Friday, March 28, 2014

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 3 - - புண்ணியம் தேடி

கடந்த இரண்டு வாரங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றோம். போன வாரம் மீனாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டு அடுத்து சொக்கநாதரைத் தரிசிக்கச் செல்லும் வழியில் நாம முதலில் தரிசிப்பது முக்குருணிப் பிள்ளையார்.
இங்கே இவரைப் பத்தி ஒரு குறிப்பு வச்சு இருக்காங்க. இருந்தாலும் சொல்கிறேன்...,

மதுரையை 16 ம் நூற்றாண்டில் ஆண்ட திருமலை நாயக்க மன்னர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூரில் அருள்மிகு மாரியம்மன் கோவிலின் தெற்கு பக்கம் மண்ணை வெட்டி எடுக்கும்போது, இந்த முக்குருணி விநாயகர் கிடைத்திருக்கிறார். உடனே, அவரை இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். திருமலை நாயக்க மன்னன் பிரதிஷ்டை செய்த ஆண்டு 1645. ஒரே கல்லினால் ஆன இந்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி தோறும் 18 படி, அதாவது முக்கால் குறுணி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து நைவேத்தியம் செய்வார்கள். அதுனாலதான் இவருக்கு முக்குருணி விநாயகர்ன்னு பெயர் வந்ததாம். நமக்கு ஏதாவது தடங்கல் வந்தா இந்த முக்குருணி விநாயகருக்கு சந்தனகாப்பும் விருப்பப்பட்ட நாளில் முக்குருணி அரிசியில் கொழுக்கட்டையும் படைத்தால் தடங்கல்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
நாம மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த நாளும் பிரதோஷ நாளும்ங்குறதால உற்சவர் பிரகார உலா தொடங்கிட்டார்.  முதலில் அவரது வாகனமான நந்தியும் (காளை மாடு ), அதன் பின்னே பட்டு பீதாம்பரம் தரித்த யானையும், அதன் பின்னே பல்லக்கில் உற்சவரும் பிரகாரம் சுற்றும் காட்சி நமக்கு கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணியம்.


சரி, இந்த முக்குருணி பிள்ளையாருக்கு மேலும் சில புராண கதைகள் சொல்றாங்க. அதையும் தெரிஞ்சுக்கலாம்.  பழைய காலத்தில இப்ப முக்குருணிப்பிள்ளையார்  இருக்கிற இடத்தில், நடராஜர் இருந்தாராம்.  அவரது பார்வையின் உக்கிரம் தாங்காமல் எதிரே இருந்த வீடுகள் அடிக்கடி எரிந்து போனதாகவும், உயிர் சேதம் கூட ஏற்பட்டதாகவும், அதனைத் தடுக்கும் வகையில்தான் இந்த முக்குருணிப் பிள்ளையார் சிலை அமைக்கப்பட்டது எனவும், முக்குருணிப்பிள்ளையார் வந்த பிறகு தீப்பற்றி எரியவில்லையாம். சரி, வாங்க நாம பிரகாரம் சுற்றிவரலாம்...,  
பிரகாரங்களின் தூண்கள் உயரமாகவும், அகலமாகவும் இருக்கு. இந்தப் பிரகாரத்து மூலையில் கொஞ்ச பேர் தியானத்தில் அமர்ந்து இருக்காங்க. பக்கத்தில் சென்று கேட்கலாம் வாங்க!! இங்கே பல சித்தர்கள் ஜீவசமாதியானதாகவும், அதில் ஒரு சித்தரின் ஜீவசமாதி இந்த இடத்தில இருப்பதாகவும், இங்கே இருந்து பிரார்த்தித்தால் மன அமைதியும், நினைத்த காரிய சித்தியும் கிடைக்குமாம். வாங்க நாமளும் சிறிது நேரம் இங்கே உட்கார்ந்து தியானத்தில் செய்வோம். இங்க, மேலும் ஒரு தனி சிறப்பு என்னனா உத்திரத்தில் வரையப்பட்டு இருக்கும் சுழலும் லிங்கங்கள் நாம் செல்லும் திசையெல்லாம் நம்மைப் பார்த்து சுழலுகின்றது.
அடுத்து நாமப் பார்க்கப் போறது சங்கப் புலவர்கள் திருக்கோவில். கடைசங்கப் புலவர்கள் 49 பேருக்கும் இங்கே கோவில் இருக்கிறது. ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், வெண்ணி குயத்தியார், காவர்பெண்டிர் ஆகிய பெண்பால் புலவர்களும் இந்த 49 புலவர்களில் இருக்கிறாங்க. மேலும் திருவாலவுடையார்பாணபத்திரர்பொருட்டு சேரமான், பெருமான் நாயனாருக்கு எழுதிய திருபாசுரங்கள் இந்த சங்கப்புலவர்கள் கோவில்ல கல்வெட்டா வடிக்கப்பட்டு இருக்கு. இங்கே சிவபெருமானே தமிழ் சங்கப் புலவரா அமர்ந்து தொண்டாற்றியதும் இங்கு குறிப்பிடபட்டு இருக்கு.  
அடுத்து நாமப் பார்க்கப் போறது கல்யாண மண்டபம். இந்த  மாதத்தில் இங்கு இறைவன் திருக்கல்யாணம் சிறப்பாக கொண்டாடபடும். இங்கே பல சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த சன்னதிக்கு வந்து முதலில் இங்கிருக்கும் விநாயகருக்கு தேங்காய், பழம், சர்க்கரை, நெய்விளக்கு வைத்து அர்ச்சனை செய்யணும். அப்புறமா சுவாமிக்கும், அம்பாளுக்கும் பூஜை செய்யவேண்டும். தேங்காய் ஒன்று, பழம், சுவாமிக்கு இரண்டு மாலை, அம்பாளுக்கு மாலை ஒன்று, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம் ஆகியவற்றை அர்ச்சகரிடம் கொடுத்து  அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்தால் திருமண தடை உள்ளவர்களுக்கு உடனே திருமணம் நடக்கும். பின் அர்ச்சனை செய்த மாலையைப் பத்திரப்படுத்தி வைத்து திருமணம் நடந்த உடன் சன்னதிக்கு வந்து அர்ச்சனை செய்து பழைய மாலையை அர்ச்சகர் கையாலே திருக்குளத்தில் சமர்ப்பித்து விடவேண்டுமென்பது கோவில் மரபு.
நாமக் கோவில் கொடி மரத்தின் தரிசனம் செய்யலாம் வாங்க. முழுவதும் தங்கத் தகடுகளால வேயப்பட்டு, விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கிறது இந்த கொடிமர மண்டபம். சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் உள்ள இந்த மண்டபத்தில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் தங்கக் கொடி மரமும்,  நந்தியும், பலிபீடமும் உள்ளன. சுற்றிலும் உள்ள எட்டுத் தூண்களிலும் அற்புதமான சிலைகள் உள்ளன. சங்கரநாராயணர், சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற தோற்றங்களும் திருமாலின் தசாவதாரக் காட்சிகளும் அழகா சிற்பங்களா இருக்கு. அதைவிட,  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணச் சிற்பம் பார்க்கவே ரொம்ப அழகா பெரிய அளவில் செதுக்கபட்டு இருக்கு.
அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலாரூபங்களும், அடுத்தடுத்துள்ள தூண்களில் அழகாக செதுக்கபட்டு இருக்கு. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர்.  சொக்கநாதர் என்று அறியப்படும இத்தல இறைவன். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.

