Tuesday, December 31, 2013

சத்து மாவு கஞ்சி - கிச்சன் கார்னர்

பொண்ணுக்கு பத்தாவது பப்ளிக் எக்சாம் வருது. அதனால, ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன், வீட்டுப் பாடம்ன்னு ஏகப்பட்ட டென்சன். அக்கா டியூஷன் போகும்போது அவளுக்கு செக்யூரிட்டி கார்ட் போல அவக்கூடவே டியூஷனுக்கு போகனும்ன்னு அப்புக்கு கவலை. தூயா ஹாஸ்டல்ல இருக்குறதால அந்த சாப்பாடு பிடிக்காம அவளுக்கொரு கவலை. மத்தவங்க போல நம்ம பொண்டாட்டி சமைக்கலியேன்னு என்னவருக்கு ஒரு கவலை. ஆளுக்கொரு கவலையில சரியா சாப்புடுறது இல்ல. சரியா சாப்பிடாம இருந்தா ஆரோக்கியம் என்னாகுறது!?

அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு சத்து மாவு அரைச்சு வந்து வச்சிருக்கேன். இப்பலாம் காஃபிக்கு பதில் இதான் எல்லோருக்கும். என்ன சர்க்கரைதான் முன்னை விட கொஞ்சம் அதிகம் செலவாகுது! இனி கொஞ்சம் கொஞ்சமா பசங்களுக்கே தெரியாம சர்க்கரையை குறைச்சுக்கனும்.

சத்து மாவு அரைக்க தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு - 1  கப்
கம்பு - 1கப்
சோளம் - 1 கப்
கோதுமை - 1 கப்
புழுங்கலரிசி அ சிகப்பரிசி - 1 கப்
பார்லி - 1 கப்
ஜவ்வரிசி - 1கப்
பச்சைப் பயறு - கப்
சோயா பீன்ஸ் - 1 கப்
வெள்ளைக் கொண்டைக் கடலை - 1 கப்
சிவப்பு கொண்டைக்கடலை - 1 கப்
முழு மக்காச்சோளம் - - 1 கப்
வேர்க்கடலை - 1 கப்
உடைச்ச கடலை - 1 கப்
முந்திரி - 100கிராம்
பாதாம் - 100 கிராம்
ஏலக்காய் -50கிராம்

கஞ்சி காய்ச்ச தேவையானப் பொருட்கள்
சத்து மாவு - 2 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு, 
பால் - ஒரு டம்ப்ளர்
உப்பு - ஒரு சிட்டிகை

கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, பச்சை பயறு, வெள்ளை கொண்டைக்கடலை, சிவப்பு கொண்டைக்கடலை, மக்காச்சோளம்லாம் முதல் நாள் நைட்டே ஊற வைங்க. மறுநாள் நல்லா கழுவி, கல்லுலாம் போக அரிச்சு தண்ணி வடிக்கட்டி ஒரு துணில மூட்டைக் கட்டி வைங்க. ஈரம் காய, காய தண்ணித் தெளிச்சுக்கிட்டே வாங்க. ஒரு நாள் முழுக்க இருக்கட்டும். மறுநாள் பிரிச்சுப் பார்த்தால் தானியங்களில் முளை விட்டிருக்கும். அதை வெயிலில் நல்லா காய வாங்க.

மறுநாள் மீதம் இருக்கும் பொருளையும் சேர்த்து வெயிலில் காய வச்சு மெஷின்ல கொடுத்து அரைச்சு வச்சுக்கோங்க.
காத்து புகாம டப்பாவுல வச்சுக்கோங்க

ஒரு பாத்திரத்துல ரெண்டு டம்பளர் தண்ணி காய வச்சுக்கோங்க.

அதுல ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து தண்ணியை கொதிக்க விடுங்க.

தண்ணி கொதிக்கும் முன் சத்து மாவை ஈரமில்லாத கிண்ணத்துல போட்டுக்கோங்க.

பால் விட்டு கட்டியில்லாம கரைச்சுக்கோங்க.

அடுப்பிலிருக்கும் தண்ணி நல்லா கொதிச்சதும், அடுப்பை சிம்முல வச்சுட்டு கரைச்சு வச்சிருக்கும் சத்து மாவுக் கரைசலை ஊத்தி நல்லா கொதிக்க விடுங்க.
அடுப்பிலிருந்து இறக்கி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நல்லா கரைச்சுக்கோங்க.சூடான சுவையான சத்துமாவு கஞ்சி தயார். கைக்குழந்தை முதற்கொண்டு பல்லுப்போன தாத்தா வரை சாப்பிடலாம். சர்க்கரை நோய் இருக்குறவங்க உப்பு மட்டும் போட்டு குடிக்கலாம். எண்ணெய் , கலர்லாம் எதும் சேர்க்கலை. 

பால் பிடிக்காதவங்க சத்து மாவை தண்ணில கூட கரைச்சுக்கலாம். நல்லா தண்ணியா கரைச்சுக்கனும். இல்லாட்டி கட்டி, கட்டியாகிடும். நான் இல்லாட்டி என் பையனே கூட கலந்து சாப்பிட்டு ஸ்கூல் போய்டுவான்.

Monday, December 30, 2013

தேவையா இதுப்போன்ற சடங்குகள்!? - ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள! போன வாரம் பக்கத்து தெரு காசி அண்ணா இறந்ததுக்கு இன்னிக்கு காரியமாச்சே! கூப்பிட்டு இருந்தாங்களே! போய் வந்தியா!?

ம்ம்ம் போய் வந்தேன் மாமா. ஆனா, ஏன் போனோம்?ன்னு ஆகிடுச்சு.

ஏன்? என்னாச்சு!? சரியா கவனிக்கலியா!?

கவனிச்சாங்க மாமா. ஆனா, காசி அண்ணன் வொய்ஃபுக்கு செஞ்ச சடங்குலாம் பார்த்து மனசே ஒரு மாதிரி ஆகிட்டுது. அக்கம் பக்கத்தாரோட அதிகம் பழகாதவங்க அந்த அக்கா. நம்ம ஊருக்கு வாக்கப்பட்டு வந்து 35 வருசமானாலும் அதிகமா வெளில வராதவங்க. அப்படிப்பட்டவங்களை, சடங்கு செய்யுறேன்னு முகம், கைக்கால்லாம் மஞ்சள் பூசி, அகலமா பொட்டு வச்சு, கைநிறைய வளையல் போட்டு, கழுத்துல மாலைப் போட்டு ஊர் ஃபுல்லா நடக்க வச்சு கூட்டி போய் ஆத்தங்கரையில சடங்கு செஞ்சாங்க. என் கோலத்தை பாத்தீங்களா!?ன்னு அழுதுக்கிட்டு போனது மனசைப் பிசைஞ்சுட்டுது.

ஆமா புள்ளா, காசி அண்ணன் செத்த அன்னிக்கே அந்த அண்ணா உடம்பை குளிப்பாட்டுற போதே பக்கத்துல அந்த அக்காவையும் உக்கார வச்சு குடம் குடமா தண்ணி ஊத்தி இம்சை பண்ணிட்டாங்க.  சடங்கு பண்ணுறதை வேணாமின்னு சொல்லலை. அதுக்காக, ஊருக்கு முன்னாடி செய்யுறதை தான் வேணாம்ன்னு சொல்றேன். போன வியாழக்கிழமை சுனாமி நினைவு தினம் புள்ள. டிவில பார்த்தியா!?

