Monday, December 31, 2018

வாழை இலையில் எப்படி சாப்பிடனும்ன்னு தெரியுமா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா பிளாஸ்டிக்லாம் பயன்படுத்தக்கூடாதுன்னு சட்டம் வந்திருக்கே! ஷாம்பு, எண்ணெய், பால்..இதுலாம் பிளாஸ்டிக் கவர்ல சிந்தாம சிதறாம பேக் பண்ணி வருமே! இனிமே அப்படி விற்கமாட்டாங்களா?!


ஒட்டுமொத்தமா எல்லா பிளாஸ்டிக்கையும் தடை செய்யலை. செய்யவும் முடியாது. இப்போதைக்கு, ஹோட்டல்களில்  பார்சல் கட்ட, தட்டுக்களில் விரிக்கும் பிளாஸ்டிக் பேப்பர், மேஜைமேல  விரிக்கும் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் தெர்மாக்கோல் கப், பிளாஸ்டிக் தட்டு,  டீ/காபி/ஜூஸ்/தண்ணி/ சாப்பாடு  கொடுக்கும் கப்,  தண்ணி பாக்கெட், ஜூஸ் குடிக்கும் ஸ்ட்ரா, காய்/மளிகைசாமான்/துணிகள்/ மருந்துகள்ன்னு கடைகளில் சாமான் போட்டு கொடுக்கும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கொடிகள் .. இதுமாதிரியான 13 பொருட்களுக்கு தடை விதிச்சிருக்காங்க. இதுலாம் அன்றாடம் நாம அளவுக்கு அதிகமா பயன்படுத்தும் பொருட்கள். இதேமாதிரி, குளிர்பானங்கள், தண்ணி பாட்டில்களை தடை பண்ணா இன்னும் நிறைய பிளாஸ்டிக் பயன்பாடு குறையும். ஆனா, கார்ப்பரேட்காரன் விடமாட்டாங்க. கேஸ் போட்டு தடை வாங்குவாங்க.

முன்போல எங்க போனாலும் மஞ்சப்பை, வயர்கூடை,  கொண்டு போகனும்..


இரு மாமா! வயர்கூடைன்னு சொல்லுறியே அதுகூட பிளாஸ்டிக்ல ஆனதுதான். அதை மறந்துட்டியா?!

மறக்கல! ஆனா பாரு, ஒருமுறை வயர்கூடை வாங்கினா குறைஞ்சது மூணு வருசம் வரும். மூணு வருசத்துக்கொருமுறை ஒரு பையை குப்பையில் வீசுறதுக்கும், தினத்துக்கு நாலு பிளாஸ்டிக் கவரை வீசுறதுக்கு நிறைய வித்தியாசமிருக்கு. கணக்கு போட்டு பாரு. 365*3=1035 பைகள் வருது. ஒவ்வொரு வீட்டிலும் இப்படி குப்பையை வீசினா வீதி என்னாகும்?! இப்ப புரியுதா?! மெல்ல மெல்ல பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களையும், தண்ணியும் வாங்காம விட்டா பிளாஸ்டிக் பயன்பாடும் குறையும், தண்ணியும் மிச்சப்படுத்தலாம்.

ஆமா மாமா. இப்பலாம் கல்யாணம், காதுகுத்து மாதிரியான விசேச வீடுகளில்,  அரை லிட்டர் பாட்டிலில் தண்ணி வைக்குறாங்க. ஒரு பாட்டில் தண்ணீரையும் குடிப்பவங்க கொஞ்ச பேரே! தண்ணியும் வீணாகுது. பாட்டிலும் சேர்ந்து ஊரே கெடுது. அடுத்து இப்ப ஹோட்டல்ல எடுப்பு சாப்பாடு வாங்கினா சோறு கட்ட பிளாஸ்டிக் பேப்பர், சாம்பார்/ரசம்/காரக்குழம்பு/மோர்/பொரியல்/கூட்டு, அதை போட்டு கொடுக்க ஒரு கவர்ன்னு குறைஞ்சது  எட்டு பிளாஸ்டிக் பொருள் வரும். இப்ப அதுலாம் பிளாஸ்டிக் டப்பாவுல அடைச்சு தர்றாங்க. ஸ்வீட், சாப்பாடுன்னு பேக் பண்ணி வரும் டப்பாக்கள்ன்னு அது ஒருபக்கம்  வீட்டுல குமியுது. 

ம்ம்ம் அதேதான். அதுமாதிரி தேவையில்லாம அதிகப்படியான பொருட்களுக்குதான் இப்ப தடை விதிச்சிருக்காங்க. அரசாங்கம் யாருக்கும் அடிபணியாம சட்டம் போட்டு, அதை மக்களும் எதிர்காலத்தினை மனசில் கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கனும். பூமி நம்மை வாழ்த்தும். இந்த பூமி நமக்கு மட்டுமே சொந்தமில்லை. தண்ணி இல்லன்னா நீர்வாழ் உயிரினம் என்னவாகும்?! காசு இருக்கு நாம போர் போட்டு தண்ணி எடுத்து பயன்படுத்திக்குறோம். மத்த ஜீவராசிகள் தாகத்துக்கு எங்க போகும்?! இங்க விளையலைன்னா விளையுற இடத்தில இருந்து நாம இறக்குமதி பண்ணிக்கலாம். ஆனா, கால்நடைகள்?! வெயில் கொடுமைன்னு நாம ஏசி போட்டுக்கலாம், மத்த ஜீவன்கள்?!  இதுலாம் யோசிச்சு இனியாவது இயற்கையை காப்பாத்துவோம் அது நம்மை காப்பாத்தும்...
எல்லாம் சரி மாமா.. பிளாஸ்டிக் பேப்பரை தடை பண்ணிட்டா, ஹோட்டல்ல எல்லாரும் ஒரே தட்டைதான் கழுவி கழுவி யூஸ் பண்ணனுமே! ஒருமாதிரி சங்கடமா இருக்குமே! சாப்பிடுறவங்க உடல்நிலையை மனசில் வச்சிக்கிட்டு தட்டு, டம்ப்ளர்லாம் நல்லா க்ளீன் பண்ணுவாங்க.  பிளாஸ்டிக் பேப்பர் போடுறதால சில ஹோட்டல்களில் பிளேட்டை கழுவுறதே இல்ல. இதை நானே பார்த்திருக்கேன். கொஞ்சம் பெரிய ஹோட்டல்களில் வாழை இலை பிளேட்ல போட்டிருப்பாங்க. இனி எல்லா இடத்துலயும் முன்போல வாழை இலை, மந்தாரை இலை, ஆல இலைல செஞ்ச இலைகள்லாம் புழக்கத்துக்கு வரும்.

வாழை இலையில் சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதுதானே மாமா.

