Tuesday, October 31, 2017

பச்சரிசி சோறும்.... நெத்திலி கறுவாட்டு தொக்கும்.... - கிச்சன் கார்னர்

விநாயகர் சதுர்த்தி ஆரம்பிச்சு சரஸ்வதி பூஜை, புரட்டாசி, சஷ்டி விரதம்ன்னு  வாயக்கட்டி போட்டு வச்சதுல நாக்கு செத்து போச்சு. சிக்கன், மட்டன்னு சாப்பிட பிடிக்கல. சரி, மீன்?! இந்த மழைல அது விக்குற இடத்துக்கு போனா... உவ்வே. ஏழேழு ஜென்மத்துக்கும் மீன் சாப்பிட முடியாது. ஐ வீட்டுல கருவாடு இருக்கேன்னு எடுத்து தண்ணில ஊற வெச்சேன்.

சாப்பிட நல்லா இருக்கும். ஆனா, க்ளீன் பண்ணுறதுக்குள் தாவு தீர்ந்துடும். ஆபத்பாந்தவன் மை சன் கைகொடுத்தான். அம்மா நான் க்ளீன் பண்ணவா?!ன்னு.. நைசா அவன்கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைச்சுட்டு, ஃபேஸ்புக்ல உக்காந்துச்சு.  கால் மணி நேரத்துல நல்லா சுத்தமா, தலை, வால், குடல்லாம் எடுத்து, செதில்லாம் தேய்ச்சு கழுவி, எலுமிச்சை சாறு போட்டு கழுவி கெட்ட வாடை இல்லாம கொடுத்தான்...

தேவையான பொருட்கள்...
நெத்திலி கருவாடு...
வெங்காயம்,
தக்காளி,’
மஞ்சப்பொடி,
மிளகாய் தூள்,’
உப்பு...
எண்ணெய்,’
கடுகு,
கறிவேப்பிலை
கொத்தமல்லி...

வெங்காயம், தக்காளிலாம் பொடியா நறுக்கிக்கோங்க... 


என் செல்லம் அப்பு கழுவிக்கொடுத்த கருவாடு...

வாணலில எண்ணெய் ஊத்தி சூடானதும், கடுகு போட்டு பொரிய விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கிக்கனும்...

வெங்காயம் பொன்னிறமா வதங்கினதும் நறுக்கி வச்ச தக்காளிய சேர்த்துக்கவும்...

வெங்காயம், தக்காளி சீக்கிரம் வதங்க உப்பு சேர்த்துக்கோங்க...

தேவையான அளவு மிளகாய் தூள், மஞ்சத்தூள் சேர்த்து கொஞ்சமா தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க. வெங்காயம் தக்காளி வெந்து   தண்ணி முக்கால்வாசி வத்தியதும்,  கழுவி வச்ச கருவாட்டை போட்டு சுருள வதக்கி, நீர்லாம் வத்தினதும் இறக்கி கறிவேப்பிலை, கொ.மல்லி சேர்த்து இறக்கி பரிமாறுங்க. 


சூடான சாதத்துல சேர்த்து சாப்பிட்டா...... யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி...  ருசியா சூப்பரா செத்துபோன நாக்குக்கு உயிர் வரும். என்ன ஒரு மைனஸ் பாயிண்ட்ன்னா அதிகம் வெந்துட்டா குட்டி குட்டி முள்லாம் படுத்தும். அதனால, கருவாடு உடையாம பார்த்துக்கனும். அதிகமா தண்ணி சேர்க்காம, அதிகமா கிண்டாம சமைக்கனும். இட்லி, தோசை, ரசம் சாதம், பழைய சாதத்துக்கு செமயா இருக்கும்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....

நன்றியுடன்,
ராஜி.


Monday, October 30, 2017

சாமியாரா போவது ஒன்னும் கஷ்டமில்ல - ஐஞ்சுவை அவியல்மாமா....  வாட்ஸ் அப்ல ஒரு தகவல் வந்திச்சு பார்த்தீங்களா?!

என்னது?!

ரஷிய இளைஞர் ஒருத்தர் பிச்சை எடுத்த கதை...

ம்ம்ம் இந்தியாக்கு வந்த ரஷிய இளைஞர் பெர்ன் கோவ்ன்னு ஒருத்தர், ஊரைலாம் சுத்திட்டு காஞ்சிபுரத்துக்கு வந்திருக்கார். அங்க தன்கிட்ட இருந்த காசுலாம் செலவழிஞ்ச பின், அங்கிருக்கும் ஏ.டி.எம் பூத்ல போய் பணமெடுக்க போய் இருக்கார். நம்மாளுங்க ஆதார், பான்கார்ட் இணைப்புன்னு பண்ணி வச்சிருக்கும் கூத்துல இவரால பணமெடுக்க முடில. கோவத்துல ஏ.டி.எம் கார்டை உடைச்சு போட்டுட்டு பக்கத்திலிருக்கும் குமரன் கோட்டம் கோவிலில் போய் உக்காந்திருக்கார். அன்று இரவு முழுக்க பசியோடு அங்கயே இருந்திருக்கார்.  காலைல எழுந்து பார்த்தா, பிச்சைக்காரங்க கோவில் வாசல்ல உக்காந்திருக்குறதும், அவங்களுக்கு கோவிலுக்கு வர்றவங்க பைசா போடுறதை பார்த்து, தானும் தன் தொப்பியை கழட்டி, நீட்டிக்கிட்டு உக்காந்து பிச்சை எடுத்திருக்கார். இதை கேள்விப்பட்ட அந்த பகுதி காவல்துறை ஆய்வாளர் துளசி 500ரூபா கொடுத்து சென்னைல இருக்கும் ரஷிய நாட்டு தூதரகத்தை பார்க்க சொல்லி அனுப்பி இருக்காங்க.

