Friday, November 29, 2013

திருவல்லம் பரசுராமர் க்ஷேத்ரம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடி பயணத்துல, இன்னிக்கு நாம பார்க்க போறது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து, சுமார் 10 கி மீ தொலைவில் உள்ள பரசுராமர் க்ஷேத்ரம்.

பரசுராமர் சகல கலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. இவரது ஆயுதம் "பரசு' என்பதால் "பரசுராமர்' ஆனார்.அதை வைத்துதான் கேரளாவை தோற்றுவிததாகவும் மலைவாழ் தேசத்து மக்களை மூக்கை பிடித்து சம்சாரிகான் (பேசவைத்தது) வைத்து உருவாக்கிய மக்கள்தான் கேரளா மக்கள் ன்னு ஒரு நாட்டு கதை இன்றும் கேரளத்து மக்களிடையே உண்டுதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாளின் உடல் பகுதியாகவும், திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் விளங்குவதால் ஒரே நாளில் இம் மூன்று தலங்களையும் தரிப்பது மிகவும் நல்லதுன்ற ஐதீகம் இன்றும் உள்ளது .  

மேல இருக்கும் படத்துல நாம பார்க்குறது திருக்கோவிலின் முகப்பு. வல்லம் என்றால் "தலை' ன்னு பொருள். முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம் வரை நீண்டிருந்ததால் இத்தலம் "திருவல்லம்' எனப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபரை பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கிவிட்டதாகவும் புராணங்கள்ல சொல்லபடுது. இந்த இடத்திற்கு திருவனந்தபுரத்திலிருந்து பஸ் வசதிகளும் ஆட்டோ வசதிகளும் நிறைய இருக்கு. புதுசா போறவங்க திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தில் இருக்கும் ப்ரீ பெய்ட் ஆட்டோகளை உபயோகிப்பது நல்லது.
  
இக்கோவில் 12ம் நூற்றாண்டு அல்லது 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் ன்னு ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுது.  இந்த புராதன கோயில் சீறிபாயும் கரமனை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கு. இந்த பரசுராமர் க்ஷேத்ரம் பக்கத்தில் ஒரு தீர்த்தகுளம் இருக்கு. இதில் ஆமை மற்றும் மீன்கள் லாம் இருக்கு .
           
 திருக்கோவிலின் முன்பு 9 பது பலிப்பீடங்கள் இருக்கு. தர்ப்பணம் முடிஞ்சதும் நம் முன்னோர்களுக்கு பலிகர்மம் இந்த பீடங்களில் தான் இடப்படும் .

இனி இந்த திருக்கோவிலின் வரலாற்றை பாப்போம். ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர் தன் தாய் ஒரு வாலிபனை ஏறெடுத்து பார்த்துவிட்டாள் என்பதற்காக, தந்தையின் ஆணைப்படி தாயின் கழுத்தை துண்டித்தாராம்.  தன் தாய் கற்பு நெறி பிறழாதவள்ன்னு தெரிந்தும் தந்தை சொல் தட்டாமல் நிறைவேற்றிய தனயன், அதற்கு பிரதி உபகாரமாக தந்தையிடம் பெற்ற வரத்தின் காரணமா தாயை உயிர்ப்பித்தாராம் .

 தன்னுடைய  தந்தை ஜமதக்னி முனிவரை அரசன் ஒருவன் கொன்றான். என்பதற்காக, ஒட்டு மொத்த அரச வம்சங்களையும் வேரோடு அழிக்க சபதம் எடுத்தார். அதேசமயம்  கல்யாணம் பண்ணிய நிலையில் இருக்கும் அரசர்களை 1 வருடம் வரையில் கொல்வதில்லைன்ற சபதம் கொண்டவராம். இவருக்கு பயந்தே தசரதன் பல மனைவியரை கல்யாணம் பண்ணினான் ன்னு செவிவழி கிராமத்து கதைகளுண்டு.

இவ்வேளையில், விசுவாமித்திரரின் யாகங்களுக்கு உதவி செய்துவிட்டு மிதிலைக்குச் செல்லும் வழியில் பரசுராமருக்கும் இராமருக்கும் சின்ன யுத்தம் வர, இராமர் வெல்ல, பரசுராமர் அவரது சக்திகளை எல்லாம் இராமருக்கு வழங்கி  தவம் இயற்ற சென்றுவிடடாராம்.  அதுவரை சாதாரண இளவரசனான இராமன் அவதாரமாக மாறினார் ன்னு கேரளத்து கிராமத்து பக்கம் கதையாக கூறுவர்.
   
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவம் செய்து தோஷம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். 

பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பூஜை செய்துள்ளனர். பரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் "தட்சிண கயை' ன்னும் அழைக்கப்படுது. ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார். அப்பொழுது பரசுராமர் அவருக்கு காட்சி கொடுத்து அருளினாராம்,

பரசுராமர் வழிபட்ட இந்த இடத்தில் அவரது பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுது. இந்த பீடத்தை பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இங்குள்ள சிவப்பெருமானை பரசுராமரும், மகாவிஷ்ணுவின் அம்சமாக வேதவியாசரை விபாகரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க பள்ளிக்குழந்தைகள் வேதவியாசருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். தமிழகத்தில் திருக்கடையூரில் நடைபெறுவதை போல, நீண்ட நாள் வாழ்வதற்கு இங்கு ஆயுள் விருத்தி ஹோமங்கள் நடைபெறுகின்றன. நோயற்ற வாழ்க்கைக்காகவும், நிம்மதியான மனநிலை வேண்டியும், பக்தர்கள் இந்த பீடத்திற்கு பூஜைசெய்கிறார்கள். குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் வளர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
முக்கிய சன்னிதியில் பரசுராமர் முகம் சந்தனத்தில் வரையப்பட்டிருக்கு. பரசுராமர் வடக்கு பார்த்து இருக்கிறார். பரமசிவன் கிழக்கு பார்த்து. பகவதி, கணபதி கோயில்கள் இருக்கின்றன.
முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்விக்கப்படும் பலிதர்ப்பமன்என்னும் சடங்கை செய்வதற்காக பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர். கார்க்கிடக வாவுஎனும் நாளின்போது கரமனா ஆற்றில் புனித நீராடியபின் இந்த சடங்கு செய்யப்படுது. மேலும் இறந்து போனவர்களின் திதி வரும் நேரத்தில் இங்க வந்து இந்த பலிபூஜை செய்யவும் நிறையப்பேர் வராங்க.

