ஆன்மீகபூமியான இந்தியாவில் ஏகப்பட்ட புண்ணிய தலங்கள் உள்ளது. அவை, ஒவ்வொன்றும் தனக்குள் ஒரு அற்புதத்தை ஒளித்து வைத்திருக்கு. ராமர் பூஜித்தது, சிவனை சக்தி எரித்தது, முருகன் வதம் பண்ணியது, பக்தனுக்கு அருளியது, மிகப்பெரியது, தங்கத்தால் இழைத்தது, வருடத்திற்கொருமுறை, ஒருநாள் மட்டுமே திறக்கும் கோவில்ன்னு பலப்பல அதிசயங்களை கொண்ட கோவில்கள் பலதை நாம கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம்.. இன்னிக்கு பதிவில் பார்க்க போகும் கோவிலும் அதுமாதிரி வித்தியாசமான கோவில்தான்.
Showing posts with label புண்ணியம் தேடி ஒரு பயணம். Show all posts
Showing posts with label புண்ணியம் தேடி ஒரு பயணம். Show all posts
Friday, August 21, 2020
Friday, July 17, 2020
ஆடி மாதத்தில் கூழ் வார்க்கும் பழக்கம் உண்டானது எப்படி?! - புண்ணியம் தேடி...
ஆடிமாசத்தை பத்தி, இந்த மாசத்துல வரும் விசேசங்கள், விரதங்கள்ன்னு நேற்றைய பதிவில் பார்த்தோம். அதனால, நேரா பதிவுக்கு போய்டலாம். ஆடி மாசத்து முதல் வெள்ளிக்கிழமையன்று நாம வணங்க வேண்டியது சொர்ணாம்பிகையை. சிவனை தரிசிக்க 16 வருடங்கள் கடுந்தவம் புரிந்தார் காகபுஜண்டர். அவரின் தவத்தினை மெச்சிய சிவப்பெருமான் 16 முகங்களோடு காட்சியளித்தார். என்ன வரம் வேண்டுமென காகபுஜண்டரை கேட்டபோது எனக்கு காட்சியளித்த இத்தலத்தில் தாங்கள் எழுந்தருளி மக்களுக்கு பொன், பொருள்ன்னு அனைத்து செல்வங்களையும் அள்ளித்தருமாறு வேண்டினார். அவ்வாறே வரமளித்த இறைவன் அங்கேயே எழுந்தருளினார். அங்கு அவருக்கு பெயர் சுவர்ணபுரீஸ்வரர் என்றும், அம்மனுக்கு சொர்ணாம்பிகைன்னும், சிவனின் காவல்தெய்வமான காலபைரவருக்கு சுவர்ண பைரவர் என்றும் பெயர். சகல செல்வங்களையும் அள்ளித்தரும் இந்த ஆலயம், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பொன்பரப்பின்ற ஊரில் இருக்கு. அந்த அம்மனைதான் இன்று நம் இல்லங்களில் ஆவகணப்படுத்தி வழிப்பட வேண்டும்.
Friday, July 03, 2020
ராகு-கேது பரிகார தலம் - திருநாகேஸ்வரம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்...
ஜோதிடரீதியாக முற்பிறவியில் நாகங்களை துன்புறுத்துவதாலும், ஆண் பெண் பாம்புகள் இணைந்திருக்கும்போது அவற்றை பிரிப்பது, நாகங்களை கொன்றதாலும் ராகு-கேது தோசம் வருமாம். எங்க வீட்டுக்கு மட்டுமில்லாம தெருவில் யார் வீட்டுக்கு பாம்பு வந்தாலும் என்னைய கூப்பிட்டுதான் அடிக்க சொல்றாங்களே! நான் கொன்ன பாம்புகளின் கணக்குப்படி பார்த்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் ராகு-கேது தோசம் என்னை விடாது போல!
Friday, April 01, 2016
எங்க ஊரு கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்
ஒரு தேசத்தை ஆள்கிற மன்னன் தன் மக்களின் தேவைகள், தன் படைபலம், வருமானம், செலவை தெரிந்து வைத்திருப்பதுப் போலவே அடுத்த தேசத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த நாட்டு அரசன் தன் மீது படை எடுத்து பொருளையும், பெண்களையும் அபகரித்துப் போனால் என்ன செய்வது என முன்யோசனையோடு ஏற்பாடு செய்து எச்சரிக்கையுடன் இருப்பவனே உண்மையான அரசன். அடுத்த நாட்டில் இருக்கும் சிறப்புகளெல்லாம் தங்கள் நாட்டுக்கும் கொண்டு வரவேண்டும் என துடிப்புடனும் இருக்க வேண்டும்.
அதனாலதான் ஒருத்தரை ஒருத்தர் போட்டிப் போட்டிக்கொண்டு அரண்மனை, கோவில், சத்திரங்கள், குளம், ஏரின்னு மக்களுக்கு நல்லது செய்தார்கள். நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வதை போல ஆன்மீகம், கலைகளை வளர்த்தலோடு பொறாமையும் சேர்ந்து வளர்ந்ததால் சண்டையிட்டு தாங்கள் விருப்பப்பட்டு கட்டிய கோவில், அரண்மனை, ஏரிகள் பாழாவதற்கு அவர்களே காரணமாயினர்.
