Sunday, September 30, 2018

வாழ்க நீயும் வளமுடன்.. என்றும் வாழ்கவே! - பாட்டு புத்தகம்


காதல் என்னலாம் செய்ய சொல்லும்?!  சிற்பம் வடிக்க சொல்லும்.  சித்திரம் எழுதச்சொல்லும்,  மார்க் எடுக்க சொல்லும், எந்த தனித்திறமையுமில்லாம பணமும் மனமுமிருந்தால் தாஜ்மகால் மாதிரி கட்டடம் எழுப்ப சொல்லும். பிச்சியாய் அலைய சொல்லும்.   அட, லவ்வுனவங்க நம்ம லவ்வை ஒத்துக்கலைன்னா ஒன்னு உசுரை கொடுக்க சொல்லும் இல்ல உயிரை எடுக்க சொல்லும்.  காதல் கொண்டவர் பாடல் எழுதினால்?! 

ஆத்மார்த்தமாய் வெளிவரும் அந்த பாடல் செமயா இருக்கும். அந்த பாட்டுக்கு அவரே இசையமைச்சிருந்தால்?! பாடலின் இனிமையை பத்தி சொல்லவே வேணாம், அந்த பாடலை அவரே பாடி இருந்தால்?! அந்த பாட்டுக்கு பொருத்தமான நடிகர் நடிச்சிருந்தால்?!  பட்டி தொட்டிலாம் அந்த பாட்டாவே இருக்கும். அப்படி ஒரு பாடல்தான் இதயக்கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில்...ன்ற  பாடல்தான் அந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்.

தன் மனைவி ஜீவாமீது அலாதி பிரியம் இளையராஜாவுக்கு. தன்னோட பல பாடல்களை உருவாக்கும்போது தன் மனைவியின் நினைவாகவே உருவாக்குனதா ஒரு பேட்டியில் சொல்லி இருக்கார். இளையராஜா இசையமைப்பாளரா இருந்த காலத்தில் பாடலாசிரியரா உருவெடுக்கும் காலம் வந்தபோது, தன் காதல் மனைவி ஜீவாவை நினைச்சுக்கிட்டு எழுதின பாடல்தான்.  இந்த பாடலை எழுதனும்ன்னு ஆரம்பிக்கும்போது முதலின் தோன்றிய வரிதான் எனது ஜீவன் நீயடின்ற வரி..  அதை வச்சுதான் அந்த பாடலே உருவானதாம். இந்த பாடல் முழுக்க ஜீவன்ன்ற வார்த்தை அடிக்கடி வரும்.  இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்... இதில் வாழும் தேவி நீ.. எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே.. என் பாடலின் ஜீவன் எதுவோ?! அது நீயே!!.' எனது ஜீவன் நீதான் என்றும் புதிது..இதைவிட எப்படி தன்னோட காதலை ஒரு ஆணால் சொல்ல முடியும்?! அந்த காதலுக்கு பாத்திரமான ஜீவான்ற அந்த  பெண்மணி எத்தனை அதிர்ஷ்டசாலி?! 

இந்த பாட்டு மூணு விதமா நெட்ல கிடைக்குது. முதல்ல இளையராஜா குரலில் கிடைக்குது. இது சினிமாவில் இருக்காது. கேசட்ல மட்டுமே இருந்துச்சு. ரெண்டாவது இந்த படத்து கதாநாயகனான மோகனின் முதல் காதலி அம்பிகாவோடு சந்தோசமா பாடுவது. மூணாவது, கிளைமேக்ஸ் பாட்டு. ராதா திருமணத்து போது  மோகன் பாடுவது. கிட்டத்தட்ட அது சோகப்பாட்டுதான், ஆனா, அந்த சோகம் பாட்டுல தெரியாது..
இளையராஜா குரலில்....


முதல் காதல்..
கிளைமேக்ஸ் சோகம்..

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலரால் நாளும் சூட்டுவேன்...

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்


ஆத்மராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே!
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே!
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை.
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை.
எனது ஜீவன் நீதான்... என்றும் புதிது!!

இதயம் ஒரு கோவில்……………
காமம் தேடும் உலகிலே, ஜீவன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா!
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்!
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே!
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது?!


இதயம் ஒரு கோவில்…………
நீயும் நானும் போவது,
 காதல் என்னும் பாதையில்...
சேரும் நேரம் வந்தது..
 மீதி தூரம் பாதியில்..
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா!!
எனது பாதை வேறு!
 உனது பாதை வேறம்மா!!
மீராவின் கண்ணன் மீராவிடமே!!
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே!
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே!!


படம்: இதயக்கோவில்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணி
நடிகர்கள்; மோகன், அம்பிகா, ராதா

Saturday, September 29, 2018

பெண்களுக்கு இதய நோய் வருவது குறைவாம்!! - உலக இருதய தினம்


உடலுக்குள் மறைவா கைப்பிடி அளவில் இருக்கும் ஒரு உறுப்புதான் இதயம்.  மனிதன் உயிர்வாழ மிக முக்கியமான உறுப்பு இதயம். இதை மறுப்பதற்கில்லை. ஆனா இந்த இதயம் காதலர்கள்கிட்டயும், சினிமாக்காரங்கக்கிட்டயும் மாட்டிக்கிட்டு படும் பாடு இருக்கே! அடடா! சொல்லி மாளாது. சதா சர்வகாலமும் இயங்கிட்டிருக்கும் இகைப்பிடி அளவிலான இந்த  இதயம் நின்னுட்டா அம்புட்டுதான் சொந்தக்காரவுகளுக்குலாம் சொல்லி அனுப்பிட வேண்டியதுதான்!  இதயம், சிறுநீரகம், மூளை மாதிரி உடல் சம்பந்தப்பட்ட வேலைகளை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தா ஒரு பிரச்சனையுமில்ல. ஆனா, இந்த இதயமிருக்கே மனம், காதல், உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டு அதும் துடிச்சு நம்மையும் துடிக்க வைக்குது :-( . இப்படி படாத படுத்தும் இதயத்தை பத்திரமா  பாதுக்காக்கும் பொருட்டு  உலக இருதய நாள்ன்னு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 29ம் நாள் கொண்டாடப்படுது.  இதயத்தை பாதுக்காக்கனும்ன்னா பந்தம், பாசம், காதல்ல வீழாம இருந்தாலே போதும்ன்னு கூட்டத்துல சவுண்ட் விடுறது யாருப்பா?! நீ சொல்றதுலாம் சரிதான். உணர்ச்சி வசப்படுதலே இதயம் பாழாக முக்கிய காரணி. அதோடு சேர்த்து இன்னமும் காரணங்கள் இருக்கு. அதுலாம் என்னன்னு பார்க்கலாம். 
இதயத்தின் அழகிய துடிப்புகளே நாம் உயிர்ப்போடு இருப்பதன் அடையாளம். துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி. துடிப்புகளின் மவுனம் அதுவே மரணத்தின் அறிகுறி. இறைவனின் படைப்புகளில்  ஓர் அற்புதத் தொழிற்சாலைன்னா அது இதயம்தான்.   நம்  மூடிய கையின் அளவில்,  மார்பின் இடப்புறத்தில் இருக்கும் இந்த இதயம், நாம் பிறக்கும்முன்பே கருவிலேயே துடிக்க ஆரம்பிக்குது. நாலு அறைகளையும்,  நான்கு வால்வுகளையும் கொண்டது.  இதயம் Myocardium என்னும் தசைகளால் ஆனது. உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தமும் இதயத்தின் வலது மேல்அறைக்கு வரும். மூச்சுக்குழாய் வழியாக வெளியிடப்படும் காற்றின்மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேறும். அதேமாதிரி உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றின்மூலம் ரத்தம் சுத்தம் செய்யப்படும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது ஒவ்வொரு முறை இதயம் சுருங்கி விரியும்போதும் உடல் முழுவதும் பரவும். உடலுக்குத் தேவையான சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெரும்பணியை இதயத்தின் பெருந்தமனி செய்யுது.

இதயம் துடிக்குறது நின்னுடுச்சுன்னா  கெட்ட ரத்தம் சுத்தமாகாது. உடலிலுள்ள திசுக்களுக்கு எனர்ஜி தரும் குளுக்கோஸ் மற்றும் தாது உப்புகள்லாம் சரியாக கிடைக்காது. தேவையான எனர்ஜி கிடைக்கலைன்னா திசுக்கள் பாதிக்கப்படும்.  திசுக்கள் புதுப்பிக்க  முடியாம போயி, முடிவில் உடல் செயலிழந்து இறப்பு நேரிட வாய்ப்புண்டு. இதயத்துக்கு செல்லுது. ரத்தக் குழாய்கள் மூலம் ஆக்சிஜன் கலந்த ரத்தம் இதயத்துக்கு செலுத்தப்படுது. இவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தாலோ இல்ல ஆக்சிஜன் இல்லாம போனாலோ மாரடைப்பு ஏற்படும். இதற்கு முக்கியக் காரணம் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகளே! ரொம்பவே உணர்ச்சிவசப்படும்போது,  மன உளைச்சலில் இருக்கும்போது, இதய ரத்தக்குழாய்கள் சில நொடிகள் முழுமையாகச் சுருங்கும். இதனாலும் மாரடைப்பு ஏற்படும். மன அழுத்தம், புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களின்  கல்லீரலில் எல்.டி.எல்ன்ற கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா உருவாகும். இது ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு உண்டாகி அதன் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படும்.


