Friday, June 21, 2019

தல வரலாறு தெரியாத காளிகேசம், காளிகோவில் - புண்ணியம் தேடி


பெரிய மகளுக்கு நிச்சயதார்த்தம், சின்னவளுக்கு காலேஜ் வேட்டைன்னு அலைஞ்சு திரிஞ்சதால பிளாக் பக்கம் வரமுடில.  என் உயிர், ஹாபி, எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்னு டயலாக்லாம் விடுவே. பொண்ணுங்க பிசில என்னைய மறந்துட்டே பார்த்தியான்னு பிளாக் கோவிச்சுக்கும் முன்னாடி  வந்துடனும்ன்னு இதோ வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன். இன்றைய பதிவில் நாம பார்க்கப்போறது,  காளிகேசம், காளிகோவில். கன்யாக்குமரி பற்றிய எழுதிய பதிவுகளில் இந்த கோவிலை பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன். மறந்துபோனது நியாபகம் வந்தது.கூடவே ஸ்ரீகாளி அம்மனின் அருளும் இருக்கவே இந்த கோவிலைப்பற்றி எழுத முடிந்தது.. நகர்க்கோயில் வடசேரியிலிருந்து பாலமோர் ரோடு வழியாக செல்லும் பாதையில் சுமார் 30 கி.மீ தொலைவில் இருக்கிறது கீரிப்பாறை, அங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த காளிகேசம் காளிகோவில் அம்மன்கோவில்.
வாங்க! கோவிலுக்குள் போகலாம் .முதலில் இங்கு செல்வதென்றால் கீரிப்பாறை வனத்துறை அலுவலக செக்போஸ்டில் டிக்கெட் வாங்கி, நம்மோட வண்டியை அவங்க சோதனை செய்தபின்னே உள்ள விடுறாங்க. மதுபாட்டில்கள், தீப்பெட்டி, பிளாஸ்டிக் மாதிரியான சில பொருட்களை நாம கொண்டு போக தடை விதிக்கிறாங்க. வாகனத்துக்கு மட்டும் நுழைவு கட்டணமில்லை. நாம் எத்தனை பேர் செல்கிறோமோ அத்தனை பேருக்கும் நுழைவு கட்டணம் வாங்குறாங்க. சிலசமயம் கூட்டமாக செல்ல அறிவுறுத்துகிறார்கள். முன்னலாம் ‘குடி’மக்களின் தொந்தரவும், காட்டுயானைகள் எப்பொழுது வேண்டுமானாலும் ரோட்டில் நடமாடும் என்பதாலும் முடிஞ்சவரை கூட்டமாய் போகச்சொல்றாங்க. .ஏன்னா இப்ப கோவில் இருக்கும் இந்த இடம் யானைகள் இருக்கிற வனப்பகுதியா இருந்ததாம். இப்பயும் இந்த பகுதிகளில் ஓரிரு யானைகள் இருக்கு. அவை உணவு, தண்ணீர் வேண்டி இந்த பக்கமா போகும்ன்னுதான் இந்த அட்வைஸ். ஒருவழியாக சோதனை எல்லாம் முடிந்து எங்கள் வாகனத்தை அனுமதித்தனர்.

ரோட்டின் இருபக்கங்களிலும் மலைகள், சாலைகளை மறைத்து நிற்கும் மரங்கள், காட்டுச்செடிகள், கொடிகள்ன்னு என பார்ப்பதற்கே கண்ணுக்கு குளுமையாக இருக்கிறது. இங்க கோடைக்காலங்களில் கோவிலுக்கு செல்பவர்கள் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னான்னா,எப்பொழுதும் காட்டுவிலங்குகள்கிட்ட கவனமாக இருக்கணும். கீரிப்பாறை, மாறாமலை, வெள்ளாம்பி போன்ற சுற்றுவட்டார இடங்களில் நிறைய மலைவாழ் மக்கள் இருக்கிறாங்க. இவங்களை காணிக்கராங்கன்னு இங்க சொல்றாங்க, இங்க, வாழை, கிராம்பு ஏலக்காய் ,நல்லமிளகு எல்லாம் பயிர்செய்யுறாங்க ,இவங்ககிட்ட இந்த பொருட்களைவாங்கினா ரொம்ப சுத்தமா இருக்கு.கீரிப்பாறைக்கு மேலே நிறைய எஸ்டேட்கள் இருக்கு,அங்கே கிராம்பு பறிச்சு காயவெச்சு மூட்டை மூட்டையா மலைமேலிருந்து கீழே எடுத்துக்கிட்டு வந்து விக்கிறாங்க. மேலும் இந்த இடத்தை சுத்தி ரப்பர் மரங்கள் நிறைய இருக்கு. ரப்பர் பால் எடுக்கிறதுதான் அவங்க முக்கியமான தொழிலா இருக்கு.
அதெல்லாத்தையும் வேடிக்கை பார்த்துகிட்டே போகும்போது ரொம்ப கவனமா போகணும் ஏன்னா இப்ப கோடைகாலம்கிறதுனால ஓடை எல்லாம் வறண்டு போய் இருக்கு. அதனால யானை, கரடி போன்ற காட்டு மிருகங்கள் தற்போது தண்ணீர் தேடியும், உணவிற்காகவும் மக்கள் நடமாட்டம் இருக்கிற இந்த ரோட்டுக்கு வர ஆரம்பிக்கும்.இயற்கை எழிலை ரசிக்கிறவங்க சுற்றுப்புறங்களிலும் கொஞ்சம் கவனமாய் இருப்பது அவசியம்.

