Monday, April 30, 2012

முயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்- ஐஞ்சுவை அவியல்

                                              
ஏனுங்க மாமா! நம்ம பக்கத்து வீட்டு பார்வதி பாவமுங்க. சாப்ப்பாட்டுக்கே கஷ்டப்படுதுங்க. அந்த தெய்வம் அவ விசயத்துல கண் தொறக்கலயே.

இதப்பாரு புள்ள, சாமி நேருல வந்து உதவி செய்யாது.கடவுள் மறைமுகதான் செய்யும் அதை புரிஞ்சுக்கிட்டு நாமதான் அதை யூஸ் பண்ணிக்கனும்.

புரியலியே மாமா, சாமியாலதான் எல்லாமே முடியுமே, அவ கஷ்டத்தை ஒரு நொடியில மாத்த முடியாதா மாமா?!

இதப் பாரு புள்ள, எதுவுமே ஈசியா கிடைச்சுட்டா அதுக்கு மரியாதை கிடையாது. அதனாலதான. உன்னை மாதிரிதான் கீரனூர்ல இருந்த முத்து, கடவுள் நேருல வந்து சொன்னாதான் சாப்பிடுவேன்னு அடம் பண்ணிக்கிட்டு, எதிர்க்க சாப்பாடை வச்சுக்கிட்டு  உக்காந்துக்கிட்டான்.

மணி 9 ஆச்சு. ஏங்க சாப்பிட வாங்கன்னு அவன் பொண்டாட்டி போய் கூப்பிட்டா. ஏய், நான் என்னடி சொன்னேன். சாமி வந்து ஊட்டினாதான்  சாப்பிடுவேன்னு சொன்னேன்லன்னு சீறினான். எக்கேடோ கெட்டுப் போன்னு போய்ட்டா. மணி 12 ஆச்சு, டேய், சாமிக்கிட்டலாம் சவால் விடாத , ஒழுங்கா சாப்பிடுன்னு அவனை பெத்தவங்க சொன்னாங்க. சே ஒரே ரோதனையா போச்சு, அட்வைசுலாம் பண்ணிக்கிட்டுன்னு சாப்பாட்டை எடுத்துக்கிட்டு பெட்ரூம்ல போய் உக்காந்துக்கிட்டான்.

சாயந்தரம், மணி 4 ஆச்சு பசங்க ஸ்கூலிருந்து வந்து அப்பா சாப்பிடுப்பா அம்மா செஞ்ச உப்புமா நல்லா இருக்குன்னு குழந்தை அவன் வாய்ல உப்புமா ஊட்ட போச்சு. சீ போ அந்தாண்டன்னு சொல்லி சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக்கிட்டு யாருமில்லாத ஏரிக்கரையில போய் உக்காந்துக்கிட்டான். 

ராத்திரி 12 ஆச்சு. அந்த வழியா, கொள்ளையடிச்சுக்கிட்டு  டயர்டா  திருடனுங்க  வந்தானுங்க. அவனுங்களுக்கு செம பசி. சோத்து மூட்டையை பார்த்ததும் அவன்கிட்ட பிடுங்கிக்கிட்டு போய் சாப்பிட உக்காந்தாங்க.

அப்போ, டேய் கபாலி,  கொஞ்சம் பொறுமையா இரு. அவன் எதிர்க்க சோத்து மூட்டையை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்கான், ஒரு வேளை நம்மை பிடிக்க ராசா இந்த சாப்பாட்டுல வெசத்தை வெச்சு இருதா நம்ம கதின்னு சொல்லி, முத்துவை சாப்பிட வற்புறுத்தினாங்க. அவன் மாட்டேன்னு சொல்லி அடம்பிடிசான்.

இதுல ஏதோ சூது இருக்குன்னு முடிவுக்கு வந்து முத்துவை அடிச்சு உதைச்சு சாப்பாட்டை அவன் வாய்ல திணிச்சு சாப்பிட வச்சாங்களாம். முத்துவோட பொண்டாட்டி, பெத்தவங்க, பையன் ரூபத்துல வந்து  சாமி சொல்லிச்சு. அப்பவே அவன் கேட்டிருந்தா முத்து உடம்பு புண்ணாகியிருக்க வேணாமே.

அதுப்போலதான்  பார்வதி கதைதான். பத்தாவது படிச்சிருக்குறவ எதாவது கைத்தொழில் கத்துக்கிட்டு, கவர்ன்மெண்டுல லோன் வாங்கி பொழச்சுக்காம சாமி நேருல வரும்னு காத்துக்கிட்டு இருந்தால் எப்படி புள்ள? திருவள்ளுவரும் திருக்குறள்ல முயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்ன்னு சொல்லியிருக்கார்.

நீங்க சொன்னது சரிதானுங்க மாமோய். நானும் பார்வதிக்கிட்ட நல்லவிதமா எடுத்து சொல்றேனுங்க.
                                          

அப்புறம் மாமா, என் செல்போன்ல ஒரு மெசேஜ் வந்திருக்கு. படிச்சதும் சிரிச்சுட்டேன் மாமா

அப்படியா, எனக்கும் சொல்லு புள்ள,

ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி. அதை நான் பேசாத வரை...,
 வீட்டை சுத்தப்படுத்துவதற்காகவே பண்டிகைகளைக் கண்டுபிடித்துள்ளான் தமிழன்.
வெயில் காலத்திற்கும், பனி காலத்திற்கும் ரெண்டே ரெண்டு வித்தியாசம்தான். எப்படா குளிக்க போறோம்ன்னு நினைச்சா வெயில் காலம். ஏண்டா குளிக்க போறோம்ன்னு நினைச்சா அது பனி காலம்ன்னு மெசேஜ் வந்துச்சு மாமா.
ஹா ஹா நல்லா இருக்குடி.

                                           