அதிகப்படியான கொழுப்புள்ள உணவுகள், உடலில் சேரும் கலோரிகளை எரிக்குமளவுக்கு உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன், மனஅழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், மன உளைச்சல்லாம் இதயத்தின் சீர்க்கேட்டுக்கு வழிவகுக்கும்.   கொழுப்பு சேராம இருக்க உணவுக்கட்டுப்பாட்டோடு உடற்பயிற்சி செய்து ஓரளவு இதயத்தை பாதுக்காக்கலாம். ஆனா, மன உளைச்சல், பணிச்சுமை, கவலை, பதற்றம், ஆவேசம், வீட்டுச்சூழல், வெளிப்புறச்சூழல் காரணிகள்தான் இதயத்துக்கெதிரான பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இப்படியான எதிர்மறையான எண்ணங்களால் கார்டிசால், அட்ரீனல் ஹார்மோன்கள் ரத்தத்தில் கலந்து உடலின் எந்தப் பகுதியிலும் ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால், தியானம், யோகா செய்து மனசை கட்டுக்குள் வைக்கலாம். 
சாப்பாட்டுக்கு பின்னும், வேகமா நடக்கும்போதோ இல்ல உணர்ச்சி வசப்படும்போதோ மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு, அந்த வலி தோள்பட்டை, கழுத்து இல்லன்னா வயிற்றுப் பகுதிக்குப் பரவி, மூச்சுவிடுவதில் சிரமமும், வியர்த்து கொட்டுதல் மற்றும் திடீர்ன்னு  உடல் கணத்தல்லாம் மாரடைப்பின் அறிகுறி.  குடி, மதுப்பழக்கம், பணிச்சுமை, மன அழுத்தம்லாம் சட்டுன்னு ஆண்களை தாக்கிடும். அதனால், ஆண்களுக்கே பெருமளவில் மாரடைப்பு ஏற்படும். பெண்களுக்கு இதய நோய் வருவது காரணம்(பெண்களுக்கு இதயம்ன்னு ஒன்னு இருந்தால்தானேன்னு கப்பித்தனமா கமெண்டக்கூடாது) இயற்கையாகவே பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்ற  ஹார்மோன் சுரப்பதால் பெண்களுக்கு  இதய நோய் வருவது அபூர்வம்.  எதிர்மறையான எண்ணங்கள், ஒழுங்கற்ற மாதவிடாய், இன்சுலின் மாதிரியான மருந்துகளினால் இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு இப்பலாம் பெண்களுக்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் வருது.

30 வயசுக்கப்புறம் வருடத்துக்கு ஒருமுறை எல்லாருமே ரத்தத்தத்தில்  சர்க்கரையின்,  கொழுப்பின் அளவு,  ரத்த அழுத்தம்  போன்றவறை பரிசோதிச்சுக்கனும். ரத்தத்தில்,  சி.பி.கே – எம்.பி (CPK-MB) என சொல்லப்படும் ‘கிரியாட்டின் ஃபாஸ்போகைனேஸ்’ன்ற என்ஸைம் அளவைப் பரிசோதித்துச்சுக்கனும். ஒருவேளை,  ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் எதாவது பிரச்சனை இருந்தால், எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனை, ஆஞ்சியோகிராம் மற்றும் நியூக்ளியர் ஸ்கேன் போன்ற பிரத்யேகப் பரிசோதனைகள்லாம் இதயத்துக்காக செய்யப்படுது.
வெங்காயம், பூண்டு, கீரை வகைகள், தக்காளி, வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ, பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், காளிஃபிளவர், முருங்கைக்காய், புடலங்காய், கேரட், முள்ளங்கியைலாம் தினமும் சாப்பாட்டுல சேர்த்துக்கனும். ஆடை நீக்கிய பால், தயிர், சத்து பானங்களை அளவான இனிப்போடு குடிக்கனும்.  வெள்ளை சர்க்கரைக்காக நாட்டுச் சர்க்கரையைக் குறைந்த அளவு பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக் கரு, மீன், மட்டன் சூப் அல்லது நாட்டுக்கோழி சூப்லாம். சாப்பிடலாம். நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்,  சேர்த்துக்கலாம். அதுலாம்கூட சுத்திகரிக்கப்பட்டதா இல்லாம செக்கு எண்ணெயா இருந்தா நல்லது.
நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய் எண்ணெய், உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஐஸ்க்ரீம், சாக்லேட், ஊறுகாய், காபி, முட்டையின் மஞ்சள் கரு, கோழியின் இறைச்சியைலாம் அதிகப்படியா உண்பதை தவிர்க்கனும்.  சர்க்கரைநோய் இருக்கவுங்க, மாம்பழம் மற்றும் பலாப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் ,ரோபிக்ஸ் பயிற்சிகளை அவரவர் வசதிக்கேற்ப  செய்யலாம்.  யோகா , தியானம், பிராணாயாமம் மாதிரியானமூச்சுப் பயிற்சிகள்  செய்யலாம். இது மன அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்துக்கு உதவும்.  எப்பயும்  மகிழ்ச்சியா, மனநிறைவுடன் வாழ முயற்சி செய்யனும்.  தொடர்ச்சியா பலமணி நேரம் வேலை செய்யுறவங்க இடையிடையே கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கனும். நேர்மறை எண்ணத்தை உருவாக்கிக்கனும் இதுலாம் மாரடைப்பை முதல் நிலையிலேயே சரிசெய்யும். மறுமுறை மாரடைப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் செய்யும்.
யாருக்காவது மாரடைப்பு வந்தால் பாதிக்கப்பட்டவரின் உடைகளைத் தளர்த்தி, காற்றோட்டமான சூழ்நிலையில் உட்கார அல்லது படுக்க வைக்கனும். மூஞ்சில தண்ணீர் தெளிக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவரின் இடப்புறமாக நின்று, கைகளை இடப்புற மார்புப்பகுதியில் வைத்துத் தொடர்ந்து அழுத்தனும். அதுக்காக ரொம்ப அழுத்தமா அழுத்தக்கூடாது. அது மார்பு எலும்பை எலும்பை உடைக்கக்கூடும்.  பாதிக்கப்பட்டவரின் மூக்கைப் பிடித்துக்கொண்டு, வாயோடு வாய் வைத்து வேகமா ஊதனும். பின்னர் மீண்டும் இட மார்புப்பகுதியில் அழுத்தம் கொடுக்கனும். உடனடியாக ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோகனும். அதிகப்பட்சம் 4 மணி நேரத்துக்குள் சிகிச்சை கிடைச்சா  உயிரிழப்பிலிருந்து காப்பாற்றலாம்.
மாரடைப்புக்கு ஆளானவங்களுக்கு பைபாஸ் சர்ஜரி,  பேஸ்மேக்கர், ஹார்ட்  அசிஸ்ட் டிவைஸ், செயற்கை எந்திரம்ன்னு சொல்லப்படும் எக்மோ மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவங்களை உயிர் வாழ வைக்க முடியும். ஆனா, அதுலாம் தற்காலிகாமானதுதான்.  70  வயதைத் தாண்டியவர்களுக்கு, அதிலும் புகை, மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும்  சைலன்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். காலை 5 மணி முதல் 8 மணி வரைதான் பெரும்பாலும் சைலன்ட் அட்டாக் ஏற்படும். இரவு அதிக நேரம் விழித்திருப்பது, காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய மனஅழுத்தம் போன்றவைலாம் பல சைலன்ட் அட்டாக் ஏற்பட காரணம்.
இதய நோய், சர்க்கரை நோயின் பாதிப்பு  இந்தியாவில்தான் அதிகம். காரணம், இந்தியாவில் ஒவ்வொரு  வருசமும் 24 லட்சம் பேர் இதய நோய்களால் உயிரிழக்குறாங்க. கடந்த சில வருடங்களாக  20 வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்படுறவங்களின் எண்ணிக்கை அதிகரிக்குது.  30 முதல் 45 வயதினரின் எண்ணிக்கையும் சமீபமாக அதிகரித்து வருகிறது. நம்ம இதயம்  சராசரியா 300கிராம் எடை கொண்டது. இது ஒரு நாளைக்கு சராசரியா 1,00,000  முறைகளும் வருசத்துக்கு 30மில்லியன் முறையும், ஆயுள் முழுவதும் 2.5 பில்லியன் தடவையும்  துடிக்குது. ஒரு வருசத்துல 31 லட்சத்து 59 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பம்ப் செய்யுது. தன் ஆயுளில் 1மில்லியன் பேரல் ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுக்க பம்ப் செய்யுது. (ஒரு பேரல் 117.34 லிட்டர் அளவு).  ஆண்களைவிட பெண்களுக்கு இதயத்துடிப்பின் எண்ணிக்கை அதிகம். அதேமாதிரி பெரிய உயிரனங்களின் இதயத்துடிப்பு குறைவாகவும், சிறிய உயிரினங்களின் இதயத்துடிப்பின் எண்ணிக்கை அதிகமாவும் இருக்கும் (யானைக்கு நிமிசத்துக்கு 20 -30, எலிக்கு 500 -600). மோதிர விரல் நீளமாய் இருக்குறவங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு குறைவாம்
பல், ஈறுகளில் பிரச்சனை இருக்கவுங்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். மார்பின் இடப்பாகம் இதயம் இருக்குன்னு சொன்னாலும் நெஞ்சின் நடுவில் இரண்டு நுரையீரலுக்கும் நடுவில்தான் இதயம் இருக்கு. இதயத்தின் அடிப்பாகம் இடப்பக்கம் சாய்ந்து இருக்குறதால, நமக்கு இதயம் இடப்பக்கமா இருக்குற மாதிரியும், அங்கதான் துடிக்குற மாதிரியும் நாம உணர்றோம். லப்டப்ன்னு உண்டாகும் சத்தம் இதயத்தின் நான்கு அறைகளும் திறந்து மூடுவதால் உண்டாவது. நாம தூங்கினாலும், விழித்திருந்தாலும், எந்த வேலை செய்தாலும் செய்யலைன்னாலும் இடைவிடாது துடிப்பது இதயம் மட்டுமே! அதனால நமக்காக துடிக்கும் உறவுகளை கண்டுக்காம இருக்க மாதிரி இல்லாம இதயத்தை பேணி காப்போம்!
நன்றியுடன்,
ராஜி

