Friday, August 21, 2020

பக்தர்களின் நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி பாஷாண லிங்கம் - புண்ணியம் தேடி

 ஆன்மீகபூமியான இந்தியாவில்  ஏகப்பட்ட புண்ணிய தலங்கள் உள்ளது. அவை,  ஒவ்வொன்றும்  தனக்குள் ஒரு அற்புதத்தை ஒளித்து வைத்திருக்கு. ராமர் பூஜித்தது, சிவனை சக்தி எரித்தது, முருகன் வதம் பண்ணியது, பக்தனுக்கு அருளியது, மிகப்பெரியது,  தங்கத்தால் இழைத்தது, வருடத்திற்கொருமுறை, ஒருநாள் மட்டுமே திறக்கும் கோவில்ன்னு பலப்பல அதிசயங்களை கொண்ட கோவில்கள் பலதை நாம கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம்.. இன்னிக்கு பதிவில் பார்க்க போகும் கோவிலும் அதுமாதிரி வித்தியாசமான கோவில்தான்.

 எங்க ஊர் பக்கத்துல திமிரின்னு ஒரு ஊரு இருக்கு. அங்க ஒரு சிவன் கோவில் சமீப காலத்துல அதிகம் பேசப்படுது. இக்கோவிலுக்கு அதிகப்பட்சமா 35 வயசுகூட இருக்காது. ஆனா, இங்குள்ள இறைவன் வயது சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது... இதென்ன ராஜி பிரமாதம்!! வேற ஒரு இடத்திலிருந்து இங்க கொண்டு வந்து வச்சிருப்பாங்கன்னு நீங்க சொல்லலாம்.. ஆனா, இங்கிருக்கும் இறைமூர்த்தம் பாஷாணத்தால் ஆனது. இந்த இறைமூர்த்தம் யாரால் உருவாக்கப்பட்டதோ, அவராலாயே   மண்ணில் புதைக்கப்பட்டு, அவராலாயே ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்து இன்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்குது.. என்ன இந்த லூசு பக்கி உளருதுன்ற உங்க மைண்ட் வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன். என்னோடு வாங்க! கோவிலுக்கு போய்க்கிட்டே இக்கோவிலோட வரலாற்றை பார்ப்போம்....


சென்னை டூ ஆரணி வழில ஆரணிக்கும் ஆற்காட்டுக்கும் இடையில்  திமிரின்ற ஊர் இருக்கு. சென்னைல இருந்து ஆரணி வரும் பஸ்சுல வந்தா இங்க இறங்கிக்கலாம். இல்லன்னா வேலூர், வாலாஜாபாத் வரை ட்ரெயின்ல வந்திட்டும் அங்கிருந்து டவுன் பஸ் பிடிச்சும் வரலாம். ஆற்காடு, ஆரணில இருந்து டவுன் பஸ் இருக்கு இந்த ஊருக்கு. டவுனுமல்லாத கிராமமும் அல்லாத ரெண்டுக்கெட்டான் ஊர்.  பஸ் ஸ்டாப்ல இறங்கி ஒரு பர்லாங்க் தூரம் நடந்தா விஷ்ணு,  ஐயப்பன் கோவிலை கடந்தால் மேற்சொன்ன மேற்சொன்ன சிவன் கோவில் அமைந்திருக்கும். மூன்று கோவில்களும் அருகருகே மிகசுத்தமா, அழகா, அமைதியா இருக்கு. இந்த சின்ன ஊர்ல இப்படி ஒரு கோவிலான்னு வியக்குற மாதிரி நவீன கால கட்டமைப்புல கோவில் இருக்கு.   கோவிலை நெருங்க நெருங்க தூரத்திலிருந்தே யோகத்திலிருக்கும்  சிவன் நமக்கு காட்சி தருவார். 

