Tuesday, January 24, 2012

உன் மகவாக...,


காதலிக்க காட்டிய அக்கறையை
ஏன் கல்யாணத்தில் காட்ட
மறந்து மறுத்து விட்டாய் !

உன் கண்களில் இருக்கும்
என் உருவத்தை ஏனோ ..
கண்ணீரில் கரைக்கிறாய் ..
காரணம் ஆயிரம் இருக்கும்
அதற்காக காதலை மறுப்பதா?

அன்பே!
சூழ்நிலை காரணமாய்
நீ என்னை மறந்து
வேறொரு வரை திருமணம்
செய்தாலும் ..

உன்னை வாழ்த்த வருவேன் ..
அதுதான் என் கடைசி சந்திப்பு
என நினைக்காதே ?

நீ என்னை ஏமாற்றியதற்காக
உனக்கு வலியை தருவேன் ..!
வயிற்றில் எட்டி உதைப்பேன் ..
உன் கருவறையிலிருந்து அழுது
கொண்டே வெளிவருவேன் ..
அப்போதும் உன் உயிராக ……

 

Saturday, January 21, 2012

எங்க வீட்டு பொங்கல் கொண்டாட்டம்..., முதல் பாகம்...,


பொங்கல் அன்னிக்கு ஓடி ஓடி போட்டோ எடுத்தியே பொங்கல் முடிஞ்சு இம்புட்டு நாளாச்சு அடுத்த பொங்கலே வரப்போகுதே நீ இன்னும் அதையெல்லாம் பதிவா போடலியே  எப்போதான் போடப்போறேன்னு என் பொண்ணு தூயா என்னை கேட்டுக்கிட்டதால இம்புட்டு சீக்கிரமா இந்த பதிவு...,

                             
              (இந்த வருசம் போட்ட கோலம்..., கலர்லாம் என் ஐடியா. கோலம் நல்லாவே இல்லைன்னு ஒரே புலம்பல்)
                                
                                     
                                           (இதுவும் என் கைங்கர்யம்தான்....)

               (இதுவும்  நானே...... கலர் கொடுக்க பசங்க ஹெல்ப் பண்ணாங்க...,)

அதிகாலையில் எழுந்து குளிச்சு, ”ப” வடிவில களிமண்ணால வீடு கட்டி, பசு மாட்டின் சாணத்தில் பிள்ளையார் பிடிச்சு வைப்போம் அதுக்கு “ பிள்ளையார் மன”ன்னு பேர்.  காய்கறிகள்,  கரும்புலாம் வெச்சு  பெரியவங்க நாங்க சாமி கும்புடுவோம். பொடுசுங்கலாம் எப்படா சாமி கும்பிட்டு முடிப்பாங்க. கரும்பு எப்போ திங்கலாம்ன்னு காத்து கிடப்பாங்க.

                                            இதுதான் பிள்ளையார் மனை....,.                   

பொங்கல் அன்று வீடு வாசல்லாம் மொழுகி, குளிச்சு  சுத்த பத்தமா ஒரு தட்டில் ஊற வெச்ச பச்சரிசி, பச்சரிசி மாவு, வெல்லம் தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், பூ, பானகம் என்று சொல்லப்படுகின்ற வெல்லம் தண்ணி ஒரு டம்ப்ளர், மஞ்சள் தண்ணி ஒரு டம்ப்ளர் எல்லாம் எடுத்துக்கிட்டு ஆண்கள், சின்ன பிள்ளைகள்லாம் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போய் பூஜை பண்ணிட்டு வருவாங்க. அதுக்கு ,” பச்சை வைக்குறது”னு பேர்.

                                          பச்சை வைக்க கோவில்ல தட்டு ரெடி....,

பங்காளிகள்ன்னு சொல்லப்படுகின்ற  பெரியப்பா,    சித்தப்பா, அண்ணன், தம்பி லாம் சேர்ந்து கோயிலுக்கு போய் பச்சை வச்சுக்கிட்டு வருவாங்க. .

                          
       கோயிலுக்கு போனவங்க வருவதற்குள் வீட்டில் இருக்கும் பெண்கள் வீடில் வாசல் இருக்குறவங்க வாசல்லயும், வாசல் இல்லாதவங்க மாடிலயும், மஞ்சள் தண்ணி தெளிச்ச்சு, தரையில் கோலம் போட்டு  செங்கல் அடுக்கி, அதற்கு மேல் களிமண் உருண்டை வச்சு, ஈர மஞ்சளை கோர்த்து, அடுப்பு மேல வச்சு ரெடியா இருப்போம்.
                                 அடுப்பு ரெடி, பொங்க பானை ரெடி...,
                          
    கோயில்ல இருந்து வந்ததும் கற்பூரம் ஏத்தி அதை பொங்கல் வைக்க போற அடுப்புல  போட்டு துவரை மிளாறை எரிய வைப்போம். பொங்கல் பானை காய்ந்ததும் முதலில் விதை நெல் போடுவோம். 

