மண்ணுமில்லாம, விதையுமில்லாம விளைஞ்சு வருவது எது?! இந்த கேள்விக்கு ரொம்ப விவரம் தெரிஞ்ச பெருசுங்களும், மெத்த படிச்சவங்களும்தான் பதில் சொல்வாங்க. என்னைய மாதிரி ஆளுங்களுக்குலாம் பதில் தெரியாது. அப்புறம் எப்படி இந்த பதிவுன்னு நினைக்காதீங்க, முன்ன இந்த கேள்விக்கு பதில் தெரியாது. ஆனா இப்ப அந்த கேள்விக்கு பதில் தெரியும். அந்த கேள்விக்கான பதில் உப்பிட்டவரை உள்ளளவும் நினை, உப்பில்லா பண்டம் குப்பையிலேன்ற பழமொழிக்குலாம் சொந்தக்காரரான உப்பு தான் . உப்புக்கு லவனம்ன்னும் இன்னொரு பேர் இருக்கு.
உப்பு உலகம் முழுக்க பரவலா பயன்படுத்தப்படுது. இருந்தாலும், தமிழர் வாழ்வில் உப்பு சுவைக்காக மட்டுமில்லாம ஆன்மீக விசயமாவும் பயன்படுது. உப்பு விளையும் இடத்துக்கு பேரு உப்பளம். உப்பை விற்குறவங்களுக்கு பேரு உமணர்கள்ன்னு சங்க இலக்கியத்தில் சொல்லி இருக்கு. நெல்லின் நேரே வெண் கல் உப்பு என சோழர்காலத்தில் நெல் விளையும் இடமும், உப்பளமும் அருகருகே இருந்திருக்கு. அதுமட்டுமில்லாம இரண்டின் மதிப்பும் சரிசமமா இருந்துச்சாம். உப்பு விளைச்சலை தங்கள் நேரடி கண்காணிப்பின்கீழ் சோழ, பாண்டிய அரசர்கள் வச்சிருந்தாங்களாம். பெரிய பெரிய உப்பளங்களுக்கு அரசர்கள் பெயர் சூட்டுவது அந்நாளில் வழக்கமா இருந்திருக்கு, அப்படி உருவான பேர்தான் பேரளம், கோவளம்.
உப்புல சௌவர்ச்கலம், சைந்தவம், விடம், ஔபிதம், சமுத்திரம் என மொத்தம் 5 வகை இருக்கு. இந்த ஐந்தும் ஒன்றோடு ஒன்று கலந்து மொத்தம் 15 விதமான உப்பா மாற்றி பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தி இருக்காங்க. இந்த ஐந்து வகை உப்புகளும் கடல், ஏரி, பாறை மற்றும் மலைகள்ல கிடைக்குது. அதுலயும் கடல்லதான் உப்பு அதிகமா கிடைக்குது.
பாம்பூ சால்ட்.. மூங்கிலுக்குள் உப்பை வைத்து, தீயிலிட்டு உருகும்போது மண்ணிலிருந்து தாதுக்களை உரிஞ்சு வரும் உப்புக்கு பேரு பாம்பூ சால்ட். இந்த வகை சால்ட் அசாமில் பிரசித்தம்.
கடல் நீரில் உப்புச்சத்து மிக அதிகமா இருக்கு. கடல் நீரில் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பை கொண்டிருக்கு. இதன் உவர்ப்பு சுவை 3.5 %. கடல்நீரை ஆவியாக்கி அதன்மூலம் பெறப்படும் உப்புதான் அதிகளவில் பயன்படுத்தப்படுது. வயல்களைப்போல பாத்திக்கட்டப்பட்ட இடத்தில் கடல்நீரை நிரப்பி காய விடுவார்கள். கடல்நீர் வெயிலின் வெப்பத்தால் நீராவியாகிடும். நிலத்தில் உப்பு படிவுகள் படியும். இந்த உப்பு படிவுகளை எடுத்து சேகரித்து, சுத்தம் செய்து உப்பாக்கி நம் கைகளில் கிடைக்கும்படி செய்றாங்க. கல் உப்பை பயன்படுத்துவது நல்லது. தூள் உப்பை பயன்படுத்தும் சூழல் வந்தாலும் கல் உப்பை பொடித்து பயன்படுத்துவது நல்லது. கடல்நீரிலிருந்து உப்பு பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடிச்சவங்க ஜெர்மானியர்கள்.