நான் உன்கிட்ட ஒரு கணக்கு சொல்றேன். தெரியுதான்னு பார்க்கலாம் புள்ள.  
ஹா ஹா மாமா, நம்ம தெருலயே  பால்கணக்கு, வரட்டி கணக்குலாம் வெவரமா நாந்தான் போடுவேனாக்கும்.
அப்பிடியா, யோசிச்சு சொல்லுடி என் செல்லக்குட்டி, ஒருநாள் தன் வூட்டுக்காரனோட  சண்டையிட்டுக் போட்டுட்டு  கோபத்தோட  வூட்டை வுட்டு பொண்டாட்டி நாள் ஒன்னுக்கு ஒரு காதம் (10 மைல்) வீதம் நடந்து போறா. ஏழு நாட்களுக்குப் பிறகு கவூட்டுக்காரன் அவளைத் தொடர்ந்து, புறப்பட்டு நாளொன்றுக்கு ஒன்றரை காதம் வீதம் நடந்து போறான். அவ்விருவரும் எப்போ மீட் பண்ணுவாங்க ?  இருவரும் நடந்த தூரம் எவ்வளவு ?
ஐ கண்டுபிடிச்சுட்டேன் மாமா! 
இருடி,  அவசரப்படாதே அவங்கலாம் என்ன சொல்றங்கன்னு பார்க்கலாம். 
சரிங்க மாமா, 
இன்னிக்கு காணாமல் போன கனவுகள் ராஜி வீட்டுக்கு போனேன். அவங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது அவங்க பையன் செஞ்ச காமெடியை சொல்லி சொல்லி சிரிச்சாங்க.
என்னன்னு சொன்னா நானும் சிரிப்பேனே புள்ள, 
ராஜி குடும்பமும், அவங்க அண்ணன் குடும்பமும் எந்திரன் படத்துக்கு போய் இருக்காங்க. போய்ட்டு வீட்டுக்கு வந்ததும் அவங்க அண்ணன் பையன் ஒரு கேள்வி கேட்டானாம். அவங்க ஷாக்காகி நின்னுட்டாங்களாம்.
அப்படி என்ன புள்ள கேட்டானாம்?
எலக்ட்ரானிக்ஸ் சாமான்லாம் தண்ணில விழுந்த கெட்டு போகுது. ஆனா, எந்திரன்ல ’சிட்டி’ மட்டும் மழைல நனையுது, தண்ணில குதிக்குது ஆனா, அது கெட்டு போகலியே எப்படின்னு கேட்டு ராஜியை நிலைகுலைய வச்சிருக்கான் மாமா.
            
ஹா ஹா நல்லாதாண்டி கேட்டிருக்கான். அப்புறம். நம்ம மரத்துல முருங்கக்காய் நிறைய காய்ச்சிருக்கு. அக்கம் பக்கட்துல இருக்குறவங்களுக்கு குடுத்துட்டு மிச்சத்தை அப்படியே ஃபிரிட்ஜ்ல வெக்காம, காயோட தோள் எடுத்து சின்ன சின்னதா வெட்டி, பிளாஸ்டி க் கவர்ல போட்டு ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒரு வாரம் வரைக்கும் கெடாது.  குருமாக்கும், சிக்கன் குழம்புக்கும் தேங்கா அரைச்சு ஊத்துவே தானே.  அதுல தேங்காயை குறைச்சுக்கிட்டு பாதாம் பருப்பை சேர்த்துக்கிட்டா, ருசியும் நல்லா இருக்கும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகும், ரிச்னசும் வரும்டி. சின்ன புள்ளைகளுக்கு  சோம்பை பொடி செய்து தேனில் கலந்து 21 நாள் சாப்பிட்டு வந்தா ஞாபக சக்தி வருமாம் புள்ள. 

சரிங்க மாமா, துணி துவைக்கனும், வீட்டை கூட்டனும் வேலை நிறைய இருக்கு நான் வாரேன் மாமோய். 


Saturday, April 28, 2012

யார் பெறுவார் இந்த அரியாசனம்?!ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செஞ்சுக்கிட்டு இருந்தார். அவருடைய தவம் முடிஞ்சு வேண்டும் வரம் வாங்கிட்டா  இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துடும். அதை இந்திரன் விரும்பலை. எனவே தனது பதவியைக் காப்பாத்திக்க ஆசைப்பட்டான் இந்திரன்.

அதுக்காக தன்னோட சபையில டான்ஸ் ஆடுற  ரம்பை, ஊர்வசி ரெண்டு பேரையும் கூப்பிட்டு , ரெண்டு பேரில் ஒருத்தரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைச்சுட சொல்லி அனுப்ப நினைத்தான்.

ரெண்டு பேரில் யாரை அனுப்புறது ன்னு இந்திரனுக்குப் புரியலை. இதை கேள்விப்பட்ட ரெண்டு பேரும் நானே போறேன்னு  போட்டி போட்டனர்.""யாராவது ஒருத்தங்க மட்டும்தான் போகனும். உங்க ரெண்டு பேருல  யாரை அனுப்பலாமென்னு நீங்களே சொல்லுங்கள்,'' ன்னான் இந்திரன்.

""டான்ஸ் ஆடுறதுல  என்னை அடிச்சுக்க யாருமே இல்லை. அதனால  நான் தான் பூலோகத்திற்குச் போவேன்,'' ன்னு ரம்பை சொன்னா.

""ரம்பை டான்சுல மட்டும்தான் பெட்டர். நான் பேச்சு, சமையல்ன்னு எல்லாத்துலயும் பெட்டர் ன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருக்க  என்னை விட பெஸ்ட்  வேற யார் இருக்க முடியும்,'' ன்னு  ஊர்வசி சொன்னா.

ரெண்டு பேருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்னுமே புரியலை. ரெண்டு பேருல யார் பெஸ்ட்ன்னு  முடிவுக்கு வர அவனால்முடியவிலலை.இந்த நேரத்துல  நாரதர் அங்க  வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான்.

""இந்திரதேவா, ஏன் சோகமா  இருக்க?'' ன்னு கேட்டார் நாரதர்.

""ஐயா! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் செஞ்சுக்கிட்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க என் டான்ஸ் குழுவுல இருக்குற  ஒருவரை அனுப்ப நினைச்சு, .  அவங்க  ரெண்டு பேரையும் வரவச்சேன். ஆனா, இப்ப இவங்க ரெண்டுப் பேருல  யாரைப் பூலோகத்திற்கு அனுப்புறது ன்னு  புரியல...'' ன்னான்  இந்திரன்.

""ரெண்டு பேரையும் உன் சபையில டான்ஸ் ஆட சொல்லலாம்.  யார் சூப்பரா  டான்ஸ் ஆடுறாங்களோ   அவளை பூலோகத்திற்கு அனுப்பலாம்ன்னு...'' சொன்னார் நாரத முனிவர்.

மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி யின் டான்ஸ் புரோகிராம்  நடந்தது. டான்ஸை பார்க்க   தேவர்களும், எல்லா  கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபைக்கு வந்து இருந்தனர்.

டான்ஸ்  ஆரம்பம் ஆச்சு. ரெண்டு பேரும் சளைக்காமல் ஆடினாங்க.

ஒருத்தருக்கொருவர் விட்டுக் கொடுக்கலை. ரெண்டு பேருமே சூப்பரா டான்ஸ்  ஆடினாங்க. யாருடைய டான்சுலயும் குத்தம்  சொல்ல முடியலை. ரெண்டு பேருமே சரிசமமாக ஆடினாங்க. ரெண்டு பேருடைய டான்சுல  யாருடைய டான்ஸ் பெஸ்ட்ன்னு   ஜட்ஜ்மெண்ட் சொல்ல முடியாமல எல்லாரும் குழம்பி போய்ட்டாங்க.