பார்த்தேன் மாமா! சுனாமி வந்த மூணு மாசம் கழிச்சு நாமலாம் தமிழ்நாடு ஃபுல்லா டூர் போனோம். அப்படிப் போகும்போது பூம்புகாருக்கும் போனோம். அப்பா, அந்தக் கடற்கரைல ஒரு 20வயசுப் பொண்ணு தன்னையே மறந்து கடலையே பார்த்துக் கதறிக்கிட்டு இருந்துச்சு. என்ன ஏதுன்னு அக்கம் பக்கம் விசாரிச்சப்போ, சுனாமில அப்பா, அம்மா, தம்பி, கல்யாணம் கட்டி ஆறு மாசமான புருசன், வயத்திலிருந்த கருன்னு எல்லாத்தையும் இழந்திட்டு தன்னையும் மறந்து அந்த கடல் வெளில சுத்திக்கிட்டு இருந்தது இன்னும் என் கண்ணை விட்டு அகலவேயில்ல மாமா. அந்தப் பொண்ணு இப்ப எப்படி இருக்கோ தெரியலை!!

ம்ம்ம்ம் பலப் பேரோட வாழ்க்கையை புரட்டிப் போட்டுட்டுது இந்த சுனாமி. உன் ஃப்ரெண்ட் ராஜி வீட்டுக்குப் போயிருந்தேன். நம்ம வாயெல்லாம் கட்டிப்போடும் ராஜி, அங்க அவ பொண்ணுக்கிட்ட அடங்கிப் போயி நிக்குறா!

ஏன்? என்னாச்சு!? ராஜி என்ன தப்பு பண்ணா!?

தப்புலாம் பண்ணலை. பிளாக்குல எழுதுறதுக்காக கம்ப்யூட்டர்ல உக்காந்து கிச்சன் கார்னர் டைப்பிக்கிட்டு இருந்திருக்கா. அங்க வந்த அவ பொண்ணு இனியா, என்னம்மா பண்றேன்னு மானிட்டரை பார்த்து அங்கிருக்குறதை படிச்சிருக்கா. அதுல சத்து மாவுக்கு தேவையானப் பொருட்கள்ன்னு சொல்லி ஒரு பத்து பொருட்களை டைப் பண்ணி இருக்குறதைப் பார்த்த இனியா, அம்மா முக்கியமான பொருள் ஒண்ணை விட்டுட்டே பாருன்னு கத்தி இருக்கா.

மறுபடியும் படிச்சு பார்த்து எதும் விடுப்பட்டுப் போகலியே இனியா!ன்னு ராஜி சொல்ல, நீ சமைக்கும்போது தேவைப்படும் பொருள்ல கேமராவும் ஒண்ணாச்சே! அது விடுபட்டு போயிருக்கு பாருன்னு சொல்லிட்டு அங்கிருந்து அவ எஸ்கேப்.

ம்க்கும் ராஜியை வம்பிக்கிழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே! சரி, எனக்கொரு ஜோக் வந்துச்சு. அதை சொல்லுறேன் கேளுங்க. சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள்லாம் செத்துப் போய் சொர்க்கத்திற்கு போனாங்க. ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து,  அவங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்ன்னு விசாரிச்சு, கம்மியா குழந்தை இருக்குறவங்களுக்கு பரிசு கொடுத்தார். காந்திஜி உள்ள போய் கடவுள்கிட்ட பேசி வெறும் கையோடு திரும்பி வந்தாராம்!

ஏன்?ன்னு மத்த தலைவர்கள்லாம் காந்திஜிக்கிட்ட விசாரிச்சதுக்கு யாரோ ஒரு முட்டாள் கடவுள்கிட்ட 'நான் தான் இந்தியாவின் தந்தை' ன்னு சொல்லியிருக்கான். இவ்வளவு குழந்தைகள் பெத்த உனக்கு ஏன் பரிசு தரனும்ன்னு கடவுள் திருப்பி அனுப்பிட்டார்ன்னு ப்தில் சொன்னாராம்.

ஹா! ஹா! நம்மாளுங்க ஒருத்தரையும் பொழைக்க விட மாட்டாங்களே!! நீ ஜோக் சொல்லீட்ட. நான் கேள்விக் கேக்குறேன். நீ பதில் சொல்லுப் பார்க்கலாம்.

ம்ம் கேளுங்க. முடிஞ்சா பதில் சொல்றேன்.

ஒரே காம்பவுண்டில் உள்ள மூணு வீட்டுக்கு ஆப்பிள் வியாபாரி, தன் கிட்ட இருக்குற் ஆப்பிள்ல பாதியையும் + அரை ஆப்பிளையும் முதல் வீட்டுக்குக் கொடுத்தார். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டுக்குக் கொடுத்தார். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூணாம் வீட்டுக்குக் கொடுத்தார்.


இப்ப வியாபாரியின் கூடை காலியாகிட்டுது! அப்படின்னா, வியாபாரி கொண்டுவந்த ஆப்பிள்களில் எத்தனை முழு ஆப்பிள்களும், எத்தனை அரை ஆப்பிள்களும் இருந்துச்சுன்னு சொல்லு புள்ள. 

கொஞ்சம் இருங்க மாமா. அடுப்புல பால் வச்சிட்டு வந்திருக்கேன். அதை இறக்கிட்டு வந்து பதில் சொல்றேனுங்க மாமா!

ஓ எஸ்கேப் ஆகப் பார்க்குறியா!? ரைட்டு.

Sunday, December 29, 2013

சுடுதண்ணி, டீ போட்டு சாப்பிட்டு கழுவிய பாத்திரத்தைக் கொண்டு அடிப்பது எப்படி!?

 ஹரி பத்த வச்ச அடுப்புல ஆவி, சீனு, வச்ச சுடுதண்ணியையும், பிரகாஷ் அவிச்ச முட்டையையும் கணேஷ் அண்ணா சாப்பிட்டு கழுவப் போட்ட பாத்திரத்தை ராஜா கழுவி காய வச்சதை எடுத்து உருப்படியா பிளாக்குல எழுதாம மொக்கைப் போட்டு கொல்லும் பதிவர்கள் மேல் அவர்கள் வீட்டம்மாக்கள் பாத்திரம் எறிவது எப்படின்னுதான் இன்னைய பதிவுல பார்க்கப் போறோம். 

தேவையானப் பொருட்கள்:
கழுவி வச்ச பாத்திரம்
வூட்டுக்காரர். 

வூட்டுக்காரர்:

காலைல வாசல் தெளிச்சு கோலம் போட்டு, பொண்டாட்டியை எழுப்பி காஃபி போட்டு கொடுத்து, லஞ்ச், பிரேக் ஃபாஸ்ட்லாம் ரெடி பண்ணி வச்சு, பிள்ளைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பிட்டு வீடு வாசல் கூட்டி துணியை மெஷின்ல போட்டுட்டு, டிவி சீரியல் பார்க்கும் பொண்டாட்டிக்கு நொறுக்ஸ் செஞ்சு கொடுத்துட்டு, அம்மாடி,முடிஞ்சா விளம்பர இடைவேளையின்போதோ! இல்ல கரண்ட் கட் போதோ மெஷின்ல இருக்கும் துணியை காய வச்சு எடுத்து வந்து மடிச்சு வைக்கும் கஷ்டமான வேலையை கொடுத்துட்டு.., ஆஃபீசுல போய் ஹாயா ஃபேஸ்புக், பிளாக், ட்விட்டர்ன்னு மொக்கைப் போடும் படுபாவி வூட்டுக்காரரா இருந்தா நலம்.பிளாக்கரா இல்லாம வொயிட்டரா அதாவது வெள்ளந்தியா இருக்குற வூட்டுக்காரர்லாம் இதுக்கு சரிப்பட மாட்டார்.