காகாளிகோவிலுக்கு கோவிலுக்கு போகும்முன் இந்த பாலத்தை கடந்துதான் போகணும். நிறையபேர் இதுல இறங்கி போட்டோக்கள் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. மலையிலிருந்து பாறைகளின் வாழேயாக சலசலத்து, ஓடிவரும் இந்த ஆற்றை பார்த்தவுடன், ராஜாதி ராஜா படத்துல வரமாதிரி ,மலையாள கரையோரம் தமிழ் பாடும் அருவின்னு பாடத்தோணும்,அவ்வுளவு அழகு இந்த இடம்!!

ந்த பாலத்தை தாண்டி ஒரு சமப்பகுதி நிலப்பரப்பு இருக்கு. அதுவழியா நீரோடை ஓடிகிட்டே இருக்கு. மழைக்காலங்களில் நிறைய வெள்ளபெருக்கு இருப்பதினால் இந்த இடத்தை கடந்து செல்வது கடினமாக இருக்குமாம். இந்த பகுதிவழியா நீரோடை ஒன்று ஓடுகிறது. அதில் கால் நனைச்சு போறது மலையிலிருந்து வருகிற சில்ங்கிற குளுமையான தண்ணி மனசுக்கு இதமாக இருக்கு. ரொம்பநேரம் அங்க இருந்து குளிச்சுட்டு வர ஆசைதான். ஆனா, காட்டு யானைகள் சர்வ சாதாரணமா வரும்ன்னு பயம் காட்டினதால அந்த இடத்தைவிட்டு நகர்ந்துட்டோம்.

இம்மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆறு இங்குள்ள மலை சரிவுகளில் விழுந்து, பலவிதமான மூலிகை செடிகளுக்கிடையே ஓடிவருவதால் இயற்கையாகவே மருத்துவ குணம் உள்ளதாக இருக்கு இந்த தண்ணீர். வானுயர்ந்த மரங்களும், பெரிய மலைகளும் , மலையேற்றுபவர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும். சிலசமயம் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வத்தையும் இங்கே பார்க்கலாம் என்றும் சொல்றாங்க.


ருவழியா கோவிலுக்கு வந்துட்டோம். இயற்கை எழில்சூழ நீரோட்டத்தின் கரையிலே அழகே வடிவெடுத்து வந்ததுப்போல் காளியம்மை மற்றும் சிவன் கொலுவீற்று இருக்கிறார்கள். இங்க நடைதிறப்பு பற்றிய அறிவிப்பும் எழுதப்பட்டுருக்கு. நாங்கள் சென்ற நேரம் அங்க பூஜைகளை முடிந்து பெரும்பாலோனோர் திரும்பிக்கொண்டிருந்தனர். கோவிலை சுற்றிவந்து அம்மனை கும்பிட்டுவிட்டு, நீரோடையில் இறங்கி கால்களை நனைத்து அறிவிலிருந்து வரும் வெள்ளத்தை நன்றாக ரசித்து இயற்கை அழகை உள்வாங்கிக்கொண்டோம்.

நாங்கள் சென்ற நேரம் மதியம் எல்லோரும் பூஜை முடித்து சென்றுக்கொண்டிருந்தனர். அன்று அம்மனுக்கு ஏதோ விஷேச பூஜைபோல!! புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அழகாக காட்சியளித்தார்..

