Wednesday, November 30, 2011

உன்னை நான் அறிவேன்....,


தெருவடைத்துப் பந்தல்.
சூரியஒளியைத் தவிர,
உலகே திரண்டு வந்தது போன்ற கூட்டம்.
அத்தனைக் கண்களும் காணும் அவனை
எதேச்சையாக என் கண்களும் காண -
ஓ, எனக்குத் தெரியும் அவனை....,

அந்த சன நெரிசலில்,
வெள்ளை உடையில்
ரோஜா மாலையுடன் அவன் மட்டும்
வித்தியாசமாய்த் தெரிந்தான்.
எதற்காக நெளிகிறான்? -
ஓ, ரோஜா வாசம் அவனுக்கு பிடிக்காதே,
அதனாலா?
எனக்குத் தெரியும் அவனை…,

வருவோரின்
ஒவ்வொரு கைக்குலுக்கலின் போதும்
அவன் முகம் சுளிக்கிறான்.
அந்த முகச்சுளிப்புக்கு காரணமே
கைக்குலுக்கல் தான்.
கைக்குலுக்கல் அவனுக்குப் பிடிக்காது -
எனக்குத் தெரியும் அவனை…,

எவரோ ஒருவர்
பழச்சாறு கொண்ட கோப்பையை
அவனுக்கு நீட்ட, அவன் கண்கள்
மற்றவர்களுக்கு அளிக்கப்படும்
பெப்சி மெதுபானத்தின் மேல்
மேய்வதை நான் அறிவேன்.
எனக்குத் தெரியும் அவனை…

அவன் இடப்பக்கம்
அமர்ந்திருக்கும் மணப்பெண்ணின்
பச்சை நிறப் புடவையைப் பார்த்தேன்.
நிச்சயமாக அது அவனுடைய தேர்வு அல்ல.
எனக்குத் தெரியும் அவனை…

எதேச்சையாக அவன் பார்வை
என்னைத் தீண்ட -
வியப்புடன்!?
துளிர்த்த கண்ணீரை
தூசு துடைப்பதுபோல்
துடைத்துக்கொள்கிறான்.
எனக்குத் தெரியும் அவனை…

 

Monday, November 28, 2011

புடவை வாங்கலியோ! புடவை !புடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா? புடவை வாங்குகிறார்களோ? இல்லையோ? புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார்நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும்,  பட்டு உடையும் அணிந்தார்கள்.
பருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும், பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும், காகிதம் போன்ற மெல்லிய துணிகளும், சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன.
இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப்பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.
நீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம்எனப்பட்டது.
நெய்வதில் தேர்ந்த தமிழன், அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடிகொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.கடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.
நாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாகமாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங்கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.
முன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால், இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.
போதுமே புடவை கதை. இனி அந்த புடவைகளை, எப்படி தேர்ந்தெடுப்பது,  எப்படி கட்டுவது, எப்படி பராமரிப்பது  என பார்ப்போம்....

புடவை கட்டுமுன் கவனத்தில் கொள்ளவேண்டியது:
1.  சில புடவைகளில் உள்பக்கம், வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்கவேண்டிய பக்கம் பகட்டாகவும், உள்பக்கம் மங்கலாக இருக்கும். இதனை கவனித்துக் கொள்ளவும்.
2.  புடவையின் ஒரு முனையில் முந்தானையும், மறுமுனையில் சில புடவைகளில் பிளவுஸ்க்கான துணியும் இருக்கும். பிளவுஸ் தைப்பதற்கான் துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் அதிகமாக இருக்கும்.

3.  புடவை கட்டுவதற்கு முன், அதனை அயர்ன் செய்து கொள்ளுங்கள்.
                                                          

புடவை பல விதமாக கட்டுகிறார்கள். ஆனால், பொதுவான ஒரு முறை பற்றி இங்கே விளக்கம் தரப்படுகின்றது.

புடவையின் வெளிப்பக்கம்(அழகான பக்கம்) வெளியே தெரியக்கூடியதாக, புடவையின் முந்தானை இல்லாத மற்றொரு முனையைப் வலது கையால் பிடித்து (அகலமான கரை கீழே இருக்கக் கூடியதாக) மேல் கரைத்தலப்பில் இரண்டு மூன்றுமுறை மடித்து சிறிய மடிப்புகளாக மடித்து அதனை கட்டியிருக்கும் உள்பாவாடைக்குள் வலது பக்க இடுப்போரமாக செருகுங்கள். (செருகும்போது புடவையின் கீழ் உயரத்தை கவனித்துக் கொள்ளுங்கள்) சிலர்  நுனியில் ஒரு சிறு முடிச்சுப் போட்டு அதனைச் செருகுவர்.

2. அதன்பின் புடவையின் மேல்கரைப் பகுதியை, சுருக்கிப் பிடித்து இடப்பக்கமாக எடுத்து உடம்பை ஒருமுறை சுற்றியபின் புடவையின் மேல்கரையைப் பிடித்து திரும்பவும் வலது வயிற்றடியில் உள்பாடைக்குள் இறுக்கமாகச் செருகுங்கள். புடவையின் உயரத்தைக் கவனித்து அதற்கு ஏற்றாப்போல் உயர்த்தியோ இறக்கியோ செருகி விடுங்கள். இப்போது உடம்பைச் சுற்றிய சாறியின் மேல் விளிம்பு பாவாடைக்கு மேல் தெரியலாம். அவற்றையும், உடம்பைச் சுற்றிவர பாவாடைக்குள் செருகி விடுங்கள்.

3. இப்போது மிகுதியாக இருக்கும் புடவையை திரும்பவும் இடது பக்கமாகச் எடுத்து உடம்பை மீண்டும் ஒருமுறை சுற்றி இடது தோளின்மீது போட்டுவிடுங்கள். இந்நிலையில் நீங்கள் விரும்பும் உயரத்தில் புடவை தொங்கக் கூடியதாக உயரத்தை சரிசெய்து கொள்ளுங்கள்.