அதேதான் மாமா. நானும் சொல்ல வந்தேன்.

ம்ம்ம் இது அக்டோபர் 11தேதி நிகழ்ச்சி. இப்ப வந்து இதை சொல்றேன். அன்னிக்கு இந்த நியூசை பார்த்து நான் அழுதிட்டேன்.

ஏன் அழுதீங்க?!

அவன் படிச்ச படிப்பு, வேலை, சொத்து, நட்பு,  சொந்தம்ன்னு எதுமே அவனுக்கு கைக்கொடுக்கலியே! கையேந்த வச்சிடுச்சேன்னுதான்.  யார் யாருக்கு என்ன கொடுக்கனும்ன்னு கடவுளுக்கு தெரியும்ன்றதுல எனக்கு ரொம்ப நம்பிக்கை. அதனால, பிச்சைக்காரங்களை கண்டா பெருசா மனசு பாதிக்காது, ஆனா, ஒரே ஒரு ஆள் மட்டும் வருசங்கள் பல கடந்தும் என் மனசுல நிக்குது. தாம்பரம் சானிட்டோரியம் பக்கம் ஒரு மாசம் இருந்தேன். அப்ப ஒரு வைராக்கியம். அப்பா அம்மாக்கிட்ட பேசுறதில்ல. அங்கிருக்கும் சப்வேல ஒரு அம்மா பிச்சை எடுத்திட்டிருக்கும். யார்கிட்டயும் கேக்க மாட்டாங்க. யாராவது கொடுத்தா வாங்கிப்பாங்க. அவங்கக்கிட்ட பேசும்போது சொல்லிச்சு, ஊர்ல புருசன்,குழந்தைங்க, வீடு, வாசல்,கழனின்னு இருக்கு... வீட்டுக்கார்கூட சண்டை, நெருப்பு வச்சிக்கிட்டேன். எப்படியோ பாடுபட்டு காப்பாத்திட்டாங்க. அதுக்கப்புறம் எல்லாரும் என்னை ஒருமாதிரி பார்க்க, நான் வந்திட்டேன். இப்பயும் பசங்க வந்து பார்த்திட்டு போவாங்கன்னு சொல்லிச்சு. கிட்டத்தட்ட அந்த நேரத்தில் என் சூழ்நிலையும் அதான்,. எத்தனை சொத்து, வீடு, வாசல் இருந்தபோதும் அடுத்தவங்கக்கிட்ட கையேந்தும் நிலை... இல்லாம கையேந்திடலாம். ஆனா, எல்லாம் இருந்தும் கையேந்தும் நிலை?! அதான் அழுதுட்டேன்..

ம்ம்ம்ம்ம் அத்தனை பட்டிருக்கேன்னு சொல்றீங்களே! பேசாம சாமியாரா போய் இருக்கலாம். நானாவது தப்பிச்சிருப்பேன்.

எல்லாத்தையும் உதறி சாமியாரா போறது ஈசி.  ஆனா, நாம போனப்பொறவு நம்மை நம்பி இருந்தவங்க நிலை?!

