Wednesday, July 31, 2013

சொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்

டெய்லி ஒரு பதிவு போடுறீங்க.அடுத்தவங்க பிளாக்குக்கும் போய் வர்றீங்க. முஞ்சி புக்குலயும் மொக்கை போடுறீங்க. எல்லாம் சரி உங்க வூட்டுல கிச்சன் எங்க இருக்கு? மாமாதானே சமைக்குறாங்க அக்கா?!ன்னு கமெண்ட்ல கேக்குற  நல்ல நல்ல?! தம்பிகளுக்காக இனி வார வாரம் புதன் கிழமை தோறும் சமையல் பகுதி வரும்.  

அதுக்காக, ஆலு டிக்கி, பட்டர் கோப்தான்னு வாய்ல நுழையாத பதார்த்தம்லாம் பதிவா போட மாட்டேன். ஏன்னா! அதெல்லாம் எனக்கு சமைக்க தெரியாது!! அதனால, வீட்டுல எப்பவும் இருக்குற  மளிகைப்பொருளை வெச்சுக்கிட்டு செய்யுற பதார்த்தம்தான் பதிவுல வரும் பெரும்பாலும் நம்ம அம்மாக்கள் செஞ்ச பாரம்பரிய உணவுகள்தான் வரும்...,

பள்ளியிலிருந்து பசியோடு வரும் என் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ், மன்ச் ன்னு வாங்கி தருவதில்லை. அதெல்லாம் பார்த்து ஏக்கப்பட்டுடக்கூடாதேன்னு வெளியூர் போகும்போது மட்டும் வாங்கி தருவோம். மத்தபடி வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டைன்னுதான் தருவோம்.

எதுமே இல்லாட்டியும் மதியம் சாதத்தை பிசைஞ்சு எங்கம்மா கதை சொல்லி உருட்டி குடுப்பாங்க. பசங்க சமர்த்தா சாப்பிட்டுடுவாங்க.  பெருமைக்காக சொல்லலை என் பிள்ளைகளை நான் அரக்க பறக்க  மருத்துவமனைக்கு கூட்டி போனதே இல்லை. இப்படியே என் பிள்ளைகள் ஆரோக்கியமா இருந்துட்டா போதும் காசு, பணம் வேண்டாம்ன்னுதான் கடவுள்கிட்டயும் வேண்டிப்பேன்.

ரொம்ப மொக்கை போடாதே! என்னதான் செஞ்சு இருக்கே?!ன்னு பார்க்கனும். நீ முதல்ல பதிவோட மேட்டருக்கு வா!ன்னு நீங்க முணுமுணுக்க்றது கேக்குது. ஒரு புத்தகம்ன்னு போனா தெளிவுரை, அணிவுரைன்னு இருக்குற மாதிரி ஒரு முன்னோட்டம் போடலாம்ன்னு பார்த்தா பொறுக்காதே உங்களுக்கு. அடுத்த பதிவுலலாம் இந்த மொக்கை தொடராது :-)

இன்னிக்கு செய்ய போறது “சொய் உருண்டை” ன்னு எங்க ஊர் பக்கம் செய்யுற ஒரு பலகாரம். மத்த ஊருல என்ன பேருன்னு கமெண்ட்ல சொல்லுங்க. இதோட பெயர் காரணம், எண்ணெயில போடும்போது “சொய்”ன்னு சத்தம் வர்றதால இருக்கலாம்ன்னு நானே கெஸ் பண்ணேன். யாருப்பா அங்க கல்லெடுக்குறது?! சரி வாங்க போய் சமைக்கலாம். ஆளுக்கொரு வேலையா செஞ்சா சீக்கிரம் முடிச்சுடலாம். ஆளை இல்லப்பா சமையலை!!

தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - கால் கிலோ
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 2
மைதா - 200 கிராம்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
உப்பு  - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


பச்சை பயறை வெறும் வாணலியில  பச்சை வாசனை போகும் வரை வறுக்கனும். 


அப்படி வறுத்த பயறை ஒரு பாத்திரத்துல இருக்கும் பச்சை தண்ணில சூட்டோடு சூடா கொட்டுங்க (எங்க ஊருல பச்சை தண்ணி கிடைக்காதுன்ற கமெண்ட்லாம் டெலிட் செய்யப்படும்.)


குக்கர்ல கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணி ஊத்தி  குறைஞ்சது பத்து விசில் வரும் வரை வேக விடுங்க.

திறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.


வெந்த பச்சை ப்யறை தண்ணி இல்லாம வடிச்சு ஆற விடுங்க. 

 
ஆறிய பச்சை பயறோடு வெல்லம்...., ஏலக்காய் சேர்த்து...,

 உரல்ல  இல்லாட்டி மிக்சில கரகரப்பா  அரைச்சுக்கோங்க. (உரல்ல ஆட்டினா நல்லா இருக்கும். புது வீட்டுல இன்னும் உரல் வாங்காததால மிக்சில போட்டு அரைச்சேன்)

 
 அரைச்ச மாவை சின்ன சின்ன உருண்டையா பிடிச்சு வச்சுக்கோங்க.

 
 ஒரு பாத்திரத்துல மைதாவை கொட்டி, அதுல தேவையான புப்ப்பு சேர்த்துக்கோங்க.

