Friday, August 31, 2018

ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில் - அறிவோம் ஆலயம்முன்னலாம் வேலூர்ன்னதும் கோட்டையும், வெயிலும்தான் நினைவுக்கு வரும். ஆனா, இப்ப பஞ்சாப்பில் சீக்கியர்களுக்கான பொற்கோவில் இருக்குறது மாதிரி  இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் இருக்கு.  பொதுவா சாமியார், சாமியார் மடம்ன்னா டூ இல்ல ட்வெண்டி ஸ்டெப் பேக் அடிக்கும் ஆளு நான். ஆனா, எனக்கு இந்த கோவிலுக்கு போக பிடிக்கும். ஏன்னா, அந்த காலத்து டி.ஆர் பட செட் மாதிரி பிரம்மாண்டமான கோவில். கோவிலின் சுத்தம், நீர் மேலாண்மை, குப்பைக்கழிகளின் மறுசுழற்சி, கழிவுநீரை சுத்திகரித்து அதனை விவசாயத்துக்கு பயன்படுத்துதல், குறைந்த செலவில் மருத்துவம்ன்னு  சில விசயங்கள் பிடிக்கும். இக்கோவிலில் பிடிக்காத விசயம் கோவிலை வியாபார தலமாக்கியது.

சமீபத்துல உருவான இந்த கோவில்  வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட  மலைக்கோடி என்னும் இடத்தில் இருக்கு. இந்த கோவிலுக்கு நாராயணி பீடம் ன்னு பேரு. இந்த கோவிலை நிர்மாணிக்க காரணமானவர் சக்தி அம்மா.  இக்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தகட்டினால் வேயப்பட்டது.  இந்த கோவில் நால்வகை வேதத்தை வெளிபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முழுக்க முழுக்க தங்கத்தாலான கோவில்களில்  இது இரண்டாவது கோவில். இந்த தங்கக்கோவில் சுமார் 5,000 சதுர அடிப்பரப்பளவு பரந்து விரிஞ்சிருக்கு, . தங்க கோவிலில்  ‘நாராயணி அம்மன்”. வீற்றிருக்கிறாள். இவள் லட்சுமி தேவியின் அம்சம்.  
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நாராயணி அம்மன் இப்பகுதியில் சுயம்புவாய்  தோன்றி இருக்கிறாள்.  சிறிய குடிசை அமைத்து இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வந்திருக்கின்றனர்.  மலைக்கோடி ஒரு காலத்தில் ஆள் அரவமற்ற காடாக இருந்தது. இங்கு சித்தர்களும், யோகிகளும் தியானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நாராயணி அம்மன் உபாசகரான சக்தி அம்மாவின் விருப்பத்தின்பேரில் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில்  பொற்கோவில் கட்ட ஆரம்பித்து  2007ல்  கோவில் கட்டுமானப்பணி முடிவடைந்தது.

500 ஆண்டுகால பழமையான கோவிலாய் இருந்தாலும்,  நெடிதுயர்ந்த நுழைவுவாயிலில் மெட்டல் டிடெக்டர், சிசிடிவி கேமரா, ஆன்லைன் புக்கிங் என டிஜிட்டல் மயமாவும் இருக்கு இக்கோவில். வழக்கமான கோவில் உண்டியலுக்கு பதிலாய் கோட் சூட் அணிந்த இளம்பெண்கள் மானிட்டர் முன் நின்று கிரெடிட் கார்டை தேய்த்து நன்கொடைகளை வசூலிக்குறாங்க. 
கோயில் வளாகத்திலேயே அன்னலட்சுமி சைவ உணவகம் நாலு மாடி யில் நமக்கு பசியாற்றுது. நாராயணி அம்மனின் லட்டு பிரசாதம் ஒன்று ரூபா பத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.  கோவிலை சுத்தி அகழி ஒன்னு இருக்கு. 

கோவிலை பறவையின் பார்வையில் பார்க்கும்போது சுதர்சன சக்கர அமைப்பில் இருக்கு. சக்கரத்தின் நடுவில் நாராயணி அம்மன் வீற்றிருக்கிறாள். சுமார் இரண்டு கிமீ தூரத்துக்கு நட்சத்திர அமைப்பில்  அமைந்த பாதையை சுற்றி வந்து அம்மனை தரிசிக்கனும். கோவில் வளாகம் முழுக்க பச்சை பசேலென புல்வெளிகளும், மரங்களும் நிறைந்து நமக்கு சுத்தமான காற்றை அளிக்குது. அத்தோடு நடக்குற கஷ்டம் தெரியாம இருக்க ஆங்காங்கு முயல், மான், மயில் மாதிரியான சிற்பங்களும்,  துர்க்கை அம்மன், சரஸ்வதி தேவி சிற்பங்களும், செயற்கை நீரூற்றுகளும், செயற்கை குன்றுமென ஒரு சினிமா செட்டிங்க்க்குள் வந்த மாதிரி இருக்கு. 

