நம் ஊரில் விளையாட்டாய் கணவனிடம், உங்க வீட்டில் மதுரை ஆட்சிப்போல!!ன்னு விளையாட்டாய் கேட்பாங்க. அதுக்கு காரணம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை பொறுத்தவரை மீனாட்சி அம்மனுக்குதான் முதல் மரியாதை. அவளுக்கு பின்னர்தான் ஈசனுக்கு மரியாதை. பொதுவாய் நம்ம ஊர் கோவில்களில் ஆண்கடவுள்தான் பிரதானம். அவர்தம் மனைவியருக்கு ஒரு ஓரமா தனிச்சன்னிதி இருக்கும். ஆனா, இங்கு அம்பிகைக்குதான் பிரதான சன்னிதி. அம்பிகையை வணங்கிய பின்னர்தான் ஈசனை வணங்கனும். தூங்கா நகரமான மதுரைக்கரசியான மீனாட்சி கைலாயவாசியான ஈசனை கைப்பிடித்த நன்னாள் இன்று.. மதுரையே கோலாகலமாய் கொண்டாடும் நாள் எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?!
தனஞ்செயன்ன்ற வணிகன், தன் வியாபாரத்துக்காக கடம்ப வனம் ஒன்றில் ஓய்வெடுக்கும்போது, அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதனருகில் பொய்கை ஒன்றும் இருப்பதை கண்டார். சிவபக்தனான அவர், ஈசனை வழிப்பட்டு வணங்கி, அந்தப்பகுதியை ஆண்டுவந்த குலசேகரப்பாண்டியனிடம் தெரிவித்தார். பாண்டியனும் வணிகனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து வணங்கினார். சிவலிங்கத்தை சுற்றி கோவிலை எழுப்பினார். கோவிலை சுத்தி மதில், அகழியுடன்கூடிய பெரிய ஊரை நிர்மாணிக்க ஆசைப்பட்டு ஈசனிடம் வேண்டி நின்றார். தனது சடைமுடி மேல் மிளிரும் சந்திரனிடம் உள்ள புனித நீரை தெளித்து இந்த ஊரை புனிதமாக்கினார். மேலும், தன் கழுத்திலிருந்த பாம்பினை எடுத்து பாண்டியனுக்கு இந்த நகரின் எல்லையைக் காட்ட அனுப்பினார். அது, சுற்றி வளைத்து, வாயால் வாலை கவ்வி நகரை அடையாளப்படுத்தி காட்டியது. அதனால், மதுரைக்கு ஆலவாய்ன்னும் பேரு..
முப்பெரும் வேந்தர்களான சேரர்கள் நெருப்பையும், சோழர்கள் சூரியனையும் பாண்டியர்கள் சந்திரனையும் தங்கள் குலதெய்வமாக வழிப்பட்டு வந்தனர். அதனால், பாண்டியர்கள் தங்கள் தலைநகருக்கு மதி(சந்திரன்) உறையும் நகர்ன்னு பெயர் சூட்டி, அது காலப்போக்கில் மதிறைன்னு ஆகி.. பின் மதிரைன்னு மருவி.. கட்டக்கடைசியா மதுரைன்னு இப்ப வந்து நிக்குது. குமரிக்கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப்பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப்பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறுமதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப்பட்டு, அதுவே மதுரை என்றாகியது. வயலும் வயல் சார்ந்த இடமான மருத நிலமாதலால் மருதைன்னும் மதுரைன்னும் அழைக்கப்படுவதாயும் சொல்லப்படுவதுண்டு.
குலசேகர பாண்டியனுக்கு பிறகு, அவரது மகன் மலையத்துவஜ பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவனின் பட்டத்தரசி காஞ்சனமாலை. இருவருக்கும் நீண்ட நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், பாண்டியன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். அதன்பலனாக யாகக்குண்டத்திலிருந்து 3வயது பெண்குழந்தையாக அன்னை உமா மகேஸ்வரி அவதரித்தாள். தடாதகைன்னு பேரிட்டு அருமை பெருமையாய் குழந்தையை வளர்த்துவந்தனர். தடாதகை பெண் என்ற உணர்வே இல்லாமல் ஆணைப்போல வளர்ந்து வந்தாள். சகல போர்க்கலையிலும் தேர்ச்சி பெற்றாள். தக்கபருவம் வந்ததும் தடாதகைக்கு மீனாட்சி என பேர் சூட்டி, மதுரைக்கு அரசியாய் முடிசூட்டினான் பாண்டியன். தன் கண்களால் மீன், தன் முட்டைகளை அடைக்காப்பது போல குடிமக்களை தன் மீன்போன்ற விழியால் காக்கவேண்டி அவளுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. அன்னை, கன்னியாக, மதுரைக்கு முடிசூட்டிக்கொண்டதும் அந்நாட்டுக்கு கன்னி நாடு என பேர் உண்டானது.
