Saturday, June 01, 2019

அறிவுத்திருக்கோவில் -நாளந்தா பல்கலைக்கழகம்

அமெரிக்க, இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் போய்ப் படிப்பது இன்று பலருக்கும் ஒரு லட்சியக் கனவு. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, நம் பாரத தேசத்தில் இருந்த ஒரு பல்கலை கழகத்தில்  சேர வெளிநாட்டு மாணவர்கள் காத்துக் கிடந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?! மூன்று முறை படையெடுப்புக்குள்ளாகி இரண்டு முறை  மறுசீரமைக்கப்பட்டு மூன்றாவது முறையாய் முற்றிலும் அழிக்கப்பட்டு, மீண்டும் சமீபத்தில் புதுப்பொலிவுடன் ஆரம்பிக்கப்பட்டாலும்,  ஒருகாலத்தில் ஆலமரமாய் கிளைத்தது தழைத்து விழுதூன்றி தன் நிழலில் இளைப்பாறிய மாணாக்கர்களை எண்ணிபடி   தன் பழம்பெருமையை பறைசாற்றியபடி மௌனமாய்  நிற்கும்  ஒரு பல்கலைகழகத்தை பற்றிதான் இன்று மௌனச்சாட்சிகளில் பார்க்க போறோம் . உலக மனிதன் கற்களை கொண்டு வேட்டையாடி திரிந்த காலத்திலேயே நாம் நாட்டையே உருவாக்கி அரசாண்டோம்.  அப்பேற்பட்ட பழம்பெரும் பாரம்பரியம் கொண்டது நம் பாரத நாடு.  பாரத நாடு கலாச்சாரம், கலை, பண்பாடு, வீரம், பக்திக்கு மட்டும் பேர்போனதல்ல. கல்வியிலும் பாரத மக்கள் கோலோச்சினர். இயல், இசை நாடகம், சிற்பம், சித்திரம், தையல், வானவியல் முதற்கொண்டு பாலியல் கல்வி வரை பல்கலை ஞானத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.  இந்த பாரத பூமியிலிருந்துதான் பலதுறை சார்ந்த அறிவியல் உண்மைகள் உலகெங்கும் பரவியது. பலதுறை சார்ந்த படிப்புகளை கற்றுத்தர நாளந்தா, தக்சசீலா மாதிரியான பல பல்கலைகழகங்கள் முதன்முதலில் நம் பூமியில்தான் தோன்றியது.


உலகத்தின் பல மூலைகளிலிருந்து இங்கு வந்து இந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பல்லாண்டுகள் தங்கி படித்தனர். தாங்கள் படித்து சேர்த்த அறிவினை தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்று வளம் சேர்த்தனர் என்பது வரலாற்று உண்மையாகும்.


உலக வரலாற்றிலே அமைப்புரீதியாக முதன்முதலாய் தோன்றியது நாளந்தா பல்கலைகழகமாகும்.  இது இப்போதைய பீகார் மாநிலத்தின் பாட்னாவிலிருந்து 90 கிமீ தொலைவிலுள்ளது.  பாட்னாவின் அன்றைய பெயர் பாடலிபுத்திரமாகும். முழுக்க முழுக்க சிவப்பு நிற செங்கற்களால் கட்டப்பட்டு அறிவுச்சுடர் போல ஜொலித்திருக்கிறது.  பொதுவாக பெரிய பெரிய மகான்கள் தோன்றிய , வாழ்ந்த, படித்த, உபதேசித்த இடங்கள்தான் பிற்காலத்தில் கல்லூரிகளாகவும், அறிவாலயங்களாகவும் மாறும் என்பதற்கேற்ப  புத்தர் பெருமான் தன்னுடைய சீடர்களுக்கு உபதேசம் செய்த மாந்தோப்பை மையாமாகக்கொண்ட நாளந்தாவில் இப்பல்கலைகழகம் தோற்றுவிக்கப்பட்டது.  பகவான் மகாவீரரும் இப்பூமியில் உபதேசித்தார் என்றும் சொல்லப்படுது. இந்த மாந்தோப்பை பத்து கோடி தங்க நாணயங்கள் கொடுத்து 500 வணிகர்கள் வாங்கி புத்தருக்கு அன்பளித்துள்ளனர்.


