Wednesday, March 29, 2017

அறுசுவையுடன் தொடங்கும் தெலுங்கு வருடப்பிறப்பு

ஆந்திரா, கர்நாடகம், தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி என்றழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு. மகாராஷ்டிர மக்களால் குடிபாட்வா என்றும், சிந்தி மக்களால் சேதி சந்த்  என்றும் கொண்டாடப்படுது.  யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். யுகத்தின் தொடக்கம் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் இவ்வாறு அழைக்கப்படுது.   

சைத்ர (சித்திரை)  மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த  உலகத்தை படைத்ததாக பிரம்மபுராணத்தில் கூறப்படுது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிக்கின்றது.
இந்த யுகாதி நாளில் சம்ஹத்தர கௌரி விரதம் என்ற விசேஷ விரதம் அனுஷ்டிக்கப்படுது. நாம் எல்லோரும் வேத வராகக் கர்ப்பத்தில் இருக்கிறோம். அந்தக் கர்ப்பம் தொடங்கிய நாளும் தேவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் பன்னிரெண்டு ராசிகளில் நிற்பதைக் குறிக்கும் வகையில் சௌரமான மாதங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அதேப்போல் சந்திரன் நிற்கின்ற ஒரு மாதத்தின் நட்சத்திரத்தை வைத்து சாந்திரமான மாதங்கள் என்று தெலுங்கு சம்பிரதாயத்தில் குறிப்பிடப்படுகிறது.
யுகாதியின் சிறப்பு

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.
பொதுவாய் யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில்  கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.
இனி பண்டிகை கொண்டாடும் முறை;

இப்பண்டிகைக்கும் , நமது தமிழ் வருடப்பிறப்பு கொண்டாட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.   காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் - ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். பின், ஏழை எளியோருக்கு நிவேத்திய பொருட்களை கொடுப்பது வழக்கம்.
பஞ்சாங்கம் படித்தல்; 

யுகாதி பண்டிகையை வரவேற்று ஒரு துதி கூறிய பிறகு அந்தந்த மாதத்தின் பலனைக் குடும்பத் தலைவர் படிப்பார். இந்த ஆண்டின் இயற்கை வளம், மழைப் பொழிவு, அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் நன்மை, ஆட்சியாளர்களின் நிலை, நட்சத்திரங்களின் அடிப்படையில் முற்பாதி, நடுப்பகுதி, பின்காலப் பலன்கள், ஆண்டின் கந்தாய பலன்கள், நவக்கிரகங்கள் எந்தெந்த பொறுப்பில் இந்த ஆண்டு முதல் மந்திரிகளாகவும் அரசர்களாகவும் வருகிறார்கள் ஆகிய விவரங்களைப் பஞ்சாங்கப் படனத்தின் மூலம் அறியலாம்.

அவர்களால் இயற்கையிலும் மனித வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள், குரு, சனி, ராகு, கேது கிரச்சார முறையில் இடம் மாறுதல்களால் பூமியிலும் மக்கள் மத்தியிலும் எவ்விதமான மாற்றங்கள், எந்தக் காலங்களில் நிகழும் என்ற குறிப்புகளைப் படித்தறிவது வழக்கம்.
யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலனகளையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான  அறிவிப்பாய் திகழ்கிறது.

மகாகவி காளிதாசரின் உத்தரகாலாமிருதம்
 என்னும் ஜோதிட நூலில் முப்பத்தியெட்டாம் பாடல் கீழ்வரும் வரிகள் மூலம் யுகாதிப் பண்டிகையைக் குறிப்பிட்டுள்ளது.

வருஷாதி பிரதிபந்தவேத சஹிதா க்ராஹ்யா ரக்‌ஷ்னாம் பதே:
மத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ ஜென்மா பவத்சா திதி:
யுகாதி பச்சடி;

யுகாதியன்று, எல்லார் வீடுகளிலும் யுகாதி பச்சடி செய்யப்படும்.  வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய பொருட்களால் ஆன பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறிவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.
அனைவருக்கும் யுகாதி பண்டிகை வாழ்த்துகள் ..

வேறொரு பதிவில் சந்திக்கும்வரை..
நன்றியுடன்,


Friday, March 24, 2017

அமர்நீதி நாயனார் - நாயன்மார்கள் கதை’சிந்தை செய்வது சிவன் கழலல்லது ஒன்றில்லை' என்ற வாக்கியத்துக்கேற்றார்போல் சிறந்த சிவபக்தர்  அமர்நீதி நாயனார்.  இவர் கும்பக்கோணம் அருகிலுள்ள பழையாறை என்னும் ஊரில் வணிகர் குலத்தில் பிறந்தவர்.   வணிகத்தில் நல்வழியில்  ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை சிவத்தொண்டிற்கு செல்வழித்தார். அன்னம், வஸ்திரம் தானம் செய்வதோடு கோவணம் தானம் செய்வதை முதன்மையாய் கொண்டிருந்தார்.  சிவனடியார்களுக்கு தொண்டு செய்யவே  திருநல்லூர் என்ற ஊரில் சிவமடம் ஒன்றை கட்டி, திருவிழா காலங்களில் தன் குடும்பத்தோடு சென்று இக்கைங்கர்யங்களை செய்து வந்தார். அமர்நீதி நாயனாரின் பெருமையை உலகறிய செய்ய நேரம் வந்ததை உணர்ந்து அந்தணர் குல பிரம்மச்சாரியாய்  உருக்கொண்டு கோமணம் மட்டும் அணிந்து இரு கோவணம்  முடிந்த தண்டுடன் திருநல்லூரிலிருக்கும் அமர்நீதியார் மடத்திற்கு வந்தார்.

தன் மடத்திற்கு வந்திருக்கும் சிவனடியாரை இன்முகத்தோடு பாதபூஜை செய்து வரவேற்று,  திருஅமுது செய்ய அழைத்தார். அதற்குமுன்  தான் நீராட வேண்டுமெனவும், வானம் மப்பும் மந்தாரமுமாய் இருப்பதால் அணிந்துக்கொள்ள வேண்டிய கோவணத்தை தான் எடுத்து செல்வதாகவும், மிச்சமுள்ள மற்றொரு கோவணத்தை   அமர்நீதியாரிடம் கொடுத்து தான் நீராடி வரும்வரை பத்திரமாய் வைத்திருக்க சொன்னார்.  கூடவே கோவணத்தின் அருமை பெருமைகளையும் ஆஹா ஓஹோவென புகழ்ந்தும் சென்றார்.

