Thursday, October 31, 2013

தலை தீபாவளி

வந்தது தடாலடி தீபாவளி!!
புது தம்பதியினருக்கு இது தலை தீபாவளி...,
மாப்பிள்ளை முறுக்கில் மணமகனும்...,
தேவதையின் வரவாய் புது பெண்ணும்...,
தாய் வீட்டு அழைப்பிற்கேற்ப,
தாய் வீடு செல்லும் வைபவம்...,

சிறகில்லா சிட்டாய் பறக்கிறாள்...,
தன் தாய் வீட்டிற்கு செல்ல!!
தாயின் அன்பும்...,  தந்தையின் பாசமும்...,
கிடைத்தது மணமாகும் முன்பு!!

இப்போதும் கிடைக்கிறது...,  ஆனால்,
பெற்றோரை பிரிந்து வேறு மாநிலத்தில்
வாழுகிறாள்!!  வாடுகிறாள்..., அவர்களின் பிரிவில்.
ஆனால், இன்றோ தீபாவளி கொண்டாட்டம்!!
அந்த, சந்தோஷத்தில் துயரை மறக்கிறாள்??!!
மாப்பிளையும் ,  புது பொண்ணும்...,
அவள் வீட்டை அடைந்தார்கள்.
இல்லை..., இல்லை..., சொர்க்க
வாசலையே அடைந்தார்கள்.

பெற்றோரும், அவள் தங்கையும்,
அவர்களை வரவேற்க அங்கு
ஆனந்த கொண்டாட்டம் ஆரவாரமாய்..,
ஆனந்த கண்ணீரில் நடக்கிறது!!
இனிப்பு பலகாரம் கொடுத்து...,
இன்பத்தை குடுத்தாள் தாய்!!
தங்க மோதிரத்தை பரிசளித்து
மாப்பிளையை கொஞ்சம் தூக்கலாக
கவனித்தார் பெண்ணின் தந்தை!!

மாப்பிளையும் ஆச்சிரியத்தில் மிதக்க??!!
அந்த மோதிரத்தை புது பெண்ணின்
அழகிய மெல்லிய விரலில்
மாப்பிளை மெல்ல மாட்டினார்.

பெண்ணின் பெற்றோர்
புரிந்து கொண்டனர் தன் மகளின்
வாழ்க்கை சந்தோஷமாய் போகிறது என்று??!!

அவளும், அவரின் காதலில்
உருகினாள் அழகாய் அன்று!!
பெண்ணின் தங்கையோ அவர்கள்
இருவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க
கை கடிகாரத்தை பரிசளித்தாள்!!
அவர்களுக்கு இன்னும் ஆச்சிரியம்!!
அதை, இருவரின் கையில் மாட்டிவிட்டாள் அவள்.

இருவரும், எழுந்து  கடவுளிடம்
நன்றி சொன்னார்கள் இந்த நாளிற்கு!!
பின், பெண்ணின் பெற்றோரிடம்
இருவரும் சென்று பணிந்து
ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

அவளின், பெற்றோரும் அவர்களுக்கு
புது ஆடை பரிசளித்தார்கள் தம்பதியினருக்கு...,
தலை தீபாவளி என்பதால் கொஞ்சம்
கவனிப்பு தூக்கலாக இருந்தது
அன்றைய நாளின் தொடக்கம்...,
 காலை உணவுக்கு தயாரானார்கள்
தாயின் கை பதத்தில் சாப்பிட்டு கொல்லை நாளானது!!!
அவளின் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகபோகுது...,
மல்லிகை பூ இட்டிலியும்,  கார சட்டினியும்...,
கமகமக்கும் ஆட்டுக்கறி கூட்டும் பரிமாறப்பட்டது...,
தித்திப்பான மஞ்சள் நிற கேசரியுடன்.

காலை உணவு உண்டு கொஞ்சம்
அரட்டை அடித்து கொண்டு இருந்தார்கள்.
பின், பெண்ணோ தாயிடம் நலம் விசாரிக்க...,
தாயும் தடபுடலாய் மதிய உணவை தயார்
செய்துகொண்டே உரையாடினாள்  அவளிடம்.

இவள், உதவ வர தாய் தடுத்தாள்...,
போய் கணவரை கவனி என்று கூறி...,
தந்தையோ வாழை இலை வாங்க சென்றார்.
அரட்டை அடித்ததில் நேரம் சென்றது...,
”பட பட பட்டாசு” வைத்து நேரத்தை கழித்தார்கள்!!
பட்டாசு லக்ஷ்மி வெடி வெடித்து குருவி வெடிகள் போட்டு
மகிழ்ந்தனர் அனைவரும் ஆனந்தமாய்!!

விருந்து தயார் ஆனது, நாக்கில் எச்சி ஊருது...,
வாசனை மூக்கை துளைக்கிறது நன்றாய்!!
மிளகு ஆட்டுக்கறி வறுவல்... ,ஆட்டுக்கறி கூட்டு...,
கோழி கூட்டு....,, மிளகு போட்ட முட்டை வறுவல்...,
சத்தான ஈரல் கூட்டு..., ஆட்டுக்கறி குழம்பு...,
கோழி சூப்பு தக்காளியும், எண்ணெயும் மிதக்க..,

ஆரோக்கியமான புதினா துவையல்...,
மொறு மொறு அப்பளம்..., கலர் கலர் வடகம்...,
செமிக்க ரசமும்...,,  தயிரும்.., உளுந்த வடையும்...,
அப்பறம் இனிப்பு பலகாரமும்...,
இப்படி நிரம்பி வலிய மனமும் வேட்டையாடியது...,
 இந்த  படையலை!!

கொஞ்சம் மனம் விட்டு அனைவரும் பேசி...,
அரட்டையடித்து..., குட்டி தூக்கம் போட்டு..,
மாலை காபி குடித்து கிளம்ப தயார் ஆனார்கள்.
இப்போது,கொஞ்சம் அந்த பெண்ணிற்கு??!!

கண்ணீர் வந்தது..., ஆனால், இந்த நாள்
அவளுக்கு சந்தோஷத்தின் மணமாய்!!
இருந்தாதால்..., அவள் கண்ணீரை கட்டுபடுத்தி..,
சந்தோஷமாய் கிளம்பினாள்...,
புகுந்த  வீட்டை நோக்கி...,
பிறந்த வீட்டில் விடை பெற்று!!

Wednesday, October 30, 2013

அர்ச்சுனன் தபசு,மாமல்லபுரம் - மௌனச்சாட்சிகள்

போன வாரம் மௌனச்சாட்சிகள்ல காணும் திசையாவும் சிற்பங்கள் நிறைந்திருக்கும், சிற்ப நகரமான மாமல்லபுரத்திலுள்ள புலிகுகை, குடைவரைக் கோயிலான அதிரணசண்ட சிவன் கோவில்  மற்றும் கிராம தேவதையான ஸ்ரீதனியமர்ந்த அம்மன் கோவில்லாம் பார்த்தோம். அங்கிருந்து மாமல்லபுரம், பாண்டி பிரியும் ECR ரோட்ல மாமல்லபுரத்திற்கு செல்லும் வழியில் பல்லவ மன்னன் சிலை இருக்கு.  அது கவனிப்பாரற்று இருக்கு. அப்படியே அதை கடந்து நகருக்குள் நுழைஞ்சா முதல்ல நம் கண்ணுல படுறது முகுந்தநாயனார் கோவில் இது தரையில் கட்டப்பட்ட கோவில்.
அதற்கு முன்னே ஒரு சிறிய தகவல். இங்க இருக்குற சிற்பங்கள் மற்றும் கோவில்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள், 
ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள்,
 மற்றும் கட்டுமானக் கோயில்கள்.

