Saturday, June 30, 2018

ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் - அறிவோம் அர்த்தங்கள்


 அச்சு முறிந்த தேரை  பாடல் பாடி மீண்டும் ஓட வைத்த ஊர், பண்+உருட்டி= பண்ருட்டி.  பண்ன்னா பாடல், பாடல் பாடி தேரை உருட்டினர் என பொருள்படும். உருட்டிங்குறது ஒருவித ராகம்ன்னும் சொல்றாங்க. உருட்டி ராகத்தால் பாடப்பட்ட பாடலால் தேர் நகர்ந்ததால் இந்த ஊருக்கு இப்பேர் உண்டானதுன்னும்  உருட்டி ராகத்தில் பண் இசைக்கும் பாணர்ன்ற மரபினர் வாழ்ந்ததாலும் இவ்வூருக்கு பண்ருட்டின்னு பேர் வந்ததாகவும் சொல்வாங்க,. மண்ணை உருட்டி பொருட்கள் செய்யும் மரபினர் இந்த பகுதியில் வாழ்ந்ததால் மண்+உருட்டி என்பது மண்ணுருட்டி என்றாகி, பின்னர் பண்ருட்டி ஆனதாம். பண்ருட்டி பலாப்பழம், முந்திரிக்கு பேர் போனது. பண்டாரெட்டி என்பவரது எஸ்டேட் இருந்த இந்த பகுதி பின்னாளில் பண்ருட்டி ஆனதாகவும் சொல்றாங்க. 
விருத்தம்ன்ற வார்த்தைக்கு ’பழைய’ன்னு அர்த்தம்.  அசலம்ன்னா மலைன்னு அர்த்தம். இரு வடமொழி சொற்கள் சேர்ந்ததே விருத்தாசலம்ன்னு ஆனது. இந்த ஊருக்கு திருமுதுகுன்றம், பழமலைன்னு வேற பேர் இருக்கு.  திருமுதுகுன்றம் என்பது தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சம்ஸ்கிருதப் பேர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது. இத்தலத்தின் பெயரில் 'குன்றம்' என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லாமலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் - மலை) 



எட்டி மரங்கள் நிறைந்த பகுதின்றதால விஷ விருட்ச வனம்ன்னு அழைக்கப்பட்டு இப்ப விஷாரமென அழைக்கப்படுது. ஊர் பெருசாகிட்டதால தனித்து தெரிய வேண்டி மேல்விஷாரம், கீழ்விஷாரமென ஊர் பிரிந்தது.

பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இந்த ஊருக்கு இரு+ஓடை=ஈரோடைன்னு அழைக்கப்பட்டு இப்ப ஈரோடுன்னு அழைக்கப்படுது. அதுமில்லாம, இங்குள்ள கடவுளுக்கு, கபாலீஸ்வரர்ன்னு பேரு. அதனாலும், ஈர ஓடைன்னு அழைக்கப்பட்டு நாளடைவில் ஈரோடுன்னு மாறியதாம். 
ஒருமுறை சுந்தரர்,  திருச்சுழின்ற தலத்தில் உள்ள திருமேனிநாதரை தரிசித்தபின், அங்கிருந்து காளையார்கோவிலுக்கு சென்றார். அந்த ஊரின் எல்லைக்கு வந்தவுடன் அவ்வூர் மண்ணுக்கடியில் முழுக்க முழுக்க சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார் சுந்தரர். எல்லைப் பகுதியில் நின்றபடியே, இறைவா! உன்னைக் காண உன் இருப்பிடம் வர முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி வருந்தி, தேவாரப்பாடல் பாடினார்.  தன் தோழனான சுந்தரர்மீது இரக்கம் கொண்ட சிவபெருமான் தனது காளையை அங்கு அனுப்பி வைத்தார். அது சுந்தரர் நின்றிருந்த இடம்வரை வந்து மீண்டும் கோவிலை நோக்கித் திரும்பிச் சென்றது. அப்போது, காளையின் கால்தடம் பதிந்த இடங்களில், லிங்கம் இல்லை. எனவே அந்த இடம் வழியாக நடந்து வந்து தன்னை தரிசிக்கலாம், என அசரீரி ஒலித்தது.  இதையடுத்து சுந்தரர், காளை நடந்து சென்ற இடம் வழியாக சென்று இறைவனை வணங்கி வழிபட்டார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர் காளையார்கோவில் என பேர் பெற்றது.
அருப்புக்கோட்டையின் பழைய பேரு செங்காட்டு இருக்கை இடத்துவழி.  விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்குமொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி விவசாயம்  செய்து பிழைப்பு நடத்தி வந்ததால் இந்த இடத்துக்கு  'அரவகோட்டை' என அழைக்கப்பட்டு, காலமாற்றத்தில் அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை சுத்தி இருக்கும் ஊர்கள்  மல்லிக்கைக்கு பேர்போனது. இங்கு அரும்புகள் பறிக்கும் தொழிலுக்கு மற்ற ஊர்காரர்கள் செல்லும்போது  அரும்புகோட்டை என அழைக்கப்பட்டு அருப்புக்கோட்டை என  ஆனதாகவும் சொல்லப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் கால் ஆட்டிக்கிட்டு உக்காந்தால் கஞ்சி வரும்ன்னு ஒரு சொலவடை உண்டு. அதைக்கேள்விப்பட்டு, இந்த ஊருக்கு வந்த சோம்பேறி ஒருத்தன் திண்ணையில் உக்காந்துக்கிட்டு கால் ஆட்டிக்கிட்டு நாள் போக்கி இருக்கான். ஆனா, கஞ்சி கிடைக்கல. அந்த ஊர்க்காரவுங்களை கேட்டதுக்கு,  தம்பி! இந்த ஊரில் நெசவு தொழில் செய்பவர்கள்  காலினால் ஒரு கட்டைய மிதிச்சாதான் தறி வேலை செய்ய தொடங்கும். தறி வேலை செஞ்சா துணி உற்பத்தியாகி, அதன்மூலம் வருமானம் வந்து குடிக்க கஞ்சி கிடைக்கும்ன்னு விளக்கம் சொல்லி கஞ்சி வரம் கிடைக்கும் ஊர் என்பதால் கஞ்சிவரம் என அழைக்கப்பட்டு இப்ப காஞ்சிபுரம் என்றானது.  காஞ்சி என்னும் மரங்கள் சூழ்ந்த இடமாக இந்த இடம் இருந்ததால் இதற்கு காஞ்சிபுரம்ன்ற பேர் உண்டானதாகவும் சொல்லப்படுது. அகநானூற்றில் காஞ்சீயூர! என்ற சொல் குறிக்கப்பட்டிருக்கும். அதேமாதிரி, காஞ்சியூரன் ன்ற சொல் குறுந்தொகையில் இருக்கு. 