    கற்பூரம் போட்டு அடுப்பை பத்த வைக்குறாங்க...,

          அது பொறிந்ததும், பால் ஊற்றி பால் பொங்கியதும்  தண்ணி ஊத்தி பொங்கி வரும்போது , பொங்கலோ பொங்கல்ன்னு சொல்வோம். பொங்கி வந்ததும் கடைக்கு போய் உப்பு வாங்கி வருவோம் (பொங்கல் பொங்கியதும் முதல்ல உப்பு வாங்கனும்ன்னு ஐதீகம்.)   கரும்பை வெட்டி துடுப்பாக்கி அதால கிளறுவோம். உப்பு போட்டு பொங்கி இறக்கி வைப்போம்.  
  
பொங்கல் பொங்கி வருது..., பொங்கலோ பொங்கல்ன்னு நாங்க கூவியது மட்டும் மிஸ்ஸிங்க்... ....  

          பொங்கல் இறக்கியதும் அதே அடுப்புல பொங்கல் குழம்பு, வெந்தயக்கீரை மசியல் பிடி கருணை காரக்குழம்பு வைப்போம். சமையல் முடிந்ததும், பிள்ளையார் மனைலயும், பொங்கல் அடுப்புக்கும்  செங்கல் பொடியால கோலம் போட்டு பூசணி இலையில் பொங்கல், பொங்கல் குழம்பு, கீரை மசியல்லாம் வச்சு சாமி கும்புடுவோம். 

                        பிள்ளையார் மனைல படையல் ரெடி...,பிள்ளைங்கலாம் பசியோடு காத்திருக்குதுங்க...,
                                      
                                         அடுப்பு எதிரில் படையல்...
                   
                            சொந்தம் பந்தம்லாம் கூடி கதிரவனை கும்புடுறோம்.......
டிஸ்கி: இது பொங்கல் அன்று கொண்டாட்டம். மாட்டு பொங்கல், காணும் பொங்கல் அன்றைய கொண்டாட்டங்கள் அடுத்த பதிவில் மொக்கை தாங்கதவங்க மன்னிச்சூ.

Sunday, January 15, 2012

தைமகளே வருக....

        
   எத்தனையோ பண்டிகைகள் ஆண்டு முழுவதும் கொண்டாடிக்கிட்டுதான் இருக்கோம்.  இருந்தாலும் பொங்கல் பண்டிகைன்னாலே மனசுக்கு உற்சாகம் தரும் பண்டிகைப் போல ஏதுமிருக்கான்னு எனக்கு தெரியலை.

      மார்கழி மாசம் பொறந்த உடனே கூட படிக்கும்  பிள்ளைங்கலாம் ஸ்கூல்ல உக்காந்து கோலம் போட்டு பார்ப்போம். அதுக்கு கலர்லாம் செலக்ட் பண்ணிக்குவோம். போகி அன்னிக்கு வீட்டையெல்லாம் சுத்தம் பண்ணி வச்சிடுவோம். நைட் 8 மணிக்கு தெரு வாசல் கழுவி செம்மண் இட்டு கோலம் போட ஆரம்பிப்பேன். நான் ரொம்ப அழகா இருக்குறதால (ஹலோ அழகா? அப்பிடின்னா) ஓக்கே ஓக்கே. நைட் டைம் என்பதால் அப்பா, எதிர்வீட்டு ஐயர் மாமா, கோடிவீட்டு செட்டியார் சித்தப்பா, மாடிவீட்டு கோணார் அண்ணன்லாம் வாசல்ல சேர் போட்டுக்கிட்டு உக்காந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க. நான் கோலம் போடுவேன். 

    அம்மா, எதிர்வீட்டு சித்தி, கோடி வீட்டு மாமி, மாடி வீட்டு அண்ணிலாம் கோலத்துக்கு கலர் கொடுப்பங்க. அக்கம் பக்கம் வீட்டில் பெண்குழந்தைகளே கிடையாது. எல்லார் வீட்டுலயும் ஆண் பிள்ளைகளே. அவங்க வீட்டுலலாம் நாந்தான் செல்ல பொண்ணு. அவங்க வீட்டுலயும் நாந்தான் கோலம் போடுவேன். ஆக மொத்தம் 6 வீட்டில் கோலம் போட்டு முடிக்க நைட் 12 மணிக்கு மேல ஆகிடும். நான் கோலம் போடும்போது, நான் தூங்கி வழிய கூடாதுன்னு  காஃபி, பிஸ்கட்டு, ன்னு வாங்கி தந்து பார்த்துப்பாங்க.
          