இப்போது புடவையின் முன் பக்கத்தில் சேலையின் ஒரு பகுதி தொய்வாக தொங்கிக்கொண்டு இருக்கும். அதில்தான் மடிப்பு அமைக்க வேண்டும். சேலையை முதல் சுற்று சுற்றி இடுப்பில் செருகிய இடத்தில் இருந்து சுமார் நான்கு விரல்கள் அகலத்திற்கு மடிப்புகளாக மடித்து (தொய்ந்த சாறி இறுக்கமாகும்வரை) மடித்து கொண்டு அதனை வலது பக்க வயிற்றடியில், ஏற்கனவே உள்முந்தானையை  செருகிய இடத்தில் ஒழுங்காகாகவும் இறுக்கமாகவும், கரைகள் வெளியில் தெரியாதபடி, முழுமடிப்பும் உள்ளே ஒழுங்காக இருக்கக்கூடியதாக செருகுங்கள்.(இல்லையேல் அவ்விடம் முன்னுக்கு தள்ளி அசிங்கமாக இருக்கும்).

இப்போது மடித்து செருகிய இடத்தில் இருந்து மேல்கரையை உடம்பைச் சுற்றி அணைத்துப் பிடித்து (நெஞ்சை மறைத்து) கொஞ்சம் இறுக்கமாக தோள்மூட்டடியில் வைத்து ப்ளவ்சுடன் பின் செய்து விடுங்கள்.  னெஞ்சின் மீதிருக்கும் மடிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக அரேஞ்ச் பண்ணிக்கிட்டால்.., ரங்கமணி பெருமூச்சு விட்ட சேலைக்கட்டு ரெடி.

                                         

பெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது?…
புடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.
ஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை புது மெருகு இருக்கும்.
முன்பெல்லாம் பூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும். இதுக்கெல்லாம் நேரமில்லாதவங்க..,ஷாம்பு போட்டு பட்டு புடவை ஊற வைத்து, அடித்து துவைக்காமல், லேசாக கசக்கி அலசி நிழலில் காய வைக்க வேண்டும்.

 புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியது (ரங்கமணிகளுக்கு டிப்ஸ்):
உயரமான பெண்களுக்கான புடவை:
பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.
அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.
ரொம்ப குண்டாக இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.
பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும்.., அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.
பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.
பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.
குள்ளமான பெண்களுக்கான புடவை:
கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே. டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு.தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது.
காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள ஆடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.சாய்வான கோடுகள் உள்ள ஆடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.
இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லோ வயலட், வெளிர் நீலத்தில் வெள்ளைப்பூக்கள்... இதெல்லாம் ஓகே.
ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.
சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.
குண்டாக இருப்பவர்கள். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும். லோ ஹிப் வேண்டாம்.
ஒல்லியாக சற்று குள்ளமாக இருப்பவர் அழுத்தமான கலர்களில் உடை அணிவதைத் தவிருங்கள். (ஆனால் கருப்பு, மெரூன் போன்றவை யாருக்கும் பொருந்தும்) சின்ன பார்டர் புடவையைத் தேர்ந்தெடுங்கள். கங்கா, யமுனா சேலை போல் ஒரு பக்கம் டிசைன் உள்ள புடவை சற்று பூசினாற்போலவும் உயரமாகவும் காட்டும். பிரைட் டிசைன், பெரிய பூ டிசைன்களை தவிர்த்துவிடுங்கள். புடவைகளில் நீளவாட்டு கோடுகளும், நீள வாட்டு டிசைன்களும் உங்களுக்குப் பொருத்தம்.

டிஸ்கி 1:  ரிசப்னிஸ்டுகள், டீச்சர்கள் புடவை கட்டியிருக்கும் பாங்கை பார்த்து..., நம்ம கூட வரும் ரங்கமணிகள் பார்த்து நல்லா ஜொள்ளு விடுவாங்க. தங்கமணிகள், அதை பார்த்துட்டு என்ன? ஏதுன்னு முறைச்சு பார்க்கும்போது, வெறும் 150 ரூபாய் காட்டன் சாரிதான் அவங்க கட்டியிருக்காங்க. எவ்வளவு அழகா, பாந்தமா கட்டி இருக்காங்க. நீயும் இருக்கியே, அரிசி மூட்டை போல 1500ரூபாய் புடைவை சுத்திக்கிட்டு.. ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் அவங்களை போல உனக்கு கட்ட வருமான்ன்னு பிளேட்டை மாத்தினதும் இல்லாம நம்மளையே குறை சொல்வாங்க.  அந்த பழியிலிருந்து அப்பாவி தங்கமணிகள் தப்பிக்க, எனக்கு தெரிஞ்ச புடவை கட்ட சில டிப்ஸ் தங்கமணிகளுக்கு...,

டிஸ்கி 2: எனக்கு தெரிஞ்ச நண்பர் ஒருவர், என்கிட்ட என் மனைவிக்கு பர்த்டே வருது. அவங்களுக்கு தெரியாம ஒரு கிஃப்ட் பண்ணனும் என்ன பண்ணலாம்னு கேட்டார். புடைவைக்கு மயங்காத பெண்களே இல்லை. வாங்கிக்குடுங்கன்னு சொன்னேன். அதுக்கு அவர், சர்ட்ல XL. XXL இருப்பது போல புடவையிலும் உண்டான்னு கேட்டு வழிஞ்சார். அப்படிப்பட்ட “புத்திசாலி ரங்கமணிகளுக்காகவேபுடவை வாங்கும்போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்.
Monday, November 21, 2011

முதலும் நானே! முடிவும் நானே!


  நதியின் சலசலப்பு
பாம்பின் சரசரப்பு
பெயர் தெரியா
பூச்சிகளின் ரிங்காரம்....,

இரையைத் தேடும்
ஜந்துக்களின் நடுவே.....,
நான் மட்டும்
ஆதிவாசியாய்!!!!
இரவும் பகலும்
ஒன்று தான் எனக்கு....,

விஷமும், அமுதமும்
ஒன்று தான் எனக்கு....,
என் நண்பன், நான் மட்டும்,,,
என் உறவினர்கள் ,நான் மட்டும்
தனியாய்…

நாளும் தெரியாது!?
கிழமையும் தெரியாது!?
உணவைத் தேடி
சுற்றிக் கொண்டு
இருக்கிறேன்...,

யானைப் பிளிரும்
சத்தத்திலிருந்து..,
சிறுத்தையின்
சீற்றத்திலிருந்து..,
தப்பித்து ஒரு இடத்தை
அடைந்தேன்.!