ஆமா, வாழை இலையில் சாப்பிடுறது சுத்தமானது, பயன்படுத்த எளிதானது மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதால் சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. இதுதவிர, இதில் சாப்பிடுறதால உடம்புக்கும் ரொம்ப நல்லது. இப்பலாம் க்ரீன் டீ குடிக்குறது ஃபேஷனாகிடுச்சு. க்ரீன் டீயில்  இருக்கும் Epigallocatechin gallate (EGCG) போன்ற பாலிபினால்ஸ்கள்  வாழை இலையில் அதிகமா இருக்கு. . இது, பல நோய்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ளா உதவுது. இன்னிக்கு அதிகமா பரவிவரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் (Parkinson’s disease) எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் வாழை இலை நம்மை காக்குது. வாழை இலையை அப்படியேவும் சாப்பிடமுடியாது, சமைக்கவும் முடியாது. அதனால்தான் வாழையிலையில் வச்சு கொழுக்கட்டை, மீன் மாதிரியான சில உணவுகள் செய்யப்படுது. வாழையிலையில் சமையல் செய்வது எல்லா இடத்துலயும் வழக்கமில்லாததால் சாப்பிட ஏற்பாடு செஞ்சாங்க. வாழை இலையில் சூடா சாப்பாடு, பதார்த்தம்லாம் பரிமாறும்போது அந்த சூட்டில் பாலிபினால்ஸ்கள்  இளகி சாப்பாட்டில் சேரும்.  இதில் ஆன்டிஆக்சிடண்ட் அதிகமா இருக்குறதால நோய் தடுப்பாகவும், சரும பாதுகாப்பிற்கும் பயன்படுது. 


வாழை இலையிலிருக்கும் ரூட்டின் (Rutin), குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்தும். ரூட்டின் ஒரு சிறந்த  ஆக்ஸிஜனேற்றியாகும்.  வாழை இலை இயற்கையாவே உருவான கிருமி நாசினி, இதில் சாப்பிடும்போது சாப்பாட்டிலிருக்கு  நச்சுத்தன்மையை போக்குவதுடன்  நம் உடலில் எதிர்ப்பு  சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.


வாழை இலையில் உணவை பரிமாறும்விதத்தை பத்தியும் சொல்லி இருக்காங்க.  சாப்பிடுறவங்களுக்கு தலைவாழை இலைன்னா வாழை இலையின் நுனிப்பகுதி இடப்பக்கமாவும், அகலமான காம்புப்பகுதி வலப்பக்கமாவும் வரனும். பாதியில் கிழிச்ச ஏடுன்னா தண்டுப்பகுதி நம்ம சாப்பிடுறவங்க பக்கம் வரனும். இந்த அமைப்பு எதுக்குன்னா, உடம்புக்கு கெடுதல் செய்யும் உப்பு, இனிப்பு, ஊறுகாய்லாம் கொஞ்சமா பரிமாறவே. குறுகிய இடத்தில் கொஞ்சமாதானே வைக்கமுடியும்?! அடுத்து பச்சடி,பொரியல், அவியல், கூட்டுன்னு இருக்கனும். அகலமான அப்பளமும், நீளமான வாழைப்பழமும் வைக்க இடம் வேணுமே. அதுக்குதான் இலையில் விரிஞ்ச பக்கம்.  முதல்ல சோறு, பின் பருப்பு நெய்.. சாம்பார், காரக்குழம்பு/மோர்க்குழம்பு, ரசம், மோர்.. இப்படித்தான் உணவை பரிமாறனும். வாழை இலையில் கூட்டு, பொரியல், அப்பளம்,இனிப்புன்னு எதுமே இல்லாம வெறும் இலையில் சோறை போடக்கூடாது. அது கெட்டதுக்கான அறிகுறி. சாப்பிட்டபின் இலையை தன் பக்கமா மடிக்கனும். அப்படி மடிக்குறது சாப்பாட் நல்லா இருந்துச்சுன்னு சொல்லவும், உறவை நீட்டிக்க ஆசைன்னும் அர்த்தம், இலையை வெளிப்பக்கமா மடிச்சா சாப்பாடு நல்லா இல்லைன்னும், உறவை தொடர விருப்பமில்லைன்னு சூசகமா சொல்லும் முறை. 

இழவு வீட்டிலும் வெளிப்பக்கமாதானே இலையை மடிக்கனும் மாமா. 

ஆமா, இதுமாதிரியான துக்க நிகழ்ச்சியில் இனியொருமுறை உங்க வீட்டில் கலந்துக்க விருப்பமில்லைன்னு சொல்லாம சொல்லவே இந்த ஏற்பாடு. 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 15நாள்தான் மாமா இருக்கு. எப்ப புடவை எடுக்க போகலாம்?!

பீரோ நிறைய புடவை அடுக்கி வச்சிருக்கியே! அதுல பாதிய ஒழிச்சு கட்டு அப்புறமா கூட்டி போறேன்.

போ மாமா, தினத்துக்கு உடுத்த, சும்மா கடைவீதிக்கு போக... கல்யாணத்துக்கு போக பட்டுச்சேலை.. மத்த நிகழ்ச்சிகளுக்கு போக டிசைனர் சேலை, அப்புறம் சடங்கு சேலை, கல்யாண சேலை, அப்பா வாங்கி கொடுத்தது, மகன் வாங்கி கொடுத்தது நினைவார்த்தமா கட்டாமயே சில புடவைகள்ன்னு ரெண்டே ரெண்டு கப்போர்ட்ல வச்சிருக்கும் சேலை உனக்கு கண்ணு கரிக்குதா?!

 மறைஞ்ச நகைச்சுவை நடிகர் நாகேஷ் ஐயா, மார்கழி மாச கடைசியில் வீட்டிலிருக்கும் எல்லார் துணிகளையும் நல்ல நிலையில் இருப்பவைகளைலாம் ஓரிரு உடைகளை வச்சிக்கிட்டு மத்ததுலாம் இல்லாதவர்களுக்கு கொடுத்துடுவாராம்.  நகைகள் தவிர்த்து வீட்டிலிருக்கும் பொருட்களையும் மார்கழி மாசக்கடைசி வாரத்துல கொடுத்துட்டு தைமாசம் புதுப்பொருட்களோடு பண்டிகையையும், அந்த வருசத்தையும் வரவேற்பாராம்!!

நல்ல பழக்கமாதான் இருக்குல்ல! இனி நானும் அப்படியே செய்றேன். நல்ல நிலையில் இருக்கும்போதே செண்டிமெண்ட் பார்க்காம  எடுத்து கொடுத்திடுறேன் மாமா.

அப்படியே செய் நல்லது.. வீடாவது அடைச்சல் இல்லாம நல்லா இருக்கும்.


பார்த்ததும் சிரிச்ச விடியோ... இனி சாப்பிடமுடியாதோ.ன்னு ஏக்கமும், தெரியாம சங்கத்துல சேர்ந்துட்டோமோன்னு வருத்தத்தோடும், , அழகான முகபாவனையில் குட்டி பையன் சூப்பர். பின்னாடி பேசும் நெல்லை பாஷையும் செம.  கேட்டு பாரேன் மாமா.

அண்டத்தினை விந்து நெருங்குதலை ஈசியா புரிய வைக்கும் இந்த படம் நெட்டுல சுட்டது.  எதாவது மகப்பேறு மருத்துவர் ஐடியாவா இருக்கும் இந்த படத்தை பாரேன். நல்லா இருக்குல்ல!