              
                    (இது போன வருஷம் போட்ட கோலம்)
              
                        (இதுவும் நான் கிறுக்கியது...)
       
                 
     (இதுவும் நான் போட்ட கோலம்தான்.  கலர்லாம் என் பொண்ணுங்க தூயா, இனியா, பையன் அப்பு கொடுத்தாங்க) 

     அம்மா அரைச்சு வச்ச மருதாணியை வச்சுக்கிட்டு, தெருவை ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வருவேன். யார் வீட்டுல நம்மளைவிட அழகா போட்டிருக்காங்கன்னு பார்த்துட்டு வருவேன். என்னைவிட யாராவது அழகா கோலம்  போட்டிருந்தாலும் எதாவது குறையை கண்டுபிடிச்சு நான் போட்ட கோலம்தான் பெஸ்ட்ன்னு என்னை நானே தேத்திக்கிட்டு வந்து படுப்பேன்.

 

        முதல் நாளே ஆற்றங்கரை இல்லைன்னா குளத்தங்கரையில் இருந்து களிமண் கொண்டாந்து, வீட்டு வாசல்ல சாமிக்கு ”பா”ஷேப்புல வீடு கட்டி பிள்ளையார் பிடிச்சு வச்சுட்டு படுப்பார். விடிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து மஞ்சள் குங்குமம் வைத்து, கரும்பு, அவரைக்காய், கத்திரிக்காய், பூசணி, உருளை, கருணைக்கிழங்கு, முள்ளங்கி, மொச்சைன்னு கிடைக்கும் காய்கறிலாம் வச்சு படைப்பாங்க. பானையோட கழுத்துல ”பச்சை மஞ்சளை” (மஞ்சள் எப்படி பச்சையான்னு கேட்கப்படாது. உலராத மஞ்சள் தான் ”பச்சை மஞ்சள்”)


        நல்ல நேரம் பார்த்து வாசல்ல களிமண்ணால அடுப்பை உருவாக்கி, அதுல வரிசையா மூணு பானையை  வச்சு,   துவரை மிளாறை விறகா பயன் படுத்துவாங்க. முதல்ல, பானை காய்ந்ததும் நெல் போடுவாங்க அது பொறிந்ததும் பால் ஊத்துவாங்க, பால்பொங்கி வரும் சமயம் தண்ணி ஊத்தி மடக்கு என்னும் மண்ணால் ஆன தட்டை பானை மேல மூடுவாங்க.  வீட்டுல இருக்கும் நண்டு சிண்டுலாம் ஆளாஆளாக்கு பானைகளை பிரிச்சுக்கிட்டு யார் பானை முதல்ல பொங்குதுன்னு பந்தயம் கட்டிக்கிட்டு வேகவேகமா தீ வைப்பாங்க.
                                      
    பொங்கல் எந்த பக்கம் பொங்கி வருதுன்றதை வச்சு அந்த வருசம் வீட்டுல நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமான்னு பெருசுங்க ஜோஷியம் சொல்வாங்க. அதுக்காகவே அம்மா, சித்தி, அத்தைலாம் எந்த பக்கம் பொங்கி வந்தால் நல்லது நடக்கும்ன்னு பாட்டி சொல்லுவாங்களோ அந்த பக்கம் லேசா பானையை சாய்ச்சு வைக்கும் கூத்துலாம் நடக்கும். பொங்கல் பொங்கி வரும்போது போங்கலோ பொங்கல் ந்னு சத்தமா போட்டி போட்டுக்கிட்டு கூவுவோம்.                                 


      கொதிக்குற தண்ணியில பச்சரிசி, உப்பு போட்டு  பொங்கல் வச்சு இறக்குவாங்க. பொங்கல் பானை ஃபுல்லா வந்திருந்தா அந்த வருசம் ஃபுல்லா நல்ல விளைச்சல்ன்னும், கொஞ்சம் குறைச்சலா வந்தால் விளைச்சல் கம்மின்னு எங்க பாட்டி சொல்லும். 

