Thursday, May 31, 2018

வளையலோ வாங்கலியோ வளையல் - கைவண்ணம்

எனக்கு வளையல்ன்னா ஆசையோ ஆசை.. புடவை, நகைமேல் இல்லாத ஆசை வளையல்மீது உண்டு. விதம்விதமா, கலர்கலரா வளையல் வாங்கி குவிப்பதே வேலை. வெளில கிளம்பும்போது நகை இல்லன்னாலும் கிளம்பிடுவேன். ஆனா புடவைக்கு மேட்சிங்கா வளையல் இருந்தே ஆகனும்.  கண்ணாடி, மெட்டல்ன்னு விதம்விதமா வளையல் வாங்கி குவிப்பேன். இப்பலாம் வளையல்களை வாங்குறதே இல்ல. அதுக்காக திருந்திட்டேன்னு நினைக்காதீங்க. எம்ப்ராய்டரி செஞ்சு மிச்சமிருக்கும் நூல், கல், சமிக்கிகளில் வளையல் செஞ்சுக்குறேன். இதனால, பைசா மிச்சம், தேவையில்லாம பரண்மேல் தூங்கும் வளையல்களுக்கு விமோசனம் கிடைக்கும். சுற்றுச்சூழலும் பாதிக்காது..

இந்த வாரம் திருப்பதிக்கு போலாம்ன்னு சொன்னதும்,  கேமரா ரெடி செய்வது, வண்டி புக் செய்வது, ரூம் புக் செய்வது, ஷாப்பிங்க்ன்னு ஆளாளுக்கு பிசியா இருக்க, நான் வளையல் செய்ய இறங்கியாச்சு.. எல்லாத்தையும் தூக்கி போட்டு கொளுத்த போறேன்னு வீட்டில் திட்டியதையும் காதில் வாங்காம.....

தேவையான பொருட்கள்...
பழைய வளையல்கள்
சில்க் த்ரெட் நூல்
ரன்னிங்க் ஸ்டோன்
ஃபேப்ரிக் க்ளூ
முத்து சரம்

 சில்க் த்ரெட்டில் 20 இழை எடுத்துக்கிட்டு வளையலில் பசை தடவி ஒட்டிக்கனும்... 
இப்படியே வளையல் முழுக்க நூல் சுத்திக்கிட்டு வரனும்.  


 நூல் சுத்தி முடிச்சதும் இப்படி இருக்கும்.. இதுக்கப்புறம் நமக்கு பிடிச்ச மாதிரி அலங்காரம் பண்ணிக்கலாம்.
சின்ன சின்னதா முத்து இருக்கும் செயின் இருக்கும். அதில் 4, 3,2,1ன்னு சந்துப்புள்ளி மாதிரி வளையலில் நேருக்கு நேராய் நாலு இடத்தில் இப்படி ஒட்டிக்கிட்டேன். 
கலர் கலர் கற்கள் பதிச்ச ரன்னிங்க் ஸ்டோன் இருக்கு. அதுல கலர் கலர் முத்துக்களும் கடையில் கிடைக்குது. அதில் வெள்ளை முத்துக்களை 3, 2ன்னு ஒட்டிக்கிட்டேன். 

சைடுன் வளையலுக்கு அதே முத்தை நீள வாக்கில் ஒட்டிக்கிட்டேன்.

 பச்சை புடவைக்கு மேட்சிங்கா ஒரு செட் வளையல் ரெடி..அடுத்த செட் வளையலுக்கு நடுவால இருக்கும் பெரிய வளையலை ஆறு கலர் நூலால் சுத்திக்கிட்டு, ரெண்டு கலர் சேருமிடத்தில் ரன்னிங்க் ஸ்டோன் ஒட்டிக்கிட்டேன். 

சைடு வளையலுக்கு கோல்ட் கலர் நூலால் வளையல் செஞ்சுக்கிட்டாச்சுது.  எல்லா புடவைக்கும் மேட்ச் ஆகுற மாதிரி அடுத்த செட் வளையல் ரெடி.

மருமக வர்றதுக்குள் தின்னு பாரு, பொண்ணு வளரும்முன் கட்டி பார்ன்னு  எங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க. அதாவது, மருமக வந்தா வாய்க்கு ருசியா சாப்பிட முடியாதுன்னும், பொண்ணு வளர்ந்து பெரிய மனுஷியாகிட்டா அம்மா அழகா உடுத்த முடியாது., ஏன்னா நகை புடவைலாம் அது கட்டிக்கும். அப்படியே நாம கட்டிக்கிட்டா வயசு பொண்ணு வச்சிக்கிட்டு எப்படி மினுக்குறா பாருன்னு சொல்வாங்க. அந்த பாழமொழி என் விசயத்தில் ரொம்ப சரி. எதாவது புடவை, நகை வாங்கும்போது என் சின்ன பொண்ணு சொல்லும்.. அம்மா இது சூப்பர். எனக்குதானே?! இந்த வயசில் இதுலாம் நீ உடுத்தக்கூடாதுன்னு:-(... 
என் மல்டி கலர் வளையல் அழகுல மயங்கி!!! அது தன்னோட பழைய வளையலை புதுசாக்கி தரச்சொல்லுச்சு. அது ட்ரெஸ்சுக்கு தகுந்த மாதிரி வளையல் ரெடி செஞ்சு தந்தாச்சுது.
 மூணு செட் வளையல் ரெடி....
எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்லுங்க....

நன்றியுடன்,
ராஜி

Wednesday, May 30, 2018

கற்கை நன்றே, கற்கை நன்றே - உலகின் மிக ஆபத்தான பள்ளிக்கூடங்கள் .

பெரும்பாலும் நாமலாம் படிக்கும்போது சிலருக்கு ஸ்கூல் சொந்த ஊரிலேயே இருக்கும்.  ஆனா பலருக்கு  வீட்டுல இருந்து பலமைல் தூரம் வரைக்கும் நடந்து போனாதான் ஸ்கூல் வரும். இந்த  ஸ்கூல்களுக்குலாம் பெரும்பாலும் நடந்தே செல்வோம். எப்பவாவது அந்த பக்கமா போகும் மாட்டுவண்டி, சைக்கிள்ல தொத்திக்கிட்டு போன அனுபவமும் பலருக்குண்டு.  ஸ்கூலுக்கு போகும்போது ஆண் பெண்ன்னு பேதமில்லாம கும்பல்கும்பலா கதைபேசிக்கிட்டு நடந்து போவோம்.  இரட்டைச்சடை, நீலப்பாவாடை, வெள்ளை சட்டை, ஒன்பதாவதிலிருந்து வெள்ளை ஜாக்கெட், தாவணியுடன் பெண்களும்,  வெள்ளை சட்டை காக்கி ட்ரவுசர் பத்தாவதுக்கு மேலன்னா பேண்ட் இதான் ஆண்பிள்ளைக்கான யூனிபார்ம். போட்டுக்கிட்டு மஞ்சப்பை இல்லன்னா வயர்கூடையில் புத்தகத்தை வச்சிக்கிட்டு நெல்லிக்காய், கொய்யா, மாங்காய் பத்தைக்கு தொட்டுக்க மிளகாய் தூள், உப்பு சேர்த்து எடுத்துக்கிட்டு நடந்ததுலாம் இன்னமும் மனசை விட்டு அகலாத ஓவியம். 

