Wednesday, May 20, 2015

மரி கனிவே என்னும் வாணி விலாஸ்ச சாகரா அணைக்கட்டு

மௌன சாட்சிகளில் மிகவும் பழமை வாய்ந்த இடங்கள் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து வருகிறோம். இந்த வாரம் நாம் பார்க்கபோவது, மாநிலம் தாண்டி வரலாற்று சிறப்புமிக்க ஒரு பொறியியல் நுணுக்கம் நிறைத்த ஒரு டேம்.
சித்திரதுர்க்கா மாவட்டம்,இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 மாவட்டங்கள்ல ஒண்ணு.இந்த மாவட்டத்தின் தலைநகரம் சித்திரதுர்க்கா டவுன்ல இருக்கு,இந்த மாவட்டத்தின் அமைவிடம் பார்த்தோம்னா தென்கிழக்கிலும், தெற்கிலும் தும்கூர் மாவட்டத்தையும்,தென்மேற்கில் சிக்மகளூர் மாவட்டத்தையும்,மேற்கில் தாவண்கரே மாவட்டத்தையும், வடக்கில் பெல்லாரி மாவட்டத்தையும்,கிழக்கில் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தையும் எல்லைகளாக இருக்கு.இந்த தாவண்கரே மாவட்டமும் முன்னர் சித்திரதுர்க்கா மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருகிறது.இந்த மாவட்டத்தில் தான் புகழ் பெற்ற வேதவதி, துங்கபத்திரை ஆகிய நதிகள் ஓடுகின்றன.இவ்வுளவு சிறப்பு மிக்க இந்த மாவட்டதில இருக்கிற ஹிரியூர் தாலுக்காவில வேதவதி நதியில் கட்டப்பட்டுள்ள மிகவும் பழமை வாய்ந்த வாணி விலாச சாகரா என்னும்  அணைகட்டைதான் நாம இன்னிக்கு மௌன சாட்சிகளில் பரர்க்கபோறோம்.
இதுதான் அணைக்கட்டின் முகப்பு வாயில், இந்த இடத்திற்கு செல்லும் வழியினை பற்றி பார்க்கலாம். இது ஒருமுக்கியமான சாலை என்பதாலும் அதிகாலை பொழுதில் பனிமூட்டம் இருப்பதாலும் மிக கவனமாக வண்டி ஒட்டி செல்லவேண்டும். நமது பயணம் பெங்களூரில் இருந்து தொடங்கிய போது அதிகாலை நான்குமணி பற்களெல்லாம் நர்த்தனம் ஆடும் அளவு குளிர். ஊரெல்லாம் ஏசி போட்டதுபோல் இருந்துச்சு வண்டி வேகமாக பெங்களூர் மும்பை NH4 நாற்கர சாலையில் அமைதியா சென்றது ரோடு எல்லாம் அகலமா, இருபக்கமும் பச்சை பசேலென செடி கொடிகளும் நல்ல உயரமான  தென்னைமரங்களும் மலைகளும் என பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு சந்தோசமாகவும் இருந்தது .காலை 7 மணியளவில் ஹிரியூரை நெருங்கி கொண்டு இருந்த சமயம் சாலையோர ஹோட்டல் ஒன்று தென்பட்டது உள்ளே சென்ற போது காமதேனு எஅழகான பெயர்பலகை இருந்தது.சாப்பிட இட்லி கேட்டபோது ஒரு பெரிய தட்டுநிறைய சாம்பாரும் இரண்டு டீஸ்பூனும் கொடுத்தார்கள். இட்லி எங்கே என்று சர்வரிடம் கேட்டபோது, கூட வந்தவர்கள் சத்தம்போடதே சாம்பாரில் இரண்டு இட்லிகள் மிதக்கிறது பார், என சொன்னபோதுதான் சம்பரையே கவனித்தேன் அதை அங்கே உள்ளவர்கள் லாவகமாக இரண்டு டீஸ்பூன்கொண்டு வெட்டி வெட்டி சாப்பிடும் முறையை பார்த்து அதேபோல் 2 இட்லியையும், சூடா ஒருகப் காப்பியையும், குடித்து விட்டு பயணம் தொடர்ந்தது.ஒருவழியாக அணைக்கட்டினை அடைந்தோம்
இதுதான் அணையின் முகப்பு வாயிலை தாண்டி உள்பக்கமாக செல்லும் வழி. நேர்த்தியான படிக்கட்டுகள் மூலம் மண்டபம், போன்று அமைக்கப்பட்டு இருக்கு. இதில் அணையினுடைய கொள்ளளவு அதன் பரபளவு பற்றி எழுதபட்டு  இருக்கு, சரி இந்த இடத்திற்கு எப்படி போகணும்னா பெங்களூர்ல இருந்து நேரடியாக ஹிரியூர் வந்து அங்கிருந்து இடப்பக்கமாக செல்லும் வழியாக செல்லலாம் இல்ல பெங்களூர் ல இருந்து தும்கூர் வழியாக சிரா வந்து அங்கிருந்து ஹிரியூர் செல்லலாம்