ஆப்ப சோடாவயும் போட்டுக்கோங்க.

 தண்ணி கலந்து கட்டி இல்லாம  கரைச்சுக்கனும்.

 பஜ்ஜி மாவைவிட கொஞ்சம் கெட்டியா கறைச்சுக்கோங்க.

 
 அடுப்புல வாணலியை வச்சு தேவையான அளவு எண்ணெய் ஊத்தி காய வைங்க.

கரைச்சு வச்ச மாவுல பிடிச்ச வச்ச உருண்டையை அதுல போட்டு முக்கி எடுத்துக்கனும்.உருண்டை  ஃபுல்லா மாவு இருக்குற மாதிரி முக்கி எடுத்துக்கோங்க.ரெண்டு பக்கமும்  பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்துக்கோங்க.
சொய்யா உருண்டை ரெடி!!

மேல கொஞ்சம் மொறுமொறுப்பாவும் உப்பாவும் இருக்கும், அதை தாண்டி இனிப்பும் சேர்ந்து நல்லா இருக்கும். வெல்லமும், பச்சை பயறும் உடம்புக்கு நல்லது. அதனால  குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம். உள்ளே வெல்லம் இருப்பதால் சூடு ஆற கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதனால,

பச்சை பயறை சூடா வெல்லம் சேர்த்து அரைச்சா இளக்கமா ஆகி உருண்டை பிடிக்க வராம போய்டும். அப்படி ஆயிட்டா , அரை மணி நேரம் ஃப்ரீசர்ல வெச்சு எடுத்தா உருண்டை பிடிக்க வரும்.  .பச்சை பயறு உருண்டை ஃபுல்லா மாதா மாவு கலவை இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டை உடைஞ்சு வெளில வந்து, மத்த போண்டா மேலலாம்  கருப்பா மாறிடும். எண்ணெயும் பாழாகும். அங்க மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.

அடுத்த வாரம் வேற ஒரு சிம்பிள் ரெசிபியோட வர்றேன்.

Tuesday, July 30, 2013

அன்றும்!! இன்றும்!!

  

அந்திவானம்
அலையில்லாக் கடலை அணைத்து
சிவப்பை பூசிக்கொள்ள,
அதைக்கண்ட நானும் சிவந்தேன்
நீ அருகில் இருப்பதாலேயே!!

அசுர அலைகள் நடுவே
தத்தளிக்கும் படகாக நான்!!
கருவண்டின் இருளில்
ஆழ்கடல் அமைதியாக நீ!!
கண்ணீரால் உயர்த்துகிறது
கடல்மட்டத்தை படகு.

உன் வலையில் வலிய
சிக்கிய மீனாக நான் இருக்க,
என்னை வலையில் சிக்கிய
சிப்பிக்குள் முத்தாய்
நீ கருதி கொண்டாடினாய்!!

அன்று,
கடற்கரையில் நாம் இருவர் நடந்தும்
ஒரே பாதசுவடுதான்!!!!!!,
மாலை வெய்யிலில் நாம் இருவர் அமர்ந்திருந்தும்
ஒரே நிழல்தான்!!!!!

இன்றும்,
ஒரே பாதசுவடுதான்,
ஒரே நிழல்தான்!!
ஆனால்,
தனிமையில் நான்......,


Monday, July 29, 2013

”மம்மி” செய்வது எப்படி?! - ஐஞ்சுவை அவியல்
என்னங்க மேடம்?! பொது அறிவு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு போல!! டிஸ்கவரி சேனல்லாம் பார்க்குறீங்க!!  அழுகாச்சி சீரியல்லாம் போரடிச்சுடுச்சா?!

அதெல்லாம் இல்லீங்க மாமோய்! சும்மா சேனல் மாத்திட்டு வந்தேன். அப்போ டிஸ்கவரி டிவில மம்மியை காட்டுனாங்க அதான் பார்த்துட்டு இருந்தேன்.  

ம்ம்ம் என்ன காட்டுனாங்க?! அம்மணி அப்படி சொக்கி போய் பார்த்துட்டு இருந்தீங்க?! அந்த மம்மிக்கு சொந்தமான நகை எதாவது காட்டினாங்களா?! 

ம்க்கும் எப்ப பாரு என்னை தப்பாவே நினைங்க.  எகிப்துல  இறந்துட்டவங்க உடம்பை பதப்படுத்தி வைப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். அது எப்படி பதப்படுத்தி வைக்குறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு?!

ஏண்டி நான் என்ன எகிப்துலயா பொறந்தேன் இதெல்லாம் தெரிஞ்சுக்க?!

அப்படி இல்ல மாமா! நீங்கதான் கம்ப்யூட்டர் பொட்டிக்குள்ள    உக்காந்து  என்னென்னமோ படிக்குறீயளே அதான் தெரியுமா ன்னு கேட்டேன். செத்து போனவங்களோட வயத்துல துளை போட்டு, நுரையீரல், குடல் பகுதிகளை எடுத்துட்டு சில பச்சிலைகளை வச்சு தச்சுடுவாங்களாம். இதயம் மட்டும்தான் அந்த உடம்புல இருக்குமாம்!! அதுக்கப்புறம், மூக்கு வழியா மூளையை ஜாக்கிரதையா எடுப்பாங்களாம். இந்த மாதிரி செய்யும்போது சில சமயம் கண்ணு வெளில வந்துடுமாம். அப்போ செயற்கையான கண்ணை அதுக்கு பொருத்துவாங்களாம். 


