Friday, April 29, 2011

இன்றாவது கைக்கொடுத்திருப்பாயா!!?? சகோஅன்புள்ள சகோதரனே,
நீ நலமா? நான் நலம். அங்கு உன் உற்றார் நலமா?

தாயின் கருவறை என்னும் இருட்டறையில் பத்து மாதம் தனித்திருந்தேனே.., அப்போது துணைக்கும், உயிரமுதத்தை போட்டியிட்டு பருகவும் நீ வரவில்லை..,

தத்தி நடக்கும்போது விரல்பிடித்து நடைப்பழக்கவும், ஓடி விளையாடும்போது கீழே விழும் என்னை தாங்கி பிடிக்கவும் நீ வரவில்லை, கொட்டாங்கச்சியில் மணலைக் கொட்டி சுட்ட இட்லியையும், கருவேல மரத்து இலையை அரைத்து வைத்த சட்னியை உண்ணவும், இன்னொரு இட்லி கேட்டு நீ அடம்பிடிக்க நான் தர மறுக்க, காலால் இட்லியை சிதைக்கவும் நீ வரவில்லை..,

பள்ளியில் பல்பத்தை தின்றதையும் , சிலேட்டை எச்சிலால் அழித்ததையும், சைக்கிள் பழகி பாவடைக் கிழித்துக் கொண்டு வந்து அம்மாக்குத் தெரியாமல் மறைத்ததையும் அம்மாவிடம் போட்டுக் குடுத்து நான் அடிவாங்குவதைக் கண்டு ரசிக்கவும் நீ வரவில்லை.., ,

என் உண்டியல் காசை நீ திருடி சினிமா பார்த்ததையறிந்து, உன்னைக் கண்டிக்க, அப்பிடித்தாண்டி செய்வேன் னு நறுக்கென்று என் தலையில் கொட்ட, வலித்தாங்காமல் அழும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பாவிடம், நிலைப்படியில் இடிச்சுக்கிட்டேன்பா எனப் போய்ச்சொல்லி உன்னை நான் காப்பாற்ற.., கண்களால் நன்றியுரைக்க நீ வரவில்லை..,

நான் சடங்காகி "குச்சி வீட்டுக்குள்" அமர்ந்திருக்கையில், அவளைத் தீண்டதேடானு சொன்ன கோடி வீட்டு ருக்குப் பாட்டிக்கு தெரியாமல் உள் நுழைந்து, எனக்கு தந்த பலகாரங்களையெல்லாம் என் வாய் பொத்தி திண்ணவும் நீ வரவில்லை..,

தெருமுனையில் காலிப் பசங்க கிண்டல் பண்றாங்க, நீ துணைக்கு வாடா பயமா இருக்குனு உன்னை கெஞ்ச, ஆமாம் இவ பெரிய உலக அழகி இவளைப் பார்க்க வர்றாங்கன்னு ,ச்சீப் போடின்னு என்னை துரத்திவிட்டுட்டு, என் பின்னாடியே வந்து, அவர்களைப் புரட்டி எடுக்க நீ வரவில்லை. ..,

பரிட்சைக்கு செல்கையில் பாசாகி என் மானத்தை காப்பாத்துடின்னு விபூதியிட்டு, என்னை பரிட்சை எழுத அனுப்பிவிட்டு, பள்ளி வாசலில் நான் வரும்வரை கால்கடுக்க காத்திருக்க நீ வரவில்லை..,

இந்த மாப்பிள்ளையதான் நீ கட்டிக்கிடணும்னு சொல்லி அப்பா அதட்ட, நான் விசாரிச்சுட்டேன், இவன் சரியில்லை, அவளுக்கு கோடி வீட்டு தமிழைத் தான் பிடிச்சிருக்கு அவன் நல்லவன் அவனுக்கே கட்டி வச்சுடுங்க அவ நல்லா இருப்பாள்னு எனக்கு பரிந்துக் கொண்டு பேச நீயில்லை...,

மசக்கையில் வாந்தி எடுக்கும்போது கையிலேந்திப் பிடிக்கவும், ஒன்பதாம் மாதம் பூமுடிக்கையில் எங்கோ ஒரு மூலையில் சாம்பார் வாளியைக் கையில் ஏந்திக்கொண்டு என் மேடிட்ட வயிற்றைக் கண்டுப் பூரிக்கவும் பிரசவ வேதனையில் துடிக்கும்போது, நான் இருக்கேண்டா பயப்படாதேடா னு என் கைப்பிடித்து ஆறுதல் சொல்ல நீ வரவில்லை..,