Friday, September 28, 2018

சனி சிங்கனாப்பூர் - சனிபகவான் கோவில்


விநாயகரை தரிசித்துவிட்டு எங்களது பயண வழிகாட்டியின்(அதாங்க கைடு) அறிவுரையின்படி சனி சிங்கனாப்பூர் என்கிற ஊர்நோக்கி பயணமானோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிற ஷீரடியிலிருந்து சுமார் எழுபது கி.மீ தொலைவிலிருக்கு. இது நாசிக்கிலுள்ள  நய்வாசா வட்டத்திலிருக்கும் சிறிய ஊர்.  இந்த சனி சிங்கனாப்பூரில் அருள்பாலிக்கும்  தெய்வத்தை சனிமகராஜ் என உள்ளூர் மக்கள் சொல்றாங்க. வழியெல்லாம் பார்ப்பதற்கு அழகா இருக்கு. எங்க பார்த்தாலும் கரும்பு தோட்டங்களா இருக்கு. அதேசமயம், ரோட்டின் இருபக்கங்களிலும் நம்மூர் ஹைவேஸ் கும்பகோணம் டிகிரி காப்பிக்கடையைபோல் செக்கு மாடுவைத்து பலூன், ஊஞ்சல் கட்டி சிலர் ஆடிக்கொண்டு இருந்தனர். அது என்னன்னு கைடுக்கிட்ட கேட்டதுக்கு அவர் எதுவும் செல்லாம அடுத்து வந்த இதுப்போன்ற ஒரு இடத்தில காரை நிறுத்தினார். நாங்களும் ஆவலுடன் என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்கும் ஆவலோடு  . கிட்டக்க போனோம். 
நம்மூரில் டமடமன்னு சத்தம் வரும் மெஷினை வச்சு, கரும்பு, இஞ்சி, எலுமிச்சை வச்சு நசுக்கி ஜூசெடுத்து, ஐஸ்கட்டி போட்டு தண்ணி சேர்த்து சப்ப்ப்ப்ன்னு கொடுக்கும் கரும்பு ஜூஸ் மாதிரி இல்லாம இரண்டு மர அச்சுகளின் நடுவே கரும்பை செலுத்தி, அதை செக்குகள் போன்ற அமைப்பில் மாடுகளை வைத்து பிழிந்து கொடுக்குறாங்க. விலையும் குறைவு. ஜூஸ் பிழிந்து வெளிவரும் கழிவான கரும்பு சக்கையை செக்கை சுத்தும் மாட்டுக்கே உணவாக கொடுக்குறாங்க. நல்ல இயற்கை சுழற்சி முறைன்னாலும் சில மாடுகள் எலும்பும் தோலுமா பார்ப்பதற்கே பரிதாபமாக அந்த மர செக்கை இழுக்கிறதை பார்க்கும் போது நமக்கு அந்த கரும்புசாற்றின்  சுவையைவிட அவற்றின் பரிதாபநிலைமைதான் மனதுக்குள் ஓடுது. ஒருவேளை, ஓய்வு ஒழிச்சலில்லாம கால்கட்டோடு சுதந்திரமா இல்லாம இப்படி கட்டுண்டு இருக்குறதால அந்த நிலையோ என்னமோ! இதுமாதிரியான நூற்றுக்கணக்கான சாலையோர கரும்பு கடைகள் இருக்கின்றன ,சில இடங்களில் மனிதர்களே மாடுகளுக்கு பதிலா செக்கை சுற்றி சாறு பிழிந்து கொடுக்குறாங்க. நாங்களும் அப்படி ஒரு கடையில் கரும்பு சாறு குடித்துவிட்டு சிறிதுநேரம் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடிவிட்டு கோவிலை நோக்கி பயணமானோம் .
இங்கே ஒரு அரசு போக்குவரத்து பஸ் ஸ்டாண்ட் இருக்கு. அங்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து போக்குவரத்துக்கு பஸ் வசதிகள் இருக்கு. அதேசமயம் புதியதாக செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா அங்கே நாம் செல்லும் வாகனங்களை நிறுத்த இடம்தேடும்போது அவர்களாகவே நமது வாகனத்தை பார்க்கிங்கு இடம் தர்றோம்ன்னு நம்மை கூட்டி போறாங்க. செருப்பை போடுங்கள். சாமியை மனதார கும்பிடுங்கள் என அவர்கள் மொழியிலும் எல்லா மொழிகளிலும் ஆள்வைத்து சொல்கிறார்கள். ஆஹா! ஊர்விட்டு ஊர்வந்தாலும் நமக்கு இவ்வளவு மரியாதையா என நினைச்சு உச்சி மயிர் சிலிர்க்க நிக்கும்போது, அர்ச்சனை தட்டு, பூஜை பொருட்கள்லாம் கையில் திணிச்சு 400ரூ பில் போட்டுட்டாங்க. அட! படுபாவி பயலே! இதுக்குத்தான் இவ்வளவு மரியாதையை கொடுத்தியான்னு நினைச்சிட்டு நாங்க பல முறை இங்க வந்திருக்கிறோம். அர்ச்சனை தட்டுலாம் வேணாம் ன்னு கடவுளை தரிசித்தால் மட்டும் போதும்ன்னு சொல்லி வந்துட்டோம் இதுமாதிரி ஷீரடியிலிருந்து காரில் வருபர்களை இந்த வியாபாரிகள்  ஏமாத்துறாங்க.
அங்கிருந்து வெளியில் வந்தா, அங்க இன்னொரு கும்பல் நீங்கள் முதன் முறையாதானே கோவிலுக்கு வர்றீங்கன்னு அதே மாடுலேஷனில் கேட்க, சரி என்னதான் சொல்றாங்கன்னு  பார்த்தால், முதல் முறை வருபவர்கள் 3 லிட்டர் நல்ல எண்ணெய் (வடிவேலு காமெடி நினைவுக்கு வந்தா நான் பொறுப்பல்ல) வாங்கி கோவிலில் விடவேண்டும் என்றனர். இல்ல நாங்க பலமுறை இங்க வந்து செல்வதுண்டுன்னு சொல்லி  தப்பிச்சு வெளிய வந்து 100கிராம் எண்ணெய் பாட்டில் வாங்கிக்கிட்டு கோயிலுக்கு போனோம். இங்க கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்னன்னா செருப்புகளை கழட்டிவிட கோவிலிலேயே ஸ்டாண்ட் இருக்கு.  அதுப்போல அர்ச்சனை தட்டுகள், எண்ணெய்லாம்  நாம் விரும்பினால் மட்டுமே வாங்கிக்கிட்டா போதும்  மற்றபடி அங்க அர்ச்சனை செய்ய  நம்ம ஊரு மாதிரி எந்த பூசாரியும் கிடையாது. நாமளே  அங்குள்ள தொட்டிகளில் தேங்காயை போட்டுவிட்டு அங்கிருக்கும் சூலங்களுக்கு பூக்களை சூடிவிட்டு வரவேண்டியதுதான் எண்ணெய் கூட அங்கிருக்கும் தொட்டிகளில் நம் ஊத்திடனும். அதை சிறிய மோட்டார் வைத்து சனிபகவானது தலைப்பக்கத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் கும்பத்தில் விழுமாறு ஏற்பாடு செய்து அபிஷேகம் செய்விக்கப்படுது(எல்லாம் டெக்னாலஜி பாஸ்!) நாமா எதுவும் அபிஷேகம், அர்ச்சனை, பூஜைன்னு எதும் செய்யமுடியாது., பரிகாரங்களுக்காக போறவங்க தேவைப்படுகிறவர்கள் மட்டும் வாங்கினால் போதும் தேவை இல்லாம  வாங்கி காசை வீணாக்க வேண்டாம். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள் . கவனம்!
ஒருவழியா, கோவிலுக்குள் வந்துட்டோம். கோவிலுக்குள் வந்ததும் முதலில் ஸ்தல வரலாறு பார்க்கனும் அப்பதான் அங்கிருக்கும் சாமியை கும்பிடும் வழிமுறையை தெரிஞ்சு சரியான முறையில் சாமி கும்பிட முடியும். ஏன்னா ஒவ்வொரு தலத்தில் ஒவ்வொரு மாதிரியான வழிபாட்டு முறை இருக்கலாம்.  பல நூறு வருடங்களுக்குமுன் இந்த சனி சிங்கனாப்பூர் ஊருக்கு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த  பனாஸ்நாலா ஆற்றில் விடாது பெய்த பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்ப, ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன், ஆற்றில் ஒரு கல் மிதந்து வருவதை கண்டான். முதலில் பெரிய மரத்துண்டாக இருக்கும்ன்னு  நினைச்சு தன் கையில் இருந்த இரும்பு வளையம் பொருத்திய கம்பால் அந்த கல்லை இழுத்திருக்கிறான். அந்த கல்லில் காயம்பட்டு இரதம் வடிய தொடங்கியது. உடனே அவன் ஊருக்குள் போய் ஆட்களை கூட்டிவந்து அக்கல்லை காண்பித்திருக்கிறான். அப்பொழுது சனிபகவான் அங்குள்ள ஒருவரின் கனவில் வந்து நான்தான் சனி மகராஜ் நான் இந்த கல்லின் வடிவத்தில் வந்திருக்கிறேன், நீங்கள் இங்கு என்னை வைத்து  பூஜிக்கவேண்டுமென இடத்தை  கூறியதாக சொன்னார். உடனே ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து அந்த கல்லை தூக்க அது ஒரு அங்குலம் கூட அசையவில்லையாம் .
பின்பு ஊர்மக்கள் அந்த கல்லை அப்படியே விட்டுட்டு சென்றனர். பின்னர் சனிபகவான் அதே நபரின் கனவில் மறுபடியும் தோன்றி தாய்மாமனும், மருமகனுமான சொந்தமுள்ள இரண்டு பேர் முயற்சித்தால் என்னை ஆற்றிலிருந்து அழைத்து வர முடியும் என்று சொல்லி இருக்கார். உடனே ஊர்மக்கள் அப்படி உறவுமுறை உள்ள இருவரை அழைத்து கல்லைத்தூக்கினாராம். என்ன ஆச்சர்யம்?! 10-15 பேர் சேர்ந்தும் தூக்கி அசையாத கல்லை அந்த இருவரும் அனாயசமாய் தூக்கி வந்தனராம். பின் சனிபகவானுடைய உருவம் இல்லாத கல்லை ஒரு இடத்தில வைத்து பூஜைகள் செய்துவந்தனராம். உடனே அசரீரியாக வானில் சப்தம் கேட்டதாம் நான் ஒரு மகாராஜா போல் உங்களை பாதுகாப்பேன் என... அன்றுமுதல் இன்றுவரை அந்த ஊரில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் சனிபகவான் கத்துவருகிறார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.  அவர் கூறியதுப்போல் இங்குள்ள எந்த வீடுகளுக்கும் கதவுகள் கிடையாது.  பேங்குககள் உட்பட எல்லா இடங்களுக்கும் வெறும் திரையை மட்டுமே இட்டு இருக்கிறார்கள். இப்ப சிலர் கதவுகளை வைத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுது(ஒருவேளை சனிபகவான் பவர் குறைய ஆரம்பிச்சுட்டுதோ!)
