Tuesday, April 03, 2018

இனிய நினைவுகளை கிளறிய கசப்பான வேப்பம்பூ - கிச்சன் கார்னர்

நம் மண்ணின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவப்படி முக்கியமான மூலிகைன்னு  108 மூலிகைகளை முதன்மைப்படுத்தி சொல்லி இருக்கு. அதில் முக்கியமானது வேம்பு என்னும் வேப்பமரம். இதன் பூ, இலை, காய், கனி, பட்டை, அடிவேர் வரை மருத்துவக் குணங்கள் நிறைந்தது. வேம்பு, மிகச் சிறந்த கிருமிநாசினி.  உடலில் எந்த நோயையும் அண்டவிடாமல் செய்வதில், வேம்புக்கு ஈடானது எதுமில்லை. சரும பாதுகாப்புக்கு வேப்ப இலையைப்போல மருந்தில்லை. சருமப்பாதுகாப்பு, முடி வளர்ச்சி, ஜீரணக்கோளாறு,   கசக்கும் வேப்பம்பூவை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். வயிற்றுவலி சரியாகும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மயக்கம், வாந்தி மற்றும் பித்தம் தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். உடல் வலுப்பெறும். சர்க்கரை நோயாளிகள், வயிறு, தோல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். உடல் உஷ்ணத்தைப் போக்கும் சக்தி, வேப்பம்பூவுக்கு உண்டு என்பதால், இந்தக் கோடை காலத்துக்குச் சரியான தேர்வாக இருக்கும்.
நான்லாம் சின்ன பிள்ளையா இருந்தப்ப, கோடை விடுமுறைல அத்தை பாட்டி, மாமா வீட்டுக்குலாம் போவாங்க. அப்படி ஊருக்கு போன இடத்துலயும் சரி, நம்ம வீட்டுக்கு அத்தை, மாமா, சித்தப்பா பசங்க வந்தால், சில வேலைகள் தவறாமல் நடக்கும். ஆறு, ஏரி, கிணத்துல போய் ஆட்டம். அதுக்கடுத்து கொடுக்காப்புளி, எலந்தப்பழம் வேட்டை.. இதுலாம் போரடிச்சா வேப்பம்பழ கொட்டை பொறுக்கிட்டு வந்து அதை காசாக்கி ஐஸ், வள்ளிக்கிழங்கு, கொய்யாப்பழம் வாங்கி திங்குறது. அடுத்து, புளியம்பழம் வாங்கி காய வைப்பாங்க, அதை உடைச்சு, நார், புளியங்கொட்டை, புளின்னு தனியா பிரிக்கனும். அப்படி பிரிச்சு வரும் புளியங்கொட்டையை வறுத்து தோல் நீக்கி உப்புதண்ணில ஊற வச்சு கொடுப்பாங்க. அத்தனை டேஸ்டா இருக்கும். அடுத்து வத்தல், வடகம், ஊறுகாய் வத்தல் போட அம்மா, அத்தை, பாட்டி, மாமிக்கு ஹெல்ப் பண்ணுவோம்.  அதாவது கோடைவிடுமுறைல இந்த ஒருவருசத்துக்கு தேவையானதை சமையல் பொருட்கள் சேமிச்சு வைக்க உதவுவோம். 
மதியம் உண்ட களைப்பு போக அம்மாக்கள் கதைப்பேசி ஓய்வெடுப்பாங்க. அந்த நேரத்தில் தொந்தரவா இருக்கோம்ன்னு சொல்லி, தாயக்கட்டை, ஸ்கிப்பிங் கயிறு, ஒரு பாய் கொடுத்து துரத்தி விட்ருவாங்க. நாங்க இருந்த கிராமத்து வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெரிய ஊரணி இருக்கும். அதைச் சுத்தி வேப்பமரம் நிறைய இருக்கும். அங்க கல்லை நட்டு பெஞ்ச் மாதிரி இருக்கும். அங்க போய்  பாய் விரிச்சுடுவோம். பாய் விரிக்குறது படுக்க இல்ல, மரத்திலிருந்து விழும் பூக்கள் மண்ணில் விழாம இருக்க. மாலை வரை பம்பரம், கோலி, தாயக்கட்டை, மண்ணில் குழிப்பறிச்சு பல்லாங்குழி, கிச்சுகிச்சு தாம்பாளம்ன்னு விளையாடுவோம். ஒரு பக்கம் விளையாட்டு, இன்னொரு பக்கம் வேப்பம்பூ, பழம்ன்னு தானா சேகரிப்போம். வீட்டுக்கு போகும்போது பை நிறைய வேப்பம்பூவும் , கைநிறைய அழுக்கும், உடல் நிறைய வேர்வையும், மனசு நிறைய உற்சாகமும் கொண்டு செல்வோம். அதுலாம் ஒரு கனாக்காலம்!! திரும்ப செல்லவே முடியாத ஒரு வழிப்பாதையை கொண்ட சேருமிடம்.  

