Friday, December 18, 2020

உலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி

போன வருசம் மகளை கல்லூரியில் சேர்த்து, அவளை ஹாஸ்டலிலும் விட்டுட்டு மகளை பிரிஞ்ச துக்கத்தில்!!  அருகிலிருந்த  திருச்செங்கோடு கோவிலுக்கு போனோம்.  திருச்செங்கோடுன்ற வார்த்தைக்கு ”அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிறமலை”ன்னும், ”செங்குத்தான மலை”ன்னும் இரண்டு அர்த்தம் சொல்றாங்க. இந்த மலை ஏன் சிவப்பாச்சுன்னா விஷ்ணு பகவான் பள்ளிக்கொண்டிருக்கும் ஆதிசேஷன் பாம்பு மேருமலையை பிடித்தபோது ஏற்பட்ட கலகலப்பில் காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தால் இந்த மலை சிவப்பு நிறமாச்சுன்னு தலவரலாறு சொல்லுதுங்க. 

Monday, December 07, 2020

ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தவறா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! வெட்டவெளியில் சிறுநீர், மலம் கழித்தால் அசுத்தம்ன்னு சொல்லி வீட்டிற்குள் கழிப்பறை கட்டி வச்சிருக்கோம்.  இது சரியா?! வீடுகளுக்குள் கழிப்பறை  வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் எம்மாம்பெரிய வீடுன்னாலும் கழிப்பறை வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமாதான் இருந்தது. திருட்டுபயம், சோம்பேறித்தனத்தினாலும், 800 அல்லது 1000 சதுர அடிகளில்  மனைகள் வந்தபின்  கழிவறை வீட்டிற்குள்ளயே கட்ட ஆரம்பிச்சி இப்ப கழிப்பறை நடு ஹால்லயே இருக்கும் நிலை வந்தாச்சு. 

Sunday, December 06, 2020

என் உதிரத்தில் உதிர்த்த மூன்றாவது உயிருக்கு இன்று பிறந்த நாள்...

பிள்ளைகள் எத்தனை வளர்ந்தாலும் பெற்றோருக்கு குழந்தைதான்.. கருத்தரித்ததை உணர்ந்தது, கருவின் முதல் அசைவு, மசக்கை தொந்தரவு, உடல் உபாதைகள், பிரசவ வலியை தாங்கவேண்டுமென்ற பயம் என தாய் ஒரு பக்கமும், மருத்துவ செலவு, புதுசாய் ஜனிக்கும் குழந்தைக்கும் சேர்த்து பொருள் ஈட்ட என தந்தை ஒருபக்கமும் வெவ்வேறு பக்கம் பயணித்தாலும் தன் குழந்தை இந்த மண்ணில் ஜனிக்க போகும் அந்த நொடிக்காக காத்திருப்போம்.  அக்குழந்தை ஜனித்த முதல் நொடியில் இருவர் பட்ட கஷ்டமெல்லாம் மறந்து என்னமோ இமாலய சாதனை புரிந்தமாதிரி அத்தனை பரவசப்பட்டிருப்போம். அந்த பரவசத்தினை ஒருமுறை அனுபவித்தால் போதுமா?! ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க ஆசைதான். ஆனால், யதார்த்தம் அதற்கு ஒத்துவராது. அதனால்தான் பிறந்த நாள் என ஒன்றினை இறைவன் படைத்தானோ என்னமோ?!

Thursday, November 05, 2020

அருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி

மன அமைதிக்குதான் கோவிலுக்கு போறதே! புகழ்பெற்ற கோவிலுக்கு போகும்போது நேரம், பயணக்களைப்பு,  கோவில் நடைமுறை, கூட்டம் என பல காரணங்களால் கசப்பான அனுபவத்தை பலர் அனுபவித்திருப்போம்..  ஆனா,  அதிக பிரபலமாகாத கோவில்களுக்கு போனால், கசப்பான அனுபவம் நேராது. அதேநேரத்தில் மன அமைதியும் கிட்டும்.  உள்ளூர் கோவில் என்றால் நேரம், பணம், உடல் உழைப்பு மிச்சமாகி புண்ணியத்தோடு நல்லதொரு அனுபவமும், நம்ம வட்டாரத்துல இவ்வளவு பிரபலமான கோவில் இருக்கான்னு ஆச்சர்யமும் ஏற்படும். 

அருங்கோண, ஸ்டார் டைப் வயர் கூடை - கைவண்ணம்

ஜூலையில் மகள் கர்ப்பிணியாய் வீட்டிற்கு வரும்போது மகிழ்ச்சியோடு  மகளின் பத்திய சாப்பாடு, குழந்தை பராமரிப்பு, குழந்தையை பார்க்க விருந்தினர் வருகைன்னு... வேலை பளு அதிகமா இருக்கும்ன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். 

Wednesday, November 04, 2020

மதுரையின் அழகிய கோலத்தை அலங்கோலமாக மாற்றிய ஆங்கிலேயர் -மௌனசாட்சிகள்.

எத்தனைமுறை சென்றாலும் அலுப்பு தட்டாத நகரம் மதுரை மாநகரம். மீனாட்சி அம்மன் கோவிலாகட்டும், நாயக்கர் மகாலாகட்டும், அழகர் கோவிலாகட்டும், ராணி மங்கம்மாள் மாளிகையாகட்டும்.. பார்க்க பார்க்க அலுப்பு தட்டாது. இந்நாளில் நாம் காணும்  பழமையும், புதுமையும் கலந்து காணப்படும் மதுரை, 300 வருஷங்களுக்கு முன்னர்  மதுரையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கியது.  இப்பொழுது இருந்ததைவிட நேர்த்தியாகவும்,  அழகாகவும் இருந்ததுன்னு சொன்னா  ஆச்சர்யமாதான் இருக்கும். மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆண்ட 13-ம் நூற்றாண்டு காலகட்டங்களில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பெரிய கோட்டை இருந்ததுன்னு வரலாற்று ஆய்வுகள் சொல்வதா படிச்சேன். அது நிஜமா?! பொய்யான்னு இன்றைய மௌனசாட்சிகள் பதிவில் பார்க்கலாம்.