இந்த நேரத்த்ல  நாரத முனிவர் எழுந்து, ""இந்திரனே, இங்கிருக்குற  யாராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருத்தன் பூலோகத்தில் இருக்கான். அவன் பேரு விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் படிச்சவன் விக்கிரமாதித்தன்.  நாட்டியக் கலையை  சூப்பரா  படிச்சு பாஸ் பண்ணவன். அவனை இங்கு கூட்டி வரச் சொல்லி அவன்  முன்னாடி ரம்பை, ஊர்வசி ரெண்டு பேரையும் ஆடச் சொன்னா,  யார் பெஸ்ட்ன்னு  அவன் சொல்லிவான்,'' ன்னு சொன்னார்.

உடனே இந்திரன் தப்போட தேரோட்டியை  கூப்பிட்டு,  உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்கு போய்  உடனே விக்கிரமாதித்தனை இங்கு கூட்டிக்கிட்டு வா'' ன்னு சொன்னான்.

  தேரோட்டிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு கூட்டி வர இஷ்டமில்லை. "ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?' ன்னு நினைச்சான்.

இதை தெரிஞ்சுக்கிட்ட நாரதமுனிவர், ""தேர்ரோட்டி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக்காதே! தேவர்களுக்கெல்லாம் மேலானவன் . இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருத்தனே. எனவே, லேட் பண்ணாம அவனை இங்கு கூட்டி  வா,'' ன்னு சொன்னார்.

தேரோட்டியும் அரை மனசோட பூலோகத்திற்குச் போனான். விக்கிரமாதித்தனை பார்த்து  இந்திரன் அவனை கூட்டி வர சொன்னதை  சொன்னான்.

விக்கிரமாதித்தன் நேரா காளிகோயிலுக்குச் போனான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் வாங்கிகிட்டு  இந்திரலோகம் போக கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுறதற்காக விக்கிரமாதித்தன் வலது காலை எடுத்து வைத்தான்.

இடது கால் தரையில் இருச்சு. அந்த நேரத்துல  தேரோட்டி, "இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?' ன்னு நினைச்சு விமானத்தைத் திடீருன்னு கிளப்பிட்டன்.

இதை தெரிஞ்சுக்கிட்ட விக்கிரமாதித்தன் தன்னோட வலது காலின் பெருவிரலைத் தேர் படிக்கட்டுல  அழுத்தமாக ஊணிக்கிட்டான். தேரோட்டி எவ்வளவு டிரை  செஞ்சும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவிலை.

உடனே தேரோட்டி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு பின்னாடி விமானம் தேவலோகம் நோக்கி போச்சு.

இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்கத்துல செஞ்ச சேரை கொடுத்து உக்கார வச்சான்.  விக்கிரமாதித்தனிடம் எல்லா மேட்டரையும்  சொல்லி  அவன்கிட்ட  ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான்.

""விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி ரெண்டு பேருல யாரை நீங்க செலக்ட் பண்றீங்களோ அவ கழுத்துல இந்த மாலையை போடுங்கன்னு னான் இந்திரன்.

போட்டி ஆரம்பமாச்சு. ரெண்டு பேரும்,  முன்ன மாதிரியே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காம ஆடினாங்க. விக்கிரமாதித்தனுக்கு யாரை செலக்ட் பண்ரதுன்னு  புரியலை.

போட்டி முடிவுஞ்ச  பிறகு, ""தேவேந்திரா, ரெண்டு பேரும் தனித்தனியாக ஆடினாங்க. அதனால, ரெண்டு பேருல யார் சூப்பரா டன்ஸ் ஆடுனாங்கன்னு என்னால கண்டுபிடிக்க முடியலை.    நாளைக்கு  ரெண்டு பேரையும் ஒண்ணா  ஆடச் சொல்லின்ங்க. அதைப் பார்த்தப் பின்னாடி என்னுடைய தீர்ப்பை சொல்றேன்,'' னான் விக்கிரமாதித்தன்.

மறுநாள் காலையில விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்கு போனான். அங்கு இருந்த பூவையெல்லாம் கிள்ளிக்கிட்டான். அதை  ரெண்டு பூச்செண்டுகளாகக் கட்டிகிட்டான். அதுக்குள்ள நிறைய வண்டுகளை வச்சு   கட்டினான்.

இரவு டன்ஸ் புரோகிராம்  நடக்கும் போது, தான் ரெடி பண்ணி வச்சிருந்த  பூச்செண்டுகளோட சபைக்கு போனான். டான்ஸ்   ஸ்டார்ட் ஆகறதுக்கு முன்னாடி , ""வெறுங்கையோடு  ஆடினா அழகாக இருக்காது. இந்தப் பூச்செண்டுகளை  பிடிச்சுக்கிட்டு ஆடினால அழகா இருக்கும்,'' ன்னு  சொல்லி விக்கிரமாதித்தன் ரெண்டு பேர்கிட்டயும்  ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான்.

ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் டான்ஸ் ஆட ஆரம்பிச்சாங்க. டைம் ஆக ஆக ரம்பை தன்னை மறந்தா. கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறி பிடிச்ச மாதிரி  ஆடிக் கிட்டிருந்தா. பூச்செண்டை அவள் அழுத்திப் பிடிச்சதால  அதுக்குள்ளிருந்த வண்டுகள் அவ கையைக் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தா. தாறுமாறாக, ஆட ஆரம்பித்தா. தாளம் தவறி ஆட ஆரம்பித்தா.

ஆனா, ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தா. இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினா.

இதிலிருந்து ஊர்வசியே சூப்பரா டான்ஸ் ஆடினான்னு   தீர்ப்பு சொன்னான் விக்கிரமாதித்தன், இந்திரன் கொடுத்த பாரிஜாத மாலையை அவளுக்கு போட்டான்.

விக்கிரமாதித்தனின் தீர்ப்பை பார்த்து  ஆச்சர்யப்பட்ட  இந்திரன் அவனைப் பாராட்டி, தான் இந்திரப் பட்டம் ஏறியப்போ பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக கொடுத்த  தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக கொடுத்தான்.

  ரொம்பவே அழகான அந்த சிம்மாசனத்துக்கு முப்பத்திரெண்டு படிகள் இருந்தன.ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்துச்சு. சிம்மாசனத்தில் ஏறதா இருந்தா  ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும்.

இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசா தந்த  இந்திரன், ""இந்த சிம்மாசனத்தில் உக்காந்துக்கிட்டு  ஆயிரம் வருசம்  சிறப்பாக ஆட்சி செய்யனும்ன்னு   வரமும் கொடுத்தான்.

ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை வந்து இப்ப இருக்குற அரசியல்வாதி போல இல்லாம நாட்டை நல்லவிதமா ஆண்டான்.

Friday, April 27, 2012

காதலியே திருமண பரிசாய்.....,திருமண வரவேற்பில்
மணமகனிடம் கை குலுக்கி..,
புகைப்படத்திற்கும் முகம்காட்டி...,
பரிசொன்றை தந்து...., 
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு..., 
மணமேடை கீழிறங்கி
இருவிழி கலங்கி நின்றேன்...
பத்து வருடம் தொட்டுவிட்ட
எங்கள் காதலின் பரிசாய்..,
வரவேற்பு பத்திரிக்கையை
எனக்கு தந்துவிட்டு?!  