நான் பார்த்திராத இடம்
சுற்றிலும் பூக்கள்…
எண்களும் தெரியாது!
எண்ணங்களும் தெரியாது!

அதில் ஒன்று எனக்கு
பிடித்திருந்தது!?
எடுத்தேன்...,
பசி இல்லை. இப்போது
பூவையே பார்த்துக்கொண்டு
இருந்ததால்....,

பூவுக்கு ஒரு முத்தம்...,
பேசினேன்......,
கத்தினேன்....,
கொஞ்சினேன்....

கெஞ்சினேன்..,
மிஞ்சினேன்...,
சண்டையிட்டேன்...,
சமாதாமானேன்...,

அசைவற்று இருந்தது?!
நிறமும் தெரியாது..,
மணமும் தெரியாது..,
பூவையே பார்த்துக்கொண்டு
இருந்தேன்!!

என்னிடம் பேசும் என்று
உறங்கிப் போனேன்!!!!!
எழுந்தேன்.
அதே நிறத்தில்
அதே மணத்தில்
பூ,  இல்லை!?

அழுதேன், கதறினேன்...,
பூவையே கையில் வைத்து
திரிந்து கொண்டு இருந்தேன்
பசி இல்லை!?
கால் இடறி விழுந்தேன்...

பறக்கிறேன்
நீர் வீழ்ச்சியிலிருந்து
விழுகிறேன்,
என் பூவோடு...........,
நீரோடு -
பெரிய பாறை
பலத்த அடி
சிவப்பு பூ பூத்தது!!.

அதன் அழகை,பார்த்தபடியே
இறக்கிறேன்...,
இந்த உலகத்தில்....,
முதலும் நான் தான்!!
முடிவும் நான் தான்!!

Friday, November 18, 2011

பம்பாநதிக்கரையில் ஒரு ஜீவ நதி

இது கார்த்திகை மாதமென்பதால், எங்கு பார்த்தாலும், சபரிமலைக்கு மாலை அணிவித்து, விரதமிருக்கும் சாமிகளே கண்ணுக்கு தென்படுகிறார்கள். எங்க வீட்டுலயும் என் அம்மா போய் இருக்காங்க. எனவே, எனக்கு தெரிஞ்ச ஐய்யப்பன் வரலாற்றை இன்னிக்கு பதிவிடலாம்ன்னு இருக்கேன். இதில் எதாவது வரலாற்று பிழைகள் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும்.  

பந்தளராஜன்:
மலைவளம் மிக்க கேரள தேசத்தில், பண்டைய திருவிதாங்கூரில் பந்தள நாடு என்னும் வளமான நாடு இருந்த்து. அந்த பந்தள நாட்டை இராஜசேகர பாண்டியன் என்னும் பாண்டிய தேசத்து மன்னன் ஆண்டு வந்தான். வீரதீர பராக்கிரம்த்தில சிறந்து விளங்கியதுடன், மனுதர்மப்படி மிக நேர்மையாக ஆட்சி செய்து வந்தான்.
மக்களுக்கு சிறு குறையுமின்றி ஆட்சி செய்து வந்த அவனுக்கு ஒரு மிகப்பெரிய குறை ஒன்று இருந்தது. அது, தனக்கு பின் நாட்டை ஆள ஒரு ஆண் வாரிசு இல்லையே என்னும் மிகப்பெரிய குறைதான்.மன்னன் ராஜசேகரன் சிறந்த சிவபக்தன்.எனவே, அவனும் அவன் மனைவியும், அவன் நாட்டு மக்களும் சிவனை வழிப்பட்டு தம் மனக்குறையை தீர்த்தருள வேண்டி வந்தனர்.
ஒரு காலத்தில் அரம்பன் என்னும் கொடிய அரக்கன் இருந்தான். அவனுடைய மகன் மகிஷாசுரன் எனப்பட்டவன். அவன்பிரம்மனை தியானித்து, நீண்ட காலமாக தவம் புரிந்து, “இந்த பூமியில் பிறந்த எவராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் வாங்கினான்.
மகிஷன் தான் பெற்ற வரத்தை தவறான முறையில் பிரயோகம் செய்து, மனிதர்கள துன்புறுத்தினான். பூலோகத்தை ஆட்டுவித்த்தோடு, தேவலோகத்திலும் அவன் அட்டகாசம் செய்தான். மகிஷனின் கொடுமை தாளாமல், எல்லோரும் சிவன், விஷ்னு, பிரம்மனிடம் காத்தருளும்படி முறையிட்டனர்.அவர்களும், தம் சக்தியெல்லாம் ஒன்று சேர்த்து சண்டிகாதேவி என்ற மகாசக்தியை படைத்து, மகிஷன்மேல் ஏவினர். சண்டிகாதேவியும், மகிஷனுடன் போரிட்டு அவனை அழித்தாள். தேவர்களும் மானிடரும் துன்பம் நீங்கி மகிழ்ச்சி பெற்றனர்.
மகிஷனின் மரணத்தை பழித்தீர்க்க அவன் சகோதரி மகிஷி, பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்து, ஆணுக்கும், ஆணுக்கும் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லையென்று புத்திசாலித்தனமாக யோசித்து, “சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து, பிறக்கும் புத்திரனை தவிர வேறு எவராலும் மரணம் சம்பவிக்ககூடாது என்று வரம் வாங்கினாள். சாகாவரம் பெற்ற மகிஷி கர்வத்துடன் தேவலோகம் சென்று, தேவர்களை கொடுமைப்படுத்தினாள்.
துர்வாச முனிவர் சாபத்தால், தேவர்களுக்கு ஆயுள் குறைந்து நரை ஏற்பட தொடங்கியது. அதனால், கலக்கமுற்ற தேவர்கள், அசுரர்கள் துணையுடன் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தனர். அபோது அசுர்ர்கள் பாய்ந்து அமுத கலசத்தை எடுத்து சென்றனர். அதை திரும்ப பெற விஷ்ணுவிடம் முறையிட, அவர் மோகினி வடிவம் பெற்று, அசுரர்களிடமிருந்து அமுதம் பெற்று தேவர்களிடம் கொடுத்தார்.
                     
