Tuesday, March 31, 2020

வீட்டிலேயும் செய்யலாம் ரிங் முறுக்கு -கிச்சன் கார்னர்

யானை அசைஞ்சு தின்னும்.. வீடு அசையாம தின்னும்..ன்னு பெரியவங்க சொல்வாங்க. அதுல, வீட்டில் அடைஞ்சு கிடக்கும் பிள்ளைகள் அசைஞ்சும், அசையாமலும் தின்னும்ன்னு சேர்த்துக்கலாம் போல! பண்டம் செஞ்சு மாளலை.

Monday, March 30, 2020

காடுகளின் தாய் எதுவென தெரியுமா?! -ஐஞ்சுவை அவியல்

என் ஃப்ரெண்ட் ராஜி பையனுக்கு காய்ச்சல், தொண்டை வலின்னு இருந்திருக்கு. இப்பதான் ஊரெல்லாம் கொரோனான்னு அலறிக்கிட்டு இருக்கே. அவ பையன் வேற கடந்த 15 நாளில் மூணு முறை ஏர்போர்ட்டுக்கு போய் வந்திருக்கான். பதட்டத்துக்கு சொல்லவா வேணும்?! அலறி அடிச்சுக்கிட்டு ஹாஸ்பிட்டல் கொண்டுபோனா சாருக்கு ஒரு ஊத்தப்பம்ன்னு வடிவேலு காமெடிப்போல டெம்ப்ரேச்சர்கூட பார்க்காம பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து விட்டிருக்காங்க.

Sunday, March 29, 2020

சின்னக்குயில் சித்ராவின் முதல் பாட்டு இதுவா?! - பாட்டு புத்தகம்

சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா?!.. பூவே பூச்சூடவா படத்துல வரும் பாட்டு. பாடகி சித்ரா பாடியது. அவரோட முதல் பாடல் அதுதான்னும், அதனால்தான் சித்ராக்கு அடைமொழியா சின்னக்குயில்ன்னு வச்சிருக்கிறதா நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, சமீபத்துலதான் தெரிஞ்சது, சித்ரா பாடிய முதல் பாட்டு நீதானா அந்தக் குயில் படத்துல வரும் பூஜைக்கேத்த பூவிது... பாட்டுன்னு...

Saturday, March 28, 2020

முட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா?! - கிராமத்து வாழ்க்கை

என்னதான் இன்னிக்கு வீட்டிலிருந்தே ஆர்டர் பண்ணி நினைச்சதை வாங்கமுடியும்ன்ற நிலை இருந்தாலும், அன்னிக்கு நாலனா கொடுத்து வாங்கி அனுபவிக்க முடியாமால் போன நிறைய விசயங்கள் இருக்கு. மத்திய வயதினர் அனுபவித்த அல்லது அனுபவிக்காமல் விடுபட்டவற்றின் தொகுப்பே இந்த கிராமத்து பதிவு தொடர்...

 கைக்கு கிடைக்கும் அனைத்துமே விளையாட்டு பொருளா மாத்தும் கெப்பாக்குட்டி 70/80 கிட்ஸ்க்கு உண்டு.  நிலைமை இப்படி இருக்க நாம மிட்டாயை மட்டும் விட்டுடுவோமா?! படத்துல பார்க்குற இந்த மிட்டாய் பத்து காசு கொடுத்து வாங்கி இருக்கேன். கயிற்றின் ஒரு முனை இடது ஆட்காட்டி விரல்லையும், இன்னொரு முனையை வலது ஆட்காட்டி விரல்லயும் சுத்திக்கிட்டு சுழட்டி, சுழட்டி விளையாடுவோம். மிட்டாய் உடைஞ்ச பிறகுதான் அதை சாப்பிடுவோம். இதேமாதிரி கோல்ட் ஸ்பாட் மூடி, மருந்து பாட்டில் மூடிலயும் செய்து விளையாடி இருக்கோம்.
உடல்வலி, மூட்டு வலி, சிறுநீர் பெருக்கியாக, புற்றுநோய்க்கு மருந்தாக.. இப்படி பலவகைகளில் பயன்படும் மூலிகை வகையை சேர்ந்ததுன்னு தெரியாது. இதுக்கு பேரே இத்தனை நாள் தெரியாது. சொடக்கு தக்காளின்னு இன்னிக்குதான் தெரியும்.  இந்த காயை உடைச்சு விளையாடுறதும், பழத்தை சாப்பிடுறதுன்னு இருந்திருக்கோம்.  இதோட இலையை பறிச்சா ஒரு திரவம் சுரக்கும். அதை ஊக்குல நிரப்பி ஊதினா பப்பிள்ஸ் வரும். 
வசதியானவங்க மட்டுமே குடிச்சுட்டு வந்த கூல் டிரிங்கை ஏழை மக்களும் சாப்பிட ஆரம்பிச்சது இந்த ரஸ்னாவிலிருந்துதான். மேங்கோ, ஆரஞ்ச், லெமன்னு மூணு தினுசா வந்துச்சு. ஐஸ் போடலைன்னாலும் பானை தண்ணில கலந்து  குடிச்சிருக்கோம்.  ரஸ்னாவின்  துணையோடு ரஸ்னா விளம்பரத்துல வந்த பாப்பாவின் கண் இன்னும் நினைவில் இருக்கு. 
ரஸ்னா விளம்பரம்...
புவியியல் பாடத்தில கொஸ்டின் பேப்பரோடு உலக /இந்தியா மேப் கொடுப்பாங்க. கண்டங்களை/ மாநிலங்களை குறிக்க சொல்வாங்க. இருக்குறதுலயே ரொம்ப ஈசியான கேள்வி. இதுக்கு பத்து மார்க்.  