காலைல 5 மணிக்கெல்லாம் பூஜையை ஆரம்பிச்சுடுறாங்க. பொறுமையா மந்திரங்களை சொல்லி, நாம அதை திருப்பி சொல்லி என்னவெல்லாம் செய்யணுமோ அதெல்லாம் சொல்லிதராங்க. கடைசியா நாம பலிபூஜை முடிஞ்சதும் அவங்க தரக்கூடிய எள்ளு கலந்த உணவு உருண்டையை தலைக்கு மேலே சுமந்து கோயிலின் முன்புறம்  உள்ள ஒன்பது பலிபீடங்களில் உணவை உருட்டி சமர்பிக்கவேண்டும்  ஏராள காகங்களும், புறாக்களும் வந்து வந்து கொத்தித் தின்பதைக் கண்டு நம் முனோர்கள் வந்து உண்பதாகவே மனசுக்குள் ஒரு சந்தோசம்.  மிச்ச உணவை கொண்டுபோய்  வெளியே ஓடிக் கொண்டிருக்கும் காராமனை ஆற்றில் விட்டுவிட்டு கை, கால்களை கழுவி திரும்பி பார்க்காமல் நடந்து கோவிலுக்கு செல்லவேண்டும் இல்லை (முடிந்தால் அதிலேயே குளித்து விட்டும்) கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
மேலும் இந்த ஆலயத்தின்  சுற்றுப் பிராகாரத்தில் திலஹோமம் நடக்கும் இடத்தைச் சுற்றிலும் வடக்கு மூலையில் வண்ணங்களில் ஏராளமான சோப்புப் பெட்டிகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஒரு தகடு இருக்கும்.அகால மரணமடைந்தவர்களுக்கு  இதன் அருகே ஓடும் கரமனையாற்றின் கரையில், 13 மாதங்கள் தில ஹோமம் செய்து 13வது மாதம் அந்த சோப்புப் பெட்டியை பரசுராமரின் பாதங்களில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர். இங்கு அமாவாசை நாட்களில் ஏராளமான மக்கள் பலி தர்ப்பணம் செய்ய கூடுகின்றனர். அமாவாசை நாளன்று நடுநிசியில் நடக்கும் ஹோமங்களில் மிளகாய், சுக்கு, வசம்பு கலந்த உணவு பலிபூஜைக்கு இடப்படுது.


அலுவலகம் காலை 4:30 க்கு திறந்திடுறாங்க பலி, திலஹோமம், அர்ச்சனை, ப்ரசாதம் ன்னு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி டோக்கன். பலி ன்னா ஆடு மாடு உயிர்வதை இல்லை பித்ரு தர்ப்பணம். நான்கிற்கும் சேர்த்து டோக்கன் வாங்க வேண்டும். டோக்கன் வாங்கும் போதே இறந்தவரின் இறந்த திதி  (நட்சத்திரம்) கேட்கிறார்கள். தெரியாவிட்டால் பகவானின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரம்  வைத்து தர்பணம் செய்கின்றனர்.  கேரள முறைப்படி வேஷ்டி கட்டிக்கொண்டும், சட்டையை கழட்டி கொண்டும்தான் பலிகர்ம பூஜை செய்யனும். இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கு அவர்களின் பெயர் சொல்லி ஹோமத்தில் எள்ளு கலந்து தெளிக்கப்படுகிறது. இந்த திலஹோமம் விசஷேசமாக செய்யப்படுது பலிகர்மம்  காலை 6.30 முதல்  10.00 வரையும், திலஹோமம் 6.30 முதல் 10.30 வரையும் செய்யுறாங்க.  
ஆடி, தை,மற்றும்  மகாளய அமாவாசை நாட்களிலும், மாத அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் பிதுர் தர்ப்பணம் கொடுக்க பெருமளவில் இங்கு கூடுகின்றனர். பரசுராமர் ஜெயந்தியும் விசேஷமா  கொண்டாடுறாங்க .

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திருக்கோவில் நடை திறந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த கோவில்ன்றதால கேரள தொல்லியல் துறை இதை பராமரிக்கிறாங்க. கேரளா சட்டப்படி புராதான கோவிகளில் உள்பக்கம்மோ இல்ல மூலவரையோ போட்டோ எடுக்க அனுமதி கிடையாது. அதனால சில உள்பக்க படங்கள் தினமலர் பக்திமலர் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது நாங்களும் கோவிலுக்கு சென்று பூஜைகளையும் முடித்து சாமிக் கும்பிட்டுட்டு திருப்தியாக வெளியேறினோம்.

நம் முன்னோர்களுக்கு அவர்கள் இறந்தப்பின் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று புண்ணிய நதிகளுக்கு போய் தர்ப்பனம் கொடுப்பது. இப்படி கடமைக்கு கொடுப்பதை விட நம் வீட்டில் இருக்கும் நம் பெத்தவங்க, அவங்களை பெத்தவங்களை முதுமையில் ஒதுக்கி விடாம, வயிறார உணவும். அன்பான வார்த்தைகளும், அக்கறையான கவனிப்பும் கொடுப்பதே நம்மோட கடமை. நமக்கு பின் வரும் நம் தலைமுறையும் நல்லா இருக்குறதோட நமக்கு வயசானப் பின் நம்மை நல்லப்படியா கவனிச்சுக்கும்.

அடுத்த வெள்ளிக்கிழமை வேற ஒரு கோவிலுக்கு போய் புண்ணியம் தேடிக்கலாம். நன்றி! வணக்கம்!!

Thursday, November 28, 2013

சிலையாகிப் போனவன்


முன்பெல்லாம் எனை 
அணைத்த அலை!!
இன்று,
அடித்தது போலிருந்தது!?

காரணம் கேட்டபோது...,
“எங்கே உன் தோழன்? என்று
காட்டமாய் விசாரித்தது….
அவனை காணவில்லை என்றேன்.

உன்னை தனியாக விட்டு விட்டா??
வினவியது அலை…..
“இல்லை அவன் நினைவுகள்
என்னிடம் விட்டுட்டு, என்றேன்”

அனுதாபமாக என்னை பார்த்த அலை,
“முன்பெல்லாம் என் பாறை நண்பன்
மேல் உட்கார்ந்து பாடுவீர்களே….
இப்போ தனியாய் என்ன செய்வாய்????”
கேட்டது அலை….

அவனை பிரிந்த பின்பு – நானும்
பாறை தான் என்றேன் !!!
பதறிய அலை
சிதறி என்மேல் விழுந்து...,

“ஏனுனக்கு நானில்லையா?? – சரி, சரி
அடிக்கடி வந்து போவென்றது அன்பாக….!”
அலையின் அன்பில்
சிலிர்த்துப்போய் – மீண்டும்
அவன் நினைவுகளுடன் கரையேறும் போது…..,

என்ன நினைத்ததோ அலை
திரும்பவும் வந்து,
“அடித்தது ரொம்பவும் வலிக்குதோ???”
கேட்டது ஏக்கத்துடன்…!

இல்லை என சிரித்த எனை
சில்லென நீராட்டி தன் சந்தோஷம்
சொல்லிப்போனது அலை….!

ஆனாலும்……
அலைக்கென்ன தெரியும்
என் விஷயத்தில் “அவன்”
சிலையாகிப்போன கதை…….!!!!!

Wednesday, November 27, 2013

சென்னை மெரினா பீச் லைட் ஹவுஸ் - மௌனச்சாட்சிகள்

ஒரு கல்யாணத்துக்கு சென்னை வந்திருந்த நாங்க எங்கப் போறதுன்னு பேசிக்கிட்டு இருக்கும்போது, மத்த இடத்துக்குலாம் போனா அதிக செலவாகும். அதனால, மெரினா பீச் போலாம்னு முடிவு பண்ணி போனோம்.  

