Tuesday, July 31, 2018

காளான் பிரியாணி - கிச்சன் கார்னர்

”பிரியாணி” சுமார் பத்து ஆண்டுகளுக்கு முந்தி வரை பணக்கார உணவுப்பண்டத்தில் முதலிடத்தில் இருந்துச்சு.  ஆனா, இன்னிக்கு பிரியாணி மாதிரியான ஈசியா செய்யக்கூடிய,  ஈசியா கிடைக்கக்கூடிய உணவுன்னு வேறெதும் இல்ல.  இன்னிக்கு வாரத்தில் ஒருநாள் பிரியாணி செஞ்சுடுறாங்க.  வெளில இருந்தும் கிடைச்சுடுது. வடை, பாயாசம், கூட்டு, பொரியல், அவியலோடு பாரம்பரிய உணவுதான் கிடைக்க மாட்டேங்குது. அதில்லாம குறைஞ்சது 45 ரூபா இல்லாம சாப்பாடு  கிடைக்காது. ஆனா 25ரூபாய்க்கு குஸ்கா கிடைச்சுடுது. பிரியாணின்ற பேர்ல பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலையோடு தக்காளி சோறையும், புளிச்சோறையும் பசங்க விரும்பி சாப்பிடுறாங்க.   

கொஞ்சம் லேட்டா எழுந்திருந்தாலோ இல்ல ஒரே ஒருத்தருக்கு சமைச்சு டப்பா கட்டனும்ன்னாலோ ஆபத்பாந்தவனாய் கைக்கொடுப்பது இந்த பிரியாணி வகைகள்தான். எல்லா பொருளும் இருந்தால் அரை மணிநேரத்துல ரெடியாகிடும்.  சிக்கன், மட்டன், மீன், வெஜிடபிள், பன்னீர்ன்னு விதம்விதமா பிரியாணி இருக்கு. இன்னிக்கு காளான்ல ஈசியா செய்யக்கூடிய பிரியாணிய பார்ப்போம்..

தேவையான பொருட்கள்
காளான்
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
புதினா
சீரக சம்பா அரிசி
தயிர்
எலுமிச்சை பழம்
உப்பு
எண்ணெய்
பட்டை
லவங்கம்
ஏலக்காய்
பிரியாணி இலை

வெங்காயம், தக்காளியை கழுவி நீளம் நீளமா வெட்டிக்கனும். ப.மிளகாய கீறிக்கனும். காளானை சுத்தம் பண்ணி நீளம் நீளமாய் வெட்டிக்கனும்.  அடுப்பில் குக்கரை வச்சு சூடேத்திக்கனும்.. 
தேவையான அளவு எண்ணெய் ஊத்தி, சூடானதும் பட்டை லவங்கத்தை போட்டு சிவக்க விடனும்.

அடுத்து ப.மிளகாயை போட்டுக்கனும். 

வெங்காயம் போட்டு  வதக்கிக்கனும்... உப்பு சேர்த்துக்கிட்டா சீக்கிரம் வெங்காயம் வதங்கிடும். புதினா சேர்த்துக்கிடனும். 
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கனும்...

தக்காளி சேர்த்து நல்லா வதக்கிக்கனும்...
காளான் சேர்த்து நல்லா வதக்கிக்கனும். காளான் லேசா தண்ணி விடும்..

மிளகாய் தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கனும்.  தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கனும். தேவையான உப்பு சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து கொதிக்க விடனும். குக்கரில் சமைப்பதுன்னா ஒரு டம்பளர் அரிசிக்கு  1 1/2 டம்ப்ளர் தண்ணி சேர்த்துக்கனும்.  பாத்திரம்ன்னா ஒரு டம்ப்ளர் அரிசிக்கு 2 டம்ப்ளர் தண்ணி சேர்த்துக்கனும். 

தண்ணி கொதிச்சதும் அரிசியை கழுவி சேர்த்துக்கனும். குக்கர்ன்னா ஒரு விசில் வரவிட்டு சிம்ல அஞ்சு நிமிசம் வச்சுக்கனும். பாத்திரம்ன்னா அரிசி நல்லா கொதிக்கும் வரை விட்டு நல்லா மூடி மேல கனமான பாத்திரத்தை வச்சிடனும். 


அஞ்சு நிமிசம் கழிச்சு அடுப்பை அணைச்சுட்டு, கொஞ்சம் சூடு ஆறினதும் கரண்டியால் மெல்ல கிளறி விடனும். உதிர் உதிரா காளான் பிரியாணி தயார். 
பிரியாணிக்கு அரிசி ரொம்ப நேரம் ஊற விடக்கூடாது. அரிசியை உலையில் போட்டுட்டு அடிக்கடி கிளறி விடக்கூடாது.  

குருமா, சிக்கன் மட்டன், இறால் கிரேவியோடு பச்சடியோடு சாப்பிட நல்லா இருக்கும்.

நன்றியுடன்,
ராஜி 

Monday, July 30, 2018

நடப்பது நடந்தே தீரும் - ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள டல்லா உக்காந்திருக்கே?!

எங்கம்மா என்னைய திட்டிடுச்சு மாமா..

எதுக்கு திட்டுனாங்க?!