மோகினியின் அழகில் மயங்கிய சிவன் மோகினியுடன் ஐயக்கியமானார். அதன் பயனாய் ஒரு அழகிய ஆண்குழந்தை தோன்றியது. குழந்தையின் கழுத்தில் சிவன் ஒரு மணி மாலையை அணிவித்து, அக்குழந்தையை தன் பக்தனாகிய ராஜசேகரனிடம் சேர்ப்பிப்பதென முடிவு செய்து, வழக்கமாக பந்தள மன்னன் வேட்டையாட செல்லும் பம்பா நதிக்கரையோரம் உள்ள வனத்தில் கிடத்தினார்.
     
                       
ஐயன் பந்தளத்து இளவரசனாகுதல்:
அந்த வழியே வந்த மன்னன் வனத்தில் தெய்வாம்சம் பொருந்திய அழகான குழந்தை கிடப்பதை கண்ட மன்னன் அள்ளியெடுத்து யாருடையது, எப்படி வந்த்து என்று திகைத்து நின்றபோது, முனிவர் வேட்த்தில், அங்கு வந்த சிவப்பெருமான், இது உன் மகவில்லாத உன் குறாஇயை தீர்க்க ஈசன் அனுப்பிய தெய்வாம்சம் குழந்தை. இவனை எடுத்து சென்று வளர்த்து வா. இவன் கழுத்தில் சிவன் அணுவித்த மணிமாலை இருப்பதால் இவனுக்கு, மணிக்கண்டன் என பெரிட்டு வளர்த்து வா. இவன் 12வது வதில் இவனால் பல அதிசயங்கள் நிகழ்த்தப்போகிறான். பூலோக மானிடர்களுக்கெல்லம் இவன் தெய்வமாக திகழப்போகிறான் எனக் கூறி மறைந்தார்.

பம்பை நதி: 
                         
மனமகிழ்ந்த மன்னன் குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று, அரசியிடம் சேர்ப்பித்தான். அரசியும் மகிழ்ச்சியுடன் அக்குழந்தையிஅ மகனாக ஏற்றுக் கொண்டாள். பந்தள நாட்டு மக்களுக்கும் இச்செய்தி எட்டி, அவர்களும் மன்னனுக்கு வாரிசு கிடைத்ததை ஆன்ந்த கூத்தாடினர். அதே சமயம் ஒருவனுக்கு மட்டும் இச்செய்தி மகிழ்ச்சியை தரவில்ல்லை. மன்னருக்கு வாரிசில்லை. அவருக்குப்பின் தான் அரசாளலாம் என்று எண்ணிய அந்நாட்டின் திவான். 
                
மணிகண்டனின் குழந்தைப் பருவம்:
மணிகண்டன் சல கலைகளும் நன்கு கற்று தேர்ச்சி பெற்றான். குறிப்பாக அவனது வில்வித்தையை கண்ட அவனது குரு பெரிதும் அகமகிழ்ந்தார். அவன் சாதாரண பிறவியில்லை என்று குருவு உணர்ந்து கொண்டர்.
மணிகண்டனி குருகுலம் பூர்த்தியடையும் நேரம் வண்ட்து. குருதட்சனை செலுத்தும்விதமாக, குருவிடம் சென்று, குருவே, குருதட்சனையாக என்ன வேண்டும் என வினவி நின்றான். அப்போது, அவர், மணிகண்டா! என் மகன் பிறவியிலேயே ஊமையும், குருடுமாவான். அவனுக்கு நீ பார்வையும், பேச்சும் தர வேண்டும். இதுவே நான் விரும்பும் குருதட்சனை என்றார்.
அப்படியே ஆகட்டும் என கூறி , குருவின் மகனுக்கு பேச்சையும், பார்வைய்யும் அளித்துவிட்ட், எனது இந்த ஆற்றலை எவரிடமும் சொல்லக்கூடாது. காலம் அதை வெளிப்படுத்தும் எனக்கூறி குருவிடம் விடைப் பெற்று அரண்மனை சென்றான்.
திவானின் சூழ்ச்சியும், அரசியின் மனமாற்றமும்:
சில காலத்தில் அரசிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது.  மணிகண்டன் அரண்மனைக்கு திரும்பிய உடன் அவனுக்கு இளவரசு பட்டம் கட்ட தீர்மானித்திருந்தான் மன்னன். மன்னனின் இத்திட்டத்தை அறிந்த திவான் நஞ்சை கொடுத்து, மண்கண்டனை கொல்ல திட்டம் தீட்டினான். அவன் வைத்த நஞ்சு மணிகண்டனை ஒன்றும் செய்யாமல் போகவே, அரசியின் மனதில் நஞ்சை விதைக்க ஆரம்பித்தான்.  
அரசியாரே! உங்கள் வயிற்றில் பிறந்த மகனிருக்க, காட்டில் கிடைத்த அனாதை பயலுக்கா நுடிசூட்டுவதென கூறி, பல விதமாக பேசி அரசியின் மனதை மாற்றி, மணிகண்டனை கொல்ல தான் வகுத்துவைத்திருந்த திட்ட்த்திற்கு அரசியை சம்மதிக்க வைத்தான்.
திவானின் திட்டப்படியே கடும் தலைவலியால் ஆட்பட்டதை போல் அரசி நடிக்க ஆரம்பித்தாள். மன்னனும் அரசியின் நோய் கண்டு வருந்தி அரண்மனை வைத்தியரை அழைத்துவர திவானை பணித்தான். தன் நம்பிக்கைக்கு பாத்திரமான அம்மருத்துவனும், அரசியாருக்கு வந்துள்ள இத்தலைவலி மிக்கொடுமையானது. இதை தீர்க்க புலிப்பால் வேண்டும். புலிப்பாலை பருகிய மறுவினாடி தலைவலி தீர்ந்திவிடும் என்று திவான் சொல்லி தந்த படி கூறினான்.
இதை கேள்வியுற்ற மன்னன் இது சாடாரண மனிதனால் செய்யக்கூடிய காரியமில்லையே! என்ன செய்வது என புலம்பினான். புலிப்பல் கொண்டு வருபவர்களுக்கு தன் நாட்டில் பதியை தருவதாக அறிவித்தான். இதை கேள்வியுற்று காட்டுக்கு சென்றவரெல்லாம் தோல்வியடைந்து திரும்பினர்.அரசியின் நோய் தீர வழியில்லையே என மன்ன்ன் கலங்கி நின்றான். தந்தையின் கவலையை கண்ட மணிகண்டன், தான் காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டு வருவதாக  வேண்டி நின்றான். மணிகண்டன் மேல் உள்ள பாசத்தால் மன்ன்ன் எவ்வளவோ மறுத்தும், என் தாயின் இன்னலை தீர்க்கும் கடமை மகனாகிய எனக்குண்டு. எனவே அருள்கூர்ந்து எனக்கு ஆசியும், அனுமதியும் தாருங்கள் என்று வேண்டி நன்றான். வேண்டா வெறுப்பாக மகனை காட்டுக்கு அனுப்ப மன்னன் ஒப்புதல் அளித்தான்.              
                 
