Friday, September 28, 2012

கால ஓட்டத்தில் தொலைத்த பொக்கிஷங்கள்- நண்டூறுது..., நரியூறுது

அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில்...,

ஏன் கவிதாம்மா! பாப்பா  அழுதுக்கிட்டே இருக்கு?!

தெரியலை வாட்ச்மேன்,

பசிக்குதோ?!

இல்லையே இப்போதான் செரிலேக் ஊட்டினேன்.

ஒருவேளை எறும்பு கடிச்சிருக்கா? இல்லை வயத்து வலியான்னு பாருங்கம்மா.

எல்லாம் செக் பண்ணி பார்த்துட்டேன். அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆனா அவளை சமாதான படுத்தவே முடியலை வாட்ச்மேன்.

கவிதாம்மா! பாப்பாவை கொண்டாங்க. நான் ஒரு விளையாட்டு விளையாடுறேன் அழுகையை நிப்பாட்டுதான்னு பார்க்கலாம்...,

என்ன விளையாட்டு வாட்ச்மேன்?

கொஞ்சம் நினைவு தெரிய ஆரம்பிச்ச உடனே பாப்பாக்களுக்கு விளையாட்டு காட்ட..., பெத்தவங்களும், தாத்தா பாட்டிகளும் ”நண்டூறுது, நரியூறுது..,”ன்ற விளையாட்டை விளையாடுவாங்கம்மா. பாப்பாவும், கோவம், பசி, வலி மறந்து சிரிக்க ஆரம்பிக்கும.

                                          
முதல்ல  பாப்பாவோட  கைவிரல் ஒண்ணொண்ணையும்  தொட்டு..., இது  சோறு, இது பருப்பு, இது நெய், இது குழம்புன்னு  10 விரலுக்கும் 10 விதமான சாப்பாட்டு பேரை சொல்லனும்....,இது பாப்பாவோட  தொடு-உணர்வை வலிமை பெறச் செய்யும். 

அப்புறமா, பாப்பாவோட  கையை லேசா விரிச்சுப் பிடிச்சுக்கிட்டு நம்ம முழங்க மூட்டால தேச்சிக்கிட்டே....,பப்பு கடை..., பப்பு கடைன்னு பாடனும்..., இது மாதிரி செய்யும்போது மூளைக்கு ரத்தம் கொண்டு போற நரம்பு தூண்டப்படுது. அதனால, மனசுக்கு மகிழ்ச்சியும் குடுக்குமாம்....,

                                             

உள்ளைங்கையிலிருந்து கொஞ்சமா எதையோ எடுக்குற மாதிரி எடுத்து , பாப்பாக்கு ஒரு வாய், அப்பாவுக்கு ஒரு வாய், அம்மாவுஒரு வாய், பாட்டிக்கு ஒரு வாய்,தாத்தாவுக்கு ஒரு வாய், பாப்பாவுக்கு ஒரு வாய், அண்ணாக்கு ஒரு வாய்ன்னு பாடிக்கிட்டே ஊடுற மாதிரி நடிப்பாங்க. இதுப்போல செய்றது நம்மை அறியாமலே பாப்பாக்கு ”பகிர்ந்துண்ணல்” பத்தி சொல்லி தரோம்.


அப்புறம் உள்ளங்கயை தடவி, கழுவி கழுவி நாய்க்கு ஊத்த்து..., கழுவி கழுவி பூனைக்கு ஊத்து, கழுவி கழுவி காக்காக்கு ஊத்துன்னு சொல்லனும். இதனால, பாப்பாக்கு ஐந்தறிவு ஜீவன் களுக்கும் பசியாத்தனும்ன்னு சொல்லி குடுக்குறோம்.

அப்புறமா, பாப்பா கையை நீட்டி பிடிச்சுக்கிட்டு.., நம்ம ஆள்க்காட்டி விரலாலயும், நடு விரலாலயும் லேசாக நடத்திக்  நண்டூருது..., நரியூறுதுன்னு பாடிக்கிட்டே கூசுமாறு செய்யனும். அப்பவும் பாப்பாக்கு  கூச்சம் வரலைன்னா  கைகளுக்குக் கீழ அக்குளை தொட்டு  கூசுமாறு செய்யனும். அப்போ பாப்பா தன் வலி, பசி, கோவம் மறந்து சிரிக்கும். ஒரு முறை பாப்பாக்கு செஞ்சு பாருக்க சிரிக்குதான்னு பார்க்கலாம்.


நீங்க சொன்னது சரிதான் வாட்ச்மேன். பாப்பா சிரிக்குது வாட்ச்மேன்.

இதுப்போல பாப்பாக்களை சிரிக்க வைக்க நிறைய விளையாட்டுக்கள் இருக்கு.  எங்க வூட்டம்மாவை கூட்டி வந்து உனக்கு சொல்லி தர சொல்றேன் கவிதாம்மா. நீ வேலைக்கு போறதால உனக்கெங்கே தெரிய போகுது  கவிதாம்மா!


