Friday, October 30, 2015

விஸ்வாமித்திரர் திருக்கோவில் விஜயாபதி -புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஹலோ சகோஸ்...,

எல்லோரும் நல்லா இருக்கீங்களா??!!

உங்களுக்குலாம் ஒரு நல்ல செய்தியையும், ஒரு கெட்ட செய்தியையும் சொல்லப்போறேன். முதல்ல நல்ல விசயம் என்னன்னா...... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அதிகமா புண்ணியம் சேர்த்துட்டேன் போல!! அதான் கொஞ்ச நாளாய் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிட்டலை. ஆனா, நமக்கு புண்ணியம் கிடைக்கலைன்னாலும் மத்தவங்களுக்காவது கிடைக்கட்டும்ன்ற நல்ல எண்ணத்துல முன்ன்னாடி போய்ட்டு வந்த கோவில்களைப் பற்றியாவது
எழுதலாம்ன்னு சிஸ்டமை தூசி தட்டி டைப்பி பதிவிட்டாச்சு.

சரி, நல்ல விசயம்தான் ராஜி. அந்த கெட்ட விசயம்  என்னாச்சுன்னு  நீங்க ஆவலாய் கேக்குறது எனக்கு கேட்டுடுச்சு. அது என்னன்னு பதிவோட கடைசில சொல்றேன்.... இனி பதிவுக்குள் போகலாம்.....,

இராமாயண கால சிறப்பு பெற்றதும்,  நவக்கிரக பரிகார ஸ்தலங்களுள் ஒன்றான  கூடம்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற ஊரில் அருள்புரியும். அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலை பத்தி இப்பப் பதிவில் பார்க்கலாம்.  இக்கோவிலின் மிக முக்கியமான சிறப்பு என்னன்னா.., விஸ்வாமித்திரருக்கென தனிக்கோவில் தமிழகத்துலயே இங்குதான் இருக்கு.
கலியுகமான இக்காலத்தில் வாழும் நமக்கு நிமிடத்திற்கு நிமிடம் பிரச்சனைதான். என்றைக்கு பிரச்னை என்ற ஒன்று வந்ததோ அன்றே தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் செய்யப்படும் நவக்கலச அபிஷேகம் நவகிரகங்களின் தோஷங்களில் இருந்து விடுபடச் செய்கிறது .

விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். .ஆனால், விஸ்வாமித்திர மகரிஷி இழந்த தன் சக்தியை மீட்டெடுக்க வேண்டி தேர்ந்தெடுத்த இடம்தான் இந்த விஜயாபதி. கடற்கரை கிராமமான இந்த விஜயபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் வழியாக சென்று. அங்கிருந்து ராதாபுரம் வழியாக சென்றால், அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  கடற்கரை கிராமமான இந்த விஜயாபதி, கூடங்குள அணுமின் நிலையத்திலிருந்து வெறும் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில் என்பது கூடுதல் தகவல்.
இதுதான் திருக்கோவிலின் முகப்பு, கோவிலினுள் நுழையும் முன்பு இந்த கோவிலின் சிறப்புகளையும், ஸ்தல வரலாற்றையும் பார்க்கலாம்....,

இராம, லட்சுமணன் இருவரும் விஸ்வாமித்திரனின் யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை மற்றும் சில அரக்கர்களை கொன்றனர். அதனால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதை தீர்க்க ஒரு யாகம் செய்ய இடம் தேடி அலைந்து, முடிவில் தில்லைவன காடான சிதம்பரம் வந்து காளியை பிரதிஷ்டை செய்தார்கள். பொதுவா இந்த மாதிரி பரிகாரங்கள், நீத்தார் கடன்லாம் கடலோரங்களில் தான்  நடத்தவேண்டும் எனபது மரபு. சிதம்பரம் அருகில் கடல் இல்லாததால இராம, இலட்சுமணனோடு தெற்கு நோக்கி வந்தார் விஸ்வாமித்ரர். பின்பு, அதேப்போல தில்லைவனம் இங்கே இருப்பதை கண்டார் .உடனே அங்குள்ள தில்லைவன தோப்பில் காளியை பிரதிஷ்டை செய்து காவல் தெய்வமாக்கினார். பின்னர் ஹோமக்குண்ட விநாயகர், விஸ்வமிதிர மகாலிங்க சுவாமி, அகிலாண்டேஸ்வரி ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்தார்.  பின்னர் ஹோம குண்டம் வளர்த்து இராம, லட்சுமணனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினார்.