இவைத் தவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் கோவிலின் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்புறத்திலும் இருக்கு.

கோவில்களும் தரையில் கட்டப்பட்டவை, மலைமீது கட்டப்பட்டவை கடற்கரையில் கட்டப்பட்டவைன்னு பிரிக்கலாம்.  அந்த வகையில் நாம இப்ப பார்க்க போறது முகுந்தநாயனார் கோவில் கிழக்கு கடற்கரை சாலை வழியா வந்தா இந்த கோவிலை தாண்டித்தான் மாமல்லபுரம் போகமுடியும்.
இது பல கற்களால் ஆன ஒட்டு கோவில் ன்னு சொல்றாங்க இந்த கோவில் பெரும்பாலும் மூடியே இருக்கும். காலைலயும், மாலையிலயும் செடிகளுக்கு தண்ணி தெளிக்க திறக்குறாங்க. மற்றப்படி பராமரிப்பு காரணங்களுக்காக யாரையும் உள்ளே அனுமதிக்கிறது இல்ல.  அதனால,  வெளியிலயே நின்னு தரிசனம் பண்ணிட்டு நாம அங்க இருக்குற மலைகோவில்களை முதல்ல பார்க்கலாம்.
அங்கே போறதுக்கு முன்ன நாம் மாமல்லபுரம் பஸ் ஸ்டான்டை தாண்டி போகணும். அங்கயும் ஒரு நாற்கால் மண்டபம் அழகா வடிவமைக்கப்பட்டிருக்கு. நம்ம ஆட்களுக்கு பயந்தோ என்னமோ அதை பாதகாப்பா கிரில்லாம் போட்டு மூடி வச்சு இருக்காங்க.  அதுக்கு முன்ன தெரிவது பெருமாள் கோவில் மண்டபம். அதையும் தாண்டி  மலை கோவில்களுக்கு செல்லும் போது நம்மை முதலில் வரவேற்ப்பது அர்ச்சுனன் தபசு சிற்பங்கள் கொண்ட மலைப்பாறை.

இந்தப்பாறையின் நடுவில் இயற்கையிலேயே அமைந்த இடைவெளி ஒன்று இருக்கு. இது இரண்டு பாகமா பாறையைப் பிரிக்குது. இதில் தெய்வங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகராஜன், நாககன்னிகை முதலியவர்களையும், யானை, சிங்கம்,சிறுத்தை, குரங்கு, பூனை, பறவைகள் எல்லாவகையான சிற்பங்களும் இருக்கு . இந்த பாறை சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் இருக்கலாம்.  இந்த பாறையில் அர்ச்சுனன் ஒற்றைக்காலில் நின்று சிவனை நோக்கி தவமிருந்து அஸ்திரங்கள் பெற்ற வராலாறுசொல்லப்பட்டிருக்கு.  அதில் அவர் ஒட்டிய வயிறுடன் மெலிந்து காணப்படுகிறார்.  அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

ஆனா ஆராய்ச்சியாளர்கள், அர்ச்சுனன் பாசுபத ஆஸ்திரத்தை வேண்டி சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்க செதுக்கப்பட்டிருக்குன்னு சொன்னாலும்,  ஒருசிலர், பகீரதன் கங்கையை வரவைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இதுன்னும் சொல்றாங்க. இந்தச் சிற்பமே ஒரு சிலேடைன்னும் இரு காட்சிகளையும் ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சின்னும் சொல்றாங்க.  மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமய மலையைச் சித்திரிக்கும் காட்சின்னும் பல்வேறு கருத்துக்கள் சொல்றாங்க . என்ன நினைச்சு இச்சிலையை செதுக்கினார்ன்னு அந்த ஆயனார் சிற்பிக்குதான் வெளிச்சம். அதையெல்லாம் தாண்டி நாம மலைமேல் இருக்கும் சில கட்டிடங்கள் பாப்போம்.

அர்ச்சுனன் தபசு பாறைச் சிற்பத்துக்கு அருகில் கிருஷ்ண மண்டபம் ன்ற மண்டபம் இருக்கு.   இதுக்கு உள்ளதான் கோவர்த்தன சிற்பத் தொகுதி இருக்கு.   பல்லவர் காலத்தில் செதுக்கப்படும்போது இந்தச் சிற்பமும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பமாகத்தான் இருந்ததாம்.. பின்னார் விஜயநகர ஆட்சியின்போது இதன்மீது மண்டபம் ஒன்று கட்டப்பட்டதாம்.

இந்திரனுக்கு விழா எடுப்பதை கண்ணன் தடுத்து நிறுத்தியதால கோபம் கொண்ட இந்திரன் மழையை ஏவ, கோகுலமே மழை, புயல், வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள, ஆயர்களையும் மாடு, கன்றுகளையும் காப்பாத்த கோவர்த்தனக் குன்றைக் குடையா எடுத்தான் கண்ணன் என்பது புராணம். இந்தக் கதை தமிழ்ப் பாடல்களில் மிகவும் புகழப்பட்ட ஒன்று. இதனை அப்படியே சிலையாக வடித்துள்ளனர் பல்லவ சிற்பிகள்.
சிற்பத்தின் நடுவே ஒரு கையால் மலையைத் தூக்கியபடி கண்ணன் நிற்க, அருகே பலராமன், பயந்து நடுங்கும் ஓர் ஆயனை அணைத்து ஆறுதல் தருகிறார். இனி பயமில்லை என்பதால், மாடுகள், கன்றுகள், ஆயர்கள், ஆய்ச்சியர் ஆகியோர் தத்தம் வேலையை மகிழ்ச்சியுடன் செய்கின்றனர். ஒருவர் புல்லாங்குழல் வாசிக்கிறார். இருவர் ஜோடியா நடனம் ஆடுறாங்க.. ஒருவர் மாட்டிடமிருந்து பால் கறக்கிறார். மாடு வாஞ்சையுடன் தன் கன்றை நாவால் நக்குது. ஒரு ஆய்ச்சி தலையில் சுருட்டிய பாய், ஒரு கையில் உறியில் கட்டி வைத்திருக்கும் பால், தயிர் சட்டிகளுடன் நிற்கிறாள். ஒருவர் தோளில் ஒரு சிறு குழந்தை உட்கார்ந்துள்ளது. சற்றே பெரிய குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் கையில் பிடித்துள்ளனர். எங்கு திரும்பினாலும் மாடுகள் நம்மைப் பார்க்கிற மாதிரி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன முல்லை நிலக் காட்சியை அப்படியே அற்புதமாகச் செதுக்கியுள்ளனர் சிற்பிகள்.

