Monday, April 23, 2018

RETIREDன்னா என்னன்னு தெரியுமா?! ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள! கலர்கலரா கண்ணாடி வளையல் வாங்கி வச்சிருக்கே! எம்புட்டு செலவாச்சு?! என் பர்ஸ்சை காலி பண்ணியாச்சா?!

மொத்தமே 300ரூபாதான் ஆச்சு..

அடிப்பாவி பொய் சொல்லாத. கிட்டத்தட்ட 10டசன் வளையல் வாங்கி வச்சிக்கிட்டு 300ரூபான்னு சொல்றியா?! பொய் சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைக்காது பாரு.
போஜனம் கிடைக்கலைன்னா டிஃபன், ஜூஸ், கஞ்சின்னு சமாளிச்சுக்குறேன். உங்களுக்கு அந்த கஷ்டம் வேணாம். ஆனா, இந்த அத்தனை வளையல்களும் வெறும் 300ரூபாயில்தான் வாங்கினேன். ஏன்னா, நான் பேன்சி ஸ்டோர் வாங்கி வரல. தெருவில் வரும் வளையல்கார தாத்தாக்கிட்ட வாங்கினேன். அதான் விலை குறைச்சலா இருக்கு.

வளையல்கார தாத்தாவா?! யாருக்கு காது குத்த பார்க்குறே?! இப்பலாம் அப்படி ஒரு வியாபாரியே இல்லன்னு ஐ நோ. முன்னலாம் ஒரு தகர டப்பாவில் வளையல்களை அடுக்கிக்கிட்டு, ஒரு பந்து மாதிரி வளையல்களை கையில் பிடிச்சுக்கிட்டு வீதிவீதியா கண்ணாடி விக்க ஆட்கள் வருவாங்க. அந்த தகரடப்பாக்குள், கண்ணாடி வளையல், ரப்பர் வளையல்ன்னு இருக்கும். கண்ணாடி வளையல்ல கல்யாண வளையல், சீமந்த வளையல், நதியா வளையல், ப்ளெயின் வளையல்ன்னு விதம்விதமா இருக்கு. வளையல் விக்குறவங்களோட ஸ்பெஷாலிட்டி பாட்டு பாடுறது, அவங்க பாட்டு பாடிக்கிட்டே பொண்ணுங்க கைப்பிடிச்சு வளையல் போடும் அழகே அழகு. அதும், வளையல் ஒடைஞ்சு போய் இருக்கான்னு பார்க்கும் ஸ்டைல் இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்குடி. எதாவது பொண்ணு, பையனை கல்யாணத்துக்கு செலக்ட் பண்ணுறதுக்கு முன், பொண்ணை பத்தி வளையல் விக்குறவங்க, துணி வெளுக்குறவங்கக்கிட்டயும், மாப்ளைய பத்தி சவரம் பண்ணுறவங்கக்கிட்டதான் விசாரிப்பாங்க. கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், சடங்கு, தாலி அறுப்புன்னு எதா இருந்தாலும் முன்கூட்டியே இவங்கக்கிட்ட சொல்லிவச்சு வளையல் போட்டுப்பாங்க. வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சியில் இது ஒரு சடங்காவே இருக்கும். பசங்க காதல், புருசன் பொண்டாட்டி சண்டை, பாகப்பிரிவினைன்னு எல்லாத்துக்கும் இவங்களை பஞ்சாயத்துக்கு இழுப்பாங்க. சுருக்கமா சொல்லப்போனா, வளையல் விக்குற ஆட்களை முன்னலாம் சொந்தக்காரங்களா நினைச்சு அவங்களுக்கு மரியாதை கொடுத்தது அந்த காலம். இப்பலாம், கடைக்கு போய் வளையல் வாங்கிட்டு வர்றது. அதுமில்லன்னா ஆன்லைன்ல புக் பண்ணும் காலமாகிட்டுது என்னத்த சொல்ல?! சரி, இப்ப எதுக்கு 10 செட் வளையல் வாங்குனே?! வீட்டில் அடுக்கி வச்சிருக்கும் வளையல்லாம் போதாதுன்னா?!

ம்க்கும். கௌதமுக்கு மொட்டை அடிச்சு காது குத்து வச்சதுக்காக வாங்கினது..

காதுகுத்து அவனுக்கு. நீ ஏன் இத்தனை வளையல் வாங்கினே?! சரி , குழந்தைகளுக்கு பிறந்த கொஞ்சநாளிலேயே குலதெய்வத்துக்குன்னு சொல்லி மொட்டை அடிக்குறது ஏன்னு தெரியுமா?!

சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டதை நிறைவேத்தனும்ல!? அதுக்காகத்தான்..

