Saturday, September 30, 2017

குலசை முத்தாரம்மனின் அருள் பெறுவார்களா ஆட்சியாளர்கள்?!


உள்ளூர் ஆட்டக்காரனுக்கு மரியாதை குறைவுன்னு நம்மூர்ல ஒரு பழமொழி உண்டு, அதுமாதிரி நம்ம ஊரு சாமிக்கு என்னிக்குமே மரியாதை இருந்ததில்லை. எவனாவது வெளிநாட்டிலிருந்து வந்து தஸ்புஸ்சுன்னு சொன்னாதான் நம்ம ஊரு சாமியோட அருமையே இவனுங்களுக்கு தெரிய வரும். அதுமாதிரி, தசரா பண்டிகைன்னா மைசூருக்கு போகனும், கொல்கத்தாவுல போய் பார்க்கனுமேன்னு சொல்லி சிலாகிப்பாங்க. அதுமாதிரி பீட்டர்  வுடுற ஆளுங்களாம் ஒருமுறை   நம்ம  தமிழ்நாட்டுல  தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும்   குலசைன்னு சொல்லப்படுற குலசேகரன்பட்டினத்துல நடக்கும் தசரா விழாவை போய் பார்த்துட்டு வாங்கப்பு. அதுக்கப்புறம் இதுமாதிரியான பீட்டர் விடமாட்டீக.
தர்மம் நிலைக்கனும்ன்னா அதர்மம் அவ்வப்போது அழிக்கப்பட வேண்டும். அப்படி அதர்மத்தை அழிக்கிற நிகழ்வுக்குப் பெயர்தான் ’சூரசம்ஹாரம்’ என்பதாகும்.   அகன்று விரிந்து விசாலம் பெற்றிருக்கிற இந்த பூமியில் சூரிய பகவான் முகம்காட்டி மறைகிற கால அளவை ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் என நிர்ணயித்திருக்கிறான் மனிதன். அப்படியாக 365 நாட்களைக் கொண்ட நகர்வை ஒரு ஆண்டு என்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் இதுமாதிரியான ஆண்டுகள் லட்சக்கணக்கில் நகர்ந்திருக்கிறது. இந்த லட்சக்கணக்கான ஆண்டுகளில், இப்பூமியில் வாழும் உயிர்கள் பல்வேறு உருவ அமைப்பையும் குண மாற்றத்தையும் பெற்றிருக்கிறது. அவ்வாறு மாற்றத்தக்க பண்புகள் எதிர்கால உயிர்களுக்கு நன்மை செய்வதாகவும் தீமை செய்வதாகவும்கூட அமைந்திருக்கிறது. தீமை செய்யும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சிக்குப் பெயர்தான் ஆன்மிகம்.
அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்ட ஆன்மிகத்தின் பாதையைப் பின்பற்றி திருக்கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அசுரன் என்பவன் கொடியவனாக கருதப்படுகிறான். அந்த கொடியவனை சம்ஹாரம் செய்யும் அதாவது அழிக்கும் செயலே சூரசம்ஹாரம். வைகாசி விசாக திருநாளில் முருகன், பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாதம் காளி உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதற்காக  விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என பக்தர்கள் அனுபவ ரீதியாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  
சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது பெரியோர் வாக்கு( இனிமேலாவது பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு கொடுங்கப்பா!).  இந்த உலகின் அனைத்து நிகழ்வுக்கும் ஆதாரம் சக்திதான்.  அந்த சக்திக்கு உரியவள் அன்னை பராசக்தி. சக்தி அருள்பாலிக்கும் இடங்கள் அனைத்தும் சக்திப்பீடங்கள் என அழைக்கப்படுது. இப்படி இந்தியா முழுக்க 108 சக்தி பீடங்கள் உண்டு.  அகிலத்தை படைத்து,காத்து, அழித்து ரட்சிக்கும் அன்னை ஒவ்வொரு தலத்திலயும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள். 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாக்குமரி செல்லும்பாதையில் 11கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது அழகிய கடற்கரை கிராமமான குலசேகரன்பட்டினம்.   இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக புகழ் பெற்றது.   இங்குதான் தசரா பண்டிகைக்கொண்டாடப்படுது.  அன்று மகிசாசூரனை  முத்தாரம்மன் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வை காணவும், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தவும் உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு நாளைக்கு சைவ உணவை ஒருவேளை மட்டும் உண்டு விரதமிருந்து இங்கு வந்து அன்னையின் அருளாசியினை பெற்று செல்கின்றனர்.  இங்கு அருள்பாலிக்கும் அன்னை சுயம்புமூர்த்தம். பெரும்பாலும் லிங்கத்திருமேனிதான் இதுமாதிரி சுயம்புவாய் தோன்றி நமக்கு அருள்பாலிக்கும்.  இங்கு அன்னை சுயம்புவாய் எழுந்தருளிருப்பது அதிசயத்திலயும் அதிசயமே.
ஆதியில் வீரவளநாடுன்ற பெயருடன் திகழ்ந்த இந்த ஊர், பின்னர் முற்கால பாண்டிய மன்னர்களில் ஒருவரான குலசேகர பாண்டியன் பெயரிலேயே குலசேகரப்பட்டினம் என்ற அழைக்கப்படுது. அக்கால மன்னர்கள் நகர்வலம் செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது, இறைவனின் ஆலயங்களை தரிசிப்பதை தங்களின் கடமையாகக் கொண்டிருந்தனர். ஒருமுறை குலசேகரபாண்டியன் இந்த ஊரில் தங்க நேர்ந்தபோது, கோயில் எதுவும் அங்கே இல்லாதபடியால் ஊரின் தென்பாகத்தில் ஒரு விநாயகர் கோயிலைக் கட்டினான். அந்த விநாயகரின் பெயர் ‘மும்முடி காத்த விநாயகர்’ .  பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலும் சேர, சோழ மன்னர்களும் வெவ்வேறு காலங்களில் இந்த ஊரை தங்கள் வசப்படுத்தியதாகத் தெரியவருகிறது. அதனால்தான் ‘மும்முடி காத்த விநாயகர்’ என்று பெயர் ஏற்பட்டது. 