பாத்திரம்: 
சுடுதண்ணி, டீ போட்ட பாத்திரத்தை விட முட்டை வேக வச்ச பாத்திரம், சிக்கன், மீன் சமைச்ச பாத்திரமா இருந்தா நலம். என்னா அதான் கப்படிக்கும்!!

நேரம்: 
பொண்டாட்டி பேச்சை கேட்டு வீட்டு வேலை செய்யாம பிளாக், ஃபேஸ்புக்குன்னு கடலைப் போடும் நேரம் கடலை போட்டாலும் கூட தாங்கிக்கலாம். மொக்கைப் போட்டால் விடவே விடாதீங்க. அடி உதவினாலும் அண்ணன் தம்பி உதவ மாட்டாங்கன்ற பழமொழிக்கேற்ப அடிச்சாதான் இதெல்லாம் சரிப்பட்டு வரும்.

இனி எப்படி பாத்திரத்தால அடிப்பதுன்ற வகைகளைப் பார்க்கலாம்!!

முதல் வகை:
கம்ப்யூட்டர்ல உக்காந்திருக்கும் வூட்டுக்காரர் கவனிக்காத போது கையில் பாத்திரம் எடுத்துக்கிட்டு கிட்டக்க போய் ஆற, அமர ஓங்கி நங்குன்னு பின் மண்டையில அடிக்கலாம்.

இரண்டாம் வகை:
அடிக்க வருவதை உணர்ந்து எஸ்கேப் ஆகுற ஆள் மேல குறி பார்த்து பாத்திரத்தை எறியலாம். உடம்புல எங்க வேணுமின்னாலும் அடிப்படட்டும். நம்ம குறிக்கோள் அடிப்படனுமேத் தவிர, எங்க அடிப்படனும்ன்னு இல்ல. கண்ணை மட்டும் விட்டுடுங்க. அப்புறம் வீட்டு வேலைலாம் செய்ய முடியாதே!

மூன்றாம் வகை:
எதையும் உணராமல் இருப்பவரை பாசமா, டிவி பார்த்தவாறே, ஏங்க! இங்க வாங்களேன்! உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லனும்ன்னு கிட்ட கூப்பிட்டு பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு, ஆசையா கையை பிடிச்சு பின்னால முறுக்கி ஓங்கி நங்குன்னு குத்துங்க.

ரத்தம். வீக்கம் வரப்படாது. அதான் முக்கியம்.  ரத்தம், வீக்கம் வந்தால் நம்ம பேர் சொந்தம், பந்தங்களுக்கிடயே நாறிப்போகும் ஜாக்கிரதை அம்மணீஸ்!

Saturday, December 28, 2013

ராஜ் டிவி தன் நிலைப்பாட்டை மாத்திக்குமா!? - கேபிள் கலாட்டா

ரசித்தது:

அது ஒரு பிஸ்கட் விளம்பரம். அம்மா தன் பிள்ளைக்கிட்ட ஒரு பால் டம்ப்ளரை நீட்டி குடிக்க சொல்றங்க. அந்த பையன் குடிக்கமாட்டேனே! இப்ப என்ன செய்வே!?ன்னு ராகமா கேக்குது. அதுக்கு அம்மா, அப்பாக்கிட்ட சொல்வேன்னு சொல்ல, குடிக்க மாட்டேனே!!ன்னு கெஞ்சலும், பாட்டுமா அம்மாவும், பிள்ளையுமா வீடு முழுக்க ஓடுறாங்க...,

பையன் எதுமேலயோ இடிச்சுக்க, திரும்பிப் பார்த்தால் அப்பா! சமர்த்தா பாலை குடிச்சுட்டு, இப்ப குடிச்சுட்டேன். மதியம் என்ன பண்ணுவீங்கன்னு கேட்டுட்டு ஸ்கூலுக்கு போய்டுறான். அம்மா புத்திசாலித்தனமா!! அவனுக்கு பிரிட்டானியா பிஸ்கட் 4 கொடுத்து விடுறாங்க. பையனுக்கு தேவையான சத்துகள் கிடைச்சுடுதுன்னு அழகான ஒரு கவிதையா விரியுது விளம்பரம்.

உறைந்தது:

க்ரைம் சம்பந்தமான நிகழ்ச்சின்னா எனக்கு பிடிக்கும். புக்ல, நியூஸ்பேப்பர்ல, டிவில வந்தால் ஆர்வமா பார்ப்பேன். ராஜ் டிவில கோப்பியம்ன்ற நிகழ்ச்சி ஒண்ணு ஒளிப்பரப்பாகுது. அதுல இப்படிதான் கொலை, கொள்ளை வழக்குலாம் எப்படி நடந்துச்சுன்னு காட்டுவாங்க. போன வாரம் அதுல வாடகைத்தாய் பத்தின புரோகிராம் ஒண்ணு போட்டாங்க. பார்க்கும்போதே கண்ணுலாம் கலங்கிட்டுது.

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களொட கருமுட்டையையும், அவங்களோட கணவரின் உயிரணுக்களையும் இணைத்து வேற ஒரு பெண்ணின் கருப்பைக்குள் குழந்தையை வளர விட்டு குழ்ந்தை பெற்றுக்கொள்வதுப்பத்தி எல்லோருக்கும் தெரியும். ஆனா, அப்படி பெத்துக்கொடுக்க வரும் வாடகைத்தாய்கள் படும் அவலம் கொஞ்சம் நஞ்சமல்ல.

தங்கள் கருவை சுமக்க வரும் பெண் தீண்டின பொருட்களை யூஸ் பண்ணாம இருக்குறது, குழந்தை பிறந்த உடனே, அந்த பெண்ணுக்கு குழந்தையோட முகம் கூட காட்டாம எடுத்துக்கிட்டு போய்டுறதும், பிரசவம் வரைக்கும் ராஜ உபச்சாரம் பண்ணிட்டு பிரசவத்துக்குப்பின் சரியா கவனிக்காம விட்டுடுறதுன்னும் அந்த பெண்களுக்கு கொடுமை நடக்குதாம். அதுமில்லாம, இதுக்குன்னு இருக்குற புரோக்கர்கள் பண்ணும் அட்டூழியமும் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு சின்ன ரூம்ல அஞ்சாறு கர்ப்பிணிகளை வச்சுக்கிட்டு பிசினெஸ் பண்றாங்க. அந்த பெண்கள் தங்களோட வீட்டுக்கு போன் பேசுறதை கூட தடுக்குறாங்களாம். குழந்தை வேணும்ங்குறவங்கக்கிட்ட லட்சக்கணக்குல காசு வாங்க்கிட்டு, வாடகைத்தாய்ங்களுக்கு பத்து இல்ல இருபதாயிரம் கொடுத்து துரத்தி விட்டுடுவாங்களாம். புருசனோட உயிரைக் காப்பாத்த 3 குழந்தைகளின் தாய் வாடகைத்தாயாகி ஆந்திராவுக்கு போய் வந்தப் பின், சரியான கவனிப்பில்லாம உடல்நிலை கெட்டு, அக்கம் பகக்த்து வீட்டு பேச்சால் மனம் மாறின புருசனோட டைவர்ஸ், ஒரு வருசம் பிரிஞ்சிருந்திருந்ததால குழந்தைகளின் பாசம் மறைஞ்சு போய் இப்ப எதிர்காலமே கேள்விக்குறியான ஒரு வாடகைத்தாயின் பேச்சை கேட்டதும் உறைஞ்சு போய் நின்னுட்டேன்.
அட்வைஸ்:
காலைல எல்லா சேனல்களிலும் ஆலய வழிபாடுன்னு எதாவது ஒரு கோவில் பத்தி போடுறங்க. அது நல்ல விசயம்தான். நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது அந்த கோவில் பேர் என்ன!? அது எங்க இருக்கு? எப்படி போகலாம்ன்னு சொல்றாங்க. எதாவது ஒரு காரணத்தால, நிகழ்ச்சியோட ஆரம்பத்தை மிஸ் பண்ணிட்டா, அது எந்த கோவில்ன்னு தெரியாம தலையை பிச்சுக்க வேண்டி இருக்கு. அதனால, நிகழ்ச்சி முடியும் வரை கோவிலோட பேரும், ஊரும் வர்ற மாதிரி ஒளிப்பரப்புனா நல்லா இருக்குமே!