அங்கப் போனப்புறம்தான் தெரிஞ்சது 20 வருசத்துக்கப்புறம் பொது மக்கள் பார்வைக்காக லைட் ஹவுசை திறந்து விட்டிருக்காங்கன்னு. போன வாரம் முழுக்க சென்னை ஹாட் டாபிக்ல இதுவும் ஒண்ணு.சரி, வந்தது வந்துட்டோம்ன்னு லைட் ஹவுஸுக்கு ஒரு விசிட் அடிச்சோம். கிட்ட போகும்போதே பெரிய க்யூ நின்னுட்டு இருந்துச்சு. 
நாமளும் க்யூல நின்னாச்சு. நுழைவுக் கட்டணமா 10 ரூபாயும்,  கேமரா கொண்டுப் போக 25 ரூபாயும் வசூலிக்குறாங்க.  லைட் ஹவுஸ் மேல போறதுக்குண்டான படிலாம் குறுகலா இருக்குறதால நம்ம பேக்லாம் கொண்டு போறது ரொம்ப சிரமம். அடுத்தவங்களுக்கும் இடைஞ்சல். அதனால, உள்ள பேக்லாம் கொண்டு போக அனுமதி இல்ல.  

நம்ம பேக்லாம் வச்சுட்டு போறதுக்கு வசதி இருக்கு. ஆனா, எந்தவித டோக்கன் சிஸ்டமும் இல்ல. அதனால, கூட வந்தவங்கக்கிட்ட பேக்லாம் கொடுத்துட்டு லைட் ஹவுஸ் மேல ஏறினோம்.   
இந்த லைட் ஹவுசோட அடிப்பாகம் உருளையான வடிவிலும்,  கோபுரம் முக்கோண வடிவிலும் இருக்கு.  தூரத்துல இருந்து பார்த்தாலும் தெளிவா தெரியுற அளவுக்கு சிகப்பு மற்றும் வெள்ளை வரிகள் குறுக்கு வாட்டில் பட்டைகளா தீட்டப்பட்டிருக்கு.

வானிலை ஆய்வு மைய அறிவுரைப்படி, 1994–ம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி, பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதுக்கப்புறமா சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இப்பதான் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து இருக்காங்க. உட்கார்ந்து பீச் மற்றும் லைட் ஹவுஸ் அழகை ரசிக்க உள்பக்கம் அழகான புல்வெளிகளும், சிமெண்ட் பெஞ்சும் அமைச்சு இருக்காங்க.
லைட் ஹவுஸ்குள்ள போறதுக்கு முன்னாடி இதன் வரலாற்றை கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம். 1796–ம் வருஷம் ஜார்ஜ் கோட்டையில் இருக்கிற பிரிட்டிஷ் அதிகாரிகளுடைய மெஸ் மற்றும் பண்டமாற்று நிலையமா செயல்பட்ட இப்ப இருக்கிற கோட்டை மியுசியத்தின் மேல பெரிய கண்ணாடி குடுவை கொண்ட எண்ணையில முக்கிய திரிகளுடன் செயல் பட்டு இருந்ததாம். அப்ப கடற்கரை இந்த கோட்டையின் சுவர் வரை இருந்திருக்கு. அது வியாபார கப்பல்களுக்கும், போக்குவரத்து கப்பல்களுக்கும் உதவியா இருக்க  முதல் கலங்கரை விளக்கம் அமைக்கபட்டதாம்.
இப்படியே பழைய கதையை பேசிக்கிட்டு இருந்தா பின்னால நிக்குறவங்க நகர்ந்து போறதுக்கு இடைஞ்சலா இருக்கும். அதனால லிஃப்ட்ல போய்க்கிட்டு பேசலாம். படி ஏற முடியாதவங்க மேல செல்ல லிப்ட் அமைச்சு இருக்காங்க.   படிக்கட்டு வழியாகவும் மேல போகலாம்.  மொத்தம் 10 மாடிகள் கொண்ட இந்த லைட் ஹவுஸ் கோபுரத்தில் 9 வது மாடிவரை லிப்ட் இயக்கப்படுது. 10வது மாடிக்கு நாம படிக்கட்டு ஏறித்தான் போகனும். மாமல்லபுரம் லைட் ஹவுஸ் மாதிரி இல்லாம இங்க பாதுகாப்பு வசதிகள் அருமையா அமைக்கப்பட்டு இருக்கு. பொதுமக்கள் பார்வை இடுவதற்கு வசதியா கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கு. சரி இப்ப நாம மேலே வந்துட்டோம்.  இந்த இடத்தைச் சுத்தி உள்ள சென்னை நகரம் ரொம்ப அழகா தெரியுது. நமக்கு நேரா தெரிவது திருவல்லிக்கேணி மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்.
 சரி, இப்ப இரண்டாவது லைட் ஹவுஸ் பத்தி பாப்போம்.   பூக்கடை பகுதியில் 161 அடி உயரத்தில் குழல் வடிவ கற்களால் ஆன பிரத்தியேகமான அமைப்பு கொண்ட கட்டிடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையின் வடக்கு பகுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் கலங்கரை விளக்கம் ஒன்றை அமைத்தனர். இது ஜனவரி 1884 ம் வருஷம் 1 ம் ல இருந்து இயங்க ஆரம்பிச்சுதாம்.   நம்ம பின்னால நிறைய கூட்டம் இருபதுனால அடுத்த  இடத்துக்கு போய்ட்டு மிச்சக் கதை பார்க்கலாம்.  
மேல இருக்கும் படத்துல பார்ப்பது மேற்கு பக்க குடியிருப்புகளும், கடற்கரையும் சேர்ந்த காட்சி. மனிதர்கள்லாம் சின்னதா தெரிஞ்சாங்க. சரி மூன்றவதா புதியதாக கட்டப்பட்ட உயர்நீதிமன்ற கட்டிடத்தில் இருந்த 175 அடி உயர கோபுரத்தில் விளக்கு அமைக்கப்பட்டது.இது ஒரு வித்தியாசமான இந்திய மற்றும் சரசெனிக் ன்னு சொல்லபடுகிற கட்டிடகலையின் கூட்டு அமைப்பில் உருவாக்கப்பட்டதாம் இது, ஜூன் 1894 ம் வருஷம் 1 ம் தேதி முதல் இயங்க தொடங்கியதாம். அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 175 அடியாக இருந்ததாம்.  இதில் விளக்கு எரிக்க மண்ணெண்ணெய் உபயோகபடுத்தி இருக்காங்க.

சரி அடுத்த பக்கத்திற்கு செல்வோம். ஏன்னா வழி ரொம்ப குறுகலா இருக்கு. மேலும் நிறையப்பேர் கீழ வெயிட் பண்ணுரதுனால நாம வேகமா நகர்ந்து செல்லனும். மொத்த மெரினா பீச்சும் மேல இருந்து பார்க்க அழகா தெரியுது. வாகனங்கள், பீச்சோரக் கடைகள், மனுசங்கள்லாம் மினியேச்சர் போல இருக்கு.