முத்தாரம்மனுக்கு அருகிலேயே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிப்பதும் அதிசத்திலும் அதிசயமே!  இத்தலத்தில் சிவன், ஞானமூர்த்தீஸ்வரர் மனித உருவில் மீசையுடன் காட்சியளிப்பது இன்னும் அதிசயம்.  விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும்பொருட்டு தனது வலக்கையில் செங்கோல் தாங்கி உள்ளார்.  இடக்கையில் திருநீற்று கொப்பரை தாங்கி தன்னை வழிபடுபவருக்கு ஞானத்தை அளிக்க தயார் நிலையில் தான் இருப்பதை  நமக்கு உணர்த்துகிறார். ஞானம் என்றால் பேரறிவு. மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம்.  பேரறவு உடைய வடிவத்த்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று பொருள்படும்படி ஞானமூர்த்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.  
சோழ நாடு சோறுடைத்து, சேர நாடு வேழமுடைத்து, பாண்டிய நாடு முத்துடைத்துன்னு ஒரு சொலவடை உண்டு.  தங்களுக்கு கிடைக்கும் அரிய வகை முத்துக்களைக்கொண்டு ஆரம் செய்து அன்னைக்கு அணிவித்து மகிழ்ந்தனர் பாண்டிய மன்னர்கள், அதனாலும் அன்னைக்கு முத்தாரம்மன் என பேர் வந்தது. இதுமட்டுமின்றி, அம்மை கண்டவர்களை  முத்துப்போட்டதாக சொல்வர்.  முத்துக்கண்டவர்களை  இங்கிருக்கும் அம்மன் பீடத்தை சுற்றி நீர்கட்ட செய்வர். அதனால் முத்து நோய் குஇணமாகும். முத்து நோயை ஆற்றுப்படுத்தியதாலும் அன்னைக்கு முத்தாரம்மன் என்றும் பெயருண்டானது.
முன்னொரு யுகத்தில் இந்தப் பகுதியில் வரமுனி என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்தார். ஒருமுறை அகத்திய முனிவர் இந்த வழியாக வந்து கொண்டிருந்தபோது, வரமுனிவர் அவரை வரவேற்று உபசரிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டார். அதன் விளைவாக அவர் மகிஷாசுரனாக மாறி, மற்ற முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தார். அன்னை சக்தி தோன்றி மகிஷனை சம்ஹாரம் செய்தாள். அசுரனாக  இருந்தாலும், பூர்வாசிரமத்தில் முனிவராக இருந்ததால், மகிஷனை சம்ஹாரம் செய்ததும் அம்பிகையை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. தோஷம் நீங்க வேண்டி அம்பாள் சிவபெருமானை தியானித்து தவம் இருந்தாள். அம்பிகையின் தவத்துக்கு இரங்கி சிவபெருமான்  ஞானமூர்த்தீஸ்வரராக  தரிசனம் தந்த தலம்தான், இந்த குலசை திருத்தலம்.
ஆதியில் மகிஷாசுரனை வதம் செய்த தேவி, அந்த தோஷம் நீங்க சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து, சிவபெருமானின் தரிசனமும் தோஷ நிவர்த்தியும் பெற்ற இடத்தில் கால ஓட்டத்தில் புற்றும், அதன் மேலாக ஒரு உடைமரமும் வளர்ந்தது. பின்னாளில், ஆங்கிலேயர்கள் கன்னியாகுமரிக்கு புறவழிச்சாலை அமைக்க குலசேகரப்பட்டினத்தில் தேர்வு செய்திருந்த இடத்தில் இந்தப் புற்றும் மரமும் தடையாக இருக்கவே, மரத்தை வெட்ட முடிவெடுத்தனர். அப்படி மரத்தை வெட்டியபோது, எந்தக் கிளையை வெட்டினாலும் அதில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. சுற்றியிருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது, அங்கிருந்தவர் களில் ஒருவர் மரத்தின் அடிப்பகுதியை மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அங்கே இறைவனின் முகமும், இறைவியின் முகமும் காணப்பட்டது. எனவே மக்கள் அந்தப் புற்றையே இறைவியாக பாவித்து வழிபடத் தொடங்கிவிட்டனர்.
அன்னை முத்தாரம்மனின் திருஉருவத்தை காணமுடியவில்லையே என  மக்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர். அதனால், கோவில் அர்ச்சரின் கனவில் தோன்றிய அன்னை, கன்னியாக்குமரி அருகே இருக்கும் மைலாடி என்ற ஊருக்கு செல்ல பணித்தாள். அதேப்போல, மைலாடியிலிருக்கும் ஒரு சிற்பியின் கனவில் தோன்றி, தனது உருவம் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் காட்சியளித்து, அங்குள்ள ஆண்,பெண் பாறையில் ஒரே பீடத்தில் தங்களை சிலையாய் வடிக்க கட்டளையிட்டாள். பின்னர் தாங்கள் சுயம்புவாய் எழுந்தருளும் குலசை கோவில் குருக்களிடம் கொடுத்து பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டாள். அதுப்படி சிலையை வடித்து முடிக்கவும், அர்ச்சகர் அவ்வூருக்கு வரவும் சரியாய் இருந்தது. அச்சிலைகளை பெற்றுக்கொண்டு இன்று கோவில் கொண்டிருக்கும் இடத்தில் அம்மையப்பனை பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர்.
