Wednesday, October 31, 2018

பாண்டவர் மலையா?! இல்ல திருப்பன்(பாண்)மலையா?! - மௌனசாட்சிகள்

டிவின்னா பாட்டு கேட்கவும், மிச்ச நேரத்தில் பின்கோடு, நீரும் நிலமும், ஊரும் பேரும், வரலாற்று சுவடுகள், மண் பேசும் சரித்திரம், மூன்றாவது கண், சுற்றலாம் சுவக்கலாம், ஊர் சுற்றலாம்  மாதிரியான இடம் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க பிடிக்கும். அந்தந்த இடங்களின் உணவு, வரலாறு, கலாச்சாரம், கோவில், கோட்டைகளை சுத்திக்காட்டும் நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பேன். புதுசா ஒரு இடத்தினை பார்த்தால் இங்க போகனும்ன்னு மனசுல நினைச்சுப்பேன். அந்த பக்கம் போகும்போது கண்டிப்பா அந்த இடங்களுக்கு போய் வருவேன். வேந்தர் டிவில பின்கோடு நிகழ்ச்சில வேலூர் பத்தின பெருமைலாம் சொல்லிக்கிட்டு வரும்போது விளாப்பாக்கத்துல பஞ்சபாண்டவர் மலைன்னு இருக்குன்னு சொல்லி காட்டுனாங்க. பஞ்ச பாண்டவருக்கும், வேலூருக்கும் என்னடா சம்பந்தம்ன்னு பல நாளாய் மண்டைக்குடைச்சல். 

சரி அந்த இடத்துக்கு போனால்தான் இதுக்கு தீர்வு கிடைக்கும்ன்னு அங்க போயே ஆகனும்ன்னு முடிவு செஞ்சாச்சுது.  வீட்டிலிருந்து ஜஸ்ட் 24கிமீதான். ஆனா,  6 மாசமா முயற்சி செய்றேன். ஆனா போக வாய்ப்பில்லை. ஆரணி டூ வேலூர் ஆற்காடு மார்க்கமாவும் போகலாம். ஆற்காட்டிலிருந்து 6 கிமீதான். வண்டில ஒரு முறுக்கு முறுக்குனா போயிடலாம்தான். ஆனாலும் தனியா போக ஒரு பயம். இந்த விஜயதசமிக்கு வேலூர் கோவிலுக்கு போகலாம்ன்னு கூப்பிட, ஓகே, ஆனா இந்த இடத்துக்கு கூட்ட்டி போனால்தான் வருவேன்னு கண்டிஷன் போட, சரி வந்து தொலைன்னு சொல்ல கிளம்பியாச்சுது. 
இங்க நான் ஒன்னு சொல்லியே ஆகனும். எங்க வீட்டில் என்னையும், என் சின்ன பொண்ணையும் தவிர மத்ததுக்கும் கலாரசனைக்கும் வெகுதூரம். எங்காவது கோவிலுக்கு போனா, ராமர் விட்ட பானம்போல சொய்ய்ய்ய்ன்னு போய் சாமி கும்பிட்டு ஒரு சுத்து சுத்தி வந்து விழுந்து கும்பிட்டு வந்திடனும். நின்னு நிதானிச்சு என்ன வரலாறு, யார் கட்டினது அங்க வேற என்ன விசேசம்ன்னு விசாரிக்காதுங்க. ஆனா, நான் போனதும் முதல்ல கோவில் அல்லது இடத்தை பத்தி அங்கிருக்கவுங்கக்கிட்ட விசாரிப்பேன். தெரிலயா கூகுள்ல விசாரிச்சுட்டுதான் இடத்தை பார்க்க ஆரம்பிப்பேன். அப்புறம்தான் சாமிலாம். 
 ராஜராஜன் கல்வெட்டு. குண்டு குண்டா  நல்லாதான் செதுக்கி வச்சிருக்காங்க. ஆனா, நமக்குதான் அர்த்தம் விளங்கல. 

என்னோடவே என் சின்ன பொண்ணு  சுத்தும். ஆஹா! நம்ம காலத்துக்கு அப்புறம் நம்ம பிளாக்கை பார்த்துக்க ஆள் இருக்குன்னு சந்தோசப்பட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சுது படமெடுத்துக்கும் ஆர்வமும், செல்ஃபி ஆர்வமும்தான் என்னோடவே சுத்த காரணம்ன்னு..  யாரை நம்பி பிளாக்கை ஓப்பன் பண்ணேன்?! போங்கடா போங்க!ன்னு மனசை தேத்திக்கிட்டேன்.  இப்ப எதுக்கு இந்த சுயபுராணம்ன்னு நினைச்சுக்கலாம் காரணமிருக்கு.

கார்ல போகும்போதே அங்க இங்க விசாரிச்சு பாண்டவர் மலைக்கு போய் சேர்ந்தாச்சு. ரோட்டுக்கு அந்த பக்கம் மசூதியும், இந்த பக்கம் ஒரு மலையும் இருந்துச்சு. அப்பவே நமக்கு உரைச்சிருக்கனும். டிவில பார்க்கும்போது குகை கீழ இருந்துச்சுன்னு... பெண்புத்தி பின்புத்திதானே?! மூச்சு வாங்க மேலேறி  சுத்தி பார்த்துட்டு கீழ இறங்கி வந்தபின் தான் தெரிஞ்சுது. நான் தேடிவந்த குகை மலைக்கு அந்த பக்கமா இருக்குன்னு.... 

பஞ்சபாண்டவர் அஞ்ஞான வாசத்தின்போது இங்க வந்து தங்கி இருந்ததால் பஞ்சபாண்டவர் மலை(குகை)ன்னு பேர் வந்துச்சுன்னு சொன்னாலும், பஞ்சபாண்டவருக்கும் இந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இந்த இடத்துக்கு பேரு திருப்பாண்மலை. இதுக்கு ஆதாரம் அங்கிருக்கும் ராஜராஜசோழன்  கல்வெட்டு. இந்த இடம்  ஒரு சமண கற்படுக்கையாகும். மலையின்மேல், மலையின் கீழ் என இரண்டு பகுதிகளா நாம பார்க்க வேண்டிய இடங்கள் பிரிஞ்சு கிடக்கு. 