ம்ம்  நான் கடைக்கு போய் வயர் வாங்கிட்டு வந்து கூடை பின்னுறேன். அதான் நாளையிலிருந்து கவர்லாம் கிடைக்காதுல்ல!

நல்ல காரியம்தான்.. போய்வா!

நன்றியுடன்,
ராஜி

Sunday, December 30, 2018

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?! - பாட்டு புத்தகம்

கார்த்திக் படம்ன்னா விரும்பி பார்ப்பேன். அதுக்காக மத்த நடிகர் படங்களை பார்க்காம இருந்ததில்லை. ஆனா, விஜய்ன்னா மட்டும் எரிச்சலா வரும். ஆனாலும், விஜய் நடிச்ச லவ் டுடே, பூவே உனக்காக, யூத், துள்ளாத மனமும் துள்ளும்.. இந்த மாதிரி படங்கள் பிடிக்கும்.  பஞ்ச் டயலாக் பேசி, அஜீத், சூர்யாவை வம்புக்கிழுக்கும் வசனைங்கள், அரசியல் ஆசை என தன்னோட வழக்கமான நடிப்புல இருந்து விலகி நடிச்ச படங்கள் இவையெல்லாம். அதனாலோ என்னமோ பிடிக்கும்.  இதுல ரகுவரன் விஜய்க்கு அப்பாவா வருவார். ரொம்ப நல்லா நடிச்சிருப்பார். கோகுலத்தில் சீதையில் வந்த அதேமாதிரிதான் சுவலட்சுமி கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்.

லவ் டுடேவில் அத்தனை ஹாண்ட்சம்மா இருப்பாரு விஜய். நாலு வருசமா ஒரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருப்பார். ஆனா, அந்த பொண்ணு பதிலே சொல்லாது.  படத்துல இருமுறை வரும் இந்த பாட்டு. முதல்ல காதலிலும், இன்னொருமுறை எத்தனை சொன்னாலும் புரிஞ்சுக்கலியேன்னு  ஒருமாதிரி விரக்தியான மனநிலையில் அமைஞ்ச பாட்டு. 


ஏன் பெண்ணென்று பிறந்தாய்?!

ஏன் என் கண்ணில் விழுந்தாய்?!
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?!
என் உயிர்பூவை பறித்தாய்?!
முதல்நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்!!
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்!!
என் வலிதீர ஓர் வழி என்ன?!
என் பனிப்பூவே மீண்டும் பார்த்தால் என்ன?!

நீ சூடும் ஒரு பூ தந்தால்

என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்...
உன் வாயால் என் பெயர் சொன்னால் 
உன் காலடியில் கிடப்பேன் ..தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம் 
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம் 
இரண்டில் ஒன்று சொல்லிவிடு 
இல்லை நீயே கொல்லியிடு...


ஏன் பெண் என்று பிறந்தாய்?!
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?!

நோகாமல் பிறர் காணாமல் 

உந்தன் ஆடை நுனி தொடுவேன்!! 
என்ன ஆனாலும் உயிர் போனாலும் 
ஒரு தென்றல் என்றே வருவேன்!! 
நீ என்னை பார்த்தால்தான் துடிக்குது உள்ளம்!! 
நீ என்னை பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!! 
இமயம் கேட்கும் என் துடிப்பு.. 
ஏனோ உனக்குள் கதவடைப்பு?!


ஏன் பெண் என்று பிறந்தாய்?!
ஏன் என் கண்ணில் விழுந்தாய் ?!
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?!
என் உயிர் பூவை எரித்தாய்?!

ஏன் பெண் என்று பிறந்தாய்?!

ஏன் என் கண்ணில் விழுந்தாய் ?!
நான் தலைசாய்ந்து தொழுதேன்
என் தலைமீது நடந்தாய்!!
உறவை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய், உலகாய் உனையே நினைத்தேன்.
இந்த உலகையெல்லாம் நான் இழந்தாலும்
என் பனிப்பூவே உன்னை பார்த்தால் போதும்!!

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்


நீ எங்கே சென்று சேர்ந்தாலும்
உன் நிழல் வழியே வருவேன்
தீயோடு என்னை எரித்தாலும்
நீ தீண்டி விட்டால் உயிர்ப்பேன் 
ஒரு முறை முகம் பார்க்க துடிக்குது உள்ளம்
காவிரி நதி தாண்டும் கண்களில் வெள்ளம்
காதல் உறவை எரித்திடுமா  ?
இதுதான் காதல் சரித்திரமா ?


ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உன்னையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனி பூவே உன்னை பார்த்தால் போதும்


ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்படம் : லவ் டுடே

பாடல் : வைரமுத்து
பாடியவர் : உன்னி கிருஷ்ணன்
இசை : சிவா

Saturday, December 29, 2018

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை - கிராமத்து வாழ்க்கை 5

இன்னிக்கு ரெண்டு மூணு மொபைல், இணையம், வாகன வசதி, பொருளாதார முன்னேற்றம், சாப்பிட, உடுத்த, பயன்படுத்தன்னு எதும் சட்டுன்னு கிடைக்கும் காலத்தில் இருந்தாலும் 80, 90களில் வாழ்ந்த நிம்மதியும், திருப்தியும் இருக்கான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்வேன். பணமும், வசதி வாய்ப்புகளும் ஒரு மனிதனை திருப்திபடுத்திடாது. அதையெல்லாம் தாண்டி,  அவனை உயிர்ப்போடு வைக்க நிறைய விசயங்கள் இருக்கு.  இப்ப நாமலாம் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கோம். ஆனா, உயிர்ப்போடு இருக்கோமான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்வேன். இதுதான் உயிரோடு இருப்பதற்கும் உயிர்ப்போடு இருப்பதற்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. அப்படி உயிர்ப்போடு இருந்த நாட்களின் நினைவு மீட்டலாய் சில பதிவுகளே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்...
இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு மாவாட்டும் உரல்கூட தெரிஞ்சிருக்கும்.  நிறைய டிசைன்ல இப்பலாம் கிடைக்குது. பூண்டு இடிக்க சின்ன சைஸ் உரல் கிடைக்குது. அதனால்கூட பிள்ளைகளுக்கு உரல் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுடும். ஆனா தானியங்கள் இடிக்கும்,உரலும், உலக்கையும் தெரிஞ்சிருக்காது.  மாவாட்டும் உரலுக்கும், இடிக்கும் உரலுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு கல்லில் கொஞ்சம் குழைவா இருக்கும் பரப்பில், நடுவில் பள்ளமா இருந்தா அது அரைக்கும் உரல். முழுக்க முழுக்க ஆழமான பள்ளமா இருந்தா அது இடிக்கும் உரல்.மாவரைக்கும்போது மாவு சிந்தாம சிதறாம இருக்க பரவலான இடம் வேணும். ஆனா இடிக்கும்போது தானியங்கள் வெளிய சிதறாம இருக்க, ஆழம் அதிகமா வேணும். 