புண்ணியம் தேடிப் போற பயணத்துல இன்னிக்கு நாம பார்க்கப் போறது எங்க ஊரு கோவிலான அருள்மிகு சிவவிஷ்ணு ஆலயத்தை. எல்லா ஊருலயும் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் இருந்தாலும், அவை தனித்தனியாதான் இருக்கும். ஆனா, ஒரு சில ஊர்களில்தான் ஒரே கோவிலில் ரெண்டு கடவுளுக்கும் தனித்தனி கருவறை, கொடிமரத்தோடு சந்நிதி இருக்கும். அப்படிப்பட்ட சில ஊர்களில் எங்க ஊரும் ஒண்ணு!!
முன்னலாம் ஆரணி நகரம் அடர்ந்தக் காடாக இருந்துச்சு. இப்பகுதியில் உத்தராதி மடத்தின் குருவான ஸ்ரீசத்திய விஜய சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தை எதிர்பார்த்தபடி தனது யாத்திரையைத் தொடங்கினார். அவர் சென்ற வழியில், கமண்டலநாக நதிக்கரையில் ஐந்து தலை நாகமானது அவர் எதிரே தோன்றி அடையாளம் காட்டியது. அங்கே ஸ்ரீசத்திய விஜய சுவாமிகளின் சிஷ்யர்களால் பிருந்தாவனமும், மிகப்பெரிய அரண்மனையும் கட்டப்பட்டு "சத்திய விஜய நகரம்' என்ற ஊர் நிர்மாணிக்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் சத்திய விஜய நகரத்தை ஜாகீதார் என்ற மன்னன் ஆண்டு வந்தார். புரட்டாசி மாதத்தில் திருமலை திருவேங்கமுடையானை தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒருமுறை கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஜாகீர்தார் திருமலையப்பனை சேவிக்க முடியாமல் போனதால் மிகுந்த மனக்கவலை அடைந்தார். அன்று இரவு அவருடைய கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான் ""நானே உம்மைக் காண வருகிறேன்'' என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலையில் நேபாளத்திலிருந்து, வேறொரு ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சாளக்கிராம திருமேனிகொண்ட சிலா ரூபமான ஸ்ரீநிவாஸ மூர்த்தியும், பச்சைக் கல் சிலா ரூபமான பத்மாவதி தாயார் விக்ரகமும் சத்திய விஜய நகரத்தைக் கடந்து எடுத்துச் செல்லும்போது.. வண்டியோட்டி சிரமப் பரிகாரம் செய்துக் கொண்டு வண்டியை கிளப்ப முற்படும்போது வண்டி ஓரடி கூட நகராமல் நின்றது.
பலவாறு முயற்சி செய்தும் பயனில்லை. இங்கிருந்த சிலைகளை வேறு வண்டிக்கு மாற்ற முயற்சி செய்தபோது சிலைகளைத் தூக்க முடியாததைக் கண்டு திகைத்து நின்றனர். இதனைக் கேள்வியுற்ற மன்னர் ஜாகீர்தாருக்கு கனவில் எம்பெருமான் கூறியது நினைவில் வந்தது. எனவே அங்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பி பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாஸ மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்.
இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பவித்ர உற்ஸவம், ஸ்ரீஸுக்த ஹோமம், திருப்பாவாடை உற்ஸவம், சொர்க்க வாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றது. ஒவ்வொரு புரட்டாசி 4 வது வாரம் இங்கு எல்லா வித பழங்கள், காய்கறிகள், சாத வகைகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்து, அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுது.
சீனிவாசப் பெருமாள் கோவில் பக்கத்துலயே, அவரின் தீவிர பக்தனான அஞ்சனை மைந்தன் ஆஞ்சிநேயர் சுவாமிகளுக்கு தனி சன்னிதி இருக்கு.
ஹரிக்கும், சிவனுக்கும் பிறந்தப் பிள்ளையான ஐயப்பனுக்கும் தனிச் சன்னிதி. கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களால் இங்கு வெகு விமர்சையாகப் படிப் பூஜை நடத்தி அன்னதானமும் நடக்குது.
நாகக் கன்னிக்கும் கூட சிறு சன்னிதி.
கிராம தெய்வங்களுக்கும் இங்கு இடமுண்டு...,
ஆரண்யம் என்றால் காடுன்னு பொருள். அடர்ந்த காடுகளும், அழகிய சோலைகளும் நிறைந்த இடம்ன்றதாலதான் இந்த ஊருக்கு ஆரணின்னு பேர் வந்தது. அந்த இயற்கை வளம் பொங்கிய காட்டைத்தேடி முனிவர்களும், தவசிகளும் இங்கு வந்தனர்.
சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கி மகிழ்ந்தான்.. ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல… மகிழ்ந்து போனான் மன்னன்.
சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும், வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு.
இவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங்கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பி வணங்கினான்.
அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க எழுப்பப் பட்ட சன்னிதி. சிவராத்திரி, கார்த்திக தீபம், பிரதோசம் போன்றவை இக்கோவிலில் சிறப்பாக் கொண்டாடப் படுது. ஒவ்வொரு பிரதோசத்துக்கும் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது.