   அதே அடுப்புல, வெறொரு பானையை ஏத்தி  நவதான்யங்களை வறுத்து, வேக வைத்து கத்திரிக்காய், முள்ளங்கி, அவரைக்காய், பூசணி, வெள்ளரிக்கிழங்கு, உருளை கிழங்கு, பிடி கருணை, கருணைக்கிழங்கு, வாழைக்காய்லாம் போட்டு மிளகாய்த்தூள், உப்பு போட்டு கொதிக்கவைத்து மிளகாய்தூள் வாசனை போனப்பின் புளிக்கரைசலை ஊத்தி, கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டுலாம் போட்டு தாளித்து பொங்கல் குழம்பு செய்வாங்க. பொங்கலுக்கு இதுதான் எங்க வீட்டுல ஹைலைட்டே. கூடவே வெந்தய்க்கீரை கடைன்சும், பிடிக்கரணை காரக்குழம்பும் வைப்பாங்க. இந்த மூணும்தான் பொங்கலுக்கு எங்க வீட்டுல பெஸ்ட் காம்பினேஷன்.

காலையில பிள்ளையார் வைத்த இடத்துலயும் அடுப்பாண்டையும் சுத்தம் பண்ணி, தண்ணி தெளிச்சு, செங்கல் பொடியால கோலம் போடுவோம். அப்புறம் பூசணி  இலையை கொண்டுவந்து அதுலதான் பொங்கல் வைச்சு படைப்போம். சூரியனுக்கு காட்டி சாமி கும்பிட்டு சாப்பிடுவோம். அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மான்னு எல்லரும் உக்காந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க. நண்டு சிண்டு நட்டுவாக்களிலாம் நாங்க கரும்பு தின்னுக்கிட்டு, விளயாடிக்கிட்டு இருப்போம்.

இப்படித்தான் நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ பொங்கல் கொண்டாடினேன். இன்னிக்கும் என் பிள்ளைகளும் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கனும்ன்னும், பாரம்பரியத்தை மறக்ககூடாதுன்னும் இதே முறையில்தான் பொங்கல் வைக்குறேன். இதுல ஒரே ஒரு மாறுதல் பானைக்கு பதில் வெண்கல பானை என்பது மட்டுமே..,  நான் பெற்ற இன்பத்தை என் பிள்ளைகளும் அனுபவிக்கட்டுமே.

Saturday, January 14, 2012

போகி...,பழையன கழிதலும், புதியன புகுதலும்.....

                                

      பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது.

      அன்றைய தினம், வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருகளை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்ப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் அவ்வப்போது நீக்கப்படவேண்டும் என்பதே இதில் மறைந்துள்ள தத்துவமாகும். 
                                 


    பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து, நடையா நடந்து வாங்கிவருவது, சமையல் பொருட்கள் வாங்கி வருவது, விறகை காய வைக்குறதுன்னு பெருசுங்கலாம்  பிசியா இருப்பாங்க.
      பொட்டு பொடுசுங்க லாம் என்ன துணி வாங்கலாம், அதை எந்த மாடல்ல எங்க தைக்க குடுக்கலாம்ன்னு பிளான் பண்ணும்ங்க. பொம்பளை பிள்ளைங்கள்லாம் கோலம் போட்டு பழகுறது, மருதாணி கிள்ளி வந்து அரைச்சு வைக்குறதுன்னும் இருப்பாங்க. ஆம்பிளை பசங்க கபடி, கிரிக்கெட், சைக்கிள் போட்டிலாம் எங்கே வைக்கலாம். எந்த நடிகரோட படம் எந்த தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது? எந்த ஷோ போலாம்ன்னு பிளான் பண்ணுவாங்க.

         போகி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல குப்பைகள், உபயோகமற்ற பாய், சாக்கு பைலாம் போட்டு எரிச்சு குளிர் காய்வோம். பின்பு, வீட்டை சுத்தம் பண்ணும் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி உபத்திரவம் கொடுப்பேன். பரணை மேல் ஏறி வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் எலி, கரப்பான் பூச்சி, தேள், பூரான் குடும்பத்தைலாம் வம்படியா காலி பண்ணுவேன்.
                  
                    3 வருசத்துக்கு முன்னாடி காணாமல் போன அப்பாவின் பல்துலக்கும் பிரஷை கண்டுபிடிச்சு குடுத்துட்டு, அப்பாவின் செண்டிமெண்ட் பேனாவை எங்கேயோ மறந்து காணாம போக்குறதும், கேஸ் அடுப்பை கழுவுறேன்னு, நல்லா எரியுற அடுப்பை ரிப்பேர் ஆக்குறது, லைட்லாம் தொடைக்குறேன்னு போட்டு உடைக்குறதும் எனக்கு கைவந்த கலை. அதுக்காக அப்பா அடிக்க துரத்த, பக்கத்துவீட்டு ஐயர் மாமி வீட்டுல தஞ்சம் புகுவதும் பதிவுக்கு அப்பாற்பட்ட கதை.
 