ஊர்த்துவதாண்டவர், காளியின் சிலாரூபங்களும் மிகவும் அழகுடன் காட்சி அளிக்கின்றன. அங்குள்ள ஒரு வயதான பெண்ணின் சிலை காஞ்சனமாலான்னு சொல்கிறாங்க. இந்த வயதான தாய், மீனாட்சியை வளர்த்தவராவார். தன் மகளை ஒரு ஆண்டிக்கு (சிவபெருமான்) மணமுடித்துவிட்டோமே என்று அவர் கவலைப்படுவதாக அர்த்தப்படுத்தப்பட்டு இருக்கும் விதமாக அமைந்து உள்ளது இச்சிலை.
இப்ப நாம சுந்தரேஸ்வரர் சன்னதி சுற்றுக்குள் செல்லலாம் வாங்க. இங்கே எல்லாம்வல்ல சித்தர் சன்னதி இருக்கிறது. இந்த எல்லாம்வல்ல சித்தர் அங்கே உள்ள மக்களுக்கு பல்வேறு சித்துக்கள் செய்தாராம். கண்பார்வை இல்லாதவருக்கு கண் பார்வையும், பேச முடியாதவர்களை பேசவும் வைத்திருக்கிறார்.  அதைக் கேள்விப்பட்ட மன்னன் அவரை சபைக்கு அழைத்தானாம்.  அதை மறுத்த சித்தர் ஒருநாள் ராஜாவும், அவரும் கோவிலில் நேருக்கு நேர் சந்திக்கவேண்டிய சூழலில் மன்னன் அவரது சக்தியை சோதிக்க என்னினானாம்.  சித்தரிடம் ஒரு கட்டு கரும்பை கொடுத்து இந்த கல்யானைக்கு சாப்பிடக் கொடுக்கமுடியுமான்னு கேட்க...., எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம், அந்தக் கல்யானை கரும்பைத் தின்னது மட்டுமின்றி, மன்னன் கழுத்தில் உள்ள முத்து மாலையையும் தன் தும்பிக்கையை நீட்டி எடுத்ததாம். தன் தவறை உணர்ந்த மன்னவன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார். அந்தச் சித்தரின் நினைவாக இந்த சன்னதி எழுப்பப்பட்டுள்ளதாம். இன்றும் எல்லா வரம் கொடுக்கும் சித்தரின் திருவிளையாடல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த பிரகாரத்தின் தெற்கு சுற்றில் தட்சிணாமூர்த்தி உள்ளார். அவருக்கு அருகிலேயே உத்சவ விக்கிரகங்கள் இருக்கும் அறையும் இருக்கு. பிரகாரத்தின் மேற்குப் பகுதியின் கடைசியில் மார்பிள் கற்களால் ஆன காசி மற்றும் பெனாரஸ் விஸ்வநாதரைக் காணலாம். அந்தச் சிலைகள் காலம் சென்ற பெனாரஸ் மன்னர் ஒருவரின் தென்னிந்திய புனித யாத்திரையின்போது அவர் மதுரைக்கு வந்தபோது கொடுத்து. இந்த சுற்றினுள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை . 

அதன் வடக்கு பாகத்தில்  துர்கையம்மன் சன்னதி இருக்கு. அதற்கு அடுத்து ஒரு கடம்ப மரம் உள்ளது. இந்த மரத்தின் அடியில் இந்திரன் அமர்ந்து, சிவனை சிந்தித்து வழிபட்டதாகக் சொல்லபடுகிறது.  இன்னமும் அந்த மரம் கவனமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த நடைப்பாதை மூலையில் ஒரு சாட்சிக் கிணறு இருக்கு.


இப்ப நாம உள் பிரகாரத்திலிருந்து கருவரைக்கு முன் உள்ள மரத்தினாலான மேடை போன்ற அமைப்புடைய பாதையில் நிற்கிறோம். இப்ப நமக்கு வலப்பக்கம் இருக்கிற பளபளப்பான மண்டபம் தான் வெள்ளி அம்பலம் என்ற பெரிய மண்டபம். வெள்ளி அம்பலம்னா என்னனு தெரிஞ்சுக்கலாம்...,

முதலில் அம்பலத்தாடும் அய்யன் பஞ்ச சபைகளுள் முதன்மையானது பொன்னம்பலம். அது தில்லையிலே இருக்கு. பஞ்ச சபைகளுள் இரண்டாவது, வெள்ளியம்பலம். அது மதுரைல இருக்கு.  அடுத்து தாமிர  அம்பலம். அது திருநெல்வேலிலயும், அதனை அடுத்த அம்பலம்  ரத்னசபை திருவாலங்காட்டினிலும், அதனை அடுத்த சித்திரசபை குற்றாலத்திலும் இருக்கு.  ஐந்து சபைகளிலே மதுரையின் வெள்ளியம்பலதிற்க்கு என்ன சிறப்புன்ன நடராஜ பெருமான் கால்மாற்றி ஆடும் திருகோலம் இங்குதான் நிகழ்ந்தது.

மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் காணவந்த பதஞ்சலி முனிவரும்,  வியாக்கிரபாதர் முனிவரும் சிதம்பரம் நடராசனின் ஆனந்த தாண்டவத்தைக் காணாமல் உணவு உண்ண மறுக்க, சிவன் அவர்களுக்காகத் தனது ஆடியக் கோலத்தை மதுரையில் காட்டியருளிய இடம் வெள்ளியம்பலம் என சொல்லபடுகிறது. இந்த  வெள்ளியம்பலத்தின் இருபக்கத்திலும் பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதர் முனிவரும் ஐயனைத் தொழுத நிலையில் இருக்கிறாங்க. நடனக் கலையைக் கற்ற பாண்டிய மன்னன் இராஜசேகர பாண்டியன், நடனமாடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்தான். வெள்ளியம்பலத்தில் உள்ள நடராசர் ஒரு காலில் எப்பொழுதும் நின்றபடி ஆடுவதால் அவருக்குக் கால் வலிக்குமே என்று கருதி அவரிடம் காலை மாற்றி ஆடும்படி அன்பின் மிகுதியால் வேண்ட அவனுக்காக  இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினதாகத் திருவிளையாடற் புராணம் ( திருவிளையாடற் புராணம் -கால் மாறி ஆடிய படலம்)த்தில் சொல்லப்பட்டு இருக்கு.
நாம இப்ப சுந்தேரேஸ்வரர் கோவில் கருவறைக்குள் இருக்கிறோம். விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இந்த கருவறையைப் பத்தின சுவையான தகவல் ஒன்று உண்டு. மீனாட்சி அம்மன்  கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. 1330ம் ஆண்டு ஒரு முஸ்லிம் படையெடுப்பின்போது அம்பாளையும், சுவாமியையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை, கற்சுவர் கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். முஸ்லிம்கள்  அந்த சிலைதான் சுந்தரேஸ்வரர் என்று நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது.

