Wednesday, February 26, 2014

ரேடியோவின் தந்தை - மௌனச்சாட்சிகள்

திரைச்சித்திரம், நாடகம், புதுப்பாடல்கள்லாம் கேட்டு ரசித்தது..., உலக நடப்புகள்,எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி மரணம் இதெல்லாம் அறிய வந்தது வானொலி மூலம்தான். அந்த வானொலியைக் கண்டுப்பிடித்தவர் பத்திதான் இன்றைய மௌனச்சாட்சிகளில் பார்க்கப் போறோம்.

கம்பியில்லாத் தந்தி முறையையும், வானொலியையும் நமக்காகக் கண்டுப்பிடிச்ச மார்க்கோனியின் படம்தான் மேல இருக்கும் படத்தில் நீங்க பார்ப்பது. 1874ம் ஆண்டு ஏப்ரல் 25ம் நாள் இத்தாலியில் பொலொனா நகரில் பிறந்தார். இவரோட முழுப்பெயர் குலீல்மோ மார்க்கோனி. இவர் வசதியான வீட்டில் பிறந்தவர். புத்தகம் படிப்பதுதான் இவருக்குப் பொழுதுபோக்கு. 

இயற்பியல், மின்சக்தி ஆராய்ச்சியில்தான் இவரோட ஆர்வம் இருந்துச்சு. தன் வீட்டிலேயே சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவி மின்சக்தி ஆராய்ச்சி செஞ்சார்.

மார்கோனியின் இளவயதில் கம்பியில்லாமல் ஒலி அலைகளை அனுப்புவதுப் பற்றிய ஆராய்ச்சிகளை படிக்க நேர்ந்தது. அதில் அவர் மனது ஒன்றிப் போகவே அதைப்பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராஃப் அனுப்பும் முறையை உருவாக்கினார். அப்போது அவரது கண்டுப்பிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி நாட்டு அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரையின்படி  1896ல் லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி.

இங்கிலாந்தின் பிரிட்டீஷ் அஞ்சல் துரை இவரின் கண்டுப்பிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று உலகத்துக்கு அறிமுகம் செய்தது.அதே ஆண்டு கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் பறக்க விட முடியும் என்பதை உணர்ந்த மார்க்கோனி அதனைச் சோதிக்க பலூன், பட்டம்லாம் பறக்க விட்டு சோதித்தார். பல சோதனைகளுக்குப் பின் பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில்  9 மைல் சுற்றுவட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அவரது சோதனைகளைக் கண்டு நகைத்தவர்கள்தான் அதிகம். 

அத்தனை ஏளனப்பேச்சுக்களையும், அவமானங்களையும் புறம்தள்ளி தனது குறிக்கோள் ஒன்றே நினைவில் கொண்டு தனது சோதனைகளை டவிடாமல் தொடர்ந்தார். தந்தி இல்லாமயே காற்றில் வலம் வந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் தேனென ஒலித்தது. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும்ன்னு சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. 

மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையில் கம்பியில்லா தந்தி முறையை நிறுவினார், அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம்லாம் மாஸ்கோட் என்னும் குறியீட்டு முறையில் மட்டுமே இருந்தது. அதே மாதிரி மனிதக் குரலையும் அனுப்பமுடியும் என நம்பிய மார்க்கோனி 1915ம் ஆண்டு அதற்கான முயற்சியைத் தொடங்கினார்.

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பின் 1920 ஆண்டில் நண்பர்களை தன் படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பப் பட்டது. வானொலியும் பிறந்தது.


இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த அவரின் ஆய்வின் முடிவில் 1922 ம் ஆண்டு பிப் 14ம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்பி, உலகத்தார் அனைவருக்கும் மகத்தான சேவைப் புரிந்த மார்கோனிக்கு 1909ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஏளனமாய் கைக்கொட்டி சிரித்த அனைத்துப் பல்கலைக் கழகங்களும் நீ, நான் என அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

1937 ம் ஆண்டு ஜூலை 20ம் நாள் தனது 63வது வய்தில் மார்க்கோனி ரோம் நகரில் காலமானார். வெறும் பொழுது போக்கு சாதனாமாக மட்டுமின்றி, தகவல் களஞ்சியமாகவும் வானொலி இருக்கின்றது. அலைப்பேசி,தொலைக்காட்சி, இணையம்ன்னு பல பொழுதுப்போக்கு சாதனங்கள் வந்தாலும், இன்றும் கிராம, நகர்புறத்தாருக்கு வானொலியின் மவுசு குறையவில்லை.

வேற ஒரு தகவல்களோடு அடுத்த வாரம் மௌனச்சாட்சிகள் பகுதியில் சந்திக்கலாம்.


Tuesday, February 25, 2014

வெள்ளைக் கொண்டைக் கடலை குருமா -கிச்சன் கார்னர்

பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாதான் நல்லா இருக்கும். ஒரு முறை சென்னா மசாலா செய்யப் போய் அது குருமாவாகி, இப்ப பூரிக்கு அதான் செட்டாகுது. யாராவது விருந்தாளிகள் வந்தால் பூரி, சென்னா குருமா செஞ்சிடு. அது மட்டும்தான் உனக்கு நல்லா செய்ய வரும்ன்னு சொல்வார்.

தேவையானப் பொருட்கள்:
வெங்காயம் -2
தக்காளி- 2
ப.மிளகாய் -2
தேங்காய் - 2 பத்தை
பூண்டு - 10 பல்
சோம்பு- சிறிது
கிராம்பு- 3
அன்னாசிப்பூ- 1
பட்டை- 1
இஞ்சி- ஒரு துண்டு
கறிவேப்பிலை,கொத்தமல்லி, புதினா - கொஞ்சம்
எண்ணெய் -2 டீஸ்பூன்
வேக வச்ச வெள்ளைக் கொண்டைக்கடலை - 1 கப்
கரம் மசாலா - 1டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
மிளகாய் தூள்- தேவையான அளவு
உடைத்தகடலை - 1 டீஸ்பூன்
கடுகு - கொஞ்சம்

கொண்டைக்கடலைய 6 மணி நேரம் ஊற வச்சு உப்பு போட்டு வேக வச்சுக்கோங்க. வெங்காயம், இஞ்சி தோல் சீவி கழுவி வெட்டி வச்சுக்கோங்க.தக்காளி கழுவி வெட்டிக்கோங்க. பூண்டை உரிச்சு வச்சுக்கோங்க.

வெங்காயம், தக்காளில பாதி, இன்சி, பூண்டு, தேங்காய், உடைச்ச கடலை, சோம்பு,கிராம்பு, அன்னாசிப்பூ, பட்டைலாம் போட்டு அரைச்சுக்கோங்க.

அடுப்பில் கடாயை வச்சு எண்ணெய் காய்ஞ்சதும் கடுப் போட்டு பொரிஞ்சதும் வெங்காயம் போடுங்க.

அடுத்து பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கு.

தக்காளிப் போட்டு வதக்குங்க.

உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்குங்க.


அடுத்து அரைச்சு வச்சிருக்கும் விழுது, கற்வேப்பிலை, கொ.மல்லி போட்டு வதக்குங்க.


தேவையான அளவு மிளகாய்த்தூள் சேருங்க.


மிளகாய்தூள் வாசனை போனதும் வேக வச்ச கொண்டைக்கடலையை சேருங்க.

எல்லாம் சேர்ந்து நல்லா கொதிச்சப் பின் கரம் மசாலா தூள் சேருங்க.


குருமா மாதிரி தண்ணியா இல்லாம கொஞ்சம் கெட்டியா வரும்போது இறக்கிடுங்க. பூரிக்கு தொட்டுக் கொள்ள குருமா ரெடி.

