Friday, December 29, 2017

மகாவிஷ்ணுவுக்கே வரமளித்த இரு அரக்கர்கள்

சிவன் அருளைப்பெற மகாசிவராத்திரி அன்று கண்விழித்து இறைவனை வழிபடுவர். அதேப்போல விஷ்ணுக்கு வைகுண்ட ஏகாதசி.  சிவராத்திரிக்கு எத்தனை நேரம் கண்விழிச்சிருக்கோமோ அத்தனைக்கு பலன் உண்டு. ஆனா, வைகுண்ட ஏகாதசிக்கு கண்விழித்திருப்பது ரொம்ப கஷ்டம். இரண்டு பகல்,ஒரு இரவு கண் விழிச்சிருக்கனும். கடைசி அஞ்சு நிமிசம் கண் அசந்தாலும் கண் விழிச்சதுக்க்கான பலன் கிடைக்காதுன்னு எப்பயோ எங்கயோ கேட்டிருக்கேன். அதனால, வைகுண்ட ஏகாதசிக்கு கண் விழிச்சிருப்பதை அவாய்ட் பண்ணிடுவேன். ஆனா, படைத்தவனுக்கு தெரியாதா?! யாருக்கு என்ன, எப்ப கொடுக்கனும்ன்னு.. அதான் கடந்த ரெண்டு வருசமா விரதம் இருக்க ஆரம்பிச்சாச்சு...

 ஒவ்வொரு மாசமும் அமாவாசை, பௌர்ணமில இருந்து 11வது நாள் ஏகாதசி.  மாதத்துக்கு ரெண்டு ஏகாதசி வரும்.    ஏகாதசி திதி பெருமாளுக்கு மிக விசேசமானது.  எல்லா ஏகாதசியிலும் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி கன்ஃபார்ம். எல்லா ஏகாதசியிலும் என்னால விரதமிருக்க முடியாதுன்னு என்னைய மாதிரி வெசனப்படுறவங்களுக்கு ஒரு சலுகையை  தி கிரேட் பெருமாள் தர்றார். அது என்னன்னா, மார்கழி மாச வளர்பிறையில் வரும் ஏகாதசியில் விரதமிருந்தால் டைரக்டா வைகுண்டத்துக்கு போக கேட் பாஸ் கிடைச்சுடும்.  மூன்று கோடி ஏகாதசி திதியில் விரதமிருந்த பலனை கொடுக்கக்கூடியது இந்த வைகுண்ட ஏகாதசி விரதம். அதனால இதுக்கு முக்கோடி ஏகாதசின்னு பேரு. 

ஏகாதசி விரதம் எப்படி வந்துச்சுன்னு பார்க்கலாம்..

முரன்’ன்ற  அரக்கன் எப்பவும்போல தேவர்கள், முனிவர்களை துன்புறுத்தி வந்தான்.  ஆஸ் யூஸ்வல் முனிவர்களும், தேவர்களும் பெருமாள்கிட்ட போய் பிராது கொடுத்தாங்க. உடனே, பெருமாளும் முரனுடன் போரிட்டு அவனோட படைகளை அழிச்சுட்டார். எப்பேற்பட்ட கெட்டவனா இருந்தாலும் பகவான் எடுத்த எடுப்பிலேயே  அவனை அழிச்சுடமாட்டார். திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அதனால,  போரிட்ட களைப்பு தீர பத்ரிகாசிரம்’ன்ற இடத்துல போய் ரெஸ்ட் எடுக்குற மாதிரி படுத்துக்கிட்டிருந்தார். இந்த விசயம் முரனுக்கு தெரியவர, அந்த இடத்துக்கு போய், பெருமாளை நெருங்கி அவரைக்கொல்ல,  வாளை ஓங்கினான்.  தூக்கத்திலிருந்தபடியே, தன் உடலிலிருந்து ஒரு மோகினியை உண்டாக்கி முரனை கொல்ல அவளை அனுப்பினார். 
 பெண்ணான உன்னைக்கொல்ல ஒரு அம்பு போதுமென எள்ளி நகையாடி, அம்பை நாணில் பூட்டினான். அந்த நேரத்தில் ஹூம்ன்னு பெருமூச்சு விட்டாள் மோகினிமோகினியின் பெருமூச்சில் முரன் எரிந்து சாம்பலானான். முரன் எரிந்து சாம்பலானதும் ஏதுமறியாதவர் போல எழுந்து முரனை எரித்த மோகினியை பாராட்டி,  ஏகாதசின்னு பேர் வச்சார் பெருமாள். ''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். 


சித்திரை மாத வளர்பிறை ஏகாதசியின் பெயர் பாபமோகினி.  தேய்பிறை ஏகாதசி  காமாதான்னும் , அழைக்கப்படுது. இந்த ஏகாதசி தினத்தில் விரதமிருந்தால் கேட்ட வரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். இதேப்போல  வைகாசி வளர்பிரை ஏகாதசி வருதினி,  தேய்பிறை ஏகாதசி மோகினி ன்னு சொல்லப்படுது. இந்த நாளில் விரதமிருந்தால் இமயமலைக்கு  போய் பத்ரிநாத்தை வழிப்பட்ட பலன் கிடைக்கும்.  ஆனி மாசம் அபாரா, நிர்ஜலா ன்னு அழைக்கப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் சொர்க்கம் கிடைக்கும். ஆடி மாசத்தில் யோகினி, சயன ஏகாதசி அழைக்கப்படும் இந்நாளில் விரதமிருந்தால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.  ஆவணி மாசத்துல ஏகாதசி காமிகை, புத்திரதான்னு அழைக்கப்ப்படும். இந்நாளில் விரதமிருந்தால் நன்மக்கட்பேறு கிடைக்கும். புரட்டாசி மாச ஏகாதசி,  அஜா, பரிவர்த்தினின்னு அழைக்கப்படும். இந்நாளில் விரதமிருந்தால்  செல்வ செழிப்பு உண்டாகும். 