கதவுகள் இல்லாமல் இருந்தாலும் இன்றுவரை ஒரு பொருள் கூட களவு போனதில்லை என இந்த ஊர்வாசிகள் சொல்றாங்க. அப்படியே யாராவது திருடினால் திருடியவனுக்கு கண் பார்வை இருக்காது எனவும் சொல்றாங்க.  சனி பகவான் சிலைக்கு ஆண்கள் மட்டுமே அபிஷேகம் செய்யலாம். பெண்கள், சனிமகராஜ் சிலையை தொட்டு பார்க்க அனுமதியில்லை!! ஆனா, கோவிலுக்குள் இருக்கும்போது இந்த நடைமுறையை  நான் கவனிக்கலை. கூட்டத்தில் சிலர் உள்ள போய் தங்கள் கையால் அபிஷேகம் செய்து கொண்டுடிருந்தனர். ஒவ்வொரு நாளும் இங்க வெளியூரிலிந்து வருபவர்கள் மற்றும் ஷிரடி யாத்திரைகள் செல்பவர்கள் என தினசரி 60,௦௦௦ ஆயிரத்துக்கு மேல் பக்தர்கள் குவிகிறார்கள். அதிலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மூன்று இலட்சம் பக்கதர்கள் இக்கோயிலில் வழிபாடு செய்வதாக உள்ளூர்வாசி ஒருவர் சொன்னார் .
நம்மூரில் விளக்கு ஏற்றுவதைப்போல் இங்கு சிலர் ஊதுபத்திகளை அங்கிருக்கும் பிரத்யோக ஸ்டாண்டுகளில் சொருகி சென்றனர். எள், நவதானியம், மாலைகள் என காணிக்கைகள் செலுத்த தனித்தனி தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கு. அதிலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாட்களில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், கருப்பு உளுந்து, பூ ஆகியவற்றை கொண்டு சிறப்பு வழிபாடு செய்வார்களாம்.   400 ஆண்டுகளுக்கு முன்புவரை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.  பின்னர்  பூமாதா பெண்கள் படை என்ற அமைப்பின் தலைவர் தேசாய் தலைமையில் போராட்டம் செய்து பெண்கள் கோவிலுக்குள் செல்லலாம். ஆனா கருவறையான மூலவரை தொட்டு அபிஷேகம் செய்யக்கூடாது என முடிவு செய்யப்பட்டு அனுமதிகிடைத்தாக சொல்லப்படுது .
ஊதுபத்திகள், நல்லெண்ணை,எள்ளு போன்றவைகளை செலுத்துவதற்காகவே பிரத்தேயேகமான தொட்டிகள் போன்ற அமைப்பு நாம் தரிசனத்துக்கு செல்லும் வழியில் நீள வாட்டமாக அமைத்துள்ளனர். நாம் வரிசையில் செல்லும் போதே அதில் காணிக்கைகளை செலுத்திக்கொண்டே  செல்லலாம்.  நாங்கள் சென்ற நேரம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாம் செல்லும்பொழுது தரையில் கவனமாக நடக்கனும். ஏன்னா, தினம் தினம் ஆயிரம் லிட்டர்கணக்கில் எண்ணெய்கள் கொட்டப்படுவதால் எண்ணெய்கள் தெறித்து தரைலாம் எண்ணெய் பிசுபிசுப்புடன் தரை வழுக்குது. அப்படியே நெருங்கி நெருங்கி மூலவரான சனிபகவானின் அருகில் வந்துட்டோம். இங்க ஒரு பெரிய கல்வடிவில் சனிபகவான் அருள்பாலிக்கிறார்ன்னாலும் அந்த மூலவர் எந்தவித மறைப்பும், நிழல் குடைகளும் இல்லாமல் திறந்த வெளியில் மழை, காற்று, வெயில் எல்லாவற்றையும் தன் மேனியில் தாங்கியாவாறே இருக்கிறார். அந்த மேடைமேல் ஏறும்போது மிகவும் கவனமாக ஏறனும் இல்லன்னா வழுக்கி விழுந்து மண்டை உடையும். நாங்கள் பார்த்து பார்த்து கவனமா மெதுவா ஏறி தரிசனம் செய்து படியிறங்கி வந்துட்டோம். எல்லா கோவிகளைப்போல் இங்கேயும் புகைப்படம் எடுக்காதீர்கள்ன்னு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அதுலாம் மதிக்கும் ஆட்களா நாம்?! அநேகர் இங்கே செல்பியும்,  புகைப்படமும்  சுட்டுக்கிட்டு இருந்தாங்க. நானும் எனது பங்கிற்கு புகைப்படம் எடுத்துக்கிட்டேன்.
பலமொழி பேசுபவர்களையும் அங்க பார்க்கமுடியுது. தரிசனம் முடிந்து வெளிய வரும்போது சுற்றுவட்ட பாதையில் மார்பிளினால் ஆனா தத்ராத்ரேயர் சிலையும், அனுமனின் சிலையும் வேறு ஒரு மஹான் சிலையும் தெரிகிறது. ஆனா அந்த மகான் யார்ன்ன்னுதான் தெரில.  தெரிஞ்சவங்க சொன்னால் தெரிஞ்சுக்குறேன்.  அந்த சிலைகளையும் கடந்து கோவிலைவிட்டு வெளியே வரும் பாதை அழகாக சுத்தமாக பராமரிக்கப்பட்டு பக்தர்கள் சிறிதுநேரம் உட்கார்ந்து செல்ல வசதியாக பெஞ்ச் போன்ற அமைப்பில் கட்டியுள்ளனர். அங்க சிறிய சிறிய கடைகளும் இருக்கு. ஷாப்பிங்க்கில் ஆர்வம் இருக்கவுங்க ஷாப்பிங்க் செய்யலாம். 
பக்கத்தில் அன்னதான கூடம் இருப்பதாக அறிவிப்பு பலகை இருந்தது. நானும் யோசித்துக்கொண்டே சென்றேன். அன்னதானம்ன்னா நம்மூர் போல சாப்பாடு போடுவார்களா இல்லை சப்பாத்தி போடுவார்களா?!ன்னு. போய்தான் பார்ப்போமா ?!ன்னு கேட்க சீக்கிரம் வாங்க! இன்னும் ஒரு கோவில் பார்க்கனும். சீக்கிரம் வாங்கன்னு  சொன்னதும் அன்னதான கூடத்தை அம்போன்னு விட்டுட்டு அங்கிருந்து நகர்ந்தேன். 
கோவிலில் மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம் சுத்தம்.  எல்லா இடமும் மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள் . அதுப்போல சீக்கிரம், சீக்கிரம்ன்னு யாரும் தள்ளுவதில்லை. காரணம் மூலவரே திறந்தவெளியில்தான் இருக்கிறார். முழுக்க முழுக்க  மார்பிள் கற்களால் இக்கோவிலை கட்டி இருக்காங்க.  உள்பக்கம் செல்லும் வழியாக, வெளியே செல்லமுடியாது வெளியே செல்ல தனி வழி இருப்பதினால் .நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்யமுடிகிறது .
ஒருவழியா தரிசனம் செய்துட்டு எங்களை அழைத்துவந்த காருக்கு வந்துட்டோம்.  வழிநெடுக கடைகள் நம்மூர் மாதிரிதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த திருக்கோவில் ஷீரடியிலிருந்து 60 கி.மீ  தொலைவிலும், அஹமத்நகரிலிருந்து 35 கி.மீ தொலைவிலும், அவுரங்காபாத்திலிருந்து  84   கி.மீ தொலைவிலும், பூனாவிலிருந்து 160 கி.மீ  தொலைவிலும் மும்பையிலிருந்து 265 கி.மீ தொலைவிலும் இருக்கு. அவுரங்கபாத் விமான நிலையம் சிங்கனாப்பூரிலிருந்து 90 கி. மீ தொலைவில் இருக்கு. ஷீரடி சென்றுவரும் பக்தர்கள் இந்தக்கோவிலுக்கும் சென்றுவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்ப எங்களை அழைத்துவந்த டிரைவர், இங்க பக்கத்தில சோனைரேணுகா  மாதா மந்திர் இருக்கு போகலாமா?ன்னு கேட்டார். நாங்களும் எவ்வளவு தூரம் எனக்கேட்க இங்கிருந்து 8 கிமீ தொலைவில்தான் இருக்குன்னு சொன்னதும் என்றவுடன் அந்தக்கோவிலுக்கும் போகலாம்ன்னு  முடிவானது .
இந்த சோனைரேணுகா  மாதாமந்திர், சிங்கனாப்பூரில் உள்ள பெத்லஹேக்கர்  வாடிரோடு என்னுமிடத்தில் இருக்குது. இது அஹமத்நகர் - அவுரங்காபாத் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கு. கோவில் ரொம்ப .சாதாரணமாதான் இருக்கு. அதே மார்பிள் கட்டிடங்கள்.. சோனைன்னு இந்தியில் சொல்றதுன்ன்னா தங்கம்ன்னு பொருளாம்! மகாதேவரால் வீசியெறியப்பட்ட சக்தியின் பாகங்கள்  தங்கத்திலான துண்டாக மாறி இந்த இடத்தில விழுந்ததாக தலவரலாறு. சோனை விக்கிரமாக ஸ்ரீரேணுகாமாதா இருக்கிறார். இங்கிருக்கும் விக்கிரகம் சுயம்புவா தோன்றியதுன்னு சொல்றாங்க. மேலும் இந்த திருக்கோவிலை கண்ணாடி கோவில் ன்னும் சொல்றாங்க. இந்த கோவிலின் சுவர்கள் மற்றும் தூண்களில் எல்லாம் கண்ணாடியினை கொண்டு அலங்காரம் செய்திருக்குறதால இதற்கு இந்த பேர் வந்துச்சுன்னு  சொல்லப்படுது. கோவிலுக்கு வெளியே இருக்கும் சிற்பங்கள் சங்குகளினால் செய்யப்பட்டதுன்னு சொல்லப்படுது. சக்திபீடங்களில் இந்த கோவிலும் ஒன்னுன்னு சொல்லப்படுது. கோவிலெல்லாம் சுற்றி டயர்டு ஆகிட்டோம் அங்கேயே சாப்பிடலாம்ன்னு  நினைச்சா, ஷீரடியில்தான் சவுத் இந்தியன் புட் கிடைக்கும்ன்னு  சொல்ல வண்டி ஷீரடி நோக்கி பறந்தது. இனி அடுத்தவாரம் ஷீரடியிலிருந்து பதிவை தொடரலாம் .
நன்றியுடன்
ராஜி .