Tuesday, November 03, 2020

வெங்காய பக்கோடா - கிச்சன் கார்னர்

நொறுக்குத்தீனிகள் எத்தனை இருந்தாலும் பக்கோடாவுக்கு ஈடு இணை கிடையாது... மாலை நேரத்தில் ரோட்டோர கடையில் கொதிக்கும் எண்ணெயிலிருந்து மினுமினுப்போடு எடுக்கும் பக்கோடாவை, அதே சூட்டோடு மந்தார இலையில் பொட்டலமா கட்டி வாங்கிக்கிட்டு வேலையிலிருந்து வரும் அப்பாவுக்காக காத்திருந்த தருணம் அலாதியானது. வீட்டுக்கு வந்ததும் மந்தார இலையின் வாசத்தோடும் இளஞ்சூட்டோடும் இருக்கும் பக்கோடாவை சாப்பிட்டதுலாம் பொற்காலம்...

Monday, November 02, 2020

விட்டுட்டு போறதா காதல்!? எதற்கும் விட்டுட்டு போகாமல் இருப்பதே காதல்?! - ஐஞ்சுவை அவியல்

சிக்கனை வாங்கி கொடுத்தது  பத்து மணிக்கு ...  இப்ப மணி 1ஆகுது.. சாப்பாடு ரெடியான்னு கேட்டா இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்ன்னு சொல்றியே! சிக்கன் கறிதானே சமைக்குறே?! என்னமோ பெரம்பலூர்ல வாழ்ந்த டைனோசர் கறி சமைக்குற மாதிரி இம்புட்டு நேரமா!?

சமைக்குறது அம்புட்டு ஈசியா?! ஒருநாளுக்கு சமைச்சு பாருங்க அப்ப தெரியும்  எங்க கஷ்டம்..

Sunday, November 01, 2020

ஒருநாள் நினைவிது,, பலநாள் கனவிது... பாட்டு புத்தகம்

சில பாட்டுகள் என்ன படம், யார் நடச்சதுன்னே தெரியாது. ஆனா, அந்த பாட்டு ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கும்.  ஒருநாள் விசுவலா பார்க்கும்போது இவர் நடிச்சு இப்படி இந்த பாட்டை சொதப்பிட்டாரேன்னும் இருக்கும். இல்ல இவரா நடிச்சார், இத்தனை நாள் விசுவலா பார்க்கலியேன்னு ஆச்சர்யமா இருக்கும்.  அதுமாதிரி எனக்கு பிடிச்ச பாட்டில், எனக்கு பிடிச்ச நடிகர் நடிச்சது தெரிஞ்சு ஆச்சர்யப்பட்ட ஒருபாட்டைதான் இன்னிக்கு பார்க்கப்போறது...   

Wednesday, September 09, 2020

பஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்

 சீரியல் பார்க்க பிடிக்காத எனக்கு  பின்கோடு, நீரும் நிலமும், ஊரும் பேரும், வரலாற்று சுவடுகள், மண் பேசும் சரித்திரம், மூன்றாவது கண், சுற்றலாம் சுவக்கலாம், ஊர் சுற்றலாம்  மாதிரியான இடம் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க பிடிக்கும். அந்தந்த இடங்களின் உணவு, வரலாறு, கலாச்சாரம், கோவில், கோட்டை, கட்டிடங்களை சுத்திக்காட்டும் நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்க்கப்பிடிக்கும்.  புதுசா ஒரு இடத்தினை பார்த்தால் இங்க போகனும்ன்னு மனசுல நினைச்சுப்பேன். அந்த பக்கம் போகும்போது கண்டிப்பா அந்த இடங்களுக்கு போய் வருவேன். வேந்தர் டிவில பின்கோடு நிகழ்ச்சில வேலூர் பத்தின பெருமைலாம் சொல்லிக்கிட்டு வரும்போது விளாப்பாக்கத்துல பஞ்சபாண்டவர் மலைன்னு இருக்குன்னு சொல்லி காட்டுனாங்க. பஞ்ச பாண்டவருக்கும், வேலூருக்கும் என்னடா சம்பந்தம்ன்னு பல நாளாய் மண்டைக்குடைச்சல். 

Friday, September 04, 2020

ஒரே கோவிலில் ஒன்பது பெருமாள் அவதாரங்களை தரிசிக்கனுமா?! - புண்ணியம் தேடி..

 

பக்தன் பிரகலாதனின் அபயக்குரலுக்கு நொடிப்பொழுதில் அவதரித்த இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்ய அவதரித்தார் நரசிம்மர். தன் இரண்யகசிபுவை வதம் செய்தபின்னும் உக்கிரம் தணியாத நரசிம்மரை கண்டு அஞ்சிய பிரகலாதன், நரசிம்மரை நோக்கி பாடல் பாடி, லட்சுமி தேவியுடன் சாந்த சொரூபத்தில் காட்சியருள வேண்டி,  தரிசனம் பெற்றார். பிரகலாதனுக்கு கிட்டிய லட்சுமி நரசிம்மர் தரிசனத்தை தங்களுக்கும் கிட்டவேண்டுமென  திருமாலிடம் தேவாதிதேவர்கள்  வேண்டி நின்றனர்.  திருமால், 'அவணி நாராயணபுரம்' என்னும் சிம்மாசல மலையில் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்யும்படியும், பிருகு மகரிஷியோடு  சேர்த்து தேவாதி தேவர்களுக்கும் தரிசனம் தருவதாகக் கூறியருளினார்.  
பிருகு  மகரிஷியோடு தேவாதிதேவர்களின் தவத்துக்கு மனமிரங்கி, சுவாதித் திருநாளன்று, பிருகு முனிவருக்கு ஓராயிரம் சூரியன் சுடரொளியாய் லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிருகு முனிவர், ‘இத்தலத்தில் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்’   என வேண்டி நின்றார். அதன்பின்னர், அதன் பொருட்டு மலையுச்சியில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாகவும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதராக, சோளிங்கர் யோகநரசிம்மராக திருக்காட்சி அளித்ததன்மூலம் பஞ்ச திருத்தலம் ஒரு சேர உருவானது. மேலும், பிருகு முனிவரின் விருப்பத்திற்கிணங்க, லட்சுமி நரசிம்மர் தமது வலக்கரத்தால் ஒரு தீர்த்தத்தினை உருவாக்கினார். அதன்பெயர் ‘பாகூ நதி’. இது சேயாற்றோடு கலக்குது. இத்திருக்கோவில் தட்சிணா சிம்மாசலம், தட்சண சிம்மகிரி, பஞ்சதிருப்பதி, ஆவணி நாராயணபுரம் எனவும் அழைக்கப்படுது.