ஆரணி சுற்றுவட்டாரத்தில் கமண்டல நாக நதி ஓடுது. முன்னலாம் இருகரையும் தொட்டு தண்ணி ஓடும். இப்ப மழையில்லாததால ஆற்றில் தண்ணி இல்ல. தண்ணியே இல்ல, அப்புறம் எதுக்கு ஆறுன்னு நம்மாளுங்க யோசிச்சு!! குப்பையைக் கொண்டுப் போய் கொட்டுறதும், ஆத்துல மணலெடுப்பதும் நடக்கும். அப்படி குப்பைகளை அகற்றவும், மணல் தோண்டும்போதும் சிலைகள் கிடைப்பது அடிக்கடி நடக்கும். அப்படி கிடைக்கும் கற்சிலைகளை இக்கோவிலில் வச்சிடுவாங்க. ஐம்பொன் சிலைகளை வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுப் போய்டுவாங்க.
நவக்கிரக நாயகர்களுக்கு தனிச் சன்னிதி. இச்சன்னிதிக்கும், எனக்கும் ஒரு தொடர்புண்டு.
நான் அப்புவை வயத்துல சும்க்கும்போது இந்த சிவ - விஷ்ணு ஆலயத்துல இருந்து 1 கிமீ தூரத்துலதான் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். மூத்தது ரெண்டும் பொண்ணாய் பொறந்துடுச்சு. அடுத்தது பையனாய் பிறக்கட்டும்ன்னு வேண்டிக்கிட்டு, நவக்கிரகத்துக்கு விளக்கேத்தி வான்னு அப்பா சொன்னார். தினமும் சாயந்தரம் கோவிலுக்குப் போய் வருவேன். அதாவது புண்ணியத்துக்கு புண்ணியம். நடந்த மாதிரியுமாச்சு.
அப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு” அப்பா, அம்மா, பசங்க கிண்டல் செய்வாங்க.
எங்க ஊரு கோவிலை நல்லா சுத்திப் பார்த்து புண்ணியம் தேடிக்கிட்டீங்களா!?
அடுத்த வாரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடல் மட்டத்துல இருந்து சுமார் 4500 கிமீ உயரத்தில் இருக்கும் பர்வத மலையை தரிசிக்கலாம்.
நன்றி வணக்கம்!
இது ஒரு மீள் பதிவு...,
Friday, November 27, 2015
பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோவில் - புண்ணியம் தேடி பயணம்
நேத்து ராத்திரி கே.ஆர்.விஜயா சாரி அம்மன் என் கனவுல வந்து ”உள்ளூர் ஆட்டக்காரனுக்கு மரியாதை குறைவு”ன்னு சொல்வாங்க!. அதுப்போல எங்கயோ இருக்குற கோவில் பத்திலாம் எழுதுற! . ஆனா, வீட்டுல இருந்து 12 கிமீ தூரத்துல இருக்குற என்னை பத்தி எழுதலையேன்னு சூலத்தால கண்ணை குத்த வந்துச்சு.
ஆத்தா! பச்சையம்மா! நான் ஒரு பிரபல பதிவர். அதனால, பதிவு எழுத, போட்டோ அட்டாச் பண்ண, மத்த பிளாக்குல போய் கமெண்ட் போடன்னு ஆயிரம் வேலை இருக்கு. அதுக்கு கண்ணு ரொம்ப அவசியம் வேணும். நாளைக்கு எழுந்ததும் முதல் வேலையா உன்னை பத்தியே பதிவா போட்டுடுறேன்”ன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் சூலத்தை கீழ போட்டாங்க கே.ஆர்.விஜயா சாரி அம்மன் சாமி.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணில இருந்து சரியா 12 கிமீ தூரத்துல இருக்கு ”வாழைப்பந்தல்”. ஆரணில இருந்து அரை மணிக்கு ஒருதரம் பஸ் இருக்கு. ஆட்டோவுலயும் போகலாம். ஆனா, உங்க ஒரு நாள் சம்பளத்தை முழுசா கொடுக்க வேண்டி வரும். ஏன்னா, ரோடு அத்தனை மோசம்.
வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு ல இருந்து வாழைப்பந்தலுக்கு பஸ் இருக்கு. அது இல்லாம, செய்யாறு டூ ஆரணி ரோடுல மாம்பாக்கத்துல இறங்கி, அங்கிருந்து வாழைப்பந்தல் பஸ் ஏறி வரனும். வாழைப்பந்தல் ஊருல இருந்து 2 கிமீ தூரத்துல இருக்கு. “பச்சையம்மன்” கோவில். வாழைப்பந்தல்ன்னு புராணத்துல இருந்தாலும் முனுகப்பட்டு ஊராட்சிக்குள் இக்கோவில் இருக்குறதால முனுகப்பட்டு பச்சையம்மன் கோவில்ன்னும் சொல்வாங்க.
”அம்மா”ன்னா அன்பு, அறிவு, ஆனந்தம், அமுதம், ஆற்றல். அச்சமின்மைன்னு பல அர்த்தம் வருது. அம்மாக்கு அம்மா யார்? பாட்டி. பாட்டியோட அம்மா? அந்த அம்மாக்கு அம்மா?! அந்த ஆதி யார்? அது தான் ”இயற்கை”. இயற்கை வனப்பின் நிறம் பச்சை. பசுமை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி, மனதிற்கு வலிமைன்னு இன்றைய ஆராய்ச்சியாளர்களே ஒத்துக்கிட்டு இருக்காங்க. அப்படி பெருமை வாய்ந்த பச்சை நிறத்தில் அருள் பாலிக்கும் அன்னையின் பெயர்தான் “பச்சையம்மன்”.