அதுலாம் நல்லா இருப்பாங்க. பொறந்த குழந்தையே தாயை பிரிஞ்சு சில இடத்துல உசுர் பொழைக்குது..லூசுப்போல பேசாத. சித்தார்த்தன் புத்தராகி ஒருமுறை தன் மகனை பார்க்க அரண்மனைக்கு வர்றார். அப்ப, அவர் மனைவி புத்தர்கிட்ட கேட்குறாங்க.  சாமியாரா போற மனுசன் என்கிட்ட சொல்லிட்டு போய் இருக்கலாமே! உண்மைய சொல்லிட்டு போய் இருந்தா நான் உங்களை தடுத்திருக்க மாட்டேன். என்கிட்ட உண்மையை சொல்லாததும், என்னை நீங்க நம்பலைன்ற நினைப்புதான் என்னை இத்தனை நாளும் நோகடிக்குதுன்னு சொல்லி அழுகுறாங்க. 
அதுக்கு புத்தர் அவங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டு, நான் பயந்தது உன்னை கண்டில்லை, என்னை நினைத்துதான், உன்னையும், நம் மகனின் முகத்தையும் பார்த்தால் உறுதி குலைஞ்சு போவேன்னுதான் சொல்லாம போய்ட்டேன்னு புத்திசாலித்தனமா பதில் சொல்றார். 
 “ இந்த அரண்மனையை விட்டு போகாம, இங்கேயே தங்கி இருந்தா, ஞானம் பெற்றிருக்க முடியாதா?”ன்னு கேட்டாங்க. “கிடைத்திருக்கும். அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லைதான். ஆனா, இங்கிருந்து ஓடிப் போகும்போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல” என்பதை நான் இப்ப உணர்ந்துக்கிட்டேன்னு சொல்றார். 
புத்தனை போற்றும் நாம் அவர் மனைவி யசோதையை ஒரு பொருட்டா மதிக்குறதில்ல. புத்தர் மனைவியை மட்டுமில்ல, ராகவேந்திரர் மனைவின்னு இந்த பட்டியல் நீளும்.  எந்த கவலையும் இல்லாம துண்டை உதறி தோள்ல போட்டுக்கிட்டு எதுக்கும் கவலைப்படாம பற்றற்றவன்னு சொல்லிட்டு போய்டலாம். ஆனா அதுக்கப்புறம் அவங்க குடும்பம் படும் பாடு?! மகன், சகோதரன், புருசன், அப்பா, மாமா, நண்பன்னு அவங்க வெற்றிடம் கொடுக்கும் தாக்கம் எதாலும் ஈடு செய்யமுடியாது. அதேமாதிரி, ஆண்  சாமியாரா போற மாதிரி பெண்கள் சாமியாரா போகமுடியாது. கேட்டா அதுக்கு நூறு விளக்கம் சொல்வாங்க. சமூகம், ஓடுகாலி அது இதுன்னு தூத்தும்.  புத்தர் அரண்மனை விட்டு செல்லும்போது, எதில் குறை வைத்தோம், அன்பிலேயா?! இல்ல கடமையிலயான்னு மலைச்சு நின்னு தலைய மழிச்சுக்கிட்டு பிள்ளைக்காகவும், ராஜ்ஜியத்துக்காகவும் எந்த பற்றுமில்லாம வாழ்ந்தா. புத்தர் காடு, மேடுன்னு அலைஞ்சு அடைஞ்ச ஞானத்தை யசோதை அவரோட பிரிவில் அடைஞ்சா.   இப்ப சொல்லு சாமியாரா போய்டுறது ஈசியா இல்லியான்னு...

ம்ம்ம்ம் இதை சொன்னா சாமிகுத்தம், சாமி கண்ணை குத்தும்ன்னு சொல்வாங்க. நீங்க ரொம்ப டென்சன் ஆவாதீக.

கொஞ்சம் கூல் பண்ணிக்க இந்த ஜோக்கை பாருங்க...


அப்படியே இந்த ஹெல்த் டிப்ஸ்சும் பாருங்க....


என்னை கூல் பண்ணது போதும்.. இந்த கேள்விக்கு பதில் சொல்லு....  முக்காலி பார்த்திருக்கியா?! 

ம்ம் பார்த்திருக்கேன். கல்யாணம், காதுகுத்து, ஆரத்தி, சந்தனம், குங்குமம், பூக்கள்லாம் வச்சிருப்ப்பாங்க.ம்ம் அதேதான். அதோட மூணு காலும் வெவ்வேறு அளவு வச்சு செஞ்சிருந்தாலும் சாயாது. ஏன்னு சொல்லு பார்க்கலாம்...

அதுவந்து....

ம்ம்ம் நல்லா யோசிச்சு சொல்லு.. ஒன்னும் அவசரமில்ல... நான் கொஞ்சம் வெளில போய் வரேன்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,
ராஜி. 

Sunday, October 29, 2017

பந்தமும், பாசமும் பெண்ணுக்கு விலங்குதானோ?!- பாட்டு கேக்குறோமாம்.

பொதுவாகவே பந்தமும், பாசமும் ஒருத்தருக்கு விலங்குதான், இதுலாம் இருந்தா வளைஞ்சு கொடுக்கனும். இதுலாம் இல்லாம பிராக்டிக்கல் மைண்டா இருந்துடறது பெட்டர். அதிலும் பெண்?! இதுல இருந்து விலகி இருப்பது ரொம்ப நல்லது. ஏன்னா, சேதாரம், இவங்களுக்குதான் சேதாரம் அதிகம். ஆனா, அப்படி இருக்க முடியாதுங்குறதுதான் உண்மை...

அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!
அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!
பந்தமென்பது சிலந்தி வலை... பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி.. இதில் சுற்றம் என்பது மந்தையடி..
பந்தமென்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெருங்கவலை..
சொந்தம் என்பது சந்தையடி... இதில் சுற்றம் என்பது மந்தையடி
அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!
ஃபடாஃபட்...

செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கப்பூரு போகுமா?!
சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?!
கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு... வாழ்க்கை என்ன என்பதை!
கொத்தும்போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை...
 ஃபடாஃபட்

அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!

கோடு போட்டு நிற்க சொன்னான்... சீதை நிற்கவில்லையே!
சீதை அங்கு நின்றிருந்தால்... ராமன் கதை இல்லையே!
கோடு போட்டு நிற்க சொன்னான்... சீதை நிற்கவில்லையே!
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
கோடு, வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி
கொள்ளும்போது கொள்ளு... தாண்டி செல்லும்போது செல்லடி!!
 ஃபடஃபட்
அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!

காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை..
காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை...
பங்குனிக்கு பின்பு என்ன?! ஐயமின்று சித்திரை
பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும்..
 பழமை வெறும் பனித்திரை..
 ஃபடஃபட்

அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!
பந்தம் என்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தயடி... இதில் சுற்றம் என்பது மந்தையடி..
பந்தம் என்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெருங்கவலை..
சொந்தம் என்பது சந்தயடி... இதில் சுற்றம் என்பது மந்தையடி..
அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!

படம்: அவள் ஒரு தொடர்கதை..
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்,
எழுதியவர்: கண்ணதாசன்,
பாடியவர்: எல்.ஆர்.ஈஸ்வரி
நடித்தவர்: சுஜாதா, ஃபடாஃபட் ஜெயலட்சுமி. 
பாடல் லிங்க்: https://www.youtube.com/watch?v=JMoH_zRU0r0

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1476218

நன்றியுடன்,
ராஜி.

Saturday, October 28, 2017

பொண்டாட்டி பேர் சொல்லி கூப்பிடாததுக்கு இதான் காரணமா?!

அதனால, இனி விட்டுட்டு போறவுகளை கெஞ்சாதீங்க... உங்களுக்கும் தன்மானம் உண்டு...
என்ற அயித்தான் இப்படிதான் ஷேவ் செய்வாப்ல. ஆரம்பம்லாம் அசத்தலாதான் இருக்கும். ஆனா, ஃபினிஷிங்க்?! ஆங்கங்க பட்டி பார்க்காத சுவரு மதிரி இருக்கும். 
அம்மான்னா அம்மாதான். என் அம்மாகூட தட்டுல சோத்தை போட்டு வச்சுட்டுதான் திட்டவே ஆரம்பிப்பாங்க.  

இதுலாம் டூ இல்ல ட்வெண்டி மச் ஓவர்

யாரும்மா அது சாந்தி?!  கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்குறேன்.

இந்த தொகுதி இப்ப எப்படி இருக்குன்னு பார்க்கனும்...

கிறுக்கு பய ஊருல கேணப்பயலுக நாட்டாமையாம்...

மீன் போன்ற கண்கள்ன்னு இதை பார்த்துதான் சொன்னாங்களாம்...

எந்த மணின்னு சொல்லி இருக்கலாம். எனக்கு மூணு மணிய தெரியும்!!!

டேய்! யப்பா! இது அந்த ‘நயன்’ இல்ல சாமி....

கொஞ்சம் ஓவராதான் போறாங்களாம்....

பொண்டாட்டி பேரை சொல்லாததுக்கு இதும் காரணமா?! இத்தனை நாள் மரியாதைன்னுல்ல நினைச்சுட்டேன்...

ஐலைனர், மஸ்காராவும் கேக்கும்...

வாங்கிக்கொடுத்துட்டுதான் மறுவேலை...

ஃபோட்டோகிராஃபர் வரும்போது மட்டுமில்ல பசங்க வரும்போதும்கூடதான்...

அழகான வாழ்வியல்....

மைனஸ் ஓட்டு போடும் அந்த நல்லவருக்கு...
இங்க எழுத வரும் அனைத்து பேருக்கும் ஒவ்வொரு நோக்கம்.. சிலர் தங்களுக்கு தெரிந்ததை பகிர... கரந்தை அண்ணா, இளங்கோ அண்ணாலாம் தமிழ் ஆர்வம், புலவர் ஐயாவோட வயதின் தனிமை, கில்லர்ஜி அண்ணா மாதிரியான ஆளுங்க தங்களோட தொப்புள் கொடி உறவின் நெருக்கம் வேண்டி, என்னை மாதிரி ஆளுங்க பொழுதுபோக்கு,  தனிமை, சோகம், ஆத்திரம், ஆதங்கம்ன்னு எத்தனையோ உணர்ச்சிகளின் தாக்கத்தால இங்க எழுதுறாங்க.  எல்லாராலயும் பத்திரிகைல எழுதி பேர் வாங்க முடியாது. அதுக்கு வீட்டு சூழலும் ஒத்துழைக்காது. அதுமாதிரியான ஆட்களுக்கு ஒரு சிறு திருப்தியை இந்த வலைப்பூ கொடுக்குது. 

எல்லாருடைய கருத்தும் ஒத்துபோகாது. கணவன், மனைவியே ஆனாலும், கருத்து வேறுபாடு வருவது சகஜம். அதுமாதிரி கருத்து வேறுபாடு இருந்தா இந்த காரணத்துக்காக மைனஸ் ஓட்டு போடுறேன்னு சொல்லிட்டு போடுங்க. தமிழ்மணம் ஓட்டு வச்சு ஒரு கமரக்கட்டு கூட வாங்கமுடியாதுன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, சரியான திரட்டிகள் இல்லாததால தமிழ்மணத்தை மட்டும்தான் தங்களோட பதிவின் அறிமுகத்துக்காக எல்லாரும் நம்பி இருக்காங்க. அதனால, உங்க மைனஸ் ஓட்டுனால பல பதிவுகள் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது. மைனஸ் ஓட்டு போடுவது உங்க உரிமை. ஆனா அது எதுக்குன்னு சொல்லிட்டு போடும் தைரியம் இருந்தா போடுங்க. இல்லன்னா தயவு செஞ்சு என் பதிவுக்கு வராதீங்க. உங்க ஒருத்தரால, எல்லாரையும் சந்தேகப்படுறதா இருக்கு... 