மணிகண்டனின் காட்டு பிரவேசம்:
மணிகண்டன் புலிபால் கொணர காட்டுக்குள் நுழைந்தான். அவனுக்கு சிவனின் பூத கணங்கள் துணையாக வந்தன. தேவர்கள் அமுதம் உண்டு, ஆயுளை அதிகரித்துக் கொண்ட்தால், ஆத்திரம் கொண்ட மகிஷி சொர்க்கலோகம் சென்று தேவர்களை கொடுமப்படுத்தினாள். இதனை, தன் உள்ளுணர்வால் உணர்ந்த மணிக்ண்டன் தன் பிறப்பின் ரகசியம் அறிந்து கொண்டு.., தேவலோகம் சென்று, அங்கு அட்டகாசம் புரிந்து கொண்டிருந்த மகிஷியை தூக்கி பூமியில் வீசினான். அவள், அழுதையாற்றின் கரையில் வந்து வீழ்ந்தாள். அங்கு, அவளுடன் கடும்போரிட்டு,மகிஷியை கொன்று வெற்றி கண்டான். தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றி, புலிப்பால் கொணர காட்டுக்குள் செல்கிறான்.
புலிகளை தேடி காடுக்குள் அலையும் மணிகண்டனுக்கு உதவ இந்திரன் முதலான தேவர்கள் மகிசியை கொன்ற நன்றிக்கடனுக்காக உதவ முன்வருகிறார்கள். சிவ மணிகண்டன் முந்தோன்றி, “இந்திரன் ஆண்புலியாகவும் மற்ற தேவர்கள் பெண்புலியாகவும் வடிவெடுப்பார்கள். நீ புலி மீதேறி அரண்மனை செல்எனக்கூறி மறைந்தார். சிவனின் கூற்றுப்படியே புலிகளின் புடைச்சூழ மணிகண்டன் நாட்டிற்கு செல்கிறான்.
இதனை கண்ட மக்கள் திகைப்பும், பயமும் அடைந்தனர். புலி மீதேறி வரும் பாலன் மணிகண்டன் தெய்வமே அன்றி வேறில்லை என மக்கள் உணர்ந்த மக்கள், மகிழ்ச்சி கோஷம் எழுப்புகின்றனர். இதை கண்ணுற்ற மன்னன், “பணிரெண்டு வயதில் இவனால் அற்புதம் நிகழும்என முனிவர் கூறியது மன்னன் மனதில் நிழலாடியது.
அரண்மனையை அடைந்த மணிகண்டன், தந்தையே! புலிகளை கொண்டு வந்துள்ளேஏன். வைத்தியரை அழைத்து எம் தாயின் நோய் தீருங்கள்அனக்கூற மன்ன்ன் மணிகண்டனின் காலில் சாஸ்டாங்கமாய் விழுந்தான். “பக்வானே!தங்களை காட்டுக்கு அனுப்பச் செய்த நான் கண்டுபிடித்துவிட்டேன். நான் தவறு செய்திருந்தால், மன்னித்தருளுங்கள். புலிகளை காட்டிற்கு அனுப்பிவிடுங்கள் இனியும் என்னை சோதிக்க வேண்டாம் என்று மன்றாடினான்.
தந்தையின் சொற்களை கேட்ட மனிகண்டனோ புன்னகை தவழ, “ எல்லாம் என் இச்சைப்படியே நடந்துள்ளது. இந்த பூமியில் நான் பிறந்த கடமை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் எனக் கூறினான்.
அதைக்கேட்டு அழுது புலம்பிய மன்னன், ,பகவானே! தங்கள் நினைவாக ஒரு கோவில் கட்ட அனுமதி தரவேண்டும. அதை எங்கு கட்ட வேண்டும் என தாங்களே கூற வ்ஏண்டும் என வேண்டி தொழுது நின்றான்.
உடனே மணிகண்டன், ஒரு அம்பை வில்லில் தொடுத்து, “இந்த அம்பு போய் விழும் இடத்தில் எனக்கு கோவில் எழுப்புஎனக் கூறி அம்பை விட்டான்.
அம்பு வானைப் பிளந்தபடி சீறிப்பாய்ந்து, சபரிமலை பிரதேசத்தில் விழுந்தது. எனக்கு பதினெட்டு படிகளுடன் கிழக்கு நோக்கியும் ,பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோவில் கட்டுஎனக்கூறினான்.  மன்னன் அகமகிழ்ந்து தானே முன்னின்று, பதினெட்டு படிகளுடன் கோவிலை உருவாக்கினான்.
பின்னர் ராஜாவிடம் சபரிமலையிலுள்ள தர்மசாஸ்தாவின் கோவிலை புதுப்பிக்க வேண்டினார் மணிகண்டன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சென்றவர்கள், வனவிலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஆயுதங்களுடனும், முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டும், கறுப்பு அல்லது நீல ஆடை அணிந்து கொண்டும் மலையேறினர். கோவிலுக்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்பதால், ஓரிடத்தில் குவித்து விட்டனர். அந்த இடம் சரங்குத்தி என்று பெயர் பெற்றது. கோவிலை நெருங்கும் நேரத்தில் பெரும் சூறாவளி ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் சாஸ்தாவின் சிலையில் ஐக்கியமாகி விட்டார். அவர் சன்னிதி முன் கடுத்தசுவாமியும், கருப்பசுவாமியும் காவல் நிற்க அனுமதியளித்தார். தன் முடிசூட்டுக்காக செய்யப்பட்ட நகைகளை பந்தளராஜா ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று மலைக்கு கொண்டு வரும்படி அறிவித்தார்.