எரிச்சல்:
புதிய தலைமுறை புத்தகத்தை விரும்பி படிப்பேன். அதுப்போலதான் புது யுகம் டிவியும் இருக்கும்ன்னு நினைச்சு பார்க்க ஆரம்பிச்சா, அது பொதிகை டிவியை விட மொக்கையா இருக்கு. நிகழ்ச்சிலாம் என்னமோ 80ல வந்த மாதிரி உப்பு சப்பில்லாம இருக்கு. அதைக்கூட தாங்கிக்கலாம். டயலாக் வந்து ரெண்டு நிமிசம் கழிச்சுதான் காட்சி வருது. ரெண்டுத்தையும் மேட்ச் பண்ணி இந்த மொக்கைகளை பார்க்கத்தான் வேணுமா!?டவுட்: 
ராஜ் டிவில மதியம் பெண்கள் நேரம்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்புறாங்க. அட! நம்ம டாபிக்காச்சேன்னு உக்காந்து பார்த்தா ஒரு மணி நேரமும் சமையல் குறிப்பு மட்டும்தான் வருது. சரி, இன்னிக்கு சமையல், நாளைக்கு வேற டாபிக்ன்னு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு டாபிக்ன்னு நினைச்சு மறுநாள் வெயிட் பண்ணி பார்த்தால்..., மறுநாளும் சமையல் குறிப்புதான்!!

பெண்கள்ன்னா சமைக்க மட்டும்தான்ன்னு ராஜ் டிவிக்காரங்க நினைச்சுட்டாங்களா!? பெண்கள் உடல்நிலை, அவங்க படிப்பு, அவங்களுக்கேத்த தற்காப்பு கலை, இன்ஷ்யூரன்ஸ்ன்னு எத்தனை விசயம் இருக்கு!! ராஜ் டிவி தன் நிலைப்பாட்டை மாத்திக்குமா!?

அடுத்த வாரமும் கேபிள் கலாட்டா தொடரும்...,

Friday, December 27, 2013

சனிப் பிரதோசம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

கடந்த மூணு வாரமா சொர்ணாகர்ஷன கிரிவலம் பத்தி பார்த்தோம். பார்க்காதவங்க பாகம் 1, பாகம் 2 பாகம் 3 போய் பார்த்துட்டு வந்துடுங்க. அப்புறம் கிரிவலம் போறப் பாதையில இருக்கிற லிங்கங்கள் பத்தின பெருமைகளையும் பார்த்தோம். வெற்றிகரமா எந்தத் தடங்கலும் இல்லாம கிரிவலம் சுத்தி வந்தாச்சு. கிரிவலம் முடிக்கும்போதும் கோவிலுக்குள் சென்றி இறைவனை தரிசிக்கனும் என்பது ஐதீகம் அதனால, கோவிலுக்கு போகலாம் வாங்க!

ராஜக்கோபுரம் வழியா உள்ள போனால், வலது பக்கத்தில் ஆயிரங்கால் மண்டபமும், இடது பக்கத்தில் கம்பத்திளையனார் சந்நிதியும் இருக்கு. இங்க பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கு. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கு. ஆணவக் குணம் நீங்க இவரிடம் பிரார்த்திதுக்கொள்ளலாம்.

நாம் கோவிலுக்குள் நுழைந்தவுடன் தரிசிப்பது முருகன் சன்னதியான கம்பத்து இளையனார் சந்நிதி. அதென்ன கம்பத்து இளையனார் சந்நிதி!?அண்ணாமலையார் அக்கினிப் பிழம்பு, அதே போன்று மகனான முருகனும் அக்னிப் பிழம்பு.  தந்தையானதால அவர் மூத்தவர்.  மகனாய் பிறாந்ததால இவர் இளையவர்.   கம்பத்து இளையனார் சந்நிதி ன்னு சொல்வாங்க. அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் அருள் வழங்கிய திருத்தலம் இந்த திருவண்ணாமலை. அருணகிரியார் வாழ்க்கையின் சம்பவங்கள் பலஇங்க நடந்திருக்கு. அதிலொன்றுதான்கம்பத்து இளையனார் சந்நிதி தோன்றுவதற்கான காரணம்.

சம்பந்தாண்டான்ன்ற பேர் கொண்ட ஒருவர், அப்பத்திய திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அரசவையின் ஆஸ்தான புலவராகவும் விளங்கிய இவர், பொறாமை கொண்டவர். அருணகிரியாரை எப்படியேனும் மட்டம் தட்டனும்ன்னு திட்டம் போட்டார். அரசரா இருந்த பிரபுட தேவ மகாராஜாவிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி, அருணகிரியாரை முடியுமானால் முருகனை வரவழைக்கச் சொல்லுங்கள்ன்னு தூண்டி விட்டார்.

 அருணகிரிநாதர் மயிலை வேண்டிப் பாடினார். மயில் முருகனை வேண்ட, ஆடும் மயில் மீது ஆடிக்கொண்டே ஆறுமுகனும் காட்சி கொடுத்தார். அதுவும் கம்பத்தில் வந்து காட்சி கொடுத்தார். அந்தக் கம்பமே கருவறையாக அமைந்த சந்நிதியே, கம்பத்தில் இளையனார் தோன்றிய கம்பத்து இளையனார் சந்நிதி.அதை விளக்கும் பதிகமே இது..,

 அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட
அபினகாளி தானாட அவளோடு அன்(று)
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட
அருகு பூத வேதாளம் அவையாட
மதுர வாணி தானாட மலரில் வேதனார் ஆட
மருவு வானுளோர் ஆட மதியாட
வனச மாமியாராட நெடிய மாமனார் ஆட
மயிலுமாடி நீயாடி வரவேணும்  
நாமும் அந்த பதிகத்தை பாடி அங்கிருந்து கிளம்பி வேற சன்னிதி போகலாம். வாங்க! இங்க நமக்கு வலது பக்கத்தில் தெரிவதுதான் ஆயிரம் கால் மண்டபம்  இச்சன்னதியின் தென்புறமாக சிவகங்கை தீர்த்தம் இருக்கு.

இனி ஆயிரம் கால் மாண்டபம் பத்தி பார்க்கலாம். நமது முன்னோர்களின் பெருமைக்குறிய கட்டிடக் கலைகளில் இந்த ஆயிரங்கால் மண்டபம். ஒண்ணு.   மற்ற மண்டபங்களில் இல்லாத சிறப்பான வேலைப்பாடுகள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கு. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காட்சி அளிப்பது ஆச்சர்யமான விஷயம்.  மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் வழிபாடு செய்யவும் கலை நிகழ்சிகள் நடத்தவும்  இத்தகைய மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்ன்னு சொல்வாங்க. சிவகங்கை குளமும், ஆயிரங்கால் மண்டபமும் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. விஜநகர கால கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக ஆயிரங்கால் மண்டபம் இருக்குது. ஆயிரங்கால் மண்டபத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள யானை சிற்பங்கள் கலைநயம் மிக்கதா இருக்கு. இராசகோபுரத்தின் வடதிசையில் உள்ள வாயிலில் "சித்திரமணி மண்டபம்" இருக்கு. ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி”யில் அமைத்துள்ளது.