ஆரணில இருந்து 12கிமீ தூரத்தில் இருக்கு இக்கோவில். வந்தவாசில இருந்து 26 கிமீ, செய்யாறுல இருந்து 25கிமீ, சேத்பட்டுலிருந்து 30கிமீ தூரத்திலும் இக்கோவில் இருக்கு.  சென்னைல இருந்து 148 எண் கொண்ட  போளூருக்கு  நேரடி பேருந்து இருக்கு. அதுல வந்தால்  ஆவணியாபுரம்ல இறங்கி, இடதுபுறம் இருக்கும் ஊர் நுழைவு வாயில் வழியா ஊருக்குள் வந்தால், ஊரின் மேற்குப்புறமாக நம் கண்ணுக்கு தெரியும் இந்த  சிம்மாசல பர்வதம்.  பிரதான சாலையிலிருந்து வயல்வெளிகளை ரசித்தவாறே ஒரு கிமீ தூரத்திலிருக்கும் கோவிலுக்கு  நடந்தே செல்லலாம்.  இல்லன்னா, ஷேர் ஆட்டோக்களும் சனிக்கிழமைகளில் கிடைக்கும்.

இம்மலை  வடக்கு தெற்காக சிங்கம் ஒன்று படுத்திருப்பது மாதிரி காட்சியளிக்கும்.  கிழக்கு நோக்கி இருக்கும் இந்த ஆலயம் சுமார் 110 படிகளை கொண்டது.  இது பல்லவர்காலத்தைய கோவிலாகும். 
மலையின் பாதி தூரத்தை கடந்ததும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை தரிசிக்கலாம்.  சுத்தமான சிறிய கருவறை.  அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் நரசிம்மர். கருவறையின் எதிரினில் இரண்டு க கருடாழ்வார்கள் உள்ளனர். இருவரில் ஒருவர் சிம்ம முகத்துடன் இருக்கின்றார். இடப்புறம் லட்சுமி தேவியும் சிம்ம முகத்துடன் காட்சி தருகிறாள்.   அழகான பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்வாங்க. ஆனா, அந்த மகாலட்சுமியே இங்க சிங்க முகங்கொண்டு இருக்க என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?!

கண்ணாடி அறையில் நின்றக்கோலத்தில் உற்சவர்..
பிரம்மா நாராயணனைக் குறித்து யாகம் செய்தபோது, யாகத்தீயிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டாராம். அப்போது அவர் முகமற்று இருந்ததைக் கண்ட தாயார் மஹாலஷ்மி, முகமில்லாது பக்தர்களுக்கு எவ்வாறு தரிசனம் அளிப்பது என்று கேட்டு நரசிம்மரின் சிங்கமுகத்தை தமக்கு அளிக்குமாறு வேண்ட, அவ்வாறே சிங்கமுகம் பெற்றதாகச் சொல்றாங்க. அதன்படி அறுபது வருடங்களுக்கு ஒரு முறை சர்வதாரி வருடத்தைய  ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

தெற்கு நோக்கிய பஞ்ச நரசிம்மர்..
இக்கோவிலில் மொத்தம் 9 நரசிம்மரை தரிசிக்கலாம், மூலவரான லட்சுமி நரசிம்மர், உற்சவர், மற்றொரு சிறிய உற்சவர், பஞ்ச நரசிம்மர், மலைமீதிருக்கும் யோக நரசிம்மர் என மொத்தம் 9 நரசிம்மரை இங்கு தரிசிக்கலாம். இது தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படுகின்றனர்.  இங்கு வழிபடுவதன்மூலம் இரண்யவதம் நடந்த அகோபில மடத்தை வழிப்பட்டதன் பலன் கிடைக்கும்.
திருப்பதி அமைப்புப்படியே மலைமேல்  சீனிவாசப்பெருமாள் இருக்க, கீழ்ப்புற கோவிலில்  அமர்ந்த கோலத்தில் அலர்மேலு தாயார் வீற்றிருக்கிறார். 

திருமணத்தடை நீங்க, குழந்தைவரம் வேண்டி இக்கோவிலுக்கு வருவோர் ஏராளம். குழந்தைப்பேறு வேண்டுவோர், சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்தும், இத்தலத்தில்  சனிக்கிழமை இரவு இத்தலத்தில் தங்கியிருந்தும் வரம் பெறுகின்றனர்.  குழந்தை வரம் பெற்றோர் நேர்த்திக்கடனாய் துலாபாரம் செலுத்துகின்றனர்.  திருப்பதி சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாதவர்களும் இவ்விடத்தில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

தங்கள் நிலத்தில் விளையும்  விளைப்பொருட்களில் ஒரு பாகத்தை இக்கோவிலுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.  மேலும் துலாபாரமாய் கொடுக்கும் நெல், வெல்லம், சர்க்கரை முதலான பொருட்களும் இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கு. கரும்பு, வேர்க்கடலை, கம்பு, சோளம்ன்னு அனைத்து விளைப்பொருட்களும் இங்குண்டு.

லட்சுமி நரசிம்மரை வணங்கி மேலும் மலை ஏறினால் வலப்பக்கமிருக்கும் ஆஞ்சநேயரை காணலாம்.
பிருகு முனிவரின் தவக்கோலமே இந்த பாறைவடிவம்ன்னு சொல்றாங்க. 

அங்கிருந்து மலை ஏறினால், ஒரு பெரிய பாறையின்மேல்  பலிபீடம், கொடிமரத்தோடு கூடிய ஆலயத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் சீனிவாசப்பெருமாளை காணலாம்.