நாளந்தா பல்கலைகழகம் சுமார் 14 ஹெக்டேர்களுக்கு மேலான பரப்பளவில் இப்பல்கலைகழகம்  பறந்து விரிந்திருந்ததாம். கி.பி.427-ம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தர்தான் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிக்கும் இடம்’ என்று பொருள்.  புத்தமத துறவிகளாலும்புத்த சமயத்தைச் சேர்ந்த அசோகர்ஹர்சர் போன்ற மாமன்னர்களின் ஆதரவோடும் நாளந்தா பல்கலைக்கழகம் தழைத்தது வளர்ந்தது.  இந்தப் பல்கலைகழகம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இங்கு அந்த காலத்திலேயே   உள்நாடு மற்றும் கொரியா,  சீனர்கள், திபெத்தியர்கள், பெர்ஷியர்கள், ஜப்பானியர்கள், மங்கோலியர்கள்,  கிரேக்கர்கள் போன்ற  வெளிநாடுகளிலிருந்தும் 10,000 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்துள்ளனர். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பல்துறை வித்தகர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். புவியியல்வானவியல்மருத்துவம்வேதியியல்இயற்பியல் போன்ற உயர்மட்ட விஞ்ஞான பாடங்களும் தத்துவம்தர்க்க சாஸ்திரம்வான சாஸ்திரம்ஜோதிடம் போன்ற பாடங்களிலுள்ள பல்வேறு துறைகளும் இங்கே போதிக்கப்பட்டன. நாளந்தா பல்கலைகழகம் உலகின் முதல் பல்கலைகழகம் என்ற பெருமை மட்டுமல்லாது மாணவர்கள் தங்கி படித்த முதல் பல்கலைகழகமும் இதுவே ஆகும்.  கி.பி. 413 ம் ஆண்டிலிருந்து இப்பல்கலைகழகம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தது. கல்வி ஏட்டுச் சுரைக்காயாக இருந்து விடாமல், ஆராய்ச்சிக்கான விதையாக மாற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடமும் விவாதங்கள் மூலமாகவே, மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. ஒருநாளைக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நூறு விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இங்கு புத்தமதத் தத்துவங்கள் குறிப்பாக, மகாயான கருத்துகள் பயிற்றுவிக்கப்பட்டன. எட்டு தனித்தனி வளாகங்களில் ஆலயங்கள், தியான மண்டபங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றுடன் புத்தமதத் துறவிகளின் மடங்களும் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்திருக்கின்றன. ஆங்காங்கே பூங்காக்கள், குளங்கள் அமைக்கப்பட்டு, படிப்பதற்கேற்ற இனிய  சூழலும் இருந்திருக்கிறது.  இங்கு பயிற்றுவிக்க  பகல் பொழுது மட்டும் போதாமல் இரவுப்பொழுதும் வகுப்பெடுக்கப்பட்டதாம்.   பல்கலைகழகத்தின் முழு நிர்வாகமும் புத்தமதத் துறவிகளால் மேற்கொள்ளப்பட்டன. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்துத் துறவிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுபவர் யாராக இருந்தாலும், மடாலயத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.முதலில் குப்த மன்னர்களாலும், பின்னர் ஹர்ஷர், பால வம்ச மன்னர்கள் எனத் தொடர்ந்து பல மன்னர்கள் பல்கலைக்கழகத்தின் புரவலர்களாக இருந்து, பல்கலைக் கழகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். ஹர்ஷரின் காலத்தில் பல்கலைக்கழகத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள 200 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக விளைநிலங்களும், காய்கறித் தோட்டங்களும், பசுக்களும் இருந்தன. பல்கலைகழகம் புகழின் உச்சத்திலிருந்தபோது அதில் 10,000 மாணவர்கள் படித்துவந்தனர். 