Thursday, March 14, 2019

ஒரு பொண்ணு நினைச்சா.... காரடையான் நோன்பு


என்னதான் படிப்பு, அழகு,  அறிவு, குணம், சொத்து, அந்தஸ்து என  இருந்தாலும் வாழ்க்கைத்துணை சரியில்லன்னா வாழ்க்கையே பாழ். நல்ல கணவன் கிடைக்கவும், கிடைத்த கணவன் முறுக்கிக்கிட்டிருந்தா அவனை நல்வழிப்படுத்தவும் நோற்கும் நோன்பே “காரடையான் நோன்பு”.  இந்த நோன்பு பத்திய சொலவடை ஒன்னு இருக்கு. அது என்னன்னா, மாசிக்கயிறு பாசி படியும் என்பது பழமொழி. இதுக்கு விளக்கம்.. இந்த பண்டிகையின்போது பெண்கள் திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொள்வர். மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின்போது தாலிக்கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர்.  இந்த விரதத்தினை அனுஷ்டித்தால் கேட்ட வரம் கிடைக்கும். தம்பதியர் மனமொத்திருந்தால் அடுத்து?! குழந்தைதானே?! அந்த வரமும் கிடைக்கும்.  கர்ப்பிணி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றக்கூடாது என்பது ஐதீகம். கிட்டத்தட்ட பத்துமாதம் கழுத்தில் மஞ்சள் கயிறு இருந்தால் அழுக்கடையும். இதான் அப்பழமொழிக்கு விளக்கம்.
சாவித்திரி என்ற பெண் தன் கணவனான சத்தியாவனின் உயிரை காப்பாற்றிய தினமே காரடையான் நோன்பு என கொண்டாடப்படுது.  அந்த கதையை இனி பார்க்கலாம்...

அசுபதி என்னும் அரசனுக்கு,  அழகிலும்,  பண்பிலும் சிறந்து விளங்கிய பெண் இருந்தாள். அவளுக்கு  சாவித்திரின்னு பெயர் வைத்து அருமை பெருமையாய் வளர்த்து வந்தார். அவள் சிறுபிள்ளையாய் இருந்தபோது அரண்மனைக்கு வந்த நாரதர், சாவித்திரியை கண்டு, இவள் பின்னாளில் உலகம் போற்றும் பதிவிரதையாய் திகழ்வாள். ஆனால், இவள் கணவன் இருபத்தொயொரு வயது மட்டுமே வாழ்வான் என சொல்லிச் சென்றார். அதை நினைத்து அரசனும், அரசியும் கவலையுற்றனர்.

சாவித்திரிக்கு தக்க பருவம் வந்ததும், மகளுக்கு தக்க மணாளனை தேர்ந்தெடுக்க சுயவரம்  நடத்தினர்.   அரண்மனைக்கு வந்த எந்த நாட்டு ஆணும் சாவித்திரி மனதை ஈர்க்கவில்லை. அதனால், தக்க துணையுடன் மணாளனை தேடி தூரதேசத்துக்கு பயணமானாள். அவ்வாறு செல்கையில் ஒருநாள் காட்டில் தங்க நேர்ந்தது.   சத்யசேனன் என்ற சத்யவானைக் காண நேரிட்டது. சால்வ நாட்டு மன்னர் துயுமத்சேனன் தன் நாட்டை பகைவனிடம் இழந்து தன் மனைவி, தன் மகனான சத்யவானுடன் காட்டில் வாழ்ந்து வந்தார். முதுமையீன் காரணமாய் சத்யவானின் தாய் தந்தையருக்கு பார்வை பறிபோனது. கண் பார்வையற்ற தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தபொழுதில் சத்யவானை சாவித்ரி கண்டாள். அவன் தன் பெற்றோர்பால் கொண்டிருந்த பக்தியும் சிரத்தையும் அவள் உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ள அவனையே தன் கணவனாக மனதில் ஆசையினை வளர்த்துக்கொள்கிறாள்.