இனி, ஏதோ எனக்கு தெரிஞ்ச தல வரலாறு பார்க்கலாம்....
”பிருங்கி” என்னும் மாமுனிவர் தீவிர சிவன் பக்தர். தேவர்கள், முனிவர்கள், பார்வதி சகிதமாய் கைலாயத்தில் இருக்கும்போது பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வலம் வந்து வழிப்பட்டு சென்றார். இதைக்கண்ட சிவசக்தியான பார்வதி தேவி, ஐயனே! இதென்ன நியாயம்?! எல்லாம் அறிந்த மாமுனிவரே நம்மை பிரித்து வணங்கலாமா?! அவர் மீண்டும் இத்தவறை செய்யாமல் இருக்க தங்கள் உடலில் சரிபாதி எனக்கு வேண்டும் என சிவப்பெருமானிடம் அன்னை வேண்டினார்.
இதற்கு சிவன் மறுக்க, எப்படியும் சிவனின் உடலில் சரி பாதி பிடிக்க வேண்டும் என வைராக்கியம் கொண்டு, அன்னை சிவனைப் பிரிந்து தவம் செய்ய பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தை தேடி அலைந்த போது.....,
பசுமையான வாழை, அதன் கன்றுகளோடு வனப்பாகவும், வளமாகவும் தன் இனத்தோடு சேர்ந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கும் தோட்டத்தில் மண்ணால் ஆன சிவலிங்கத்தை கண்டதும் இதுவே சரியான இடம் என அன்னை உணர்ந்து, வாழை இலைகளால் பந்தலிட்டு, பூஜையை தொடங்க நீரைத் தேடினார்...,
ஆனால், சிவப்பெருமானோ தன் திருவிளையாடலை இந்த இடத்தில் தொடங்கினார். பசுமையான வாழைத்தோட்டத்தில் உள்ள நீர் நிலைகள், நீர் ஊற்றுகளையும் மறைத்து வைத்து விளையாடினார். மன உளைச்சலில் இருந்த அன்னை, சிவப்பெருமானின் விளையாட்டை உணராமல், தன் புதல்வர்களான விவேகமே உருவான விநாயகரையும், வீரத்தின் பிறப்பிடமான முருகனையும் அழைத்து பூஜைக்கு நீர் கொண்டு வரச் சொன்னார்.
தந்தையின் விளையாட்டை உணராத புதல்வர்களும் அன்னையின் கட்டளைப்ப்படி நீரை தேடி, மூத்தவர் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு பாகத்துக்கு வந்தார், அங்கே ஒரு முனிவர் தன் கமண்டல் நீர் சிவனின் பூஜைக்கு மட்டுமே” என்று நீண்ட நாட்களாக தவம் செய்வதை உணர்ந்து தன் வாகனமான மூஞ்சூரை அனுப்பி கமண்டலத்தில் உள்ள நீரை கவிழ்க்க செய்தார், அந்த நீர் ”கமண்டல நதி”யாக பெருக்கெடுத்து அன்னையை நோக்கி ஓடியது.
இளையவரோ! எங்கு தேடியும் நீர் கிடைக்காததால் தன் வீர வேலை வீசி மலையை குடைந்து ஒரு ஆற்றை உருவாக்கினார். குழந்தை வடிவில் இருந்து முருகன் உருவாக்கிய நதி “சேய் ஆறா”க மாறி அன்னையை நோக்கி ஓடியது.
நீண்ட நேரமாகியும் நீர் கொண்டு வர சென்ற புதல்வர்களை காணாமல் அன்னையுடன் இருந்த நாகம்மா கிழக்கு தொடர்ச்சி மலையிலிருந்து நீரூற்றைக் கொண்டு வர, ”நாக நதி”யாக மாறி அன்னையை தேடி அதுவும் ஓடியது.
நீர் கொண்டு வரச் சென்றவர்களை காணவில்லையே என கவலைக்கொண்டு குறித்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டுமே என்று பூமாதேவியை வேண்டி சிறு குச்சியால் பூமியை தோண்ட ஊற்று பீறிட்டு வரவும், கணபதியின் ”கமண்டல நதி”யும், முருகனின் “சேய் ஆறு”ம், நாகம்மாவின் “நாக” நதியும், அன்னையின் பாதத்தை தழுவியது. எங்கே குறித்த நேரத்தில் பூஜை செய்ய முடியாமல் போகுமோ என்ற எண்ணத்தில் இருந்த அன்னையின் திருமேனி திரிவேணி சங்கமத்தால் உடலும், உள்ளமும் குளிர்ந்து சிவந்த நிற மேனி மாறி பச்சை நிறமானது. அன்னையும் குறித்த நேரத்தில் பூஜையை முடித்தார். தேவர்களும், முனிவர்களும் அன்னையின் நிலைக்கண்டு பூமாரி பொழிந்து வாழ்த்தினர்.