அடுத்ததா உப்புத்தொட்டிக்குள்ள நாப்பது நாளுக்கு அந்த உடம்பை அமிழ்த்தி வைக்கனுமாம்.  உடலில் உள்ள திரவங்கள் பூராவும் இதனால வெளியேறிடும் (decompose ஆகாமல் இருக்க ! ). அதுக்கப்புறம் அந்த உடலை எடுத்து அதன்மீது ஒரு விதமான மெழுகுப் பசையை பூசுவாங்களாம். Mumo  ன்னா  மெழுகு ன்னு அர்த்தமாம். அதிலிருந்து வந்ததால இது mummy ன்னு சொல்லப்படுதாம்.  பதப்படுத்த உடல் ரெடி ஆனதும், அந்த உடலுக்கு சொந்தக்காரரோட பதவிக்கேற்ப   தங்க வைர வைடூரிய அலங்காரங்கள் செய்வாங்களாம். இப்போது நாம விரும்பிய mummy ரெடி !!!!!!!!!

என்ன புள்ள! என்னமோ மீல்ஸ் ரெடின்ற மாதிரி மம்மி ரெடின்னு சொல்றே! காலங்காத்தால நல்ல விசயமா சொல்லாம பொணம், அது, இதுன்னு சொல்லிக்கிட்டு!!

என்ன மாமா! இப்படி சொல்லிட்டீரு?! பொணம்னா அபசகுனமா?! எல்லோரும் சாகப்போறாவங்கதானே! ரொம்ப ஆசைப்பட்டுட்டீங்க. இருங்க வாழ்க்கை தத்துவம் ஒண்ணு சொல்றேன்...,

 ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல இருக்குற ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒண்ணை சொல்லனும்ன்னு நினைச்சார். சீடர்கள் எல்லாத்தையும் கூப்பிட்டு,  அவங்களுக்கு தன்னோட பொக்கை  வாயை திறந்து காண்பித்து,

அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லிட்டு எல்லாரையும் போகச் சொல்லிட்டார்.சீடர்களுக்குலாம் ஒண்ணும் புரியலை. இருந்தாலும் குருவை தொந்தரவு பண்ண வேணாம்ன்னு நினைச்சு போய்ட்டாங்க. ஒரே ஒரு சீடனுக்கு மட்டும்.  வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவா குருவையே எழுப்பி கேட்டான்.

அதுக்கு குரு  கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்துச்சு?!! 'நாக்கும் உள்நாக்கும் இருந்துச்சு குருவே”ன்னு பதில் சொன்னான் சீடன். உடனே குரு, 'பல் இருந்ததா?'ன்னு கேட்டார்.  அந்த சீடன் 'இல்லை.'ன்னு சொன்னான்.


'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'ன்னு சொல்லி செத்து போய்ட்டார் குரு.

ம் ம் ம்  வாழ்க்கை தத்துவம் நல்லாவே இருந்துச்சு புள்ள. இனி நானும் எல்லர்கிட்டயும் சாஃப்டாவே நடந்துக்குறேன்.  தாகமா இருக்கு புள்ள. கொஞ்சம் மோர் கொண்டு வர்றியா?!

எந்த காலத்துல இருக்கீக நீங்க. அதான் ஐஸ் பொட்டில விதவிதமா ஜூஸ் பாட்டில் இருக்குல்ல அதுல ஒண்ணை கலந்து வரேன் இருங்க.

அதுலாம் வேணாம் புள்ள! எனக்கு நீர் மோர்தான் வேணும்.  அதான் உடம்புக்கு  நல்லது.   தயிரை விடச் சிறந்தது மோர். தயிரை கடைஞ்சு மோராக்கி குடிச்சா சளி பிடிக்காது. நம்ம முன்னோர்கள்லாம் தயிர் சாப்புடுறது ரொம்ப குறைவு.  ஆனா, மோரை நிறைய சேர்த்துப்பாங்க. தண்ணிரைவிட மோர் கூடுதலா குடிக்கனும்ன்னு சித்தர் தேரையர் சொல்லி இருக்கார். மோர் குடிச்சா உடல் சூடு குறையுமாம். அதுமட்டுமில்லாம, மோரில் உடலுக்கு தேவையான நுண்ணுயிரிகள் நம்ம உடம்புக்கு பல நன்மைகள் செய்யுதாம்.  ஜீரண சக்தியை பெருக்கி, பசியை தூண்டுமாம்.

மோர்ல பொட்டாசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துலாம் இருக்காம். அதுமட்டுமில்லாம புளிப்பு, உப்பு, துவர்ப்பு, காரம்ன்னு நாலு வித்தியாசமான சுவைகள் மோரில் இருக்குமாம். உடல் கொண்ட மொத்த களைப்பையும் மோர் குடிச்ச உடனே போயிட்டு புத்துணர்ச்சி வருமாம்.  

அப்படியா மாமா!? இருங்க ஒரு கிளாஸ் கலந்துட்டு வரேன். 