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
நன்றியுடன்,
ராஜி.

Friday, October 27, 2017

வேலுண்டு.... வினையில்லை...

முருகனை பத்தியும் அவன் குடிக்கொண்டுள்ள பல தலங்களையும், சஷ்டி விரதத்தின் மகிமைகளையும்,  விரதம் கடைப்பிடிக்கும் முறைகளையும், சூர சம்ஹாரம் பத்தியும் போன பதிவுகளில் பார்த்தோம். முருகனை நினைக்கும்போது அவன் கையிலிருக்கும் வேல் நினைவுக்கு வராம போகாது.  முருகன் சிவன் அம்சம்... அவன் கையிலிருக்கும் வேலோ அன்னை பராசக்தியின் அம்சம்.. அவளின் சக்தியை கொண்டு வந்ததாலே அது வெற்றிவேலாய், வீரவேலாய் நின்று பகைவரை அழித்ததோடு பக்தர்களின் துயர் துடைக்கவும் செய்யுது. 
பொதுவா நம்ப பழக்கம் புகழ்பெற்ற கோவிலுக்கோ அல்லது இடத்துக்கோ போனால், அந்த இடத்தை மட்டும் சுத்தி பார்த்துட்டு வந்திடுவோம். ஆனா, அந்த இடத்துக்கு சம்பந்தமான இன்னொரு முக்கியமான இடம் அங்கனயே  பக்கத்துலதான் இருக்கும், ஆனா, போகமாட்டோம். எனக்குக்கூட, தஞ்சை கோவில் விமானம் கட்ட சாரம் அமைச்ச ஊர் சாரப்பள்ளம்?! பக்கத்துல இருக்குன்னு கேள்விப்பட்டு போய் பார்க்கனும்ன்னு ஆசை. ஆனா, என் அப்பா அதான் சாமியை பார்த்தாச்சுல்லன்னு இழுத்துட்டு வந்திடுவார். பொறுமையா எல்லாத்தையும் பார்க்கனும்ன்னு விடமாட்டார். அதேமாதிரி கன்யாகுமரி போனால் கோவில், காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் பாறைன்னு கூட்டி போவார். ஆனா, சன் செட் பாயிண்டுக்கு இதுவரை கூட்டிப்போனதில்ல பாருங்க.. ட்ராக் மாறுது...  அதுமாதிரிதாப்ன். திருச்செந்தூர் போனாலும், கோவில் கடல், வள்ளிக்குகை, சித்தர் சமாதி, நாழிக்கிணறு பார்த்துட்டு வந்திருவோம்.  ஆனா, அங்க இன்னொரு முக்கியமான கோவில் இருக்கு. அதை பார்க்காமயே வந்திருவோம். அந்த இன்னொரு கோவிலைதான் இன்னிக்கு பார்க்கபோறோம். இதும் சஷ்டி பத்தின பதிவுதான்...

கந்தப்புராணத்தின்படி சூரனை வதம் செய்ய முருகன் திருச்செந்தூர் வருவதற்கு முன்பாகவே அன்னை பராசக்தி இங்கு கோவில் கொண்டு தன் மகனுக்காக காத்திருந்தாள். முருகனுக்கு தன் அவதார நோக்கம் தெரியவந்ததும், அசுர வதத்திற்கு தக்க தருணம் வாய்த்ததும், திருச்செந்தூர் வந்து தன் அன்னையிடம் வணங்கி ஆசி பெற வந்தார். 

அன்னையும் முருகனுக்கு ஆசி வழங்கும்பொருட்டு   பார்வதிதேவி, தன் சக்தியை கொண்டு வேல் ஒன்றை உருவாக்கி தன் மகனுக்கு பரிசளித்தாள். இந்த வேலின் துணைக்கொண்டு அசுரர் படைகளை சம்ஹாரம் செய்தார் முருகன். அதுமட்டுமில்லாம, அன்னை சூட்சும வடிவம் கொண்டு தன் மகனுக்கு போரில் பலவாறாய் உதவினாள் என்பது தலப்புராணம்.  வெற்றி தரும் வேலை வழங்கியதால் வேல்+உகந்த+அம்மன் = வேலுகந்தம்மன் என இவளுக்கு பெயர் உண்டானது. கால மாற்றம், அம்மன் பெயரை வெயிலுகந்தம்மனா மாத்திடுச்சு.