Monday, February 24, 2014

இது எனக்கு தேவையா!?- ஐஞ்சுவை அவியல்

நேத்து நான் பேங்குக்குப் போயிருந்தேன். எழுதப் படிக்கத் தெரியாத வயசானப் பாட்டி ஒருத்தர் தனியா வந்திருந்தாங்க. 500 ரூபா எடுக்க வேண்டித் தனகாக யாரோ எழுதிக் கொடுத்த வித் ட்ரா ஸ்லிப்பைக் கொண்டு வந்து கேஷியர்கிட்டக் கொடுத்தாங்க. ஆனா, கேஷியர் உங்க அக்கவுண்ட்ல 800 ரூபாதான் இருக்கு. அதனால், 300ரூபா எடுத்துக்கன்னு சொல்லி வேற ஒரு ஸ்லிப் கொடுத்தார். அந்தப் பாட்டி எதும் புரியாம முழிச்சுக்கிட்டு இருந்துச்சு.

எப்பவும் போல முந்திரிக் கொட்டைத் தனமா, கொடு பாட்டி! நான் எழுதித் தரேன்னு சொல்லி வித் ட்ரா ஸ்லிப் ஃபில் பண்ணிக் கொடுத்து, பாட்டிம்மாக்கிட்ட கைநாட்டு வாங்கி கேஷியர் கிட்ட கொடுத்து காசு வாங்கிக்கச் சொன்னேன்.

கொஞ்ச நேரத்துல பாட்டி குய்யோ முறையோன்னு கத்துற சத்தம். என்னன்னு போய் பார்த்தா என் மவன் 500 ரூபா போடுறேன். நீ பேங்க்ல போய் எடுத்துக்கன்னு சொன்னான். ஆனா, இப்ப 300தான் கொடுத்தாங்க. எழுதிக்கொடுக்குறேன்னு சொல்லி ஒருத்தி 200ரூபா ஆட்டைய போட்டுட்டான்னு கத்துசு. இனி இதுக்குலாம் சொல்லிப் புரிய வைக்க முடியாதுன்னு மீ எஸ்கேப்.

நல்லது செய்வோம்ன்னு நினைச்சுப் போன இடத்துல திருட்டுப் பட்டம். தேவையா எனக்கு!?

என் மகளுடன் படிக்கும் பெண்.  உடம்புக்கு முடியலைன்னு சொல்லி பள்ளிக்கு சரி வர செல்வதில்லை போல! இந்த வருசம் பத்தாவது பொது தேர்வை ஒட்டி வருகை குறைவாக இருக்கவே, மெடிக்கல் சர்டிஃபிகேட் வேணும்ன்னு சொல்லி பள்ளியில் உள்ள மருத்துவரிடம் அனுப்பி இருக்காங்க. அங்கப் போனப் பின் தான் தெரிஞ்சது அந்த குழந்தை 5 மாசம் கர்ப்பம்ன்னு. 

தினமும் அம்மாவிடம் பள்ளிக்குப் போவதாய் சொல்லி, கிளம்பி.., வழியில் ஆட்டோ ட்ரைவர் ஒருவருடன் காதல் செய்திருக்கும் போல! இப்ப வயத்துல குழந்தை!!! அந்த ட்ரைவருக்கு வயசு 35. ஏற்கனவே மணமானவர். இத்தனைக்கும் அந்தப் பென் வீட்டிலிருந்து ஸ்கூட்டியில் செல்பவள். அப்புறம் எப்படி அவர்களுக்குள் பழக்கம் என தெரியல.

இத்தனைக்கும் அந்த குழந்தையின் அம்மா ஹவுஸ் வொயிஃப். அப்பா எலக்ட்ரீசியன். பொண்ணு எங்கப் போகுது!? என்னப் பண்ணுது!?ன்னு இருவருமே கவனிக்கல. அந்தப் பொண்ணு ஏமாத்துச்சுன்னு வச்சுக்கிட்டாலும் தன் மகளின் மாதவிடாய் விவரங்கள் கூடவா ஒரு தாய் தெரிஞ்சு வச்சுக்காம இருப்பாங்க. ஸ்கூல்ல இருந்து அந்தக் குழந்தையை அனுப்பிட்டாங்க. இனி அக்குழந்தையின் எதிர்காலம்.
சார்! டைம் என்னனு கொஞ்சம் கடிகாரத்தைப்பார்த்து சொல்லுங்களேன்"
"கடிகாரத்தைப் பார்காமலே கூட சொல்லுவேன்.கடிகாரம் ஒடலை"