சாலையின் வலதுபுறத்தில்  தொல்லியல் துறைக்குட்பட்ட இடம்ன்றதுக்கு அத்தாட்சியா ஒரு போர்ட் இருக்கு. அதில்லாம மலையை சுத்தி கம்பிவேலி போட்டிருக்காங்க. சிறிய நுழைவாயிலை கடந்து மலை ஏறி போகனும். 
 சரியான பாதை வசதி கிடையாது. மலைப்பாதையிலிருக்கும் சின்ன பாறைகள் உருளாம இருக்க  பாறைகளுக்கிடையில் சிமெண்ட் பூசி வச்சிருக்காங்க. சில இடங்களில் பாறைகளில் வெட்டப்பட்ட படிகள் இருக்கு, உயரம் அதிகமில்லாம படிகள் இருப்பது ஆறுதல்.
மலைக்குமேல் இயற்கையாய் அமைந்த குகை ஒன்னு இருக்கு. இந்துக்கள் , சமணர்கள் என கைமாறி ஆற்காடு நவாப்கள் காலத்தில் இந்த இடம் முஸ்லீம்கள் வசம் போனது. ஆனா, இந்த இடம் அவங்க வழிபாட்டு தலமா இருக்குற மாதிரி தெரில. மேலிருக்கும் குகையில் இரண்டு பாய்மார்கள் சமாதி இருக்கு. மேலும் மற்றவர்கள் வணங்குவதற்காக உள்ளூர் மக்களை ஈர்க்கும் மசூதியில் மாறியுள்ளனர்.
முழுக்க முழுக்க வழுக்கு பாறைன்றதால கைப்பிடிக்காக கம்பிகள் நட்டிருக்காங்க.


மேலிருக்கும் குகை, பாய்மார்களின் சமாதிக்கும் சேர்த்து செங்கற்களினால் சுற்றுச்சுவர் எழுப்பி இருக்காங்க. இது போன ஓரிரு நூற்றாண்டுகளில்தான் இந்த வேலை நடந்திருக்கும். ஏன்னா சமீபத்திய செங்கற்கள் போல இல்லாம பழைய பாணியில் இருக்கு.

அங்க இருக்கும் சமாதி இங்க வசிச்ச ஒரு முஸ்லீம் குடும்பத்துடையதுன்னு அங்க இருக்கும் கண் தெரியாத பாட்டி சொல்லிச்சு. அது உண்மையான்னும் தெரில மலைமேல் சுனை ஒன்னு இருக்கு. நம்மாளுங்களுக்குதான் எதையும் பாதுகாக்க தெரியாதே! வாட்டர் பாட்டில் முதற்கொண்டு பீர் பாட்டில் வரை கிடக்கு.

அந்த சுனைக்கு பக்கமிருக்கும் ஒரு பாறையில் அழகிய யட்சினியின் சிற்பம் இருக்கு. அம்பிகைன்னு அவளுக்கு பேராம். ஒரு குளம் அருகே, பாறையின் கூரையை அமைக்கும் மற்றொரு பாறைக் கீழ், பாறை முகத்தில் செதுக்கப்பட்டுள்ளது. யட்சி தரையில் ஒரு மரத்தின்கீழ் ஒரு காலூன்றி, ஒரு காலில் உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கருகில் அவளை ரசித்தவாறு ஒரு ஆண் நிற்க அவளின் காலடியில் அவளிடும் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு பெண்கள் குதிரைமேல் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றனர்.

இந்த இடம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜைன மையமாகத் திகழ்ந்திருக்கிறது. விளாப்பாக்கத்திலிருக்கும் சிவன் கோவிலில் இருக்கும் சோழ மன்னர் பரந்தக சோழரின் ஒரு கல்வெட்டுப்படி இதை அறியலாம் பத்தாம் நூற்றாண்டின் முதல் பாதியில், இந்த நகரம் ஜைன துறவியின் வலுவான செல்வாக்கின் கீழ் இருந்ததாகவும் அந்த கல்வெட்டு சொல்லுதாம்.

மலைமேலிருக்கும் பாறைகளிலிருக்கும் கல்வெட்டுகள் பல்லவ மன்னன் நந்திர்மர்மன், சோழ அரசர் ராஜராஜன் காலத்தியதுன்னு சொல்றாங்க. ராஜராஜ சோழனால் வரி விதிக்கப்பட்ட இடம் இதுன்னு கல்வெட்டு சொல்றதா சொல்றாங்க. அதாவது விளாப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் நெசவாள குடும்பங்களும், விவசாய குடும்பங்களும் இருந்ததாம்.
இந்த இரு தொழிலை தவிர, உடை வெளுப்பு, நாவிதம், வாணிபம் என அந்த ஊருக்கு சம்பந்தமில்லாதவங்க அந்த ஊரில் தொழில் செய்தால் வரி தரனுமாம். அந்த வரியை வசூலிக்க ராஜராஜ சோழனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அடிமை ஒருவனின் மனைவியும், பிள்ளைகளுக்குரியதுன்னு இருக்குறதா சொல்றாங்க. எந்தளவுக்கு உண்மைன்னு தெரில.
மேலிருக்கும் குகையை பார்த்ததும் மலையின் அடிவாரத்தில், மலையை குடைந்து உண்டாக்கப்பட்ட சமணர்களின் கற்படுக்கையை பார்க்க போனோம். மண்ணுக்கடியில் புதையுண்ட இந்த கற்படுக்கையை வரலாற்று ஆய்வாளர்களின் சீரிய முயற்சியால் வெளிவந்திருக்கு.
ல்லவபாணியில் குடையப்பட்ட மிகப்பெரிய குகைக்கோயில். இந்தக் குகைக் கோபுரங்களை வரிசையா பன்னிரண்டு தூண்கள் தாங்குது. இந்த தூண்கள் மேல்மட்டம் சதுரமாகவும்,  தூண்கள் மற்றும் விமானங்கள்,  மேலே வளைந்த கோள்கள் என இருக்கு. பக்க சுவர்கள் சதுர வடிவில் செதுக்கப்பட்டிருக்கு. 


இந்த  கற்படுக்கையின்மேல் யோகநிலையிலிருக்கும் சமண தீர்த்தங்கரர் உருவம் ஒன்னு இருக்கு.  இதே பாறையில் தெற்குமுகத்தில் நிர்வாண தீர்த்தங்கரர் உருவமும், நாயா நரியான்னு தெரியாத உருவமும் இருக்கு. 


மொத்தம் ஏழு கற்படுக்கைகள் இங்கு காணப்படுது.  ஆனா, சம்மனமிட்டு ஒருத்தர்கூட உக்காரமுடியாது. அதுல எப்படி உக்காந்து தியானம் செஞ்சாங்கன்னுதான் புரில.