அருவியில் இறங்கி ஆசைதீர அங்கும் இங்கும் ஓடுவது சிறுவயது நியாபகத்தை நினைவூட்டியது. இப்ப கோடைக்காலம் என்பதால் தண்ணீர் வரத்தும் குறைவாகவே இருந்தது. இங்க நாங்கள் தவறவிட்டது, வட்டப்பாறை அருவியும், கீரிப்பாறை காட்டில் சுமார் 500 வருடங்களை கடந்த மரம் ஒன்றையும்தான் :-(

இந்த இடத்துக்கு காளிகேசம்ன்னு ஏன் பேர் வந்துச்சுன்னா, இங்க இருக்கும் மலையை காளியாய், அதில் உருவாகும் அருவியை காளிதேவியின் கூந்தல்ன்னும் உருவகப்படுத்தி இந்த இடத்துக்கு காளிகேசம்ன்னு பேர் உண்டானது. தலைமுடிக்கு கேசம்ன்னும் ஒரு பேர் உண்டுன்னு நம்மில் எல்லாருக்குமே தெரியும். இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் நீருற்றுகளிலிருந்து பெருக்கெடுத்து வரும் ஆறு பூதப்பாண்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அருவியாக பாய்கின்றது. இந்த அருவியில் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றுவதில்லை. இந்த அருவியின் அருகில் பல பாறைக்குன்றுகள் இருக்கு. அந்த பாறைக்குன்றுகளில்  சுற்றுலா பயணிகள் சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம். இந்த பாறைக்குன்றுகளுக்கு போட்டாணிக்குகைன்னும் பேரு. பாறை அறுத்த இந்த குகைகளில் ஒன்றில் பழங்குடி இன மக்கள் வசித்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாம். 

இயற்கை அன்னை வஞ்சனை இல்லாமல் அள்ளி கொடுத்ததால் ஐவகை நிலங்களும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருப்பதால் அருவிகளும், நதிகளும், மலைகளும், கடலும், வயல்வெளிகளும் என எங்கு பார்த்தாலும் அழகு மனசை கொள்ளைக்கொள்ளும்.  இம்மாவட்டத்தில் 14 வகையான காடுகள் இருக்காம்.  இப்படி ஒரு நிலப்பாங்கு கிடைத்தால் வனத்துறை எப்படி பாதுகாக்க வேண்டும்?! அதுக்குலாம் தமிழக மக்கள் கொடுத்து வைக்கலியே!! மூங்கில்களைக்கொண்டு வட்டப்பாறையில் ஒரு பூங்காவினை உருவாக்கி வைத்திருந்தனர். அதுவே அந்தப்பகுதி மக்களின் சுற்றுலா தலம். வட்டப்பாறை, கீரிப்பாறை காளிகேசம் காளிகோவில் என மக்கள் வந்துக்கொண்டிருந்தனர். அதுவும் 1992ம் ஆண்டு அடித்த மழையில் அந்த மூங்கில் பூங்காவும் அழிஞ்சு போச்சு. 

இங்கிருக்கும் காளி அம்மன் கோவில் வரலாறு யாருக்கும் தெரில. இந்த இடத்தை எல்லாரும் சுற்றுலா தலமாய்தான் பயன்படுத்துறாங்க. அசைவம் சமைச்சு சாப்பிட்டு வார இறுதி நாளை கொண்டாட வருபவர்களே இங்கு அதிகம். அப்படி சமைச்சு சாப்பிடுறவங்க கற்களை கொண்டு உருவாக்கிய  அடுப்பினை சரிவர அணைக்காம போய்டுறாங்க. இதனால் அங்கு தீப்பற்றி காட்டு மரங்கள், விலங்குகள் பாதிப்படையுது. இதன் காரணமாவும் இப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுது.

கீரிப்பாறை காட்டில் சுமார் 500 வருடங்கள் கடந்த மரம் ஒன்று சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்க்கக்கூடிய மரம். இந்த மரத்துக்கு அப்படி என்ன விசேசம்ன்னா?!  முற்காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் நினைவாக தொல்காப்பியர் என இம்மரத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம்தான்னு இப்பதான் எனக்கு தெரியும். நாகர்கோவிலிலிருந்து நேரடி பேருந்து காளிகேசத்துக்கு உண்டு.
நியாயமா இந்த பதிவு மௌனச்சாட்சிகளில் வந்திருக்க வேண்டியது. ஆனா, ஒரு கோவில் இருந்ததால் புண்ணியம் தேடி பகுதியில் வந்துடுச்சு. ராஜிக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோங்க,

நன்றியுடன்,
ராஜி...

