Saturday, April 29, 2017

காமெடி சேனல் நிகழ்ச்சிகளில் நடக்கும் கூத்து - கேபிள் கலாட்டா

அது ஒரு பெயிண்ட் விளம்பரம்.  பெயிண்ட் அடிச்சா வீடு அழகா இருக்கும், மழை வெயிலுக்கு பல வருசம் தாங்கும்ன்னு சொல்றதுதானே வழக்கம். இந்த பெயிண்ட் விளம்பரத்துல கெட்ட காத்தை சுத்தம் செஞ்சு நல்ல காத்தாக்குமாம். ஒரு   பெயிண்ட் எப்பிடிடா காத்தை சுத்தம் பண்ணும்?! உங்க அக்கப்போருக்கு அளவேயில்லையா?!



காதலிக்கும்போது வாடா, போடான்னு பேசுறது சகஜம். கல்யாணத்துக்கு பிறகு காதலிச்சவனையே கைப்பிடிச்சாலும் வாடா போடான்னு பேச மாட்டாங்க. ஆசைக்கு தனிமைல இருக்கும்போது வேணும்ன்னா டா போட்டு பேசுவாங்க.   சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி தன் புருசனான சரவணனை டா போட்டுதான் பேசுது. அதும் சரவணன் அப்பா, அம்மா, தாத்தான்னு மொத்த குடும்பத்து முன்னாடியும் கூப்பிடுது. மீனாட்சியை கண்டாலே பிடிக்காத, எல்லாத்துக்கும் குறை சொல்ற அவ மாமனாரும் இதுக்கு மறுப்பு சொல்றதில்ல.  அதேப்போலதான் தெய்வ மகள் சீரியல்லயும் மாமனார் மாமியார் முன்னாடியே வூட்டுக்காரரை பேர் சொல்லி கூப்பிடுறது...



காமெடி சேனல்களில், காமெடி நிகழ்ச்சிகளில் வரும் தொகுப்பாளர்களுக்கு எது காமெடின்னு கொஞ்சம் கிளாஸ் எடுத்து அனுப்புங்கப்பா. எதிர்த்து பேசுறதும், ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்குறதும், சத்தமா பேசுறதும்தான் காமெடின்னு யாரோ இவங்க ஆழ்மனசுல பதிய வெச்சுட்டாங்க போல.  எரிச்சலா இருக்கு.  அதும் விஜய் டிவில ஜாக்குலின், பிரியங்கா சிரிக்குற சிரிப்பிருக்கே. யப்ப்ப்ப்ப்பா முடில.



நியூஸ் 7ல  திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணிக்கு ‘என்ன படிக்கலாம்.. எங்கு படிக்கலாம்’ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இது 10, ப்ளஸ் டூ பரிட்சை எழுதியிருக்கும் மாணவர்களுக்கு பேருதவியா இருக்கும். மத்திய மாநில அரசு கல்லூரிகள்,  பட்ட மற்றும் பட்டய படிப்புகள் பற்றிய சந்தேகங்கள் இந்த நிகழ்ச்சியின் தெரிந்துக்கொள்ளலாம். இது மட்டுமில்லாம கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, நுழைவுத்தேர்வுக்குண்டான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி எங்கு நடக்குது மாதிரியான பயனுள்ள தகவல்களை இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம். நேயர்களின் கேள்விகளுக்கு தொலைக்காட்சி வாயிலாக பதில் சொல்றாங்க. இந்நிகழ்ச்சியை மறுநாள் காலைல மறு ஒளிபரப்பும் செய்றாங்க.



டிஸ்கவரி, அனிமல் பிளேனட், நேஷனல் ஜியாகரபி மாதிரியான உலக அளவில் பிரபலமான சேனல் ‘டிராவல் எக்ஸ்பி’ ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பாகி வந்த இந்த சேனல் இப்ப தமிழ்லயும் ஒளிப்பரப்பாகுது. ’கிரேஸி புட்ஸ்’ன்ற தலைப்புல இந்திய சமையலை ஒளிப்பரப்புறாங்க. இந்தியாவின்  ஊர் சார்ந்த உணவுகளையும் ஊர் பெருமைகளையும் சொல்றாங்க.

கிரிக்கெட் சீசன்ங்குறதால ரிமோட் வீட்டு ஆண்கள் வசம். அதனால, டிவி நிகழ்ச்சிகளை அதிகமா பார்க்க முடில..

திங்கள் ஐஞ்சுவை அவியலில் சந்திப்போம்...
நன்றியுடன்...
ராஜி.


Friday, April 28, 2017

நல்லுதவி தினமாய் கொண்டாட வேண்டிய நாளை தங்கம் வாங்கி கொண்டாடுவதா?!

இறைவனை வழிபாடு செய்யவும், தானம் தர்மம் செய்யவும் நல்ல நாள் நேரம் செய்ய தேவையில்லைதான் எப்போதும் நல்வழியில் செல்பவர்களுக்கு.... ஆனா தீய வழியில் செல்பவர்களுக்கு நாள், கிழமைன்னு ஒதுக்கி வெச்சாலாவது நல்வழியில் செல்வாங்கன்னுதான் விரதநாட்கள் உண்டாச்சு. ஆனா, அந்த நாட்கள் எதுக்கு உருவாச்சுன்னே அரைகுறையா புரிஞ்சுக்கிட்டு கொண்டாடப்படும் விரதநாட்களில் ’அட்சய திரிதியை’க்கு முக்கிய இடமுண்டு.
Akshaya Tritiya GIF
அட்சயம் என்ற சொல்லுக்கு வளர்தல் என்று பொருள். அன்றைய தினம் செய்யப்படும் எல்லா விசயமும் பல்கிப்பெருகும் என்பது ஐதீகம். அதனால, அன்னிக்கு என்ன நல்ல விசயம் செய்யலாம்ன்னு யோசிக்காம என்ன பொருள் வாங்கலாம்ன்னு கடைகளை நோக்கி சில வருசங்களாய் படையெடுக்குது இன்றைய சமுதாயம். தங்கம் விலை தாறுமாறாய் இருக்கும் இக்காலகட்டத்தில் கடன் வாங்கியாவது தங்கம் வாங்க துடிக்குறாங்க நம் மக்கள்.