நட்சத்திர வட்டத்தை சுற்றி முடித்து இறுதியாக தங்கக் கோயிலை அண்மித்தோம்.சூரிய ஒளிபட்டு அந்த இடமே ஜொலித்து கொண்டிருந்தது. மனிதனுடைய காமம், குரோதம், மதம், லோபம், சாத்வீகம், அகந்தை, டம்பம், ராஜஸம், தாமஸம், ஞானம், மனம், அஞ்ஞானம், கண், காது, மூக்கு, நாக்கு, மெய்யென வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் போவதை உணர்த்தக்கூடிய வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைச்சிருக்காங்க. 

ஆங்காங்கு சக்தி அம்மன் படமும், அவரின் அருளுரைகளையும் நம் கவனத்துக்கு கொண்டு வர பொறிச்சு வச்சிருக்காங்க. சாண்டிலியர் விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள்  இங்க இருக்கு. இதுலாம் இரவை பகல் போல மாற்றுது. ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று  அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. 

வேலூரிலிருந்து  6 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கொடி என்கிற   ஸ்ரீபுரம் அமைந்திருக்கு. ஸ்ரீன்னா மகாலட்சுமின்னு அர்த்தம். மகாலட்சுமி வாசம் செய்யும் ஊர் என்பதால் ஸ்ரீபுரம்ன்னு பேர் உண்டானதாம்.  1000 ஏக்கர் நிலப்பரப்பில் 55000 சதுர அடியில் கோவில் அமைந்துள்ளது. 

இக்கோவிலை அமைக்க திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 400 பொற்கொல்லர்கள் மற்றும் செப்பு வேலை செய்பவர்கள் ஆறு வருடங்கள் அயராது உழைத்தனர். இந்திய ரூபாய் 600 கோடி செலவில் கோவில் எழுந்து உள்ளது. கோவில் சுவர்களில் செப்புத் தகடுகள் அடிக்கப்பட்டு பின் தங்கத் தகடுகள் 09 அடுக்குகளாக வேயப்பட்டிருக்கு. 

எத்தனை நேரமானாலும் கோவில் அழகை கண்ணாற கண்டு ரசிக்கலாம். ஆனா தொட்டு பார்க்க முடியாத மாதிரி தடுப்பு உண்டாக்கி வச்சிருக்காங்க.  சிறப்பு தரிசனத்துக்கு 250ரூபான்னு வசூலிக்குறாங்க. 

இங்கு நவராத்திரி, சிவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை, கோகுலாஷ்டமின்னு அத்தனை விசேசமும் கொண்டாடப்படுது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கோ பூஜை செய்விக்கப்படுது. இதில் அனைத்து பக்தர்களும் கலந்துக்கொள்ளலாம்.

சதீஷ் (ஸ்ரீசக்தி அம்மா) என்பவர் தன் பெற்றோர்களுடன்   அரியூர்-மலைக்கோடியில் ஒரு வீடு கட்டி குடியேறினார்கள். வீட்டின்முன் புதர் மண்டிக்கிடந்தது. அதற்குள் ஒரு புற்றும் இருந்தது. புற்று  இருந்தா பாம்பு தொல்லை இருக்குமென பயந்த பெற்றோரிடம்,  பாம்பு சக்தியின் அம்சம், அதனால் அதை ஒன்றும் செய்ய வேண்டாமென சதீஷ் சொல்லியும் கேட்காமால் பாம்பு புற்றை இடிக்க ஆட்களை கூட்டி வந்தனர். ,  புற்றை இடிக்க வந்தவர், பாம்பின் வாசனையை அறிய (புற்றில் பாம்பு  இருந்தால் மல்லிகைப்பூ வாசனை வரும்) மூக்கை வைத்து முகர்ந்து பார்த்தார். அவ்வளவு தான்.. .. பாம்பு பிடிப்பவர் அப்படியே தூக்கி வீசப்பட்டார்.

நடுங்கியபடியே எழுந்த அவர்,  இந்த புற்று சாதாரண புற்று இல்ல, தெய்வசக்தி நிறைந்த புற்று. இந்த புற்று இங்கேயே இருப்பது நல்லது. இதனால் இந்த  பகுதிக்கு நன்மை கிடைக்கும். எனவே, அகற்ற வேண்டாம் என்ற கூறியபடி புற்றை பார்த்து கைகூப்பி வணங்கினார். அருகிலிருந்த பெற்றோர்கள் மெய் சிலிர்த்தனர். ஸ்ரீசக்தி அம்மா சொன்னது சரிதான் என்று புரிந்துகொண்டனர். இந்த புற்றுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீசக்தி அம்மா  பூஜை செய்து வந்தார்கள். புற்றின் அருகில் அமர்ந்தபடி நாடிவந்த பக்தர்களுக்கு ஞானவாக்கு அருளினர். இன்றும் அருளி வருகிறார்.
பொற்கோவிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோவிலில்மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக் கோவிலைதான் ‘நாராயணி பீடம்”ன்னு சொல்வாங்க. . இங்குதான்  கோவிலின் நிறுவனரான ‘சக்தி அம்மா” இருக்கிறார். அவர் தினமும் பூஜை செய்ய 75 கிலோ தங்கத்தால் ஆன சுவர்ணலட்சுமி சிலை இருக்கு.   இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது.
இந்த அம்மனுக்கு இங்கு வரும் அனைத்து பக்தர்களும் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்விக்கலாம்.   