திருப்பதி சீனிவாசப்பெருமாளை ஒத்த உருவ அமைப்பு.. ஜருகண்டி, ஜருகண்டின்னு கழுத்தில் கைவைத்து தள்ள ஆள் இல்ல. எவ்வளவு நேரமானாலும் நம்ம வெங்கிக்கூட பேசிக்கிட்டிருக்கலாம். சனிக்கிழமைலதான் சார் ரொம்ப பிசியா இருப்பார். மத்த நாட்களில் தனியாதான் இருப்பார். போய் பேசிக்கிட்டிருக்கலாம்.
ஸ்ரீரங்கத்து ரங்கப்பெருமாள்
சீனிவாசப்பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு பிரகாரத்தை வலம் வருகையில் பாறையை குடைந்து குடவறை கோவில் இருக்கு. அதுக்குள் போனால், ஸ்ரீரங்கத்து ரங்கனையும், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளையும்,  சோளிங்கப்புரத்து யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம். 
சோளிங்கப்புரத்து யோக நரசிம்மர் 
காஞ்சிபுரத்து வரதராஜப்பெருமாள்
அமிர்தவல்லி தாயார்
எல்லா கோவில்களிலும் தல தீர்த்தம் கோவில் அருகிலேயே இருக்கும்.ஆனா இத்தலத்து புண்ணிய தீர்த்தமான பாகூ நதி இக்கோவிலிலிருந்து ஒரு கிமீ தூரத்திலிருக்கு.  வயல்வெளிகள் சூழ்ந்த இடமென்பதால் இயற்கை பேரழகு கொட்டிக்கிடக்கும்.    வைகானச ஆகம விதிப்படி அமைந்த வடகலை கோவில் இது. சித்திரைப் பவுர்ணமியில் கொடியேற்றத்தோடு  தொடங்கி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைப்பெறும்.  சித்திரை சுவாதியில் நரசிம்மர் ஜெயந்தி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி மூன்றாம் சனியன்று பெருமாள் கருடசேவை, ஐப்பசியில் தீபாவளி திருமஞ்சனம், கார்த்திகை தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தையில் காணும் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என விழாக்களுக்குக் குறையில்லை. மாத சுவாதி நரசிம்மருக்கும், திருவோணம் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் உகந்த நாள் என்பதால் அன்றைய தினமும் விசேச அபிசேக ஆராதனை உண்டு. 
கடன் தொல்லைக்கு மலையுச்சியில் உள்ள வெங்கடேசப் பெருமாளையும்,  பகை, பில்லி, சூன்யம் போன்றவை நீங்க லட்சுமிநரசிம்மரையும் சரணடைகிறார்கள். பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம்போல இங்கயும் கிரிவலம் வருவது வழக்கம். அதுக்காக, மலையை சுத்தி தார்ப்பாதை போட்டிருக்காங்க. இது மலைன்னு சொல்லுறதைவிட குன்றுன்னு சொல்லலாம். 

இந்த குன்றின்மீது, சரியாக சொல்வதென்றால் சீனிவாசப்பெருமாள் கோவில் இருக்கும் பாறையை குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் சிங்கமுகம்போல காட்சியளிப்பதால் இந்த மலைக்கு சிம்மாசலம்ன்னு பேரு.  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்  இந்த ஆலயம் இருக்கு. தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்  இக்கோவில் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில்  காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும் கோவில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆவணியாபுரம் கூட்டு ரோட்டில் சுமாரான ஹோட்டல் இருக்கும்.  அதனால, ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசியிலேயே சாப்பிட்டு வந்திடுங்க. இல்லன்னா கட்டுச்சோறு மூட்டை கட்டிக்கிட்டு வாங்க. இந்து அறநிலை துறைக்கட்டுப்பாட்டில் இருப்பதால் தினமும் மதியம் 50பேருக்கு அன்னதானம் நடக்குதுன்னு கேள்வி. கோவில் அருகில் சாதாரண நாட்களில் சோடாகூட கிடைக்காது. சுவாமிக்கு சார்த்த துளசிமாலை, அர்ச்சனை தட்டு மட்டுமே கிடைக்கும். 

பெருமாள் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்...

நன்றியுடன்,
ராஜி


Thursday, September 03, 2020

காலத்தால் அழிந்துவிட்ட பாண்டியன் அணைக்கட்டு - மௌன சாட்சிகள்

என்ற பதிவுக்கு ராஜி வரல, நாம ஏன் ராஜி பதிவுக்கு போகனும்ன்னு இதுவரை நீங்க  யாரும் நினைச்சதே இல்ல. கொஞ்சம் கேப் விட்டு வரும்போது உங்க வீட்டு பொண்ணா நினைச்சு என் பதிவுக்கு எல்லாரும் வந்திருக்கீங்க. அதுப்போல இனியும் வரனும். மகளுக்கு பேறுகாலம் நெருங்குது.. எறும்பு சேகரிப்பதுப்போல அவளுக்கும், வரப்போகும் சின்னஞ்சிறு உயிருக்கும் தேவையானதை சேகரிக்கும்  பிசியில் இருப்பதால் நேரம் கிடைக்கும்போது வந்து போடும் பதிவுகளுக்கு  ஆதரவு கொடுக்கனும்ன்ற நிபந்தனையோடு இன்றைய பதிவுக்குள் போகலாம்..

தழுவியமகாதேவர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பழையாற்றின் கரையோரமாக அடுத்த கோவிலுக்கு போகும்போது பழையாற்றுக்குப்பின் இருக்கும் வரலாற்றை பகிர்ந்துக்கொண்டே சென்றோம்.

Tuesday, September 01, 2020

சீராளம் - பாரம்பரிய சமையல்-கிச்சன் கார்னர்

 மகளுக்கு சீமந்தம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டி வந்தாயிற்று. அவள் இனிப்பா எதும் சாப்பிட மாட்டா. சத்தானதுன்னு ராகி புட்டு, ராகி வடை, முருங்கைக்கீரை தோசை, கேரட் ஜூஸ், உருளை கட்லட்ன்னு செஞ்சு கொடுத்தாலும்  அவளோட விருப்பமெல்லாம்  குக்கரில் செய்யாத வெண்பொங்கலும் சாம்பாரும்... மாலை நேரத்திற்கு காரமா சீராளம், அரிசி வடைதான்.  முன்னலாம் சிப்ஸ், பப்ஸ்ன்னு சாப்பிடுவா. இப்ப அதுலாம் கொடுக்கக்கூடாதே... 

Friday, August 21, 2020

பக்தர்களின் நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி பாஷாண லிங்கம் - புண்ணியம் தேடி

 ஆன்மீகபூமியான இந்தியாவில்  ஏகப்பட்ட புண்ணிய தலங்கள் உள்ளது. அவை,  ஒவ்வொன்றும்  தனக்குள் ஒரு அற்புதத்தை ஒளித்து வைத்திருக்கு. ராமர் பூஜித்தது, சிவனை சக்தி எரித்தது, முருகன் வதம் பண்ணியது, பக்தனுக்கு அருளியது, மிகப்பெரியது,  தங்கத்தால் இழைத்தது, வருடத்திற்கொருமுறை, ஒருநாள் மட்டுமே திறக்கும் கோவில்ன்னு பலப்பல அதிசயங்களை கொண்ட கோவில்கள் பலதை நாம கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம்.. இன்னிக்கு பதிவில் பார்க்க போகும் கோவிலும் அதுமாதிரி வித்தியாசமான கோவில்தான்.