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்ததாம். சிதைக்கப்பட்ட லிங்கத்தில் இப்பவும் கம்பி கொண்டு இடித்த தடங்கள் இபோழுதும் இந்த லிங்கத்தில் பார்க்கலாம் அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் உள்ளது. அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம் பெற்றுள்ளது.
பொன்னாலான தாமரையையே தன் சன்னிதியில் கொண்டிருக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும்,  தூய தாமரை மலர்களை இறைவனின் பாதத்தில் சமர்பித்துவிட்டு, இருவரின் அருளாசியோடு புண்ணியம் தேடும் நம் பயணத்தைத் தொடரலாம்.....,

Thursday, March 27, 2014

சேலைல எம்ப்ராய்டரி- கிராஃப்ட்

எங்க அண்ணன் மகளுக்கு சடங்கு . அதுக்கு,நான் அத்தை சீர் செய்யனும். அதனால, ஷாப்பிங்க் கிளம்பினேன். காதுக்கு கம்மல், ஃபேன்சி ஐயிட்டம்லாம் வாங்கிட்டேன். பட்டு சாரி வாங்கலாம்ன்னு கடைக்கு போனேன். நிறைய புடவைகள்லாம் கடைக்காரர் எடுத்து போட்டார். பொம்பளைங்களுக்குதான் புடவை விசயத்துல திருப்தி வராதே. அதனால, அண்ணன் பொண்ணுக்கிட்டயே போன் போட்டு கேட்டேன். எப்படிப்பட்ட சேலை வேணும்ன்னு கேட்டேன். எனக்கு பிளெய்ன் பட்டு சேலைதான் வேணும்ன்னு அடம்பிடிக்க சிகப்பு கலர்ல ப்ளெய்ன் பட்டு சேலை 2400 ரூபாய்ல வாங்கி வந்துட்டேன்.
                                       
வாங்கி வந்ததுலாம் அவக்கிட்ட காட்டினேன். எல்லாமே நல்லா இருக்கு அத்தைன்னு சொன்னா.  ஆனா, எனக்குதான் சேலைல மனசு ஏத்துக்கலைடா, 5000 ரூபாய்ல வைர ஊசி போட்ட மயில் கழுத்து கலர் சேலை பார்த்தேன். ஆனா, நீதான் பிளெய்ன் சேலைக்கு அடம்பிடிச்சியேன்னு சொல்ல, அத்தை, பிளெய்ன் சேலை 2400, வைர ஊசி சேலை 5000ரூபாய். உனக்கு நான் 2600 ரூபாய் மிச்சப்படுத்தியிருக்கேன்னு சொன்னா. ஆஹா, நம்ம மருமகளுக்கு நம்ம மேல என்ன கரிசனம், அத்தைக்கு காசு செலவாகிடக்கூடாதேன்னு சொல்றாளேன்னு ஒரு செக்கண்ட் சந்தோசம் பட்டுக்கிட்டு என்ன இருந்தாலும்  பிளெய்ன் சேலை தரோமேன்னு தயக்கமா இருக்குடான்னு சொன்னேன். என்னது, பிளெய்ன் சேலை தரப்போறியா?! என் சடங்குக்கு இன்னும் 10 நாள் இருக்கு. உனக்குதான் எம்ப்ராய்டரி போடத் தெரியுமே, பத்து நாளைக்குள்ள இதுல எம்ப்ராய்டரி போட்டு எனக்கு கிஃப்ட் பண்ணிடுன்னு சொன்னா.
                                     

அவ்வ்வ்வ் பயபுள்ள என்னமா பிளான் போடுதுன்னு சொல்லி, பத்து நாள்தான் டைம்ங்குறதால, சிம்பிளாதான் டிசைன் பண்ண முடியும்ன்னு சொன்னேன். ஓக்கே அத்தை, நீ எம்ப்ரய்டரி போட்டு தந்தாலே போதும்ன்னு சொன்னான். கடைக்கு போய், மல்டி கலர் கோன் திரெட், ரெடி மேட் பூ, சில்க் தெரெட், குந்தன் கல், மல்டி கலர்ல குட்டி குட்டி லீஃப்ன்னு பர்ச்சேஸ் 400 ரூபாய்ல முடிச்சுட்டேன்.
           
                                     
பார்டர்ல  கொடி கொடியா போற மாதிரி ஒரு டிசைன் போட்டேன். கொடிக்கு “காம்புத்தையல்” போட்டு  லீஃப் வச்சு தச்சேன். கொடில பூவுக்கு பதில் அங்கங்கு, ”கமல் தையல்” போட்டு நடுவுல வெள்ளைகலர் சூரியகாந்தி போல கல் வெச்சு தச்சுட்டேன்.
                                         
 முந்தானைல மூணு ஹார்ட் ஷேப்பை ஒண்ணா ஒட்டுனது போல ஒரு டிசைன் போட்டு ஜரிகை நூலால் “சங்கிலி தையல்” போட்டு தைச்சேன். இரண்டு ஹார்ட்டுக்கு நடுவுல லீஃப் வெச்சு தச்சுட்டேன்.
                                         
                                         
 இப்போ முந்தானையும், பார்டரும் ரெடி, இருந்தாலும் என்னமோ குறையுற மாதிரி இருக்கவே, பார்டர் டிசைன்னுக்கு கொஞ்சம் மேல அங்கங்க ஒரு பூக்கொடி “காம்புத் தையல்” போட்டு குந்தன் திலகம் கல்லை வெச்சு தச்சு, ரெடிமேட் பூவை அங்கங்கு வெச்சு தெச்சு, இலைக்கு பச்சை குந்தன் கல்லும் காம்பின் முடிவில் அகல் விளக்கு கல்லையும் வெச்சு தைச்ச பின் பூக்கொடி ரெடி.
                                                        
                             

                             
அங்கங்கு, அந்த பூக்கொடியை போட்டு விட்டபின் சேலை ரெடி. அயர்ன் பண்ணி சடங்குல சீர் செஞ்ச பின், அதை அண்ணன் மகள் கட்டி அவள் முகத்துல வந்த சந்தோசத்தை பார்த்தப்பின் 10 நாள் நான் பட்ட உடல் கஷ்டம் பஞ்சாய் பறந்து போச்சு. என்னதான் 10000 ருப்பாய் குடுத்து சேலை எடுத்து வந்திருந்தாலும் ரெண்டு பேருக்கும் இவ்வளவு திருப்தி வந்திருக்குமான்னு தெரியல. 
                                        
                              
                                  
                                 

எம்ப்ராய்டரி பண்றவங்களுக்கு டிப்ஸ்: நல்ல வெளிச்சமான இடத்துல உக்காந்து போடுங்க. ஊசில நூலை ரொம்ப நீளமா போடாம, ஒரு முழம் அளவுக்கு கோர்த்துக்கிட்டா நூல் சிக்கல் விழாது. நூல் கண்டுல இருந்து  தேவையான அளவு நூலை எடுத்து ஒரு சுத்து சுத்தி முடி போட்டு வச்சுக்கிட்டா நூல் சரியாம இருக்கும். கற்கள், சமிக்கிலாம் மீதமாச்சுன்னா ஒரு கவர்ல போட்டு பின் பண்ணி வச்சுக்கிட்டா, குட்டி பசங்க பாவாடை, சட்டை, ஃபேண்ட்ல சின்ன சின்ன டிசைன் போட உதவும்.