Sunday, June 09, 2019

திருமணம் ஆனப்பெண் காதலிக்கக்கூடாதா?! - பாட்டு புத்தகம்

வேற ஒருத்தங்களுக்கு வித்துட்டா  மறந்துடனுமா என்ன?! இந்த ஒருவரி போதும் கதையின் கருவை சொல்ல...  பதின்ம காதல், பள்ளி காதல், ஒருதலை காதல், கல்யாணத்துக்குப்பின் காதல்ன்னு காதலை பலவிதமாய் சொன்ன தமிழ் சினிமா திருமணமான பெண்ணின் கணவனில்லாத இன்னொருவனின் மீதான காதலை

 கண்ணியமாய் சொன்ன படம்.. கொஞ்சம் பிசகினாலும் வேற மாதிரியான படமாய் ஆகி இருக்கக்கூடும்.  ஆனா, அப்படில்லாம் இல்லாம வெற்றிப்படமா, அதேசமயம் முகம் சுளிக்க வைக்காம வெளியான படம் பூ...

ஸ்ரீகாந்த், பார்வதி மேனன்னு நடிச்ச படம்.  மேக்கப், சண்டை, ஐட்டம் சாங்க்ன்னு கமர்சியல் படமா இல்லாம யதார்த்தமான கிராமத்து ஆட்களை கண்முன் கொண்டு வந்த படமே பூ...

தாய்மாமன் மகனை, சின்ன பிள்ளையிலிருந்தே காதலிக்கும் ஒரு கிராமத்து வெகுளிப்பெண். ஒரு தவம் மாதிரி தங்கராசுக்கு பெண்டாட்டி ஆகனும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் ஒரு பொண்ணு,  ஆனா அவனோ ரொம்ப பிராக்டிக்கல் மைண்ட் கொண்ட ஆளுன்னு ஆரம்பத்திலேயே இயக்குனர் ஒரு காட்சியில் புரிய  வச்சிடுவார் இயக்குநர்.

வகுப்பில் ஆசிரியர் என்னவா ஆகப்போறேன்னு கேட்கும் கேள்விக்கு தங்கராசு பொண்டாட்டி ஆவேன்னு சொல்ல, ஆனா தங்கராசுவோ ஆசிரியரின் கோவத்துக்கு பயந்து அழுக, இப்படிதான் நாளைக்கும் சொல்வார் பேச்சை கேட்கும் ஆள்ன்னு சொல்லாமல் சொல்வார். அதுக்கு தகுந்தவாறு பணக்கார பொண்ணா கிடைச்சதும் கிராமத்து அத்தை பொண்ணை  விட்டுட்டுவான்.

படத்தின் கண்ணியத்துக்காக ஹீரோ ஹீரோயின் பேசுற சீனோ இல்ல, லவ் பரிமாறிக்கிட்ட சீனோ இல்ல. கிராமத்து பெண்ணின் காதலை ஊரே அறியும். அது ஹீரோவுக்கும் தெரியும். ஆனா எதிர்கால நலன், பணம், அப்பாவின் வற்புறுத்தல்ன்னு பணக்கார பொண்ணை கட்டிப்பார். கிராமத்து பொண்ணும் வேற ஒருத்தங்களை கட்டிக்கும். புருசனோடு வாழ்ந்தாலும் மாமனை மறக்காது. அவனை பார்க்க திருவிழாவிற்கு வரும்.

த்த்தூ இதுலாம் ஒரு படமா?! கல்யாணம்தான் ஆகிட்டுதே அதெப்படி இன்னொரு ஆளை நினைக்கலாம்ன்னு கலாச்சார காபாளர்களாம் பொங்கி எழாதவாறு  படத்தை கொண்டு போன இயக்குனரை பாராட்டனும்.

மாரியாய் பார்வதி மேனனும், தங்கராசுவாய் ஸ்ரீகாந்த்தும் வாழ்ந்திருப்பாங்க...

எனக்கு பிடிச்ச பாட்டு எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க!!

நன்றியுடன்,
ராஜி

Sunday, June 02, 2019

தன்னாலே வந்த வினை..... பாட்டு புத்தகம்

நடிகர் பிரபுக்கு, கல்யாணம், சடங்கு, செக்ஸ்ன்னா என்னன்னே தெரியாத அப்பாவி சின்னதம்பி கேரக்டர் அத்தனை பாந்தமா பொருந்தி போகும்போல!! சின்னதம்பி மாதிரியான வெகுளி கேரக்டரில் எனக்கு தெரிஞ்சே அஞ்சாறு படம் நடிச்சிருக்கார்.