Friday, August 14, 2020

தழுவிய மகாதேவர்கோவில்- வடசேரி -புண்ணியம் தேடி ஒருபயணம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல மகாதேவர் கோவில்கள் இருந்தாலும் அதில் தாணுலிங்கம்தழுவியலிங்கம்பூதலிங்கம் போன்ற ஆலயங்கள் இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவதலங்களாகும். தாணுலிங்கம்சிவதாணுபூதலிங்கம்ன்ற பேர்கள் குழந்தைகளுக்கு சூட்டுவது இம்மாவட்டாத்தாரின் வழக்கம். 

Tuesday, August 11, 2020

மகாபலிபுரம் - அன்றும்-இன்றும் - மௌன சாட்சிகள் பாகம் -2

அன்றைய தினம்  பெளர்ணமி. வானவெளியின் நீலப்பரப்பில் முழு நிலா சிறு களங்கமுமின்றி தன் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் கண்சிமிட்டும் விண்மீன்களின்  மினுமினுப்பு சற்று குறைந்துதான் காணப்பட்டது. பல்லவ மன்னனான முதலாம் மகேந்திர வர்மனும், அவனின் மனதுக்கினிய தலைமை சிற்பியான ஆயனாரும் மெல்லிய கடற்காற்றை எதிர்கொண்டு அந்த மண்ணில் உலவிக்கொண்டு அந்த ஏகாந்தத்தை அனுபவித்து கொண்டிருந்தினர். சற்று  தூரத்தில் தெரிந்த  குன்றிலிருந்த கற்கள் ரதமாகவும், கோவிலாகவும், விஷ்ணுவாகவும், சிவனாகவும்,  யானையாகவும், குரங்கு இன்னபிற உயிரினமாகவும்..,  பல்லவ மன்னனுக்கு  தோன்றியது. பல்லவ மன்னன் தனக்குள் தோன்றிய கற்பனையை ஆயனாரிடம் சொல்ல மகாபலிபுரம் உருவானது.. 

Saturday, August 01, 2020

அதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்


இன்னிக்கு ஆடி மாசம் பதினெட்டாம் நாள். பதினெட்டு என்பது வெற்றியை குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வதங்கள். பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், குருஷேத்திர போர் நடந்தது 18 நாட்கள், மகாபாரத போரில் ஈடுபட்ட சைனியங்களின் எண்ணிக்கை 18,  சபரிமலையின் படிகட்டுகள் 18.   போகர், அகத்தியர், உள்ளிட்ட புகழ்பெற்ற சித்தர்கள் 18,  நம்மை நல்வழிப்படுத்தும் திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை, உட்பட 18 நூல்களை பதினெண்கீழ்கணக்கு என சொல்றோம். மெய் எழுத்துகள் 18... இப்படி பதினெட்டுக்கென பல சிறப்புகள் இருக்கு. அந்த வரிசையில் ஆடி மாதம் 18ம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகைக்கும் ஆடிப்பெருக்குன்னு பேரு. இந்த நாளில் ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம்ன்னு அழைப்பாங்க.  

அம்பிகையின் மகிமையை விளக்கும் ஸ்ரீமத் தேவிபாகவதத்தில், இரண்டு காலங்களை யமனுடைய கோரைப்பற்கள் என வியாசர் கூறியிருக்கிறார். அதில் ஒன்று கடும் காற்றடித்து மழை கொட்டத் துவங்கும் காலமான தட்சிணாயண காலம்.  அடுத்தது, வெயில் வீசிக் கொளுத்தத் தொடங்கும் காலமான உத்தராயண காலம். வெயிலில்கூடத் தப்பிடலாம். ஆனா, மழைக்காலத்தில்?! அதுவும் புதுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, அந்தப் புது நீர் பல வகையான நோய்களை வரவழைச்சுடும். அதன் காரணமாகவே தட்சிணாயண காலத் தொடக்கமான ஆடி மாதத்தில் அம்பிகைக்கு (காப்பவள் தாய்தானே!) விசேஷமான வழிபாடுகள் நடத்தப்படுது. அதிலும் ஆடி 18 மிக விசேசமானது. அன்றைய அம்மனை வழிப்பட்டு குடும்ப நலனுக்கும், தாலி பாக்கியம் வேண்டியும் மாங்கல்ய சரடை மாற்றிக்கொள்வர்.
தாயை பழித்தாலும் தண்ணியை பழிக்காதன்னு நம்மூர்ல ஒரு பழமொழி உண்டு. இதோட அர்த்தம் நாம சொல்லுற மாதிரி அம்மாவை கடுஞ்சொல்லால் திட்டினாலும், தண்ணியை திட்டாதன்னு கிடையாது. தாயை அசிங்கப்படுத்தினாலும், அவளை கவனிக்காம விட்டாலோ அல்லது அவள் அழிவுக்கு காரணமா இருந்தால் தாய் மட்டும் இல்லன்னா அவளோடு சேர்ந்து அவள் குடும்பம் மட்டுமே  பாதிக்கும். ஆனா, தண்ணியை அசிங்கப்படுத்தி, கவனிக்காம விட்டு அதோட அழிவுக்கு காரணமானா நம் வம்சமே இல்லாம போகும். இந்த அர்த்தம் உண்மையா பொய்யான்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை....  
பொங்கி வரும் நீரினால் ஆற்றிலிருக்கும் கழிவுகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு, ஆறு சுத்தமாகிடும். அதுமாதிரி, மனதிலிருக்கும் அழுக்குகள் நீங்கவும், வாழ்க்கையிலிருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, குடும்ப நலனுக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளும் நாளே இந்த ஆடிப்பெருக்கு.

ஆடியும், விவசாயமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது. 'ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்' என, நம் முன்னோர் கணித்து 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது மானாவரி சாகுபடிக்காக சூரிய பகவானை வணங்கி வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்

புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இருபுறமும் லட்சுமிக்க்காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பதுதான் தாலி பெருக்குதல் வைபவம். முதன்முதலில் மஞ்சள்கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும்போது மங்களகரமான தாலியுடன், லட்சுமிக்காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் மரபு இருந்துள்ளது. புதிய திருமண தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலிக்கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.