அமர்நீதியடிகளும் சிவனடியார்களுக்கு தானம் செய்ய வைத்திருந்த உடைகளில் இக்கோவணத்தை பத்திரப்படுத்தாமல் வேறொரு பத்திரமான இடத்தில் வைத்து அதுக்கு காவலும் ஆட்களை நியமித்தும் சென்றார். ஆனால், இறைவன் நுழையமுடியாத இடம் ஏதுமில்லையே! அக்கோவணத்தை இறைவன் மறைய செய்தான். 

சிவனடியார் ரூபத்தில் வந்த ஈசன் காவிரியில் நீராடியும் உடன் மழையில் நனைந்தும் உடல் நடுங்கியபடி வந்ததை கண்டு உடல் துவட்டிக்கொள்ள துண்டொன்றை நீட்டினார். இதெல்லாம் எதற்கு?! எதிர்பாராதவிதமாய் ,மழை வந்ததால் என்னிடமிருந்த கோவணம் நனைந்துவிட்டது. அதனால் உன்னிடமுள்ள  கோவணத்தை  எடுத்து வாவென கட்டளையிட்டார்.   கோவணத்தை எடுக்க உள்சென்ற அமர்நீதியார் அங்கு கோவணம் காணாது திகைத்து நின்றார். எங்கு தேடியும் அடியவரது கோவணம் கிடைக்காமல் போகவே, வேறொரு கோவணத்தை எடுத்து வந்து, ஐயா! தாங்கள் எனக்களித்த பொறுப்பிலிருந்து தவறிவிட்டேன்,. கட்டுக்காவலில் வைத்திருந்த தங்கள் கோவணம் ஏதோ மாயவித்தையால் காணாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள்.  இது மற்ற ஆடையிலிருந்து கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே  நெய்தது. எனவே தயவுகூர்ந்து அடியேனது பிழையை பொறுத்தருளி இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என வேண்டி நின்றார்.

அமர்நீதியாரின் பேச்சை கேட்டு சீறி விழுந்தார். ஓ! ஊரெல்லாம் கோவணம் கொடுப்பதாய் நாடகமாடி உன்னிடமுள்ள கோவணங்களை கொள்ளை லாபத்தில் விற்க இப்படி செய்தாயா என சினந்தார் ஈசன். உங்களிடம் கொடுக்கும்போதே பத்திரமாய் வைத்திருக்க சொன்னேனே. இப்பொழுது என் கோவணத்தை தொலைத்துவிட்டு வேறொரு கோவணத்தை கொடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது என்ன நியாயம்?! என் இடுப்பிலிருக்கும் கோவணம் மற்றும் தண்டிலிருக்கும் நனைந்த கோவணத்துக்கு ஈடானது அந்த கோவணம்.  மழையில் நனைந்த உடம்பு நடுக்கமாய் உள்ளது. தண்டிலிருக்கும் கோவணமும் உதவாது. இப்படியே நடுக்கத்திலிருந்தால் ஜன்னி வந்து சாகவேண்டியதுதான் என கடிந்துக்கொண்டார். 

ஐயா! தயவுசெய்து என் பிழையை பொறுத்துகொள்க. ஈரத்தால் உங்கள் உடல் தள்ளாடமல் இருக்கவாவது நான் தரும் கோவணத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் தண்டிலிருக்கும் கோவணத்தின் எடைக்கு ஈடாய் புது கோவணங்களை தருகிறேன் என பணிந்து மன்றாடினார். சிவனடியாரும் பெரிய மனது செய்து கோவணத்துக்கு ஈடான  கோவணத்தை வாங்கிக்கொள்ள சம்மதித்தார்.

துலாக்கோலை கொண்டு வந்து ஒரு தட்டில் அடியவரது கோவணமும், இன்னொரு தட்டில் தன் கையிலிருந்த கோவணத்தை வைத்தார். துலாக்கோலில் உள்ள தட்டு அடியவர் பக்கமே தாழ்ந்திருந்தது. மேலும் சில கோவணங்களை தன்பக்கமுள்ள தட்டில் வைத்தார். அப்படியும் அடியவர் பக்கமிருந்த துலாக்கோல் தட்டு தாழ்ந்தே இருந்தது. இப்படியே அமர்நீதியார் தன் இருப்பிலுள்ள அனைத்து கோவணத்தையும் துலாக்கோலில் கொண்டு வந்து வைத்தார்.  அப்பிடியும் தட்டு கீழிறங்காததால் தன் இருப்பிலுள்ள அனைத்து வெள்ளி, தங்கம், நவரத்திணங்கள் வைத்தும்  தட்டு கீழிறங்காமல் இருந்தது.ஐயா! என்னிடமிருந்த கோவணங்களையும், நல்வழியில் ஈட்டிய பொருளனைத்தும் வைத்தும் உங்கள் கோவணத்துக்கு ஈடாகவில்லை. அதனால், மறையவரே! நானும், என் மனையாளையும் என் மகனையும் துலாக்கோலில் இடுகிறேன். தங்கள் அடிமையாய் ஏற்றுக்கொள்ளுங்கள். தாங்கள் காலால் இட்ட வேலையை தலையால் செய்வோமென அமர்நீதியார்  ஈசனின் ஐந்தெழுத்து நாமத்தை மனதாற தொழுது துலாக்கோலில் குடும்பத்தோடு நின்றார். 

இதற்குமேலும் சோதிக்கலாகாது என எண்ணிய அடியாராக வந்த ஈசன்  அமர்நீதியார் பக்கமிருந்த துலாக்கோல் இறக்கி,  திருநல்லூரில் எழுந்தருளும் அம்மையப்பராக காட்சியளித்து அமர்நீதி நாயனாரையும் அவர்தம் குடும்பத்தாரையும்  ஆட்கொண்டார்.

ஆனிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அமர்நீதிநாயனார் குருபூஜை கொண்டாடப்படுது.

வேறொரு பதிவில் சந்திக்கும்வரை..
நன்றியுடன்,
ராஜி.

Wednesday, March 22, 2017

அப்பூதியடிகள் - நாயன்மார்கள் கதைகள்

இறைவன்மீது தீராக்காதல் கொண்டு  பலவாறு அவன்பேர்  பாடி , தொழுது, கைங்கர்யம் செய்து, இறைவன் கருணைக்கும், அருளுக்கும் ஆளாகி நாயன்மார்கள் ஆனவர்  பலர். ஆனால், அடியாரை தொழுது அதனால நாயன்மார்கள் வரிசையில் வந்தவர்கள் வெகுசிலரே அதில் அப்பூதியடிகள் ஒருவர்.