உலக்கை.
கிட்டத்தட்ட ஆளுயரத்துக்கு 2.1/2 அங்குல விட்டம்கொண்ட மரக்கம்பு  ஒன்னுல நுனியிலும் இரும்பினால்  கவசம் மாதிரி பூண் போட்டு வச்சிருப்பாங்க. அது எதுக்குன்னா மரத்தில் தானியங்களை குத்தினா தானியங்கள் உடையாது. அதுக்குதான்.. பண்டிகைகளில் அம்மா சமைக்க, நான் மாவு இடிச்சு கொடுத்திருக்கேன். அம்மா, அத்தை, பெரியம்மாலாம் சேர்ந்தாங்கன்னா, ரெண்டு பேர் சேர்ந்து இடிப்பாங்க ஒருவர் உலக்கை இடிக்க. இன்னொருவர் உலக்கை தூக்க... இப்படி போகும். சரியான கவனிப்பும், ஒத்துழைப்பும், டைமிங்கும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். தமிழக பெண்களுக்கு பிறப்புலயே இதுலாம் வந்திருக்கு. இப்பதான் வாழ்க்கைமுறைலாம் மாறி பிள்ளைக தறிக்கெட்டு போகுது :-(
சைக்கிள் ரிக்‌ஷா..
80களில் ஆட்டோக்கள் சின்னஞ்சிறு நகரங்களிலும் வர ஆரம்பிச்சது. ஆனாலும், 10, 20கிமீன்னாலும் நடக்க, சைக்கிளில்போக வெசனப்படாத ஆட்களா இருந்ததாலும்,  ஆட்டோ கட்டணமும் ஆட்டோக்களை உபயோகப்படுத்த மக்கள் யோசிச்சாங்க. எங்க போனாலும் நடையும், சைக்கிளும்தான். உடம்பு சரியில்லாதபோது, கைக்குழந்தைக்காரி, நிறைமாத கர்ப்பிணி, புதுசா கல்யாணமானவங்க... இப்படி ஒருசில ஆட்களுக்காக இருந்தது சைக்கிள் ரிக்‌ஷா.  மணிலாம் தொங்கவிட்டு, ரேடியோன்னு கலர் கலரா அழகா இருக்கும். முன்னலாம், கடை, சினிமா, கட்சி விளம்பரத்துக்கு இந்த சைக்கிள் ரிக்‌ஷா பயன்பட்டிருக்கு. 

அஞ்சு பைசா..
நம்ம ரேஞ்சுக்கு இதுவே அதிகம்... பெரும்பாலும் வீட்டில் அம்மா பண்டம்லாம் அடிக்கடி செய்வாங்க. கொடுக்காப்புளி, சீதாப்பழம், கொய்யாப்பழம், நுங்கு, பனம்பழம் இப்படி எல்லாமே நம்ம வீட்டில், அக்கம்பக்கத்து வீட்டில் கொடுத்துடுவாங்க.  ஆனா இந்த தேன்மிட்டாய், புளிஜாம் , குருவிரொட்டி, கலர் அப்பளம் இதுலாம் கிடைக்காதே. அஞ்சு பைசா கொடுத்தா தேன்மிட்டாய் கைநிறைய கொடுப்பார் கடைக்காரர். வெளியூரிலிருந்து வந்து குடியிருக்கும் அரசு ஊழியர்ன்னா அந்த ஊரில் அம்புட்டு மரியாதை கிடைக்கும். கம்பு, வேர்க்கடலை, சோளம், அவரைக்காய், கத்திரிக்காய்ன்னு வீட்டில் விளையும் பொருட்களில் ஒரு பங்கு வீட்டுக்கே கொடுத்துவிடுவாங்க. அந்தமாதிரி மத்த பிள்ளைகளைவிட எனக்கு அதிகமா கடைக்காரர் கொடுப்பார். 
பத்து பைசா
அலுமினியத்திலும் இருக்கும், கொஞ்சம் கனமா பித்தளையிலும் இருக்கும் இந்த பத்து பைசாவைகொண்டு கடையில் பொருட்கள் வாங்குனதைவிட இதன்மேல் பேப்பரை வச்சி பென்சிலைக்கொண்டு கிறுக்கினா பத்து பைசாவின் அச்சு பேப்பரில் வரும். பூமாதிரி அழகா இருக்கும் இந்த பத்துபைசாவை வரைய அத்தனை பிடிக்கும்.
பைசா கிடைச்சா ஒன்னு பசங்க வாங்கி திம்பாங்க. இல்லன்னா, உண்டியல்ல சேர்த்து வைப்பாங்க. ஆனா, நான் இந்த இருபது பைசா கிடைச்சா, பத்திரப்படுத்தி வச்சுப்பேன். நாங்க இருந்த ஊரிலிருந்து வேற ஊருக்கு போக லெவல் கிராசிங்கை கிராஸ் பண்ணிட்டுதான் போகனும்.  அந்த ஊர் பஸ் போகும்போதுதான் ட்ரெயின் வரும். அப்ப காத்திருக்கும்போது, ரயில் வாரும்போது இருபது பைசாவை தண்டவாளத்துமேல வச்சி ரயில் ஏறிப்போக காத்திருப்பேன்.  அந்த இருபது பைசாமேல ட்ரெயின் ஏறி இறங்கினா அது காந்தமா மாறிடும்ன்னு ஒரு கூமுட்டை சொன்னதை கேட்டு பல இருபது பைசாக்கள் பாழானதுதான் மிச்சம்.  வடிவேலு காமெடி மாதிரி புடுங்குறது மொத்தமே தேவையில்லாத ஆணின்னு விதிச்சிருக்கு போல:-(
கயிற்று கட்டில்...
பச்சை பனை  ஓலையை வெட்டி, அதன் மட்டையிலிருந்து உரித்து எடுக்கப்பட்ட நாரை தண்ணில ஊற வச்சு கயிறாக்கி, அந்த கயிற்றில் பின்னப்பட்ட கட்டில்.  புதுசுல முண்டும் முடிச்சுமா இருக்கும் படுத்தா முதுகுலாம் வலிக்கும்.  ஆனா, நாளாக நாளாக சரியாகிடுமான்னு கேட்டா அப்படியில்ல அதுவே பழகிடும்.  கயிறு பிஞ்சு போச்சுன்னா வேற பின்னிப்பாங்க.  என் பாட்டி வீட்டில் இருக்கும். அது கழனில போட்டு படுத்துக்கும் ஆனா, பாட்டி இதுல படுக்க விடாது. பாட்டி இல்லாதபோது ஏறி குதிச்சு கட்டில்காலையெல்லாம் உடைச்சு விட்டிருக்கேன். அதனால் நான் ஊருக்கு போனாலே   அதை  பம்ப்செட்டுக்குள் வச்சி பூட்டிடும்.   இந்த கட்டில் கயிற்றை பின்ன எல்லாருக்கும் தெரியாது, சிலருக்கு மட்டுமே பின்ன தெரியும். அப்படி பின்னுறவங்களை கூப்பிட்டா ஏக கிராக்கி பண்ணுவாங்க. சாப்பாடு, டீ, பைசான்னு கொடுத்து தாஜா பண்னுவாங்க.
தெருவுக்கு தெரு பொதுக்கிணறு இருக்கும். ஊருக்கு நாலு நல்ல தண்ணி கிணறு இருக்கும். ஊர்பயணத்தின்போது எங்காவது அலைஞ்சு திரிஞ்சா காலாற திண்ணையும் தாகம் தீர்க்க பானை தண்ணியும் கொடுத்த மனிதர்களும் இருந்தாங்க. வயிறு வலிக்கு பன்னீர் சோடா, வயித்து போக்குக்கு சோடா, செரிமானத்துக்கு சோடாவை உடைச்சதும் உள்ளிருக்கும் காத்து வெள்யேறும் முன் உப்பு போட்டு கொடுப்பாங்க. விருந்தாளிங்க வந்தா பச்சை கலரு...  கலரை குடிக்கவே அடிக்கடி வயிறுவலிக்குதுன்னு பொய் சொல்வேன். அம்மாவும் வாங்கி தருவாங்க. என்ன ஒரு இம்சைன்னா, அடிக்கடி வயிறு வலிக்குதே, வயித்துல நாக்குப்பூச்சி இருக்கோன்னு அம்மா மாசத்துக்கு ரெண்டு தரம் ஓமத்தண்ணி வாங்கி தரும். கருமம் அது ஒரே புளிப்ப்ப்ப்ப்ப்ப்பா இருக்கும். கலர்தண்ணி கிடைக்கனுமேன்னு அதையும் குடிச்சு வைப்பேன். இன்னிக்கு பெப்சி கோக்ன்னு குடிச்சாலும் அந்த திருப்தி வருவதில்லை. கோலி சோடாவை குடிக்கவும் திறமை வேணும். எந்த பக்கம் வேணும்ன்னாலும் குடிச்சுட முடியாது., கோலி வந்து அடைச்சுக்கிட்டு கலர்தண்ணி வராது. பாட்டிலின் வெளியில் ஒருபக்கம் பள்ளமா இருக்கும். அது உள்ளுக்குள் மேடாய் இருக்கும். அப்படி மேடாய் இருக்கும் பக்கம் குடிச்சாதான் கலர்தண்ணி வரும். இல்லன்னா வராது.