முதிர்கன்னி மலையாள பெண்ணான லட்சுமி   டீக்கடை வச்சு வாழ்ந்திருக்கும் ஊரில் பிழைக்க வர்றார் பிரபு. அங்க பிரபுக்கும் ராதாவுக்கும் லவ்ஸ் உண்டாகுது. . ஒரு மழைநாளில் குடிச்சிட்டு வர்ம் பிரபு லட்சுமியை ராதான்னு நினைச்சு அணைப்பார். லட்சுமியும் ஒத்துக்கும். செக்சின் முடிவில் ராதா பெயரை பிரபு உச்சரிக்க, தன்மீது காதல்லாம் இல்லன்னு உணர்ந்து அங்க நடந்த விசயத்தை யாருக்கும் சொல்லமாட்டாங்க. ஆனா கர்ப்பம் ஆகி ஊருக்கெந் விசயம் தெரிய வரும். ஆனாலும் பிரபு பேரை சொல்லாம மறைச்சிடுவாங்க. படத்தின் முடிவில்தான் பிரபுக்கு அந்த குழந்தை தன்னுதுன்னு தெரிய வரும்.

இந்த படத்தின் வி.சி.ஆர் கேசட் என் அப்பாவின் பிரண்ட் வீட்டில் இருந்துச்சு. இந்த படத்தை அடிக்கடி பார்த்திருக்கேன். படம் முழுக்க காடு, அருவி,மலை சார்ந்த இடமா வரும். என் கனவு வீடு மாதிரியான ஆற்றங்கரை ஓரம் லட்சுமியின் டீக்கடை இருக்கும். அந்த லொக்கேஷனுக்காகவே இந்த படம் பிடிக்கும்..பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி,
 இப்போ ரெண்டு கெட்டும போனா.. இதுகென்ன வழி காமி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும  போனா.. இதுகென்ன வழி காமி
பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி......

தன்னாலே பெண்ணொருத்தி, தாயாக ஆன கதை...
உண்டாக்கி வைத்தவனே, ஓர் நாளும் அறிந்ததில்லை..
கண்ணான காதலியை கண்ணில் வைத்து பாடுகிறான்..
கல்யாண ஊஞ்சலிலே கற்பனையில் ஆடுகிறான்..
யாராலும் விடை கொடுக்க ஆகாத விடுகதையை
ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீ தானே?!
எந்நாளும் நாளை என்று ஏன் மறைத்தாய்?!

பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி..
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும் போனா இதுகென்ன வழி காமி...
பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி..

அந்நாளில் போட்ட விதை இந்நாளில் வளருதிங்கே..
அன்பான காதல் கதை அன்றாடம் தொடருதிங்கே..
உல்லாச ராகத்திலே பாடுதொரு ஜோடிக் குயில்...
சொல்லாத சோகத்திலே வாடுதொரு ஊமைகுயில்..
வாய்ப்பூட்டு போட்டுகிட்டா
வந்ததை ஏத்துகிட்டா
பாய் போட்டு தனை இழந்த பூங்கோதை
தன்னாலே வந்த வினை தான் சுமந்தாள்...

பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி...

படம்: என் உயிர் கண்ணம்மா
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா

எனக்கு பிடிச்ச பாட்டு. உங்களுக்கு பிடிக்குதான்னு கேட்டு பாருங்க..

நன்றியுடன்,
ராஜி

Saturday, June 01, 2019

அறிவுத்திருக்கோவில் -நாளந்தா பல்கலைக்கழகம்

அமெரிக்க, இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் போய்ப் படிப்பது இன்று பலருக்கும் ஒரு லட்சியக் கனவு. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, நம் பாரத தேசத்தில் இருந்த ஒரு பல்கலை கழகத்தில்  சேர வெளிநாட்டு மாணவர்கள் காத்துக் கிடந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?! மூன்று முறை படையெடுப்புக்குள்ளாகி இரண்டு முறை  மறுசீரமைக்கப்பட்டு மூன்றாவது முறையாய் முற்றிலும் அழிக்கப்பட்டு, மீண்டும் சமீபத்தில் புதுப்பொலிவுடன் ஆரம்பிக்கப்பட்டாலும்,  ஒருகாலத்தில் ஆலமரமாய் கிளைத்தது தழைத்து விழுதூன்றி தன் நிழலில் இளைப்பாறிய மாணாக்கர்களை எண்ணிபடி   தன் பழம்பெருமையை பறைசாற்றியபடி மௌனமாய்  நிற்கும்  ஒரு பல்கலைகழகத்தை பற்றிதான் இன்று மௌனச்சாட்சிகளில் பார்க்க போறோம் . உலக மனிதன் கற்களை கொண்டு வேட்டையாடி திரிந்த காலத்திலேயே நாம் நாட்டையே உருவாக்கி அரசாண்டோம்.  அப்பேற்பட்ட பழம்பெரும் பாரம்பரியம் கொண்டது நம் பாரத நாடு.  பாரத நாடு கலாச்சாரம், கலை, பண்பாடு, வீரம், பக்திக்கு மட்டும் பேர்போனதல்ல. கல்வியிலும் பாரத மக்கள் கோலோச்சினர். இயல், இசை நாடகம், சிற்பம், சித்திரம், தையல், வானவியல் முதற்கொண்டு பாலியல் கல்வி வரை பல்கலை ஞானத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.  இந்த பாரத பூமியிலிருந்துதான் பலதுறை சார்ந்த அறிவியல் உண்மைகள் உலகெங்கும் பரவியது. பலதுறை சார்ந்த படிப்புகளை கற்றுத்தர நாளந்தா, தக்சசீலா மாதிரியான பல பல்கலைகழகங்கள் முதன்முதலில் நம் பூமியில்தான் தோன்றியது.