மணமேடையில்
மணப்பெண்ணாய் என்னவள்?!!
மணக்கோலத்தில் இருந்ததைக் கண்டு...,
அலங்கோலமாய் நான்
அழுதுகொண்டே வெளிசென்றேன்...

நான் பத்திரப்படுத்த சொன்னது
பரிசை அல்ல?! காதலியையென்று
மாப்பிளைக்கு தெரியாது...
நான் இன்றும் அவள்தந்த
வரவேற்பு பத்திரிகையையோடு.....,

 அவளின் நினைவுகளையும்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறேனென்று
என் காதலிக்கும் தெரியாது...!

Thursday, April 26, 2012

உங்க வூட்டுக்காரரை உங்க கைப்பிடிக்குள் வைக்கனுமா?!

                                  
உங்க  வூட்டுக்காரரை உங்க கைப்பிடியில  வச்சுக்கனுமான்னு கேட்டு பாருங்க.....  ‘ஆமாம், ஆமாம்ன்னு தங்கமணிகளாம் ஜெட் வேகத்துல பதில் சொல்வாங்க.

வூட்டுக்காரரோட அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய ஈசியான வழிகள் பல இருக்கு. ஆனால், கொஞ்சமே கொஞ்சமா நம்மளை நாம மாத்திக்கிட்டால் போதும்.. கணவர் உங்க கைப்பிடிக்குள்ளதான்....,

காதலிக்கும்போதோ அல்லது காதலர்கள்  மட்டும் தான் ஐ லவ் யூ சொல்லனும்ன்னு இல்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லிக்கலாமே. தினமும் உங்க கணவரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவரும் மகிழ்ந்து போய் ஐ லவ் யூ டூ டா செல்லம் ன்னு சொல்வார்(அதுக்காக யாராவது கெஸ்டுங்க முக்கியமா மாமியார் நாத்தனார் வரும்போது சொல்லி கேலிக்கு ஆளானால் நான் பொறுப்பல்ல)

கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்க. திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும். (புத்தி தெரிய ஆரம்பித்த பிள்ளைகள் இருப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிங்க. அப்புறம் அப்பா அம்மாக்கு இளமை திரும்பிட்டுதுன்னு கேலி பேசும்ங்க).

கணவருக்கு மரியாதை கொடுங்க. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டா விட்டுக் கொடுத்துச் செல்லுங்க. நீங்க ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.

என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும்ன்னு நம்புங்க.
கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்க. நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்க.

கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீங்க. உங்க பிரச்சனைகளை நீங்க பேசித் தீர்த்துக் கொள்ளுங்க. இல்லைன்னா சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.

எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீங்க. அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமான்னு கணவர் புகழ் பாடுங்க. உங்களவருக்கு உங்க மீது கிரேஸ் கூடும்.

கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்க. கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்க, விளையாடுங்க. இது மன இறுக்கத்தைப் போக்கும்.

உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே மனுஷிங்களா ராட்சசிங்க என்று மட்டும் மாமியார், நாத்தனார்களைப் போட்டுக் கொடுக்காதீங்க. குறை இருந்தால் சொல்லலாம், ஆனால் பட்டென உடைத்து படாரென பேசி கெடுத்து விடக் கூடாது. எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். இல்லைன்னா உங்க வாழ்க்கையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டது போன்றதாகிவிடும். எதையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்க. அவர் புரிந்து கொள்வார்.

உங்கள் மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் பொண்டாட்டி சும்மா தான் இருக்கா நீங்க தான் அவ கூட சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றீங்கன்னு உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.

சண்டை போடாத கணவன், மனைவி இந்த உலகத்துல இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு இதில் நிறையப் பங்கு உண்டு. அதையும் விடாதீர்கள். அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள்.

கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்க வசப்படுத்தனும்னு அவசியமில்லை. அன்பாலும் உங்க பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், பிறகு உணர்வீர்கள் உங்களவரிடம் அருமையான மாற்றங்களை…!

Tuesday, April 24, 2012

பெற்றால் தான் தாயா ??!!


அரச மரம் சுற்றி,நெய் தீபம் ஏற்றி ,
மண் சோறு உண்டு,பல மருத்துவமனைகள்
 படியேறி பல செயல்கள் செய்தும்..., மனமிரங்காமல்?!
 என்னை வஞ்சிக்கும் தெய்வமே ...
நீ என்று மனம் இறங்குவாய் ??தூக்கம் வற்றிய எனது கண்களும்..
கண்ணீரில் நனைந்த என் தலையணையும்....,
 எந்த விடியலில் மாறும்..?

நீ சிரிக்கும் போது நானும் சிரித்து..
நீ அழும் போது, நானும் அழுது...
 உன்னை கையில் ஏந்தி கொஞ்சி மகிழவென்று,
 நான் உன்னை பெறுவேன் என் செல்லமே ...,


குரலெடுத்து அழுகின்ற....,
 பக்கத்து வீட்டு குழந்தையின் அழு குரல்
 கேட்கும் போதும் , சிரித்து விளையாடும்
ஒலி கேட்கும் போதும்,  இனம் புரியாத இரக்கமும்,
 மகிழ்வும் தோன்றும் எனது தன்மைக்கு...,
’மலடி’ என்றொரு மற்றொரு பெயரா?


இருவரில் யாரிடத்தில் குறைகள்
இருப்பினும் ”மலடி”  பட்டம் பெறுவது
 பெண்கள் மட்டும் தானே !?

பிச்சை எடுத்து செல்லும் சின்னஞ்சிறு
பிள்ளைகளை பெற்று நடு வீதியில்
 விட்டு சென்றவள்தான் தாயா?!


அந்த பிச்சை எடுத்து செல்லும்
பிள்ளைகளை கண்டு மனம் வாடும்
நான் மலடியா..?!

பிள்ளைகளை வளர்க்க வழி இன்றி,
 தெருவில் விடும் பேதைகளை தாயென்று?!
 கொண்டாடும் உலகம்..., என்னை ”மலடி”
 எனக் கூறி மகிழ்வது என்ன நியாயம்?
பெற்றால் தான் தாயா ?  


Monday, April 23, 2012

கழுதையாக மாறிய ஹீரோ - ஐஞ்சுவை அவியல்

சிவனின் அம்சம்...,                
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.


ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.


ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.


ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.


இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.


சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
                               
கழுதையாக மாறிய ஹீரோ...
டைரக்டர்: ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்!  
ப்ரொடியூசர்: சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை கழுதையா மாத்திடறது மாதிரி எடுத்திடலாம். 
                                 