எப்ப பாரு தின்னுட்டு  தூங்கிட்டு  இருக்கியே! அதது ஊருக்குள் பொம்பளைகள்லாம் எப்படி பொழைக்குது, நீயும் இருக்கியேன்னு திட்டுனாங்க.. 

அவங்க எப்பயுமே சரியாதான் சொல்வாங்க.

என்னாது?!

ஒன்னுமில்ல,  புதுசா காணாததை கண்ட மாதிரி எதுக்காக அப்படி சொன்னாங்க?! எப்பயும் அது நடக்குறதுதானே?!

யாரோ முத்துலட்சுமி ரெட்டின்னு ஒரு டாக்டரம்மாவை பத்தி டிவில சொன்னாங்க. அதை பார்த்துட்டுதான் எனக்கு மண்டகப்படி நடந்துச்சு.

முத்துலட்சுமி ரெட்டி அம்மா யார்ன்னு தெரியுமா?!

முதல் பொம்பளை டாக்டர்ன்னு எனக்கு தெரியும். ஊருக்கு நாலு பொம்பள டாக்டர் இருக்கும் காலத்தில் எங்கம்மா என்னைய ஏன் திட்டனும்?!

அவங்க டாக்டர்ன்ற அளவுக்காவது தெரிஞ்சிருக்கே உனக்கு. எப்ப பாரு பேஸ்புக்லதானே இருக்கே. இதுலாம் தெரிஞ்சுக்காத. எப்ப பாரு கடலை போட்டுக்கிட்டு..  முத்துலட்சுமி ரெட்டி பெண்கள் அடிமைகளாகவும், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy).  அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைலாம் இவரால்தான் கொண்டு வரப்பட்டது. 
அது மட்டுமல்லாம, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவர்தான். அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண்ணும் இவர்தான். சட்டசபையில் அங்கம் வகித்த முதல் பெண்ணும் இவரே. அந்த காலத்துலயே  சமூக சீர்திருத்தவாதியாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவர் இவர்.  புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் கௌரவமான ஒரு குடும்பத்தில் 1886ல . நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமி, புதுக்கோட்டையில் மகாராஜா கல்லூரியின் முதல்வர். முத்துலட்சுமிக்கு நான்கு வயதில், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். பருவ வயதானபோது,  படிப்பை நிறுத்த நினைச்சாங்க. ஆனால் முத்துலட்சுமி நன்றாகப் படித்ததால், தொடர்ந்து படிக்க வையுங்கள்ன்னு டீச்சர்லாம் சிபாரிசு செய்யவே, உயர் நிலைப்பள்ளி படிப்பைத்தொடர்ந்தார்.

மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய 100 பேரில், பத்துபேர் மட்டுமே வெற்றி பெற்றனர். பத்துல ஒரே ஒரு  மாணவி, அதிலும் பத்தில் முதல் மாணவி என்ற பெருமை பெற்றார் முத்துலட்சுமி. அதனால் தொடர்ந்து அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கத்தடை ஏதும் இல்லாமல் போனது. சிறுவயதில் இருந்தே முத்துலட்சுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு வருமாம். அதை  பொருட்படுத்தாமல் படிப்பில் கவனமாக இருந்தார். கல்லூரியில் படிக்கும்போது கண்பார்வை சற்று மங்கியது. அதற்குக் கண்ணாடி கூட போட்டுக் கொள்ளாமல் கல்லூரிப்பாடங்களுடன் ஷேக்ஸ்பியர் (Shakespeare), டென்னிசன் (Tennyson), மில்டன் (Milton), ஷெல்லி (Shelly) போன்ற மேல்நாட்டு இலக்கிய நூல்களையும் படித்தார். தனது 20வது வயதில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் படிச்சார்.  மருத்துவக் கல்லூரியில் சேரும்போது, புதிதான அந்தச் சூழ்நிலையால் பயந்திருந்த முத்துலட்சுமி வெகுவிரைவில் பயத்திலிருந்து மீண்டு, படிப்பில் முன்னேறுவதில் கவனம் செலுத்தினார். அறுவை சிகிச்சை தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுத் தேறினார். இதனால் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.

முத்துலட்சுமிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினாலும், அவருக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பமெல்லாம் படிப்பிலும், சமூகப் பணியிலுமே இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். அவருடைய எண்ணங்களுக்கேற்ற கணவனாக டி.சுந்தரரெட்டி அமைந்தார். அக்காலத்தில் அடையாறில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தனர். அங்கேதான் முத்துலடசுமி, சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்தது. இருவரும் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய் தந்தையைப் போல மருத்துவரானார். பிற்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வாகியானார். 

அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை  பெற்றார். 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியில் இருந்த ஐந்தாண்டுளில்  தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் மாதிரியான அதிரடியான சட்டங்களை கொண்டு வந்தார்.  பல்வேறு காரணங்களால் குப்பைத்தொட்டியில் வீசிய குழந்தைகளை வளர்க்க,  அவ்வை இல்லத்தினை அமைச்சார். இப்பயும் இது அடையாறிலிருக்கு.  குழந்தைகளை படிக்க வச்சு கல்யாணம் செஞ்சு வைப்பார். அந்த நேரத்தில்தான் அவங்க வீட்டுக்காரர் இறந்துட்டார். கலங்கி நின்னாலும், அதுக்குப்பின் முழுசா சமூகத்துக்குன்னு தன்னை அர்ப்பணிச்சுக்கிட்டாங்க.  முத்துலட்சுமி ரெட்டியின் தங்கை சுந்தரம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை இல்லாத காரணத்தினால் சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க.  தன் தங்கைக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாதுன்னு, சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க உறுதி எடுத்தார். பலவிதங்களிலும் நிதி திரட்டினார். அப்படி உருவானதுதான் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. இதுக்கு பிரதமர் நேரு 1952ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். கோவில்களில் தேவதாசியாய் பெண்களை நேர்ந்துவிடக்கூடாதுன்னு சட்டசபையில் முழங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேல்தட்டு ஆட்களிடம், தேவதாசியாவது அத்தனை புனிதம்ன்னா வேணும்ன்னா உங்க குலப்பெண்களை நேர்ந்துவிடுங்க. எங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னு தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்தது. பல சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்து, புகழ் பெற்ற முத்துலட்சுமி  1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். அவர் நினைவாகதான் ஏழை பெண்கள் திருமண உதவி திட்டம் கொடுத்துக்கிட்டு வர்றாங்க. 
எது நடக்கனும்ன்னு விதிச்சிருக்கோ அது நடந்துதான் தீரும். நான் உன்கிட்ட அல்லாடனும்ன்னு விதிச்சிருக்கும்போது எப்படி படிச்சு டாக்டராகி இருப்பேன் மாமா?!

’நடப்பது நடந்தே தீரும்’ இந்த வார்த்தைக்கு, மகாபாரதத்துல கர்ணனும், ராமாயணத்துல கும்பகர்ணனும்தான் சரியான உதாரணம்.   இருவருமே சிறந்த குணம் படைச்சவங்க. தீயோர் பக்கமிருந்தாங்களே தவிர, தீமையினை செய்யாதவங்க. யார்ன்னே தெரியாத அம்மா, யார்ன்னு தெரிஞ்சுக்க போராடிக்கிட்டிருக்கும் அம்மா,  மகாபாரத போருன்போது நான்தான்  உன் அம்மான்னு சொல்லி எதிரில் நின்னு, தன்னோடு வந்திடுமாறு  அழைச்சாங்க. அதுமட்டுமில்லாம, கடவுள் அவதாரமான க்ருஷ்ணர், கௌரவர்களோடு இருந்தா உனக்கு அழிவு நிச்சயம்ன்னு சொல்லி எச்சரிச்சார். இவங்க மட்டுமில்லாம வயசில் மூத்தவங்கலாம் சொல்லியும் கௌரவர்களோடு இருந்தே  போரில் மாண்டே போனான். 
ஆகுவது ஆகும் காலத்து ஆகும்; அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்!
சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்?
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்
இது ராமாயண பாடல்.  ராவணன் போக்கு சரியில்லை. நீ என்னோடு வந்து ராமனுடன் சேர்ன்னு விபீஷணன் கும்பகர்ணனை கூப்பிட, அதுக்கு அவன் மறுத்து சொன்ன வார்த்தைகள்தான்  மேல பார்த்தது. 
என்றும் வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும். அழிய வேண்டியது, அதற்குரிய காலத்தில் அழிந்துப் போகும். அவ்வாறு அழிய வேண்டியதை அருகேயிருந்து பாதுகாத்தாலும் அழிந்து போவது உறுதி. இதைக் குற்றமற உணர்ந்தவர், உன்னைக் காட்டிலும் யார் உள்ளனர்? வருத்தப் படாமல் (ராமனிடமே) நீ திரும்பிச் செல். என்னை நினைத்து நீ வருந்தாதே -எனக் கூறினான் கும்பகர்ணன். உப்பிட்டவரை உள்ளளவும் நினை. உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதே.. இது கும்பகர்ணனின் முடிவு.  ராமனிடம் சரணடைந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் உண்டு என்று விபீஷணன் சொல்கிறான். அதற்கு மறுமொழி தந்த கும்பகர்ணன், நீ சொல்வது எல்லாம் சரிதான்; அதர்மத்தின் தரப்பிலுள்ள நாங்கள் எல்லோரும் இறப்பது உறுதி. நானும் ராவணனும் அரக்கர் சேனையும் கூண்டோடு, கைலாசம் போகப் போகிறோம். எங்களுக்கெல்லாம் எள்ளும் நீரும் இறைத்து இறுதிக் கடன்கள் செய்து நாங்கள் நரகம் புகாமல் , தடுக்க ஒருவராவது தேவை. ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் தரப்புக்கே சென்று விடு..ன்னு சொல்றான். 

கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனைக்காத்துத் திருத்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம்? தீராது ஆயின் பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா.. இதுக்கு என்ன பொருள்ன்னா,  தலைவன் ஒருவன் ஆலோசனை செய்யாமல் தீய செயல் செய்ய நினைத்தால் அதைத் தடுத்து நிறுத்த முடியுமானால் நல்லது. முடியாதாயின் அவனது பகைவரை (ராமனை) அடைந்து பெறக்கூடிய பயன் உண்டா? ஒருவன் இட்ட சோற்றை உண்டவர்க்கு உரிய செயல் போரில் இறங்கி போரிட்டு, அன்னம் இட்டவர்க்கு முன்னமேயே இறக்க வேண்டியதே” 

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்
கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்.
இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்..ன்னு கும்பகர்ணன் விபீஷணனை திருப்பி அனுப்பிட்டான். அதனால தலையால் தண்ணி குடிச்சாலும் எது நடக்கனும்ன்னு விதி இருக்கோ அது நடந்தேதான் தீரும். 
தமிழர் பண்பாடும், வாழ்வியல் முறைகளும் எத்தனை நுணுக்கம். அதுவே நம்மாளுங்கக்கிட்ட ஒட்டுச்சா?! கிராம், கிலோ, டன்ன்னா என்னன்னு நம்ம பசங்களுக்கு தெரியும், ஆனா, தமிழ் அளவைகள் தெரியுமா?! நம்ம பசங்களுக்கு காபடி, அரைப்படியே தெரியாது. எல்லாமே கப் அளவுதான்.
அப்ப என்னைய கழுதைன்னு சொல்றியாடி?!

இதை சொல்லித்தான் தெரியனுமா மாமா!!??

ஓடிரு ராஜி.....

நன்றியுடன்,
ராஜி 

Sunday, July 29, 2018

என்ன வரம் வேண்டும்?! இந்த வரம் போதும்!! - பாட்டு கேக்குறோமாம்

ஒரு பாடல் எப்படி இருக்கனும்ன்னா, அலங்காரமில்லாத வரிகளுடனும், ஆர்ப்பாட்டமில்லாத இசையுடனும், பாடலை கேட்கும்போதே மனசை  ஒருமுகப்படுத்தி,  செவி வழியே நுழைந்து ஆத்மாவோடு கரைஞ்சுடனும். அதுமாதிரி அனுபவித்துக் கேட்கவைக்கும் ஒரு பாடலைதான் இன்னிக்கு பார்க்கப்போறோம். 
கிழக்குவாசல், சின்ன கவுண்டர், பொன்னுமணின்னு வெற்றி படங்களை தந்தவர், இயக்குனராகவும் பாடலாசிரியராகவும்  அறியப்பட்டவரான ஆர்.வி.உதயக்குமார்  இயக்கி தோல்வியடைஞ்ச படம் நந்தவனத்தேரு.  படம் தோல்வி அடைஞ்சிருந்தாலும் இசைஞானி குறை வைக்காத படங்களில் இதுவும் ஒன்று .   இந்த படத்தில் வெள்ளி நிலவே.. வெள்ளி நிலவே..ன்னு ஒரு பாட்டு வரும். அதான் அப்ப செம ஹிட். ஆனா, எனக்கு இந்த பாட்டுதான் பிடிக்கும். கார்த்திக் இருக்கவே மொத்த பாடலும் கேட்டாலும் இந்த பாடல் மட்டும் ஓரிரு முறை மீண்டும் கேட்பேன். 
மிகப்பெரிய ஹிட் படத்தில்கூட கெட் அப் மாத்தாத கார்த்திக், இந்த படத்தில் மீசை இல்லாம, லேசாக முளைத்த தாடி, மீசையோடு இருப்பார். கார்த்திக்க்கும் வயசாகும்ன்னு உணர்ந்த தருணம். சண்டை, டான்ஸ், கோவம்ன்னு எந்த சீனா இருந்தாலும் அனாயசமா நடிச்சு கொடுக்கும் ஆளு இந்த படத்தில் திக்கி திணறுனாப்ல. ஜாடிக்கேத்த மூடி மாதிரி ஸ்ரீநிதின்னு ஒரு பொண்ணு நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேட்டுக்கிட்டு குறுக்க மறுக்கா இந்த படத்துல ஹீரோயினா வந்திட்டு போச்சுது. விவேக்கும், வடிவேலுவும் இருந்தும் காமெடிக்கு பஞ்சம். 

வெக்கம், மானம், சூடு, சுரணை இருந்திருந்தா அன்னிக்கே கார்த்திக்கை வெறுத்திருக்கனும் நானு. எனக்குதான் அதுலாம் கிடையாதே! கெட்டதுலயும் நல்லது தேடி பாட்டு வச்சு ஒப்பேத்திக்கிட்டேன். எனக்கு புடிச்ச பாட்டு உங்களுக்கும் பிடிக்குதான்னு கேளுங்க. 
 
இங்கே இரண்டு ஜீவன் நனையும்.
இன்பம் என்னும் மழையில் நனையும் ஓ ஓ ஓ
துன்பம் என்னும் கனவு கலையும்
தூபம் போட்டு உறவு மலரும்..
தந்தோம் நல்வாழ்த்து....

என்ன வரம் வேண்டும்?!
இந்த வரம் போதும்!!
ஜென்ம ஜென்மம்தோறும் உந்தன் கரம் வேண்டும்..
உன்னையே நினைத்தேன்.. நிழலாய் தொடர்ந்தேன்..
எனை நீ தொடவே நிஜமாய் மலர்ந்தேன்...  
(என்ன...)

மௌனமொழி நின்று போனது
உண்மை ஒன்று கேட்டது
 காதல் என்னும் வழி கண்டது
கையில் உன்னை தந்தது..