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! 
இந்த நாள் அன்றுபோல் இன்பாய் இல்லையே !
அது ஏன்?! ஏன்?! நண்பனே!
பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம் இதைத் தவிர வேறெதைக் கண்டோம்?!
புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே பள்ளியைப் பார்த்ததும் .?!
ஒதுங்குவோம்.... மழைக்கு.....


அதான் நாயே உருப்படாம போய்ட்டேன்ற உங்க மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டேன். இந்தா பதிவுக்குள் வந்திட்டேன். அப்படி சேகரிச்ச வேப்பம்பூவை வெயிலில் காய வச்சு தூசுலாம் நீக்கி அம்மா சேகரிச்சு வைப்பாங்க. அப்பப்ப வேப்பம்பூ துவையல், குழம்பு, ரசம்ன்னு வச்சு அசத்துவாங்க. அதனால்தானோ என்னமோ அதிகமா ஹாஸ்பிட்டல் பக்கம் போறதில்லை.  இது பணத்தை முக்கியமா கொண்ட காலக்கட்டம். பைசா கொடுத்தால் எல்லாமே கிடைக்கும். அதனால, இதையும் கடையில் வாங்கிக்கலாம். இன்னிக்கு வேப்பம்பூ துவையல் செய்யுறது எப்படின்னு பார்ப்போம்...

தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - கைப்பிடி
உளுத்தம்பருப்பு - கைப்பிடி
தனியா ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - அவரவர் தேவைக்கேற்ப
புளி - அவரவர் விருப்பம்
உப்பு 
பூண்டு - நாலு பல்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி.

இதுவே போதும். ஆனா, எங்க வீட்டு பசங்க கசக்குதுன்னு சொல்வதால அதுங்களுக்காக நான் வெங்காயம், தக்காளி, கொஞ்சம் கொள்ளு சேர்த்து அரைச்சுப்பேன். 
வேப்பம்பூவை சுத்தப்படுத்திக்கனும்...

கடாயில் எண்ணெய் ஊத்தி கா. மிளகாய், உளுத்தம்பருப்பு, தனியா, கொள்ளு சேர்த்து சிவக்க வறுக்கனும்..

வெங்காயம், தக்காளி வெட்டி சேர்த்துக்கனும்...

அடுத்து பூண்டு...

அடுத்து உப்பு.
அடுத்து புளி.  புளி கொஞ்சம் அதிகமாவே சேர்த்துக்கலாம். அப்பதான் கசப்பு மறையும்..
அடுத்து தேங்காய் சேர்த்து லேசா வதக்கி.. ஆறவச்சு அம்மில அரைச்சுக்கலாம். நான் இன்னமும் அம்மிலதான் அரைக்குறேன். இப்படி துவையலை அம்மில அரைச்சு முடிச்சதும், சூடான சாதத்துல அம்மில கொட்டி பிசைஞ்சு உருண்டை பிடிச்சு கொடுப்பாங்க அம்மா. அதுக்கு நானும், எங்க அம்மாவோட வளர்ப்பு மகனும் போட்டி போட்டுப்போம். இன்னிக்கு, நானும்  கௌதமும் சண்டை போட்டுக்கிட்டு சாப்பிடுறோம்.  மத்தவங்க மிக்சில அரைச்சுக்கோங்க. துவையல்லாம் ரொம்ப நைசா அரைச்சா நல்லா இருக்காது. கொஞ்சம் கொரகொரப்பா இருந்தால்தான் நல்லா இருக்கும்.

ரசம் சாதம், தயிர்சாதம், கூழ்ன்னு இதை சைட் டிஷ்சா சேர்த்துக்கிட்டா செம ஜோர்..

சூடான சாதத்துல கொஞ்சம் துவையல் போட்டு நெய் சேர்த்து பிசைஞ்சு சாப்பிட்டால்....... யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மீ...

வேப்பம்பூ என்னமோ கசப்புதான். ஆனா அது தரும் பலன் இனிப்பானது, 
அடுத்த வாரம் வேற ஒரு ரெசிப்பியோடு வரேன்.

நன்றியுடன்,
ராஜி.