Thursday, January 12, 2012

மீண்டும் ஒரு முறை பிறப்போமா.....,

   
 
 என் பாட்டிக்கு நான்ன்னா கொல்ல பிரியம்(இதுல ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்லாம் ஏதுமில்லைங்க.). நானும், பாட்டியும் எலியும், பூனையும் போல தான் எப்பவுமே.  எப்பவும் என்கிட்ட  எதாவது பேசி என்னை வம்பிழுத்துக்கிட்டே இருப்பாங்க.  

ரோஜா படம் வந்த புதுசு. அந்த படத்துல வரும் காதல் ரோஜாவேன்ற பாட்டு என் ஃபேவரிட். அப்பா அம்மா இல்லாத சமயத்துல சவுண்ட் அதிகமா வச்சு கேட்பேன். என் பாட்டி ஊருல இருந்து வந்திருந்த சமயத்துலயும் அப்படித்தான் என்னானதோ, ஏதானதோ சொல் சொல்ன்னு சத்தமா பாடிக்கிட்டு இருந்தேன்.

என் பாட்டியை பார்க்க அவங்க ஃப்ரெண்ட் வந்திருந்தாங்க.
எங்கே ராஜி. உள்ளே என்ன சத்தம்?
ஒரு கழுதை நாய் போல கத்துறது கேட்டிருக்கியா
இல்லியே, இந்த கூத்து எங்கேடி நடந்துச்சு?
உள்ளே போய் கேளு லொள் லொள்ளுன்னு குறைச்சுக்கிட்டு இருக்கு.
அடிப்பாவி பாட்டி, இப்படி கவுத்திட்டியே.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

முதல்ல எங்க வீட்டுல கருப்பு வெள்ளை டிவிதான் இருந்தது. ஃப்ரெண்ட் வீட்டுல கலர் டிவி இருக்குறதை பார்த்து அப்பாக்கிட்ட அடம் பிடிச்சு வாங்கி வந்தேன்.
ஏன் இப்போ இருக்குற டி.விக்கு என்ன குறைச்சல்? இது பாட்டி
பழைய டி.வில படங்கள்ல கருப்பு வெள்ளை மட்டும்தான் தெரியும். புது டிவில எல்லா கலரும் தெரியும். நேருல பார்க்குற மாதிரியே இருக்கும். உன் நொள்ளை கண்ணை திறந்து நல்லா பாருன்னு சொன்னேன்.
அன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி. லேசா மழையும் பெய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு.  முதல்ல அறிவிப்பு சொல்ல வந்த அக்காவை பார்த்து, ராஜி சொன்னது நிஜம்தான் போல, நேருல பார்க்குற மாதிரியே இருக்குன்னு தன் பக்கத்துல உக்கார்ந்துகிட்டு இருந்த இன்னொரு பெருசுக்கிட்ட சொல்லிச்சு பாட்டி. 
அடுத்து புது பாட்டு, விளம்பரம்லாம் போய்கிட்டு இருந்துச்சு. கலர்ல படம் பார்த்துக்கிட்டு இருந்த என் பாட்டிக்கு பெருமை தாங்கலை. என்னை பாசத்தோட பார்க்க ஆரம்பிச்சுது. அடுத்து பழைய எம்.ஜி.ஆர் பாட்டு ஏதோ ஒண்ணு கருப்பு வெள்ளையில போய்கிட்டு இருந்துச்சு..,
கண்ணுல தீப்பொறி பறக்க,  ராஜி, கலர் டிவி வாங்குனியே சரி. அதை பார்த்து வாங்க உனக்கு துப்பிருக்கா?
ஏன்? என்ன ஆச்சு? எதுக்கு  இப்போ கத்துறே பாட்டி?
என்ன ஆச்சா! டிவில வர்ற படம் கருப்பு வெள்ளையா தான் தெரியுது. படத்தோட கலர் மழையில கரைஞ்சு போயிடுச்சு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
மூணாவது சம்பவம்
அப்பா ஃப்ரிட்ஜ் வாங்கி வந்தார்
ராஜி, சிகப்பு கலர்ல உன் அப்பன் என்னமோ வங்கி வந்தானே என்னது அது?
அது ஃப்ரிட்ஜ் பாட்டி. அதுக்குள்ள எந்த சாப்பாட்டு பொருளை வைத்தாலும் அப்பிடியே இருக்கும். கெட்டு போகாது, ருசியும் மாறாதுன்னு சொன்னேன். 
சில நாட்கள் நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு..,
ராஜி......
சொல்லு பாட்டி..., இந்த சொம்புல இருக்குற சுடுதண்ணியை கொண்டு போய் ஃப்ரிட்ஜ்ல வச்சு நான் கேட்கும்போது குடு.
என்னது சுடு தண்ணியை ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா? ஏன் உனக்கு மூளை குழம்பி போச்சா?
உனக்குதான் மூளை குழம்பி போச்சு. நீதானே சொன்னே அந்த பொட்டியில எது வச்சாலும் அப்பிடியே இருக்கும் கெட்டு போகாது, ருசி மாறாதுன்னு. உன் அம்மா வச்சு குடுக்கும் சுடு தண்ணி கொஞ்ச நேரத்துல ஆறிப்போகுது. அந்த பொட்டிக்குள்ள வச்சா அப்பிடியே இருக்கும். உன் அம்மாவை நானும் அடிக்கடி தொந்தரவு பண்ண வேணாம் பாரு,
கிர்ர்ர்ர்ர் டமால்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 
இதெல்லாம் சாம்பிள்தான். பாட்டி   என்னை கலாய்த்த சம்பவங்கள் எவ்வளவோ இருக்கு. அப்பா  கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே வேலை கிடைச்சுட்டதால் மதுரை பக்கம் போய்ட்டார்.