உன்கிட்ட பிரதிபலன் வாங்கிதான் உனக்கு நல்லது செய்வேன்னு எந்த தெய்வம் சொல்லுச்சு?! நாமளா நம்ம திருப்திக்கு பொங்கல், பூஜை, அலகு குத்துறது, விரதம்ன்னு இருக்கோமே தவிர, சாமி கேக்குறதுலாம் உள்ளன்போடு ஒருமுக நினைச்சு வணங்குறதுதானே தவிர ரிவெஞ்ச்லாம் இல்ல, சரி டாபிக் மாறுது. குழந்தைகளுக்கு மொட்டை ஏன் போடுறோம்ன்னா,  ஒரு குழந்தை தன் தாயின் கருவறைக்குள் இருக்கும்போது குழந்தையை ஒரு விதமான திரவம் சூழ்ந்துக்கொண்டு இருக்கும். அதுதான் நாம் பனிக்குடம். ஒரு கருவானது சில மாதங்களில் நன்கு வளர்ச்சி பெற்று சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும். அந்த சிறுநீரானது பனிக்குடத்தின் திரவத்தோடு கலந்துவிடும். இப்படிப்பட்ட திரவத்தில் ஒரு குழந்தை 10 மாதமாக ஊறி இருக்கும். அந்த குழந்தை இந்த பூமியில் பிறந்த உடன் அதன் உடலை நன்றாக துடைத்து சுத்தம் செய்து அந்த திரவத்தை நீக்கி விடுவோம். ஒருவேளை கருவறையில் இருக்கும்போதே குழந்தை அதை குடித்து இருந்தால் அதன் உடல் தானாகவே அந்த திரவத்தை வெளியேற்றி விடும். ஆனா, திரவத்தில் 10 மாதம் ஊறி இருக்கும். ஆகையால் அது அவ்வளவு எளிதில் வெளியில் வர வாய்ப்பு இல்லை. அந்த கழிவுகள் வெளியே வர ஒரே வழி மயிர்கால்கள் மட்டுமே.  முடிக்கால்களில் ஒட்டிக்கிட்டிருக்கும் கழிவுகளினால் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, பிறந்த சிலமாதங்களில் குலதெய்வத்துக்கு ஒரு மொட்டையும், அப்படியும் ஒட்டிக்கிட்டிருக்கும் மிச்சம்மீதி கிருமிகளை அடியோடு அழிக்க மூன்றாவது இரண்டாவது மொட்டையும் கொடுக்கப்படுதுன்னு சொன்னாலும் உள்ளர்த்தம் வேற!
பிறப்பு, மறுபிறப்பில் இந்துக்களுக்கு நம்பிக்கை அதிகம். அதனால, தொட்டக்குறை, விட்டக்குறையால், முன்ஜென்ம தொடர்புகள் எதாவது இருந்தால், அதை துண்டிப்பதற்காகத்தான் முதல் மொட்டை அடிக்கப்படுது. இறப்புக்கு பின் நம் ஆன்மா அவ்வளவு எளிதாய் இந்த உடலை விட்டு போய்டாது. இந்த உடல் காத்தோடு காத்தாய் கரையும்வரை, இந்த உடம்பில் புகுந்துக்கொள்ள ஆன்மா அலைப்பாயும். தலைமுடியில் இருக்கும் செல்தான் கடைசியா அழியுது. அந்த கடைசி செல்வரை, உடல்மீதான ஆன்மாவின் ஆசை விடாது. அதனாலதான் தலைமுடிக்கும், நம் ஆன்மாக்கும், மறுபிறப்புக்கும் சம்பந்தம் உண்டு., இப்படி மொட்டை அடிக்கப்படுவதால், முன் ஜென்மத்தின் தொடர்புகளை அறுத்துக்கொண்டு இப்பிறப்புக்குண்டான வாழ்க்கையை வாழத்தொடங்குது அந்தக்குழந்தை. இதுதான் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க காரணம்.

இதுவே பெரியவங்க நேர்த்திகடனா மொட்டை அடிக்க காரணம், தலைமுடிங்குறது ஒருத்தங்க அழகை கூட்டும். அழகு, ஆணவத்தையும், பெருமையும் தரும். இறைவனுக்கு நமது அகங்காரம், ஆணவம், பெருமைலாம் அர்ப்பணித்து, உன்னை சரணாகதி அடைகிறேன். என்னை காப்பாத்துன்னு சொல்லாம சொல்லுறதுதான் இறைவனை எண்ணி மொட்டை போட்டுக்குறது...

இப்ப புரியுதுங்க. ஏன் மொட்டை போடுறாங்க. அப்படியே, காதுகுத்துக்கு தண்ணி ஏன் அடிக்குறாங்கன்னு சொல்லிட்டா நல்லா இருக்கும். ஏன்னா, கௌதமுக்கு மொட்டை அடிக்க போகும்போது, அங்க குடிமகன்கள் தாங்கமுடில. இந்த டாஸ்மாக்கை ஒழிச்சா தேவல.
டாஸ்மாக்கைலாம் அம்புட்டு ஈசியா ஒழிச்சுடமுடியாது. எந்த காலத்திலயும் மது இருந்துக்கிட்டுதான் இருக்கும். இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்பின் முதல் சரக்கு கடைன்னு சொல்லி வாட்ஸ் அப்ல இந்த போட்டோ சுத்திக்கிட்டு இருக்கு. அப்ப, முழு (Full) - ரூ. 17. அரை (Half) - ரூ. 10. கால் (Quarter) - ரூ. 5.50ன்னு வித்தாங்களாம். இப்ப குவார்ட்டரே 200க்கு மேல விக்குது.