கணக்கு போடலாம் வாங்க...,
ஒரு பையில் 175 காசுகள் உள்ளன. அவை ரூ 1, 50காசு, 25 காசுகளாக உள்ளன. அவை ஒரே மாதிரியான தொகையை கொடுக்க கூடியவை. பையில் எத்தனை எத்தனை காசுகளாக இருந்தது. பையிலிருந்த மொத்த பணமிருந்தது?
விடை வழக்கம் போல் அடுத்த பதிவில்....,  
எப்படிலாம் யோசிக்குறான்!? 
சமீபத்துல என் பொண்ணு தூயா படிப்பு விசயமா வேலூர்ல இருக்குற இன்ஜினியரிங் காலேஜுக்கு நான், தூயா, என் பையன் அப்பு மூணு பேரும் போனோம்.  அப்போ எதாவது சாப்பிடலாமேன்னு அங்கிருக்கும்  கேண்டீனுக்கு போனோம். 
ஜூஸ் கார்னர்ல போய் என்ன ஜூஸ் இருக்குன்னு கேட்டோம். அவங்க ஜூஸ் பேரை சொல்லிக்கிட்டே வந்தாங்க. JAVA green juice, JAVA Blue juice,  JAVA Orange juicen ன்னும்,  அது புதுசா இருக்கவே JAVA green juice ஒண்ணு வாங்கி வந்து குடிக்க ஆரம்பிச்சவன் திடீர்ன்னு...,
 ஏம்மா, இது  இன்ஜினியரிங் காலேஜ் அதனால ஜூஸுக்கு JAVAன்னு பேர் வச்சிருக்காங்க. இதுவே மெடிக்கல் காலேஜா இருந்தா, tablet, injection, pshiyoன்னு பேர் வைப்பாங்களான்னு கேட்டான். அதை கேட்டு அங்க இருந்த ஸ்டூடண்ட்ஸ்லாம் எப்படிலாம் யோசிக்குறடான்னு கிண்டல் பண்ண, அவன் அசடு வழிய நின்னான்.
செஞ்சுதான் பாருங்களேன்..., 
பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம். வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது. மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும்.
 

Friday, April 20, 2012

மறவாதிருக்கும் வரம் தருவாய் இறைவா

                               
 
காலை என்னை எழுப்பும் அலார கடிகாரமாய் புல்லினங்கள் ஒரு சேர எழுப்பும் காலை கீதங்கள்...,
எழுந்ததும் சன்னல் கதவை முட்டி கொண்டு என்னை ஸ்பரிசிக்கும் தென்றல் காற்று....,

புற இருளை விரட்ட இறைவன் முன் ஏற்றிய  குத்துவிளக்கின் முத்துப்போன்ற சுடர்...,
அக  இருளை போக்க இறைவனை தியானிக்கும்போது ஏற்படும் மன அமைதி...,
நெருப்பில் காய்த்து பழுத்த பழம் போன்ற இளம் காலை சூரியன்...,
 எங்கிருந்தோ காற்றில் கலந்து வரும் மலர்களின் வாசம் அல்லது இறைவனுக்கேற்றிய ஊதுவத்தி வாசம்...,
கோவமாய் இருக்கும்போது எதேச்சையாய் சினேகமாய்  பார்த்து சிரிக்கும் எதிர்வீட்டு குழந்தை...,
வாலை மேலே தூக்கி கொண்டு ஏதோ சொல்ல வருவது போல கிட்ட வந்து முகர்ந்து விட்டு ஓடும் பக்கத்து வீட்டு நாய்...,
காலை நேர அவசரத்திலும் வாசலில் அழகாய்  விரிந்த மாக்கோலம்....,
வாஸ்துக்காய் சிறு மண்சட்டி தண்ணீரில் வைத்த செம்பருத்தியும்,சாமந்தியும்....
வண்டி ஓட்டும்போது திடீரென்று முன்வந்து திக்குமுக்காட வைக்கும் இளம்கன்றுக்குட்டியின் துள்ளல்...,
தூரத்து உறவுகளிலும் கூட வெளிப்படும் அன்னியோன்யம்...,
கொத்து கொத்தாய் இலைகளையும், பூக்களையும் சுமந்திருக்கும் கொன்றை மரம்...,
நீல பட்டாடையை விரித்தது போன்ற வானம், பஞ்சு பொதிகளாய் திரியும் மேகங்கள் சில்காற்று பட்டு கருமேகமாய் மாறி  மழை பொழியும் அதிசயம்...,
பார்க்க பார்க்க சலிப்பு தட்டாத அஸ்தமன சூரியன்...,
சூரியன் அழகை வியந்தவாறே கூடு நோக்கி பறக்கும் பறவைகள்...,
உரு மாறி வரும் நிலவை ரசித்தவாறே மொட்டை மாடியில் குடும்பத்துடன் உண்ணும் “நிலாச்சோறு”...,
ஒரே சீராக செல்லாமல் பல வழித்தடங்களில் ஓடும் என் எண்ண அலைகள்...,

உலக துனபங்களை கண்டு சோர்ந்திருக்கும் வேளையில் எனக்கும் வாழும் ஆசையை கூட்டும் என் மழலை செல்வங்கள்....,

இவைகளை பார்த்து, ரசித்து, உணரும்போது நான் அனுபவிக்கும் இன்பம், ஆனந்தம், உவகை, உத்வேகம் இவை எல்லாம் என்னுள்ளிலிருந்து தான் என்பதை மறவாதிருக்கும் வரம் தருவாய் இறைவா!!!...,

Wednesday, April 18, 2012

கார் என்ஜின் சிறப்பாக இயங்க சூப்பர் டிப்ஸ்

                                              
காரின் இதயம் போன்றது என்ஜின் . அதன் பராமரிப்பே வாகன பயணத்துக்கு இனிமை சேர்க்கும். என்ஜின் சிறப்பாக இயங்க இதோ சில டிப்ஸ்......

என்ஜினில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதன் சக்தியை மேம்படுத்தலாம். அதாவது என்ஜின் சிலிண்டர்கள் எண்ணிக்கையை  அதிகரிப்பது அல்லது பெரிய சிலிண்டரை பொறுத்துவது என்ற சின்ன மாற்றத்தின் மூலம் என்ஜின் இயக்கத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இது என்ஜினின் இயக்கத்துக்கு தேவையான எரிபொருளை துரிதமாக கிடைக்க உதவும்.
                                                      
சிலிண்டரில் எரிபொருளுடன் போதுமான அளவு காற்றும் நிரம்பி இருப்பது என்ஜின் திறனை அதிகரிக்கும். டர்போ சார்ஜர் அல்லது சூப்பர் சார்ஜர் இருந்தால் சிலிண்டரின் உட்புட்கும் காற்றின் அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்.

