Friday, August 30, 2019

ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம்- பாண்டிச்சேரி சித்தர்கள்

பாண்டிச்சேரி சித்தர்கள் பகுதியில் தொள்ளைக்காது சித்தர் பதிவினை பார்த்தோம். அதை தொடர்ந்து நாம இன்னிக்கு பார்க்கப்போறது சமீபத்தில் பிரச்சனையில் சிக்கிய அரவிந்தர் ஆசிரமம். அரவிந்தர் ஆசிரமத்தில் தற்போதைய நிகழ்வுகளை பற்றி பார்த்தால் 2 தலைமுறை சென்ற ஆன்மீகவாதிகளே இங்கு இருக்காங்க. அவர்களின் நிலை என்ன ஆன்மீகத்தில் அவர்களது பங்களிப்பு என்ன என்பது பற்றி பார்த்தால், தமிழ்நாட்டு அரசியல்  மாதிரிதான். காமராஜர், கக்கன் மாதிரியான  நேர்மையான அரசியல்வாதிகளுக்கும் தற்போது உள்ள ஊழல்வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்தான். அதற்காக நாம் நம் மாநிலத்தையோ இல்ல சட்டமன்றத்தையோ குறை சொல்லமுடியாது. அரசியல்வாதிகளைதான் நொந்துக்கனும்.  அதேப்போல்தான் அரவிந்தர் ஆசிரமும்... இதை தோற்றுவித்தவர் வாழ்ந்த முறை வேறு. அதனால், உள்குத்து விவகாரங்களை விட்டுட்டு அரவிந்தர் என்னும் மகானையும், ஆசிரமத்தை பத்தி மட்டும் பார்க்கலாம் .
மணக்குள விநாயகர் கோவிலிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் இருக்கிறது இந்த அரவிந்தர் ஆசிரமம். இந்த ஆசிரமத்தினுள் போட்டோ எடுக்க தடைவித்துள்ளனர். ஆசிரமத்தினை மிக தூய்மையாக பராமரிக்கின்றனர். பக்தர்கள் வரிசையாக செல்லும் வழியில் நாங்களும் சென்றுகொண்டிருந்தோம். நம்மூரு ஆட்களைவிட வெளிநாட்டு பக்தர்கள் அதிகமாக காணப்பட்டனர். அவர்களை பின்தொடர்ந்து சென்று ஒரு மண்டபத்தின்கீழ் இருக்கும் ஒரு மேடை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதன்மேல் எல்லோரும் தலைவைத்து பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தனர். அப்பொழுது நமக்கும் அப்படி செய்யவேண்டும்போல இருக்கிறது என தலைவைத்து திரும்பி பார்த்தால் பலர் அந்த மேடையை சுற்றி தியானத்தில் அமர்ந்திருந்தனர். சரி என்ன மேடை இது என்று பக்கத்தில் அமர்த்த பெண்மணியிடம் கேட்க அவர் அப்படி ஒரு பார்வை பார்த்துவிட்டு இதுதான் அரவிந்தர் ஜீவசமாதி என சொல்ல ,அட கடவுளே! இதுக்குதான் சுற்றுலா போகும்போது விவரமான ஆட்களுடன் போகனும், இல்லன்னா, போன இடத்தில் பராக்கு பார்க்காம அறிவிப்பு பலகையை படிக்கனும்ன்னு  நினைச்சிக்கிட்டே பயபக்தியுடன் அந்த ஜீவ சமாதியில் ஓரத்தில் அமர்ந்து நாங்களும் தியானம் செய்தோம்.
தியானம்லாம் முடித்து, அங்க உள்ள அறைகளின் அரவிந்தர் மற்றும் அன்னையின் வாழ்க்கை வரலாறும், அவர் சார்ந்த புகைப்படங்களும் காட்சிக்கு  வச்சிருக்காங்க. அவர் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா நகரில் ஆகஸ்ட் 15, 1872ம் ஆண்டு கிருஷ்ணதன கோஷுக்கும், ஸ்வர்ணலதாவிற்கும் மூன்றாவது குழந்தையாக  பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அரவிந்த் அக்ராய்ட் கோஷ், அரவிந்தர், தன்னுடைய ஆரம்ப கல்வியை டார்ஜிலிங்கிலுள்ள “லோரெட்டோ கான்வென்ட்டில்” தொடர்ந்தார். பிறகு 1879 ஆம் ஆண்டு, சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்று , லண்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இளங்கலை பட்டம் பெற்றார். படித்துக் கொண்டிருக்கும்பொழுதே, புரட்சிகரமான சிந்தனையாளராக விளங்கிய அரவிந்த் அவர்கள், உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்திலும் தேர்ந்தவராக இருந்தார்.
அரவிந்தோ (அவரது தாய்க்கு அடுத்ததாக நடுவில் அமர்ந்திருப்பவர் ) மற்றும் அவரது குடும்பத்தினர். இங்கிலாந்தில், 1879 .


தன்னுடைய 21 வயது வரை, இங்கிலாந்தில் தங்கி, கல்வி பயின்ற ஸ்ரீ அரவிந்தர், 1893ம் ஆண்டு தாய்நாடு திரும்பினார். இந்தியா திரும்பிய அவர், பரோடா சமஸ்தானத்தில் அரசுப்பணியில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றியப்பிறகு, வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராக பணியைத் தொடர்ந்தார். இந்தியாவில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் ஏற்பட்ட வங்கப் பிரிவினையை கண்டு கொதித்துப்போன அரவிந்தர் அவர்கள், விடுதலைப் போராட்டாத்தில் தன்னை ஈடுபத்திக்கொண்டது மட்டுமல்லாமல், கர்சனின் வங்கப் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தார். தேச விடுதலைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், “வந்தேமாதரம்” என்ற இதழை ஆரம்பித்தபின், சந்திரபாலுடன் இணைந்து பல்வேறு கூட்டங்களில் கலந்துக்கொண்டு, ஆங்கில அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனால், அரவிந்த் அவர்கள் ஆங்கில அரசால் 1907லும், 1908லும் இருமுறை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், “கர்மயோகி” என்ற ஆங்கிலப்பத்திரிக்கை மூலமும் “தர்மா” என்ற வங்காள மொழி பத்திரிக்கை மூலமும் மக்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டும் கட்டுரைகளை எழுதி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
செப்டம்பர் 1907-ல் வெளிவந்த பாண்டே மாதரத்தின் நகல். 