இன்றல்ல நேற்றல்ல என்றைக்கும்
இங்கு உன்னோடு என் உள்ளம் சங்கமம்
ஒன்றல்ல ரெண்டல்ல  இன்பங்கள்
அதை சொல்லிட வந்திடும் குங்குமம்.

நிலமும் இங்கு நீரும் நிலவும் அந்த வானும்
காலம் முழுவதும் காதல் வாழும் என்று சொல்லும்
என்ன வரம் வேண்டும்?!
இந்த வரம் போதும்!!

நாணத்திலே பெண்மை வேர்த்தது
தென்றல் மெல்ல பார்த்தது
வானத்திலே மின்னல் வாழ்த்திட
என்னை உன்னில் சேர்த்தது

நீர் இன்றி வேரில்லை மண்ணிலே
இங்கு என் பார்வை என்றும் உன் கண்ணிலே
உள்ளத்தை உன்னிடம் சொல்லியே
அன்பு தேன் அள்ளி தந்தது மல்லியே!

நதிகள் ஒன்று சேரும், அலைகள் சந்தம் போடும்
காலம் முழுவதும் காதல் வாழும் என்று சொல்லும்
என்ன வரம் வேண்டும்?!
இந்த ஜென்மம் போதும்!!

படம் : நந்தவனத் தேரு
பாடியவர்கள் : மனோ, லேகா, குழுவினர்
இசை : இளையராஜா
எழுதியவர்: ஆர்.வி.உதயக்குமார்
நடிகர்கள்: கார்த்திக், ஸ்ரீநிதி

பாடலை கேட்டு பாருங்க. படம் பார்த்துட்டு பாட்டை  கேக்காதீங்க.  அப்புறம் வருத்தப்படுவீக..


நன்றியுடன்,
ராஜி

Saturday, July 28, 2018

பல்வலியை குணப்படுத்தும் சங்கரநாராயணன் கோவில் - அறிவோம் ஆலயம்

ஒரு பொண்ணுக்கிட்ட போய் பொறந்த வீடு பெருசா?! இல்லை புகுந்த வீடு பெருசான்னு  கேட்டா, 100க்கு 90% பெண்கள் பொறந்தவீடுதான் உசத்தின்னு சொல்லும். அப்படி சொல்லிட்டாலும் மனசுக்குள் ஒரு குழப்பம் வரும்.   யாரை உயர்த்தி சொல்லுறது?! யாரை விட்டுத்தர்றதுன்னு. இதுமாதிரியான ஒரு இக்கட்டான நிலை பார்வதிதேவிக்கு வந்தது. அம்பாள் அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிச்சாங்கன்னு இன்னிக்கு பதிவில் பார்ப்போம். 
நெல்லை மாவட்டத்தின் சங்கரன் கோவிலில் கோமதி ஆலயத்தின் இப்போதிருக்கும் அம்பாள் சன்னிதி முன், நடுமண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கு. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர் சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பரந்தாமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள். இருவருக்கும்  சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என வாக்குவாதம் வந்தது. இதன் முடிவை அறிந்துக்கொள்ள பார்வதிதேவியிடம் சென்று   முறையிட்டனர்.  சிவனுக்கு புலிதோலும்திருவோடும்தான் சொந்தம்.  மயானமே அவன் இருப்பிடம்.அன்னபூரணியிடம் பிச்சை எடுத்தவர்” என்று சிவனை பற்றி விமர்சித்தான் பதுமன்.  பெரும் செல்வந்தனாய் இருந்தாலும்   குபேரனிடம் கடன் வாங்கி இன்றுவரை வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு கடங்காரன் என்ற பெயரோடு இருப்பவர். அதுமட்டுமல்லாம முனிவரின் காலால் உதை வாங்கியவர்தானே விஷ்ணுஇப்படிப்பட்ட பெருமாள் நம் ஈசனுக்கு இணையாவாரா?” என சங்கன் வாதிட்டான்.  