ஹோமம் முடிந்த உடன் அருகில் உள்ள கடலில் குளித்து இருவரையும் அங்க பிரதட்சனை செய்ய வைத்து, தானும் அங்க பிரதட்சணம் செய்து இராம, லட்சுணனரின் தோஷத்தையும், தான் இழந்த சக்தியையும் மீட்ட இடம்தான் இது. இன்றும் அவர் குளித்த இடம் விஸ்வமித்திரர் தீர்த்த கட்டம் என்று அழைக்கப்படுகிறது .
நாம பேசிட்டே இப்ப கோவிலின் உள்பக்கமா வந்துட்டோம், இதுதான் மூலவர் சன்னதி. முதலில் பலிபீடம், அதனை அடுத்து நந்தி. இவை ஒரே நேர்கோட்டில் விஸ்வாமித்திர மகாலிங்க  சுவாமியை நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.  சமீபத்துலதான் தரை பகுதிகள்லாம் டைல்ஸ் பாதிக்கப்பட்டு தூண்கள், சுவர்கள்லாம் மிகவும் சுத்தமாக காட்சியளிகின்றன. இந்த கோவிலின் பெருமை தெரிந்து பக்கதர்கள் நிறைய வர தொடக்கி விட்டனர்.   இக்கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னனா இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெறத் தகுதி பெற்றார்.
இது கோவிலின் உட்பிரகாரம். இங்கே செய்யும் பரிகாரங்கள் கண்கூடாக பலிக்கின்றது.  முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடம் இந்த விஜயாபதி என்றும் சொல்வார்கள்.  ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கிருக்கும் விஸ்வாமித்ர தீர்த்த கட்டத்தில் குளித்து, அருகில் இருக்கும் தில்லைக்காளி கோவிலில் பொங்கல் வைத்து வழிப்படுவர். அந்த வழிபாடு பலருக்கும், பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் உடனடியாக நிவாரணமும் கிடைத்து இருக்கிறது. இராமரும் லட்சுமணரும் தாடகையை வதம் செய்ததால் அவர்களுக்கு பிரம்மஹத்தி   தோஷம் பிடித்தது. அவர்களுக்காக விஸ்வாமித்ர மகரிஷி இங்கே யாகம் செய்தார், அவதார புருசர்களே ஆனாலும், அவர்களும் நவக்கிரக தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது போலும், யாகம் செய்து முடித்ததும் விஸ்வமித்திரர் வடநாடு சென்றுவிட்டார்அவர் தங்கிய இடம் இது என்பதால் இந்த இடம் விஸ்வாமித்திரர் பேரி என அழைக்கப்பட்டது. விஸ்வாமித்திரர் பிரதிஷ்டை செய்த சிலைகளைப் பற்றி கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் இங்கே கோவில்கட்டி தன்னுடைய மீன்சின்னத்தை இரட்டை மீன்களாக  கோவிலின் உள் முகப்பில் பொறித்தான்.  அதை இப்பொழுதும் நாம் காணலாம்....,     
விஜயாபதி மேலூர், விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கின்றன. ஒருக்காலத்தில் விஜயாபதி பெரிய ஊராக இருந்திருக்கிறது. தேரோடும் வீதி அக்ரகாரம், ஓதுவார் குடியிருப்புகள், அரண்மனை போன்ற வீடுகள் எல்லாம் இருந்திருக்கின்றன.  பல ஆயிரம் ஆண்டுகளாக உலகத்தின் முக்கியத் துறைமுக நகரமாக விளங்கியிருக்கிறது. விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.

ஆகமொத்தம் இக்கோவிலும், கிராமமும் யுகங்கள் பல கடந்து இந்திருக்கின்றன. பின்னர் எக்காலத்திலோ அவையெல்லாம் அழிந்து விட்டன. தில்லைவன தோப்பும் அழிந்து விட்டது, இப்பொழுது இரண்டு தில்லை மரங்களுடன், இலங்கையை நோக்கி பார்த்தபடி தில்லைவன காளி மட்டும் கடற்கரை பக்கம் காவல் இருக்கிறாள். தமிழ்நாட்டில் வேறு எங்கும் தில்லை மரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.இந்த கோவிலுக்கு வருவது மூலம் ஒருவருடைய குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும்,  மாதந்தோறும் அனுஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம், புஷ்பாஞ்சலி, அன்னதானம் எல்லாம் நடைபெறுகிறது. இன்றும் இங்கு விஸ்வாமித்திர மகரிஷி சூட்சுமமாக தவம்  செய்து வருகிறார்  என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

