புரட்டாசி மாத அமாவாசையன்று கொடியேற்றத்துடன் குலசை தசரா பண்டிகை தொடங்கும். கொடியேற்றத்தின் முதல் நாளிரவு சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்படும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அன்னை திருவீதி எழுந்தருள்வாள்.  10வது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அன்னை கடற்கரையில் எழுந்தருளியிருக்கும் சிதம்பரேஸ்வரர் ஆலயத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடக்கும். அங்கு மகிஷாசுர வதம் நடக்கும். முதலில் ஆட்டு தலை, அடுத்து சிம்ம தலை, கடைசியாய் மகிஷாசுரன் தலையினை கொய்து சூரசம்ஹாரம் நிகழ்த்துவாள்.   இதையடுத்து அன்னை சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள் அங்கு அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெறும்.  மறுநாள் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா நடக்கும்.  மாலை அம்மன் கோவிலை வந்தடைவாள்.  பின்னர் கொடி இறக்கப்படும்.  சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் கழட்டப்பட்டு விழா நிறைவுப்பெறும்.
குலசை தசரா திருவிழாவின்போது ஆண்கள் பலரும் விதவிதமான காளிவேடமிட்டு   வருவதை காணலாம்.  காளிவேடத்தை கண்டதும் அம்மனே நேரில் வந்துள்ளதாக எண்ணி அருளாசி பெறுவதும், அருள்வாக்கு கேட்பதும் சர்வசாதாரணமாய் நடக்கும்,  அம்மன் சூரசம்ஹாரத்தின்போது மகிஷனை சூலாயுதத்தால் குத்தும்போதும் தாங்களும் தங்கள் கையிலிருக்கும் சூலாயுதத்தால் மகிஷனை குத்துவார்கள்.   காளிவேடம் போடுபவர்கள் 48 நாட்கள் கடுமையான விரதமிருப்பார்கள்.  அவரவர்கள் குடியிருக்கும் ஊர்களிலேயே கோவில்களில் தங்கி தாங்களே சமைத்து ஒருவேளை மட்டும் சைவ உணவை உண்டு விரதமிருப்பர்.  கருமை நிற சாய்ம் பூசி, அட்டை, தகரத்தால் செய்த கைகள், க்ரீடம் தரித்து,  நேர்ப்பார்வை மட்டுமே பார்க்கும்விதமாய் செய்யப்பட்ட கண்மலர் அணிந்து , வாயின் இருபுறமும் சொருகிக்கொள்ளும் கோரைப்பற்கள், வெளித்தொங்கும் நாக்கு முண்ட, ருத்திராட்சை மாலை அணிந்து காளிவேடமிடுவர். காளி வேடமிடக்கூட பொருட்கள் அனைத்தும் சேர்ந்து கிட்டத்தட்ட 30கிலோ தேறும்.
முன்பு ஆண்கள் மட்டுமே வேடமிடுவர். இப்போது இளம்பெண்களும் தங்களின் நேர்த்திக்கடனுக்காக வேடமிடுகின்றனர்.  பக்தர்கள் இவ்வாறு வேடமிட்டு அருகிலிருக்கும் ஊர்களில் சென்று தர்மம் பெறுவதை வழக்கமாய் கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம்,  முற்காலத்தில் முத்ஹ்டாரம்மன் மாறுவேடத்தில் சென்று  அருகிலிருக்கும் ஊர்களில் வாழும் மக்களிடம் தர்மம் பெற்றதாய் ஐதீகம். இந்த ஐதீகப்படிதான்  இன்றும் இப்படி தர்மம் கேட்கின்றனர்.  அவ்வூர் மக்களும் முத்தாரம்மனே தங்களிடம் தர்மம் கேட்பதாய் எண்ணி மனம் மகிழ்ந்து அரிசி, பருப்பு, பணம் என தர்மம் செய்கின்றனர்.
குலசை முத்தாரம்மன் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு திருமஞ்சணை எனப்பெயர்.   புற்றுமண், மஞ்சள்பொடி, எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு பூஜையின்போது சாத்தப்பட்டு மறுநாள் பிரசாதமாய் வழங்கப்படுது. இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு நெற்றியில் பூசிக்கொண்டால் தீராத வியாதி தீரும்.  குலசை முத்தாரம்மன் கோவிலில் தினமும் 1000பேருக்கு அன்னதான திட்டத்தின் கீழ்  அன்னதானம் வழங்கப்படுது.  குலசை கோவிலுக்கு வருபவர்கள் அம்மனை தரிசனம் செய்துவிட்டு உடனே கிளம்பிவிடுவர். பால்குடம் எடுப்பதாக வேண்டிக்கொண்டவர்கள் மட்டும் இரவு கோவிலில் தங்க வேண்டுமென்பது விதி. குலசை முத்தாரம்மன் கோவிலில்  மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு பூஜை நடைப்பெறும். இப்பூஜையில் கலந்துக்கொண்டு அங்கு தரும் மாவிளக்கை சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.....
கன்னியாக்குமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, மதுரையிலிருந்து நேரடி பேருந்துகள் இத்தலத்துக்கு உண்டு. குலசை முத்தாரம்மன் திருவிழா உலகப்புகழ் வாய்ந்ததுன்னாலும் நம்ம அரசாங்கத்துக்கு இன்னும் இவ்விழாவின் மகிமை தெரியவில்லை போலும். லட்சக்கணக்கானவர்கள் கூடும் இடத்தில் சரிவர கழிவறை, குடிநீர், மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதில்லை. இந்த வசதிலாம் செஞ்சுக்கொடுத்தா முத்தாரம்மனின் அருள் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் கிட்டும்..... அருள்பெறுவார்களா ஆட்சியாளர்கள்?!
2013 குலசை தசரா பண்டிகையின்போது போட்ட பதிவு.  போகும்போது ஒரு எட்டு பார்த்துட்டு போவிகளாம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை.....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473305