ஐப்பசி மாச ஏகாஷரி இந்திரா, பராங்குசான்னு சொல்லப்படுது.  இந்நாளில் விரதமிருந்தா நோய் நொடிகள் அண்டாது.  கார்த்திகை மாத ஏகாதசி ரமா, பிரமோதினி அழைக்கப்படும். இந்நாளில் விரதமிருந்தால் கால்நடை பாக்கியம் கிட்டும். மார்கழி மாத ஏகாதசி வைகுண்ட ஏகாதசி,  உத்பத்தின்னு அழைக்கப்படுது. மனிதர்களின் ஓராண்டுக்காலம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த கணக்குப்படி பார்த்தால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாகும். மகாவிஷ்ணு தூக்கம் களைந்து கண்விழிக்கும் நேரமாகும்.  அதனாலதான் மார்கழி ஏகாதசி நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுது. 

தை மாத ஏகாதசி சுபலா, புத்ரதான்னு சொல்லப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் பித்ரு  சாபம் நீங்கும். மாசி மாத ஏகாதசி  ஜெயா, ஷட்திலான்னு சொல்லப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் பாவம் நீங்கும் பிரம்மஹத்தி தோசம் நீங்கும். பங்குனி மாத ஏகாதசி  விஜயா, விமலகின்னு அழைக்கப்படுது.  ராமபிரான் இலைங்கைக்கு செல்லும்முன் விஜயா ஏகாதசி அனுஷ்டித்ததாய் சொல்லப்படுது.  இந்நாளில் விரதமிருந்தால் பதவி, புகழ் கிடைக்கும்.


ஏகாதசிக்கு முன் தினம் ஒருவேளை உணவு உண்டு ஏகாதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைகளை முடித்து, முறைப்படி விரதம் இருக்கனும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நலம்.  முடியாதவர்கள் பால் பழம் உண்ணலாம். பகலிலும் உறங்காமல் பெருமாளை எண்ணி பஜனை, கருடப்புராணம் போன்றவை படித்தல் வேண்டும். அன்றி இரவு பரமபதம் விளையாடலாம். சினிமா, டிவி பார்த்தல் தவிர்க்கலாம். மறுநாள் அடியவர்களுக்கு உணவளித்து விரதம் முடிக்க வேண்டும்.

விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியதால் பிரம்மாவுக்கு கர்வம் உண்டானது. அவரின் கர்வத்தை அடக்க நினைத்த விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள்ன்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த  விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அதற்கு கைமாறாக அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகாவிஷ்ணுவிற்கு வேண்டுமானால், தாங்கள் வரம் தருவதாகக் கூறினர். மகாவிஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள்,  ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் சித்தி அடைய வேண்டும்''ன்னு வேண்டிக்கிட்டாங்க. பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் மகாவிஷ்ணு சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுதான் சொர்க்க வாசல் திறப்பு தோன்றிய வரலாறு. 

தன்னை எட்டி உதைத்த பக்தனின் காலை பரமன் பிடித்துவிட்ட கதைலாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனா, பக்தனுக்கு சிறு கஷ்டம்ன்னா ஓடோடி வருவான். அதன்படி, அம்பரீஷ்ன்ற மன்னன் ஒற்றைக்குடையின் கீழ் இப்பூவுலகை ஆண்டு வந்தான். மன்னாதி மன்னன் ஆனாலும் சிறந்த விஷ்ணு பக்தன்.   உபவாசம்ன்னா இறைவனுக்கு அருகில் இருத்தல்ன்னு பொருள். அதன்படி, ஏகாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து வந்தான். ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று நீராடி உணவு உட்கொள்ள வேண்டும், இதுதான் முறை. அதன்படி உணவு அருந்த செல்லும்போது, அரண்மனைக்கு வந்திருந்த துர்வாச முனிவரை உணவு உண்ண அழைத்தான். அவரும் இதோ குளித்துவிட்டு வருகிறேன் என சென்றார். நேரம் கடந்தது., ஆனாலும். துர்வாசர் வந்தபாடில்லை. துவாதசி திதிக்குள் விரதம் முடிக்க வேண்டுமென்பதால் துளசி தண்ணீர் மட்டுமாவது அருந்துங்கள்ன்னு சொன்ன வேத விற்பன்னர்களின் பேச்சை கேட்டு துளசி தண்ணீர் மட்டும் அருந்தினான் அம்பரீஷ்.

இதைக்கேள்விப்பட்ட துர்வாசர், அதிதியாக வந்த தன்னை மதிக்காமல் விரதம் முடிக்க உன்டது தவறு என கோவம் கொண்டார். இல்லை வெறும் துளசி தண்ணீர் மட்டும்தான் குடித்தேன் என அம்பரீஷன் பணிந்து நின்றான். துளசி தீர்த்தம் உண்டதும் உணவு உட்கொண்டதுக்கு சமம். என்னை அவமதித்துவிட்டாய் என கோவம்கொண்டு தன் தலைமுடியிலிருந்து ஒரு முடியை பிடுங்கி, அம்பரீஷ் மீது ஏவினார். அது பூதமாக மாறி அம்பரீஷை துரத்த, அவன் விஷ்ணுவை சரணாகதி அடைந்தான்.  விஷ்ணுபகவான், தன் கையிலிருந்த சக்ராயுதத்தை அப்பூதத்தின்மேல் ஏவினார். அப்பூதம் துர்வாசரை வந்தடைய, அவரையும் சேர்த்து சக்ராயுதம் துரத்தியது. இதனால பயந்துபோன துர்வாசர் மகாவிஷ்ணுவை பணிந்தார்.

தன்னை பணிவதைவிட, யாரை ஏளனமாய் கருதி பூதத்தை ஏவினாயோ! அவனிடம் சென்று பணிந்து நில்ன்னு துர்வாசருக்கு அறிவுரை கூறினார். ஏகாதசி விரதமிருப்பவர்களை யாராலும் அழிக்க முடியாது, அதனால் அவன் மன்னித்தால் சக்ராயுதம் பழைய நிலைக்கு திரும்பும் என விஷ்ணு சொல்ல, அதன்படி அம்பரீஷை பணிந்தார் துர்வாசர். அம்பரீஷ் அவரை மன்னிக்க சக்ராயுதம் அம்பரீஷை பணிந்து மீண்டும் விஷ்ணுபகவானிடம் சென்றது. பக்தனை காப்பாற்ற இறைவனே ஓடோடி வந்ததால் அவனின் பெருமையை உணர்ந்துக்கொண்ட துர்வாசர் அம்பரீஷுக்கு ஏராளமான வரங்களை அள்ளி வழங்கினார்.