மேல் படத்துல பார்க்குறது கிழக்கு பாகம் மெயின் ரோடு.   நான்காவதா கட்டப்பட்ட இந்த லைட் ஹவுஸ் 1977ம் ஆண்டு ஜனவரி 10 தேதி லருந்து இயங்க ஆரம்பிச்சுதாம்.  இப்ப இருக்குற மெரினா பீச்ல கட்டப்பட்ட  இந்த லைட் ஹவுஸ் இதில்  நவீன 150 வோல்ட் ஹாலிட் விளக்கும், நவீன லென்சுகளும் உள்ளன. இதனால் கடலில் இருந்து 55 கி.மீ தொலைவில் இருந்தும் லைட் ஹவுஸ் விளக்கு வெளிச்சத்தை தெளிவா பார்க்க முடியுமாம். மேலும் நகரத்தின் எல்கைக்குள் இயங்கிகொண்டு இருக்கும் மற்றும் லிப்ட் வசதி கொண்ட ஒரே லைட் ஹவுஸ் இந்தியாவிலே இதுதானாம்.
இரு பக்கமும் கம்பி அணைப் போட்ட பால்கனி வழியா கீழ பீச் மணலில் குப்பைகளை அகற்றும் இயந்திரம் மூலம் பீச் தூய்மையாக்குறதை பார்க்க முடிஞ்சது. பீச்ல சிறுவர்கள்லாம் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. மேல இருந்து பார்க்கும் போது, இவ்வளவு சுத்தமா இருக்கே இது மெரினா பீச் தானான்னு நமக்கே டவுட் வந்திடுது!!

மேல இருந்து பார்க்கும் போது லைட் ஹவுசை சுத்தி பார்க்க வந்தவங்க க்யூல நிக்குறது தெரியுது. நாம கீழ போனாதான் மத்தவங்க வந்து சுத்தி பார்க்க முடியும். அதனால மத்தவங்களும் பார்க்க வசதியா வேகமா பார்த்துட்டு கீழ போவோம்.  ஏன்னா, இந்த லைட் ஹவுஸ் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மீண்டும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுறாங்க.

மேலும் திங்கட்கிழமை விடுமுறை. அதனால, நிறைய பேர் பார்க்குறதுக்கு வசதியா முன்னே செல்பவர்கள் வேகமா பார்த்துவிட்டு செல்லவேண்டும் சின்ன பசங்களுக்கு 5 ரூபாய் வசூலிக்கிறாங்க.   மாற்றுத்திறனாளிகள் செல்ல, பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டிருக்கு. 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கு. தரை தளத்தில், கலங்கரை விளக்கின் மாதிரி, கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்திய அரிய பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கு.அருங்காட்சியகத்தை பார்க்க தனியாக 10 ரூபாய் வசூலிக்கப்படுது.

80 காலக்கட்டத்து படங்கள்ல ஹீரோ இல்ல ஹீரோயின் சென்னைக்கு வந்ததைக் காட்ட ரெண்டு மூணு இடங்களைக் காட்டுவாங்க. பலப் படங்களில் வந்த சென்னையின் முக்கியமான இடங்களை அடுத்த வார மௌனச்சாட்சிகள் பகுதியில் பார்க்கலாம். 

அதுவரை நன்றிக்கூறி உங்களிடமிருந்து உத்தரவு வாங்கிக்கிறேனுங்க,

Monday, November 25, 2013

தவிர்த்திருக்கக் கூடிய விபத்துகள் - ஐஞ்சுவை அவியல்

எங்க போயிட்டு வரே புள்ள!

பக்கத்து தெரு செல்வி ஹாஸ்பிட்டலில் இருக்காங்க. போய் பார்த்துட்டு வரேன் மாமா.
ஐயையோ! செல்வி மாசமா இருந்தாளே! ஆனா, டெலிவரிக்கு இன்னும் டேட் இருக்குமே! என்ன ஆச்சு!? காலை பார்த்தேனே! வண்டில அவளும் அவ புருசனும் எங்கயோ போய்க்கிட்டு இருந்தாங்களே!

அப்படி போகும்போதுதான் செல்வியோட புடவை முந்தானை வண்டி சக்கரத்துல மாட்டி கொஞ்சம் கொஞ்சமா இழுத்து கீழ விழுந்துட்டா. புடவை ஜாக்கட்டோட பின் பண்ணி இருந்ததால இடது கை தோள் பட்டை மூட்டு விலகிடுச்சாம். அது சரியாக இன்னும் ஆறு மாசமாகும். அது வரை ஒரு கிலோவுக்கு அதிகமான வெயிட்லாம் தூக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. டெலிவரிக்கு இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு. குழந்தை பொறந்தா எப்படி தூக்குவான்னு தெரியல. குழந்தையை யார் கவனிச்சு அதுக்கு எல்லா வேலையும் செய்ய முடியும்ன்னு தெரியல.

ரெண்டு செக்கண்ட் நேரம் ஒதுக்கி சேலை முந்தானையை இடுப்புல சொருகி உக்காந்திருந்தா இத்தனை பிரச்சனை வந்திருக்குமா!? இதேப்போல. தவிர்த்திருக்க கூடிய இன்னொரு விபத்து பத்திச் சொல்றேன்...,  எல்லா பொம்பளைகளும் சமைச்ச, சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி, ஈரம் போக காய வச்சு கப்போர்ட்ல எடுத்து வைக்கிறீங்கதானே!?

ஆமாம் மாமா! எப்பேர்பட்ட சோம்பேறி பொம்பளையாய் இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சமைச்ச பாத்திரங்களை கழுவி எடுத்து வைப்பாங்க.  ஏன் கேக்குறீங்க!?

அந்த பாத்திரங்களை எடுத்து யூஸ் பண்ணும்போது கழுவுவீங்களா!? 

ஒரு சில பாத்திரங்கள் தவிர்த்து மிச்சம்லாம் அப்படியேதான் யூஸ் பண்ணுவோம்.

ம்ம்ம்ம் நம்ம பக்கத்து ஊரான புனலப்பாடில ஒரு குழந்தைக்கு வயத்து வலி அடிக்கடி வருமாம். என்னன்னு டாக்டர்க்கிட்ட கூட்டி போய் பார்த்தால் சிறுகுடலில் கருப்பா ஏதோ இருக்குறது ஸ்கேன்ல தெரிஞ்சிருக்கு. என்னன்னு மறுபடியும் வேற ஸ்கேன் எடுத்து பார்த்தால், கரப்பான் பூச்சிகள்.  குழந்தை வயத்துக்குள்ள எப்படி கரப்பான் பூச்சி வந்துச்சுன்னு விசாரிச்சதுல, கழுவி வச்ச பாத்திரம்தானேன்ற அலட்சியத்துல பாத்திரங்களை மீண்டும் கழுவாமயே யூஸ் பண்ணது தெரிய வந்திருக்கு. கழுவி வச்ச பாத்திரத்து மேல கரப்பான் பூச்சி முட்டை இட்டிருக்கு. அது எப்படியோ குழந்தை வயத்துக்குள்ள போய் கரப்பான் பூச்சிகள் உருவாகி இருக்கு. இப்ப ஆப்ரேஷன் பண்ணி அதெல்லாம் எடுத்த பிறகு குழந்தை நல்லா இருக்கு.

ஐயையோ! இப்படி கூட நடக்குமா!? இனி எல்லா பாத்திரத்தையும் கழுவிட்டே யூஸ் பண்றேன் மாமா.

ம்ம்ம்ம்ம்ம் நல்லது புள்ள. இன்னிக்கு சாப்பாட்டுக்கு மிளகு குழம்பு வைக்குறியா!? சளிப் பிடிச்சுட்டு இருக்கு.