அனந்தசயன சிற்பத் தொகுதி கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில இருக்கு. இங்க குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் இருக்கு.  இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி.
மகிஷாசுரமர்த்தினி சிற்பத் தொகுதி

மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, துர்க்கை (சக்தி) சிங்க வாகனத்தில் ஏறி, மகிஷன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருக்கு. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் இருக்காங்க. அடுத்து நாம பார்க்க போறது கலங்கரை விளக்கம்.
கலங்கரை விளக்கத்தில் மேல ஏறி செல்ல ஒருவருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுது.   இதுல கவனமா ஏறனும். படிகள்லாம் குறுகலா வளைந்து வளைந்து போகுது. கைப்பிடித்து செல்லும் பகுதியும் அவ்வளவு உயரமா இல்ல.


சின்ன பிள்ளைங்களை கூட்டிசெல்லும போது கவனமா கூட்டிப் போகனும் உயரத்துல போகும் போது தலை சுத்தல் வரலாம். அதெல்லாம் தாண்டி உச்சிக்கு போய்ட்டா மொத்த மாமல்லபுரத்தையும் அங்கிருந்து பார்க்கலாம்.

சுற்றிபார்க்கும் போது நாலா புறமும் மாமல்லபுரத்து அழகு தெரியுது . கதிரவனும் மெல்ல மெல்ல அந்தி சாய தொடங்கிவிட்டான.   அந்திசாயும் வேளையில் கலங்கரை விளக்கத்தின் நிழல் கீழ விழ தூரத்தில் கடற்கரை கோவில் அழகாக காட்சியளிக்குது.

கலங்கரை விள்க்கதிலிருந்து நேரா தெரிகிற குன்றின்மேல் ஏறிப்போனால் இடிந்த கோபுரம் போன்ற ஒரு கட்டிடம் ஒண்ணு இருக்கு.

இது முன்பு கலங்கரை விளக்கமாக பயன்பட்டது ன்னு சொல்றாங்க.  இங்க கற்கள் அழகா செங்கற்களை போல் அடுக்கி வைக்கப்பட்டு காற்று வருவதற்கு துளைகளும் உள்ள நான்கு பெரிய தூண்களும், மேல வரி கற்களும் வைத்து மூடப்பட்ட நிலையில் அழகாவும் அதே நேரம் கவனிபாராற்றும் இருக்கு.

இதற்கு கீழே ஓலக்கணீசர் ன்ற பெயருள்ள சிவப்பெருமான் கோயில் இருக்கு. அதன் சிற்பங்கள் எல்லாம் மிகவும் அழகாக செதுக்கப்பட்டு இருக்கு.

கோவிலுக்குள் சிங்க முகங்கள் கொண்ட தூண்களும், உள்பக்கம் சிற்பங்கள் செதுக்கப்பட்ட சில மாடங்களும் காணப்படுது அதனுள் விக்ரகங்கள் இல்ல. 

பக்கவாட்டில் படிக்கற்கள் இருக்கு.  ஆனா அவை மேலே போகாமலயே முடிஞ்சு போகுது.  பார்க்க ரொம்ப  அற்புதமா இருக்கு. எங்களுக்கு முன்ன சென்ற வெளிநாட்டு ஜோடிகள் வாவ் பியூட்டிஃபுல்ன்னு சொல்லிட்டு போகும்போது எம்புட்டு மகிழ்ச்சியா இருந்துச்சு தெரியுங்களா!?  ஆனா, நம்ம உள்ளூர் ஜோடிகள் அந்தி சாய்வதால் அவ்வவ் ..ன்னு சொல்லிக்கிற அளவு  நந்துக்குறாங்க. பிள்ளைக்குட்டிகளை கூட்டி போவதால அங்கிருந்து சீக்கிரத்துலயே கிளாம்பிட்டோம்.

நாம் பார்க்க வேண்டிய இடங்கள் மாமல்லபுரத்துல இன்னும் நிறைய இருக்கு . ஆனா அந்தி சாய்ந்து கொண்டு வருவதால, நம்ம ஆளுங்க பண்ணும் இம்சைகள் காண சகியலை. அதனால, மிச்சத்தை அடுத்த வரும் வாரங்கள்ல மௌனச்சாட்சிகள்ல பார்த்துக்கலாம்.

Tuesday, October 29, 2013

பலகாரம் சுடும் பிரபல பதிவர்கள் - கிச்சன் கார்னர்

ட்ரிங்க்..., ட்ரிங்க்...,

ஹலோ ராஜிம்மா! எப்படி இருக்கே!? என்னம்மா விசயம்!?

நல்லா இருக்கேன் அண்ணா! தீபாவளிக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. பலகாரம்லாம் சுடனும்..., எப்பவும் அம்மாவும், தூயாவும் ஹெல்ப் பண்ணுவாங்க. இந்த வருசம் அம்மாக்கு உடம்புக்கு முடியல. தூயா படிக்க போய்ட்டா. எல்லா வேலையும் நானே செய்யனும். வேலைகளை நினைச்சாலே பயம்மா இருக்குண்ணா!

நீ ஏன்மா பயப்படுறே!? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்வாங்க.  நீ ஏகப்பட்ட தம்பிகளோடு, அண்ணன்களையும் இணையத்தால சேர்த்து வச்சிருக்கே! அதனால, நாங்கலாம் இருக்கோம். என்ன பலகாரம் சுடனும், அதுக்கு தேவையானதைலாம் வாங்கி வை. நான் போய் நம்ம சீனு, ஜீவா, ஆஃபீசர், மனோ, ஆரூர் மூனா செந்தில், சசி, சௌந்தர், ரூபக், மோகன்குமார்ன்னு எல்லோரையும் கூட்டி வரேன். பலகாரம்லம் ருசியா செஞ்சு அசத்திடலாம்.

சரிங்கண்ணா!


ராஜிம்மா! எல்லோரும் வந்துட்டாங்க பாரு.

வாங்க ! எல்லாரும் வாங்க! என்ன சாப்பிடுறீங்க!? டீ? காஃபி? கூல் ட்ரிங்க்ஸ்?

நாய் நக்ஸ்: தங்கச்சிம்மா! டீ, காஃபி தான் உங்கண்ணி போட்டு கொடுத்து கொல்லுறாளே! வேற எதாவது கிடைக்குமா!?

”மின்னல் வரிகள்”கணேஷ்: யோவ் நக்ஸ்! இந்த பலகாரம்லாம் சாமிக்கு படைக்குறதுக்காக செய்யுறது. அதனால, சுத்த பத்தமா செய்யனும். பலகாரம்லாம் சுட்டு முடிச்சு ஊருக்கு கிளம்பும்போது ஒரு குவார்ட்டர் வாங்கி தரேன்.

”கோவை நேரம்” ஜீவா : எங்களுக்கு குவார்ட்டர்லாம் எந்த மூலைக்கு!? அதனால, வீட்டுக்கு போகும் போது ராஜியக்கா கிட்ட சொல்லி ஒரு கேஸ் பகார்டியாக்கு காசு வாங்கி தாங்க!