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில் ரமண மகரிஷி தமது இளம் வயதில் தியானம் இருந்த இடம் இருக்கு.  மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்கு சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை கண்ட அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்துவிட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், பாதாள லிங்கம் இருக்கு. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக்கனும்ன்னு சொல்றாங்க. 
இங்க ரமண மகரிஷியின் போட்டோவும், பக்கவாட்டு சுவரில் பாதாள லிங்கம் பத்தின குறிப்புகளும் இருக்கு.  அதைத்தாண்டி ஒரு படிக்கட்டு வழியாக சென்றால் பாதாள லிங்கம் இருக்கு.

இந்த பாதாள லிங்க வாசலில் நம் அகந்தையெல்லாம் விட்டவாறே குனிந்துதான் செல்லவேண்டும்.  பிரகாரத்தை சுற்றி கோவிலினுடைய பழையப் படங்களும், ரமண மகரிஷியின் படங்களும் வைக்கப்பட்டிருக்கு.
இந்த கோவிலை புதுபிக்கும் முன் 1940 ல் இருந்த நிலையில் உள்ள போட்டோ வைக்கப்பட்டிருக்கு. ஒவ்வொரு போட்டோவாப் பார்த்துட்டு சீக்கிரம்  வாங்க. அங்க, வெளியே இருக்கும் வினாயகப்பெருமானை கும்பிட போகலாம். 

திருக்குளத்தின் வடமேற்கில் இருப்பது சர்வ சித்தி விநாயகர் கோயில் இவரை வழிபட்டு கீழே இறங்கினால் தெரிவது பெரிய நந்தி. இந்த நந்திக்குதான் பிரதோசக் காலங்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதற்கு முன் இருப்பது உத்திராட்ச மண்டபம். உயரமாக காணப்படும்.இதைகடந்து போகும்போது இடதுபக்கம் கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதியும் வலது பக்கம் முருகபெருமான் சந்நிதியும் இருக்கு. இன்னும் கொஞ்சம் உள்ளே வலதுபக்கம் போனால் வன்னியமரத்து விநாயகர் திருக்கோயிலும் இருக்கு. 

இதன் சிறப்பு என்னன்னா ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிக்குற மாதிரி இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசி அலங்காரம் பண்றாங்க. சம்பந்தாசுரன்ன்ற அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.


பெரிய நந்திகேசுரருக்கு நேராக வல்லாள மகாராசா கோபுரம் இருக்கு. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார்ன்ற பேரில் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாகர் அவரை வணங்கியப்படி இருக்கார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

மூன்றாம் கோபுரம் கிளிக்கோபுரம் ஆகும். அருனகிரிநாத பெருமான் பூத உடலை விட்டு கிளியாக மாறி பரிசாத மலர் கொண்டு வரச் சொர்க்கம் சென்றார். திரும்பி வரும்போது தன் உடல் இல்லாததுக் கண்டு கிளி உருவிலே "கந்தர் அனுபூதி "பாடிய இடம் இக்கோபுரமாகும். .இன்றும் இக்கோபுரத்தில் நிறைய கிளிகள் வாழ்வது சிறப்பு. 

கிளிக்கோபுர வாயிலை கடந்து போனால் மூன்றாம் பிரகாரத்தில் பதினாறுகால் மண்டபம் இருக்கு. .இதற்கு தீபதரிசன மண்டபம் ன்னு பேர். இங்க திருக்கார்த்திகை நாளில் பஞ்ச மூர்த்திகள் நிற்க மலை மீது தீபம் ஏற்றும் விழா நடைபெறும். இம்மண்டபம் மங்கையர்க்கரசி என்ற சிவனடியார் கட்டி சிறப்பு பெற்றார்கள். மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் ஸ்தல விருட்சமான மகிழமரமும், பின்புறம் அருணகிரி யோகீஷ்வர் சந்நிதியும், வடக்கே அருள்மிகு அம்பாள் சந்நிதியும், நேர் எதிரே காளத்தீஸ்வரர் சந்நிதியும், அருகில் யாக சாலையும் அமைந்திருக்கு.

இப்பக் கோவிலில் கூட்டம் கூட்டமாக ஆட்கள் வர தொடங்கிட்டாங்க. குபேர கிரிவலம் வந்த அந்த நாளில் சனி பிரதோசமும் கூட. அதனால் பக்தர்கள் வர தொடங்கிட்டாங்க. நாம வசதியா ஒரு இடத்தில அமர்ந்து கொள்ளலாம். சீக்கிரம் வாங்க இடம் பிடிச்சுக்கலாம். பிரதோசங்களிலே விசேஷமானது இந்த சனி பிரதோஷம் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று சொல்லப்படுது. ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆகும். தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00வரையிலான நேரம் ஆகும்.

இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது.மிகவும் புண்ணியமான இந்தநேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலக் கோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும். ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள், நமது முன்னோர்கள், நமக்குப் இன் வரும் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள்அழிந்துவிடும்.

பொய் சொல்லுதல்,கொலைசெய்தல்,பேராசைப்படுதல், அடுத்தவர் பொருளை அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள். எனவே,இந்த மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம். ஜெபிக்கலாம் என்று குபேரலிங்கத்தில் கலந்துக்கிட்ட பெரியவர் ஒருத்தர் தன்னுடைய சீடர்களுக்கு அறிவுரை கூறியது ஞாபகம் வந்தது. நாம பேசிக்கொண்டு இருந்த நேரத்தில நிறைய கூட்டம் வந்துடுச்சு. நந்திக்கு அபிஷேகம் செய்ய ஆராம்பிசிட்டாங்க. அந்திசாய ஆரம்பித்து இருள் சூழ தொடங்கிடுச்சு. அபிஷேகம் முடிந்து நந்திக்கு அலங்காரம் செஞ்சு தீபாராதனையும் காண்பிச்சுட்டாங்க .

அந்த சமயத்தில் மழை பெய்ய ஆரம்பிச்சது. அங்க இருக்கிற பக்தர்களை பாருங்க. வருண பகவான் எவ்வளவு தான் சோதிச்சாலும் கலங்காது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தரிசனம் செய்றாங்க. சிலர் ஒதுங்கி நின்றாலும் பெரும்பான்மையானவர்கள் மழையில் நனைந்து கொண்டு தரிசனம் செய்வதை பார்க்கும் போது மக்களின் இறைவனை தரிசிப்பதில் காணப்படும் முயற்சியில் ஏற்படுகின்ற  சகிப்புத்தன்மை மனதுக்கு சந்தோசமளிக்குது. நாமளும் அவர்களை போல் மழையை பொருட்படுத்தாது பிரதோஷ கால நந்தியை தரிசிக்கலாம். வாங்க! 

