Tuesday, November 10, 2015

அட! தீபாவளில இத்தனை விதமா?!

ந்திரமயமாகிவிட்ட இந்த உலத்தில் நம் வாழ்க்கையும் எந்திரம் போலவே ஆகி போனதுதான் துரதிர்ஷ்டம்.  காலை எழுந்து , இரவு படுக்கும் வரை நம் அன்றாட பணிகள் ”என்னடா வாழ்க்கை இது?!ன்னு அலுப்பை உண்டாக்கி நம் வாழ்க்கையின் மீதே சலிப்பை உண்டாக்கிடுச்சு.  வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டாலும் வெறுப்பு வரக்கூடாதுன்னுதான் திருவிழாக்களையும், பண்டிகைகளும் உண்டானது. நம் அன்றாட பணிகள், சலிப்பு, அலுப்பிலிருந்து விடுபட்டு குடும்பம், சுற்றம், சொந்தம் சூழப் பண்டிகைகள் கொண்டாடி அனைவரும் மகிழ்ந்திருப்பதில் தீபாவளிக்கு முதலிடம்.
தீபாவளியின் சிறப்பு:
ஆனால், அப்பண்டிகைகள் இன்று  வெறும் மகிழ்ச்சிக்கும், கேலிகூத்துக்கும் மட்டுமேன்னு ஆகிடுச்சு. பண்டிகை வாயிலாக ஆன்மிகத்தையும், பக்தியையும், இறைவனையும் உணரும் வகையிலேயே பண்டிகைகள் தோணுச்சுன்னு நம் வருங்கால சந்ததிகளுக்கு நாம புரிய வைக்கனும்.
நரகாசுர வதம், என சொல்லப்படுவது, உண்மையில் கதையாக சொல்லபட்டாலும், மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும், அகங்காரம், பொறாமை, தலைக்கணம், அறியாமை என்னும் இருள் இருக்கத்தான் செய்கிறது. புற இருளைத் தீபங்கள் கொண்டு விரட்டுவதைப் போல, அக இருளை, ஒழுக்கம், பிறருக்கு உதவுதல் போன்ற நற்குணம் கொண்டு விரட்டவேண்டும் என்பதே அதன் தத்துவமாகும்.
நரகாசுர வதம்:
மக்களையும், ஏனைய உலக உயிர்களையும் துன்புறுத்தி வந்த நரகாசுரன் என்ற அசுரனை, கண்ணனும் அவரது மனைவியில் ஒருவரான சத்தியபாமாவையும் (நரகாசுரனின் தாய் பூமாதேவியின் அம்சமே சத்தியபாமா) சேர்ந்து சம்ஹாரம் செய்த நாளே தீபாவளி என்று பக்தி மார்க்கமான கதை தெரிவிக்கிறது.ஆனால், வட இந்தியர்கள், சீக்கியர்கள், சமணர்கள், போன்றவர்கள் வேறு சில நிகழ்வுகள் மற்றும் புராணக் கதைகளைக் காரணம் கொண்டு தீபாவளியை கொண்டாடுகிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமளிக்குது.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு பக்தி மார்க்கமாக கூறப்பட்டுள்ள கதையில் புதைந்திருக்கும் வாழ்க்கை தத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். 10 அவதாரங்கள் எடுத்து, பலப்பல பராக்கிரமங்கள் புரிந்த கிருஷ்ணரால், நரகாசுரன் என்ற அசுரனை தனியாக போரிட்டு வெல்ல முடியாதா என்ன? எதற்காக அவருக்கு சத்தியபாமா என்ற பெண்ணின் உதவி தேவைப்படுகிறது??!!
கணவன்–மனைவி தத்துவம்:
கவலையும், மகிழ்ச்சியும் மாறி மாறி வரும் மனித வாழ்க்கையில் மனைவியின் துணையின்றி கணவனால் வெற்றிப் பெற முடியாது என்பதையே சத்தியபாமா, கண்ணன் கதையின் மூலம் நமக்கு உணர்த்தும் உண்மை. கணவனும், மனைவியும் இணைந்து வாழ்வதே வாழ்க்கை. அப்படி வாழும்போது வரும் துன்பங்களை இருவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். இருவரும் ஒன்றாகத் துன்பங்களை எதிர்க்கொண்டு அதனை வெற்றிக்கொண்டால்தான் வாழ்வில் இன்பங்கள் ஏற்படும்.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு பல கதைகள் கூறப்பட்டாலும், ”தீபங்களை ஏற்றி வழிப்படுவதே தீபாவளி” என்பது தான் மையக் கருத்தாக அமைந்துள்ளது. இந்து மதத்தின் தத்துவப்படி வெளிச்சத்தை ஏற்படுத்தும் ஒளியானது, ஞானத்தின் பிறப்பிடமாக பார்க்கப்படுகிறது. எனவே, தீபாவளியன்று ஏற்றப்படும் தீப விளக்குகள், மனித வாழ்வில் ஞானத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்தப் பண்டிகை மனிதர்களிடையே ஞானத்தையும், அன்பையும், நட்பையும் வலியுறுத்துது.