ஆற்காடு டூ காவனூர் சாலையில் பாண்டவர் மலைன்னு சொல்லப்படும் திருப்பன்மலை இருக்கு. இதை திருப்பாண்மலைன்னு சொல்றாங்க. ஆற்காட்டிலிருந்து 6 கிமீ தூரத்திலிருக்கு. ஆற்காடிலிருந்து காவனூர் செல்லும் பேருந்தில் பயணிக்கலாம். இல்லன்னா, ஆற்காடு டூ ஆரணி சாலையிலிருக்கும் திமிரியில் இறங்கியும் பயணிக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பேருந்து இருக்கு.  
ஒரு இடத்தின் அருமை பெருமையை உலகறியாதது யார் தவறு?! தெரிவிக்காத பெரியவங்க பக்கமா?! இல்ல  தெரிஞ்சுக்கும் ஆர்வமில்லாத நம்ம பக்கமா?! இல்ல இந்த மாதிரியான இடங்களை கட்டி காத்து, அதை பத்தி மக்களிடம் சொல்லாத அரசாங்கத்து பக்கமா?! என் நிலை இனி ஒரு இடத்துக்கு வரக்கூடாது.ம் பார்த்து செய்ங்க மக்களேன்னு மௌனமாய் நின்று நமக்கு புத்தி சொல்லிக்கிட்டிருக்கு இந்த திருப்பன்(பாண்)மலை...
இடம் ரொம்ப அமைதியா, வயல்வெளி சூழ இருக்கு. ஒருநாளைக்கு சிக்கன் சமைச்சு கொண்டு வந்து சாப்பிடனும்ன்னு என் அப்பாவும், மகனும் சொல்ல, பிரண்டுகளோடு வர சூப்பரான இடம்ன்னு என் பொண்ணு சொல்ல...

சாமியாரா போறவங்களுக்கு ஏத்த இடம்ன்னு நான் சொல்றேன். சுத்திலும் ஆள் அரவமிருக்காது. குளிக்க, சமைக்க, குடிக்க தாமரை தடாகமிருக்கு. சமைச்சு சாப்பிட இடம் தாராளமா இருக்கு. விறகுக்கு பஞ்சமே இருக்காது. காட்டு மரங்களும், மாடுங்க இடும் சாணமும் இருக்கு...  என்ன ரெடியா?! 

நன்றியுடன்,
ராஜி

Tuesday, October 30, 2018

பனீர் பட்டர் மசாலா - கிச்சன் கார்னர்


விளையாட்டு வீரர்கள், வளரும் குழந்தைகள்ன்னு புரத சத்தின்  தேவை இருக்கவங்களாம் சிக்கன், முட்டை, பாதாம், பருப்பு வகைகள்ன்னு எடுத்துப்பாங்க.  எல்லாருமே அசைவம் சாப்பிடுறதில்லையே. அதுமாதிரியான சைவப்பிரியர்களுக்கு கைக்கொடுப்பது பன்னீர் எனும் பனீர். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சை பழத்தை பிழிந்தா பால் திரிய ஆரம்பிக்கும் அதை மிக மெல்லிய துணியில் வடிகட்டி பதப்படுத்தினால் கிடைப்பது பனீர். பால் திரிந்தாலும் இதில் அதிகளவு புரதம், மங்கனீசியம்  பாஸ்பரஸ், புரதச்சத்துலாம் அதிகளவு இருக்கு. கார்போஹைட்ரைட் அளவு குறைச்சல்.சர்க்கரையின் அளவு ரொம்ப குறைச்சல்ன்றதால இதை நீரிழிவு நோய்க்காரங்களும் சாப்பிடலாம். கொழுப்பு சத்தும்  அதிகளவில் இருக்கு. அதும் நன்மை செய்யும் கொழுப்புசத்தில்லைங்குறது இதோட மைனஸ்.  இதோட இன்னொரு மைனஸ், மெதுவா ஜீரணிக்கும் தன்மை கொண்டது. 

100கிராமில்  பனீரில் 265 கலோரிகள் கிடைக்குது.  உடலுக்கு பலம் கிடைக்கும்.  பல் சிதைவு, ஈறு பிரச்சனைகள் மற்றும் மூட்டு பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாகவும் பனீர்  உதவுது.  இதை இரவு நேரத்தில் சாப்பிடுவதை வழக்கமா வச்சுக்கலாம். சாப்பிட்ட பின் 1 மணிநேரம் கழிச்சு தூங்கபோவதால் உடல் பருமனை குறைக்கலாம். பனீர் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்குது. இதயநோய்களிலிருந்தும் நம்மை காக்குது. இந்த பனீர்ல பலவகை உணவுகள் சமைக்கப்படுது. ஆனா, அதிகமா வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. இது எதிர்விளைவை உண்டாக்கும்ன்றதை நினைவில் வச்சுக்கனும்.

இன்னிக்கு, நம்ம பதிவில் பனீர் பட்டர் மசாலா செய்யுறது எப்படின்னு பார்க்கலாம். 
தேவையான பொருட்கள்..
பனீர்
பெல்லாரி வெங்காயம்
தக்காளி
வெண்ணை
பூண்டு
இஞ்சி
மிளகாய் தூள்
முந்திரி பருப்பு
எண்ணெய்
உப்பு

வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி பெருசு பெருசா வெட்டிக்கனும். தக்காளியையும் அப்படியே!. பூண்டை தோல் நீக்கிக்கனும், இஞ்சியையும் தோல் நீக்கி கழுவிக்கனும். 

ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு சூடாக்கிக்கனும்..
வெண்ணெய் உருகினால் போதும். வெங்காயத்தை சேர்த்துக்கலாம். கூடவே கொஞ்சம் உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வெந்துரும்.
வெங்காயம் சிவக்கனும்ன்னு அவசியமில்லை. லேசா கண்ணாடி மாதிரி ஆனா போதும். வெட்டி வச்ச தக்காளியை சேர்த்துக்கலாம்.. அடுத்து பூண்டு பற்கள், இஞ்சியையும் சேர்த்து வதக்கிக்கனும்.
முந்திரி பருப்பையும் சேர்த்து வதக்கி அடுப்பை அணைச்சு, ஆறினதும் விழுதா அரைச்சுக்கனும். 

வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகினதும் அரைச்சு வச்சிருக்கும் விழுதை சேர்த்துக்கனும். 