சிவனும், சிவனடியார்களும் வெவ்வேறல்ல என உலகுக்கு உணர்த்தும் திருவிளையாடலை இனி பார்ப்போம்.
Wishing you all a blessed Maha Shivratree! May Lord Shiva bless us all with peace, prosperity and happiness! May the spirit of togetherness prevail on this auspicious day! Glory to Lord Shiva! Jai Shiv Shankar!:
அந்நாளைய சோழநாட்டில் திங்களூரில் பிறந்து வாழ்ந்தவர். திருநாவுக்கரசர் வாழ்ந்த காலத்தில் இவரும் வாழ்ந்து வந்தார். அப்பூதியடிகள்  சிவன்மேல் பக்தி கொண்டபோதிலும்,  திருநாவுக்கரசரின் சிவபக்தியினைக் கண்டு அவர்பால் மிகுந்த பக்தியும், மரியாதையும், காதலும் கொண்டார். அதனால், திருநாவுக்கரரசரின் பெயரால் அன்ன சத்திரம், நீர் பந்தல், மோர் பந்தல் மற்றும் சிவகைங்கர்யம் செய்து வந்தார். அதுமட்டுமல்லாது தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அவரைப்போலவே அவர் மனையாளும், குழந்தைகளும் திருநாவுக்கரசர் மேல் பற்று கொண்டனர்.

திருநாவுக்கரசர் ஒருமுறை அப்பூதியடிகள் ஊரான திங்களூருக்கு செல்ல நேர்ந்தது. தன் பெயரால் அப்பூதியடிகள்  நடத்தும் சிவகைங்கர்யங்களை கேள்விப்பட்டு அப்பூதியடிகளை சந்திக்க சென்றார். தன்னை இன்னாரென அடையாளப்படுத்திக்கொள்ளாமல், பாடுபட்டு சேர்த்த பணத்தில் உங்கள் பெயரில் தர்மம் செய்யாமல் திருநாவுக்கரசர் பேரால் ஏன் செய்கிறீர்கள்?! இப்பொழுது பாருங்கள் தானம் பெற்றவர்கள் திருநாவுக்கரசரை வாழ்த்தி செல்கின்றனர் என வினவினார்.
அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சிவனருளால் சைவமதத்தை தழுவி அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார். இறைபக்தியைவிட அவனுக்கு தொன்றாற்றும் அடியார்கள்மீது அன்பு செலுத்துவது மேன்மையானது. அத்னால்தான் தான் திருநாவுக்கரசர்பால் அன்பு கொண்டதாக  உரைத்தார்.   அதன்பின், சிவன் ஆட்கொள்ள நினைத்து சூலைநோய் தந்த அடியேன் தான்தான் என அடையாளப்படுத்திக்கொண்டார் திருநாவுக்கரசர். கடவுளாய் நினைத்து வழிப்படும் திருநாவுக்கரசரே தன் இல்லம் நாடி வந்திருப்பதைக் கண்டு உளம் மகிழ்ந்து தன் வீட்டில் உணவருந்தி செல்ல வேண்டி நின்றார். அப்பூதியடிகளின் அன்பை கண்டு நெகிழ்ந்து திருநாவுக்கரசரும் அவர் வேண்டுகோளுக்கிணங்கி உணவருந்தி செல்ல சம்மதித்தார்.

மனையாளிடம் சென்று திருநாவுக்கரசரின் வருகையை சொல்லி அறுசுவை உணவை சமைக்க சொன்னார். மூத்த திருநாவுக்கரசையும், இளைய திருநாவுக்கரசையும் அழைத்து அம்மாவுக்கு உதவி செய்ய பணித்து சென்றார். திருநாவுக்கரசரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அடுப்படியில் அவரது மனையாள் நல்ல சுவையான உணவை செய்து முடித்து தன் மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசை அழைத்து கொல்லைப்புறத்திற்கு சென்று , திருநாவுக்கரசர் அமுதுண்ண வாழையிலையை நறுக்கி வரச் சொன்னாள். திருநாவுக்கரசருக்கு தன்னாலும் சிறு தொண்டாற்ற வாய்ப்பு கிடைத்ததே என்ற உற்சாகத்தில் வாழை இலையை நறுக்கிக்கொண்டிருந்தான். அங்கு வாழைமரத்தில் சுற்றிக்கொண்டிருந்த பாம்பு மூத்த திருநாவுக்கரசின் கரங்களில் தீண்டியது. பாம்பின் விஷம் ஏறும்முன் தாயின் கட்டளையை நிறைவேற்றும்பொருட்டு வேகவேகமாய் தாயிடம் சென்று வாழை இலையினை தந்து சுருண்டு விழுந்து இறந்தான். அன்னம் தயாராகிவிட்டதா என தெரிந்துக்கொள்ள அடுப்படிக்கு வந்த அப்பூதியடிகள் இதைக்கண்டு திகைத்து நின்றார்.
மகன் இறந்த துக்கத்தை காட்டிலும் இவ்விஷயம் தெரிந்தால் திருநாவுக்கரசர் திருஅமுது செய்யமாட்டாரே என மலைத்து நின்று, தன் மகனின் சடலத்தை மற்றொரு அறையில் கிடத்தி துணிகளால் மறைத்து, திருநாவுக்கரசரை திருஅமுது செய்ய அழைத்தார். திருநாவுக்கரசருக்கு பாதபூஜை செய்து மனையில் அமரச்செய்து மனையாளை பரிமாறச் செய்து தானும், இளைய திருநாவுக்கரசும் அருகே நின்றிருந்தனர். உணவருந்தும்முன் அனைவருக்கும் திருநீறு அளித்தார். மூத்த திருநாவுக்கரசை காணாமல்,  அப்பூதியடிகளே! தங்கள் மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசு எங்கே!? அவனையும் அழையுங்கள். எல்லாரும் சேர்ந்து உண்ணலாம் என அழைத்தார். அவன் கல்விச்சாலை சென்றுள்ளார் என பொய்யுரைத்தார். திருநாவுக்கரசர் மனதில் ஏதோ இடறியது. சரி, யாரையாவது அனுப்பி மகனை அழைத்துவர சொல்லுங்கள் என பணித்தார். ’அவன் எனக்கு உதவான்” என சொல்லி நின்றார். மகனை அழைத்து வந்தால் திருஅமுது செய்வேன் என கடிந்தர்.
இனியும்  பொய்யுரைக்க முடியாதென உணர்ந்த மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறந்ததை சொல்லி, சுவாமி! தங்கள் அடியேனது இல்லத்தில் திருஅமுது செய்யும் பாக்கியத்தை இழந்தேனே என தொழுது அழுதார். தான் வந்த வேளையில் இப்படியாகிவிட்டதே என வருந்தி மூத்த திருநாவுக்கரசின் உடலை சுமந்துக்கொண்டு சிவன் குடியிருக்கும் கோவிலுக்கு சென்றார்.  விசயம் கேள்விப்பட்டு அவர்கள் பின் ஊரே திரண்டு கோவிலுக்கு சென்றது.