பாலகங்காதர திலகர் சூரத் 1907ல் காங்கிரஸ் கூட்டத்தில் பேசும்போது மேஜையில் அமர்ந்து உன்னிப்பாக கவனிக்கும் அரவிந்தர் 

சிறையில் இருந்த நேரங்களில் அவர் கீதை, வேதங்கள் என ஆன்மீக நூல்களைப் படித்த அவருக்கு, யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. 1904 இலேயே பிரணாயாமம் பயிலத் தொடங்கியபோதும் சிறை வாழ்க்கை,  யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ளவைத்தது. ஸ்வராஜ் (விடுதலை) என்பதை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் பொருள் கொண்டார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நாட்டுவதற்கு விடுதலை முதற்படி என்று கருதினார்.
1909 சிறையிலிருந்து விடுதலைப்பெற்ற அரவிந்தர், தன்னுடைய முழு கவனத்தையும் யோக நெறியில் ஈடுபடுத்திக்கொண்டார். 1910ம் ஆண்டு, ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர்மேல் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அங்கிருந்து தப்பித்து சந்திர நாகூருக்கு சென்று, அங்கிருந்து ஏப்ரலில் மாறுவேடத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு வந்தார். அவரை மகாகவி பாரதியார் தலைமையிலான தமிழர்கள் வரவேற்று, ஒரு செல்வந்தர்  வீட்டில் தங்கவைத்தனர். இதையடுத்து, தனது அரசியல் நடவடிக்கைகளை முழுவதுமாகக் கைவிட்டு முழு ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிறகு, அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும், யோகத்திலும் ஈடுபட்டார். அதுமட்டுமல்லால், தனது யோகத்தின் நோக்கத்தை விளக்கிடும் “சாவித்திரி” என்னும் மகா காவியத்தையும் ஸ்ரீஅரவிந்தர் படைத்தார்.
‘உலகத்தைத் துறந்து, இறைவனை அடையவேண்டும். யோகத்தினால் கிடைக்கும் வலிமையைக்கொண்டு நாட்டு மக்களை விடுவிக்க வேண்டுமென்பதோடு’ மட்டுமல்லாமல், தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளை “ஆர்யா” என்ற ஆன்மீக இதழில், 1914 முதல் 1921 வரை எழுதினார். அவருடைய தத்துவங்கள், உண்மைகளை அடிப்படையாக கொண்டவையாக அமைந்தது.உயர்நிலை மனத்தை உருவாக்கும்போது மனித வாழ்வின் இயல்பே மாறிவிடும் என்றும் தெய்வீக நிலை தோன்றும் என்றும் வற்புறுத்தினார்.

அரவிந்தர் சனாதன தர்மத்தினை ஆழமாக நோக்கியவர். வேதம், உபநிடதம், கீதை பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துக்களை தெளிவாக விளக்கினார். அரவிந்தர் தனது பெரும்பாலான நேரங்களை எழுத்து மற்றும் தியானத்தில் கழித்தார். 1910ம் ஆண்டில் பாண்டிச்சேரிக்கு வந்திருந்த மூன்று அல்லது நான்கு இளைஞர்கள் அவருடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து அவர்கள் சுதந்திரமாக இருந்தனர். அன்னை மற்றும் பிரஞ்சு எழுத்தாளர் பால் ரிச்சர்ட் 1914ம் ஆண்டில் ஸ்ரீஅரவிந்தரைச் சந்தித்து ஒரு மாதாந்திர ஆய்வுகளை வெளியிட்டனர். ஆனால், முதல் உலகப்போர் வெடித்த பிறகு, அவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அதிலிருந்து ஸ்ரீஅரவிந்தரே தன் ஆய்வு முழுவதிலும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. அவருடன் வசிக்கும் இளைஞர்களிடமிருந்து சிறிது உதவியைப் பெற்றார். ஏப்ரல் 1920ல், அன்னை பாண்டிச்சேரிக்குத் திரும்பினார்.1926 ஆம் ஆண்டு நவம்பர் 24, அன்று, ஸ்ரீ அரவிந்தர் ஒரு பெரிய ஆன்மீக உணர்தலுக்குப் பின்னர், ஆன்மீக வேலைகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் அவர் தனது ஆன்மீக ஒத்துழைப்பாளரான "அன்னை"க்கு ஆசிரம நிர்வாகத்திற்கான முழுப்பொறுப்புகளையும் வழங்கினார். அவர் முன்பு மிரா அல்ஃபாஸா என அழைக்கப்பட்டார்.
1927ம் ஆண்டின் தொடக்கத்தில் 24 ஆகவும் 1934 இல் 150க்கும் அதிகரித்தது. 1934ம் ஆண்டுகளில் தேவையான வசதிகள் இன்றியே ஆசிரமம் இருந்தது. இந்த ஆண்டுகளில் அன்னைக்கு ஒரு வழக்கமான பழக்கம் இருந்தது. அவர் தினமும் காலை 6 மணியளவில், பலகணியில் நின்று தனது ஆசீர்வாதத்தை பக்தர்களுக்கு வழங்கி தனது நாளை தினமும் துவங்கினார். ஆசிரமத்திலுள்ள பக்தர்கள் காலை அன்னையின் ஆசி பெற்று, பின் தியானம் உட்பட பல யோகாசனங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஸ்ரீ அரவிந்தரின் பக்தர்கள் கீதையைப்போல சாவித்ரி காவியத்தைப் படித்தார்கள். 'இது கர்மவினை- அனுபவிக்க வேண்டும்', என்று சொல்லிய வினைகளைக்கூட,  நம்பிக்கை வைத்து தியானித்து பிரார்த்தனை செய்யும்போது அவ்வினைகள் தீரும் அதிசயத்தைக் காண்பதாகவும்  அவர்களது பார்வை பட்டாலே நெஞ்சும், ஆன்மாவும் நிறைவதை உணரலாம் என்று பக்தர்கள்  உணர்ச்சிப்பெருக்கோடு கூறி,  அலைப்பாயும் மனதை அடக்கி ஆளும் புகலிடமாக அரவிந்தர் ஆசிரமம் விளங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகிப்போனது.
அரவிந்தர் பக்தர்களுடன் தியானம் செய்யும்போதெல்லாம் அவரைச் சுற்றி ஒளிவெள்ளத்தைக் கண்டு உடலில் மின்சாரம் பாய்வதைப் போன்று உணர்ந்திருந்தார்கள். அரவிந்தர் தனது இறுதிக்காலத்தில் தனிமையை நாடியதால், தனது கடைசி 24 ஆண்டுகள் தனிமையும், மௌனமும் பூண்டிருந்தார். அதிமன சக்தியை உலகுக்கு கொண்டு வரும்  முயற்சியில் தேவைப்பட்டால் நான் என் உடலை விட்டு  நுண்ணுடலில் சென்று போராடுவேன் என்றார். 1950ம் வருடம் டிசம்பர் மாதம் 5ம் தேதி அன்று இறையாற்றலைப் புவிமீது இயக்கி மகாயோகி அரவிந்தர் மகாசமாதி ஆனார். அவர் மறைந்தும் அவரது உடலில் ஒளிவீசியது. அவர் சமாதியான 5 நாட்களுக்குப்பிறகே ஆசிரமத்தில் சர்வீஸ் மரத்தடியில்  பக்தர்களின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அதுவரை அவரது முகப்பொலிவும் குறையவில்லை. உடலும் வாடவில்லை.
அதன்பிறகு அன்னை  ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு பரிபூரண அருளையும் நிம்மதியும் தரும் தாயாக மாறினார். இவர் வேறு உலகங்கட்குச் செல்வார். சூட்சும லோகத்தில் போய், பகவானை சந்திப்பார்.  அன்னை வலியுறுத்திய,  விழுவதற்கு முன் என்னைக் கூப்பிட்டால்  ஓடி வந்து காப்பாற்றுவேன் என்ற அன்னை சொல்லை  பக்தர்கள் நடைமுறையில் உணர்ந்திருக்கிறார்கள். 1973ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அன்னை உயிர் துறந்தார். மலருக்கும் ஆற்றல் உண்டு என்று கூறிய அன்னையின் சமாதி இயற்கை சூழலில் நறுமணமிக்க மலர்கள் பூத்துக்குலுங்கும் செடிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. ஸ்ரீஅரவிந்தரின் மகிமையை பத்தி நிறைய அற்புதங்கள் பல்வேறு பக்தர்களின் வாழ்வில் அனுதினமும் நடந்துவந்துள்ளன. நாங்களும் அன்னையையும் ஸ்ரீஅரவிந்தரின் ஜீவ சமாதியையும் தரிசித்தோம். இனி அடுத்தவாரம் மீண்டும்  வேறு ஒரு சித்தரின் ஜீவ சமாதியில் இருந்து உங்களை தரிசிக்கிறேன்.
நன்றியுடன்
ராஜி 