இத்தகைய மகிமை வாய்ந்த ஏகாதசி பெருமையை உணர்ந்து இந்நாளில் இறைவனை போற்றி துதித்து மோட்சம் அடைவோம். ஏன்னா, வைகுண்ட ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசின்னும் பேரு. இந்நாளில் விரதமிருந்தாலும், இறந்தாலும் மோட்சம் கிடைக்கும். அதுக்காக, மோட்சம் கிடைக்கும்ன்னு ஏடாகூடமா ஏதும் செய்யக்கூடாது. வைகுண்ட ஏகாதசி நாளில் இறந்தாலும் அவரவருக்குண்டான கர்ம வினைப்படிதான் மோட்சம் கிடைக்கும். அதனால நல்லதே செய்வோம். மோட்சம் பெறுவோம்..


நன்றியுடன்,
ராஜி.

Tuesday, December 26, 2017

திருப்பாவையின் முதல் எட்டு பாடல்களும் அதன் விளக்கமும்...

மார்கழி மாசம்ன்னாலே பஜனையும், கோலமும்தான் முக்கியம். அத்தோடு, திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும் முக்கியம். முப்பது பாடல்களை போட்டா பதிவு நீளும். அதனால ஒரு வாரத்துக்குண்டான திருப்பாவையும், அந்தந்த நாளில் நான் போட்ட கோலமும் வார இறுதியில் பதிவாக்கப்படும்.

மார்கழி 1ம் நாள்...

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


முழு நிலவு நிறைந்த மார்கழி மாதத்தில் செல்வ வளம் நிறைந்த ஆயர்பாடியின் அழகிய சிறுமிகளே ! அழகிய அணிகலன்களை அணிந்த அணங்குகளே ! எழுந்திருங்கள்.
இன்று முதல் நாம் அதிகாலையில் நீராடப் புறப்படுவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தை உடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான்.
அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி ஆயர்பாடியில் வசிக்கும் தன்தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் கோதை நாச்சியார் .

மார்கழி 2ம் நாள்...

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்


விளக்கம்
இந்த உலகத்தில் வாழ்வதால் பாவை நோன்பு நோற்கப்பெரும் வாய்ப்பினை உடைய நாம் அனைவரும், பாவை நோன்பிற்காக செய்ய வேண்டிய செயல்களை கூறுகின்றேன், நீங்கள் அனைவரும் கேட்பீர்கள்...
பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள பரமனின் திருநாமத்தை எப்போதும் பாட வேண்டும், நெய் பால் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் விடியலில் நீராடவேண்டும்; கண்ணுக்கு மை இட்டுக் கொள்வது, கூந்தலுக்கு மலர் சூடிக்கொள்வது போன்று நம்மை அழகு படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது; நமது முன்னோர்கள் தவிர்த்த தீய காரியங்களை நாமும் தவிர்க்க வேண்டும் பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீணாக அடுத்தவர் மீது கோள் சொல்லக் கூடாது; குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு தானமும், துறவிகளுக்கு பிச்சையும், அவர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு இட வேண்டும்; அவ்வாறு செய்த பின்னரும், நாம் புகழத்தக்க செயல்கள் ஏதும் செய்யவில்லை என்றும், இன்னும் செய்ய வேண்டிய நற்செயல்கள் உள்ளன என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்; மேலே குறிப்பிட்டவாறு செய்ய வேண்டிய செயல்களைச் செய்தும், தவிர்க்க வேண்டிய செயல்களைத் தவிர்த்தும், நாம் உய்யும் வழியினை நினைத்தவாறே, பாவை நோன்பில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.

மார்கழி 3ம் நாள்...
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து — ஏலோர் எம்பாவாய்.


விளக்கம்...
மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி, நாம் நோம்பிற்கு நீராடினால் நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும். (அதனால்) செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.

மார்கழி 4ம் நாள்....


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

மார்கழி 5 ம் நாள்...


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

மாயச்செயல்கள் செய்பவனை, வடமதுரையின் மைந்தனை, தூய நீர்கொண்ட யமுனையின் கரையில் வாழ்பவனை, ஆயர் குலத்தின் மணிவிளக்கை, தன் தாயின் பெருமையை உலகறியச் செய்த தாமோதரனை, தூயவர்களாக வந்து நாம் மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால், செய்த பிழைகளெல்லாம் தீயினில் எரியும் தூசென ஒழியும். ஆகையால் பாடுங்கள்

மார்கழி 6ம் நாள்...

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
     வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
     கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
     உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
     உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

மார்கழி 7ம் நாள்...
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்"
கீசு கீசு என்று ஆனைச் சாத்தன் (செம்போத்துப் ) பறவை தங்களுக்குள்ளே பேசும் பேச்சரவம் கேட்கவில்லையா பேய்ப் பெண்ணே? பகலாகியும் இன்னும் உறங்குகிறாயே? காசு மாலைகளையும் தங்க மணி மாலைகளையும் அணிந்த வாசம் மிக்க கூந்தலையுடைய ஆயர்குலத்துப் பெண்கள் மத்தினால் ஓசையோடு தயிர் கடையும் அரவம் கேட்கலையோ? நீ இவர்களின் தலைவியான பெண்பிள்ளை ஆயிற்றே, நாராயணன் மூர்த்தி கேசவனைப் நாங்கள் பாடக் கேட்டும் நீ படுத்திருக்கிறாயே, ஒளியுடையவளே கதவைத் திறவாய்.. என்பாவாய்.

மார்கழி 8ம் நாள்...


கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து  உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்;  கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.
 கிழக்குத் திசையில்  வானம் வெளுத்துள்ளது. எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின. கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம். குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்.  குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்,  மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால் நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.
அடுத்த எட்டு பாடல்களை அடுத்த ஞாயிறு அன்னிக்கு பதிவு வரும்
ராஜி.