திங்களூர் உரையும் பெருமானை அப்பூதியடிகளும், அவர்தம் குடும்பமும் உருகி வேண்ட, திருநாவுக்கரசர்
 ஒன்று கொ லாமவர் சிந்தை யுயர்வரை 
ஒன்று கொ லாமுய ரும்மதி சூடுவர் 
ஒன்று கொலாமிடு வெண்டலை கையது 

ஒன்று கொலாமவ ரூர்வது தானே


என பதிகம் பாட    அனைவரின் வேண்டுதலும், திருநாவுக்கரசரின் பக்தியிலும் மனமிறங்கிய இறைவன்  மூத்த திருநாவுக்கரசை உயிர்பித்தார். தூக்கத்திலிருந்து எழுந்தவனாய் தாய் தந்தை, திருநாவுக்கரசரை பணிந்து நின்றான். ஊர்மக்கள் திருநாவுக்கரசரின் பெருமையை போற்றி வணங்கி நின்றனர். திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் இல்லத்திற்கு சென்று அனைவருடனும் திருஅமுதுண்டு, அப்பூதியடிகளின் மனங்குளிர அங்கேயே சிலநாட்கள் தங்கி இருந்தார். அதன்பின் பல்லாண்டுகாலம், அப்பூதியடிக  திருநாவுக்கரசரின் பெருமையை பறைச்சாற்றி இறைவனடி சேர்ந்தார்.
அப்பூதியடிகளின் குருபூஜை தைமாதம் சதயம் நட்சத்திரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுது.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை,
நன்றியுடன்,
ராஜி.

Saturday, March 18, 2017

அதிபத்த நாயனார் - நாயன்மார்கள் கதை

நாயன்மார்கள் வரிசையில் முதன்முதலாய் நாம பார்க்கப்போறது “அதிபத்த நாயனார்”. இவர் மெத்த படித்தவரில்லை. கோவில் கோவிலாய் சுற்றியலைந்தவரில்லை. சதா சர்வக்காலமும் பூஜை, புனஸ்காரம்ன்னு செய்தவரில்லை. இவ்வளவு ஏன்?! நம்மால் உயர்ந்த குலம்ன்னு சொல்லப்பட்டும் எந்த குலத்திலயும் பிறக்கவில்லை
மாறாக, நம்மால் கீழ் ஜாதி என சொல்லப்படும் பரதவர் குலத்தில் பிறந்தவர்தான் இந்த  “அதிபத்த நாயனார்”. நாகப்பட்டினம் அருகில் 'நுளைப்பாடி' என்ற இடத்தில் பிறந்து வாழ்ந்து வந்தார்.    தன் பக்தியை வெளிப்படுத்த  ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான கொள்கை..  தினமும் தான் பிடிக்கும் மீன்களில் முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணம் செய்யும் விதமாக மீண்டும் ஆற்றிலேயே விட்டுவிடுவார்.  எக்காரணம் கொண்டும் இந்த திருப்பணியை அவர் கைவிட்டாரில்லை. 

அதிபத்த நாயனாரின் இறைபக்தியை உலகறிய செய்யும் விதமாய் சிவப்பெருமான் திருவிளையாடல் நடத்தினார். அதன்படி,  மெல்ல மெல்ல அதிபத்தர் வீசும் வலையில் மீன்கள் சிக்குவது குறைந்துவிட்டது. இதனால், அதிபத்தரின் குடும்பம் வறுமையில் வீழ ஆரம்பித்தது.
அடுத்த சில நாட்கள் ஒரே ஒரு மீன் மட்டுமே கிடைக்குமாறு செய்தார் இறைவன். அதையும் இறைவனுக்கே  கடலில் அர்ப்பணித்து விடுவார்.  அதிபத்தர் கடும் வறுமையில் வாடியது. அதிபத்தர் உடலும் தளர்ந்துக்கொண்டே வந்தது.  அதிபத்தரின் மனைவி, அவரிடம் சென்று பிள்ளைகள் பசியால் வாடுகிறது. வீட்டில் எதுமில்லை. பொருள் எதாவது சம்பாதித்து கொண்டு வாருங்கள் என வேண்டி நின்றாள்.


அன்றைய தினம் குழந்தையின் பசியாற்ற வேண்டி கடவுளை வேண்டியபடி கடலுக்குள் சென்றார்.  முதல் முறை வலை வீசியபோதே நவரத்தின கற்களும்,, நவமணிகளும்  பதித்த  தங்க மீன் ஒன்று சிக்கியது.  அதைக்கண்டதும் உடன் வந்த மீனவர்கள் அதிபத்தரே! இன்று உமக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இதைக்கொண்டு உன் வம்சமே செல்வச்செழிப்புடன் வாழலாம், இதைக்கொண்டுபோய் உன் மனைவியிடம் கொடு. அவள் மிக்க மகிழ்ச்சி அடைவாள் எனக்கூறி சந்தோஷித்தனர்.
ஆனால், அதிபத்தரோ சிறிதும் சலனமின்றி அந்த தங்கமீனை , எப்பொழுதும் போல ஆற்றில் விட்டார். அதிபத்தரின் பக்தியையும், கொண்ட கொள்கையில் மாறாத தன்மையையும் கண்டு அனவரும் திகைத்து நின்றபோதே வானத்தை கிழித்துக்கொண்டு அம்மையப்பனாய் நந்திதேவர் மீதேறி எல்லாருக்கும் காட்சியளித்து சிவபுரியிலே தமது திருவடி நிழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார். 

இன்றும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் திருவிழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோவிலில் நடைப்பெறும். அத்திருவிழாவில் அதிபத்தரின் உற்சவ சிலைய ஒரு கட்டுமரத்தில் எழுந்தருள செய்து, கடலுக்கு மீன்பிடிக்க  செல்கின்றனர்.  மீனவர்கள் வலைவீசுவது போலவும், வலையில் தங்கமீன் கிடைப்பது போலவும், அதை அதிபத்தர் இறைவனுக்கு அர்ப்பணிப்பது போலவும் பாவனை செய்ய இறைவன் அதிபத்தருக்கு முக்தி அளிக்க கடற்கரையில் எழுந்தருளி அனைவருக்கும் அருள்புரிகிறார்.
அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுது. இறைவனின் அருள் கிடைக்க படிப்போ, விரதமோ, பொருளோ தேவையில்லை.. தூய்மை மனதும், இறை அர்ப்பணிப்பு போதும் என அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்தது.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை...
நன்றியுடன்,

Wednesday, March 15, 2017

காதலித்தே கொள்

நிகழ்காலம் உன்னை 
தலைக்குப்புறடிக்கும்
ஆசுவாசப்படுத்த காதல் கொள்.....