காரத்துக்கு தகுந்த மாதிரி மிளகாய் பொடி சேர்த்துக்கனும். தனி மிளகாய் தூள் சேர்த்துக்கிட்டா நல்லா கலர் கொடுக்கும்.  கரம் மசாலாவையும், உப்பையும் சேர்த்து கிளறி தண்ணி சேர்த்து கொதிக்கவிடனும்.  மசாலா கொதிக்குறதுக்குள் பனீரை துண்டு துண்டா நறுக்கி லேசா எண்ணெய்ல இல்ல வெண்ணெய்ல பொரிச்சுக்கனும். 

மிளகாய் தூள் வாசனை போகும்வரை கொதிச்சதும் பொரிச்சு வச்சிருக்கும் பனீரை சேர்த்து லேசா கொதிக்க விட்டு கொ.மல்லி இலைகளை தூவி இறக்கிக்கிடனும். உலர்ந்த வெந்தயக்கீரை அதானுங்க கஸ்தூரி மேத்தியை லேசா கசக்கி சேர்த்தா இன்னும் நல்லா இருக்கும்.  கடைசியா ப்ரெஸ் க்ரீம் சேர்த்துக்கலாம். கஸ்தூரி மேத்தியும், க்ரீமும் இல்லாததால் அதை நான் சேர்க்கல. 
என் பையனுக்கு பனீர் பிடிக்காததால் அவனுக்கு மட்டும்  கொதிக்கும் கிரேவியை தனியா கொஞ்சம் எடுத்து  முந்திரி பருப்பை வறுத்து சேர்த்துக்கிட்டேன். 
இது என் பையனுது நான் சுட்டுட்டேன். சாப்பிட இல்லீங்க. படத்துக்காக...

இது எங்களுக்கானது பனீர் பட்டர் மசாலா...  வெண்ணெய்தான் சேர்க்கனும்ன்னு இல்ல, எண்ணெயும் சேர்க்கலாம். வெண்ணெய் சேர்த்தா வாசம் நல்லா இருக்கும். அம்புட்டுதான்

பார்க்க நல்லா இருக்கா?!  

நன்றியுடன்,
ராஜி

Monday, October 29, 2018

எமனின் நால்வகை கடிதங்கள் - ஐஞ்சுவை அவியல்

என்னடி!என்னிக்குமில்லாத அதிசயமா ரொம்ப நேரமா  கண்ணாடி முன் நின்னிட்டிருக்கே!? 

நரைமுடி அதிகமா இருக்கு மாமா! அதான் டை அடிக்கலாமா?! வேணாமான்னு பார்த்துக்கிட்டிருக்கேன்.

நாற்பது வயசுல நரைமுடி வர்றது சகஜம்தான், இதுக்கு பல காரணம் உண்டு. மரபுவழியா வர்றதுமுண்டு. பித்தம் அதிகமானாலும் நரைக்கும். ஓவர் டென்ஷன்லயும் முடி நரைக்கும். இப்பத்திய உணவுமுறை மாற்றங்கள், ஷாம்பு மாதிரியான செயற்கை ரசாயண  பொருட்கள், சுற்றுச்சூழல் பாதிப்புனாலயும் முடி நரைக்குது.


உன்னால ஏற்படும் டென்ஷனாலதான் முடி நரைக்குது போல! 

அடிப்பாவி1 என்னையே எல்லாத்துக்கும் குறை சொல்லு. நீ ஒழுங்கா முடியை பராமரிக்காம என்னைய ஏன் சொல்றே! வாரத்துக்கு ஒருநாளாவது எண்ணெய் தேய்ச்சு சீயக்காய் போட்டு தலைமுழுகனும். தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கனும். வெளில போகும்போது தலைக்கு ஸ்கார்ப் கட்டிக்கனும். வீட்டுக்கு வந்ததும் தலைக்கு குளிக்கனும். அதிக காரமில்லாத மைல்ட் ஷாம்புவை யூஸ் பண்ணனும். 

சரி, இதுலாம் இனி சொல்லி என்ன பயன்?! அதான் நரைமுடி வந்திருச்சே மாமா! அதை கருப்பாக்க என்ன பண்ணலாம்ன்னு சொல்லு..

ஹேர்டை யூஸ் பண்ணுறது சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். டை பூசுன ஓரிரு நாளில் முடியின் அடியில் நரைமுடி தெரிஞ்சு அசிங்கப்படுத்தும். சிலருக்கு முடி காவி கலராகி அசிங்கப்படுத்தும்., அதனால், நாற்பது வயசு ஆனப்பின் நரைமுடி வர ஆரம்பிச்சா அதை அப்படியே விட்டா அதுவே நமக்கொரு அழகையும், மதிப்பையும் கொடுக்கும். ம்ஹும், எனக்கு முடி கருப்பாதான் இருக்கனும்ன்னு நினைக்குறவங்களும் சரி, சின்ன வயசுலயே முடி நரைக்க தொடங்குறவங்கலாம் இயற்கை முறையிலேயா முடியை கருப்பாக்கலாம்.

தேங்காய் எண்ணெயோடு சம அளவு எலுமிச்சை சாறெடுத்து தலைமுடியின் அடிவரை தடவி, மசாஜ் செய்து, அரைமணிநேரம் ஊற வச்சு அலசி வந்தா முடி கருமையாகும். அதேமாதிரி மருதாணி இலைகளை அரைச்சு பூசி வந்தாலும் முடி தன்னோட இயற்கை நிறத்தை பெறுவதோடு பளபளன்னும் பட்டுப்போல மென்மையாவும் இருக்கும். நெல்லிக்காய் வெட்டி காயவச்சி தே. எண்ணெயோடு போட்டு சூடேத்தி தடவி வந்தாலும் முடி கருப்பாகும். கறிவேப்பிலையை புளிச்ச தயிரோடு சேர்த்து அரைச்சு தலையில் தடவி வரலாம். வெந்தயத்தை ஊற வச்சு அரைச்சு தேய்க்கலாம்,. இல்லன்னா, முதல்நாள் நைட்டே ஊற வச்சு அந்த நீரை கொண்டும் அலசினா முடி படிப்படியா கருப்பாகும். நெய்யை, மண்டையில் படும்படி தேய்ச்சு அலசி வந்தாலும் நிறம் மாறும். தயிரில் ஊற வச்ச மிளகும் இளநரையை போக்கும். ஒரு கப் பிளாக் டீயில் ஒருஸ்பூன் உப்பு சேர்த்து மண்டையில் படும்படி தேய்ச்சு கழுவி வந்தாலும் இள நரை மறையும். 