Saturday, December 23, 2017

வளையலுக்குப்பின் இத்தனை கதை இருக்கா?!
ஆணோ பெண்ணோ எது பிறந்தாலும் பாட்டி வீட்டில் காப்பு,. வசதியானவங்களா இருந்தா தங்க காப்பு, வசதி இல்லன்னா செம்பு காப்பு. பெண் பிள்ளைகளின் காது குத்து, மஞ்சள் நீராட்டு, கல்யாணத்துக்கு வரை பாட்டி வீட்டிலிருந்து சீர் வரிசையில் வளையல் இருக்கும். கல்யாணமான பெண்ணு உண்டாகி சீமந்தம் செய்யும்போதும், வயசாகி சுமங்கலியா இறந்து கடைசி காரியம் செய்யும்போதும் பொறந்த  வீட்டிலிருந்து  வளையல் வரும்.  ஒருவேளை கணவன் இறந்தாலும், தாய் வீட்டு சீதனமா வளையல் வரும். ஆகமொத்தம் பெண்ணின் வாழ்வில் வளையலுக்கு முக்கியம் இடமுண்டு.

 பிறந்த குழந்தைக்கு காத்து கருப்பு அண்டாம இருக்க கருப்பு வளையல்.  கல்யாணத்துக்கு சிவப்பு, பச்சை வளையல். சீமந்தத்துக்கு பச்சை கலர் வளையல், இறப்புக்கு சிவப்பு பச்சை வளையல், தாலி அறுப்புக்கு கலர் கலர் கண்ணாடி வளையல்ன்னு வளையல் அணிவதிலும் ஒரு வரைமுறை உண்டு.  காது, மூக்கு, கழுத்துன்னு பவுன் கணக்கில் நகை போட்டிருந்தாலும் கைகளில் வளையல் போடாம இருந்தா அந்த பொண்ணு அழகு முழுமையடையாது. 
வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது...ன்னு கமலும், இளம்வயசு பொண்ணை வசியம் பண்ணும் வளவிக்காரன்னு கார்த்திக்கும்... மலர் கொடுத்தேன், கைக்குலுங்க வளையலிட்டேன்ன்னு சிவாஜியும், கண்ணான பொண்ணு, கல்யாண பொண்ணு கொண்டாடும் வளையல்ன்னு எம்.ஜி.ஆரையும் பாடவைத்தது இந்த வளையல். வளையல் போடாத கையால் சாப்பாடு பரிமாறக்கூடாதுன்னு சாஸ்திரம் சொல்லுது.  ஆனா, இப்பத்திய பசங்க அதை கிண்டல் செய்வாங்க. வெளில போய்ட்டு வந்து வாட்சை கழட்டி வச்சிட்டு வளையலை அணிய மறந்திருந்தா என் மாமனார் திட்டுவார்.  விளக்கு வச்ச பிறகு வளையலை கழட்டக்கூடாது. தெருவிலிருந்து வளையலை கையிலிருந்து உடைக்ககூடாது. மாசப்பிறப்பு, அமாவாசை, கிருத்திகை, வெள்ளி, செவ்வாயிலும் வளையலை கழட்டக்கூடாதுன்னு ஆயிரத்தெட்டு கண்டிசன் உண்டு.  மெட்டி ஒலி, கொலுசொலி, வளையலின் சிணுங்கல் ஒரு வீட்டில் ஒலிச்சுக்கிட்டே இருக்கனும், வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதை சிணுங்கல்ன்னு சொல்வாங்க. வளையோசை வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்ன்னு ஐதீகம்.அல்கலும் கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய நாளும் கலங்கும் துன்பத்தால் வருந்தி நாம் இங்கே தனித்திருக்க.... தலைவனை பிரிந்த தலைவி உடல் இளைத்து கைவளையல் கழண்டு விழும் நிலையில் அவன் நினைவால் நான் வாடி நிற்கிறேன்னு பாடுகிறாள்., இதுமாதிரி பலப்பாடல்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. என்னதான் உடல் இளைத்தாலும் கன்னம், இடுப்பு, தொடை, மாதிரியான இடங்கள் மட்டும்தான் இளைக்கும். எந்த நாளிலும் மணிக்கட்டு இடம் இளைக்காது. ஏன்னா, அது எலும்பு சார்ந்தது. சதைப்பகுதி கரைவது எளிது.எலும்பு கரைவது அரிது. ஆனால், அந்த எலும்பும் கரைவது போல தலைவனை நினைத்து உருகுகிறாள்ன்னு புலவர்கள் தலைவியின் காதலை பெருமையா சொல்றாங்க. இந்த பெருமைக்கு ஆண்டாள், பார்வதி, கண்ணகி, மாதவி தொடங்கி, சாதாரண பெண் வரை பசலை நோயால் ஆட்பட்டவர் ஏராளம். பதிவு காதல், சங்க இலக்கியம்ன்னு டாபிக் மாறுது. நாம வளையலுக்கு வருவோம். 