இதுதான் நான் சொன்ன நவபாஷான லிங்கம் இருக்கும் கோவில் நுழைவு . வளைவிலேயே இறைவனும், இறைத்தொடர்புள்ள ராதாக்கிருஷ்ணன் ஐயாவோட சிலையும் நம்மை வரவேற்கும். இந்தக்கோவில் அதிகபட்சம் 5000ச.அடில கட்டப்பட்டது. முழுக்க முழுக்க சிமெண்டால் உருவானது.  இங்க அருள்புரியும் இறைவனது பெயர் சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர். உருவத்தில் மிகச்சிறியவர் ஜஸ்ட் ஆறே அங்குலம்தான். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது.   ஒவ்வொரு அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் இக்கோவிலில் வந்து இறைவனை தரிசித்து தங்கள் நோய் தீர்த்து செல்பவர்கள் ஏராளம்.  என் அப்பா அம்மா ஒவ்வொரு அமாவாசைக்கும் போவாங்க.  பௌர்ணமியன்று அன்னதானம் நடக்கும். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் என் அப்பா, அம்மா இக்கோவிலுக்கு செல்வது வழக்கம். இப்பதான் கொரோனாவால் போறதில்லை. அம்மா இந்தக்கோவிலோட கதை சொல்லும்போது எனக்கும் சிரிப்புதான் வந்திச்சு.  மறுஜென்மமாவது புடலங்காயாவதுன்னு... கோவிலின் கதை நிஜமா பொய்யான்னு தெரில. ஆனா, கோவிலுக்கு போனப்பின் மனசுக்கு அமைதியாவதை உணர முடிஞ்சது. கோவிலில் கட்டுமானப்பணி நடந்துக்கிட்டிருந்தாலும் மிக சுத்தமா பராமரிக்கப்படுது. 


கோவிலுக்குள் நுழைந்ததும் நேரா கருவறைக்கு போகக்கூடாது. முதலில் பிரகாரத்தை சுத்தி, அங்கிருக்கும் தெய்வங்களை வணங்கியபின் கடைசியில் மூலவர் இருக்கும் கருவறைக்குள் செல்லனும். இதுக்கு காரணம் என்னன்னா, எங்க சுத்தினாலும் மகனே என்னிடம்தான் வந்தாகனும்ன்னு கடவுள் சொல்லாம சொல்லுறது ஒரு காரணம். இன்னொன்னு, வெளிஉலக விசயங்கள் நம் கவனத்தை ஈர்க்கும். கோவிலை வலம் வர, வலம் வர நம் மனது, வெளி உலகை மறந்து இறைவனிடம் ஐக்கியமாகும். மனசு இறைவனிடம் லயித்து அவனிடம் சரணாகதி அடையும்போது அவன் நமக்கு முக்தி, ஞானம் தருவான்.  இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான் முதலில் பிரகாரத்தை வலம் வந்து பின் இறைவனை கும்பிடனுமாம். அதனால, நாமும் முதல்ல பிரகாரத்தை வலம் வரலாம் வாங்க. முதலில்  நம்மை வரவேற்பவர் வினாயகர். அவருக்கொரு வணக்கத்தை சொல்லிட்டு மேற்கொண்டு கோவிலை வலம் வரலாம் . 

வினாயகருக்கு பக்கத்துல சைவக்குறவர்கள்ன்னும், நால்வர்ன்னும் செல்லமா அழைக்கப்படுற அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், சம்பந்தர் இருக்காங்க. அவர்களுக்கு ஒரு வணக்கம் போட்டுப்போம். ஆலமரமும் வேப்பமரமும் இணைந்த இடத்தில் எப்பயும் போல நாகர் சிலைகள். நாகராஜா! என்னை  காப்பாத்து. எனக்கு உன்னைவிட்டா வேறு துணை இல்ல.  எந்த கோவமா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். பொட்டுன்னு போட்டு கணக்கை முடிச்சுப்புடாதன்னு சொல்லி வேண்டிக்கிட்டேன்.


சதுரகிரி மலைக்கு ராதாக்கிருஷ்ணன் ஐயா போய் இருக்கும்போது அங்கு  சுயம்புவாய் கிடைத்த சிவன்..... 

சப்த மாதர்கள் சிலைகள்... நான் போனபோது அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலில் பூஜை. அதனால, கோவில் முழுக்க ஐயப்ப பக்தர்கள். அவர்களை நகர்ந்துக்க சொல்ல மனசு வரல. அதனால, அவங்களையும் சேர்த்து க்ளிக்.

தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்தி.... குருவே சரணம்.... 


அண்ணன் வினாயகருக்கு அப்பாவோட கோவிலில் இடமிருக்கும்போது தானும் இருப்பேன் என வள்ளி, தெய்வானை சமேத முருகன்..