பால்ய காலத்துல நம்ம பக்கத்துல உக்காந்து, அம்மாவோ இல்ல பாட்டியோ சாப்பாடு ஊட்டும்போது கூடவே சாப்பிட்டு,  கதை கேட்டு, பக்கத்துல  படுத்து தூங்கிய நிலா, நாம  வளரும்போது, கொஞ்சம், கொஞ்சம் நகர ஆரம்பிச்சு  த்த்த்த்தூரமா விலகி வானத்துல போய் எட்டா உயரத்துல உக்காந்துக்கும்.

அதுப்போல சின்ன புள்ளைல நாம ரசிச்ச பல அற்புத விஷயங்களை கால ஓட்டத்தில் நாம தொலைச்சுட்டோம்ம்மா. நாம தொலைச்சதுமில்லாம, அந்த பொக்கிஷங்கள் நம்ம குழந்தைகளுக்கு கிடைக்காத மாதிரியும் பண்ணிட்டோம் கவிதாம்மா. நீயாவது நம்ம பாப்பாக்கு அதெல்லாம் குடு தாயி.
சரிங்க வாட்ச்மேன் தாத்தா!Thursday, September 27, 2012

உறங்காமலே காத்திருக்கிறேன்....,


என் கனவே! 
நீ என்பதால்தான் 
கலைந்துபோகும் 
உறக்கத்தை வெறுக்கிறேன்...,

நான் உன் விழிக்கு
இமையாக மட்டும் அல்ல...,
உறக்கத்திலும் கூட
உன்னைக் காக்கும்
விழியாவேன்...,

நீ, 
என்னுடன்  வாழ்ந்ததிற்கான 
ஆதாரங்களை உன்னுள்
 நான் காணவும்...

உன்னுடன், 
 நான் வாழ்ந்ததிற்கான??!!
 ஆதாரங்களை
என்னுள் நீ உணரவும்...

நீ வேண்டும்!
விரைந்து வா...
என் உயிரே! உறங்காமலே
உனக்காக காத்திருகிறேன்...
 

Tuesday, September 25, 2012

ஒரு கடிதம் அனுப்பினேன்...,

                                               

அன்புள்ள அக்கா தூயாவிற்கு,
      
இனியா எழுதி கொள்(ல்)வது. இங்க நான், அப்பா,அம்மா, தம்பி, பாட்டி, தாத்தா, என் ஃப்ரெண்ட்ஸ்லாம் கூட நல்லா இருக்காங்க. நீ  எப்படி இருக்கே? என் பர்த்டேக்கு நீ அனுப்பிய கிஃப்டும், லெட்டரும் கிடைச்சது.தேங்ஸ்டி

உன்னை அக்கான்னு சொல்றது இதான் ஃபர்ஸ்ட் டைமுன்னு நினைக்குறேன். நான், குட்டி பாப்பாவா இருந்ததிலிருந்தே நீ எங்கூடவே இருக்குறதாலயோ என்னவோ! எப்போ உன் மேல் பாசம் வந்துச்சுன்னு சொல்ல தெரியலை உன்னை போல...,

ஆனா, எதனால் உன்னை பிடிச்சிருக்கலாம்ன்னு வேணும்ன்னா சொல்றேன். உனக்கு ஞாபகமிருக்கோ இல்லையோ?ன்னு தெரியலை! எல்.கே.ஜி ல சேர்ந்த ஃபர்ஸ்ட் டே. அம்மாவும், அப்பாவும் என்னை கிளாசுல விட்டுட்டு போய்ட்டாங்க. நான் மரத்தடியில உக்காந்திருக்கும்போது, யார் நீ? ஏன் இங்க உக்காந்திருக்கேன்னு டீச்சர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, முட்டிக்கிட்டு வந்த கண்ணீர் கீழ சிந்துறதுக்கு முன்னாடி...,

இவ என் சிஸ்டர் டீச்சர், இன்னிக்குதான் ஸ்கூல்ல சேர்ந்திருக்கா. இவளை கூட்டி போக..., அம்மா இன்னும் வரலை போல.., நான் என்னோடு கூட்டி போறேன்னு, பர்மிஷன் வாங்கி..., உன்னோடு உன் கிளாசுல உக்கார வெச்சுக்கிட்டே. என்னை தாங்குறதுக்கு பெத்தவங்க மட்டுமில்லை. அக்கா நீயுமிருக்கேன்னு அன்னிக்கு உணர்ந்தேனே..., அப்ப இருக்குமா உன் மீதான என் பாசம் தோன்றியது? அன்றிலிருந்து ஸ்கூல்ல எதாவது ஒரு பிராப்ளம்ன்னா உன்னைத்தான் தேடி வருவேன். 