முக்காலமும் பெண்களை அழகுப்படுத்துவதில் வளையலுக்கு முக்கிய இடமுண்டு.  கண்ணாடி, வெள்ளி, பீங்கான், தங்கம், பிளாட்டினம், முத்து, மூங்கில், ஃபேசன் வளையல்கள்ன்னு வளையல்களில் பல உண்டு. எந்த வளையலா இருந்தாலும் பரவாயில்லை. ஆனா, வளையலை அணிவது மிக முக்கியம். வளையலை அணிவதால் மனதுக்கு அமைதி உண்டாகுது. கருப்பை, மூளை, இதயத்துக்கு சுத்த ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள் மணிக்கட்டில்தான் இருக்கு. வளையலை அணிவதால் அந்த ரத்த நரம்புகள் தூண்டப்படுது.  அப்ப ஆண்களுக்கு இந்த தமனி தூண்ட வேணாமான்னு சண்டைக்கு வர்றவங்களுக்கு ஒரு இன்ஃபர்மேஷனுங்க.. முன்னலாம் ஆம்பிளைங்க கைகளில் காப்பு, கங்கணம்ன்னு போட்டுட்டு இருந்தாங்க. ஆண்கள்தான் இதையெல்லாம் சுமக்க வெசனப்பட்டுக்கிட்டு விட்டுட்டாங்க.
பெண்களுக்கு வளைக்காப்பு செய்யும்போது எங்க ஊர்பக்கம் வேப்பிலை கொழுந்தால் ஆன வளையலை செஞ்சு சாமிக்கிட்ட வச்சு படைச்சு, அதைதான் முதல்ல போடுவாங்க, ஏன்னா, கர்ப்பிணி பெண்ணை சுற்றி திருஷ்டி, தோஷம் இருந்தால் விலகும்., கூடவே வளைக்காப்புக்கு வர்றவங்களில் யாருக்காவது நோய்த்தொற்று இருந்தா, இந்த வேப்பிலை வளையல் கிருமி நாசினியா செயல்படும்ங்குறதாலயும்தான். வேப்பிலையில் அம்மன் வாசம் செய்வதாக ஒரு நம்பிகை. இதன்மூலம் அம்மனின் அருளும் கிடைக்கும்.கண்ணாடி வளையல்...
கண்ணாடி வளையல் பார்க்க அழகா இருக்குறது மட்டுமில்லாம, வளையல்கள் ஒன்னோடு ஒன்னு உரசுவதால் ஏற்படும் ஒலி மங்கலகரமானதும், மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது.  அதனாலதான் வளைக்காப்பின்போது  கண்ணாடி வளையலை அணிவிக்குறாங்க. எந்த துஷ்ட சக்தியையும்  வளையோசை அண்ட விடாது. வளையலை அணியறதுக்கும் ஒரு வரைமுறை உண்டு. ஒற்றை வளையலை அணியக்கூடாது. ஒரு கையில் வளையலை  அணியக்கூடாது. ரொம்ப இறுக்கமாவும், ரொம்ப லூசாவும் அணியக்கூடாது. ஆனா, சின்னதிலிருந்து பெருசுன்னு வரிசையாய் அணியலாம். உடைந்த வளையலையும் அணியக்கூடாது. 

பச்சை நிற வளையல்  மனதை அமைதி படுத்தும். வாழ்வை செழிப்பாக்கும். சிவப்பு நிற வளையல் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை தரும்.  மஞ்சள் மகிழ்ச்சியை, மங்கலத்தை தரும்.   நல்ல எண்ணங்களை தரும். ஊதா நிறம் சுயமாய் சிந்திக்கும் திறனை தரும்.  ஆற்றலை அதிகப்படுத்தும், ஆரஞ்ச் நிறம் வெற்றியை தேடி தரும். வெள்ளை நிற வளையல் இனிய தொடக்கத்தை உண்டாக்கும். கருப்பு நிற வளையல்  மன தைரியத்தை உண்டு பண்ணும்.   மனதை அமைதிப்படுத்தி வாழ்வை செழிக்க வைக்கும் பச்சை நிற வளையலையும், எதையும் எதிர்கொள்ள வைக்கும் சிவப்பு நிற வளையலையும்தான் சுப நிகழ்ச்சிகளில் அணிவாங்க. 
தங்கம் வளையல் ....
தங்க வளையலை அணிவது பொருளாதார முதலீடு, ஸ்டேட்டஸ் மட்டுமில்லாம அணிபவருக்கு அழையும் கொடுக்கும். தங்கம் சக்தி ரூபம்.  தங்க வளையோசை  எழுப்பும் ஒலி இல்லத்தில்  லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்., தங்க வளையலோசைக்கும் இப்ப வரும் மத்த உலோகத்தால் ஆன வளையோசைக்கும் வித்தியாசமுண்டு.
கடல் சிப்பி, தாமிரம், தங்கம், அகேட், சால்சிதோனி போன்ற பொருட்களிலான வளையல்கள் இந்தியாவில் முற்றிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இடக்கையில் வளையல்கள் அணிந்து நடனமாடும் ஒரு பெண்ணின் உருவம் மோகஞ்சதரோ அகழ்வாய்வுகளில் (கி.மு 2600) கிடைத்திருக்கு. இதன்மூலம் வளையல் அணிவது தொன்றுதொட்டு வந்திருக்கு என்பது புலனாகுது. 

உத்திரப்பிரதேசத்திலிருக்கும் பிரோஜாபாத் தான் வளையல் உற்பத்தியில் முதலிடம்.  அதுக்கடுத்து ஆந்திராவில் இருக்கும் ஹைதராபாத்தில் உற்பத்தி ஆகுது.  கண்ணாடி வளையல் தயாரிக்க ஒருவித சிலிக்கா மணல்,  காஸ்டிக் சோடா, உடைந்த வளையல்தான் மூலப்பொருள். இவைகளை, சுண்ணாம்பு உலைப்போல இருக்கும் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் கிடங்குஅகளில் கொட்டி உச்சக்கட்ட வெப்பநிலையில் உருக வைப்பாங்க. அவரி உருகி பிழம்பாய் மாறும். அந்த பிழம்பை நீண்ட குச்சியில் எடுத்து, இறுகுவதற்குள் சிறிய ரோலரில் வைத்து  தேவையான கலர்ப்பவுடரை தூவுறாங்க.  அந்த நிறத்துக்கு மாறியதும் கம்பி சுருள் மாதிரி இருக்கும்.  அதை ஒரு கம்பியில் சேகரிப்பாங்க.