நரைமுடிங்குறதை நினைச்சு வருத்தபடவேண்டியதில்லை. ஆனா, நமக்கு வயசாகிட்டு வருதுன்றதை புரிஞ்சு, நம்ம கடமையை சரிவர செய்யனும். ஏன்னா, நம் மரணத்தை உணர்த்தும் விதமா நால்வகை கடிதத்தை எழுதுறதா சொல்வாங்க. இது வயசாகி இறைந்து போறவங்களுக்கு மட்டும்தான் பொருந்தும். விபத்து மாதிரியான அகால மரணத்துக்கில்லை.  இதை உணர்த்தும் விதமா ஒரு கதை சொல்வாங்க.

அம்ரிதான்ற ஒரு ராஜாவுக்கு தன்னை மரணம் நெருங்கக்கூடாதுன்னு நினைச்சு எமதர்ம ராஜாவை நினைச்சு தவமிருந்தான்., சுவாமி! எனக்கு மரணமே நேரக்கூடாதுன்னு வரம் கேட்டான். பிறந்தவர் இறந்தே ஆகனும். அதனால் வேற வரம் கேள்ன்னு சொன்னாரு எமன். அதுக்கு அந்த அமிர்தா மரணம் என்னை நெருங்குவதை எச்சரிச்சு நீங்க எனக்கு கடிதம் போடனும்ன்னு சொன்னான். ஓகேன்னு எமனும் வரம் கொடுத்தார். அம்ரிதா தன் மனம்போன போக்கில் வாழ்ந்தான்.   வயசு ஆக, ஆக முடி நரைக்க ஆரம்பிச்சுது. அடுத்து பற்கள் ஒவ்வொன்னா விழ ஆரபிச்சுது. உங்களுக்கு வயசாகிட்டுது ராஜா. மரணம் உங்களை நெருங்குதுன்னு சொன்ன ராணியை அம்ரிதா கண்டிச்சான். பின் எப்பயும்போல, குடி, சூது, மாதுன்னு இருந்தான். ஒருநாளில் மூப்படைந்து நடக்க முடியாமல் போய்  உடல் முடங்கிபோனது. அனைவருமே அம்ரிதா இறக்கப் போகிறான் என நினைத்தனர். ஆனா, அப்போதும், அம்ரிதா தனக்கு மரணம் நெருங்க காலம் இருப்பதாக எண்ணி, சந்தோஷமாகவே இருந்தான். ஏன்னா, எமன் தனக்கு கடிதம் அனுப்புவார்ன்னு இறுமாப்பாவே இருந்தான். 

ஒருநாள் அவன்முன் எமன் வந்தான். நீ மரணிக்கும் நாள் வந்திடுச்சு. உன்னை அழைத்து போகவே வந்தேன்னு சொல்லி, அம்ரிதாமுன் நின்றான். அம்ரிதா அதிர்ச்சிக்குள்ளாகி எமனிடம், கடவுளே! நீங்க என்னை ஏமாற்றிவிட்டீர்கள், மரணம் என்னை நெருங்கும்முன் கடிதம் அனுப்புவேன் என எனக்கு வரமளித்து ஏமாற்றிவிட்டீர்கள் என எமனை கடிந்துக்கொண்டான். அப்போது, எமன் அம்ரிதாவிடம், "நீ உன் வாழ்க்கை முழுவதையும் பாவச்செயல்களில் ஈடுபடுத்தி, ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் காட்டாமல் இருந்துவிட்டாய். பின் எப்படி என்னுடைய கடிதம் உன்னை அடைந்ததை நீ உணர்ந்திருப்பாய்? நான் இதுவரை உனக்கு 4 கடிதங்களை அனுப்பினேன். அவை அனைத்தையும் நீ நிராகரித்துவிட்டாய்" என்றார். "நான்கு கடிதங்களா?என அம்ரிதா கேட்க, ஆமாம்,  தலைமுடி நரைத்தது நான் அனுப்பிய முதல் கடிதம்.  பற்கள் முழுவதையும் இழந்தது நான் அனுப்பிய 2வது கடிதம்.  பார்வைதிறன் குறைந்து போனது நான் அனுப்பிய மூன்றாவது கடிதம்.   உடல் முடங்கி போனது நான் அனுப்பிய நான்காவது கடிதம். இதை எதையுமே உணராமல் இருந்தது உன் தவறுன்னு சொல்லி அம்ரிதாவை தன்னோடு எமன் அழைத்து சென்றான்.  இந்த கதைமூலமா நாமளும் நமக்கு கடவுள் கொடுக்கும் எச்சரிக்கையை புரிஞ்சுக்கிட்டு தன்னோட வயசுக்குண்டான கடமைகளை சரிவர செஞ்சா முதுமையை சிறப்பா கழிக்கலாம். அதேப்போல, மரணத்தையும் தைரியமா எதிர்கொள்ளலாம். வயதாவதென்பது சாபமல்ல வரம்ன்னு புரிஞ்சு செயல்படனும். வயசுக்கு தக்க பெருந்தன்மையோடு நடந்து ஆன்மீகத்துல நாட்டம் கொள்ளனும். தியானம், யோகான்னு செஞ்சு ரிலாக்சா இருக்கனும்.
வயசாகிட்டாலே பெருந்தன்மை வந்துராது மாமா. அதேமாதிரி ஆன்மீகத்துல நாட்டமும், யோகா,தியானம்ன்னு  செஞ்சாலும்  புத்தி வேலை செஞ்சுடாது. அதுக்கு உதாரணம் நடிகர் சிவக்குமார்.  கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துக்கிட்ட சிவக்குமார்,  செல்பி எடுத்த ஒரு பையனோட செல்போனை தட்டி விட்டுட்டார். இதுதான் இன்னிக்கு ஹாட் டாபிக். தெரியுமா மாமா?!

நடிகர்களும் மனுசங்களேன்னு புரிஞ்சுட்க்கிட்டு அவங்களை என்னமோ பெரிய அவதார புருசங்கமாதிரி பீல் பண்ணி செல்பி எடுக்குறது, பாலாபிஷேகம் செய்றது நாக்குல கற்பூரம் ஏத்துறதுன்னு அட்ராசிட்டி பண்ணா இப்படிதான். அவங்களும் ரத்தமும் சதையுமான மனுசங்கதானே!? எங்க போனாலும் பிரைவசி இல்லாம ஆட்கள் சூழ்ந்தால் கடுப்பாகத்தான் செய்வாங்க.