இங்கு நடைப்பெறும் முக்கியமான பரிகாரம் என்னன்னா நவக்கலச பூஜை. பழையக் காலத்தில் ஒருவருக்கு தீட்சை கொடுப்பதற்கு முன்  புனிதப்படுத்துவது என்ற சடங்கு நடைப்பெறும். சோதிடமுறை பரிகாரங்களில் அருவிக்கரையிலோ இல்ல நதிக்கரையிலோ ஒன்பதுவிதமான கலசங்களில் ஒன்பதுவிதமான நறுமணப்பொருட்கள் வைத்து, அந்தந்த கிரகங்களுக்கு உகந்த வண்ணங்களும், பூக்களும் அந்த கலசங்களில் இடப்பட்டு எல்லாவித மந்திரங்களும் முக்கியமாக அந்தந்த கிரகங்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லி அந்தக் கலச நீரை தலையில் ஊற்றுவார்கள். அதன்பின் நட்சத்திரங்களைக் கணக்கில் கொண்டு,  27 குடம் தூய்மையான இடத்தில் இருந்துக் கொண்டு வரப்பட்ட நீர் ஊற்றி, உடலையும், மனதையும்  நவகிரகங்களின் பாதிப்பில் இருந்து சுத்தபடுத்தி குருசிஷ்ய தீட்சைகளை கொடுப்பார்கள். காலப்போக்கில் இன்று இவை மறைந்துவிட்டன. ஆனால் அதே பரிகாரமுறை இந்த கோவிலில் இன்றும் செய்யப்படுவது மிகவும் சிறப்பு.  பல ஜோதிட வித்வான்கள் இங்கே வந்து பிரபலங்கள் சிலருக்கு இந்த நவக்கலச பூஜையை செய்து முடித்ததும், அதற்குண்டான பலன்களை அவர்கள் எட்டு நாட்களில் அனுபவித்ததும் இங்குள்ளவர்கள்  கண்கூடாக கண்டிருக்கிறார்கள்.
இதுதான் கோவிலின் உட்பிரகாரம்.  மூலவருக்கு நேர் எதிரே சந்திர சூரியரும், கோவிலின் நுழைவாயிலுக்கு வலப்பக்கத்தில் நவக்கிரகங்களும், வீற்றிருக்கின்றனர். நவக்கிரகப்பீடத்தை ஒட்டி ஒரு சிறிய தீர்த்தக்ணறு படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரத்தில் இருந்தாலும் உப்பிலாத தண்ணீர் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து கிடைக்கிறது. திருக்கோவிலில் நாம் நம்முடைய பெயரைப் பதிவு செய்தால் குறைந்த செலவில் நவக்கலச யாகம் செய்கின்றனர்.
சரி, இப்ப நவக்கலச பூஜை எப்படி நடத்தப்படுகிறது என பார்க்கலாம்... நவக்கலச பூஜை செய்யும் முன்பு, நாம் காலையில் நீராடி சுத்தமான உடைகளை உடுத்தி வரவேண்டும். வாய்ப்புள்ளவர்கள் தங்கள்  வீட்டில் இருந்து வெண்பொங்கலோ, இல்ல சர்க்கரை பொங்கலோ செய்து இங்கே இருக்கும் நாகர்களின் பீடத்தில் தங்களுடைய முன்னோர்களின் ஆன்ம விடுதலைக்கும், தங்களுடைய நவக்கிரக துன்பங்கள் தீரவும் முன்னோர்களையும், குலத்தெய்வங்களையும், விஸ்வாமித்திர மகரிஷியையும், இங்கிருக்கும் இறைவனையும், தாயாரையும் பிரார்த்தனை செய்து..., அவற்றை ஒரு இலையில் வைத்து காகங்களுக்கு படைக்கலாம்.