மருமகப் பிள்ளையை நடுங்கும் விரலுடனும் கண்ணீர் துளிகளுடனும் ஏந்திக் கொள்ளவும், மடியிலிருத்தி காது குத்தவும், தங்கை மகளுக்கு "குச்சுக் கட்டி சீர் செய்யவும்" நீ வரவில்லை..,

இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடிந்த என்னால்..,

தரையில் படுக்க வைத்தால் ஈ, எறும்பு கடிக்குமென மார்மீதே உறங்க வைத்து, தன் தோள் மீதேற்றி.., இந்த உலகை காண வைத்த தந்தை, இன்று "படுத்த படுக்கையில்"...,,

மகளேயானாலும், என்னாலும் செய்ய முடியாத பணிவிடைகள் "சில" உண்டு.
அதைச் செய்ய இயலாமல், தத்தளித்து , தடுமாறி, தோள்சாய ஆளின்றி தவிக்கிறேன்,

ஒருவேளை இன்று நீ என்னருகில் இருந்திருந்தால் .., கை கொடுத்திருப்பாயா??!! சகோதரா?


இப்படிக்கு,
உன்னுடன் பிறந்து , உன் மடியில் தவழ்ந்து, உன் விரல் பிடித்து வளர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்த,
துரதிர்ஷ்டசாலியான சகோதரி.

Monday, April 25, 2011

பாரதியால் நான் படும் அவஸ்தை...,

"அச்சம் தவிர் " என்கிறான் பாரதி..,
"பயந்தது நட" என்கிறார் அப்பா!!??

"துணிந்து நில்" என்கிறான் பாரதி..,
"பணிந்து செல்" என்கிறாள் அம்மா..,

"ரவுத்திரம் பழகு" என்கிறான் பாரதி..,
"கோபம் குறை" என்கிறான் அண்ணன்!!??

"சிறுமை கண்டு பொங்கு" என்கிறான் பாரதி..,
"நமக்கேன் வம்பு", கண்டுக்கொள்ளாதே" என்கிறார் கணவர் !!??

"நாடாளச்" சொல்கிறான் பாரதி...,
"வீட்டுக்குள் ஒடுங்கச்" சொல்கிறாள் மாமியார்!!??

"பெண்மையைப் போற்றுவோம்" என்கிறான் பாரதி..,
"தூற்றத் துடிக்கிறது" ஊர்!!??

சகல விஷயங்களிலும் உதைப்படும்
பந்தாய் அலைக் கழிக்கப்படுகிறேன்..,
யார் சொல்லை கேட்பதென!!??

Wednesday, April 13, 2011

எல்லாரும் ஓடிடுங்க ராஜி மறுபடியும் பதிவு போட்டிருக்குவணக்கம் நண்பர்களே நலமா?

என்னடா ராஜி கொஞ்ச நாளா பதிவேதும் போடாம இருக்கே, அப்பாடா இனி நிம்மதியா இருப்போம் னு பெருமூச்சு விட்டுக்கிட்டு ஹாயா இருந்தால் SO SORRY. ஏன்னா ?

HELL WAS FULL SO, I CAME BACK

கொஞ்ச நாளா பதிவேதும் போடமுடியாத சூழல் . பிள்ளைகளை தேர்வுக்கு தயார் செய்வதற்கே சரியா இருந்துச்சு. (பாவம் பசங்க, தானே படிச்சிருந்தாலும் நல்லா மார்க் score பண்ணி இருக்கும்ங்க.)

ஏறத்தாழ 6 மாதங்களாக வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை. (ம்க்கும். அதுக்கே உன்னோட அலம்பல் தாங்க முடியலை. எழுதியிருந்தால் அவ்வளவுதான்.)

SO, இனிமேலாவது எதாவது சொல்லிக்குறமாதிரி எழுதமுடியுதானு பார்க்கலாமினுதான் இந்த Re-Entry. யாருப்பா அது, மவுசை குளோஸ் பட்டன்கிட்டக் கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு

பதிவு எழுதி, கமென்ட் போடுறது அவ்வளவு முக்கியமான்னு கேட்கப்படாது (கேட்டால் பதில் சொல்ல தெரியாது. அப்புறம் அழுதுப்புடுவேன் அழுது. சொல்லிப்புட்டேன் ஆமாம்)

இதுவரைக்கும் சைலண்டா இருந்தா என் வலைப்பூ இனி தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது (சனியனே தாரை தப்பட்டைஎல்லாம் கடைசி நேரத்துல வாசிக்கிறது)

இனி பொழுது போகாத வேளைகளில் பல மொக்கை பதிவுகளோடு வருவேன். நீங்களும் படிச்சுட்டு கமென்ட் போடணும்(அது நம்ம தலையெழுத்து). அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.