சும்மா தயிரை ஒரு கிளாஸுல ஊத்தி உப்பு போட்டு கலக்கி கொண்டு வந்துடாதே!! தயிரை ஒரு பாத்திரத்தில் ஊத்தி, தயிர் கடையும் மத்தால கட்டி இல்லாம சிலுப்பி வெண்ணெய் தனியே பிரிஞ்சு வரும் வரை கடையனும். வெண்ணெயை எடுத்துட்டு அதுல, பொடியா நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு போட்டு கலக்கனும் விருப்பப்பட்டா கொஞ்சூண்டு பெருங்காயப்பொடி சேர்த்துக்கலாம்.

ம்ம்ம் சரி மாமா! அப்படியே செஞ்சு கொண்டு வரேன். ஆனா, நிறைய செஞ்சு வெச்சுட்டா மோர் புளிச்சு போகுமே!

 வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குதண்ணிக்கு பதிலா மோர் குடுத்தா உடல் சூடு தணியும் . மோர் புளிச்சுடும்ன்னு நினைக்குறவங்க தயிரிலிருந்து எடுத்த வெண்ணெயை அந்த மோர் தீரும் வரை அதிலேயே போட்டு வெச்சா  மோர் கடைசி வரை புளிக்காமயே இருக்கும். 

சரிங்க மாமா எல்லாத்தையும் மனசுல பதிஞ்சுக்கிட்டேன். எல்லாமே கொஞ்சம் சீரியசான விசயமே பேசிட்டோம். ஒரு ஜோக் சொல்லட்டுமா? 

ம்ம்ம் சொல்லு.... 

 பாலு: மச்சான், எனக்கு இதுவரைக்கும் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சுடா. ஏனோ எனக்கு யாரையுமே பிடிக்கல.
வேலு:உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே....? 
பாலு:  அதையும் பார்த்தோம்டா. ஆனா அது அப்பாவுக்கு பிடிக்கல!
 வேலு:???!!

ஹா! ஹா! ஜோக் நல்லா இருக்கு. ஒரு விடுகதை கேக்குறேன். பதில் சொல்லு பார்க்கலாம்?!

ம்ம்ம் கேளுங்க மாமோய்! பதில் சொல்றேனா? இல்லியா?ன்னு பாருங்க. 

கொய்த இவனை.., கொய்யாத பெயர் சொல்லி அழைப்பர். அவன் யார்?!

ப்ப்ப்ப்ப்பூ இவ்வளவுதானா?! நான் கூட என்னமோ பெருசா கேக்கப் போறீங்கன்னு நினைச்சேன். அதுக்கு விடை...,

நீ போய் மோர் கலந்து எடுத்துட்டு வந்துட்டு விடை சொல்லு. சரியான்னு சொல்றேன். 

Saturday, July 27, 2013

பொன் முட்டையிடும் வாத்து! - பாட்டி சொன்ன கதை


சீனு வந்துட்டியா?! வா! வா! சாப்பிட்டியா?! என் தங்கம்! என் பட்டுக்குட்டி சாப்பிட்டியாடி செல்லம்!

சாப்புத்தேன் பாட்டி!

ம்ம்ம் குட் கேர்ள். சீனு! வா கதை சொல்றேன்.  எங்க போறே!?• 

உள்ளார ஃபேன் ஓடும் சவுண்ட் கேக்குதே!  போட்டீங்களா பாட்டி?! தாத்தா இருக்காரா?!

தாத்தா இல்லை வெளில போய் இருக்கார். நாந்தான் ஃபேன் போட்டேன் அப்படியே மறந்து வந்துட்டேன். ப்ளீஸ் கொஞ்சம் ஆஃப் பண்ணிட்டு வந்திடேன். 

ம்ம்ம் சரி பாட்டி! பாட்டி இப்படிலாம்  கரண்டை வேஸ்ட் பண்ணலாமா?! இப்போதானே கரண்ட் ஒழுங்கா வருது. ரெண்டு மாசத்துக்கு முன் 12 மணிநேரம் கரண்ட் கட்டாகி எவ்வளவு கஷ்டப்பட்டோம். மறந்துட்டீங்களா?!

ஆமா சீனு! இனி இப்படி நடக்காம பார்த்துக்குறேன்.

பாட்டி, கவர்ன்மெண்டை மட்டுமே குறை சொல்லிக்கிட்டு இருந்தா போதாது. நாமும்தான் கொஜ்சம் சிக்கனமா இருக்கனும். அதுக்கு சில டிப்ஸ் எங்க டீச்சர் சொல்லி குடுத்து இருக்காங்க பாட்டி.  

*மோட்டாரிலிருந்து தண்ணி டேங்குக்கு போகும்  பப்லாம் அதிகமா பெண்ட் இல்லாம ஃபிக்ஸ் பண்ணா தண்ணி சீக்கிரமா தொட்டிக்கு போகும். கரண்டும் கொஞ்சம் கம்மியா செலவாகும். 

• நல்லா காய்ஞ்சிருக்குற துணியில தண்ணி தெளிச்சு  அயர்ன் பண்ணுறதை குறைச்சுக்கிட்டா கொஞ்சம்  கரண்ட் கம்மியா செல்வாகும்.