அரசருக்குண்டான கடமைகளில் ஒன்றான திக் விஜயம் மேற்கொண்டாள் மீனாட்சி. எதிர்த்த மன்னரையெல்லாம் வென்று தன் வசமாக்கிக்கொண்டாள். அவளது வீரத்துக்கு தேவலோகமும் அடிப்பணிந்தது. அடுத்து, கைலாயத்தை தன்வசப்படுத்த கைலாயம் நோக்கி சென்றாள். அங்கிருந்த ஈசன், மீனாட்சியை நேருக்கு நேர் நோக்க, அன்னையின் ஆண்தன்மை மறைந்து, பெண்தன்மை வெளிப்பட்டு, நாணத்தோடு தலைக்குனிந்து நின்றாள்.
ஐயனும் அன்னையின் அழகில் சொக்கி நின்றார். அன்றிலிருந்து ஐயனுக்கு சொக்கநாதர் என பேர் உண்டானது. தன்னை மணந்துக்கொள்ள அன்னை கேட்க, ஐயனும் செய்துக்கொள்வதாய் வாக்களித்து, திருமண நாள் குறித்து மீனாட்சியை அனுப்பி வைத்தார்.
சதாசர்வக்காலமும், சுடுகாட்டு சாம்பலை பூசியபடி, மண்டையோட்டை அணிந்து பித்தன் என பேரெடுத்த ஐயன், அன்னைக்காக, நறுமணப்பொடியில் நீராடி, தைலம் பூசி, மையிட்டு தன்னை அழகாக்கி, பொன்னாபரணம் சூட்டி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், தேவேந்திரன் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷி, முனிவர்கள், நாரதர் புடைச்சூழ, அன்னையை மணக்க வேண்டி மதுரை வந்தார்.
அம்மையப்பனின் திருமணத்தை காண ஈரேழு உலத்திலிருந்த அத்தனை ஜீவராசிகளும் மதுரைக்கு வந்திருந்தனர். திருமண விருந்து தயாராகிக்கொண்டிருந்தது. பூரண அலங்காரத்தோடு, ஐயனை வரவேற்ற அன்னை, சிவனோடு வந்திருந்த சொற்ப எண்ணிக்கையில் வந்திருந்த ஆட்களை எண்ணி மனசுக்குள் எள்ளி நகையாடிப்படி, இங்கு திருமண விருந்து தடபுடலாய் தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்கள் உறவினர் இத்தனை பேரும் சாப்பிட்டாலும் உணவு மீதமாகி, வீணாகிவிடுமே! அன்னம் பழிப்பது பாவமாச்சே என பாசாங்கு செய்தாள் அன்னை.
அன்னையின் பொடி வைத்த பேச்சை உணர்ந்த ஐயன், மீனாட்சி! கவலைப்படாதே! நீ என்னுடன் வந்திருக்கும் குண்டோதரனுக்கு மட்டும் திருப்தியாய் உணவளி அதுபோதுமென பதிலுரைக்க, அதன்படி குண்டோதரனுக்கு உணவு பரிமாறப்பட்டது. அங்கிருந்த உணவுகள் அனைத்தையும் தின்றும் அவன் பசி ஆறவில்லை. உணவு உண்டதால் தாகமெடுத்து மதுரையிலிருந்த குளம், குட்டை என எதும் விட்டு வைக்காமல் காலி செய்துவிட்டு, இன்னும் பசி, தாகமென கத்தினான். கடைசியில் ஈசனிடம் சரணடைய, ஈசன் அவனை அழைத்துக்கொண்டு மதுரையின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று, மணலில் கை வை என்றார். அப்படியே குண்டோதரன் கை வைக்க, அவ்விடத்தில் நீர் பிரவாகமெடுத்து ஓடியது. அந்நீரை பருகியதும் அவனது பசி, தாகம் நீங்கியது. அன்றிலிருந்து அந்த நீர் பிரவாகத்துக்கு வைகை எனப் பேர் உண்டானது.