சீயக்காய், பச்சை பயறு, அரிசி, வேப்பம்பூ, வெந்தயம், எலுமிச்சை/ஆரஞ்சு தோல், பூவந்தி கொட்டை, செம்பருத்தி இலை/பூ... இதுலாம் காய வச்சு அரைச்சு தலையில் தேய்ச்சு குளிச்ச காலத்தில் எங்கோ ஒருத்தருக்கு இருந்த பொடுகும், முடி உதிரும் பிரச்சனையும் எல்லாருக்கும் கொண்டு வந்ததில் இந்த ஷாம்புக்கு முதலிடம் உண்டு.  கறுப்பு, மல்லிகை, ரோஜான்னு தினுசு தினுசா வந்துச்சு.  மக்களின் சோம்பேறித்தனத்தை  நல்லா பயன்படுத்திக்கிட்டாங்க. விளைவு வீடு முழுக்க தலை முடி, எலிவால் பின்னல், வழுக்கை தலை... சீயக்காய் போட்டு குளிச்சா பட்டிக்காடுன்னு சொன்ன காலம் போய் எங்க ஷாம்புவில் சீயக்காய் இருக்கு, எலுமிச்சை இருக்குன்னு கூவுறாங்க.
ராஜா ராணி, செட் சீட் மாதிரி நோட் புக்கில் இருவர் விளையாடும்  விளையாட்டு.. 10,20,30,45, 60ன்னு எதாவது ஒரு எண்ணிக்கையில் புள்ளியை தேர்ந்தெடுப்பாங்க. உதாரணத்துக்கு 25 புள்ளி 25 வரிசைன்னு வச்சுக்கிட்டு, முதல்ல ரெண்டு புள்ளிக்கு இடையில் முதல் ஆள் நேர்கோடு போடுவாங்க..  அடுத்த ஆள் இன்னொரு கோடு போடுவாங்க. இப்படியே போட்டுக்கிட்டு வர நாலு பக்கமும் கோடு போட்டு பெட்டி வந்தால் அதில் அவங்க பேரை எழுதினா ஒரு பாயிண்ட். கோடு போடும்போது பாக்ஸ் போட்டால் அதுக்கடுத்து அவங்களேதான் கோடு கிழிக்கனும். இல்லன்னா அடுத்தவங்க போடுவாங்க. 
எங்க வீட்டில் நாய், பூனை, மாடு, ஆடுன்னு எதும் வளர்த்ததில்லை. ஆனா, எப்பவாவது அம்மா, கோழி மட்டும் வாங்கி வளர்த்திருக்காங்க. கோழி காலில் நூல் கட்டி நாலு இல்ல அஞ்சி நாள் வீட்டிலேயே கட்டி வைப்பாங்க.  பிறகு கோழியை அடுப்பை மூணு  முறை சுற்றி வெளியில் விடுவாங்க. மாலையில் கரெக்டா வீட்டுக்கு வந்திரும். இருட்டின பிறகும் வரலைன்னா கோழிய நாம மறந்திடனும். கோழி முட்டை போடும் நாள் வரும்போது, வெளியில் போகவே போகாது. எதாவது ஒரு மூலையில் உக்காந்துக்கும். அப்பவே புரிஞ்சுக்கிட்டு கூடையை பாதி கவுத்தி வச்சால் அதுக்குள் போய் முட்டை போடும்,

கோழியை பத்தி விட்டுட்டு அந்த முட்டையை கையில் எடுக்கும்போது முட்டை இதமான சூட்டில் இருக்கும். இப்படியே பத்து இல்ல பதினைஞ்சு முட்டைகளை போடும். தின்னது போக அம்மா கொஞ்சம் முட்டைகளை சேமிச்சு வைக்கும். முட்டை இட்டு முடிச்சதும்  ஓரிடத்தில் மண்ணை குமிச்சு, அதன்மேல் லேசா வைக்கோல் வச்சு, அதன்மீது முட்டைகளை வச்சா, கோழி அதன்மேல் உக்காந்து அடை காக்கும். கோழி எங்காவது போகும்போது நாம அந்த பக்கம் போனாலே நம்மை தாக்க வரும். முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வந்தால் அது கீச்கீச்ன்னு கத்துற சத்தமிருக்கே! அடடா!! ஹூம்ம்ம்ம்ம் அதுலாம் ஒரு பொற்காலம்!!

கொசுவர்த்தி மீண்டும் ஏற்றப்படும்...

நன்றியுடன்,
ராஜி


Friday, March 27, 2020

மிளகாய் விழுதை உடலில் பூசி அருள்வாக்கு சொன்ன ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி-பாண்டிச்சேரி சித்தர்கள்

ஆணுக்கு பெண் சளைத்தவலல்ல! என்பதை ஆன்மீகத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கு. பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் இன்றைக்கு நாம பார்க்கப்போறது ஒரு பெண் சித்தரை பற்றி... ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி. இவரின் ஜீவசமாதி பாண்டிச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊரில் இருக்கு..

Thursday, March 26, 2020

பழைய புடவையை கால் மிதியடியாய் மாற்றலாம்!! -கைவண்ணம்

முன்னலாம், ஒரிரு வருசத்துல சாயம் மக்கி கிழிஞ்சு போகும். ஆனா, இப்ப அப்படியில்ல. எத்தனை வருசமானாலும் புடவையின் சாயமும் போறதில்லை. கிழியுறதுமில்ல! 

Wednesday, March 25, 2020

தமிழர்களும் கொண்டாடும் யுகாதி பண்டிகை


ஆந்திரா, கர்நாடகம், மற்றும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி என்றழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு. இதை உகாதி எனவும் சொல்வார்கள். மகாராஷ்டிர மக்களால் குடிபாட்வா என்றும், சிந்தி மக்களால் சேதி சந்த்  என்றும் கொண்டாடப்படுது.  யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். யுகத்தின் தொடக்கம் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் இவ்வாறு அழைக்கப்படுது.   சைத்ர (சித்திரை)  மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த  உலகத்தை படைத்ததாக பிரம்மபுராணத்தில் கூறப்படுது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிக்கின்றது.
 சம்ஹத்தர கௌரி விரதம் என்ற விசேஷ விரதம் அனுஷ்டிக்கப்படுது. நாம் எல்லோரும் வேத வராகக் கர்ப்பத்தில் இருக்கிறோம். அந்தக் கர்ப்பம் தொடங்கிய நாளும் தேவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் பன்னிரெண்டு ராசிகளில் நிற்பதைக் குறிக்கும் வகையில் சௌரமான மாதங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அதேப்போல் சந்திரன் நிற்கின்ற ஒரு மாதத்தின் நட்சத்திரத்தை வைத்து சாந்திரமான மாதங்கள் என்று தெலுங்கு சம்பிரதாயத்தில் குறிப்பிடப்படுகிறது.

யுகாதியின் சிறப்பு

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.
பொதுவாய் யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில்  கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

இனி பண்டிகை கொண்டாடும் முறை;

இப்பண்டிகைக்கும் , நமது தமிழ் வருடப்பிறப்பு கொண்டாட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.   காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் - ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். பின், ஏழை எளியோருக்கு நிவேத்திய பொருட்களை கொடுப்பது வழக்கம்.
பஞ்சாங்கம் படித்தல்; 

யுகாதி பண்டிகையை வரவேற்று ஒரு துதி கூறிய பிறகு அந்தந்த மாதத்தின் பலனைக் குடும்பத் தலைவர் படிப்பார். இந்த ஆண்டின் இயற்கை வளம், மழைப் பொழிவு, அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் நன்மை, ஆட்சியாளர்களின் நிலை, நட்சத்திரங்களின் அடிப்படையில் முற்பாதி, நடுப்பகுதி, பின்காலப் பலன்கள், ஆண்டின் கந்தாய பலன்கள், நவக்கிரகங்கள் எந்தெந்த பொறுப்பில் இந்த ஆண்டு முதல் மந்திரிகளாகவும் அரசர்களாகவும் வருகிறார்கள் ஆகிய விவரங்களைப் பஞ்சாங்கப் படனத்தின் மூலம் அறியலாம்.