आखिर क्यों है अक्षय तृतीया का दिन हिंदुओं के लिए बेहद खास...
அட்சய திரிதியை எப்படி உருவாச்சு, என்னென்ன செய்யலாம், அதன் பலன், இந்நாளின் சிறப்புகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க.


சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாள் மிகப்புனிதமானது. அன்று செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்பதால் வேதகாலங்களில் சான்றோர்கள் அட்சயத் திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், தான தருமங்கள் செய்தனர். அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் விற்பனையை தாறுமாறாய் உயர்த்த சொல்லல.
Karna:
அட்சய திருதியை தினம் உருவான கதை...
பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீ யுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர் என்ற முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்களை கண்டதும் காலில் விழுந்து வணங்கி பணிவிடை செய்து தன் நிலையை எடுத்து சொன்னான். ராஜாதிராஜன் இன்று குடிசையில் வாழும் காரணத்தை தங்கள் ஞானத்திருஷ்டியில் கண்டனர். மன்னா! பத்து தலைமுறைகள் நீ வேடனாய் இருந்து பத்தாவது பிறவியில்கௌட தேசத்தின் காட்டில் இருக்கும்போது வழிப்பறியில் ஈடுபட்டும், முனிவர்களை இம்சித்தும் பல கொடுமைகளை இம்சித்தும் வந்ததன் பலனை இப்போது அனுபவிக்கிறாய். இவ்வளவு கொடுமை செய்தும் எப்படி மன்னனாய் பிறந்தேன் என வினவி நின்றான் பூரியசஸ்.
BHAGAVAD GITA {5.21 } बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम्‌ ।  स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ॥ 21॥ Such a person who is in union with the Supreme Being becomes unattached to external sensual pleasures by discov­ering the joy of the Self through contemplation and enjoys transcendental bliss. (5.21):
ஒருநாள் அவ்வழியே சென்ற இரண்டு வைசியர்கள் மற்றும் ஒரு அந்தணரையும் நீ அடித்து துன்புறுத்தி அவர்களிடம் கொள்ளையடிக்க பார்த்தாய். அந்தணர் கொண்டு வந்த செல்வங்களோடு ஓடி விட்டார். பொருட்கள் மீதான ஆசையினால் அந்தணருக்கு மூர்ச்சை தெளிவிக்கும்பொருட்டு அவருக்கு தண்ணீர் கொடுத்தாய். அனறைய தினம் வைகாசி மாதம் திருதியை நட்சத்திரம். அன்றைய தினம் நீ அறியாமல் செய்த நீர்தானமே உன்னை ராஜாதிராஜனாய் பிறக்க வைத்தது என்றனர்.


தெரியாமல் செய்த தானத்திற்கே இத்தனை பலனா என்று யோசித்த மன்னன் விஷ்ணுவை வணங்கியபடி வெயிலில் வருவோருக்கு நிழலும், நீரும் தந்து வந்தான். சிலநாட்களில் அவனுக்கு உதவ அவனின் உறவினர்கள் முன்வந்தோடு அவன் நாட்டையும் அவனுக்கு திரும்ப கிடைத்து பதினாறு செல்வங்களோடு நல்லாட்சி புரியும்போது விஷ்ணு பகவான் அவன்முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென கேட்க, உன்னை மறவாத மனமும், மாறாத பக்தியும் வேண்டுமென வேண்டி நின்றான். அவ்வாறே வரமளித்து மன்னனுக்கு வைகுண்ட பதவி அளித்த நன்நாள் வைகாசி மாதம் மூன்றாம் நாளான அட்சய திருதியை நாள்.
Welcome to Onam@Saigon #welcome #vanakkam #suswagatam #xinchao #namaste #namastevietnam #swagatam #svagata #hoannghênh #onam #onamsaigon #thiruvathira #welcomegirls #vietnam #vietnamese #saree #vietnamesegirls #cultures #foreigncultures #expats #expatlife #students #indianexpats #keralatraditions #kerala #incredibleindia:
அட்சய திருதியையின் சிறப்புகள்...
கௌரி என்றழைக்கப்படும் பார்வதிதேவி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது இந்த நாளில்.
Tripura Sundari - Shri Vidya:
க்ருஷ்ணரின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தது இப்புண்ணிய நாளில்...இந்நாளில்தான் கிருத யுகம் உருவானது...
Parashuram. the 6th Avatar of Vishnu was born to end the atrocities on earth. His axe is well known and mentioned in Ramayana too.:
ஏழ்மையில் வாடிய தன் பால்ய நண்பனின் வறுமையை ஒருபிடி அவலில் போக்கிய நாளும் இதுவே....ன்றைய தினத்தில்தான் மகாலட்சுமி மகாவிஷ்ணு மார்பில் வாசம் செய்ய வரம் வாங்கினாள்....
மனிதர்களின் பாவத்தை போக்கும் கங்காதேவி பூமியில் உருவான நாளும் இந்நாளே....
Akhilandeshvari — The Goddess Never-Not-Broken:
பிரம்மனின் தலையை கொய்த சிவனின் பாவம் தீர பிட்சானனாய் உலகை வலம் வந்த வேளையில் அன்னப்பூரணி மாளிகையின் முன் பிட்சை கேட்க பிட்சை இட இட உணவு குறைந்துகொண்டே வருவதைக்கண்டு வேதனையுற்று தன் சகோதரனான விஷ்ணுவிடம் உதவிக்கேட்க மகாலட்சுமியின் அருளால் கிடைத்த பாத்திரத்தை அட்சயம் என்று சொல்லி தொட அது அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமானது. அட்சய பாத்திரம் உருவான நாளும் இதுவே.செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தன் செல்வம் என்றென்றும் நிலைத்து நிற்க மகாலட்சுமியை பூஜை செய்யும் நாளும் இதுவே
தேய்ந்து, வளரும் சாபத்தால் அவதிப்பட்ட சந்திரன் சிவனை சரணாகதி அடைய சிவனின் ஜடாமுடியில் மூன்றாம் பிறையாக இடம்பெற்றதும் இந்நாளே...
அட்சயதிருதியை அன்று செய்ய வேண்டியது...
மறைந்த முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்யலாம். முன் ஜென்ம வினைகள் தீரும்.
சுமங்கலி பெண்கள் பூஜை செய்து ஆடைகள் தானம் செய்யலாம். வஸ்திரதானம் செய்தால் பதவி உயர்வு கிடைக்கும். பசுக்களுக்கு ஒரு பிடி புல் கொடுக்கலாம். தங்கம்தான் வாங்கனும்ன்னு இல்ல. அரிசி, சர்க்கரை, உப்பும்கூட வாங்கலாம். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம் நம்பிக்கை.
அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புகள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும், தானியங்களை தானம் செய்தால் விபத்துகளிலிருந்து காப்பாற்றும், கால்நடைகளுக்கு உணவளித்தால் வாழ்வு வளம்பெறும்.
அட்சய திருதியை அன்று நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து கும்பம் தயாரிக்கவேண்டும். கும்பத்தினில் காசுகள் போடலாம் அல்லது பச்சரிசியில் காசுகள் போடலாம்.
குத்துவிளக்கு ஏற்றி வைத்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். கலசத்தின் அருகில் படியில் அல்லது உழக்கு அல்லது டம்ப்ளரில் நெல் நிரப்பி வைத்து பூ பொட்டு . இன்றைய தினம் லட்சுமி, குபேரன், மகாவிஷ்ணு மூல மந்திரங்களை சொல்லி வழிப்படுதல் நலம். குசேலர் கதையினை படித்தலும் நலம் சேர்க்கும்.
கேபிள் கலாட்டாவில் நாளை சந்திப்போம்..
How To Clean And Polish Your Gold Jewelry At Home! #goldjewelry #dhanterasspecial:
நன்றியுடன்..
ராஜி.