2000 ஆசிரியர்கள் பணியாற்றினர். யுவான்சுவாங், யி ஜிங் உள்ளிட்ட பலர் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள்தான். மாணவர் மற்றும் ஆசிரியர்களின் சந்தேகத்தினை தீர்த்துக்கொள்ளவும், அறிவுப்பசியை போக்கிக்கொள்ளவும் மிகப்பெரிய  மகாமேரு என்று பெயர் சூட்டப்பட்ட மிக்கப்பெரிய நூல் நிலையமொன்று   இங்கு இருந்திருக்கிறது.   9 மாடிகளைக் கொண்ட மாபெரும் கட்டிடமாக இந்நூல் நிலையம் இருந்துள்ளது. இந்த நூல்நிலையத்தில் மட்டும் பராமரிப்பதற்கு பல்வேறு மொழிகளை கற்றறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட புத்தத் துறவிகள் இருந்துள்ளனர். இந்த நூல்நிலையத்திற்குள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்தமர்ந்துதாங்கள் அறிவு தாகத்தை அபிவிருத்தி செய்துக்கொண்டனர். இங்கிருந்த ஏடுகளை மாணவர்கள் அலசி ஆராயும்போது ஏற்படும் சந்தேகங்களை நீக்க புத்தப்பண்டிதர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். பசிக்கொண்ட பறவையினம் பழ மரங்களைத் தேடி பறந்தோடி செல்வதுப்போல்அறிவுத்தாகம் கொண்ட மாணவர்களும் உலகம் முழுவதிலிருந்தும்நாளந்தா பல்கலைக்கழகத்தில் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்ந்த இந்த நூல்நிலையத்திற்கு வந்து தமது அறிவுப்பசியைத் தீர்த்துக் கொண்டனர். நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்புகளைப் பற்றியெல்லாம் சீனயாத்ரீகர் யுவான்சுவாங் மற்றும் ஏனைய வரலாற்று அறிஞர்களும் பல அபூர்வமான உண்மைகளைப் பதிவு செய்துள்ளனர்.புத்தர் தமது கடைசிப் பயணத்தின் போது நாளந்தா நகருக்கு வந்து தனது போதனையைச் செய்திருக்கிறார். புத்தரின் முக்கிய சீடரான சாரிபுத்தர் நாளந்தாவைச் சேர்ந்தவர்தான்.இப்போது தேசிய கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு எப்படி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதோ, அதே போன்றதொரு நுழைவுத் தேர்வு, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கும் நடத்தப்பட்டதாக சீன யாத்திரிகர் யுவான்சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் எனச்சொல்லப்படும் உதவித்தொகை  அந்த காலத்திலேயே   வழங்கப்பட்டிருக்கிறது. அதேப்போல, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கும் 10 பேரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் இடம் கிடைத்தது என்பதையும், அவர்களும் பல்வேறு தகுதித்தேர்வுக்குட்படுத்தியே  தேர்தெடுக்கப்பட்ட்னர். கல்விக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.  அவர் தம் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இங்கு உயர்கல்வி மட்டுமே வழங்கப்பட்டதென யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். தோன்றிய யாவற்றிற்கும் அழிவு உண்டென்ற உலக நியதிக்கேற்ப உலகப்புகழ்வாந்த இப்பல்கலைகழகமும் ஒருநாள் அழிந்துப்பட்டது. நாளந்தா பல்கலைகழகம் எப்படி அழிந்தது என இனி பார்ப்போம்...