குழப்பம் தீராத பார்வதிதேவி சிவனிடம் முறையிட்டாள். சுவாமி! தாங்கள் எனக்கொரு வரம் தரவேண்டுமென வேன்டி நின்றாள். பார்வதிதேவியின் வரத்தினை கேட்ட மாத்திரத்தில் சிவன் ஆடிப்போனார். தேவி, யோசித்துதான் வரம் கேட்கிறாயா?! என மீண்டும் கேட்டார். ஆமாம் சுவாமி, நீங்கள் இருவரும் சமமென உலக்குக்கு உணர்த்த உங்கள் உடலின் இடப்பாகமான எனது இடத்தை என் அண்ணனுக்கு தர முடிவு செய்துள்ளேன் என சொன்னாள். அம்பிகையின் வேண்டுதல் நிறைவேற ஈசன் ஒரு யோசனை சொன்னார். ஈசனின் யோசனைப்படி,  பொதிகை மலையில் உள்ள புன்னைவனத்தில் பார்வதிதேவி  ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்றபடி தவம் செய்தாள். பல வருடங்கள் தவம் இருந்ததால் பார்வதியின்  தவத்தை ஏற்று ஹரியும் ரனும் ஆடி மாதம் பவுர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சி தந்தார்கள்.பார்வதி… உனக்கு ஏன் இந்த வீண் குழப்பம்.?  நாங்கள்  இருவரும்  சமமானவர்கள்தான்உடல் இல்லையெனில் ஆத்மாவுக்கு மதிப்பில்லைஆத்மா இல்லையெனில் உடலுக்கு மதிப்பில்லைஇரண்டும் சேர்ந்து இருக்கும்வரைதான் நல்லது.   அதுபோல உடலும் ஆத்மாவும் போன்றதே நாங்கள்.
எங்கள் இருவரின் துணை உள்ளோரே வளம் பெறுவர்அதனால் உன் வீணான சந்தேகத்தை இன்றோடு  ஒழி என்றார் ஈசன். “ஹரனாகிய உன் கணவனும்,  உன் அண்ணனான இந்த ஹரியும் சம உயர்வு கொண்டவர்களே! என்பதை உணர்ந்தாயா என் தங்கையே.” என்றுக்கூறி  புன்னகைத்தார் விஷ்ணு. பார்வதிதேவியும்  ஹரியும் சிவனும் ஒன்று என்பதை தானும், உலக மக்களும் அறியவேண்டியே தவம்செய்து சங்கரநாராயணராக  இருவரையும் காட்சிகொடுக்கும்படி செய்தேன் என வணங்கி நின்றார். அதனால், கையில் விபூதி பையுடன், தவம் செய்யும் கோலத்திலிருக்கும்   அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும். ஆடிமாதம் பௌர்ணமியன்று அம்மனின் தவக்கோலத்தை வணங்கினால் மிகச்சிறப்பு.  

தபசு என்றால் தவம் என பொருள். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற  நாளே ஆடித்தபசு திருநாள். இந்த விழா நெல்லை சங்கரன்கோவிலில் 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில்  எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள்.  மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன்  இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.
சங்கரன்கோவில்வாழ் அம்மனுக்கு கோமதி அம்மன் எனப்பெயர்.  சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக  மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், கோமதி என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு  பெயர் உண்டு. ஆ என்றாலும் பசு தான். பசுக்களாகிய உயிர்களை ஆள்பவள் என்ற பொருளில் இவ்வாறு சொல்வர். திங்கள்கிழமைகளில்  இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இங்கு அம்பாள் சந்நிதி  முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ஆக்ஞா சக்கரம் என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இந்த  சக்கரத்தின் மேல் அமர்ந்தால், நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கிருக்கும் வினாயகருக்கு ஆக்ஞா வினாயகர்ன்னு பேரு.

சங்கரநாராயணர் சன்னிதி சிவன், அம்பாள் சன்னிதிக்கு நடுவில் அமைந்துள்ளது.   சிவனுக்குரிய வலப்பாகத்தில்  தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை  இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில்  மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள  திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில்  விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர்.  எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது.  இச்சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படும். சிவராத்திரி, ஏகாதசி நாட்களில்  உற்சவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஆடித்தபசன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார்.
இந்த  ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜக்கோபுரம் 125 அடியில் ஓங்கி நின்று மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது. இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும். இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கர நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச், செப்டம்பர் மாதங்களின் 21, 22,23தேதிகளில்  சங்கரலிங்கம்மீது சூரிய ஒளி விழுகின்றது.  சங்கரநாராயணர்  அபிஷேகங்கள் கிடையாது என்பதால்,  ஸ்படிக லிங்கமாய் காட்சியளிக்கும் சந்திரமௌலீஸ்வரருக்கே அபிஷேக ஆராதனைலாம் நடத்தப்படுது. 
மூலவர் சன்னிதி பிரகாரத்தில், புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்தநாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய் தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும்.  பல்வலி இருப்பவர்கள் யோக நரசிம்மரை வணங்கினால் நோய் தீரும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாடுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார். சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில், தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது. இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. 
மாத சிவராத்திரி மற்றும் மாத  ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்? அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
ஆடி மாத பௌர்ணமியன்று ஆடிப்பூர திருவிழா நடக்கும். இந்த திருவிழா நேத்து வெகு விமர்சையாக சங்கரநாராயணன் கோவிலில் நேற்று நடந்தது.  இந்த விழாக்காட்சிகளை காண திருநெல்வேலியே திரண்டுவந்தது.  கோமதியம்மன்முன் உள்ள ஸ்ரீசக்கரமருகே மாவிளக்கேற்றி வைத்து சக்கரத்தின் மேலமர்ந்து தவம் செய்தால் பிணிகள் அனைத்தும் நீங்கிடும் என்பது நம்பிக்கை. 