 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபமும், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சியும், திறந்தவெளி கலையரங்கமும், புல்வெளியும், நீரூற்றுகளும், பூங்காக்களும் இங்கு உள்ளன. இந்த கோயிலில் உலகின் மிகப் பெரிய வீணையும், 10008 திருவிளக்கும் இங்க இருக்கு இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும். மக்கள் அனைவரும் எளிதில் கோயிலுக்கு வருவதில்லை.  ஆன்மிக கருத்துக்களை சொன்னாலும் மக்கள் விரும்பி கேட்பதுமில்லை. மக்களை ஈர்க்கும் பொருட்டு பிரம்மாண்டமான கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இப்பிரம்மாண்டத்தை காண வரும் பக்தர்கள் இந்த கோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதோடு உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்து செல்வார்கள் என்ற நோக்கத்துடன் இந்த கோயிலை கட்டியதாக சக்தி அம்மா சொல்வார்.

பாதுகாப்பு காரணமாய் செல்போன், கேமராவை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை போட்டிருக்காங்க. அதிக தூரம் நடக்க முடியாதவர்களுக்கென சக்கர நாற்காலி வசதி உண்டு. 
வேலூரிலிருந்து 6கிமீ தூரத்தில் இக்கோவில் இருக்கு. வேலூரிலிருந்து டவுன் பஸ் போகும். 15 ரூபா கொடுத்து ஷேர் ஆட்டோக்களிலும் போகலாம். கோவிலை சுத்தி பார்த்துட்டு வரும்வரை நம்முடைய உடைமைகளை பாதுகாக்க லாக்கர் வசதி இங்க இருக்கு. அம்மனை தரிசிச்சுட்டு வர்றவங்க பசியாற அன்னதானமும் நடக்குது.

சாதி, மத பேதமில்லாம எல்லோரும் அம்மனை தரிசிக்கலாம். காலை 8 மணி முதல் இரவு 9 வரை கோவில் திறந்திருக்கும். ஐந்து கால பூஜை நடைப்பெறும். படங்கள் அனைத்தும் ஸ்ரீ நாராயணி பீடத்து முகநூல் பக்கத்திலிருந்து எடுத்தது.
நன்றியுடன்
ராஜி. 

Thursday, August 30, 2018

சந்தன மார்பிலே... - பாட்டு புத்தகம்

இப்ப மாதிரி ஆபாச அசைவுகளையும், பாடல்வரிகளையும் கொண்ட பாடல்கள்லாம் வீட்டுக்குள் வராத காலம்.   தாவணி கனவுகள் படத்துல  பாக்கியராஜ் தன்னோட சகோதரிகளை சினிமாவுக்கு கூட்டி போவார். லவ் சீன் வரும்போதெல்லாம் சில்லறைய கீழ போட்டு தங்கச்சிங்களை எடுக்க சொல்லி அந்த சீனை பார்க்க விடாம பண்ணுவார். அதுமாதிரிதான் எங்கூட்டுலயும் நடக்கும்.  நாடோடி தென்றல்  படப்பாட்டு செம ஹிட். அதனால் படம் பார்த்தே ஆகனும்ன்னு அடம்பிடிச்சு போயாச்சுது. கார்த்திக் படம் ரிலீசானால் அதோட பாட்டுக்களை என் அண்ணா ஒருத்தங்க ரெக்கார்ட் பண்ணி எனக்கு கொடுப்பார்.    மணியே மணிக்குயிலே பாட்டுதான் இந்த படத்துல செம ஹிட். ஆனாலும் எனக்கு சந்தன மார்பிலே.. பாட்டு பிடிக்கும். அந்த பாட்டுல ஒருசில சீன் அப்பிடி இப்படி இருக்கும்.  படம் பார்த்ததிலிருந்து எங்க வீட்டில் இந்த பாட்டுக்கு 144 போட்டாச்சு. அட! ஆடியோ கேசட்டுக்கு தடா போட்ட என் அப்பாரு அறிவை நினைச்சு இப்ப நான் வியக்கேன்.

ஏழையர்  துணை முலை குங்குமச் சுவடும்
ஆடவர், மணி வரைப் புயத்து மென் சாந்தும் மாழ்கி...

இது கம்பராமாயணத்தில் வரும் வரி. அந்த காலத்தில் ஆண்கள் தோள்களில் சந்தனம் பூசுவது வழக்கம். அதேப்போல, வயதுக்கு வந்த பெண்கள் மார்பினில் குங்குமம் பூசுவது வழக்கமா இருந்துச்சாம். ஏழையர்ன்னா பெண்கள்,  பெண்கள் மார்பில் பூசி இருக்கும் குங்குமமும், ஆண்கள் தோளில் பூசி இருக்கும் சந்தனமும் கலக்குமாறு காதலன் காதலி சேர்ந்தனர்ன்னு பொருளாம்.  பெண் மார்பில் பூசி இருக்கும் குங்குமம், ஆண் தோளில் பூசி இருக்கும் சந்தனத்தோடு கலக்குதுன்னா பெண்,ஆணைவிட உயரமா இருக்கனும், இருந்திருக்கனும்.  