பெரிய நந்தி அழகா அலங்கரிக்கப்பட்டு மலர் மாலைகளெல்லாம் சூட்டப்பட்டு அலங்காரமா காட்சியளிக்குது. அங்க பலரும் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற நெய்விளக்கு தீபம் ஏற்றினர். நாமும் ஏற்றி எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தித்து நந்திக்கு சூட்டிய பூமாலையை பிரசாதமா வாங்கிக்கிட்டு அங்கிருந்துக் கிளம்பலாம். இனி பிரதோஷ காலங்களில் எப்படி வலம் வரனும் முறையை பார்க்கலாம் பிரதோஷ  காலத்தில் வலம்வரும் முறைக்கு சோம சூக்த பிரதட்சணம்ன்னு சொல்வாங்க 
இது நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு, இடப்புறமா வலம் வந்து சண்டிகேஸ்வரரை வணங்கி, அங்கிருந்து திரும்பி நந்திப் பெருமானிடம் வணங்கி, இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து, அங்கிருந்து வலப்புறமாக போய் கோமுகி வரை வலம் வந்து கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்கனும். பின்னர் அங்கிருந்து திரும்பி நந்தித்தேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்கனும். இது சோமசூக்த பிரதட்சணம் ன்னு சொல்வாங்க. அதற்கான வரைப்படம் தான் மேல இருக்கும் படத்துல பார்த்தது. ஆலகால விஷம் வெளிப்பட்ட போது தேவர்கள் இங்கும் அங்கும் அலைந்ததை நினைவு கூறும் விதமா இந்த பிரதட்சணம் செய்யப்படுது. இந்த வலம் வரும் முறைப்படி நாம் செய்தால் பிரதோஷத்தின் முழு பலனையும் அடைய முடியும்.

மழை ஒருவழியாக முடிந்து சிறு தூறலாப் சொட்ட ஆரம்பித்தது,. நாமும் கிளம்பி செல்லலாம். கொடிமரத்தை தாண்டி உள்ள சென்றால் வடக்கே சுப்பிரமணி சுவாமி,தெற்கே விநாயகப் பெருமானும் இருக்காங்க. அதை கடந்து உள்ள போனால் இரண்டாம் பிரகாரம் அமைந்திருக்கு. இப்பிரகாரத்தில் சிவாலயத்தில் அமைய வேண்டிய அனைத்து பரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் அமைந்திருக்கு.

பின்னர் அங்க இருக்கும் நந்தியை வழிப்பட்டு அண்ணாமலையார் சந்நிதிக்கு செல்லும் முன் .துவார பாலகர்களை தரிசித்து கருவறையின் முன்புறமுள்ள அர்த்த மண்டபத்தில் நின்று தரிசிக்கும் போது அருணாசலேசுவரரரை சிவலிங்க வடிவில் தரிசனம் செய்து சொர்ணாகர்ஷன கிரிவல பயணத்தை இனிதே நிறைவு செய்யலாம்.

அடுத்த வாரம் வேற ஒரு கோவிலை புண்ணியம் தேடிப் போறப் பயணத்துல தரிசிக்கலாம்! அண்ணாமலையானுக்கு அரோகரா!

Thursday, December 26, 2013

கோல்ட் சமிக்கி மாலை - கிராஃப்ட்

நான் ரொம்ப சோம்பேறி. ஒரு வேலை எடுத்துக்கிட்டா அதை செஞ்சு முடிக்கனும்ன்ற அக்கறைலாம் இல்லாதவ. பத்து நாள் தீவிரமா எம்ப்ராய்டரி பண்ணுவேன். அடுத்த பத்து நாள் கிராஃப்ட். அதுக்கடுத்த பத்து நாள் வொயர் கூடை, ஒரு சில நாள்ல எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு தூக்கம்.

உடம்பு வளைஞ்சு எப்பவாவது நான் செஞ்சு உருப்படியா வந்த கிராஃப்ட் அயிட்டம் பத்தி அப்பப்போ போஸ்ட் போடலாம்ன்னு இருக்கேன். ஃப்ரெண்ட் வீட்டுக்கு போன போது அவ வீட்டு சாமி படத்துல அழகான மாலை இருந்துச்சு. லைட் வெளிச்சம் பட்டு தங்கம் போல செம ஜொலி ஜொலிப்பு. விலை என்னன்னு கேட்டேன் 150ரூபாய்ன்னு சொன்னா. 

அந்த மாலைல என்னலாம் இருக்குன்னு பார்த்து மனசுல பதிஞ்சுக்கிட்டேன். ரொம்ப நாளாவே அதுப்போலவே செய்யனும்ன்னு ஆசை. நேத்துதான் அதுக்கான சான்ஸ் கிடைச்சது. உடனே தேவையான பொருள்லாம் வாங்கி வந்து செஞ்சுட்டேன்.

தேவையான பொருட்கள்:
கோல்ட் கலர் சமிக்கி
பச்சை கலர் கண்ணாடி மணி,
மணி கோர்க்கும் நரம்பு,
கோல்ட் கலர் பிளாஸ்டிக் கோவில் மணி
கோல்டன் ரிப்பன்
வெள்ளை கண்ணாடிப் பூ
கோல்ட் கலர் பிளாஸ்டிக் குண்டு மணி

சமிக்கி எல்லா கலர்லயும் ஃபேன்ஸி கடைகள்ல கிடைக்குது. 100 கிராம் பத்து ரூபாய். உங்களுக்கு பிடிச்ச கலர்ல வாங்கி வந்து அதோட இதழ்களை உள்பக்கமா மடிச்சா கீழ் படத்துல இருக்குற ஷேப்புல வந்துடும். இது மாதிரி செஞ்சு வச்சுக்கோங்க.

உங்களுக்கு மாலை தேவைப்படும் அளவுக்கு பிளாஸ்டிக் நரம்பை கட் பண்ணி, அதுல பிளாஸ்டிக் கோவில் மணியை கோர்த்துக்கோங்க. இந்த கோவில் மணியும் எல்லா கலர்லயும் கிடைக்குது.

அடுத்து மணி கோர்த்த நரம்போட ரெண்டு நுனியையும் ஒண்ணா சேர்த்து ஒரு நரம்பாக்கி அதுல பிளாஸ்டிக் பூவோட இதழ்கள்லாம் மணியை பார்த்த மாதிரி கோர்த்துக்கோங்க. இந்த பிளாஸ்டிக் பூவும் எல்லா கலர்லயும் கிடைக்குது. இந்த பூ கிடைக்காட்டி சமிக்கி கூட யூஸ் பண்ணிக்கலாம்.

அடுத்து பிளாஸ்டிக் குண்டு மணி கோர்த்துக்கோங்க.

அதுக்கடுத்து கோல்ட் குண்டு மணியை கோர்த்துக்கோங்க.

அடுத்து வெள்ளை பிளாஸ்டிக் பூவை கோர்த்துக்கோங்க.

அதுக்கடுத்து 3 பச்சைக் கலர் மணியை கோர்த்துக்கோங்க. இதோட மாலையோட குஞ்சலம் ரெடி. 

அடுத்து, ஒண்ணா இருக்கும் ரெண்டு பிளாஸ்டிக் நரம்பையும் தனித்தனியா பிரிச்சு, ஒரு நரம்புல மடிச்சு வச்சிருக்கும் சமிக்கியோட இதழ்கள் மாலையோட மேல்பக்கம் பார்க்கும் மாதிரி கோர்த்துக்கோங்க.

அதுக்கடுத்து, பச்சை கண்ணாடி மணி 3 கோர்த்துக்கோங்க.

அடுத்து சமிக்கியோட இதழ்கள் மாலையோட கீழ்பக்கம் வர்ற மாதிரி கோர்த்துக்கோங்க. அதுக்கப்புறம் இன்னொரு சமிக்கியை திருப்பி எதிரும் புதிருமா வரும் மாதிரி, மேல் படத்துல இருக்குற மாதிரி கோர்த்துக்கோங்க.

இப்படியே 3  மணி, ரெண்டு சமிக்கின்னு மாத்தி ரெண்டு நரம்புலயும் கோர்த்துக்கிட்டு வாங்க.

