலோதான் இருக்கும். 
படத்தில் இருப்பது கல்லிலான மருந்து குடுவை இருக்கு.  இதுலதான் துப்பாக்கி, பீரங்கிகுண்டுகளுக்கான மருந்தை கொண்டு போவாங்களாம்.  1985ம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கு. இந்த அருங்காட்சியகத்தை எட்டு காட்சிக்கூடங்களா பிரிச்சு இருக்காங்க. 
வேலூர் வெயிலுக்கு மட்டும் ஃபேமஸ் இல்லீங்கோ. வீரத்துக்கும் பேர்போனது. அதுக்கு சாட்சி இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் விதம் விதமான கத்தி, கேடயங்கள், போர் ஆயுதங்கள்.  

இந்திய சுதந்திர போர்களில் முதன்மாயானதும், முக்கியமானதுமானது சிப்பாய் புரட்சி அல்லது சிப்பாய் கலகம். அது நடந்தது இந்த மண்ணில்தான். சொற்ப நேரத்தில் இந்த புரட்சி முறியடிக்கப்பட்டு, முயற்சி தோற்றுப்போனாலும் சிப்பாய் புரட்சி விதை ஆலவிருட்சமாய் கிளைப்பரப்பி நின்றது. 
சிப்பாய்கள் இடுப்பில் அணிந்திருந்த இரும்பிலான பெல்ட்.  
நெல்மணிகளால் ஆன நகைப்பெட்டி... திப்பு சுல்தானின் மனைவிக்கு பரிசாய் வந்ததாம்.
ராணிகளை சுமந்து சென்ற பல்லாக்கு இன்று கேட்பாரற்று மேற்கூரையில்...
நம்மாளுங்களுக்கு அரிய பொருட்களின் அருமை புரியாம போகனும்ங்குறது டிசைன் போல! இந்த அருங்காட்சியகம் கோட்டையின் கட்டக்கடைசியில் வச்சாலும், நல்லா வெளிச்சமா வைக்கக்கூடாதா?! 
இந்த அருங்காட்சியகம் வரலாறு, வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய காலம், ஓவியக்கலை, விலங்கியல், கல்லாலான சிற்பங்கள், நாணயங்கள், செப்புப்பொருட்கள் மற்றும் மானுடவியல் போன்ற எட்டு தனிப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 
எங்க ஊர்ப்பக்கம் ஆடும் கட்டைக்கட்டின்னு சொல்லப்படும் ஒருவித நாட்டியத்துக்கு பயன்படுத்தும் பொருட்கள். கீசகவதம், அர்ஜீனன் கல்யாணம் மாதிரியான மகாபாரத கதைகள்தான் இந்த நாட்டியத்தில் அதிகம் இடம்பெறும். 
பம்பை, உடுக்கை, சிலம்பு மாதிரியான இசைக்கருவிகளும் இங்குண்டு..
பொதுவாவே குழந்தைகள் தங்களோட மறைவிடத்தில் கைவைக்கும் பழக்கம் உண்டு. இப்பதான் ஜட்டி போடும் பழக்கம் இருக்குறதால பிரச்சனை இல்ல. அந்தக்காலத்தில்?! அப்படி கைவைக்காம இருக்கவும், மத்தவங்க பார்வை அங்க படாம இருக்கவும் ஆண்குழந்தைகளுக்கு மணி மாதிரியான குஞ்சாமணியும், பெண்குழந்தைகளுக்கு அரசிலைன்னு சொல்லும் அரைமூடிதான் மேல இருக்கும் படத்தில் இருப்பது. 
விக்கிரமராஜசிங்கர் ராஜாவும், அவரின் ராணியும் பொழுதுபோக விளையாடிய தந்தத்திலான செஸ்போர்ட், காய்கள், அவை வைக்கும் பெட்டி, ராணி பயன்படுத்திய குறுவாள். ராஜா ராணி படத்துக்கு மேல இருப்பது தந்தத்திலான பூமாராங்க் என்னும், இலக்கை வீழ்த்தி வீசியவனின் கைக்கே திரும்பும் போர்க்கருவி. 