புயல் காற்றில் சிக்கி திசை மாறி, கரையை அடைய முடியா தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்போல் அறிவுத்தாகம் கொண்டு அலைபவர்களுக்கு தாகம் தணிக்கும் நீருற்றாய் திகழந்த நாளந்தாவின் மீது  இதுவரை மூன்று முறை படையெடுப்பால் அழிந்து இரண்டு முறை அரும்பாடுப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.  முதல் முறை கி.பி. 455 ல் ஸ்கந்தகுப்தா ஆட்சிக்காலத்தில் மிஹிரக்குலா தலைமையில் ஹன்ஸ் படையெடுப்புக்குள்ளானது. பின்னர் ஸ்கந்த வாரிசுகளால் மறுசீரமைக்கப்பட்டு மீண்டு(ம்) கல்வி சேவை ஆற்றியது.மீண்டும் 7ம் நூற்றாண்டில் ஹர்வர்த்தனர் ஆட்சியின்போது மீண்டும் தாக்குதலுக்குள்ளாகி மீண்டும் புனரமைக்கப்பட்டது. 

மூன்றாவது முறையாக 1193 – ம் ஆண்டு  கில்ஜி என்ற துருக்கி மன்னனின் படையெடுப்பால் நாளந்தா பல்கலைகழகம் முற்றிலுமாய் அழிந்துப்போனது. இப்படையெடுப்பில் இங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களையும்ஆசிரியர்களையும்புத்தத் துறவிகளையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தான். அங்கிருந்த பத்திற்கும் மேற்பட்ட புத்த மடாலயங்களையும்பல்கலைகழகத்தின் அற்புதமான கலையம்சம் கொண்ட வகுப்பறைகளையும் தரைமட்டமாக்கினான். 

அப்போதும் வெறி அடங்காத கில்ஜி  மகாமேரு” என்று போற்றப்பட்ட நூல்நிலையத்திற்கும் தீ வைத்து அறிவுக் கருவூலங்களை அழித்தான். நூல்நிலையத்தில் வைத்த தீக்கு இரையாகிய பல்லாயிரக்கணக்கான ஏடுகள் மட்டும் மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன. அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் கரும்புகை மண்டலம் சூழ்ந்திருந்தனவாம். இதை யாரும் அணைத்து விடக்கூடாது என்று அவை எரிந்து சாம்பலாகும் வரை  அங்கேயே காவலுக்கு ஆட்களை நியமித்திருந்தனாம்.2006 ம் ஆண்டு பீகார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் நாளந்தா பல்கலைகழகம் புதுப்பிப்பதற்கான மசோதா முன்மொழியப்பட்டது.  2010 ல் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ம் தேதி முதல் புதுப்பொலிவுடன்   மீண்டும்  கல்விப்பணி ஆற்ற தொடங்கியுள்ளது. 


நாளந்தா பல்கலைகழகத்தின் நினைவு மண்டபம் 

ஆங்கிலேயர் படையெடுப்பிற்குமுன் நமது பாரதத்தில் அனைவரும் படிப்பறிவு கொண்டிருந்தனர். அந்நிய படையெடுப்புக்கு ஆளாகி படிப்படியாய் நம் கல்வியறிவு குறைந்து அடிமையாய் மாறி படாத பாடுகள் பட்டோம் என்பது உலகறிந்த உண்மை.  எத்தனையோ போராட்டங்களுக்குபின் சுதந்தரம் பெற்று மீண்டும் நம் நாட்டில் கல்வியறிவு புத்துணர்வு பெற ஆரம்பித்துள்ளது. அறிவுக்காகவும், பொருள் ஈட்டவும் திரைக்கடல் தாண்டி ஓடினாலும் முடிவில் நம் நாட்டுக்கே திரும்ப வந்து கல்வியறிவையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவோம்.

படங்கள் கூகுள்ல சுட்டது ...நன்றியுடன்,
ராஜி3 comments:

 1. கிட்டத்தட்ட இந்த இடதுக்குப்பக்கத்தில் போயும்பார்க்க முடியவில்லை. அதாவது முயற்சி எடுக்கவில்லை. நமது சிறப்பைச் சொல்லும் சிறப்பான கட்டுரை.

  ReplyDelete
 2. இந்தியாவின் பெருமைகளில் ஒன்று. இந்தியர்கள் ஒவ்வொரும் அவசியம் பார்க்கவேண்டும். பதிவிலுள்ள செய்திகள் வியப்பைத் தந்தன.

  ReplyDelete
 3. நாளந்தா பற்றி பெருமையை வாசித்திருக்கிறேன். உங்க பதிவு அருமையான பதிவு. கில்ஜி பற்றி வரலாற்றிலும் படித்ததுண்டு.

  வெங்கட்ஜி கூட இதைப் பற்றி ஒரு பதிவு எழுதிய நினைவு..
  கீதா

  ReplyDelete