உட்புகும் காற்றை  குளிர்வாக பராமரித்தால் என்ஜின் இயக்கம் மேம்படும் காற்று கம்ப்ரஸ்ஸன் செய்து அழுத்தப்படும்போது வெப்பக்காற்றாக மாறும். அது நிறைய இடத்தை அடைக்கும் என்பதால் வாயுவை குளிர்ச்சியாக வைத்திருப்பது என்ஜின் இயக்கத்திற்கு நல்லது. டர்போ சார்ஜர் இருந்தால் அதில் காற்றை குளிர்வாக வைத்திருக்கும் ‘இண்டர் கூலர்’இருக்கும். இது சிறப்பு ரேடியேட்டர் போல செயல்பட்டு காற்று சிலிண்டருக்குள் போகும்போதும், வெளியேறும்போதும் குளிர்ச்சியை நிலைநிறுத்தும்.

காற்று குளிர்ச்சியாக இருப்பது சிலிண்டருக்குள் எளிதாக உள்ளே சென்றுவர உதவும். பிஸ்டனில் உள்ள வால்வு காற்றை உள்ளிழுக்கும்போது என்ஜின் அதிகமான சக்தியை இழக்கும். குளிர்காற்றாக இருந்தால் அதிகமான சக்தியை இழக்கும். குளிர்காற்றாக இருந்தால் குறைந்த அள்வு சக்தியே போதும்.  நவீன கார்களில் இப்பணியை செய்ய ‘இண்டேக் மானிபோஸ்ட்’ தொழில்நுட்பம் பயன்படுத்தகிறது. பெரிய காற்று வடிகட்டிகளும் காற்றின் இயக்கத்தை துரிதப்படுத்தும்.

காற்று வெளியேறும் வால்வுகள் அதிகம் இருப்பதும் என்ஜின் இயக்கத்தை மேம்படுத்தும். சிலிண்டரில் காற்று வெளியேறாமல் தடுத்து நிறுத்தப்படும் சூழல்  ஏற்பட்டால் என்ஜின் அதிகமான சக்தியை இழக்கும். எனவே காற்று வெளியேறும் வால்வுகளை சரியாக பராமரிப்பதன் மூலமும் என்ஜினை சிறப்பாக இயங்கச் செய்யலாம். உயர்தர கார்களில் ஒன்றுக்கு இரண்டாக இந்த வால்வு அமைக்கப்பட்டிருப்பதால் அவை சிறப்பாக செயல்படும்.

 மோட்டாரின் கம்ப்ரஸ்ஸன் அளவை மாற்றி அமைப்பதன் மூலமும் என்ஜின் இயக்கத்தை அதிகமாக்க முடியும். மோட்டார் கம்ப்ரஸ்ஸன் அதிக அளவில் இருந்தால் என்ஜினுக்கு நிறைய சக்தி கிடைக்கும். இந்த அழுத்த அளவு அதிகமாக இருந்தால் காற்றையும், பெட்ரோலையும் நல்ல முறையில் கலந்து கொடுக்கும். ஆக்டேன் கேசோலின் வாயுக்கலவை தூண்டப்பட்டு எளிதில் எரிப்பொருள்(பெட்ரோல்) தீப்பற்றி என்ஜின் இயக்கத்துக்கு பயன்படுகிறது. நவீன கார்களில் ஆக்டேன் காசோலின் நிறையவே தேவைப்படும் என்பதால் எப்போதுமே மோட்டார் கம்ப்ரஸ்ஸன் அதிக அழுத்தத்திலேயே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ஜின்  பாகங்கள் அனைத்தும் குறைந்த எடை கொண்ட தாதுப்பொருட்களால் செய்யப்பட்டிருந்தால் என்ஜின் இயக்கம் மிக சிறப்பாக இருக்கும்.

சிலிண்டரில் எரிபொருள் நிரப்பும்போது கருவிகளின் உதவியுடன் ஒவ்வொரு சிலிண்டரிலிம் சம அளவில் எரிப்பொருளை நிரப்பினால் என்ஜின் செயல்பாடு சிறப்பாக இருப்பதோடு எரிப்பொருளையும் மிச்சப்படுத்தலாம்.

டிஸ்கி: கார் வாங்க ஆசை வந்துட்டுது. அதை வீட்டுல சொன்னா திர்ட்டுவாங்க. இப்படி பதிவா போட்டாலாவது புரிஞ்சுக்குறாங்களான்னு பார்க்கலாம்.

நன்றி: தினத்தந்தியிடமிருந்து தகவலும், படம் கூகுளிலிருந்தும் சுட்டுட்டேன்

Monday, April 16, 2012

ரெண்டு பொண்டாட்டிகாரன் படும் பாடு..., ஐஞ்சுவை அவியல்

ரெண்டு பொண்டாட்டிகாரன் படும் பாடு...,     
                                  
ஒரு பொண்டாட்டி கட்டுனவனே உலகமே வெறுத்து போறளவுக்கு லோல் படுறான். இன்னும் ரெண்டு பொண்டாட்ட்டி கட்டிட்டாலோ கேட்கவே வேணாம். அவன் படுற இம்சை இருக்கே. இதுக்கு, மனிதன் மட்டுமல்ல இறைவனும் விதிவிலக்கல்ல.

   அலங்கார ஸ்வரூபனாக கண்ணன் பாமாவின் இல்லத்துள் புகுந்தான். அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தாள் பாமா. அவளைக் கண்ட கண்ணன் அவளின் முன்னால் அமர்ந்து அவளது முகவாயைப் பிடித்துக் கொஞ்சினான்.திரும்பிப் பாராமலேயே பேசினாள் பாமா. "இந்த அலங்காரங்களை அவளிடம்தான் செய்து கொள்ள வேண்டுமா?ஏன்?நான் செய்ய மாட்டேனா?"

"இதற்காகவா இத்தனை கோபம்?வேண்டுமானால் இந்த அலங்காரங்களைக் கலைத்து விடுகிறேன். நீ எனக்கு அலங்காரம் பண்ணி விடு."பாமாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு கெஞ்சினான் கண்ணன்.
ஒரு வழியாக சமாதானமானாள் பாமா. அன்று முழுவதும் கிருஷ்ணன் பாமாவின் இல்லத்திலேயே கழித்தான்.சிலநாட்கள் கழிந்தன. அன்றும் பாமாவிற்குக் கோபம். என்ன என்று புரியாமலேயே தவிப்பது போல நடித்தான்   கண்ணன்.  வெகுநேரம் கண்ணன் கெஞ்சவே சற்றே கோபம் தணிந்தாள் பாமா.
"நீங்கள் என்னிடம் இருப்பதை விட அந்த கோபிகையரிடமே அதிக நேரம் தங்கிவிடுகிறீர்களே. அதுதான் எனக்குப் பிடிக்கவேயில்லை."
      "இனி அந்த கோபியருடன் சேருவதில்லை. உனக்கு மகிழ்ச்சிதானே பாமா?" பாமா சற்றே புன்னகையை உதிர்த்தாள். சினம் தணிந்த பின் தன் கிருஷ்ணனின் மீது அன்பைப் பொழிந்தாள். கண்ணனும் அவள் அன்பில் திளைத்தான்.
      