ஆனா,  தன் பிள்ளைகளுக்கு வரன் தேடும்போது  பொண்ணைவிட மாப்ளை உயரம் அதிகமா இருக்கனும்ன்னு நம்ம ஊரில் எதிர்பார்ப்பாங்க. அது எதுக்குன்னா, பெண் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் ஏராளம். அவள் துவண்டிருக்கும்போது, தன்னோட மாப்ளை மார்பில் சாய்ஞ்சு ஆறுதல் தேடிக்குவா. அப்படி சாயும்போது  அவனோட இதயம் துடிக்கும் ஓசை அந்த பொண்ணுக்கு பெரும் ஆறுதல் கொடுக்குமாம்.  ஆணின் மார்பில் பூசி இருக்கும் சந்தனத்தோடு, பெண்ணின் நெற்றி குங்குமம் கலக்கும்ன்னு ஒரு சினிமா பாட்டுக்கு, அதும் கொஞ்சம் அப்பிடி இப்படி இருக்கும் சினிமா பாட்டுக்கு இப்படி ஒரு விளக்கத்தை    கொடுக்கும் தமிழாசிரியைலாம் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்ல்ல! 9 டூ 12 வரையான வகுப்பில் வந்த என் தமிழாசிரியை பேரு மீனாட்சி.  காதல் முதல் சினிமா வரை எல்லாம் பேசுவாங்க.  எனக்கு தமிழின்மீது ஆர்வம் வரக் காரணமானவங்க. இப்ப எங்க எப்படி இருக்காங்கன்னு தெரியாது. ஆனா இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் என் ஆசிரியை நினைவுக்கு வருவாங்க


சிவரஞ்சனி ராகத்துல ஷெனாய், புல்லாங் குழல், தபலா, வயலின்னு  மனதை மயக்கும் அத்தனை இசைக்கருவிகளும் இதுல இருக்கும்.   அதிலும் ஆரம்பத்துல வரும் புல்லாங்குழல் இசை நம்மை எங்கோ கொண்டு செல்லும். இதுல கார்த்திக்கை பரதம் ஆடச்சொன்னால், எக்சர்சைஸ் செஞ்சிருப்பார். பரத நாட்டியத்துக்குன்னு ஒரு நளினம் உண்டு. அதுல கார்த்திக் பெயில்தான்.


சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே!
ஓ மதி ஓ மதி..

மங்கள நேரமே ‘
இங்கொரு யாகமே!
ஓ மதி ஓ மதி..
நாதங்கள் சாட்சி..
வேதங்கள் சாட்சி... ஓஒ
சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே....

பல உலகம் போகும் யாத்திரை
நிழலுககில் நேர்ந்ததே!
கனவுலகில் விழுந்த ஓர் திரை
நிழலுகில் விலகுதே!
வேள்வி வேள்வி காதல் தேவனே! 
தோல்வி தோல்வி காதல் போரிலே!
நாதங்கள் சாட்சி.. வேதங்கள் சாட்சி.. ஓ ஓ ஓ

சந்தன மார்பிலே.. குங்குமம் சேர்ந்ததே.....

அலை அலையாய் காதல் சங்கொலி 
நடு இரவில் முழங்குதே! 
மணிமணியாய் நாதன் கிண்கிணி
நடு இரவில் பொழியுதே!
வேதம் வேதம் 
காதல் வேதமே!
ஓது ஓது காதல் தேவனே!
நாதங்கள் சாட்சி.. வேதங்கள் சாட்சி ஓஓஒ..

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே!...
ஓ மதி ஓ மதி
மங்கல நேரமே இங்கொரு யாகமே! 
ஓ மதி ஓமதி..
படம் : நாடோடி தென்றல்
இசை : இளையராஜா
பாடியவர்கள்: மனோ, எஸ்.ஜானகி
எழுதியவர்: வைரமுத்து
நடிகர்கள் : கார்த்திக், ரஞ்சிதா

இந்த பாட்டுலாம் இரவு நேரத்தில், பயணங்களின்போது இயர்போன்ல புல் சவுண்ட் வச்சு கேக்கனும். 
நன்றியுடன்,
ராஜி