இது அணையினை பற்றிய ஒரு சிறு குறிப்பு அடங்கிய கல்மண்டபம்.இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டது இந்த அணை, இது 1898 ல் ஆரம்பிக்கபட்டு 1907 ல் கட்டி முடிக்கப்பட்டதாகும். மைசூர் மகாராஜா ஸ்ரீ நான்காம் கிருஷ்ணராஜா உடையார் ஆணைப்படி சர் விஸ்வஸ்வரையா மற்றும் தரசந்ததலால் என்பவர்களால் கட்டிமுடிக்கப்பட்டது  என்று சொல்லபட்டாலும் சம்மராஜா உடையார் என்ற மன்னர் மறைந்த பிறகு ஆட்சி பொறுப்பு ஏற்ற அவரது மனைவியால் தான்  முதன்முதலாக தொடங்கப்பட்டது.மக்கள் மற்றும், சமூகப்பணிகளில் ராணி மிகவும் அக்கறை கொண்டவர் என அங்கே உள்ள மக்களால் சொல்லபடுகிறது. அணைகட்டுவதற்கு நிதிபற்றாக்குறை வந்த சமயம் தங்களுடைய அரசு கருவுலங்களில் இருந்து பாரம்பரிய நகைகளை கொடுத்து உதவினாராம் மகராணி,இதன் காரணமாகவே இந்த அணைக்கு வாணி விலாஸ்ச  சகாரா என பெயரிடப்பட்டது என்று சொல்கிறார்கள். மேலும் மைசூர் மன்னரின் கடைசி மகளான வாணி விலாஸ்ச  என்பவரது பெயரில் இது அழைக்கப்பட்டது எனவும் சொல்லபடுவது உண்டு.இந்த மரிகநிவே அணை மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய அணைக்கட்டு என்ற சிறப்புகளை உடையது அதேசமயம் மைசூர் KRS அணையைவிட அதிக நீர் தேக்க சக்தி கொண்டதாகும்.
இதுதான் அந்த கல்மண்டபத்தின் தூரத்து காட்சி சரசெனிக் (ஹரப்பா )முறை கட்டிடகலையில் கட்டப்பட்டுள்ள இந்த அணை 62 ft. X 1300 ft. அளவு கொண்டது.இந்த அணை உள்ளூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டத்தின் உள்நாட்டு நீர் ஆதாரமாக உள்ளது. இது வலது மற்றும் இடது வங்கி கால்வாய்கள் மூலம் உள்ளூர் மற்றும் சள்லகேரே தாலுகாக்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சதுர கிமீ நிலங்களுக்கு பாசன வசதி கொடுக்கிறது. இந்த இடம் பெங்களூரில் இருந்து 160 கிமி தொலைவிலும் சித்திரதுர்கா விலிருந்து 40 கிமி தொலைவிலும் ஹிரியூரிலிருந்து சுமார் 20 கிமி தொலைவில் இருக்கிறது.
இவைகள் என்ன வென்று தெரியவில்லை மதகுகளாக இருக்கலாம் அவை ஓரமாக இருப்பதாய் பார்க்கும் போது அதிகபடியான தண்ணீரை வெளியேற்றும் அமைப்புகளா, என்னவென்று தெரியவில்லை.ஏதோ நுணுக்கமான பொறியியல் அமைப்பு என்பதால் இதையும் இங்கே பதிவிடுகிறேன்.
இந்த அணை இபொழுது இருக்கிற மார்டன் உபகரங்கள் இல்லாத காலங்களில் கட்டப்பட்டதாகும். அவ்வுளவு நுணுக்கமாக கட்டப்பட்டுள்ள ஒரு பொறியியல், அற்புதம்ன்னே சொல்லலாம்.மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு இருக்கு, உலகின் தலைசிறந்த கட்டிட கலைகளுள் ஒன்றாகவும் இந்த அணை கருதபடுகிறது.இந்த வாணி விலாஸ்ச சாகரா அணை மைசூர்  மன்னர்களால் செயற்கையாக அமைக்கபட்ட மிகப்பெரிய நீர்த்தேக்கம் அல்லது ஏரின்னே சொல்லலாம்.
மத்திய கர்நாடக டெக்கான் பகுதியில் இருக்கும்  நகரங்கள் கிராமங்கள் தண்ணீர் வசதி இல்லாத இடங்கள், மற்றும் விளைநிலகளுக்கு இந்த அணைக்கட்டு ஒரு வரபிரசாதமாக இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வேதவதி நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையை கட்டியவர்களின் பொறியியல் திறனை கண்டு மிகவும் வியந்து போனோம். இந்த அணையின் சுவர் இரு மலைகளை இடையில் கட்டப்பட்டு அவைகளை இணைப்பதாக உள்ளது அதன் உறுதியை ஒப்பிடும் போ து மலைகளிபோல் உறுதியாக இருக்கிறது.