நன்றியுடன்,
ராஜி

பெண்ணை ஏளனமாய் நினைத்த மகிஷாசுரன்

நவம்ன்னா ஒன்பதுன்னு அர்த்தம்.  அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபடும் மக்கள், மகிஷாசுரனை தேவியானவள் 9 நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளை விஜயதசமியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றதையே விஜய தசமி பண்டிகை குறிக்கிறது. விஜய்ன்னா வெற்றி,  தசமி ன்னா பத்து (தசம் என்றால் பத்து). இதனையே விஜயதசமின்னு சொல்றோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம் நாளான இன்று அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
விஜயதசமிக்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான  உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று அம்பாள் விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’என்றும் கூறப்படுகிறது. அன்று அம்பாளே நம் இல்லம் தேடி வருகிறாள் என்றால் இந்நாளின் சிறப்பு பற்றி சொல்லவும் வேணுமோ?! 

நவராத்திரியின் ஒன்பதாவது நாளான மகாநவமி என்று சொல்லப்படும் ஆயுத பூஜையன்று  தொழில்களையும்,  கல்வியையும், கலைகளையும் போற்றும்  விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் ஆதிக்காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள். இத்திருநாளில் ஏடு தொடங்குதல், புதிய வியாபாரம், புதிய தொழில் ஸ்தாபனங்கள்  போன்றன  ஆரம்பிப்பதால் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குழந்தைகளுக்கு விஜதசமி தினத்தன்று ஆரம்பக் கல்வியை இந்த நாளில் ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம். தவிர, உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில்தான் கொண்டாடப்படுது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விழாவாகவே தசரா பண்டிகை திகழ்கிறது. மைசூருவில் நடைபெறும் தசரா பண்டிகை ரத ஊர்வலத்தைக் காண இந்தியா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவார்கள். மைசூரு தசரா பண்டிகையைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையும் மிகப் புகழ்பெற்றது. அங்குள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் இந்த பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.
மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட  திருநாள். தீமையின் உருவான பத்து தலை ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். இதன் நினைவாகவே வடநாட்டில் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படுது.  பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையையும்  வழிபட்டது இந்நாளில்தான்.... 
.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவி சகல சௌபாக்கியங்களையும் வழங்குவாள் என்பது ஐதீகம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் வழக்கத்தில் உள்ளது. 

பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் மகிஷன் என்னும் அசுரன். அவனது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், அசுரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷன் மகிழ்ச்சியில் திளைத்தான். பின்னர் தனக்கு அழிவில்லாத வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். ஆனால் பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே வேறு வரம் கேட்கும்படி பிரம்மதேவர் கூறினார். இதையடுத்து, ‘தனக்கு அழிவு என்று ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும்’ என்ற வரத்தை மகிஷன் கேட்டான். பிரம்மதேவரும் அவன் கேட்டபடியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்பது மகிஷனின் எண்ணம்.


பெண்ணால் மரணம் வராது என்ற தைரியத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான். மகிஷனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம் என்று உள்ளது. எனவே நீங்கள் அன்னை பராசக்தியிடம் சென்று வேண்டுங்கள்’ என்று கூறி தேவர்களை அனுப்பிவைத்தார் மகாவிஷ்ணு. தேவர்கள் சக்தியை நோக்கி வழிபட்டனர். அதன் பயனாக அவர்கள் முன்பு மகாலட்சுமி தோன்றினாள். ‘மகாலட்சுமி’ என்பதற்கு எல்லாவிதமான லட்சணங்களையும் கொண்டவள் என்பது பொருளாகும். அவளிடம் தேவர்கள் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, தேவர்களை காக்கும் பொருட்டு தேவியானவள் போருக்கு ஆயத்தம் ஆனாள்.

சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தைக் கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள். போர்க்களம் புகுந்ததும் தன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10–ம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது. 

கொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசுரன் அழிந்த தினத்தை, அன்னை வெற்றிபெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடி மகிழ்ந்தனர். மகிஷன் வதத்தின் நினைவாகவே நாமும் விஜயதசமியை கொண்டாடுகின்றோம்.பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

பார்க்க கொடூரமாய் இருந்தாலும் வரங்களை வாரி இறைப்பதில் அவளுக்கு நிகர் அவளே! ராவணனை கொன்ற ராமரும், கர்ணனை கொன்ற அர்ஜுனனும் தங்கள் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிப்பட்டது துர்க்கையைதான். இவளை வணங்க ராகுகாலம் உகந்தது. அமாவாசை, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களும் இவளை வணங்க ஏற்ற நாட்கள். இவளை வணங்குவதால் ராகுதோஷம் நீங்கும். திருமணம் கைக்கூடும்.  வெற்றியை அளித்து வாழவைப்பதில் விஷ்ணு அம்சம், பக்தர்களின் தேவைகளை புதிதாய் படைப்பதில் பிரம்மன் அம்சம், பக்தர்களுக்கு நேரும் துன்பங்களை அழிப்பதில் சிவனின் அம்சம் இவள்.

துர்க்கையை வணங்குவோம்... வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்... துர்காதேவியின் மூல மந்திரம்...
 ஓம் காத்யாயனாய வித்மஹே 
கன்யா குமரீச தீமஹி 
தந்நோ துர்க்கிப்  ப்ரசோதயாத்

கன்னியாகுமரி தேவியே மஹிஷாசுர மர்தினி 
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473240
நன்றியுடன்,
ராஜி. 

Friday, September 29, 2017

ஆயுத பூஜை கொண்டாடுவதன் அர்த்தம் என்ன?!


சரஸ் என்றால் நீர், ஒளின்னு அர்த்தம், சரஸ்வதி பிரம்மனின் நாவில் இடம்பெற்றிருப்பதால் அவளுக்கு நாமகள்ன்னும் பேரு. இவள் மூல நட்சத்திரத்திற்கு சொந்தக்காரி. பிரம்மனின் மனைவி என்று பொருள்படும்படி பிராஹ்மின்னு சொல்வாங்க. இதில்லாம, கலைமகள், கலைவாணி, கலையரசி, கலைச்செல்வின்னு அழகான தமிழால் இவளுக்கு பேர்கள் அனேகம். ஒட்டக்கூத்தர் என்ற புலவரால் கூத்தனூரில் சரஸ்வதிக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஞானபீட விருதுக்கு  வாக்தேவி என்று பெயர். குமரகுருபரர் இயற்றிய சரஸ்வதி துதிக்கு சகலகலாவல்லி மாலை என்றும்,  கம்பர்,  சரஸ்வதிதேவி பற்றி பாடியதற்கு சரஸ்வதி அந்தாதி என்றும் பெயர்.