வானவர் மனம் மகிழ்ந்ததால் பெரு மழை பெய்தது. மழை நீரால் எங்கே மண்ணால் செய்த லிங்கத்துக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சிய அன்னை, சிவலிங்கத்தை கட்டி அணைத்து மழைநீரை தன்மீது தாங்கினாள். அன்னையின் பிடியை தாளாத சிவப்பெருமான் “மண்ணாதீஸ்வரா”க காட்சி அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த அசுரர்கள் அன்னையின் தவத்தை குலைக்க பல வழிகளில் முயற்சி செய்தனர். அதனால், தேவர்களும், முனிவர்களும் சிவன், விஷ்னுவிடம் சென்று முறையிட்டனர். சிவன் “வாமுனி”யாகவும்.., விஷ்னு “செம்முனி”யாகவும் அவதாரம் எடுத்து காத்ததாக சொல்லப்படுகிறது.
இக்கோவிலில் அமைந்துள்ள அம்மனின் திருவுருவம் வைரம் பாய்ந்த மரத்தால் ஆனது. அன்னையின் தியான ஜோதியாய் விளங்கும் விக்ரகம் மனித பிறவியில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.
காவல் புரிந்த அஷ்ட திக்கு பாலகர்களின் சிலைகளும் வண்ண மயத்துடன் கண்கொள்ளாக் காட்சியாய் விளங்குகிறது.
புது வாகனத்துக்கு பூஜை, திருஷ்டி கழிப்பு, உயிர் பலி இதெல்லாம் இங்கதான் நடக்கும். திருஷ்டி கழிப்புக்காக உடைக்கும் தேங்காயை தரையில் உடைக்காம கோபுர சுவற்றில்தான் உடைக்கனும்.
பொங்கல் வைக்க கோவில் நிர்வாகம் தனியா இடம் ஒதுக்கி மேடை கட்டி வெச்சிருந்தாலும் எப்பவும் போல நம்ம ஆளுங்க அங்கங்கே பொங்கல் வைக்குறாங்க.
பெரும்பாலும் திங்கள், வெள்ளிக்கிழமைல கூட்டம் அலைமோதும். சில ஞாயிறு அன்னிக்கும் எதாவது காது குத்து போன்ற நிகழ்ச்சிகள் இருக்கும். அவங்கவங்க வசதிக்கு ஏத்த மாதிரி மண்டபம்லாம் இருக்கு. ஆனாலும், மரத்தடிகளில் அடுப்பை மூட்டி பிரியாணி, சுக்கா வறுவல், கொழம்புன்னு செஞ்சு பரிமாறுவாங்க. சுத்திலும் சுமாரான ஹோட்டல் இருக்கு. எதுவுமே சாப்பிட கொண்டு போகலைன்னாலும், இதுப்போல சமைக்குற கோஷ்டி சாப்பிடுறீங்களா?!ன்னு கேட்டு கேட்டு பரிமாறுவாங்க.
வேண்டுதலுக்காக உடலில் வேப்பிலை சேலை உடுத்துறது, தீச்சட்டி எடுப்பது, எலுமிச்சை பழம் உடம்பில் குத்தி நேர்த்திக்கடனை செலுத்துவாங்க. நான் போகும்போது அப்படி இரு சிறுவர்கள் எலுமிச்சை குத்தி பூந்தேர் இழுத்தாங்க.
அன்னைக்கு தவத்தின் போது உதவிய சப்தரிஷிகள் 7 பேர் சிலைகளும்....,
காவல் புரிந்த அஷ்ட திக்கு பாலகர்களின் சிலைகளும் வண்ண மயத்துடன் கண்கொள்ளாக் காட்சியாய் விளங்குகிறது.
ஐராவதம் என அழைக்கப்படும் யானையின் சிலையும்,
தேவேந்திரனின் தவக்கோல சிலையும் இங்கே அமைந்திருக்கு.
கோவிலின் வெளியில் காவல் தெய்வமாக விளங்கும் வாமுனி(சிவன்) செமுனி(விஷ்னு) சிலைகள் கோபுர கவசத்தில் இருப்பது இதன் சிறப்பு.
ஆலயம் இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது, கோவில சுற்றி சிமெண்ட் தரை, மேலே கூரை என புத்தம் புது பொலிவுடன் அழகுற மிளிர போகின்றது.
சுத்து வட்டார ஊர் மக்களுக்கு பெரும்பாலும் இதுதான் குல தெய்வம். குழந்தைக்கும் முதல் முடி காணிக்கை, காது குத்துலாம் இங்கதான் நடத்துவாங்க. நாங்க போய் இருக்கும்போது ஒரு குடும்பத்து குழந்தைகளுக்கு காது குத்து விழா.
பொங்கல் வைக்க கோவில் நிர்வாகம் தனியா இடம் ஒதுக்கி மேடை கட்டி வெச்சிருந்தாலும் எப்பவும் போல நம்ம ஆளுங்க அங்கங்கே பொங்கல் வைக்குறாங்க.
பெரும்பாலும் திங்கள், வெள்ளிக்கிழமைல கூட்டம் அலைமோதும். சில ஞாயிறு அன்னிக்கும் எதாவது காது குத்து போன்ற நிகழ்ச்சிகள் இருக்கும். அவங்கவங்க வசதிக்கு ஏத்த மாதிரி மண்டபம்லாம் இருக்கு. ஆனாலும், மரத்தடிகளில் அடுப்பை மூட்டி பிரியாணி, சுக்கா வறுவல், கொழம்புன்னு செஞ்சு பரிமாறுவாங்க. சுத்திலும் சுமாரான ஹோட்டல் இருக்கு. எதுவுமே சாப்பிட கொண்டு போகலைன்னாலும், இதுப்போல சமைக்குற கோஷ்டி சாப்பிடுறீங்களா?!ன்னு கேட்டு கேட்டு பரிமாறுவாங்க.