Thursday, August 29, 2019

உல்லன் வாசல் தோரணம் - கைவண்ணம்

நிலைவாசற்படியில் தொங்கி இருக்கும் வுல்லன் தோரணத்தை பார்த்த தாத்தா ஒருத்தர் தன் வீட்டு வாசப்படிக்கும் பின்னி தரச்சொல்லி கேட்டார். அவர் கேட்டு ஒரு மாசமாச்சுது. இப்பதான் முடிச்சேன்.சோம்பேறித்தனப்படக்கூடாதுன்னு நானும் எத்தனையோ முறை சபதம் எடுத்தாலும், அதை நிறைவேத்த சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கடைப்பிடிக்க முடில :-(
No photo description available.


நல்லா இருக்கான்னு பார்த்துட்டு சொல்லுங்க சகோஸ்.
 
நன்றியுடன்,
ராஜி

Friday, August 23, 2019

கண்ணன் வந்தான் தாய்வீடு-கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்


எங்கெல்லாம் நன்மை அழிந்து தீமை அதிகரிக்கின்றதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என நமக்கு உணர்த்தவே  கோலாகல பகவான் மகாவிஷ்ணு பூமியின் பாரம் குறைப்பதற்காகவும், தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, கிருஷ்ணர் ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது
துரா சிறைச்சாலையில், வசுதேவர் தேவகி தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக கண்ணன் அவதரித்தான். அவதாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் எனப் பொருள். இப்படி மகாவிஷ்ணு நீதியை நிலை நாட்டும் பொருட்டும், கம்சனை வதம்செய்யும் பொருட்டும் இப்பூவுலகில் அவதரித்தார்.
துவாபர யுகத்தில் இராமயண காலத்தில் உருவான ஊர் மதுரா. இங்கு யது வம்ச போஜகுலத்தில், உக்ரசேன மன்னனின் மகனாக கம்சன் பிறந்தான். இவன் தன் தந்தையையே சிறை வைத்து, அரசை தானே ஆண்டு வந்த கொடியவன். இவனுக்கு கம்சை, தேவகி என்ற இரு தங்கைகள். தேவகிமீது கம்சன் மிகுந்த பாசம் வைத்திருந்தான். வசுதேவருக்கு தேவகியை மணம் முடித்து இருவரையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு தானே ஓட்டி வந்தான் கம்சன். அப்போது வானில் அசரீரி, ""கம்சா! தேவகியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்வான்'' என்றது.
ஆத்திரமடைந்த கம்சன் தேவகியைக் கொல்ல முயல, அவனை வசுதேவர் தடுத்தார். ""கம்சா! தேவகியின் எட்டாவது மகன்தானே உன்னைக் கொல்வான்? நாங்கள் எங்களுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் உன்னிடம் தந்துவிடுகிறோம் தேவகியை விட்டுவிடு'' என்று மன்றாடினார். அதை ஏற்றுக்கொண்ட கம்சன் இருவரையும் மதுரா சிறையில் அடைத்தான். வசுதேவர்- தேவகி தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்று தீர்த்தான் கம்சன். இவ்வாறு ஆறு குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில், தேவகி ஏழாவது முறை கருவுற்றாள். கரு ஏழு மாதங்கள் வளர்ந்திருந்த நிலையில், அது மாயையின் உதவியால் கோகுலத்திலிருந்த வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டது. அந்தக் குழந்தையே பலராமன். (கரு கலைந்துவிட்டதாக கம்சனிடம் கூறிவிட்டனர்).
அடுத்து எட்டாவது முறையாக சூலுற்ற தேவகி, அஷ்டமி திதியில் நள்ளிரவு 12.00 மணிக்கு கண்ணனை ஈன்றெடுத்தாள். அந்த நேரத்தில் மாயையின் பிடியில் சிக்கி மதுராவிலிருந்த அனைவருமே உறங்கிக் கொண்டிருந்தனர். வசுதேவர், தேவகி, சந்திரன் ஆகிய மூவர் மட்டுமே விழித்திருந்தனர். மகாவிஷ்ணு உணர்த்தியபடி, வசுதேவர் குழந்தையை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு யமுனைக் கரைக்குச் சென்றார். அப்போது மழை பொழிய, ஆதிசேஷன் குடைபிடித்தபடி அவர் கள் பின் சென்றது. யமுனை நதி இரண்டாகப் பிளந்து வழிவிட, வசுதேவர் அக்கரையிலிருந்து ஆயர்பாடியான கோகுலம் சேர்ந்தார். அங்கே நந்தகோபரின் மனைவி யசோதையின் அருகே குழந்தையை வைத்துவிட்டு, யசோதைக்குப் பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறைச்சாலை வந்து சேர்ந்தார்.
அப்பொழுது மாயை விலக, அனைவரும் கண் விழித்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு, செய்தி கம்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன்னை அழிப்பதற்காகப் பிறந்திருக்கும் குழந்தை இதுதானே என்று ஆக்ரோஷமாகப் புறப்பட்டு வந்த கம்சன், பெண் குழந்தையென்றும் பாராமல் அதைக் கொல்ல முயல, அவன் பிடியிலிருந்து விலகி அந்தரத்தில் நின்று சிரித்த குழந்தை, ""கம்சா! உன்னைக் கொல்லப் பிறந்தவன் கோகுலத்தில் வளர்கிறான்'' என்று கூறி மறைந்துவிட்டது. அது காளிதேவி. பெருங்கோபம் கொண்ட கம்சன் தன் அசுரப் படைகளை அழைத்து, எந்த வடிவிலாவது சென்று கண்ணனைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான்.