”மின்னல் வரிகள்”கணேஷ்: சரி, வாங்கி தரேன். ராஜிம்மா! பலகாரம் செய்ய மளிகைப்பொருட்கள்லாம் வாங்கி வந்தாச்சா!?
இல்லண்ணா! வீடுதிரும்பல் மோகன்குமார் அண்ணாவை அனுப்பி இருக்கேன். இன்னும் வரலை. கடைக்கு போயும் 2 மணி நேரம் ஆச்சு.

”மின்னல் வரிகள்”கணேஷ்:  அப்படியா! பொருட்கள்லாம் வந்ததும் ஊற வைச்சு அரைக்க வேண்டியதைலாம் அரைச்சா பலகாரம் செஞ்சுடலாம். இதோ வந்துட்டாரே! என்னங்க மோகன் கடைக்கு போய் ரொம்ப நேரம் ஆனதா ராஜி சொன்னாளே!


வீடு திரும்பல் மோகன்: ம்ம்ம் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு போனேன். மளிகைக்கடைக்காரர்கிட்ட பேசி ஒரு பதிவு தேத்தினேன். மளிகைக்கடைக்காரர் அறியாத தகவல்கள்ன்னு. அப்புறம், அரிசியும், சர்க்கரையும் வாங்க ரேஷன் கடைக்கு போனேன். அங்க அவங்ககிட்ட பேசி ரேசன் கடைக்காரர் அறியாத தகவல்கள்ன்னு பதிவு தேத்துனேன்.

நாஞ்சில் மனோ: உங்கக்கூட எப்படித்தான் குடும்பம் நடத்துறாங்கன்னு உங்க வூட்டம்மாக்கிட்ட யாராவது பேட்டி எடுத்து பதிவா போட்டா தேவலாம். சரி, வாங்க போய் பலகாரம் சுடலாம்.

திடங்கொண்டு போராடு சீனு: வாங்க போகலாம். செந்திலண்ணா, நீங்க ஏன் பேப்பர் பேனா கொண்டு வந்திருக்கீங்க.

ஆரூர் மூனா செந்தில்: அதுவா! பலகாரம் சுடுறதுக்கு முன்ன என்ன நடந்துச்சுன்னு பதிவு போட வேணாமா?! அதுக்குதான். சினிமாவுக்கு போகும்போது எல்லாமே தெரிஞ்ச வழி, தியேட்டர் அதனால ஒரு வழியா ஒப்பேத்திடுவேன். ஆனா, அக்கா வீட்டு கிச்சன், ஹால், மிக்ஸி, கடாய் பத்தி தெரியாதுல்ல. நான் என்னத்தையாவது எழுதி வைக்க..., அக்கா ஃபோட்டோ போட்டு அப்படி இல்ல. செந்தில் பொய் சொல்லிட்டான்னு மானத்தை வாங்குவாங்க தேவையா!? அதான் குறிப்பெடுத்துக்குறேன்.
திடங்கொண்டு போராடு சீனு: அதும் கரெக்ட்தான். அக்கா, இப்படி கூப்பிடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா, முன்னாடியே ஒரு போட்டி வச்சிருப்பேன். காதலன் அல்லது காதலி மனசை கவரும் விதமா பலகாரம் சுடுவதெப்படின்னு..., 

கோவை நேரம் ஜீவா: சரி விடு சீனு! அடுத்த தீபாவளிக்கு அப்படி ஒரு போட்டி வச்சுடலாம். சரி, நாமெல்லாம் வந்துட்டோம். எப்பவும், எங்கயும் முதல்ல வரும் டிடி எங்க ஆளை காணோம்.

திண்டுக்கல் தனபாலன்: நான் காலைலயே வந்துட்டேன். நாந்தான் மளிகைப்பொருட்கள் என்னென்ன வாங்கனும்ன்னு லிஸ்ட் எழுதி கொடுத்தனுப்பினேன். என்னை கேக்குறீங்களான்னு பார்க்கத்தான் மாடில உக்காந்துட்டிருந்தேன். தமிழ்வாசி கைல எதோ புத்தகம் வச்சிருக்கிறாறே ஏன்!?

தமிழ்வாசி பிரகாஷ்:  இதெல்லாம் பலகாரங்கள் எப்படி சுடுவதுன்னு புத்தகம். இதை பார்த்து டெக்னிக்கலா நாம பலகாரம் சுடனும். 

ரூபக் ராம்: இப்படியே பேசிக்கிட்டு இருங்க.  உங்க வூட்டம்மா ஒரு நாளைக்கு உங்களை டெக்னிக்கலா உதைக்க போறாங்க. ராஜியக்கா! ஏன் இம்புட்டு கஷ்டப்பட்டு பலகாரம் செய்யனும். அடையாறுல எனக்கு தெரிஞ்ச ஒரு ஹோட்டல் இருக்கு. அங்க போனா அதிரசம் நல்லா இருக்கும். சேலம் பக்கத்துல ஒரு வீட்டுல முறுக்கு சுட்டு தர்றாங்க. அதை வாங்கிக்கலாம்.

மின்னல் வரிகள் கணேஷ்: அதெல்லாம் எப்படி செய்தாங்களோ! நாம சுத்தபத்தமா செய்யலாம் ராம்.  மனோ நீஞக் ஏன் கைல அருவா எடுத்து வந்திருக்கீங்க!? பலகாரம் சுடுறதுக்கு எதுக்கு அருவா!?

நாஞ்சில் மனோ: அரிசி, பருப்பு, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி வாங்கி வரும் கவர்களை கிழிக்க அருவா கொண்டாந்தேன். அது மட்டுமில்லாம, அதிரசம், முறுக்கு மாவுகளை சின்ன சின்ன உருண்டையா உருட்ட ஒரே லெவலா மாவு வெட்டறதுக்கும் அருவா கொண்டாந்தேன்.

உணவு உலகம் சங்கரலிங்கம்: கவரை பிரிக்கவும், மாவை உருட்டவும் அருவாவா!? பலகாரம்லாம் வெளங்குன மாதிரிதான். சரி, அந்த பருப்பு, அரிசி, சர்க்கரைலாம் இப்படி கொண்டாங்க. அதுல கலப்படம் இருக்கா. பேக்கிங் சரியா இருக்கா?ன்னு பார்க்கனும். கேசரிக்கு போடுற கலர் பவுடர் யார் வாங்கி வந்தாங்க.

திண்டுக்கல் தனபாலன்:  குலோப் ஜாமூன்ல கொஞ்சம் கலர் பவுடர் சேர்த்தா நல்லா இருக்குமேன்னு நாந்தான் லிஸ்ட் எழுதி கொடுத்தேன் ஆஃபீசர்.
உணவு உலகம் சங்கரலிங்கம்: நோ! நோ! இந்த கலர்லாம் சேர்க்க கூடாது. இதுல்லாம் சேர்க்குறதால உடம்புக்கு கேடு, அதுமிட்டுமில்லாம இந்த பாக்கெட்டுல என்னிக்கு தயாரானது?ன்ற தகவலும் இல்ல. ஏம்மா ராஜி! அரிசி, பருப்பு ஊற வைக்க தண்ணி பிடிச்சு வச்சிருக்கியா!?