• ஆட்டோமேடிக்  "டீஃப்ராஸ்ட்' ஆகாத ஃபிரிட்ஜா இருந்தா ஃபீரிசர் பாக்சுல  ஐஸ்கட்டி அதிகமா சேராம  அடிக்கடி "டீஃப்ராஸ்ட்' செய்யனும்.  இல்லாட்டி அதிகமா கரண்ட் செலவாகும்.

• வாஷிங் மெஷின்ல துணி துவைக்குறவங்களா இருந்தா சம்மர்ல துவைச்சு அலசுறது மட்டும் பண்ணி வெயில்ல காயவச்சுக்கலாம். விண்டர் அண்ட் ரெய்னி டேஸ்ல ட்ரையரை யூஸ் பண்ணிக்கலாம்.  

• கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்ய, ஷட்டௌவ்ன் செய்ய சோம்பறித்தனம் பட்டு கம்ப்யூட்டரை ஸ்க்ரீன் சேவர்லயே போட்டு வச்சுட்டு போறதாலயும் கரண்ட் அதிகமா செலவாகுது. எதாவது டவுன் லோட் ஆகும்போது அப்படி வைக்கலாம். எதும் வேலை இல்லாத போது ஷ்ட் டவுன் பண்ணிட்டு போறதுதான் பெஸ்ட்.

• ஏசி-யை வருசத்துக்கு 2 டைம்ஸ் சுத்தம் செய்யனும். ஏசி ஃபில்டரை ஒவ்வொரு மாசமும் செய்யனும். 

• ஃப்ரிட்ஜ்  ரோர் லாக் ஆகாம இருந்தாலும்,   அடிக்கடி ஃப்ரிட்ஜ் டோரை ஓப்பன் பண்ணாலும் கரண்ட் வேஸ்ட் ஆகும். 

• ரெண்டு மூனு நாளைக்கு வீட்டை பூட்டிக்கிட்டு ஊருக்கு போகும்போது ஃப்ரிட்ஜை ஆஃப் பண்ணிட்டு போகனும். எல்லா ஃபேனும், லைட்டும் ஆஃப் பண்ணி இருக்கான்னு செக்பண்ணனும். இல்லாட்டி கிளம்பும் அவசரத்துல ஃபேன் இல்லாட்டி லைட் எரிய விட்டு போய்டுவோம். அதனாலயும் கரண்ட் வேஸ்ட் ஆகும். 

• அடிக்கடி பல்பு மேல இருக்குற  தூசிலாம்  துடைச்சு வெச்சா
அதிக வெளிச்சம் கிடைப்பதோடு கரண்டும் மிச்ச்மாகும்.

• ஆளுக்கொரு ரூம்ல இல்லாம முடிஞ்ச வரை   ஒரே அறையில் இருந்து படிப்பது, டிவி பார்ப்பது ன்னு பிளான் பண்ண கரண்ட் மிச்சமாகும் பாட்டி.

ஓ இம்புட்டு விசயம் இருக்கா?! இனி நானும் அப்படியே ஃபாலோ பண்றேன் சீனு!! உனக்கு தெரியும் இந்த சின்ன விசயம் கூட எனக்கு தெரியலியே! இனி கவனமா இருந்துக்குறேன்.

சரி பாட்டி!! இன்னிக்கு என்ன கதை?!
  

பொன் முட்டையிடும் வாத்துன்னு ஒரு கதை சீனு.

”பொன்”ன்னா என்ன பாத்தி?! 

“பொன்”ன்னா ”கோல்ட்” ”தங்கம்” ன்னு அர்த்தம் குட்டிம்மா! 

ஒரு ஊருல ஒரு ஃபார்மர் சந்தையில இருந்து ஒரு குட்டி வாத்தை வாங்கி வந்தார். அதை  பார்த்து பார்த்து வளர்த்தான். அது பெருசாகி முட்டை போடும் ஸ்டேஜுக்கு வந்துச்சு.

கூடைக்குள்ள போட்டு மூடி வச்சுட்டு வயலுக்கு போய் ஈவினிங் வந்து கூடையை திறந்து பார்த்தான்.  வாத்து முட்டை இட்டிருந்துச்சு. சந்தையில் கொண்டு போய் விக்கலாம்ன்னு  கையில் எடுத்து பார்த்தா முட்டை சாதாரண முட்டையாய் இல்லாம தங்க முட்டையா இருந்துச்சு.


ஆச்சர்யப்பட்டுக்கிட்டே போய் சந்தையில வித்துட்டு பணமாக்கி வீட்டுக்கு தேவையான திங்க்ஸ்லாம் வாங்கி வந்தான். 

இப்படியே வாத்து ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு முட்டை போட்டுச்சு. அதை வித்து அவனும் தனக்கு தேவையானதை வாங்கி வந்தான். உங்க அத்தை ராஜி சில சமயம இப்படிதான் தத்து பித்துன்னு எதாவது செய்வா. அதுமாதிரிஅந்த ஃபார்மரும், இந்த வாத்து டெய்லி ஒரு முட்டைதானே போடுது. அதை கொண்டு போய் விக்க டெய்லியும் சந்தைக்கு போக வேண்டியதா இருக்கே. முட்டை அது வயத்துல இருந்துதானே வருது. அப்போ அது வயத்துல நிறைய தங்க முட்டை இருக்குமே!ன்னு யோசனை பண்ணான்.