காதல் நினைவுகள்
உன்னை முள்ளாய் குத்தும்..
முள்ளை முள்ளால் எடுக்க
காதல் கொள்....

வாழ்வும், சாவும்..
ஆற்றுவெள்ளமென அடித்துச்செல்லும்..
எதிர்நீச்சல் அடித்து கரைசேர
காதல் கொள்...

வாழ்வை வெற்றிக் கொள்ள
காதல் கொள்..
காதலித்தே கொல்..


Tuesday, March 14, 2017

மாசிக்கயிறு பாசி படியும் பழமொழிக்கு விளக்கம்- காரடையான் நோன்பு


என்னதான் அழகு, படிப்பு, அறிவு, குணம், அந்தஸ்து  இருந்தாலும் வாழ்க்கைத்துணை சரியில்லன்னா வாழ்க்கையே பாழ். நல்ல கணவன் கிடைக்கவும், கிடைத்த கணவன் முறுக்கிக்கிட்டிருந்தா அவனை நல்வழிப்படுத்தவும் நோற்கும் நோன்பே “காரடையான் நோன்பு”.


மாசிக்கயிறு பாசி படியும் என்பது பழமொழி இதற்கு விளக்கம்.. இந்த பண்டிகையின் போது பெண்கள் திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொள்வர். மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின் போது தாலிக்கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர்.  கேட்ட வரம் கிடைக்கும். தம்பதியர் மனமொத்திருந்தால் அடுத்து?! குழந்தை வரம் கிடைக்கும்,  கர்ப்பிணி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றக்கூடாது என்பது ஐதீகம். கிட்டத்தட்ட பத்துமாதம் கழுத்தில் மஞ்சள் கயிறு இருந்தால் அழுக்கடையும். இதான் அப்பழமொழிக்கு விளக்கம்.


சாவித்திரி என்ற பெண் தன் கணவனான சத்தியாவனின் உயிரை காப்பாற்றிய தினமே காரடையான் நோன்பு என கொண்டாடப்படுது.  அந்த கதையை இனி பார்க்கலாம்...

அசுபதி என்னும் அரசனுக்கு,  அழகிலும்,  பண்பிலும் சிறந்து விளங்கிய பெண் இருந்தாள். அவளுக்கு  இந்துக்களின் மிகப் புனிதமான பிரர்த்தனையான  சாவித்திரின்னு பெயர் வைத்து அருமை பெருமையாய் வளர்த்து வந்தார்.  அவள் சிறு பிள்ளையாய் இருந்தபோது அரண்மனைக்கு வந்த நாரதர், சாவித்திரியை கண்டு, இவள் பின்னாளில் உலகம் போற்றும் பதிவிரதையாய் திகழ்வாள். ஆனால், இவள் கணவன் இருபத்தொயொரு வயது மட்டுமே வாழ்வான் என சொல்லிச் சென்றார். அதை நினைத்து அரசனும், அரசியும் கவலையுற்றனர்.

சாவித்திரிக்கு தக்க பருவம் வந்ததும், மகளுக்கு தக்க மணாளனை தேர்ந்தெடுக்க சுயவரம்  நடத்தினர்.   அரண்மனைக்கு வந்த எந்த நாட்டு ஆணையும் சாவித்திரிமனதை ஈர்க்கவில்லை. அதனால், தக்க துணையுடன் மணாளனை தேடி தூர தேசத்துக்கு பயணமானாள். அவ்வாறு செல்கையில் காட்டில் சென்று தங்கினாள்.
                                                 

அங்கு,  துயுமத்சேனன் என்னும் ஓர் அரசர் அங்கு தன் மனைவி, மகனோடு தங்கி இருந்தார்.  அவர்தம் வயதான காலத்தில் கண்பார்வையை இழந்திருந்த போது எதிரிகள் அவரைத் தோற்கடித்து, அவருடைய அரசைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.  அவருடைய மகன் பெயர் சத்தியவான்.  அங்கு வந்த சாவித்திரி  சத்தியவானைக் கண்டதும் இதயத்தை அவனிடம் பறிகொடுத்தாள்.  அரண்மனைகளில் கண்ட அரசகுமாரர்களை விட ஆசிரமத்தில் இருந்த துயுமத்சேணனின் மகனான் சத்தியவான் அவளது இதயத்தைக் கவர்ந்தான்.

நாட்டுக்கு திரும்பிய சாவித்திரி தன் தந்தையிடம் சத்தியவான் பற்றி சொல்ல, அவன் நாடு நகரம் இழந்து காட்டில் சுள்ளி பொறுக்கி வயிற்றை கழுவுபவனுக்கா உன்னை மணமுடிப்பது என வாதிட்டார். சாவித்திரியும் தன் கொள்கையில் பிடிவாதமாய் நின்றாள். என்ன செய்வதென தெரியாமல் மகளின் மனதை மாற்ற நாரதரை தூதனுப்பினார் அரசன். சாவித்திரியிடம் சென்ற நாரதர், எத்தனையோ சமாதானப்படுத்தியும் சாவித்திரி மசியவில்லை. கடைசி அஸ்திரமாய்...  அம்மா! இன்னும் ஒரு வருடத்தில் இறந்துவிடும் ஒருவனையா  நீ மணக்கப்போகிறாய் என வினவ, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின் மனதை தேற்றிக்கொண்டு, ஐயா! சத்தியவானை காணும்போதே அவரிடம் என் மனதை பறிகொடுத்துவிட்டேன். வேறு யாரையாவது மணக்கசொல்லி என் கற்பை மாசுப்படுத்தாதீர்கள் என சொல்லிவிட, சத்தியவான், சாவித்ரி திருமணம் கோலாகலமாய் நடந்தது.


கணவனின்  இறப்பு தேதி தெரிந்தும், அதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் கணவனோடு காட்டிற்கு சென்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.  நாரதர் சொன்ன சத்தியவானின் கடைசி  நாள்  நெருங்கியது. மூன்று நாட்கள் ஊன், உறக்கமின்றி கடுமையான விரதமிருந்தாள் சாவித்திரி. இறுதி நாளன்று, சத்தியவானை அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்று விறகு சேகரித்துக்கொண்டிருந்தாள். அப்போது, சத்தியவான், சாவித்திரி! எனக்கு தலைச்சுற்றி மயக்கம் வருவதுப்போல இருக்கு என சொல்ல, என் மடியில் படுங்கள் என படுக்க வைத்துகொண்டான். சற்று நேரத்தில் அவனது உயிர் பிரிந்தது. காட்டில் தன்னந்தனியாய் கணவனை கட்டிப்பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் எமத்தூதர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.  அவர்கள் நெருங்காவண்ணம் அக்னி வளையத்தை உண்டாக்கினாள். எத்தனை முயன்றும் அவர்களால் சத்தியவானை நெருங்கமுடியாமல் போகவே எமனிடம் சென்று முறையிட்டனர்.