பிடிச்சு வச்சிருக்கேண்ணா! ரெண்டு தவளை, ஒரு அண்டாவுல இருக்கு.

உணவு உலகம் சங்கரலிங்கம்: அதை விம் போட்டு நல்லா துலக்கி, கழுவினியா?! தண்ணி என்னிக்கு பிடிச்சே!? தட்டு போட்டு மூடி வச்சிருக்கியா!? தண்ணி பிடிக்கும் இடத்துல க்ளீனா இருக்கா!? இல்ல தண்ணி தேங்குதா!?

விக்கியுலகம் வெங்கட்:  இப்படியே ராஜியை கேள்வி கேட்டுட்டு இருந்தா தீபாவளி முடிஞ்சு பொங்கலே வந்துடும். நான் இருக்குற வியட்னாம்ல பூச்சிலாம் சாப்பிடுறாங்க. அப்படி நினைச்சு சாப்பிட்டுக்கலாம். இன்னும் பலகாரம் சுடவே ஆரம்பிக்கலை. ஆனா, அதுக்குள்ள என்ன நாய் நக்ஸ் இப்படி தூங்குறாரு!? நக்ஸ்ண்ணே! எந்திரிங்க! ஏன் இப்படி தூங்குறீங்க!!
நாய் நக்ஸ்: ஊருல இருந்து கார்ல வரும்போது முன்னாடி போய்க்கிட்டிருந்த கார்க்காரன் மேல இடிச்சு பெரிய சண்டை வந்துட்டுது. அப்புறம் கமிஷ்னருக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து அவர் வந்து பஞ்சாயத்து பண்ணி இங்க வர்றதுக்குள்ள டயர்டாகி போச்சு. 

விக்கியுலகம் வெங்கட்: கமிஷனருக்கே மிஸ்டு காலா!? சுத்தம். ஏன்யா, மதுரை தமிழா! உனக்கு இம்புட்டு நேரமா!? நாங்கலாம் எப்பவோ வந்திட்டோம். போ உன் சகோதரி ராஜி உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.

மதுரை தமிழன்: உங்களுக்கென்னப்பா, நீங்கலாம் உள்ளூர்லயே இருக்கீங்க சீக்கிரம் வந்துட்டீங்க. ஆனா, நான் அமெரிக்காவுல இருக்கேன். இதுக்கே ஒபாமாக்கிட்ட பேசி ஸ்பெஷல் ஃப்ளைட் அனுப்ப சொல்லி வந்திருக்கேன். தீபாவளி அதுவுமா இந்தியாவுக்கு போறீங்க, உங்க பழைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு சேலை எடுத்து கொடுக்க போறீங்களா?!ன்னு ஆயிரம் கேள்வி கேட்ட பொண்டாட்டிக்கிட்ட சரியா பதில் சொல்லாம அவ கையால பூரிக்கட்டை அடி வாங்கிட்டு வந்திருக்கேன். ஏம்பா சதீஷ்! நீ ஏன் துப்பாக்கி கொண்டாந்திருக்கே!?

” ரௌத்திரம் பழகு” சதீஷ் செல்லதுரை: காலைல நம்ம வாத்தியார் போன் பண்ணி இருந்தார். பார்டர்ல இருந்ததால, என்ன சொல்றாருன்னு சரியா காதுல விழல. ராஜி அக்கா, வீடு, சுடனும், புறப்பட்டு வான்னு மட்டும்தான் காதுல விழுந்துச்சு. திருடன், தீவிரவாதி யாராவது அக்கா வீட்டுக்குள் வந்துட்டாங்களோன்னு துப்பாக்கி கொண்டு வந்தேன்.

தமிழ்வாசி பிரகாஷ்: ம்க்கும், ராஜி அக்கா, திருடன், தீவிரவாதியை பிடிச்சு ஆட்டி வைக்காம இருந்தா போதாதா!? ராஜி அக்கா வீட்டுல பலகாரம் சுட ஹெல்ப்க்கு நம்மை கூப்பிட்டு இருக்காங்க. அதுக்கு துப்பாக்கி சரிப்படாது. கரண்டி, கடாய்தான் வேணும். சசியக்கா! நாங்களே பேசிட்டு இருக்கோமே! நீங்க மகளிரணியாச்சே! எதாவது பலகாரம் செய்யுங்களேன்.

தென்றல்” சசிகலா:  
என் ஆசை மச்சானே! 
நீ பிறந்ததென்ன திருநெல்வேலியா!?
எனக்கு பதில் சொல்லாம,
 இப்படி ஜவ்வா இழுக்குறியே!? 

நீ வளர்ந்தென்ன மணப்பாறையா!? 
அந்த முறுக்கு போல என் மனசை நொறுக்குறியே!

”கோவை நேரம்” ஜீவா! யக்கா! யக்கா! உங்களை கவிதை படிக்க வரச்சொல்லலை. தீபாவளி பலகாரம் செய்ய கூப்பிட்டோம்.
தென்றல்” சசிகலா: இப்பதான் பாட்டி வைத்தியத்துக்காக, தீபாவளி லேகியம் செய்யுறது பத்தி படிச்சேன். அதை வேணும்ன்னா செய்யுறேன். மத்தப்படி பலகாரம் செய்யுறதுலாம் எனக்கு தெரியாது.

நாஞ்சில் மனோ” நீ கிண்டுற அல்வாவே மருந்து மாதிரிதான் இருக்கும்ன்னு மச்சான் சொல்ல கேட்டிருக்கேன். நீ அமைதியா போய் கவிதை எழுது. நாங்க பார்த்துக்குறோம் தாயி. ஆமா, இங்க இந்த கலாட்டா நடக்குது, இந்த ஆவிப்பய மட்டும் அமைதியா இருக்கானே! ஏன்? 

”மின்னல் வரிகள்: கணேஷ்: ஆவி, என்னாச்சுப்பா!? ஏன் டல்லா இருக்கே!

”பயணம்” ஆவி: ராஜி அக்கா மேல கோவம். அதான் அமைதியா இருக்கேன்.

”அஞ்சறைப் பெட்டி” சங்கவி: ஏன்? என்னாச்சு!? நீ வரும்போது சரியா ரெஸ்பான்ஸ் பண்ணலியா!? நம்ம அக்காதானே! இதெல்லாம் பெருசா எடுத்துக்காத ஆவி!

பயணம்” ஆவி: என்னை வரவேற்கலைன்னா கூட என் மனசு ஆறி இருக்கும். ஆனா, இம்புட்டு பேரை கூப்பிட்ட அக்கா என் செல்லம், அம்மு, பட்டுக்குட்டி நஸ்ரியாவை கூப்பிடாம விட்டுடுச்சே! கூப்பிடதான் இல்ல. என் செல்லத்துக்கு என்ன பிடிக்கும்ன்னு என்னை கேட்டாங்களா!? அதான் கோவம்.
அஞ்சறைப் பெட்டி” சங்கவி: எனக்கும்தான் கோவம் என் செல்லம் லட்சுக்குட்டியை கூப்பிடலைன்னு. 