ஆமா, குவார்ட்டர் விலை எப்படி உங்களுக்கு தெரியுமா?! என்னோட அப்பா, அம்மா காசிக்கு போய் இருக்கும்போது இப்படி தண்ணியடிக்கலாமா?!

அடி லூசே! நான் தண்ணி அடிக்கல. சும்மா கேட்டதை வச்சுதான் சொல்றேன். ரிட்டையர்ட்மெண்ட் லைஃப்ன்னா என்னன்னு புரிஞ்சுக்கிட்டு உன் அப்பா நல்லா எஞ்சாய் பண்றாரு.  20 வயதில் வாழ்க்கையை ஆரம்பிக்கும் மனிதன் 40 வயதில் 'TIRED ஆகுறான். ஆனாலும், பிள்ளை, குட்டி, கடன், பொறுப்புன்னு சமாளிச்சுக்கிட்டு முன்னேறுகிறான். அதேமாதிரி, வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் பாதி சம்பளம், இத்தனை நாள் பிசியா இருந்துட்டு, சும்மா வீட்டில் அடைஞ்சுக்கிடக்குறதுன்னு மீண்டும் டையர்ட் ஆவான். இப்படி ஒரு மறு களைப்பு அதாவது 'RE-TIRED' ன்னு ஒன்னு வரும். அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணி தயாருகுங்கன்னு எச்சரிக்கதான் பணிஓய்வுக்கு 'ரிடையர்ட்' பேர் உண்டாச்சு, ஒழுங்கா பிளான் பண்ணதால, எந்த கவலையுமில்லாம, ஊர் ஊரா உன் அப்பாவும், அம்மாவும் சுத்தி வர்றாங்க.

அதும் சரிதான். இந்த மாதிரி பிளான் பண்ணாததால, எதுமே ஒட்டாதுன்னு விளம்பரப்படுத்தப்படும் நான் ஸ்டிக் பாத்திரத்தில் ஒட்டின ஸ்டிக்கரே பிஞ்சு வராம கம்பெனி மானத்தை வாங்குது...
எதும் வழக்கு தொடுக்காம இருந்தாங்களேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான். மதிய சாப்பாடு டைம் ஆச்சு. போய் சாப்பாடு எடுத்து வை. நான் கை கழுவிட்டு வரேன்..

ஐஞ்சுவை அவியல் தொடரும்...
நன்றியுடன்,
ராஜி

16 comments:

 1. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete
  Replies
  1. ரிஜிஸ்டர் பண்ணால் எர்ரர் காட்டுது சகோ

   Delete
 2. உண்மைதான் பொய் சொன்ன வாய்க்கு போண்டா கிடைக்காது.

  ReplyDelete
  Replies
  1. இப்பலாம் போண்டாவை யாரு சாப்பிடுறாங்க?! ஒன்லி பப்ஸ், சமோசாதான்

   Delete
 3. அருமையான காதுகுத்து சம்பிரதாய விளக்கத்துடன்,அஞ்சுவை அவியல்........ நன்றி பதிவுக்கு,தங்கச்சி.......

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 4. சுவையான அவியல்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 5. சுவையான ஐஞ்சுவை அவியல். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete 6. பையன் அழுவதை பார்த்ததும் மனசே சரியில்லை சகோ நான் என் குழந்தைக்கு டாக்டர் ஆபிஸில் காது குத்த என் மனைவி கூட்டி சென்ற போது கூட நான் போகவில்லை

  ReplyDelete
  Replies
  1. பிள்ளைகள் அழும்போது அம்மா அப்பா பார்த்து சிரிச்சு மகிழும் ஒரே தருணம் இதுதான் சகோ.

   Delete
 7. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 8. குழந்தைகளுக்கு மொட்டை போடுவதால் முடி நன்கு வளருமாம் காது குத்தல் எல்லாம் எங்கள் வீடுகளில் 28ம் நாளிலேயே செய்வார்கள் இப்போதெல்லாம் கன் ஷாட்தான் ஒரு செகண்ட் வேலை எனக்கு காது குத்தினதே இல்லை

  ReplyDelete
 9. மொட்டை போடுவதால் முடி வளரும்ன்னு சொல்வதுலாம் உண்மை இல்லப்பா. 28 நாள் என்பது ரொம்ப சீக்கிரம்தான்.. உங்களுக்கு காது குத்தலியா?! காது குத்தாம கல்யாண மேடைல உக்கார விடமாட்டாய்ங்களே!

  ReplyDelete