அங்கே போனப்புறம்தான் நான் பிறந்தேனாம்.எங்க சொந்த ஊருக்கும், அப்பா வேலை செய்த ஊருக்கும் தூரம் அதிகமென்பதால்,   எனக்கும் பாட்டிக்கும் தூரம் அதிகமாயிடுச்சு போல. அடிக்கடி பார்த்துக்க முடியாததினால பாட்டி, பேத்தின்ற  பாசம் ரெண்டு பேருக்குமே இல்லாம போய்டுச்சு. 

நான் கோவமா பாட்டியை பத்தி பேசும்போது அம்மா அவங்களை பத்தி சொல்லி சமாதான படுத்துவாங்க. கணவனின் பக்க பலமில்லாமல் தனி மனுஷியாய் மூன்று பிள்ளைகளை கரை சேர்த்ததுமில்லாமல் மூத்தாள் மகனை தன் மகன் போல் நினைத்து வளர்த்தாங்க.  காடு கழனிகளில் ஒரு ஆண் பிள்ளைப் போல் காவலுக்கு தைரியமா போவாங்க. ஊரார் யாரேனும் உதவின்னு கேட்டால் தயங்காமல் செய்வாங்க. பசின்னு யார் சொன்னாலும் தனக்கிருக்கோ இல்லையோ அவங்க பசி ஆற்றுவாங்கன்னு தன் மாமியாரை என் அம்மா புகழ்ந்து சொல்வாங்க.மருத்துவம், சமையல், நெசவு, கழனிவேலைன்னு எல்லா வேலையிலும் என் பாட்டி ஆல் ரவுண்டர்.

ஆனால், அந்த தைரியம்தான் அவங்களை திமிர் பிடிச்சவங்களாய் நம்மக்கிட்ட காட்டிடுச்சு. அவங்க அப்படி இல்லைன்னா தனி மனுஷியாய் போராடி பிள்ளையை படிக்க வச்சு, பெண்களை கட்டிக்குடுத்து, சொத்தும் சேர்த்து வைத்திருக்க முடியாதுன்னு அம்மா சொல்வாங்க.

தன் 84 வயது வரை தனியாவே கிராமத்துல வீடு வாசல் தோட்டம் துரவுன்னு பார்த்துக்கிட்டாங்க. கடைசி 2 வருடம் அப்பாவின் வற்புறுத்தலால் தன் பிள்ளைக்கிட்டயே வந்து இருந்து சில மாதங்கள் படுக்கையிலிருந்து, அவங்களுக்கு பணி செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு அளித்து இறைவனடி சேர்ந்த நாள் இன்று.  பாட்டிக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.

இறந்த போது கூட நன் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தவில்லை. ஆனால் ஏனோ இன்று அவங்க உயிர் நீத்த அந்த நிமிடத்தில் என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர். பாட்டி அடுத்த பிறவின்னு ஒன்றிருந்தால் இருவரும் பாட்டி, பேத்தியாகவே பிறப்போம். இந்த பிறவியில் செலுத்தாத பாசத்தை இருவருமே பகிர்ந்து கொள்வோம்

Tuesday, January 10, 2012

தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?


         ஒரு தாத்தா தன் பேருல இருக்குற சொத்தையெல்லாம், தன் தங்கையோட புகுந்த  வீட்டிற்கு எழுதி வைக்குறார்.  அந்த குடும்பத்துல யார் கடைசியா இறக்குறாங்களோ அவங்க விருப்பப்படிதான் செலவு பண்ணனும்ன்னு உயில் எழுதி வச்சு செத்து போயிடுறார்.