”மின்னல் வரிகள்” கணேஷ்: ராஜிம்மாக்கு ஹெல்ப் பண்ண கூப்பிட்டா, என் செல்லத்தை கூப்பிடலை, உன் செல்லத்தை கூப்பிடலைன்னு வெட்டிக்கதையா பேசுறே! யோவ், மனோ! உன் அருவாவுக்கு வேலை வந்துட்டுது. என் சிஷ்யன்னு பார்க்காத. ரெண்டு பேரை ஒரு இழுப்பு இழுத்துட்டு வா.

ஆவி & சங்கவி: டேய்! நம்ம வாத்தியாருக்கே கோவம் வந்துட்டுது. இந்த இடத்தை விட்டே ஓடிப்போகலாம். வந்திடு.

கவிதை வீதி” சௌந்தர்: அக்கா, இந்த பசங்கலாம் அரட்டை. கொஞ்சம் கூட பொறுப்பில்லாத பசங்க, நீங்க வேற யாரையாவது பலகாரம் சுட கூப்பிட்டு இருக்கலாம், என்கிட்ட கேட்டிருந்தா நல்ல சமையல்காரரை அரேஞ்ச் பண்ணி இருப்பேன்.  உங்க கிச்சன் இத்தனை பேர் சமைக்க இடம் பத்தலை. வாங்கி வந்த அரிசில வண்டும், கல்லும் இருக்கு. மிக்சி சீக்கிரத்துலயே சூடாகிடுது. அடுத்த வருசத்துக்குள்ள இதெல்லாம் சரி பண்ணிடுங்கக்கா!

திக்கி திணறி நானே எதாவது பலகாரம் சுட்டிருப்பேன். ஆனா, இப்ப!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????????????

Monday, October 28, 2013

தீபாவளி கொண்டாடுவது ஏன்!? - ஐஞ்சுவை அவியல்


ஏனுங்க மாமா! தீபாவளி பண்டிகை வருதே! புது துணி எடுக்கனும் பலகாரம் சுடனும்! எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா!?

நாளைக்கு போய் துணி எடுத்து வரலாம்!! தீபாவளி பண்டிகை எப்படி வந்ததுன்னு உனக்கு தெரியுமா!?

ம்ம்ம் தெரியும் மாமா! பூமாதேவியின் அம்சமாக மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும், பூமாதேவிக்கும் பிறந்த மகன்தான் நரகாசுரன். ஆரம்பத்தில் அவன் ரொம்ப நல்லவனா தான் இருந்தான். தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆக ஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் கஷ்டப்படுத்தினான்.  பெரிய மகரிஷி குரு, போன்றவர்களையும் இகழ்ந்தான், எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் படித்தான். பின் அவன் தாய் எத்தனைச் சொல்லியும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.
இதற்கு நடுவில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவ்ம் செய்யலானான். 

பிரம்மாவும் உனக்கு என்ன வரம் வேனும்ன்னு கேட்டார். நான் சாகவே கூடாதுன்னு வரம் கேட்டான். அதற்கு பிரம்மா, உலகில் பிறந்தவன் அழியத்தான் வேணும். அதனால, வேற எதாவது கேளுன்னு பிரம்மா சொல்ல, “தன் தாயான பூமாத்தேவி தவிர வேற யார் மூலமாகவும் தனக்கு மரணம் நேரக்கூடாது”ன்னு வரம் வாங்கிகிட்டான்.

நல்லா யோசனை பண்ணிதான் வரம் வாங்கி இருக்கான். எந்த அம்மாவது தன் பிள்ளையை கொல்லுவாளா!?

அப்படித்தான் அவனும் தப்பா நினைச்சுட்டான். ஆனா, எந்த ஒரு புரட்சியும் தெரிஞ்சோ தெரியாமலயோ பெண்கள் மூலமாதான் ஆரம்பிக்குதுன்னு வரலாறுகள் சொல்லுது. அதுக்கேத்த மாதிரிதான் இங்கயும் நடந்துச்சு! வரம் வாங்கின பின் அவனின் அட்டகாசம் ஆரம்பமாகிச்சு. எல்லா லோகத்தையும் தன் வசப்படுத்த இந்திர லோகத்தை முற்றுகையிட்டு இந்திரன், தேவர்கள்லாம் சிறைப்பிடித்தான். முனிவர்களை இம்சை பண்ணான், எல்லோரும் தங்களை காப்பாற்ற கிருஷ்ணன்கிட்ட போய் முறையிட்டாங்க.

”நான் உங்களை காப்பாற்றுகிறேன்”ன்னு கிருஷ்ணன் வாக்கு கொடுத்து, நரகாசுரனுக்கு அட்வைஸ் சொன்னார். அழிவுக்காலம் நெருங்கிட்டா யார் அட்வைச் பண்ணாலும் காதுல ஏறாதே! கிருஷ்ணனையே வம்பிக்கிழுத்தான். போரு ஆரம்பித்தது! தனக்கு சாரதியாக சத்தியபாமாவை அழைத்தார் கிருஷ்ணன். போரில்  நரகாசுரன் வீசிய கதையினால் காயம்பட்டு மயங்கி வீழ்ந்தார் கிருஷ்ணர்.

எல்லாம் வல்ல கிருஷ்ணனுக்கா மயக்கம்!? எல்லாம் நடிப்புதானே புள்ள!?

ஆமா மாமா,  பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா ஒரு வகையில் நரகாசுரனின் அம்மா ஸ்தானம்தானே!? கிருஷ்ணனின் மயக்கம் கண்டு கோபம் கொண்ட சத்தியபாமா, சராமாரியாக அம்பு வீசி நரகாசுரனை வீழ்த்தினாள். உயிர் போகும்போது தான் இறந்த இந்த நாளை எல்லோரும் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தீபங்கள் ஏற்றி, பட்டாசு வெடித்து இனிப்போடு கொண்டாடனும்ன்னு கிருஷ்ணன்கிட்ட வேண்டிக்கிட்டதால நாம தீபாவளியை கொண்டாடுறோம்!!

பரவாயில்லியே! உனக்கு கூட இதெல்லாம் தெரிஞ்சிருக்கே! அப்படின்னா இதுக்கு விடை சொல்லு பார்க்கலாம்!! தூரத்தில் பார்த்தால் கறுப்பு, பக்கத்தில் போய் பார்த்தால் பழுப்பு, கையில் எடுத்து பார்த்தால் சிகப்பு,வாயில் போட்டால் இனிப்பு.. அது என்ன?!

----- தானே மாமா! 

அட! இதுக்கும் சரியான விடை சொல்லிட்டியே! உனக்கு ஒரு ஜோக் சொல்லவா!?
 ம்ம் சொல்லுங்க மாமா! 
பாலு கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்ல. நீங்க பொய் சொல்லி என்கிட்ட அதை வித்துட்டீங்கன்னு சொல்லி சண்டை பிடிசானாம்.

இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”ன்னு சொல்லி சமாதானப்படுத்த பார்த்திருக்கார் கடைக்காரர்.
அதுக்கு பாலு,“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?!ன்னு கேட்டு சண்டை போட்டானாம்.

ஹா! ஹா! இந்த ஜோக்கை இது வரை கேட்டதில்லை மாமா!