ஐயன் மதுரைக்கு திரும்பியபோது அன்னையின் ஆணவம் முற்றிலுமாய் அழிந்துவிட்டிருந்தது. பார்க்க சகியாத ஈசன் அன்னைக்காக அன்று சர்வ அலங்காரத்துடன் அன்னைக்கு சற்றும் குறைவில்லாத பேரழகனாய் சுந்தரேஸ்வராய் மாறி மீனாட்சியினை மணந்து மீனாட்சி சுந்தரேஸ்வரராய் மாறி அனைவருக்கும் அருள் புரிந்தனர். திருமணப்பரிசாக, மதுரையை தொடர்ந்து ஆளும் பொறுப்பினை அன்னைக்கே விட்டுத்தந்ததோடு, மீனாட்சிக்கு நாட்டை ஆள்வதில் உறுதுணையாய் மதுரையின் மாப்பிள்ளையாய் மதுரையிலேயே தங்கிவிட்டார். மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் முருகன் அம்சத்தோடு உக்கிரபாண்டியன் பிறந்தான். அவனுக்கு தக்கப்பருவம் வந்ததும், அவனுக்கு முடிசூட்டி, மதுரையை அவன்வசம் ஒப்புவித்து அம்மையும், அப்பனும் கைலாயம் திரும்பினர்.
அன்னைக்கு அளித்த வாக்கின்படி, இன்றும் மதுரையில் அன்னைக்கே முதலிடம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அன்னையை வழிப்பட்டபின்னரே ஐயனை வழிப்படவேண்டும். மதுரை மீனாட்சி அம்மனின் வடக்கு வாசல் கோபுரம் நீண்ட நெடுகாலம் மொட்டை கோபுரமாய்தான் இருந்தது, நாட்டுக்கோட்டை நகரத்து வணிகர்கள் இப்போதிருக்கும் கோபுரத்தினை கட்டினர். மொட்டைக்கோபுரத்தின் அடியில் பாண்டி முனி என்னும் முனீஸ்வரன் ஆலயம் உள்ளது. இங்கு சுருட்டுதான் முக்கிய படையல். அதேப்போல, கிழக்கு கோபுரத்தினடியில் மதுரைவீரனுக்கு தனிச்சன்னிதி உண்டு.
தலவிருட்சமான கடம்ப மரம் வடக்கு கோபுரத்தின் அருகில் இருக்கு. இக்கோவிலின் கீழ்திசையில் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி மண்டபம், முதலிமண்டபம்லாம் இருக்கு.
அர்த்தமண்டபத்தை கடந்ததும், பச்சைநிற கருவறையில் மதுரைமீனாட்சி, இடக்கரத்தை கீழே தொங்கவிட்டப்படியும், வலக்கையில் கிளியை தாங்கியும், தன்னை வணங்குபவர்களுக்கு பதினாறு செல்வங்களையும் அள்ளி தந்து அருள்பாலிக்கிறாள்.
அன்னையை தரிசித்தபின், கிளிக்கூட்டு மண்டபத்தின் வழியாக நடுக்கட்டுக் கோபுரவாசலை கடந்துசெல்லும்போது நம்மை வரவேற்பவர் முக்குறுணி பிள்ளையார். எட்டு அடி உயரத்தில் இருக்கும் இவர் ஒரே கல்லினால் செய்யப்பட்டவர்.
இவரை கடந்ததும், தூணில் ஆஞ்சிநேயர், இன்னொரு தூணில் பெண்ணுக்கு பிரசவம் நடப்பதுபோன்ற சிற்பமொன்று. இச்சிற்பத்துக்கு விளக்கெண்ணெய் பூசி, வஸ்திரம் சாத்தி, யோனி பூஜை செய்து வழிப்பட்டால் சுகப்பிரசவமாகுமென்பது நம்பிக்கை.
அடுத்தது சுந்தரேஸ்வரர் ஆலயம். சுவாமியின் கருவறையை யானைகள் தாங்கி நிற்கும். கிழக்கு நோக்கிய சுவாமி சன்னிதியின் முன் மண்டபத்தின் இடது ஓரத்தில், சிவன் கால் மாற்றி ஆடிய வெள்ளியம்பலம் இருக்கு. சுந்தரேஸ்வரர் சன்னிதி வலப்புறத்தில் வந்திப்பாட்டி,சரஸ்வதி அம்மன், துர்க்கை அம்மன், எல்லாம் வல்ல சித்தர், பைரவர் சன்னிதிலாம் இருக்கு.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண வைபவம், சித்திரை மாதத்தில் நடைப்பெறும். இத்திருமண வைபவம் 12 நாட்கள் திருவிழாவாய் கொண்டாடப்படும். கொடியேற்றத்தின் எட்டாவது நாள் அம்மனின் பட்டாபிஷேகம் நடைப்பெறும், பட்டாபிஷேகத்தன்று அம்மன் பட்டாபிஷேக பந்தலுக்கு வந்தருள்வார். அவருக்கு பரிவட்டம் கட்டி, வினாயகர் சன்னிதியிலிருந்து கொண்டுவரப்படும் ராயர் கிரீடத்தையும், செங்கோலையும், அணிவிப்பர். பின் அம்மனுக்கு பிடித்த வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டு திருவீதி உலா நடைப்பெறும். ஒன்பதாம் நாள் மீனாட்சியின் திக்விஜயமும், பத்தாம்நாள் திருக்கல்யாணமும், பதினொன்றாம் நாள் தேரோட்டமும், பனிரெண்டாம் நாள் சித்திரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் அம்பாளுக்கு தீர்த்தவாரியும் நடக்கும்.