அவர்களால் இயற்கையிலும் மனித வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள், குரு, சனி, ராகு, கேது கிரச்சார முறையில் இடம் மாறுதல்களால் பூமியிலும் மக்கள் மத்தியிலும் எவ்விதமான மாற்றங்கள், எந்தக் காலங்களில் நிகழும் என்ற குறிப்புகளைப் படித்தறிவது வழக்கம்.

யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலனகளையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான  அறிவிப்பாய் திகழ்கிறது.

மகாகவி காளிதாசரின் உத்தரகாலாமிருதம்
 என்னும் ஜோதிட நூலில் முப்பத்தியெட்டாம் பாடல் கீழ்வரும் வரிகள் மூலம் யுகாதிப் பண்டிகையைக் குறிப்பிட்டுள்ளது.

வருஷாதி பிரதிபந்தவேத சஹிதா க்ராஹ்யா ரக்‌ஷ்னாம் பதே:
மத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ ஜென்மா பவத்சா திதி:
யுகாதி பச்சடி;

யுகாதியன்று, எல்லார் வீடுகளிலும் யுகாதி பச்சடி செய்யப்படும்.  வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய பொருட்களால் ஆன பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறிவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.

அனைவருக்கும் யுகாதிலு பண்டிகைலு  வாழ்த்துகள்லு ..

நன்றியுடன்,
ராஜி.

Tuesday, March 24, 2020

எல்லா வியாதியையும் போக்கும் பூண்டு சட்னி- கிச்சன் கார்னர்

செரிமானம், வாயுத்தொல்லை தொடங்கி இப்ப வந்திருக்கும் கொரோனா வைரசைக்கூட பூண்டு தீர்க்கும்ன்னு அடிக்கடி வசந்தி  பரவுறதுக்கு முன்னாடியே என் பிள்ளைகள் பூண்டை வெறுத்து ஒதுக்காம சாப்பிடுவாங்க. முக்கியமா புளிக்குழம்பில் ஊறிய பூண்டுக்கு அடிதடிலாம் நடந்த வரலாறுலாம் எங்க வீட்டில் உண்டு. அதுக்காகவே தலைக்கு இத்தனை பூண்டு பற்கள்ன்னு தட்டில் முதல்லியே எடுத்து வச்சதும் உண்டு.   அப்பேற்பட்ட பிள்ளைகளுக்கு பூண்டு சட்னின்னா சொல்லவா வேணும்?! சூடான இட்லி, அளவான காரத்தோடு சட்னி இருந்தால் அன்னிக்கு ஹாட் பாக்சில் இருக்கும் இட்லி காணாம போகும்.  தோசைக்கும் நல்லா இருக்கும். ஆனா, இட்லிக்குதான் செம மேட்சிங்கா இருக்கு

தேவையான பொருட்கள்..
தோல் உரித்த பூண்டு  பற்கள்
வெங்காயம்
காய்ந்த மிளகாய்
உப்பு
புளி
எண்ணெய்
கடுகு
ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் வெங்காயம் போட்டு வதக்குங்க..
அடுத்து பூண்டு போட்டு வதக்குங்க...
காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயை போட்டு வதக்கனும்..


வெங்காயமும், பூண்டும் வதங்கினபின் தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கனும்..
புளி கொஞ்சம் சேர்த்து அடுப்பை அணைச்சுட்டு நல்லா ஆறினதும், முதல்ல மிளகாயை அரைச்சுட்டு பிறகு வதக்கின வெங்காயம், பூண்டினை சேர்த்து கொரகொரப்பா அரைங்க.  முதல்லியே எல்லாத்தையும் சேர்த்து அரைச்சா மிளகா முழுக்க மசியாது.  பூண்டும், வெங்காயமும் மசிஞ்சு பிசுபிசுன்னு இருக்கும். 
அரைச்ச சட்னியில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சு கொட்டுங்க. சூப்பரான காரசாரமான பூண்டு சட்னி ரெடி.

பெரிய வெங்காயத்திற்கு பதிலா சின்ன வெங்காயத்தை சேர்த்துக்கிட்டா இன்னும் ருசி கூடும்.
நன்றியுடன்,
ராஜி

Sunday, March 22, 2020

இன்றைய கேப்டன் நிலைக்கு இந்த பாட்டு பொருந்தி போகுதா?! - பாட்டு புத்தகம்

சமீபத்துல கேப்டன் டிவியில் தே.மு.தி.க கட்சி மீட்டிங்க் போய்க்கிட்டிருந்துச்சு. கடைசியில் விஜயகாந்த் பேசினார். 

Saturday, March 21, 2020

காத்து வாங்க மட்டும்தானா டேபிள் ஃபேன்?! - கிராமத்து வாழ்க்கை

70, 80களில் பால்யத்தை கழித்தவர்கள் பெரும்பாக்கியசாலிகள். கைகளில் காசு இல்லாவிட்டாலும் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தவர்கள். அதனால்தான், இன்னமும் அந்த நினைவுகளில் மூழ்கி ,அந்த வாழ்க்கைக்காக ஏங்கி தவிக்கின்றனர். கிணற்று குளியல், திண்ணை தூக்கம்.... என பழமையையும், ஸ்மார்ட் போன், இணையம், எல்.சி.டி டிவின்னு புதுமைகளையும் ஒருசேர அனுபவிச்ச பாக்கியசாலிகள்... 


ரெண்டு ரூபாக்கு வெங்காயம்,  1 ரூபாக்கு தக்காளி, நாலணாக்கு பச்சைமிளகாய், தேங்கா பத்தை ரெண்டு, கறிவேப்பிலை கொசுறுன்னு வாங்கின கால கட்டமது... அழுகிப்போச்சுன்னு திரும்ப வந்த தேங்காயில் நல்ல பகுதியை கொடுப்பாங்க. நல்ல தேங்காயை உடைச்சும் கொடுப்பாங்க. நாம அன்னிக்கு நரிமுகத்துல முழிச்சிருந்தா உடைச்ச தேங்காய் காலி ஆகிட்டு, புது தேங்காய் உடைக்கும்போது. தேங்காயை உடைச்சு அப்படியே வாயில் ஊத்துவாரு கடைக்காரர்.. ம்ம்ம் அதுலாம் ஒரு காலம்!!!