வேலூர் மாவட்டத்தில் கரிகிரின்னு ஒரு ஊர் இருக்கு.  அங்கு பீங்கான் மாதிரியான கலைப்பொருட்கள் செய்வாங்க. ஊறுகாய் ஜாடி முதல் கடவுள் சிலை வரை இங்கு கிடைக்கும்.தஞ்சை பெரிய கோவில் படம் பொறிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டு...
திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் முடையூரில் வழிவழியா சிற்பம் செதுக்குறவங்க இருக்காங்க. இப்ப இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 20குடும்பங்கள் இருக்கு. முன்னலாம் செப்பு, பஞ்சலோகம், வெண்கலத்துல சிலை செஞ்சாங்க. இப்ப கருங்கல்லில் சிலை வடிக்குறாங்க.
சாமிக்கு விபூதி, குங்குமம் வைத்து படைக்க செப்பிலான நெய்வேத்திய பாத்திரம். இப்பத்திய கோவில்களில் தொண்ணை, பிளாஸ்டிக் கப்புன்னு வந்திட்டுது.
குழந்தைகளுக்கு பால், மருந்து புகட்டக்கூடிய பாலாடை.. இப்ப ஸ்பூன், சிப்பர்ஸ்லாம் வந்திட்டுது. சிப்பர்ஸ்ல பால் குடிக்குறதால குழந்தையின் வயிற்றில் காத்து போகக்கூடிய அபாயம் உண்டு. ஆனா பாலாடையில் அப்படி இல்ல. குழந்தை முழுங்கும் அளவுக்கு பார்த்து பார்த்து மெல்லிசா ஊத்தலாம். ஆனா சிப்பர்சில் அப்படி இல்ல.
அருங்காட்சியகத்தில் இதுக்கு பேருன்னு கூஜான்னு சொல்றாங்க. ஆனா, இதுக்கு பேரு கெண்டி. பால் இல்லன்னா தண்ணீர் குடிக்க பயன்படும்  பாத்திரம் இது. டம்ப்ளர்ல கொடுத்தா கீழ சிந்தக்கூடிய அபாயம் உண்டு , அதனால இதில் ஊத்தி கொடுப்பாங்க.  மூடி இருக்கும். பால் ஊத்தி கொடுத்தால் அந்த குழாய் மாதிரி இருக்கும் அமைப்பில் வாய் வச்சு குடிக்கலாம். எங்க வீட்டில் எனக்கு இப்படி கொடுத்த பாத்திரம் இன்னமும் பீரோவில் இருக்கு.  இது கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி பக்கம்தான் அதிகளவில் பயன்படுத்தி இருக்காங்க. 
வேலூர் சுத்துவட்டாரங்களில் பூமிக்கடியில் கிடைத்த பொருட்கள்லாம் இங்க கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. அவை கண்காட்சில வைக்கப்படும்.
அந்தக்காலத்தில் பயன்படுத்திய மண்பாண்டங்கள்...
அரிசி,பருப்பு கொட்டி வைக்க பயன்படும் தாழி இல்லீங்க இது... பிணத்தை இதுல வச்சுதான் அடக்கம் பண்ணாங்களாம்.
பிணம் வச்சு அடக்கம் பண்ணும் தாழியில் இன்னொன்னு...
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய  சின்னங்கள் குறித்த போட்டோக்கள், சிற்பங்கள், சித்திரங்களை இங்க பார்க்கலாம். பல்லவ, விஜயநகர ஆட்சிக்காலத்துக்குரிய விரிவான கல்வெட்டுகளும் இங்கு இருக்கு. 
படிப்படியாக தமிழ் எழுத்துக்கள் எப்படி வளர்ந்து இப்ப நிலையை எட்டி  இருக்குன்னு விளக்கும் படம்... 
நூற்றாண்டை எட்டும் பரந்து விரிந்த விழுதுகளுடன் கூடிய ஆலமரம்..  பதிவில் வந்ததில்லாம இந்த பகுதிகளில் கிடைத்த சிலைகள், பழமையான பொருட்கள்,  பறவைகள், விலங்குகள், ஊர்வன என அனைத்து உயிர்களின் பாடம் செய்யப்பட்டு இங்க காட்சிக்காக வச்சிருக்காங்க.
வண்ணத்துப்பூச்சி ஒண்ணை பார்த்தாலே மனசு துள்ளும். இத்தனை வண்ணத்துப்ப்பூச்சியினை பார்த்தால்?! என்ன ஒரே குறை இதெல்லாம் பறக்காம, கண்ணாடி சிறையில் இருக்கு.
விடாது கருப்பு போல எங்க போனாலும் என்னை இந்த பாம்புகள் விடாது போல ! எனக்கும் இந்த பாம்புகளுக்கும் ஏதோ விட்டகுறை தொட்ட குறை இருக்கும்போல! இங்க நல்ல பாம்பு, கட்டுவிரியன், பச்சை பாம்பு, மலை பாம்புன்னு பாடம் பண்ணி வச்சிருக்காங்க.
 கடல்வாழ் உயிரினங்களும் காட்சிக்காக...

வேலூர் - ஆரணிக்கு இடையில் கணியம்பாடி, கண்ணமங்கலம்ன்னு காட்டுப்பகுதி இருக்கு. அங்க வாழ்ந்த சிறுத்தையின் எலும்புக்கூடும், பாடம் பண்ணப்பட்ட உடலும்..


ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பின்னர் 2 மணி முதல் 5 மணி வரையும் இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கும். நுழைவுக்கட்டணமா 3ரூபா வசூலிச்சாங்க. இது ரெண்டு வருசத்துக்கு முந்தைய கதை. இப்ப எவ்வளவுன்னு தெரில. கேமராவுக்கு என தனி கட்டணம் உண்டு. தமிழனனின் பெருமை, வீரம், பண்பாட்டினை விளக்கி மௌனமா இருக்கும் இந்த அருங்காட்சியகத்தை பார்வை இட வர்றவங்கக்கிட்ட நுழைவுக்கட்டணமா இன்னும் கொஞ்சம் கூடுதலா வசூலிச்சு எல்லா அறைகளையும் நல்ல வெளிச்சத்தோடும் சுத்தமாவும் பராமரிக்கலாம்.  
நன்றியுடன்,
ராஜி

22 கருத்துகள்:

 1. அரிய பொருட்களின் பொக்கிஷ படங்கள் அனைத்தும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா! டிடி அண்ணா பழைய ஃபார்முக்கு வாந்தாச்சு போல! இனி பதிவுலகம் கலை கட்டும்.

   நீக்கு
 2. தகவல்கள் அருமை சகோ கோடரி படங்கள் ஸூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எடுத்ததாச்சே! நல்லாதான் இருக்கும்ண்ணே.

   நீக்கு
 3. வேலூர் கோட்டைக்கு சென்று இருக்கிறேன். ஆனால் அங்குள்ள அரசு அருங்காட்சியகம் செல்ல வாய்ப்பு (நேரம்) இல்லாமல் போய்விட்டது. அந்த குறையை உங்கள் பதிவும், சிறப்பான படங்களும் போக்கி விட்டன. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முறையான அறிவிப்பு பலகை வைக்காததால் உங்களுக்கு தெரியாம போய் இருக்கும்ண்ணா.

   எல்லாமே மொபைல்ல எடுத்த படம், அதான் கிளாரிட்டி கம்மியா இருக்கு.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   நீக்கு
 4. படங்களும் தகவல்களும் சிறப்பாக உள்ளன சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 5. பூமராங் உபயோகிப்பவர்கள் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா தெரியவில்லை.

  கெண்டி நாங்களும் உபயோகப்படுத்தி இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப புழக்கத்தில் பூமராங்க் இல்ல. ஆனா, வெளிநாட்டில் விளையாடுறதை டிவிலயோ இல்ல நெட்டுலயோ பார்த்த நினைவு.

   கெண்டிய நான் மட்டும்தான் உபயோகப்படுத்தினேன்னு சொல்லவே இல்லியே!

   நீக்கு
 6. முதுமக்கள் தாழி!

  பொதுவாக கோவில் உட்பட முழு வேலூர் கொட்டையையும் ஒரு நாளில் முழுதாகப் பார்த்துவிட முடியுமா?

  சுவாரஸ்யமான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்துடலாம் சகோ. வேலூரில் சுத்தி பார்க்க கோட்டை மற்றும் ஸ்ரீநாராயணி பீடத்தவர்களால் நிர்மாணிக்கப்பட்ட பொற்கோவில் மட்டும்தான் இருக்கு. சகோ. காலையில் கோட்டைக்குள் புகுந்து சுத்தி பார்த்துட்டு, மதியம் வெளிய வந்து மதிய சாப்பாட்டை முடிச்சுட்டு மாலை 4 மணிவாக்கில் பொற்கோவிலுக்கு போனால் அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளிய வர மணி ஆறினை தாண்டும். விளக்கொளியில் பொற்கோவிலை ரசிச்சுட்டு கிளம்பிடலாம்.

   இல்ல ரெண்டு, மூணு நாள்ன்னு பிளான் போட்டால் பக்கத்துல ராணிப்பேட்டை இருக்கு. அங்க செஞ்சி புகழ் தேசிங்கு ராஜாவின் மனைவியின் சமாதி இருக்கு. ஆற்காட்டில் ராணிக்கோட்டை இருக்கு. ஏலகிரி இருக்கு. பிரம்மனின் அகந்தையால் திருவண்ணாமலையில் சிவனின் முடியை காணமுடியாமல் போனது. ஆனால் அன்பினால் சிவனின் முடியினை பிரம்மன் கண்ட விரிஞ்சிபுரம் இருக்கு. தீர்த்தகிரி மலை இருக்கு.. அப்படியே ஆரணில உங்க சகோதரி ராஜி வீடு இருக்கு... அவளுக்கு சீர் செய்ய ஆரணில பட்டுச்சேலை கடை இருக்கு..