நான் போனது புதன் கிழமை என்பதால, கடைத்தெருலாம் ”ராஜி மண்டைக்குள்ள காலியா இருக்குற மாதிரி” ஜில்லோன்னு இருக்கு. திங்கள், வெள்ளின்னு வந்தால் கூட்டம் அலைமோதும். அசைவம் அகப்படும் இடம் என்பதால் முக்கியமான ஆண்கள் கடை இருக்கு. ஆனா, என்னாலதான் படம் எடுக்க முடியலை.
விரதமிருக்க திங்கள் கிழமை சிவனுக்கும், அம்மனுக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாள்ன்னு சொல்வாங்க. ஆனா, சிவன் வேறில்லை, சக்தி வேறில்லைன்னு சொல்லுற மாதிரி இந்த கோவில் மட்டும் திங்கள் கிழமை அம்மனுக்கு உகந்த நாள். அன்னிக்கு கோவிலில் கூட்டம் அலைமோதும். அதுலயும் ஆடி மாத 5திங்களும், ஆவணி மாத 4 திங்களும் சேர்ந்து 9 திங்கள் பூஜைக்கு வெளிநாட்டில் இருந்துலாம் கூட வருவாங்க.
மேலும் அதிக தகவலுக்கு: T.குமார் குருக்கள்,
தொடர்புக்கு: 04182- 244373
9444896937
அடுத்த வாரம் மீண்டும் வேற கோவிலுக்கு போகலாம். இப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா?!

Friday, June 20, 2014
திருக்கடையூர் - புண்ணியம் தேடி ஒரு பயணம்
இருபது ப்ளஸ் வயதில் திருமணம் அமைய பெற்றோர், உற்றோர், பதவி, அதிர்ஷ்டம், பணம்ன்னு ஆயிரம் காரணிகள் இருக்கலாம். ஆனா, அதே துணையுடன் அறுபது, எழுபது, என்பது, நூறு வயதில் நடைபெறும் திருமணத்திற்கு கடவுள் அருள் மட்டும்தான் காரணமாய் இருக்கும். அதனால்தான், அப்படிப்பட்ட திருமணங்களை சென்னைக்கு அருகே திருவிடந்தை, திருப்பதி திருமலை ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனா, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்,திருக்கடையூர்லதான் நடத்துறாங்க. ஆனா, வீட்டில் செய்வதுதான் இன்னும் சிறப்புன்னு சொல்றாங்க.
சமீபத்தில் என் அப்பா, அம்மா அறுபதாம் திருமணத்துக்கு போனபோதுதான் அந்தத் திருத்தலம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
மயிலாடுதுறை - நாகப்பட்டினம் சாலையில் உள்ளது திருக்கடவூர் என்கிற திருக்கடையூர். கடம்ன்னா பானை, கலம்! கடை=கடைதல் என இரண்டு பொருள் சொல்வாங்க. ரெண்டுமே சரிதான்!பாற்கடலைக் கடைந்த போது, அமுதம் கிடைத்த பாத்திரத்துக்குப் பேரு தான், அமிர்த கடம்! நம் போன்ற உயிர்களுக்கு வேண்டிய அமுதம்/இன்பம் எல்லாம் இருக்கும் கடம் எது?!
இறைவன்தான் அந்தக் கொள்கலம். நமக்கு வேண்டும் போது மட்டும், அதில் இருந்து இன்பங்களை எடுத்துக் கொள்கிறோம்! பின்னர் கலத்தை மறந்து விடுகிறோம்! மீண்டும் அடுத்த முறை இன்பம் தேவைப்படும்போது மட்டும் அந்தக் கொள்கலன் நமக்கு தேவைப்படுகிறது. அவரவர் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்றவாறு அமுதத்தை வழங்குபவர்தான் சிவப்பெருமான். அப்பெருமானேதன்வந்திரி பெருமான் மற்றும் மோகினி கைகளில் கொள்கலமாய் அமிர்தக்கடமாய் வந்தான். அந்தக் கொள்கலமே பின்னர் லிங்கமாய் மாறியது. அதனால்தான் அவனுக்கு அமிர்தகடேஸ்வரர் எனப் பெயர் வந்தது.
திருக்கடையூரில் அறுபதாம் கல்யாணம் செய்துக்கொள்ள காரணம் இங்குதான் மார்க்கண்டேயனுக்காக சிவப்பெருமான் எமனை வென்றது. அதனால், இது சிரஞ்சீவி தலம். என்றும் சிரஞ்சீவி, சுமங்கலியாய் தம்பதிகள் இருக்கனும்ன்னுதான் இங்கு வந்து செஞ்சுக்குறாங்க. அறுபதாம் திருமணம் மட்டும்தான் இங்க செய்துக்கனும்ன்னு இல்ல.
கணவரின் 59 முடிந்து 60 துவக்கம் = அர்த்த ரத சாந்தி
60 முடிந்து 61 துவக்கம் = சஷ்டி அப்த பூர்த்தி
69 முடிந்து 70 துவக்கம் = பீம ரத சாந்தி
79 முடிந்து 80 துவக்கம் = சதாபிஷேகம்! ஆகியவற்றை இங்கு செய்துக்கொள்ளலாம்.