Thursday, September 27, 2018

பறவையா பறக்கனும் - உலக சுற்றுலா தினம்


தண்ணி ஒரே இடத்தில் தேங்கி நின்னால் சாக்கடையாகிடும். அதனால ஓடிக்கிட்டே இருக்கனும். அதுமாதிரிதான் மனுஷங்களும் ஒரே இடத்தில் இருந்தால் பல விசயங்களை அறிய முடியாது. அடிக்கடி, வெளில போய்ட்டு வரனும்ன்னு சொல்வார்.  ஆதி மனிதன் உணவுக்காகவும் தோதான உறைவிடத்துக்காகவும் ஒவ்வோர் இடமாக சுற்றித்திரிந்து பின்னர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் பொருந்திய ஓரிடத்தை தேர்வு செய்து அங்கே நாகரிகத்தை வளர்த்தான் அவனும் வளர்ந்தான். பயணமென்பது ஒவ்வொரு மனிதனின் மரபணுவிலுமே பொதிந்து கிடக்குது. அதன் பரினாம வளர்ச்சிதான் இன்றைய சுற்றுலான்னு அப்பா அடிக்கடி சொல்வா அதுப்படி வருசம் ஒருமுறை எங்காவது கூட்டிட்டு போவார்.  கன்னியாகுமரி முதற்கொண்டு ரிஷிகேஷ் வரை டூர் போய் வந்தாச்சுது. பல்வேறு இடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்களை பார்த்தால் நம்மை மேம்படுத்திக்க உதவும்ன்றது அவரது எண்ணம்.  அவரது நினைப்புப்படியே எப்பேற்பட்ட உணவுக்கும், தண்ணிக்கும், சுற்றுச்சூழலிலும் வாழ என் பிள்ளைகள் உடலும் மனசும் ஒத்துக்கும். 
ஒரு பயணமென்பது வெறும் இடம் மாற்றம் மட்டுமல்ல. பல நினைவுகளின், அனுபவங்களின் தொகுப்பு. உலகை பல்வேறு பார்வையில் பார்க்க பயணம் உதவது. அதனால்தான் வெளிநாட்டில்லாம் வாரக்கடைசியில் குடும்பத்தோடு வெளிச்செல்வதும், வருடமொருமுறை சுற்றுலா போறதும் வாடிக்கை.  சுற்றுலான்ற வார்த்தைக்கு வழக்கமான இடத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு சென்று ஓய்வு, ஆராய்ச்சி மாதிரியான நோக்கத்துக்காக செல்வதுன்னு அர்த்தம். மனுசனுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் 
சுற்றுலா ஒரு மனுசனை மட்டும் மேம்படுத்துவதில்லை. மனுசனோடு சேர்த்து ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலா உதவுது. உலகின் பளா நாடுகள் தங்களது கலாச்சாரத்தில் சுற்றுலாவுக்கென ஒரு இடத்தை வைத்துள்ளது. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப். 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐ.நா.சபை யால் அங்கீகரிக்கப்பட்டு அறிவித்தது. அதனால், உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.  அதுக்கு அப்புறம்தான் சுற்றுலாவுக்கான தினம் என தனியாக கொண்டாடப்படுது. இப்ப சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல அவதாரமெடுத்துள்ளது.
ல்வித்துறை, மருத்துவத்துறை மாதிரி சுற்றுலாதுறைதான் உலகின் மிகப்பெரிய துறை. அதேப்போல, உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து சுற்றுலா துறை விளங்குகிறது. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலாதான். 2010ன் கணக்குப்படி 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2009ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமா 2008ன் இரண்டாம் பாதியிலிருந்து 2009ன் இறுதிவரை சரிவைக் கண்டது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருக்கு. ஐரோப்பியர்கள்தான் சுற்றுலா செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களில் முதலிடத்தில் இருக்காங்க. தங்களது வருமானத்துல ஒரு பகுதியை இப்படி சுற்றுலா போறதுக்காவே  ஒதுக்கி வைக்குறாங்க. 
சுற்றுலா செல்ல மிக சிறந்ததாய் பத்து நாடுகள் தேர்வாகி இருக்கு. பேங்காங்க்(தாய்லாந்து) ஆடம்பர மாளிகை மற்றும் தண்ணீரில் மிதக்கும் சந்தையும், பழங்கால மாளிகை, கோயில்லாம் சுற்றுலா செல்ல காரணம். லண்டன் தேம்ஸ் நதியே முக்காவாசிப்பேர் லண்டன் செல்ல காரணம்.  அறிவியல் வளர்ச்சியோடு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய அழகை அப்படியே தக்க வச்சிக்கிட்டிருக்கு இந்த இடம். பாரீஸ் (பிரான்ஸ்) செலக்ட் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த  பாரிசி என அழைக்கப்பட்டு இப்ப பாரீஸ் என அழைக்கப்படுது. இங்கிருக்கும் செய்னி ஆறு, நோட்ரே கதீட்ரல் தேவாலயம், புனித செப்பல் தேவாலாயம் மற்றும் ஈபிள் டவர் இதுலாம் மக்களை ஈர்க்கும் அம்சம். துபாய் ஏழு அரபு நாடுகளின் தலைநகரமாய் விளங்கும் இந்த இடம் சிறந்த கடைத்தெருக்களையும் கொண்டு மக்களை ஈர்க்கின்றது. நியூயார்க் நகரம்  புல்வெளிகள், காடுகள், ஆறுகள், பண்ணைகள், மலைகள், ஏரிகள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரத்தினை கொண்டு மக்களை ஈர்க்கின்றது.