வளையல் உருவாகும் முறை
அந்த சுருளை கொஞ்ச நேரம்  வெயிலில் உலர்த்தி,  சுருள்களுக்குள் இருக்கும்  இணைப்பை கட் செஞ்சு, இணைச்சு வளையலாக்குவாங்க. அதுக்கு பிறகு, கல், சமிக்கி, பெயிண்ட், கிளிட்டர்ன்னு விதம் விதமா அழகான வளையல் தயார். இந்த வேலையில் ஆண், பெண், குழந்தைகள்ன்னு குடிசைதொழிலா செய்றாங்க. அதுமட்டுமில்லாம, குறைஞ்ச கூலி, அதிக சூடு, ரசாயண கலவையால்  விரைவில் நோய்களுக்கு ஆளாகுதல்ன்னு இந்த வேலையிலும் சிரமங்கள் அதிகம்.  ஆனாலும் இந்தியா மட்டுமில்லாம உலகம் முழுக்க உள்ள பெண்கள் தங்களால்தான் அழகா தெரியுறாங்கன்னு பெருமையா சொல்றாங்க. இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள்.
 பொதுவா பொண்ணுங்கன்னா புடவை, நகை பைத்தியமா இருப்பாங்க. ஆனா நான் வளையல் பைத்தியம்.  எனக்கு வளையல்ன்னா கொள்ளை பிரியம். எங்க போனாலும் ஒரு செட் வளையல் வாங்கிடுவேன்.அதும் புடவைக்கு மேட்சிங்கா கண்ணாடி வளையல் போட்டுக்க பிடிக்கும். கண்ணாடி வளையல், மெட்டல் வளையல், பேப்பர், சில்க் த்ரெட் வளையல்ன்னு விதம் விதமா 100 செட்டுக்கு மேல இருக்கு. என் அம்மாகூட திட்டும் இத்தனை வளையல் வாங்குறதுக்கு தங்க வளையல் வாங்கி இருந்தா பொண்ணுங்களுக்காவது யூஸ் ஆகும்ன்னு. ஆனா, என்ன திட்டியும் இந்த பைத்தியம் குணமாகல. சரி சரி பதிவை போட்டுட்டு கடைவீதிக்கு போய் பொங்கல் சேலைக்கு மேட்சிங்க வளையல் வாங்கி வரேன். பை.. பை..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,
ராஜி.

Friday, December 22, 2017

சனீஸ்வரன் யந்திராலயம் - ஏரிக்குப்பம். ஆரணி - புண்ணியம் தேடி


பொதுவா ஒருத்தங்களுக்கு கண்டகச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி  இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமம், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது மிக  அவசியம். அஷ்டமத்தில் சனி இருக்கும்போது அல்லல்பட்டவர்கள் பலர். நளன், சிவப்பெருமான், அசுரகுருவான சுக்ராச்சாரியார், பாண்டவர்கள்,  ராவணன், சீதைன்னு தொடங்கி, நீங்க, நான்ன்னு இந்த பட்டியல் தொடரும். அதனால, இந்த மூன்று சனியால் பீடிக்கப்பட்டவங்க பரிகாரம் செஞ்சுக்க வேண்டியது அவசியம். சனீஸ்வர பகவான், அவருக்குண்டான பரிகாரம்ன்னாலே திருநள்ளாறுதான் நினைவுக்கு வரும். ஆனா, ஆரணில இருந்து சுமார் 12 கிமீ தூரத்தில் ஏரிக்குப்பம்ன்ற திருத்தலத்தில் யந்திர ரூபமாய் அருளும் சனீஸ்வர பகவான் ஆலயத்திலும்  பரிகார பூஜைகளை செய்யலாம். 


 எந்திரம்ன்னாலே அது செப்பு தகட்டில் செஞ்சதா இருக்கும். ஆனா, இந்த கோவிலில் சித்தர்களால்  கல்லில் எந்திரம் செஞ்சு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கு.    இக்கோவிலில் சனிபகவான் யந்திர வடிவில் 5 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அறுகோண வடிவத்தில்  அருள்புரிகிறார். அதர்ன் போக்க  ஆறு முனைகளில் திரிசூலமும், அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமார் வடிவங்களும் இருக்கு.  யந்திர சிலையின் மேல்பக்கம் தென்புறமாக சூரியனும், நடுவில் ஸ்ரீசனீஸ்வரபகவானின் வாகனமான காகத்தின் உருவமும், வலப்புறமாக சந்திரனும் இருக்காங்க. அவற்றின் கீழே ஷட்கோண யந்திரமும் நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டிருக்கு.  மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்களும் இந்த யந்திரத்தில் பொறிக்கப்பட்டிருக்கு. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்திருப்பது ஒரு சிறப்பு. . இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் பார்க்கவே முடியாது.
சனி பகவான் பணம், பதவின்னு எதையும் பாராமல் தராசு முள் மாதிரி நடுநிலையா நின்னு அவரவரக்கு நீதி வழங்குவார். மன்னாதி மன்னர்களும், தேவாதி தேவர்களும் இவர் பிடியில் துன்பப்பட்டபோது, அற்ப மானிடப்பிறவி நாம எம்மாத்திரம்?! தாளமுடியாத துன்பங்களை தந்தாலும், சனிபகவான் இளகிய மனம் கொண்டவர். அன்பாக வேண்டிக் கேட்டால், கேட்டதைத் தந்துவிடுவார். சனீஸ்வர அஷ்டோத்திர மந்திரத்தை ஜெபித்து சனி பகவானை சாந்தப்படுத்திய பிறகுதான் பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. சனீஸ்வர ஸ்தவராஜ ஸ்தோத்திரம் சொல்லித்தான் தனது நாட்டை திரும்பப் பெற்றான் நளன்.


பொண்டாட்டிங்கன்னாலே இம்சைங்கதான் போல! அதுக்கு சனிபகவானும் விதிவிலக்கல்ல. உலகத்தையே ஆட்டி படைக்கும் சனிபகவான் சிறந்த சிவ பக்தர். இருந்தாலும் விஷ்ணுவையும் வணங்குபவர், சனிபகவானுக்கு குழந்தை இல்லை. அதனால அவர் மனைவி தேஜஸ்வி மிகுந்த மனவேதனையில் இருந்தாள். ஒருமுறை சனிபகவான், பெருமாளை நோக்கி தவமிருந்த வேளையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சனிபகவானை நெருங்கி அவர் எதிரில் காத்திருந்தாள். தவத்திலிருந்த சனிபகவான் அவள் காத்திருப்பை உணராததால், கோவங்கொண்டு, உன் பார்வை நேரடியாக யார்மீது பட்டாலும் அவர்கள் உருப்படாமல் போவார்கள் என சபித்து சென்றாள். அதனால், அன்றிலிருந்து, கீழ்ப்பார்வை குனிந்த தலை நிமிராமல் இருப்பார். அவருக்கு உதவும் பொருட்டு அவர் அருகிலேயே  அவரின் அன்னை சாயாதேவி எந்திர வடிவில் தரையில் புதைக்கப்பட்டு  மகனுக்கு அருள்பாலிக்கிறார்.  அம்மா பக்கத்திலிருந்தா எல்லாரும் கப்சிப்ன்னு இருக்குற மாதிரி இங்க சனிபகவானும் அமைதியா சாந்தமா இருக்கார். 