ரெண்டு பக்கமும் ஒரே அளவுல கோர்த்தப் பின், கோல்ட் ரிப்பனை நரம்புல முடிச்சு போட்டுக்கோங்க.
அழகான கோல்ட் சமிக்கி மாலை ரெடி.


எங்க வீட்டு சாமி படத்துக்கு ஒரு மாலை.

எங்க வீட்டு பிள்ளையாருக்கு ஒரு மாலை. என் கையால நானே செஞ்சு போட்டதுல ஒரு சந்தோசம்!!

சமிக்கி பாக்கட் நாற்பது ரூபா, கண்ணாடி பூ, மணி, நரம்புலாம் சேர்த்து மொத்தம் 100 ரூபாய்ல பொருள்லாம் வாங்கி 2 அடி நீளத்துல ரெண்டு மாலை செஞ்சேன்.  ரெண்டு மாலை செய்ய அரை மணிநேரம்தான் பிடிச்சது. வெளில வாங்குனா ஒரு மாலை 100 ரூபாய் சொல்லுவாங்க. நாமளே செஞ்சா நமக்கு பிடிச்ச கலர்ல, பிடிச்ச டிசைன்ல செஞ்சுக்கலாம்தானே!?

மாலை நல்லா இருக்கா!? பிடிச்சு இருக்கா!? 

Wednesday, December 25, 2013

மதராசப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ஒரு பயணம் -மௌன சாட்சிகள்

நான் சென்னை வரும்போதுலாம், பட்டிக்காட்டான் மிட்டாய்க்டையை முறைச்சுப் பார்க்குற மாதிரி, சென்னையோட பளப்பளப்பைப் பார்த்து வாயைப் பிளப்பதுண்டு. எத்தனை முறை பார்த்தாலும் சென்னைல இன்னும் பல இடங்கள் என்னை ஆச்சர்யத்துக்குள்ளாக்குற இடங்கள் பல உண்டு. அதைலாம் சொல்ல இந்த ஒரு பதிவு போதாது.

அதுல சில முக்கியமான இடங்களை மட்டும் பாப்போம் அதைபார்க்கும் போது பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட மதராசப்பட்டினம் எப்படி இருந்திருக்கும்? அந்த சமயத்தில் அவர்கள் கட்டிய கட்டிடங்கள் இல்ல அவங்க ஆஃபீசா இயங்கி வந்த கட்டிடங்கள் எப்படி எல்லாம் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும்ன்னு இன்றைய மௌன சாட்சிகளில் பார்க்கலாம்!!  

முதலில் நாம பார்க்க போறது சென்னை சென்ட்ரல். பழைய படங்களாகட்டும், புதிய படங்களாகட்டும் நாயகன், நாயகி சென்னை வந்துட்டாங்கன்னு சொல்ல முதல்ல காட்டுறது சென்னை சென்ட்ரலாகத்தான் இருக்கும். ஆனா, அது உருமாறி பல்வேறு காலங்களில் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை மாற்றங்களை அடைந்து இப்ப இருக்கும் நிலைக்கு வந்திருக்கு.
  
இந்த படம் பக்கிங்காம் ஓடையின் மேற்கு பக்கத்திலிருந்து 1880 ல எடுக்கப்பட்டது. 1856 ல முதல் ரயில்வே ராயபுரத்தில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் நெட்வொர்க் மெட்ராஸ் ரயில்வே நெட்வொர்க் ஆக மாறியபோது இரண்டாவதா 1873 பக்கிங்காம் கால்வாய் பக்கத்துல கட்டப்பட்டது. அதுதான் இன்றைய சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.

இந்தப்படம் 1905 ல எடுக்கப்பட்டது அதன்பிறகு 1907 ல இந்த ஸ்டேஷன் மெட்ராஸ் ரயில்வே கம்பெனியின் முக்கிய இடமாக விளங்கியது
.
  அதன் பிறகு எல்லா வண்டிகளுமே இங்க இருந்துதான் புறப்பட்டது. பின்னர் 1908 ல அது மெட்ராஸ் சென்ட்ரல் ரயில்வே கம்பனியின் கண்ட்ரோலின் கீழ வந்தது. பின்னர் சௌதர்ன் ரயில்வேயாக  1922 ல செயல்பட தொடங்கியது.  இந்தப்படம் 1925 ல எடுக்கப்பட்டது. பின்னர் பீச் தாம்பரம் எலெக்ட்ரிக் ட்ரைன் 1931 ல தொடங்கப்பட்டது.
   

அதன் பிறகு 1953 ல பல புதிய வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக விளங்கியது. இந்த ரயில்வே ஸ்டேஷனின் கட்டிட அமைப்பு இங்கிலாந்தின் கோதிக் ரிவைவல் கட்டமைப்பை கொண்டது. இதை முதன்முதலில் ஜார்ஜ் கர்டிங் என்பவர் நான்கு பிளாட்பர்ம்களுடன் தான் வடிவமைத்தார். இது முடிக்க ஐந்து வருடமாகிட்டது. அதன்பிறகு ராபர்ட் பெல்லொவ்வெஸ் சிஸ்லோம் என்பவர் இதில் கூடுதலாக 136 அடி உயரத்தில்  மணிகூண்டு அமைத்து வடிவமைத்தார். அதில் திருவிதாங்கூர் கட்டிடகலையின் கோபுர அமைப்பும் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகுதான்  சில மாறுதல்களுடன் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் முழுமை பெற்றது.
  
இது இன்றைய நிலை.  பெரிய பாலங்களும் ரயில்வே ட்ராக்களும், வாகன இரைச்சல்களும், மக்களின் கூட்டமும், டிராபிக் நெருக்கடியும் இதன் அமைதியான வரலாற்றை இரைச்சல்கள் மிக்கதா மாற்றிவிட்டது.


மதராஸ் ரயில்வே கம்பனின் மற்றுமொரு முக்கியமான கட்டிடம் சதர்ன் ரயில்வே தலைமையகம். ராயபுரம் ரயில்வே ஸ்டேஷன்னுக்கு மாற்றாக கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடம் இந்தோ சரசெனிக் கட்டிட அமைப்பில் கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடத்தை காண்டிராக்ட் எடுத்து கட்டியவர் சமயநாத பிள்ளை என்னும் பெங்களூரை சார்ந்த காண்டிராக்டர். இதை கட்ட அப்பவே 2 மில்லியன் இந்திய ரூபாயில் செலவானதாம். இவர் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனை சிறப்பாக கட்டி முடித்ததை பார்த்து இவருக்கு இந்த கட்டிட வேலை கொடுக்கப்பட்டதாம்.  இதை வடிவமைத்தவர் மெட்ராஸ் ரயில்வே கம்பனியை சார்ந்த ஆர்கிடெக் கிரேசன் என்பவராகும்.  இதை கட்டி முடிக்க ஒன்பது வருஷங்களானாதாம். இதைக் கட்டி முடிக்க இந்திய ரூபாயில் மூன்று மில்லியன் பணம் செலவானதாம். இந்த கட்டிடம் டிசம்பர் 11 1922 ல திறக்கபட்டது.


அடுத்து நாம பார்க்க போறதும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் இது டவுன் ஹால். விக்டோரியா மகாராணியின் கோல்டன் ஜூப்ளி ஆட்சிக்காலத்தின் நினைவா கட்டப்பட்டக் கட்டிடம். இது விக்டோரியா  பப்ளிக் ஹால் ன்னு அழைக்கப்பட்டது. இந்தியாவில் கட்டப்பட்ட பிரிட்டிஷ் கட்டமைப்பு கொண்ட கட்டிடத்தில் இதுதான் முதலில் தோற்றுவிக்கப்பட்டதாம். இது கூட்டங்கள் நடத்தவும் டிராமா நடத்தவும் பயன்பட்டதாம்.