நன்றி:   எம்ப்ராய்டரி போட, நூல் கோர்த்து கொடுத்து, கற்கள் பதித்து  உதவி செஞ்ச என் மழலை செல்வங்களுக்கு..,

இது ஒரு மீள் பதிவு....,

Wednesday, March 26, 2014

காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை (ராஜகிரி கோட்டை) - மௌனச்சாட்சிகள்

போன வாரம் செஞ்சிக் கோட்டைக்கு வெளியே இருக்கிற இடங்களெல்லாம் பார்த்தோம்.  பார்க்காதவங்க ஒரு எட்டு இங்கிட்டு போய் பார்த்துட்டு வந்ததக்கப்புறம், செஞ்சிக் கோட்டையின் வரலாற்று முக்கியம் வாய்ந்த ராஜா கோட்டைக்குள் செல்லலாம். வாங்க!!

இதுதான் ராஜகிரி கோட்டைக்கு செல்லும் நுழைவாயில். இங்கே காலைலப் போறது நல்லது. ஏன்னா, பாறைகளா இருக்குறதுனால சூடு அதிகம் இருக்கும். அப்புறம் தண்ணீர் பாட்டில்கள் தேவையான அளவு எடுத்துக்கோங்க. ஏன்னா மலைமேலே ஏறும் போது உடம்பில் வியர்வை அதிகமாகி நீர் இழப்பு அதிகம் இருக்கும். அதனால தண்ணித் தாகம் நிறைய எடுக்கும். அதையும் பிளாஸ்டிக் கவர்லையோ இல்ல கேரி பேக்லயோ எடுத்து செல்லாதீங்க. குரங்குகள் அதிகம் இருப்பதால் கையில் இருப்பதை பறித்து கொண்டு சென்றுவிடும். முதுகில் மாட்டிக்கொள்ளும் டிராவல் பேக்ல எடுத்து செல்லுங்க. கையில் ஒரு குச்சியையும் வச்சுகோங்க. ஏன்னா அது குரங்குகளிடம் இருந்து ஒரு நம்மைப் பாதுகாத்துக்க உதவும். எல்லாம் எடுத்துக்கிட்டாச்சா!? போலாமா!?
 நாம இப்ப ஏறி செல்கிற பாதை நமக்கு முன்னே பல்வேறு அரசாங்கங்களையும், பல அரசர்களையும், பலப் போர்களையும் சந்தித்த இடங்களாகும். இந்தக் கோட்டையின் வரலாற்றைப் பார்த்தோம்னா கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிபி 6ம் நூற்றாண்டு வரை சமண துறவிகளின் வாழ்விடமாகவே இருந்திருக்கு. அதற்கு ஆதாரமாக செஞ்சிக்குப் பக்கத்தில இருக்கிற சிருகடம்பூர் என்கிற ஊர்லயும், ராணி கோட்டையில் இருந்து எடுக்கப்பட்ட சமணர் படுக்கையிலிருந்தும் அவங்க காலம் தெரியவந்தது. 

அதன் பிறகு பல்லவர்கள் ஆண்டதாக தெரிகிறது. இங்கிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் உள்ள கல்வெட்டுகளில் இந்த இடத்தை விசித்திரசித்தன் என்னும் மகேந்திரவர்மன் என்ற பல்லவமன்னன் கி பி 580-639 வரை இந்த இடத்தை ஆட்சி செய்தற்கான சான்றுகள் இருக்கிறதாம் மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில்களில் இருந்து கிடைத்த கல்வெட்டுகள் மூலம் செஞ்சி பல்லவர்களின் அரசாட்சியின் கீழ் இருந்ததாக தெரிகிறது.

இந்த இடம் மேலிருந்து பார்க்கும் நுழைவு வாயிலின் உள்பக்க தோற்றம். இனி இதன் வரலாற்றைப் பார்க்கலாம். பல்லவ மன்னர்களின் வீழ்ச்சிக்கு பின் இது சோழர்கள் வசம் வந்தது. செஞ்சியின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் ஊரான ஆனான்ங்கூரில் உள்ள பாறை கல்வெட்டுகள் மூலம் இந்த இடத்தை முதலாம் ஆதித்தசோழன் என்னும் சோழமன்னன் கிபி 871-907 -ல் ஆண்டதாகவும், அதன்பின் இடண்டாம் ஆதித்தசோழனும் அதன் பின் அவர் சகோதரர் ராஜராஜ சோழனும் கிபி985-1013ல் சிங்கபுரநாடு என்னும்  இதன் அந்த நூற்றாண்டு பெயரில் வழங்கப்பட்டு சோழர்களின் ஆட்சியின் வசம் இருந்தது.  தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தததாகவும் சொல்லபடுகிறது. வாங்க! இன்னும் கொஞ்சம் மேலே ஏறி செல்லலாம். 
    
வெயில் வேற அதிகமா இருக்கு. நாம செல்லவேண்டிய தூரம் அதோ மலை மேலே தெரிகிற கோட்டைக்கு அதனால வேகமா போகலாம். முடியாதவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கூட வாங்க. சரி, அடுத்தது இந்த இடத்தை யார் ஆண்டாங்கன்னுப் பார்த்தால் சோழ மன்னர்களுக்கு பிறகு பாண்டிய மன்னர்கள் கி பி 1014-1190 ஆண்டுகளில் ஆட்சி செய்ததாகவும் தெரிகிறது. இதற்கு ஆதாரமாக ஆங்கில ஆராய்ச்சியாளர் மேக்கன்ஸ் தன்னுடைய குறிப்புகளில் கர்நாடக ராஜாக்களின் சவிஸ்திர சரிதத்தில் குறிபிடபட்டுள்ளதாக சொல்லி இருக்கிறார்.

இந்த மாதிரி கோட்டைகளில் மன்னர்கள் கல்வெட்டுகளில் குறிப்பு எழுதுறாங்களோ இல்லையோ நம்மாளுங்க ஏகப்பட்ட குறிப்புகளை இங்கிருக்கும் சுவர்களில் எழுதிடுறாங்க. இங்கே வரும் பொதுமக்களுக்கு சொல்வது என்னன்னா இதெல்லாம் அழிந்து கொண்டு இருக்கும் புராதான சின்னங்கள். நம்மால பாதுகாக்க முடியலைன்னாலும் பரவாயில்ல.அதை அலங்கோலப்படுத்தாமலாவது இருக்கணும்.