அநேகமாக தமிழ்நாடு முழுக்க  அந்த காலக்கட்டங்களில் ஒரே சீருடடையாதான் இருந்தது.  பள்ளிக்கூடங்கள் என்னிக்கு வியாபார தலமாகி தனியார் கைக்கு  போனதோ அன்றிலிருந்து  அவங்களுக்கு வரும் கமிசன் காசுக்காக வருஷம் ஒரு யூனிபார்ம்,  வீட்டு முற்றத்துக்கே  வண்டி, சுமக்க முடியா புத்தகம், நோட்டு, மினியேச்சர், புராஜெக்ட் என  கல்வி இப்ப அமர்க்களப்படுகிறது.  பல இடங்களில் திணிக்கப்பட்ட புத்தகமுட்டைகளுடன் பள்ளிக்குழந்தைகளும் ஒரே ஆட்டோவில் சவாரி செய்வது கொடுமை. காலை இதில்லாம ஸ்கூல் பஸ், நைட்டி போட்ட அம்மாக்களுடனும், அலுவலக வேலைக்கிடையே வரும் அப்பான்னு ஸ்கூல் பில்ளைகள் இருக்கும் வீடு காலை நேரத்தில் அல்லோகலப்படுது. 
ஸ்கூல் பஸ் வசதி இல்லாத இடங்களிலும், குழந்தைகளை கொண்டு போய் விட்டுட்டு நேரத்துக்கு கூட்டி வரும் வசதி இல்லாத நடுத்தர குடும்பங்களில் உள்ளவர்கள்லாம்  ஆட்டோக்களை பேசி 7 இல்ல 8 குழந்தைகளை ஒரே ஆட்டோவில் அனுப்புவாங்க. இதை பார்த்தும் பாராததுமாய் அலட்சியமா கடந்து போய்டுறோம். ஆட்டோக்களின் சைடுல புத்தகப்பைகள் தொங்க, ஆட்டோக்களின் கம்பிகளில் உக்கார்ந்திருக்கும் குழந்தைகளின் பின்புறத்தை காணும்போது நமக்கு திக் திக்ன்னு இருக்கும். சிலநேரம் கோவமும் வரும். எல்லா ஆட்டோ ஓட்டுறவங்களும் நல்லவங்களாய் இருப்பதில்லை. சிறு குழந்தைகளின் அறியாமைய பயன்படுத்திக்கிட்ட சில ஆட்டோக்காரங்க குழந்தைகள்கிட்ட தப்பா நடந்துப்பாங்க. ஊரில் இதுமாதிரி எத்தனை விசயங்கள் நடக்குதென்பதுக்கு பத்திரிக்கை செய்திகளே சாட்சி . இதெல்லாம் பார்க்கும்போது நமது சின்னவயதில் இவ்வளவு ரிஸ்க் எடுத்ததில்லையே என கூட தோன்றும் ,
முன்னலாம் சிலர் தங்கள் குழந்தைகளை சைக்கிள் ரிக்சாவில் அனுப்புவாங்க.  அதுவும் கொடுமையான விஷயமே.  இப்பலாம் ரிக்சா இல்லாததால்  ஆட்டோவில் அனுப்புறாங்க. இதெல்லாம் பார்க்கும்போது இன்றைய தலைமுறையினர் கஷ்டப்படுவதாகவே நமக்கு தோணும். காரணம் காலையில் ஒரு குழந்தையை எழுப்பி பள்ளிக்கு அனுப்புவது என்றால் வீடே போர்க்களமாக இருக்கு.  காலையில் எழுப்புவதிலிருந்து அவர்களை தயார் செய்து, காலை சாப்பிட வைத்து, பேக் மற்றும் லன்ச் பேக் செய்து கொடுத்து ஸ்கூல் வேன், ஆட்டோவில் ஏற்றியோ, ஏற்றிவிடுவதற்குள் போதும் போதும் ஆகிடுது. ஆனா,  கல்வி செல்வத்துக்காக தினம் தினம் மரணதேவனை சந்தித்து ஸ்கூலுக்கு போகும் குழந்தைகள்  இந்த காலத்திலும் இருக்குன்னு சொன்னா நம்பமுடியுமா?! டிஜிட்டல் உலகம்ப்பா இதுன்னு நாம நினைப்போம் ஆனா அதான் உண்மை. ஆபத்தான பள்ளிகள் பத்தி இன்றைய பதிவில் பார்க்கலாம் .
நாம பார்க்கிற இந்த இடம் சைனாவிலுள்ள சிச்சுவான் (Sichuan ) மாநிலத்தில் உள்ள அதுலெர்(Atuler ) கிராமம்.  இவர்களை பள்ளிக்கு கொண்டு செல்லும் இந்த மரணப்பாதை  பீஜிங் இணையதளத்திலும், செய்தித்தாள்களிலும் வெளியானபிறகே உலகமெல்லாம் வைரலாக பரவியது. குழந்தைகள் அங்கே ஏறி செல்வதற்கும் இறங்கி வருவதற்கும், மூங்கில்களிலான ஏணிப்படிகள் போன்ற அமைப்பு இருக்கு.அதுலதான் ஏறி, இறங்குதுங்க. இதும்கூட வேட்டையாடுபவர்களால் அமைக்கப்பட்டது. அந்த பாதையைத்தான் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்.  மழையிலும் வெயிலிலும் காய்ந்து, அதன் உறுதித்தன்மை   கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்கின்றனர் இங்கு சென்று பார்வையிட்டவர்கள். 
இந்த புகைப்படத்தை எடுத்தவர் சீனாவின் சென்-ஜீ சிறந்த புகைப்படைகளைஞரான இவர், உலக புகைப்பட கண்காட்சியில் இந்த படங்களை வெளியிட்டபோதுதான் அது உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. பள்ளி செல்ல கிட்டத்தட்ட 800 அடி உயரமான மலையிலிருந்து கிழிறங்கி திரும்பவும் அதே 800 அடி உயரமான மலையில் ஏறி செல்லவேண்டும்.  இதற்கு தினமும் ஏறுவதற்கு ஒன்றரை மணி நேரமும் இறங்குவதற்கு ஒன்றரை மணிநேரமுமாக ,ஒருநாளைக்கு மொத்தம் மூன்று மணிநேரம்  செலவாகுது. அதுமில்லாம குழந்தைங்க சோர்வு அடைஞ்சிடுதுங்க. ஆனாலும், கல்வியின் அவசியம் கருதி பெற்றோர்களும் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.  இதில் கொடுமை என்னவென்றால் 6 வயது குழந்தை கூட புத்தக பையை சுமந்து கொண்டு மலையேறி செல்வதுதான். 
மனிதாபிமானம் உள்ள சிலரின் தூண்டுதல்களால் ,லிப்ட் வசதி செய்து கொடுக்க முன்வந்தாலும், விவசாயம் மலையில் விளையும் பொருட்களை நம்பி மட்டுமே வாழ்க்கையை நடத்தி வரும் இவர்களுக்கு அந்த லிப்டக்கான மின் கட்டணம் செலுத்தக்கூட வசதி இல்லை. அவர்களுடைய ஒருநாள் சராசரி செலவு 1 டாலருக்கு குறைவாகவே உள்ளது. இப்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட இந்த கிராமத்தினரின் மரண முனை பயணம் ஊடகங்கள் மூலம் வைரலானபிறகுதான் சில அரசு அதிகாரிகள் உதவ முன்வந்ததாக சொல்கின்றனர் இந்த கிராமவாசிகள் . 
இதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சென் -ஜீ தன்னுடைய அனுபவத்தை கூறும்போது , முதன் முதலாக எனது வாழ்க்கையில் 6 வயதிலிருந்து 15 வயது வரையிலான குழந்தைகள் செங்குத்தான மலைப்பாதைகளில் எந்தவித பிடிமானமுமின்றி எனக்கு முன்னே ஏறி செல்வதைப்பார்த்து என் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. கிராமப்புறங்களின் வேதனைமிக்க யதார்த்தங்களை பார்த்து நெஞ்சம் கலங்கியது. தன்னுடைய புகைப்படங்கள் அவர்களுடைய வாழ்க்கையை மாற்ற உதவும் என நம்பி அந்த மலையேறி சுமார் மூன்று நாட்கள் அவர்களுடன் இருந்ததாகவும், மலைப்பாதையினை இறங்கும்போதும்,  ஏறும்போதும் 100% கவனமாக இருக்கவேண்டும். ஒரு நொடி கவனக்குறைவினால்கூட அதள பாதாளம் நம்மை வரவேற்கும். சில இடங்களில் என்னுடைய நெஞ்சே வெடித்துவிடும்போல் இருந்தது.  அவ்வளவு குறுகலான எந்தவித பிடிமானமும் இல்லாமல் இருந்தது எங்களுடைய குழுவில் சிலர் இதில் ஏற மறுத்துவிட்டனர். சிலருக்கு இந்த பாதையை பார்த்து கண்ணீரே வந்துவிட்டது என்று கார்டியன் பத்திரிகையில்  இந்த பாதையை பத்தி விவரிக்கின்றார் .
மலையுச்சியில் 72 குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கும் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்பெயர் அபி ஜிடி (Api Jiti),நல்ல மிளகு வால்நட் மற்றும் சில பருப்புவகைகளையும் கிராம்பு முதலியவற்றையும் இங்கே விளைவிக்கின்றனர். மலை பாதையில் செல்லுவது பற்றி அவர் குறிப்பிடுகையில்  உத்தேசமா ஒரு 7 பேருக்கு மேல பிடி தவறி கீழ விழுந்து இறந்துள்ளார்கள்.   பலர் காயமடைந்துள்ளனர்.  நான்கூட ஒருமுறை ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து காயத்துடன் உயிர்பிழைத்துவிட்டேன் என சாதாரணமா சொல்றார் அந்த கிராம தலைவர். 100 ஆண்டுகள் பழமையான அந்த மர ஏணியில் பிடித்தளர்ந்தால் மரணம் நிச்சயம். இப்பொழுது படிப்பின் அவசியம் கருதி நாங்கள் எங்கள் பிள்ளைகளை கட்டாயமாக பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டியதாக உள்ளது. எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார் அந்த கிராம தலைவர் .
இப்ப, அரசு நிர்வாகம் இவர்களுக்கு இரும்பு ஏணிகள் அமைத்து கொடுக்க முன்வந்துள்ளது. உலக வல்லரசு நாடுகளில் சீனாவும் ஒன்றாக விளங்கினாலும் 68 கோடி மக்கள் இன்னமும் வறுமைக்கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றனர். அதேசமயம் பல கிராமங்களில் இன்னமும் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு நாட்டுமக்களின் வளர்ச்சியில் பூரணத்துவம் அடையாமல் ஒரு நாடு வல்லரசாக இருக்கிறது என்று கூறினால் உண்மையில் வல்லரசு என்பதன் அர்த்தமே அர்த்தமற்றதாகிடும். இந்த கிராமவாசிகளின் இப்பொழுதைய கோரிக்கை 100 வருட பழமையான இந்த மூங்கில் ஏணிகளுக்கு பதிலாக ஒரு புதிய ஏணியை அரசு செய்து கொடுத்தால் எங்களது பிள்ளைகள் நிம்மதியாக பள்ளிக்கு சென்றுவருவார்கள் என நம்புகிறோம் என்கிறார்  இப்பகுதி வாசி.

கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே’ன்ற ஔவ்வை வாக்கு இங்க மலை ஏறினாலும் கற்கை நன்றேன்னு மாத்தி பாடனும்போல!
நன்றியுடன்,
ராஜி

Tuesday, May 29, 2018

பலாக்கொட்டை பொரியல் - கிச்சன் கார்னர்

இப்ப பலாப்பழ சீசன். ஆனாலும் விலை குறைச்சலா இருக்கான்னு தெரில. கிலோ 80ரூபா வரை பலாச்சுளை விக்குறாங்க.  எனக்கு பலாப்பழம்ன்னா ரொம்ப பிடிக்கும். போனவாரம் அப்பாக்கு அவரின் பண்ருட்டி நண்பர் முழுசா ஒரு பலாப்பழ தர, வெட்டி, அக்கம்பக்கம் கொடுத்தது போக, மிச்சம்மீதியை பாயாசம், சாலட்ன்னு தின்னு தீர்த்தாச்சு. பலாக்கொட்டையை என்ன செய்ய?!

முன்னலாம் விறகடுப்பு இருக்கும். அம்மா சமையல் செய்து முடிச்சதும் மிச்சம் மீதி இருக்கும் நெருப்பில் பலக்கொட்டையை போட்டு மூடி வேக வச்சு கொடுப்பாங்க. அதுக்கப்புறம் வாணலில போட்டு வறுத்து கொடுப்பாங்க. எந்த மசாலாவும் இல்லாமயே ருசி தூக்கலா இருக்கும். அதில்லாம, குச்சிகளை எரியவிட்டு நாங்களே பசங்களாம் சேர்ந்து பலாக்கொட்டையை சுட்டு சாப்பிடுவோம்.  இப்ப அப்படிலாம் செய்ய வெசனமா இருக்கு. குருமாவில், உருளைக்கிழங்கில் பலாக்கொட்டைய போடுவேன்.  ஆனா, இப்ப அதிகமா இருந்ததால், பலாக்கொட்டையில் பொரியல் செஞ்சாச்சு.

தேவையான பொருட்கள்...

பலாக்கொட்டை
வெங்காயம்
தக்காளி
கடுகு,
எண்ணெய்
பட்டை, லவங்கம்,சோம்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
உப்பு’
மிளகு தூள்
சீரக தூள்

பலாக்கொட்டையை  வேக வச்சு மேல இருக்கும் கடினமான தோலை எடுத்து சின்ன சின்னதா வெட்டிக்கனும்.  வெங்காயம் தக்காளியை பொடிசா நறுக்கிக்கனும்.

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, பட்டை லவங்கம் போட்டு பொரிய விடனும்...
பொடியா நறுக்கி வச்சிருக்கும் வெங்காயம் போட்டு வதக்கிக்கனும்..

இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கிக்கனும். கொஞ்சம் உப்பு சேர்த்துக்கிட்டா அடிப்பிடிக்காது.


பொடிசா நறுக்கிய தக்காளிய போட்டு வதக்கனும்...
தக்காளி வெந்து மசிஞ்சதும் மிளகாய் பொடி போட்டுக்கனும். 
அடுத்து மஞ்சப்பொடி போட்டு வதக்கிக்கனும்..
மிளகு பொடி சேர்த்துக்கனும்..
சீரகப்பொடி சேர்த்து வதக்கிக்கனும்.. 
தேவையான அளவு தண்ணி ஊத்தி கொதிக்க விடனும். 
மிளகாய் தூள் வாசனை போனதும் வெட்டி வச்சிருக்கும் பலாக்கொட்டையை சேர்த்துக்கனும்.


நல்லா சுருள வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கிக்கனும். பலாக்கொட்டை பொரியல் ரெடி. பலாச்சுளையாகட்டும், பலாக்கொட்டையாகட்டும் அதிகமா சாப்பிட்டா ஜீரணிக்காம வயத்து வலி வரும். கேர்ஃபுல்.

நன்றியுடன், 
ராஜி 

Monday, May 28, 2018

முருகனுக்கு ஹாப்பி பர்த்டேவாம் - அறிவோம் ஆன்மீகம்


வைகாசி விசாகம் எனப்படும் நன்னாளான இன்றுதான் முருகப்பெருமான் அவதரித்த தினம்.  வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில்தான் முருகன் அவதாரம் நடந்தது. அதாவது முருகருக்கு ஹாப்பி பர்த்டே இன்னிக்கு.   விசாகம் நட்சத்திரமென்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டாகும். 

மக்களுக்கும் , தேவர்களுக்கும் பெரும் இன்னலை கொடுத்துக்கொண்டிருந்த சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசூரன் மற்றும் அசமுகியை வதம் செய்யும் நோக்கோடு முருகப்பெருமான் படைக்கப்பட்டார். தாவரங்கள், பிராணிகள், மனிதர்கள் என்ற ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் இறைவன் எனும் ஒருவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் பொருட்டு  முருகப்பெருமான் தோற்றம் ஆறு என்ற எண்ணிக்கையில் உண்டாக்கப்பட்டது.

வைகாசி மாதம் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலாயே இம்மாதத்தை வைசாகம் என்றழைக்கப்பட்டு வைகாசி என்றழைக்கப்படுது. வைகாசி மாத பௌர்ணமி தினத்தைதான் நாம் வைகாசி விசாகம் என்று கொண்டாடுறோம்.  “வி”ன்னா பட்சி, ”சாகன்”என்றால் சஞ்சரிப்பவன் என்று பொருள். மயில்மீது வலம் வருவதால் முருகனுக்கும் விசாகன் என்றும் ஒரு பேருண்டு.  பகைவனுக்கும் அருளும் தன்மைக்கொண்ட முருகனுக்கு இந்நாளில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் போன்ற தலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுது. இந்நாளில் மக்கள் பால்குடம் ஏந்தி வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்துவிக்கப்படும்.  இன்றைய தினம் விரதமிருந்து முருகனை வேண்டிக்கொண்டால் நினைத்தது ஈடேறும். குழந்தை இல்லாதவர்கள் விசாகத்தன்று பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டால் அடுத்த விசாகத்திற்குள் குழந்தை வரம் கிடைக்குமென்பது கண்கண்ட உண்மை. திருமணமாகாதவர்களும் இவ்விரதம் கடைப்பிடிக்கலாம். ஆண்களும் இவ்விரதத்தை கடைப்பிடிக்கலாம். பால்காவடிகள் எடுத்து இறைவனை தியானித்தால் சகல சௌபாக்கியமும் கிடக்கும்.
Sri Karthikeya and Shivalingam:
ராம அவதாரத்திற்கு முன்பே கந்தர் அவதாரம் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது. முனிவர்களின் யாகத்திற்கு தடையாக இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய ராம, லட்சுமணனை விஸ்வாமித்திரன் அழைத்து செல்கிறார். அவ்வாறு செல்லும்போது கந்தப்பெருமானின் பிறப்பு, பத்மாசூரனை அழித்த கதையை சொல்லி சென்றதாக வால்மீகி தன் ராமாயாணத்தில் ‘குமார சம்பவம்’ என வர்ணித்துள்ளார். பின்னாளில் இந்த வாசகமே காளிதாசருக்கு தலைப்பாய் அமைந்துவிட்டது. 

.
இனி முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்வினை பார்ப்போம்...

பத்மாசுரன் என்பவன் கடும் தவமிருந்து சிவனுக்கு இணையான ஒருவரால் தவிர வேறு யாராலும் தன்னை அழிக்கக்கூடாது. அவ்வாறு வரும் ஒருவனும் பெண்ணால் வந்தவனாக இருக்கக்கூடாதெனவும் வரம் வேண்டுமென ஈசனிடமே வரம் கேட்டு, அவ்வாறே வரமும் வாங்கிக்கொண்டான்.  பிறகென்ன?! பெண் சம்பந்தமில்லாம எப்படி குழந்தை பிறக்கும்?! அதும் ஈசன் மூலமாய்...  இப்படி ஒரு பிறப்பு நிகழாதென ஆணவம் கொண்டு தேவர்களை துன்புறுத்தினர்.  தேவர்கள்  சிவனிடம் சென்று முறையிட சென்றனர். தட்சிணாமூர்த்தி தோற்றத்தில் சிவன் தவம் புரிய, அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவம் புரிந்துக்கொண்டிருந்தாள். இந்நேரத்தில் எதுக்கேட்டாலும் கிடைக்கும் என்று உணர்ந்திருந்த தேவர்கள் சிவனிடம், அசுரர்களை அழிக்க ஒரு அம்சம் தங்களால் ஒரு அம்சம் வேண்டுமென வேண்டி நின்றனர்.

பத்மாசூரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உருவாக்கி கங்கை நதியில் விட்டார். வாயுதேவனும், வருணபகவானும் அந்த குழந்தையை சரவண பொய்கையில் கொண்டு சேர்த்தனர்.  அந்த ஆறு குழந்தைகளை கார்த்திகை பெண்கள்  வளர்த்து வந்தனர். குழந்தையை காண வந்த பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் அள்ளி அணைத்தபோது ஆறு குழந்தைகளும் ஒரு குழந்தையாகியது. இக்குழந்தைக்கு ஆறு முகம், பனிரெண்டு கைகளென திகழ்ந்தது.

முருகனுக்கு சுப்ரமணியன் என்றும் பெயர் உண்டு. ஸுப்ரஹ்மண்யன் என்ற பெயரே இவ்வாறு சொல்லப்படுகிறது. இந்த பெயருக்கு பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவப்பெருமானே பரமாத்மா. அவரின் பிள்ளை பரமாத்மாவின் அம்சம் என்று பொருள்படும்படி இப்பெயர் வந்தது.


முருகப்பெருமான் தன்னுடைய ஆறு வயது வரை மட்டுமே குழந்தைப்பருவ லீலைகளை புரிந்தார். பிரம்மாவும்க்கு ’ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தது, அப்பனுக்கே பாடம் சொன்னது, அவ்வையின் தலைக்கனத்தை அழித்தது, ஞானப்பழத்துக்காக சண்டையிட்டு பழனி மலையில் நின்றது என பல லீலைகள் புரிந்தார்.  ஆனாலும், அவரின் அவதார நோக்கமாகிய பத்மாசூரன் வதத்திற்குள் இத்தனையும் லீலைகளையும் புரிந்தார்.


பத்மாசூரனை வெல்ல தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி தேவசேனாதிபதியென பெயர் பெற்றார். தேவசேனா என்பது தெய்வானையின் ஒரு பெயராகும். அவளை மணந்து தேவர்களின் பரிசினை ஏற்றார். குறவர்குல மகளான வள்ளியை மணந்து இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேதமில்லை என உலகுக்கு உணர்த்தினார்.

பணிரெண்டு கரங்களின் வேலைகள்...

பனிரெண்டு கைகளின் வேலைகள் இரு கைகள் நம்மை காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தை செலுத்துகிறது, நாலாவது கை தன் தொடையில் இருக்கிறது. ஐந்தாவது மற்றும் ஆறாவது கை வேலை சுழற்றுகின்றது. ஏழாவது கை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறது. எட்டாவது கை மார்பிலிருக்கும் மாலையை சுழற்றுகிறது. ஒன்பதாவது கை கைவளையலை சுழற்றிக்கொண்டு நம் வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை அருளோசையை எழுப்புகின்றது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பனிரெண்டாவது கை மணமாலையை சூட்டுகிறது...

வைகாசி விசாகத்தின் சிறப்புகள்...

புத்த மதத்தில் இந்நாள் புத்தரின் அவதாரமும், ஞானமும் பெற்றது இந்நாளில்...

வைணவ பக்தி மார்க்கத்தை பின்பற்றி, நெறிதவறாமல் வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினம் இத்தினம்...

வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவிய நாள் இந்நாள்....

காஞ்சிப்பெரியவர் இந்நாளில்தான் அவதரித்தார். பல தெய்வங்களுக்கு வைகாசி விசாகத்தன்று விழாக்கள் எடுப்பதால் இந்த மாதத்தை ‘மாதவ மாதம்’ன்னு பேர் பெற்றது..


எமதர்மன் பிறந்த நாள் இன்றுதான். வைகாசி விசாகத்தன்று யமனுக்கு பூஜை செய்து நோய்கள் அண்டாமல் இருக்க வேண்டுமென வேண்டி கொள்வர்.

இந்நாளில் இந்திரன், சுமாமிமலை முருகனை வணங்கி, இழந்த தன்  ஆற்றலை திரும்ப பெற்றான். திருமழப்பாடியில் ஈசன் இந்நாளில் திருநடனம் புரிகிறார்.  மகாபாரதத்தில் அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபதா ஆயுதத்தை பெற்றது இந்நாளில்...


மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சபவ விழா பத்து நாட்கள் சிறப்பாக இந்நாளில் நடைபெறும். கன்னியாக்குமரி  பகவதி அம்மனுக்கு ஆராட்டு விழா இந்நாளில் சிறப்பாக நடைப்பெறும். காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலிலும், கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலிலும் கருட சேவை நடைப்பெறும். காஞ்சிபுரம் சுற்றீயுள்ள 16 வகை பெருமாள்கள் ஒரே நேரத்தில் எழுந்தருளி வீதியுலா வருவது சிறப்பு..

ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் நரசிம்மரின் உக்கிரம் குறைய  வருடம் முழுதும் சந்தன காப்பில் இருப்பார். இந்த விசாக தினத்தன்று காப்பு அகற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.  ராமநாதப்புரத்தில் உத்தரகோச மங்கை அக்னி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிப்பட்டால் சகல தோசமும் நீங்கும். உச்சிக்கால வேளையில் தலையில் பச்சரிசி, அருகம்புல் வைத்து நீராடினால் பிரம்மஹத்தி தோசம் நீங்கும்.

இதுமட்டுமின்றி திருச்சேங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், மற்றும் பல திரௌபதி அம்மன் கோவில்களில் திமிதி விழாவும், அம்மன் கோவில்களில் கூழ்வார்த்தல் திருவிழாக்களும் இந்நாளில் சிறப்புற நடைப்பெறும்..

விரதமிருக்கும் முறை...

வைகாசி விசாக விரதமிருக்க விரும்புபவர்கள் பிரம்ம மூர்த்தத்தில்  எழுந்து நீராடி, நாள் முழுவதும் விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி இரவு பால் அருந்தி விரதம் முடிக்கலாம்,.  முருகன் கோவில் அமைந்துள்ள மலையை கிரிவலம் வந்தாலும் நல்லது. இவ்விரதத்தை மேற்கொள்வோர் பானகம், மோர், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்யலாம். அன்று முழுவதும் முருகனின்  மந்திரமான ஓம் சரவணபவ,  ஓம் முருகா என்பவற்றை உச்சரித்தல் சிறந்த பலனை அளிக்கும். கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம் புத்தகமும் படிக்கலாம்.

நாற்புறமும் பல்வேறு அபாயங்கள் நம் தேசத்தையும், மக்களையும் சூழ்ந்துள்ள நிலையில், வெற்றிவேல் நமக்கு உற்ற துணையாகட்டும். வீணரை வீழ்த்திய வீரவேலின் சக்தி நம் நெஞ்சில் குடிகொள்ளட்டும். சூரனை வென்ற சுடர்வேல் நம்மை முப்போதும் எப்போதும் காக்கட்டும்!! திருச்செந்தூர்வாழ் முருகன் தான் எல்லாத்துக்கும் துணையாய் இருக்கனும்! அருகிலிருப்போரை முதல்ல கண் திறந்து பாரப்பா!

வெற்றிவேல்! வீரவேல்!

நன்றியுடன்,
ராஜி.