வாய்ப்பில்லாத  வெளியூர்  பக்தர்கள் ஒரு பிரட் மற்றும் பூந்தியினை சிறிய துண்டுகளாக்கி கலந்தும் படைக்கலாம். சிலர் காகங்கள் வரவில்லை நம் முன்னோர்கள் ஏற்று கொள்ளவில்லையோ என நினைக்கும் போது இங்கிருக்கும் சில பைரவர்கள் அதை சுவைக்க ஆரம்பித்துவிடுவார். அவற்றை உண்டப்பிறகு திருப்தியடைந்து அடுத்த நிலை பூஜைக்கு தயாராகிறார்கள்.  
இனி, இங்கே நடக்கும் பூஜை முறைகளை பற்றி பார்க்கலாம்...., ஒன்பது கலசங்களில் ஒன்பது விதமான பொருட்களை நிரப்புகின்றனர். அவை, பால்,  பன்னீர்,  இளநீர்,  மஞ்சள் பொடி,  சர்வோதயா ஸ்நானபொடி, வெட்டிவேர், சந்தனம்,  விபூதி, குங்குமம். இவற்றை ஒரு குடத்துக்கு ஒன்று வீதம் விட்டு நீர் கலந்து அந்தந்த கிரகங்களூக்குரிய குடங்களை   நவகிரகங்களைப்  போல் அதன் வரிசைப்படி மூன்று வரிசைகளாக வைக்கவேண்டும்.  பின்னர், நடுவில் இருக்கும் குடத்தின் மீது மட்டும் மாவிலையோடு, ஒரு தேங்காயை வைத்து, பரிவட்டம் கட்ட வேண்டும்.
இங்கு கலசங்களுக்கு நூல் சுற்றப்படுவதில்லை, ஜவ்வாதுவை எடுத்து குடங்களின் உள்ளும், புறமும் சிறிது தூவவேண்டும், யாருக்கு நவகிரக சாந்தி செய்யபடவேண்டுமோ அந்த நபரை அங்கே இருக்கும் கலசங்களின் முன்பு கிழக்கு பார்த்து இருக்குமாறு அமரச் செய்கிறார்கள். கலசங்களுக்கு சிறிது தள்ளி பட்டர் அமர்ந்து நவகிரக சாந்தி மந்திரங்களையும், குடங்களுக்குள் தெய்வங்களை வரவைக்க தெய்வ ஆகர்ஷன மந்திரங்களையும் ஓதுகின்றனர்.