         அந்த குடும்ப உறுப்பினர்கள் வரிசையா இயற்கையாவே இறந்துடுறாங்க. கடைசியில் அந்த தாத்தாவோட, தங்கையும், அவங்க 2 வயது குழந்தயும் மட்டுமே உயிரோட இருக்காங்க. அவங்களும், ஒரு ஆற்றை கடக்கும்போது வெள்ளத்துல சிக்கி இறந்துடுறாங்க. 

        இப்போ அவங்க சொத்து வழக்கு அந்த ஊர் பெரியவர்கிட்ட வருது.  யார் கடைசியா உயிர் விட்டது தாயா? குழந்தையா?ன்னு. இப்போ மாதிரி போஸ்ட்மார்ட்டம், டி.என்.ஏ டெஸ்ட்டுன்னு விஞ்ஞான வளர்ச்சி இல்லாத கால கட்டம் அது.
      யார் யாரெல்லாமோ எப்படி எப்படியோ வாதாடுறாங்க. என்னென்னமோ சாட்சிகளை வைக்குறாங்க. ஆனால், அந்த ஊர் பெரியவரோட தீர்ப்பு அந்த குழந்தைதான் கடைசியா இறந்திருக்கும்.அதனோட தாய் முதல்லயே இறந்துட்டிருப்பாங்கன்னு தீர்ப்பு சொல்றார்.

        எப்படின்னு எல்லாரும் எதிர்த்து கேள்வி கேட்குறாங்க. ஆத்துல வெள்ளம் வர ஆரம்பிச்ச உடனே குழந்தையை அந்தம்மா முதல்ல இடுப்புல தூக்கிக்கிட்டு ஆற்றை கடக்க முயற்சி பண்ணி இருப்பாங்க.   வெள்ளம் அதிகம் வரும்போது, தோளில் தூக்கி வச்சுக்கிட்டு இருப்பாங்க. இன்னும் அதிகமா வெள்ளம் வரும்போது தலைக்கு மேல குழந்தையை தூக்கி வச்சுக்கிட்டு இருப்பாங்க. 

       அந்தம்மா மூக்கு வாயெல்லாம் தண்ணி ஏறி அவங்க மயங்கி விழுந்தபின்தான் குழந்தை தண்ணில விழும். அதற்கப்புறம் அந்த குழந்தை மூக்கு வாயெல்லாம்  தண்ணி ஏறி இறப்பதற்குள் அந்த தாய் செத்து போய் இருப்பாங்க. அதனால கடைசியா இறந்தது குழந்தைதான்னு தீர்ப்பு சொன்னேன்னு சொன்னதும் எல்லாரும் ஆமோதிச்சாங்கன்னு ரொம்ப நாளைக்கு முன்னாடி ரேடியோவில் தென்கச்சி சுவாமிநாதன் ஐயா சொல்லும்போது கேட்டது...,

தாய்மை உணர்வு என்னவோ மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது அதிலும் பெண்களுக்கு மட்டுமே சொந்தமானது என இதுநாள்வரை நினைத்திருந்தேன். இப்போலாம் பெண்கள்கிட்டயே தாய்மை உணர்வு மறைந்து வரும் கால கட்டம் இது. 

     ஆனால், அந்த தாய்மை உணர்வு எல்லா உயிர்களுக்கும் சொந்தமானதுன்னும், தன் குழந்தைக்கு ஆபத்து நேரும்போது  ஐந்தறிவு ஜீவன் கூட போராடும்ன்னு எனக்கு வந்த மெயில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..

ரோட்டை கடக்க முயற்சிக்கும்போது வண்டியில அடிப்பட்ட தாய் குரங்கு, தன் குட்டியை மிஸ் பண்ணிடுது.

                                
                                              
தன்னால் முடிஞ்சவரை இழுத்து பார்க்குது. ஆனால், அடிப்பட்ட குட்டி குரங்கால் நகர முடியாமல் கதறுது....

                               

எங்கிருந்தோ வந்த நாய் ஒண்ணு, அந்த குட்டி குரங்கை கடிச்சு குதற பார்க்குது. அதை தடுக்க, தாய் குரங்கு போராடுது...,

                              
தாய் குரங்கோட போராட்டம் தொடருது...,

                              

நாயோட சண்டை போட்டு, நாயை துரத்திவிட்டுட்டு.., குட்டியை காப்பாத்தி, தன் குட்டியை காப்பாற்றிவிட்ட பெருமிதத்தில்  தாய் குரங்கு.
                              