Wednesday, April 26, 2017

க்ருஷ்ணருக்கு போட்டியாய் குழலூதிய ஆனாய நாயனார் - நாயன்மார்கள் கதைகள்


க்ருஷ்ணனின் புல்லாங்குழல் இசைக்கு புல், பூண்டு, மாடு, கன்று, கோபியர்லாம் மயங்கினர் என்பது உலகறிந்த சேதி. ஆனா, க்ருஷ்ணரல்லாத ஒருவரின் புல்லாங்குழல் இசைக்கு புல், பூண்டு, மாடு, கன்று மட்டுமல்லாது சிவனும் மயங்கி நின்றதோடு, தன் அருகிலேயே அவரை இருக்க செய்து அவர்தம் இசையை கேட்டு இன்றளவும் மகிழ்கிறார்ன்னு சொன்னா நம்புவீங்களா?!

ராவணனின் வீணை இசைக்கு மயங்கி அவன் கேட்ட வரத்தினை தந்தார் சிவப்பெருமான். ஆயனாரின் குழலிசைக்கு மயங்கி, எப்போழுதும் அவரின் இசையை கேட்டு மகிழ அவரை தம்மோடவே கைலாயத்துக்கு அழைத்து சென்றார்.   உடலை வருத்தி பக்தி செய்யாமல், சிவத்தொண்டு செய்யாமல் வெறும் இசையாலே நாயன்மார்கள் வரிசையில் இடம்பெற்ற  ஆயனாரின் கதைய தெரிஞ்சுக்கலாம் வாங்க...
Indian Village Boy Playing Flute - Wall Hanging (Poly Resin on Hardboard)):
சோழ நாட்டில் உள்ள ஊர் திருமங்கலம். அந்த ஊரில் ஆயர் குலத்தில் அவதரித்தார்  தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு, தன்னுடைய குலத்தொழிலான ஆவினங்களை மேய்க்க செல்வார். இறைவனின் பூசைக்கு பஞ்ச கவ்யத்தை வழக்கும் ஆவினங்களை பசு, காளை, கன்று என வகை வகையாக  பிரித்து மேய விட்டுவிட்டு புல்லாங்குழல் வாசிப்பார். அவர்தம் இசையில் ஓம் நமச்சிவாய எனும் திருநாமம் கமலும்.

ஆயர் குலத்தோர் இயல்பிலே புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவராய் இருப்பர். இவர்கள் இசை பசுக்காத்தலுக்குத் துணை செய்யும்.  இவ்விசையை கேட்டு குறிப்பிட்ட எல்லையை ஆவினங்கள் கடக்காது,. எல்லை கடந்த ஆவினக்கள் புல்லாங்குழல் இசைக்கேட்டு ஓடிவரும். அதுமட்டுமல்லாது மேய்ப்பவர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்காகவும் அமையும்.
Sarat Shaw:
ஒருநாள் திருநீறு அணிந்துக்கொண்டு ஆவினங்களுடன் முல்லை நிலத்திற்கு செல்கிறார். அப்பொழுது கார்காலம்.  முல்லை மலர் பூத்து நறுமணம் வீசுகின்றது. அங்கு பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்களை எல்லாம் பார்த்து அதனுள்ளே சிவப்பெருமானை காணுகின்றார். பக்தி பரவசமாகி புல்லாங்குழல் வாசிக்க துவங்குகிறார். ஐந்தெழுத்து மந்திரமான ’நமச்சிவாய’த்தை குழலோசையில் தருகின்றார். 

சுற்றுவட்டாரமெங்கும் குழலோசை எதிரொலிக்கின்றது. குழல்ஓசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நிற்கின்றன. இளங்கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நிற்கின்றன. அங்கே காணப்பட்ட எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நிற்கின்றன. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நிற்கின்றன. காற்றும், மலர்களும் கூட அசையாமல் நிற்கின்றன. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்கின்றது. தேவர்கள்கூட அங்கே வந்துவிட்டனர்.
Uma maheshwara Murti- Maniam Selvan:
இசைக்கு மயங்கி ஈரேழுலகமும் வந்தப்பின்னும் தில்லை நடராசப்பெருமான் வராமல் இருப்பாரா?! அப்பனும் அம்மையும்  ரிசப வாகனத்தில் காட்சியளiக்கின்றனர். உன் குழல் இசையை கேட்டு மயங்கினேன்.  என்றும் இந்த இசையின் சுகத்தை எனக்குத் தரவேண்டும். ஆகையால் எம்மோடு வா! என அழைக்க ஆயனாரும் இறைவனடி சேர்ந்தார்.