ஒருமுறை பிரம்மனின் சாபத்தால் பேசும் சக்தியை இழந்தாள் கலைவாணி. இதையடுத்து பூலோகத்துக்கு வந்த கலைவாணி, ஈசனை  வேதங்கள்  வழிப்பட்ட தலமான வேதாரண்யத்துக்கு வந்து ஈசனை வழிப்பட்டாள். அப்போது வேதாரண்யம் அம்பாளிடம் வீணையை இசைத்துக்காட்ட வந்தாள். அங்கு வந்தப்பின் அம்பாளின் குரலை கேட்க நேர்ந்தது. வீணையின் இசையைக்காட்டிலும் அம்பாளின் குரல் இனிமையானதாய் இருந்ததால், தனது வீணையை மூடி வைத்து விட்டாள். அதனால், வேதாரண்யம் அம்பிகையின் பெயர் யாழைப் பழித்த மென்மொழியாள் என்று விளங்கலாயிற்று. 
இந்த நிலையில் தன் சாபத்தால் பேசும் சக்தியை இழந்த கலைவாணியை காண பிரம்மன் சத்தியலோகத்திலிருந்து பூலோகம் வந்தார்.   சிருங்கேரி என்ற தலத்திலிருந்து கலைவாணி தவம் செய்துக்கொண்டிருந்தாள்.  அவளை சமாதானம் செய்து  அங்கிருந்து, வேலூர் அருகிலிருக்கும் வாணியம்பாடி என்ற தலத்திற்கு அழைத்து வந்தார்.  அங்குள்ள அதிதீஸ்வரரையும், பெரியநாயகி அம்பாளையும் வணங்கி  கலைவாணிக்கு மீண்டும் பேச்சு வர வேண்டினார்.  பிரம்மாவின் வேண்டுதலை நிறைவேற்ற எண்ணிய அதிதீஸ்வரரும், பெரியநாயகி அம்பாளும் பிரம்மன் முந்தோன்றி,  ஹயக்கிரீவர் முன் கலைவாணியை வீணை வாசிக்க அருளினர்.  மேலும் கலைவாணிக்கு பேசும் சக்தியையும் அருளினர்.  கலைவாணி வீணையை இசைத்துக்கொண்டு  பாடல் பாடியதால் இத்தலத்திற்கு வாணியம்பாடி என்றானது. 
இத்தல அதிதீஸ்வரர் சுயம்புவாய் தோன்றியவர். மேற்கு நோக்கி அமர்ந்து நமக்கு அருள்புரிகிறார்.  பெரியநாயகி அம்பாள் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாளிக்கிறாள்.  இங்கு சரஸ்வதி தேவிக்கென்று தனிச்சன்னிதி உள்ளது..  இவர் கிழக்கு நோக்கி அமர்ந்து,  மடியில் வீணையுடன், இடது காலை மடித்து ஒய்யாரமாய்  காட்சி தருகிறாள். இத்தலத்தில் சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணன் கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.   இங்கு, பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் தனித்தனி சன்னிதியில் அருள்புரிகின்றனர். அத்தீஸ்வரர், பெரியநாயகி அம்பாள். சரஸ்வதி தேவி ஆகியோருக்கு தனித்தனியே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிப்பட்டால்  கல்வி அறிவு பெருகும்,  கல்வியிலும் பேச்சாற்றலிலும், நேர்முகத்தேர்விலும் வெற்றி பெறும் ஆற்றலை அருள்வாள்.  வேலூரிலிருந்து 65கிமீ, ஜோலார்பேட்டையிலிருந்து 16 கிமீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன்  கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி  சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். சிருங்கேரியில்  ஒரு மாணவிபோல படிக்கின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள் சரஸ்வதி.  வேதாரண்யம்,  திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதியை காணலாம்.   கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற கலைப்பொக்கிஷத்தில் நடனமாடும் கோலத்தில் இருக்கும் சரஸ்வதி தேவியை காணலாம்.
ஜப்பானியர்கள் ‘பென் டென்’ என்னும் பெயரில் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர்.  டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் இத்தேவி சிதார் வாசிக்கிறாள்.  இந்தோனேசியா, பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்ஹ்டு பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்பூஜைக்கு ‘கலஞ்சன்’ என்று பெயர்.  விஜயதசமி நாளில் பாலித்தீவில் தாம்பாத்ஸரிம் என்னும் குளத்தில்  நீராடி புத்தகங்களை வழிப்பட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை.

ஆயுதங்களின் உண்மையான பயனையும், அதனை நேர்வழியில் பயன்படுத்த வேண்டுமென்பதை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.  உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் நிறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜையாகும்.   

ராமாயணத்தில் ராமர் கொண்டாடிய ஆயுத பூஜை

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லாவகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் போட்டு, விபூதி பூசி,  மஞ்சள் குங்குமம் வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும். ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். 


பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் தெரிந்ததே.  நாடு இழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்தனர். பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.


இதுமட்டுமின்றி, ஒவ்வொரு மன்னனும் போருக்கு செல்லும் முன்னும், சென்று வந்த பின்னும் தங்களின் போர்ப்படை ஆயுதங்களுக்கு பூஜை போடுவதை வழக்கமாய் கொண்டிருந்தனர்.


நமக்கு பலவிதங்களில் உதவும் ஆயுதங்களை சரிவர, நேர்வழியில் மட்டுமே பயன்படுத்துவோம். அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473208
நன்றியுடன்,
ராஜி.

ப்ராம்மிதேவி வழிப்பட்ட சக்கராப்பள்ளிநவராத்திரி ஒன்பதாவது நாளில் வணங்க வேண்டியது பிராம்மியை. இவள் அம்பிகையின் முகத்திலிருந்து தோன்றியவள். . சப்த கன்னிகளில் முதலானவள்.  பிரம்மனின் அம்சம். அதனாலாயே, அவரைப்போல், 4 முகங்கள், ஜப மாலையும் கமண்டலமும் தாங்கி அபய வரத கரத்தோடு, ஜடாமுடியோடு, பீதாம்பரம் உடுத்தி, மான் தோலில் அமர்ந்தவாறு அன்ன வாகனத்தில்  காட்சியளிக்கிறாள்.  மேற்கு திசைக்கு காவல்காரி.  கல்வி செல்வத்துக்கும் அதிபதி. சிதம்பரம் காளி கோவிலின் மூலவர் இந்த ப்ராம்மியே ஆகும். தஞ்சை அய்யம்பேட்டைக்கருகில் இருக்கும் சக்கராப்பள்ளியில் தங்கி ஈசனை பூஜித்து அருள்பெற்றாள்.  முக்திக்கு சாட்சி சக்கரவாஹு பறவை. இத்தலத்தில் ஈசனை பூஜித்து , தான் வணங்கிய ஈசனாலாயே முக்திக்கு அழைத்து செல்லப்பட்ட தலம். அதனாலாயே இத்தல ஈசனுக்கு சக்ரவாகேஸ்வரர் என்று பெயர். ஆதிசக்தி இத்தலத்தில் நேத்ர தரிசனம் பெற்றாள். நெற்றிக்கண் என்பது ஞானாக்னி சொரூபமாகும். மாயை கலப்பில்லா பூரணமான ஞானத்தை இத்தலத்தில் அன்னை பெற்றாள். ஈசனே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை உணர்ந்து அரூபமாய் இத்தலத்திலேயே தன்னை நிலை நிறுத்திக்கொண்டாள். இங்கு அன்னை ஏழு வயது சிறுமியாய் அருள்புரிகிறாள். 

இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம். மிகப்பழமையான கோவில் இது. இங்கிருக்கும் சுவற்றில் சக்கரவாஹு பறவை ஈசனை பூஜிப்பது போன்ற சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. ஈசன் சக்ரவாகேஸ்வரராய் தியானத்தில் மூழ்கி இருக்கும் ஒரு ரிஷியின் அமைதியான சொரூபமாய்  பூரணத்துவமாய் காட்சியளிக்கிறார்.   இங்கு அருளாட்சி புரியும் அம்மன், பக்தரின் குரலுக்கு ஓடிவரும் பரபரப்பு தோரணையில் ஒரு காலை சற்றே முன்வைத்த மாதிரி காட்சி தருகிறாள்.  பிரகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தி தலைமேல் ஐந்து தலை நாகம் குடைப்பிடிக்க, கைகளில் நாகாபரணம் பூண்டு காட்சியளிப்பது  எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும். 

ப்ராம்மி தேவியின் மூல மந்திரம்...

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473146 நன்றியுடன்,
ராஜி. 


Thursday, September 28, 2017

நரசிம்மர் பார்த்து மகிழ்ந்த லட்சுமி தேவியின் நரசிம்மி கோலம்....

நவராத்திரியின் எட்டாவது நாளான இன்று நாம் வணங்க வேண்டியது நரச்சிம்மகியை... ஆணுமல்லாது பெண்ணுமல்லாது.. மிருகமுமல்லாது மனிதனுமல்லாது.... விண்ணிலுமல்லாது, தரையிலுமல்லாது... எந்தவித ஆயுதத்தாலுமல்லாது தன் உடலிலிருந்து வீழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் தன்னைப்போல ஒருவன் உருவாகவேண்டுமென்று வரம் வாங்கிய ரத்தபீஜனை, தன் மடியிலிருத்தி, தன் கூரிய நகங்களால் கிழித்து அவன் ரத்தத்தை நரசிம்மகி குடித்த தினம் இன்று... இவள் நரசிம்மரின் அம்சம்.  கரும்பு வில் பிடித்திருக்க, சுற்றிலும் அனிமா சுள்ளிட்ட சக்திகள் எழுந்திருக்க, பார்க்க கொடூரமாய் இருந்தாலும் கருணையே வடிவானவள் இவள். இந்த அலங்காரத்தில் அன்னையை வழிப்பட்டால் சகல சௌபாக்கியமும் கிட்டும். 

இன்றைய தினம் அஷ்டமி. வளர்பிறை அஷ்டமி... இறைவழிபாட்டுக்கு உகந்த தினம். இதுவரை நவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்காதவர்கள்கூட இன்றிலிருந்து அன்னையை வழிபட ஆரம்பித்தால் நவராத்திரி முழுக்க விரதமிருந்த பலன்கள் கிட்டுமென்பது நம்பிக்கை.  இன்றைய தினம் அம்மனை வரவேற்கும் விதமாக  நாணயங்களைக் கொண்டு பத்மக்கோலம் போடலாம். பூ வகைகளில் மருதோன்றி, ரோஜா, சம்பங்கி, வெண்தாமரை ஆகியவற்றை பயன்படுத்தி கோலமிடலாம்.  பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். சிலர் இன்று சொஜ்ஜி அப்பம் படைத்து வழிபடுவது உண்டு. இலை வகைகளில் பன்னீர் இலையையும், பழவகைகளில் திராட்சையையும், சுண்டல் வகைகளில் மொச்சை சுண்டலையும் பயன்படுத்தலாம்.  புன்னாகவராளி ராகத்தில் பாடி, அம்மனை வழிபட்டால் அச்சம் நீங்கும் என்பது ஐதீகம். அதுபோல இன்று 9 வயது சிறுமியை மகாகவுரியாக அலங்கரித்து பூஜித்தால் நமக்கு இஷ்டசித்தி உண்டாகும்.  பாசிப்பருப்பு, கடலை பருப்பு சேர்ந்த பாயாசத்தை படைத்து வடையுடன் நிவேதனமாக வைத்து வழிபட்டால், நாம் கேட்கும் வரத்தை எல்லாம் அம்மன் தருவாள். அது மட்டுமின்றி வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து தேவி நமக்கு ஏற்றத்தைத் தருவாள்.