எந்த எந்த நவகிரக மந்திரங்களை பட்டர் ஒதுகின்றாரோ  அந்தந்த நவக்கிரக ராசி குடங்களுக்கு அந்த நவகிரகங்களுக்குரிய நிறங்களில் உள்ள பூக்களை அந்தந்த கலசங்களில் மேல் இடவேண்டும். இப்படி எல்லா மந்திரங்களும் முடிந்தவுடன் கோவிலின் பின்பக்கம் இருக்கிற வில்வ மரத்தினடியில் பரிகாரம் செய்யும் நபரை உட்கார செய்து பட்டர் மந்திரம் சொல்லியப்படி ஒவ்வொரு குடமாக, ஒன்பது குடங்களையும் நவ அபிஷேகமாக பரிகார நபரின் தலையில் விடுகிறார். அதன் மூலம் சந்பந்தபட்ட நபரின் உடலும்,உள்ளமும் தூய்மை அடைந்து அவரை பிடித்த தோஷங்கள் யாவும் நிவாரணம் அடைகின்றன. அவர்களுக்கு ஏற்பட்ட தடைகளும்  நீங்குகின்றன  என்பது ஐதீகம்.
இதுதான் தாயார் சன்னதி, அகிலாண்டேஸ்வரி அம்பாள், நவக்கலச பூஜை செய்து முடித்தப்பிறகு மூலவருக்கும், தாயாருக்கும் அர்ச்சனை செய்யப்படுகிறது. பின் இங்க இருக்கும் மற்ற தெய்வங்களையும் தொழுதுவிட்டு கோவிலினுள் மூலவருக்கு நேர் பின்பக்கம் சக்திபீடம் என அழைப்படும் சன்னதி இருக்கிறது. இது இங்கே ஒரு சித்தர் ஜீவசமாதியானார் எனவும் சொல்லப்படுகிறது. இதன் வெளிப்புறம் இராஜேஸ்வரி பீடம் என எழுதப்பட்டு இருக்கு, சமாதியின் மேல் இருக்கும் பீடத்தில், திருப்பாதங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது விஸ்வாமித்திரருடைய சமாதியா இல்லை இங்கே தங்கி இருந்த வேறு சித்தரின் சமாதியா என இங்கிருக்கும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. ஆனால், சுற்றி இருக்கும் கிராம மக்கள் இந்த சமாதியினை கும்பிட்டுவந்தால், நிறைய அற்புதங்கள் நம் கண்கூடாகவே நடப்பதாக கூறுகிறார்கள்.  இந்த சமாதியில் வந்து தியானம் செய்பவர்களுக்கு, மெல்லிய தோற்றத்தில் நீண்ட ஜடாமுடியுடனும், கோவணத்துடனும், நல்ல ஆஜானுபவமாக ஏழு அடி உயரத்துடனும் காட்சி கொடுத்ததாகவும் பல பக்தர்கள் கூறுகிறார்கள்.
நாம பார்க்கிற இந்த சன்னதிதான் விஸ்வாமித்திரர் சன்னதி.  இந்த விஸ்வாமித்திரர் இந்தியாவின் பிரம்மரிஷிகளில் ஒருவர்.  இவர் குசநாபரின் மகன் கௌசிகன் என்னும் மன்னராவார்.  இவர் வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர்.  இவர் காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாக கருதப்படுகிறார். புராணங்களின்படி ஆதி முதல் 24 ரிஷிகளே முழு ஞானத்தையும் சக்தியையும் பெற்றவர்களாக இருந்தாக கூறப்படுகிறது. அதில் விஸ்வாமித்திர முனிவரும் ஒருவர் அப்படிப்பட்ட விஸ்வாமித்திரரின் சன்னதி தான் இது. வாங்க உள்ளே செல்லலாம்...,
கடுமையான வெயில் காலங்களில் வெயில் தாக்காமல் இருப்பதற்காக தென்னை ஓலையால் பின்னப்பட்ட கீத்துகள் கொண்டு திறந்த இதன் மேற்பரப்பை வெயில் படாதவாறு அடைத்து கட்டியுள்ளனர். எனக்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் விஸ்வாமித்திரருக்கு தனிக்கோவில் இல்லை. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. தெரிஞ்சுக்குறேன்...
நவக்கலச பூஜை செய்ய வருபவர்கள் இங்குள்ள விஸ்வாமித்திரர் சன்னதியிலும் ரோஜா மற்றும் மல்லிகை மாலைகள் கொண்டும்,  பழங்கள், இனிப்புகள் எல்லாம் தட்டில் வைத்து வழிப்பட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனையும் செய்கின்றார்கள். இங்கே ஒரு தனி அறை இருக்கிறது.  அதை பூட்டியே வைத்து உள்ளனர்.  குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அதை திறந்து பூஜை செய்வார்களாம். இங்க விஸ்வாமித்திர மகரிஷி அரூபமாக தவம் செய்து கொண்டு இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.
இதுதான் விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த ஹோமகுண்டம் இருந்த இடம் என சொல்லப்படுகிறது. இப்பொழுது அவ்விடம் கிணறாக காட்சியளிக்கிறது. இந்த கிணற்றைத் தோண்டி பார்த்ததில் நிறைய சாம்பல்கள் கிடைத்தனவாம். ஆனால் அவையெல்லாம் கட்டியாகி பல அடுக்குகளாய் பாறைகள் போல இருகிவிட்டதாம், அவற்றை எல்லாம் மேலை நாட்டினர் சிலர் கொண்டு சென்று ஆராய்ச்சிகள் செய்ததாகவும் அதன் வயது இராமர் பாலத்தின் வயதை ஒத்ததாக இருக்கிறது எனவும் இங்கே உள்ளவர்களால் சொல்லப்படுகிறது. இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்! கடற்கரையிலிருந்து பார்த்தால் கூடங்குளம் அணுமின் நிலையம் தெரிகின்றது.