                                    

ஜீன்ஸ் படம் வந்த போதுதான் நான் பொறந்தேனாம். அதனால, அம்மா, உனக்கும் எனக்கும் ஒரே மாதிரி டிரெஸ், நகைங்க வாங்கி போட்டு அழகு பார்ப்பாங்க. நீ உன்னோட பொருட்களை பத்திரமா வச்சுக்குவே. ஆனா, நான் என் பொருட்களை ஸ்பாயில் பண்ணிட்டு, அம்மா கேள்விக்கு பதில் சொல்ல திணறும்போது இதோ இருக்கும்மான்னு உன் பொருட்களை கொண்டு வந்து குடுத்து என்னை காப்பாத்துவியே அப்பவா?!

ஸ்கூல் ஹோம் வொர்க் நிறைய இருக்கும்போதும், தாத்தா என் கையெழுத்து அழகாகனும்ன்னும், மனப்பாடம் செய்யனும்ன்னு  தமிழ் எழுத்துக்களையும், வாய்ப்பாடுகளையும் எழுத சொல்லும்போது, எனக்காக நைட் கண் முழிச்சு என் ஸ்கூல் ஹோம் வொர்க் முடிச்சு தாருவியே அப்பவா?!

சமமாய் பங்கிட்டு குடுக்கும் ரவா லட்டை பாட்டிக்கு தெரியாம, எனக்கு பிடிக்கும்ன்னு எனக்காக மறைச்சு வச்சு எடுத்து வந்து தருவியே அப்போவா?

வண்டி ஓட்ட பழகுறேன்னு ஸ்கூட்டியை கொண்டு போய் கீழ தள்ளி, ஹெட்லைட்டை உடைச்சு சத்தமில்லாம கொண்டு வந்து நிறுத்தியதை பார்த்து.., அப்பா கோவப்பட நாந்தான்பா தள்ளிட்டேன்னு பழியை நீ போட்டுக்கிட்டு அடி வாங்குனியே அப்பவா?

                                       

நம்மளை போலவே உள்ளுக்குள்ள நிறைய பாசம் இருந்தாலும்..., வீண் வம்புக்கிழுத்து அடிக்க வரும் அப்புக்கிட்ட இருந்து என்னை காப்பாத்தி சண்டை போட்டு நான் வாங்க வேண்டிய அடியை நீ வாங்கிக்குவியே அப்பவா?

எவ்வளவு யோசிச்சும் உன்மேல் நான் வெச்சிருக்குற பாசம் எப்போ வந்துச்சுன்னு தெரியலியே அக்கா.பல்பம் முதல் ஃபாரீன் சாக்லேட் வரை நீ எனக்கு விட்டு குடுத்திருக்கே. ஆனா, அம்மாவோட  பாசம் முதற்கொண்டு எல்லாத்துலயும்  உனக்கான பங்கை விட்டு குடுத்ததில்லை.

அது தப்புன்னு இப்போ உணர்றேன். ஐ மிஸ் யூ டி.

எந்த ஜென்மத்திலயும் என் இம்சைகளை தாங்க நீயே அக்காவா பொறக்கனும்??!! உன்னைத் தவிர என் இம்சைகளை யார் பொறுமையா தாங்குவாங்க சொல்லு பார்க்கலாம். எல்லாரும் தூயா போல அடக்கமா இரு, பொறுப்பா நடந்துக்க, உன் திங்க்ஸ்லாம் ஸ்பாயில் பண்ணாதன்னு உன்னை சொல்லி என்னை கண்டிக்கும்போது எனக்கு உன் மேல கோவம் வரும். என் பேரை இனி ரிப்பேர் ஆக்காத. 

அப்புறம், உனக்கு சாப்பாடு போதும்ன்னா அம்மாக்கிட்டயும், பாட்டிக்கிட்டயும் சொல்லிடு. அவங்க போடுறதை பிளேட்ல வாங்கிக்கிட்டு அவங்க கவனிக்காத போது என் தட்டுல போட்டு என்னை சாப்பிட சொல்லாத. முடியலைடி ப்ளீஸ்.

எனக்கு ஹோம் வொர்க் செய்யுற நேரம் வந்துடுச்சு. பை, பை டி சாரி அக்கா.

அன்பு தங்கை
இனியா,

அக்காவோட லெட்டரை படிக்க இங்க போங்க.

Monday, September 24, 2012

பதிவர் சந்திப்புக்கு போக டைம் ஆச்சு..,

 (ராஜி, பிளக்கை படிக்குறதுக்கு பதிலா சந்நியாசம் வாங்கிட்டு போகலாம்..,)

(நல்லது சொன்னா, எவன் கேட்குறான்??!)

( எத்தனை பெரியார் வந்தாலும் நம்மாளுங்களை திருத்த முடியாது...,)

பதிவர் சந்திப்புக்கு போக டைம் ஆச்சு.., இன்னும் தலை ஈரம் காயலியே!!??

( நொந்து நூடுல்ஸா போய் இருப்பான் போல...,)


( பணத்தை கொண்டு வானத்தையே வில்லா வளைக்கலாம்ன்னு கேள்வி பட்டிருக்கேன். இங்க பணமே வில்லாய் வளைஞ்சு கிடக்குதே??!!)

 (காலாண்டு பரிட்சை முடிஞ்சு போச்சே..., ஐ ஜாலி! ஐ ஜாலி!)