எவ்வளவு கஷ்டமான காரியமென்றாலும் சிரமம் இல்லாமல் செய்து முடிக்கும் ஆற்றலை இவள் கொடுப்பாள்.  ஆரணியிலிருந்து 15கிமீ, வந்தவாசியிலிருந்து 30கிமீ, சேத்பட்டிலிருந்து 15கிமீ, செய்யாறிலிருந்து 30கிமீ தூரத்தில் இருக்கு ஆவணியாபுரம் என்ற சின்ன கிராமம். தட்சண சிம்மாசலம் தட்சிண அகோபிலம் என்று சொல்லப்படும் இத்திருத்தலம்  சிறிய மலைக்குன்றின்மீது இருக்கின்றது.  இங்கு நாராயணன் சிங்க முகத்துடன் நரசிம்மராக அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றழைக்கப்பட்டு ஆவணியாபுரம் என்று இன்று அழைக்கப்படுது. 
இந்த தலம் பஞ்சதிருப்பதிகளில் ஒன்று. திருப்பதி வெங்கடாஜலபதி, ஸ்ரீரங்கம் அரங்கநாதன், காஞ்சிபுரம் வரதராஜபெருமான், சோளிங்கர் நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் என ஐந்து எம்பெருமான்கள் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயங்களில் முதல் நான்கு ஆல்யங்கள் மலைமீது அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் அருளும் ஆலயம் மலையின் பாதியில் ஒரு குகைக்குள் அமைந்துள்ளது. அவரது இடதுப்புறம் அன்னை நரசிம்மகியாக இங்கு அமர்ந்தகோலத்தில் காட்சியளிக்கிறாள். உற்சவ மூர்த்தி மட்டும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இச்சன்னிதியின் எதிரில் இருக்கும் கருடாழ்வாரும் சிம்ம முகத்தோடவே காட்சியளிக்கிறார், இது எங்கும் காணக்கிடைக்காத அரிய காட்சி. இங்கிருக்கும் ஆஞ்சிநேயர் வில்லேந்தி காட்சியளிக்கிறார். 


திருவோணம் நட்சத்திரம்,  சனிப்பிரதோஷம், புரட்டாசி சனி, ஏகாதசி உட்பட அனைத்து சனிக்கிழமைகளில்  எம்பெருமானை வழிபட கூட்டம் அலைமோதும்.  நரசிம்ம மூர்த்திகளை வணங்கி நம்பிக்கையுடன் இந்த நாட்களில் தங்களது வேண்டுதலை வைக்க அவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கு அருள் புரியும் மகாலட்சுமிதேவி இங்கிருக்கும் நரசிம்மர் போலவே சிங்கமுகத்துடன் காட்சியளித்து நரசிம்மி என்ற பெயருடன் விளங்குகிறாள். தன்னைப்போலவே காட்சியளிக்கும் நரசிம்மி தேவியை முதன்முதலில்  பார்த்த நரசிம்மர்  மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். அவரும் ஏதாவது வரம் கேட்கும்படி சொல்ல தேவி நரசிம்மி அவரிடம் அவரது விசுவரூப தரிசனம் பார்க்க ஆசையாக இருப்பதாக தெரிவித்தாராம். அதன்படி தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை தேவிக்கு காட்ட தேவி மிகவும் மகிழ்ந்து போனாளாம். அதனால் இந்த இடத்தில் இருக்கும் மக்கள் எந்தப் புது வேலையானாலும் இந்த தேவியிடம் வந்து சொல்லி ஆசிகள் பெற்று செல்லுகின்றனர். புது வண்டி. புது வீடு, நிலம், சொத்து என்று எதுவாக இருந்தாலும் நரசிம்மியிடம் வந்து சொல்லி ஆசிகள் பெறுகின்றனர். குழந்தை பிறந்ததும் அன்னையின் மடியில் வைத்து ஆசி பெறுகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலம்போல் இங்கும் பல சித்தர்கள் வந்து இவர்களிடம் அருளைப் பெறுகின்றனராம். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீஅகத்திய முனிவரும் சூட்சும வடிவில் இங்கு வந்து கிரிவலம் செய்கின்றார் என்றும் மக்கள் சொல்கின்றனர். குபேரனும், தான் முன்பு இழந்த பதினாறு வகை நிதிகளை இங்கே வந்து கிரிவலம் சென்று மீண்டும் திரும்பப் பெற்றதாகக் கூறுகிறார்கள். அதனால் இங்கு கிரிவலம் செய்ய அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், திருவோணம், சனிக்கிழமை போன்ற நாட்களில் மக்கள் வருகின்றனர். நரசிம்மி தேவியின் அருளைப் பெறுகின்றனர். இந்தகோயிலின் கருட தரிசனமும் பல இன்னல்களைக் களைகிறது. நிலையான செல்வம் தருகிறது. ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற ஒலி தென்றலில் வந்து மோதுகிறது. கிரிவலத்தின்போது பலர் ‘ஓம் நமோ நரசிம்மாய’ என்று சொல்லியபடி கிரிவலம் செய்கின்றனர். முன்னலாம் திருப்பதி சென்று நேர்த்திக்கடன் செய்ய இயலாதவங்க இங்கயே நேர்த்திக்கடனை செலுத்துவர். துலாபாரம் முதற்கொண்டு அனைத்து விதமான நேர்த்திக்கடங்களும் இங்கு செலுத்தப்படுது. ஆரணி, வந்தவாசி, செய்யாறு, சேத்பட்டை இணைக்கும் அனைத்து பேருந்துகளும் ஆவணியாபுரம் வழியே செல்லும். மெயின்ரோட்டிலிருந்து மலைக்கோவில் சுமார் ஒரு கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. மலைக்கோவிலுக்கு நடந்து செல்லலாம் அல்லது ஷேர் ஆட்டோக்களும் உண்டு. 


"ஓம் நமோ நரசிம்மி சமேத ஸ்ரீநரசிம்மாய" 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473029
நன்றியுடன்,
ராஜி.