கலாக்காய்
ஏரி, ஆறு, குளத்தின் பக்கத்து வீதிகளில் இருக்கும் செடியில் கிடைக்கும். பச்சையும், வயலட் கலரும் சேர்ந்த நிறத்தில் கிடைக்கும் இந்த காய்க்கு பேரு எங்க ஊரில் கலாக்காய்.. இளம்புளிப்பா இருக்கும் இதன் சுவை. இதை அப்படியேயும் சாப்பிடலாம், இல்லன்னா, உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிட்டா டாப் கிளாஸ். கிராமத்துல இருக்கும்வரைக்கும் பறிச்சு சாப்பிட்டது, நகரத்துக்கு வந்தபின் ஒரு கூறு ஒரு ரூபான்னு வாங்கி சாப்பிட்டிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு இப்ப சாப்பிட்டேன். செம்ம்ம்ம்ம்ம்ம...


கோரைப்பாய்...
கட்டில், கலர்கலரா பிளாஸ்டிக் பாய், மெத்தைன்னு ஆயிரமிருந்தாலும், கோரைப்பாய்க்கு ஈடாகாது. சுருட்டி கதவுக்கு பின்னாடி வச்சிருக்கும் இந்த பாயை தூக்கிவர அத்தனை சிரமப்படுவேன். அதை விரிச்சு போட கையாலாகாது. தினத்துக்கும் அம்மா திட்டுவாங்க. ஒழுங்கா பாயை விரிக்கைலைன்னு.... ஏன்னா, பிஞ்சு வந்திடாம இருக்க குச்சிகளை மடிச்சு ஓரத்துல தைத்து வச்சிருப்பாங்க.  அப்படி தச்சு வச்சிருக்கும் பக்கத்தை மேல வர்றமாதிரி விரிச்சு படுத்தா குச்சிகள் குத்தும்., இதை தெளிவா சொல்லிக்கொடுத்திருந்தா புரிஞ்சிருக்கும் :-( . இப்பயும் இந்த கோரைப்பாய்தான் எனக்கு. என்ன ஒன்னு! அப்ப இருந்த நீளம் அகலம், தடிமன்ல இப்ப வர்றது இல்ல. ரொம்ப மெல்லிசா இருக்கு.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு பழமொழி சொல்வாங்கல்ல அந்த பழமொழிக்கு காரணம், பாய் முடைய கற்பூர புல், கோரை புல்ன்னு ரெண்டு வகை புல் பயன்படுது. இதுல கற்பூரபுல் விலை ஜாஸ்தி. கற்பூரபுல்ன்னால நெய்யப்பட்ட பாய்ல, கற்பூர வாசனை வருமாம்.  பணக்காரங்கதான் வாங்குவாங்க. கோரைப்புல்லுக்கு இன்னொரு பேரு கழு.  அதனால, கற்பூர புல்லினால் பாய் நெய்றவங்களும், பயன்படுத்துறவங்களும், ‘கழு’ தைக்க வருமா கற்பூர வாசனைன்னு கேட்க,,, அதுவே மருவி இன்னிக்கு அதுவே கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு ஆகிட்டுது. கழுதைக்கு மட்டுமில்ல நமக்கு நாட்டு பாய்களின் அருமை தெரில:-(

கிராமத்து வாழ்க்கை தொடரும்...

நன்றியுடன்,
ராஜி

Friday, December 28, 2018

அரங்கநாயகி சமேத உத்தர அரங்கநாத பெருமாள் கோவில் - பள்ளிக்கொண்டா, அறிவோம் ஆலயம்

மனசுக்கு அமைதி கொடுக்கக்கூடிய கோவில்கள் பல இருக்கு. அந்த வரிசையில் வேலூர் மாவட்டத்திலிருக்கும் பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதர் கோவில். ஊரின்  மையத்திலிருந்தாலும் வாகன இரைச்சல், ஜனநெருக்கடியின்றி, ரொம்ப சுத்தமா விசாலமா இருக்கு. இந்தக்கோவில் இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமாகும். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளை ஆட்கொண்டதுபோல இங்கு செண்பகவல்லியை ஆட்கொண்டது, பிரம்மன் செய்த யாகத்தை காத்தது, பொங்கி வந்த ஆற்றுவெள்ளத்தை படுத்து தடுத்தது என பல வரலாற்றினை கொண்டது திருமணத்தடை இருப்பவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்குமென்பது நம்பிக்கை.

இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் நாரத மாமுனிவர் பிருகு மகரிஷிக்கு சொன்னதாய் இரண்டு அத்தியாயங்களாய் கூறப்பட்டுது. காஞ்சி மகாத்மியத்திலும், ஹஸ்தகிரி மகாத்மியத்திலும் சொல்லப்பட்டுள்ளது என பள்ளிகொண்டை எனும் உத்திரரங்கஷேத்திர புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகொண்டா ரங்கநாதரைத் தரிசித்து மகிழ்ந்த பிரம்மா, யாகம் செய்ய விரும்பினார். அதற்கான இடத்தைத் தேடினார். முடிவில் வேறு இடங்களில் நூறு யாகங்கள் செய்வதைவிட, சத்யவிரத ஷேத்திரம் எனும் காஞ்சீபுரத்தில் செய்வதே சாலச் சிறந்தது என்று தீர்மானித்தார். இந்த நிலையில் சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் தங்களுக்குள் யார் பெரியவர்?ன்ற போட்டி ஏற்பட்டது. இதற்கான பஞ்சாயத்து பிரம்மாவிடம் வந்தது. பிரம்மா, லட்சுமியே உயர்ந்தவள் எனக்கூறினார். கோபங்கொண்ட சரஸ்வதி அங்கிருந்து, மேற்கேயுள்ள நந்திதுர்க்க மலைக்குச் சென்று, லட்சுமிதேவியைவிட தன் நிலை உயர தவம் செய்தாள். காஞ்சிபுரத்தில், தான் செய்யவிருக்கும் யாகத்திற்கு, தம்பதி சமேதராய் கலந்துக்க வேண்டியிருப்பதால்  சரஸ்வதியை அழைத்தார் பிரம்மா. ஆனா, பிரம்மாவுடன் வர  சரஸ்வதிதேவி சம்மதிக்காமல் அங்கேயே தங்கிவிட்டார்.
தனியாளாய் யாகத்தில் உட்காரமுடியாமல், சரஸ்வதிதேவியின் அம்சத்தினைக்கொண்டு சாவித்திரின்ற  பெண்ணை உருவாக்கி, அவளை மணம்புரிந்து யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. இதைக் கேள்வியுற்ற சரஸ்வதி, பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து, ஷீர நதி எனும் நதியாக பாய்ந்தோடி, யாகத்தை அழிக்க முற்பட்டாள். இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். 
பெருமாள், சாவித்ரி உமது அம்சமே! உனக்கு பிரம்மா துரோகம் செய்யவில்லையென சரஸ்வதியை சமாதானம் செய்து அழைத்து வந்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் ‘பள்ளி கொண்டான்’ எனப்பட்டது. பெருமாள் ‘உத்தர ரங்கநாதர்’ எனப்படுகிறார்.
பெருமாளை அதுவரை பாற்கடலில் மட்டுமே  சுமந்துவந்த  ஆதிஷேசன் இத்தலத்தில்தான் முதல்முறையாக அவரை நீரின்மேல் நேரடியாக சயனிக்க வைத்தார்  பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால். இத்தலத்து ஆறுக்கு பாலாறு என்று பெயர் ஏற்பட்டது.  தாயார் ரங்கநாயகி தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அழகுற அருளாசி வழங்குகிறாள்.
சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் மணம் புரிந்ததுபோல, பள்ளிகொண்டாவில் சம்பாதிமுனிவர் விருப்பப்படி, செண்பகவல்லி என்ற பக்தையை பங்குனி உத்திர நாளன்று திருமால் மணம் புரிந்தார். 
1925-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல்துறை ஆய்வறிக்கையின்படி, இத்தலத்தை பற்றி 22 கல்வெட்டுகள் கண்டடெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 18 கல்வெட்டுகள் உத்திர ரங்கநாதர் ஆலயத்திலும், மூன்று கல்வெட்டுகள் நாகநாதீஸ்வரர் கோவிலிலும், ஒரு கல்வெட்டு செல்லியம்மன் கோவிலிலும் கிடைத்தது. இக்கல்வெட்டுகள் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.848), முதலாம் பராந்தகன் (கி.பி.926), முதலாம் ராஜராஜன் (கி.பி. 985), முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), இரண்டாம் ஜடாவர்மவீரப் பாண்டியன் (கி.பி.1306), குலசேகரசம்புவராயன் (கி.பி.1307) போன்ற மன்னர்களின் கொடைகளையும், நிலதானங்களையும் இந்த கல்வெட்டுகள் எடுத்து சொல்லுது.
பாலாற்றின் தென்கரையில், கிழக்குமுகமாய் அமைந்திருக்கு இந்த கோவில். கோவிலுக்கு இடப்புறம் வியாசர் புஷ்கரணி. அடுத்து நான்கு கால் ஊஞ்சல் மண்டபம். அடுத்து  ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம்.  இரண்டு திருச்சுற்றுக்களைக் கொண்டது இக்கோவில்.  கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம் இருக்கு. அடுத்து மகாமண்டபம், அர்த்த மண்டபம் இருக்கு. 

வெளிச்சுற்றில் ராமானுஜர், ராமர், கண்ணன், ஆண்டாள், தலமரங்களான பாதிரி, பாரிஜாதம், கருடாழ்வார், எம்பெருமான் திருவடி, சொல்லின் செல்வனான வீரஅனுமன் அருகே பக்த அனுமன்,  நாகர்சிலைகள் தனித்தனி சன்னிதிகள் இருக்கு.
மகாமண்டபத்தின் இடதுபக்கம் உற்சவமூர்த்திகளும், 12 ஆழ்வார்களும் இருக்காங்க. இதுதவிர, பிள்ளைலோகாச்சார்யார், முதலியாண்டான், மணவாளமாமுனி, ஆளவந்தார், நவநீதகண்ணன் ஆகிய திருமேனிகள் கலைநயத்துடன் காட்சி தருகின்றது. இதில் கண்ணன் திருமேனியைக் காண கண்கோடி வேணும்.

மூலவர் பள்ளிகொண்ட பெருமாள், தெற்கே தலை வைத்து, வடக்கே தன் திருப்பாதங்களைக் காட்டி, பாம்பணையின்மீது பள்ளிக்கொண்டுள்ளார். அவரின் திருமார்பில் திருமகளும், தொப்புள்தாமரையில் நான்முகனும், அரங்கனின் காலருகே ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்துள்ளனர். எம்பெருமானின் திருக்கரம் பக்தர்களை ‘வா’ என அன்போடு அழைக்கும் கோலத்தில் அமைந்திருக்கு. . இவர் சாளகிராமத்தால் ஆனவர். இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் சிறப்பாக நடக்கவும் பிரிந்த தம்பதிகள் சேரவும் இங்கு திருமணம் செய்தால் மணம் ஒத்து வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிராத்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்மபாளும் திருமஞ்சனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
உத்திரரங்கநாதர் :
தெற்கே ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள எம்பெருமான் ஸ்ரீரங்கநாதரைப்போல, வடக்கே பள்ளிகொண்டுள்ள இத்தலபெருமாள், உத்திர (வடக்கு) ரங்கநாதர் என அழைக்கப்படுகிறார். இவர் சின்னஞ்சிறு வடிவில் சயனித்துள்ளதால் பாலரங்கநாதர் என்றும் பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். மகாமண்டபத்தில் கஸ்தூரிரங்கன் எனும் சோட்டாரங்கநாதர் வடிவமும் தனியே அமைந்திருக்கு. 