    இரண்டு நாட்கள் கழிந்தன.அன்றும் பாமா கண்ணனை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தாள்.  கண்ணன் வரவில்லை. ஆனால் கண்ணனைத் தேடி அவன் அன்பிற்குரியவளான ராதை,  பாமாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்.அவளைப் பார்த்ததும் அவள் மீது பொறாமையும் கோபமும் கொண்டாள் பாமா. தனக்கே உரிய கண்ணன் மீது அவள் அன்பு செலுத்துவது பாமாவிற்குப் பிடிக்கவில்லை.இருப்பினும் இல்லம் வந்தவளை கல்கண்டு கலந்த பால் கொடுத்து உபசரித்தாள்.
                          அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ராதை" கிருஷ்ணார்ப்பணம்"  என்று சொல்லிப் பருகினாள். மீண்டும் கண்ணனைத் தேடி வெளியே ஓடிவிட்டாள் ராதை.
           வழக்கம்போல் மாலைவேளையில் கண்ணன் பாமாவைத் தேடி அவளது இல்லத்திற்கு வந்தான்.வரும்போதே மிகுந்த வேதனையை முகத்தில் தாங்கி வந்தான். நேராக ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான். ஒருநாளும் இல்லாத் திருநாளாக கண்ணன் இப்படிச் செய்தது பாமாவுக்குப பேரதிர்ச்சியாக இருந்தது.கண்ணனின் அருகே ஓடி வந்தாள்.அவன் முகத்தை வருடினாள்."சுவாமி! என்னவாயிற்று தங்களுக்கு?ஏன் இந்தச் சோர்வு? " என்றாள்.

"பாமா! என் கால் மிகவும் வலிக்கிறது. ஏனென்று தெரியவில்லை." என்றபடியே கால்களைக் காட்டினான் அந்த மாயக் கள்ளன்.பாமாவும் அவன் காலடியில் அமர்ந்து கால்களைத் தன் மடிமீது வைத்துக் கொண்டு வருடினாள்.
திடுக்கிட்டாள். கண்ணனின் பாதங்கள் இரண்டிலும் பெரிய பெரிய கொப்புளங்கள் இருந்தன.துடித்து விட்டாள் பாமா. "தங்களுக்கு ஏனிந்த நிலை சுவாமி?"

"பாமா! நான் என்ன செய்வேன்? யாரோ என் பக்தைக்கு சூடான பானம் அருந்தக் கொடுத்துள்ளார். அவள் அதை எனக்கு அர்ப்பணித்துவிட்டுப் பின் பருகினாள். அந்தப் பானத்தில்  இருந்த சூட்டை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த பக்தை தன்  உள்ளத்தில் எப்போதும் என் பாதங்களை வைத்துப் பூஜிக்கிறாள்.அத்தகைய பக்தையைக் காக்க வேண்டியது இந்தப் பரந்தாமனின் கடமையல்லவா பாமா?" 

பாமா வெட்கித் தலை குனிந்தாள். ராதைக்குத் தான் கொடுத்த சூடான பால்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டாள்.அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

"பரந்தாமா! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்த தவறுதான் உங்களின் இந்த நிலைக்குக் காரணம்.தங்கள் மீது அளவு கடந்த அன்பைப் பொழியும் ராதையின் மீது நான் பொறாமைப் பட்டேன். அதன் காரணமாக மிகவும் சூடான பாலை அவள் பருகக் கொடுத்தேன்.அவள் துன்பப் படுவாள் என நினைத்தேன். நான் செய்த இந்தத் தவறை மன்னித்து விடுங்கள்.உண்மையான பக்தி கொண்ட ராதாவை நான் சோதித்து விட்டேன். என் தவறைப் பொறுத்தருளுங்கள்." கண்ணனின் கால்களைப் பற்றிக் கொண்டு பாமா கதறினாள்.

அவளது கண்ணீர் பட்ட மறுகணமே கொப்புளங்கள் மறைந்தன. அதனுடன் சேர்ந்து பாமாவின் பொறாமையும் மறைந்தது.

                                              
 புதிருக்கு விடை சொல்லுங்க?!.....
                                         
ஆதி காலத்தில் அப்பனை விட்டவள் ...
அறிவுள்ள கையில் வந்து அமர்ந்தவள் ...
வெட்டுக்கும் கட்டுக்கும்கட்டுப்பட்டவள்....
வேதனையில் மேனி கிழிந்தவள்...,
ஏற்றி மஞ்சளும் வைப்பாள்...
பொட்டும் வைப்பாள்...
ஆனால், அவள் பெண்ணல்ல..,
அப்படின்னா அது யாரு?விடை வழக்கம் போல் அடுத்த பதிவில்...
                                        
                                   

வாய்விட்டு சிரிங்க..., நோய் விட்டு போகும்...,

                                                                
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
 டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னுதானே  எழுதியிருக்கேன்.
                              
  ஹோம் வொர்க் செய்றாங்களாம்...,
எல்.கே.ஜி. படிக்கும்போது  என் பையன் அப்பு,  ஹோம் வொர்க் எழுதிக்கிட்டு இருந்தான், நோட்டைப் பார்க்காமல் முகத்தை மட்டும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு எழுதினான். இரண்டு, மூன்று முறை அவன் முகத்தை நேராக வைத்து எழுத வைத்தேன். திரும்பவும் முகத்தைத் திருப்பி, நோட்டைப் பார்க்காமல் எழுதினான். புரியாமல்,
''ஏண்டா செல்லம் இப்படி பண்றே..?'' என்று கேட்க, அவன் சொன்ன பதில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ''அம்மா... மிஸ்தான் பார்க்காம இந்த ஹோம் வொர்க்கை எழுதிட்டு வரச் சொன்னாங்க... அதான் பார்க்காம எழுதறேன்!'' என்றான் சின்ஸியராக. பாட நோட்டை பார்க்காமல், ஹோம் வொர்க் எழுத வேண்டும் என்று கஷ்டப்பட்டு புரிய வைத்த பிறகு, அவன் சிரித்த சிரிப்பு... ஆஹா
                                      
செஞ்சுதான் பாருங்களேன்
சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.
9. சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும். 
மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.
ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும்.

Saturday, April 14, 2012

வல்லவனுக்கு வல்லவன் - நான் யார்?


முறை தவறிப் போய் யாருக்கும் நான்
இதுவரை தீங்கிழைக்கவில்லை. ஆனால்,
என்னால் பலரது வாழ்க்கை அழிந்துள்ளது. 
அரசுகள் சீரழிந்துள்ளது. 
நோய்கள் தீவிரமடைந்துள்ளது.