இந்த ஹோம குண்ட கிணற்றில் இருந்து சிலர் தீர்த்தம் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். சரி இனி நவக்கலச அபிஷேகம் முடிந்தவுடன் அதே ஈரத் துணியுடன் ஒரு பர்லாங்கு தொலைவில் உள்ள கடலுக்கு சென்று அங்கே விஸ்வமித்திரர் தீர்த்த கட்டம் என்ற இடம் சென்று கடலில் குளிக்கவேண்டும். பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடல் மண்ணில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும் ,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் சிவ மந்திரம் ஜபித்தவாறே) உருள வேண்டும். அதன் பிறகு ,மீண்டும் கடலில் சென்று மூன்று முறை மூழ்கி எழவேண்டும். இப்படியாக மூன்று முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்த பின்னர், கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு, அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார். நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,(வேறு ஆடை அணிந்துவிட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும். இங்கே ஈர ஆடைகளுடன் இருந்ததாலும் கூட்டத்தில் பெண்களும் இருந்ததாலும் கடற்கரையில் நடந்த பூஜைகளை படம் எடுக்கவில்லை .
இது ஹோமகுண்ட கிணறு. இதனுள்ளே  ஏதோ சிலைகள் தெரிகின்றன. சரி இனி கடற்கரை பூஜைகள பற்றிப் பார்க்கலாம். பின்னர் கடைசியாக உடலில் உள்ள மணல் போக நன்றாக குளிக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னன்னா இங்க அலைகள் மிகவும் அகோரமாக இருக்கும் பெண்கள் சிறுவர்கள் எல்லாம் தக்க துணையுடன் கடலில் நீராடுவது நலம், அதேப்போல அலைகள் அடிக்கிற வேகத்தில் சிலருக்கு கழுற்றில் இருக்கும் செயின் அடித்து சென்றுவிட்ட சம்பவங்களும் உண்டு. ஆகையால் செயின்களை பத்திரமாக கழற்றி வைத்தோ இல்லை பாதுகாப்பு செய்தோ நீராடவேண்டும். பின்னர் கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் நடந்துவர வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
இதுதான் ஹோமகுண்ட கணபதி சன்னதி. இனி தில்லைவன காளியம்மனுக்கு செய்யவேண்டிய பூஜை முறைகளை பற்றி பார்க்கலாம். இந்த தில்லைவன காளி அம்மனுக்கு மாலை ஐந்து மணிக்குதான் பூஜைகள் தொடர வேண்டும் என்பது ஐதீகம். ஒரு ரோஜா அல்லது செவ்வரளி மாலை, தேங்காய், பூ, பழம் வெற்றிலை, பாக்கு, பத்தி, சூடம் என கொடுத்து நெய்தீபமேற்றி பரிகாரம் செய்யவேண்டிய நபருக்கு அர்ச்சனை செய்யவேண்டு. தில்லை வனகாளிக்கு கொய்யாபழம் 108 மற்றும்  108 ஒருரூபாய் நாணயங்கள் மற்றும் இனிப்புகள், எள்ளுருண்டை, பழங்களை வைத்து பூஜைகள் செய்யவேண்டும். பின்னர்அந்த பழங்களையும், நாணயங்களையும் எள்ளுருண்டைகள் சேர்த்து அங்கிருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்துவிடவேண்டும். பின்னர் கோவிலில் பூஜைகள் செய்பவர்களுக்கு அவர்கள் மனம் சந்தோஷப்படும் அளவுக்கு தட்சணைகள் கொடுத்து தட்சினாதேவியை திருப்தி படுத்தவேண்டும்.
இந்த விஜயாபதி ஒரு பரிகார ஸ்தலம் ஆகும். அதனால் இங்கு பித்ரு தர்ப்பனமும் செய்யலாம்,  நவக்கலச பூஜையை பகல் 12 மணிக்கு மேல் இறங்கு பொழுதுதில்தான் செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறத.. நவக்கலச யாகம் முடிந்ததும் உடனே, வேறு எந்த கோவிலுக்கும், யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக தங்களுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும். இப்படிச் செய்வதால், நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும். இந்த தோஷங்களில் பிரேத சாபம், நவக்கிரக சாபம், குரு சாபம், குலத்தெய்வ சாபம் நீங்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இங்கு செய்யப்படும் பூஜையின் பலனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவக்கிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்

1. தீராத கர்ம வியாதிகள், ஆயுள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்

போன்ற பிரச்சனைகள் நூறு சதவீதம் தீர்ந்து விடுகிறது என இங்கே பூஜை செய்தவர்கள் கூறுகின்றார்கள். எது எப்படியோ நாமும் ஒரு பழமையான வரலாற்று தொடர்புடைய திருக்கோவிலை தரிசித்த புண்ணியத்தோடு இலங்கை நோக்கி இருக்கும் தில்லைவனகாளியையும், விஸ்வாமித்ர மகரிஷியையும், மகாலிங்கேஸ்வரையும், அன்னை அகிலாண்டேஸ்வரியையும் தரிசித்துவிட்டு மீண்டும் புண்ணியம் தேடி பயணத்தில் மற்றுமொரு கோவிலில் இருந்து சந்திக்கலாம் .


ஹேய் ராஜி
நில்லு. அந்த கெட்ட சேதி என்னன்னு சொல்லிட்டு போம்மான்ற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடுச்சு.
அந்த கெட்ட சேதி என்னன்னா  .....,
இனி,   அடிக்கடி இத்தளத்தில் பதிவுகள்  வரும்.....