உலகத்தின் பல மூலைகளிலிருந்து இங்கு வந்து இந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பல்லாண்டுகள் தங்கி படித்தனர். தாங்கள் படித்து சேர்த்த அறிவினை தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்று வளம் சேர்த்தனர் என்பது வரலாற்று உண்மையாகும்.


உலக வரலாற்றிலே அமைப்புரீதியாக முதன்முதலாய் தோன்றியது நாளந்தா பல்கலைகழகமாகும்.  இது இப்போதைய பீகார் மாநிலத்தின் பாட்னாவிலிருந்து 90 கிமீ தொலைவிலுள்ளது.  பாட்னாவின் அன்றைய பெயர் பாடலிபுத்திரமாகும். முழுக்க முழுக்க சிவப்பு நிற செங்கற்களால் கட்டப்பட்டு அறிவுச்சுடர் போல ஜொலித்திருக்கிறது.  பொதுவாக பெரிய பெரிய மகான்கள் தோன்றிய , வாழ்ந்த, படித்த, உபதேசித்த இடங்கள்தான் பிற்காலத்தில் கல்லூரிகளாகவும், அறிவாலயங்களாகவும் மாறும் என்பதற்கேற்ப  புத்தர் பெருமான் தன்னுடைய சீடர்களுக்கு உபதேசம் செய்த மாந்தோப்பை மையாமாகக்கொண்ட நாளந்தாவில் இப்பல்கலைகழகம் தோற்றுவிக்கப்பட்டது.  பகவான் மகாவீரரும் இப்பூமியில் உபதேசித்தார் என்றும் சொல்லப்படுது. இந்த மாந்தோப்பை பத்து கோடி தங்க நாணயங்கள் கொடுத்து 500 வணிகர்கள் வாங்கி புத்தருக்கு அன்பளித்துள்ளனர்.