இறந்தவர்களுக்கு நீதி வழங்குபவனும், மரணக் கடவுளுமான எமனே அங்கு வந்தான்.  பூமியில் இறந்த முதல் மனிதன் அவன்.  அவன்தான் மரணக் கடவுளாவான்.  இறந்த பிறகு ஒருவனைத் தண்டிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பவன்தான் எமன்.  அவனே அங்கு வந்தான்.  அவன் தேவன்,  ஆதலால் அந்த அக்கினி வட்டத்தைத் தாண்டி உள்ளே நுழைய முடிந்தது.

அவன் சாவித்திரியைப் பார்த்து, மகளே, இந்த உடலை விட்டுவிடு.  மரணம் மனிதனின் விதி.  முதன்முதலில் மரணமடைந்த மனிதன் நான்.  அன்றிலிருந்து எல்லோரும் சாகத்தான் வேண்டும்.  மரணமே மனிதனின் விதி என்றான்.  இதைக் கேட்டு சாவித்திரி விலகிச் சென்றாள். எமன் உடலிலிருந்து உயிரைப் பிரித்தான்.  பின்னர் உயிரை அழைத்துக்கொண்டு அவன் தன் வழியே செல்ல ஆரம்பித்தான்.  சிறிது நேரத்திற்கெல்லாம் சருகுகளின் மீது யாரோ நடந்து வருகின்ற காலடிச் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.  சாவித்திரி எமனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.

'என் மகளே, சாவித்திரி! ஏன் என்னைப்  பின்தொடர்கிறாய்?  எல்லா மனிதர்களின் கதியும் இதுதான்' என்றான் எமன்.  'தந்தையே, நான் தங்களைப் பின்தொடரவில்லை.  ஒரு பெண்ணின் விதி இதுதானே!  கணவனை இழந்த பெண்கள் அவன் செல்லும் இடத்திற்கு அவள் சென்றுதானே ஆக வேண்டும்.  ஒரு அன்புக் கணவனையும். அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கவேண்டாமே என இறைஞ்சி நின்றாள்.

 அவளின் நிலைக்கண்டு மனமிரங்கிய எமன், 'உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எதாவது ஒரு வரம் கேள்'.என்றார்.தாங்கள் வரம் தருவதானால் என் மாமனார் பார்வை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அருள்புரியுங்கள் எனக்கேட்டாள். சரியென வாக்களித்து, சத்தியவான் உயிரோடு அங்கிருந்து சென்றான் எமன். சிறிது தூரம் சென்றதும், காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். சாவித்திரி வந்துக்கொண்டிருந்தாள். நீ கேட்ட வரம் தந்துவிட்டேனே! மீண்டும் ஏன் பின்தொடர்கிறாய் என எமன் வினவினான்.

தந்தையே, நான் என்ன செய்வேன்.  நான் திரும்பிப் போக வேண்டும் என்றுதான் பார்க்கிறேன்.  ஆனால் என் மனமோ என் கணவன் பின்னால் செல்கிறது, உடம்பு மனதைத் தொடர்கிறது.  என் உயிர் முன்னாலேயே போய்விட்டது.  ஏனெனில் நீங்கள் அழைத்துச் செல்கின்ற உயிரில்தான் என் உயிர் இருக்கிறது.  உயிர் சென்றால்  உடம்பும்கூடச் செல்லத்தானே வேண்டும்? 'சாவித்திரி, உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தேன்.  இன்னும் ஒரு வரம் கேள், அனால் அது உன் கணவனின் உயிராக இருக்கக் கூடாது'. 'தந்தையே, தாங்கள் எனக்கு இன்னொரு வரம் தருவதானால் இழந்த அரசையும் செல்வத்தையும் என் மாமனார் பெற அருள்புரியுங்கள்'.

'அன்பு மகளே, நீ கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.  வீடு திரும்பு.  ஏனெனில் மனிதர்கள் எமனுடன் செல்ல முடியாது'.  எமன் தொடர்ந்து செல்லலானான்.  சாவித்திரியும், அவர்களை பின்தொடர்ந்தாள்.   எமன் சற்று கோவத்துடன் இன்னும் என்ன வேண்டும்.. இறந்தவர் ஒருபோதும் பிழைக்கமுடியாது அதை நினைவில் கொண்டு கேள் எனக் கேட்க..., என் மாமனாரின் எதிரிகள் எங்கள் நாட்டின்மீது போர்த்தொடுத்து அபகரித்துகொண்டால் என்செய்வது?! அதனால், சத்தியவானின் வாரிசுகளுக்கே அரசாளும் உரிமையை அருளவேண்டும் என வேண்டி நின்றாள். அவள் கேட்ட வரத்தின் உள்ள நன்மையை கருத்தில் கொண்டு அதையும் கொடுத்து சத்தியவான் உயிரோடு எமலோகம் சென்றான். மீண்டும் சாவித்திரி வருவதை கண்ட, எமன் என்னம்மா! எனச் சலிப்புடன் கேட்டான்.

ஐயா! இதுவரை சத்தியவானுக்கு குழந்தை ஏதுமில்லை. அவனும் இறந்துவிட்டான். பூலோகத்திற்கு நான் சென்றாலும் உங்கள் வாக்கு பலிக்காது. இறந்தவர்கள் பிழைப்பதென்பது சாத்தியமில்ல. அதனால் என்னால் உங்கள் வாக்கு பொய்த்து போகும். என்னால் உங்கள் வாக்கு பொய்க்க வேண்டாம். என்னையும் உங்களோடு அழைத்து செல்லுங்கள் என்று வேண்டி நின்றாள்.


இதைக்கேட்டு வெலவெலத்துப் போன எமன், அவசரத்தில் சிந்திக்காமல் கொடுத்த வரத்தின் விபரீதத்தை உணர்ந்தார். பின்னர் சாவித்திரியின் சமயோசிதத்தை பாராட்டி, சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்து வாழ்த்தினார்.  பின்பு சத்தியவானோடு இல்லத்திற்கு வந்த சாவித்திரி மாமனார் பார்வையை திரும்ப அளித்து, நாட்டுக்கு திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள் என்பது வரலாறு.


 இனி விரதமுறை..

காரடையான் நோன்பன்று வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு, காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை சூட்ட வேண்டும். 