(அழகான  பொண்ணுன்னா ”படம்”கூட ஜொள் வடிக்கும் போல...,)

(உறங்கும் குழந்தை கடவுளை பார்த்து ரசிப்பதா? இல்லை, குழந்தையை பிச்சையெடுக்க வைத்த கடவுளை கண்டு கோவப்படுவதா??!!)

 
 (ஆடி பாரு மங்காத்தா! ரம்மி சேர்ந்தா, எல்லாருக்கும்  இன்னிக்கு ட்ரீட்தான்...)
(ஸ்ஸ்ஸ் அப்ப்ப்ப்ப்பா..., எவ்வளவு குடிச்சும் வெயில்ல தாகமே அடங்கலை)

( மரணத்தையும் வென்ற காதல்ன்றது இதானா??!!)


( மயில் இங்க ஆடுது.., மான் எங்கே?? “மானாட, மயிலாட” நிகழ்ச்சிக்கு போய் இருக்குமோ??!!)Tuesday, September 18, 2012

அஷ்டாவதானி...,


மானத்தை மறைக்கும் உடையாய் ,
மகளுக்கு தாவணியாய்,
அரிசி உலர்த்தியாய்,

குளிருக்கு போர்வையாய்..,
தலையணை உறையாய்...,
அடுப்படியில் கைப்பிடித் துணியாய்,
விளக்குத் திரியாய்,

இப்படி...,
அவளைப் போலவே??!
 பலரூபமெடுக்கும்,
                                                     அம்மா வாங்கித் தந்த "புடவை" 

Sunday, September 16, 2012

மீண்டும் ஒரு மறு ஒளிபரப்பு - பர்த் டே ஸ்பெஷல்

ஒரு முறை தான் நிகழ்ந்தது என்றாலும்,ஓராயிரம் முறை மனதிற்குள் ஒளிபரப்பி அதே சிலிர்ப்பை.. அதே சுகத்தை,அனுபவித்திருக்கிறேன் பலமுறை.... இதோ ... மீண்டும் ஒரு மறு ஒளிபரப்பு....,

                                             

                                                 
தூங்கும் முன் கதை கேட்கும் பழக்கம் இனியாக்கு உண்டு...

அம்மா நான் பொறந்த கதையை சொல்லும்மா.

பன்னீர் ரோஜா கலர், கருப்பு கோலிக்குண்டு கண்ணு,தந்தத்தால செஞ்ச மாதிரி கைக்கால், கிண்கிணி நாதம் போல உன் அழுகை.

அம்மா நான் அழுதேனாம்மா? எப்போ அழுகை நிப்பாட்டினேன்?

அம்மா மூஞ்சியப் பார்த்தே. எனக்காக என் அம்மா நீ இருக்க நான் ஏன் அழுகனும்னு நீ அழுகையை நிப்பாட்டிட்டேம்மா.

போம்மா, அப்போ நான் குட்டி பாப்பாதானே எனக்குதான் அப்போ ஒண்ணும் தெரியாதே. நீ குளோசப்ல உன் மூஞ்சியக் காட்டி இருப்பே. நான் பயந்துப் போய் அழுகையை நிப்பாட்டிட்டேன்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் டமால்

 
    


இனியாவை எல்.கே.ஜி ல சேர்த்த இரண்டாம் நாள்:

ஸ்கூல் விட்டு ஓடிவந்து, ஒரு நோட்டைக் காட்டி, இது என்னன்னு கேட்டா?
அவள் நீட்டிய பக்கம் பார்த்த போது..,நெடுக்குவாக்குல சின்ன சின்ன கோடுகளை நெருக்கமா வரைந்திருந்தா. நான் அதை மழைன்னு நினைச்சு..,

என்னம்மா! மழை படம் வரைஞ்சிருக்கியா?
ஐயோ! அம்மா! உனக்கு ஒண்ணுமே தெரியலை, இது மழை இல்லம்மா, ONE.
எங்கே சொல்லு பார்க்கலாம்   O,   N,  E  " ONE"

அவ்வ்வ்வ்வ்வ்வ்


குட்டி தேவதைக்கு ஒரு கவிதை:

    உயிர் வலி கண்ட அந்த
    பத்து மணி நேரப் போராட்டம்
    நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ
    கை வைத்து அழுத்தியது போன்ற ஒரு வேதனை

    செத்துவிடலாம் என்று தோன்றிய
    அவ நம்பிக்கையின் நிழலுக்கு
    உன் முகம் பார்க்கப் போகும் துடிப்பு ஒன்றே
    ஒளிக் கீற்று..

    உன் அழுகை சத்தம் கேட்ட முதல் நொடி
    பட்ட துன்பமெல்லாம் பட்டென பறந்துப் போக...
    மகளென்னும் தேவதையாய் என் எதிரில் நீ....
    என் பெண்மையை நான் உணர்ந்த இரண்டாவது சந்தர்ப்பம்..