உங்க வாதம் சரிதான் மாமா. ஆனா, சிவக்குமார் விசயத்துல அப்படி ஒதுங்கி போக முடியாது. ஏன்னா, யோகா தியானம் செஞ்சா உணர்ச்சிகளை கட்டுப்படுத்தலாம் கிளாஸ் எடுக்கிறார். சினம் சார்ந்தோரை கொல்லும்ன்னு டிவில பேசுறார். ராமாயணம், மகாபாரதத்தை புட்டு புட்டு வைக்குறார். அப்பேர்பட்டவர், தான் சொல்ற மாதிரி நடந்து காட்டனும். அதைவிட்டு இப்படி காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்கிட்டா ஊர் ஏசத்தான் செய்யும். புராணங்கள், இதிகாசங்களும், யோகா, தியானம்ன்னு எதும்  மாற்றத்தை கொண்டு வந்துராதுன்னு சிவக்குமார்தான் சரியான உதாரணம். உணர்ச்சிகளை அடக்கி வச்சா இப்படிதான் இடம் பொருள் ஏவல்ன்னு தெரியாம வெளிப்படும். அதைவிட சரிவிகிதமா  உணர்ச்சிகளை சமாளிக்க கத்துக்கனும்.

நீ சொல்றதும் ஒருவிதத்துல சரிதான். அந்த நேரத்துல என்ன நினைஇச்சாரோ! அது அவருக்கே வெளிச்சம். ரொம்ப பேசிட்டோம். இந்த மீமை பார்த்ததும்  என் சின்ன வயசு ஞாபகம் வந்துச்சு.  இன்னிக்கான கேள்வி .. GMT ( Greenwich Mean Time ) நேரத்திற்கும், IST ( Indian Standard Time ) நேரத்திற்கும் மணி அளவில் உள்ள வேறுபாடு எவ்வளவு.? யோசிச்சு சொல்லு. பார்க்கலாம்.
இதுலாம் ஈசி. இதுக்கு நான் எதுக்கு ?! எங்காளுங்க வந்து விடை சொல்வாங்க இருங்க.
என் மானத்தை வாங்கிடாதீங்க சகோஸ்

நன்றியுடன்,
ராஜி


Sunday, October 28, 2018

சிறகே சிறையாய் - பாட்டு புத்தகம்

ஆண்கள்லாம் அழகா தெரியும் பருவம் எது?!

நிச்சயமா 30லிருந்து 40வயசுலதான். முப்பது வயசுக்குள் ஹேர்ஸ்டைல், மீசைன்னு புதுசுபுதுசா ட்ரை பண்ணி எது ஒரிஜினல் தோற்றம்ன்னே தெரியாது. 40க்கு மேல் தொப்பை, நரை, வழுக்கைன்னு வந்தபின் எதுமே செட் ஆகாது. ஆனா, முதிர்ச்சி எட்டி பார்க்கும் வயசில் அந்த 30 டூ 40வயசில் ஆண்கள் அழகிருக்கே?! அடடே! மழுங்க ஷேவ் செஞ்சு, கிருதா ஒதுக்கி, நீட்டா முடி கட் செஞ்சு....  ரொம்ப அழகு... 

அதுமாதிரியான ஒரு தோற்றத்துல உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்துல ரஜினி தோற்றம்.  ஆன்மீகமும், அரசியலும் கலக்காத நடிகனா மட்டுமே இருந்த ரஜினிகாந்த். அதும் அழகான ரஜினி. கருப்பா இருந்தா பொண்ணுங்களுக்கு பிடிக்காதுன்ற எண்ணத்தை உடைச்ச அழகு.  தம்பிக்கு எந்த ஊரு, அடுத்த வாரிசு, தங்க மகன், நான் அடிமை இல்லை, நான் சிகப்பு மனிதன்னு  சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த காலக்கட்டம்.  மீன்விழியாள்ன்ற வார்த்தைக்கு சொந்தக்காரி நடிகை மாதவி. ஐடெக்ஸ் கண்மைக்கு முதன்முதலா மாடலா வந்தது மாதவிதான். அடுத்து பானுப்பிரியா... முத்துபல் தெரிய சிரிக்கும் அழகி.  சில நடிகைகளுக்கு மட்டுமே எந்த உடை போட்டாலும் பொருத்தமா இருக்கும். அதில் மாதவியும் ஒன்னு. பிகினி முதல் சேலை வரை எல்லாமே இவங்களுக்கு பொருந்தும்.

பாலுமகேந்திரா சிறந்த ஒளிப்பதிவாளர். மணிரத்ணம், மகேந்திரன் மாதிரியான படாபடா ஆளுங்க படத்துக்குலாம் ஒளிப்பதிவாளரா இருந்திருக்கார். இவர் இயக்குனரும்கூட, கோகிலா, ரெட்டைவால் குருவி, மூடுபனி, மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், சதிலீலாவதின்னு சில படங்கள் இயக்கி இருக்கார்.  எனக்கு  தெரிஞ்சு மூன்றாம் பிறையும் சதிலீலாவதிதான் ஹிட் அடிச்சது. மத்ததுலாம் சுமார் ரகம்தான். ஒருமாதிரியான மனப்பிறழ்வு கதைதான் இவரோட கதைக்கருவா இருக்கு. அது ஏன்னு தெரில.  அதுமாதிரி ஹிட் அடிக்காத ஒரு படம்தான் உன் கண்ணில் நீர் வழிந்தால்..

ரஜினி ஸ்டைலும் இல்லாத, பாலுமகேந்திரா ஸ்டைலுமில்லாத படமில்லாததால் படம் ஹிட் அடிக்கல, ஆனா பாட்டுலாம் செம ஹிட். இப்ப வரும் பாடலில் முதல்ல பியானோ இசையும், அதை தொடர்ந்து வரும் வயலின் இசையுமே நம்ம மனசின் நினைவுகளை கிளறி செல்லும்.  சோகப்பாட்டுதான் ஆனாலும் மெல்லிசைப்பாடலா மாத்தினது பாலுமகேந்திராவின் கைவண்ணம். பாடலின் ஆரம்பத்தில் ரஜினியும், மாதவியும் புல் தரையில் நடந்து வருவதை மெல்லிய பனிப்படலத்தினூடாக பதிவு செஞ்சது அருமை. பாட்டை கேளுங்க. பாடல் காட்சிகளை பாருங்க. பாட்டுக்காக படத்தை பார்த்தா வருத்தப்படுவீக..

துணையின் ஆறுதல் இருந்தா எந்த சோகத்திலிருந்தும் வெளிவரலாம், எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வரும்ன்றதை இந்த பாட்டு உணர்த்தும்


கண்ணில் என்ன கார்காலம்?!
கன்னங்களில் நீர்க்கோலம்...
மனமே நினைவை மறந்து விடு..
துணை நான் அழகே துயரம் விடு...
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே!!
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா?!
நியாயமா பெண்ணே?!!
 ஹோ..

கண்ணில் என்ன கார்காலம்?!
கன்னங்களில் நீர்க்கோலம்?!


நானே உன் சுமையாக ஏன் வந்தேன்?!
சிறகெல்லாம் சிறையாக வாழ்கின்றேன்!!
நான் உறங்கும் நாள் வேண்டும்!!
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்!!
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்!!
என் கண்ணில் நீர் வேண்டும்!!
சுகமாக அழ வேண்டும்...

 கண்ணில் என்ன கார்காலம்?!
கன்னங்களில் நீர்க்கோலம்?!


 இருள் மூடும் கடலோடு நான் இங்கே...
என் தோணி கரை சேரும் நாள் எங்கே?!
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்?!

பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்?!
நிழலாக நீ வந்தால்...
 இது போதும் பேரின்பம்!!

 கண்ணில் என்ன கார்காலம்?!
கன்னங்களில் நீர்க்கோலம்!!
மனமே நினைவை மறந்து விடு...
துணை நான் அழகே துயரம் விடு...
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே!
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே?! ஹோ....

கண்ணில் என்ன கார்காலம்?!
கன்னங்களில் நீர்க்கோலம்?!

படம்: உன் கண்ணில் நீர் வழிந்தால்
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
நடிகர்கள் : ரஜினி, மாதவி

நன்றியுடன்,
ராஜி

Saturday, October 27, 2018

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?!


காகத்துக்கு அடுத்தபடியா மனிதனுக்கு தெரிஞ்ச பறவைன்னு சொல்லப்பட்டது  ”சிட்டுக்குருவி”. இதுக்கு வீட்டுக்குருவி, அடைக்கலக்குருவி, ஊர்க்குருவி, தவிட்டுக்குருவின்னுலாம் பேரு. மனிதர்களோடு வாழ்ந்தாலும் கிளி, புறா மாதிரி மனிதர்களோடு பழகுவதில்லை. சின்னஞ்சிறிய உடல்,  குட்டியான இரு கால்கள், குட்டியூண்டு அலகோடு பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளைன்னு இருக்கும் ஆண்குருவி.   சராசரியா 40லிருந்து 50 கிராமுக்குள் இருக்கும். மேற்பாகம் தவிட்டு நிறத்திலும், மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகளோடு இருக்கும் பெண்குருவி. 

ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா கண்டத்துலலாம் குருவி இனம் இருக்கு. சராசரியா 13 ஆண்டுகாலம் வாழும் இது. மரத்தில், வீடுகளில் மறைவான இடத்தில் கூடுகட்டி நம் கண்பார்வையிலே வாழ்ந்தாலும் இதை செல்லபிராணியா வளர்க்கமுடியாது. ஏன்னா அதுக்குலாம் இது செட்டாகாது. கிண்ண மாதிரியான வடிவத்தில் கூடு கட்டி வாழ்ந்தாலும் குளிர்காலத்தில் கூட்டமா  இருந்து குளிரை சமாளிக்கும்.  புழு, பூச்சி, நெல், கம்பு மாதிரியான தானியங்களை உண்டு வாழும்.  ஒரு நேரத்தில் 3லிருந்து 5 முட்டை வரை இட்டு குஞ்சு பொரிக்கும். பச்சை கலந்த வெள்ளை நிறத்துல இருக்கும். முட்டையை அடைக்காத்து குஞ்சுகள் பெருசாகி பறக்கும்வரை அவைகளை பாதுகாப்பது தாய், தந்தை குருவியை சாரும்.  பறக்க ஆரம்பிச்சுட்டா அது ஃப்ரீ பேர்ட்தான். அம்மா அப்பா பேச்சை கேட்கனும்ன்னு இல்ல. 

மெல்லிய கோடுகளைக் கொண்டது புல்வெளிக் குருவிகள், மாலைச் சிட்டுகள், காட்டில் வாழும் நரிச் சிட்டுகள், வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள், கறுப்புச் சிட்டுகள், வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டையை கொண்ட குருவின்னு விதம் விதமா இருக்கு. இனப்பெருக்க காலம் வந்ததும், தனக்கு பிடிச்ச மாதிரியான பெண்குருவியை  தேர்ந்தெடுக்கும். 

தன்னோட லவ்வை சொல்லி, அந்த பெண்குருவிக்காக கூடு கட்டும்.  வைக்கோல், புல், குச்சிகளை கொண்டு கிண்ணம் மாதிரி கூடு கட்டி, உள்ள, களிமண்ணால் மொழுகி படுக்கையை ரெடி பண்ணும். வெளிச்சத்துக்கு மின்மிணி பூச்சியை கொண்டு வந்து கூட்டுக்குள் வைக்கும். இப்படி பக்காவா கூட்டை ரெடி செஞ்சு பெண்குருவியை கொண்டு வந்து காட்டும். கூடு  பெண்குருவிக்கு பிடிச்சிருந்தா மட்டுமே டும்டும்டும்தான், பாலும் பழமும்தான்., குவாகுவாதான். இல்லன்னா தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடின்னு பாடிக்கிட்டு திரியவேண்டியதுதான். கூடு கட்டிக்கிட்டிருக்கும்போது எதிர்பாராத விதமா அந்த கூடு கீழ விழுந்துட்டா, அதை எடுத்து வச்சு மீண்டும் கூடு கட்டாது.
வளர்ப்பு பறவையை தவிர வேறெந்த பறவையும் வீட்டுக்குள் வரத்தயங்கும். ஆனா, சிட்டுக்குருவி அப்படியில்லை. சர்வசாதாரணமாய் வீட்டுக்குள் வலம் வரும். புழு, பூச்சியை சாப்பிட்டாலும் அதோட முழுமையான உணவு கம்பு, சோளம், நெல் மாதிரியான தானியங்கள்தான்.  அப்படின்னா வயல்வெளிகளில்தானே இருக்கனும்ன்னு நினைக்கலாம். வருடத்தின் அத்தனை நாளும் தானியம் விளையாதே! ஆனா, வீடுகள் அப்படியில்லை. சதாசர்வகாலமும் தானியங்கள் புழங்கும்.
ஒரு இருபது வருடங்களுக்கு முன்னலாம் தானியங்கள்  அறுவடையாகி வீட்டுக்கு வருவதும், அதை காய வைக்க, தோல் நீக்க, புடைக்க, குத்த, அரைக்கன்னு பல வேலைகள் தினத்துக்கும் நடக்கும்.  அப்ப சிந்துனது, சிதறுனதை சாப்பிடவே குருவிகள் வீட்டுக்கு வரும். ஆனா, இப்ப அப்படி இல்ல.  சூப்பர் மார்க்கெட்ல இருந்து டைரக்டா பாக்கெட்ல இருந்து வாங்கி வந்து பயன்படுத்துறோம். உணவில்லாதபோது குருவி எப்படி வீட்டுக்கு வருமாம்?! சரி, வயல்வெளிகளில் உண்டு கழிக்கலாம்ன்னு பார்த்தா, நாமதான் அதையெல்லாம் ரியல் எஸ்டேட்டாக்கி பாழ்படுத்திட்டோமே!

அப்படியே அங்கொன்னும், இங்கொன்னுமா நடக்கும் விவசாயம்கூட, கம்பு, கேழ்வரகு, சோளம்ன்னு விளைவிக்காம கரும்பு, சவுக்கு, கத்திரி, வெண்டை, தக்காளின்னு ஆகிட்டுது.  அப்படியே, கம்பு, சோளம்ன்னு பயிரிட்டாலும் கை அறுவடை இல்லாம, மெஷின் அறுவடைன்னு கதிர் அடிக்க, தூத்தன்னு எல்லா வேலையும் முடிஞ்சு ஒரு மணிகூட சிந்தாம சிதறாம அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்துடுறாங்க.  இதுல விவசாயிக்கு லாபம்ன்னு சந்தோசப்பட்டாலும், அவனை அண்டி வாழும் சின்னஞ்சிறிய உயிர்களான எலி, குருவி மாதிரியான உயிர்கள் பட்டினி.. பின்னர் அதோடு இனமும் அழிஞ்சுக்கிட்டு வருது. தான் மட்டுமே வாழனும்ன்ற சுயநலமே இதுக்கு காரணம். 

மனுசன் சல்லிப்பயன்னு புரிஞ்சதாலோ என்னமோ அவனை நம்பி இருக்கும் ஜீவன்களாலேயே அவன் உயிரை எடுக்கும் வேலையை இயற்கை செய்யுது. முன்னலாம் சாமி படங்கள் உட்பட அனைத்து படங்களும், கண்ணாடிலாம் ஒரு 50டிகிரி சாய்மானத்துல சாய்ச்சு வச்சு சுவத்துல ஆணியோடு ஒரு கம்பி வச்சி இணைச்சிருப்பாங்க. ஆனா, இப்பலாம் லேமினேஷன் பண்ணப்பட்ட படங்கள். அதேப்போல, பெண்டுலம் வச்ச கடிகாரம் இருக்கும். அதுமேலயும் கூடு கட்டும். அதில்லாம, ஓட்டு வீட்டு கூரையில் கட்டும், தாழ்வாரம்ன்னு கொஞ்சம் மறைவான இடத்துல கட்டும். இப்பலாம் அதுலாம் இல்லாததால் அதுக்கு கூடு கட்ட வாய்ப்பே இல்ல. 
சிட்டுக்குருவி இனம் அழிய செல்போன் டவர் காரணம்ன்னு சொல்லப்பட்டாலும் இன்னமும் விஞ்ஞானரீதியா அது நிரூபிக்கப்படலை. சிட்டுக்குருவி இனம் அழிய பல காரணங்கள் உண்டு. வருசத்துக்கு மூன்று முறைதான் இது முட்டை இடும். ஒருமுறை 3 லிருந்து 5 வரை முட்டையிடும். அத்தனை முட்டையும் குஞ்சு பொரிக்க தகுதியானதில்லை. சில கூமுட்டைகளும் உண்டு. அப்படியே தகுதியான முட்டைகள் கூட்டிலிருந்தாலும் காகம் அந்த முட்டைகளை கீழ தள்ளிடும். மிச்சம்மீதி குஞ்சு பொரிச்சாலும் பாம்பு, காகம் மாதிரியான பிராணிகளுக்கு உணவாகிடுது.  எப்படியோ தப்பித்தவறி உசுரு பொழைச்சாலும், தாய்க்குருவி கொடுக்கும் உணவு நஞ்சாகிடும். அது எப்படின்னா, நாமதான் பூச்சி மருந்துகளை வயலுக்கு தெளிக்குறோமே! அதான் காரணம்.
சரி, தானியம் வேணாம்ன்னுட்டு புழு பூச்சி சாப்பிட்டு உசுர் வாழலாம்ன்னு பார்த்தா, வாகனங்கள், தொழிற்சாலைன்னு வெளியிடும்  மெத்தைல் நைட்ரேட்  என்னும் நச்சு புகை புழு, பூச்சிகளை கொன்னுடுது.  அப்புறம் எப்படி அது உயிர்வாழுமாம்?! அப்படியே வாழ்ந்து வந்தாலும் அடுத்த ஒரு ஆபத்து அதை நோக்கி இருக்கு. அது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் சிட்டுக்குருவி லேகியம் வடிவில்... 
குறிப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மூலிகைகளை இடித்து, குடல், இறகுலாம் சுத்தம் செய்யப்பட்ட குருவியின் வயிற்றில் இந்த மூலிகை பொடியினை வைத்து தைத்து,  மண்சட்டியில் பசுநெய்யில் இந்த குருவியை வறுத்தெடுத்து, நூலினை நீக்கி, உரலில் விட்டு இடிச்சு வரும் மருந்தோடு சரிக்கு சமமா பனங்கற்கண்டு சேர்த்து, அரைலிட்டர் பால் கொதிச்சதும்,  இதை போட்டு சரியான பதம் வந்ததும், குருவியை பொறிச்ச மிச்ச நெய்யும், தேனும் சேர்த்து கிளறினா சிட்டுக்குருவி லேகியம் தயார்.  மனுச குலம் தழைக்க குருவி குலத்தை அழிச்சிக்கிட்டிருக்கோம். காக்கையும், குருவியும் எங்கள் சாதின்னு பாரதி பாடினான். நாமதான் நம்ம சாதிக்காரன் பொழச்சு வந்தாலே வயிறு எரியும் ஆட்களாச்சே! அப்புறம் குருவி, காக்கையையா வாழவிட்ருவோம்?!
விட்டு  விடுதலை யாகிநிற் பாயிந்தச்