கலியுக பந்தம், பாசம், ஊர் உலகம்லாம் மிகக்கொடியதுன்னு உணர்த்தும் பயங்கர தோற்றம் கொண்ட துவார பாலகர்கள். பயப்படாம என்னை நினைச்சுக்கிட்டு  அவர்களை கடந்து வான்னு  துவார பாலகருக்கு  மேலிருந்து நமக்கு சொல்லாமல் சொல்லும் கடவுள்.

கருவறையில் நந்தியம்பெருமான் வீற்றிருக்கார். அவரை வணங்கிட்டு மூலவரை வணங்கும்முன் ஸ்தல வரலாற்றையும், ராதாக்கிருஷ்ணர் ஐயாவை பத்தியும் தெரிஞ்சுப்போம். வாங்க! மற்ற பக்தர்களுக்கு இடைஞ்சல் இல்லாம ஓரமா உக்காந்துப்போம்..


சுமார் ஐநூறு ஆண்டுகளுக்குமுன் விஜயநகர பேரரசின்கீழ், திம்மிரெட்டி, பொம்மி ரெட்டின்ற குறுநில மன்னர்கள் வம்சாவளியினர் வேலூர் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.  இவர்களது வழித்தோன்றல்தான் சதாசிவராய மன்னர். இவர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லைப் பகுதியில் பல நல்ல காரியங்களைச் செய்து சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார். நாடுன்னா நோய் நொடின்னு வரும்ல்ல. அதுமாதிரி ஒரு சமயம் இப்ப வரும் மர்மக்காய்ச்சல் மாதிரி தொத்துநோய் பரவி அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அவதிப்பட்டாங்க. இதை கண்டு வேதனையுற்ற சதாசிவராயர்,  நோயை விரட்டும் வழி குறித்து, அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அரண்மனை ராஜ வைத்தியரான கன்னிகா பரமேஸ்வரரிடம், மக்களின் நோயைப் போக்க ஏதாவது செய்யும்படி கேட்டுக்கொண்டார். 

கூகுள்ல சுட்ட படம்

மன்னனின் ஆணைப்படி ராஜவைத்தியரான கன்னிகா பரமேஸ்வரர், தன்வந்திரி முறையில் ஒரு லிங்கத்தை தயார் செய்ய முடிவு செய்தார். சந்திர பாஷாணம்ன்னு சொல்லப்படும். அறை வெப்பநிலைக்கு எரியும் தன்மைக்கொண்ட பாஸ்பரஸ் போன்ற  திமிரி பாஷாணம் உள்பட 5 வகை பாஷாணங்களை பக்குவப்படுத்தி, தெய்வாம்சமும், மருத்துவ குணமும் இரண்டற கலந்திருக்கும் வகையில் சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்தார். இந்த லிங்கத்தின் உயரம் வெறும் 6 அங்குலம் மட்டுமே! திமிரி என்ற சொல்லுக்கு எரியும் தன்மைக்கொண்ட  பொருள் என் அர்த்தமாம்.




கி.பி.1379–ம் ஆண்டு தைமாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், இப்பகுதியில் இருந்த கோட்டையில் பாஷாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12–வது சங்கராச்சாரியார் வித்யாரண்ய சுவாமிகள் ஆசீர்வாதத்துடன்  பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்த லிங்கம்.   ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், இப்பகுதியில்  நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது. திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதால், புகைந்து பின் எரியும் தன்மை கொண்டது. எனவே லிங்கத்தை குளிர்விக்கும் வகையில் அதன்மீது எப்போதும் நீர் விழுமாறு ஏற்பாடு  செய்யப்பட்டது. அந்த அபிஷேக தீர்த்த நீரே, நோய் தீர்க்கும் பிரசாதமாக மாறியது. அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் ‘திமிரி’ என பெயர் மாற்றம் கொண்டது. தன்னுடைய மக்களின் நோய் குணமாவதைக் கண்ட மன்னன் சதாசிவராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார். பக்தி பரவசத்தில் மிதந்தார்