Wednesday, August 29, 2018

ராஜாராணி குளம் (ஆர்க்காடு) - மௌனச்சாட்சிகள்

ஆற்காடு அருகே ஆற்காடு நவாப் மன்னர்கள் வாழ்ந்து வந்த இடத்துல கோட்டையின் மிச்சம் மீதியான ராஜாராணி குளம் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆற்காடுக்கு போக வேண்டிய வாய்ப்பு வந்ததும் ராஜாராணி குளத்துக்கு போய் வரனும்ன்னு முடிவு செஞ்சு, இயர்போன்ல இளையராஜாவை ஒலிக்க விட்டு வண்டிய 60ல விட்டேன். 60ல போகலாமான்னு திட்டாதீக. ரொம்ப நாள் ஆசை.. ஹைவேஸ்ல வண்டில இயர்போன்ல பாட்டு கேட்டுக்கிட்டு ஸ்பீடா போகனும்ன்னு..  அங்கங்க விசாரிச்சு பல எதிர்பார்ப்போடு கோட்டைக்கு சாரி கோட்டை இருந்த இடத்துக்கு போய் சேர்ந்தேன். நான் போனதும்,   ‘ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜகுல திலக, ராஜ குலோத்துங்க, ராஜ பராக்கிரம...’’ என  கட்டியம் ஒலிக்க என்னை வரவேற்க ஆற்காடு நவாப் வம்சாவளியினர் யாராவது வருவாங்கன்னு பார்த்தேன். ப்ப்ப்ப்ப்ப்ச்ச்ச்ச்ச்ச் யாரும் வரல :-(ஆல் மரங்கள் நிறைந்த காடுகளை கொண்ட ஊர்ங்குறதால ஆல்+காடு=ஆல்காடுன்னு அழைக்கப்பட்டு இப்ப ஆற்காடு ஆனதாகவும், சோழ மன்னனுக்குரிய ஆத்தி என்கிற ஆர் மரங்கள் நிறைந்த காடுகள் இருந்ததால் இப்பகுதிக்கு ஆர்+காடு=ஆர்காடு என அழைக்கப்பட்டு இப்ப ஆற்காடு என அழைக்கப்படுது. இந்த ஆற்காடு சென்னை டூ பெங்களூர் நெடுஞ்சாலையில் இருக்கு. இந்த ஊரில் மக்கன் பேடா என்னும் இனிப்பு வெகு பிரசித்தம், கூடவே பிரியாணியும்....

குடியிருப்புகளின் மத்தியில் தனியே தன்னந்தனியாய் நான் காத்து காத்து கிடந்தேன்னு சோலோவா நின்னிட்டு இருக்கு ராஜாராணி குளம். சாக்கடை நாத்தத்தை பொறுத்திக்கிட்டு சின்ன வாய்க்காலை கடந்து அந்த பக்கம் போனால்.....  என் மண்டைக்குள் காலியா கிடக்குற மாதிரி அத்துவான காடா இருக்குறதால தனியா போக பயமா இருக்கு. யாராவது என் கைய பிடிச்சுக்கிட்டு என் கூடவே வாங்கப்பா ப்ளீஸ்...


இந்த இடம் இப்ப தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்குதாம். அப்படின்னு யார் சொன்னதாம்?! ம்ம் அங்க இருக்க போர்ட் சொல்லுதுப்பா. வாழ்ந்து கெட்ட குடும்பம்ன்ற வார்த்தைக்கு இலக்கணமா இந்த ராஜா ராணி குளம் இருக்கு. கிட்டத்தட்ட 2 ஏக்கரா நிலத்தில் இருக்கும் இந்த இடத்தை நம்மாளுங்களை நம்பி விடமுடியாதுன்னு வேலி போட்டு பாதுகாக்குறாங்க. சமீபத்துலதான் மழை பெய்திருந்ததால் புல், பூண்டுலாம் செழிச்சு வளர்ந்திருந்தது. அதனால், அங்க மாடுகளை கொண்டு வந்து மேய விட்டிருக்காங்க.  அந்த காலத்தில் குதிரை, யானைகள்லாம் இருந்திருக்கும்ல! இப்ப மாடுகள்தான் இருக்கு. அந்த மாடுகளை பார்க்க ஒரு எருமைமாடு போய் இருக்குன்னுலாம் கிண்டலடிக்கக்கூடாது.
இந்த இடத்தின் வரலாற்றினை சொல்ல ஆளுமில்ல. எந்த குறிப்புமில்லை. வெறும் படத்தை வச்சு பதிவு தேத்தலாம்ன்னு பார்த்திட்டிருந்த வேளையில் ஆற்காடு நவாப்களை பத்தின புத்தகம் கைக்கு கிடைச்சது. அதிலிருந்து கிடைச்ச தகவல்களை கொண்டுதான் இந்த பதிவு. 

கலிபா உமர் இப்னு அல் கத்தாப் அவர்களின் வழிவந்தவர்கள்தான் ஆற்காடு நவாப்கள். இவர்கள் 1692 ஆம் ஆண்டு மொகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப்பால் கன்னட தென்னிந்திய பகுதிகளில் வரிவசூல் செய்ய இவர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப் சுல்பிக்கார் அலி . இவர் மராத்திய, விஜயநகரப் பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை கிருஷ்ணா ஆறு வரை பரப்பினார். பின்பு வந்த நவாப் தோஸ்த் அலி (1732–1740) என்பவர் தனது அரசை 1736 இல் மதுரை வரையில் விரிவுபடுத்தினார்.
முகம்மது அலி வாலாஜா
அதன்பின்னர் முகம்மது அலி வாலாஜா என்பவர் ஆட்சிக்கு வந்தார். நவாப் அரசர்களில் மிக முக்கியமானவர் இவர்.  இவரது காலமே நவாப்களின் பொற்காலம்ன்னு சொல்றாங்க. இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் இருந்ததாம். இவர், அரண்மனையிலேயே உண்டு களிக்கும் ராஜாக்கள் போலில்லாமல், தனது நாட்டின் அனேகமான பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, தன் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குலாம் மதம், இனம்  பாரபட்சமில்லாம நன்கொடைகளை அளித்தார். இன்றைய திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் நகரில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயமும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயமும் அவற்றில் முக்கியமானதாகும். இவர் 1765 இல் முகலாயப் பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.
இதன்பிறகு இவர் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் நட்புறவை மேற்கொண்டார். தனக்கு கீழ் உள்ள சமஸ்தானங்களை கட்டுப்படுத்த இவர்  ஆங்கிலேய கம்பனி படைகளை உபயோகப்படுத்தினார். மேலும் இவர் பிரெஞ்சு – ஹைதர் அலி கூட்டு படையை எதிர்க்க ஆங்கிலேயற்கு ஆதரவாக போரிட்டார். இதன் காரணமாக இந்திய சுதந்திர உணர்விற்கு எதிரானவர் என்ற தோற்றத்தைப் பெற்றதோடு தனது அரசாட்சியின் பெரும்பகுதியை கிழக்கிந்தியக் கம்பனியிடம் இழந்தார்.


