Tuesday, June 21, 2011

"யாராவது காப்பாற்றுங்களேன் "தூக்கத்தில் கனவு அன்று ..,
கனவில் தூக்கம் இன்று ..,

 தேடலே தொழிலாகி..,
வலைத் தளங்களானது
வாழ்க்கை ..,
ஒவ்வொரு நாளும்
வெவேறு தேடல்கள்.

மறைச்சொல்லை
மறக்கிறோம்
முடமாகிறது தொடக்கம்...,
தொடக்கூடாததைத்
தொடுகிறோம்
குப்பையாகிறது  கோப்பு.     

விரல் நுனிகளில் வைரஸ்
புற்றாகிறது  பூக்கள்..,
அடுத்த கிரகம் தேடி
அலைகிறோம்
"ஆண்டி வைரஸ்" தேடி  

விஞ்ஞான  எல்லையை
எட்டிக் கொண்டே
பயணிக்கிறது அறிவு...,
அறிவைக் குட்டிக் கொண்டே
பயணிக்கிறது விஞ்ஞானம்.

குடம் தேனாய்
விஞ்ஞானம் கண்டோம்,
குடத்துக்குள்ளேயே
வீழ்ந்தோம்
  
"யாராவது காப்பாற்றுங்களேன் "  
   

Thursday, June 16, 2011

குரங்குப் பரம்பரை


 

என் குட்டிப் பையனுக்கு ஒரு சந்தேகம்.
(இதுக்கெல்லாம் சந்தேகம் வரலைனு எவன் அழுதான் இப்போ)

மனித இனம் எப்படி தோன்றிற்று..?ன்னு.
(ரொம்ப முக்கியமான சந்தேகம்தான்)

அவன் அவனோட அப்பாக்கிட்ட‌ கேட்டுக்கிட்டு இருந்தான்.
அப்பா, அப்பா மனித இனம் எப்படி தோன்றிற்றுனு.

அவன்  அப்பா,  கடவுள் "ஆதாம், ஏவாள்" என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"ன்னு சொன்னாங்க.

 அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்கிட்ட வந்து கேட்டான்,

அம்மா அம்மா மனித இனம் எப்படி தோன்றிற்றுனு
"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..ன்னு நான் சொன்னேன்.
( என்னங்க, நான் சொன்னது கரெக்ட்தானே)

அப்பவும் அவனுக்கு புரியலை, என் பையனாச்சே அவ்வளவு சீக்கிரம் விளங்கிடுமா?

மீண்டும் அவன் அப்பாக்கிட்டயே போயி
அப்பா, அப்பா நீங்க ஆதாம், ஏவாள் ல இருந்து மனிதன் தோன்றினானு சொல்றீங்க, ஆனால் அம்மா குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்னு. இதில் எது சரினு கேட்டான்.

ரெண்டுமே சரிதான்பானு நாட்டாமை  சரத்குமார் ரேஞ்சுல சொன்னார்.

அதெப்படி ஒருக் கேள்விக்கு ரெண்டுப் பதில் வரும்னு புத்திசாலித்தனமா கேட்டான்,
(என்னைப்போலவே)

அதுக்கு அவர் சொன்னாருப் பாருங்க ஒரு பதில்
அப்படியே, "ஷாக்க்க்காகிட்டேன் நானு".
(பின்ன இதுங்களாக் கூட மாறடிக்குறதுக்கு கரண்ட் ஷாக் எவ்வளவோ தேவலை)

எங்க பரம்பரை "ஆதாம், ஏவாள்" ல இருந்து வந்தது. உங்கம்மாதான் குரங்கின் மரோவதாரமேச்சே, அதனால உங்கம்மா  கும்பல் லாம்  "குரங்குப் பரம்பரை"னு.

கிர்ர்ர்ர் டமால்னு ஒரு சத்தம்.(இது நாந்தானுங்கோ.)


Monday, June 06, 2011

இதுவரை கண்டிராதக் கோலங்களில்..,


அடி வாங்கி அழுது கொண்டிருக்கும் பாரதி,
ஓடி ஒளிந்து விளையாடும் ஔவை,
தூக்கக் கலக்கத்தில் கொட்டாவியுடன் கிருஷ்ணன்,
காற்சிலம்பை பாண்டிமாதேவிக்கு அணிவித்து மகிழும் கண்ணகி,

எழுத்தாணியால் முதுகு சொறியும் வள்ளுவன்,
கைத்தடியால் அடுத்தவனை அடிக்கும் காந்தி,
ரோஜா இதழை கசக்கி எறியும் நேரு,
சாக்லேட்டை பகிராமல் தான் மட்டும் உண்ணும் கர்ணன்,

அழைத்தவுடன் மேடையேற
வரிசையில் காத்தபடி
கண்டிராத கோலங்களில் இவர்கள்...,

பெற்றவர் பெருமைக்காக
யாரென்ற அறிமுகம்கூட
அல்லாதவரின் முகம் அணிந்து
மனனம் செய்தது
மறக்காமலிருக்க வேண்டி..,

உருப்போட்டபடி
"மாறுவேடப்போட்டி"யில்
பரிசுக் கனவுகளுடன்
காத்திருக்கும்
பிஞ்சுகள்.