சனிபகவான், யந்திர வடிவில் அதும் கல்லால் ஆன யந்திரத்தில் அருள்பாலிக்க காரணம், கல் எதுக்கும் அசைந்துக்கொடுக்காது. அதுமாதிரி உறுதியாக சனிபகவான் தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்ன்னும்,    ” நேத்திரத்தைக் காகம் போல் நிச்சயமாய்க் காக்க, ஆத்துமத்தில் ஆனந்தமாய் “  ன்ற ஔவையாரின் வாக்கிற்கேற்ப,   இரு பக்கங்களிலும் சூரிய சந்திரர்களை வைத்து நடுவில் காகத்தை வச்சிருக்காங்க. சூரியனாகிய வலதுவிழி நாட்டத்தையும், சந்திரனாகிய இடதுவிழி நாட்டத்தையும் புருவ மத்தியாகிய முத்தித் தலத்தில் வைக்க (காகம் பார்ப்பதைப் போல் ஒரு மனநிலையில்) ஆறுமுகப்பட்டையான ஸ்ரீமுருகப் பெருமான் ஜோதி  தரிசனம் கிடைத்திடும். இந்த ஆறாவது அவதாரத்தைத் தாண்டி ஏழாவது ஆதாரத்திற்கு சென்றால், சிவனைத் தரிசனம் செய்யலாம். அங்கிருந்து வழியும் யோக -சோம பானத்தை இந்திரன்போல அனுபவித்து மகிழலாம். இதன்மூலம் ஸ்ரீஆஞ்சனேயர்போல் நம் உடலை கல்போல காயகற்பம் செய்து காயசித்திக்கான வழியைப் பெற பரிபாஷையாக இந்த யந்திரத்தை ஸ்தாபித்து சித்தர்கள் வழிபட்டிருக்காங்க.


இனி கோவில் அமைந்த வரலாற்றை பார்க்கலாம்..

நீர் வளமும் ,நில வளமும் நிறைந்து செழிப்புடன் விளங்கிய ஏரிக்குப்பத்தை 1535-ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்துவந்த ராஜநாராயண சம்புவராய மன்னரின் படைத்தளபதிகளில் ஒருவராக விளங்கிய வையாபுரி என்பவர் இவ்வழியாக குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது, குதிரை நிலை தடுமாறி கீழே விழுந்ததால், வையாபுரிக்கு இடதுகாலில் முறிவு ஏற்பட்டு, குதிரைக்கும் பலத்த அடி ஏற்பட்டது. அச்சமயம் ஒரு பெண் சாமியாடி, இங்கு, தான் இருப்பதாகவும் தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் சனிபகவான் கூற்றை வெளிப்படுத்த,  உடனே வையாபுரி பிரார்த்தனையில் ஈடுபட்டார். அவருடைய எலும்புமுறிவு குணமடைந்தது. பிறகு அந்த கிராமத்தில் ஸ்ரீசனீஸ்வரபகவானுக்கு கோவில் எழுப்பிட முனைந்தார். அப்போதைய இறையருள் வல்லுனர்கள் சனிபகவானுக்கு யந்திர , பீஜாட்சர வடிவில் சிலை செய்ய ஆலோசனை கூறினர். அதன்படி, 6 சாஸ்திரங்கள், 4 வேதங்கள் மற்றும் 64 கலைகளும் கற்று இறைமார்க்கமாக  வாழ்வை செலுத்தும் வேத விற்பன்ன சிவாச்சாரியர்களின் மந்திர யந்திர வடிவங்களால், ஸ்ரீசனீஸ்வரருக்கு பிரத்தியேக சிலா ரூபம் உருவாக்கப்பட்டு , ஸ்தாபனம் செய்யப்பட்டு , 4 கால பூஜைகளும் நித்திய ஹோம அனுஷ்டானங்களும், செய்யப்பட்டு , அந்த யந்திர ரூபத்திற்கு பலமூட்டி , அதன் தேஜஸினால், அனைத்து மக்களின் வினைகளும் நீங்கி செழிப்புற செய்தனர்.


முப்பதாண்டுகள் வாழ்ந்தவருமில்லை. முப்பதாண்டுகள் வீழ்ந்தவரில்லைன்னு சனிப்பெயர்ச்சியினை மனதில் வைத்து ஒரு சொலவடை இருக்கு. அது மனித வாழ்க்கைக்கு மட்டுமின்றி, இந்த கோவிலுக்கும்தான் போல!! சிறப்பாய் நடைப்பெற்று வந்த சனீஸ்வர யந்திர வழிபாடு  நாளடைவில் மன்னர்களின் போர், , ஆட்சி மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் கவனிப்பாரற்றுப் போயிடுச்சு. வழிபாடு இல்லாததால் மக்களும் இக்கோவிலுக்கு வருவதில்லை. அதனால், கோவில் இடிந்து யந்திரச்சிலையும் மண்ணுள் புதையுண்டது.சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் சிறுவர்களால் இந்த யந்திரம் வெளிப்பட்டது. உடனே, கிராம அலுவலருக்கு விவரம் சொல்ல, அவர்  தொல்பொருள் நிபுணர்கள் வரவைத்து ஆராய்ந்ததில் 15-ம் நூற்றாண்டில் இருந்த யந்திர சனிபகவான் என அறியப்பட்டது.  அகழ்வாய்வாளர்களும் இதை ஆய்வு செய்து அதன் தொன்மையை உறுதி செய்தாங்க.  அந்த யந்திர சிலையை அவ்வூரிலேயே பழைய இடத்தில் சிறிய கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு  நித்திய அனுஷ்டான பூஜைகளும், சனிக் கிழமைகளில் சிறப்பு ஹோமம் மற்றும்  அபிஷேக ஆராதனைக்ளும் நடைபெற்று வருது.