நான் யாரையும் தாக்கவுமில்லை.
கடுமையாகப் பேசவுமில்லை. ஆனால், என்னால்
பல குடும்பங்கள் சிதைந்துவிட்டன. நட்புகள் 
உடைந்துவிட்டன. 

குழந்தைகளின் குதூகலம் மறைந்துவிட்டது.
 மனைவியர் மனம் கசந்து கண்ணீர் விட்டனர். சகோதரர்களும் 
சகோதரிகளும் பிரிந்தனர். பெற்றோர்கள் மனமுடைந்து 
கல்லறைக்குச் சென்றுவிட்டனர்.

நான் ஒருவருக்கும் தவறிழைக்கவில்லை. 
ஆனால், என்னால் திறமைகள்  தோற்றுவிட்டன.
மரியாதையும், அன்பும் மறைந்துவிட்டன. 
வெற்றி இழப்பையும், மகிழ்ச்சி துயரத்தையும் தந்துவிட்டன.

நான் யார் தெரியுமா?! 
என்னுடைய பெயரை கேட்டாலே 
நீங்கள் நடுக்கம் கொள்வீர்கள்!

நான் ஆற்றல் மிக்கவர்களைவிட 
ஆற்றல் மிக்கவன்!
சிறப்பு வாய்ந்தவர்களைக் காட்டிலும்
 சிறப்பு வாய்ந்தவன்!
வல்லமை மிக்கவர்களை  விடவும் 
வல்லமை மிக்கவன்!

எனது பெயர்தான்  அலட்சியம்.

Friday, April 13, 2012

அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல மனிதனும் தான்

  
அறிவு பசிக்கு அன்பை விற்று விட்டோம்...,
அன்பு இன்று ஒரு கேளிக்கை வார்த்தை?!

பணத்தின் தேடலில் இழந்தது நிம்மதி...,
ஆடம்பரமான வாழ்க்கை. ஆனால் போலியான புன்னகை?!

படிப்பில் நூறு புள்ளி எடுக்க படிக்கும் இளைஞர்கள்....,
சுயநல வட்டதிற்குள் ,சமூக முன்னேற்றத்தில் எடுப்பது பூச்சியம்?!

நவீன மாற்றங்களால் உலகம் சுருங்கி விட்டது போல் ஒரு நிழல்....,
தனி தனி உலகமாக வாழும் நமக்குள் இடைவெளி அதிகம்?!

ஆயுதம் செய்பவனின் அசைக்க முடியா மூலதனமாக
மாறிய ஆசிய நாடுகளின்  மதவெறி, இனவெறி..?!

மனங்களின் இறுக்கம், இயற்கையின் சீற்றம் ,அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல.., மனிதனும் தான்....,

மலர்ந்திட்ட தமிழ் புதுவருடம் எங்கள் ஒவ்வொருவர் மனதிலும்
மற்றவர்களை நேசிக்கும் ஒரு சிறிய மாற்றத்தை தரட்டும்

நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்கும் நல் விடயங்கள்
உங்களுக்கு வெற்றியுடன் கூடிய சந்தோசம் தர

எனது நண்பர்கள்,அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள்
   

Thursday, April 12, 2012

நெருப்பு கக்குமா? நெருப்புக் கோழி

உலகின் மிகப் பெரிய பறவை ஆஸ்ட்ரிச். இதை நெருப்புக்கோழி என்றும் சொல்வார்கள். ஆனால், நெருப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே போல எதிரிகள் தாக்க வரும்போது தலையைத் தாழ்த்திக்கொள்ளுமே தவிர, மணலில் புதைத்துக்கொள்ளும்போது என்பது தவறான கருத்தாகும்.

இவற்றின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. விலங்கியல் பெர்யர் ஸ்ட்ருதியோ கேமெலஸ் (Struthio camelus). கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சஹாரா பகுதிகளில் உள்ள வறண்ட புல்வெளிகளில் இவை வசிக்கும்.

சுமார் 8 அடி உயரமும் 105 கிலோ எடையும் கொண்டது. இதன் பெருத்த உருவம் பறப்பதற்குத் தடையாக இருந்தாலும், வேகமாக ஓடக்கூடியது. இதன் வேகம், மணிக்கு 64கிமீ பறவைகளில் வேகமாக ஓடக்கூடியதும் இதுதான். 

இதன் சிறகுகள், கடுமையான வெப்பத்தில் இருந்து காக்கும் வகையில், மென்மையான பொதி போல் இருக்கிறது.  இதன் இறக்கையில் இன்னொரு வித்தியாசமான அமைப்பும் உண்டு. இறக்கையின் முடிவில் இரண்டு கொக்கிகள் போன்ற நகங்கள் இருக்கும். இதன் மூலம் எதிரிகளைத் தாக்கும்.
                            
தாவர உணவுகளையே உண்டாலும், சில சமயங்களில் சிறிய புழு, பூச்சி, ஓணான் போன்ற ஊர்வனவற்றையும் சாப்பிடும். நான்கு வயதில் முட்டையிடும் பருவத்தை அடையும். 30 முதல் 70 வயது வருடங்கள் வரை வாழும்.

இதன் முட்டை உலகிலேயே மிகப் பெரியது. ஒரு முட்டை சராசரியாக 1.4 கிலோ எடை இருக்கும். இது, 40 கோழி முட்டைகளின் அளவுக்குச் சமம்.
                                    
முட்டைகளை, இரவில் ஆண் பறவியும், பகலில் பெண் பறவையும் அடகாப்பது இந்த இனத்தின் சிறப்பு. இதற்கும் ஒரு சுவாரசியமான காரணம் இர்டுக்கிறது. ஆண் பறவையின் சிறகுகள் ஏறக்குறைய சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.இரவில் முட்டைகளைத் தின்ன வரும் எதிரிகளுக்கு, எளிதில் அவை தென்படாது. அதேப்போல, பெண் பறவையின் இளம் பழுப்பு நிறச் சிறகுகள், சுற்றிலும் இருக்கும் புல்லின் நிறத்தை ஒத்திருப்பதால், பகலிலும் முட்டைகளுக்குப் பாதுகாப்பு. 45 நாட்கள் அடைக்காக்கப்பட்ட பிறகு, குஞ்சுகள் பொரிக்கும். 
                                  

 இவற்றின் சிறகுகள் தொப்பிகள் செய்யவும், தோல் அலங்காரப் பொருட்கள் செய்யவும், இறைச்சி உணவாகவும் பயன்படுகிறது.

குதிரைகளுக்குப் பூட்டுவது போல சேணங்கள், கடிவாளம் போன்றவற்றாஇப் பூட்டி, வண்டிகளை இழுக்கச் செய்வதும் மேலை நாடுகளில் சகஜம். ஆஸ்ட்ரிச்களுக்கான ஓட்டப் பந்தயமும் பிரபலமானது.

டிஸ்கி: தகவல்கள் சுட்டி விகடனிலிருந்தும், படங்கள் கூகுளிலிருந்தும் சுட்டது.