ஆனால், தீபாவளி ஒருநாள் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகை  அல்ல. ஆறுநாட்கள் கொண்டாடப்படுவதாகும். முதல்நாள் பசுவிற்கு வழிபாடு செய்யப்படுகிறது. அதற்கும் ஒரு கதை இருக்கு. நமது பழைய புராணங்களில் இந்தக் கதை சொல்லப்பட்டு இருக்கு. ”வேனா” நாட்டு அரசனின் மகனான ”பிரித்து”, பூவுலகு முழுவதும் முடிசூட்டி ஆண்ட மிகப்பெரிய சக்ரவர்த்தி, இவர் விஷ்ணுவின் அவதாரம் எனவும் சொல்லப்படுகிறது. “வேனா” மன்னர் காலத்தில் கடுமையான பஞ்சம் இருந்ததாகவும், “பிரித்து” சக்ரவர்த்தி காலத்தில் பூமித்தாய் பசுவின் வடிவம் கொண்டு தனது பாலை கொடுத்து மக்களுக்கு பசியாற்றி அவர்களை செழிப்புற செய்ததாகவும், அவர்காலத்தில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை மகாபாரதத்திலும், விஷ்ணு புராணத்திலும் குறிபிடப்பட்டுள்ளது. இவரது வரலாற்றை தனியாக வேறு பதிவில் பார்க்கலாம். இதனால்தான், பூமித்தாய்க்கு வழிபாடு செய்யும் விதமாக பசுவிற்கு வழிபடு செய்வது முதல் நாள் கொண்டாடப்படுகிறது. 
தீபாவளியின் இரண்டாம் நாள்தான் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் கொண்டாடப்படும்.  இந்த நாளை ”தன்டேராஸ்” எனக் கூறுவார்கள். சந்திர மாதத்தின் இரண்டாம் பகுதியில் 133 ஆம் நாளன்று இது ஏற்படும். தங்கம் மற்றும் பிற வடிவில் சொத்து வாங்க இந்த நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் கடவுள்களின் மருத்துவரான தன்வந்திரியின் பிறந்த நாளாகும். தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் நல்ல ஆரோக்கியத்தை அருள, கடவுளை வணங்குவதற்கான மங்களகரமான நாளாகவும் இது கருதப்படுது.
தீபாவளின் மூன்றாம் நாள், நரக சதுர்தசி என அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் கிருஷ்ணபட்சத்தின் 14வது நாள்தான் சதுர்தசி. இதனை நரக் சதுர்தசி என்று கொண்டாடுகின்றனர். அன்று தான் நரகசுர வதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. பிரத்யோஷபுரம் என்னும் நாட்டை ஆண்ட ”நரகாசுரன்” தன் நாட்டு மக்களை மிகவும் துன்புறுத்திவந்தான். இதனால் இந்நாட்டு மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தார்கள். அவன் வாங்கிய வரத்தின்படி கிரிஷ்ணரின் மனைவி சத்யபாமாவினால் கொல்லப்பட்டு, நாட்டு மக்களை நரகாசுரனின் கொடுமையில் இருந்து விடுவித்த தினம் மூன்றாம் நாள் பண்டிகையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை நினைவு கூர்வதுதான் மூன்றாம் நாள். இந்த நாளின் போது வீடுகளில் தீய சக்திகள் அண்டாமல் இருக்க வீட்டை ரங்கோலி கோலத்தாலும், விளக்குகளாலும் அலங்கரிப்பார்கள்.
தீபாவளி அன்று நான்காம் நாள், விநாயகரையும், லட்சுமியையும் ஒன்றாக வழிப்படுவது மரபாகும். லட்சுமித்தேவியை வரவேற்க, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது மரபு. தீபம் என்பது லட்சுமி கடாட்சம் ஆகும். லட்சுமித்தேவி, செல்வச்செழிப்பிற்கும், வளத்திற்கும் கடவுள். அதேப்போல், விநாயகர் அறிவாற்றலுக்கு கடவுள் என்பதும் நாம் நன்றாக அறிந்த ஒன்றாகும். மக்கள் செழிப்பையும், அறிவாற்றலையும் பெறுவதற்காக இவ்விருவரையும் ஒன்றாக இந்நாளில் வழிப்பட்டு வருகின்றனர்.
தீபாவளியின் ஐந்தாவது  கோவர்தன் பூஜை செய்கின்றனர். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கிப் பிடித்து நிறுத்தியதை நினைவு கூரும் வகையில் இந்த பூஜையை காலங்காலமாக மக்கள் செய்து வருகின்றனர். மனிதர்களையும், கால்நடை கூட்டங்களையும்  வெள்ளத்தில் இருந்தும், மழையில் இருந்தும் காப்பாற்ற கோவர்த்தனமலையை கிருஷ்ண பரமாத்மா தூக்கியத்தைக் குறிப்பதே இந்த நாளாகும்.  