ஆனால், சோதனைகள் மனிதர்களுக்கு மட்டுமே வருவதல்ல!  சில சமயங்களில் கடவுள்களுக்கும்கூட சோதனை ஏற்படுவதுண்டு. அந்த சோதனை இங்கிருக்கும் பாஷாணலிங்கத்துக்கு  படையெடுப்பின் வாயிலாக வந்தது. ஆற்காடு நவாப் படை எடுப்பின்போது வேலூர் கோட்டை பிடிபட்டது. திமிரி கோட்டை அவர்கள் கட்டுக்குள் வந்ததால், கோட்டை இடிக்கப்பட்டது. திமிரி பாஷாணலிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு, வேதியியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் வைத்தனர். அதன்பிறகு அந்த லிங்கத்தை, திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் அருகில் இருந்த குளத்தில் புதையச் செய்தனர். இதையறிந்த முகலாய சிப்பாய்கள், அரசனையும், மருத்துவரையும் கைது செய்து ஆணைமல்லூர் ஸ்ரீரேணுகாம்பாள் ஆலயத்தின்முன்பு கொண்டுவந்து,  பாஷாணலிங்கத்தை ஒப்படைக்குமாறு சித்தரவதை செய்தனர். எத்தனை முயன்றும் பதில் கிடைக்காததால்  அவர்கள் இருவரையும்  யானைக்காலால் இடற செய்தனர். உயிர் நீங்கும் நேரத்தில்  ராஜ வைத்தியரான கன்னிகாபரமேஸ்வரர், உருவாக்கிய நானே உன்னை புதைக்கப்படவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.  என்றாவது , நானே உன்னை வெளிக்கொணறுவேன். அதுவரை எக்காரணம் கொண்டும் நீ வெளியில் வரக்கூடாது என கடவுளுக்கு கட்டளை இட்டார்




500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வரலாற்றின் தொடர்ச்சி, கடந்த 1985–ம் ஆண்டு  தனது அடுத்த அத்தியாத்தை தொடங்கியது.  அப்போது திமிரியில் ஐயப்பன் கோவில் கட்டும் பணி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அந்தப் பணி தடைபட்டது. எத்தனை முயன்றும் மீண்டும் மீண்டும் தோல்வியே ஏற்பட்டது. ‘கோவில் நிர்மாணிக்கும் பணியில் ஏதேனும் தெய்வ குற்றம் நிகழ்ந்து விட்டதோ?’ என சந்தேகங்கொண்ட, திமிரி ஐயப்பன் நற்பணி மன்ற நிர்வாகி A.Sராதாகிருஷ்ணன் வேலூரில் இருந்த ஜெய்ஹரி என்ற ஒரு நாடி ஜோதிடரை அணுகினார். யானை காலால் இடறப்பட்டு இறந்த அதே ஆனைமல்லூரிலேயே ராதாகிருஷ்ணனாக மருத்துவர் பிறந்ததும், பாஷாணலிங்கம் பூமியிலிருந்து வெளிவரும் காலம் வந்துவிட்டதையும் எடுத்து சொன்ன ஜோதிடர், பாஷாணலிங்கத்தினை வெளியில் எடுக்கும் முறையையும் சொன்னார்.

500 ஆண்டுகளாக பூமிக்குள் இருக்கும் பாஷாணலிங்கத்தை சுற்றிலும் கடுமையான கதிர்வீச்சு இருக்கும். அந்த கதிர்வீச்சு திமிரி மற்றும் அதை சுற்றிலுமுள்ள பகுதிகளுக்கு  மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அவ்வாறு எந்த அசம்பாவிதமும் நிகழாமலிருக்க குற்றாலம் செண்பகாதேவி ஆலயத்தின் அருகிலுள்ள புற்றில் ஒரு முத்து உள்ளது. அதை எடுத்து வெளியில் எடுத்து வெள்ளி மோதிரத்தில் பதித்து ராதாக்கிருஷ்ணன் அணிந்துக்கொண்டு எடுத்தால் பாதிப்பு ஏற்படாது என்றும் வழிமுறையினை சொன்னார். அவ்வாறே தக்க ஏற்பாடுடன் ராதாக்கிருஷ்ணன் அவர்கள் சோமநாத ஈஸ்வரர் ஆலய திருக்குளத்தில் புதையுண்ட பாஷாணலிங்கத்தினை தேடினார். அவரின் முயற்சிக்கு ஊர் பொதுமக்களும், ஆன்மீக நண்பர்களும் உதவினர். 32 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த பாஷாணலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.  இதற்கு சான்றாக திருவாவடுதுறை ஆதினம் ஸ்கந்தர் மணிமாலை சதகம் என்ற நூலை சொல்றாங்க. 