நம்ம உடம்பு சரிவர இயங்க தினத்துக்கு 10கிராம் உப்பு போதும். ஆனா, நாம அதைவிட அதிகமாதான் யூஸ் பண்றோம். சென்னை மாதிரியான வெப்பமயமான இடங்களில் வசிப்போருக்கு அதிகப்படியான வியர்வை வரும்.அதன்மூலம் உப்பு சத்து அதிகம் வெளியேறும். அவர்கள் இந்தளவுக்கு உப்பு எடுத்துக்கலாம். இதுவே குளிர் பிரதேசங்களில் வசிப்போர் இந்தளவுக்கு உப்பு எடுத்துக்கொள்ளக்கூடாது, ஏன்னா, அவங்களுக்கு வியர்வை அதிகம் வராது. உப்பு நம்மோட ரத்த அழுத்தத்தோடு தொடர்பு கொண்டிருப்பதால அடிக்கடி உப்பின் அளவை பரிசோதிக்கனும். நாம சாப்பிடும் சாப்பாட்டிலிருக்கும் சத்துக்களை உறிஞ்சவும், கழிவுகளை வெளியேற்றவும் பொட்டாசியம், சோடியம்ன்ற உப்புதான் உதவுது. இது ரெண்டும் சரியில்லைன்னா நம்ப உடம்பு பல பிரச்சனைகளை சந்திக்கும். அயோடின் பற்றாக்குறையால் நாம் பாதிக்காம இருக்க, எதுல சேர்க்கலாம்ன்னு யோசிக்கும்போது சர்க்கரையும், உப்பும்தான் முடிவாச்சு. அதிகளவு சர்க்கரை சேர்ப்பது ஆபத்து, அதே நேரம் ஏழைகளால் தினசரி சர்க்கரை சேர்த்துக்க முடியாது., ஆனா உப்பு எல்லாராலும் பயன்படுத்த முடியும். அதனால உப்பில் அயோடின் சேர்க்க முடிவாகி சேர்க்கப்பட்டது.
உப்பு சத்து நம்ப உடம்புல அதிகரிச்சா ரத்த அழுத்தம் அதிகமாகும், சிறுநீரக, இதய சம்பந்தமான நோய் வரும். உடல் திசுக்கள் அதிகளவு தண்ணீரை உறிஞ்சுக்கொள்ளும். ஒருவேளை, உப்பு சத்து குறைவா இருந்தா, லோ பிபி வரும். உடல் திசுக்களின் வலு குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். உப்பு பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டோம். இனி ஆன்மீக காரணங்களை பார்க்கலாம்.
நீரில் தோன்றி நீரிலேயே கரைந்து போகும் இந்த உப்பு நம்ம ஆன்மாவுக்கு ஒப்பானது. கடலே பரமாத்மா. அதனாலதான் உப்பை சமுத்திரமணி, நீர்ப்படிகம், கடல் தங்கம், பூமிகற்பம், சமுத்திர ஸ்வர்ணம், வருண புஷ்பம், சமுத்திரக்கனி, ஜலமாணிக்கம்ன்னுலாம் சொல்றாங்க. சைவ சமயத்தில் ஸ்பரிச தீட்சைன்னு ஒன்னு இருக்கு. அதாவது குரு, தன் சிஷ்யனின் தலையைத் தொட்டு மந்திர முறைகளைச் சொல்லிக் கொடுப்பார். அப்ப குரு, சிஷ்யர் ஆகிய இருவர் உடலின் உப்புத்தன்மை விகிதமும் சரியான அளவில் ஒன்றாகி வரும்போது அந்த சிஷ்யர் மிகச்சிறந்த மாணவராக விளங்குவார் என்பது ஐதீகம். உடலில் சேரும் உப்பே நமது அனைத்து குணநலன்களையும் தீர்மானிக்குது என்பது சீனர்களின் நம்பிக்கை. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம் நம்பிக்கை.