ஆட்டனத்தி ஆதிமந்தி
சகல உயிர்களுக்கும் தண்ணிதான் உயிர் வாழ முக்கியம்ன்றதால நதியான தான் உயர்ந்தவள்ன்ற எண்ணம் காவேரியின் அடிமனசிலிருந்ததால், ஒருமுறை அகத்திய முனிவரை சந்திக்கும்போது காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்தார். நதி இல்லாமல் உயிரினம் எப்படி வாழுமென்பதால் தேவர்கள் அனைவரும், விநாயகரிடம் சென்று முறையிட்டனர். வினாயகரும் காக்கை ரூபத்தில் வந்து அகத்திய முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டதால் காவிரி தாய் மீண்டும் பூமியில் ஓடி சகல உயிர்களையும் வாழ வைத்தாள். மற்ற நதிகளைப்போல இல்லாம காவிரி புண்ணிய நதியாகும். காவிரி புனிதத்தன்மை பெற்று மக்களின் பாவத்தை எப்படி போக்குவதுன்னு இனி பார்ப்போம்.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி, நீராடி மக்களின் பாவம் அனைத்தும் கங்கையின் மீது சேர்ந்து பாவத்தின் பாரம் சுமக்க முடியாத அளவுக்கு போனது. தன்னுடைய பாவம் தீர என்ன செய்ய வேண்டுமென விஷ்ணுபகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு மகாவிஷ்ணு நீ காவிரியில் நீராடு. உன் பாவங்கள் நீங்கும் என யோசனை செய்தார்.  அந்த சமயம் கர்ப்பவதியாக இருந்த காவேரி, விஷ்ணுவின் யோசனையை கேட்ட்டு சந்தோசப்பட்டாள். பெருமானை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது. கர்ப்பிணியாக இருந்த காவிரி தாய்பெருமானை தரிசித்த நாளே ஆடிப்பெருக்காகும். அதேப்போல வருடா வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் அரங்கன். 
ராமனுக்கும், ,இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ராமன் கொல்லநேர்ந்ததுராமன் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தால் பலர் கொல்லப்பட்டதால் ராமனுக்கு பிரம்மஹத்திதோசம் பிடித்துக்கொண்டது.  இந்த தோசத்திலிருந்து தான் விடுபட என்ன செய்ய வேண்டுமென வசிஷ்ட முனிவரிடம் ராமன் கேட்டான்.  இந்த பாவத்திலிருந்தும், தோசத்திலிருந்தும் விடுபட காவிரியில் ஆடிப்பெருக்கு நாளில் நீராடினால் உன்னை பிடித்திருக்கும் தோசங்கள் நீங்குமென கூறினார் வசிஷ்டர். முனிவர் கூறியது போல ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராடி தன் பாவத்தை போக்கிக்கொண்டார்.  


இந்நாளில் சகோதரர்கள், தங்கள் சகோதரிகளையும், அவர்தம் கணவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்திட்டு, தங்களால் முடிந்த புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பூக்கள், நகை, பாத்திரமென சீர் செய்வர். சாதாரண மனிதனே இவ்வாறு சீர் செய்யும்போது , காவிரியை தங்கையாய் ஏற்றுக்கொண்ட ரங்கநாதர் சும்மா இருப்பாரா?!

தங்கைக்கு சீர் செய்ய யானைமீதேறி, சீர்வரிசை பொருளோடு அம்மா மண்டபத்தில் எழுந்தருள்வார். தங்கைக்கு சீராக தர புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பூ பழம் போன்றவற்றை யானை மீது கொண்டு வருவதாக புராணம் சொல்கிறது. அதன் நினைவாகவே இன்றும் சகோதரிக்கு சகோதரர்கள் ஆடிச்சீர் செய்வது.(எத்தனை பதிவு போட்டும்,எத்தனை கெஞ்சியும்,எனக்கு ஒருபயலும் ஒருஸ்பூன்கூட வாங்கிக்கொடுக்கல) 
ஆடி மாதத்தில் புண்ணிய நதியான காவிரி கர்ப்பவதியாக  இருப்பதால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து, மஞ்சள், காதோலை, கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பூ, பழங்கள், அரிசி, வெல்லம் வைத்து , அதோடு மஞ்சள் சரடையும் காவிரிக்கரையில்  வைத்து தீப ஆராதனை செய்து காவிரியை பூஜிப்பர்.
அம்மன் கர்ப்பவதி என்பதால் அவள் நாவுக்கு சுவையாய் புளிசாதம், எலுமிச்ச சாதம், மாங்காய் சாதம், ஊறுகாய், வடை, பாயாசம், கற்கண்டு சாதம், சர்க்கரைபொங்கல்ன்னு விதம் விதமா கொண்டு வந்து நைவேத்தியம் செய்து மத்தவங்களுக்கு கொடுத்து குடும்பத்தோடு காவிரிக்கரையில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

திருமணமான பெண்ணுக்கு, தாலி கோர்த்துக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாங்கல்யம் பெண்ணின் கழுத்தில் இணையும் சமயம், மூத்த சுமங்கலிகள், அப்பெண்ணை  இல்லறம் நல்லறமாகட்டும் என்றும், இக்கயிறுப்போல தம்பதிகள் பிரியாமல் இருக்கட்டும் என்றும் வாழ்த்துவார்கள். ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள்.  அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைபாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். ஆற்றங்கரையை அடைய மூன்று மணி நேரமாகும்.  


ஆற்றங்கரையில் தூய்மையான ஓரிடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும்.... பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.  வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன.  இப்போது அவள் மசக்கையாக இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான், இவையெல்லாம் செய்யப்படுகின்றன. அதேசமயத்தில் சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள். தெருவெங்கும் அகல் விளக்குகள் மிதந்து வருவதைப் போல இருக்குமாம்.