 










இதையடுத்து அந்த பகுதியிலேயே திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இந்தலிங்கம் தற்போது நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி தொட்டிக்குள் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி தருகிறது. பாஷாண லிங்கம் அமிழ்ந்திருக்கும் நீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாஷாணலிங்கம் இருக்கும் இந்த நீரை அருந்துபவர்களுக்கு நோய்கள் தீர்வதாக நம்பப்படுகிறது.. இந்த சன்னிதியானது லிங்க வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகில் பாஷாணலிங்கம் கிடைத்த சோமநாத ஈஸ்வரர் கோவில் குளத்தின் அருகில் பெரிய அளவில் யோக நிலையில் இருக்கும் சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ராதாக்கிருஷ்ணன் ஐயா மட்டுமே இதுவரை இந்த லிங்கத்திற்கு தேன், பால், பழம், விபூதி, இளநீ ஆகிய ஐந்து பொருட்களால் மட்டுமே அபிஷேகம் செய்விக்கிறார். தனக்குபின் இந்த பொறுப்பை யார் ஏற்பார்கள் என்று இறைவன் உணர்த்துவார். அவரிடம்  ஒப்படைக்க காத்திருப்பதாகவும் சொன்னார். 



கோவிலுக்குள் முழுக்க முழுக்க ருத்ராட்சை கொண்டு உருவாக்கப்பட்ட விமானத்தின்கீழ் நடராஜரும்,. நவக்கிரகமும் அருள்பாலிக்கின்றனர்.   பாஷாண லிங்கம் கிடைத்த பெரிய குளத்தில், லிங்கம் கிடைத்த பகுதியை மட்டும் சிறிய குளம்போல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த சிறிய குளத்தில் இருந்து எடுக்கப்படும் நீரையே கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் எனவும். A.Sராதாகிருஷ்ணன் ஐயா மட்டுமே இங்கிருக்கும் பாஷாண லிங்கத்துக்கு அபிஷேகம்  செய்ய வேண்டுமெனவும்  நாடி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா சொல்றாங்க.




இதுதான், இக்கோவிலின் கதை.. மறுப்பிறப்பு உண்டா?! கட்டுக்கதைன்ற டாபிக்கை விடுத்து, ஒரு சாமியார், ஆன்மீகத்துல இருப்பவர்களுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி அமைதி, சாந்தம், தெய்வீகக்களை, பிற உயிர்களை மதித்தல்... இந்த குணங்கள் இருக்கனும்ன்றது என்னோட கருத்து. எனக்கு தெரிஞ்சு இது அத்தனையும் இருப்பது ராதாக்கிருஷ்ணர் ஐயாவிடம் இருந்தது. அவரிடம் அத்தனை பணிவு. நானும் என் மகனும் ரத்தினகிரி கோவிலுக்கு போய்ட்ட்டு இக்கோவிலுக்கு வந்தோம். ரத்தினகிரி கோவிலில் இருக்கும் பாலமுருகனடிமை சாமியார் தற்செயலாய் என்னருகில் நிற்க   பலப்பல வேண்டுதலோடு கால்தொட்டு வணங்கினேன். ஆனா, அவர் எந்த ரெஸ்பான்சும் பண்ணல. அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் திமிரி கோவிலுக்கு போய்ட்டு அங்கிருக்கும் ராதாக்கிருஷ்ணர் ஐயாவை பார்த்து அவர் கால் தொட்டு வணங்கினேன். உடனே, எனக்கும், என் அருகிலிருந்த   என் மகனையும் அழைத்து விபூதி பூசி, என்ன படிக்குறேன்னு கேட்டு, நல்லா படி, ஐயா இதுப்போல பிளாக் எழுதுறேன். அதனால, கோவிலையும் உங்களையும் படமெடுத்துக்குறேன்னு சொன்னதும் என்னோடும்,என் மகனோடும் தனித்தனியாய் படமெடுத்து கோவிலையும் படமெடுக்க அனுமதிச்சார். அந்த எளிமை, சாந்தம், எனக்கு பிடிச்சு போக இப்பலாம் அடிக்கடி போறேன். மதிய வேளையில் தன்னால் முடிஞ்சளவுக்கு கஞ்சி காய்ச்சி அங்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கிறார்.