கடவுளை உணர்த்தும் பொருட்களில் உப்பு முதன்மையானது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைய ஆரம்பித்தபோது முதல்ல வந்தது உப்புதான். சங்கும், முத்துவும் உண்டாக காரணி இந்த உப்புதான். பாரபட்சமின்றி எல்லா கடவுளுக்கும் படைக்கப்படுவது உப்பு மட்டுமே. கடல்ல இருந்து தோன்றியதால் மகாலட்சுமிக்கு இணையானது இந்த உப்பு. அதனாலதான் வீடுகளில் உப்பை மிதிக்காதன்னும், விளக்கு வச்ச பிறகு உப்பை கடன், இரவலா கொடுக்ககூடாதுன்னும் சொல்றது. வீட்டுக்கு வரும் புது மருமகளை வீட்டில் விளக்கேற்றியபின் அடுப்படுங்கரையிலிருக்கும் உப்பு ஜாடியை தொட்டு வணங்க சொல்வது இன்றளவும் எங்க ஊர்பக்கம் நடக்குது. உப்பு பானைல வச்சு பணத்தை கடன் கொடுத்தால் கண்டிப்பா திரும்ப வரும்ங்குறதும் ஒரு சாரார் நம்பிக்கை. உப்பை எந்த நாளிலும் கடன் கேட்கவோ கொடுக்கவோ கூடாது. அப்படி கொடுத்தா, மகாலட்சுமி நம்மை விட்டு போய்டுவள்ன்னு ஒரு நம்பிக்கை. முன்னலாம் உப்பை விக்க மாட்டாங்களாம். பண்டமாத்து முறைலதான் வாங்கிப்பாங்களாம். உப்பை மண்பானை இல்லன்னா பீங்கான் ஜாடியில் போட்டு வைக்குறதுதான் நல்லது. இப்பதான் பிளாஸ்டிக் ஜார் வந்திட்டுது. அதும் உப்பினால் காலப்போக்கில் அரிச்சுடும். அப்படி உப்பு வைக்கும் மண்பானைக்கு 'ஸ்வர்ண பாத்திரம்' ன்னு பேர் உண்டு.
முன்னலாம் நம்ப பாட்டிங்க, அம்மாக்கள் செவ்வாய், வியாழன், ஞாயிறு மாலைல உப்பு, மிளகாய், அடுப்புக்கரி, தெருமண் கொண்டு திருஷ்டி சுத்தி போட்டு தெருவில் கொளுத்துவாங்க. அதேமாதிரி வீட்டுக்கு திருஷ்டி, துர்சக்திகளின் தொல்லை இருந்தா, உப்பு நீரை பாத்திரத்தில் இட்டு, வீட்டின் நடு மையத்தில் மூன்று நாட்கள் வச்சிருந்து கால்படாத இடத்தில் ஊத்துவதும் நம்ப பாட்டி காலத்து முறை. உப்பு துர்சக்திகளையும், கெட்ட அதிர்வுகளையும் விரட்டும் சக்தி கொண்டது. பிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணி ஊத்துவது மாதிரி உப்பு தண்ணி ஊத்தும் பழக்கம் முன்னலாம் இருந்துச்சாம். இப்பதான் அது இதுன்னு காரணம் காட்டி உப்பு தண்ணி ஊத்துறதில்ல.
எதிரிகள் அடங்கி போக உப்பால் கணபதி செய்து வழிபடுவது வழக்கம், நேர்த்திகடனாக கோவில்களில் உப்பும் மிளகும் பலிபீடத்தில் சாத்துவது பொதுவான நடைமுறை. இதனால் எதிரிகளினால் வரும் தொல்லைகள் ஒழியும் என்பது இன்னொரு நம்பிக்கை. இதுமாதிரி உப்பும் மிளகும் சாத்துவது அம்மன் கோவில்களில்தான் பெரும்பாலும் நடக்கும். பித்ருக்கள் வழிப்பாட்டின்போது உப்பில்லாம சமைச்சு படைப்பது வழக்கம். ஏன்னா, நம்மீது இருக்கும் பாசத்தால் நம்கூடவே இருக்க வரும் அவங்களுக்கு உப்பில்லாத சாப்பாட்டை போட்டா அதனால வெறுத்து போயி மீண்டும் இறைவனின் பாதங்களில் சேர்வாங்கன்றது ஒரு நம்பிக்கை. பித்ரு தர்ப்பணம்லாம் கடற்கரையில் செய்வதெல்லாம் உடலும் மனசும் மேம்படயனும்ன்னுதான். அன்றைய தினம் கொடுக்கப்படும் பிண்டத்தில் சாதமும் எள்ளும் மட்டுமே இருக்கும். உப்பு இருக்காது. உப்பைத் தலையில் வைத்து ஆசீர்வதித்து, மந்திரங்கள் சொன்னால் நோய்கள் விலகும் என்பது சாக்த வழிபாட்டு முறையில் ஒன்று.