 வண்டிச் சக்கரமாக வந்த சகடாசுரன், கடத்த வந்த தீப்திகன், பாலூட்ட வந்த பூதகி, கொக்காக வந்த பகன், பாம்பாக வந்த ஆகா சுரன், கழுதையாக வந்த தேனுஜன், இடையர்களாக வந்த பிரம்பலன்- வியோமன், காளையாக வந்த அரிஷ்டன், குதிரையாக வந்த கேசி என பலரும் வஞ்சகமாக கண்ணனைக் கொல்ல வந்தனர். அத்தனை பேரையும் குழந்தைக் கண்ணன் விளையாட்டாகக் கொன்றான்.
தன்னை கொல்ல வந்த  காளிங்கனை மட்டும் அடக்கி மன்னித்துவிட்டான். கண்ணனுக்கு இப்படி பல இடையூறுகள் வருவதைக் கண்ட ஆயர்பாடியினர் ஐந்து வயதான கண்ணனை அழைத்துக்கொண்டு பசுக்கூட்டங்களுடன் பிருந்தாவனம் சென்று விட்டனர். எவ்வளவு முயன்றும் கண்ணனைக் கொல்ல முடியவில்லையே என்று ஆத்திரமுற்ற கம்சன், வேறொரு உபாயம் செய்தான். அதன்படி கண்ணனை தன் அரண்மனைக்கே வரவழைத் தான். அரண்மனை வாயிலில் ஒரு யானையிடம் இரும்பு உலக்கையைக் கொடுத்து, அதைக் கொண்டு கண்ணனைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் பலராமனும் கண்ணனும் அந்த யானையையே கொன்று விட்டனர்.

பிறகு சானுகன், கூடன், சலன், முஷ்டிகன், தோகலன் என்னும் மல்யுத்த வீரர்கள் ஐவரை அனுப்பினான் கம்சன். அவர்களையும் கொன்றான் கண்ணன். இதைக் கண்டு பெருஞ்சினங்கொண்ட கம்சன் தன் படை வீரர்களை நோக்கி, ""இந்த இரு பயல்களையும் உடனே கொல்லுங்கள். அத்துடன் சிறையிலுள்ள வசுதேவன், தேவகி, உக்கிரசேனன் என எல்லாரையும் கொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தான். அதைக்கேட்ட கண்ணன் சிம்மாசனத்திலிருந்த கம்சனை இழுத்து தரையில் கிடத்தி, அவன்மீது ஏறி அமர்ந்து, தன் கைகளால் கம்சனின் மார்பில் குத்தியே கொன்றான். அதன்பின்னர் கம்சனின் தந்தையும் கண்ணனின் தாத்தாவுமான உக்கிரசேனர் அரியணை ஏறினார்.
பலராமனுக்கும் கண்ணனுக்கும் உபநயனம் செய்வித்து, சாந்திபணி என்ற குருவிடம் குருகுலக் கல்விக்கு அனுப்பி வைத்தார் உக்கிரசேனர். அங்கு 64 கலைகளையும் கற்ற அவர்கள், குருவின் மகனை மீட்டு குரு காணிக்கையாகச் செலுத்திப் பெருமை கொண்டனர். பின்னர் பூமாதேவியின் பாரம் தீர்க்க பாரதப்போர், உலக மக்கள் நற்கதி பெற கீதோபதேசம் என பல அருஞ்செயல்கள் புரிந்த கண்ணன் துவாரகையில் அரசு புரிந்துவந்தார். இறுதியில் தன் அவதார காலம் முடிவுறும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, ஒரு மரத்தடியில் சென்று கால்நீட்டிப் படுத்தார்.
அப்போது வேடன் ஒருவன் மறைந்திருந்து எய்த அம்பின் விஷ நுனி கண்ணனின் காலில் பாய்ந்தது; கண்ணன் உயிர் பிரிந்தது. வைகுண்டம் சேர்ந்தார் பரமாத்மா. கண்ணன் மனைவிகள் ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரந்தை, சத்யவதி, பத்தரை, லட்சுமணை என பட்டத்தரசிகள் எட்டு பேர். இவர்களன்றி பதினாயிரம் இளவரசிகள். ஒவ்வொருவருக்கும் பத்துப் பிள்ளைகள். கண்ணனின் பல பிள்ளைகளில் 18 பேர் கீர்த்தி பெற்றவர்கள். பிரத்யும்னன், அனிருத்ரன், தீப்திமான், பானு, ப்ருஹத்பானு, சாம்பன், விருகன், அருணன், புஷ்கரன், வேதபாஸு, ஸ்ருததேவன், சுனந்தனன், இந்திரபாஸு, விருமன், கவி, நிகரோதனன், சித்திரபானு, மது என்பவர்களே இவர்கள். கண்ணனின் காலம் கண்ணனின் பூலோக சஞ்சாரம் 125 வருடங்கள். கி.மு. 3102 பிப்ரவரி 18-ல்- 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள், பிற்பகல் 2 மணி, 27 நிமிடம், 30 வினாடியில் கிருஷ்ணாவதாரம் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதுப்பற்றி நாம விரிவா நம்ம பதிவில் பார்த்திருக்கோம்.  பார்க்காதவங்களுக்காக ஒரு சின்ன விளம்பரம்....

கண்ணன் அவதரித்த ஆவணி மாதம் அஷ்டமி திதியில். அந்நன்னாளைத்தான் கோகுலாஷ்டமியாக இமயம் முதல் குமரி வரை அனைவரும் கொண்டாடுகின்றனர். கண்ணன் பிறந்தது மதுரா என்ற வடமதுரை; கண்ணன் வளர்ந்தது ஆயர்பாடியான கோகுலம். இவ்விரு தலங்களும் யமுனையின் எதிரெதிர் கரையில் அமைந்துள்ளன.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஆனவன் கிருஷ்ணன். கோகுலாஷ்டமி கொண்டாடும் விதம் அன்று இல்லங்களைத் தூய்மை செய்து, செம்மண் இட்டு, கோலம் வரைந்து மாவிலை தோரணம் கட்டி, வாயிற்படியிலிருந்து பூஜையறை வரை கண்ணனின் திருப்பாதங்களை மாக்கோலத்தால் வரைந்து அழகு பார்ப்பார்கள். கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து பூஜையறைக்கு வந்து நாம் வைத்துள்ள நிவேதனப் பட்சணங்களை ஏற்றுக்கொள்வதாக நம்புகின்றனர்.


பூஜையறையில் கண்ணன் விக்ரகம் அல்லது படம் வைத்து அலங்கரித்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து, நிவேதனப் பொருட்களான வெல்லச் சீடை, சீடை, முறுக்கு, தேன்குழல், மைசூர்பாகு, லட்டு, பால்கோவா, அல்வா, பாதாம் கேக் போன்ற பட்சணங்களுடன் நாவல்பழம், கொய்யாபழம், வாழைப்பழம், விளாம்பழம் போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
முன்னதாக கிருஷ்ணன் பாடல்களைப் பாடி, பிறகு தூபதீபம் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் ஆலயம் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடக்கும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் பார்த்து மகிழ்ந்து, இல்லம் திரும்பி பட்சணங்களை அனைவருக்கும் கொடுத்தபின் நாம் உண்ண வேண்டும். 
கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண பகவானை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும். நீண்ட காலம் குழந்தையில்லாத தம்பதிகள் இவ்விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்குமென்பது நம்பிக்கை.