ஊருக்குள் திடீர்ன்னு ஒருநாள்  லாரி லாரியாய் ஜல்லி கொண்டு வந்து கொட்டுவாங்க. தார் டின்னு வந்து இறங்கும். ரோடுக்கு பக்கவாட்டில் இருக்கும் மண்ணை சுத்தம் செய்வாங்க. ரோடு ரோலர் வந்து நிக்கும். யானை மாதிரி ஆடி அசைஞ்சு இஞ்சு பை இஞ்சா அது நகரும் அழகை பார்க்க அத்தனை ரம்மியமா இருக்கும். ஊருல மொத்த ரோடும் நம்ம மேற்பார்வையிலதான் போடுறதா ஒரு நெனப்பு. பொழுதன்னிக்கும் அங்கதான் இருக்குறது.  சுடச்சுட இருக்கும் தாரை கொட்டாங்குச்சியில் கொண்டுபோய், ஒழுகும் வாளி, குடம், அண்டாவோட ஓட்டையை அடைச்சு வைப்போம். அந்த தார் வாசனை...   மழை வாசனை, பெட்ரோல் வாசனை மாதிரி அது ஒரு போதை...
இப்ப மாதிரி ரூமுக்கு ரூம் ஃபேன் இல்லாத காலம்... எங்கோ சில வீட்டில் லொட லொடன்னு சத்தம் கேட்கும் பேன்  இருக்கும்.  டேபிள் பேன் சில வீட்டில் இருக்கும்.  அப்பா, தாத்தா, பெரியப்பா, மாமான்னு குடும்பத்தலைவர் படுக்கும் இடத்துக்குலாம் இது போகும். நாம அவங்க செல்லமா இருந்தால் நமக்கும் ஃபேன்ல படுக்கும் யோகம் கிட்டும். இது காத்து வாங்குனதைவிட, அது முன்னாடி உக்காந்து பேசி ரசிச்சதுதான் அதிகம்.  ரகுவரன் வாய்ஸ்தான் அதிகம் வந்ததா நினைப்பு..

இது நட்டு போல்ட்ன்னு தெரியும். ஆனா, இது எந்த மெஷினோடதுன்னு தெரியாது. இதோட பயன் அதுல என்னன்னு தெரியாது, ஆனா, தீபாவளி அன்னிக்கு பொட்டு வெடி வெடிக்க இதை பயன்படுத்துறது மட்டும் தெரியும்
எத்தனை விலைவாசி வந்தாலும் அளவிலும், விலையிலும் மாறாத ஒரே பொருள் இந்த பூமர் சூயிங் கம்.   ஆரம்பத்துல இனிக்கும். போகப்போக கசக்கும்... மென்னு மென்னு வாய் வலிச்சாலும் துப்ப மாட்டோம். கிரிக்கெட்  வீரர்கள் மென்னு துப்பினதை பார்த்துட்டு ஊரே இதை மென்னுச்சு. இந்த பூமரை கண்ட இடத்தில் துப்பு செருப்பு, துணின்னு ஒட்டிக்கிட்டு வீட்டில் திட்டு வாங்கினதும் உண்டு. 


ஒரு ரூபா பூமர் சூயிங் கம் வாங்க கையில் காசு இல்லாத போது இந்த மிட்டாஇயை வாங்குவோம். பூமர் மாதிரிதான் இதுவும்... ரெண்டுத்துக்கும் இருக்கும் வித்தியசம் என்னன்னா?! பூமர் ஆரம்பத்துலயே சாஃப்டா இருக்கும். ஆனா, இந்த மிட்டாய் ஆரம்பத்துல கரகரப்பா இருக்கும். போகப்போக சாஃப்டாகிடும். பூமர் ஒரே கலர்ல கிடைக்கும். இது பச்சை, வெள்ளை, ரோஸ்ன்னு கலர்கலரா கிடைக்கும்...

கொசுவர்த்தி மீண்டும் ஏற்றப்படும்...

நன்றியுடன்,
ராஜி


Friday, March 20, 2020

Thursday, March 19, 2020

Wednesday, March 18, 2020

நடுவுல கொஞ்சம் கெணத்தை காணோம்.. -தெரிந்த கதை, தெரியாத உண்மை

என் கெணத்தை காணோம். வட்டக்கிணறு, வத்தாத கிணறுன்னு வடிவேலு காமெடியை போல ஊருக்குள் இருந்த கிணறுலாம் காலப்போக்கில் காணாம போயிட்டுது.  

Tuesday, March 17, 2020

இதுக்கு ஏன் கலகலான்னு பேர் வந்துச்சு?!- கிச்சன் கார்னர்

அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டையே ஆன்லைனில் ஆர்டர் செய்து  சாப்பிடும் பழக்கம் புதுசா  பரவிக்கிட்டிருக்கும் காலக்கட்டத்தில் பாரம்பரிய பலகாரங்களை செய்ய யாருக்கு பொறுமையும், நேரமும் இருக்கு?!ன்னு பலரும் நினைக்குற மாதிரி இதுலாம் செய்யுறது பெரிய விசயமில்லை. பசங்களுக்கு நல்லது கொடுக்குற திருப்தியும், நம்மாலும் இதுலாம் செய்யமுடியும்ன்ற ஆர்வமும் இருக்கும்வரை இதுலாம் ஜுஜுபி மேட்டர்.

சின்ன வயசில் எல்லார் வீட்டிலும் அப்பப்ப முறுக்கு, தட்டை, கோதுமை கலகலா, சிம்னின்னு  எதாவது பண்டம் செய்வாங்க. அதுதான் காலை, மாலை, சாப்பாட்டுக்கு தொட்டுக்கன்னு பத்து பதினஞ்சு நாளுக்கு அந்த பண்டம் இருக்கும். இப்ப மாதிரி கடையில் வாங்கும் பழக்கமில்லை.  எங்க ஊரில் இதை கலகலான்னு சொல்வாங்க. மத்த ஊரில் என்ன பேருன்னு தெரில!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் 
கோதுமை மாவை சலிச்சு எடுத்துக்கனும். கோதுமை மாவில் அரை பங்கு சர்க்கரையை எடுத்துக்கனும்.
சர்க்கரையை பொடிச்சு கோதுமை மாவில் சேர்த்துக்கனும்.
ஒரு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்துக்கனும்..
வெண்ணெய் இல்ல. அதனால் நெய்யினை சேர்த்து, மாவினை நல்லா கலந்துக்கிட்டு, சிறுக சிறுக தண்ணி சேர்த்து பிசையனும்,. சர்க்கரை சேர்த்திருக்குறதால் அதிகம் தண்ணி செலவாகாது. சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைஞ்சுக்கனும். 
சப்பாத்தி மாதிரி திரட்டி, கத்தியால் சின்னசின்னதா வெட்டிக்கனும்.. ரொம்ப மெல்லிசா திரட்டிக்க வேணாம். கொஞ்சம் கனமா இருக்கனும்.