இந்த அணையின் நடுபக்கத்தில் நின்று பார்க்கும் போது  நீல வானமும் நீல நிற நீர்தேக்கமும் வானத்தின் அடிவாரம் வரை இருப்பது போல்  இருக்கிறது, இதை பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி கண்களுக்கு ஒரு குளிர்ச்சி, இயற்கையின் எழிலை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.
போட்டோ எடுப்பதில் நாட்டம் உள்ளவர்களுக்கு, இது ஒரு சிறந்த தலமாகும் .மேலும், இங்குள்ள நீர்நிலைகள் மிகவும் ஆழமானவை அபாயகரமானவை முதலைகள் கூட இருப்பதாக சொல்கிறார்கள், அதனால் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்த படுகிறது.புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த இடத்திற்கு செல்லலாம் அவ்வுளவு அருமையாக உள்ளது .
இந்த அணை முக்கியமான சுற்றுலாதலமாக  இருந்தாலும், பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே வருகின்றனர்.ஆனால் எந்த ஊருக்கு போனாலும் எந்த மாநிலம் ஆனாலும் காதல் ஜோடிகளுக்கு மட்டும் சுற்றுலா தலங்கள் ஈடன் கார்டனாகவே இருக்கிறது.ஆனால் இபொழுது சுற்றுலாதுறையும், காட்டுஇலாகா துறையும் இந்த இடத்தை ஒரு நல்ல சுற்றுலா தலமாக மேம்படுத்தி உள்ளனர். மலையின் மீது ஒரு அரசினர் விருந்தினர்  மாளிகையும் இருக்கு.
இந்த வாணி விலாச சகரா அணை  மரிகநிவே என்றும் அழைக்க படுகிறது. காரணம், இந்த அணையின் அடிவாரத்தில் வரலாற்று முக்கியம் வாய்ந்த கனிவே மாராம்மா என்னும் கோவிலும், அதை ஒட்டி அழகான பூங்காவும் அமைந்துள்ளது இதனாலேயே இந்த இடத்திற்கு மரி கனிவே ன்னும் பெயர் வந்தது.
அக்டோபரில் இருந்து ஜனவரி வரை உள்ள காலம் இந்த அணைக்கட்டினை பரர்க்க சிறந்த காலங்கள் என சொல்லபடுகிறது .ஏன்னா, கனிவே மாரம்மா கோவிலில் ஆண்டின் ஒவ்வொரு, நவம்பர் மாதமும் திருவிழா கொண்டாடப்படும். அந்த சமயத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் திருவிழா கொண்டாத்திற்காக இந்த இடத்திற்கு வருவாங்க, அபொழுது மக்கள் இந்த அணைகட்டை பார்வையிட  திரளாக வருவாங்களாம் .   
இதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா இந்த இடத்தை சுற்றிலும் நிறைய தமிழ் ஆட்கள் பெரிய  விவாசாய விளை நிலங்களோட வசிக்கிறாங்க. கர்நாடகாவின் மத்திய பகுதியில் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று யோசிக்கும் போது, கூட்டத்தில் இருக்கும் பெரியவர் ஒருவர் சொன்னார் இந்த அணையை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் இருந்து நிறைய ஆட்களை கொண்டுவந்து கட்டிமுடித்தார்களாம், ஆண்டு கணக்கில் கட்டிட பணிகள் நடந்ததினால் அவர்கள் இங்கே குடும்ப சகிதம் தங்கிவிட்டனராம், அணைக்கட்டு பணிகள் முடிந்த பிறகு, அவர்களது பரம்பரையினர் இங்கே விவசாயம் செய்து இங்கேயே தங்கி கர்நாட்டக குடிமக்கள் ஆகிவிட்டார்கள் என்று சொன்னார் .
ஒரு அருமையான பழமை வாய்ந்த பொறியியல் நுட்பம் நிறைந்த ஒரு அணைக்கட்டை பார்த்த நினைவுகளுடன் பயணம் இனியதாக அமைந்தது, இங்கே செல்பவர்கள் தண்ணீரின் ஆழம் தெரியாமல் தயவு செய்து இறங்கவேண்டாம் ,அதுபோல உண்வு பொட்டலங்களை முடிந்தால் கொண்டு செல்லுங்கள், ஏனெனில் இங்கே எந்த ஹோட்டலும் கிடையாது. முக்கியமாக, தூய்மையான இந்த இடத்தை நாம் கொண்டு செல்லும் உணவு பண்டங்களால் அசுத்தம் செய்யாமல் இருக்கவேண்டும்..நன்றி, மீண்டும் அடுத்தவாரம் மௌன சாட்சிகளில் பழம் பெருமை வாய்ந்த வேறு ஒரு இடத்திலிருந்து சந்திக்கலாம் .