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!!


மீள்பதிவு..
நன்றியுடன், 
ராஜி. 

Saturday, August 17, 2019

அத்திவரதரை கட்டிக்கலாமா?! - சுட்ட படம்

நாடி நரம்புலாம் கணக்கு பாடம் ஊறினவங்கதான் இப்படிலாம் கோலம் போடமுடியும்:-(
Image
Image
அத்திவரதரை தரிசிக்க முடியலைன்னாலும் கட்டிக்கிடலாம். இதுப்போல் கடவுள் படங்களை உடைகளில் பதிக்கலாமா?! தப்பில்லையா?! அழகுக்காக, இல்ல கோவிலுக்கு இந்த புடவையை பயன்படுத்தலாம். மத்தபடி அணிய தகுதியில்லாத புடவை..

Image
இதை புரிஞ்சுக்கிட்டா உறவுகள் பலப்படும்.
ஹாப்பி ரக்‌ஷாபந்தன். நல்ல ஒடம்பொறப்புகள் :-)

நன்றியுடன்,
ராஜி

Friday, August 16, 2019

தொள்ளைக்காது சித்தர் - பாண்டிச்சேரி சித்தர்கள்

இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கையில் கடவுளுக்கு எப்படி முக்கியத்துவம் உண்டோ அதே அளவுக்கு அவரை நம்பி வழிப்படும் அடியார்களுக்கும் உண்டு. இறைவன்மேல் கொண்ட பக்தியின் காரணமாய் செய்த தியாகங்கள், இறையின்பால் பாடிய பாடல்கள், இறைவனின் மகிமைகளை நாடு முழுக்க பரப்பியதால் அடியவர்களை சைவ, வைணவ முறைப்படி நாயன்மார்கள், ஆழ்வார்கள் என அழைப்பர். மனிதன் என்பவன் தெய்வமாகலாம்ன்னு சினிமா பாட்டே இருக்கு. அதுப்படி, மனிதனாய் பிறந்தவர் தான் வாழ்ந்த வாழ்க்கை, அவரால் பிறர் அடைந்த நன்மைகள், அவர்தம் இயற்கையோடு இழைந்த வாழ்க்கை, இயற்கை அளித்த கொடைகளை கொண்டு அவர்கள் நிகழ்த்திய சித்து லீலைகளை பொறுத்து   இறைவனின் அடியார்களை சித்தர்கள் என வகைப்படுத்துவர். இறைவழிப்பாட்டோடு சித்தர்கள் வழிபாடு இப்ப பரவலாய் நடத்தபடுது. இனிவரும் வாரங்களில் நாம சித்தர்களின் ஜீவ சமாதிகளை பார்க்கலாம். சித்தர்கள் வழிபாடு தமிழகம் முழுக்க இருந்தாலும்,  பாண்டிச்சேரியை சுற்றி எண்ணிலடங்கா சித்தர்கள் ஜீவசமாதிகள் இருக்கின்றன. ”தண்ணீரில்” தாராளமாக சூழப்பட்டிருக்கும் பாண்டிச்சேரி கடலில் மூழ்காமல் காப்பது இந்த சித்தர்களின் சமாதிகளே என்றால் அதில் மாற்றுக்கருத்து இல்லை.
பண்டையக்காலங்களில் வேதபுரி, வேதபுரம், அகத்தீஸ்வரம், ஞான பூமி ,சித்தர்கள் பூமி, பாண்டிச்சேரி, புதுச்சேரி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் புதுச்சேரி நோக்கி எங்கள் பயணத்தை தொடங்கினோம் ஏன்னா எவ்வளவு வேகமா நாம போகிறோமோ அவ்வுளவு வேகமா சித்தர்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கலாம். எந்த ஒரு காரியத்தை தொடங்குவது என்றாலும் விநாயக பெருமானை வணங்கிவிட்டே தொடரவேண்டும் என்பதற்க்காக எங்கள் குழு முதலில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபட்டோம். இந்த கோவிலுக்கு ஏன் மணக்குள விநாயகர்ன்ற பெயர் வந்ததுன்னா கடலுக்கு அருகில் மனற்பரப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் மணர்குள விநாயகர் என முதலில் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் இது மருவி மணக்குள விநாயகர் என அழைக்கப்படுகிறார்ன்னு சொல்றாங்க. புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்னயே இந்த கோவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. கிழக்கு நோக்கி இருக்கும் இந்தக்கோயில் முன்பு பவனேஸ்வர் விநாயகர் என்றுதான் அழைக்கப்பட்டதாம். அப்ப இருந்த மக்கள் இவரை வெள்ளைக்காரன் விநாயகர் என்றே அழைத்தார்களாம். பல பிரசித்தி பெற்ற தனி விநாயகர் ஆலயங்களில் இந்த மணக்குள விநாயகர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயம் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்னாலேயே அதாவது  1666ம் ஆண்டுக்கு முன்னாலாயே இந்த கோவில் இருக்குன்னு சொல்லப்படுது .
இந்த கோவிலின் வெளிப்புற சுவர்கள் வண்ணம் பூசப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. அதைத்தாண்டி கோவிலுக்குள் நுழையும்முன் நம்மை அங்கிருக்கும் ஒரு விநாயகர் வரவேற்கிறார். கோவிலின் உட்பகுதி அழகாக சுத்தமாக வைத்துள்ளனர். மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல காட்சிகள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி பிரஞ்சு கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த விநாயகரை பலமுறை பிரஞ்சு அரசு  இதனை அகற்ற முற்பட்டனர். அதற்குப்பிறகு வந்த பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கு இடையூறாக இருந்த இந்த கோவிலை பலமுறை இடிப்பதற்கு முயற்சி செய்தனராம்.  ஆனா, பக்தர்களின் முயற்சியாலும் ,உள்ளூர் மக்களின் முயற்சியாலும் பலமுறை இக்கோவில் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டதாம். அதனால் ஆத்திரமடைந்த பிரஞ்சு அரசு இந்த கோவிலுக்கு திருவிழா நடத்த தடைவிடுத்தனர். கொஞ்சகாலம் திருவிழாக்கள் ஏதுமின்றி இக்கோவில் இருந்ததாம். அதன்பிறகு வந்த பிரஞ்சு கவர்னர் டூப்லேவின் முயற்சியால் விநாயகருக்கு மீண்டும் திருவிழா எடுக்கப்பட்டதாம். 
இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னனா, தனிக்கோவில் கொண்டுள்ள விநாயகர் சன்னதியில் தங்கத்தாலான மூலவர் கோபுரம் இருப்பது  இந்த தலத்தில்தான் என சொல்லப்படுகிறது. அதேப்போல இங்குதான் விநாயகருக்கு சித்தி, புத்தி என்னும் மனைவியருடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் மூலவருக்கு அருகில் இருக்கும் சிறிய குழியில் இருந்து வற்றாமல் நீர் வந்துகொண்டே இருக்கிறது.  இவ்வளவு  சிறப்புவாய்ந்த இந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பு என்னன்னா இங்க ஜீவசமாதியாக இருக்கும் தொள்ளைக்காது சித்தர்தான் தினம் தினம் விநாயகரை தரிசிக்க வரும் பக்தர்கள் இவரையும் தரிசிக்க தவறுவதில்லை. ஸ்ரீதொள்ளைக்காது சித்தரின்  ஜீவசமாதி அவர் வணங்கிய மணக்குள விநாயகர் கோவிலுக்கு உள்ளேயே அமைந்து உள்ளது. இந்த சமாதி கோவில் கருவறைக்கு பின்புறத்தில் உள்ளது.
இந்த தொள்ளைக்காது சுவாமிகளின், இயற்பெயர் என்ன?! தாய் தந்தையர் யார் எப்பொழுது பிறந்தார்?! எங்கிருந்து வந்தார் என்பதுயாருக்கும் தெரியாது. ஆனால் எப்போதும் புதுவை, கோரிமேடு அடுத்துள்ள முரட்டாண்டி என்னும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில்தான் அமர்ந்திருப்பாராம். இவருக்கு சிறிய வயதாக இருக்கும்போதே தந்தை தவறிவிட்டாராம். இளவயதிலேயே  தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு அதில் விருப்பம் இல்லாமல் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார். அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக்கொண்டே சித்தபிரமை பிடித்தவர்போல நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன்தான் தந்நிலை அடைந்தாராம். பின்னர், அங்கிருந்த முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று, அங்கேயே தங்கி இடைவிடாது அம்மனை வேண்டிக்கொண்டிருந்தார்.  அப்பொழுது அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனம் கிடைத்தவுடன் ஞானமோன நிலைக்கு சென்று யாவற்றையும் உணர்ந்தார்.. அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது. அன்றிலிருந்து  வாய் பேசா ஊமையானார். உடனே அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார்.
தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டுவிட்டு  பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார். இது அவரின் தினசரி வாடிக்கையானது. சுவாமிகள் எங்கிருக்கிறார்?! என்ன செய்கிறார்?! என்பதை மக்களால் கண்டுக்கொள்ள இயலவில்லை. ஆனால், யார், என்ன துன்பம் என்று சுவாமிகளை தேடி வந்து முறையிட்டாலும் அவர்களின் துன்பம் பறந்தோடியது. நோயாளிகள்,  துன்பத்தில் தவிப்போரது பிரார்த்தனைகள் சுவாமிகள் தரிசனத்திலேயே ஈடேறியது. சுவாமிகள் அருளுடலில் ஆத்ம பேரொளி வீசத்தொடங்கியது. வேறு சிலரோ சுவாமிகள் முகத்தில் பலநாள் மீசை தாடியோடு அழுக்கடைந்த வேஷ்டியுடன்- பார்க்க ஒரு ஆண்டியைபோல் இருந்ததினால்-மக்கள் அவரை ”ஆண்டி” என்று அழைத்தார்கள்.அவரின் முரட்டுத்தனமான செய்கையை கண்ட மக்கள் அவரை “முரட்டு ஆண்டி” என்று அழைத்து வந்தனர். என்றும்  காலப்போக்கில் அவர் தங்கியிருந்த ஊர் அவர் பெயரைக்கொண்டே “முரட்டாண்டி சாவடி” எனவும், ”முரட்டாண்டி” எனவும் வழங்கப்படலாயிற்று என்றும் சொல்கின்ற்னர்
அந்த காலத்தில் சுவாமிகளின் பெயர் காரணத்தினால் முரட்டாண்டி சாவடி என்று அழைக்கப்படுவதை பிரஞ்சு அதிகாரிகள் அப்படி அழைப்பதை தடைசெய்தனர்.  காரணம், ஒரு ஆண்டியின் பெயரால் ஒரு கிராமம் இருப்பதா,  என பொறாமைகொண்டு அப்பொழுதைய கவர்னரான துய்ப்ளேக்ஸ், ”துய்ப்ளேக்ஸ் பேட்டை”  “என்ற பெயரை அக்கிராமத்திற்கு நிறுவினார். மேலும், ”முரட்டாண்டி சாவடி”-என்று சொல்லுகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா செய்தனர்.இதனைக் கண்ட மக்கள் பிரஞ்சு அதிகாரியிடம் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டனர்.

முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை அமைத்துக்கொண்டு தங்கினார். மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய சுவாமிகளுக்கு அந்த இடம், அவர் மனதில் அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள், தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார். தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.தொள்ளைக்காது சித்தர்.
அங்கிருந்து மணற்குளத்து பிள்ளையாரை வழிபட, தினமும் இரு வேளையும் செல்ல சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் இருந்தது .பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் ஸ்வாமிகளுக்கு   மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர். காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம். பின், முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார். பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும் நடந்தே சென்று முடிப்பார். காலங்கள் சென்றன. ஆத்ம சக்தி தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார். அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள் சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்று அழைத்து வந்தனர். இன்றளவும் அப்பகுதி அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின் அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. சுவாமிகள், காதில் பெரிய துளை இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”என அழைக்கப் பெற்றார்.
பிரெஞ்சு மக்கள் இவரை வணங்க ஆரம்பித்து உபசரிப்பு தரிசனம் என்ற பெயரில் இவரை சந்திக்க முயன்றனர். இதனால் அவர் கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பி அருகிலிருந்த மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு சென்றார். அடர்ந்த தோப்பு மணற்கேணி அருகில் ஒரு பிள்ளையார் கோவில்  இதுவே அவருக்கு மனதில் அமைதியை தோற்றுவித்தது. இவர் சித்து வேலைகள் தொடர்ந்ததால் எப்போது எங்கு இருப்பார் என்று சரியாக யாராலும்   தெரிந்துக்கொள்ள முடியாது. காலங்கள் சென்றன. இறைவனின் அழைப்பை அறிந்தார். மணற்குளத்து பிள்ளையார் அருகிலேயே தான் சமாதியாக விருப்பம் கொண்டார். தன் எண்ணத்தை பிள்ளையார் கோவில் அருகில் வசித்து வந்த மீனவ மக்களிடம் தெரிவித்தார்.அவர் வேண்டுகோளின்படி அவர் மறைவிற்குபின் அவருடைய உடல் பிள்ளையாருக்கு அருகிலேயே மணற் குளத்தங்கரையில் அப்பகுதி மீனவர்களால் கரும காரியங்கள் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டது. அந்த ஆண்டி தொள்ளைக்காது சித்தரால் தான் அருள்மிகு ஸ்ரீமணக்குள விநாயகர் ஆலயம் இன்று புதுவையிலேயே மிகச் சிறந்த ஆலயமாக திகழ்கிறது.