நாளந்தா பல்கலைகழகம் சுமார் 14 ஹெக்டேர்களுக்கு மேலான பரப்பளவில் இப்பல்கலைகழகம்  பறந்து விரிந்திருந்ததாம். கி.பி.427-ம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தர்தான் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிக்கும் இடம்’ என்று பொருள்.  புத்தமத துறவிகளாலும்புத்த சமயத்தைச் சேர்ந்த அசோகர்ஹர்சர் போன்ற மாமன்னர்களின் ஆதரவோடும் நாளந்தா பல்கலைக்கழகம் தழைத்தது வளர்ந்தது.  இந்தப் பல்கலைகழகம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இங்கு அந்த காலத்திலேயே   உள்நாடு மற்றும் கொரியா,  சீனர்கள், திபெத்தியர்கள், பெர்ஷியர்கள், ஜப்பானியர்கள், மங்கோலியர்கள்,  கிரேக்கர்கள் போன்ற  வெளிநாடுகளிலிருந்தும் 10,000 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்துள்ளனர். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பல்துறை வித்தகர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். புவியியல்வானவியல்மருத்துவம்வேதியியல்இயற்பியல் போன்ற உயர்மட்ட விஞ்ஞான பாடங்களும் தத்துவம்தர்க்க சாஸ்திரம்வான சாஸ்திரம்ஜோதிடம் போன்ற பாடங்களிலுள்ள பல்வேறு துறைகளும் இங்கே போதிக்கப்பட்டன. நாளந்தா பல்கலைகழகம் உலகின் முதல் பல்கலைகழகம் என்ற பெருமை மட்டுமல்லாது மாணவர்கள் தங்கி படித்த முதல் பல்கலைகழகமும் இதுவே ஆகும்.  கி.பி. 413 ம் ஆண்டிலிருந்து இப்பல்கலைகழகம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தது. கல்வி ஏட்டுச் சுரைக்காயாக இருந்து விடாமல், ஆராய்ச்சிக்கான விதையாக மாற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடமும் விவாதங்கள் மூலமாகவே, மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. ஒருநாளைக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நூறு விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இங்கு புத்தமதத் தத்துவங்கள் குறிப்பாக, மகாயான கருத்துகள் பயிற்றுவிக்கப்பட்டன. எட்டு தனித்தனி வளாகங்களில் ஆலயங்கள், தியான மண்டபங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றுடன் புத்தமதத் துறவிகளின் மடங்களும் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்திருக்கின்றன. ஆங்காங்கே பூங்காக்கள், குளங்கள் அமைக்கப்பட்டு, படிப்பதற்கேற்ற இனிய  சூழலும் இருந்திருக்கிறது.  இங்கு பயிற்றுவிக்க  பகல் பொழுது மட்டும் போதாமல் இரவுப்பொழுதும் வகுப்பெடுக்கப்பட்டதாம்.   பல்கலைகழகத்தின் முழு நிர்வாகமும் புத்தமதத் துறவிகளால் மேற்கொள்ளப்பட்டன. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்துத் துறவிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுபவர் யாராக இருந்தாலும், மடாலயத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.முதலில் குப்த மன்னர்களாலும், பின்னர் ஹர்ஷர், பால வம்ச மன்னர்கள் எனத் தொடர்ந்து பல மன்னர்கள் பல்கலைக்கழகத்தின் புரவலர்களாக இருந்து, பல்கலைக் கழகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். ஹர்ஷரின் காலத்தில் பல்கலைக்கழகத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள 200 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக விளைநிலங்களும், காய்கறித் தோட்டங்களும், பசுக்களும் இருந்தன. பல்கலைகழகம் புகழின் உச்சத்திலிருந்தபோது அதில் 10,000 மாணவர்கள் படித்துவந்தனர். 2000 ஆசிரியர்கள் பணியாற்றினர். யுவான்சுவாங், யி ஜிங் உள்ளிட்ட பலர் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள்தான். மாணவர் மற்றும் ஆசிரியர்களின் சந்தேகத்தினை தீர்த்துக்கொள்ளவும், அறிவுப்பசியை போக்கிக்கொள்ளவும் மிகப்பெரிய  மகாமேரு என்று பெயர் சூட்டப்பட்ட மிக்கப்பெரிய நூல் நிலையமொன்று   இங்கு இருந்திருக்கிறது.   9 மாடிகளைக் கொண்ட மாபெரும் கட்டிடமாக இந்நூல் நிலையம் இருந்துள்ளது. இந்த நூல்நிலையத்தில் மட்டும் பராமரிப்பதற்கு பல்வேறு மொழிகளை கற்றறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட புத்தத் துறவிகள் இருந்துள்ளனர். இந்த நூல்நிலையத்திற்குள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்தமர்ந்துதாங்கள் அறிவு தாகத்தை அபிவிருத்தி செய்துக்கொண்டனர். இங்கிருந்த ஏடுகளை மாணவர்கள் அலசி ஆராயும்போது ஏற்படும் சந்தேகங்களை நீக்க புத்தப்பண்டிதர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். பசிக்கொண்ட பறவையினம் பழ மரங்களைத் தேடி பறந்தோடி செல்வதுப்போல்அறிவுத்தாகம் கொண்ட மாணவர்களும் உலகம் முழுவதிலிருந்தும்நாளந்தா பல்கலைக்கழகத்தில் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்ந்த இந்த நூல்நிலையத்திற்கு வந்து தமது அறிவுப்பசியைத் தீர்த்துக் கொண்டனர். நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்புகளைப் பற்றியெல்லாம் சீனயாத்ரீகர் யுவான்சுவாங் மற்றும் ஏனைய வரலாற்று அறிஞர்களும் பல அபூர்வமான உண்மைகளைப் பதிவு செய்துள்ளனர்.புத்தர் தமது கடைசிப் பயணத்தின் போது நாளந்தா நகருக்கு வந்து தனது போதனையைச் செய்திருக்கிறார். புத்தரின் முக்கிய சீடரான சாரிபுத்தர் நாளந்தாவைச் சேர்ந்தவர்தான்.இப்போது தேசிய கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு எப்படி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதோ, அதே போன்றதொரு நுழைவுத் தேர்வு, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கும் நடத்தப்பட்டதாக சீன யாத்திரிகர் யுவான்சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் எனச்சொல்லப்படும் உதவித்தொகை  அந்த காலத்திலேயே   வழங்கப்பட்டிருக்கிறது. அதேப்போல, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கும் 10 பேரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் இடம் கிடைத்தது என்பதையும், அவர்களும் பல்வேறு தகுதித்தேர்வுக்குட்படுத்தியே  தேர்தெடுக்கப்பட்ட்னர். கல்விக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.  அவர் தம் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இங்கு உயர்கல்வி மட்டுமே வழங்கப்பட்டதென யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். தோன்றிய யாவற்றிற்கும் அழிவு உண்டென்ற உலக நியதிக்கேற்ப உலகப்புகழ்வாந்த இப்பல்கலைகழகமும் ஒருநாள் அழிந்துப்பட்டது. நாளந்தா பல்கலைகழகம் எப்படி அழிந்தது என இனி பார்ப்போம்...