2004ல என் மச்சினருக்குக் கல்யாணம். அப்ப இனியாக்கு 4 இல்ல 5 வயசு இருக்கும். மண்டபத்துக்குப் போக எல்லோரும் ரெடி ஆகிட்டு இருந்தோம். என் மாமியார் மஞ்சள் கயிறுல மாங்கல்யம் கோர்த்து என் அக்காக்கிட்டக் கொடுத்து கயிறு அளவு சரியா இருக்கான்னு பாரும்மான்னு சொன்னாங்க. இதைக் கவனிச்ச இனியா, பாட்டி! தாலிக்கயத்துல ஊக்கு (safty pin) இன்னும் கோர்க்கலைன்னு சொன்னா. என்னன்னு புரியாம நாங்கலாம் முழிக்க..,

சேலைக் கட்டுறதுக்காக அம்மா, பெரியம்மா தாலிக்கயத்துலலாம் ஊக்கு கோர்த்திருப்பாங்க. அத எடுத்து சேலைல குத்திப்பாங்க. அதுப்போல சித்திக்கு கட்டப் போற தாலிக்கயத்துல ஊக்கு இல்லாட்டி சித்தி சேலைக் கட்டும்போது ஊக்கு இல்லாம எப்படி சேலைக் கட்டுவான்னு கேட்டு எங்களைலாம் அசடு வழிய வச்சா.
ஒற்றை கால் குள்ளனுக்கு எட்டு கைகள்.அது என்ன?


Saturday, February 22, 2014

குறை ஒன்றும் இல்லை - கேபிள் கலாட்டா

புதிய தலை முறையில் மதிய நேரத்துல மகளிரும், சமுதாயத்தில் மக்களாட்சியும்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அதுல,நேத்தைய நிகழ்ச்சில திருநங்கைகள் கலந்துகிட்டாங்க. திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகள், அவங்க ஆசைகள், எதிர்காலத்துல சமுதாயத்துல என்னென்ன மாற்றங்கஙள் வரனும்ன்ற அவங்க எதிர்பார்ப்புகள் பற்றி பேசுனாங்க.

நிகழ்ச்சில கலந்துக்கிட்ட வித்யான்றவங்க, சமுதாயத்துல எல்லோரும் எங்களை கேலிச் செஞ்சு ஒதுக்குறாங்க. இரக்க சுபாவத்துக்கு இலக்கணமான பெண்கள்கூட எங்களை ஒதுக்குறது எங்களுக்கு வேதனை தருதுன்னு சொன்னாங்க. அவங்க சொன்ன கருத்து சரிதான்ன்னு எனக்கு பட்டுடுச்சு. இன்னொரு திருநங்கை நான் தேர்தலில் நின்னு பதவிக்கு வந்தால் அனாதை ஆசிரமங்களில் இருக்கும் குழந்தைகளை திருநங்கைகளுக்கு தத்துக் கொடுத்துடுவேன். ரெண்டு பேருக்கும் புது வாழ்வு கிடைக்கும். அதுமட்டுமில்லாது, குடும்பத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட திருநங்கைகள் விருப்பப்பட்டா முதியோர் இல்லத்துல இருக்கும் ஆதரவற்ற பெரியவங்களையும் திருநங்கைகளோட அப்பா, அம்மாவா அனுப்புவேன். மூணு பேரும் சேர்ந்து அழகான ஒரு குடும்பம் உருவாகும்ன்னு சொன்னாங்க. அந்த பாயிண்டும் பிடிச்சது.