சர்க்கரை சேர்த்திருக்குறதால் சீக்கிரம் சிவந்திடும். அதனால், அடுப்பு சிம்மில் இருப்பது அவசியம்.
நல்லா சிவக்கவிட்டு எடுத்தால் கலகலா ரெடி. இதை கிண்ணத்தில் போட்டு உருட்டுனா கலகலன்னு இருக்கும் அதனால்தான் இந்த பேரா இருக்குமோ?! கோதுமை, மைதா மாவினை சம பங்கா எடுத்தும் செய்யலாம்.  

நன்றியுடன்,
ராஜி

Monday, March 16, 2020

கொரோனா வந்தால் உயிரிழப்புதான் முடிவா?! ஐஞ்சுவை அவியல்

மாமா! ஃப்ரீயா இருந்தால் வர்றியா?! கடைவீதிக்கு போய் வரலாம்?! 

அடியே! ஊரு உலகமெல்லாம் கொரோனான்னு அலறிக்கிட்டு இருக்கு. உனக்கு கடைவீதிக்கு போகனுமா?!    சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இப்ப, 110 நாடுகளுக்கு பரவி இருக்கு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5000க்குமேல் உயிரிழந்துள்ளனர். இதுவரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா சொல்றாங்க. . சீனாவுக்கு அடுத்தபடியா இந்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின்,தென்கொரியாவில்தான் அதிகளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கு.  இப்ப இந்தியாவிலும் பரவியிருக்கு.  என் மதமா?1 உன் மதமான்னு அடிச்சுக்கும் நம்மாட்கள், மத வேறுபாடின்றி தங்களோட வழிபாட்டு தலத்துக்கு வரவேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் இருக்கு. 

கொரோனா வைரஸ்ன்னா என்ன மாமா?!

போன், லாப்டாப், மனுஷங்க மட்டுமல்ல.. கால மாற்றத்திற்கேற்ப எல்லா உயிரினமும் தங்களை அப்டேட் பண்ணிக்கும். இல்லன்னா, அந்த உயிரினம் தங்களை தக்கவச்சுக்க முடியாது. இது வைரசுக்கும் பொருந்தும். கொஞ்ச நாளுக்கு முந்தி வந்த சார்ஸ், எபோலா மாதிரி இப்ப வந்திருக்க வைரசுக்கு பேரு கொரோனா வைரஸ்.  இந்த கொரோனா குடும்பத்தில்  6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இப்ப பரவி இருக்கும் வைரஸ் 7 வது வைரஸ் கொரோனா குடும்பத்தில் நுழைஞ்சிருக்கு. கொரோனாவுக்கு சோறு வச்சியே பேரு வச்சியான்னு யாரும் கேட்டுடக்கூடாதுல்ல! அதனால், இதுக்கு 2019- nCoV (new strain of coronavirus) ன்னு பேர் வச்சிருக்காங்க.  2019 ஆம் கண்டுப்பிடிச்சதுக்காக 2019ன்ற ஆண்டையும் n என்பது புதியதுன்னு , CoV என்பது கொரனாவையும் குறிக்கிற விதமா பேர் வச்சிருக்காங்க. 2002 ல் சார்ஸ் SARS- CoV ன்ற வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசும்  சீனாவில்தான் முதன்முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள் .  கொரோனா குடும்பத்தின் அடுத்த வைரஸான  MERS-CoV கொரனா என்பது 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கண்டுபிடிச்சாங்க. இதை கேமல் ப்ளூ பேர் வச்சாங்க. பழி ஓரிடம், பாவம் இன்னொரு இடம்ன்னு சொல்றமாதிரி ஒட்டகத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது குதிரையிலிருந்து பரவுச்சு. இதுல 800 பேர் வரை இறந்தாங்க. தன்னை அப்டேட் செய்துக்கிட்டே வந்த கோரோனா வைரஸ்  இப்ப 2019- nCoV நிலைக்கு வந்து இருக்கு. இந்த வைரஸ் ஒருத்தருக்கு தொற்றுச்சுன்னா,  முதலில் சாதாரணமா சளி, ஏற்படுத்தும் வைரஸ் மாதிரியே பரவுது. அவங்களுக்கு, ஒருவகையான நிமோனியாவை உண்டாக்குது.  கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்தாலும் தும்மல், இருமல்ன்னு ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவுது.  சாதாரண சளி, இருமல், காய்ச்சல்ன்னு இதோட அறிகுறிகள் இருக்குறதால் சட்டுன்னு அடையாளம் கண்டுக்க முடியாது. உரிய பரிசோதனைகளை செஞ்சுக்கிட்டால்தான் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கோமான்னு தெரியும். ஆனா, அதுக்கான வசதிகள் நம்மக்கிட்ட இல்லன்றதுதான் இதில் வேதனையான விசயம். இதை பொதுவில் அரசு சொல்லல. ஆனாலும், நிலை இதுதான். அப்படியே கண்டுபிடிச்சாலும் கொரோனாவை குணப்படுத்த இப்பவரைக்கும் மருந்துகள் இல்ல.   முதலில், சளி பிடிக்கும். அடுத்து தலைவலி,காய்ச்சல் வரும். அதுக்கடுத்து, தொண்டைவலி, வறட்டு இருமலை  உண்டாக்கி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு கொண்டு போய்விடும்.  பிறகு கடுமையான உடல்வலியை ஏற்படுத்தி, நிமோனியா வந்து கிட்னி செயலிழந்து மரணம் ஏற்படும்.


அப்ப, கொரோனா வந்தால் செத்துதான் போகனுமா மாமா?!

அப்படிலாம் இல்ல. 100 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்குன்னு வச்சுக்க. கொரோனா தொற்று ஏற்பட்டதுன்னு  கண்டுபிடிச்சா அவங்கள்ல 80 பேருக்கு சாதாரண சளி, காய்ச்சல் லெவல்லயே குணப்படுத்த முடியும். மிச்சம் இருக்கும் 20 பேரில் 10 பேர் மூச்சுத்திணறல்   வரை போவாங்க.  அவங்களை ஹாஸ்பிடலில் சேர்த்தா பிழைக்க வச்சுடமுடியும். மிச்சமிருக்கும் 10 பேரில் 8பேர் ஐசியூ வரைக்கும் போனாலும் காப்பாத்திடலாம். மிச்சமிருக்கும் 2 பேர்தான் இறப்பு வரைக்கும் போவாங்க.    