சிங்கப்பூர் பூங்காக்களை கொண்டு நம்மை ஈர்க்கும். மிகச்சிறந்த வர்த்தக உலகின் முக்கிய வர்த்தக நகரம். கோலாலம்பூர்(மலேசியா) ஆல்பா  வோர்ல்ட் சிட்டி என அழைக்கப்படும் இந்நகரம் கலாச்சாரம், நிதி மற்றும் பொருளாதாரம், வர்த்தக மையமாக திகழுது. பெட்ரோனஸ் இரட்டை கோபுரம் மக்களை பெரிதும் கவர்ந்திழுக்குது. இஸ்தான்புல் (துருக்கி) பாரம்பரிய நகரமென யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இடம். மர்மர காடும், கருங்கடலும் பிரசித்தம். டோக்கியோ (ஜப்பான்) ஹோன்சு, இஜூ, ஒகசாவரா ஆகிய தீவுகள் சுற்றுலாவுக்கு என சிறப்பு பெற்றது. சியோல் (தென் கொரியா)  இங்குள்ள ஹான் நதி 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வரலாற்று சிறப்பு பெற்றது. இந்த நகரில் உள்ள ஜேங்டியோக் அரண்மனை, Hwaseong கோட்டை, Jongmyo கோவில், Namhansanseong மற்றும் Joseon வம்சத்தின் அரச கல்லறைகள் ஆகிய ஐந்து இடங்களை யுனஸ்கோவால் பாரம்பரிய பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாசலை தாண்டி சாலையில் கால்பதிக்கும்போதே சுற்றுலா தொடங்கி விடுது. அதனால், நமது உடல்நிலை, பொருளாதார சூழல், கால அவகாசத்தைக்கொண்டு முன்கூட்டியே திட்டமிடனும். குடும்பத்தோடு செல்வதென்றால் கூடுதல் கவனம் தேவை. நாம் செல்லுமிடத்தின் போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவற்றின் விவரங்களை முன்கூட்டியே விசாரிச்சு வச்சுக்கனும். என்னதான் கிரடிட், டெபிட் கார்ட்லாம் இருந்தாலும் கைவசம் பணத்தை இருப்பு வச்சுக்கனும்.  பணத்தை ஒருத்தரே வச்சுக்காம ஆளுக்கு கொஞ்சம்ன்னு பிரிச்சு வச்சுக்கனும். அப்படி ஆளுக்காள் வச்சிருக்கும் பணத்தையும் ஒரே இடத்தில் வச்சுக்காம வெவ்வேறு இடத்தில் வச்சுக்கிட்டா வழிப்பறி, விபத்து, திருட்டு போது பணமில்லாம திண்டாட வேண்டி இருக்காது. என்னதான் ஆளுக்கொரு போன் இருந்தாலும் முக்கியமான தொலைப்பேசி எண்களை ஒரு நோட்டில் குறிச்சு வச்சுப்பது நலம். பாதுகாப்பு குறைவா இருக்கும் இடத்தில் தங்க நேர்ந்தால் ஆளுக்கு கொஞ்ச நேரம்ன்னு காவலுக்கு ஒருவரை வச்சுக்கனும். ஹோட்டல் அறைகளில் தங்க நேரும்போது குளியலறை, படுக்கையறைகளில் கேமரா எதாவது இருக்கான்னு பார்த்துக்கனும். எங்க போய் தங்குறோமோ அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர், மருத்துவமனை தொலைப்பேசி எண்களை வாங்கி வச்சுக்கனும்.  பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்துடனும். எந்த ரயில், பஸ், ப்ளைட்ன்னும்,  கோச், இருக்கை  எண்கள்  முதற்கொண்டு எல்லா விவரங்களையும், குடும்பத்தில் எல்லாரும் தெரியப்படுத்தனும்.
சோப்பு, சீப்பு, தே.எண்ணெய், பேஸ்ட், பிரஷ், பொட்டு, ஷாம்பு, குடிதண்ணீர் பாட்டில், சின்னதா ஒரு கத்தி, பேட்டரி, டம்ப்ளர், துணி காய வைக்கும் கயிறு, பயணங்களை குறிச்சு வச்சுக்க சின்னதா ஒரு டைரிலாம் எடுத்துக்கனும், இதுலாம் போற இடத்துலயே கிடைக்கும்தான். விலை கூடுதலா இருக்கும். இல்லன்னா அலைஞ்சு திரிஞ்சு வாங்க வேண்டி வரும். குழந்தைகள், பெரியவங்களை அழைச்சுக்கிட்டு போகும்போது அவங்களுக்கு தேவையான மருந்துகள், படுக்கை வசதி, சுடுதண்ணி வைக்க சின்னதா ஒரு கெட்டில், கொஞ்சம் பிஸ்கட், பழங்கள், பால்பவுடரை கொண்டு செல்லனும். சாப்பாடு சரியில்லாத போது இதை வச்சு சமாளிச்சுக்கலாம். துண்டு, பெட்ஷீட் எடுத்துக்கனும். ஹோட்டல் ரூம்ல எத்தனை சுத்தமா இருக்கும்ன்னு தெரியாதுல்ல! ஆதார்கார்ட், வாக்காளர் அடையாள அட்டை மாதிரியான அடையாள அட்டையின் ஒரிஜினலை பத்திரமா வச்சுக்கிட்டு டூப்ளிகேட்டை பர்ஸ்ல வச்சுக்கலாம்.  முக்கியமா மொபைல் பவர் பேங்க், ஹாட்ஸ்பாட் எடுக்க மறக்காதீங்க. 
டூருக்கு போறேன்னு டமாரம் அடிச்சு ஊர் புல்லா சொல்லாம  பால், பேப்பர், சிலிண்டர் மாதிரியான நம்பிக்கையான முக்கியமானவர்களுக்கு மட்டும் சொல்லிட்டு போகனும். எல்லோரும் கிளம்புறதா இருந்தால் நம்பிக்கையானவங்களை வீட்டில் தங்க வைக்கலாம்.  நகை, பணம்லாம் பேங்க் லாக்கர்ல இல்லன்னா நம்பிக்கையானவங்கக்கிட்ட கொடுத்து செல்லலாம். அவசியாமான நகைகளை மட்டும் போட்டுக்கிட்டு போகனும், இருக்குங்குறதுக்காக அள்ளி போட்டுக்குறது வீண் ஆபத்தை வரவைக்கும். கேஸ், பேன், லைட்லாம் ஆஃப் பண்ணிட்டு போகனும்.  வெளி இடங்களில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கனும்.   என்னென்ன எடுத்து போறோம்ங்குறதை குறிச்சு வச்சுக்கனும். அதேப்போல என்னென்ன வாங்கிட்டு  வரனும்ங்குறதையும்  குறிச்சு வச்சுக்கனும். முக்கியமா போற இடத்துல கண்ட இடத்துல குப்பைகள் போடாம, எச்சில் துப்பாம சுத்தமா பராமரிச்சுக்கனும்.  நம்ம வீடு மாதிரியே இருக்கும் இடத்தையும் சுத்தமா வச்சுக்கனும்

ஜெய்ப்பூர் அரண்மனை, கலர்புல் காஷ்மீர், காதல் சின்னமான ஆக்ரா, மீனாட்சி அம்மன் கோவில், அமிர்த சரஸ் பொற்கோவில், மெரினா பீச், கடவுளின் தேசமான கேரளா, செங்கோட்டை,  காசி,  மகாபலிபுரம், செஞ்சி கோட்டை, வேலூர் கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி என கணக்கிலடங்கா வரலாற்று இடங்களையும், ஆன்மீக இடங்களையும் கொண்டிருந்தாலும்  மோசமான ஆட்சியாளர்கள், பொறுப்பில்லாத மக்களால் இந்தியா இந்த பத்து இடங்களில் வரமுடியலை என்பது வேதனையான விசயம் மட்டுமல்ல! வெட்கப்படவேண்டிய விசயமும்கூட! இனியாவது அரசாங்கமும், மக்களும் விழிச்சுக்கிட்டா சுற்றுலாவினால் பெரிய வருவாயை ஈட்டுவதோடு நம்ம நாட்டு அருமை பெருமைலாம் பார் எங்கும் பரவும்! 
 கஷ்டம், துன்பம், கவலை மறந்து
சுற்றி பறக்கும் பறவைப்போல
சுற்றுலா சென்று 
நாமும் சுகமாய் புத்துணர்வு  பெற்று வருவோம்.... 
நன்றியுடன்,
ராஜி.