   நீக்கு
 7. அருமை
  ஒருமுறையேனும் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவலை தங்களின் பதிவு தூண்டிவிட்டுவிட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை மாதிரி தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் பார்க்க வேண்டிய இடம். அவசியம் ஒருமுறையாவது வாங்கண்ணே

   நீக்கு
 8. அருமையான பதிவு. படித்தேன், ரசித்தேன். விக்கிரம ராஜ சிங்க மன்னன் இலங்கையின் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன். அவனுக்கும் வேலூருக்கும் என்ன சம்பந்தம்? அறிய ஆவல். படங்களும் விளக்கங்களும் சிறப்பு. கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்!
  https://goo.gl/QsFZ11
  பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
  #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #thirukkural
  #சிகரம்
  #SigarambharathiLK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டியின் கடைசி மன்னனான விக்கிரம ராஜ சிங்க மன்னன் நாயக்கர் வம்சத்தவன் ஆவான், அவனின் இயற்பெயர் கண்ணுசாமி. ஸ்ரீராஜாதிராஜ ராஜசிங்கனி மருமகன். ராஜாவின் மறைவிற்கு பின் வாரிசு இல்லாததால் இவன் பதவியேற்றான் அப்ப வச்ச பேருதான் விக்கிரம ராஜ சிங்கன்.

   அரசுரிமை வேண்டி மறைந்த ராஜாவின் மனைவியும், ராஜாவின் பங்காளிகளும் உள்நாட்டில் பல குழப்பங்கள் செய்வித்தனர், ஆங்கிலேயர்களுடன் இணைந்து விக்கிரம ராஜ சிங்க மன்னனுக்கு எதிராக போர் தொடுத்தனர். 1815 ல் கண்டியில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் சிறைப்பிடிக்கப்பட்டான். அப்ப செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின்படி அவன் இரண்டு மனைவியருடன் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.

   நீக்கு
  2. ஆங்கிலேயர்கள் கொடுத்த பணத்தில் விக்கிரம ராஜ சிங்க மன்னன் வாழ்ந்ததாகவும், வேலூர் கோட்டையில்தான் அவன் உயிர் பிரிந்ததாகவும், கோட்டையில் அவனது சமாதி இருக்குறதாகவும் சொல்றாங்க. அங்க போகமுடியாதபடி புதர் மண்டிப்போய் கிடக்காம். ஆனா, நான் பார்க்கலை சகோ.

   நீக்கு
 9. I'm sorry, don't know to Tamizh letters on the keyboard.

  Enjoyed reading the post on various artifacts. For ignoramus like me, it would be nice to indicate the periods.

  It's a pity we don't value these finds. I'm sure each one has an interesting story about when it was in use and even how it was found. Needs guys with imagination. Pity we cant get our children excited about these parts of our history.

  Thanks, it was like visiting the place in person.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. My friend, it wasn't easy to comment:-( Almost gave up.

   நீக்கு
  2. தன் வேரினை உணராத மரமாய் இருக்கு இப்போதைய தலைமுறை. பாசம், நேசம், பக்திக்கு வேலை இல்லை இவர்களிடம். காசிருந்தால் போதும்ன்னு நினைச்சுடுறாங்க. நம் முன்னோர்களைப்போல வாழலைன்னாலும் பரவாயில்லை. அவங்க வாழ்ந்த சுவடினை அழியாம பார்த்துக்கிட்டாலே போதும். ஆனா, நம்மூர்ல அப்படி இல்ல. பொறுப்பு உணராத மக்கள். எதுலலாம் காசாக்க முடியும்ன்னு நினைக்கும் ஆட்சியாளர்களினால் இதுமாதிரியான இடங்கள் கவனிப்பாரற்று இருக்கு.

   சில உணர்வுகள் தாய்மொழியில் சொன்னால்தான் எடுபடும். அதனால்தான் உங்க ஆங்கிலத்தாலான கருத்துக்கு பதில். வாய்ப்பு கிட்டின் ஒருமுறை வாங்க. வரும்போது எனக்கு சொல்லுங்க. நான் கூட வந்து சுத்தி காட்டுறேன்,.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

   நீக்கு
 10. நல்ல பகிர்வு. படங்கள் நிறைய எடுத்து இருப்பீர்கள் போல.

  வேலூர்ப் பக்கம் வரணும் எப்போது நேரம் கிடைக்குமோ.... ஏலகிரி வர சில முறை திட்டமிட்டு கிடப்பில் போட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்கம் பக்கமா எழுதி புரிய வைக்காத விசயத்தை ஒரு படம் உணர்த்தும் என்பது என் கருத்துண்ணே.

   சீக்கிரத்துல வேலூருக்கு வாங்க. வரும்போது அண்ணி, ரோஷிணியை கூட்டி வாங்க. ஊட்டிலாம் பார்த்தவங்களுக்கு ஏலகிரி ஆச்சரியத்தை தராது.

   நீக்கு