    மன்னித்தலையும்,விட்டுக் கொடுத்தலையும்
    எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசான் நீ..
    எனக்குள் புதைந்துப் போன என் குழந்தைத்தனத்தை
    மீட்டெடுத்த புதையல் நீ...
    என் வாழ்வின் சூர்யோதயம் நீ..
    மனித நேயமும்,உண்மையும்,நெஞ்சுறுதியும் கொண்டு
    வாழ்வின் எல்லா உயரங்களுக்கும் நீ செல்ல
    நீ ஏறும் படிக்கட்டாய்
    நானிருப்பேன்...,
    வாழ்க நீ பல்லாண்டு...


  Let the God decorate each
golden ray of the sun reaching you
with wishes of success, happiness and prosperity 4 you
wish you a super duper
Happy birthday My Baby..,

                                               

இங்கிட்டு வந்தவங்கலாம் சண்டை போடாம,  கேக் எடுத்து  சாப்பிட்டுக்கிட்டே.., இனியாவை வாழ்த்திட்டு.., தூயா தன் தங்கச்சி இனியாக்கு எழுதிய லெட்டரை படிக்க இங்க போங்க..

Friday, September 14, 2012

நினைத்தாலே இனிக்கும்...., 40வது திருமண நாள்

                                                  
 40 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம்,  எங்க பூர்வீக கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ.  ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.

அப்பா, நான்  இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.

ஏண்டா?

அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?

டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன். 

அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன். 

அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.

தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!

ஆனா, எனக்கு  நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.

எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!

நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!

 கடந்த வருடம் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன்  போராடி, அப்பாவை நல்லபடியாய்   தேற்றி நடக்க வைத்து திருமப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா.

பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா.  விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா...,

எத்தனை ஜென்மம எடுத்தாலும் உங்களுக்கே மகளாய் பிறக்கும் வரம் தர வேண்டுமென இந்த இனிய நாளில் வணங்குகிறேன்.
                       
                                                     

மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து...,
முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க...,
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி...,,
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து...,
 
அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி...,
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி...,
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி...,
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி...,

வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து....,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து...,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்??!!
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி...,

வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....

இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும்
வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்!!!!!

இதுபோலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க...,
வாழ்த்த வேண்டுமென...,

அகம் மகிழ்ந்து அன்பாலே
உண்மையான உள்ளத்தாலே..,
வாழ்க நீவிர் பல்லாண்டு என
வாழ்த்த வாருங்கள் உறவுகளே!!!!!!

Thursday, September 13, 2012

அத்திரி பாச்சா கொழுக்கட்டை- பாட்டி சொன்ன கதை


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர். வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக இயலவில்லை.

பின்னர் ஒருமுறை அவன் வியாபாரம் செய்ய சென்ற ஊரிலிருந்து மிக பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததால் மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போயிருந்தான்.வெகுநாள் கழித்து விருந்துக்கு வந்த மருமகனை மாமியாரும் நன்கு உபசரித்தாள்.வேளைக்கு ஒரு பலகாரம் செய்து அசத்தினாள்.

அதில் மருமகனுக்கு மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டையே மிகவும் பிடித்தமானதாக இருந்தது.மேலும் மேலும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே மனனம் செய்து உச்சரித்தபடியே நடந்தான்.

வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்தது.அதைத் தாண்டிச் செல்லும் நோக்கில் குதித்தவன் சட்டென்று 'அத்திரி பாச்சா' என்றான்.

மிகப் பிரயத்தனப் பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்பவர்கள் இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது 'அத்திரி பாச்சா'எனக் கூற பிறகு கொழுக்கட்டைப் பேரை மறந்து அத்திரி பாச்சா எனக் கூறிக் கொண்டே வீட்டுக்குச் சென்றான்.

மனைவியிடம் மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்துக் கூறியவன் எனக்கு அதே போல அத்திரி பாச்சா செய்து கொடு என்றான்.மனைவி குழம்பிப் போனாள்.இதென்ன புதுப் பேராக உள்ளது.இப்படியொரு பலகாரம் எனக்குத் தெரியாதே என்றாள்.

கணவன் திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல மனைவி தெரியாது என்றே கூற கோபமான அவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய கன்னம் வீங்கிப் போனது.

இதைப் பார்த்த அவன் அம்மா அடப்பாவி இப்படி அடித்து கன்னம் கொழுக்கட்டை போல் வீங்கி விட்டதே எனஅவன் சந்தோஷத்தில் குதித்தபடி அதேதான்....அந்தப் பேர்தான் கொழுக்கட்டை ...கொழுக்கட்டை என்று குதித்தான்.

இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான் பேரை மறந்து அத்திரி பாச்சா என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறையச் செய்து கொடுத்தாள்...

குட்டீஸ் உங்களுக்கும் [அத்திரி பாச்சா] கொழுக்கட்டை பிடிக்கும் தானே?