அதிகாலையில் இரு கைகளிலும் உப்பை வைத்துக்கொண்டு 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்ற ஆதி சங்கரரின் சௌபாக்ய மந்திரத்தை 16 முறை உச்சரித்து, அந்த உப்பைச் சேகரித்து வைக்கனும். இப்படியே 48 நாள்கள் கழித்து, மொத்த உப்பையும் நீர்நிலைகளில் போடனும். அப்படி செய்தால் வாழ்வின் துயரங்கள் நீங்கும். வடமாநிலங்களில் உப்பைக்கொண்டு செய்யப்படும் பூஜைகள் அதிகம். லட்சுமியின் அருள்வேண்டி பலவிதங்களில் லவண பூஜைகள் அதிகாலைகளில் நடைபெறுகின்றது. `ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம்: மம சௌக்யம் தேகிமே ஸதா' என்று மந்திரம் சொல்லிக்கொண்டு, கையில் உப்பை வைத்து சூரியனை வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது. உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது. கையில் உப்பை வைத்துக்கொண்டிருக்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். கிராமங்களில் 'உப்பு மந்திரம்' என்று ஒன்றுண்டு. அதேமாதிரி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு விருந்தின்போது உப்பைதான் முதல்ல வைப்பாங்க. உப்பு, அன்னம், நெய் இவற்றை கைகளால் பரிமாறக்கூடாது.
அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துங்குறது உப்பின் சுவைக்கு மட்டுமில்ல பதிவுக்கும்தான். உப்பை பத்தி சொல்ல இன்னும் இருந்தாலும்.. இத்தோடு நிப்பாட்டிக்குறேன்.
நன்றியுடன்,
ராஜி
உப்பு பற்றிய தகவல்கள் பிரமிக்க வைத்தன சகோ
ReplyDeleteஇன்னும் இருக்கு. இதுக்கே பதிவு நீளுதுன்னு நிறுத்திக்கிட்டேன்ண்ணே
Deleteஅருமையான உப்புப்(போட்ட) பதிவு.......உப்பின் பெருமை அறிந்து கொண்டோம்.....
ReplyDeleteபோட்ட உப்பு சரியான அளவில் இருக்கா?
Deleteநான் ஒரு பேருதான் சொன்னேன் 'ருசிக்கல்' அப்புடின்னு. நீங்க போட்டு தாக்கிட்டீங்களே. நன்றி.
ReplyDeleteஉப்பிட்டவரை மறக்கமாட்டேன். புள்ளிவிவரங்கள் அதிசயப்படவைத்தன.
ReplyDeleteஉப்பிட்ட வரை எப்பயும் மறக்கக்கூடாதுப்பா.
Deleteவியக்க வைக்கும் தகவல்கள்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தம +1
படித்தவைகளை பகிர்ந்தேன். அவ்வளவே . வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஉப்பு பதிவுபோட்ட உங்களை உள்ளளவும் நினைக்க வைக்கும்
ReplyDeleteநன்றிப்பா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteஉப்பு பற்றிய இரண்டாவது பதிவு இன்னிக்கு படிக்கிறேன்! தகவல் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமுதல் பதிவு ஸ்ரீராம் சாரோட பாகற்காய் சார்தானே?!
DeleteI would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteElectro chlorinator Manufacturers
Electro Chlorinators
Electrochlorination skid
Electrochlorinator
Sodium Hypochlorite Generator
Sodium Hypochlorite Generation
On site Sodium Hypochlorite Generator
On site Sodium Hypochlorite Generation
Electrochlorination
Chlorinator