வர்றவங்களை வரவேற்று, டிக்கட் சரிப்பார்த்து, டீ கொடுக்குற வேலைதானே உன் பொண்ணு பார்க்குறதுன்னு சொந்தக்காரங்க சொல்றதைக் கேட்டு என் வீட்டுக்காரர் என்னைத் திட்டுவார் இதுப்போல ஒரு படிப்பைப் பொண்ணுக்குக் காட்டிட்டியேன்னு!! ஆனா, இந்த வேலைக்கு சேர என்ன்னென்ன பயிற்சி மேற்கொள்ளனும்!? வேலையில் வரும் சவால்கள்ன்னு நேஷனல் ஜியாகரஃபி சேனலில் போன வாரம் முழுக்க விமான நிலையத்தைப் பத்தி தினமும் ஒரு மணி நேரம் ஒலிப்பரப்பான் நிகழ்ச்சிப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டு இப்பலாம் என்னைத் திட்டுறதில்ல.
புடவை வாங்கித் தரலை, நகை வாங்கித் தரலைன்னு உப்பு பெறாத சின்ன விசயத்துக்குக் கூட நான்லாம் ஏன் பொறந்தேன்னு அழுது ஆர்பாட்டம் பண்ணுற ஆட்களைலாம்க்கூட பார்த்திருக்கேன். டிஸ்கவரி சேனலில் பிறப்பால குள்ளமாய் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து அவர்கள் வாழ்க்கையில் சந்திச்ச கஷ்டங்களை சொல்லும் போது நாம எல்லாம் எவ்வளவு புண்ணியம் செஞ்சிருக்கோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
எல்லா டிவி சேனல்களிலும் பாட்டு மற்றும் ஆடல் திறமையை நிரூபிக்கும் போட்டிகள் நடக்குது. அதுல சின்ன குழந்தைங்க ஆபாச பாடல்களைப் பாடுறது கேட்டும், சினிமா பாடல்களுக்கு ஆபாச அசைவுகளை வெளிப்படுத்தி ஆடுவதைப் பார்த்து நம்ம எல்லோரும் மனசு நொந்திருக்கும். அதைக்கூட பரிசுக்காகவும், பிரபலத்துக்காகவும் செய்றங்கன்னு ஏத்துக்கலாம்.

ஆனா, நிகழ்ச்சியைப் பார்க்க வரும் பார்வையாளர்களும் சில சமயம் உணர்ச்சி வேகத்துல டான்ஸ் ஆடுவதைப் பார்த்திருக்கேன். குரல் திறமைக்கு போட்டி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் தன் மகன் பாடிய நல்ல பாட்டுக்கு!? எப்படியும் நாற்பது உல்ல நாற்பத்தஞ்சி வயசுல ஒரு குடும்பத்தலைவி குத்தாட்டம் போட்டாங்க. பார்க்கவே கொடுமையா இருந்துச்சு! இதைப் பார்க்கும் அவங்க சுற்றத்தார் நமுட்டு சிரிப்புடன் அவங்களைப் பார்க்க மாட்டாங்களா!?

கேபிள் கலாட்டா தொடரும்....,

Friday, February 21, 2014

ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் திருக்கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடிப் போற பயணத்துல நாம இன்னிக்குப் பார்க்கப் போறது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தென் அகோபிலம் எனக் கூறப்படுகிற பூவரசன் குப்பம் என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும்  ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் திருக்கோவில்.

இந்தக்கோவில் விழுப்புரம், புதுச்சேரிச் சாலையில் உள்ள சிறுவந்தாடு என்னும் ஊரில் இருக்கு. இந்த ஊர் பட்டுநூலுக்குப் பிரசத்திப் பெற்ற இடம். இங்கிருந்து பூவரசன் குப்பம்  2 கி.மீ. தொலைவில் இருக்கு. அப்படி இல்லாட்டி விழுப்புரம் பண்ருட்டி சாலையில் உள்ள கள்ளிப்பட்டியில் இறங்கினால் இத்தலம் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கு. விழுப்புரத்தில் இருந்து நேரடி பஸ் வசதியும் இருக்கு. சரி, இனி கோவிலுக்குள் செல்லலாம்ம் வாங்க!

தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே தசாவதாரங்கள் எனச் சொல்கிறோம்  மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டுபிறந்து, வளர்ந்து தக்கத் தருணத்தில் தீமையை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி, அசுரவதம் செய்துப் பக்தனைக் காத்த அவதாரமாகும். பக்தர்களுக்கு ஒரு துயரென்றால் நான் நேரம் காலம் பாராமல் ஓடி வருவேன் என சொல்லாமல் இறைவன் சொல்கிறார்.


 இதுதான் திருக்கோவில் மூலவர் சன்னதி முன்னால் இருக்கும் கொடிமரமும் அதன் முன் இருக்கும் பலிபீடமும்.   கொடிமரத்தின் முன்னே கருடாழ்வார் சன்னதி மூலவரை நோக்கிய வண்ணம் இருக்கிறது. இந்த ஸ்தலத்தின் விஷேசம் என்னனா, மற்ற இடங்களில் பயங்கரமான உருவில் காட்சியளிக்கும் நரசிம்மர் இங்கே, தம்பதியர் சமேதராய் சாந்தமாய் காட்சியளிக்கிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்றோர் கண் நம்மை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இனி இந்த திருக்கோவிலின் வரலாற்றை பிரகார வலம் வந்துக்கொண்டே பார்க்கலாம். இங்க நேரேத் தெரிவது அமிர்தவல்லி தாயார் சன்னதி.  

ஆடி ஆடி அகம் கரைந்து
இசை பாடி பாடி கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று
வாடி வாடும் இவ்வானுதலே

என்னும் பதிகத்தை பாடியபடி வலம் வருவோம். சர்வலோக சரண்யனான ஸ்ரீமன்நாராயணன் எடுத்த, பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த நரசிம்ம அவதாரம். அகோபிலத்தில், பிரகலாதனுக்காக அவன் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில ஒரு நொடி கூட தாமதிக்காது அவதரித்து இரண்யனை சம்காரம் செய்த மூர்த்தி  இந்த நரசிம்மபெருமாள். இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சித் தந்தத் தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

அப்படி நரசிம்மனாக முனிவர்களுக்குக் காட்சிக் கொடுத்தபோது அவரது ஆக்ரோசஷத்தைத் தாங்க முடியாத முனிவர்களும், சப்த ரிஷிகளும் அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்களே அந்த ஏழு ரிஷிகள். மகாலக்ஷ்மியை வேண்டினார்கள்.  ஸ்ரீலக்ஷ்மியானவள் நரசிம்மரின் மடியில் அமர்ந்து ஒரு கண்ணால் நரசிம்மரையும், ஒரு கண்ணால் சப்த ரிஷிகளையும் பார்த்தபோது நரசிம்மர் கோபம் தணிந்தது, அப்பொழுது நரசிம்மர் கோபம் தணிந்து சாந்தரூபியாக காட்சியளித்தார் அவர்களுக்காக.

திருமால் காட்சிக் கொடுத்த இடம்தான் பூவரசன்குப்பம். .இப்பூவுலகில் வேறு எங்கும் காணாதக் காட்சியாக நரசிம்மர் சாந்த சொருபனாக காட்யளித்ததால் இன்று முதல் நீங்கள் இருவரும் இவ்வாறே பக்தர்களுக்கு காட்யளிக்க வேண்டும் என சப்தரிஷிகள் வேண்ட அவ்வாறே இருக்குமாறு வரமளித்தாரம் இந்த லக்ஷ்மிநரசிம்மர்.

இது  பிரகாரத்தில் இருக்கும் ஆண்டாள் சன்னதி. இங்க செவி வழியாகவும் சில வரலாறுகள் சொல்லபடுகின்றன. இங்க உள்ள பெரியவர் ஒருவரிடம் இந்த கோவில்பற்றி கேட்டபோது அவர் சொன்னது...,நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் ஒரு தூணையே நரசிம்மராக 3 ம் நூற்றாண்டில் வழிபாடு செய்து வந்துள்ளார்கள்.அதன் பின்  பல்லவர்கள்தான் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தார்கள்.