Wednesday, September 26, 2018

புண்ணிய யாத்திரை -ஷீரடி

நிலாவுல சாய்பாபா முகம் தெரியுறதா வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர்ன்னு ரெண்டு நாளாய் ஒரே அல்லோகலப்படுது. ஷீரடி சாய்பாபா   இந்த பெயரை கேட்டதும் அவரது பக்தர்களுக்கு மெய் சிலிர்க்கும். ஏன்னா  இறைவன் ஒன்று. அவனே ஏகன் அனேகன்! அவனே பரம்பொருள், அந்த பரம்பொருளே, நபி குருமார்களால் அல்லாவாகவும், யூத குலத்தில் தோன்றிய ஜீசஸ் பரமபிதா எனவும், வள்ளலார் அந்த பரம்பொருளை ஜோதிவடிவானவன் என்றும், அவனே முத்தொழில் புரியும் ருத்திரன்,  நாராயணன்,  பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு மேலானவனான ஆதிசிவன்  என உலகுக்கு கூறிய புண்ணியர் ஷீரடி சாய்பாபா. அவருடைய வாழ்க்கை வரலாறு இங்க அநேகருக்கு தெரியும். அதுபத்தி நிறைய பதிவுகளும் வந்துட்டுது. அதனால, நாம அதில் கவனம் செலுத்தாம ,முதன்முதலில் ஷிரிடி புண்ணிய யாத்திரை செல்பவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதற்காக என்னுடைய பயண அனுபவங்களை இங்கே சொல்லப்போறேன் .
ஷீரடிக்கு போகலாம்ன்னு நாங்க முடிவு செஞ்சதும் எப்படி போகலாம்ன்னு முடிவு எடுக்க ஒரு கமிட்டி மாதிரி உக்காந்து பேசினோம். சிலர் ட்ரைன் நம்ம சாய்ஸ் என சொல்ல, ஒரு சிலர் பிளைட் என சொல்ல. எப்படி போனாலும் புனேவுக்கு போய்ட்டுதான் ஷீரடிக்கு போகமுடியும் ஏன்னா சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாரம் ஒருமுறை செல்லும் Shirdi Express (22601) புதன்கிழமை 10:10 காலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பி மறுநாள் வியாழக்கிழமை காலை 11:30 க்கு சென்னையிலிருந்து 1395 கிமீ தொலைவில் உள்ள ஷீரடியை சென்றடையும். புதன்கிழமை விட்டுட்டா அந்த ட்ரைனுக்காக அடுத்த புதன்கிழமைவரை காத்திருக்கனும். ஆனா,  தினசரி சென்னையிலிருந்து புனேவுக்கு நிறைய ட்ரெயின்கள் இருக்கு. அந்த பட்ஜெட் பார்க்கும் போது பிளைட்டில் செல்லலாம் என முடிவுவானது. பயண நேரமும் மிச்சமாகும் ஒருவழியா ஏர்இண்டிகோவில டிக்கெட் எடுத்தாச்சு. அனைவரும் பிளைட்க்காக வெயிட்டிங்.  பிளைட் வந்ததும் நாங்க எல்லோரும் ஏறி அவரவர் சீட்லஉட்கார்ந்தோம், மேக கூட்டங்களுக்கிடையில் பறந்து செல்வது ஒரு புது அனுபவத்தை கொடுத்தது. அப்படியே மேகக்கூட்டத்தை பார்த்து கனவு கண்டுக்கிட்டு இருக்கும் போதே, ஸ்பீக்கர்ல எல்லோரும் ரெடியாகுங்க புனே விமான நிலயம் வந்தாச்சு என இனிமையான குரல் ஒன்று எங்க கனவை கலைச்சு, பிளைட் விட்டு இறங்க  எங்களை ஆயத்தமாக்கியது. .
விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால் அங்கு நிறைய டாக்சிகள் நம்மூர்ல இருக்கிறமாதிரி வந்து  எங்கே போகணும்ன்னு மொய்க்கிறாங்க. இந்தி தெரிந்திருந்தால் அவர்களிடம் பேசி விலையை குறைக்கலாம். அடிக்கடி ஷீரடிக்கு வரும் ஒருவர் எங்க குழுவில் வந்திருந்தார்.  புனேவிலிருந்து ஷீரடிக்கு சுமார் 190 கிமீ இருக்கும்ன்னு சொன்னார். ஆனா  அவங்க திரும்பி வருவதற்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கிறாங்க .இல்லன்னா OLA, UBER போன்ற கால்டாக்சி சென்டர்களும் இருக்கு.  அதிலும் புக் செய்துக்கலாம். நாங்க ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்து ஷீரடியை நோக்கி பயணமானோம்.  நம்மூர் போலில்லாம புனேவுக்கும், ஷீரடிக்கும் இரண்டே இரண்டு டோல் கேட்கள் மட்டுமே இருக்கு. குடும்பத்தோடு செல்பவர்களுக்க் இரவு நேரப்பயணம் என்பது சில சாலைகளில் பாதுகாப்பு இல்லைன்னு எங்களை அழைத்து சென்ற டிரைவர் சொல்லிட்டு இருந்தார். நாங்கள் சென்றது பகல்வேளை என்பதால் அந்த பிரச்சனையை நாங்கள் சந்திக்கவில்லை. ஒருவேளை இரவுப்பயணம் நமக்கு ஆப்ஷனா இருந்தால் குறுக்குப்பாதைகளை தவிர்த்து, நேஷனல் ஹைவேயில் மட்டுமே செல்லவேண்டும். குறுக்கு பாதைகளில்  சுற்றுலாவுக்கு வர்றவங்கக்கிட்ட இருந்து வழிப்பறிலாம் செய்றாங்களாம். பகல் பயணம்ன்னா அதுபற்றி கவலைப்பட வேணாம்ன்னு அவர் சொல்லிட்டுவந்தார் .நமக்கு ஹிந்தி தெரியலைன்னாலும் அவர் சொல்லுவதைவைத்து நம்மால் புரிஞ்சுக்க முடியுது . 
ஷீரடி பயணத்தில் முதலில் வருவது ரஞ்சன்கோண் என்னும் இடம். அங்க புகழ்பெற்ற மஹாகணபதி கோவில் இருக்கு. இவர் அஷ்ட விநாயகர்களில் ஒருவர் கணபதி தரிசனத்துக்காக வரிசையில் நிக்கும்போது . இந்த கோவில் கிபி 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம்ன்னு சொல்றாங்க. ஆனா, கோவிலின் முன்மண்டபத்தை பார்க்கும்போது  மஹாராஷ்டிரா பேஷ்வாக்களால் உருவாக்கப்பட்டதுன்னு ஒருசாராரும்,  இன்னும் ஒருசிலர் மஹாராஷ்ட்ரா பேஷ்வாக்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு அழகான நுழைவாயிலாக கட்டப்பட்டதுன்னும் ஒருசாரார் சொல்லுறாங்க. எது எப்படி இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கு நுழைவாயிலுக்கு  மேலே நாகராஜர் உருவங்கள் அழகாக பொறிக்கப்பட்டிருக்கு.  பிரதான நுழைவாயிலில் இரண்டு கருப்பு யானைகள் சிகப்பு அங்கி போட்டு கலைநயத்துடன் பார்பதற்கே கொள்ளை அழகு.  அதைத்தாண்டி உள்ள நுழைந்தால் நீண்ட வரிசையில் நம்மூர் கோவில்களில் மாதிரி மக்கள் வரிசை. அந்த வரிசையில் நின்னபடியே அங்கே எழுதப்பட்டிருந்த மஹாராஷ்டிரா பேஷ்வாக்கள் கதையினை உள்ளூர்க்காரர் சொல்ல கேட்டுக்கிட்டே வந்தோம். .
பேஷ்வான்னா தலைமை அமைச்சர்ன்னு அர்த்தம்.சத்ரபதி சிவாஜிதான் முதன்முதலில் தனது  தலைமை அமைச்சருக்கு "பேஷ்வா"ன்னு பட்டம் சூட்டினார். அதாவது இப்ப இருக்கிற பிரதம மந்திரி பதவிபோல இந்த பேஷ்வாக்கள் மராட்டிய இராணுவத்தைக் வழிநடத்தினாங்க.படைகளின் முழு செயல்பாட்டையும் இவங்கதான் கண்காணிப்பாங்க.போர் சமயத்தில் இவர்கள் மராட்டியப் படைக்களுக்கு தலைமை தாங்கி நடத்தினாங்க. முகலாயப் பேரரசின் பெரும் பகுதிகளை பேஷ்வாக்களின் காலத்தில் மராத்தியப் பேரரசு வெற்றி கொண்டது. பொதுவாக  பேஷ்வாக்கள்லாம்  மராத்தி மொழியை தாய்மொழிகளாக கொண்ட தேசஸ்த் பிராமணர்கள் ஆவர். இதை பற்றிய ஆராய்ச்சிக்குள் சென்றால் நமது பதிவு நீண்டுடும். அதனால் இதோடு நிறுத்தி பதிவுக்குள் போகலாம். 
பேஷ்வாக்கள் கதையோடு கோவிலின் கதையையும் சிறிது தெரிஞ்சுக்கலாம். நாமெல்லோருக்கும் ஆதிசக்தி திரிபுரம் எரித்த கதை தெரியும்.அப்பொழுது திரிபுரம் எரிக்க உதவியாக இருந்தது  இந்த அஷ்டவிநாயகர்கள். அதை சித்தரிக்கும் வண்ணம் இங்கே அஷ்ட விநாயகர்கள் கோவில்கள் இருக்கின்றன. முதல்கோவில்  மோர்கவோன் கணேசர் ஆலயம்.   புனே நகரிலிருந்து 80 கிமீ (50 மைல்கள்) தொலைவில் உள்ள மோர்கவோன் என்னும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் போல் இங்கே, அஷ்டவிநாயக பாதயாத்திரை இவ்வாலயத்தில் இருந்து ஆரம்பித்து இவ்வாலயத்திலேயே நிறைவடைகின்றது. இரண்டாவது சித்திவிநாயகர் கோயில் மகாராட்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின், கர்ஜட் தாலுகாவில், பீமா ஆற்றின் கரையிலுள்ள சித்தாடெக் கிராமத்தில் இருக்கு. கி பி பதினெட்டாம் நூற்றாண்டில் குவாலியர் ராணி அகல்யாபாய் என்பரால் இக்கோயில் சீரமைக்கப்பட்டது.
மூன்றாவது பல்லாலேஷ்வர் மகாராட்டிராவில் உள்ள ராய்கட் மாவட்டத்தின் கர்ஜட் நகரத்திலிருந்து 58 கி.மீ தொலைவிலுள்ள பலி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. நான்காவது வரதவிநாயகர் இந்த கோயில், மகாராஷ்ட்ரா, ராய்கட் மாவட்டத்தின் மகாத் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1725 ஆம் ஆண்டில் மராத்திய பேஷ்வா படைத்தலைவர் சுபேதார் இராம்ஜி மகாதேவ பிவால்கர் என்பவர் புனரமைத்திருக்கார். ஐந்தாவது சிந்தாமணி விநாயகர் கோயில், இது மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், பீமா ஆறும், மூலமூதா ஆறும் கலக்குமிடத்தின் அருகில் அமைந்திருக்கு. 
ஆறாவது லெண்யாத்திரி. இந்த கோவில் மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஜூன்னார் நகரத்தின் அருகே சக்யத்திரி மலையடிவாரத்தில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும். அதில் குகை எண் 7ல் லெண்யாத்திரி விநாயகர் கோயில் அமைந்திருக்கு. இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். குகை எண் 6 மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், மற்றவைகள் விகாரைகளாக (பிக்குகள் தங்குமிடங்கள்) அமைந்துள்ளது. ஏழாவது விக்னேஸ்வரர் கோயில்  எனப்படும் தடை நீக்கும் கணபதி கோயில். இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஒசார் கிராமத்தில் அமைந்துள்ளது. எட்டாவது நம் பதிவில் நாம பார்த்துக்கிட்டிருக்கும் இந்த ரஞ்சன்கோண் கணபதி ஆலயம். இந்த அஷ்ட கணபதி ஆலயங்களை பற்றிய விரிவான பதிவுகளை நமது தொடர்பதிவுகளில்  தனித்தனியா பார்க்கலாம். 
உள்ளே பெரிய பெரிய உண்டியல்கள்  மற்றும் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளியானைகள் இருபுறமும் நிற்கவைக்கப்பட்டிருக்கும்.   கொஞ்ச நேரமெடுத்து வரிசையில் நின்றாலும் மத்த கோவில்களை மாதிரி துரத்தாம  நாம நின்று நிதானமாக கும்பிட வழிவிடுறாங்க. அதேப்போல் வெங்கலத்திலான யானை சிலைகளும் பார்ப்பதற்கு கொள்ளை அழகு. இந்த விநாயகர் சிறிது மறுபட்டவராக உடல்முழுவதும் செந்தூரம் பூசிய வடிவில் காணப்படுகிறார். இங்க இருப்பது சுயம்பு விநாயகர்ன்னு சொல்லுறாங்க.ஒருவழியா தரிசனத்தை முடிச்சு வெளியே வந்தா ,எங்களை கூட்டி சென்ற டிரைவர் சொன்னார் ,நாம போற வழியில இங்கிருந்து சுமார் 110 கிமீ தொலைவில் , சாய்பாபாவால் வணங்கப்பட்டதாய் சொல்லப்படும் சனி சிங்கனாப்பூர், சனிமகராஜ் கோவில் இருக்கு. செல்லலாமான்னு  கேட்டார் சனிபகவான்னு சொன்னதும் பாதிப்பேர் ஜெர்க்காகி டூ ஸ்டெப் பேக் அடிக்க, சனியை போல கொடுப்பாருமில்லை. அவனைப்போல கெடுப்பாருமில்லைன்னு சொல்வாங்களே! சாமி நமக்கு கெட்டதா பண்ணும்ன்னு அவனை நம்பி உடனே ரெடி ஜுட்ன்னு சொன்னேன். என்னோடு வந்தவங்கலாம் என்னை  முறைக்க நான் அங்கிருந்து ஜுட்விட்டு வண்டிக்குள் செட்டிலாகிவிட்டேன். வழிநெடுக கரும்பு தோட்டங்களையும், விவசாய நிலங்களையும் பார்க்க கண்ணுக்கும் மனசுக்கும் சந்தோஷமா இருந்தது. விவசாய பூமிகள் செழித்து இருந்தன. மக்கள் எல்லோரும் இயற்கையோடு ஒன்றி வாழ்றாங்க. இதைப்பார்த்துக்கிட்டே வந்ததுல கோவில் வந்ததை கவனிக்கல. டிரைவர் வண்டியை நிறுத்திட்டு கோவில்வந்தாச்சு எல்லோரும் இறங்குங்கன்னு சொன்னார் .இங்குதான் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள், யாத்திரிகர்கள் சுற்றுலாவாசிகள் முக்கியமாக கவனிக்கவேண்டிய கவனமான விஷயம் இருக்கு அது என்னன்னு   அடுத்தப்பதிவில் பார்க்கலாம் .
வட இந்திய பயணம் தொடரும் ..
நட்புடன்
ராஜி 

Tuesday, September 25, 2018

கேரட் சாதம் - கிச்சன் கார்னர்


நம்மூர்ல கேரட் ஆரஞ்சு நிறத்துல கிடைச்சாலும்,  ஊதா, கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள்லயும் விளையுது. முதன்முதலில் கண்டுப்பிடித்த மலை கேரட் எனப்படும் காட்டு கேரட், கருப்பு நிறத்திலும், கசப்பு சுவையுடன் இருந்ததாம். நாமலாம் நினைச்சிட்டு இருக்க மாதிரி கேரட் இனிப்பு சுவையுடன் இருக்காது. அது தான்  விளைகின்ற மண்ணின் தன்மைக்கு ஏற்ப சுவையும் மாறுபடும். கி.மு. 3,000 ஆண்டிலேயே இந்த கேரட், மனிதனின் பயன்பாட்டுக்கு வந்துட்டுதுங்குறதை  எகிப்து நாட்டில் உள்ள பழமையான கோயில் ஓவியங்கள் நமக்கு சொல்லுது. கேரட்டின் வளர்ச்சி இப்ப இருக்கும் பீட்சா, பர்கர் மாதிரி அசுரவளர்ச்சி இல்லை. மெல்ல மெல்லதான் உலகம் முழுக்க பரவியது. கி.முக்கு முன்பே கேரட் புழக்கத்திலிருந்தாலும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கியை வந்தடைந்தது. அங்கிருந்து கி.பி. 10-ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் பகுதியில் முளை விட்ட கேரட், அதே நூற்றாண்டில் அரேபிய வியாபாரிகள் மூலம் இந்தியாவிலும் வேரூன்றியது. கேரட்டை முழுக்க முழுக்க ஒரு விவசாய பயிராக நம்மவர்கள் பார்த்தது கி.பி.13-ம் நூற்றாண்டில்தான். அனைத்து பகுதி மக்களின் பயன்பாட்டில்  அதிகமாய் பயன்படுத்தும் காய்கறிகளில் கேரட்டுக்கு இரண்டாமிடம். கேரட்டை நாம காய்கறிகளில் சேர்த்துக்கிட்டாலும், கேரட்  பழ வகையை சேர்ந்தது.
ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியாவுக்கு சொந்தமான இந்த கேரட்டுக்குன்னு அமெரிக்காவில் ரசிகர் மன்றங்கள் இருக்குதாம்.  அமெரிக்காவில் 'கேரட் ராணி' என அழைக்கப்படும் ரோமனான்ற பெண்மணி, 600 வகை கேரட்டுகளை பதப்படுத்தி நிரந்தரமான அருங்காட்சியகம் அமைச்சிருக்காங்க. அலாஸ்காவைச் சேர்ந்த விவசாயி ஜான் ஆர். இவன்ஸ் இதுவரை அதிகபட்சமாக 9 கிலோ எடை கொண்ட கேரட்டை உற்பத்தி செய்து உலகளவில் சாதனை புரிஞ்சிருக்கிறார்.
உலக மக்களால் அதிகமாக கொண்டாடப்படும் கேரட்டில் மருத்துவ குணங்களும் அதிகம். இதில் வைட்டமின் ஏ அதிகமா இருக்குறதால பார்வை கோளாறு, நுரையீரல் புற்றுநோய்,  இதய நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. கேரட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கான மருந்துகளின் மூலப்பொருளாக பயன்படுது. தினமும் காலையில் கேரட் ஜூசை குடித்து வந்தால் வயிற்றிலிருக்கும் பூச்சிகள் வெளியேறும். தேவையற்ற கொழுப்பை நீக்கும். கேரட்டை பச்சையாய் மென்று சாப்பிட்டால் பல் உறுதிப்படும். ஈறுகள் பலப்படும். ரத்தக்கசிவு நிக்கும். வாய் துர்நாற்றம் நீங்கும். கேரட்டை மேல்பூச்சாக பூசும்போது சிராய்ப்பு, அலர்ஜி மாதிரியான சரும நோய்கள் நீங்கும். வெயிலினால் நிறம் மங்கும் சருமத்துக்கு நல்லதொரு தீர்வு. சீனாவில் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து நாய்க்கடி மருந்தாகவும் கேரட் பயன்படுது. அதனால்தானோ என்னவோ இன்று உலகளவில் கேரட் உற்பத்தியில் சீனாவே முதலிடத்தில் இருக்கு!


ஆண்களின் தாது விருத்திக்கு கேரட் உதவுது.  தினமும் பச்சை கேரட், (பச்சை நிறத்திலான கேரட் இல்லீங்கோ. வேகவைக்காத கேரட்)டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் தகதகன்னு மின்னும். அதனாலாயே இதுக்கு தாவர தங்கம்ன்னு பேரு. கேரட் அருமை பெருமைலாம் பார்த்தாச்சா?! பள்ளி கல்லூரிக்கு போகும் பிள்ளைகளுக்கு  டப்பாவுல கட்டிக்கொடுக்க கேரட்ல ஒரு சாதம் செய்யலாமா?! ரொம்ப ஈசிதான். சீக்கிரம் செஞ்சுடலாம்... 

தேவையான பொருட்கள்..
கேரட்
உதிர் உதிரா வடிச்ச சாதம்
வெங்காயம்
எண்ணெய்
கடுகு,
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
முந்திரிபருப்பு
உப்பு

வறுத்து அரைக்க...
தனியா
சீரகம்
காய்ந்த மிளகாய்
தேங்காய்
வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி நீளம் நீளமா வெட்டிக்கனும். கேரட்டை கழுவி தோல் சீவி துருவிக்கனும்.

எண்ணெய் விடாம வாணலியை சூடுபடுத்தி தனியா, சீரகம், மிளகாய் சேர்த்து வறுத்து அத்தோடு தேங்காய் துருவலை சேர்த்து வறுத்துக்கனும்.

வறுத்த மசாலா பொருட்களை பொடி செய்துக்கனும். ட்ரை தேங்காய் இருந்தால் நல்லா இருக்கும். இல்லன்னாலும் தேங்காய் துருவலை  ஈரம் போக வறுத்துக்கனும். அப்பதான் பொடிக்கும்போது பொடியாகும். இல்லன்னா பேஸ்ட் மாதிரி கட்டி கட்டியாகிடும். 
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, க.பருப்பு, உ.பருப்பு சேர்த்து சிவக்க விடனும்.
காய்ஞ்ச மிளகாய் கிள்ளி போட்டு சிவக்க விடனும்.
வெங்காயம் சேர்த்து வதக்கிக்கனும்.
வெங்காயம் வெந்ததும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கனும்.. 
உதிர் உதிரா வடிச்ச சாதத்தை  சேர்த்து கிளறிக்கனும்.

புருசன் பொண்டாட்டி மாதிரி சாதமும், கேரட் வதக்கலும் இரண்டற கலந்தபின் பொடிச்சு வச்சிருக்கும் பொடியினை சேர்த்து கிளறிக்கனும்.
கறிவேப்பிலை, கொமல்லி சேர்த்து கிளறி அடுப்பை ஆஃப் பண்ணி இறக்கிடுங்க.
சுவையான சத்தான லஞ்ச் பாக்சுக்கான கேரட் சாதம் ரெடி.

நன்றியுடன்,
ராஜி