இன்னமும் தொடரும்...

நன்றியுடன்,
ராஜி

17 comments:

  1. அறிந்தேன் சகோதரி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. அடடே வியப்பான தகவலாக இருக்கிறது சகோ.

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் இந்த கிண்டல்ல ஒண்ணும் குறைச்சலில்லை. தாங்கள் அறியாத தகவல்களாண்ணே?!

      Delete
  3. அச்சரப்பாக்கம் பெயர்க் காரணம் வரவில்லையே எனக்கு ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது ஒரு படிப்பறியாதவன் ராஜாவிடம் பரிசில் வாங்க விரும்பினானாம் அரசனிடம் போகும் போது கேட்ட சில வார்த்தைகளைக் கோர்த்து பாடலாக்கிப் பாடினானாம் அதற்கும் அரச சபைப்புலவர்களர்த்தம் கண்டனராம் பரிசும் கிடைத்ததாம் அப்பாடல் முழுடும் நினைவில்லை “கன்னா பின்னா மன்னா தென்னா “ என்று ஏதோ வரும்

    ReplyDelete
    Replies
    1. காவெனக் கரவதும் கூவெனக் கூவுவதும்
      உங்கப்பன் கோவில் பெருச்சாளி - தானக்
      கன்னா பின்னா தென்னா மன்னா
      சோழரங்கப் பெருமானே!

      இதானேப்பா நீங்க சொன்ன பாடல்?! இதை பத்தி விவரமா இந்த வார ஐஞ்சுவை அவியலில் எழுதுறேன்.

      அச்சரப்பாக்கமும் பதிவில் வரும்.

      Delete
  4. தகவல் தொகுப்பு நன்று. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. படங்களில் பல இடங்கள் மிகவும் சுத்தமாக இருக்கிறது அதிலும் அந்த மேலூர் படம்

    ReplyDelete
    Replies
    1. மேலூரா?! அப்படி ஒரு ஊரே பதிவுல இல்லியே!

      அண்ணிக்கிட்ட பூரிக்கட்டையால மாத்து வாங்கி, வாங்கி மூளை கலங்கிட்டுது போல!

      நீங்க சொல்றது மேல்விஷாரம்ன்னு நினைக்குறேன். அது முஸ்லீம் ஏரியாண்ணே. வீட்டுக்கு ஒரு ஆள் அரபு நாட்டில் இருக்காங்க. பணம் கொழிக்கும் இடம்... அதான் சுத்தமா இருக்கு.

      Delete
  6. //உருட்டிங்குறது ஒருவித ராகம்ன்னும் //

    அது சுருட்டி.

    ReplyDelete
    Replies
    1. ஓ! மன்னிச்சு சகோ. திருத்திக்குறேன்

      Delete
  7. காளையார் கோவில் என்றதும் காளையார் கோவில் ரதம் என்று கோவி எழுதிய கதை நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! இப்படி ஒரு கதை இருக்குறது இப்பதான் சகோ தெரிய வருது.

      Delete
  8. ஊர்களையும், அதன் பெர்யகளையும் பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பை சுவாரஸ்யமாகப் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஊருக்கும் இதுமாதிரி ஒரு கதை உண்டு சகோ

      Delete
  9. உண்மையான கதைகளா அல்லது எல்லாமே புருடாவா

    ReplyDelete