11 comments:

  1. அருமையான ஒரு இடம் பற்றிய குறிப்புகளுக்கு நன்றி. அந்தப் பக்கம் செல்ல நேர்ந்தால் சென்று வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா ..வெகுநாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி ...

      Delete
  2. ஒரு அருமையான பழமை வாய்ந்த பொறியியல் நுட்பம் நிறைந்த ஒரு அணைக்கட்டை எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். முன்னெச்சரிக்கையும் கொடுத்துள்ளீர். புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ..அவசியம் போய்வாருங்கள், அங்கிருந்து 40 கி மீ தொலைவில் ஒரு கோட்டை இருப்பதாகவும் கேள்விபட்டேன் ..வாய்ப்பு கிடைத்தால் அதையும் பதிவிடலாம் என எண்ணுகிறேன் ...

      Delete
  3. அழகிய படங்கள், அழகிய இடம். தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ..அவசியம் சென்று வாருங்கள் ...

      Delete
  4. மிகவும் அழகாக இருக்கிறது. அமைதியாகவும் தெரிகிறது. நல்ல புகைப் படங்கள் மற்றும் தகவல்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ ...

      Delete
  5. பிரமாண்டம்... அருமையான விளக்கங்கள் தகவல்களுடன்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா ..மிகவும் பிரம்மாண்டம்மான அமைப்புடன் பார்பதற்கு அருமையாக உள்ளது பார்க்கவேண்டிய இடம் ...

      Delete
  6. அன்புள்ள சகோதரி ராஜி அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைத்தள (தமிழ்மணம்) வாசகர்களில் நானும் ஒருவன்

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (20.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 20ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/20.html

    ReplyDelete