அட்சய திருதியை மட்டுமில்லாம இன்றைய நாளும் நகைகள் வாங்க உகந்தது.(லாக் டவுன், மந்தமான பணப்புழக்கம், கட்டுக்கடங்காத தங்க விலை உயர்வு..ன்னு இருக்கும் இக்கட்டான இச்சூழலில் இந்த பதிவை காட்டி யாரும் தங்கம்  வாங்கி தரச்சொல்லி வூட்டுக்காரரை இம்சிக்காதீங்க) நகைகள் மட்டுமில்லாம, வீட்டு உபயோகபொருட்கள் வாங்கவும், புதுத்தொழில் தொடங்கவும் இந்நாள் சிறந்தது. ஆடிமாதத்தில் புதுத்தொழில் எதும் தொடங்கப்படுவதில்லை. ஆனா, ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்கு. இந்நாளில் செய்யப்படும் எதுமே பல்கிப்பெருகும். அதனால, பொருள்தான் வாங்கனும்ன்னு இல்ல. தான தர்மங்களும் செய்யலாம். அனைவரையும் வாழ வைக்கும் காவிரித் தாயை வழிபட்டு நன்றி செலுத்துதல், குடும்ப ஒற்றுமை, ஊர் ஒற்றுமை, குதூகலமான வாழ்வு ஆகியவை மக்களிடையே பரவுவதற்கு ஆடிப்பெருக்கு விழா தூண்டுகோலாக இருக்கிறது. இனியேனும், தண்ணீருக்கு மரியாதை கொடுப்போம். ஆறுகளைச் சுத்தமாக்குவோம். ஆடிப்பெருக்கன்று பழைய களை கட்டட்டும்!
கல்கியின்  பொன்னியின் செல்வன் கதை தொடங்குவது இந்நாளில்தான். ராஜராஜசோழன் பெருமை இருக்கும்வரை வந்தியத்தேவனின் புகழும் மறையாம இருக்கும். அதேப்போல, அந்நிய ஆட்சியை எதிர்த்தும், தமிழர் நிலத்தை தமிழரே ஆளும் பொருட்டும் போர் புரிந்து, பல போர்களில், வெள்ளையனை ஓட ஓட விரட்டியடித்த தீரன் சின்னமலை, அவர் தம்பி மார்கள் தம்பி, கிலோத்தர் மற்றும் வீரத் தளப‌தி கருப்பன் சேர்வை தூக்குக்கயிற்றை முத்தமிட்ட தினமும் இன்றுதான். அட்சய திருதியை விட இன்னாளில் நகை, பொருட்கள், தொழில் தொடங்க நல்ல நாள். ஏன்னா பெருக்குதல், சுத்தம் செய்தல் என பொருள்படும். 
இந்த ஆடிப்பெருக்கு நாளில் பிள்ளைகள் சப்பரமிடுதலும் ஒரு சடங்கு.  எங்க ஊரில் ஆறே இல்லன்னு சொன்னாலும் சரி, இல்லை எங்க ஊரு ஆறு மாதிரி தண்ணியே இல்லன்னாலும் ஒன்னும் செய்யமுடியாது. அதனால், அவரவர் இல்லத்தில் இருந்தபடியே காவிரித்தாயை மனசில் நினைச்சுக்கிட்டு இந்நாளை மகிழ்ச்சியான நாளாய் மாற்றுவோம். அப்படியே இப்படியொரு அசாதாரண சூழல் இனிவரும் எந்த தலைமுறையும் சந்திக்கக்கூடாதுன்னும் வேண்டிப்போம்.

நன்றியுடன்,
ராஜி

Friday, July 31, 2020

இந்திய கணவன்மார்கள் தினமா இன்று?! -வரலட்சுமி நோன்பு ஸ்பெஷல்


கல்யாணத்தப்போ என் கால்ல விழுந்தது. அதுக்கப்புறம் என் பொண்டாட்டி என் கால்ல விழவே இல்லன்னு  புலம்பும் ஆண்கள் நிறைய உண்டு. ஆனா, ஒருசில சமுகத்தாருக்கு இந்த ஏக்கம் வருடத்துக்கு ஒருமுறை தீரும். ஒரு சில ஆண்களின் ஏக்கத்தை தீர்க்கும் நாள் வரலட்சுமி விரதமாகும்.  இன்றைய தினம் , வீட்டுக்காரர், குழந்தை, குடும்பம்லாம் நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு விரதமிருந்து அம்பாளை கும்பிட்டு வீட்டுக்காரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் நன்னாளே இந்நாள். வெள்ளைக்காரன் பாதர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு கொண்டாடுனா கிண்டல் பண்ணுறோம். ஆனா, நாம புருசனுக்காக கொண்டாடும் இந்த பண்டிகையை கிண்டல் செய்யமாட்டோம். வரலட்சுமி நோன்பை இந்தியாவின் ஹஸ்பண்ட் டேன்னு சொல்லலாமோ?!
Raja Ravi Varma - Collections - Google+

பத்ரச்வரஸ்ன்ற மன்னன் சிறந்த விஷ்ணுபக்தன். அவன் மனைவி சுரசந்திரிகா.  இவர்களின் மகள் சியாமபாலா. சுரசந்திரிகா இயல்பிலேயே ஆணவம், தலைச்செருக்கும் மகாராணியென்ற மமதையும் கொண்டவள். ஆனால் சியாமபாலாவோ தாய்க்கு நேர் எதிரான குணம் கொண்டவள். மிகுந்த அன்பு கொண்டவள். மனிதரை மதிக்கும் குணம் கொண்டவள். சியாமபாலாவை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்து கொடுத்தனர். காலங்கள் ஓடின.   ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி வேடத்தில் பத்ரச்வரஸ் அரண்மனைக்கு மகாலட்சுமி வந்தாள். அவளை யாரோ என்று கருதிய சுரசந்திரிகா அரண்மனையைவிட்டு விரட்டி அடித்தாள்
சுரசந்திரிகா அரண்மனையை  விட்டு அகன்ற மகாலட்சுமி நேராய் சுரசந்திரிகாவின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். தாயைப்போல உதாசீனப்படுத்தாமல்  கர்ம சிரத்தையுடன் கேட்டு, பயபக்தியுடன் வரலட்சுமி பூஜையை செய்து வழிப்பட்டாள். விரதத்தின் மகிமையால் மலைப்போல செல்வம் குவிய துவங்கியது.. மக்கட்செல்வமும் பெற்றாள். பெற்றோர் வறுமையில் இருப்பதை அறிந்த சியாமபாலா ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அனுப்பித்தாள்.  அவள் அனுப்பி வைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே! அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம்,  அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே   ஒரு பானை தங்கமும் கரியாக மாறி விட்டது!! இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சியாமபாலா என்ன ஏதுவென்று விசாரிக்க, மூதாட்டியாய் வந்த மகாலட்சுமியை விரட்டியடித்த விவரத்தினை அறிந்துக்கொண்டாள். தாயிடம் விவரத்தினை சொல்லி, சுரசந்திரிகாவையும் வரலட்சுமி விரதம் இருக்க சொன்னாள். சுரசந்திரிகாவும் மனம் திருந்தி வரலட்சுமி விரதத்தினை முறையாக கடைப்பிடித்தாள். இழந்த செல்வத்தினையும் திரும்ப பெற்றாள்.