நாட்டுக்கு திரும்பிய சாவித்திரி தன் தந்தையிடம் சத்தியவான் பற்றி சொல்ல, நாடு நகரம் இழந்து காட்டில் சுள்ளி பொறுக்கி வயிற்றை கழுவுபவனுக்கா உன்னை மணமுடிப்பது என வாதிட்டார். சாவித்திரியும் தன் கொள்கையில் பிடிவாதமாய் நின்றாள். என்ன செய்வதென தெரியாமல் மகளின் மனதை மாற்ற நாரதரை தூதனுப்பினார் அரசன். சாவித்திரியிடம் சென்ற நாரதர், எத்தனையோ சமாதானப்படுத்தியும் சாவித்திரி மசியவில்லை. கடைசி அஸ்திரமாய்...  அம்மா! இன்னும் ஒரு வருடத்தில் இறந்துவிடும் ஒருவனையா  நீ மணக்கப்போகிறாய் என வினவ, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின் மனதை தேற்றிக்கொண்டு, ஐயா! சத்தியவானை காணும்போதே அவரிடம் என் மனதை பறிகொடுத்துவிட்டேன். வேறு யாரையாவது மணக்கசொல்லி என் கற்பை மாசுப்படுத்தாதீர்கள் என சொல்லிவிட, சத்யவான், சாவித்ரி திருமணம் கோலாகலமாய் நடந்தது.

கணவனின்  இறப்பு தேதி தெரிந்தும், அதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் கணவனோடு காட்டிற்கு சென்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.  நாரதர் சொன்ன சத்தியவானின் கடைசி  நாள் நெருங்கியது. மூன்று நாட்கள் ஊன், உறக்கமின்றி கடுமையான விரதமிருந்தாள் சாவிதிரி. இறுதி நாளன்று, சத்தியவானை அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்று விறகு சேகரித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது, சத்யவான், சாவித்ரி! எனக்கு தலைச்சுற்றி மயக்கம் வருவதுப்போல இருக்கு என சொல்ல, என் மடியில் படுங்கள் என படுக்க வைத்துகொண்டான். சற்று நேரத்தில் அவனது உயிர் பிரிந்தது. காட்டில் தன்னந்தனியாய் கணவனை கட்டிப்பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் எமத்தூதர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் நெருங்காவண்ணம் அக்னி வளையத்தை உண்டாக்கினாள். எத்தனை முயன்றும் அவர்களால் சத்யவானை நெருங்கமுடியாமல் போகவே எமனிடம் சென்று முறையிட்டனர்.

இறந்தவர்களுக்கு நீதி வழங்குபவனும், மரணக் கடவுளுமான எமனே அங்கு வந்தான்.  பூமியில் இறந்த முதல் மனிதன் அவன்.  அவன்தான் மரணக் கடவுளாவான்.  இறந்தப்பிறகு ஒருவனைத் தண்டிக்க வேண்டுமா?! அல்லது அவனுக்கு முக்தியளிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பவன்தான் எமன்.  அவனே அங்கு வந்தான்.  அவன் தேவன்,  ஆதலால் அந்த அக்னி வட்டத்தைத் தாண்டி உள்ளே நுழைய முடிந்தது.

அவன் சாவித்ரியைப் பார்த்து, மகளே, இந்த உடலை விட்டுவிடு.  மரணம் மனிதனின் விதி.  முதன்முதலில் மரணமடைந்த மனிதன் நான்.  அன்றிலிருந்து எல்லோரும் சாகத்தான் வேண்டும்.  மரணமே மனிதனின் விதி என்றான்.  இதைக் கேட்டு சாவித்திரி விலகிச் சென்றாள். எமன் உடலிலிருந்து உயிரைப் பிரித்தான்.  பின்னர் உயிரை அழைத்துக்கொண்டு அவன் தன் வழியே செல்ல ஆரம்பித்தான்.  சிறிது நேரத்திற்கெல்லாம் சருகுகளின்மீது யாரோ நடந்து வருகின்ற காலடிச் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.  சாவித்திரி எமனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.

'மகளே, சாவித்ரி! ஏன் என்னைப்  பின்தொடர்கிறாய்?  எல்லா மனிதர்களின் கதியும் இதுதான்' என்றான் எமன்.  'தந்தையே! நான் தங்களைப் பின்தொடரவில்லை.  ஒரு பெண்ணின் விதி இதுதானே!?  திருமணமான பெண்கள் அவன் செல்லும் இடத்திற்கு அவளும் சென்றுதானே ஆக வேண்டும்.  ஒரு அன்புக் கணவனையும். அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி, பிரிக்கவேண்டாமே என இறைஞ்சி நின்றாள்.