பதின்மூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண் ( 1825–1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867 இல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பதிலாக வரிவசூலில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கீகரிக்கப்பட்டார்.முதலாம் கர்நாடகப் போர் 1746–1748 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், ஐதராபாத் நிசாம் போன்ற இந்திய ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட மோதல்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு வந்தன. முகலாயப் பேரரசு வலுவிழந்த பின்னர் கர்நாடகப் பகுதி டெல்லி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது. பெயரளவில் ஐதராபாத் நிசாம் இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால் உண்மையில் நவாப் தோஸ்த் அலியின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதிகள் இருந்தன. அவரது மரணத்துக்குப்பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த பலப்பரீட்சை உருவானது. 


நிசாமின் மருமகன் சந்தா சாகிபும் ஆற்காடு நவாப் அன்வாருதீன் முகமது கானும் கருநாடக நவாப் ஆக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின. 1748 இல் ஐரோப்பாவில் மூண்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் பகுதியாக தென்னிந்தியாவிலும் இரு ஐரோப்பிய நிறுவனங்களும் மோதின. ஆளுனர் டூப்ளேயின் பிரெஞ்சுப் படைகள் 1746 இல் சென்னையை பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றின. அடுத்து நடைபெற்ற அடையார் சண்டையில் ஆற்காடு நவாபின் படைகளைத் தோற்கடித்தன. 1748இல் ஐக்ஸ் லா ஷப்பேல் ஒப்பந்த்தின் மூலம் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, தென்னிந்தியாவிலும் அமைதி திரும்பியது.

இரண்டாம் கர்நாடகப் போர் 1749-54 காலகட்டத்தில் நடைபெற்றது. இரு வாரிசுரிமைச் சச்சரவுகள் இதற்குக் காரணமாக அமைந்தன. 1748 இல் ஐதராபாத் நிசாம் நிசாம்-உல்-முல்க் இறந்தார். அவரது மகன் நசீர் ஜங்கும் பேரன் முசாஃபர் ஜங்கும் அடுத்த நிசாமாகப் போட்டியிட்டனர். அதே வேளை சந்தா சாகிப் ஆற்காடு நவாபாக முயன்றார். முசாஃபர் ஜங்கும் சந்தா சாகிப்பும் பிரெஞ்சு ஆதரவைப் பெற்றிருந்தனர். நசீர் ஜங்கும் ஆற்காடு நவாப் அன்வாருதீனும் பிரித்தானிய ஆதரவைப் பெற்றிருந்தனர். போரின் தொடக்கத்தில் பிரெஞ்சு தரப்புக்குத் தொடர் வெற்றிகள் கிட்டின. அன்வாருதீன் 1749 இல் கொல்லப்பட்டார். சந்தா சாகிபும் முசாஃபர் ஜங்கும் முறையே கர்நாடக நவாபாகவும் ஆற்காடு நவாபாகவும் பதவியேற்றனர். ஆனால் 1751 இல் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஆற்காட்டைக் கைப்பற்றின. 1754 இல் கையெழுத்தான பாண்டிச்சேரி ஒப்பந்தத்தின் மூலம் அமைதி திரும்பியது. முகமது அலி கான் வாலாஜா ஆற்காடு நவாபானார். இப்போரின் பலனாக பிரெஞ்சு தரப்பு பலவீனமடைந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலை பலப்பட்டது.
ஆனா  இந்த அமைதி நிலைக்கலை. 1758 இல் மூன்றாம் கர்நாடகப் போர் மூண்டது. இது ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போரின் ஒரு பகுதியாக இரு தரப்பினராலும் கருதப்பட்டது. தென்னிந்தியாவில் பிரித்தானிய ஆதிக்கத்தை முறியடிக்க பிரெஞ்சுப் பிரபு லால்லி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். புனித டேவிட் கோட்டையை பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றிய பின்னர் சென்னையை முற்றுகையிட்டார். ஆனால் அதனைக் கைப்பற்றத் தவறிவிட்டார். 1760 இல் பிரித்தானியப் படைகள் வந்தவாசிச் சண்டையில் வெற்றி பெற்றன. காரைக்காலைக் கைப்பற்றின. 1761 இல் பாண்டிச்சேரியும், செஞ்சிக் கோட்டையும் பிரித்தானியரிடம் வீழ்ந்தன. 1763 இல் கையெழுத்தான பாரிசு ஒப்பந்தம், ஏழாண்டுப் போரையும் மூன்றாம் கர்நாடகப் போரையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. பிரெஞ்சு நிறுவனம் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்தது.


இவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் சென்னை நகரில் ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவும் இவர்களது பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வுதியத்தை அளித்து வருகின்றது. இவர்களில் நடப்பு கடைசி ஆற்காடு இளவரசரான முகம்மது அப்துல் அலி ஆஸிம் ஜா ஜுலை 1994 இல் பட்டத்துக்கு வந்தார். எந்த அரசக்குடும்பத்துக்குமில்லாத மதிப்பு ஆற்காடு நவாப் குடும்பத்துக்குண்டு. அரசக்குடும்பமென்று சைரன் வச்ச கார் உண்டு. மயிலாப்பூர் கோவில் விசேசத்தின்போது இவர்களுக்கு முதல் மரியாதை உண்டு.
இங்கிருந்த கோட்டையின் பழைய படம்
இந்த கோட்டைக்கு ஆலம்பனா கோட்டைன்னு  இங்கிருக்கவுங்க சொல்றாங்க. ஆனா அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரில.  சிப்பாய் கலகத்துக்கு பின் இந்த கோட்டை ஆங்கிலேயர்களால் தகர்க்கப்பட்டதா சொல்றாங்க.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வீரசம்பன் என்ற சம்புவராய மன்னன், ஆற்காடு உள்ளிட்ட பகுதியை ஆட்சி செய்து வந்தான். இவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1306–1317) ஆற்காடு பாலாற்றில் தொடங்கி, செய்யாறு தாலுகா வரையிலான பகுதியை வளமாக்கும் வகையில் சுமார் 15 அடி அகலமுள்ள வாய்க்கால் ஒன்றினை வெட்டினார். இதனை செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டி, பாலாற்று நீரை பாசன வசதிக்காக கொண்டு சென்றுள்ளார். அவ்வாறு கட்டப்பட்ட இந்த வாய்க்கால் வீர சம்மன் வாய்க்கால் என அழைக்கப்பட்டது.

வீர சம்மன் கால்வாயின் நீர் ஆதாரத்தை கொண்டுதான் 300 ஆண்டுகளுக்கு முன் இந்த கோட்டை கட்டப்பட்டதா சொல்றாங்க. ஆற்காட்டில் கஸ்பா பகுதியில் அக்காலத்தில் நவாபுகளால் கட்டப்பட்ட கோட்டைக்கு தனியே அகழி அமைத்திருந்தாலும், வீர சம்பமன் வாய்க்கால் இரண்டாவது அகழியாகவே இருந்துள்ளது. பிற்காலத்தில் நவாபுகளின் கோட்டையானது போர்களால் முற்றிலும் அழிந்து போனது. தற்போது ராஜா குளம், ராணிகுளம், ஒரு மசூதி, கிழக்கு திசையில் கோட்டை வாயிலின் ஒரு பக்க கற்சுவர் ஆகியன மட்டுமே மிச்சமுள்ளது.


குளத்துக்கு மேலே இருக்கும் ராணிகள் உடை மாற்றும் அறை. 


இக்கோட்டை பகுதியின் தெற்கில், தோப்புக்கானா பகுதியில் உள்ள மக்கான் என்ற இடத்தின் அருகே சம்புவராயர் கட்டிய வாய்க்காலின் ஒரு பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதோடு இவ்வாய்க்காலின் மீது செல்லும் கோட்டையின் தெற்கு புறவாயில் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் அக்காலத்தில் திருச்சிக்கு செல்லும் சாலையின் தொடக்கமாக இருந்துள்ளது. இதன்வழியாக பல படையெடுப்புகளும் நடந்ததா சொல்றாங்க.

இந்த இடம் ரொம்ப பாழ்ப்பட்டு கிடந்ததைக்கண்ட வரலாற்று ஆய்வாளர்களின் சீரிய முயற்சியால் செப்பனிடப்பட்டது. நான் போனதுக்கு சில நாள் முன்னதான் திரிசா நடிக்கும் பரமபத விளையாட்டு படத்தின் பாடல் ஒன்று இங்க எடுத்தாங்களாம். அப்ப சரி, இனி திரிசா வந்து போன இடம்ன்னு சொல்லி ஆட்கள் வருவாங்க. அப்படியாவது ஆட்கள் வருவாங்களான்னு மௌனமா மிஞ்சியிருக்கும் சாட்சியங்களோடு காத்துக்கிட்டிருக்கு.

சென்னைல இருந்து 90கிமீ தூரத்தில் இருக்கு, நேரடி பேருந்து உண்டு. இல்லன்னா, திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், பெங்களூரு, குடியாத்தம் வாணியம்பாடி செல்லும் பேருந்துகள் இந்த வழியாதான் போகும். ரயில் மார்க்கமா வரனும்ன்னா வாலாஜாப்பேட்டை வரை ரயிலில் வந்து அங்கிருந்து பேருந்தில் வரலாம். ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து  ஆட்டோக்களில் வரலாம்.

நன்றியுடன்,
ராஜி

Tuesday, August 28, 2018

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ஆட்டு ஈரல் தொக்கு - கிச்சன் கார்னர்

போன வாரம்லாம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைஞ்சு போய் மயக்கம். டாக்டர்கிட்ட போனால் எதுலாம் சாப்பிட்டா எச்.பி அளவு அதிகரிக்கும்ன்னு லிஸ்ட் போட்டு கொடுத்துட்டார்.  முதல் நாள் இரவே மூணு திராட்சையை தண்ணில ஊற வச்சு    வேளைக்கு ஒன்னுன்னு சாப்பிடனும். மறுநாள் ஆறு ஊற வச்சு வேளைக்கு இரண்டா சாப்பிடனும். இப்படியே தினமும் வேளைக்கு ஒன்னா எண்ணிக்கையில்  சேர்த்துக்கிட்டு 9 திராட்சை வரை போகனும். ஒருநாள் இடைவெளி விட்டு மீண்டும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமாம். பீட்ரூட் சேர்த்துக்கனும், தக்காளி சாறு +எலுமிச்சை சாறு+தேன் கலந்து காலை மாலை குடிக்கனுமாம்.  தினமும் சமையலில் கீரை, பச்சை பட்டாணி சேர்த்துக்கனுமாம். உடனடியா ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ஆட்டு ஈரல் சாப்பிடனும்ன்னு சொன்னாங்க. கீரை,  பீட்ரூட்லாம் பச்சை குழந்தை வாய்ல முத்தம் கொடுத்த மாதிரி சப்ப்ப்ப்புன்னு இருக்கும்.  அதனால் காரசாரமான ஆட்டு ஈரலை சாப்பிடலாம்ன்னு சொல்லி வாங்கி வந்தாச்சு.

தேவையான பொருட்கள்;
ஆட்டு ஈரல்
வெங்காயம்’
தக்காளி
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சப்பொடி
மிளகாய்பொடி
உப்பு
எண்ணெய்
மிளகு
தனியா.
சோம்பு,
காய்ஞ்ச மிளகாய்
கடுகு
பட்டை
லவங்கம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி


ஆட்டு ஈரலை சுத்தம் பண்ணி சின்ன சின்னதா நறுக்கிக்கனும். வெங்காயம், தக்காளியை கழுவி பொடியா நறுக்கிக்கனும். வெறும் வாணலில மிளகு, தனியா, சோம்பு போட்டு வறுத்துக்கனும், கடைசியா காய்ஞ்ச மிளகாயை சேர்த்து வறுத்து பொடி செஞ்சு வச்சுக்கனும்.
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு, பட்டை, லவங்கம் போட்டு தாளிச்சுக்கனும்.

வெங்காயம் சேர்த்து வதக்கிக்கனும்.

இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கனும்.
தக்காளி சேர்த்து வதக்கிக்கனும்.

உப்பு சேர்த்துக்கனும்.

ஆட்டு ஈரல் சேர்த்துக்கனும். அத்தோடு மஞ்சப்பொடி சேர்த்துக்கனும். அசைவம் சமைக்கும்போது கொஞ்சம் மஞ்சப்பொடி சேர்த்துக்கிட்டால் கெட்ட வாடை வராது. 

மிளகாய் தூள் சேர்த்து, கரம் மசாலா சேர்த்துக்கனும். 
 
பொடிச்சு வச்சிருக்கும்  மிளகு, சோம்பு, தனியா மிளகாய்  பொடியை சேர்த்து, தேவையான அளவு தண்ணி சேர்த்து நல்லா கொதிக்க விடனும். குழம்பா வேணும்ன்னா தேங்காய் முந்திரி பருப்பு அரைச்சு சேர்த்துக்கலாம். இல்ல, தொக்கு பதத்தில் வேணும்ன்னா கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து  இறக்கிக்கனும். 

காரசாரமான ஆட்டு ஈரல் தொக்கு ரெடி, இட்லி, தோசை, சாப்பாடுன்னு எல்லாத்துக்குமே செட் ஆகும்.

ரத்தத்திலிருக்கும் ஒருவகை புரதத்துக்கு ஹீமோகுளோபின்னு பேரு. இதை எச்.பின்னு சுருக்கமா சொல்வாங்க. இந்த எச்.பிதான் ரத்தத்தை சிவப்பா வச்சுக்கிட்டு, உடலின் அனைத்து அவையங்களுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் வேலைய செய்யுது. இது குறைஞ்சா ரத்த சோகை உண்டாகும். உடலில் வலு இல்லாத மாதிரி ஆகிடும். நெஞ்செரிச்சல், தலைவலி, மயக்கம், நகம் உடைதல், சுறுசுறுப்பில்லா தன்மை உண்டாகும். அதனால் இரும்பு சத்து அதிகம் இருக்கும் முருங்கை கீரை, முட்டைக்கோஸ், இறைச்சி, பீட்ரூட்லாம் அதிகம் சேர்த்துக்கனும்.

ராஜிக்கு உடம்புக்கு முடிலன்னு ஹார்லிக்ஸ், ஆப்பிள், ஆரஞ்சுன்னு வாங்கிட்டு வராதீக. அதுலாம் எனக்கு பிடிக்காது. வேணும்ன்னா, நெட்கார்ட் போட்டு விடுங்க. அது போதும் :-)

நன்றியுடன்,
ராஜி.