அப்ப கொரோனா வைரஸ் பரவாம எப்படி மாமா தடுக்குறது?!


பாதிக்கப்பட்டங்க, தனி மனிதன்ன்னு ரெண்டே ரெண்டு பேர் மனசு வச்சால் போதும். வைரஸ் தொற்று ஏற்பட்டவங்க மாஸ்க் போட்டுக்கனும். சளியை கண்ட இடத்தில் துப்பாம இருக்கனும். தனியா இருந்துக்கனும். ஹாஸ்பிட்டல்ல சேரனும். கூட்டம் கூடும் இடங்களுக்கு போகக்கூடாது.   ஒவ்வொருத்தரும் கண்ட இடங்களில் கைவைக்காம இருக்கனும், கைகளை கழுவாம முகம், வாய்க்கு அருகில் கைகளை கொண்டு போகக்கூடாது.  இதை செய்தாலே போதும் அதைவிட்டு எல்லாரும் முகமூடின்ற மாஸ்க் போடத்தேவையில்லை, பாதிக்கப்பட்டவர் போட்டாலே போதும். பெருநகரங்களில் பொதுமக்கள் மாஸ்க்கோடு போறதை பல இடத்தில் பார்க்கமுடியுது. பாதிக்கப்பட்டவங்க இருமும்போது நம்மீது தெறிக்காதவரை கொரோனா வைரஸ் காற்றினால் பரவாது. ஆனா, நிலப்பரப்பு வழியா பரவும். அதாவது கொரோனா வைரஸ் உள்ள சளியை தொட்டு நம் கண், மூக்கு, வாய் அருகில் கொண்டு சென்றால் பரவும். நிலப்பரப்பில் இருக்கும் இந்த கிருமி 12 மணிநேரம் வரை உயிர்வாழும்.


பொழுதன்னிக்கும் ஒரே மாஸ்க்கை போட்டிருந்தால் ஒரு பிரயோசனுமுமில்லை. பொதுவாவே ரெண்டு இல்ல மூணு மணி நேரத்திற்கு மட்டுமே மாஸ்க் பயன்படும். அதுக்கப்புறம் அது பயன்படாது. சர்ஜிக்கல் மாஸ்க்ன்னு சொல்லப்படும் ஆப்ரேஷன் தியேட்டரில் பயன்படுத்தும் மாஸ்க் அஞ்சாறு மணிநேரத்திற்கு தாங்கும். மாஸ்கை காதில் மாட்டும் எலாஸ்டிக்கினை மட்டுமே பிடிச்சு போட்டுக்கனும், கழட்டனும்.  அதைவிட்டு, வாய்க்கு அருகில் இழுக்கக்கூடாது.  வாய்க்கு அருகில்  மாஸ்க்கை கழட்டிட்டு  சாப்பிடுறது, சிகெரெட் பிடிக்குறது, கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறது, லிப்ஸ்டிக்ன்னு போடுறது கூடாது. சானிட்டரி நாப்கின் மாதிரி மாஸ்கையும் அதுக்கு தகுந்த மாதிரி டிஸ்போஸ் பண்ணனும். அதைவிட்டு கண்ட இடத்தில்  போடக்கூடாது. பாதிக்கப்பட்டவர் இருமும்போது  தெறிக்கும் சளியின் மூலமா மட்டுமே கொரோனா வெளிவருது. அந்த சளியை நம்ம சுவாச்சாலோ, அல்லது எதேச்சையாய் நம் வாயில் விழுந்தாலோ நம் உடலில் பரவும். அதுக்கடுத்து, அந்த சளியை கையால் தொட்டு, முகம், வாய்க்கு அருகில் கொண்டு போனால் பரவும். அதாவது சளியில் இருக்கும் வைரஸ் மூக்கு, வாய் வழியா சுவாசப்பாதைக்கு போகாமல் இருந்தால் ஒரு பிரச்சனையுமில்ல.


கூடிய மட்டிலும், தண்ணியை காய்ச்சி குடிக்கனும்.  எங்க போனாலும் தண்ணியை எடுத்து போங்க. வெளி உணவை  தவிர்க்கலாம்.  சமைச்ச அசைவ உணவையும், சமைக்காத இறைச்சியையும் கிட்டக்க வச்சுக்காம இருக்கனும்.  வெளியில் எங்காவது போகும்போது சுவற்றில், பஸ் ஜன்னல், கதவுன்னு கைவைக்காம இருக்கனும்.வெளி இடங்களில் இருக்கும்போது அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவனும். அதுவும் 20 நொடிகள் கைகளை தேய்ச்சு கழுவனும்.  கை கழுவுறேன்னு தேங்குற நீரில் கை கழுவக்கூடாது. ஓடும் நீரில்தான் கை கழுவனும்.  எச்சில் தொட்டு பணத்தை எண்ணுற பழக்கமிருக்குறதால பணத்தை தொட்டுட்டு கைகளை கழுவ மறக்காதீங்க.


கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் 14 நாட்கள் வரை தொடரும். எதிர்ப்பு சக்தி இல்லாதவங்க. எல்லா வயதினரும் பாதிக்கப்படலாம்ன்னு இருந்தாலும் 40 வயதுக்கு மேல் இருக்கவுங்களுக்குதான் கொரோனா வைரஸ் தாக்கம்  அதிகமா இருக்கும்.  சின்ன குழந்தைகள் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லைன்றது ஒரு சின்ன ஆறுதல். அதேப்போல் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதில் 60 வயதினருக்கு மேலானவர்கள்தான் அதிகமா இறந்திருக்காங்க. நீரிழிவு நோய் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமா இருக்குமாம்.  கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவங்க இறந்துட்டா, அவங்க உடல் வழியா இந்நோய் பரவாது.