அசுரனை அழிக்க உதவிய அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமா, திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்னதாக, இந்த வெயிலுகந்தம்மனுக்கு பத்து நாள் உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுது.  சூரசம்ஹாரம் நடைப்பெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப் பெருமான், சூட்சும உருவில் அம்மன் திருக்கோயிலுக்கு வந்து அன்னைக்கு பூஜைசெய்து அருளாசி பெற்று வேல் வாங்கிச் செல்வதாக ஐதீகம். அதனால, முருகன் தன் அன்னைக்கு பூஜை செய்யும் பொருட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை ஆலய கருவறைக்குள் வைத்து பூட்டி விடுவர்.

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கிருக்கும்  வதனாரம்பத் தீர்த்தத்தமாகும். இந்த தீர்த்தம் 1200 ஆண்டுகளுக்கு முன்பு, வரகுண பாண்டியன் என்னும் மன்னன் புத்திர பாக்கியம் இல்லாதிருந்து .திருச்செந்தூர் வந்து சஷ்டி விரதம் இருந்த பின் மன்னனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.   அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும் உடல் மனித உருவிலும் இருந்தது கண்டு மன்னன் மேலும் மனம் வெறுத்துபோனான்.  கந்தனிடம் தன் குறையை சொல்லி  வேண்டி நின்றான். அவனது கனவில் காட்சிகொடுத்த கந்தப்பெருமான், “அன்னை பார்வதி தேவியால் மட்டுமே போக்க முடியும். எனவே, நீ அன்னையிடம் போய் நில்; அபயம் அளிப்பாள்” என்று சொன்னார். அதன்படி மன்னனும் காடுமலை கடந்து வெயிலுகந்தம்மன் திருத்தலத்தை அடைந்தான். அங்கே அன்னையிடம் தனது மகளின் குறைதீர வேண்டுதல் வைத்தவன், அங்கேயே குடில் அமைத்துத் தங்கிக் கடும் விரதமும் மேற்கொண்டான்.

மன்னனது  வேண்டுதலுக்கிணங்கி வந்த அன்னையவள், “ஆடிச் செவ்வாயில், என்னெதிரே இருக்கும் இந்தக் கடலில் இறங்கித் தீர்த்தமாடினால் உன் குழந்தை சுய உருவம் பெறுவாள்” என்று அசரீரியாய் அருள்வாக்கு தந்தாள். அதுபடியே அன்னையை நெஞ்சில் நிறுத்திக் கையில் குழந்தையுடன் கடலில் இறங்கினான் மன்னன். அதுவரை ராட்சத அலைகளால் ஆர்பரித்துக்கொண்டிருந்த கடல் சாந்தமானது. மன்னன் கடலில் மூன்று முறை மூழ்கி எழுந்தபோது குழந்தையின் முகம் மனித முகமாக மாறியிருந்தது.
குழந்தையின் வதனம் அழகாய் மாறிய இடம்ன்றதால இந்த இடம் ‘வதனாரம்ப தீர்த்தம்’ ன்னு பேர் வந்துச்சு. மகளின் அழகு முகம் பார்த்து ஆனந்தம் கொண்ட பாண்டியன், குழந்தையின் உடம்பில் மஞ்சளும் குங்குமமும் கலந்த நலங்கு மாவு பூசி, அரளி மாலை அணிவித்து அலங்காரம் செய்து அன்னையை தரிசிக்கச் சென்றான். சன்னிதிக்குப் போனதும் அன்னையின் முகம், குதிரை முகமாக மாறி இருந்தது கண்டு திடுக்கிட்டான். அரசன் இதயம் நெகிழ்ந்து பதறி அம்மனிடம் கேட்டான்.

இங்குவந்து அம்மா என்றழைக்கும் எனது குழந்தைகளுக்கு அவர்கள் கேட்பதை என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது. நீ செய்த கர்ம பலன்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை நான் ஏற்றுக் கொண்டேன். உனது கர்ம பலன் தீர்ந்ததும் இதோ எனது இந்த குதிரை முகமும் மாறிவிடும்” என்று கூறினாள். அதன்படியே சிறிது காலம் கடந்த பின் அன்னையின் முகம் மாறியது. அதன்பிறகு வரகுண பாண்டியன் அம்மனுக்குக் கோயில் எழுப்பி நிலங்களை மானியமாக எழுதிவைத்தான்.


இன்றைக்கும் வதனாரம்ப தீர்த்தத்திற்கு அந்த மகத்துவம் இருப்பதாக நம்பப்படுது.  ஆடி செவ்வாய்களில் அதிகாலையில் பெண்கள் வதனாரம்பரத் தீர்த்தத்தில் நீராடி நலங்கு மஞ்சள் அணிந்து செவ்வரளி மாலை அணிந்து அன்னையை வணங்கினால் முகம் அழகு வடிவம் பெறுவதோடு தீர்க்க சுமங்கலிகளாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. 