ஆயனார் திருவிளையாடல் நடந்த திருமங்கலம் என்ற திருத்தலம் லால்குடி ரயில் நிலையத்திலிருந்து பூவாலுர் வழியே வடமேற்கில் சுமார் 4கிமீ தொலைவில் உள்ளது.  சிவப்பெருமானை வணங்கி பரசுராமன் பரசு என்ற ஆயுதத்தை பெற்றார்.  இங்கு கோயிலினுள் உட்சுற்றில் வடமேற்கே ஆனாயர் சிவப்பேறு எய்திய இடமுண்டு. அங்கே நாயனாருக்கு தனிக்கோயில் உண்டு. நாயனார் கொன்றை மரத்தின் நீழலிலே நின்று புல்லாங்குழல் வாசிக்கும் பாவனையில் மிக அழகான சிற்பமும் உண்டு.

இவர்தம் குருபூஜை கார்த்திகை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் சகல சிவன் கோவிகளிலும் கொண்டாடப்படும்.

நாளைக்கு கிராஃப்ட் கார்னர்ல சந்திப்போம்..

This Shivratri Gift your loved ones, Idol of Lord Shiva made of Porcelain and 24 caret Gold plated!!! Only available at Ekaani. #happyshivratri #homedecor #lordshiva #ekaani:
நன்றியுடன்,
ராஜி

Tuesday, April 25, 2017

காய்ச்சலின்போது சாப்பிடும் சிகப்பு கொண்டைக்கடலை சாறு ரசம் -கிச்சன் கார்னர்

கொண்டைக்கடலைன்னு சொல்லப்படுற  மூக்குக்கடலையில் வெள்ளை மற்றும் சிவப்பு என ரெண்டு வகையுண்டு. ஒன்னு வெள்ளை கொண்டைக்கடலை. இதை ”சென்னா” ன்னும் சொல்வோம். இன்னொண்ணு நாம அதிகமா பயன்படுத்துற சிவப்பு கொண்டைக்கடலை. வெள்ளை கொண்டைக்கடலையவிட சிவப்பு கொண்டைக்கடலை அளவில் சின்னது, அதிகசத்தானதும்கூட. நாடு முழுக்க இது பயிர்விக்கப்படுது. சிவப்புக்கொண்டைக்கடலை உற்பத்தில இந்தியாதான் முதல் இடத்துல இருக்கு. இது தென்கிழக்கு துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்துச்சு. வெள்ளைக்கொண்டைக்கடலைக்கு முன்னாடியே சிவப்பு கொண்டைக்கடலை இந்தியருக்கு அறிமுகமாகிடுச்சு.  உலகம் முழுக்க பரவலா இந்த கொண்டைக்கடலை புழக்கத்திலிருக்கு.  இந்தியா மட்டுமில்லாம பாகிஸ்தான், வங்கதேசத்தில் அதிகமா பயிர் செய்யப்படுது.
பழுப்பும், கருப்பும் சேர்ந்த நிறத்திலிருக்கும் இந்த கொண்டைக்கடலைல அதிகம் புரதசத்து உள்ளது.  கொண்டைக்கடலையின் எல்லா நிலையும் பயன்பாட்டிலுண்டு. இதன் காய் பச்சையா இருக்கும்போதே வேகவைக்கப்பட்டு சேலட்டிலும், சாட் ஐயிட்டத்திலயும் வடநாட்டுல சேர்ப்பாங்க.  
சிவப்பு கொண்டைக்கடலையை பெரும்பாலும் சுண்டல் செய்து சாப்பிடுவாங்க. உப்புக்கடலையாயும் கடைகளில் விற்கப்படுது. சுண்டல்ன்னா இந்த கொண்டைக்கடலைதான் நினைவுக்கு வரும். மத்ததுலாம் இதுக்கப்புறம்தான். கேரளத்தில் புட்டுக்கு கடலைக்கறிதான் சைட் டிஷ்.  முளைக்கட்டிய கொண்டைக்கடலை சாலட்டா செய்யப்படுது. இந்த கடலையை வறுத்து பொடி செஞ்சு தண்ணி சேர்த்து கொதிக்க வெச்சு காஃபி, டீக்கு பதிலா குடிச்சா உடலுக்கு நல்லது.
இந்த கொண்டைக்கடலைல போலேட்டு மக்னீசியம் இருக்கு. இது ஹார்ட் அட்டாக் வர காரணமான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைக்க உதவுது. கர்ப்பிணிப்பெண்களுக்கு அத்தியாவசியமான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மைக்கொண்ட சாப்போனின் மாதிரியான வேதிப்பொருள் அதிகமாய் உள்ளது. வெள்ளைக்கொண்டைக்கடலையவிட சிவ் கொண்டைக்கடலைல நார்ச்சத்து அதிகம் இருக்கு. சர்க்கரையின் அளவு இதில் அதிகமிருக்குறதால நீரிழிவு நோய்காரங்களுக்கு மிகவும் நல்லது. கொண்டைக்கடலை வேக வெச்ச தண்ணில அதிகம் இரும்பு சத்து உண்டு. அதனால ரத்தசோகைய தடுக்கும்.  இதில் தாமிரம், மெக்னீசியம் செலேனியம், கொஞ்ச்சூண்டு துத்தநாகம்லாம் இருக்கு. 
 இது செரிமானகோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவுது.  முதிராத கொண்டைக்கடலைய வேகவெச்ச தண்ணிய குடிச்சா சீதபேதி சரியாகும்.  அதேப்போல சிறுநீர் அடைப்பை சரி செய்யும் குணமும் இந்த தண்ணிக்குண்டு. இளம் கொண்டைக்கடலை விதைகளுக்கு காமத்தை பெருக்கும் சக்தி உண்டு. கொண்டைக்கடலை செடிமேல வெள்ளைத்துணியை போர்த்தி அதன்மீது விழும் பனித்துளிய சேகரிப்பதற்கு ‘கடலை புளிப்பு’ன்னு சொல்லப்படுது. இந்த நீர் வாந்தி, செரிமான பிரச்சனையை சரி செய்யும் தன்மை கொண்டது.
இனி கொண்டைக்கடலை சாறு ரசம் வைக்குறது எப்பிடின்னு பார்ப்போம்..

தேவையானப் பொருட்கள்:
வேகவைத்த கொண்டைக்கடலை தண்ணி 
 காய்ந்த மிளகாய்
பூண்டு, 
தக்காளி,
மிளகு, 
சீரகம், 
புளி, 
பெருங்காயம்,
உப்பு, 
மஞ்சப்பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
கொண்டைக்கடலையை எட்டு மணிநேரம் ஊறவெச்சு, உப்பு போட்டு வேக வெச்சு தண்ணிய எடுத்துக்கோங்க.  வேறொரு பாத்திரத்தில்  புளியை ஊறவெச்சுக்கோங்க. 

மிளகாய், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், பூண்டை விழுதா அரைச்சுக்கோங்க.


ஒரு பாத்திரத்தில் அரைச்ச விழுதை கொட்டிக்கோங்க.
அதுல புளி கரைச்சு ஊத்தி, உப்பு, பெருங்காயம், மஞ்சப்பொடி சேர்த்து கொதிக்க விடுங்க.  
கொதிச்சு பச்சை வாசனை போனதும். கொண்டைக்கடலை தண்ணிய ஊத்தி நுரைக்கட்டி வரும்போது... 


கடுகு, கறிவேப்பிலை, கொ.மல்லி போட்டு தாளிச்சு கொட்டுங்க. 

காரம் கம்மியா இருந்தா காய்ந்த மிளகாயை தாளிப்புல சேர்த்துக்கோங்க. 

சுவையான ரசம் ரெடி.....

காய்ச்சலின்போது இந்த ரசத்தை சூடான சாதத்தில் சேர்த்து கரைச்சு சாப்பிட்டா நாக்கின் உணர்ச்சி நரம்புகள் பழையபடி வேலை செய்ய ஆரம்பிக்கும். ஃப்ரிட்ஜுக்கு வெளில இருந்தாலும் ரெண்டு நாளுக்கு நல்லா இருக்கும்.

நாளைக்கு ஆனாய நாயனார் பத்தி தெரிஞ்சுக்க வாங்க..
Shiva Linga Assembly for Abhisheka with Nandi:
நன்றியுடன்,
ராஜி.

Monday, April 24, 2017

ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசம் - ஐஞ்சுவை அவியல்


ஏனுங்க மாமா! ஜோசியம் பார்த்துட்டு வந்தேன். உங்களுக்கு நேரம் சரியில்லையாம். அதனால,  வியாழக்கிழமைல சுக்கிரனுக்கு வெள்ளை கொண்டைக்கடலை மாலை போட்டு  நவக்கிரகத்தை 9 சுத்து சுத்தி வரசொன்னாங்க மாமா. 

 பொதுவா நீ நவக்கிரகத்தை எப்படி வலம் வருவே?!

நேரா சனிப்பகவான் முன் நின்னு விளக்கேத்தி 9 முறை எப்பயும் போல சுத்திட்டு அதுக்கு எதிர்பக்கமா சுத்திட்டு வருவேன். ஏன் மாமா கேக்குறீங்க?!

சொல்றேன் இரு.  கோவிலை வலம்வருதல் என்பது  16 உபச்சாரங்கள்ல ஒன்னு. பிரதட்சணம்ன்னு பேரு. பொதுவா மூணுமுறை சுத்தினாலே இந்த பிரதட்சணம் முழுமையடையும்.   ஆனா, அங்க இருக்கும் தெய்வ உருவங்களுக்கும்  பிரதட்சணம் வருவதற்கும் சம்பந்தமில்லை. அதனால, 9 தெய்வங்களுக்கு ஒன்பது முறை பிரதட்சணம் வரனும்ன்னு கணக்கில்ல. அதேப்போல எதிர்வலம் வருவதும் தப்பு.  நவக்கிரகங்களின் திருவுருவங்கள் ஒரே மேலையில் ஒருங்கே இருக்குறதால தனித்தனியா சுத்தி வர முடியாது. அதனால ஒட்டுமொத்தமா மூணு முறை சுத்தினாலே போதும். நவக்கிரகத்தை பிரதட்சணம் வந்ததற்கான பலன் கிடைக்கும். அதனால, இன்னின்ன தெய்வத்துக்கு இத்தனை முறை பிரதட்சணம் வரனும்ன்னு சொல்றதுலாம் அந்தந்த தெய்வங்களின் பெருமைப்படுத்த உண்டாக்குனதே தவிர வேற ஒன்னுமில்ல. ஆனா, நேர்த்திகடனுக்காக கூடுதல் எண்ணிக்கையில்  பிரதட்சணம் வர்றது இதுல சேராது. மூணு முறை பிரதட்சணம் வந்தாலே போதும்ன்றது நவக்கிரகத்துக்கு மட்டுமில்ல எல்லா இறைவனுக்கும் பொருந்தும். 
ஓ இத்தனை விசயம் இருக்கா?! இனி இதுப்போலவே நவக்கிரகத்தை சுத்தி வரேன் மாமா.  கால்ல வெடிப்பு அதிகமா இருக்கு. பார்க்க அசிங்கமா இருக்கு. கூடவே வலிக்கவும் செய்யுது. இதுக்கு  மாமா என்ன செய்யலாம்?! 

.வாரம் ஒருநாள் சூடு பொறுக்குமளவுக்கு சுடுதண்ணிய பாத்திரத்துல ஊத்தி, அந்த  தண்ணில கொஞ்சம் டெட்டால், எலுமிச்சை சாறு, ஷாம்பு போட்டு கலக்கி ஒரு பத்து நிமிசம் ஊற வெச்சு ப்யூமிக்ஸ் கல்லு இல்லன்னா ஸ்கிரப்பர் போட்டு நல்லா தேய்ச்சு ஈரம் போக துடைச்சு வாசலின் இல்லன்னா பாதத்துக்குன்னு விக்குற க்ரீம் பூசி ஒரு மணிநேரம் ஊற விடலாம்.தினமும் படுக்கும்போது காலை கழுவி சுத்தமாக்கிட்டு கடுகு இல்லன்னா தேங்காய் எண்ணெய் பூசி காலைல எழுந்து கழுவி வரலாம்.  கால்ல வெடிப்பு வராம இருக்கனும்ன்னா பாதம் சுத்தமா இருக்கனும். மிதியடிகளை அடிக்கடி துவைக்கனும். வீட்டு தரையையும் சுத்தமா வெச்சுக்கனும். அடிக்கடி மருதாணியோடு மஞ்சளை சேர்த்து அரைச்சு பாதத்துல பூசி வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும். தினமும் பீச்சுக்கு போறவங்க அலைல கொஞ்ச நேரம் நின்னாலும் இந்த பிரச்சனை தீறும். இது எதுமே செய்யமுடியாதவங்க பாத்ரூம்ல சொரசொரப்பான கல்லை போட்டு வச்சு தினமும் குளிக்கும்போது அதுல தேய்ச்சு வந்தாலும் பித்த வெடிப்பு சரியாகும்.