நன்றியுடன்,
ராஜி

Friday, July 27, 2018

பெரியபாளையம் பவானி அம்மன் - அறிவோம் ஆலயம்


ஆடி மாதத்து முதல் வெள்ளிக்கிழமை சொர்ணாம்பிகையையும், இரண்டாவது வெள்ளியன்று வழிபட வேண்டியது அங்காளம்மன் எனப்படும் அங்காள பரமேஸ்வரியை...  அங்காள பரமேஸ்வரி பத்தியும், அவள் குடிக்கொண்டிருக்கும் மேல்மலையனூர் ஆலயத்தையும் போனவருசம் ஆடி மாசத்து பதிவில்  பகிர்ந்திருக்கேன். அரைச்ச மாவையே ஏன் திரும்ப திரும்ப அரைப்பானேன்?! அதனால் இன்னிக்கு சென்னைக்கு அருகிலிருக்கும் பெரிய பாளயத்து பவானி அம்மன் கோவில் பத்தி பார்க்கலாம். அங்காள பரமேஸ்வரி பத்திய பதிவினை இங்க போய் பார்த்துட்டு வந்திடுங்க.
கண்ணனைக் கொல்வதாக நினைத்து, பெண்ணைக் கொல்லத் தூக்கி வீசினான் ஒருத்தன். அவன் கருத்தைப் பிழைப்பித்துக், கம்சன் வயிற்றில் நெருப்பென்ற நின்ற நெடுமாலே என்பது போல் பறந்தவள் பவானி! கண்ணன் போல் அவளுக்கு விளையாடக் கொடுத்து வைக்கலியேன்னு பாரதியும் கண்ணன் பாட்டின் நடுவில் இவளை எழுதினார். கிருஷ்ணர் பிறப்பு நமக்கு தெரியும்தானே?! தனது உயிருக்குயிரான தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது பிள்ளையினால் தனது உயிருக்கு ஆபத்து என்ற சாபத்தினால் பயந்த கம்சன், தனது தங்கை வாசுகியையும் அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து விடுகிறான். அங்கு அவர்களுக்கு பிறக்கும் 7 குழந்தைகளை பச்சிளம் குழந்தைன்னு பார்க்காமல் கொன்று விடுகிறான்.   8வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘வசுதேவரே! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது. ‘கம்சனே! உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இவள் விஷ்ணுவின் தங்கை என்பதால் கையில் சங்கும் சக்கரமும் இருக்கு. காளியைப்போல கபாலமும் உள்ளது. அந்தக் கபாலத்தில் முப்பெரும் தேவியர் அடக்கம் எனப்படுகிறது. காளிதேவியே இங்கு பவானி அம்மனாக இருப்பதாக கூறப்பட்டாலும், இல்லை இங்கிருப்பது ரேணுகாதேவின்னு சொல்றவங்களும் இருக்காங்க. 

இங்கு கருவறையில் வீற்றிருக்கும் அம்மனும், உற்சவ மூர்த்தி அம்மனும்,  அம்மன் தலை மட்டுமே இங்கு காட்சி அளிக்கின்றது.  ரேணுகாதேவிதான் இப்படி சிரசு மட்டுமே காட்சியளிக்கும் கோலத்தில் இருப்பாள். மேலும் கோவிலினுள் இருக்கும் பரசுராமன் சிற்பமே சாட்சி என்கின்றனர். ரேணுகாதேவி பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகாதேவிக் காயங்களுடன், இப்பகுதிவாழ் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் நம்ம பக்கம் ஒரு நம்பிக்கை உண்டு.  
ஆந்திராவிலிருந்து பலிஜா நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்து வியாபாரம் செய்து வந்தனர். தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு. வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார். அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள். தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள். அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார். (திருவண்ணாமலை மாவட்ட ஆரணி இல்ல. ஆரணின்ற ஆறு ஓடுவதால் அந்த ஊருக்கு ஆரணின்னு பேரு. எங்க ஊரில் ஓடுவது கமண்டலநாகநதி)


ஓய்வெடுத்த பின்,  அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம். அதிர்ச்சியடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது. கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது. ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார். முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார். இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகாதேவி. நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன். சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன். நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள்.

வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார். ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார். உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு  ரத்தமும் பீறிடத் தொடங்கியது. மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரகம் அகப்பட்டது. அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது. செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது. அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள். அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர். 