அரசாங்கமும் கூட்டமா இருக்காதீங்க, கோவிலுக்கு போகாதீங்க, மாஸ்க் போடுங்கன்னு அட்ராசிட்டி பண்ணாம தகுந்த நடவடிக்கை எடுக்கனும் அதாவது, கூட்டம் கூடும் இடமான ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் மாதிரியான பொது இடத்தில் கழட்டமுடியாத கை கழுவுற லிக்விட்டை வைக்கலாம். தியேட்டர், மால், திருமண மண்டபம் மாதிரியான தனியார் நிறுவனங்களும் இந்த மாதிரி நடவடிக்கைகள் எடுக்கலாம். அதைவிட்டு,  


கொரோனா பாட்டுக்கு வந்த தடம் தெரியாம போகவும் வாய்ப்பிருக்கு. அதைவிட்டு, கிரிவலம் வந்த கொரோனா, பாண்டிச்சேரியின் புது சரக்கு கொரோனா, காஞ்சிபுரம் பட்டிற்கு போட்டியாய் உலகப்புகழ் கொரோனா...ன்னுலாம் அறிவிக்காதீங்க. ஆனாலும் நம்மாளுங்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்கன்னும், ரசம் சாப்பிடுங்கன்னு ஆளுக்காள் அட்வைஸ். குற்றவாளி கிடைக்கலைன்னா கிடைச்சா ஆள் மேல் கேஸ் எழுதுற போலீஸ்க்காரன் மாதிரி இதையும் பிராய்லர் கோழி மேல் உயில் எழுதுனது பரிதாப கதை. நம்மூரு வெயிலுக்கு வராதுன்னு ஒரு வாட்ஸ் அப் மீம்ஸ்.  பரப்பாதீங்க. கூடவே, மணிக்கணக்கா டிவில விவாதமும் பேட்டியும் போடாதீங்க. இதுலாம் பார்த்தா கொரோனா கோபமாகி ஒரு காட்டு காட்டிட போகுது. 

எல்லாம் சரி, நீ எதுக்கு கடைவீதிக்கு கூப்பிட்ட?!
கடையில் கொரோனா வைரஸ் புடவை வந்திருக்காம். அதை வாங்கிக்கிட்டு, அப்படியே எதிர் கடையில் இருக்கும் கொரோனா வைரஸ் ஹேர் க்ளிப்பையும் வாங்கிட்டு வந்திடலாம்ன்னுதான் கூப்பிட்டேன். 

ஊரெல்லாம் உயிர் போய்டுமோன்னு பயத்துல இருக்கு. உனக்கு கொரோனா புடவையும், கிளிப்பும் வேணுமா?!

ஆமா, போற உசுரு ஆசைப்பட்டதை அடைஞ்சுட்டு போகட்டுமே! ஆசைப்பட்டதுக்கு ஏங்கிக்கிட்டு இருக்குறதுக்கு இல்லாம போறதே மேல். அப்புறம் புளிய மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் பேயா அலைய வேண்டியதுதான்,.

நன்றியுடன்,
ராஜி

Sunday, March 15, 2020

பெண்களை வீக்கர் ஆஃப் செக்ஸ்ன்னு ஏன் சொல்றாங்க?!-பாட்டு புத்தகம்


பெண்களை வீக்கர் ஆஃப் த செக்ஸ்ன்னு சொல்வாங்க.   இதுக்கு பலவாறாய் அர்த்தம் சொல்வாங்க. உடல்ரீதியாக பலவீனமானவங்கன்னு அர்த்தம்ன்னு சொல்வாங்க.  ஆனா, ஆணுக்கு நிகரா எல்லா வேலைகளையும் செய்றாங்க. அடுத்து அறிவுரீதியா சொல்வாங்க. அதுவும் தப்புன்னு பெண்கள் நிரூபிச்சு எல்லா படிப்புகளிலும் வெளுத்து வாங்கி உயர் பதவிகளில் இருக்காங்க. அப்ப மனரீதியாக சொல்லலாமா?!

ம்ம்ம்ம் சொல்லலாம். ஏன்னா, பெண் மனசு இளகினது. சட்டுன்னு உணர்ச்சிவசப்படுவாங்க. காதல், ஆசை, பொன்னாசை, மண்ணாசைன்னு எதுக்காவது சட்டுன்னு எல்லாரையும் நம்பி ஏமாந்து போவாங்க(விதிவிலக்குகள் உண்டு.)   அதனால் சொல்லி இருப்பாங்களோ?!

பிள்ளைநிலா படத்தில் ராதிகா பணக்கார வீட்டு பெண்ணாய், எதுக்கும் அஞ்சாத அறிவார்த்தமான பொண்ணா இருக்கும். மோகனோடு ஒரே காலேஜில் படிப்பாங்க. மோதல்ல ஆரம்பிச்சு பிரண்டாகி,  மோகன் மேல் காதல்கொண்டு, ஒரு நாலு வருசம் கழிச்சு மோகனை சந்திச்சு தன்னோட காதலை சொல்லும். ஆனா, அந்த நேரத்தில் மோகனுக்கு கல்யாணமாகி  ஒரு குழந்தைக்கும் தகப்பனா இருப்பார். ராதிகா காதலை ஏற்க மறுத்துடுவார். அப்ப ராதிகா சொல்லும் வசனம் டாப்..

இனிமே, எந்த பொண்ணாவது உங்கக்கிட்ட என்னைய பத்தி என்ன நினைக்குறீங்கன்னு கேட்டா, அப்பிடி இப்படி எதாவது சொல்லி புகழாதீங்க. ஏன்னா, பொண்ணுங்க மனசு எந்தளவுக்கு இறுக்கமோ, அந்தளவுக்கு இளக்கம், எந்தளவுக்கு இளக்கமோ அந்தளவுக்கு இறுக்கம்ன்னு சொல்லி சூசைட் பண்ணிக்கும்.  வீக்கர் ஆஃப் த செக்ஸ்ன்ற வார்த்தை கேட்டால், இந்த வசனம் நினைவுக்கு வரும். 

பிள்ளை நிலா படத்தில் வரும் ராஜா மகள்.. ரோஜா மலர் பாட்டு ரொம்ப பிடிக்கும். இந்த பாட்டு ரெண்டு முறை வரும். ராதிகாவை புகழ்ந்து வரும். அடுத்து சோகமா ஒருமுறை வரும்..

ராஜாமகள் ......ரோஜாமகள்.....

    ராஜாமகள்...... ரோஜாமகள்
   வானில் வரும் வெண்ணிலா

   வாழும் இந்தக் கண்ணிலா

   கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக்குயிலா?
   ராஜாமகள்....... ரோஜாமகள்


 பன்னீரையும் வெந்நீரையும்

உன்னோடுதான் பார்க்கிறேன்!!
பூவென்பதா?! பெண்ணென்பதா?!
நெஞ்சோடு நான் கேட்கிறேன்.
முள்ளோடுதான்.. கண்ணோடுதான்..
ரோஜாக்களும் பூக்கலாம்!!
அம்மாடி நான், அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்!!
கோபம் ஒரு கண்ணில்..
தாபம் ஒரு கண்ணில்..
வந்து வந்து செல்ல..
விந்தை என்ன சொல்ல?!
வண்ணமலரே!!

ராஜாமகள்....... ரோஜாமகள்.......


ஆடைகளும்.. ஜாடைகளும்...

கொண்டாடிடும் தாமரை..
வையகமும்... வானகமும்,,,
கைவணங்கும் தேவதை.
நீயும் ஒரு ஆணையி,ட
பொங்கும் கடல் ஓயலாம்!!
காலை முதல் மாலை வரை
சூரியனும் ஓயலாம்!
தெய்வமகள் என்று
தேவன் படைத்தானோ!?
தங்கச்சிலை செய்து
ஜீவன் கொடுத்தானோ?!
மஞ்சள் நிலவே....