அதனால, அந்த வாத்தோட வயத்தை கிழிச்சு எல்லா முட்டையையும் எடுத்து, ஒரே நேரத்துல வித்து அதுமூலமா வர்ற பணத்துல எதாவது பிசினெஸ் செஞ்சு பணக்காரணாகிடலாம்ன்னு நினைச்சு அந்த வாத்தோட வயத்தை கிழிச்சுட்டான் அந்த ஃபார்மர்.

ஐயோ! பாவம் பாத்தி அந்த வாத்து! அப்படி கிழிச்சா அதோத வயத்துல ஒண்ணும் இருக்காதே!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்  உனக்கு தெரியுது. ஆனா, அவனுக்கு தெரியலியே! அதோட வயத்துக்குள்ள அன்னிக்கு போட வேண்டிய ஒரே ஒரு முட்டை மட்டும் இருந்துச்சு. வாத்தும் துடிதுடிச்சு செத்து போச்சு.

வாத்து செத்து போனதால டெய்லியும் கிடைக்க வேண்டிய ஒவ்வொரு முட்டையும் கிடைக்காம போச்சு. தன்னோட முட்டாள் தனத்தால மீண்டும் தன் குடும்பத்து வறுமை மாறாம போச்சேன்னு நினைச்சு கவலைப்பட்டான்.
இதிலிருந்து என்ன தெரியுது?!

பேராசை பெரு நஷ்டம்ன்னு தெரியுது பாட்டி. 

ம் ம் ம் குட் பாய். போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு படிங்க.

சரி பாத்தி . பை! பை!


Friday, July 26, 2013

அம்மா! பச்சையம்மா! - புண்ணியம் தேடி ஒரு பயணம்

நேத்து ராத்திரி கே.ஆர்.விஜயா சாரி  அம்மன் என் கனவுல வந்து உள்ளூர் ஆட்டக்காரனுக்கு மரியாதை குறைவு”ன்னு சொல்வாங்க!. அதுப்போல எங்கயோ இருக்குற கோவில் பத்திலாம் எழுதுற! . ஆனா, வீட்டுல இருந்து 12 கிமீ தூரத்துல இருக்குற என்னை  பத்தி எழுதலையேன்னு சூலத்தால கண்ணை குத்த வந்துச்சு.

ஆத்தா! பச்சையம்மா! நான் ஒரு பிரபல பதிவர். அதனால, பதிவு எழுத, போட்டோ அட்டாச் பண்ண, மத்த பிளாக்குல போய் கமெண்ட் போடன்னு ஆயிரம் வேலை இருக்கு. அதுக்கு கண்ணு ரொம்ப அவசியம் வேணும். நாளைக்கு எழுந்ததும் முதல் வேலையா உன்னை பத்தியே பதிவா போட்டுடுறேன்ன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் சூலத்தை கீழ போட்டாங்க கே.ஆர்.விஜயா சாரி அம்மன் சாமி.

இனி, பதிவுக்குள் போகலாம்...,

                                                    
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணில இருந்து சரியா 12 கிமீ தூரத்துல இருக்கு வாழைப்பந்தல்ஆரணில இருந்து அரை மணிக்கு ஒருதரம் பஸ் இருக்கு. ஆட்டோவுலயும் போகலாம். ஆனா, உங்க ஒரு நாள் சம்பளத்தை முழுசா கொடுக்க வேண்டி வரும். ஏன்னா, ரோடு அத்தனை மோசம்.

வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு ல இருந்து வாழைப்பந்தலுக்கு பஸ் இருக்கு. அது இல்லாம, செய்யாறு ஆரணி ரோடுல மாம்பாக்கத்துல இறங்கி, அங்கிருந்து வாழைப்பந்தல் பஸ் ஏறி வரனும். வாழைப்பந்தல் ஊருல இருந்து 2 கிமீ தூரத்துல இருக்கு. “பச்சையம்மன்கோவில்.


அம்மான்னா அன்பு, அறிவு, ஆனந்தம், அமுதம், ஆற்றல். அச்சமின்மைன்னு பல அர்த்தம் வருது. அம்மாக்கு அம்மா யார்? பாட்டி. பாட்டியோட அம்மா? அந்த அம்மாக்கு அம்மா?! அந்த ஆதி யார்? அது தான் இயற்கை. இயற்கையின் வனபின் நிறம் பச்சை. பசும நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி, மனதிற்கு வலிமைன்னு இன்றைய ஆராய்ச்சியாளர்களே ஒத்துக்கிட்டு இருக்காங்க. அப்படி பெருமை வாய்ந்த பச்சை நிறத்தில் அருள் பாலிக்கும் அன்னையின் பெயர்தான் “பச்சையம்மன்
இனி, ஏதோ எனக்கு தெரிஞ்ச தல வரலாறு பார்க்கலாம்....