மாளிகைப்புறத்தம்மன் வரலாறு:
மணிகண்டன் பந்தளத்தில் தங்கியிருந்த காலத்தில் குருகுலத்தில் பாடம் கற்றார். அப்போது குருவின் மகள் மணிகண்டனைக் காதலித்தாள். மணிகண்டன் அந்தக் காதலை ஏற்கவில்லை. தன்னைப் பார்க்க சபரிமலைக்கு எப்போது கன்னிசுவாமிகள் வரவில்லையோ அந்நாளில் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். அதனால், அவளுக்கு தன் இருப்பிடத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து தங்கச் செய்தார். அவளை மாளிகைபுறத்தமன் என்றும், மஞ்சள்மாதா என்றும் அழைக்கின்றனர். ஆனால், இன்றுவரை, கன்னிச்சாமிகளின் வரவு கூடிக் கொண்டே செல்கிறதே ஒழிய, நின்றபாடில்லை. ஆகையால் மாளிகைப்புறத்தம்மனும் கன்னியாகவே ஐயனுக்காக காத்திருக்கிறாள்.
                       
பதினெட்டு திருப்படிகளுக்கும் காவலாக உள்ள சக்தி தேவதைகளின் பெயர்களும், அவர்கள்,  சபரிமலை சரகத்தில் உள்ள ஆதிக்கம் செலுத்தும் 18 மலைகளின் பெயர்களும்:
1.மஹிஷமர்தினி- கரிமலை,  2.காளி-சௌந்தரயமலை,  
3.கருங்காளி- நாகமலை,   4.பைரவி-மதங்கமலை,  
5.சுப்பிரமணியன்- கல்கிமலை, 6.கறுப்பன்-பாதமலை, 
7. கார்த்தவீரியன்- ஸூந்தமலை, 8.ஹிடும்பன்-தேவமலை, 
9.வேதாள-நிலக்கல்மலை 10.நாகங்கள்-தலைப்பாறைமலை, 11.கர்ணபிசாசினி- மயிலாடும் குன்று  12.புளிந்தினி-சிற்றம்பல மேடு, 
13.ரேணுகா-பொன்னம்பல மேடு, 14.ஸ்வப்னவராஹி- நீலிமலை,  15.ப்ரத்யங்கரா-புதுச்சேரிமலை  16.அகோரா-இஞ்சிப்பாறை மலை,  
17. பூமாதேவி-காளைகட்டி மலை  18. அன்னபூரணி-சபரி மலை
                      
.
இருமுடியில் உள்ள பொருட்கள்: பூஜைக்கு நெய் நிரப்பிய தேங்காய், பூஜைப் புட்கள் அடங்கிய ஒரு முடியிம், நடக்கும் வழியில் தேவைப்படும் உணவுப்பொருட்கள் ஒருமுடியும் சேர்ந்து  இருமுடி என வழங்கப்படுகிறது. 
                       
 
 சபரி மலைக்கு செல்ல நிறைய விரத முறைகள் இருந்தாலும், மிக மிக முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

1. பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிவது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டுயது இல்லை. குறைந்த பட்சம் ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும்
2.. நீலம், கருப்பு காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும்
3.காலை, மாலை இருவேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும்
4.களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவைகளைத் தவிர்க்க வேண்டும். படுக்கை தலையணைகளை நீக்கி தன் சிறுதுண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

5. பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிப்பது தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.

6. விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும். மாலை தரித்த வீட்டைத்தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.

 
7. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ருது காலம் அடையாத சிறுமிகள், ருது காலம் நின்ற வயதான பெண்களும் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளலாம்.
                          
                  
ஸ்ரீஐய்யப்பனின் திரு உருவ விளக்கம்: 
ஸ்ரீஐய்யப்பன் அமர்ந்திருக்கும் கோலம் யோக நிலை வலக்கையில் சின்முத்திரை, இட்துகை முட்டுக்கால் மீது மடிந்து நளினமாக ஒரு தாயின் கருணையுடன் தன் திருப்பாதங்களை சுட்டிக் காட்டுகின்ற கோலம்.

மணிகண்டனை ஐயப்பன் என்றே பெரும்பாலானவர்கள் அழைக்கின்றனர். இதற்கு, “தலைவன் உயர்ந்தவன்என்று பொருள். உயர்ந்த மலையிலுள்ள ஐயப்பனின் வரலாறைத் தெரிந்து கொண்டவர்கள், முறைப்படி விரதமிருந்து, கெட்ட பழக்கங்களையெல்லாம் நிரந்தரமாக கைவிட உறுதியெடுத்து, சபரிமலைக்குச் சென்று வாருங்கள்.டிஸ்கி: அறுபடை வீடுகள் வரிசையில் மூன்றாம் படைவீட்டை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். 


Tuesday, November 15, 2011

அவனுக்கு மாற்றாக...,


முன்பெல்லாம் எனை அணைத்த அலை,
இன்று
அடித்தது போலிருந்தது…..

காரணம் கேட்டபோது
“எங்கே உன் தோழன்? என்று
காட்டமாய் விசாரித்தது….
மேற்படிப்பிற்காய் மேல்நாடு போய் விட்டான் என்றேன்….

“உன்னை தனியாக விட்டு விட்டா???”
வினவியது அலை…..
“இல்லை அவன் நினைவுகள்
என்னுடன் என்றேன்”

அனுதாபமாக என்னை பார்த்த அலை
“முன்பெல்லாம் என் பாறை நண்பன்
மேல் உட்கார்ந்து பாடுவீர்களே….
இப்போ என்ன செய்வாய்????”
கேட்டது அலை….