இந்த கட்டிடம் 1886 ல கட்டிட வேலைகள் தொடங்கபட்டது. மொத்த பரப்பளவு மூணேகால் ஏக்கர்ஸ். விஜயநகரத்து மன்னர் ராஜா பசுபதி ஆனந்த  கஜபதி ராஜு இதற்கு 1883 ம் வருஷம் டிசம்பர் மாசம் 17 ம் தேதி அடிக்கல் நாட்டினார். மேலும், 35 பேர் இதற்கு நிதியுதவி வழங்கி இருக்கின்றனர். அதுல முக்கியமானவங்க திருவிதாங்கூர் மகராஜா 8000 ரூபாயும், மைசூர் மகராஜா மற்றும் பட்டுகோட்டைராஜா அப்ப இருந்த நீதிபதி முத்துசுவாமி ஐயர் இவங்களெல்லாம் 1000 ரூபாயும் நன்கொடை வழங்கினராம். மேலும் பி .ஆர் அண்ட் சன்ஸ் வாட்ச் கடையினர் 1400 ரூபாயும் மேலும் ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி, எட்டயபுரம் ஜமீன்தார் ஹாஜி அப்துல் பாட்சா சாஹிப் முதலானோர்களும் இந்த கட்டிடம் கட்ட உதவி பண்ணிருக்கிறாங்க. இதைக் கட்டி முடிக்க ஐந்து வருடங்கள் ஆனதாம். இதற்கான மொத்த செலவு 16,425 ரூபாய்.

இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் ராபர்ட் பெல்லொவ்வெஸ் சிஸ்லோம். இவர் இதை இந்திய சரேசெனிக் கட்டிடகலை அமைப்பில் கட்டினார். 1888 முதல் 1890 வரை நம்பெருமாள் செட்டி என்பவர் இதை கான்ட்ராக்ட் எடுத்து கட்டினாராம். இது 1887 ல லார்ட் கன்னிமரா இதை பொதுமக்களுக்காக திறந்து வைத்தார். அதற்கு பிறகு சர் மௌன்ட்ச்தோர்ட் எல்பின்ஸ்டோன் கிரான்ட் டப் மெட்ராஸ் கவர்னரா இருந்தார். அவர் 1889 ல பொதுமக்களுக்காக அர்ப்பணித்து பொதுகூட்டத்தில் இதற்கு விக்டோரியா மகராணி பெயர் வைக்கப்பட்டது 

இந்த ஹாலில் பல முக்கியமான தலைவர்கள் உரையாற்றி இருக்காங்க. சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி இவங்களெல்லாம் இங்கு வருகை தந்து இருக்காங்க. சுப்ரமணிய பாரதியார், கோபால கிருஷ்ண கோகலேசர்தார் வல்லபாய் படேல் முதலியவர்களெல்லாம் இங்க சொற்பொழிவாற்றி இருக்காங்க.  இங்கே நித்திய வாழ்வு' என்ற பொருளில் பாரதி சொற்பொழிவு நடத்தி இருக்கிறார். 

முதன் முதலில் சினிமா திரை இடப்பட்ட இடமாகவும் இது இருந்திருக்கு. இந்த விக்டோரியா  பப்ளிக் ஹால் இவ்வளவு சிறப்பு மிக்கது.இது இப்போதைய அதன் தோற்றம் இந்த கட்டிடத்தில் இப்ப தெனிந்திய அத்தெலெடிக் கூட்டமைப்பு இயங்குது. இங்க சுற்றிலும் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் நடப்பதால இந்த கட்டிடம் தனிமைப் படுத்தபட்டதுப் போல காட்சியளிக்குது. எவ்வளவு வரலாறுகள் எவ்வளவு நிகழ்வுகள்லாம் தாங்கிக்கிட்டு அதை தாண்டி போகும் இன்றைய தலைமுறையினருக்கு மௌன சாட்சியாய் நிற்கிறது இந்த விக்டோரியா  பப்ளிக் ஹால் 


அடுத்து நாம பார்க்கப்போறது சென்னை மாநகராட்சி கட்டிடம்  என அழைக்கப்பட்ட ரிப்பன் மாளிகை. இது விக்டோரியா  பப்ளிக் ஹாலின் அருகில் இருக்கு.  இந்தக் கட்டிடம் 1913 ம் ஆண்டு லோகநாதன் முதலியார் என்பவரால் 4 வருடங்களாக கட்டப்பட்டது. அப்ப அதற்கான கட்டுமான செலவு  7,50,000, ரூபாய். 1909 ம் ஆண்டு அப்போதிருந்த வைஸ்ராய் மின்டோ என்பரால் அடிக்கல் நாட்டப்பட்டது.  இது பிறகு அப்போதிருந்த பிரிட்டிஷ் இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் ரிப்பன் என்பவரது பெயரால் அழைக்கப்பட்டது.

அவர்தான் முதன் முதலில் உள்ளூர் சுயாட்சி முறையை ஏற்படுத்தியவர் அவர் மிகவும் நல்லவராக இருந்ததால அந்தக் காலத்தில அவரை ரிப்பன் எங்கள் அப்பன்னு சொல்லுவாங்களாம். பல்வேறு இடங்களில் இயங்கி வந்த அலுவலகங்கள் மற்றும் வேறு இடத்தில இயங்கி வந்த மெட்ராஸ் முனிசிபல் கார்பரேசன் 1913 ம் ஆண்டு இந்த கட்டிடத்திற்கு மாற்றபட்டதாம். அப்ப மெட்ராஸ் முனிசிபல் கார்பரேசனின் தலைவராக P .L  மோர் என்பவர் இருந்தார். இந்த திறப்பு விழாவிற்கு 3000 திற்கு மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் உயரதிகாரிகள் கலந்து கொண்டனராம்.


வெள்ளை நிறத்தில் அமைந்த இந்த கட்டிடம் இந்தோ சரசெனிக் கட்டிட அமைப்பில் கட்டப்பட்டதாகும்.  மேலும் இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய ஆகிய மூன்று முக்கிய கட்டிடக் கலை பாணியிலும் கட்டபட்டுள்ளது. 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இக்கட்டிடம் எலுமிச்சை சாறுகலந்த கலவையும், தேக்குமர உத்திரங்களும், கடப்பாகற்களாலும் கட்டப்பட்ட கட்டிடமாகும். இதன் தனித்தன்மை இதன் உயரத்தில் இருக்கும் கடிகாரம் இதை நிறுவியவர்கள் ஓக்ஸ் அண்ட் கோ. 1913 ல் அமைத்தனர். இது நான்கு பெண்டுலங்களுடன் இயங்கும் இயந்திர அமைப்பைக் கொண்டது இதற்கு 1913 ல உதவியவர்கள் ஜில்லெட் அண்ட் ஜோன்ஸ்டன்.


இப்ப ராட்சச எந்திரங்களும், கட்டுமான பணியாளர்களும், தூசும் தும்புமாக சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு புனரமைப்பு பணிகளும். மெட்ரோ ரயில் பணிகளும் நடப்பதால இதுவும் ஒவ்வொரு காலங்களிலும் அது கண்ட மாற்றங்களை உள்ளில் கொண்டு மௌன சாட்சியாய் நிற்கிறது.

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு இடத்திலிருந்து மௌனச்சாட்கள் பகுதிக்காக சந்திக்கலாம். வணக்கம்.