டிப்ஸ்லாம் கொடுத்ததுக்கு நன்றி மாமா. அப்புறம் இன்னொரு பிரச்சன்பைக்கும்  அட்வைஸ் சொல்லேன். 

என்ன உன் பிரச்சனை?!

ஒன்னுமில்ல. எதிர்வீட்டு குட்டிப்பையன் கௌதம் நம்ம வீட்டுக்கு வருவான். அவன் அம்மாக்கும் எனக்கும் சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க். அதனால, அவனை இப்பலாம் வீட்டுக்கு அனுப்புறதில்ல. நமக்கு உரிமையான பொருள் இல்லன்னு புத்திக்கு தெரிஞ்சாலும் மனசுக்கு தெரிய மாட்டேங்குது. அவனுக்காக ஏங்குது. என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்களேன்.

இதுக்கு என்ன அட்வைஸ் சொல்ல. இது அட்வைஸ் சொல்லி தீரும் பிரச்சனை இல்ல. மனசு சம்பந்தப்பட்டது. அதுக்கு நிறைய சொல்லனும். ஆனா சிம்பிளா சொல்லனும்ன்னா யாருக்கும் உங்கள் உண்மையான அன்பை அவ்வளவு எளிதில் கொடுத்து விடாதீர்கள். அன்பை அவர்கள் ஏளனமாக பார்த்துவிடுவார்கள். ன்றதை ஃபாலோ செஞ்சாலே பாதி பிரச்சனை குறையும். சரி நீ சோகமா இருக்கே அதனால இந்த மீம்சை பாரு. ரிலாக்சாகும் மனசு.

இன்னிக்கு முழுக்க நீங்களே பேசிக்கிட்டிருந்தீங்க.  நான் கோவிலுக்கு போகனும் அதனால் ஒரு விடுகதைய சொல்றேன்.   நிலத்தில் நிற்காத செடி. நிமிர்ந்து நிற்காத செடி ..... அது என்ன செடி?!  யோசிச்சு வைங்க. கோவிலுக்கு போய் வந்து விடையை கேட்டுக்குறேன். கூடவே பிளாக்குல கொண்டைக்கடலை சாறு ரசம் எப்பிடி செய்யுறதுன்னும் பதிவை ரெடி பண்ணுறேன். பை பை...


Saturday, April 22, 2017

பொழுது போக்க டிவியா இல்ல பொழுதன்னிக்கும் டிவியா??!! - கேபிள் கலாட்டா


திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 7.30 வரையும்.. சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 6.45 முதல் 7 மணி வரையிலும் சன் டிவில ’நல்ல நேரம் பொறக்குது’ன்னு ஒரு நிகழ்ச்சி. வெறும் ராசிப்பலன் மட்டும் சொல்லாம பரிகார தலங்கள் பற்றியும், சித்தர்கள் பற்றியும் அழகான உச்சரிப்போடும், எளிய நடையில் ஜோதிடர் சிவக்குமார் சொல்றாரு.


நியூஸ் 7 சேனல்ல  ‘உணவே அமிர்தம்’ன்ற நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியானம் 2.30க்கு ஒளிப்பரப்பாகுது. தினமும் ஒரு ஆரோக்கிய சமையலை அறிமுகப்படுத்துறாங்க. அந்தந்த சீசனுக்கு தகுந்த    நம் பாரம்பரிய உணவுகளை எளிய பொருட்களை கொண்டு சமைக்கும் முறையை அழகா சொல்லிக்காட்டுறாங்க. நேயர்கள் கேட்கும் கேள்விக்கு சித்த மருத்­து­வர் செல்­வ­சண்­மு­கம்  பதில் சொல்லுறது கூடுதல் சிறப்பு.




உடை, உணவு, கேளிக்கை, அலங்காரப்பொருட்கள் போன்ற நமக்கு அத்தியாவசியமானதுக்கூட சிலருக்கு ஆடம்பரம். நூறு ரூபாய்க்கு நல்ல உடைகள் கூட வாங்கமுடியாத மக்கள் இன்னும் இருக்காங்க. அப்பேற்பட்ட சிலரை  மக்கள் டிவி தேடி கண்டுப்பிடிச்சு அவங்களோட ஆசையை ‘சின்ன சின்ன ஆசைகள்’ நிகழ்ச்சி மூலம் நிறைவேத்துது.  நமக்கு படிப்பினையையும் நெகிழ்வையும் ஒருசேற தரும் நிகழ்ச்சி இது. எனக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி. ஆங்க் சொல்ல மறந்துட்டேனே... இந்நிகழ்ச்சி ஞாயிறு காலை 10.30க்கு ஒளிப்பரப்பாகுது.



சன் லைஃப் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.30 முதல் 11 மணி வரையிலும் மதியம் 3 முதல் மாலை 6 மணி  வரையிலும் எஸ்.பி.பி, இளையராஜா, மனோ, சித்ரா, ஜானகி, ஜேசுதாஸ், தேவா போன்றவர்களின் எவர்க்ரீன் பாடல்களை ஒளிப்பரப்புறாங்க. கேட்டு ரசித்து மறந்த அரிதான பாடல்களை பார்த்து கேட்டு மகிழலாம்.



முன்னலாம் பொம்பளைங்களை வில்லியா போட்டுதான் சீரியல் எடுத்தாங்க. இப்ப பசங்களை வில்லன்ங்களா போட்டு சீரியல் எடுக்குறாங்க. ஜீ டிவில மாலை நேரத்துல ’மெல்ல திறந்தது கதவு’ன்னு ஒரு நாடகம். எல்.கே.ஜி படிக்குற பசங்களை மையமா வெச்சு போகுது.  ஒரு அஞ்சு வயசு பையன் அப்பாவோட லவ்வை கண்டுப்பிடிக்க ட்ரை பண்ணுறதும், அஞ்சு வயசு பொண்ணை கொல்ல பாம்பை ஏவுறதும், டான்ஸ் ஆடி அந்த பாம்பை இந்த குட்டி மயக்குறதும், சக மாணவி முதல் ரேங்க் எடுக்குறதை தடுக்க பிளான் பண்ணுறதும், டியூஷன் மாஸ்டர்கிட்ட  பாட்டி விடும் ஜொள்ளை கிண்டல் செய்யுறதுன்னும் ரொம்ப நல்ல விசயங்களை வெச்சு போகுது. சேனல் மாத்தும்போது பார்த்ததே இம்புட்டு விசயம். இன்னும் முழுசா பார்த்தா?!


சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 7 மணி முதல் 7.30 வரை தினமும் ஒரு ஆலயத்தை பத்தி ஒளிப்பரப்புறாங்க. தல வரலாறு, திருவிழாக்கள், அமைவிடம்ன்னு சொல்லுறதோடு சின்ன சின்ன வழிபாடு சம்பந்தமான குறிப்புகளையும் கொடுக்குறாங்க. 


பொழுது போக்க  தொலைக்காட்சி பார்க்குறது தப்பில்ல. ஆனா, பொழுதன்னிக்கும் தொலைக்காட்சியையே பார்க்கக்கூடாது. ஏன்னா நான் அப்பிடிதான். எனக்கு டிவி பார்க்கவே பிடிக்காதுப்பா. 

திங்கள் ஐஞ்சுவை அவியலில் சந்திப்போம் சகோஸ்..
நன்றியுடன்,
ராஜி.



Friday, April 21, 2017

பக்தியிலும் வைராக்கியமுண்டு - நாயன்மார்கள் கதைகள்

கடவுள் மனசுல இடம்பெற லட்டு, இனிப்பு பணியாரம், கார பணியாரம், அதிரசம், பஞ்சாமிர்தம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், மிளகு வடைன்னு எத்தனை விதமான நைவேத்யம் செஞ்சு படைச்சும் தலைக்கீழா நின்னும் கடவுள் மனசுல இடம் புடிக்க முடில.   ஆனா, வயக்காட்டுல விளையுற செந்நெல் சாதமும், செங்கீரையும், மாவடுவையும் படைச்சு கடவுள் மனசுலயும் நாயன்மார்கள் வரிசையிலயும் இடம் பெற்றார்.

அவர் கதைய இனி பார்ப்போம்...

சோழநாட்டு ஆதிக்கத்திற்குட்பட்ட கணமங்கலம் ஊருல வேளாளர் குலத்தில் பிறந்தவர் தாயனார்.  இவர்தான் அந்த வேளாளர் இனத்தவருக்கு தலைவர். சிறந்த சிவபக்தர்.  தினமும் செந்நெல் சாதமும்,  செங்கீரை கடையலும், மாவடுவையும் அவ்வூர் வாழ் சிவனுக்கு படைத்து அதை சிவனடியாருக்கு பரிமாறியப்பின்னே தானும், தன் குடும்பத்தாரும் உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தார்.

இறைவன் திரு உள்ளப்படி தாயனாரின் செல்வம் சிறிது சிறிதாய் குறைய தொடங்கியது. கொடிய வறுமை தன்னை ஆட்கொண்டபோதும் இறைவனுக்கு செய்யும் திருத்தொண்டை நிறுத்தவே இல்லை. வேளாளர் குலத்தலைவன் கூலிக்கு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போதும் தான் கொண்ட கொள்கையில் மாறாமல் நின்றார். கூலி வேலை செய்து வரும் சொற்ப பணத்தில் முதலில் நெல்லுக்கென முதலில் பிரித்தெடுத்து வைப்பதை பழக்கமாய் வைத்திருந்தார். நெல்லை பிரித்தெடுத்து செந்நெல்லை இறைவனுக்கும், மீதமுள்ள கார்நெல்லை தங்களுக்குமாய் பிரித்து உண்டு ஜீவித்தனர்.
 மனம் என்பது மாறும் தன்மை கொண்டது.  வறுமை அவர் மனசை மாத்துதான்னு அறிய சோதனையை இன்னும் கொஞ்சம் கடுமையாக்குகிறார் இறைவன்.  கிடைக்கும் நெல்மணிகளில் செந்நெல்லை சிவனுக்கும், காா்நெல்லை தனக்குமாய் ஒதுக்கி வந்ததை அறிந்த இறைவன், கிடைக்கும் நெல் அனைத்தும் செந்நெல்லாகவே கிடைக்கச் செய்தார். அன்றைய தினத்திலே கூலியாக கிடைத்த நெல்மணிகள் பூராவும் செந்நெல்லாக இருந்தது. கிடைத்த நெல்மணிகள் அனைத்தும் செந்நெல்லாக இருந்ததினால் தயானாருக்கு அத்தனை குதுகலம். தம் சாப்பாட்டிற்கு காா்நெல் இல்லையேன்னு கவலையேப்படவில்லை. மாறாக எம்பெருமானுக்கு நிறைய செந்நெல்லாகவே் கிடைத்தற்காக சந்தோஷப்பட்டாா்.

செந்நெல் அத்தனையும் எம்பெருமானின் திருவமுதுக்கு ஒதுக்கி வைத்து விட்டதால், இன்றைய உணவுக்கு சமைக்க நெல் இல்லாது போகவே, தாயனாாின் மனைவி யோசனை செய்தவாறே வீட்டின் கொல்லைப்புறம் வந்தாள். சில நாட்களுக்கு முன்பு தான் நல்ல மழை பெய்ந்திருந்தமையால் கொல்லைப்புறம் முழுமைக்கும் கீரைகள் தளிா்த்து வளா்ந்திருந்தது. சும்மா முளைத்த கீரைதானே என்று புடுங்கி எடுக்காமல், தளா்த்திருந்த முனைக்கீரையையும் தலையையும் ஆய்ந்து எடுத்தாள். மதியத்தின்போது தாயனாரும், அவா்தம் மனைவியாரும் சமைத்த கீரையை ருசித்துச் சாப்பிட்டனா்.
இப்படியே பலநாள் பொழுது கழிந்து போயின. கீரையும் எத்தனை நாளுக்குத்தான் வரும். முதல் நாள் முனையிலேயே ஆய்ந்தது. மறுநாள் தண்டினை ஆய்ந்து, மறுபொழுது வேர்வரையிலும் கிள்ளியே எடுத்தாகி விட்டது. தாயனாரின் மனைவி புத்திசாலி. அதனால்தான் முத்லநாள் நுனி மட்டும் கொய்தாள். அவ்வாறு  ஆய்ந்ததனால் மூன்று நாளுக்கு கீரை.