இன்றைக்கும் திருச்செந்தூரின் வடபுலத்தில் வீற்றிருக்கும் வெயிலுகந்தம்மனுக்கு  ஆவணி, மாசி மாதங்களில் பத்து நாள் திருவிழா களைகட்டுகிறது. அப்போது அன்னை சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருவாள். இரண்டு திருவிழாக்களிலும் பத்தாம் நாள் உற்சவத்தின்போது அன்னைக்குக் கடலில் தீர்த்தவாரி நடக்கும். பிறகு, திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு எதிரே உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி, புதல்வனுக்கு அருளாசி வழங்குகிறாள் அன்னை. வாய்ப்பு கிடைக்கும்போது இந்த கோவிலுக்கும் போய் வரனும்... நான் என்னைய சொன்னேன்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,
ராஜி.

Thursday, October 26, 2017

கல்யாண வைபோகமே! ... தெய்வானை கல்யாண வைபோகமே!


பொதுவா கல்யாணம்ன்னாலே செஞ்சுக்குறவங்களுக்கும், அதை பார்க்குறவங்களுக்கும்  ரொம்ப சந்தோசம்.  ஆனா, நடத்துறவங்களுக்குதான் டென்சன், வருத்தம்லாம். ஒரு கல்யாணத்தை பார்த்தால் புண்ணியமாம். அறுபதாம் கல்யாண வைபோகத்தை பார்த்தா 12 கும்பாபிஷேகம் பார்த்த புண்ணியமாம்.. சதாபிஷேகம்ன்ற நூறாவது திருமணத்தை பார்த்தால் அத்தனை புண்ணிய தீர்த்தத்துலயும் நீராடிய பலனாம். சாதாரண மனிதர் திருமணத்துக்கே இத்தனை புண்ணியம்ன்னா கடவுளோட திருமணத்தை பார்த்தா?! சகல ஐஸ்வர்யத்தோடு முக்தியும் கிடைக்கும். 

தேவாதி தேவர்களை வதம் செய்து தங்களை அடிமைத்தளத்திலிருந்து மீட்டெடுத்த முருகனுக்கு கைமாறு செய்ய நினைத்த இந்திரன், தன் மகளான தெய்வானையை மணந்துக்கொள்ள வேண்டினான். முருகப்பெருமானும் சம்மதித்தான்.  இந்திரன் உடனே இந்திரலோகம் சென்று,  இந்திராணியிடமும், மகள் தெய்வயானையிடமும் முருகன் அரக்கர்களை அழித்த விவரம் கூறி, தெய்வயானை-திருமுருகன் திருமணம் பற்றி எடுத்துரைக்க எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

அடுத்தநாளே திருமணம்ன்னு குறிச்சதனால எல்லாரும் திருமணத்திற்கான வேலைகளை பார்த்துக்கிட்டிருந்தாங்க.  சகலருக்கும் திருமணச் செய்தி அனுப்பப்பட்டது. பிரம்மா முகூர்த்த நேரம் நிச்சயிக்க, பார்வதி பரமேசுவரனும், விஷ்ணு தன் மனைவியான மகாலட்சுமியுடனும், மற்ற தேவாதி  தேவர்களும் சீர்கொண்டு வந்தனர்.  
மங்கல வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு இந்திரன் தன் மகள் தெய்வயானையைக் கன்னிகாதானம் செய்து வைத்தான். மகளுக்கு சீதனமாய் அச்சம், மடம், நாணம், பயிர்ப்போடு கற்பையும் சீதனமாய் தந்து முருகனிடம் தன் மகளை ஒப்படைத்தான்.


சாஸ்திரப்படி திருமாங்கல்ய தாரணம், அம்மி மிதித்து அருந்ததி காணல் போன்ற சகல வைபவமும் சிறப்பாக நடந்தேறின. மணமக்கள் தாய் தந்தையரை வணங்கி ஆசிபெற்றனர். மணம் முடிந்து அனைவரும் தத்தம் இருப்பிடம் சென்றனர். அடுத்து முருகப்பெருமான் விசுவகர்மாவை அழைத்து அமராவதி நகரை நேர்த்தியாக உருவாக்கித் தரப் பணித்தார். அவ்வாறே நகரம் புதுப்பொலிவு பெற்றுவிட்டது. முருகப்பெருமான் பிரம்மனிடம் இந்திரனுக்கு முடிசூட்டு விழா நடத்தக் கூறினார். இந்திரன் இந்திராணியரை அரியாசனத்தில் அமரச்செய்து பிரம்மா பட்டாபிஷேகம் செய்துவைத்தார். தேவலோகத்தில் சிலகாலம் தெய்வானையுடன் தங்கி இருந்து பின் வள்ளியை மணந்தார்.  


முருகன், தெய்வானையை மணந்த தலம் திருப்பரங்குன்றமாகும். இது அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகும். 247 தேவாரத் திருத்தலங்களில் ஒன்று. நக்கீரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த தலத்தைப் பாடி இருக்காங்க. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் இருப்பது வேறு எந்த முருகன் திருக்கோவில்களிலும் காண முடியாது.


 திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். துர்க்கையின் சன்னதி எதிரிலேயே கொடிமரமும், கோபுரமும் இருந்து தலத்தின் சிறப்பை அதிகரிக்கின்றன. கருவறையில் துர்க்கைக்கு இடது புறம் கற்பக விநாயகர் அருளுகிறார். கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர்மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். இந்த கோவிலில் கருவறைக்கு மேலே விமானம் இல்லாததால் மலையையே விமானமாக வணங்குகின்றனர். சிவபெருமானே மலை வடிவில் அருளுகிறார். திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார்.


திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இங்குதான் சூரசம்ஹரத்தின் போது சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குவார். இங்கு மட்டும்தான் முருகன் அமர்ந்த கோலத்தில் இருக்கார். மற்ற வீடுகளில் நின்ற கோலத்தில் அருளுகிறார். இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அருளுகிறார். அருகில் நாரதர், இந்திரன் ஆகியோர் இருக்காங்க. பிரம்மா, நின்றகோலத்திலும், வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் இருக்காங்க. சூரியன், சந்திரன், கீழே முருகனின் வாகனமான மயில் மற்றும் ஆடும் இருக்கு. இதுலாம் மற்ற முருகன் தலங்களில் காணக் கிடைக்காத அபூர்வக் காட்சி ஆகும். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள்லாம் வெண்ணிற மயில் வடிவில் இங்கு வசிப்பதாக ஐதீகம். 

சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக இருக்கிறார். இங்கு மூலவர். விழாக்காலங்களில் இவருக்குதான் கொடி ஏற்றப்படுகிறது. இருப்பினும் முருகனே சிவபெருமானின் அம்சம் என்பதால் அவரே வீதி உலா வருகிறார் . மகாவிஷ்ணுவின் வாகனமான கருடாழ்வார், எல்லா கோவில்களிலும் அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனா, இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருக்குறதால, கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு பக்கத்துல வடக்கு நோக்கி இருக்கிறார். இங்கு சிவபெருமானுக்கு எதிரே பவளக்கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சிவனுக்கு எதிரே நந்தி இல்லை, பெருமாளுக்கு எதிரே கருடன் இல்லை. மாறாக சிவனும் பெருமாளும் எதிர் எதிரே உள்ளனர். ஆகவே இதனை மால்விடை கோவில் என்று அழைப்பர்.  இந்த பவளக்கனிவாய்ப்பெருமாள்தான் மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம் அன்று சொக்கருக்கு தாரை வார்த்து கொடுக்கப் போவார்.

முன்னலாம் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்னாடி இருக்கும் தென்பரங்குன்றம் குடவறைக் கோயில்தான் பிரதானமாக இருந்திருக்கு.  அக்கோவில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே "திருப்பிய பரங்குன்றம்" என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்" என்று மருவியது. அருணகிரியார் தன் பாடல்களில் தென்பரன்குன்றுரை பெருமாளே என்றுதான் பாடுகிறார். இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை "சத்தியகிரீஸ்வரர்" என்று அழைக்கின்றனர்.
முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாற்றப்படுது. முருகன் குடைவரை மூர்த்தியாக இருப்பதால் இந்த ஏற்பாடு.
 புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று முருகனிடம் உள்ள வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு அபிஷேகம் நடக்கும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இங்கு மட்டுமே.  வேலுக்கு முக்கியத்துவம் ஏன் என்றால் சூரனை ஆட்கொண்டு வெற்றிவேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததே ஆகும். 

காதல் கொடுத்தாலும், பெற்றாலும் சுகம். ஒன்றல்ல, ரெண்டு காதல் பெண்டிரின் கரத்தை போராடித்தான் பெற்றான் முருகன். முன்னது போர்க்களப் போரின் பரிசு! பின்னது தினைப்புனப் போரின் பரிசு! அதனால், அவனின் உள்ளம் கனிந்தது. காதல் கணவனை பெற்றவள் எத்தனை பாக்கியசாலி?! அதனால் மங்கையர் இருவர் உள்ளமும் கனிந்தது. சகல முருகன் கோவில்களிலும் இன்று திருக்கல்யாண வைபோகம் நடைப்பெறும். திருமணக்கோலத்தில் மூவர் உள்ளமும், திருமணத்தை நடத்தி வைக்கும் மும்மூர்த்தி, முப்பெருந்தேவியர் உள்ளிட்ட தேவாதிதேவர்களும் ஆனந்தமாய் இருக்கும் நேரமிது. இந்த நேரத்தில் அவர்களை வணங்கினால் நினைச்சது நடக்கும். வாழ்வும் சிறக்கும்... இன்றைய  தினம் திருக்கல்யாணத்தில் கலந்துக்கொள்ளும் சுமங்கலி பெண்களுக்கு, வயது வந்த பெண்களுக்கும் தாலிச்சரடு, மஞ்சள், குங்குமம், வளையல், பூ.... என அவரவர் வசதிக்கேற்ப தானம் செய்தால் மாங்கல்ய பலம் கூடும்,. கணவன், மனைவிக்குள் அன்னியோன்யம் தழைக்கும். திருமணமாகாதவருக்கு திருமணம் ஆகும்.


தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப் பரங் கிரி தனில் உறை சரவணப் பெருமாளே!
நின்னை சரணடைந்தேன்...

சஷ்டிப் பதிவுகள் இத்துடன் முடிந்தது! முருகா! சரணம்.... 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி