Thursday, February 28, 2019

பூசணிக்காய் வயர் கூடை - கைவண்ணம்

யூட்யூப்ல சுத்தும்போது வயர்கூடைல பூசணிக்காய் கூடை/அன்னாசிப்பழ கூடை/பானைக்கூடைன்னு இருந்துச்சு. புதுசா இருக்கேன்னு ட்ரை பண்ணேண். ஒரு ரோல் வயர்ல, ட்யூப் வச்சு போடுற கூடை இது. நல்லாதான் வந்திருக்கு. வாழ்க யூ ட்யூப்!!
தெரிஞ்சவங்க கேட்டாங்கன்னு 2 1/2 ரோல்ல கூடை போட்டுக்கொடுத்தேன்... 250ரூபா கொடுத்தாங்க. பிளாஸ்டிக்கை ஒழ்க்கனும்ன்னு அரசாங்கம் ஆணையிட்டதால்  பிளாஸ்டிக் பைகளுக்கு திரும்பவும் மவுசு வந்திட்டுது. வயர்கூடை தூக்க அசிங்கப்பட்ட என் சின்னப்பொண்ணுகூட இப்ப இதைதான் கொண்டு போகுது.  மாற்றத்துக்கு நடுத்தர, கீழ்த்தர மக்கள் தயாராதான் இருக்காங்க . மேல்தட்டு மக்கள்தான் இன்னும் திருந்தலன்னு கண்கூடா பார்த்தேன். 

நன்றியுடன்,
ராஜி

Wednesday, February 27, 2019

பய உணர்ச்சி போக்கும் காட்டேரி - சிறுதெய்வ வழிபாடு

அணுக்களின் மோதலால் உலகம் உண்டானது.  நீரிலிருந்து ஒரு செல் உயிர் தோன்றி படிப்படியா வளர்ச்சிக்கொண்டு மனித இனம் உருவானது. தனது தேவைக்கான பொருட்களை மனிதன் உருவாக்கினான்.  சிங்கம், புலி, கரடி, பாம்புகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொண்ட மனிதன். நெருப்பு, காற்று, நீர் என தன்னால் கட்டுப்படுத்த முடியாதவைகளை கண்டு பயந்தான். அதற்கு கடவுள் என வழிபட்டு அதை தன்வசப்படுத்த முடியுமாவென பார்த்தான். காற்று  (வளி) மண்டலத்தை  பிரம்மன் எனவும்விண்வெளி மண்டலம் என்ற விஷ்ணு, (வெளி), சூரிய மண்டலம் என்ற சிவன் (ஒளி) என வணங்க ஆரம்பித்தான். இது ஆதி தமிழனின் வானியல் அறிவு. அதை பிற்காலத்தில் மூன்று பெருந்தெய்வங்களாய் மாற்றப்பட்டன. வளி, வெளி,ஒளி இவை மூன்றுமே ஒரு உயிர் உருவாக முக்கிய காரணியாகும். ஆரியர்களின் வருகைக்கு பின்னரே இம்மூவரும் பெருந்தெய்வங்களாய் கொண்டாடப்பட்டு, அதன்பின்னரே ஏசு, அல்லா, புத்தர்ன்னு மதப்பிரிவுகள் உண்டானது. முப்பெருந்தெய்வங்களுக்கு இணையாக முப்பெருந்தேவிகள் படைக்கப்பட்டனர். அதன்பின் முருகன், வினாயகர், ஐயப்பன்னு பட்டியல் நீண்டது... 

ஆதிதமிழனின் வரலாற்றில் இறைவழிபாடே கிடையாது. இயற்கையையே தெய்வமாய் வழிபட்டனர். பிற்காலத்தில், குடிமகன்களின் நலனுக்காகவே வாழ்ந்து, அவர்களின் துயர் துடைத்த, அவர்களுக்காகவே அனைத்தையும் இழந்த சிறந்த தலைவன், மன்னன் இவர்களை தமிழ்புலவர்கள் பாட, அதுவே கடவுள் என்றொருவருக்கு சாட்சியானது. அரசனுக்கும்,இறைவனுக்கும் பொதுப்பெயர்கள் ஒன்றே. கோ, அரசன், ஆண்டவன்.. சோழர்களின் ஆட்சிக்கு பின்னரே சிவவழிபாடு தமிழகத்தில் தழைத்தோங்கியது.  நம்புனாதான் சோறுன்ற சினிமா வசனத்துக்கேற்ப,இதுக்காக பல கொலைகள் அரங்கேறி இருக்கு. இப்படி...  இதுலாம் நான் சொன்னா சிரிச்சுக்கிட்டே திட்டிட்டு போய்டுவாங்க.

ஒரு நூறு, இருநூறு, முன்னூறு ஆண்டுகளுக்குமுன் ஊருக்காக  வாழ்ந்து மறைந்த, பழியுணர்ச்சியால் தற்கொலை, கௌரவக்கொலைகள்ன்னு உயிரிழந்தவர்களை அந்த ஊர் காவல்தெய்வமா கொண்டாடுவாங்க. இதுக்கு பல சாட்சிகள் உண்டு, இசக்கி அம்மன், பேச்சியம்மன், மதுரை வீரன், ஐயனார்ன்னு எல்லாருமே வாழ்ந்து மறைந்தவங்க. இவங்கதான் குலதெய்வமாவும் இருக்காங்க. ஊர்க்காவலாவும் இருக்காங்க. இவங்களைலாம் சிறுதெய்வங்கள்ன்னு ஒரு பிரிவாக்கி வகைப்படுத்தி வச்சிருக்காங்க.  ஒருத்தருக்கு முதல் தெய்வம் அவங்க அப்பா அம்மா, பின், குல தெய்வம், அடுத்து ஊர்க்காவல் தெய்வம், அதுக்கடுத்து இஷ்ட தெய்வம். கட்டக்கடைசியாதான் நாம வணங்கும் முருகன், சிவன், பிள்ளையார், பெருமாள்லாம்....
சிறுதெய்வங்களை வரிசையா பார்த்துக்கிட்டு வரலாம். சிறுதெய்வ வழிபாட்டில் இன்னிக்கு பார்க்கப்போறது காட்டேரி அம்மன். கரிய உருவம், கருமை நிற உடைகள், வெளித்தள்ளிய நாக்கு, ரத்தம் தோய்ந்த உதடுகள், கோரைப்பற்கள், தலைவிரிகோலம், கையில் முறம், துடைப்பம் தாங்கி இருக்கும் கோலமே காட்டேரி அம்மன்.  குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் ஊருக்கு வெளியே இருப்பாள். பெரும்பாலும் கோவில் எதுவும் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஊருக்கு ஒதுக்குபுறமான குளத்தடி, ஆற்றங்கரையோர மரத்தடியில் சிலாரூபமாய் இல்லாமல், பாறாங்கல்லே அம்மனாய் நினைத்து வழிபடுவர். கானகம் திரியும் இவளை தேவிமகாமியத்தில் துர்காதேவியின் கடைசி அவதாரமான சண்டியின் அம்சமாய் கொள்வர். 

நெல்லூர், சித்தூர் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், நாகை, பாண்டி, சென்னை ஆகிய ஊர்களிலேயே இந்த காட்டேரியை குலதெய்வமாய் கொண்டவர்கள் இருக்கின்றனர். 

இருசியுடைமை இராத் தங்காது...  இருசி தெய்வம் இரவில் தங்காமல் அலைந்து திரியும் என்பதே இதன் பொருள்.  இருசி என்பது காட்டேரியின் இன்னொரு பெயர். நல்லிருசி, பொன்னிருசி, குழி இருசி என்பது இவளது பெயர்.  இருசின்ற வார்த்தைக்கு பூப்படையும் தன்மையில்லாத பெண்ன்னு அர்த்தம்.  காட்டேரி அம்மன்  வழிபாடு சங்ககாலத்துலயே இருந்திருக்கு..
ஊட்டரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்
கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர் 
வெள்ளத்தானை அதிகன் கொன்று 
உவந்து ஒள்வாள் அமலை ஞாட்பிற் - இது சங்கக்கால பாடல்..
அதியனுக்கும் மிஞிலிக்கும் போர் ஏற்பட்டது அப்படி நடக்கும் போரில், தனக்கு வெற்றியை தேடித்தந்தால் பெரும்பலி தருவேன் என பாழி நகரத்தெய்வத்தை வேண்டி போர்க்களம் மிஞிலி சென்று, அதியனை வென்று அதியனை பேய்தெய்வத்திற்கு பலியிட்டு அமலை கூத்தாடினான் என பாடல் சொல்லுது. பகை மன்னனின் தலையை பேய்தெய்வத்துக்கு பலிக்கொடுத்து அருகிலிருக்கும் மரத்தில் மாட்டி வைக்கும் முத்திரை  சிந்துச்சமவெளியில் கிடைத்திருக்கு. இவளை குலதெய்வமாய் வணங்குவோருக்கு வெற்றியை தருவாள்.பதிலுக்கு உயிர்பலி கேட்பாள். ஒருவேளை பலியிடாமல் அலட்சியம் செய்து அவளது கோவத்துக்கு ஆளானால் அக்குடும்பத்தின் கருவுற்ற பெண்களின் இளங்கருவை தின்பாள். தொடர்ந்து கருச்சிதைவு நடந்தால் குழந்தைப்பேறு கிட்டாது. குழந்தை இல்லாத பெண்களை இருசின்னு திட்டுவது பழந்தமிழர் வழக்குமொழி. கருவை தின்று இருசியாக்கிதால் பயபக்தியால் இருசியாயின்னும் சொல்லப்பட்டாள்.  இன்னிக்கும் கிராமப்புறங்களில் காரணமே இல்லாம கருக்கலைந்தால், அதுக்கு முனி, காட்டேரி அடிச்சிடுச்சுன்னுதான் சொல்வாங்க. உடனே காட்டேரி வழிபாடு நடக்கும். 


எங்க ஊர்பக்கமும் இந்த காட்டேரி அம்மன் வழிபாடு பெரும்பாலும் எல்லார் வீடுகளிலும் உண்டு. திருமணம், காதுகுத்து, சீமந்தம், புதுவீடு புகுதல், குழந்தை பிறந்த பிறகு என இந்த அம்மனை கும்பிடுவோம். எங்க ஊர்ப்பக்கம்லாம் தனியா கோவில் கிடையாது. ஞாயிறு, வியாழக்கிழமை இரவு பெண்கள் மட்டும் அருகிலிருக்கும் ஆற்றங்கரை, குளத்தங்கரை வழக்கமா காட்டேரி அம்மனை ஆவாகனம் செய்யும் இடத்துக்கு கிளம்புவாங்க. வீட்டின் பெரிய சுமங்கலி பெண், ராந்தர் விளக்கோடு முன்செல்ல, அடுத்து ஒரு தட்டில் விபூதி, கற்பூரம் ஏந்தி செல்ல, சாதம், கருவாட்டு குழம்பு, முருங்கைக்கீரை, கொழுக்கட்டை, வடை, பாயாசம்ன்னு வீட்டில் சமைச்சதோடு, வெற்றிலை பாக்கு, தேங்காய் பழத்தோடு அரளிப்பூ, அரளி இலை, காதுமணி கருவளையம், மஞ்சள் சரடு கொண்டு செல்வாங்க.  அப்படி கிளம்பி செல்லும்போது காட்டேரி அம்மனை வழிபடும் வழக்கமில்லாத வீட்டை சேர்ந்தவங்க எதிரிலும் வரமாட்டாங்க. காட்டேரி அம்மனை கும்பிடும் வீட்டுக்கும் போகமட்டாங்க.
எங்க ஊரில் இப்படிதான் வீடு கட்டுவாங்க. பெருக்கல் குறி இருக்கும் இடத்தில்லாம் மண் உருண்டை பிடிச்சு வைப்பாங்க.

மேல படத்தில் இருக்குறமாதிரி  லேசா பள்ளம் பறிச்சு அந்த மணல் அல்லது ஆற்றுமணலால் வீடு கட்டுவாங்க. வீடு கட்டும் இடத்தை மஞ்சள் தண்ணீர் தெளிச்சு சுத்தம் செய்துவிட்டு படத்தில் இருக்குறமாதிரியே சின்னதா வீடு கட்டுவாங்க. பெரிய வீட்டுக்கு எதிரில் சின்னதா ஒரு குழி வீடு கட்டுவாங்க. வீட்டுக்குள் ஆற்றுமணலால் உருண்டை பிடிச்சு வைப்பாங்க. மஞ்சள், குங்குமம் இட்டு, அரளிப்பூ சார்த்தி, மஞ்சள் சரடு சுத்தி, கதம்ப பொடி தூவி சமைச்சு கொண்டுவந்ததை படைச்சு சாப்பிடுவாங்க.  மிச்சம் மீதியை அங்கயே கொட்டிட்டு வந்திடுவாங்க. வீட்டுக்கு கொண்டு வரமாட்டாங்க. ஆண்களுக்கு அந்த வழிபாட்டில் இடமில்லை. மஞ்சசரடு, விபூதி மட்டும் வீட்டுக்கு கொண்டு வரலாம். காட்டேரி அம்மனை வழிபடும் வழக்கமில்லாதவங்க இதுலாம் விட்டுக்கக்கூடாது. குழிவீட்டுக்குள் வைக்கப்படும் இலை திருமணத்துக்காக இருக்கும் பெண், குழைந்தை இல்லாதவங்க, நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவங்களுக்கு வீட்டின் பெரிய சுமங்கலிப்பெண் சேலைத்தலைப்பினில்  கொடுப்பாங்க.

சாமி கும்பிட்டு முடிச்சதும் அந்த வீட்டை வெட்டிய பள்ளத்துலயே போட்டு, மிச்சம் மீதி சாப்பாட்டை அதில் கொட்டி மணலால் மூடி வெற்றிலை, பாக்கு, பழம் வச்சு கற்பூரம், ஊதுவத்தி  ஏத்தி  வச்சிட்டு திரும்பி பார்க்காம வந்திடுவாங்க.
Image result for காட்டேரி அம்மன் வழிபடும் முறை
தாய்ப்பால் இல்லாதவங்க,  பிரசவ வலியால் துடிப்பவர்கள் ஆகியோர் காட்டேரியம்மனை வழிபட்டால் உடனே தீர்வு கிடைப்பதாக நம்புகின்றனர். காரணமே இல்லாமல் அழும் சிறு குழந்தைகளுக்கும், பய உணர்ச்சி கொண்டவங்க காட்டேரி அம்மனுக்கு படைச்ச மஞ்ச சரடு, விபூதி பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.  என் அம்மா வீட்டில் கருப்பு சேலை, அசைவம் வச்சு படைப்பாங்க. மாமியார் வீட்டில் புடவை வைக்காம, சைவ சாப்பாட்டோடு கும்பிடுவோம்.  இப்பலாம்  நகர்புறத்திற்கு குடிப்பெயர்ந்தவங்கலாம் தன்வீட்டு மாடியிலேயே காட்டேரி அம்மனை கும்பிடுறாங்க. 

சிறுதெய்வ வழிபாட்டில் இன்னொரு தெய்வத்தை அழைச்சுக்கிட்டு விரைவில் வரேன்...

நன்றியுடன்,
ராஜி

Tuesday, February 26, 2019

ஓமப்பொடி - கிச்சன் கார்னர்

நம் அம்மாக்கள்லாம் கொஞ்சம் மெனக்கெட்டு  முறுக்கு, தட்டை, ஓமப்பொடி, பொருள்விளங்கா உருண்டை, அதிரசம்ன்னு செஞ்சு டப்பாக்களில் அடுக்கி வச்சுடுவாங்க. கணக்கு வழக்கில்லாம சாப்பிட்டாலும் உடம்புக்கு ஒன்னும் ஆனதில்லை. பாதி முறுக்கு சாப்பிட்டாலும் திருப்தியா இருக்கும்.

இப்ப இதுலாம் செய்ய சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கடையில் வாங்கி சாப்புடுறதால திருப்தியும் இல்ல, உடலுக்கும் கேடு. வெளியூர் போகும்போதும், பசங்க காலேஜ் டூர் போகும்போதும், வீட்டுக்கும் அப்பப்ப எதாவது செஞ்சு வச்சிடுவேன். முறுக்கு, ஓமப்பொடி, தட்டை, ரவா லட்டுன்னு...  இப்படி நாமளே செஞ்சு கொடுக்குறதால மனசுக்கு ஒரு திருப்தி.

பசங்களுக்கு பிடிச்ச ஓமப்பொடி செய்யுறது எப்படின்னு பார்க்கலாமா?!
தேவையான பொருட்கள்...
கடலைமாவு - ஒரு கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 
உப்பு
எண்ணெய்
பெருங்காயம் - சிறிது
ஓமம்- ஒரு டேபிள் ஸ்பூன்...

ஓமத்தை சுடுதண்ணில போட்டு ஊறவச்சு, 2மணிநேரம் கழிச்சு அரைச்சு வடிகட்டி வச்சுக்கனும்... 
அரிசிமாவும், கடலைமாவையும் நல்லா கலந்துக்கிட்டு அதில் தேவையான அளவுக்கு உப்பு போட்டுக்கனும். 
தேவையான அளவுக்கு தனி மிளகாய் தூள் சேர்த்துக்கனும்.. 
பெருங்காயத்தூள் சேர்த்து நல்லா கலந்துவிட்டுக்கிட்டு, ஓமத்தை அரைச்சு வடிக்கட்டிய தண்ணியும், தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு அளவுக்கு பிசையனும்.. 
மாவு கெட்டியா இருந்தால்தான் ஓமப்பொடி நல்லா வரும். இல்லன்னா ஒருமாதிரி கடக்முடக்ன்னு இருக்கும்.
முறுக்கு குழாயில் சின்ன சின்ன துளைகள் இருக்கும் அச்சை எடுத்து உள்பக்கம் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கனும்... 
பிசைஞ்சு வச்சிருக்கும் மாவை கொஞ்சமெடுத்து முறுக்கு குழலில் போட்டுக்கனும்...

எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் இருக்கும் மாவை பிழிஞ்சு விடனும்.. எண்ணெயிலிருந்து ஆவி கிளம்பி கைகளில் படும். கவனமா இருக்கனும். 
ஒருபக்கம் வெந்ததும், இன்னொரு பக்கம் திருப்பிவிட்டு வேகவிட்டு எடுக்கனும்...

ஓமப்பொடி தயார்..
காய்ந்திருக்கும் எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரிய விட்டு எடுத்து ஓமப்பொடியில் போட்டுக்கனும்.

பிசைஞ்ச மாவு கெட்டியா இருக்குறதால மாவு லேசில் பிழிய வராது.  அதேப்போல எண்ணெயில் நேரடியா பிழியுறதால கையில் எண்ணெய் சூடு படும். இந்த ரெண்டு காரணம்தான் இதை அடிக்கடி செய்யவிடுவதில்லை..

ஒருகிலோ கடலைப்பருப்போடு 200கிராம் பச்சரிசி சேர்த்து மெஷினில் அரைச்சு வச்சுக்கலாம். பஜ்ஜி, ஓமப்பொடி, பக்கோடா செய்ய உதவும். சிலர் ஓமம்  சேர்க்க மாட்டாங்க. நிறைய பேர் மிளகாய் தூள் சேர்க்காம மஞ்சப்பொடி சேர்த்து செய்வாங்க. என் பிள்ளைகளுக்கு காரம் வேணுங்குறதால நான் மிளகாய் தூள் சேர்த்துக்குறேன். 

மாலை நேரத்துல பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்க ஓமப்பொடி தயார்.

நன்றியுடன்,
ராஜி

Monday, February 25, 2019

மரணத்துக்கு பின் உயிர் எங்கு செல்கிறது?! ஐஞ்சுவை அவியல்

உன்னோடுலாம் மல்லுக்கட்ட என்னால் ஆகாது மாமா. இருந்த சுவடே இல்லாம காத்தோடு காத்தாய் கரைஞ்சு போயிரனும்...  

கரைஞ்சு போயிட்டு... அப்புறம் என்னவாகுவியாம்!!??


சொர்க்கமோ நரகமோ அதுக்கு போயிருவேன். எப்படியும் நரகம்தான். ஆனாலும், உன் மூஞ்சியிலேயே முழிக்காம உன் சகவாசமே இருக்காம போயிடுவேனில்ல! அதுபோதுமெனக்கு..


ம்ம்ம் ஒரு உயிர் உடலைவிட்டு பிரிஞ்சதும் உடனே சொர்க்கமோ நரகமோ போறதில்லை. உயிர் உடலிலிருந்து பிரிஞ்சு மூணு  நாள்வரை நீரிலும், அடுத்த மூன்று நாட்களுக்கு நெருப்பிலும், அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் இருக்கும். இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தான் இருந்த தன் வீட்டிற்கு என்ன நடக்குது?! யார் அழறாங்க?! யார் மகிழ்ச்சியடையுறாங்கன்னும் துக்கம் கேட்கப்போவோர் வருவோரையும் அட்டெண்டஸ் எடுக்குறமாதிரி வந்து பார்த்துக்கிட்டு வாசலியே நிக்கும். 10வது நாளில் தன் வீட்டிற்குள் அந்த உயிர் வரும். அதனால்தான் பத்தாம் நாள் காரியம் செய்வது முக்கியம்ன்னு சாஸ்திரம் சொல்லுது. ஆனா, இப்பலாம் ஐந்து நாட்களிலேயே காரியம் செஞ்சுடுறாங்க. இது தப்பு.

11,12வது நாளில் நாம் கொடுக்கும் பிண்டத்தை உண்கிறது. 13வது நாளில்தான் எமதூதர்கள் கயிற்றால்  கட்டி உயிரை இழுத்துச்செல்ல,  தன் வீட்டை பார்த்தபடியே நாள் ஒன்றுக்கு 247 காததூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது. இவ்வாறு நடந்து செல்லும்போது அந்த உயிருக்கு பசி,  தாகம் அதிகம் ஏற்படும்.  பசியோடு நடந்து செல்லும் அந்த உயிர்,  மாதத்தில் ஒருநாள் அதாவது அந்த உயிர் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுக்க அனுமதி அளிக்கப்படும். அதனாலதான், ஒரு உயிர் இறந்தபின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்கும் வழக்கம் உண்டானது. இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த உயிரின் பசியை போக்கனும். இப்படியே ஒரு ஆண்டுக்காலம் நடந்து செல்லும் அந்த உயிர் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் எமலோகத்தை அடைகிறது. உடலிலிருந்து நீங்கி ஆன்மா எமலோகம் செல்ல  ஓர் ஆண்டுகாலம் பிடிப்பதால்தான் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் நடத்தக்கூடாதுன்னு சாஸ்திரம் சொல்லுது. அதுக்கப்புறம்தான் அந்த உயிர் பாவம் செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று எமலோகம் செல்லும். அந்த உயிர் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமா பிரம்மலோகம் செல்கிறதுன்னு புராணங்கள் சொல்கிறது. 


சரி சொல்லிட்டு போகட்டும். இதுலாம் மக்களை நல்வழிப்படுத்த சாமி, பூதம், சொர்க்கம், நரகம்ன்னு சொல்லி வச்சது. என்னமோ நீ பின்னாடியே போய் பார்த்தமாதிரியே பேசுறியே!இதுக்குலாம் பார்க்கனுமா?! எல்லாம் பெரியவங்க சொல்றதுதான்!!  பயத்தால் மட்டும் பணிய வைக்கமுடியாது. எதிராளியை பணிய வைக்க  சாம, தான, பேத, தண்டம்ன்னு நால்வகை தந்திரங்களை  சாணக்கியர் சொல்லிக் கொடுத்திருக்கார். 

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்... எதிராளியோடு போராடுவதற்கு முன்னமயே எதிராளியோடு பேசியோஒ, கெஞ்சியோ, மிரட்டியோ வழிக்கு கொண்டு வரனும். அடுத்ததா, தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல். அவனுக்கு பிடிச்சமாதிரி பொன்,பொருள்,பெண்...இப்படி கிஃப்டா கொடுத்து எதிராளியை மடக்கனும். பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். நிராகரிப்பு எல்லாரையுமே அசைச்சு பார்க்கும். அதனால் எதிராளியை நிராகரிச்சும், மிரட்டியும் பண்ணியும் பணியவைக்கலம். தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகளும் உதவமாட்டாங்க. அதனால வெளுத்து கட்டனும்.. 

 இப்படி சாம, பேத,தான, தண்டத்துக்குலாம் மசியாத சில ஜென்மங்க உன்னைய மாதிரி இருக்கே! அதையெல்லாம் என்ன மாமா பண்ணுறதாம்?!

தெரியலியே! அதுலாம் வித்தியாசமான வடிவமைப்புன்னு விட்டுடவேண்டியதுதான்..
முன்னலாம் திருமணம் முடிஞ்சு வீட்டுக்கு வரும் மாப்ளைகளை வரவேற்பதே ஒரு சடங்கு. மச்சினிச்சிகளாம் ஒன்று சேர்ந்து ஆரத்தி எடுப்பாங்க. அவ்வளவு எளிதாய்  மாப்பிள்ளையை வீட்டுக்குள் விடமாட்டாங்க. சினிமாக்கு கூட்டி போ, புடவை வாங்கி தான்னு எதாவது கோரிக்கை வைப்பாங்க. அதுக்கெல்லாம் மாப்ளை மல்லுக்கட்டி, போராடி மச்சினிச்சி காசு கொடுத்தபின்தான் வீட்டுக்குள்ளயே விடுவாங்க. வீட்டுக்குள் வந்தபின்னும் ராக்கிங்க் தொடரும்.. காப்பில உப்பு கலக்குறது, தேள்,பாம்பு பொம்மையை வீசுறதுன்னு கலாட்டா செய்வாங்க. மாப்ளை எந்த நேரத்தில் என்ன நடக்குமோன்னு எச்சரிக்கையா இருக்கனும். நான் சின்ன வயசா இருக்கும்போது ஒருவீட்டில் இப்படிதான்  ஒரு மாப்ளை வீட்டுக்குள் வரும்போது வாசல்படியில் கோணிப்பையை விரிச்சு அதன்கீழ கேழ்வரகை கொட்டி அதில் கால்வச்சு வழுக்கி மாப்ளை விழுந்து அன்னிக்கு கோவிச்சுக்கிட்டு போனவர்தான் அப்புறம் மாமியார் வீட்டுக்கு வந்தாலும் வாசப்படியிலேயே உக்காந்துட்டு அப்படியே திரும்ப போய்டுவார். இந்த வீடியோவை பார்த்தபின் அந்த நினைவுதான் வந்திட்டுது..

ம்ம் இதுக்குலாம்தான் எனக்கு கொடுப்பினை இல்லியே! 
ம்ம் இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடல. மச்சினிச்சி இருக்க வீடா பார்த்து கட்டிக்க...
கூல்.. சும்மா தமாசுக்கு சொன்னேன் புள்ள!

எங்க கூலாய் இருக்கிறது?! 
வெயில்காலம் வந்திட்டுது.. இனிதான் மரங்களோட அருமை எல்லாருக்கும் தெரியவரும்.  அதை சொல்லுறமாதிரி இந்த படம் ட்விட்டர்ல வந்துச்சு மாமா. அதான் சுட்டுக்கிட்டேன்.
இப்பவாவது சுதாகரிக்கலைன்னா இந்த நிலை வருவது உறுதி. 

இன்றைய விடுகதை..
 3 கால் இருக்கும் - நடக்காது..

ரெண்டு தலை இருக்கும் - பேசாது பார்க்காது
அது என்ன மாமா?!

நன்றியுடன்,
ராஜி

Sunday, February 24, 2019

YEs i Love This Idiot.. Loveable Idiot - பாட்டு புத்தகம்

Image result for கோபுர வாசலிலே
எல்லோருக்குள் ஈகோ இருக்கும்.. அது ஆண்களுக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கும். ஈகோவை காப்பாத்திக்க ஆண்கள் ரொம்ப போராடுவாங்க. அதிலும் காதலில்?! சொல்லவே வேணாம். வேணும்ன்னா எந்த லெவலுக்கும் இறங்குவாங்க. வேணாம்ன்னாலும் எத்தனை உதாசீனப்படுத்தவும் தயங்கமாட்டாங்க. தனக்கு பிடிச்சது நடக்க சாம, தான, பேத, தண்டம் என அத்தனை அஸ்திரத்தையும் பயன்படுத்துவாங்க. அப்படிதான் இங்க ஒரு பையன் தனக்கு பிடிச்ச பொண்ணோட மனசில் இருக்கும் காதலை வெளிக்கொணர பிடிவாதம் பிடிக்கிறார். அந்த பொண்ணும் லேசுப்பட்டதில்லை. மனசில் ஆசை இருந்தாலும் வெளிய சொல்லாம இருக்கு. அறையின் மூலையில் அகப்பட்ட பூனையாய் வேற வழியாய் காதலை சொல்லுது. அதும் பொதுவெளியில், அந்த பொண்ணோட காதலை சொல்ல வச்சுட்ட மகிழ்ச்சியில் பையன் சிரிப்பான் பாருங்க ஒரு சிரிப்பு. அதில் எள்ளலும் துள்ளலும் இருக்கும். இப்படி ஒரு காட்சி படத்துல.வருது. 
Image result for கோபுர வாசலிலே

இந்த காட்சில நடிக்கவும், இசைக்கவும், பாடவும் யார் பொருத்தமா இருப்பாங்க?! வேற யாரு நடிக்க கார்த்திக், இசைக்கு ராஜா, பாட எஸ்.பி.பி, சித்ராதான் பொருந்தினாங்க. இளையராஜாவின் டாப் டென் பாடல்களில் எப்படியும் இந்த பாட்டு வந்திரும் இதுக்கு ராஜா சார் எத்தனை மெனக்கெட்டிருப்பார்.   இசை முடிந்ததும் படத்தில் கூடி இருக்கவுங்க உற்சாகத்தில் தண்ணியில் குதிப்பதும், புறாக்கள் பறப்பதும்ன்னு நம்மை பறக்க வைக்கும். இசை ஒரு போதை, காதல் ஒரு ராஜ போதை. அந்த போதையோடு படத்துல வரும் லவ் சீன்லாம் மனசை  சாராயம் குடிச்ச குரங்கை தேள் கடிச்ச கதையா அங்குமிங்கும் ஓட வைக்கும். 
Related image

அத்தனை பேர் கூடியிருக்க எஸ் ஐ லவ் திஸ் இடியட் லவ் திஸ் லவபில் இடியஅஅஅ அட்..ன்னு கத்தலா காதலை சொல்லிட்டதும் வரும் வயலின் இசையை கேட்டாலே மனசுல பட்டாம்பூச்சிலாம் பறக்காது. நாமே பட்டாம்பூச்சியாய் பறப்போம். அத்தனை உற்சாகம் தரும் இசை.. வயலினுக்கு அடுத்ததா புல்லாங்குழல் இசை. ஒன்றில்லை. இரண்டு புல்லாங்குழல் சத்தம் வித்தியாசமாய். ஹெட்போனில் மட்டுமே கேட்கும் மெலிதான சில் சில் சத்தம்.. 
Related image

ஒரு பாட்டின் ஆரம்ப இசைக்கே எத்தனை இசைக்கருவிகள்?! இந்த மெனக்கெடலுக்குதான் இந்த பாட்டு இப்பயும் எல்லாராலும் ரசிக்கப்படுது. இந்தபாட்டோட இடையில் ஒருமாதிரியான் உடுக்கை சத்தம் வரும். பெரும்பாலும் உடுக்கை சத்தம் பயத்தை கொடுக்கும். இந்த பாடலில் மட்டும் உடுக்கை சத்தம் வித்தியாசமாய் உற்சாகத்தை கொடுக்கும். உடுக்கைக்கு அடுத்து வயலின், அடுத்து புல்லாங்குழல், அதுக்கடுத்து பியானோன்னு இப்ப நினைச்சாலும் எந்த மியூசிக் பிளேயரை ஆன் பண்ணாமலே பாட்டும் காட்சியும் மனசில் விரியும். அந்தளவுக்கு இந்த பாட்டு மனசுல நின்னுட்டுது.
Related image
இந்த பாட்டில் எஸ்.பி.பியும், சித்ராவும் அதகளம் பண்ணியிருப்பாங்க. கார்த்திக் பாடிக்கொண்டிருக்கும்போதே மைக்கை நாயகி(சுசித்ரான்னு நினைக்குறேன்)யிடம் நீட்ட  அவர் வெட்கத்தோடு பாட ஆரம்பிப்பார்..கார்த்திக் உற்சாகத்தோடு இன்னும் ஆவலாய் மைக்கை நீட்டுவார்..இதைக் கற்பனை செய்து பாட வைச்சாங்களா இல்ல இப்படித்தான் எடுப்போம்ன்னு கேட்டே இப்படி பாட வைச்சாங்களான்னு  தெரியலை.   பாட்டு முடியும்போது, 
இதயம்ம்ம் இடம் மாறும்....ம் 

இளமை பரி...மாறும். ம்

அமுதும்ம்ம் வழிந்தோடும்.....ம் 

அழகில் கலந்தாட


பாடல் முடியும் கடைசியில் ஒவ்வொரு வரிக்கும்  எஸ்.பி.பியும், சித்ராவும் மாற்றிமாற்றி ’ம்’ சொல்வாங்க. இது ஆடியோவில் மட்டுமே வரும். வீடியோவில் வராது. இந்த பாட்டை ஆடியோவில் டவுன்லோட் பண்ணி, ஹெட்போன்ல கேட்டுட்டு இந்த பதிவை படிச்சுட்டு விடியோவை பார்த்தா எத்தனை அழகான பாட்டுன்னு புரியும்.
Image result for கோபுர வாசலிலே
பாட்டோட பாடலின் பாதில காத்துலகுடை பறக்கும்!!. ஒருநாள் என் சின்ன பொண்ணு இதை பார்த்துட்டு அம்மா குடையை யாரோ பிடிச்சு இழுத்துட்டு போறாங்க, நல்லா பாருன்னு சொல்லுச்சு. அப்புறம் வீடியோவை பார்த்தபின் அது தெரிஞ்சுது. நமக்கு ஏது இதுக்கெல்லாம் நேரம்?! கார்த்திக்கை ரசிக்கவே நேரம் போதலியே!! ஒரு படத்துல பார்த்தீபன் ரம்பாவை பார்த்துட்டு விவேக்கிட்ட சொல்வார். சார் ரம்பா சார்ன்னு.. அதுப்போல.... சார் கார்த்திக் சார்!! அழகு சார் .... குறும்பு சார் ..   இனிமையான காதலன் சார் .. சிரிப்பே கிக்கா இருக்கும் சார்..  சிரிக்கறப்ப கண் சின்னதாகிடும் சார்..ன்னு புலம்ப வச்சிடும் இந்த பாட்டு.  எத்தனை ஹீரோக்கள் கார்த்திக்கு முன்னும் பின்னும் வந்தாலும் கார்த்திக்க்கு ஈடாகாது. நியாயமா காதல் மன்னன்னு கார்த்திக்குதான் பட்டம் கொடுத்திருக்கனும். ஏன்னா அத்தனை ரொமாண்டிக்கான ஹீரோ.  காதல் காட்சிகளை , கார்த்திக்கின் சாயல் இல்லாமல், இனி வரும் ஹீரோக்கள் செய்துவிட முடியாது.

அதனால்தான்........

எஸ் ஐ லவ் திஸ் இடியட் லவ் திஸ் லவபில் இடியஅஅ அட் :))


காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி
இது தொடரும் வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே

தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் ...

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்

தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்... 

படம்: கோபுர வாசலிலே...
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி
நடிகர்கள்: கார்த்திக், சுசித்ரான்னு நினைக்குறேன்...

போதையுடன்,
ராஜி


Saturday, February 23, 2019

சன்னியாசியா போறதுலாம் பெருமையில் சேர்த்தியா எரும?! - சுட்ட படம்

திருமணசடங்கு பார்த்து இருப்பீங்க, மரண சடங்கில் கூட கலந்து இருப்பீங்க , துறவரம் கொள்ளும் சடங்கை பார்த்திருக்கீங்களா?! பெற்றவர்களுக்கே ஆசி வழங்கும் அற்புத திருவிழான்னு ட்விட்டர்ல இந்த போட்டோ சுத்திக்கிட்டு இருந்துச்சு. இதுலாம் ஒரு பெருமையான்னுதான் விளங்கல!! குடும்பத்தை உதறித்தள்ளுவது ரொம்ப சுலபம். ஆனா, அந்த குடும்பம் படும்பாடு.. அவனோ/ளோட கடமைகள், ஆசைகள், வார்த்தைகள், வாக்குகள்ன்னு அத்தனையும் சுமந்தலையும். இந்த படத்துலயே பாருங்க. தன் பையன் சாமியாரா போய்ட்டா, உலகை காப்பான், பெரிய மகான் ஆவான், வரலாறு பேசும், நாமளும் அதுல இடம்பெறுவோம், நமக்கும் முக்தி கிடைக்கும்ன்னு ரொம்ப பெருமையா உக்காரலை. பிரிவின் துக்கம் தாளாது அழும் தந்தையும், என்ன நடக்குதுன்னு புரியாம இருக்கும் தாயின் கலக்கமும் தெரியும் :-( இப்படிதான் எல்லா சன்னியாசத்தின்பின்னும் ஒரு கதையும், கதறலும் இருக்கும்.

அவள் ஒரு தொடர்கதை படத்துல இதுமாதிரியான ஒரு சீன் வரும். சின்ன வயசில வீட்டைவிட்டு போன தந்தை சாமியாரா வருவார். நீங்க ஈசியா குடும்பத்தை உதறித்தள்ளிட்டு போயிட்டீங்க. அதை காப்பாத்த நான் பட்டப்பாடு...ன்னு சொல்லும். கிட்டத்தட்ட அந்த மாதிரி ஒரு போராட்டத்தை திபெத்திய படம் ஒண்ணு அழகா சொல்லும். சாமியாரா போறேன்னு சொல்றவனை தக்கவச்சுக்க ஒரு பொண்ணு போராடும் படம்.. கிட்டத்தட்ட 2 மணிநேரம் இந்த படம் போகும். அந்தளவுக்கு பொறுமையும் மொழியும் புரியாதவங்க இந்த பட இங்க விமர்சனத்தை படிங்க...

படத்தோட யூட்யூப் லிங்க்.. . இதோ
சரணடைஞ்சபின் எதிரிகூட இறங்குவான்.  ஆனா உறவுகள் இருக்கே!. அதுக்கப்புறம்தான் வச்சு செய்யும் :-(
இவனுக்குலாம் கல்யாணம் ஒரு கேடு?!
உடல் கொஞ்சம்?! பூசினாப்ல இருக்குதுதான். அதுக்காக இப்படியா சொல்றது!!?!
இதுக்கு காய பறிச்சு ஒரு பையில் வச்சிட்டா மரமாவது தப்பிக்கும்... 
திருமணத்தால் ரொம்ப பாதிச்சிருப்பார்போல!! பொண்ணை பத்தி ஆராய்ச்சியே பண்ணி இருக்கார். 
Image may contain: one or more people
பொண்ணு ரொம்ப விவரம்தான் :-)

எனக்கு கோவம் வந்திச்சு... அப்புறம் அழுதுபுடுவேன்.. அழுது.. மொமண்ட்... 
சீரியலால் ரொம்ப பாதிச்சுட்டாரு...

பக்கம் பக்கமாய் படிக்கும் இம்சையிலிருந்து இன்னிக்கு ஃப்ரீ.. எஞ்சாய் சகோஸ்
நன்றியுடன்,
ராஜிFriday, February 22, 2019

சோட்டாணிக்கரை பகவதி அம்மன்-புண்ணியம் தேடி

புதன்கிழமை அன்னிக்கு ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கல் வச்சத டிவில பார்த்தேன். அடடா! முன்னமயே தெரிஞ்சிருந்தா ஒரு பதிவை தேத்தி இருக்கலாமே! இப்ப ஒரு பதிவு போச்சுதேன்னு வெசனப்பட்டு கெடக்கும்போதுதான் பண்(பைம்)பொழியில் இருக்கும் திருமலை முத்துக்குமாரசுவாமி கோயிலை பார்க்கப்போகும்போது,  அப்படியே செங்கோட்டை வழியாக கேரளாவுக்குள் தென்மலை, புனலூர் பாதையில் சோட்டாணிக்கரை பகவதி அம்மனை தரிசிக்க போனது நினைவுக்கு வந்துச்சு. சரி, அதை வச்சு ஒரு பதிவு தேத்தலாமேன்னு வெசனப்பட்டுக்கிடந்த மனசை பதிவையும் தேத்தியாச்சு.  இன்னிக்கு நாம பார்க்கபோற கோவில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில். 
பொதுவா கேரளாவில் பகவதி அம்மன் வழிபாடு மிகவும் பிரபலமானது. ஏன்னா திருவிதாங்கூர் சமஸ்தானங்களில் பகவதி அம்மனுக்கென்று பல விஷேச ஸ்தலங்கள் இருக்கு. பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானங்களும் அதன் கூட்டு ராஜ்யங்களும் இருந்த மங்களூர் முதல் கன்னியாகுமரிவரை பகவதி வழிபாடு கொல்லூர் மூகாம்பிகை முதல் கன்னியாகுமரி கன்னிகா பரமேஸ்வரியான பகவதி அம்மன் கோவில்வரை பிரசிஸ்த்தி பெற்ற பல கோவில்கள் இருக்கின்றன. தெய்வத்தின் சொந்த நாடு என்று சொல்லப்படுகிற கேரளத்தின் கலாச்சாரம், வாழ்க்கை முறைக்கேற்றவாறு இந்த கோவிலின் பூஜைகள் மற்றும் சடங்குகள் பின்பற்றப்பட்டு, பில்லி, சூனியம், வசியம் மாதிரியான தீய சக்திகளால் பாதிப்படைந்தவர்கள் அதிலிருந்து மீள வழிபடுவதற்கென்றே  கேரளாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற கோவில்தான்  நாம இப்ப பார்க்கப்போற “சோட்டாணிக்கரை பகவதி அம்மன்” கோவில்.
இதுதான் கோவிலுக்கு செல்லும் வழி,இந்த கோவில் எப்ப உருவாக்கப்பட்டதுன்னு  சரியான தகவல் இல்லன்னாலும் பல்வேறு கதைகள் இக்கோவில் பத்தி சொல்லப்படுது. புராணங்களின்படி  கேரளாவிலுள்ள  காலடியில் பிறந்து சுமார் 2500 ஆண்டுகளுக்குமுன் கேரளபூமியில் தோன்றி ஆதிபாரத கண்டம் முழுவதும் “அத்வைத” தத்துவத்தை பரப்பிய “ஸ்ரீஆதி சங்கரர்” தன் சொந்த நாடான கேரளத்தில் சரஸ்வதிதேவிக்கு ஒரு கோவில் இல்லையே என்று எண்ணி அந்த சரஸ்வதிதேவியை இங்கு கோவில் கொள்ள செய்வதற்கு கடும் தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இணங்கிய சரஸ்வதிதேவி இங்குவந்து கோவில் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கிழக்கு மண்டபமே கோயிலின் முக்கிய நுழைவு மண்டபமாகும். மண்டபத்தின் நடுவில் மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ளது.
நாம் சென்றதும் நேரே கொடிமரம் காட்சியளிக்கிறது. அதிகாலை 4  மணிக்கே நடைதிறந்து விடுகிறார்கள். அப்பொழுது தரிசனம் செய்தால் கூட்டமில்லாமல் தரிசனம் செய்யலாம். இந்த இடத்தின் ஓரத்தில் பிரசாத கவுண்டர் இருக்கிறது. கோவிலின் வெளிப்பிரகார சுவர்களில் கம்பிகளில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  திருவிழா மற்றும் விசேச காலங்களில் இந்த விளக்கை ஏறுவார்களாம். அதுபோல விளக்கு நேர்ச்சை என்றொரு வழிபாடு உண்டாம். அதற்கும் கட்டணம் செலுத்தி விளக்கு ஏற்றுவார்களாம். கொடிமரத்தின் வழியே நேராக சென்றால் பகவாதியம்மனை தரிசனம் செய்யலாம். அங்கே ஒரு மேடையின்மேலே பகவதி அம்மன் கம்பீரமாக வீற்றிருக்கிறாள். எல்லா கோவில்களையும் போல கருவறைக்குள் பிரசாதம் கொடுப்பதில்லை.  தீபாராதனை தட்டுகள்கூட வெளிப்பிரகாரத்தில் கும்பிடுவதற்காக கொண்டுவருகிறார்கள். அதேபோல் பிரசாதமும், தீர்த்தமும் அம்மனை தரிசித்து வெளியே வரும்போது பக்கத்திலிருக்கும் மண்டபத்தில் கொடுக்கிறார்கள் .
அம்மனை தரிசனம் செய்து வெளியேவரும்போது எதிரில் ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. இதை நவராத்திரி மண்டபம்ன்னு சொல்றாங்க. வலதுபக்கம் ஒரு பெரிய பிரகாரம் இருக்கு. அந்த இடத்தில இருக்குற கொடிமரத்து பக்கத்திலயே நின்று கூட்டம் இல்லாதபோது தேவியை அழகாக தரிசனம் செய்யலாம் .அதுப்போல அடுத்திருக்கிற சரஸ்வதி மண்டபத்தில்  முதன்முதலில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் பூஜைகளை செய்கின்றனர்.  அந்த பிரகாரத்துலயே தென்மேற்கு மூலையில் கிழக்குநோக்கி அருள்பாலிப்பவர்.   சிவபரம்பொருள் அருகிலேயே கணபதி சந்நிதி. அங்கிருந்து தெற்குதிசையில்  இருப்பது நாகராஜா சந்நிதி இருக்கிறது. பிரகாரத்தின் நடுவில் யக்ஷி, ஜேஷ்டா பகவதி சந்நிதிகள் இருக்கு. தெப்பக்குளத்தின் கிழக்குக்கரையில் உக்ரகாளியான கீழ்க்காவு பகவதி சந்நிதி இருக்கு.  கீழ்காவு பகவதி அம்மனை சோட்டானிக்கரை பகவதியின் சகோதரி ன்னு சொல்வாங்க. சோட்டானிக்கரை பகவதியை தரிசிப்பவர்கள் இந்த அம்மனையும் கட்டாயம் தரிசக்க வேண்டும் என்பது ஐதீகம். பிரகார மண்டபத்தின் இடதுபக்கம் வெடிவழிபாடு கூடமும், மண்டபத்தின் வலதுபக்கம் தர்மசாஸ்தா சன்னிதியும், ஆஞ்சநேயர் சன்னதிகளும் இருக்கு. அதனையடுத்து  யானைகளை கட்டிப்போடும் யானைக் கொட்டிலும் இருக்கு. தினமும் காலை பூஜைக்கு இங்கிருந்துதான் யானைகளை அழைத்து கூட்டி வருவாங்க.
கீழ்க்காவு அம்மையை பிரதிஷ்டை செய்தவர் வில்வமங்கலம் சுவாமிகள் என சொல்லப்படுது. இந்த சன்னிதியின் இடதுபக்கம் பழமையான பலாமரம் இருக்கு. இந்த மரத்தின்மேல் நிறைய ஆணிகள் அடிச்சு வச்சிருக்காங்க. ஏன்னா இது இங்கே செய்யப்படும் ஒருவழிபாடாம். துர்தேவதைகளாலும், மன அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்களின் நோய் குணமடைய இந்த மரத்தில் ஆணி அடிக்கின்றனர். தினமும் இரவு 8 .45 மணிக்கு  ‘குருதி பூஜை’ செண்டை ஒலி முழங்க ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் நடக்குமாம். நாங்கள் சென்ற நேரம் அதிகாலை என்பதால் எங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை.இந்த பூஜையானது ஒரு காலத்தில் இங்கு உயிர்ப்பலியும் ரத்த பூஜையும் நடந்திருக்காம். இப்ப அப்படி செய்யமுடியாது என்பதால் ,அந்த வழக்கத்தை மட்டும் நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கரைத்து  இரத்தம் போல் ஆக்கி பூஜைகள் செய்து, அந்த இரத்த தீர்த்தத்தை துர்தேவதைகள் பீடித்திருக்கவுங்கமேல் தெளித்தால் அவைகள் அந்தக்கணமே விலகி ஓடிவிடுமாம். அந்த சமயத்தில் கோவிலில் துர் ஆத்மாக்கள் பிடித்தவர்கள் இடும் கூச்சல்கள் கேட்பவருக்கே கிலியா ஏற்படுத்துமாம். குருதி பூஜை முடிந்ததும் இந்தச் சிவப்பு நிற தீர்த்தத்தையே பிரசாதமாகத் கொடுக்கிறார்கள்.
கீழ்க்காவு அம்மையை தரிசனம் செய்யும்  வழியில் தெப்ப குளத்தின் வடக்குக்கரையில் பிரம்மராட்சசன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியில், சுற்றுச்சுவர், கூரை எதுவும் கிடையாது. திறந்தவெளியில் நான்கு கற்களைப் (வனதுர்க்கை, சாஸ்தா, பத்ரகாளி, ராட்சசன்) என பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அந்தக் கற்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரமும் ஏற்றுவார்கள். சோட்டாணிக்கரை கோயிலில் உபதேவதைகளுக்குப் பூஜை கிடையாது. நைவேத்தியம் மட்டுமே. மூலஸ்தானத்தில் நைவேத்தியம் முடிந்ததும் இந்த சன்னிதிகளிலும் நைவேத்யம் கொடுப்பாங்க. 12ஆயிரம் புஷ்பாஞ்சலி நடத்துவதும், சிவந்தபட்டு கொடுப்பதும் இங்கு முக்கிய வழிபாடாகும்.
இந்த கோவிலின் ஸ்தல வரலாற்றில் இந்த கோவிலின் பழையபெயர் யோதின்னக்கரை என இருந்ததாகவும், அது மருவி சோட்டாணிக்கரை என்று வழங்கப்படுவதாக சொல்லப்படுது. ஆனா, செவிவழி செய்தியாக வேறு ஒருகதை சொல்லப்படுது. ஒருகாலத்தில் இந்தப்பகுதி அடர்ந்த காடாக இருந்திருக்கிறது. அப்பொழுது இந்த காட்டில் வசித்துவந்த ஒரு வேடுவ பெண் தேவியை அரூபமாக வழிபட்டு வந்துள்ளாள். அவளின் பக்தியை மெச்சி பகவதிதேவி ஜோதிவடிவத்தில் அந்த வேடுவப்பெண்ணுக்கு காட்சி கொடுத்தாராம். அன்றுமுதல் தேவிக்காட்சி கொடுத்த அந்த இடத்தை "ஜோதியான கரை"என்று மக்கள் அழைத்து, அதுவே பின்னாளில் யோதின்னக்கரை  என்றாகி   ‘சோட்டாணிக்கரை’ யாகிட்டதாம்.. 
சோட்டாணிக்கரை அந்தகாலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாம்.  இந்தக்காட்டில் வேடர் இன மக்கள் குடும்பம் குடும்பமாக வசித்துவந்தனர். காட்டில் கிடைக்கும் தேன், காய் கனிகள், விறகு போன்ற பொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு எடுத்துச் சென்று பண்டமாற்று வியாபாரம் செய்துவந்தனர். அவர்களில் கண்ணப்பன்ன்ற வேடன் ஒருவனும்  இருந்தான். அவன் மனைவியை இழந்தவன். அவனுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள ஒரு மகள் மட்டும் இருந்தாள். அந்தச் சிறுமியின் பெயர் பவளம். தாயில்லாத அந்தக் குழந்தையை அவன் மிகுந்த அன்புடன் வளர்த்துவந்தான். கண்ணப்பன் தெய்வபக்தி மிக்கவன். அவனது குலதெய்வம், வனதேவதைன்ற பகவதியே. அனுதினமும் தனது குலதெய்வத்தை வணங்காமல் எங்கும் செல்லமாட்டான். வாரத்தில் ஒருநாள் ஒரு மாட்டை பகவதிக்குப் பலி கொடுப்பது அவன் வழக்கம். மாட்டை உயிர்ப்பலி கொடுக்கும்போது மகள் பவளம், “அச்சா மாட்டைக் கொல்ல வேண்டாம். என மன்றாடுவாள். ஆனால் அவன் அதை கேட்பதில்லை.
அப்படியிருக்கும் சமயத்தில் கண்ணப்பனின் வீட்டிலுள்ள மாடு ஒன்று, கன்றை ஈன்று பால்கொடுத்துவந்தது. அந்த கன்றுகுட்டியின்மீது மகள் பவளத்துக்கு அலாதிப்பிரியம் எப்போதும் அதை பிடித்துக்கொண்டுதான் விளையாடுவாள். ஒருநாள்  வனதேவதைக்குப் பலியிட எந்த மாடும் கிடைக்கவில்லை. அதனால், தன் வீட்டிலிருந்த மாட்டையே பலிகொடுப்பது என முடிவு செய்து அதை அவிழ்க்கச்சென்றான். அப்போது, கன்று, தாயின் பிரிவு தாளாமல் 'அம்மே' என அலறியது. இதைப் பார்த்ததும் மகள் பவளம் ஓடோடி வந்து கன்றுக்குட்டியைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். `அப்பா! என்னைப்போலவே இந்தக் கன்றும் தாயற்ற பசுவாக வேண்டுமா?' எனக் கேவிக்கேவி அழுதாள்.மகளின் அழுகை, கண்ணப்பனின் மனதை என்னவோ செய்தது. 'இனி ஒரு நாளும் உயிர்களைப் பலி கொடுக்க மாட்டேன்' என அழுது புலம்பி அரற்றினான். அதன்பிறகு அவன் உயிர்ப்பலியை நிறுத்திவிட்டான்.  அன்றிலிருந்து புலால் உணவை உண்ணாமல் வாழத் தொடங்கினான். ஆனாலும் கண்ணப்பன் முன்பு செய்த பாவம் காரணமாக அவரது அன்பு மகள் பவளம் ஒருநாள் திடீரென இறந்துவிட்டாள். புத்திர சோகத்தால் கண்ணப்பன் துடித்துப் போனான். தன்னிடம் இருந்த மாட்டையே தன் மகளாக எண்ணி வளர்த்தான்.
நாட்கள் செல்லசெல்ல மகள் இல்லாத வழக்கை கண்ணப்பனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒருநாள் கண்ணப்பனின் கனவில் ஒருகாட்சி தோன்றியது. லோக மாதா ஜகதாம்பாள் கோடி சூரிய பிரகாசத்துடன், 'கண்ணப்பா, உன் மகளின் நேசத்துக்குரிய பசு சாட்சாத் மகாலட்சுமியின் அம்சம் என்பதை அறிந்துகொள்' அதன் பக்கத்தில் மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கும் என்றுக்கூறி மறைந்தாள். படுக்கையிலிருந்து எழுந்த கண்ணப்பன் தொழுவத்தைப் பார்த்தான். அங்கே பசுவும் கன்றும் சிலைகளாக மாறியிருந்தன. தன் கூட்டத்தாரிடம் விஷயத்தைச் சொன்னான். அவர்களும் அந்த இடத்தில் 'காவு' அமைத்து மரங்களாலான கோயிலை உருவாக்கி வழிபடத்தொடங்கினர்.  கண்ணப்பன் இறந்தபின் ஆதிவாசி மக்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர். அப்பகுதியில் உள்ளவர்களும் குடிமாறிப் போய்விட்டனர். கால ஓட்டத்தில் அந்தப்பகுதி முழுவதுமே இயற்கையின் ஆளுமைக்குச் சென்று மரங்களடர்ந்த பகுதியானது. அந்த இடமும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளும் மீண்டும் புதர் நிறைந்த காடாக மாறியது.