ஏன்!? என்னாச்சு!? மழைல நனைஞ்சீங்கள்!?

இல்ல புள்ள,  போன வாரம் டவுனுக்கு போகும்போது, தாகமா இருக்குன்னு தண்ணி பாட்டில் ஒண்ணு வாங்கினேன். அதை குடிச்சதிலிருந்து தொண்டை கமறலா இருந்துச்சு. இப்ப நல்லா சளி பிடிச்சுட்டுது.

தண்ணி பாட்டில்ல ஒரு எண் இருக்கும் அதை பார்த்து எது நல்ல கம்பனின்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்கி குடிச்சு இருக்கலாமில்ல!!

தண்ணி பாட்டில்ல நம்பரா!? என்ன புள்ள, புதுசா சொல்றே!?
என்னதான் Aquafina, Kinley, Bislery  ன்னு ஸ்டேண்டர்டு கம்பெனியா பார்த்து தண்ணி பாட்டில் வாங்கினாலும், அந்த பாட்டிலோட அடிப்பாகத்துல 1 முதல் 7 வரை இருக்குற எதாவது ஒரு நம்பர் குறிச்சிருக்கும். குறிச்சிருக்கனும்ன்னு ரூல்ஸ் இருக்கு. இந்த நம்பர்லாம் அந்த பாட்டில்ல எந்த ரசாயண பொருள்லாம் கலந்து இருக்குன்னு நாம தெரிஞ்சுக்குறதுக்காகத்தான்.

பாட்டில்ல ஒரு படத்துல நம்பர்களும் அதுக்குண்டான ரசாயண பொருட்களோட பேரும் இருக்கும்.  எந்த நம்பர்க்குண்டான வெதிப்பொருட்களும் நம்ம உடம்புக்கு கெட்டதுதான் செய்யும். ஆனா, எரியுற கொள்ளில எது நல்ல கொள்ளின்னு தெரிஞ்சுக்கலாமில்ல. 1,3,6 நம்பர் இருந்தா அந்தப் பாட்டில்களை வாங்கக்கூடாதாம் மாமா.

அதுமட்டுமில்லாம, இந்த பாட்டில்களை வெயில்ல வைக்க கூடாதாம். ஆனா, கடைங்கள்ல வெளிய வெயில்லதான் வச்சிருக்காங்க. வெயில் படும்படி வச்சா, பாட்டில்ல இருக்கும் ரசாயணப் பொருள் தண்ணில கலந்துடுமாம். தண்ணி குடிச்சுட்டு பாதுகாப்பா அதை அப்புறப்படுத்தனுமே தவிர அந்த பாட்டில்களை யூஸ் பண்ணக்கூடாதாம். 

உனக்கெப்படி இதெல்லாம் தெரியும் புள்ள. இனி நம்ம சின்ன மண்டையன் இஸ்கோலுக்கு போகும்போது பாட்டில்ல கொடுக்காத. வாட்டர் பாட்டிலுக்குண்டான பாட்டிலையே வாங்கி தண்ணி கொடுத்தனுப்பு. 

சரிங்க மாமா! நீங்கதான் எப்பவும் ஜோக் சொல்லுவீங்க. இன்னிக்கு உங்களுக்கு நான் ஜோக் சொல்றேன். 

ம்ம்ம்ம் சொல்லு புள்ள!!

டான்ஸ் மாஸ்டர்: நான் போன் செஞ்சப்போ ஏன் பேசலை!?
மாணவன்:  நீங்க போன் செஞ்சப்போ அந்த ரிங்டோனுக்கு டான்ஸ் ஆடி பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேன் சார். 


புத்திசாலி புள்ள. ஒரு விடுகதை கேக்குறேன் சொல்லு புள்ள!

கேளுங்க மாமா!!


கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிக்குது. அது என்ன?

ம்ம் ஒரு நிமிசம் இருங்க. யோசிச்சு சொல்றேன்.

நீ யோசிச்சு வை. நான் போய் உரம் வாங்கிட்டு வந்துடுறேன். அதுக்குள்ள டிடி, மதுரைத் தமிழன், வெங்கட், கணேஷ், உஷா, சுபான்னு யார்க்கிட்டயாவது விடையை தெரிஞ்சு வச்சுக்க கூடாது

சரி மாமா!

Saturday, November 23, 2013

திருவண்ணாமலை கார்த்திகை தீப அனுபவம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடி போற பயணத்துல ஒரு நாள் லேட்டா நாம இன்னைக்கு பார்க்க போறது திருவண்ணாமலை மலை மேல் ஏற்றும் கார்த்திகை தீபம். தொடர் மின்வெட்டு காரணமாவும் பதிவு போட முடியல. இருந்தாலும் பதிவருக்குண்டான கடமையாயை ஆத்தாம இருக்கலாமா!? அதான் நேத்தைய போஸ்ட் இன்னிக்கு.....,

தீபத்தை பார்க்கு முன் திருவண்ணாமலையின் சிறப்புகளை முதலில் நாம தெரிஞ்சுக்கலாம்.   பல நூற்றாண்டுகளுக்கு முன்ன எரிமலையா இருந்து, தீ குழம்புகள் தண்ணீரில் குளிர்ந்து உருவானதுதான் இந்த மலை எனபது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.  இங்க மிக பழைமையான நாகரீகமும் கி மு நூற்றாண்டுக்கு முன்னரே இங்கே மக்கள் வாழ்ந்து வந்ததுக்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கு. 

பதஞ்சலி முனிவரால் கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே இந்த இடம் குறிப்பிடபட்டிருக்கு. மேலும், தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன் சுமார் 2500 வருடங்களுக்கு முன்ன இந்த இடத்தில அரசாட்சி செய்ததற்கான சான்றுகளும் இருக்கு.  கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுது. தொண்டை மண்டலம் என்று சொல்லும்  சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களை உள்ளடக்கியது. தொண்டை மண்டலத்தின் முக்கிய நகர் இந்த திருவண்ணாமலை நகரமாகும். அதன் பின்னர் கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கியது இந்த நகரம்.
இவ்வுளவு சிறப்புமிக்க இந்த இடத்தில அமைந்து இருபதுதான் திரு அண்ணாமலையார் திருக்கோயில். இங்க வருடம் முழுதும் எதாவது திருவிழாக்கள் நடந்துகொண்டே இருக்கும்.இதுல கார்த்திகையில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்பானது. இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடடுவாங்க. இதுல பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா. இந்த பத்தாம்நாள காலை கோவிலில் பரணி தீபம் ஏத்துவாங்க அப்புறம் சாயங்காலம்  அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏத்துவாங்க. இந்த தீபம் தொடர்ந்து பதினோறு நாட்கள் எரிஞ்சுகிட்டே இருக்கும். எத்தனை பலமான மழை, காத்துனாலயும் இதுவரை இத்தீபம் அணைஞ்சதில்லை.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கார்த்திகை தீபத்திருநாள் அன்னைக்கு  தீபத்தை பார்க்கனும்ன்னு ஆசையோடு, வீட்டு வேலைகளை சட் சட்ன்னு முடிச்சு, சாமிக்கு படைச்சுட்டு கிளம்பியாச்சு. திருவண்ணமலைக்கு 20கிமீ நெருங்கும்போதே வாகன போக்குவரத்து அதிகமா தென்பட்டது. திருவண்ணாமலை மெயின் பஸ் ஸ்டேண்ட் க்கு   4 கி மீ முன்னாடியே வண்டிகள் நிறுத்தப்பட்டு நடைபயணமாக போனோம். அப்ப மணி மாலை 5:30.