புயல் காற்றில் சிக்கி திசை மாறி, கரையை அடைய முடியா தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்போல் அறிவுத்தாகம் கொண்டு அலைபவர்களுக்கு தாகம் தணிக்கும் நீருற்றாய் திகழந்த நாளந்தாவின் மீது  இதுவரை மூன்று முறை படையெடுப்பால் அழிந்து இரண்டு முறை அரும்பாடுப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.  முதல் முறை கி.பி. 455 ல் ஸ்கந்தகுப்தா ஆட்சிக்காலத்தில் மிஹிரக்குலா தலைமையில் ஹன்ஸ் படையெடுப்புக்குள்ளானது. பின்னர் ஸ்கந்த வாரிசுகளால் மறுசீரமைக்கப்பட்டு மீண்டு(ம்) கல்வி சேவை ஆற்றியது.மீண்டும் 7ம் நூற்றாண்டில் ஹர்வர்த்தனர் ஆட்சியின்போது மீண்டும் தாக்குதலுக்குள்ளாகி மீண்டும் புனரமைக்கப்பட்டது. 

மூன்றாவது முறையாக 1193 – ம் ஆண்டு  கில்ஜி என்ற துருக்கி மன்னனின் படையெடுப்பால் நாளந்தா பல்கலைகழகம் முற்றிலுமாய் அழிந்துப்போனது. இப்படையெடுப்பில் இங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களையும்ஆசிரியர்களையும்புத்தத் துறவிகளையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தான். அங்கிருந்த பத்திற்கும் மேற்பட்ட புத்த மடாலயங்களையும்பல்கலைகழகத்தின் அற்புதமான கலையம்சம் கொண்ட வகுப்பறைகளையும் தரைமட்டமாக்கினான். 

அப்போதும் வெறி அடங்காத கில்ஜி  மகாமேரு” என்று போற்றப்பட்ட நூல்நிலையத்திற்கும் தீ வைத்து அறிவுக் கருவூலங்களை அழித்தான். நூல்நிலையத்தில் வைத்த தீக்கு இரையாகிய பல்லாயிரக்கணக்கான ஏடுகள் மட்டும் மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன. அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் கரும்புகை மண்டலம் சூழ்ந்திருந்தனவாம். இதை யாரும் அணைத்து விடக்கூடாது என்று அவை எரிந்து சாம்பலாகும் வரை  அங்கேயே காவலுக்கு ஆட்களை நியமித்திருந்தனாம்.2006 ம் ஆண்டு பீகார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் நாளந்தா பல்கலைகழகம் புதுப்பிப்பதற்கான மசோதா முன்மொழியப்பட்டது.  2010 ல் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ம் தேதி முதல் புதுப்பொலிவுடன்   மீண்டும்  கல்விப்பணி ஆற்ற தொடங்கியுள்ளது. 


நாளந்தா பல்கலைகழகத்தின் நினைவு மண்டபம் 

ஆங்கிலேயர் படையெடுப்பிற்குமுன் நமது பாரதத்தில் அனைவரும் படிப்பறிவு கொண்டிருந்தனர். அந்நிய படையெடுப்புக்கு ஆளாகி படிப்படியாய் நம் கல்வியறிவு குறைந்து அடிமையாய் மாறி படாத பாடுகள் பட்டோம் என்பது உலகறிந்த உண்மை.  எத்தனையோ போராட்டங்களுக்குபின் சுதந்தரம் பெற்று மீண்டும் நம் நாட்டில் கல்வியறிவு புத்துணர்வு பெற ஆரம்பித்துள்ளது. அறிவுக்காகவும், பொருள் ஈட்டவும் திரைக்கடல் தாண்டி ஓடினாலும் முடிவில் நம் நாட்டுக்கே திரும்ப வந்து கல்வியறிவையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவோம்.

படங்கள் கூகுள்ல சுட்டது ...நன்றியுடன்,
ராஜி