இப்போ சொல்லுங்க தாய்மை உணர்வு மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமா?

Monday, January 09, 2012

கண்ணாடி...,


புற அழகை காட்டும் கண்ணாடி,
அறியுமா மனித மனமும்
அதனுள் ஒளிந்திருக்கும் சூதும்??
அதை அறிய


கண்ணாடிக்கும் கூட,

கண்ணிரண்டு வேண்டும்,
அந்த கண்களும் போதாமல்,
கண்ணாடியும்(Mirror) கூட கண்ணாடி(Specs) போடும்.

Friday, January 06, 2012

நவக்கிரகம்



 மனிதர்கள் வாழ்வில் ஜோதிட ரீதியாக கிரகங்களின் பங்கு முக்கியமானதாம். அந்த கிரகங்களின் நாயகர்களின் பெயர்களும் அவர் பற்றிய விவரங்களும் தொகுத்திருக்கிறேன். . இனி வரும் வாரங்களில் ஒவ்வொரு கோள்களுக்குண்டான  கடவுள், கோயில் இடம் பெற்றிருக்கும் ஊர், அவற்றின் சிறப்பு, தல வரலாறு, பரிகாரங்கள்  பற்றி வரும் வாரங்களில் விரிவாக பார்ப்போம். 
கிரகம்: சூரியன்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.
.

கிரகம்: சந்திரன்
ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

கிரகம்: குரு
ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி

கிரகம்: ராகு
ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்

கிரகம்: புதன்
ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்

கிரகம்: சுக்கிரன்
ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்

கிரகம்: கேது
ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.

கிரகம்: சனி
ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்

கிரகம்: செவ்வாய்
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்

Thursday, January 05, 2012

என்னோடு நீ மட்டுமே..,

 எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!??

சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!
 

Tuesday, January 03, 2012

மதுரை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


     என் அம்மா சில நாட்களுக்கு முன் ராஜ் டிவியில் அகட விகடம்நிகழ்ச்சியை பார்த்திருக்காங்க. நிகழ்ச்சியின் கடைசி சில நிமிடங்களை மட்டுமே அம்மா பார்த்திருக்காங்க.  

     ஒரு கிளார்க்(கிளார்க்கான்னும் சரியா தெரியலை. ஆனால், அரசாங்க ஊழியர்)  ஒருத்தர் சில வருடங்களுக்கு முன் அலுவலகத்துக்கு செல்லும் வழியில் மனநலம் சரியில்லாத ஒரு பெண் மலத்தை தின்னும் காட்சியை கண்டு மனம் பதறி, அவளை தன்னோடு அழைத்து சென்று மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டு வந்திருக்கிறார். 

   வீட்டிற்கு வந்து யோசிக்கையில், இதுப்போல் மனநலம் பாதிக்கப்பட்டு.., ஏதோ காரணங்களுக்காக தெருவில் விடப்பட்ட பெண்களின் நிலையை யோசித்து பார்த்திருக்கிறார். அப்படிப்பட்ட பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகி, அதனால் சில பெண்கள் கர்ப்பிணியாய் அலையும் அவலங்கள்தானே அப்பெண்களுக்கு நேர்கிறது.
நாமே ஏன் அப்பெண்களுக்கு பாதுகாப்பாய் இருக்கக்கூடாது என்று எண்ணி, தன் அரசாங்க பணியிலிருந்து விலகி, மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட பெண்களுக்கான காப்பகத்தை தொடங்கியுள்ளார். சிறிய அளவில் தொடங்கப்பட்ட காப்பகம் இப்போது கிட்டத்தட்ட 300 பெண்களை அவர் பாதுகாத்து வருகிறாராம். 

  இப்போது அப்பெண்கள் தங்க புதுசா கட்டிடம் கட்டி கொண்டிருக்கிறாராம். அதற்கு பொருளுதவி வேண்டி அகடவிகடத்தில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். 

   அவருக்கு பொருளுதவி செய்யனும்ன்னு அம்மா ரொம்ப ஆவலா இருக்காங்க.  ஆனால், அவர் பெயரோ அவர் நடத்தும் காப்பகத்தின் பெயரோ, மற்ற  எந்த விவரமும் எங்களுக்கு தெரியாது. எனவே, இதை படிக்கு மதுரை வாழ் பதிவர்களுக்கு தெரிந்தாலோ அல்லது தங்கள் நண்பர்களிடத்தில் விசாரித்தோ முகவரியை அளித்தால் பேருதவியாய் இருக்கும்.

 உதவுவீர்களா நண்பர்களே?