Tuesday, September 11, 2012

காதலை கற்க மறந்தவனே.....,

நேசிக்க கற்றுகொடுத்தாய்...,
உன்னை மட்டும் நேசிக்க!!??

 காதலிக்க கற்றுக்கொடுத்தாய்...,
என்னை விட உன்னை அதிகமாக காதலிக்க!!??

 மறக்க கற்றுக்கொடுத்தாய்.....,
உன்னை தவிர மற்ற அனைத்தையும் மறக்க!!??

ஆனால்,
கற்றுகொடுத்த அனைத்தையும்...  கற்க
நீ மறந்துவிட்டாயே?!

Monday, September 10, 2012

திரும்பி பார்க்கிறேன்.., நன்றிகளுடன்- 250வது பதிவு ஸ்பெஷல்


ராஜியின் 250வது பதிவுக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நான் சுஜி, ராஜியோட மனசாட்சி. ராஜியோட புது பி.ஏ. இப்போ அவங்க “பிரபல”பதிவராகிட்டாங்களாம். ரொம்ப பிசியாகிட்டாங்களாம். அதனால என்னை வேலைக்கு சேர்த்திருக்காங்க. அவங்க சொல்ல சொல்ல நான் டைப் பண்ணி, பதிவா போடுவேன்.

பிரபலம் ஆகிட்டாலே பேட்டி குடுக்குனும், அப்போதான் பிரபலம்ன்னு ஒத்துக்குவாங்கன்னு ராஜி ஒரே அடம். அதனால, ராஜியோட 250வது பதிவுக்காக ராஜிக்கிட்ட  ஒரு சின்ன  பேட்டி. பேட்டி எடுக்க போறது சுஜியாக நானே, பின்ன இவளை பேட்டி எடுக்க பிபிசில இருந்தா வருவாங்க.

ஓக்கே ரெடி, ஸ்டார்ட்....,

ஏய் சுஜி! மேக்கப்லாம் சரியா இருக்கா? புடவை எனக்கு மேட்சா ஆகுதா? அப்புறம் பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளையடிச்ச மாதிரி, முகத்துல  பவுடர் இருக்க போகுது.

லூசு! லூசு!  இந்த  பேட்டி  உன் பிளாக்ல எழுத்தால மட்டும்தான் வரப்போகுது. என்னமோ சன் டிவில வர மாதிரி மேக்கப், புடவைன்னு அலப்பறை குடுக்குறியே?!

நீதான்டி லூசு மேக்கப், நகை, புடவை இல்லாம  பேட்டியா?! டிவில வராட்டி என்ன? நீ  டைப் பண்ணும்போது நடுவுல, நடுவுல கம்மல் நல்லா இருந்துச்சு, சேலை சூப்பர்ன்னு போட்டுக்கோ.

சனியனே! உன்னோட பெரிய ரோதனையா போச்சு. கேள்வி கேட்குறேன். பதில் சொல்லித் தொலை.

ராஜி! நீ ஏன் இந்த ”பிளாக்கை” ஆரம்பிச்சே?


குட் கொஸ்டீன்,  இது மாதிரி அறிவுபூர்வமா கேள்வி கேட்பேன்னுதான் நான் உன்னை பி.ஏ வா செலக்ட் செஞ்சேன். ஹி..ஹி..ஹி.

நான் இந்த ”பிளாக்கை” ஏன் ஆரம்பிச்சேன்னா அது என்னோட சின்ன வயசு ஆசை.

ஏய் நிறுத்து, எத்தனை பேரு இப்படி கெளம்பி இருக்கீங்க. சின்ன வயசுல குச்சி முட்டாயிக்கும், குருவி ரொட்டிக்கும் ஆசபட்டேன்னு சொல்லு. அத வுட்டுட்டு பிளாக்குக்கு ஆசபட்டேன், பில்கேட்ஸ் ஆகனும்ன்னு ஆசபட்டேன்னு கலர் கலரா ரீல் வுடாதே.
உங்க அப்பா கம்ப்யூட்டர் கிளாசுல சேத்து விட்ட அன்னிக்கு. சார், இந்த கீபோர்டுல ஏ,பி,சி,டி லாம் வரிசையா இல்லாம அங்கங்க இருக்கு. எனக்கு வேற கீபோர்டு தாங்கன்னு சொல்லி, சாரையே ”ஙே”ன்னு முழி பிதுங்க வெச்சதை நீ மறந்திருந்தாலும் நான் இன்னும் மறக்கலடி.

இதுக்குதான் நம்மளை பத்தி நல்லா தெரிஞ்சவங்களை வேலைக்கு சேர்த்துக்கூடாதுன்னு சொல்றது. ம்ம் அடுத்த கேள்வியை  கேளு. 

இந்த பிளாக் ஆரம்பிச்சதன் நோக்கம் என்ன ராஜி?

ஒரு சிந்தனை சிற்பியோட சிந்தனைகளைலாம்  ஒரு சின்ன மூளைக்குள்ள அடைச்சி வச்சு என்னோடவே மக்கி போகாம, மத்தவங்களுக்கெல்லாம் யூஸ் ஆகட்டுமேன்னுதான்.