இத்திருத்தலத்தில் இரண்டு ஈஸ்வரன்கள், ஈஸ்வரிகள். ஒன்று, அமிர்தகலசமாய் வந்த அமிர்தகடேஸ்வரர்-அபிராமி. மற்றொருவர் எமனை வென்ற ஈஸ்வரன் மிருத்யுஞ் ஜெய ஈஸ்வரன்! பாலாம்பிகை. அண்ட சராசரமே அஞ்சி நடுங்கும் எமனைக் கொல்லுமிடத்தில் அம்பிகை எதற்கு வந்தாள்? யமனை வெல்லும் போது கூட அருகில் துணைவி வேண்டும்! துணையை எதிலுமே ஒதுக்குவதில்லை! அழித்தலிலும் இருப்பாள்! ஆக்கத்திலும் இருப்பாள்!!
மிருகண்டு முனிவர் ஒரு சிறந்த சிவ பக்தர். குழந்தைச் செல்வம் இல்லாது வருந்தி வாழ்ந்து வந்தார். அவரும், அவரது மனைவி மருத்துவமதியும் சிவ பெருமானை நோக்கி, குழந்தை வரம் பெற கடும் தவம் செய்தனர். தவத்தை மெச்சிய சிவ பெருமான் அவர்கள் முன் தோன்றி, " முனிவரே யாம் உமக்கு குழந்தை வரம் அருள்கிறோம். மந்த புத்தி கொண்ட 100 ஆயுள் வாழும் குழந்தை வேண்டுமா? அல்லது 16 அகவைகளே வாழப் போகும் ஞானக் குழந்தை வேண்டுமா?" எனக் கேட்டார். முனிவர் ஞானக் குழந்தைதான் வேண்டும் எனக் கேட்க, மருத்துவமதி ஆண் மகவை ஈன்றெடுத்தாள். மார்கண்டேயர் எனப் பெயர் கொண்டு வளர்ந்தது அக் குழந்தை. குழந்தையின் அறிவும், ஆற்றலும் பெற்றோரை ஆனந்தப்படுத்தியது. அதே சமயம் கவலையும் கொண்டனர். உண்மையை மார்கண்டேயரிடம் கூறினர். சற்றும் கலங்காத மார்கண்டேயரோ பெற்றோரிடம் தான் வாழப் போகும் 16 வயது வரை ஒவ்வொரு தலமாக சென்று சிவனை வணங்குவோம் என்று கூறி 16 வது வயதில் 108 வது தலமாக திருக்கடவூரை வந்தடைந்தனர்.
16 வயது முடியும் நாள் வந்தது. மார்கண்டேயர் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு அமிர்தகடேஸ்வரரை தரிசித்துக் கொண்டிருந்தார். யமதர்மன் அங்கு வந்தான். பயந்து போன மார்கண்டேயர் அமிர்தகடேஸ்வரரை கட்டி அணைத்தார். யமன் பாசக் கயிற்றை விசினான். கயிறு லிங்கத்தின் மீது வீழ்ந்தது. லிங்கம் இரண்டாக பிளந்து கால சம்ஹார மூர்த்தியாக தோன்றினார் சிவ பெருமான். யமனை தனது இடது காலால் எட்டி உதைத்தார். தன் பக்தனுக்கு " என்றும் பதினாறு" என்ற சிரஞ்சீவி வரம் அருளி மறைந்தார். இந்த கால சம்கார மூர்த்தி மகா மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். பின்னர் பூமி தேவியின் வேண்டுதளுக்கிணங்க யமனை அனுக்கிரகித்தார்.
மொத்தம் ஐந்து பிரகாரங்களை கொண்டு 11 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து பெரும் கோவிலாக காட்சி தருகின்றது இத் திருத்தலம். கோவிலின் ராஜ கோபுரம் ஏழு நிலைகளை கொண்டுள்ளது. உட் கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டுள்ளது. இத்தலத்தில் நவக்கிரக சந்நதி கிடையாது.
ஒரு திருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு தன் தேவியர் இருவருடன் காட்சி தரும் இத்தல முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் இரண்டு திருப்புகழ் பாடியுள்ளார். சோம வாரங்களில் சுவாமிக்கும், பௌர்ணமி, அமாவாசை திதிகளில் அம்பாளுக்கும், சனிக்கிழமைகளில் காலசம்கார மூர்த்திக்கும் விஷேச பூஜைகள் நடைபெறுகிறது. அம்பாள் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலம் வந்து அமிர்தகடேஸ்வரரையும், அம்பாளையும், கால சம்ஹார மூர்த்தியையும் வழிபட எம பயம் நீங்கி நல் ஆயுள் பெறலாம். ஸ்ரீ மகா மிருத்யுஞ்சய ஸ்தோத்திரத்தையும், மந்திரத்தையும் இங்கு ஜெபிப்பது மிகச் சிறந்த பலன்களை தரும். பிறந்த நாள் அல்லது நட்சத்திரத்தில் இங்கு வந்து ஆயுஷ் ஹோமம் செய்து கொள்வது சிறப்பு.