மாமா, நேத்து நம்ம சின்ன மண்டையனை கூட்டிக்கிட்டு ஹாஸ்பிடல் போனேன். அவனுக்கு யூரின் டெஸ்ட் பண்ண சொல்லி எழுதி கொடுத்தாங்க. அங்க இருந்த பாத்ரூம்ல போய் நின்னுக்கிட்டு இவனை உச்சா போக சொல்லி கெஞ்சுறேன். ம்ஹூம், போகவே இல்ல. கொஞ்ச நேரத்துல எனக்கு கோவம் வந்து அடிக்கவே போய்ட்டேன்.

ச்ச்சீ அவனுக்கென்ன தெரியும்!! பாவம், சின்ன புள்ளைதானே!அப்புறம் என்ன பண்ணே!

அங்க வந்த ஒரு நர்சம்மா, அங்க இருந்த தண்ணி குழாயை திறந்து விட்டாங்க. தண்ணி கொட்டுறதை பார்த்ததும் இவனும் உச்சா போய்ட்டான். 

ம்ம் பார்த்தியா!? நீ அம்மாவா இருந்தாலும் இது மாதிரியான நேரத்துல என்ன பண்ணுறதுன்னு தெரியாம இருக்கே! ஆனா, அந்த நர்சம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. காரணம் தொழில் மேல் கொண்ட ஈடுபாடும், அக்கறையும், சமயோசித புத்தியும்தான்!!

கரெக்ட்தான் மாமா!, சரிங்க மாமா, சாப்பாடு செஞ்சு டேபிள் மேல எடுத்து வச்சுட்டேன். நீங்களே போட்டு சாப்பிட்டுக்கோங்க. நான் ராஜி வீட்டுக்கு போறேன்.

எதுக்கு இப்ப அங்க போறே!? தீபாவளிக்கு அவ எடுத்த புடவைலாம் காட்டி பெருமையடிப்பா! அதே மாதிரி வேணுமின்னு என்னை புடுங்கி எடுத்தே! மகளே கொண்டே புடுவேன்.

ம்க்கும், எப்ப பாரு அவளை தப்பாவே சொல்லுங்க. இந்த வருசம் தீபாவளி பலகாரம் செய்ய, பதிவர்கள் கணேஷ் அண்ணா, ஆவி, செந்தில், ஜீவா, சசிகலாலாம் வர்றங்க. கூடவே நக்கீரன் அண்ணா, ஆஃபீசர் சார்லாம் நாளைக்கு அவ வீட்டுக்கு வர்றாங்க. அதான் கூட மாட நானும் ஹெல்ப்பலாம்ன்னு போறேன்.

ராஜியோட சேர்ந்து நீயும் கெட்டுபோகாம இருந்தா சரிதான் தாயி!!

Saturday, October 26, 2013

முடிவுக்கு வந்த போராட்டம் - கவிதை மாதிரி


எம்ப்ராய்டரியாய்...,, கல் வைத்ததாய்...,
டிசைனர் புடவையாய்...., பட்டாய்....,
சிறு கரையாய்.., உடல் முழுக்க ஜரிகையாய்...,
வைர ஊசி புட்டாவாய் ஜொலிப்பவளை,
 பார்த்தேன் ஏக்கமாய்!!

மயில் கழுத்து கலரில் ஜொலிக்கும்,
ராதா கிருஷ்ணனையா!?
குங்குமச் சிவப்பில் சிரிக்கும் பிள்ளையாரையா!?
இருவரில் யாரை சொந்தம் கொண்டாட!?

துள்ளும் மீனும், ஓடும் மானும்..,
கண்ணை கவர!! 
ஆடும் மயிலும்..., அசையும் மரமும்..,
கருத்தை கவர!!

மின்விசிறி காற்றோ!? பக்கத்திலிருப்பவளோ!?
அப்புடவையை தூக்க முயல!!
கடலுக்குள் முத்தாய் ஜொலித்த..,

மஞ்சளும், கருப்பும் கலந்தப் புடவையை
எனதாக்கிக் கொள்ள!!
4 மணி நேர தீபாவளி போராட்டம்,
 முடிவுக்கு வந்ததில்!!

என்னவரின் பர்சைப் போலவே,
அவர் மனசும் லேசானதோ!?

Friday, October 25, 2013

அருள்மிகு ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருக்கோயில்.திருநீர்மலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

கோயம்பேட்டுல இருந்து மதுரவாயல் வழியா பெருங்களத்தூர் போற பை-பாஸ்ல மலைக்கு மேல ஒரு கோவில் இருக்கு. அந்த வழியா போகும்போது பஸ்சுல இருந்து பார்த்திருக்கேன். அதேப்போல சினிமாவுல நிறைய தரம் இந்த ஊர் பேரை கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இதுவரை கோவிலுக்கு போகும் வாய்ப்பு கிடைக்கலை.

அந்த இடம் “திருநீர்மலை” பொதுவா குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்னு மனசுல பதிஞ்சுட்டதால, இது ஒரு முருகன் கோவில்ன்னு இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, இது ஒரு பெருமாள் கோவில்.  இந்த கோவில் பல்லவரத்திலிருந்து 8 கி.மீ. துரத்துல இருக்கு. கோவிலுக்கு போறதுக்கு பல்லாவரத்தில் இருந்து நிறைய பஸ்கள் இருக்கு. 
108 திருப்பதிகள்ல இதுவும்ஒண்ணு. மலை மேலயும், கீழேயும் ரெண்டு பெரிய கோயில்கள் இருக்கு.   ரெண்டு கோவில்களிலும் பெருமாள்  நான்கு நிலைகளில், மூன்று அவதார கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு திருத்தலங்களும் ஒரே திவ்விய தேசமாக் கருதப்படுது. சரி, நாம மலை அடிவாரக் கோவிலை முதல்ல பார்க்கலாம்.

மலையடிவார கோவிலின் மூலவர் நீர்வண்ணப்பெருமாள்  நின்ற திருக்கோலத்தில், தாமரைமலர் பீடத்தில்  அபய ஹஸ்த முத்திரைகளுடன் மார்பில் சாளக்ராம மாலை புரள, ராஜ கம்பீரத்துடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்/ அதனால, அவர் பேரு  நின்றான்  தாயார் அணிமாமலர்மங்கை, தனிக்கோவில் கொண்டு நாச்சியாரா எழுந்தருளியிருக்கிறார்.
ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்கனும்ன்னு ஆசை வந்ததாம். அவர், இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தாராம். பெருமாள், அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தாராம். அப்ப வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமா இங்கு தங்கும்படி வேண்டினாராம். சுவாமியும் அதுப்படியே அருளினாராம்.

இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் ன்னும், தலத்திற்கு திருநீர்மலை ன்னும் பேர் வந்திச்சாம்.  நீல நிற மேனி உடையவர் என்பதால இவருக்கு "நீலவண்ணப்பெருமாள்' ன்ற பேரும் உண்டு. ராமபிரானுக்கும் சன்னதி இருக்குது.  இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி  வால்மீகி காட்சி தருகிறார்.
இங்குள்ள ராமபிரான் கல்யாண ராமனாக் காட்சி தருவதால், திருமணம் கைக்கூடும் தலமாகவும், பிரார்த்தனைத்தலமாகவும் விளங்குது.