சரி, இனி வரலாற்றின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். பல்லவர்களுக்குப் பிறகு சோழர்கள், ராஷ்ட்ரகூடர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், இப்படி பல படை எடுப்புகளை கண்ட செஞ்சி கிபி 11ம் நூற்றாண்டில் அனந்தகோன்என்னும் கோனார் பரம்பரை சிற்றரசர் தான் முதலில் இங்கு ஒரு கோட்டையை கட்டினாராம். பிறகு அனந்தகோன் 1190-1240 வரையிலும் அதன்பிறகு கிருஷ்ணா கோன் கி பி 1240-1270 வரையிலும் அதன்பிறகு கோனேரி கோன் கி பி 1270-1290 வரையிலும் அதன்பிறகு கோவிந்த கோன் கி பி 1290-1310 வரையிலும் அதன்பிறகு வலிய கோன் அல்லது புலிய கோன் கி பி 1310-1320 வரையிலும் இவர்களுக்கு பின்னால் வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆண்டனர் என்றும் அதன்பிறகு கோபிலிங்க கோன் அல்லது கோட்டியலிங்க கோன் 1320-1330 ல் ஆண்டதாதாகவும் ஆக மொத்தம் இவரது பரம்பரையினர் செஞ்சியை 300 வருடம் ஆண்டதாக சொல்லபடுகிறது.

சரி, வரலாற்றின் தொடர்ச்சியைப் பார்க்கிறதுக்கு முன்னாடி இங்கே ஒரு பீரங்கி இருக்கிறது பாருங்க. இது கோட்டையின் மையப்பகுதியில் பாதுக்காப்பு கருதி வைக்கப்பட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன். இங்கிருந்து பார்க்கும் போது கீழ்பக்க நிலப்பரப்பு எல்லாம் இந்த இடத்துல இருந்து பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது. அதனால இங்கிருந்து எதிரிகளை துல்லியமாகத் தாக்குவதற்கு பிரஞ்சுக்காரர்களால் இந்த பீரங்கி பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்ல்கிறாங்க.
  
பீரங்கியைப் பார்த்து விட்டு மேலே செல்லலாம் வாங்க. இனி,  கோட்டையோட வரலாற்றை விட்ட இடத்திலிருந்து பார்க்கலாம். அனந்தகோன் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை அந்தகிரி எனவும் அழைக்கப்பட்டு, பிறகு காலப்போக்கில் ராஜகிரி என அழைக்கப்பட்டதாகவும், அவர்மகன் கிருஷணகோன் கட்டிய கோட்டை கிருஷ்ணகிரி என அழைக்கபடுவதாகவும் சொல்றாங்க. இவர்களது 300 வருஷ ஆட்சிக்குப் பின்னர்,  14ம் நூற்றாண்டில் இந்த கோட்டை விஜயநகர மன்னர்களின் ஆட்சியின் கீழ்வந்தது.  இதை கோபண்ணராயர் என்பவர் ஆட்சி செய்தார் .விஜயநகரத்து மன்னன் தெற்கில் பெரும்படையுடன் வந்து போர் புரிந்தபோது விஜயநகர பேரரசின் தளபதியாக இருந்தவர் இந்த கோபண்ணராயர்.  இவர் சிறப்பாக போர் புரிந்து, போரில் வெற்றிப் பெற உதவியதால் அவரையே செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படி செய்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
   
வாங்க! இந்தவழியாதான் மலை உச்சில இருக்கிற கோட்டைக்கு செல்லனும்.  இதன் வராலாற்று பின்னணியை மலை ஏறிக்கொண்டே பேசலாம். அப்பதான் களைப்பு தெரியாது.

 கிபி 1509-1529 ம் ஆண்டு கிருஷ்ண தேவராயர் ஆட்சி இங்கே நடந்துக்கொண்டு இருந்த சமயம்...,  அவர் கிரிஷ்ணப்ப நாயக்கரை செஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்யுமாறு ஆணை பிறாப்பித்தாராம். இந்த நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் தான் கருங்கற்களால் ஆன நீண்ட வலிமை மிக்க கோட்டைகளையும், கற்சுவர்களையும் கீழ்பகுதியில் கருங்கற்களையும், மேல்பக்கம் செங்கல்களையும் கொண்ட வேலைப்பாடுடைய கோவில்களையும் கட்டினர்.  நாயக்கர்களின் வம்சம் இவர் காலத்தில் தான் கல்யாணமஹால் உடற்பயிற்சி கூடம் ,நெற்களஞ்சியம் அரண்மனைகள் எண்ணைக்கிணறு, நெய் கிணறு முதலியவை கட்டப்பட்டது.  இந்தக் கோட்டையை நூறாண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தனராம்.
      
நாமப் பயணம் செய்த வழியை இங்கிருந்துத் திரும்பிப் பார்க்கும்போது அழகான கல் மண்டபமாக தெரிகிறது.  வெயிலில் களைத்து வரும்போது இது போன்ற மண்டபங்களில் ஓய்வு எடுத்துகொண்டு செல்ல, முன் கூட்டியே யோசனை செய்து கட்டி இருக்காங்க. அதனால, நம் களைப்பு போக, நாமும் கொஞ்சம் ஓய்வு எடுத்துகொண்டு இதன் வரலாற்றை திரும்பி பாப்போம். 

நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்கர்மதுரை நாயக்கர் ,செஞ்சி நாயக்க மன்னர்களுக்குள் ஒற்றுமை இல்லாதாதால், அவங்களுக்குள் உட்பூசல், கலவரம்லாம் நடந்தன. இந்தச் சூழ்நிலையை  பயன்படுத்திக் கொண்ட முகமதிய வம்சத்தின் பிஜப்பூர் சுல்தான்கள் 16 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் செஞ்சியின் மீது படையெடுத்தனர்.  அதில் கோல்கொண்டா படைத்தளபதியான மிர்ஜில்லா என்பவர் கிஷ்ணப்ப நாயக்கரை தோற்கடித்து, செஞ்சியை பிஜபூர் ராஜ்யத்துடன் இணைத்துக்கொண்டார். இவர்களுடையக் காலத்தில் கோயில்களையும், சிற்பங்களையும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் உடைத்து சேதப்படுத்தினர். அந்த சிதிலமடைந்துள்ள கோயில்களையும், சிற்பங்களையும் நாம மேலே செல்லும் போதுப் பார்க்கலாம்.
      