சுவாமிகளை, முழுவதுமாக நம்புவோர்க்கும் உள்ளன்போடு தியானிப்போருக்கும் சித்தரின் பரிபூரண அருள் கிடைப்பதை இங்கு வந்து தரிசனம் செய்பவர்கள் கண்ணார காண்கிறார்கள். இந்த கோவிலின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னன்னா , பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த பாரதியார்  இந்த ஸ்தல  விநாயகரை போற்றி நான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் மேலுமொரு சிறப்பு.பாண்டிச்சேரி பேருந்துநிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது.  இந்த மணக்குள விநாயகர் ஆலயம் .மீண்டும் ஒரு சித்தர் சமாதியில் இருந்து அடுத்தவாரம் உங்களை சந்திக்கிறேன்
நன்றிடன்
ராஜி 

Thursday, August 15, 2019

சகோதரத்துவத்தை மலர செய்யும் ரக்‌ஷாபந்தன்

தொப்புள்கொடியால்  வருவது பெற்றோர் பிள்ளை உறவு, தாய் தந்தையால் வருவது பிறந்த வீட்டு உறவு.  தாலிக்கொடியால வருவது கணவன் மனைவி உறவு. கணவன்/மனைவியால் வருவது புகுந்த வீட்டு உறவு.  இதுமாதிரி எல்லா உறவுக்கும் எதாவது ஒரு உறவுக்கொடி இருக்கும். ஆனா, எந்த உறவுக்கொடி இல்லாத ஒரு ஆணையும், பெண்ணையும் அண்ணன் தங்கையா மாத்துது இந்த ராக்கிக்கொடி. ரக்‌ஷாபந்தன் விழாவுக்கு பல காரணம் சொல்லப்படுது. அது என்னன்னு வரிசையாக பார்க்கலாம். இப்பத்திய பிள்ளைகள் இந்த விழாவை விமர்சையா கொண்டாடுறாங்க. தன்னை கிண்டல் செய்து, தொந்தரவு செய்யும் பிள்ளைகளை இக்கயிறு கட்டி நல்லவனா, தன்னோட நல்லது கெட்டதுல முன்னுக்கு நிக்குற சகோதரனா மாத்தும் சக்தி இக்கயிறுக்கு உண்டு.  இது வடநாட்டுல வந்த ஒரு பண்டிகை. எங்கிருந்து வந்தால் என்ன நல்லது நடந்தா சரி. 
No photo description available.
முதல் கதை மகாப்பாரதத்திலிருந்து...
பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, ஒருமுறை போரில் அடிப்பட்ட கிருஷ்ணரின் காயத்திலிருந்து வழியும் ரத்தத்தை தன் பட்டுப்புடவையை கிழித்து, துடைத்து, மருந்திட்டு காயத்தின்மீது கட்டுக்கட்டியதாகவும், அந்த நிகழ்வு கிருஷ்ணரின் மனதை பாதிக்க அன்றிலிருந்து திரௌபதியை தனது சகோதரியாய் ஏற்றுக்கொண்டு அவளது சுகதுக்கத்தில் பங்கெடுப்பேன் என உறுதிமொழி எடுத்து கடைசிவரை காப்பாற்றினார். இதனால்தான், அரசவையில் திரௌபதியின் துயில் உரியப்படும்போது புடவை தந்து மானம் காத்தான். 
Image may contain: one or more people and ring


அடுத்த கதை..

விஷ்ணுவின் பரமபக்தனான அரக்கன் பாலியின் வேண்டுக்கோளுக்கிணங்க வைகுண்டத்தைவிட்டு பாலியின் ராஜ்ஜியத்தை காக்க சென்றார். கணவர் இல்லாத இடத்தில் தானும் இருக்க விரும்பாத லட்சுமிதேவி சாதாரண பெண்ணாய் மாறி, அடைக்கலம் வேண்டி அலைந்து திரிந்தார். ஷ்ரவண் பூர்ணிமா  அன்று மன்னன் பாலியின் கரத்தில் ராக்கி கயிறை கட்டினாள். அவளின் அடையாளத்தையும்,  ராக்கி கயிறு கட்டியதற்கான நோக்கத்தையும் பாலி வினவ, தனது சுயரூபத்தை வெளிப்படுத்தினாள் லட்சுமிதேவிஇதனால் மனம் நெகிழ்ந்த, அன்பு மனைவிக்காக விஷ்ணுவை அனுப்ப முன்வந்ததோடு, தனது அனைத்து செல்வத்தையும் லட்சுமிதேவிக்கு அர்ப்பணித்தான்.  பாலியின் தியாகத்தின் பொருட்டு ரக்‌ஷாபந்தன் விழாவை பாலிவான்னும் சொல்வாங்க. இந்நிகழ்ச்சிக்கு பிறகே, ராக்கி கயிறு கட்டும் பழக்கம் உண்டானது. 