பல நூற்றாண்டுகள் கழிந்தன. அந்தப்பகுதியை சுற்றிலும் கிராமங்கள் வந்தன. அந்த சமயத்தில் கிராமத்துப் பெண்னொருத்தி அந்த இடத்திற்கு வழக்கம்போல் புல் அறுக்க வந்தவள் அங்கிருந்த பாறையில் கத்தியைக் கூர் தீட்டினாள். அந்தக் கல்லில் இருந்து நெருப்புப் பொறியுடன் ரத்தமும் வந்தது. இந்தத் தகவலை ஊர்த்தலைவரிடமும் அந்தக்காலத்தில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற எடாட்டு பெரிய நம்பூதிரியிடம் விஷயத்தை கூறினார். அவர் வந்து பார்த்து விசயத்தை கூற . அப்போதே அந்தப்பகுதி சுத்தம் செய்து பழங்களும் பூக்களும் கொண்டுவந்து விளக்கேற்றி பூஜை நடத்தினார்பூஜை செய்தார். அந்த சிலையில் தேவியின் சக்தி இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் வந்து தினமும் வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறாள். இந்த தகவல்கள் செவிவழி கதையாக சொல்லப்பட்டுவருவது . 
குழந்தை இல்லாதவர்கள் இந்த மரத்தில் தொட்டில்கட்டி நேர்ச்சை வழிபாடு செய்வது வழக்கம் . இதுப்போல இன்னொரு கதையும் சொல்லப்படுது. .கேரளாவில் உள்ள காலடியில்  பிறந்த ஆதிசங்கரர், மைசூரிலிலுள்ள சாமுண்டீஸ்வரியை கேரளத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்கான தவமும் இருந்தார். அவரின் தவத்திற்காக சரஸ்வதி அவர் முன் தோன்றினார். உடனே சங்கரர் தாயே! என்னுடன் நீங்கள் கேரள நாட்டிற்கு வந்து அருள்பலிக்க வேண்டும் என வேண்டினார். உடனே வாணியும் சரிமகனே! நீ முன்னே நடந்து செல். நான் உனது பின்னே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் திரும்பி பார்த்து விடாதே! - எனது சொல்லைமீறி நீ பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன் என தனது நிபந்தனையை கூறினாள். அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு ஆதிசங்கரர் நடக்க துவங்கினார். தேவியும் தமது அணிகலன்களும் சிலம்புகளும் கணீர் என்று ஒலிக்க சங்கரரின் பின்னாலே நடந்து சென்றாள். ஆதிசங்கரரும் பல நாட்கள் பகல் இரவு பாராமல் நடக்கலாயினார். ஒருநாள் காலையில், தான் கோவில் கொள்ளவேண்டிய இடம் வந்தது, கொலுசொலி எழாதவாறு வாணி நடந்துவர, பின்னால் வந்த தேவியின் சிலம்பொலி கேட்கவில்லயென சங்கரர் ஐயப்பாட்டுடன் திரும்பி பார்த்தார். பலப்பல படைகலன்களோடு அழகு திருவுருவத்தோடு தேவி அங்கேயே நின்று விட்டாள். அவள் நின்ற இடம்தான் தற்போது கொல்லூர் மூகாம்பிகை - ஆதிசங்கரர் திடுக்கிட்டார். உடனே அம்மையே!  என்ன இதுவென கேட்க, சங்கரா நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரரோ, அம்மையே! தங்களின் கொலுசு ஒலி கேட்டபடியேதான் முன்னே நடந்து சென்றேன். ஒலி கேட்காததால் ஒருவேளை தாங்கள் பிந்திவிட்டீர்களோ என்றறிவதற்காக சற்று பின்புறமாக திரும்பி விட்டேன், மன்னிக்க வேண்டும் என வேண்டி தன்னோடு மீண்டும் புறப்படுமாறு வேண்டினார்
உடனே தேவி சங்கரரிடம் மகனே! நான் கொடுத்தவாக்கை நீ மீறிவிட்டாய். பரவாயில்லை. கன்னியாகுமரி முதல் கோகர்ணம் வரையிலும் கேரளமே. (இன்று அம்மை இருக்குமிடம் முன்பு கேரளத்தை சார்ந்ததேயாகும்.) இதுவும் கேரள பூமி தான். நான் இங்குதான் இருப்பேன். நீ வேண்டியபடி உன் நாட்டிற்குதான் வந்திருக்கிறேன். தேவியின் திருமொழி சங்கரருக்கு திருப்தியளிக்கவில்லை. அம்மையே ஆலப்புழைக்கு அருகிலுள்ள வேந்தனாட்டிற்கு தாங்கள் எழுந்தருள வேண்டுமெனவும்,   தாயே, அம்மை அங்கு கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று சங்கரர் மீண்டும் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சங்கரா உன்னுடைய கட்டாய வேண்டுதலினால் தினமும் காலை மூன்று மணிமுதல் ஏழரை மணிவரை சோட்டாணிக்கரையில் தரிசனம் தருகிறேன். எல்லா நாட்களும் பிரம்ம முகூர்த்ததில் நான் சோட்டாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன். என்று வாக்குறுதி தந்து சங்கரரை அனுப்பி வைத்தாள். சங்கரர் நாட்டிற்கு விரைந்து வந்தார். அம்மையின் திருவாய்மொழியின்படி சோட்டாணிக்கரை ஆலயத்திற்கு சென்றார். அம்மையின் திருக்காட்சி கண்டு ஆனந்தமடைந்தார். சங்கரரோடு ஜோதிரூபத்தில் வந்த தேவி, ஆலயத்தினுள்  கலந்து விட்டாள். அவ்வாறு ஜோதியானக்கரையான இன்று சோட்டாணிக்கரைன்ற பெயரில் விளங்குகிறது. எனவும் ஒரு கதை சொல்லப்படுது .இவ்வாறு காலை 7.00 மணிவரை அம்மை சோட்டாணிக்கரை ஆலயத்தில் சரஸ்வதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
தேவியின் வலது பக்கத்தில் இரண்டு அடி உயரமுள்ள கிருஷ்ணன் சிலை உள்ளது. சோட்டாணிக்கரையில் அதிகாலை நான்கு மணிக்கு நிர்மால்ய தரிசனம். மூலஸ்தானத்தின் கதவு திறந்தவுடன் தீபாராதனையுடன், ‘அம்மே நாராயணா! லக்ஷ்மி நாராயணா! பத்ரே நாராயணா!’ என்று  மனமுருகி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தினமும் அன்னை பகவதி மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள்: ‎காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ‎ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; நண்பகலில் சௌபாக்கியம் ‎தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; ‎மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, காளியாக,  ராஜராஜேஸ்வரியாகவும் கருநீல‎வண்ண உடையிலும், அருள்பாலிப்பது சிறப்பு. பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி, வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி  எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால்  வலதுகையை பாதத்தில் காட்டி, இடதுகையில் அருள்பாலிப்பது சிறப்பு. மாசி மாதத்தில் நடைபெறும் ஆராட்டுவிழாவும், நவராத்திரி விழாவும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்துவந்து வழிபட்டால், அவர் நல்ல மனநிலையை அடைந்து நோய்குணமாகி செல்கின்றனர். சிலர் நோயின் தன்மையைப் பொறுத்து இங்கு சில நாள்கள் தங்கி வழிபட்டுச் செல்கிறார்கள். இக்கோவிலின் விசேஷமே “தீய ஆவிகள், ஏவல், செய்வினை” போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலின் பகவதி அம்மன் துர்கையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்போது தரிசித்து பின்பு இக்கோவிலின் வளாகத்திலுள்ள ஒரு மிகப்பெரிய அரசமரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முன்தலையில் இருக்கும் முடியை பிடுங்கி, ஒரு இரும்பு ஆணியில் சுற்றி அந்த மரத்தில் அடித்து விடுவதால், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவதாக இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆலயத்திற்கு கேரளத்திலிருந்து மட்டுமல்லாம தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலிருந்துகூட நிறைய பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.
தினமும் காலை 4 மணிமுதல் 12 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3.30 மணிமுதல் பகல் 12 மணிவரை நடை திறந்திருக்கும்.இந்த கோவில்  எர்ணாகுளத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் இருக்கு. சென்னையிலிருந்தும்,  மதுரையிலிருந்தும் ரயில்மார்க்கமாக வழித்தடங்கள் இருக்கிறது. எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் டவுன் என இரண்டு ஸ்டாப்பிங் இருக்கிறது. சில பாஸ்ட் ட்ரைன் எர்ணாகுளம் டவுனல நிக்காது. ரயில்வே ஸ்டேஷன்லிருந்து கோவிலுக்கு செல்ல நிறைய பஸ் இருக்கு . அதேபோல திருப்புணித்துரா ரயில் நிலையத்தில் இறங்கினாலும் அங்கிருந்து சுமார் 7  கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோயிலின் நியதிகள், கட்டுப்பாடுகள் கடுமையானவை.. அதேபோல் கோவிலை சுற்றி தங்கும் விடுதிகள் பலதரப்பட்ட விலைகளில் கிடைக்கின்றன.இல்லை நமக்கு காலையில் குளிக்கமட்டும் வேண்டுமென்றாலும் அதற்கும் சில ஹோட்டல்களில் வசதி இருக்கிறது. ஒருவழியாக சோட்டாணிக்கரை பகவதியை தரிசனம் செய்து அவளருளை பெற்று அடுத்த கோவிலுக்கு கிளம்பத்தயாரானோம். மீண்டும் அடுத்தவாரம் இதேபோன்ற ஒரு பகவதி கோவிலை பத்தி பார்க்கலாம்...

ஆற்றுக்கால் பகவதி அம்மனை பார்த்து சோட்டாணிக்கரை பகவதி அம்மன் பதிவை தேத்தின அவசரத்துல இன்னிக்கு காரடையான் நோன்பாம். அதை மறந்துட்டேன். இருந்தாலும் கற்புக்காசியான சாவித்திரி தனது காதல்கணவன் சத்யவானை திருப்பி தந்த  காரடையான் நோன்பு பத்தி கணவன் மனைவி அன்னியோன்யம் பெருக -காரடையான் நோன்பு பதிவின் மூலம் தெரிஞ்சுக்கோங்க. 
நன்றியுடன் 
ராஜி