தேவாரம் பாடிய மூவருமே பாடிய 44 தலங்களுல் இதுவும் ஒன்று. திருநாவுக்கரசரால் மூன்று பதிகமும், சம்பந்தர் மற்றும் சுந்தரரால் தலா ஒரு பதிகமும் பாடப்பெற்றது. இத்தலம். அபிராமி பட்டரால் அபிராமி அந்தாதி இயற்றப்பட்டது இத்தலத்தில்தான். சிவ பெருமான் வீரச் செயல்கள் புரிந்த தலங்கள் அட்ட வீரட்டான தலங்கள் என்றழைக்கபடுகின்றன. திருக்கடையூர் அவற்றில் ஒன்று. அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலிய நாயனாரும் முக்தி அடைந்த திருத்தலம் இது. 14 சைவ சிந்தாந்த சாஸ்திரங்களில் இரண்டாவதாக போற்றப்படும் திருக்களிற்றுப்படியாரை இயற்றிய உய்ய வந்த தேவ நாயனார் அவதரித்தது இங்குதான். அகஸ்தியரும், துர்க்கையும், வாசுகியும் வழிபட்டது இத்திருத்தலம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும்.
திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் சக்தி நெறியும், யோக சித்தியும் பயின்று அதன் விளைவாக சதா சர்வ காலமும் அம்பாளை நினைத்து அவளை துதித்த வண்ணம் பித்தர் போல் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அச்சமயம் தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் கோயிலுக்கு வந்தார். சித்தர் போல் அம்ர்ந்திருக்கும் பட்டரை கண்டு அவரை பற்றி கேட்க, அங்கிருந்தவர்கள் பட்டரை பித்தர் என்று கூறினர். அம்பாளை தரிசித்து முடித்து செல்லும் பொழுது பட்டரிடம் சென்று மன்னர், "இன்று என்ன திதி?" எனக் கேட்க, அம்பாளின் ஞாபகத்தில் இருந்த பட்டர் கேள்வியை சரியாக காதில் வாங்கி கொள்ளாமல் "இன்று பௌர்ணமி" என்றார். ஆனால் அன்றோ அமாவாசை. அதிர்ந்த மன்னர், "இன்று பௌர்ணமி என்றால், உம்மால் முழு நிலவை காண்பிக்க முடியுமா?" என்று கேட்டார். அம்பிகையின் நினைவிலிருந்து மீளாத பட்டர் " அம்பாளின் அருள் இருந்தால் நிச்சயம் முழு நிலவை காட்ட முடியும்" என்றார். மன்னரும் " இன்றிரவு முழு நிலவை காட்டும்" எனக் கூறி காவலர்களை அங்கு விட்டுச் சென்றார்
மயக்கத்திலிருந்து மீண்ட பட்டர் நடந்த அனைத்தையும் கேட்டு வருத்தமானார். அம்பிகையே தன்னை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி, அம்பிகை சந்நதியின் முன், நூறு ஆரங்கள் கொண்ட உறி ஒன்றை கட்டி , உறியின் கீழ் நெருப்பு மூட்டி உறியில் அமர்ந்தார். அம்பிகையை தலை வணங்கி அந்தாதி பாடலானார். அந்தாதி என்றால் முதல் பாடலின் முடிவு என்று பொருள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 100 ஆரங்கள் கொண்டிருந்த உறியின் ஒவ்வொரு ஆரமாக அறுத்துக் கொண்டே வந்தார். கதிரவன் மறைந்தான். இருள் சூழ்ந்தது. " விழிக்கே அருளுண்டு " என்ற 79 வது பாடலை முடித்த பொழுது அம்பிகை தோன்றினாள். தனது தடாங்கம் ஒன்றை வானில் எறிந்தாள். அது வட்ட மதியின் உருவாய் பல கோடி நிலவின் ஒளியை பிரதிபலித்தது. பட்டருக்கு அருள் புரிந்த அன்னை பட்டரை மீதமுள்ள பாடல்களையும் பாடி முடிக்குமாறு கூறி மறைந்தாள். பட்டரும் 100 பாடல்களையும் பாடி முடித்தார். இந்த 100 பாடல்களின் தொகுப்பே " அபிராமி அந்தாதி " என்றழைக்கபடுகின்றது. ஒவ்வொரு பாடலுக்கும் குறிப்பிட்ட பலன்களை தருவதாய் பாடப்பட்டுள்ளது இந்த பாசுரங்கள். நடந்த அனைத்தையும் அறிந்த சரபோஜி மன்னர் அன்னையின் பக்தனை பழித்ததற்காக மனம் வருந்தி பட்டரிடம் பிழை பொறுக்க வேண்டிக்கொண்டார். தன் பக்தனுக்காக, அவன் சொன்ன பொய்யை மெய்யாக்கிய தலம் இது.
|
அவர்வர் வசதிக்கேற்ப இங்கு யாகங்கள், பூஜைகள் , புணஸ்காரங்கல் நடைப்பெறுகின்றது. எங்கும் பணம் விளையாடுவதை காண முடிகிறது. அதேப்போல இவ்வூர் முழுக்க சின்னதும்,பெரியதுமான மண்டபங்கள் இருக்கு. வீடுகளிலும் நம் பட்ஜட்டுக்கேற்ப சமையல் செய்து தர்றாங்க. எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செல்வது அலைச்சலை குறைக்கும்.
Subscribe to:
Posts (Atom)