அடுத்த கதை..
கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வந்தபோது புருஷோத்தமன் மன்னருக்கும் அலெக்சாண்டருக்கு சண்டை நடந்தது. அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனா, மன்னர் புரோஷோத்தமனுக்கு ராக்கி கயிற்றை கட்டிவிடுகிறாள். போர்க்களத்தில் அலேக்சாண்டரைக் கொல்வதற்கு வாளை உருவிய புருஷோத்தம ராஜா, தற்செயலாக தன் கையில் கட்டப்பட்டிருந்த ராக்கியைப் பார்த்ததும் மனம் மாறி அலேக்சாண்டரை கொல்லாமல் விட்டுவிடுகிறார்.
அடுத்த கதை..
சித்தூர் ராணி கர்ணவதி,  முகலாய மன்னரான ஹுமாயூனுக்கு ஒருமுறை ராக்கி கயிற்றை அனுப்பி கட்டச் செய்கிறாள்.  அந்த சகோதர பாசத்திற்காக கர்ணவதியைக் காப்பாற்றும் பொறுப்பு ஹிமாயூனுக்கு வந்து விடுகிறது. குஜராத் மன்னர் பகதூர் ஷா, சித்தூர்மீது படையெடுத்து அந்த நாட்டைக் கைபற்றியதும் போர் தொடுத்துச் சென்ற ஹிமாயூன் நாட்டை மீட்டு, இறந்த சகோதரி கர்ணவதியின் மகன் விக்ரம்ஜித்சிங்கிடம் ஒப்படைத்தார். 
அடுத்த கதை..
வீட்டுக்கு தெரியாம கல்யாணம் கட்டிக்கிட்டு வாழும் இப்பத்திய ஆண்கள் மாதிரி பிள்ளையாரும்  இங்க  பிரம்மச்சாரி.  வடக்கே பிள்ளையாருக்கு இரு மனைவிகள், இரு மகன்களோடு வாழ்ந்து வர்றார். ரித்தி- சித்தி என்பது அவரது மனைவியரின் பெயர்கள். ரக்ஷாபந்தன் நாளில் எங்களுக்கு ராக்கி கட்ட தங்கை இல்லை என பையன்கள் இருவரும் அழ, அந்த நேரம் அங்கு வந்த நாரதரும் இதுக்கு தூபம் போட, திடீரென குழந்தை வருமாவென பிள்ளையார் நகைக்க, பக்தர்களின் துயரை அவர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களது துன்பத்தினை போக்கும் உனக்கு ஒரு பெண்பிள்ளையை உண்டாக்குவதா கஷ்டமென உசுப்பேத்தினார். அத்தோடு பெண்பிள்ளை இல்லாத வீடு சுபிட்ஷமாய் இருக்காது. எல்லா ஆணுக்கும், சகோதரிகள் முக்கியம் அதுக்காகவது ஒரு பெண்பிள்ளைக்கு தந்தையாகு என கட்டளையிட்டு சென்றார். உடனே பிள்ளையாரு, தனது மனைவிமார்களை அழைத்து இருவரும் சேர்ந்து ஒரு பெண்பிள்ளைக்கு என்னை தந்தையாக்க வேண்டும். அந்த பெண் இருக்குமிடம் சகல செல்வங்களோடு சந்தோசமாய் இருக்கவேண்டுமென உத்தரவிட, இருவரும் லட்சுமி, சரஸ்வதி, பார்வதிதேவியான முப்பெரும்தேவியரை வேண்டி சந்தோஷிமாதாவை பெற்றெடுக்கின்றனர்.  சந்தோஷிமாதாவும் தன் அண்ணன்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி மகிழ்விக்கிறாள் என வடநாட்டு புராணக்கதை. 
அடுத்த கதை
எமன் 12 ஆண்டுகள் தன் தங்கை யமுனாவைப் பார்க்கச் செல்லவே இல்லை. யமுனை, சக நதியான கங்கையிடம் ஆலோசனை கேட்டாள். கங்கை எமனுக்கு நினைவுபடுத்தினாள். எமன் தங்கை யமுனையைப் பார்க்க வந்தான். மகிழ்ச்சியில் திளைத்த யமுனைஅண்ணனுக்காக பெருவிருந்து படைத்தாள். என்ன பரிசு வேண்டும் என்றான் எமன். மீண்டும் விரைவிலேயே பார்க்க வர வேண்டும் என்றாள் யமுனை. அன்பில் திளைத்த எமன்யமுனைக்கு என்றும் அழிவில்லை என்று வாழ்த்தினான். வடக்கே அண்ணன்-தங்கை இடையிலான உறவைக் கொண்டாடும் பாய்-தூஜ் பண்டிகையின் வரலாறு இது. 

அடுத்த கதை..
இந்தி காலண்டர்படி வரும் ‘ஷ்ரவன்’ மாத பவுர்ணமி நாளில் ரக்க்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. ‘ரக்‌ஷான்னா பாதுகாப்பு, பந்தன்ன்னா இணைப்பு’ இரண்டையும் இணைத்தால் ரக்க்ஷாபந்தன். அதாவது பாதுகாப்பான ஒரு பிணைப்பு’ ன்னு அர்த்தம். தீய விஷயங்களில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், சகோதரர்களின் நல்வாழ்வு, நீண்ட ஆயுளுக்காக இறைவனிடம் வேண்டுதல் செய்து, சகோதரிகள் கட்டும் ரட்சையே, ரக்க்ஷாபந்தன் ராக்கி என்று அழைக்கப்படுகிறது. இக்கயிறு சாதாரண மஞ்சள் நூலா இருந்தாலும் சரி, இல்ல தங்கச்செயினில் வைரம் பதித்ததா இருந்தாலும் ஒரே பலன் தான். 
பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து முடித்து பூஜை செய்து, சாப்பிடாமலிருந்து, இனிப்பு வழங்கி, நெற்றியில் சிவப்பு நிற குங்குமத்தை இட்டு சகோதரர்களின் கைகளில் அலங்கரிக்கப்பட்ட ராக்கி கயிறை கட்டி,  அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவர். தன்னை வணங்கும் சகோதரிக்கு பரிசுகளை கொடுக்குறதோட அன்றிலிருந்து அவளின் பாதுகாப்புக்கு தான் இருப்பேன் என உத்தரவாதம் அளிக்கிறான். ராக்கி கயிறு கட்ட வயது வித்தியாசம், சாதி மத பேதமில்லை. சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ என்று குறிக்கும் விதமாக அவர்களுக்கு பல பெண்கள் ராக்கி கயிறு கட்டி பாசத்தை சொல்லாமல் சொல்கிறார்கள்.
ராக்கி கட்டும்போது சொல்வதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது. வெறும் கயிறு கட்டுவதோடு இந்த சடங்கு முடிந்துவிடுவதில்லை...
யேன பத்தோ பலி ராஜா தானவேந்த்ரோ மகாபலாஹ்

தேன த்வம் ப்ரதிபத்நாமி ரக்ஷே மாசல் மாசல்.

(அசுரர்களின் அரசன் பலியைக் கட்டிய இந்தக் காப்புக் கயிறை நான் உனக்குக் கட்டுகிறேன். உன்னைக் காக்கும் இந்த ரக்ஷை இது விழாமல் இருக்கட்டும், விழாமல் இருக்கட்டும்.) 


மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நாளை நாரியல், அல்லது, தேங்காய் பௌர்ணமி என்று கொண்டாடுகின்றனர். தேங்காய்களுக்கு மலர் சூடி, கடற்பயணம் சென்றவர்கள் பாதுகாப்பாக திரும்பி வர வேண்டிக் கொள்கின்றனர்.
குஜராத்தில் உள்ள சிவபக்தர்கள் இந்த நாளை பவித்ராபனா என்ற திருவிழாவாய் கொண்டாடுகின்றனர். கடவுள்களுக்கு தண்ணீர் நைவேத்யம் செய்து தம் தவறுகளை மன்னிக்க பிரார்த்தித்துக் கொள்கின்றனர். மத்திய பிரதேசம், சத்திஸ்கர் பகுதியில் உள்ளவர்கள் கஜரி பூர்ணிமா என்று கொண்டடுகின்றனர். வரும் விவசாயப் பருவத்துக்கான உழவுப் பணிகளைத் தாய்மார்கள் துவக்கி வைக்கின்றனர்.

சகோதர உறவுகள் வளர்ந்தால் சர்ச்சைகளுக்கு இடமேது? உலகிலேயே உயர்வான சகோதர உறவை வெளிப்படுத்தும் இத்திருநாள் குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற அடிப்படை பாடத்தை நமக்கு போதிக்கிறது.

சகோதரர்கள் அனைவருக்கும் ரக்‌ஷாபந்தன் வாழ்த்துகள். பதிலுக்கு வாழ்த்து சொன்னா மட்டும் போதாது. பெருசா எதாவது ரிட்டர்ன் கிஃப்ட் பண்ணனும்..

நன்றியுடன்,
ராஜி.