 அவளின் நிலைக்கண்டு மனமிரங்கிய எமன், 'உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எதாவது ஒரு வரம் கேள்'.என்றார்.தாங்கள் வரம் தருவதானால் என் மாமனார்,,மாமியார் பார்வை பெற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என அருள்புரியுங்கள் எனக்கேட்டாள். சரியென வாக்களித்து, சத்தியவான் உயிரோடு அங்கிருந்து சென்றான் எமன். சிறிதுதூரம் சென்றதும், காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். சாவித்ரி வந்துக்கொண்டிருந்தாள். நீ கேட்ட வரம் தந்துவிட்டேனே! மீண்டும் ஏன் பின்தொடர்கிறாய் என எமன் வினவினான்.

தந்தையே! நான் என்ன செய்வேன்?!  நான் திரும்பிப் போகவேண்டும் என்றுதான் பார்க்கிறேன்.  ஆனால் என் மனமோ என் கணவன் பின்னால் செல்கிறது, உடம்பு மனதைத் தொடர்கிறது.  என் உயிர் முன்னாலேயே போய்விட்டது.  ஏனெனில் நீங்கள் அழைத்துச் செல்கின்ற உயிரில்தான் என் உயிர் இருக்கிறது.  உயிர் சென்றால்  உடம்பும்கூடச் செல்லத்தானே வேண்டும்? 'சாவித்ரி, உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தேன்.  இன்னும் ஒரு வரம் கேள், அனால் அது உன் கணவனின் உயிராக இருக்கக் கூடாது'. 'தந்தையே! தாங்கள் எனக்கு இன்னொரு வரம் தருவதானால் இழந்த அரசையும் செல்வத்தையும் என் மாமனார் பெற அருள்புரியுங்கள்'.என்றாள்.

'அன்பு மகளே! நீ கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.  வீடு திரும்பு.  ஏனெனில் மனிதர்கள் எமனுடன் செல்ல முடியாது'.  எமன் தொடர்ந்து செல்லலானான்.  சாவித்ரியும், அவர்களை பின்தொடர்ந்தாள்.   எமன் சற்று கோவத்துடன் இன்னும் என்ன வேண்டும்.. இறந்தவர் ஒருபோதும் பிழைக்கமுடியாது அதை நினைவில் கொண்டு கேள் என எச்சரிக்க...,கற்புநிலை மாறாமல் நூறு பிள்ளைகள் நான் பெற்று, அவர்கள் சத்யவானின் அரசாங்கத்தை ஆளவேண்டும். அதை என் மாமனாரும் மாமியாரும் பார்த்து மகிழவேண்டுமென அருளவேண்டும் என வேண்டி நின்றாள். அவள் கேட்ட வரத்தின் உள்ள நன்மையை கருத்தில் கொண்டு அதையும் கொடுத்து சத்யவான் உயிரோடு எமலோகம் சென்றான். மீண்டும் சாவித்ரி வருவதை கண்ட, எமன் என்னம்மா! எனச் சலிப்புடன் கேட்டான்.

ஐயா! இதுவரை சத்யவானுக்கு குழந்தை ஏதுமில்லை. அவனும் இறந்துவிட்டான். பூலோகத்திற்கு நான் சென்றாலும் உங்கள் வாக்கு பலிக்காது. இறந்தவர்கள் பிழைப்பதென்பது சாத்தியமில்லைன்னு நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதனால். என்னால் உங்கள் வாக்கு பொய்த்து போகும். என்னால் உங்கள் வாக்கு பொய்க்க வேண்டாம். என்னையும் உங்களோடு அழைத்து செல்லுங்கள் என எமனை வேண்டி நின்றாள். இதைக்கேட்டு வெலவெலத்துப்போன எமன், அவசரத்தில் சிந்திக்காமல் கொடுத்த வரத்தின் விபரீதத்தை உணர்ந்தார். பின்னர் சாவித்ரியின் சமயோசிதத்தை பாராட்டி, சத்யவானின் உயிரை திருப்பி கொடுத்து வாழ்த்தினார்.  பின்பு சத்யவானோடு இல்லத்திற்கு வந்த சாவித்ரி மாமனார் பார்வையை திரும்ப அளித்து, நாட்டுக்கு திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள் என்பது வரலாறு.