திருமணப் பிராப்தி, குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லக்ஷ்மி கடாட்சம், சனீஸ்வர ப்ரீத்தி மற்றும் சகல தோஷ நிவர்த்தி வேண்டி பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து , அபிஷேக அர்ச்சனைகள் புரிகின்றனர். எள் முடிச்சிட்ட தீபம் , நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றி வேண்டுதல் புரிகின்றனர். 9 வாரங்கள் தொடர்ந்து இங்கு வந்து வழிபாடு செய்து, வேண்டும் வரங்களை பெற்றுச் செல்கின்றனர்.  பக்தகோடிகள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘ பாஸ்கர தீர்த்தம் ‘ என்ற தீர்த்தக் குளத்தில் நீராடி தலத்தில் வழிபட்டு செல்கின்றனர். இந்த பாஸ்கர தீர்த்தம் நளன் தீர்த்தத்துக்கு ஒப்பானது.
சனி பகவானை சந்தோஷப்படுத்த,  சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், எண்ணெய் தானம் செய்தல்,  எள் தானம், நீல நிற வஸ்திர தானம், சனி பகவானுக்கு எள்சாதம் நைவேத்தியம் செய்தல், தர்மசாஸ்த்தா ஐயப்பனை  வழிபடுதல் , ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம  பாராயணம் செய்தல், ராமாயண பாராயணம், சுந்தரகாண்ட பாராயணம், அரச மரத்தை வலம் வருதல்,  ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ன்னு லிஸ்ட் நீளுது.  இதுபோன்ற நல்ல காரியங்களைச் செய்பவர்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்  என சனி பகவான் சத்தியம் செய்துள்ளதாக சாஸ்திரங்கள் சொல்லுது.

இப்படிப்பட்ட சனிபகவான் ஒவ்வொரு ராசியும் உயிர்வாழ்வதற்குக் காரணமான ஜீவநாடியாகும். எனவே சனிபகவானை ஆயுள்காரகன்ன்னும் உயிர்காரகன்ன்னும் சொல்றாங்க. ஒரு குழந்தை பிறந்தால், அதற்குண்டான அற்பாயுள்- மந்திம ஆயுள்- பூர்ணாயுள் என்பன போன்ற ஆயுள் பலத்திற்கு  ஆயுள்காரகனாகிய சனிபகவானே  ஒருவரது  ஆயுளுக்கு  அதிபதியாக அமைகிறார்.  இப்படிப்பட்ட சனி அந்தக் குழந்தையின் ஜாதகத்தில் நல்லவிதமாகவல்லவா அமைந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், ஆயுள்  பலத்திற்கு எப்படி உத்தரவாதம் அளிக்கமுடியும்? ஆகவே இப்படிப்பட்ட சனிபகவனை வணங்காமல் எப்படி இருப்பதாம்?!இங்கு துலாபாரம் செலுத்தும் வழக்கமும் உண்டு. குழந்தை வரம் வேண்டி, நிறைவேறியவர்கள்  நெல், சர்க்கரை, பணம்ன்னு அவரவர் வசதிப்படி வேண்டிக்கிட்டு இங்கு துலாப்பாரம் இடுறாங்க. பொதுவா சனிபகவான் கோவிலில் நேருக்கு நேர் நின்னு கும்பிட மாட்டாங்க. அதேமாதிரி கோவில் பிரசாதமான விபூதி, குங்குமம் உள்ளிட்ட அர்ச்சனை பொருட்களை வீட்டுக்கு கொண்டு போகமாட்டாங்க., ஆனா, இங்க அப்படி எதும் கண்டிசன் இல்ல. காரணம் இறைவன் இங்கு யந்திர வடிவில் இருப்பதால்தான். 
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் வட்டத்தில் இந்த ஆலயம் இருக்கு. திருவண்ணாமலை வழியா வர்றவங்க திருவண்ணாமலை டூ வேலூர் அல்லது போளூர் போகும் பஸ்சில் ஏறி, சந்தைவாசலில் இறங்கி அங்கிருந்து ஆட்டோக்களில் வரலாம். அதேப்போல வேலூரிலிருந்து வர்றவங்க, வேலூர் டூ திருவண்ணாமலை, படைவேடு செல்லும் பஸ்சில் ஏறி சந்தைவாசலில் இறங்கி வரலாம். சென்னைல இருந்து வர்றவங்க, நேரா ஆரணி பஸ் பிடிங்க. எங்க வீட்டுக்கு வாங்க விருந்து சாப்பிடுங்க. அங்கிருந்து 12கிமீ தூரம்தான் இந்த கோவில். வண்டி, ஆட்டோ, பஸ்சுன்னு போயிடலாம். மெயின்ரோட்டிலிருந்து ஒரு கிமீ தூரம் வயல்வெளிகள் சூழ்ந்த பாதையில் நடந்து கோவிலை அடையலாம்.  ஆரணி மற்றும் போளூரிலிருந்துதான் நேரடி பேருந்து இருக்கு.


ஏரிக்குப்பம் ஸ்ரீ சனிபகவான் துணை:

ங்கடம் தீர்க்கும் சனி பகவானே

மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவு இன்றி சனீஸ்வரத் தேவே
இச் சகம் வாழ இன்னருள் தருவீரே!
ஏரிக்குப்பம் சனீஸ்வரா போற்றி
ஏரிக்குப்பம் சனீஸ்வரனே போற்றி
ஏரிக்குப்பம் பொங்கும் சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் அஷ்டம சனி சாந்தம் போற்றி
ஏரிக்குப்பம் ஏழரைநாட்டு சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் நளதீர்த்தம் உடைய சனி பகவானே போற்றி
ஏரிக்குப்பம் வன்னிபுத்ர அர்ச்சனைபிரிய சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் எல்லோருக்கும் நல்லருள் தரும் சனிபகவானே போற்றிபோற்றி!
இதை அனைவரும் பாராயணம் செய்ய அனைத்து நன்மைகளும் உண்டாகும். சனிபகவான் நல்லருள் எப்போதும் கிடைக்கும்!!!


முகவரி :
ஸ்ரீசனீஸ்வரர் பகவான் கோவில்,
திருஏரிக்குப்பம் கிராமம்,
களம்பூர் அஞ்சல்,
திருவண்ணாமலை மாவட்டம்,
தொலைப்பேசி எண்: 04181 248224/248424

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,
ராஜி.