இன்னாது சிந்தனை சிற்பியா?! யாரு? எங்க? எங்க?

ஏய் ரொம்ப  ஓட்டாதடி, நான் எழுதறதையும் சாரி நான் எழுதுறதை படிக்க 183 ஃபாலோயர்ஸும் அதில்லாம சில பேரும் வந்து போறாங்க  தெரியுமா உனக்கு?

ம் ம்  அவங்கலாம் வழி தவறி வந்து மாட்டிக்கிட்டவங்களா இருப்பாங்க. ஆமா, ஆரம்பிச்சி ஒரு அஞ்சாறு மாசம், யாருமே படிக்காம காத்து வாங்கிச்சாமே?!

                                            

அடி நாயே! நான் எழுதுறது நல்லா இல்லாமயா 250வது  போஸ்ட்  வரை வந்திருக்கேன்.  ஒரு பிளாக்  நடத்தறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?. முதல்ல 4 போஸ்ட் தேத்தி வச்சுக்கனும். அப்புறம் அதுக்கு பொருத்தமான தலைப்பு வைக்கனும். சரியான நேரம் பார்த்து போஸ்ட் பண்ணனும். திரட்டிகளில் இணைக்கனும் அப்புறம் நிறைய பிளாக் போய் படிக்குறமோ இல்லையோ சூப்பர் சகோ. அருமை அக்கான்னு கமெண்ட் போடனும். 

நாயே! நாயே! நான் கேட்டதுக்கு  பதில் சொல்லாம என்னென்னமோ பினாத்துறே. நான் கேட்டதுக்கு மட்டும் பதிலை சொல்லுடி முதல்ல. 

என் ”பிளாக்” அனாதையா கதறுதை பார்த்து அறுவடைங்குற பிளாக் வெச்சிருக்குற ஆதிரைங்கறவங்கதான் முதல்ல கமெண்ட் போட்டு என் பிளாக்க்கு வாழ்வு குடுத்தாங்க. ரொம்ப நாளைக்கு அவங்க மட்டுமே வந்திருந்தாங்க. அப்புறம், தம்பி ”சிரிப்புபோலீஸ்” ரமேஷ் வந்து கமெண்ட் போட்டு ஃபாலோயரும் ஆனார். அவரை தொடர்ந்து டெரர் கும்மில இருக்குறவங்கலாம்  வந்து ஃபாலோயர் ஆகி கமெண்டும் போட்டாங்க. 

அப்போலிருந்து, கமெண்ட்ஸ்லாம், சூடு வெச்ச ஆட்டோ மீட்டர் போல ஓடி, இன்னிக்கு, ”மின்னல்வரிகள்”கணேஷ் அண்ணா,  ”கவிதைவீதி” சௌந்தர், ”வேடந்தாங்கல்”கருண்,  ”வீடு திரும்பல்” மோகன்குமார்.,  ”மயிலிறகு” மயிலன், “ராஜப்பாட்டை” ராஜா, “தமிழ்வாசி”பிரகாஷ்,“ ”தூறிகையின் தூறல்”மதுமதி, “தீதும் நன்றும் பிறர் தர வாரா “ரமணி ஐயா.”னான் பேச நினைப்பதெல்லாம்”சென்னை பித்தன் ஐயா, ”தென்றல்” சசி, “குட்டி சுவர்க்கம்” ஆமினா, “குறை ஒன்றும் இல்லை” லட்சுமி அம்மா, “திண்டுக்கல் தனபாலன் அண்ணா, “கோவை நேரம்”ஜீவான்னு போய் கிட்டே இருக்கு. அவங்களுக்கெல்லாம் இந்த நேரத்துல நான் நன்றியை தெரிவிச்சுக்குறேன். இன்னும் நிறைய பேரு விடுபட்டு போய் இருக்கு. அவங்கலாமும் மன்னிச்சுக்கோங்க. எல்லார் பேரையும், ஒண்ணு விடாம ஞாபகம் வெச்சு சொல்ல நான் ஒண்ணும் ”அட்ரா சக்க” சிபி சார் இல்ல.

ம் ம் ம் கண்டிப்பா நன்றி சொல்லனும்தான். ஏன்னா, உன் எழுத்தையும் படிக்குறாங்களே அதுக்கு. சிபி சார் போல ஞாபகசக்தி இல்லைன்னு சொல்லிட்டு அவர் பேரை லிஸ்ட்ல விட்டுட்டியே?!

ம் ம்  முதல்லலாம் பதிவு மட்டும்தான் போடுவேன். ஆனா, கொஞ்ச நாள் முன்ன அட்ரா சக்க பிளாக்ல இளம்பதிவர்களுக்கு டிப்ஸ்ன்னு ஒரு போஸ்ட் போட்டிருந்தார். . அதை பார்த்துதான் போஸ்ட் எப்போ போடனும்? திரட்டிகளில் இணைக்குறது எப்படி?ன்னு சில டிப்ஸ் பார்த்து கத்துக்கிட்டேன். இப்பவும் போஸ்ட் போட்டு, திரட்டிகளில் இணைக்கும்போது நிறைய சொதப்புவேன். மெயில் அனுப்பி கரெக்ட் பண்ண சொல்வார்.அதனால் அவருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

ம் ம் ம் உன் பிளாக்கை நீயே டிசைன் பண்ணியா? நல்லா இருக்கே அதான் கேட்டேன். 