ஒரு கலசத்தின் மேல், தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து, அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி காட்டில் தன் கணவன் சத்தியவானுடன் வாழ்ந்த போது, அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெயுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணெயுடன், விளைந்த நெல்லைக் குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி துளசியை ஒன்று கட்டி தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். 

‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் 
வைத்து நோன்பு நோற்றேன் 
ஒரு நாளும் என் கணவன் என்னைப் 
பிரியாமல் இருக்க வேண்டும்’ 


–என்று ஒவ்வொரு சுமங்கலி பெண்ணும் அம்மனிடம் விண்ணப்பித்து வேண்டிக் கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும். 

பிறகு தானும் கட்டிக்கொண்டு, அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம். நோன்பு தொடங்கியது முதல், முடிக்கும் வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன், பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.வைக்கோலுக்கு மரியாதை 

காரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை தயாரிக்கப்படும் போது, வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு, மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும் வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும். அதைப்போல் சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன், ‘உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை, உடலை காத்திரு!’ என்று சாவித்திரி சொல்லி விட்டு, வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள். அதன் நினைவாக தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பார்வதி தேவி செய்த சிவலிங்க பூஜை;

பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை, காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும்.

ஒரு முறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும்,  உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம் உமாதேவியை அடைய, அவள் உருவம் மாறியது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சீபுரம் வந்து, ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் திருவிளையாடலால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவரான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க, காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொண்டாள். இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான், அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் ஏற்பட்டது.

வேறொரு பதிவில் சந்திக்கும்வரை..
நன்றியுடன்,
ராஜி.

Saturday, March 11, 2017

சைவமும், வைணவமும் கொண்டாடும் மாசிமகம்


மகத்தில் பிறந்தால் ஜெகத்தினை ஆளலாம்ன்னு ஒரு பழமொழி உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தாலே அச்சிறப்புன்னா அந்நன்னாளில் இறை பக்தியோடு தானங்களை செய்தால்  அதன் நன்மைகளை அளவிட முடியுமா?!  எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும்  மகம் நட்சத்திரத்திற்கென்று தனிச் சிறப்புண்டு... மூலோகத்திலும் செய்யும் பாவங்கள் அனைத்தும் காசிக்கு சென்று கங்கையில் சென்று நீராடினால் போகும்.. அவ்வாறு மக்கள் கழுவிய பாவங்களால் பீடிக்கப்பட்ட கங்கை மற்றும் யமுனை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி  உட்பட பனிரெண்டு நதிகள் கும்பகோணத்திற்கு வந்து புனிதமாகும் நாளே இம்மாசி மகம்.  

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.  கோவில்களில் வெகுவான  திருவிழாக்கள் நடப்பது பௌர்ணமி .. பௌர்ணமி எந்த திதியில் வருதோ அத்திதியை கொண்டே தமிழ்மாத பெயர்கள் அமையும்.  மாசி மாத பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் வருவதால் ’மாக மாதம்’ என்றும் அழைக்கப்படுது.  உமாதேவி பிறந்தது மாசி மாதத்தில்...
 பராசக்தியே தன் மகளாய் அவதரிக்கவேண்டும் என சிவப்பெருமானை நோக்கி தவமிருந்தார். அந்த தவத்தின் பயனாய்  மாசிமாத மகம் நட்சத்திரத்தில் தட்சனின் மகளாய் தாட்சாயணி அவதரித்தாள்.மக நட்சத்திற்கு அதிபதி கேது பகவான். இவர் செல்வம்  ஞானம், முக்தியை தருபவர்.

வருண பகவானுக்கு அருளல்...
வருணபகவானைப் பீடித்த பிரமஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது.வருணபகவான் சிறைப்பட்டிருந்ததால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. நீரின்றி உயிர்களனைத்தும் தவித்தன. வருண பகவானை வேண்டி மக்கள் இறைவனை வேண்ட,  சிறையிலிருந்தே தன்னை விடுவிக்கும்படி வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணபகவான் சிவப்பெருமானிடம், அன்றைய  தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
பித்ரு கடன் செய்ய...
மக நட்சத்திரத்தை ”பித்ருதேவதா நட்சத்திரம்” என்றும் அழைப்பர். உலகத்தை உருவாக்கும்முன் இந்த பித்ருதேவனை படைத்தப்பின்தான் அனைத்து ஜீவராசிகளையும் இறைவன் படைத்தான்.  இந்த பித்ருதேவாதான் எல்லா உயிர்களுக்கும் ஆத்ம சாந்தியை அருள்கிறது. நம் முன்னோர்கள் ஆத்ம சாந்தியுடன் இருந்தால்தான் நம் குலம் தழைக்கும். இந்நாளில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்குவதோடு, பித்ரு கடனையும் செய்யலாம். 

வல்லாள மகாராஜா....
திருவண்ணாமலையை வல்லாளன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். அவனுக்கு குழந்தையில்லாததால் தனது இறுதிச் சடங்கினை நடத்த சிவனை வேண்டினான். சிவனும் ஒப்புக் கொண்டார். வல்லாளன் மாசி மகத்தன்று இயற்கை எய்தினான். சிவனும் சிறுவனாக வந்து மன்னனின் இறுதிச் சடங்கினைச் செய்து மோட்சத்தை அருளினார். மேலும் மாசி மகத்தன்று நீர்நிலைகளில் புனித நீராடுவோருக்கு மோட்சம் அளிப்பதாகவும் அருளினார்.

சிவப்பெருமானின் திருவிளையாடல்...
பராசக்தி ஒருமுறை  திருவேட்டக்குடி என்ற இடத்தில் மீனவக்குலத்தில் மீனவர் தலைவன் மகளாய் பிறக்க,  திருமணப்பருவம் வந்ததும், அவளை மணக்கவேண்டி, மீனவன் வேடத்தில் சிவப்பெருமான் தோன்றி, கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு தொல்லை தந்த  தன்னால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை அடக்கி பார்வதிதேவியை மணந்தார். அப்போது மீனவர் தலைவன் தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்கவேண்டுமென வேண்ட, ஒவ்வொரு மாசிமகத்தன்று நீராட வருவேன் என வாக்கு கொடுத்தார்.  மாசிமகத்தில் திருவேட்டக்குடியில் அம்பிகை மீனவபெண் வடிவத்திலும், ஐயன் வேடமூர்த்தி அலங்காரத்தில் தீர்த்தவாரியில் கலந்து கொள்வர்.