 வானம் மேகத்தால் சூழப்பட்டு மலை சரியாக தெரியலை. அடடா! நாம சாமி கும்பிட வந்ததைவிட பதிவு தேத்த வந்த நோக்கம்தான் முக்கியமானது. பதிவுக்கு ஃபோட்டோதானே முக்கியம்! மலையே தெரியலையே. இதுல எப்படி ஃபோட்டோ எடுத்து எப்படி பதிவை தேத்துறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது சரியா 6 மணிக்கு கார்த்திகை தீபம் மலைமேல் ஏத்துனாங்க. அண்ணாமலையானுக்கு அரோகரா ன்ற பக்தர்கள் கோஷம் விண்ணை பிளந்தது, தீபம் மலைமேல் காட்சியளித்தது.  சில நிமிடங்கள்தான் அதன் பிறகு தெரியவில்லை.  மேகமூட்டம் ஒளியை மறைத்து வாகனங்களின் வெளிச்சத்துலயும், மேகங்கள் சூழ்ந்ததாலயும் சரியாக படம் தெரியலை.
சரி, பதிவுக்கு போட்டோ வேணுமேன்னு கேமராவை ஜூம் செய்த போது மேக மூட்டத்தின் இடையில் கார்த்திகை தீபம் பிரகாசமா தெரிஞ்சது.  அண்ணமாலையானுக்கு அரோகரா ன்னு சொல்லி கோவிலுக்கு போனோம்.
கோவில் உள்ள போகமுடியாத அளவு கூட்டம். சரி சாமி தரிசனம் செய்துட்டு போலாம்ன்னு வரிசையில காத்திருந்தோம். கோவிலினுள் அலங்காரங்களும், விளக்கு ஒளிகளுமாய் அழகா காட்சியளித்தது.
நந்திதேவர் அழகா அலங்கரிக்கப்பட்டு விளக்கு ஒளியில்  ஜொலித்தார். நந்திக்கு  முன் நெய்விளக்கு ஏற்றபட்டு நிறையப்பேர் வழிபாடு செஞ்சாங்க. நாங்களும் தீபங்களை ஏற்றிவிட்டு தரிசனம் செய்தோம்.
தீபம் அக, புறம் இருளை நீக்கி பேரொளியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும் என்பதை போல நந்தியின் படிக்கட்டுகளில்லாம் விளக்கு ஏற்றி மக்கள் வழிபாடு செய்தனர்.  இந்த கார்த்திகை நக்ஷத்திரத்தில் தான் மகாபலி சக்ரவர்த்தி முக்தி அடைந்த தினம் ஆகையால் நாமும் துன்பம் நீங்க கிழக்கு முக தீபமும்,  பகை விலக மேற்கு முக தீபமும், மங்களம் பெருக வடக்குமுக தீபமும் ஏற்றி ஒளி வடிவான அண்ணாமலையானை தீபம் ஏற்றி வழிபட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
மேகக் கூட்டங்கள் இடையில் பௌர்ணமி நிலவு மறைந்து எப்ப வேணும்ன்னாலும் மழை வரலாம் ன்னு பயம் காட்டிக்கொண்டே சென்றது.
கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் ன்னு சொல்வாங்க.  கோபுர தரிசனம் முடிச்சுட்டு, கிரிவலம் செல்வோம்ன்னு நினைச்சு  ஆலயத்தின் வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும், தீபம் நம் கண்களுக்குள் நின்றது. கிரிவலம் எப்ப வேணும்னாலும் போய்க்கலாம். ஆனா, மலை மேல ஏற இதைவிட்டா நல்ல் சான்ஸ் கிடைக்காதுன்னு நினைச்சு மலைக்கு போலாம்ன்னு நினைச்சா இரவு 8 மணியாகிட்டதேன்னு கூட வண்ட்தவங்க முணுமுணுக்க...,

 அண்ணமாலையாரின் மேல் பாரத்தை போட்டுட்டு, மலை ஏறலாம்ன்னு முடிவெடுத்து நடக்க தொடங்கினோம் வழியெங்கும் போலிஸ் பாதுகாப்புகளும், வனத்துறையினரும், கமாண்டோ படையினரும் மலையில் செல்வோருக்கு அந்த நேரத்துலயும் பாதுகாப்பா இருந்தனர்.  

அவர்களில் சிலரும் டியூட்டி விட்டு மலையை விட்டு இறங்க ஆரம்பித்தனர். மலைக்கு போகும் பாதையில் இரண்டு ஆஸ்ரமங்கள் இருந்தன. மலையேற செல்பவர்களுக்கு சாம்பார் சாதமும், வெஜிட்டபிள் பிரியாணியும் கொடுத்தாங்க. அதெல்லாம் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு  மலை ஏறினோம். சிவனே மலையாய் இருப்பதால்  அந்த மலையில் செருப்பு போடகூடாதுன்னு கூட வருபவர்கள் சொல்ல செருப்புகளை அங்கே விட்டுட்டு மலையேற தொடங்கினோம்.
சுமார் 2668 அடி உயரமுள்ள மலை மீது போகும் பாதை கீழ் பகுதியில் கற்கள் தடம்பதித்து படிக்கட்டுகள் போல் கொஞ்சதூரம் அமைச்சு இருக்காங்க. அதுக்கப்புறம் சிறியசிறிய நீரோடைகள் இருக்கு. கவனமா அதை தாண்டி போகனும். எல்லா இடமும் பாறைகள்தான். முறையான பாதை கிடையாது. நாம்தான் சரியான வழியா பார்த்து நடந்து போகனும். நாம் போவதற்கு வசதியாக அம்புகுறி வைத்து  அடையாளம் வச்சிருக்காங்க.

 ஆனாலும் எங்கும் இருட்டு சூழ்ந்திருப்பதால் சிலர் பாதைமாறி சென்று பின் சப்தம் எழுப்பி திரும்பி வந்தனர்.  காட்டுக்குள் மாட்டிக்கிட்டா பல ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆகையால கூட்டம் கூட்டமாக போறது நல்லதுன்னு எங்களுக்கு முன்னாடி மலை ஏறி இறங்கி வரும் பக்தர்கள் சொன்னாங்க.

 சில அடிகள் கடந்த போது செங்குத்தான மலைப்பாதை வந்தது பாதுகாப்புகாக சிலர் நாலு கால்களில் ஊர்ந்து போனாங்க. ஏனெனில் கொஞ்ம் கால் இடறினாலும் நாம்கீழ விழுந்துடுவோம்.  உயரமான பகுதியில் ஏறுவதால ஆக்சிஜன் அதிகமா தேவை படுறதால, கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு மலை ஏறலாம்ன்னு கொஞ்சம் ஓய்வெடுத்தோம்.