அதை பற்றிய செவிவழிக்கதை....., முன்காலத்தில் தமிழகத்தில் சமண ஆதிக்கம் நிலவி வந்தது. இந்த இடத்தை ஆண்ட பல்லவ மன்னன் சமண சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். திருநீறும், திருமண்ணும் துவேஷத்தோடு பார்க்கப்பட்டன. கோயில்கள் பரமசிவனுடையதாக இருந்தாலும், சரி பரந்தாமனுடையதாக இருந்தாலும் சரி இடிக்கப்பட்டன. பல்லவனின் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தார் நரஹரி என்ற வைணவ ரிஷி. அவரைக் கொல்ல ஆணையிட்டான் மன்னன். வெகுண்டாராம்  நரஹரி. என்னைக் கொல்ல ஆணையிட்ட உனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும். உன் உடல் அழுகட்டும் என்று சாபமிட்டுக் காற்றோடு கரைந்தாராம் நரஹரி. மன்னனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க, உடல் வேதனையால் துடிக்க, மன்னனின் கெட்ட காலம் ஆரம்பித்தது. மன்னன் பைத்தியம் பிடித்தவன் போலானான்.

சாபவிமோசனம் பெற நரஹரியை நாடெங்கும் தேடினான் மன்னன். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நோய் முற்றி புழுக்கள் உடலில் நெளியவே மன்னனின் மனைவி மக்கள் கூட அவனை வெறுத்து ஒதுக்கினார்கள். நாட்டை விட்டே வெளியேறிய மன்னன் ஒரு நாள்... தென்பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் களைப்புடன் விதியை நொந்தபடி படுத்திருந்தான். அவன் ஆணவம் அழிந்து ஆதிக்க வெறியில் தான் செய்த பாவங்களுக்காகக் கண்ணீர் விட்டு கலங்கி சோர்ந்து அப்படியே தூங்கி விட்டான். திடீரென்று விழித்தபோது, அவன் மேல் ஒரு பூவரச இலை விழுந்திருந்தது.

இது மூலவர் சன்னதிக்குள் போகும் வழியில் இருக்கும்  சிற்பம் இவரையும் வணகிவிட்டு ஸ்தல புராணத்தை தொடர்வோம் .. 


கீழே விழுந்த அந்த இலையின் அதிர்வைக்கூட அவனால் தாங்க முடியாமல் அந்த இலையை நகர்த்த எண்ணி அதைக் கையில் எடுத்தான். அதில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவரச இலையில் பூத்த முறுவலுடன் நரசிம்மர் அன்னையுடன் சேர்ந்து இருப்பதைக் கண்டான். அவனையும் அறியாமல் கைகள் கூப்பின. கண்ணீர் பெருகியது. அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.


 மன்னா, கோயில் கட்டுவதாக நினைத்தாலே கோடி புண்ணியம் உண்டாகும். நீ எத்தனை கோயில்களை இடித்திருக்கிறாய். அதற்குப் பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும். இந்தப் பூவரச மரத்தடியிலேயே லட்சுமி நரசிம்மருக்கு கோவில் எழுப்பு. அதுவே பூவரசமங்கலம் எனப் பெயர் பெறும் என்றும்,  மேலும் இந்தக் கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் மனத்தில் எழுந்த மறுகணமே உனக்கு விடிவு காலம் பிறக்கும்` எனசொல்லியதாம்.


 மன்னன் கோயில் கட்ட நினைத்த மறுகணமே அவன் உடலில் தெம்பு வந்தது. உடனே கோயில் கட்டும் வேலையில் ஈடுபட்டான். மனம் மாறவே, மதமும் மறைந்தது. மன்னன் மறுபடியும் மாமன்னன் ஆனான்.பூவரச மங்கலத்தில் லட்சுமி நரசிம்மப் பெருமாளின் அருளாட்சியும் தொடங்கியது எனவும் செவி வழி கதை சொல்லபடுகிறது.

 இதுதான் மூலவர் திருமேனி. நீண்ட ஒரு வழியோடு சென்றால் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்கவல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கபடுகிறாள்.
கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அனைத்துக்கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது. இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. இது போன்ற அமைப்பு இந்த பூவுலகில் வேறு எங்கும் இல்லை.