அதோ உயரத்தில் தெரியும் அந்தக் கோட்டைதான் நாம செல்லவேண்டிய இடம். இந்த பயணப் பாதை எத்தனை போர்கள்!? எத்தனை அழிவுகள்!? எத்தனை உயிர் கொலைகள்!? எவ்வளவு ஆடம்பர அணிவகுப்புகள்லாம் சந்தித்திருக்கும்!? ஆனால், இன்று எல்லாமே மறைந்து அவையாவையும் தன்னுள் அடக்கி, அடங்கி, ரொம்பவும் ஆடாதீங்கப்பா! அப்புறம் என்னை மாதிரி கேக்க நாதியில்லாம அழிஞ்சுப் போய்டுவீங்கன்னு சொல்லாம சொல்லி நம்முன் மௌனச்ச்சாட்சியாக நீண்ட நடைபாதையாக நமக்கு வழிக்காட்டி செல்கிறது. அதில்தான் நாம், நம் தவறுகளை உணராமல் இன்னைக்குப் பயணிக்கிறோம்...,

இனிக் கோட்டையின் வரலாற்றைப் பாப்போம். முகம்மதியரின் ஆட்சியின் கீழ் கி பி 1649 முதல் 1677 வரை ஆண்டனர். அதன் பின்னர் முகம்மதியரின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்திய வரலாற்றில் அழியா இடம் பிடித்த மராட்டிய மன்னன் வீர சிவாஜி 17 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகமதியர்களை வென்று செஞ்சியை கைப்பற்றினார் பின்னர் தன்னுடைய சகோதரர் சம்பாஜியை  கிபி 1690 ல் செஞ்சியில் ஆட்சி செய்யும்படி நியமித்தார் அதன்பிறகு சம்பாஜியினுடைய தம்பி ராஜாராம் என்பவரை ஆட்சி செய்யும்படி சாம்பாஜி மகராஜா கூறினார்.

அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆண்டு 1687 ஆகும்.  அந்த சமயத்தில் ஔரங்கசீப், சல்பீர்கான்ன்ற தளபதி மூலம் பெரும்படையை அனுப்பி செஞ்சியை முற்றுகை இட்டான். அப்பொழுதுகூட அவனால் மராட்டியர்களைத் தோற்கடிக்க முடியாததால் ஔரங்கசீப் படைகள் 7 ஆண்டுகளாகக் கோட்டையை முற்றுகையிட்டு, அங்கே உணவு பஞ்சம் ஏற்படுத்தி, அதன்பிறகு கோட்டையை பிடித்தனர். ஒட்டுமொத்தமாக மராட்டிய மன்னர்களின் ஆட்சிக் காலம் கிபி 1677 லிருந்து 1697  வரை இருந்தது.
இங்க ஒரு அழகான கோவில் இருக்குவாங்க அருகில் சென்று பார்க்கலாம் இது பாலரங்கநாதர் ஆலயம். நாமப் போறப் பாதையில மலை அடிவாரத்தில் பாதையின் வடக்கு பக்கத்தில்,  கிழக்கு நோக்கியபடி சிதைந்த நிலையில் காணப்படுவதுதான் இந்த பாலரங்கநாதர் ஆலயம் கீழ்பக்கம் கருங்கற்களாலும், மேல்பக்கம் செங்கற்களாலும் கட்டப்பட்டு ரொம்ப அழகா கலைநயத்துடன் இருக்கு. ஆனா இதில் பூஜையோ புனஷ்காரமோ கிடையாது. குரங்குகளின் வசிப்பிடமாக அழிவுற்ற நிலையில் இருக்கு இக்கோவில்.

இங்கத் தெரிகிற இந்த மண்டபம் இது பாலரங்கநாதர் சன்னதிக்கு நேரே இருக்கு.  அதன் முன்னே ஒரு தெப்பக்குளமும், படிக்கட்டுகளுடன் இருக்கு. முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படும் இந்த குளத்தில்தான் பழையக்காலத்தில் பாலரங்கநாத சுவாமியின் உற்சவ மூர்த்தி சிலை சிங்கபுரம் என்னும் ஊரில் இருந்து கொண்டுவந்து, இங்கத் தெரிகிற குளக்கரை மண்டபத்தில் வைத்துதான் அலங்காரம் செய்து, தெப்பத்தில் வைத்து விழா எடுத்து ரொம்ப கோலாகாலமா கொண்டாடுவார்க.ளாம் அதனால இந்த மண்டபத்திற்கு அரங்கநாதர் மண்டபம்ன்னு பெயர் வந்ததுன்னு சொல்றாங்க .. அதெல்லாம் இப்ப அழிஞ்ச நிலையில இருக்கு.
  
குளத்தையும், மண்டபத்தையும் பார்த்தாச்சு.  இனி, மேலே போகலாம் வாங்க! இப்ப இந்தக் கோட்டையின் வரலாற்றைத் தொடர்ந்து பார்க்கிறதுக்கு முன் இங்கே இருக்கும் ஒரு கோவிலைப் பத்தி தெரிந்துகொள்வோம்.

இதுதான் கமலகன்னியம்மன் கோவில். இந்த அம்மன் கோவிலை துர்காதேவி கோவில் ன்னும் இங்கே உள்ளவங்க சொல்றாங்க. இந்த அம்மனை இன்றும் இவ்வூரின் தேவதையாக வணங்கி வருகின்றனர்.  இந்தக் கோவிலுக்கு முன்னால ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு ஒரே பாறையில் ஒரு பலிபீடம் செதுக்கப்பட்டுள்ளது.  பழையக் காலத்தில் இங்கே திருவிழாக்கள் விசேஷமாக கொண்டப்படுமாம்.  அப்ப இந்த பலிபீடத்தில் தான் அம்மனுக்கு எருமைகடா பலிகொடுப்பாங்களாம். இந்த கோவிலுக்கு பின்னால் இருக்கிற பாறையில் பல வண்ணங்களில் 17 ம் நூற்றாண்டில் உள்ள நாயக்கர் கால ஓவியம்  வரையப்பட்டு இருக்கு.  இதில் திருமால், பூதேவி ஸ்ரீ தேவியோடு காட்சி கொடுக்கிறார்.

இனி, இதனை அடுத்து ஒரு  பெரிய சிவலிங்கம் இருக்கிறது. இதனைப் பற்றிய விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவங்க சொல்லுங்க. நாங்க தெரிஞ்சுக்குறோம்!

சரி, வாங்க நாம மேலே செல்லலாம். இன்னும் நாம போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கு. மேலும், இங்க மலை மேலிருந்து 4 மணிக்குள்ளே திரும்பி மலையடிவாரத்திற்கு வந்துடனுமாம். அதனால சீக்கிரம் மேல கோட்டைக்கு போகலாம். வாங்க!