இராமன் பாலம் கட்டியபோது அனுமன் கோவர்த்தன மலையை தூக்கிச் சென்றராம். அதற்குள் பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதால் ஓரிடத்தில் அந்த மலையை வைக்கும்போது, அனுமனிடம் மலை கேட்டதாம், என்னை ஏன் இங்கே வைத்துவிட்டுச் செல்கிறாய் என்று. அதற்கு, ராமர் அடுத்து கிருஷ்ண அவதாரம் எடுத்து இங்கே வந்து உன்னை தூக்குவார். அதுவரை, இங்கே காத்திரு என்று பதிலளித்தாராம். அதன்படியே கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கிப் பிடித்து மக்களுக்கு காட்சியளித்ததையே கோவர்த்தன பூஜையாக வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர். கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற தென்னக மாநிலங்களில் இந்த ஐந்தாம் நாளை ”பாலி பட்யமி” என அழைப்பார்கள். இந்த நாளில் தான் விஷ்ணு பகவான் அசுர அரசனான பாலியை அழித்துள்ளார். மராத்தியர்கள் இந்த நாளை ”நவ தியாஸ்” அல்லது ”புதிய தினம்” என அழைக்கிறார்கள்.
ஆறாவது நாளை ”பாய்துஜ்” எனவும் அழைக்கிறார்கள். சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பை நினைவுப்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வங்காள நாட்டை சேர்ந்தவர்கள் இந்த நாளை ”பாய் போட்டா” எனவும், குஜராத்தியர்கள் இந்த நாளை ”பாய் பிஜ்” எனவும் அழைப்பார்கள். இந்த நாளின் போதுதான் மரணத்தின் கடவுளான ”யமதர்மன்” தன் தங்கையான ”யாமி”யை (யமுனை நதி) சந்தித்தார் என புராணம் கூறுகிறது. இன்றைய தினம் சகோதரர்கள் தங்களது சகோதரிகளின் இல்லங்களுக்குச் சென்று அவர்கள் நலம் விசாரிக்கும் தினமாக கடைபிடிக்கின்றனர். சகோதரிகளும் தங்களது சகோதரர்களின் நலன், வெற்றிக்காக பூஜைகள் செய்கின்றனர். இந்த நாளின் போது, எப்படி தன் சகோதரனான எமனுக்கு யாமி விருந்து படைத்தாரோ, அதேபோல் இந்நாளில் சகோதரர்களும், சகோதரிகளும் உணவைப் பகிர்ந்து கொள்வார்கள்.
ராமரின் தீபாவளி:


இராமாயணத்தில் கூட இராமர் வனவாசம் முடிந்து, இராவணனை வென்று, வெற்றிகரமாக நாட்டிற்கு திரும்பியதை மக்கள் தீபம் ஏற்றி கொண்டாடினார்கள். இராமர் மீண்டும் அயோத்திக்கு திரும்பி பட்டம் கட்டிக் கொண்ட இந்நாளே தீபாவளி எனவும் சொல்லப்படுகிறது. 

சிவன் தீபாவளி:
சக்தி தேவி 21 நாட்கள் மேற்கொண்ட கேதாரகௌரி விரதம் முடிவுற்ற இத்தினத்தில் தான் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக உருவெடுத்தார். இந்த தினமும் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என ஸ்கந்த புராணம் கூறுகிறது.
1577-ல் இந்த தினத்தில தான் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியது. இந்த நாளையே சீக்கியர்கள் தீபாவளி திருநாளாக கொண்டாடுகின்றனர்.