உள்பிரகாரம் வலம் வந்த பின் இந்த வழியாகதாகவும் வெளியே வரலாம். 
இதற்கும் ஒரு வரலாறு உண்டு. முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார். உடனே  நரசிம்மர், ""நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்' என்றார். அதற்கு லட்சுமி,"" கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவே தான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்' என்றார். அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள். 


பூவரசன்குப்பத்தில் சப்தரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் காட்சித் தந்த நரசிம்மபெருமாள்  இவற்றில் பூவரசன்குப்பம் நடுவில் இருக்க, இதைச்சுற்றி சோளிங்கர்நரசிம்மர், நாமக்கல்நரசிம்மர், அந்திலிநரசிம்மர், சிங்கப்பெருமாள்கோவில் (தென்அகோபிலம்), பரிக்கல்நரசிம்மர், சிங்கிரி கோவில்லட்சுமிநரசிம்மர், சித்தனைவாடிநரசிம்மர் ஆகியதலங்கள் அமைந்துள்ளன.  இதில் பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரிகோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில்அமைந்துள்ளன. இதுமட்டும் இல்லாம இன்னும் நிறைய தலங்களில் நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். நாம் முந்தைய பதிவில் பார்த்த ஆப்பூர் நித்யகல்யாண நரசிம்மர் திருக்கோவில் இதுபோல் பல கோவில்கள் இருக்கு.

 திருமால் ஸ்ரீதேவியை மடியில் அமர்த்திக்கொண்டு காட்சியளிக்கும் திருக்கோலம் லக்ஷ்மி நாராயணசுவாமி என அழைக்கபடுகிறார். அதேப்போல் லக்ஷ்மிதேவியை மடியில் அமர்த்திக்கொண்டு காட்சிதரும் நரசிம்மமூர்த்தி, ”லக்ஷ்மி நரசிம்மமூர்த்தி” என அழைக்கபடுகிறார். பிரகாரத்தினுள் ஆண்டாள் சன்னதியின் அடுத்து வேணுகோபால் சன்னதி இருக்கு. அடுத்து ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கு. மேலும், இதேபோல் அமைப்பு  ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணாநதிக்கரையில்- நாகார்ஜுனா அணைக்கும் விஜயவாடா நீர்த்தேக்கத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மங்களகிரி லட்சுமிநரசிம்மர், வாடப்பள்ளி நரசிம்மர், வேதாத்திடை யோகநரசிம்மர், மட்டப்பள்ளி லட்சுமிநரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர் எனபுகழ் பெற்ற ஐந்துநரசிம்மர் ஆலயங்கள் இருக்கிறது. 

திருக்கோவில் பிரகாரத்தினுள் இராமானுஜரும் நாகசன்னதியும் இருக்கிறது.  மேலும் இந்த லக்ஷ்மி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் எனபது ஐதீகம்.  இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன. இதில் மற்றுமொரு சிறப்பு சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ரகலச திருமஞ்சனம் இந்த விழா இங்கு சிறப்பாக கொண்டாடபடும்.

ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாளை வேண்டினால்  கடன் தொல்லை தீரும், பொருள்கள்  குவியும், இங்கே உற்சவர் வரதராஜ பெருமாள் இவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத காட்சி தருகிறார்.  இதுதான் சுவாதி மண்டபம் தினமும் இங்கே அன்னதானம் நடைபெறுகிறது. சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் உண்டு 


அதுபற்றிய சிறப்புதகவல்களை இந்த திருக்கோவில் பட்டர்களான பார்த்தசாரதி ( 95851 78444) மற்றும் நரசிம்மன் (97518 77555) ஆகியோர்களை தொடர்புக் கொண்டு தகவல்களை பெறலாம்.  மீண்டும் அடுத்தவாரம் புண்ணியம் தேடி பயணத்தில் வேறொரு திருக்கோவிலில் இருந்து சந்திக்கலாம்.

நன்றி! வணக்கம்!

இறைவியிடம் ராஜி வாங்கிய வரத்தினை இங்கு போய் படிச்சுப் பாருங்க.