நாம பாலரங்கநாதர் ஆலயமும், கமலகன்னியம்மன் கோவிலையும் பார்த்ததால, நாமக் கோட்டையின் வரலாற்றை மராட்டிய மன்னர்களின் அரசாட்சி வரை பார்த்தோம்.  மாராட்டியர்களின் ஆட்சி வீழ்ச்சியுறத் தொடங்கியபோது மொஹலாய தளபதி ஜோல்பீர்கான் 1697-98 ல் மிகவும் போராடி இந்த கோட்டையை மீட்டார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தது ராஜபுத்திர பண்டேல்கணட் தளபதியான சொருப்சிங்.  அதன்பிறகு இந்தக் கோட்டை முகலாயர்கள் வசம் வந்தது அப்பொழுது முகலாய மன்னராக இருந்தவர் ஒவ்ரங்கசீப்.  இவர்1707 ல் இறந்தபிறகு அவரது இரண்டாவது மகன் ஷாஆலம் பதவி ஏற்றார். அவர் சததுல்லாகான் என்பவரை ஆற்காடு நவாப்  ஆக நியமித்து பண்டேல்கண்டில் படைத்தளபதியாக இருந்த சொருப்சிங்கிடம் செஞ்சியை ஆளும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இங்கிருந்து வரிவசூல் செய்து ஆட்சி நடத்த நிபந்தனை விதித்தார். இதன் மேற்பார்வையாளராக சததுல்லாகான் நியமிக்கபட்டார் சொருப்சிங்கும் சததுல்லாகானுக்கு திரை செலுத்தி ஆட்சி நடத்தினார். இந்த சொருப்சிங்கின் மகன்தான் செஞ்சியின் வீரத்திருமகன் தேசிங்குராஜா இந்தக்கதையை விரிவாக சொல்கிறேன். கேட்டுகோங்க...
   

 பிரமிக்கவைக்கும் விதமாக இந்த கல் கோட்டைகள் இருக்கு கவனமா நடந்து மேல் நோக்கி செல்வோம். இனி இந்த கோட்டையின் வீர வரலாறான ராஜா தேசிங்கு ஆட்சிப் புரிந்தப் காலத்தைப் பார்க்கலாம்.

மராட்டிய மன்னர் ராஜாராம் 7 ஆண்டு முற்றுகைக்கு பின் மாறுவேடத்தில் கோட்டையை விட்டு வெளியேறிய பின் கோட்டை முகலாயர் வசமானது. அதன் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த பண்டேல்கண்ட் தளபதியாக இருந்து செஞ்சியின் வெற்றிக்காக போராடிய சொருப்சிங் என்னும் ராஜபுத்திர வீரர் அவரால்தான் வெற்றி கிடைத்தது என்பதால் அவரையே இந்த கோட்டைக்கு ராஜாவாக நியமிக்கபட்டார். அவருடைய மனைவி ரமாபாய். இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு தேஜ் (தேசிங்கு ராஜா ) என பெயர் வைத்தனர். தேஜ் என்றால் ஒளி பொருந்தியவன் என்று அர்த்தம். இந்த சமயத்தில்தான் நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது போல ஔரங்கசீப் மறைவுக்குப்பின் அவரது இரண்டாம் மகன் ஷாஆலம் டெல்லியின் பாதுஷாவாக முடிசூட்டி கொண்டார். அப்பொழுது அவருக்கு குதிரை ஒன்று பரிசாக கிடைத்தது.  அதன் பெயர் நீலவேணி. அந்த குதிரை மிகவும் வலிமையாக உயரமாக இருந்தது அதை யாராலும் அடக்க முடியவில்லை.    

 டெல்லி பாதுஷா ஷாஆலம் குதிரையை அடக்க நாடு முழுவதும் உள்ள மன்னர்களுக்கு ஓலை அனுப்பினார். அதில் செஞ்சியில் கப்பம் கட்டும் சொருப்சிங்கும் ஒருவர். அவரும் டெல்லி சென்று குதிரையை அடக்க முயன்று தோல்வியைத் தழுவினார். அதனால் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன தந்தை டெல்லி சிறையில் இருப்பது 3 ஆண்டுகள் கழித்துதான் ராஜா தேசிங்குவிற்கு தெரியவந்தது.

அப்பொழுது தேசிங்குவிற்கு 15 வயதுதான் ஆயிற்று. அப்பொழுது தாயிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தன் உயிர் தோழன் மகமதுகானையும் அழைத்துக்கொண்டு குதிரையில் டெல்லி புறபட்டார். டெல்லி சென்ற தேசிங்குவை பார்த்த ஷாஆலம் நீ சிறுவனாக இருப்பதால் உன்னால் குதிரையை அடக்கி வெற்றி கொள்ள முடியாது. உன் நாடு நோக்கி செல் என எச்சரித்தார்.  எதற்கும் அஞ்சாத தேசிங்கு குதிரையை அடக்குவதில் தீவிரமாக இருந்ததால் போட்டிக்கு ஏற்பாடு செய்தார் டில்லி பாதுஷா.

நம் தமிழகத்து இளம்சிங்கம் குதிரையை ஆய்வு செய்து தன் நிழலை கண்டுதான் குதிரை மிரள்கிறது என தெரிந்துக் கொண்டு, தேசிங்கு தன் நிழல் கீழே விழாதவாறு எதிர் திசையில் குதிரையை ஒட்டினார். மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி, வாயில் நுரைத் தள்ளிக் கீழே விழுந்து விட்டது அந்தக் குதிரை.

நாம் பேசிக்கொண்டே கோட்டையின் முக்கால் பாகத்திற்கு வந்துவிட்டோம்.  இனி கோட்டையின் உச்சிப் பகுதிக்கு தொடர்ந்து செல்லலாம்.  கூடவே தேசிங்குவின் வரலாற்றையும் தொடரலாம்....,

குதிரையை அடக்கிய தேசிங்குவின் வீரத்தைப் பாராட்டி அவனுக்கு ராஜா ஜெயசிங்கு என பட்டமும் கொடுத்து, அவனது தந்தை சொருப்சிங்கையும் சிறையிலிருந்து விடுவித்தார் டெல்லி பாதுஷா. பின்னர் அந்தக் குதிரையையும் அவருக்கேப் பரிசாகக் கொடுத்து,  இனி செஞ்சி அரசு டெல்லிக்கு கப்பம் கட்டத் தேவை இல்லை எனவும் உத்தரவு பிரபித்தார்.  பாதுஷாவின் படை தளபதியாக இருந்த பீம்சிங் என்பவர் தேசிங்குவின் வீரத்தை பாராட்டி அவரது மகள் ராணிபாயை திருமணம் செய்து கொடுத்தார். தன் தந்தைமனைவிநண்பனுடன் தான் வெற்றிப் பெற்ற குதிரையோடு நாடு திரும்பினார் ராஜா தேசிங்கு.  