சோட்டா ரங்கநாதர்..
இவரே அன்னியப் படையெடுப்பின்போது மூலவரைக் காத்தவர் என வரலாறு கூறுகிறது. ஒரு அன்னிய தேசத்தவர் படையெடுப்பின்போது, இங்கிருக்கும் மூலவரை வேறொரு இடத்துக்கு கொண்டு சென்று மறைத்து வைத்து, அவருக்கு பதிலாக, சிறியதொரு ரங்கநாதர் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர்.  உருவத்தில் சின்னதா இருந்ததால அவருக்கு சோட்டா ரங்கநாதர்ன்னு பேர் வந்ததும் அன்னியர் ஆதிக்கம் அகன்றதும் , பழையபடி உத்தர அரங்கநாதனை பிரதிஷ்டை செய்து, சோட்டா ரங்கநாதரை தனிச்சன்னிதியில் வைத்து வழிபட ஆரம்பித்தனர். இன்னிக்கும் சோட்டா ரங்கநாதருக்கே முதல் மரியாதை. இக்கோவிலில் இரவு தங்கியிருந்து பெருமாளை வழிப்பட்டால் மோட்சம் கிடைக்கும்.


பிரம்மஹத்தி தோஷம் :
திரேதாயுகத்தில் தேவேந்திரன் தன் மனைவி இந்திராணியோடு வனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது கிளி வடிவில் இருந்த ரிஷிகளை கொன்றான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் வேண்டி நின்ற இந்திரன், காஷ்யப்ப முனிவர் அறிவுரைப்படி, பள்ளிகொண்டா தலத்து வியாச புஷ்கரணியில் நீராடி, ஓராண்டு காலம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதரைத் தரிசித்து, தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார். 
பரிகாரத் தலம் :
இத்தலம் பதினாறு வகை செல்வங்களையும் அள்ளித்தரும் தலமாகப் போற்றப்படுது. அதிலும் குறிப்பா திருமணப்பேறு வழங்கும் தலம் இதுங்குறதால  இக்கோவிலில் திருமணங்களை  நடத்தி வைப்பது அதிகம் நடைப்பெறுகிறது. கோவிலை சுற்றியும் நிறைய திருமண மண்டபங்கள் இருக்கு. மண்டபத்தில் திருமணம் நடந்தாலும், முதலில் கோவிலுக்கு வந்து அரங்கனை வழிபட்ட பின்னரே தங்கள் வீடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் இப்பகுதி மக்கள். நீண்டகாலம் திருமணம் தடைபட்டவர்கள், இங்கு வந்து வேண்டிசென்றால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. .இக்கோவிலின் தலமரம் பாதிரி மற்றும் பாரிஜாதம் ஆகும். தல தீர்த்தமாக வியாசர் புஷ்கரணி எனும் திருக்குளம் உள்ளது. ஆலயத்தின் அருகே ஓடும் நதி ‘ஷீரநதி’ அல்லது ‘பத்மினி’ எனும் பாலாறாகும். இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


விழாக்கள் :

இந்த ஆலயத்தில் சித்திரையில் பத்து நாட்கள் பிரமோற்சவப் பெருவிழா நடைபெறுகிறது. இது தவிர, வைகாசியில் விசாககருட சேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம், ஆடியில் பூரம், நான்காம் வெள்ளி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபத்திருவிழா, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தனுர் மாத பூஜை, தை மாதத்தில் கிரிவலம், மாசியில் தெப்பல் உற்சவம், பங்குனியில் உத்திரம், பெரியபிராட்டியார் உற்சவம் என விழாக்களுக்கு இங்கு பஞ்சமில்லை.


காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்திருக்கும்.

ஆம்பூர், வேலூரிலிருந்து நேரடி பேருந்து இருக்கு. வேலூர் பெங்களூர் சாலையில் பள்ளிக்கொண்டா/குடியாத்தம் நிறுத்தத்தில் இறங்கி ஷேர் ஆட்டோக்களில் வரலாம். வேலூர், ஆம்பூர், குடியாத்தம்வரை ரயில்ல வந்துட்டு அங்கிருந்தும் வரலாம். . தெற்கே பீஜாசலம் எனும் வித்துமலை இருக்கிறது. சென்னைல இருந்து 150 கி.மீ, வேலூர் - குடியாத்தம் வழித்தடத்தில், வேலூரிலிருந்து 23 கி.மீ, ஆம்பூரிலிருந்து 25 கிமீ, குடியாத்தத்திலிருந்து 9 கிமீ தொலைவில், பள்ளிக்கொண்டா இருக்கு. 

ரங்கா! ரங்கா! ரங்கா!


நன்றியுடன்,

Thursday, December 27, 2018

ஐயப்பன் வளர்ந்த அரண்மனை, பந்தளம், - ஐயப்பனின் அறுபடைவீடுகள்


ஐயப்பன் மகிஷியை வதம் செய்த எருமேலி, ஐயப்பன் கோவில்கொண்ட சபரிமலை, பூரணை புஷ்கலையை மணந்த அச்சன்கோவில், குழந்தை வடிவில் காட்சியளிக்கும் குளத்துப்புழா, வில்,வாள், போர் தந்திரங்கள் என சகல கலைகளையும் ஐயன் கற்க வந்த ஆரியங்காவு என ஐயப்பனின் அறுபடை வீடுகள் பத்தி பார்த்துக்கிட்டு வந்திருக்கோம். அந்த வரிசையில் இன்னிக்கு பார்க்கப்போறது பந்தளம். சிவ-விஷ்னுவின் அம்சமான ஐயப்பன் குழந்தைவடிவில் பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றலான பந்தள மன்னரான ராஜசேகரன் கண்களில் அகப்பட்டு, தன் அரண்மனைக்கு கொண்டு சென்று வளர்த்த இடமே பந்தளம். மிச்சம்மீதி கதைலாம் உலகுக்கே தெரியும். 
சுவாமி ஐயப்பன் சிவவிஷ்ணு அம்சமானபோதிலும், ராஜவம்சத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு ராஜவாழ்க்கை பிடிக்கலை. தனக்கு இளவரசு பட்டம் சூட்டுவது அன்னைக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சதும், அதையே சாக்காய் வைத்து  சபரிமலைக்கு போய் தங்கிக்கிட்டார். ஆனாலும், தந்தையின் ஆசைக்காக வருசத்தில் ஒருநாள் மட்டும் இளவரசன் கோலம் சூடிக்கொல்வதாக தன் தந்தைக்கு வாக்களித்தார். அந்த சம்பிரதாயம் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.


பந்தள மன்னர் ராஜசேகரன்,  ஐயப்பனுக்காக சுத்த தங்கத்தினாலான ஆபரணங்களை செய்து வைத்திருந்தார். அந்த ஆபரணங்கள் இன்றும் கேரளத்தில் உள்ள பந்தளம் அரண்மனையில் இருக்கிறது. ஐயப்பன் பந்தளம் அரண்மனையில் வாழ்ந்ததாக வரலாறு. அரண்மனை என்றவுடன் பெரிய மாடமும் தூண்களும் இருக்கும் என்று எல்லோரும் நினைப்போம். ஆனா, அந்த அரண்மனை அப்படி இல்லை. இரண்டு ஒட்டு வீடுகள்தான். அங்குதான் எல்லோரும் பார்க்கத்துடிக்கும் ஐயப்பனின் ஆபரணங்கள் இப்போதும் இருக்கிறது.
பக்தர்கள் புடைச்சூழ வருசத்தில் ஒருநாள், தை முதல்நாளில் மகரஜோதி தெரியுமன்று, பந்தளத்திலிருந்து,  அந்த ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விசயங்கள் மூணு இருக்கு.

1. ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லும்போது ஐயப்பனின் தந்தை ஸ்தானத்தில் பந்தளம் ராஜக்குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதிநிதியாக மலைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.  ஐயப்பனின் ஆபரணங்கள் மூன்று பெட்டிகளில் இருக்கும்.  அதை தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர் மட்டுமே மலைக்கு சுமந்து செல்வர். வாழ்நாளில் ஒருமுறையாவது ஐயப்பனின் ஆபரணங்களை பார்த்துவிடமாட்டோமா என பக்தர்களை ஏங்கவைக்கும் அந்த ஆபரணங்களை சுமந்து செல்வதைஅவர்கள் பெரிய பாக்கியமா நினைக்கிறாங்க. பந்தளத்திலிருந்து மலைக்கு செல்ல மூன்று நாட்களாகும். அவர்கள் அந்த ஆபரணப்பெட்டிகளை மூன்று நாட்களும் தலையில் சுமந்தே செல்வர்கள். பந்தளராஜா அரண்மனையானது, பந்தளத்தில் அச்சன்கோவில் ஆற்றை ஒட்டியுள்ள ஐயப்பனின் வலிய கோயிக்கால் என்றழைக்கப்படும் கோவிலுக்கு அருகில் இருக்குது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், பந்தளத்திற்கு வந்து அங்குள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்தபின்னர் அரண்மனையில் உள்ள திருஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துச் செல்வார்கள். கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த திருஆபரணம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

மகரஜோதிக்காக பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணப்பெட்டி ஊர்வலம்  புறப்படும் நேரத்திலிருந்து, சபரிமலை ஐயப்பன் ஆலயத்தைச் சென்றடையும் நேரம் வரை மட்டும் வானத்தில் ஒரு கழுகு தோன்றி, திருஆபரணம் செல்லும் பாதையில் பறந்தபடி இருக்கும். இது இன்றுவரை ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு அதிசய நிகழ்வு.

பந்தளம் ராஜக்குடும்பத்தை சேர்ந்தவர்தான் ஐயப்பன். ஆனாலும், பந்தள ராஜக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் சபரிமலைக்கு  அடிக்கடி போகமாட்டாங்க. ஆண்டுக்கு ஒருமுறை மகரஜோதியன்னிக்கு மட்டுமே போவாங்க. காரணம், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்க வேண்டியது வரும். அதனால் தவம் கலையும். எனவே ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் போதும் என ஐயப்பன் தன் குடும்பத்தை கேட்டுக்கொண்டதாக வரலாறு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.

பெட்டியை மலைக்கு கொண்டு போகும்போது பகவான் விஷ்ணு கருடன் வடிவில் பெட்டிக்கு காவலாக வருவதாக ஐதீகம். பெட்டியை மலைக்கு கொண்டுச் செல்ல அந்த குறிப்பிட்ட நாள் அன்று அனைத்தும் தயாராக இருந்தாலும் வானத்தில் கருடன் தெரிந்தப்பின்தான் அவர்கள் மலைக்கு கிளம்புவாங்க. இதுவரை ஒரு ஆண்டுகூட கருடன் வராமல் இருந்ததில்ல.. பெட்டியை மலைக்கு கொண்டு செல்வதும் நிற்கவில்லை என சொல்றாங்க. பெட்டியை மலைக்கு கொண்டு சென்று திரும்பும்வரை மூன்று ஆபரணப்பெட்டிகளுக்கும் காவலாக கருடன் வானத்தை சுற்றியபடி வந்து கொண்டே இருக்குது.
ஐயப்பன் சபரிமலைக்கு சென்றபின், பந்தள மகாராஜா ராஜசேகரின் மகனான குணசேகரன், தன் அன்னையின் ஆசைப்படி அரியணை ஏறாமல் ,மணிமகுடத்தை மறுத்து நாட்டைவிட்டு வெளியேறி,  பல இடங்களுக்கு சென்று கடைசியில் சித்தூர் வந்தடைந்து அங்கயே இருந்து தங்கிட்டார். அவருக்கு பணிபுரிய தளவாய்மாடன் அருகில் இருக்கிறார்

தமிழ்நாட்டில் அதிக மக்கள் வந்து சாஸ்தாவை வணங்கும் கோவில், சாஸ்தா வேல் வைத்திருக்கும்  கோவில்,  சாஸ்தாவிற்கு தேர்த்திருவிழா நடைப்பெறும் கோவில் ஐயப்பன் அவதாரத்தோடு தொடர்புடைய தமிழகத்தில் இருக்கும் கோவில் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் ஆகும்.  பல ஜாதியினருக்கும் குலதெய்வமாக விளங்கும் கோவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திருவிழா நடைபெரும் கோவில் அது.

சித்தூர் தென்கரை மாகாராஜர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதக்கடைசி வெள்ளிக்கிழமை அன்னிக்கு அதாவது ஒடுக்கத்து வெள்ளி இரவு 12 மணிக்கு கோவில் அர்ச்சகர் குளித்து ஈரத்துணியுடன் கோவிலில் நுழைந்தவுடன் கோவில் கதவை சாத்தி விட்டு அவர் மட்டும் தனியாக தளவாய் மாடனுக்கு பூஜை செய்வார். பின்னர் கதவை திறந்தவுடன் பக்தர்கள் தளவாய் மாடனை வழிபடுவார்கள் அடுத்த நாள் அதாவது சனிக்கிழமை அன்று காலையில் தென் கரை மகாராஜாவிற்கு இரண்டு முறை அபிஷேகம் நடை பெறும் பின்பு பக்தற்களுக்கு அருமையான பாயாசத்தூடன் அன்னதானம் நடைபெறும்.

திருவனந்தபுரத்திலிருந்து கேரளத்தின் வடபகுதிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பந்தளம் இருக்கு. ரயில் மார்க்கமா போகனும்ன்ன்னா செங்கனூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 14 கி.மீ. சென்றால் பந்தளத்தை அடையலாம்.  விமான மார்கமாக போகனும்ன்னா திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து 100 கி.மீ. சாலைப் பயணம் செய்து பந்தளத்தை அடையலாம். அச்சன்கோயில் நதிக்கரையில் அழகிய இயற்கைச் சூழலில் ஐயப்பனின் குறிப்பிடத்தக்க புனிதத் தலங்களில் ஒன்றான வலிய கோயிக்கால் ஆலயமும், அதனையொட்டி பந்தள அரண்மனையும் இருக்கு.

அடுத்தவாரம்  காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் பத்தி பார்க்கலாம்... இது அறுபடை வீடுகள்ல ஒன்னுன்னு சொல்றவங்களும் சிலர் இருக்காங்க.

படங்கள்லாம் முகநூலில் சுட்டது..

நன்றியுடன்,