 அடுத்து செல்பவர்கள் முன் எச்சரிக்கையாக கொஞ்சம் குளுகோஸ் கூட கலக்கி எடுத்து செல்லலாம் நாங்கள் மெதுவாக வந்து ஒரு செங்குத்தான பாதையில் அமர்ந்து நல்ல காற்று சுவாசித்து கொண்டு கீழே பார்க்கும் போது மொத்த திருவண்ணாமலை நகரமும் விளக்கு ஒழியில் ஜொலித்தது கோவிலின் முழு வடிவமும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளித்தது  
போகும் வழியெங்கும் மரங்களும், விவரம் அறியாத மூலிகை செடிகளும் இருந்தன. பாதி தொலைவு மலைமேல் ஏறியபொழுது மொத்த திருவண்ணாமலை ஊரும் மேகக் கூட்டத்தின் கீழ் காணம போய்ட்டது. மேகம்  மூடி பார்க்கும் இடம்லாம் வெண்மையா இருந்துச்சு.  ஆனா, மலையின்மேல் பௌர்ணமி நிலவு வெளிச்சம் அழகா தெரிந்தது.

 தெரியாம ஏறி வந்துட்டமோ! இனி நம்மால் மலை மேல ஏற முடியுமா?ன்னு யோசிக்கும் போது, மலை மேல இருந்து இறங்கிவரும் சிலரிடம் இன்னும் எவ்வுளவு தூரம் போகனும்ன்னு சிவனின் முடிமேல் இருந்து வரும்  தாழம்பூவிடம் கேட்ட பிரம்மா கேட்ட மாதிரி கேட்டோம். இன்னும் நீங்கள் கால் பங்கு இடம் கூட ஏறலைன்னு சொல்லி, இன்னும் ஒரு மணி நேரம் மலை ஏறனும்ன்னு சொல்லி எங்களை பயங்காட்டினார். னாங்க மலைச்சு நிக்கும்போது ஒரு வயசான பாட்டி மலை மேல் இருந்து பாறைகளில் மெதுவா இறங்கி வந்தார் அவரை பார்த்ததும் ஒரு தைரியம் வந்து மீண்டும் மேலே ஏற தொடங்கினோம்.

போகப்போக கோவில் சிறியதா தெரிந்தது. சில வெளிநாட்டு பெண் பிள்ளைகள் தனியாக வந்திருந்தாங்க. அவர்களுடன் இனியும் எவ்வுளவு தூரம் இருக்கும்ன்னு கேட்டபோது,  தூரத்தைலாம் கல்குலேட்  பண்ணவேண்டாம். ஜோதி தரிசனம் தான் முக்கியம் ன்னு கூறி கைகொடுத்து போனாங்க.

 அதன்பிறகு மேகக்கூட்டம் முழுவதுமா மூடி எங்கும் இருள் சூழ்ந்தது. பக்கத்தில் இருபவர்கள் கூட தெரியலை. இதுமாதிரி சமயங்களில் சப்தம் எழுப்பிக்கொண்டே போகனும். இல்லலாட்டிநம் கூட வந்தவங்களை பிரிஞ்சுடுவோம்ன்னு கூட வந்தவங்க சொன்னாங்க. 

 மழை போல் விழும் பனிநீர் பட்டு பாறைகள்லாம் வழுக்க ஆரம்பிச்சது. அதுவும் மரங்கள்ல ஆளுயர செடிகளில் இருந்து பனிநீர் விழுந்து அவை காற்றில் அசையும் போது நம்மீது மழை விழுவது போல் விழுது. விடும் தலையில் எதாவது கட்டிக்கனும்.  இல்லாட்டி தொப்பி போன்ற ஏதாவது போட்டுக்கனும். நல்ல குளிர் அடித்தது. மெதுவாக குழுவினருடன் ஓசை எழுப்பி கொண்டே மலை ஏறினோம். 12 மணியான பிறகும் ஒன்றும் தெரியவில்லை முழுவதுமாக மேக கூட்டத்தினுள் இருந்தோம்.
கால்லாம் ஓய்வெடுக்கனும்ன்னு கெஞ்ச ஆரம்பிச்சது.  எவ்வளவு தூரம் போகனும்ன்னு மேல இருந்து வருபவர்களிடம் கேட்டபோது தூரத்தில் ஒரு இடத்தை சுட்டிகாட்டினர். அங்க சுமார் 200  அடிதொலைவில் மேக கூடத்தின் இடையே அந்திவானம் சிவந்து காணப்படுவதை போல மேகம் சிவந்து காணப்பட்டது. அதைபர்த்தவுடன் தேகம் புல்லரித்தது.  மனதிற்குள் ஒரு இனம்புரியாத  சந்தோசம்.  அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரான்னு சப்தம் இட்டவாறே ஒருபாறையின் உச்சியினை அடைந்தோம்.
பக்கத்தில் நின்றும்  கூட தெளிவா தெரியாத அளவு மேக கூட்டம். தீபம் காண வருபவர்கள் நெய் வாங்கி ஊற்றுவதற்கு வசதியா மேல நெய் வித்துக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் நெய்வாங்கி கொடுக்க அதை அங்க நிற்கும் சேவார்த்திகள் ஊற்றி மீதி நமக்கு கொடுப்பாங்க.. தீபம் இருக்கும் மலை முழுவதும் நெய்யா இருந்துக்கிட்டு பாறைலாம் வழுக்கிச்சு. அண்ணாமலை கார்த்திகை தீபத்தை வாழ்க்கையில் நேரில் கண்டு வணங்கிய அனுபவம் மறக்க முடியாதது.
மேகமூட்டத்தில் தீப கொப்பரை சரியா தெரியலை.  மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும்,இந்த  6.5 அடி உயரமுள்ள ராட்சத இரும்பு கொப்பரையின் வெளிபாகத்தில் அர்த்தநாரீஸ்வரர் உருவம்   பொறிக்கப்பட்டிருக்கு.  இந்தக் கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி அதைத் திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து மகா தீபம் ஏற்றப்படுது.  இது மலையைச் சுற்றி 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும்.  தொடர்ந்து 11 நாட்களுக்கு மகா தீபம் பிரகாசமா எரிய தினமும் 300 முதல் 375 கிலோ நெய், சுமார் 1000 மீட்டர் திரி, 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுது. 
அவ்வுளவு காற்றிலும் தீ ஜுவாலை மிகுந்த சத்தத்துடன் எரிந்துக்கிட்டு இருந்துச்சு. அதிலிருந்து தீ கங்குகள் காற்று வேகமா வீசும்போது லாம் நாலாபுறமும் சிதறிய காட்சி நல்லா இருந்துச்சு.   பக்தர்கள் அவ்வுளவு தூரம் கஷ்ட பட்டு வருவதன் புண்ணியம் போல இந்த தீப தரிசனத்தை காண கோடிக்கண்வேண்டும். இறைவனை மனதார ஒருநிமிடம் பிரார்த்தித்து விட்டு மலையின் உச்சி விட்டு இறங்க ஆரம்பித்தோம்.