16 comments:

  1. அருமையான பதிவு.........வேம்பு.......எல்லா விதத்திலும் பலன்/பயன் தரும்.......வேப்ப மர நிழலில் உறங்குவது கூட ஆரோக்கியம் தான்..... நன்றி தங்கச்சி,ரெசிப்பி க்கும்,பதிவுக்கும்..........

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊரில் ஒரு கதை சொல்வாங்க. அதாவது மகன் ஊர் சுத்தி பார்க்க கிளம்பினான். அவன்கிட்ட எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்தாள். அவன் கேக்கலை. சரி எனக்கு ஒரு வாக்கு கொடு. ஊருக்கு போகும்போது புளியமரத்தடியில் படு. வரும்போது வேப்பமரமா பார்த்து படுன்னு சொன்னாளாம்./ அதுமாதிரியே மகனும் செஞ்சான். கிளம்பி கொஞ்ச நாளில் உடம்புக்கு முடியாம போய்டுச்சு. சரி வீட்டுக்கு போகலாம்ன்னு திரும்ப வரும்போது அம்மா சொன்னப்படி வேப்பமரத்தடியில் படுத்துக்கிட்டே வந்தான், ஊர் திரும்பும் நாளில் அவன் உடம்பு சரியாகிட்டுதுன்னு கதை சொல்வாங்க.

      அதாவது வேப்பமரத்து காத்து அவன் நோயை குணமாக்கிட்டுதுன்னு.

      Delete
  2. அந்த கால வாழ்க்கையை அழகாக எழுத்துகளில் கொண்டு வந்து கண் முன்னால் நிப்பாட்டிடிங்க குட்

    ReplyDelete
    Replies
    1. அனுபவம் பேசுதுங்கோ.

      Delete
  3. உகாதிப் பண்டிகையின் போது இந்த வேப்பம்பூ வுடன் வெல்லம் கலந்துபடைத்ததைப்பிரசாதமாகத்தருவார்கள்

    ReplyDelete
    Replies
    1. இங்க எங்க வீட்டில் உகாதி பண்டிகை இல்லப்பா. அதனால தெரியாது

      Delete
  4. துளசி: நல்ல நினைவுகள் சகோதரி. எப்போதுமே பழைய நினைவுகள் இனிமையானவை. அம்மியில் இப்போதும் வீட்டில் அரைப்பதுண்டு. அது போன்று கேஸ் இருந்தாலும் விறகு அடுப்பில் தான் சமையல்..கேரளத்து பெரும்பான்மையான வீடுகளில் உள்ள பழக்கம்..

    கீதா: அம்மியில் அரைத்ததுண்டு. இப்போதும் அவ்வப்போது அரைப்பதுண்டு. துவையல் எல்லாம் கரகர என்று இருந்தால் நன்றாக இருக்கும் வேப்பம்பூ துவையல் பச்சையாகவும் செய்வதுண்டு....கொஞ்சம் நெய்யில் வறுத்தும் செய்வதுண்டு. மோர் ரசம் செய்து, வேப்பம்பூ நெய்யில் வறுத்துக் கொண்டு அதைச் சாதத்தில் பிசைந்துவிட்டு அதில் மோர் ரஸம் விட்டுச் சாப்பிட மிக மிக நன்றாக இருக்கும். இதிலும் நிறைய ரெசிப்பி செய்யலாம்...பதிவு சூப்பர். உங்கள் துவையல் குறிப்பும் குறித்துக் கொண்டேன். ராஜி

    ReplyDelete
    Replies
    1. ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்த உணவுகள்தான். இன்னிக்கும் ஆட்டுக்கல்லில்தான் இட்லி தோசைக்கு மாவு அரைக்குறேன்

      Delete
  5. பயனுள்ள பதிவு சகோ நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  6. வேப்பம்பூ வடகம் அதிகம் எனக்கும் பிடிக்கும். பாடல் இன்னும் மறக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. அதன் செய்முறையை விளக்கி இருந்தால் எனக்கு உதவியா இருக்குமே!

      Delete
  7. வேப்பம்பூ பச்சடி செய்வோம். வேப்பம்பூ ரசம் வைப்போம். துவையல் இதுவரை செய்ததில்லையாக்கும்! பார்க்கறேன்...

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு பாருங்க. பழைய சாதம், தயிர்சாதம், கூழ், ரசம் சாதத்துக்குலாம் டாப்பா இருக்கும். எதும் இல்லன்னா சூடான சாதத்துல நெய்விட்டு பிசைஞ்சு சாப்பிடலாம்

      Delete