இத்தலத்தில் வினோதமான நேர்த்திக்கடன் ஒன்று நடக்கின்றது. அது என்னன்னா,  திருமண வரம் வேண்டி வேண்டிக்கிட்டவங்க,  திருமணத்தன்று மணமகன் மணமகளுக்கு கட்டிய தாலியை கழற்றி அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இது திருமணமான அன்றே நடக்கின்றது. பின் அன்னையின் அருள் மிகுந்து இருக்கும் மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்றுக்கொண்டு, அதனை, அருளும் நீண்ட ஆயுளும் தருகின்ற அன்னையின் அருள் பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்வதை இன்றும் காண முடிகிறது. இப்படி தாலி காணிக்கை செலுத்துவதால் காணிக்கை செலுத்தியவர்களின் குடும்பம் தழைத்து ஓங்குவதோடு அப்பெண்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் தந்து தாலிக்கு வலிமையைத் தந்தருளும் என்பது நம்பிக்கை. குறிப்பாக மீனவ சமுதாயத்தினர் தனது கணவர் கடலுக்குச்சென்று நல்ல முறையில் திரும்பி வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தனது தாலிக்கொடியை அம்மன் உண்டியலில் செலுத்தி புதியதாக தாலிக்கொடியை கட்டிச்செல்கிறார்கள். 
இக்கோயில் பல வருசங்களுக்கு முன் வரை மூலஸ்தானமும், ஒரே ஒரு மண்டபத்துடனும்தான் இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். 
வெளிப் பிரகாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கென தனித்தனி சந்நிதி உண்டு.  நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர்.
பாளையம்ன்னா படை வீடு ன்னு அர்த்தம். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும். சென்னையில் இருந்து செங்குன்றம் ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ தொலைவில் பெரியபாளையம் இருக்கு. சென்னை கோயம்பேடு, வள்ளலார் நகர், பிராட்வே, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ரயில் மூலம் வரவேண்டுமானால், சென்னை சென்ட்ரல், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பெரியபாளையம் வரலாம்.
ன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சியளிக்கிறாள். வேத சக்தியாகவும், ஞான சக்தியாகவும், கால சக்தியாகவும், போக சக்தியாகவும், கோல சக்தியாகவும், கவி சக்தியாகவும், கருணா சக்தியாகவும், பஞ்ச சக்தியாகவும், அருள் சக்தியாகவும் காட்சி தருகிறாள். 
இக்கோவிலில் ஆண், பெண், குழந்தைகள்  என்ற எவ்வித பாகுபாடின்றி, உடம்பில் எவ்வித உடையும் அணியாமல் வேப்பிலையை ஆடையாக அணிந்து திருக்கோயிலை சுற்றி வலம் வருவது வேறு எங்கும் காணாத மிக முக்கிய பிராத்தனையாகும். அம்மை நோயினால், காலரா, வைசூரி மாதிரியான நோய்களால்  பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நோய் குணமாக வேண்டி, குணமானதும் வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருவதை முக்கிய பிராத்தனையாக கொண்டுள்ளார்கள்.


உடல் நலம் குன்றியவர்கள் அம்மனை வேண்டிக்கிட்டு உடல் நலம் குணமான பின்பு அங்கப்பிரதட்சனம் மூலம் திருக்கோயிலை வலம் வருவதை பிராத்தனையாக செய்றாங்க. அங்கப்பிரதட்சணத்திற்கு பதிலாய் கோயில் பிரகாரத்தைச் சுற்றி ஈரத்துணியுடன் தேங்காயை உருட்டிக்கொண்டு வலம் வருபவர்களும் உண்டு. உருண்டு வரும் தேங்காய் எங்கு நிற்கிறதோ  அங்கு சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு மீண்டும் தேங்காயை உருட்டிச்செல்லனும். இதுபோன்று  திருக்கோயிலை ஒன்று அல்லது மூன்று முறை சுற்றிவருவாங்க. 

தீச்சட்டி ஏந்தி திருக்கோயிலை வலம் வந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இக்கோவிலில் தனது தலை முடியினை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவதுமுண்டு. 
 தனது குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லாமலும், விபத்து போன்றவற்றின் மூலமாகவோ உயிருக்கு போராடும் நிலையிலிருந்தால்  உயிர் கொடுப்பதாக அம்மனிடம் வேண்டிக்கிட்டு, உடல் நலம் பெற்றதும் ஆடு அல்லது கோழியை உயிருடன் திருக்கோயிலில் சுற்றிவிடுகிறார்கள்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் அம்மனுக்கு கரகம் எடுப்பதாக வேண்டிக்கிட்டு திருமணம் நிச்சயமானதும், கரகத்தை மலர்களால் அலங்கரித்து, பட்டுச்சேலை உடுத்தி கரகத்தை தலையில் ஏந்தி உடுக்கை சிலம்பு வாத்தியங்களுடன் திருக்கோயிலை வலம் வருகிறார்கள். திருமணத்திற்காக இந்த பிராத்தனை செய்யப்படுவதால், இதை குடை கல்யாணம்ன்னு சொல்றாங்க.

வயிறு சம்பந்தமான நோய் கண்டவர்கள்  நோய் குணமாக அம்மனை வேண்டிக்கிட்டு குணமானதும் சக்திமண்டபம் எதிரே மல்லாந்து படுத்துக்கிட்டு தனது வயிற்றின் மீது மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். 
குழந்தை இல்லாத பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி சக்தி மண்டபம் அருகே தொட்டில் பிள்ளை கட்டி வழிபடுகிறார்கள். குழந்தை வரம் வேண்டி அம்மனை வேண்டிக்கொண்ட பக்தர்கள் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் எடைக்கு எடை நாணயமாகவோ, அரிசி, சர்க்கரை, கற்கண்டு, வெல்லம் போன்ற பொருட்களையோ துலாபாரமாக இக்கோவிலுக்கு தர்றாங்க. 


உயிர் பலி கொடுக்கும் இடம்ங்குறதால கொஞ்சம் சுத்தம் குறைவாதான் இருக்கும். ஆனா, கோவிலுக்குள் சுத்தமா இருக்கும். கம்சனுக்குக் காளியானாள்.  சரண் புகுந்தவருக்குத் தாயுமானாள். சங்குச் சக்கரம் ஏந்தி கருவறையில் காட்சிதரும் பவானி சகலருக்கும் நல்வாழ்வு அளிக்கட்டும்! 

ஆயன் சோதரியே.. ஆஸ்தான மாரிமுத்தே.. அம்மா பவானி ஆதரிக்க வேணுமம்மா.
நன்றியுடன்,
ராஜி.