 இனி விரதமுறை..

காரடையான் நோன்பன்று வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்டி, பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு, காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை சூட்ட வேண்டும்.  ஒரு கலசத்தின் மேல், தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து, அவளை சாவித்ரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்ரி காட்டில் தன் கணவன் சத்தியவானுடன் வாழ்ந்தபோது, அங்கு கிடைத்த காராரசியும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெயுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணெயுடன், காராரிசி குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி துளசியை ஒன்று கட்டி தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். 
‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் 
வைத்து நோன்பு நோற்றேன் 
ஒரு நாளும் என் கணவன் என்னைப் 
பிரியாமல் இருக்க வேண்டும்’ 

எனச்சொல்லியவாறு அம்மனை பிரார்த்தி, ஒவ்வொரு சுமங்கலி பெண்ணும் அம்மனிடம் விண்ணப்பிக்கனும். முதலில் அம்மன் படத்துக்கு ஒரு சரடினை கட்டிய பின்னர் மூத்த சுமங்கலி பெண்   இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும்.  பிறகு தானும் கட்டிக்கொண்டு, அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம். நோன்பு தொடங்கியது முதல், முடிக்கும்வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன், பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு காரடையான் நோன்பு  மாசியும், பங்குனியும் சங்கமிக்கும் நேரமான நாளை 15/3/2019 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 4.30க்குள் பூஜை முடித்து, சரடும் கட்டிமுடித்தாகவேண்டும்.  பங்குனி மாதம் பிறந்திருக்ககூடாது. இந்த வருடத்தின் பங்குனி மாத பிறப்பு 15/3/19 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 4.47க்கு பிறக்குது. அதற்குள் பூஜையை முடித்துவிடவேண்டும் என்பது நியதி.


வைக்கோலுக்கு மரியாதை 
காரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை தயாரிக்கப்படும் போது, வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு, மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும்வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும். அதைப்போல் சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன், ‘உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை, உடலை காத்திரு!’ என்று சாவித்திரி சொல்லி விட்டு, வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள். அதன் நினைவாக தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பார்வதி தேவி செய்த சிவலிங்க பூஜை;

பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை, காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும்.

ஒருமுறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும்,  உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம் உமாதேவியை அடைய, அவள் உருவம் மாறியது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சிபுரம் வந்து, ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் திருவிளையாடலால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவரான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க, காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொண்டாள். இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான், அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம்ன்னும் பெயர் உண்டு.

நோன்பின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்...
மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்
 மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி
அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம் 
ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே
த்யானம்
ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் புவனேஸ்வரீம் 
த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்
காமாக்ஷீம் ஆவாஹயாமி.
மீள்பதிவு...


நன்றியுடன்,
ராஜி

13 comments:

 1. வணக்கம் !

  காரடையான் நோன்பு புதசால்ல இருக்கு !

  நல்ல கதை தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. புதுசு இல்ல சகோ. குறிப்பிட்ட சில இனத்தார் மட்டுமே இந்த பண்டிகையை கொண்டாடுவாங்க சகோ. அதான் நமக்கு தெரிவதில்லை

   Delete
 2. காரடையான் நோன்பு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நோன்பு நாள் வாழ்த்துகள்.

  நான் மதுரையிலிருந்த காலங்களில் எங்கள் தெருவில் டாக்டர் சத்தியவான் என்று ஒருவர் இருந்தார். அவர் மனைவி பெயர் சாவித்ரி! ஆச்சர்யமான ஒற்றுமை.

  ReplyDelete
  Replies
  1. இறைவன் போட்ட முடிச்சு.

   Delete
 4. வாழ்த்துகள் சகோதரியாரே

  ReplyDelete
 5. காரடையான் நோன்பு...பல தகவல்கள் தெரிந்துக் கொண்டேன் ...

  நன்றி ராஜிக்கா

  ReplyDelete
 6. நன்றிண்ணே!

  ReplyDelete