மாஹாவீரர் நிர்வாணம் அடைந்த இந்த  தினத்தில்தான். ஆகவே, சமண மதத்தினரும் தீபாவளியை அமோகமாக கொண்டாடுகிறார்கள் .
ஜப்பானில் தீபாவளி
முன்னோர்கள் அனைவரும் தம் தம் சந்ததியினருக்கு ஆசி வழங்கும் தினமாக இந்த தீபாவளி பார்க்கப்படுகிறது. அந்த முன்னோர்களுக்காக விளக்குகளை ஏற்றி வைத்து, அவர்களை பூமிக்கு வரவேற்கும் வழிப்பாடாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் இதுபோன்று தீபாவளி கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. ‘டோரோனாகாஷி’ என்பது தான் ஜப்பானிய தீபாவளிக்கு பெயர்.
சீன தீபாவளி:
தீபாவளி அன்று விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பார்கள். மேலும் தங்களின் வீட்டு கதவுகளில் ‘வளங்கள் பெருகட்டும், நல்வாழ்வு அமையட்டும்’ என்பது போன்ற வாசகங்களை எழுதி வைப்பார்கள். புதுவருட கணக்கையும் இந்த தீபாவளி நாளில்தான் சீன மக்கள் தொடங்குகிறார்கள்.
கேரள தீபாவளி:
பிரகலாதனின் பேரன் ”மகாபலி சக்கரவர்த்தி”. மகாபலி முடிசூடிக் கொண்ட நாளே ‘தீபாவளி’ என்றும் கூறப்படுகிறது. அன்று  ஏற்றப்படும் தீபம், ‘எமதீபம்’ என்று அழைக்கப்படும். வாமன அவதாரம் எடுத்த நாராயணர், மகாபலி சக்கரவர்த்திக்கு அருள்புரிந்தார். அவருக்கு ஞான திருவடி சூட்டிய நாளே தீபாவளி என்றும் கூறப்படுகிறது. இதையே கேரள மக்கள் ‘ஓணம்’ பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.
மராட்டிய தீபாவளி:
வீரச்செயல்களில் சிறப்பு மிக்கவர் மராட்டிய மன்னனான சத்ரபதி சிவாஜி. அவர் தன்னுடைய விரோதிகளின் கோட்டையைத் தாக்கி கைப்பற்றிய நாள் தீபாவளி என்று கூறப்படுகிறது. அதன் நினைவாக பொதுமக்கள் தங்களின் வீட்டு வாசல்களில் மண்ணாலான ஒரு சிறிய கோட்டையை கட்டுகிறார்கள். இந்தக் கோட்டை கட்டும் நிகழ்ச்சியில் சிறார்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துக்கொள்வார்கள். தீபாவளி தினத்தன்று மும்பையில் மண் கோட்டை கட்டப்படுவதை இன்றும் காணலாம்.

இந்த தீபாவளி பண்டிகை ,இந்துக்கள் பண்டிகை என்று இல்லாமல், மேற்கத்திய நாடுகளில், “ஃபெஸ்டிவல் ஆப் லைட்ஸ்” (Festivals Of Lights) என்று கொண்டாடுகிறார்கள் காரணம் தெரியாவிட்டாலும் கூட அவர்கள் கொண்டாடுவது நமது பண்டைய காலச்சாரம். ஒருகாலத்தில் உலகளவில் பரவியிருந்திருக்கலாம்.
எது எப்படியோ! போட்டி போட்டுக்கிட்டு எல்லா கடைகளிலும்  தள்ளுபடி விலையில் துணிமணி, வீட்டு உபயோகப் பொருட்கள்லாம் கிடைக்குது. அதைலாம் வாங்கி நம்ம மனசும், வீடும்  தீப ஒளிப்போல நிறையுது. சேமிப்பு பணம் கறைவதுப் போல நம் கவலைகளும், துக்கங்களும் கறைஞ்சா நல்லா இருக்கும்.

மனதில் மகிழ்ச்சியுடனும், அனைவரிடமும் அன்பையும், நட்பையும் பாராட்டி இருப்போமானால் தீபாவளி நாள் மட்டுமல்ல,  ஒவ்வொரு நாளுமே தீபாவளி போல குதூகலமாய்த்தான் இருக்கும்.
சகோ’ஸ் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 

தீபாவளி அதுவுமா நம்ம வூட்டுக்கு வந்திருக்கீங்க. அதனால எல்லோரும் இனிப்பு எடுத்துக்கோங்க. பயப்படாதீங்க. நான் செய்யல.