முன் ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள்,  நீங்கி நாம் நலமோடு வாழ தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் . ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.
வீடு வாசலை சுத்தம் செய்து, வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு மண்டபம் அமைத்து, ஒரு மனையில் கோலம் போட்டு,  லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம்  வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால் கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய், பச்சை கற்பூரம், வாசனை திரவியங்கள் சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், சுண்டல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ஒருமுறை பார்வதியும், பரமசிவனும் சொக்கட்டான் விளையாடி கொண்டிருந்தனர். அவ்விளையாட்டுக்கு பரமசிவனின் பணிப்பெண்ணான சித்திரநேமி என்ற தேவர்குலப்பெண் நடுவராய் இருந்தாள். ஆட்டத்தின் முடிவில் பரமசிவன் வெற்றி பெற்றதாய் அறிவித்தாள். தன் எஜமானுக்கு சாதகமாய் சிவன் வெற்றி பெற்றதாய் சித்திரநேமி மீது கோவம் கொண்ட பார்வதிதேவி, சித்திரநேமிக்கு தொழுநோய் வருமாறு சபித்தாள். தன்மீதுள்ள பாசத்தால் சித்திரநேமி அப்படி நடந்துகொண்டாள், அவளுக்கு சாபவிமோசனம் கொடு என பரமசிவன் பார்வதிதேவியை சாந்தப்படுத்தியபின், தேவ கன்னிகைகள், எப்போது குளக்கரையில் வரலட்சுமி விரதமிருப்பார்களோ, அப்போது உன் சாபம் நீங்குமென சொன்னாள். சித்திரநேமி பூமிக்கு வந்து, யாருமில்லாத ஒரு குளக்கரையில் தன் வாழ்நாளை கழித்து வந்தாள். அக்குளக்கரைக்கு தேவக்குல பெண்கள் வரலட்சுமி விரதமிருக்க வந்தனர். அவர்கள் வரலட்சுமி விரதமிருப்பதை கண்டதும் சித்திரநேமியின் சாபம் நீங்கியது. அன்றிலிருந்து சித்திரநேமியும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கலானாள். 

உற்றார், உறவினர்கள், அக்கம் பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலா வல்லி மாலை, லலிதா சகஸ்ர நாமம், லட்சுமி காயத்ரி போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும் வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும்.

பக்தியோடு  நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் மாதிரியான அன்னதானம் செய்யலாம். . எளியோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தர, சாருமதி கனவில் தோன்றி, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்க அறிவுறுத்தினாள். இறை வழிப்பாட்டோடு, கணவனையும், மாமனாரையும், மாமியாரையும் சேர்த்து வணங்கி நீண்ட ஆயுளோடு, செல்வ செழிப்புடனும், சுமங்கலியாய் வாழ்ந்தாள். சாருமதியின் செயல்பாட்டை பொருத்தே இன்றும் விரதமிருப்பவர்கள்  கணவன், மாமியார், மாமனார் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவதும் உண்டானது..

வெறும் செல்வச்செழிப்புக்கு மட்டுமில்லாம மாமனார், மாமியார் உறவு மேம்படவும் இவ்விரதம் வழிவகை செய்யுது.  ஆன்மீக காரணங்களுக்காகவும், செல்வத்துக்காகவும் நோன்பு இருக்கோமோ இல்லியோ! மாமியார், மாமனார் மனசு மகிழவும், புகுந்த வீட்டாரின் அன்பு கிடைக்கவும், கணவன் நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்கவும் விரதம் இருக்கலாமே!விரதம் இருக்கும் முறை..
வீட்டை சுத்தப்படுத்தி கோலமிட்டு, செம்மண் இட்டு, வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் எழுப்பி, ஒரு மனைப்பலகைமீது  சந்தனத்தால் ஆன உடல் செய்து அம்மன் முகம் வைத்து வரலட்சுமியினை அதில் எழுந்தருள செய்ய வேண்டும். அம்மனுக்கு மஞ்சள் நிற புடவையை கட்டவேண்டும். அம்மனை தாழம்பூ கொண்டு அலங்கரிக்க வேண்டும்.  சிலைமுன் தலைவாழையிலை பரப்பி, அதில் படி பச்சரிசி நிரப்பி, அரிசியின்மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொற்காசுகள், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைக்க வேண்டும்.  அவரவர் வசதிக்கேற்ப ஒரு செம்பினை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு,  அதில் நீர் நிரப்பி, மாவிலை வைத்து அதில் முழு தேங்காயினை வைத்து அரிசிக்கு நடுவில் வைக்கனும்.  கும்ப பூஜை, கணபதி பூஜை முடித்து அஷ்டலட்சுமி பூஜை செய்ய வேண்டும், அருகம்புல்லினை கொண்டு பூஜை செய்வது நலம். பூக்களை கொண்டும் பூஜை செய்யலாம்.. அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லனும். வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், ஜாக்கட் பிட், சீப்பு, கண்ணாடி , வளையல் என அவரவர் வசதிப்படி கொடுக்கலாம். அரிசி பாயாசம், கொசுக்கட்டை, அதிரசம் மாதிரியான நைவேத்தியம் செய்ய வேண்டும். பூஜை முடிஞ்சதும் பூஜையில் வைத்திருக்கும் கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டும். கலசத்தினை அரிசி இருக்கும் பாத்திரத்தில் வைக்கவனும். இப்படி செய்யுறதால் அன்னப்பூரணி அருள் கிட்டுமாம். லட்சுமி சிலை செய்ய பயன்படுத்திய சந்தனத்தை கிணறு அல்லது ஓடும் நீர்நிலைகளில் கரைச்சுடனுமாம்..

ஆங்.. முக்கியமான ஒரு விசயத்தினை சொல்ல மறந்துட்டேன். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசி வாங்கனுமாம். முக்கியமா வூட்டுக்காரர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கனுமாம். அதனால், சகோதரர்களே! இந்த நாளை மிஸ் பண்ணிடாம சீக்கிரமா குளிச்சு முடிச்சு ரெடியா இருங்க. மாமா ரெடியாகிட்டாரான்னு கேக்குறீங்களா?! ஹே! ஹே! ஹேய்ய்ய்ய்.. குறிப்பிட்ட சில இனத்தவர் தவிர மத்தவங்க வீட்டில் ஊர்பக்கம் வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கமில்லாததால் உம்ம்ம்முன்னும், நான் ஜம்முன்னும் இருக்கோம்...

அனைவருக்கும் வரலட்சுமி விரத தின வாழ்த்துகள்..

நன்றியுடன்,
ராஜி.