பிருங்கி என்னும் மாமுனிவர் தீவிர சிவன் பக்தர்.  தேவர்கள், முனிவர்கள், பார்வதி சகிதமாய் கைலாயத்தில் இருக்கும்போது பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வலம் வந்து வழிப்பட்டு சென்றார். இதைக்கண்ட சிவசக்தியான பார்வதி தேவி, ஐயனே! இதென்ன நியாயம்?! எல்லாம் அறிந்த மாமுனிவரே நம்மை பிரித்து வணங்கலாமா?! அவர் மீண்டும் இத்தவறை செய்யாமல் இருக்க தங்கள் உடலில் சரிபாதி எனக்கு வேண்டும் என சிவப்பெருமானிடம் அன்னை வேண்டினார். 
இதற்கு சிவன் மறுக்க, எப்படியும் சிவனின் உடலில் சரி பாதி பிடிக்க வேண்டும் என வைராக்கியம் கொண்டு அன்னை சிவனைப் பிரிந்து தவம் செய்ய பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தை தேடி அலைந்த போது.....,

பசுமையான வாழை, அதன் கன்றுகளோடு வனப்பாகவும், வளமாகவும் தன் இனத்தோடு சேர்ந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கும் தோட்டத்தில் மண்ணால் ஆன சிவலிங்கத்தை கண்டதும் இதுவே சரியான இடம் என அன்னை உணர்ந்து, வாழை இலைகளால் பந்தலிட்டு, பூஜையை தொடங்க நீரைத் தேடினார்...,
ஆனால், சிவப்பெருமானோ தன் திருவிளையாடலை இந்த இடத்தில் தொடங்கினார். பசுமையான வாழைத்தோட்டத்தில் உள்ள  நீர் நிலைகள், நீர் ஊற்றுகளையும் மறைத்து வைத்து விளையாடினார். மன உளைச்சலில் இருந்த அன்னை, சிவப்பெருமானின் விளையாட்டை உணராமல், தன் புதல்வர்களான விவேகமே உருவான விநாயகரையும், வீரத்தின் பிறப்பிடமான முருகனையும் அழைத்து பூஜைக்கு நீர் கொண்டு வரச் சொன்னார்.
                 
தந்தையின் விளையாட்டை உணராத புதல்வர்களும் அன்னையின் கட்டளைப்ப்படி நீரை தேடி, மூத்தவர் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு பாகத்துக்கு வந்தார், அங்கே ஒரு முனிவர் தன் கமண்டல் நீர் சிவனின் பூஜைக்கு மட்டுமே என்று நீண்ட நாட்களாக தவம் செய்வதை உணர்ந்து தன் வாகனமான மூஞ்சூரை அனுப்பி கமண்டலத்தில் உள்ள நீரை கவிழ்க்க செய்தார், அந்த நீர் கமண்டல  நதியாக பெருக்கெடுத்து அன்னையை நோக்கி ஓடியது.

 இளையவரோ! எங்கு தேடியும் நீர் கிடைக்காததால் தன் வீர வேலை வீசி மலையை குடைந்து ஒரு ஆற்றை உருவாக்கினார். குழந்தை வடிவில் இருந்து முருகன் உருவாக்கிய நதி “சேய் ஆறாக மாறி அன்னையை நோக்கி ஓடியது.


நீண்ட நேரமாகியும் நீர் கொண்டு வர சென்ற புதல்வர்களை காணாமல் அன்னையுடன் இருந்த நாகம்மா கிழக்கு தொடர்ச்சி மலையிலிருந்து நீரூற்றைக் கொண்டு வர, ”நாக நதி”யாக மாறி அன்னையை தேடி அதுவும் ஓடியது.

நீர் கொண்டு வர சென்றவர்களை காணவில்லையே என கவலைக்கொண்டு குறித்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டுமே என்று பூமாதேவியை வேண்டி சிறு குச்சியால் பூமியை தோண்ட ஊற்று பீறிட்டு வரவும், கணபதியின் கமண்டல நதியும், முருகனின் “சேய் ஆறும், நாகம்மாவின் “நாக நதியும், அன்னையின் பாதத்தை தழுவியது. எங்கே குறித்த நேரத்தில் பூஜை செய்ய முடியாமல் போகுமோ என்ற எண்ணத்தில் இருந்த அன்னையின் திருமேனி திரிவேணி சங்கமத்தால் உடலும், உள்ளமும் குளிர்ந்து சிவந்த நிற மேனி மாறி பச்சை நிற்மானது. அன்னையும் குறித்த நேரத்தில் பூஜையை முடித்தார். தேவர்களும், முனிவர்களும் அன்னையின் நிலைக்கண்டு பூமாரி பொழிந்து  வாழ்த்தினர்.
   
வானவர் மனம் மகிழ்ந்ததால் பெரு மழை பெய்தது. மழை நீரால் எங்கே மண்ணால் செய்த லிங்கத்துக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சிய அன்னை, சிவலிங்கத்தை கட்டி அணைத்து மழைநீரை தன்மீது தாங்கினாள். அன்னையின் பிடியை தாளாத சிவப்பெருமான் “மண்ணாதீஸ்வராக காட்சி அளித்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அறிந்த அசுரர்கள் அன்னையின் தவத்தை குலைக்க பல வழிகளில் முயற்சி செய்தனர். அதனால், தேவர்களும், முனிவர்களும் சிவன், விஷ்னுவிடம் சென்று முறையிட்டனர். சிவன் “வாமுனியாகவும்.., விஷ்னு “செம்முனியாகவும் அவதாரம் எடுத்து காத்ததாக சொல்ல படுகிறது.