வாங்க! போய் சாமி தரிசனம் செஞ்சிட்டு அப்படியே  ராதாக்கிருஷ்ணர் ஐயா  தரும் தீர்த்தம் வாங்கி குடிச்சிட்டு போகலாம். வீட்டுக்கு இந்த தீர்த்தம் வாங்கிட்டு போகலாம்ன்னு நினைக்குறவங்களுக்கு பாட்டில்ல அடைச்சு 20 ரூபாயில் கொடுக்குறாங்க. அந்த தீர்த்தத்தை அப்படியே குடிக்க கூடாது. கொஞ்சம் விபூதியை ஒரு சங்கில் போட்டு அதில் அந்த தீர்த்தத்தை ஊத்தி குடிக்கனும். சங்கில்லாதவங்க பஞ்ச பாத்திரத்தில் இருக்கும்  ஸ்பூன்ல ஊத்திக்கலாம்.... வாய்ப்பு கிடைக்குறவங்க ஒருமுறை இந்த கோவிலுக்கு போய்வாங்க. நிச்சயம் மனசு அமைதி பெறுவதை கண்கூடாய் உணரலாம். மத்தபடி மறுஜென்மம்ங்குறதைலாம் நம்புறதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.


கோவிலுக்கு எதிரில் குள்ளமுனியாம் அகத்தியருக்கு ஒரு சிலை...  எல்லா சிவன்கோவில்களிலும் இருக்குற  மாதிரி  சண்டிகேஸ்வரர், அன்னப்பூர்ணி, காலபைரவரும் இங்க இருக்காங்க.  அகத்தியருக்கு இங்க என்ன வேலைன்னு நினக்கலாம்., இந்த லிங்கத்தை பத்தி பலவாறாய் விமர்சனம் எழுந்திச்சு..  போகர் செஞ்சது இரண்டே இரண்டு  நவபாஷாண சிலைகள்தான். ஒன்னு  பழனில இருக்கும் முருகன். இன்னொன்னு, நவபாஷாணம் செய்ய தனக்கு துணையாய் இருந்த புலிப்பாணி சித்தருக்கு பரிசளித்த மிகச்சிறிய முருகன் சிலை. பழனி மலைல இருக்கும் முருகன் சிலை பத்தி பல்வேறு கருத்துகள் நிலவுது. புலிப்பாணி சித்தருக்கு கொடுத்த சிறிய சிலை எங்கிருக்குன்னு இன்னைய வரைக்கும் தெரியாதுன்னு பலவித குறிப்புகளை எடுத்துக்காட்டி இந்த பாஷாண லிங்க பொய்ன்னு வாதிட்டாங்க. இங்கிருக்கும் பாஷாண சிலை பஞ்ச பாஷாண லிங்கம். பஞ்ச பாஷாண பத்தி அகத்தியர் குறிப்பெழுதி இருக்கார். அதை பார்த்துதான் கன்னிகாபரமேஸ்வரர் இந்த சிலையை உருவாக்கினாராம். அதனால அகத்தியருக்கு இங்கொரு சிலை. 

இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிகள் பல இருந்தாலும்,  கொரோனா மாதிரியான நோய்களிலிருந்து ஏன் நமக்கு விடுதலை கிடைக்கலைன்னு மனசில் கேள்வி எழும்பாமல் இல்லை.   எல்லாம் அவனுக்கே வெளிச்சம்... 

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

நன்றியுடன்
ராஜி.

8 comments:

  1. ராதா கிருஷ்ணர் ஐயாவிடம் இருக்கும் பணிவே சிறப்பு...

    ReplyDelete
  2. கோயிலும் த்கவல்களும் சிறப்பு. ராதாகிருஷ்ணர் ஐயா செய்வது சிறப்பான பணி

    துளசிதரன்

    ReplyDelete
  3. இந்த வயதிலும் அடுத்தவர் பசிதீர்க்கும் அவரை வணங்கவேண்டும் .

    ReplyDelete
  4. தகவல்கள் சிறப்பு.

    அடுத்தவர் பசி தீர்க்கும் அவருக்கு எனது வணக்கங்கள்.

    ReplyDelete
  5. தெரிந்த ஊர். தெரியாத கோயில். பெரியவரின் பணி போற்றத்தக்கது.

    ReplyDelete
  6. படிக்கும் போதே சிலிர்க்கிறது அற்புதமான கோவில்.

    ReplyDelete