Tuesday, November 01, 2016

அறுபடை வீடு - முதல் படை வீடு திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு .  247 தேவாரத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த தலத்தைப் பத்தி பாடியிருக்காங்க.
இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் இருப்பது வேறு எந்த முருகன் திருக்கோவில்களிலும் காணக்கிடைக்காத காட்சி. 
திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். துர்க்கையின் சன்னதி எதிரிலேயே கொடிமரமும், கோபுரமும் இருந்து தலத்தின் சிறப்பை அதிகரிக்கின்றன. கருவறையில் துர்க்கைக்கு இடது புறம் கற்பக விநாயகர் அருளுகிறார். கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். இதுவும் ஒரு சிறப்பு. 
இந்த கோவிலில் கருவறைக்கு மேலே விமானம் இல்லாததால் மலையையே விமானமாக வணங்குகின்றனர். சிவபெருமானே மலை வடிவில் அருளுகிறார். திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். 
அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இங்குதான் சூரசம்ஹரத்தின் போது சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குவார். இங்கு மட்டும் தான் முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மற்ற வீடுகளில் நின்ற கோலத்தில் அருளுகிறார். இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அருளுகிறார். அருகில் நாரதர், இந்திரன் ஆகியோர் உள்ளனர். பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். சூரியன், சந்திரன், கீழே முருகனின் வாகனமான மயில் மற்றும் ஆடு உள்ளது. இது மற்ற தலங்களில் காணக் கிடைக்காத அபூர்வக் காட்சி ஆகும்.
சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் இங்கு வசிப்பதாக ஐதீகம்.சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். இங்கு இவர்தான் பிரதான மூர்த்தி ஆவார். விழாக் காலங்களில் இவருக்கு தான் கொடி ஏற்றப்படுகிறது. இருப்பினும் முருகனே சிவபெருமானின் வடிவம் என்பதால் அவரே வீதி உலா வருகிறார் என்பது இன்னொரு சிறப்பு.
 மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார். இங்கு சிவபெருமானுக்கு எதிரே பவளக்கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சிவனுக்கு எதிரே நந்தி இல்லை, பெருமாளுக்கு எதிரே கருடன் இல்லை. மாறாக சிவனும் பெருமாளும் எதிர் எதிரே உள்ளனர். ஆகவே இதனை மால்விடை கோவில் என்று அழைப்பது இன்னொரு சிறப்பு. 
இந்த பவளக்கனிவாய்ப் பெருமாள் தான் மதுரையில் நடைபெறும் மீனாக்ஷி திருக்கல்யாணம் அன்று சொக்கருக்கு தாரை வார்த்து கொடுக்கப்போவார்.ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே "திருப்பிய பரங்குன்றம்" என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்" என்று மருவியது.
அருணகிரியார் தன் பாடல்களில் தென்பரன்குன்றுரை பெருமாளே என்று பாடுகிறார். இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை "சத்தியகிரீஸ்வரர்" என்று அழைக்கின்றனர்.முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாற்றப்படுகிறது. முருகன் குடைவரை மூர்த்தியாக இருப்பதால் இந்த ஏற்பாடு. 
புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று முருகனிடம் உள்ள வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு அபிஷேகம் நடக்கும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இங்கு மட்டுமே ஆகும். வேலுக்கு முக்கியத்துவம் ஏன் என்றால் சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததே ஆகும்.சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருப்பது மற்றுமோர் சிறப்பு ஆகும்.
தங்களை சூறை ஆடிய சூரபத்மனை சுப்பிரமணியர் அழித்ததின் நன்றிக் கடனாக அவருக்கு தனது மகளான தேவசேனாவை திருமணம் செய்து கொடுக்க இந்திரன் ஆசைப்பட்டார். அங்கு கூடி இருந்த பிரம்மா மற்றும் விஷ்ணு போன்றவர்களிடம் அதை அவர் தெரிவிக்க அவர்களும் அதை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அது குறித்து அவர்கள் சுப்ரமணியரிடம் கூறியவுடன் அவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆகவே இந்திரன் தனது மனைவி இந்திராணி மற்றும் மகள் தேவசேனாவை அழைத்து வருமாறு தூதுவர் ஒருவரை அனுப்பினார். திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த திருமணத்திற்கு சிவனும் பார்வதியும் வந்து சுப்ரமணியருக்கு வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார்கள். அது முதல் அந்த இடம் புகழ்பெற்ற தலமாயிற்று.
சுப்பிரமணியர் கண்டவீரப்பு என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, மகாவிஷ்ணுவின் இரண்டு புதல்விகளான அமிருதவல்லியும் சுந்தரவல்லியும் தங்களுக்கு சுப்பிரமணியருடன் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டு சரவணா பொய்கைக்கு வந்து தவம் இருந்தார்கள். அவர்களது தவத்தை மெச்சிய சுப்பிரமணியர் அமிருதவல்லியிடம் ''நீ இந்திரனின் மகளாகப் பிறந்தவுடன் தக்க சமயத்தில் வந்து உன்னை மணப்பேன்' என்றார். அது போலவே இளையவளான சுந்தரவல்லிக்கும் காட்சி தந்தார். அவளும் சிவ முனி என்ற முனிவரின் மகளாகப் பிறந்து நம்பி என்ற வேடனால் வளர்க்கப்பட்டு சுப்ரமணியரை மணந்து கொண்டார்.
அதற்கு முன்னர் அமிருதவல்லி ஒரு சிறிய பெண்ணாக வடிவெடுத்து மேரு மலையில் இருந்த இந்திரனிடம் சென்று 'நான் மகா விஷ்ணுவின் மகள் ஆவேன். ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அவர் உங்களிடம் தந்து உள்ளார் என்பதினால் இங்கு வந்தேன் என்றாள். அதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் யானை ஐராவதரை வரவழைத்து அந்தக் குழந்தையைப் பாதுகாக்குமாறுக் கூறினார். அந்த யானையும் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து அவளை எடுத்து வளர்த்தார். அதனால்தான் யானையினால் வளர்க்கப்பட்ட அவள் தெய்வ யானை என்றப பெயரைப் பெற்றாள். அவளுக்கு திருமண வயது ஆயிற்று. சூரபத்மனை அழித்துவிட்டு சுப்பிரமணியர் திரும்பியதும் அவருடன் அவளுக்கும் திருமணம் ஆயிற்று.
இத்திருக்கோவில் மதுரை , மாட்டுதாவணியில் இருந்து ,திருமங்கலம் செல்லும் பேருந்து வழிகடத்தில் இருக்கிறது.மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன .இந்த திருக்கோவிலின் அருகில் தான் மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி இருக்கிறது .
சஷ்டி விரதத்தை முன்னிட்டு இன்னிக்கு அறுபடை வீடுகள்ல முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டோம்.நாளைக்கு இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் பற்றி பார்ப்போம்..

7 comments:

 1. அருமையான வர்ணனை, படங்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ..உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் ...

   Delete
 2. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு! அருமையாக விவரித்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ..உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் ,,,

   Delete
 3. அருமையான தகவல் தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் ஒவ்வொரு படைவீடும் தொடரும் ...நன்றி சகோ ...

   Delete
 4. முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தை பல வருடங்களுக்கு முன் பார்த்தது...சிறப்பான பகிர்வு

  ReplyDelete