அவனை பிரிந்த பின்பு – நானும்
பாறை தான் என்றேன் !!!
பதறிய அலை
சிதறி என்மேல் விழுந்து...,

“ஏனுனக்கு நானில்லையா?? – சரி, சரி
அடிக்கடி வந்து போவென்றது அன்பாக….!”
அலையின் அன்பில்
சிலிர்த்துப்போய் – மீண்டும்
அவன் நினைவுகளுடன் கரையெறும் போது…..,

என்ன நினைத்ததோ அலை
திரும்பவும் வந்து,
“அடித்தது ரொம்பவும் வலிக்குதோ???”
கேட்டது ஏக்கத்துடன்…!
இல்லை என சிரித்த எனை
சில்லென நீராட்டி தன் சந்தோஷம்
சொல்லிப்போனது அலை….!

ஆனாலும்……
அலைக்கென்ன தெரியும்
என் விஷயத்தில் “அவன்”
சிலையாகிப்போன கதை…….!!!!!
 

Friday, November 11, 2011

இரண்டாம் படைவீடு-திருச்செந்தூர்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் என்ற திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார். அக்கோயிலின் சிறப்பை பற்றி கீழ்காணுவோம்.
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு

                                         


தல அறிமுகம்:
மூலவர்:சுப்பிரமணியசுவாமி
உற்சவர்:சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் அம்மன்: வள்ளி, தெய்வானை
 தீர்த்தம்:சரவணபொய்கை
புராண பெயர்:- செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என்ற பெயர்களும், இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால், அலைவாய் என்றும்
மாவட்டம்: தூத்துக்குடி,

பாடியவர்கள்:
அருணகிரிநாதர்
                                             திருவிழா:  பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.   
கோவில் திறந்திருக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்


தல சிறப்பு:  முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.
                   
தல வரலாறு:
தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படிஅயெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசூரனையும், அவனுக்கு துணையாக நின்ற கிரவுஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடப் வந்து திருச்செந்தூரில் தங்குகிறார். வீரவாகு தேவர சூரபத்மனிடம் தூது அனுப்புகிறார். ஆனால், அசுரன் சூரபத்மனோ அதை நிராகரிக்கிறான். மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.
இதையடுத்து, முருகப்பெருமான் அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். மரத்தின் மீது போர் தொடுத்தார். மரத்தின் ஒரு பாதி சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் மாறியது. மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் முருகப்பெருமான் ஏற்றுக் கொண்டார். மாமரமாக மாறிய சூரபத்மனை கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவிய போது அதன் கொடூரம் தாங்காமல், கடலும் பின் வாங்கியதாக அருணகிரினாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
வெற்றி வாகை சுடி, தேவர்களை சூரபத்மனிடமிருந்து காப்பாற்றியதால், இன்றைய திருச்செந்தூரானது ஜெயந்திப்புரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்த்து. பின்னாளில், அந்த பெயரே மருவி செந்தூர் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறாது. திருச்செந்தூர்என்ற சொல்லுக்கு “புனிதமும், வளமும் மிகுந்த வெற்றி நகரம்என்றும் பொருள் உண்டு.

சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.
கிழக்கு பார்த்தும், சண்முகர்வள்ளி, தெய்வானையுடன் வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். இவருக்கு, வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் இவருக்குச் செய்யப்படுகிறது.
மூலவர்:
எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் 2 மூலவர் உண்டு. முருகப்பெருமானே “பாலசசுப்ரமணிய சுவாமிஎன்றும், சண்முகர் என்றும் அருள்பாலிக்கிறார்.

                     
நாழிக்கிணறு:
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, முருகப் பெருமான் சிவபூஜை புரிந்த இடமும் திருச்செந்தூரேயாகும். சிவலிங்க அபிஷேகத்திற்காக, தன்னுடைய வேலினால் முருகப்பெருமான் “ஸ்கந்த புஸ்ஹ்கரினிதீர்த்த்தை உண்டாகினார். அத்தீர்த்தம் இன்றளவும், திருச்செந்தூரில் காணப்படுகிறது. இதை நாழிக்கிணறுஎன்று அழிக்கிறார்கள்.
ஒரு சதுர அடி அளவே உள்ள இந்த கிணறு கடற்கரையில் அமைந்துள்ள போதிலும், இத்தீர்த்தம் உப்புச் சுவையின்றி தூய நீராகவும், நோய்களைத்தீர்க்கும் குணமுடையதாவும் இருப்பது அதிசயமாகும்.


வீரவாகு தேவருக்கே முதலிடம்:
திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் காவல் தெய்வமாக இருப்பதால், இத்தலத்திற்கு வீரவ்வகு பட்டினம் என்ற பெயரும் உண்டு. இங்கு வீரவாகு தேவருக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது.
கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவரான பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறாது. செம்பட்டு நிற  ஆடையும் அணிவிப்பது உண்டு. சிவபூஜை செய்யும் வகையில் இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களையும், மற்றொன்று, மலரேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும், இன்னொரு கரம் ருத்திராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் அமைந்துள்ளன. இவர் தவக்கோலத்தில் இருப்பதால்.., வள்ளி, தெய்வானை இருவரும் அவருடன் இல்லை.
மூலவருக்குப் பின்னால் காணப்படும் அறை “பாம்பறைஎன்று அழைக்கப்படுகிறாது. இது சுரங்க அமைப்பினை உடைய அறையகும். இந்த அறையின் மேற்கு பாகத்தில், முருகப்பெருமானால், பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் உள்ளன.
வாசமிகு விபூதி பிரசாதம்:
திருச்செந்தூர் என்றதுமே நினைவுக்கு வருவது விபூதி பிரசாதம்தான். பன்னீர் இலைகளில் விபூதியை வைத்து மடித்து கொடுப்பதே இலை விபூதியாகும். வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து, முருகப்பெருமான வழிப்படுவதாகவும், விஸ்வாமித்திரர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிப்பட்டு, இலைபிரசாத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்ப்பட்ட குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
ஆதிசங்கரர், தனக்கு ஏற்பட்ட காசநோயை செந்தூர் முருகனை வழிப்பட்டு, இதே இலை விபூதியை உட்கொண்டுதான் போக்கிக் கொண்டார். அதன் நினைவாக வடமொழியில் “சுப்ரமணிய புஜங்கம்என்னும் பாமாலையை இயற்றினார்.
இதேப்போல், 5 வயதுவரை ஊமையாக இருந்து, செந்தில்வேலன் அருளால், பேசும் வல்லமையை பெற்று புகழ்பெற்றாவர் குமரகுருபரர்”. அந்த முருகப்பெருமானே வேலினால் அவரது நாவில் எழுதி பேச வைத்தார். அதன்பின் குமரகுருபரர் இயற்றியதுதான் பிரசித்தி பெற்ற “கந்தர் கலிவெண்பா”.