இங்கே கோபுரம் ராமருக்கு கொடிமரம் நீர்வண்ணருக்கு கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே இருக்கு. வால்மீகிக்காக ராமராவும், நீர்வண்ணப்பெருமாளாவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால, இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகிறார்கள். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமா ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைந்துள்ளது.
ராமர் சன்னதிக்கு பக்கத்துல அனுமன் தொழுத  நிலையில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, "அணிமாமலர்மங்கை' எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். பொதுவா பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
ஆண்டாளும் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.  
மலை அடிவார கோவிலில் மூலவர் ரங்கநாதர் சன்னதியின் பின்புறம் இருந்து பார்க்கும்  போது மலைக்கோவில் அழகாக காட்சி தருது. பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டிïர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்துப் பூதத்தாழ்வார் பாட்டுக்கள் பாடியுள்ளார்.
இத்தங்களின் பெருமையை குறிப்பிடும் போது திருமங்கையாழ்வார்    நான்கு திவ்ய தேசங்களான நாச்சியார்கோவில், திருவாலி, திருகுடந்தை , திருகோவிலூர் ஆகிய திருத்தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும்ன்னு சொல்லியிருக்கார். பூததாழ்வார் ஒரு படி மேலே போய்  ஸ்ரீ ரங்கத்தை வணங்கிய பலனை கிடைக்கும்ன்னு சொல்லி இருக்கார்.
அவ்வுளவு சிறப்புமிக்க இந்த மலையடிவார கோவிலை தரிசனம் செய்து விட்டு இபொழுது மலைமேல் இருக்கும் மூலவர் - (இருந்தான்) சாந்த நரஸிம்மன், வீற்றிருந்த திருக்கோலம்,  கிழக்கு நோக்கிய காட்சியிலும். மூலவர் - (கிடந்தான்) ரங்கநாதன், மாணிக்கசயனம், தெற்கே நோக்கிய காட்சியிலும். தாயார் - ரங்கநாயகி. (தனிக் கோவில் நாச்சியார்) . கிழக்கே நோக்கிய காட்சியிலும் மூலவர் - த்ரிவிக்ரமன் (நடந்தான்) , நின்ற திருக்கோலம், கிழக்கே கிழக்கு நோக்கிய காட்சியிலும் தரிசிக்கலாம்.
இது தோயாத்ரிமலை செல்லும் நுழைவு வாயில். இந்த இடம் பழைய காலத்தில் காண்டவ வனம் என அழைக்கப்பட்டதாம்.  இந்த வாசல் காண்டவ  வனத்தின் தோயாத்ரி வனவாசல் என்று குறிப்பிடப்படும். தோயம்ன்னா "பால்' ன்னு அர்த்தமாம்.  இந்த அலங்கார வளைவின் உள்புறம் அழகாக கலை நயத்துடன் செதுக்கப்பட்டிருக்கு.
இந்த அலங்கார வளைவைக் கடந்து 250 படிகளை ஏறிச் போனால், மலைக்கோயிலை அடையலாம்.
மலையேறும் பாதையில் வாயு மைந்தன் அனுமன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.  அவருக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வணங்கி விட்டு தோயாத்ரிமலை படிகளை ஏறனும்.  
ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி போகும்போது...,  அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் அவர்கள் கண்களை விட்டு அகலவே இல்லையாம். மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்காங்க.  எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்டனும்ன்னு உருக்கமா பெருமாளை வேண்டிக்கிட்டாங்களாம். அப்ப  சுவாமி "போக சயனத்தில்' ரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தாராம். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுது.
கீழ்ப்படத்தில் காணப்படுவது கல்கி மண்டபம்.  இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்ததாம். அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியலையாம். ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்திருக்கிறார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமா இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினாராம்.  இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள் புரிகின்றனர்.
ஈரடியால் மூவுலகும் நடந்து மூன்றாவது அடியை எங்கே வைப்பது என கேட்பது போல திரிவிக்கிரம அவதார நிலையில் நடந்த வராகவும் இங்கு காட்சி தருகிறார்.
இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமா இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை "பால நரசிம்மர்' என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்க்கு. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.
கொடிமரத்தின் முன்பு கருடாழ்வார் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் அவருக்கு நேரே ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஆதிசேஷனின் குடையின் கீழ் சயன கிடந்த திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதராய் அருள்பாலிக்கிறார்.அவருடைய தொப்புள் கொடியிலிருந்து பிரம்மாவும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் நாம் இங்கு தரிசிக்கலாம்  
கோவில் கொடிமரம் அழகாக காட்சியளிகிறது வைகானச ஆகம விதிப்படி இரு வேளை பூஜை நடக்கிறது.
மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்குது. வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார். நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்குது. அப்ப.  இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர், ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்குது.
பொதுவா எல்லா கோயில்களிலும் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனா, இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். தை மாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி , மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாக தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.
 தானாக தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. இவை, "ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்' எனப்படும். இதில் திருநீர்மலையும் ஒன்று. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநில கோயில்களான சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் பிற தலங்கள் ஆகும். மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்குது.
ஆயுள்பலம் அதிகரிக்க வாழ்க்கை பிரச்சனையின்றிச் செல்ல, குழந்தைகள் நோயில்லாமல் ஆரோக்கியமா வாழ..,  குடும்பப் பிரச்சனைகள் மறைந்துபோக, திருமணத்தடைகள் நீங்க திருநீர் மலைக்கு வந்து பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும். அவர்களுக்கு பஞ்சகிரகங்களின் அனுக்கிரகங்களும் கிடைக்கும். கடன் தொல்லையும் நிவர்த்தியாகும்.  
ஒரு வழியாக மலைமேல் உள்ள பெருமாளையும், பால நரசிம்மரையும், ரங்கநாதரையும் தரிசித்து விட்டு மலைமேல் இருந்து இறங்கி தீர்த்த குளத்திற்கு போலாம்.
இந்த திருக்குளம்  3 ஏக்கர் பரப்பளவில் ,நடுவில் நீராழி மண்டபத்துடன் அழகிய தெப்பக்குளம் இது. கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் 19 தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல்,  இங்கு  குளம் ஒன்று, ஆனால், இதில் கலந்திருக்கும் தீர்த்தம் நான்குஇந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன.
சித்திரை மற்றும் பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களிலும் இங்கு தீர்த்தவாரி விழா நடக்கும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடப்பதால் இந்த நிகழ்ச்சியை, "முக்கோட்டி துவாதசி' ன்னு சொல்றாங்க.

இக்கோவிலில் காலை 8 முதல் 12 மணிவரையிலும், மாலை 4 முதல் 7.30 மணிவரையிலும் பெருமாளை தரிசிக்கலாம்.

ஒரே மூச்சில் நான்கு கோலத்தில் பெருமாளை தரிசனம் செய்த திருப்தியோடு இங்கிருந்து கிளம்பலாம்.  புண்ணியம் தேடி போற பயணத்துல அடுத்த வாரம் வேறொரு கோவிலில் சந்திக்கலாம். நன்றி! வணக்கம்!