இத்திருமண நிகழ்வை கண்டுகளித்தால் திருமணத்தடை நீங்குமென்பது ஐதீகம். பிள்ளைவரம் கிடைக்கும். திருமண வைபவம் முடிந்ததும், சுமங்கலி பெண்களுக்கும், திருமண வரம் வேண்டி நிற்கும் பெண்களுக்கும் மாங்கல்யம் கோவில் நிர்வாகத்தால் தரப்படும். திருமண விருந்தும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
இந்த சித்திரை திருவிழாவின் முதல் நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்தால் பிறவிப்பயன் தீரும். இரண்டாம் நாளில் தரிசித்தால் உணவு பஞ்சம் பீடிக்காது. மூன்றாம் நாளில் தரிசித்தால் எம பயம் நீங்கும், எதிரிகள் விலகுவர், சகல ஐஸ்வரியங்களும் கிட்டும், நான்காம் நாளில் தரிசித்தால் வியாபாரிகள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தும் நாள். இந்நாளில் தரிசித்தால் வியாபாரம் செழிக்கும். ஐந்தாம் நாளில் தங்ககுதிரை வாகனம். நாக்கை துருத்தியபடி, கண்ணை உருட்டியபடி வரும் குதிரையை பார்த்தால் செய்வினை தீயசக்திகளின் ஆதிக்கம் தீரும். ஆறாம் நாளில் ஞானசம்பந்தரின் வெப்பு நோய் தீர்த்தல் பற்றி ஓதப்படும். ஏழாம் நாளில் பிச்சாண்டவர் புறப்பாடு. இவரை தரிசிப்பதால் ஆணவம், மாயை, அகங்காரம், தற்பெருமை நீங்கும். எட்டாம் நாளில் ஊடல் உற்சவம், தம்பதியர் ஒற்றுமை பலப்படும். ஒன்பதாம் நாள் திக்விஜயம். இந்நாளில் தரிசித்தால் ஊர்ப்பயணம் வசப்படும். மாயை அகன்று தான் யாரென்று புலப்படும். பத்தாம் நாளில் திருமணத்தன்று தரிசித்தால் திருமணத்தடை அகலும், அன்பான கணவனை பெண்களும், பொறுப்பான மனைவியை ஆண்களும் அடைவர். திருமண ஆனவர்களுக்கு கணவன் மனைவி உறவு பலப்படும், குழந்தை வரம் கிட்டும்.
இத்தோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பத்திய பதிவு முடிஞ்சுது. ஆனா, தூங்கா நகரமான மதுரையில் கோலாகலத்துக்கு குறைவில்லை. அடுத்து கள்ளழகர் ஆற்றில் இறங்க கிளம்பிடுவார். அதை ஞாயிறு அன்னிக்கு பார்ப்போம்.
நன்றியுடன்,
ராஜி
நிறைய தகவல்கள் அறிந்தேன் சகோ
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteமதுரை பற்றிய நிறைய தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஇன்று திருக்கல்யாணம். நிறைய செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஆமாம் சகோ. மதுரைக்கும் எனக்குமான பந்தம் அதிகம்... அதான் இந்த பதிவு
Deleteதிருக்கல்யாணம், தகவல்கள் அனைத்தும் படங்கள் உட்பட சிறப்பு.
ReplyDeleteகீதா: அதிலும் அந்த முட்டி மடக்கி அமர்ந்திருக்கும் மீனாட்சி கொள்ளை அழகு!!! என்ன ஸ்டைல்!!!
மீனாட்சி அம்மன் பேரழகியாச்சே!
Deleteமிகவும் நன்று பாராட்டுகள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Delete