வள்ளிக்குகை:
திருச்செந்தூர் செல்பவர்கள் காணத் தவறாத இடம் அங்கு கடற்கரையில் அமந்துள்ள வள்ளிக்குகை. முருகப்பெருமானைடம் வள்ளி கோவித்துக் கொண்டு வந்து தங்கிய இடம் இது எங்கிறார்கள்.
இங்கு, குகையை குடைந்து வள்ளிக்கு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதிக்கு ஒருவர் மட்டுமே சென்று திரும்ப முடியும். எனவே, இங்கு தரிசனம் பெற, கால் கடுக்க காத்திருக்க வேண்டும். 
வள்ளி குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் உடனே கிட்டும் என்கிறார்கள்.
சந்தனமலை :
 முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.
                                           

 பஞ்சலிங்க தரிசனம்:
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
கங்கை பூஜை :
தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
நடுக்கடலில் நடந்த அதிசயம்:
இந்தியாவை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்திய நேரம், இந்தியாவின் செல்வ வளங்களை முடிந்த அளவு சுரண்டினர். சாமி சிலைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
திருச்செந்தூர் முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் டச்சுக்காரர்கள்
கட்த்திக் கொண்டு கப்பலில் தங்கள் நாட்டுக்கு திரும்பியபோது, வழியுஇல் கடுமையான சூறாவளி. பேய் மழை கொட்டி தீர்த்தது. இதைக்கண்டு பயந்துப்போன அவர்கள், சாமிச சிலைகளை கடலுக்குள் வீசிவிட்டனர்.
இதற்கிடையில், திருச்செந்தூர் முருகன் சிலை கட்த்திச் செல்லப்பட்டதால், அதற்கு பதிலாக வேறொரு சிலை செய்யும் பணியை திருநெல்வேலியில் வசித்த வமலையப்ப பிள்ளை என்பவர் துவங்கினார். அப்போது, ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், “திருச்செந்தூர் கடலில் குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சை பழம் மிதக்கும். அங்கு மூழ்கித் தேடினால் கட்த்தப்பட்ட சிலைகள் கிடைக்கும் என்று அடையாளம் காட்டினார்.
அதன்படி வடமையப்ப பிள்ளை உள்ளிட்டவர்கள். கடலுக்கு சென்று முருகப் பெருமானின் திருமேனியை கொண்டுவந்து, மீண்டும் சன்னிதானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட்து.
அதே நேரம், புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை திருநெல்வேலி தாமிரபரணி ஆறு பாயும் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட்து. அந்த இடம் தற்போது “குறுக்குத்துறை: எனப்படுகிறதாம். 
                
 
தாமரை மலரை கையிலேந்தி:
சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட பிறகு, தனது வெற்றிக்கு நன்றியினை வகையில் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் முருகப் பெருமான். திருச்செந்தூரில் மூலஸ்தானத்தில் அழகாய் வீற்றிருக்கும் அந்த அழகன் முருகன் கையில் இன்றும் அந்த தாமரை மலரை நாம் பார்க்கலாம். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்.
மாப்பிள்ளை சுவாமி:
பொதுவாக கோவில்களில் சுவாமிக்கு ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும் (விழாக்காலங்களில் இவரை பவனியாக எடுத்து வருவார்கள்).
ஆனால், திருச்செந்தூர் கோவிலில், சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலை-வாய் பெருமான் என நான்கு உற்சவ மூர்த்திகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னிதிகளும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை “மாப்பிள்ளை சுவாமிஎன்றழைக்கப்படுகின்றனர்.
காணிக்கை:
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைவிக்கும் நெல், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அறுவடை செய்யும்போது, முதலில் அறுவடை செய்ததை கோவிலுக்கு கொண்டுவந்து, அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் வைத்து காணிக்கை செலுத்திவிடுகின்றனர்.இப்படி செய்தால், மகசூல் அதிக அளவில் இருப்பதுடன், இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு எந்தவித சேதமும் வராது என்று நம்புகின்றனர்.
இதேப்போல், ஆடு மாடு வளர்க்கும் விவசாயிகள், அவை முதன் முதலாக ஈன்றெடுக்கும் குட்டியை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து காணிக்கை செலுத்துவதும் இன்றளவும் வழக்கத்தில் இருக்கிறது.
                                  

 
சுப்பிரமணிய காயத்திரி தோத்திரம்:
ஓம் த்த் புருஷாய வித்மஹே     
மஹா ஸ்நாய தீமஹி
தந்தோ ஷண்முக ப்ரசோதயாத்
முருகப்பெருமானுக்குறிய இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிப்பட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.

அருகில் உள்ள கோவில்கள்:
அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில், ஆறுமுகமங்கலம்
அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவில், கழுகு மலை
அருள்மிகு வைத்திமாநிதி திருக்கோவில், திருக்கோளூர்
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில், குலசேகரன்பட்டினம்
அருள்மிகு வேங்கட வர்ணன் திருக்கோவில், பெருங்குளம்.

படங்களுக்காக கூகுளுக்கும், மேலும் அதிக தகவலுக்காக தினமலர் ஆன்மீக மலருக்கும் என் நன்றிகள் 
முதலாம் படைவீட்டை பற்றி அறிய