சமுத்திரராஜனுக்கு கொடுத்த வரம்...
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டபோது மகாலட்சுமி தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு மணந்து சமுத்திர ராஜனுக்கு மருமகனானார்.  மகா விஷ்ணுவை மருமகனாய் அடைந்த மகிழ்ச்சியைவிட மகளும், மருமகனும் வைகுந்தம் சென்றுவிட்டால் பார்க்க இயலாதே என வருத்தம் கொண்டார் சமுத்திரராஜன்.  தந்தையின் வருத்தத்தினை கணவரிடம் மகாலட்சுமி சொல்ல..... வருடத்திற்கொரு முறை தானே கடற்கரைக்கு வந்து காட்சி தருவதாக சமுத்திரராஜனுக்கு வாக்களித்தார். அவ்வாறு வாக்களித்த தினம் மாசிமகம்.
  
கும்பக்கோணம் மாசிமகம்;
மாசிமகம் பற்றிய பதிவில் கும்பக்கோணத்தை தவிர்க்க முடியுமா?! ஒருசமயம் யுகமொன்று  வெள்ளத்தால் அழிய இருந்தது.  மீண்டும் உயிர்களை படைக்கும்’‘பீஜம்” தாங்கிய அமுத கும்பத்தை வெள்ளத்தில் மிதக்கவிட்டார் பிரம்மா.  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கிய இடம் கும்பக்கோணம்.  வேடுவன் ரூபத்தில் வந்த சிவப்பெருமானால் அம்பினால் துளைக்கப்பட்டு  கும்பம் உடைந்து உயிர்கள் உருவான  நாள் மாசி மகம். இங்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் கும்பேஸ்வரர் கோவிலே முதன்மையானது. இதன் தீர்த்தமே மகாமக தீர்த்தக்குளம்.

ஒருமுறை அனைத்து புண்ணிய நதிகளும் சிவப்பெருமானிடம் சென்று, மக்கள்  தங்கள் பாவங்கள் தீர எங்களில் மூழ்குவதால் அவர்களின் பாவச்சுமை தங்களை அழுத்தி பாரம் தாங்க இயலவில்லை என முறையிட மாசிமகத்தன்று, கும்பக்கோணத்தில் உள்ள மகா மக குளத்தில் நீராடினால் உங்கள் மீதுள்ள பாவங்கள் போகுமென அருளினார். 
குந்திதேவி பாவம் போக்கிய மாசி மகம்:
கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் போக குந்திதேவி கண்ணனை வேண்டி நின்றாள். ஒரே நாளில் ஏழு கடலில் நீராடவேண்டும் என சொன்னான். ஒரே நாளில் ஏழு கடலிலா என மலைத்து நின்ற குந்திதேவிக்கு திருநல்லூர் கோவிலின் பின் உள்ள கிணற்றில் உனக்காக ஏழு கடலையும் வரவைக்கிறேன், மாசி மகத்தன்று நீராடு உன் பாவம் போகும்  என அருளினான். அத்தீர்த்தம தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஷ்வரர் ஆலயத்தில் உள்ள சப்த சாகர தீர்த்தம் ஆகும்.முருகனுக்கும் உகந்த மாசிமகம்;
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகன் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசித்ததும் மாசி மகம் நாளில்தான். எனவே, சுவாமிமலை, திருத்தணி , திருச்செந்தூர் முருகன் கோவில்களில் மாசிமகம் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுது.


இனி விரதமிருக்கும் முறை;
அதிகாலையில்  எழுந்து அருகில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடவேண்டும். அவ்வாறு நீராடும்போது ஒரே ஒரு ஆடையை உடுத்தாமல், மற்றொரு ஆடைய அணிந்து நீராட வேண்டும். புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்ல இயலாதவர்கள்  குளிக்கும் நீரில் கங்கை உள்ளிட்ட  புண்ணிய தீர்த்தளை ஆவகப்படுத்தி நீராடுதல் நலம். பின்பு உலர்ந்த ஆடைகளை உடுத்தி அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறை சிந்தனையுடன் வணங்கி தான தர்மங்கள் செய்ய வேண்டும்.  மதியம் ஒருவேளை மட்டும் உணவுண்டு, இரவு பால் பழம் அருந்தி விரதமிருக்கலாம். தேவாரம், திருவாசத்தையும் படித்தல் வேண்டும்.    வீட்டிலேயே குளிப்பவர்கள் கீழ்க்காணும் பாடலை பாராயாணம் செய்து குளித்தால் புண்ணிய நதிகளில் குளித்த பலன் கிடைக்கும்.
ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை

            இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே 

கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,

   குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும் 

தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி,

                பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க் 
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக்
                   கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.


மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.  குங்குமத்தால் அம்பிகையை அர்ச்சித்தால் இன்பமும், வெற்றியும் கிட்டும். சரஸ்வதி தேவியை நறுமண மலர்களால் அர்ச்சித்தி வழிப்பட கல்வியில் சிறப்புற்று விளங்கலாம்.

இப்படி சைவமும், வைணவமும்.. வடநாடும், தென்னாடும் கொண்டாடும் சிறப்புவாந்த மாசிமகம் இன்று... இறைவனை வழிப்படுவதோடு தன்னால் இயன்ற தர்மங்களை செய்து இறைவன் அருள் பெறுவோம்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை...
நன்றியுடன்,
ராஜி.

Friday, March 10, 2017

ஹோலி ஹோலி... சுப லாலி லாலி - ஹோலி பண்டிகை வரலாறு

மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனா, இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.
இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே  ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.  இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனிக்காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
கிருஷ்ண பகவான் தன் இளமை பருவத்தில் இப்பண்டிகைய கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
ஹோலி பண்டிகையின் மற்றொரு வரலாறு ;
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என பேராசை கொண்டு கடுந்தவம் புரிந்து இப்படிப்பட்ட மரணம்தான் வேண்டும் என தவம் செய்து வரம் வாங்கி, பலவிதமான அட்டூழியங்களில் ஈடுபட்டான்.  இரணியனின் மகன் பிரகலாதனே அதை எதிர்த்தான். பிரகலாதன்,  மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். 
ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல்  மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படும். அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும்,  பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள்  மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். 
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணி கவலைப்பட, க்ருஷ்ணனின் வருத்தத்தை போக்க கோகுலவாசிகள் க்ருஷ்ணன்மீது வண்ணப்பொடிகளை தூவி விளையாடினர். அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள். இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று மகிழ்கின்றனர்.
சைவ சமயம் சார்ந்த மற்றொரு வரலாற்றை பார்ப்போம்...

ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணக்க தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என தட்சன் ஆணவத்துடன் கூறினான். இதனால் கோபம்கொண்ட சிவப்பெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார். மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார். 
இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்..
நன்றியுடன்,
ராஜி.