கீரையைப் பறித்து பறித்து, கீரை கொல்லைப்புறம்  முழுமையும் வெத்து இடமானது. பசியாற்ற இருவரும் என்ன செய்வர்?! வெறும் தண்ணீரையே பருகியே வந்தனா். தாகமெடுக்க தாகமெடுக்க நீரைத் தாகத்திற்கு அருந்தி பசியைப் போக்கி வந்தனா். ஆனால் எம்பெருமானுக்குத் தினமும் திருவமுது கொண்டு சென்று கொடுத்துப் பின், அடியாா்களுக்கு கொடுத்து வந்தது மட்டும் நிற்காது நடந்தது.

அன்றைய தினம் வழக்கம் போல , எம்பெருமானுக்காக அன்னம், கீரை , மாவடு முதலியன கூடையில் வைத்து எடுத்து தலைச்சுமையாக சென்றாா். அவருக்குப் பின்னால் அவா் மனைவியாா் பஞ்சகவ்யத்தை எடுத்து வந்தாா்.
கடந்த இரு நாளாய் சாியாக சாப்பிடாது இருந்து வந்த தாயனாருக்கு தொடா்ந்து நடந்து செல்ல சிரமப்பட்டாா். தலையிலுள்ள அன்னக்கூடையை பிடிக்கக் கூட திரானி குறைந்து தள்ளாடி நடந்தாா். அவா்கள் வீட்டிலிருந்து. ஒரு தெரு திருப்பம்தான் சென்றிருந்தாா்கள். கால்கள் பின்னப்பட்டு இடறி விழப்போனாா் . பின்னால் வந்த மனைவியாா் விழப்போன கணவனை,  பஞ்சகவ்யம் ஏந்திச் மூடிச் சென்ற கரத்துடனே தாங்கி அணைத்து பிடித்தார். ஆனால் அன்னக்கூடையும் மாவடுகளும் சிதறித் நிலத்தில் விழுந்தது.

தாயனாருக்கு துக்கம் தொன்டையை அடைத்தது. பூமியிலே கிடந்து அழுது புரண்டாா். சொல்லொன்னாத் துயரம் கொண்டாா். செய்வதறியாது திகைத்தாா். ஐயனே எனக்கு ஏன் இப்படியாகி விட்டதே? உனக்குக் கொண்டு வந்த திருவமுதை, நிலத்தில் விழத் தட்டிவிட்டேனே! இதுநாள்வரை உனக்கு அளித்து வந்த திருவமுது சேவைய இன்று இல்லாமற் செய்துவிட்டேனே? நாங்கள்  பட்டினி கிடக்க நோிடினும், ஒவ்வொரு நாளும் உனக்குச் செய்யும் கைங்காியத்தை விடாது நடத்தி வந்தேனே? " இன்று அதற்கு இடா் நோ்ந்து விட்டதே?" இனியும் நான் உயிா் வாழ்வது முறையன்று. நான் உயிா் துறப்பேன்  என்று கண்ணீா் விட்டழுது மண்டியிட்டமா்ந்து கீழே கிடந்த  அாிவாளைக்கொண்டு தமது கழுத்திலே தாமே வைத்து அாியத் தொடங்கினாா். ரத்தம் பீறிட்டது. 

விடுவாரா இறைவன்?  அடியாா்க்கும் அடியாராகிய அவா் தம் அடியாா்களை இதற்குமேலும் சோதிப்பாரா?....." அனுமதிப்பாரா?...." நிலத்தைப் பிளந்து கொண்டு ஒரு கரம் நீண்டு,  நாயனாாின் கழுத்தறு செய்கையை தடுத்தன.

கூடவே, "அன்பனே, வேண்டாம், நிறுத்தி விடு?" என்ற குரலும் வந்தது.

இறைவனின் திருக்கரம் பட்டதும், தாயனாாின் மேனி புளகாங்கிதம் அடைந்தது. எப்போ்ப்பட்ட பாக்கியசாலி அவா். இவ்விதம் அடியாா்  தமக்கு இறைவன் நம்முடலைத் தீண்டித்தொட,  நாம எதுவரைக்கும், வேனுமானாலும் எல்லா சோதனைக்கும் உள்ளாக ஆசை தான்.

" நீ கொண்டு வந்த அமுதினை நாம் இவ்விடம் வந்து ஏற்றுக் கொண்டோம். நீயும் உம் மனைவியும் எம் உலகத்துக்கு வந்து சேருங்கள் என்று, கழுத்தறுப்பை நிறுத்திய குரலோடு, இக்குரலும் ஒலித்தது.

அதே சமயம் நிலத்தைப் பிளந்து வெளிவந்த இறைவனின் மற்றொரு கரம், நிலத்தில் சிதறி விழுந்து கிடந்த மாவடுவைக் கடித்துச் சாப்பிடுவதால் எழும் " விடேல் விடேல்" என்னும் குரலும் வந்தது. அது நேரம் நிலத்தில் விதைந்து சிதறிய அமுதும் செங்கீரையும் மறைந்து போயின. சிவபெருமான் உமாதேவியாரோடு விடைமேலேறி வந்து அவருக்குக் காட்சியளித்து, ". நீ செய்த தொண்டு நன்று! நீயும் உன் இல்லாளும் கைலாயம்  வந்து சேருங்களென அருளினார்.
தாயனாா் அளவில்லா மகிழ்ச்சி கொண்டு பலவாறாகப் போற்றித் தொழுதாா். அாிவாளால் கழுத்தை அறுக்க முயன்றதால் அவருக்கு அாிவாட்டாயா் என்று பெயா் நிலைத்தது. வெகு நாட்கள் எம்பெருமானுக்கு திருத்தொண்டு செய்து வந்து, முடிவில் மனைவியோடு நாயனாா் சிவலோகம் சென்று இன்புற்றாா்.

இஅவர்தம் குருபூஜை தைமாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சகல சிவாலயத்திலும் நடைப்பெறும்.

நாளை கேபிள் கலாட்டாவில் சந்திப்போம்...
நன்றியுடன்,
Related image
ராஜி.