ராஜாமகள்... ரோஜாமகள்...


படம்: பிள்ளை நிலா
இசை:இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்.
எழுதியவர்:வாலி

இதே பாட்டு சோகபாட்டாவும் வரும்.. செத்துப்போன ராதிகா மோகனுக்கு மகளா பேபி ஷாலினியா பொறந்து வந்து பழிவாங்கும்.


ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
பெண் : முள்ளோடுதான் கள்ளோடுதான்
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்
பெண் : கட்டில் வர எண்ணம் இட்டு
தொட்டில் வந்து சேர்ந்தவள்
மன்னவனே உன் நினைவில்
வெண்ணிலவாய் தேய்ந்தவள்
பெண் : கோபம் ஒரு கண்ணில்
தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல
எந்தன் உயிரே…….ஏ…..ஏ…ஏ…..ஏ……
பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
நட்புடன் 
ராஜி .

Saturday, March 14, 2020

கல்யாணத்துக்கு போனதுலாம் இதுக்குதான்!! - கிராமத்து வாழ்க்கை

புளிப்பு மிட்டாய், கமரக்கட், தேன் மிட்டாயை மட்டுமே சாப்பிட்டு வந்த காலத்தில் புது வரத்து இந்த ஆசை சாக்லேட்.  நாலணாக்கு இந்த சாக்லேட் வாங்க கடைக்கு போக, இருட்டு குதிருக்குள் இறங்கி நெல், கேழ்வரகு எடுத்துக்கொடுக்குறதுன்னு பல வேலைகள் செய்வோம்.  இந்த சாக்லேட்டை சாப்பிடுறதுல இருக்கும் சுகத்தைவிட, சாக்லேட் கவருக்குள் கல்லை வைச்சு பிரண்டுக்கு கொடுக்குறதும், சாக்லேட் கவரை இழுத்து விளையாடுறதுலயும்தான் திருப்தியடைவோம்.
ஆசை சாக்லேட்டுக்கு அடுத்து மகா லேக்டோ சாக்லேட்.  இந்த சாக்லேட் அம்புட்டு சீக்கிரம் கரையாது. அரை மணி நேரத்துக்கு வாயில் இருக்கும். மென்னுதான் திங்கனும். எனக்கு இந்த சாக்லேட்டை பிடிக்காது.


கொஞ்சம் வளர்ந்த பிறகு சாக்லேட் கவரில் பொம்மை செய்ய கத்துக்கிட்டு நம்ம கிரஷ்சுக்குலாம் கொடுப்போம். பிறகு, சாக்லேட் பேப்பரில் வாசல் தோரணம்லாம் செஞ்சிருக்கேன். அதுலாம் ஒரு கனாக்காலம்.

அம்மாவோடு மிளகாய், சீயக்காய், கேழ்வரகு, கோதுமை அரைக்க போவேன். இஞ்சினிலிருந்து மெஷினுக்கு வரும் பெல்ட்டை மாத்தும்போது கூடவே இருப்பேன். கொஞ்ச நாளில் மெஷினுக்கு சொந்தக்காரங்க சொன்னாங்கன்னா நான் பெல்ட் மாத்தி விட்டிருக்கேன். மாவு வந்து விழும் அந்த துணிக்குழாயை உதறிவிட ரொம்ப பிடிக்கும். மிளகாய் சீயக்காய் அரைக்கும்போது தும்மல் வந்தாலும், விடமாட்டேன். சின்ன வயசுல கூட்டாஞ்சோறு ஆக்கும்போது மிளகாய் தூள் கேட்டால் வாராவாரம் கேக்குறியான்னு அம்மா திட்டுவாங்க. மெஷினுக்கு ஓடி அந்த துணியை உதறி உதறி மிளகாய் தூளை சேமிச்சு வருவோம்.
ஆயிரம் காரணங்களுக்காக பெரியவங்க கல்யாண வீட்டுக்கு போனாலும், நாம போறதுலாம் இந்த பாக்குக்குதான். கல்யாண வீட்டில் இதை எடுக்குறதுக்கு பேங்கை கொள்ளையடிக்குற மாதிரி பல பிளான் பண்ணனும். இதை சாப்பிட்டா படிப்பு வராது, போதையாகிடும்ன்னு இதை திங்க விடமாட்டாங்க. ஆனாலும், சுட்டுடுவோம்ல! ஏ.ஆர்.ஆர் பாக்கு, ரோஜா பாக்குன்னு நம்மளை நம்பிதான் மார்க்கெட்ல விட்டாய்ங்க.


தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு  முந்தியே கடைகளில் பொட்டு வெடி, சீனி வெடி கிடைக்கும். 1 ரூபாய்க்கு ரெண்டு பொட்டு வெடி, 1 ரூபாய் பாக்கெட்டில் நாலு சீனி வெடி இருக்கும். கையில் பைசா தட்டுப்படும்போதெல்லாம் பட்டாசு வாங்கி வெடிக்குறதுன்னு அந்த ஒரு மாசம் ஓடும். தீபாவளிக்கு முதல்நாள் அப்பா பட்டாசு வாங்கி வந்தால் இந்த சீனி வெடியைதான் முதலில் பார்ப்பேன்.  முதல் நாளில் இருந்து இந்த சீனிவெடியையும், பொட்டு வெடியையும் வெடிக்க ஆரம்பிப்பேன். ஆர்வக்கோளாறில் சீக்கிரமா காலி பண்ணிடக்கூடாதுன்ற எச்சரிக்கையையும், டைம் மேனேஜ்மெண்டையும் அன்னிக்கே கத்துக்கிட்டது இதிலிருந்துதான். தீபாவளி அன்னிக்கு  மாலை யார்க்கிட்ட அதிகமா சீனிவெடி இருக்கோ. அவங்கதான் ராஜா. மாலை நேரம் நெருங்கியதும் ரெண்டு மூணு வெடியை சேர்த்து வைச்சு வெடிச்சு காலி பண்ணுவேன். ஏன்னா, ராத்திரி ஆகிட்டா மத்தாப்பு, சங்கு சக்கரம் மாதிரியான ராத்திரி வெடியை கொளுத்தனுமே! சீனி வெடி திரியை திருகி,திருகி கையெல்லாம் கருப்படிச்சிருக்கும்.  மருந்து வாசம் மறுநாளுக்கும் கைகளில் இருக்கும்.

கொசுவர்த்தி சுருள் மீண்டும் ஏற்றப்படும்...

நன்றியுடன்,
ராஜி