ம்ஹூம், முதல்ல ஆதிரைதான் டிசைன் பண்ணி குடுத்தாங்க. அவங்கதான் ஃபீட் ஜிட், ஹிஸ்டாஸ், பிரபல இடுககள்லாம் ஆதிரைதான் பண்ணி குடுத்தாங்க. அவங்க இப்போ வெளிநாட்டுக்கு போய் வேலையிலயும் பிசியாகிட்டதால இப்போ செஞ்சு தரதில்ல. கலைஞ்சு போய் இருந்த ஓட்டு பட்டைலாம் தங்கச்சிக்காக ஒழுங்கா அடுக்கி குடுத்தது மின்னல்வரிகள் கணேஷ் அண்ணா. அவங்களுக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிக்குறேன்.

எவ்ளோ குப்பயா எழுதினாலும், எல்லாரும் நல்லா இருக்குன்னு கமெண்ட் போடுறாங்களே, காசு கீசு குடுத்து கமெண்ட்  போட சொல்றியா ராஜி?!

நீ ரொம்ப டூ மச்சா பேசுறடி. பாவம், நம்ம  புள்ளையாச்சேன்னு அவங்களா பாத்து நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போறாங்கடி . என்மேல அவங்களுக்கெல்லாம் அவ்வளவு அன்பும்மா அன்பு !!!

எதாவது உருப்படியா எழுதி இருப்பேன்னு உன்னையும், உன் எழுத்தையும் நம்பி வந்து மாட்டிக்கும் சாரி, சாரி படிக்கும்  மக்களுக்கு எதாச்சும் சொல்ல விரும்பறியா?

இந்த வலைப்பதிவை படித்த, படிக்கும், படிக்க போகும் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் பல.
 போட்டியே, செண்டிமெண்டால  ஒரே போடு, இந்த ஒரு வார்த்தைதான் இந்த போஸ்ட் போடப்போற  மொக்கைல இருந்து உன்னை காப்பாத்த போகுது. 

                                                 

 டிஸ்கி: இது எனது 250வது பதிவு. என் பிளாக்குக்கு வந்து, இது வரை என்னை ஆதரித்த 183 ஃபாலோயர்சுக்கும், ஒரே ஒரு 50,485 பேருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இனி தொடர்ந்து என் பிளாக்குக்கு வந்து, கமெண்ட் போட்டு, ஃபாலோயர்ஸ் ஆகாதவங்க ஃபாலோயர்ஸ் ஆனா, அடையாறுல ஒரு ஃபிளாட்டும், டொயோட்டா காரும், லலிதா  ஜுவல்லரில பத்து பவுன் நகைலாம் வாங்கி தர வசதியில்லீங்க. பதிலுக்கு நானும் உங்க பிளாக் வந்து கமெண்ட் போட்டு ஓட்டும் போடுவேன்னு  இந்த நேரத்துல சொல்லிக்குறேனுங்க..

Saturday, September 08, 2012

அப்பாடா! ஒரு வழியா பதிவர் சந்திப்பு போஸ்ட் முடிஞ்சு போச்சு...,

                               எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா, நமக்கு கத்திரிக்கா சாம்பார் வெக்குறதுக்கே நாக்கு தள்ளுது...,

 ஒரு வேளை நம்ம ஆளுங்க கான்ராக்ட் எடுத்து படி கட்டியிருப்பாங்களோ?!

  தூய   நட்புக்கு எதுவும் தடையில்ல. பதிவுலகத்தினரை போல...,
  எவ்வளவு அழகு! என்னைப் போல??!!

 என்னா ஒரு புத்திசாலித்தனம்! என்னைப்போல??!!
     தாயை போல பிள்ளை (விளக்கம் டிஸ்கியில)

 நம்ம ” கோவை நேரம் ஜீவா”க்கிட்ட சொல்லி இன்டிரியர் டெக்கரேஷன் பண்ண சொல்லி இருப்பாங்களோ?!

 எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது!

அப்பாடா! ஒரு வழியா பதிவர் சந்திப்பு போஸ்ட் முடிஞ்சு போச்சு.
கொலையா கொன்னுட்டாங்கப்பா. 

டிஸ்கி:  ரேடியோ பொட்டிக்குள்ள இருந்து யாரோ பாடுறாங்கன்னு நான் நினைச்சுக்கிட்டது போலவே, ஏடிஎம் மெஷினுக்குள் உக்காந்து யாராவது பணம் தர்றாங்களான்னு என் சின்ன பொண்ணு இனியா கேட்டுது.

படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து சுட்டதுங்க.