இது கோட்டைக்கு செல்லும் வழிகளில் ஒன்று.... தேசிங்குவின் கதையை பார்க்கலாம்...,

இந்த வீரக் கதை இங்கே நாட்டுப்புற பாடலாக படிக்கபடுகிறது. அவங்க மூலமாதான் இந்த கதைகள் தெரிந்துக் கொண்டேன்.அந்த நாட்டுப்புற பாடல்கலை வேற ஒரு பதிவில் பார்க்கலாம். சரி, நாம மீண்டும் தேசிங்குவின் வரலாற்றுக்கு வருவோம். இவங்க நாடு திரும்பின சில நாட்களிலே 1711 ம் ஆண்டு ஷாஆலம் இறந்துவிட, அவரது 4 மகன்களில் ஒருவரான ஜகந்தர் மற்ற மூவரையும் வென்று ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றினார். ஜகந்தரை தொடர்ந்து டெல்லியில் ஆட்சி மாற்றங்கள் நடந்துகிட்டே இருந்தது. இந்த நிலமையில்தான் இங்கே சொருப்சிங் மரணமடைந்தார். இந்த சூழ்நிலையில் 1717 ம் ஆண்டு ராஜாதேசிங்கு தனக்குதானே முடி சூட்டி கொண்டார். டெல்லியின் பிரதிநிதியாக தென் பகுதியை ஆண்டுவந்த ஆற்காடு நவாப் சதத்துல்லாகானுக்கு தேசிங்கு அரசனது பிடிக்கவில்லை அதுனால ஷாஆலம் தேசிங்குவின் வீரத்தை மெச்சி வழங்கிய கப்பம் கட்ட வேண்டியதில்லை என்கிற சலுகையையும் செல்லாது எனக்கூறி மொத்தமாக அந்தக் காலத்தினுடைய பணம் 70 லட்சத்தைக் கட்டச் சொன்னான்.  அடிமைத்தனத்தைப் பிடிக்காத தேசிங்கு கப்பம் கட்டுவதை மறுத்ததன் விளைவு. போர்!!!

அந்தச் சமயத்தில தேசிங்குவின் நண்பன் மகமதுகானுக்கு வழுதாவூரில் திருமணம் நடந்துக் கொண்டு இருந்தது. விஷயம் கேள்விப்பட்டவுடன் கல்யாணத்தை நிறுத்திவிட்டு போரில் இறங்கினான் மகமதுகான். வெறும் 350 குதிரைப்படைகளும், 500 காலாட்படைகளுடன் போருக்கு கிளம்பினான் மகமதுகான். ஆனால் நவாபிடம் 10,000 காலாட்படை, 8000 குதிரைப்படை மற்றும் பீரங்கிப்படைகள் இருந்தது. மகமதுகான் இவங்களை எதிர்த்து ஆவேசமாகப் போரிட்டுப் பெரிய அழிவை எற்படுதினான். அந்தச் சமயத்தில் நவாபினுடைய ஆட்கள் மறைந்து இருந்து மகமதுகானை தாக்கி,  வீரமரணம் அடைய வைத்தனர் என்று கேள்விப்பட்ட தேசிங்கு ராஜா தன் நண்பனின் மரணத்திற்கு பழி தீர்க்கப் போருக்குப் கிளம்பினான்.

தேசிங்குவின் வருகையைத் தடைச் செய்ய மலையனூர்மேலச்சேரி, தேவனூர் இந்த இடங்களில் உள்ள ஏரிகளை எல்லாம் உடைத்து விட்டு ஊரையே வெள்ளக்காடாக ஆக்கினார்கள் ஆற்காடு நவாப் படையினர்.  தேசிங்குவின் நீலவேணி குதிரை கலங்காது தண்ணீரில் நீந்தி எதிரியை நோக்கி சென்றது. அப்பொழுது தண்ணீருக்கு அடியில் நீலவேணியின் கால்களை வெட்டி சாயத்தனர் நாவாபினுடைய படைகள். தனியாளாக நின்ற தேசிங்கு, தன் வாள்வீச்சிமேல் நம்பிக்கைக் கொண்டு கடலி என்னும் இடத்தில எதிரிப்படையை தனியாளாய் எதிரிகொண்டு நாலாயிரம் குதிரை படையை வெட்டி சாயத்தான்.  தேசிங்குவின் வீரத்திற்கு முன்னால் ஈடுக் கொடுக்க முடியாத நவாப் படைகள் பின் வாங்கினர்.

நவாப் படையில் உள்ள சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து பின்பக்கமாக துப்பாக்கியால் சுடப்பட்டான்.   முதுகில் காயம் பட்டு இறக்க விரும்பாத தேசிங்கு, துப்பாக்கி குண்டில் அடிப்பட்டு விழும்போது  தன் வாளையே ஆகாயத்தில் எரிந்து மார்பில் வாங்கி வீர மரணம் அடைந்தான் ராஜாதேசிங்கு.   
   
அதோ தூரத்தில் தெரிவது இழுவை பாலம். எதிரிகள் உள் நுழையாதவாறு இதை இழுத்து கொள்ளவும் முடியும்.  நாம இப்ப இந்த இழுவை பாலத்தை தாண்டிதான் மலை உச்சிக்கு போகணும். ..சரி இனி நாம தேசிங்குவின் கதையின் இறுதி பகுதியை பார்க்கலாம் 

தேசிங்கு இறந்தபோது அவனுக்கு பதினெட்டே வயசு. வெறும் பத்து மாதங்கள் தான் ஆட்சி பொறுப்பில் இருந்தான்.  தேசிங்கு இறந்த பின், அவன் உடலை செஞ்சிக்கு கொண்டு வந்து எரியூட்டினானாம் நவாப். அதே நெருப்பில் விழுந்து உடன்கட்டை ஏறி இறந்துப்போனாள் ராஜபுத்திர இளம் ராணி ராணிபாய். செஞ்சி மக்கள் நவாபின் மேல் கடுங்கோபம் கொண்டனர். செஞ்சி மக்களை சமாதானப்படுத்த ஆற்காடு பக்கத்தில் உள்ள ஊருக்கு ராணிபேட்டை என்று  பெயர் வைத்தார். தேசிங்கு வீரமரணம் அடைந்த நீலம்பூண்டி என்னும் கடலியில் ராஜாதேசிங்குவும் அவன் மனைவி ராணி பாயும் குதிரையில் இருப்பது போல நினைவு சின்னம் எழுப்பினார் ஆற்காடு நவாப்.  அந்த இடம் இப்பொழுது வெறும் சமாதி போல் காட்சியளிப்பதாக சொல்கிறார்கள். வாய்ப்புக் கிடைப்பின் பிறிதொரு சமயம் சென்று பார்க்கலாம்.

இப்படி தேசிங்குவின் கதை முடிந்தது.  இன்னும் இந்தக்கதைகள் நாட்டுப்புறப்பாடலாக செவிவழி கதையாக இன்னும் பாடப்பட்டு வருகின்றன. நாம மலையில் இருந்து இறங்கி வரும்போது அடுத்த பதிவில் தேசிங்கு ராஜன் எரியூட்ட பட்டு, கூடவே  ராணிபாய்  உடன்கட்டை ஏறி தீக்குளித்த இடம் இதெல்லாம் பார்க்கலாம்.. ஒரு வழியாக தேசிங்குவினுடைய சகாப்தம் செஞ்சியில் முடிந்தது.  அதன் பிறகு ஆங்கிலேயர் ஆதிக்கம் தொடங்கியது ..அந்த வரலாற்று நிகழ்வுகளை அடுத்தவாரம் பதிவில் பார்க்கலாம் .. ..