பாதை குறுகியதா இருப்பதாலும் இருட்டு, பாறைலாம் நெய், எண்ணெய் பட்டும் வழிலாம் வழுக்கிடும்ன்னு பயந்து பயந்து மலை விட்டு இறங்க ஆரம்பித்தோம். பக்தர்கள்  நலன் கருதி அங்கே இருக்கும் சேவை  செய்பவர்கள் வருபவர்களை ஒழுங்கு படுத்தி எல்லோரும் தரிசனம் பண்ணும் அளவிற்கு அனுப்புறாங்க.

கீழ இறங்கும்  போது வேகமா இறங்கினாலும் சில பாறைகள் கூர்மையா இருக்கு. கொஞ்சம் அசந்தாலும் கைலாம் கிழிச்சுடும்ன்னு அபாயம் இருக்கு. கல்களிலும், பாறைகளிலும்,  மண்ணிலும் நடபதால் கால்களின் அடிபாதங்கள் வலிச்சது.. கீழே இறங்கி வரும் போது நடு இரவு 2 மணி. அந்த இரவிலும் மலையில் இருந்து இறங்கி வரும் பக்தர்களுக்காக  சூடாக வேஜிடபிள் சாதம் கொடுத்தாங்க அங்கே இருக்கும் ஆஸ்ரமவாசிகள். மலை ஏறி இறங்கியதால நிறைய எனர்ஜி தேவைப்பட்டதால் மீண்டும் சாப்பிட்டுட்டு அங்கே இருந்து கிளம்பினோம்.

 கோவிலுக்கு போகனும்ன்னு முன்னாடியே முடிவெடுத்து, சரியான முன்னேற்பாடு இல்லாம போய்ட்டதால, இருட்டுல மலை ஏறி கொஞ்சம் சிரம்மப்பட வேண்டி இருந்துச்சு. சிரமம் ஏற்பட்டாலும் அண்ணமலையானின் அருளால் எந்த ஆபத்தும் ஏற்படலை. அடுத்த வருசம் சரியா பிளான் பண்ணி பகலிலேயே மலை ஏறி போய் தீப பார்த்துட்டு வரனும்ன்னு நினைச்சுக்கிட்டே அண்ணாமலையானிடமிருந்து விடைப் பெற்று புண்ணியத்தையும் வாங்க்கிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

நீங்களும் அடுத்த வருசம் சரியான முன்னாடியே பிளான் பண்ணி, சரியான ஏற்பாட்டோடு தீபம் பார்த்து அண்ணாமலையானின் அருள் பெருக!! 

Thursday, November 21, 2013

எங்கள் வீட்டு கார்த்திகை தீபம் கொண்டாட்டம்

தீபாவளி, பொங்கல் போல எங்க ஊர்ல கார்த்திகைத் தீபத் திருவிழாவும் முக்கியமான பண்டிகை.  முதல் நாளே வீடுலாம் ஒட்டடை அடிச்சு, மொழுகி செம்மண் இட்டு வைப்போம். பொங்கல் பண்டிகைக்காக, வீட்டுக்கு வெள்ளையடிக்குற மாதிரி சில வீடுகள்ல வீட்டுக்கு வெள்ளையடிப்பாங்க. அதுக்கு காரணம், புதுசா கல்யாணம் கட்டிக்கிட்ட ஜோடிங்க தலை தீபாவளின்னு சொல்லி பொண்ணோட அம்மா வீட்டுக்கு போய்டுவாங்க. அந்தக் குறை மறைய தலைக்கார்த்திகைக்கு மாமியார் வீட்டுலதான் இருக்கனும்ன்னு ஒரு வழக்கம். 
மாமியார் தலையில கார்த்திகை மண்டை விளக்கு ஏத்து”ன்னு ஒரு சொலவடையே எங்க ஊர்ல இருக்கு, மாமியார் தலைமையில கார்த்திகைத் தீபத்துக்கு மடக்கு (அகல் விளக்கு போலவே மண்ணால் செஞ்ச கொஞ்சம் பெரிய சைஸ்ல இருக்கும். அதுக்கு பேர்தான் மடக்குன்னு சொல்லுவாங்க.)
கார்த்திகை மாச வரும் வளர்பிறை கிருத்திகை நட்சத்திரமும், பௌர்ணமி யும் சேர்ந்து வரும் அன்னிக்குதான் கார்த்திகை தீபம் கொண்டாடுவாங்க. அன்னிக்கு  மதியம் கிருத்திகைக்கு படைக்குற மாதிரி சாம்பார், ஒரு பொரியல், வடை, பாயாசத்தோடு முடிச்சுக்குவாங்க. 
அன்னிக்கு சாயந்தரம் சரியா 6 மணிக்கு தெருவிலிருந்து விளக்கு கொளுத்திட்டு வருவோம். கோலத்துல சில அகல்விளக்கு. வாசல்படிரெண்டு ஓரத்துல,  வீட்டுக்குள்ள இருக்கும் எல்லா வாசப்படிகள்ல விளக்கு ஏத்தி வைப்போம். மாடில, அரிசிப்பானைல, உப்பு டப்பா, அடுப்படின்னு எல்லா இடத்துலயும் விளக்கு ஏத்தி வைப்போம். 
முன்னலாம் ரேடியோவுலயும், இப்பலாம் டிவிலயும் திருவண்ணாமலை தீபம் ஏத்துற நேரடி ஒளி(லி)பரப்புல தீபம் ஏத்திட்டாங்கன்னு தெரிஞ்சு எங்க வீடுகளில் தீபம் ஏத்துவோம். ராத்திரி ஏழு மணிக்கு மேல மாவளி சுத்துவோம். மாவளி பத்தி விளக்கமா இங்க இருக்கு பார்க்காதவங்க பார்த்துட்டு வாங்க.

மறுநாள் நாட்டு கார்த்திகைன்னு சொல்லிக் கொண்டாடுவாங்க. அன்னிக்கும் வீடு வாசல்லாம் மொழுகி கழுவி வைப்போம். சாயந்தரம் விளக்கு வச்சபின் தான் படைப்போம். சிலர் வீட்டுல அசைவம் செஞ்சுப் படைப்பாங்க. எங்க வீட்டுல வெஜ்தான்.  தீபாவளிக்கு வெடிச்சது போக மிச்சம் மீதி இருக்குற பட்டாசை வெடிப்போம். 
சிலர் வீட்டுல அசைவம் சமைப்பாங்க. எங்க வீட்டுல இனிப்பு போண்டா, வடை, கொழுக்கட்டை மட்டும் செஞ்சு படைப்போம். அன்னிக்கும் வீடு முழுக்க விளக்கேத்தி வைப்போம்.  
நாட்டுக்கார்த்திகை அன்னிக்கும் மாவளி சுத்துவோம். மாவளி சுத்துறதுனால  நம்மை பிடித்திருக்கும் பீடைலாம் விலகும்ன்னு ஒரு ஐதீகம். அந்த கால பட்டாசுன்னு நினைக்குறேன். அழகா தீப்பொறி பறக்குது பாருங்க.


மொபைல்ல எடுத்ததால படங்கள் தெளிவா இல்ல. என் பையன் அப்பு மாவளி சுத்துறான்.  
நான் கொண்டாடிய அத்தனை பண்டிகைகளையும் அதன் பழமை மாறாம என் பிள்ளைகள் அனுபவிக்கனும்ன்னு கொஞ்சம் மெனக்கெட்டு கொண்டாடுறோம்.