இக்கோவிலில் அமைந்துள்ள அம்மனின் திருவுருவம் வைரம் பாய்ந்த மரத்தால் ஆனது.  அன்னையின் தியான ஜோதியாய் விளங்கும் விக்ரகம் மனித பிறவியில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும். 

அன்னைக்கு தவத்தின் போது உதவிய சப்தரிஷிகள் 7 பேர் சிலைகளும்....,
 
 காவல் புரிந்த அஷ்ட திக்கு பாலகர்களின் சிலைகளும் வண்ண மயத்துடன் கண்கொள்ளாக் காட்சியாய் விளங்குகிறது. 

 
ஐராவதம் என அழைக்கப்படும் யானையின் சிலையும், 
 தேவேந்திரனின் தவக்கோல சிலையும் இங்கே அமைந்திருக்கு. 


கோவிலின் வெளியில் காவல் தெய்வமாக விளங்கும் வாமுனி(சிவன்) செமுனி(விஷ்னு) சிலைகள் கோபுர கவசத்தில் இருப்பது இதன் சிறப்பு. 

புது வாகனத்துக்கு பூஜை, திருஷ்டி கழிப்பு, உயிர் பலி  இதெல்லாம் இங்கதான் நடக்கும். திருஷ்டி கழிப்புக்காக உடைக்கும் தேங்காயை தரையில் உடைக்காம கோபுர சுவற்றில்தான் உடைக்கனும்.

ஆலயம் இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது, கோவில சுற்றி சிமெண்டி தரை, மேலே கூரை என புத்தம் புது பொலிவுடன் அழகுற மிளிர போகின்றது.


 சுத்து வட்டார ஊர் மக்களுக்கு பெரும்பாலும் இதுதான் குல தெய்வம். குழந்தைக்கும் முதல் முடி காணிக்கை, காது குத்துலாம் இங்கதான் நடத்துவாங்க. நாங்க போய் இருக்கும்போது ஒரு குடும்பத்து குழந்தைகளுக்கு காது குத்து விழா. 
 

பொங்கல் வைக்க கோவில் நிர்வாகம் தனியா இடம் ஒதுக்கி மேடை கட்டி வெச்சிருந்தாலும் எப்பவும் போல நம்ம ஆளுங்க அங்கங்கே பொங்கல் வைக்குறாங்க. 

 
 பெரும்பாலும் திங்கள், வெள்ளிக்கிழமைல கூட்டம் அலைமோதும். சில ஞாயிறு அன்னிக்கும் எதாவது காது குத்து போன்ற நிகழ்ச்சிகள் இருக்கும். அவங்கவங்க வசதிக்கு ஏத்த மாதிரி மண்டபம்லாம் இருக்கு. ஆனாலும், மரத்தடிகளில் அடுப்பை மூட்டி பிரியாணி, சுக்கா வறுவல், கொழம்புன்னு செஞ்சு பரிமாறுவாங்க. சுத்திலும் சுமாரான ஹோட்டல் இருக்கு. எதுவுமே சாப்பிட  கொண்டு போகலைன்னாலும், இதுப்போல சமைக்குற கோஷ்டி சாப்பிடுறீங்களா?!ன்னு கேட்டு கேட்டு பரிமாறுவாங்க. 

நான் போனது புதன் கிழமை என்பதால, கடைத்தெரு ராஜி மண்டைக்குள்ள காலியா இருக்குற மாதிரி ஜில்லோன்னு இருக்கு. திங்கள், வெள்ளின்னு வந்தால் கூட்டம் அலைமோதும்.. அசைவம் அகப்படும் இடம் என்பதால் முக்கியமான ஆண்கள் கடை இருக்கு. ஆனா, என்னாலதான் படம் எடுக்க முடியலை.வேண்டுதலுக்காக உடலில் வேப்பிலை சேலை உடுத்துறது, தீச்சட்டி எடுப்பது, எலுமிச்சை பழம் உடம்பில் குத்த நேர்த்திக்கடனை செலுத்துவாங்க.  நான் போகும்போது அப்படி இரு சிறுவர்கள் எலுமிச்சை குத்தி பூந்தேர் இழுத்தாங்க. 
விரதமிருக்க திங்கள் கிழமை சிவனுக்கும் அம்மனுக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாள்ன்னு சொல்வாங்க. ஆன, சிவன் வேறில்லை, சக்தி வேறில்லைன்னு சொல்லுற மாதிரி இந்த கோவில் மட்டும் திங்கள் கிழமை அம்மனுக்கு உகந்த நாள். அன்னிக்கு கோவிலில் கூட்டம் அலைமோதும். அதுலயும் ஆடி மாத 5திங்களும், ஆவணி மாத 4 திங்களும் சேர்ந்து 9 திங்கள் பூஜைக்கு வெளிநாட்டில் இருந்துலாம் கூட வருவாங்க. 

மேலும் அதிக தகவலுக்கு: T.குமார் குருக்கள், 
தொடர்புக்கு: 04182- 244373
9444896937

அடுத்த வாரம் மீண்டும் வேற கோவிலுக்கு போகலாம். இப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா?!