எல்லோரும் எடுத்துக்கிட்டீங்களா?!  நான் தீபாவளி ஸ்வீட் தந்துட்டேன். இதேப்போல, சகோதரர்கள் அனைவரும் சகோதரிக்கு செய்ய வேண்டிய சீரை ஒழுங்கா செஞ்சுடனும். இது முக்கியமா, அமெரிக்கா, துபாய், வியட்நாம், சென்னை, கோவைல இருக்குற அண்ணன், தம்பிகள்லாம் நோட் பண்ணிக்கோங்கப்பா. சீர் வரலைன்னா நான் சண்டைக்கு இழுப்பேன்.

22 comments:

  1. எனது இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  2. இந்த லிங்கில் உங்களுக்கான சீர்வரிசைகள் இருக்கிறது எவ்வளவு வேண்டுமானல் எடுத்து கொள்ளுங்கள்
    https://www.google.com/search?q=deepavali+sweets&biw=1093&bih=435&source=lnms&tbm=isch&sa=X&ved=0CAYQ_AUoAWoVChMIn43TwuaEyQIVRcMUCh3n2AS1

    ReplyDelete
    Replies
    1. சீர் வரிசைக்கு நன்றி சகோ

      Delete
  3. அருமை அருமை
    படங்களுடன் அறியாத பல அற்புதத்
    தகவல்களுடன் சிறப்புப் பதிவு
    வெகு வெகுசிறப்பு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    (கனவுகள் காணாமல் போனால் பரவாயில்லை
    நீங்கள் அடிக்கடி பதிவில் வாருங்கள் )

    ReplyDelete
    Replies
    1. இனி்அடிக்கடி வருவேன்ப்பா. தீபாவளி வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் நன்றிப்பா!

      Delete
  4. தீபாவளி வாழ்த்துக்கள்.
    தீபங்களும் பலவிதம்.
    தீபாவளிகளும் பலவிதம்.

    தின்னும் பக்ஷணங்கள் பலவிதம்.
    திரும்பத் திரும்பப் படிக்கவைக்கும் பதிவோ
    ஒரே விதம்.

    நல்ல வர்ணனை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  5. தீபாவளி பற்றி விரிவான தகவல்கள்! சுவாரஸ்யமான பதிவு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி சகோ!

      Delete
    2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  6. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணா!

      Delete
  7. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அரிய தகவல்,
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  10. சுவாரஸ்யமான தகவல்கள்..சில பல தெரிந்திருந்தாலும்...நன்றி சகோ....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த சகோதர, சகோதரியிடமிருந்து இனிய தீபாவளி வாழ்த்துகள்! லேட்டுதான். இருந்தாலும் நாளையும் தீபாவளிதான் பல மாநிலங்கள் நாளைதான் கொண்டாடுகின்றார்கள். உங்கள் ஸ்வீட் எடுத்துக் கொண்டோம். உங்களுக்கான ஸ்வீட் இன்று எங்கள் தளத்தில் கிடைக்கும் ராத்திரியாகிடும். எனவே நாளை பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்....ஓகேயா...

    ReplyDelete
  11. ஆண்டுக் கொருமுறை தீபாவளி வரலாம் !!!!! நீங்கள்!

    ReplyDelete
  12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ராஜி!

    ReplyDelete
  13. தீபாவளிப் பண்டிகை குறித்து எவ்வளவு புதிய தகவல்கள்... நன்றி ராஜி.

    ReplyDelete
  14. தகவல்கள் பலவற்றைக் கொண்ட பதிவு. பாராட்டுகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. //கண்ணனும் அவரது மனைவியில் ஒருவரான சத்தியபாமாவையும் (நரகாசுரனின் தாய் பூமாதேவியின் அம்சமே சத்தியபாமா) சேர்ந்து சம்ஹாரம் செய்த நாளே தீபாவளி//

    சத்யபாமாவும் என்று வரவேண்டும். அர்த்தமே மாறி விடுகிறதே!

    அறிந்த விவ்ரங்களாயினும் சுவாரஸ்யமாய்ப் படிக்க முடிந்தது. தம வாக்குகள் தவறாமல் அளித்து விடுவது என் வழக்கம்!

    :))))

    ReplyDelete